“முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்

ரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையேயும் தொடர்ந்து எழுதுவதை அதிகம் விரும்புவதாக சொல்கிறார். இதுவரை எட்டு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். இவரின் ஐந்து முதலைகளின் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அத்தாரோ நாவலும் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது.

மின்னஞ்சல் வழியாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நேர்காணல் சரவணன் சந்திரனின் படைப்புலகத்தையும் சார்ந்தும் மேலும் அதன் மீதான நேர்மறை மற்றும் எதிர்மறை கேள்விகள் சிலவற்றை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு எப்போதும் போல சரவணன் சந்திரன் தனது நிதானமான மற்றும் செறிவான மொழியிலேயே பதில்களை அளித்திருக்கிறார்.

இனி நேர்காணல்…

உங்களின் இளமைப் பருவம் பற்றிச் சொல்ல இயலுமா? முக்கியமாக வாசிப்பு உங்களிடம் வந்து சேர்ந்தது பற்றியும் அதன் வழியான இலக்கியத் தேடல்களையும், அடைந்த இலக்குகளைப் பற்றியும் அறிந்திட ஆர்வமாக உள்ளேன்.

அப்போது கோவில்பட்டியில் வசித்து வந்த என்னுடைய அம்மாவும் பசுபதி அத்தையும் அந்தக் காலத்திலேயே மாத நாவல்களைப் படிக்கிறவர்களாக இருந்தார்கள். அவர்கள் வழியாகத்தான் படிக்கும் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது. நன்றாக நினைவில் இருக்கிறது. நான் நான்காம் வகுப்புப் படிக்கையில் முதன்முதலாகக் கவிதை ஒன்றை எழுதி அது வாரமலர் இதழிலும் பிரசுரமானது. அந்தக் கவிதை இன்றும்கூட நினைவில் இருக்கிறது. “இயற்கை அலைமோதும் அழகிய கடலே. உன் சுற்றுவட்டாரங்களில் எல்லாம் எத்தனை செல்வச் செழிப்பு. உன்னிலிருந்து எழுகின்றான் காலைக் கதிரவன். கதிரவனுக்கு நீ தாயா? சேயா?” இதுதான் அந்தக் கவிதை. இதை எழுதியவன் நான்காம் வகுப்பு படிக்கிற பையன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பேனா என்கிற ஒரு கதையை முழு நீள வெள்ளைத்தாளில் எழுதி, ப்ரவுண் நிற கவரில் போட்டு பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பிய போது ஸ்டாம்பிற்கான காசை பசுபதி அத்தை கொடுத்த நினைவு இதைச் சொல்லும் போதும் எழுகிறது.

பிற்பாடு விளையாட்டில் ஆர்வம் வந்து எழுதுவதிலிருந்து விலகினாலும், அவ்வப்போது கவிதை என்கிற பெயரில் எதையாவது கிறுக்கும் பழக்கம் இருந்தபடியே இருந்தது. மைதானத்தில் நான் ஓடிக் கொண்டிருந்தாலும் எழுத்து எப்போதும் என்னைத் தொடர்ந்து ஓடி வந்திருப்பதை இக்கணத்தில் நன்றாக உணர்கிறேன். பிறகு கல்லூரிக்குப் போவதற்கு முன்பு நான் படித்த முதல் நாவல் சோ.தர்மன் அண்ணன் எழுதிய தூர்வை. அதற்குப் பிறகே வெறிகொண்டு படிக்க ஆரம்பித்தது, எழுத ஆரம்பித்தது எல்லாம். அந்த வகையில் முதன்முதலாகத் தீவிர இலக்கிய உலகத்தினுள் என்னைக் கைப்பிடித்து அழைத்து வந்து உள்ளே தள்ளியவர் சோ.தர்மன் அண்ணன்தான். அக்காலத்தில் அவருடைய வீடுதான் எனக்குக் கூடு. அந்த வகையில் இந்தத் துறையில் எனக்குக் கிடைக்கும் வாழ்வோ, தாழ்வோ அது அவரையும் சாரும்.

எப்போது முதன் முதலில் எழுத ஆரம்பித்தீர்கள்? அதன் வழியாகக் கிடைத்த அனுபவங்கள் அவை கசப்பானவை என்றாலும் பரவாயில்லை, அவற்றையும் சொல்லுங்கள்.

நான் செயல்பட்டதிலேயே கசப்பே இல்லாத துறை இதுதான். அதாவது 1996-ஆம் ஆண்டு கல்லூரி முதலாமாண்டு இறுதியில் எனக்கொரு வாகன விபத்து ஏற்பட்டு, விளையாடவே முடியாத நிலை. அந்தச் சமயத்தில் என் முன்னே இருந்தது, படிப்பும் எழுத்தும் மட்டும்தான். தமிழிலக்கியப் பாடத்தைத் தற்செயலாக எடுத்துப் படித்த எனக்கு, அதைப் பிடித்து மட்டுமே மேலேற வேண்டிய இக்கட்டு. அதனால் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான் படித்த சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் ‘வனம்’ என்கிற கூடுகை வாரா வாரம் வெள்ளிக்கிழமை மாலை நடக்கும். அதில் வெவ்வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொண்டு தாங்கள் எழுதியதைப் படிப்பார்கள். உடனுக்குடன் விமர்சனமும் செய்வார்கள். அங்கேதான் ‘கோவில்பட்டி சரவணக்குமார்’ என்கிற பெயரில் வட்டார வழக்குக் கவிதைகளை எழுதினேன். வனம் கூடுகையைத் தலைமையேற்று நடத்திய என்னுடைய பேராசிரியர் பாரதிபுத்திரன் என்னுடைய எழுத்துகளை, அவை ஆரம்பக் கட்ட அளவிலானவை என்பதை நன்றாக அறிந்திருந்தும், உச்சிமோந்து பாராட்டி என்னை முதன்முதலாக அக்காலத்தில் முன்னோக்கித் தள்ளியவர் என்பேன். கூடவே என்னுடைய இன்னொரு பேராசிரியரான இளங்கோ, தனிப்பட்ட வாழ்விலும் எழுத்து வாழ்விலும் ஒரு தோழனைப் போல வழிகாட்டியவர். அப்புறம் இயக்குனர் ராம் என்கிற ராமசுப்பு அண்ணன் மற்றும் சாய்ராம். ஆங்கில இலக்கியம் பயின்ற சாய்ராம் அப்போது தமிழ்க் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றைக் கல்லூரியில் நடத்தினான். அக்காலத்தில் சில சிறுகதைகளையும் எழுதி அது நந்தன், புதியபார்வை உள்ளிட்ட சில இதழ்களில் வெளியாகவும் செய்தது. கல்லூரிக் காலத்தில் ‘ஓடம்’ என்கிற சிற்றிதழை கண்ணன் அண்ணனோடு சேர்ந்து அச்சில் கொண்டுவந்ததிலிருந்து என் இலக்கியப் பயணம் துவங்குகிறது. பிறகு ஆறாம்திணை இணைய இதழில் வேலைக்குச் சேர்ந்த பிறகிலிருந்து தொடர்ச்சியாகக் கதைகள், பெரும்பாலும் கட்டுரைகள் எழுதத் துவங்கினேன். பிறகு இந்தியா டுடே என கட்டுரை எழுத்து நீண்டது.

இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற குறிப்பிட்ட விதிமுறைகள் ஏதேனும் உங்கள் எழுத்துகளில் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் எழுத்துக்கு ஆதாரப் புள்ளிகள் அல்லது ஆசான்கள் என்று யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?

இல்லை, அந்த மாதிரித் திட்டமிட்டு எழுதவில்லை. கதை என ஒன்று திரண்டு வந்தால், அது எந்தக் களமாக இருந்தாலும், என் கண்முன்னே ஒருத்தரை நிறுத்தி அதைச் சொல்லத் துவங்கி விடுவேன். அது இழுக்கிற பக்கத்திற்கு ஓடுவது மட்டுமே என்னுடைய வேலை. அதை இப்போதும் தொடர்கிறேன். ஆதாரப் புள்ளிகள் என்று சொல்லும் போது ஒரு விஷயத்தைச் சற்றே விரிவாகச் சொல்ல விரும்புகிறேன். நான் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாடக் கற்றுக் கொண்டேன். அங்கே என்னை சண்முகவேல் அண்ணாச்சி, குருசித்ர சண்முகபாரதியண்ணன், என் நண்பன் காளிமுத்து பாண்டியராஜா, சிவனேசன் அண்ணன் எனப் பலர் பயிற்றுவித்தார்கள். அதற்கடுத்து நன்றாக விளையாடத் தெரிந்த பிறகு திருநெல்வேலி விளையாட்டு விடுதிக்குப் போனேன். அங்கே முறைப்படி நுணுக்கங்கள் கற்றுக் கொடுத்து என்னை முழுமையான ஆட்டக்காரனாக மாற்றியவர் என்னுடைய குமார் கோச். எனக்கு நிறையப் பயிற்சியாளர்கள் இருந்தார்கள் என்றாலும், களத்தில் இன்றும் குமார் கோச்சின் மாணவனாகவே அறியப்படுகிறேன். நானுமே இன்றளவும் அவ்வாறுதான் சொல்வேன் பழைய ஆட்களைப் பார்க்கையில். அதைப் போலத்தான் எழுத்து என வருகையில், சோ.தர்மன் அண்ணன் வழியாக கி.ரா, பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் எனப் பயிற்சியாளர்கள் பலரை அடைந்து இறுதியாய் குமார் கோச்சைப் போல ஜெயமோகனைச் சென்றடைந்தேன். திசைகளின் நடுவேதான் என் திசை தெரிந்தது.

பத்திரிக்கைத்துறையில் முக்கியமான இடங்களில் நிறையப் பணிகளைச் செய்துள்ளீர்கள். அந்த அனுபவங்கள் தனிப்பட்ட எழுத்துக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது?

தொடர்ச்சியாக மேல் மட்டம் என்று சொல்லப்படுவதில் இருந்து கீழ்மட்டம் வரை எல்லா தரப்பு மனிதர்களையும் சந்திப்பதற்குப் பத்திரிகைத் துறை உதவிகரமாக இருந்தது. அங்கே இருந்தபடியேதான் தொழில் நிமித்தமான நிறையப் பயணங்களும் சாத்தியமாகின. அதன்வழியாக பல்வேறு நிலப்பரப்புகள், அதுசார்ந்த மனிதர்கள் அவர்களின் கதைகள் என நகர்ந்து கொண்டே இருந்தேன். ஒருவகையில் பார்த்தால் அந்தத் துறை அள்ள அள்ளக் குறையாத கச்சாப் பொருட்களை எனக்குத் தந்திருக்கிறது.

நீங்கள் ஒரு ஹாக்கி விளையாட்டு வீரர் என்று உங்களின் பதிவுகள் வழியாக அறிந்து கொண்டேன். அந்த அனுபவங்களைச் சொல்ல இயலுமா? 

ஆமாம், தொழில்முறையிலான ஹாக்கி விளையாட்டுக்காரன். எங்களுடைய கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டில் தமிழ்நாட்டின் தலைமையகமாக இருந்தது. கோவில்பட்டி ஹாக்கிக்கென்று நூற்றாண்டு கால வரலாறு உண்டு. என்னுடையது நேதாஜி ஸ்போர்ட்ஸ் க்ளப் அணி. அங்கிருந்து திருநெல்வேலி அரசு விளையாட்டு விடுதிக்குப் படிக்கப் போனேன். விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின்படியே சென்னைக் கிறித்துவக் கல்லூரிக்கும் படிக்கப் போனேன். அந்த வாகன விபத்திற்குப் பிறகு விளையாட்டை விட்டாலும், ஒரு விளையாட்டுக்காரனாகவே இன்றும் பலதுறைகளில் ஓடிக் கொண்டிருக்கிறேன். நினைவில் காடுள்ள மிருகம் என்பதைப் போல, நினைவில் மட்டையை ஏந்தியிருக்கும் மிருகம் நான்.

முழுநேரமும் எழுத்தாளராக இயங்குவது சாத்தியமில்லாத காலகட்டத்தில் வாழ்கிறோம். இப்படிப்பட்ட காலகட்டத்தில் நீங்கள்   பல்வேறு வணிகங்களைச் செய்கிறீர்கள். இன்னொருபுறம் விவசாயமும் செய்கிறீர்கள். இவற்றுக்கு இடையே எழுதுவது என்பது எவ்வளவு சவால்கள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது?

என்னைத் தினம்தோறும் துயருக்குள் தள்ளுகிற இக்கட்டு இது. ஒருநாளில் இலக்கியம் சார்ந்து செயல்படுவதற்கு எனக்கு மொத்தமாகவே இரண்டு மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது. மீன் வியாபாரம் சார்ந்து அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து விடுவதால், தூக்கமின்மை என்பது கழுதை ஒன்றின் மீது சுமத்தப்பட்ட பொதி மூட்டையைப் போல என்னைத் தொடர்கிறது. அதிலிருந்து மீண்டு என்னைப் புதுப்பித்து, ஒரு சூழலுக்குள் தள்ளி, எண்ணங்களை ஓரிடத்தில் குவித்து எழுதுவது என்பது போராட்டமாகவே இருக்கிறது. ஆனால் எழுத்து எனக்கு உணவைப் போல என்பதால், முட்டி மோதி அள்ளித் தின்று விடுகிறேன். பாலைவனத்தில் ஒட்டகம் கிடைக்கிற நேரத்தில் பருகுகிற தண்ணீரை இருப்பாக வைத்து, மேற்கொண்டு நடைபோடும் என்பார்கள். அதைப் போல எனக்குக் கிடைக்கிற குறுகிய நேரத்தைக் கூட எழுத்துக்காக மட்டுமே செலவிடுகிறேன்.

வணிகம், விவசாயம், விளையாட்டு, அரசியல், காலநிலை போன்றவற்றை உங்கள் படைப்புகளில் வெவ்வேறு விதங்களில் கொண்டு வருகிறீர்கள். இவற்றைத் திட்டமிட்டுச் செய்கிறீர்களா அல்லது எழுத்தில் எதேச்சையாக அதுவாக வந்து விடுகிறதா? 

எனக்குள் என்ன இருக்கிறதோ, எனக்குள் எது சேகரம் ஆகிறதோ, அதை மட்டுமே எழுதுகிறேன். என்னுடைய அனுபவ வெளியில் மட்டுமே புழங்க நினைக்கிறேன். அதனால் அது அப்படித்தான் அமையும். அதுவே இயல்பானதும் என உணர்கிறேன்.

இயல்பானது என்று நீங்கள் எளிதாகச் சொன்னாலும் மேலே சொல்லியிருக்கும் பல்வேறு துறைகளையும் எழுத்தில் கொண்டுவருவது என்பதைச் சற்றுக் கடினமான பணியாக நான் பார்க்கிறேன். முக்கியமாக, வணிகத்திற்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் எனக்கு வியப்பைத் தருகிறது. வணிகத்தின் மீது ஏன் இவ்வளவு ஆசை என்று தெரிந்து கொள்ளலாமா? இன்னும் நுட்பமாக வணிகத்தின் பல்வேறு சாரங்களையும் எழுத்தில் கொண்டு வர விருப்பம் உள்ளதா?

குறிப்பாக, நான் தோற்றுப் போன ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதும் ஒரு காரணம். கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், சிலப்பதிகாரமே ஒரு வணிகனைச் சுற்றிப் பின்னப்பட்டதுதான். அதைப் போல பழங்கால இலக்கியங்களில், எனக்குத் தெரிந்து வணிகம் எதிர்மறையானதாகப் பார்க்கப்பட்டதில்லை. ஆனால் நவீன இலக்கியம் என்று வருகையில் வணிகம் என்பதைக் கொஞ்சம் எதிர்மறையாகப் பார்க்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. வணிகம்/பணம் என்பதெல்லாம் கலைச் செயல்பாடுகளுக்கு எதிரானது என்கிற மாதிரிகூட ஒரு புரிதல் இருக்கிறது. கலைஞனால் ஒரு வணிகனாக இருக்க முடியாது என்றெல்லாம் மிக எளிதாகப் போகிற போக்கில் பேசுவதைக்கூடக் கேட்கிறேன். அதனால் தமிழ் வணிகம் என்பது எங்கிருந்து துவங்குகிறது? அதன் வேர்கள் என்ன என்பது குறித்தெல்லாம் என் எழுத்துக்களில் கொண்டு வரவேண்டும் என நினைக்கிறேன். அது சம்பந்தமான விரிவான புத்தகம் ஒன்றை எழுதும் திட்டத்தில்கூட இருக்கிறேன். இது மேலும் மேலும் விரிவாகப் பேச வேண்டிய உள்ளடுக்குகளைக் கொண்டது. இறுதியாய், வணிகனும் மனிதன்தானே?

எழுத்தாளனுக்குக் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்கள் என்கிற வரிசை ஒன்றிருக்கும். இந்த வரிசை சிலருக்குக் கொஞ்சம் மாறும் அல்லது குறையும். நீங்கள் இந்த வரிசையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு முதல் முயற்சியாக நாவல் என்று ஆரம்பித்திருக்கிறீர்கள் (புனைப்பெயரில் இல்லாமல் உங்கள் பெயரில் எழுதியது). இது எதனால் என்று தெரிந்து கொள்ளலாமா? 

ஆரம்பத்தில், முதற்கட்ட முயற்சியிலமைந்த கவிதைகள் எழுதினேன் என்று சொன்னேன் அல்லவா? அது எனக்கான வடிவம் இல்லை என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். அப்போது எழுதியவற்றை வெளியிடக் கூடச் செய்யவில்லை. அப்போது இருந்த, இளமைக்கேயுரிய ஒரு மிதப்பில் அவற்றை எல்லாம் போட்டு எரித்தும் விட்டேன். பிறகு சிறுகதைகள் சிலவும், அவையுமே குறைகள் நிரம்பியவை. ஆனால் 2015-இல் முழுமையாக எழுத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்த போது உடனே தோன்றியது நாவல் என்கிற வடிவம்தான். அந்த வடிவம் எனக்குச் சவால் அளித்தது. எந்த மலை ஏறுவதற்கு உன்னை அச்சப்படுத்துகிறதோ, அதுவே நீ ஏற வேண்டியது என்கிற கூற்றின்படி நாவல் வடிவத்தைக் கைக் கொண்டேன். தற்செயலாக அது எனக்கு அமைந்து வந்துவிட்டதும், மேற்கொண்டு முன் நகர முதன்மையான காரணம்.

உங்களின் சிறுகதைகள் அனைத்தும் வாசித்தேன். சில சிறுகதைகள் நிறைவாக உள்ளன. பொதுவாக, கதைசொல்லியின் பார்வையில் கதைகள் நகர்ந்து போகின்றன. அதேநேரத்தில் எல்லாச் சிறுகதைகளிலும் இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது சரியானதா? 

ஆரம்பத்தில் எழுதிய கதைகளில் அப்படி இருப்பது உண்மைதான். ஆனால் இனி வெளிவர இருக்கும் கதைகள் சிலவற்றில் படர்க்கையைப் பயன்படுத்தி இருக்கிறேன். தவிர, நான்கு வரி எழுதினாலும், நாலாயிரம் எழுதினாலும், உள்ளுக்குள் திரண்டு உருண்டு வரவேண்டும் எனக்கு. உள்ளுக்குள் இருக்கிற தும்பிக்கை நீரை வெளியே தன்னைப் போலத் துப்ப வேண்டும் எனக் காத்திருப்பேன். அதனாலேயே தன்னிலையில் கதை சொல்வது என்னுடைய இயல்பாகவும் உடனடித் தேர்வாகவும் இருக்கிறது.

சிறுகதைகளில் பெரிய திருப்பங்களைத் தராமல் திறப்புகளை முன்வைக்கும் உத்தியைப் பயன்படுத்துகிறீர்கள். இதனா‌ல் சில நேரங்களில் உங்கள் சிறுகதைகளில் சுவாரஸ்யம் குறைகிறது. என் கணிப்பு சரியென்று சொல்ல முடியுமா? அல்லது உங்கள் கருத்துகளை நீங்கள் முன் வைக்கலாம்.

எழுதியவர் யாராக இருந்தாலும், இதுமாதிரியான கேள்வி வந்தால், அதற்கு நேர் எதிராகவே பதில் சொல்வார்கள். அது இயல்பானதுதான். இதையெல்லாம் எழுதுகையில் நான் யோசிப்பதே இல்லை. ஒரு முழுமையான தன்னிலை கூடிய ஆட்டமொன்றை மைதானத்தில் இருப்பதைப் போல நினைத்து ஆடுகிறேன். அதில் சில திரண்டு முழுமையாக வந்துவிடும். சில வராமலும் போகலாம். இதை மட்டுமே நான் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன். எனக்குப் பூரணமாகத் தோன்றுகிறதா என்பது மட்டும்தான் என் கணக்கில் வரவு.

சிறுகதைகளில் சரவணன் சந்திரன் ஜெயிக்கும் இடங்கள் என்று பலவற்றை வகைப்படுத்திச் சொல்லாம். உறவுச் சிக்கல்கள் அதிலும் ஆண் – பெண் உறவுகளில் வரும் நெகிழ்ச்சிகள், உரசல்கள், மற்றும் மனிதர்கள் தங்களது குற்றவுணர்வுகளின் வழியாகப் படும் அல்லல்கள் என்று. அதே வேளையில்  நீங்கள் கவனிக்காமல் விடும் இடம் என்று இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். சிறுகதையின் நடுவே திடீர் திடீரென்று வெளிப்படும் அநாமதேயக் குரல், சிறுகதை தரவேண்டிய அழுத்தத்தைக் குறைக்கிறது என்று நினைக்கிறேன்.

இவ்வாறான அநாமதேயக் குரல்களை என் வாழ்வு முழுக்கக் கடந்து வந்திருக்கிறேன் என்பதால், என்னையறியாமல் அவை வெளிப்படுகின்றன என்றே இப்போது எண்ணுகிறேன். நீங்கள் மேலே சொன்னபடி பார்த்தால், சமகாலத்தில் நான் மற்றும் என் அனுபவ வெளி சந்திக்கும் அகச் சிக்கல்களை அறிவதும் அது குறித்துக் கேள்விகளை எழுப்பி பதில்களைத் தேடும் முனைப்புமே என்னை அம்மாதிரியான களங்களை எழுதத் தூண்டுகிறது எனலாம்.

ஐந்து முதலைகளின் கதை என்கிற முதல் நாவல், தைமூர் போன்ற அந்நிய பிரதேசத்தில் நடக்கும் கதையாகவும், வணிகப் பகடை ஒன்று தொடர்ந்து உருட்டப்படும் நாவலாகவும் விரிகிறது. முதல் நாவல்  உருவான பின்னணி, வெளிவந்த போது உங்களுக்குள் இருந்த மனநிலை இன்றும் நாவலை வாசிக்கும் போது முதல் சிந்தனைக்கு வரும் கருத்துகள் அனைத்தையும் கொஞ்சம் சொல்லுங்கள். 

ஐந்து முதலைகளின் கதை

என்னுடைய மூத்த நண்பர் இயக்குனர் புகழேந்தியின் மாடி வீட்டு அறையில் வைத்து அதன் முதல் அத்தியாயத்தை திடீரெனத் தோன்றி எழுதினேன். அதைக் கொண்டு போய் மனுஷ்யபுத்திரன் கையில் கொடுத்த போது, உடனடியாக இதை எழுதி முடி என்று சொன்னவர் அவர்தான். அக்காலத்தில் என்னை எழுதத் தூண்டியபடியே இருந்தவர் அவர் மட்டுமே. கோவில்பட்டி காலத்தை என் முதல் பருவம் என்று கொண்டால், இரண்டாம் பருவத்தில் சொல்லவேண்டியவர் மனுஷ்யபுத்திரன்தான். அவர் தந்த உற்சாகத்தில் அடுத்த பதினைந்து தினங்களில் நாவலை எழுதி முடித்து விட்டேன். அப்போது அகத்திலும் நான் மிக மகிழ்ச்சியானவனாகவும் சாகசக்காரனாகவும் மடிநிறைய நேரத்தை வைத்திருப்பவனாகவும் இருந்ததால், அது எளிதாகவே சாத்தியமாகி விட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக எழுதியதிற்குக் காரணம், முதல் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு மட்டுமே என்பதை ஆழமாக உணர்கிறேன். மூத்த எழுத்தாளர் சாரு நிவேதிதா அந்த நாவலைக் கொண்டாடி என்னைப் பல கைகளுக்குக் கடத்தினார். அந்நாவலுக்கு முன்னுரை எழுதிய என்னுடைய ஆசிரியர்களுள் ஒருவராக இருந்த டி.ஐ.அரவிந்தன், “ஆழ உழு” என முக்கியமான ஒன்றைச் சொல்லி அதை நோக்கி என்னைத் தள்ளவும் செய்தார். அதன் அடிப்படையில் விளைந்ததுதான் ‘அஜ்வா’. அப்புறம் அக்காலத்தில் நானெழுதியவற்றைத் தொடர்ச்சியாகப் படித்து, உரையாடி என்னை முன்னோக்கிச் செலுத்தியவர், ந.முருகேசபாண்டியன். பேராசிரியர் அ.இராமசாமி தொடர்ச்சியாக என்னுடைய படைப்புகள் குறித்து உரையாடி, என் போதாமைகள் குறித்து கவனம் குவிக்கச் செய்கிறார். அதுமாதிரி அப்போதும் இப்போதும் “அடுத்து என்ன மாப்பிள்ளை” என்று கேட்கிற, நூலகராக இருக்கிற என்னுடைய தாய்மாமா, ராஜன்பாபு. யோசித்துப் பார்த்தால், இப்போது ஐந்து முதலைகளின் கதை நாவலை எழுதியிருந்தால், அதை வேறுமாதிரியாகவே செய்திருப்பேன் என்றுதான் தோன்றுகிறது.

ரோலக்ஸ் வாட்ச்  நாவல்  வழியே சமூகத்தின் பல்வேறு வகையான மனிதர்கள் முக்கியமாக அதிகார பலம் உள்ளவர்கள், சுரண்டல் பேர்வழிகளைப் பற்றிய கதைகளை எங்களுக்குச் சொல்கிறீர்கள். இப்படிப்பட்ட உலகம் ஒன்று இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறதா? 

ஆமாம், அதிலென்ன சந்தேகம்? நேர்வழியிலான பொருளாதாரத்திற்கு இணையான பொருளாதாரம் எதிர்மறை எனச் சொல்லப்படுவதிலும் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிகிற அரசாங்கத்தைத் தாங்கிப் பிடித்து நடத்துகிற கண்ணுக்குப் புலப்படாத அதிகார உலகம் இன்னமும் உயிர்ப்போடுதான் இயங்குகிறது. ஒருவகையில் பார்த்தால் அரசு என்பதைத் தாங்கும் மறைமுகத் தூண்கள் அவையென்பேன். சாமான்யரின் பார்வையில் படாத இருட்டு உலகம் அதற்கேயுரிய சுக துக்கங்களோடு பாதாள உலகம் போல இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. பெருச்சாளியைப் போல முண்டிப் பார்த்தால், எவராலும் நுழைந்துவிடக்கூடிய திறப்பைக் கொண்டதுதான் அது.

பல்வேறு மனிதர்களின் கதைகளை  ரோலக்ஸ் வாட்ச் நாவல் சொல்கிறது. அதேநேரத்தில் நாவல், கொஞ்சம் எதார்த்தமான தளத்திலிருந்து தள்ளிப் பயணம் செய்வது மாதிரியான உணர்வும் எனக்கு வருகிறது. அப்படி ஓர் உலகம் எனக்குப் பழக்கமில்லை என்பதாலும் இருக்கலாம் இல்லையா?

ரோலக்ஸ் வாட்ச்

ஆமாம். நமக்குத் தெரியாததை எல்லாம் எதார்த்தமில்லாதது என்கிற வகைமைக்குள் தள்ளி விடமுடியாது இல்லையா? ஒருவேளை அந்த உலகத்தில் உழன்றிருந்தால் அது என்னவாக ஆகியிருக்கும் உங்களுக்கு?

எனக்குத் தெரியவில்லை இப்படிப்பட்ட உலகின் மனிதர்களின் கதைகள் சுவாரஸ்யம் தரும் அளவுக்கு மனதளவில் அவர்களின் கதைகள் பெரிய அழுத்தம் தருகிறதா என்று சிந்தனை செய்கிறேன். பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதைப்போன்று பகடைக்காய்களை நகர்த்தி வாழ்வை ஆடும் மனிதர்களின் கதைகளைவிடச் சராசரியான மனிதர்களின் பாடுகள் இலக்கியத்திற்கு வளமும் அழுத்தமும் சேர்க்கும் இல்லையா?

எலியின் துயரத்தைப் பேசுகிற அதேவேளையில் பூனையின் பசியைப் பற்றியும் பேசித்தானே ஆக வேண்டும் என்று சொல்வார்கள். அதை இந்த இடத்தில் பொருத்துகிறேன். மனித வாழ்வென்பது எல்லாமும் அடங்கியதுதான். எல்லா இடங்களிலும் வாழ்வு சார்ந்த அகச் சிக்கல்கள், மோதல்கள் என்பது இருக்கத்தான் செய்யும். அதைத்தான் அந்த நாவலில் கொண்டு வந்திருப்பதாக நினைக்கிறேன். துக்கத்தையோ இன்னபிற மனித ஆதார உணர்ச்சிகளையோ இப்படியெல்லாம் பேதம் பிரித்து எடை போட முடியாது. இலக்கியம் என்பது சராசரியான மனிதர்களின் பாடுகளை மட்டுமே பேச வேண்டுமென்பது ஒரு பழங்கால நம்பிக்கை. அதை உலகம் எப்போதோ தாண்டி விட்டது. ஒரே வகையான மரங்கள் நிறைந்திருந்தால், அதற்குப் பெயர் தோப்பு. எல்லாமும் கலந்திருப்பதற்குப் பெயர்தான் காடு.

அஜ்வா எனக்கு மிகவும் பிடித்தமான நாவல். அதில் வரும் மீட்சி  முக்கியமானதொரு கட்டமைப்பு என்று கருதுகிறேன். போதை வாழ்வையும் அதன் இன்னல்களையும் அதன் வழியாக மனிதர்கள் இழக்கும் வாழ்க்கையையும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் நாவல். இந்த நாவல் உருவாக்கத்தின் போது தனிப்பட்ட மனநிலை எப்படி இருந்தது? ஏதேனும் அகச்சிக்கல்களைச் சந்தித்தீர்களா?

போதையின் காரணமாக என்னுடைய நண்பர்கள் சிலர் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிந்து விழுந்து இறந்த காலத்தில் இதை எழுதினேன். ஒரு இட்லிகூட உண்ண முடியாமல் என் தலைமாட்டில் செத்துப் போன தம்பியொருத்தன் எனக்கு அச்சமூட்டினான். அவன் வாழ்ந்த உலகம் என்னை அதிரச் செய்தது.  ஒருவகையில் பார்த்தால், மிகச் சிறிய அளவில் நானுமே அந்த உலகத்தினுள் இருந்தவன்தான். அதனாலேயே அந்தத் துல்லியம் வாய்த்திருக்கும். அந்தக் காலத்தில் மனதளவில் நானுமே ஒரு புகைமூட்டமான நெருக்கடிக்குள், தீவிரமான சஞ்சலங்களுக்குள் இருந்தபடி மீட்கிற கையொன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனூடாக இருந்த என்னை ஒரு கை வெளியே இழுத்துப் போட்டு அஜ்வா பேரீட்சை மரமாக்கியது. அதை எழுதி முடித்த கணத்தில் பூரணமாக உணர்ந்தேன். ஏனெனில் அந்தப் பயணத்தை நானுமே சேர்ந்து கடந்து வந்தேன்.

அஜ்வா

படைப்புகளில் குற்றவுணர்வு மற்றும் பாவத்திற்குத் தண்டனை போன்ற கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். நவீன வாழ்வில் அதற்கெல்லாம் எவ்வளவு இடம் இருக்கிறது? ஏற்கனவே இச்சமூகம் மிகவும் எளிதாக அல்லது மௌனமாக இவற்றையெல்லாம் கடந்து போகத் தொடங்கிவிட்டது இல்லையா? 

நவீன வாழ்வு என்பது நாலைந்து நகர் சார்ந்தது மட்டுமா என்ன? நகரத்தை விட்டு வெளியே போனால் இன்றும் நன்மை, தீமை சார்ந்த தொன்மமும் அதுசார்ந்த ஆழமான நம்பிக்கைகளும் உயிர்ப்போடு இருந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் நிலத்தின் கூட்டு மனத்தில் இதற்கான வலுவான இடம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அங்கே இருந்து கிளம்பி வந்தவன் என்பதால் எனக்குள்ளும் அது சார்ந்த அலைக்கழிக்கும் கேள்விகள் இருக்கின்றன. ஏற்ற இறக்கமான பல வாழ்வுகளை நெருக்கத்தில் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். அவற்றில் நிகழ்பவற்றைத் தற்செயல்கள் என ஒதுக்கி விட முடியாத கருதுகோளில்தான் இப்போது இருக்கிறேன். எதிர்காலத்தில் அது என்னவாகும் என இச்சமயத்தில் உறுதியாக என்னால் சொல்ல முடியவும் இல்லை. குற்றவுணர்வை மட்டும் தொலைத்து விட்டால், எந்தக் கை வந்தாலும் மீட்பில்லை என ஓரிடத்தில் எழுதவும் செய்திருக்கிறேன்.

சுபிட்ச முருகன் இன்னொரு விதமான தேடலுக்குக் கொண்டுபோகிறது. நாவலின் மைய இழையாக  ஆன்மீக விடுதலை என்பதையும் குற்றவுணர்விலிருந்து ஒருவன் விடுபடும் கணங்கள் என்றும் எடுத்துக் கொள்கிறேன். தனிப்பட்ட கேள்விதான் ஒருவனுக்கு ஆன்மீக விடுதலை என்பது எதுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சுபிட்சமுருகன் என்பது என்னை நானே சோதனை மிருகமாய் முன்வைத்து வதைத்து, உழன்று, முட்டி மோதி என் அகத்தைக் கண்டடைந்த புள்ளி. அது பூரணமாக முடிந்த கணத்திலிருந்து நானே இன்னொரு மறுபிறப்பையும் அடைந்தேன். சுபிட்சமுருகனுக்கு முன்பு இருந்த சரவணன் சந்திரன் இப்போது இல்லை என்பதை உறுதியாக என்னால் சொல்லி விடமுடியும். அலைக்கழிந்த என் மனம் சமாதானமடைந்து, எண்ணங்களற்ற தூயமனம் என்கிற அடுத்த அடுக்கிற்கு, பயணம் செய்து கண்டறியும் முனைப்பிற்கு, என்னை உந்தித் தள்ளியவன் சுபிட்சமுருகன். தன்னகத்தை அறிவதே விடுதலை. கத்தியின் கூர்முனைக்குச் சாணை பிடிக்கிறவன் அந்நேரத்தில் எதை எண்ணிக் கொண்டிருப்பான்? தன்னை நோக்கி நூற்றிருபது கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்தை எதிர்கொள்ளும் விளையாட்டுக்காரன் அந்நேரத்தில் மனைவியுடனான பிணக்கை எண்ணுவானா? அதுவாய்க் கரைவதே இறுதியானது. எதுவாகவோ, அதுவாக.

விளையாட்டு வீரன் ஒருவனின் அகம் மற்றும் விளையாட்டு உலகின் புறச் சிக்கல்களை பார்பி நாவல் கண்முன்னே வாசகனுக்குக் கொண்டு வருகிறது. பார்பி என்கிற கற்பனையான பெண் பிம்பம் அவனுக்குத் தரும் அகச்சிக்கல்களைப் பேசும் இடங்கள் நாவலில் நன்றாக வந்திருக்கின்றன. இன்னும் விரிவாகப் போக வேண்டிய நாவல் என்று எனக்குத் தோன்றியது. முக்கியமாக ஹாக்கி விளையாட்டின் நுட்பம், அதன் இன்றைய அரசியல் சிக்கல்கள், சாதாரண குடும்பத்திலிருந்து வரும் விளையாட்டு வீரனின் வெற்றி தோல்வி இப்படி நிறைய இன்னும் பேசியிருக்கலாம் இல்லையா?

உண்மைதான். பார்பியை இன்னும்கூட விரித்து எழுதி இருக்கலாம் என்று இப்போது நீங்கள் கேட்கையிலும் தோன்றுகிறது. அந்த நேரத்தில் அப்படி ஆடியதே போதுமானதாகவும் இருந்தது எனக்கு. இப்போது அந்தப் போதாமை எனக்குத் தட்டுப்படுகிறது. ஆனால் திருப்பி அதைத் திருத்த முடியாது இல்லையா? ஆடிய பலநூறு ஆட்டங்களில் அதுவும் நல்ல ஆட்டம்தான். ஆனால் என்னளவில் உச்சமானதாக அது அமையவில்லை, அவ்வளவுதான்.

அத்தாரோ நாவலில் புதியதொரு நிலத்தைப் படைத்து அதன் வழியாகப் புனைவிற்கான எல்லைகளைக் கொஞ்சம் கலைத்துப் போட்டு விளையாடியிருக்கிறீர்கள்? இப்படிப்பட்ட பின்னணியில் எழுத வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

அத்தாரோ

அத்தாரோ நாவல் என்னளவில் எனக்குப் பூரணமான உணர்வைக் கொடுத்த நாவல். கனவொன்றில்தான் அந்நாவலுக்கான கரு உருவானது. அதுவரை அன்றாடம் சார்ந்து, ஏற்கனவே தெரிந்த, அறிந்த நிலம் சார்ந்து மட்டுமே எழுதியதால் புதிய ஒன்றைச் செய்து பார்க்க நினைத்தேன். நினைத்தேன் என்று சொல்வதை விட அது அவ்வாறுதான் திரண்டும் வந்தது.

அத்தாரோ மலை என்கிற ஒன்று எங்கேயும் இல்லை. அந்த மலையும் அதிலிருக்கிற செடிகளும் கொடிகளும் எல்லாமே முழுப் புனைவாய்த் திரண்டுவந்தன, அதன் பெயர்கள் உட்பட. அதை முடித்த தினத்தில் அத்தனை மகிழ்வாய் உணர்ந்தேன். அந்த நாவல் இயற்கையைப் படிப்படியாகப் புரிந்து கொண்டு, புழுவாய் இருந்த ஒருத்தன் மனதால் புலியாய் எவ்வாறு உருமாறினான் என்பதைப் பேசியது. கூடவே எல்லா உயிரினங்களுக்குமான எல்லையைப் பற்றித் தத்துவார்த்தமாகவும் பேசியது.

இயற்கை சார்ந்து நுணுக்கி நுணுக்கி உள்நுழைந்த என் அனுபவங்கள் அத்தாரோ வழியாகவே முழுமையாக வெளியாகி இருப்பதாக உணர்கிறேன். என் எழுத்து வாழ்வில் மற்றவற்றைவிட அத்தாரோவிற்கே அதிக முக்கியத்துவமும் அளிக்கிறேன். ஏனெனில் அது முழுப் புனைவாய், இந்த ஒட்டுமொத்தம் குறித்த அத்தனையையும் விசாரணை செய்கிறது. சுபிட்சமுருகன் அகக் கொந்தளிப்பென்றால், அத்தாரோ என் அகம் தெளிந்த நீரோடையைப் போல இருந்த காலத்தில் எழுதப்பட்டது.

அத்தாரோ  நாவலின் நிலமும், மொழியும் அதன் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்குச் சரியாகப் பொருந்தி வந்தாலும்  நாவலின் மையம் இன்னும் சரியாகத் திரண்டு வரவில்லை என்று கருதுகிறேன். இன்னும் கொஞ்சம் அத்தியாயங்களும் தேவை என்று நினைக்கிறேன் சரியா?

அத்தாரோ முன்னிறுத்துகிற ஒட்டுமொத்தம் சார்ந்த என்னுடைய உரையாடல்களில் என் அனுபவக் குறைபாடு இருக்கலாம். ஆனால் அதற்கு மையம் திரண்டு வரவில்லை என்பதாக நினைக்கவில்லை. கூடவே இன்னொரு எண்ணமும். ஆங்கிலத்தில் வெளியாவதற்கான விதி அத்தாரோ நாவலுக்கு இருந்தால், அது ஒருவேளை நிச்சயம் பேசப்படலாம்.

ஆண் குரல் வழியாக எல்லாப் படைப்புகளிலும் பேசுவது எதனால்? பெண் குரல் ஒன்று எங்கேயும் உங்கள் படைப்புகளில் கேட்கவில்லையே? (அதேநேரத்தில் பெண்களின் மனதின் குரலையும் ஓரளவுக்கு நுட்பமாக எழுதுகிறீர்கள்) இது எதனால் என்று தெரிந்து கொள்ளலாமா?

ஏற்கனவே சொன்னதுதான். என் அகத்தில் திரளும் உலகத்தை என்னுடைய அனுபவ வெளியை மட்டுமே நான் எழுதுகிறேன். என் அனுபவ வெளிக்கு வெளியே இருப்பவற்றை எழுத அஞ்சுகிறேன். பெண் உலகம் என்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் நான் இருக்க வேண்டும் அதில். உதாரணமாக, அம்பர் கதையைக்கூட எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் எழுதும் கட்டுரைகளில் செய் நேர்த்தியும் நுட்பமும் எளிய கருத்துகளைச் சரியாக முன் வைக்கும் மொழியும்  தெளிவாக வெளிப்படுகிறது. உங்கள் கட்டுரைகள் தமிழ்ச்சூழலில் முக்கியமானவை என்று கருதுகிறேன். அதேநேரத்தில் உங்கள் சிறுகதைகளில், நாவல்களின் நடுவே திடீரென்று சில பத்திகளிலும் நல்ல கட்டுரை ஒன்றுக்கு ஏற்றவாறான பத்திகள் வந்துவிடுகின்றன. புனைவு தரவேண்டிய அழுத்தத்தை இந்தப் பத்திகள் குறைத்து விடுகின்றனவோ என்று தோன்றுகிறது. 

செய்நேர்த்தியும் நுட்பமும் தொடர்ச்சியான பத்திரிகைப் பணியிலிருந்து வந்ததால் வந்தது. கட்டுரை உருவாக்கத்திற்காகவே சுமார் பதினைந்து ஆண்டுகளை அத்துறையினுள்ளே போட்டிருக்கிறேன். சித்திரமும் கைப்பழக்கம்தானே? சிறுகதைகளிலும் நாவல்களிலும் அவ்வாறு வருவதாக நீங்கள் உறுதியாக நினைத்தால், அது பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதுதான். கொஞ்சம் பதற்றமும் எழுகிறது.

எனக்குத் தெரிந்த வாழ்க்கையை எனக்குத் தெரிந்த மொழியில் வாசகனிடம் எளிமையாகச் சொல்ல வேண்டும்  என்று சொல்கிறீர்கள். அதை நேர்த்தியாகவும் செய்கிறீர்கள்.  அதேநேரத்தில் அடுத்த கட்டமாக நகர்வதற்கு எளிமையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பீர்களா? அல்லது மாற்றுப் பரிசோதனை முயற்சிகள் எவையேனும் மனதிலிருக்கிறதா? 

எழுதும் போது அப்படியெல்லாம் திட்டமிடுவதே இல்லை. அந்தக் களம் என்ன கோருகிறதோ அதை என்னையறியாமல் செய்கிறேன். தவிர உள்ளே என்ன இருக்கிறதோ? அதுதானே வெளியே வரும்? உண்மையாகவே நிகழை மட்டுமே இப்போது பரபரப்போடு எதிர்கொள்கிறேன். அதுவே எனக்குத் தற்சமயம் விதிக்கவும் பட்டிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.

கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் எதுவானாலும் நீங்கள் வைக்கும் தலைப்புகள் நன்றாக உள்ளன. தலைப்புகளை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்? இதற்காக எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்?

கதை ஒருமாதிரியான புகைமூட்டமாகத் திரளும் போதே எனக்குள் தலைப்பு ஊற்றெடுத்து விடும். தலைப்பை முதலில் எழுதி விட்டு கீழே சரவணன் சந்திரன் என எழுதிய பிறகே கதையைத் துவங்குவது என்பது ஒரு பழக்கமாகவும் ஆகிவிட்டது. சிலநேரங்களில், அது தவிர்க்கமுடிந்த செயல் என்ற போதிலும் தலைப்பிற்காகக் காத்திருப்பதும் உண்டு.

உங்களின் படைப்புகளின் முழுமையான பட்டியலைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வளவு எழுதிக் குவித்துள்ளீர்கள். இந்தப் பட்டியலை  நீங்கள்  பொறுமையாகப் பார்த்தால் மனதில் என்ன மாதிரி எண்ணங்கள் வந்து போகின்றன?

விக்னேஷ், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். விளையாட்டுக்காரனுக்கு தினம்தோறும் விளையாடிக்கொண்டே இருக்கவேண்டும். அவன் காயம் காரணமாக கேலரியில் அமர்ந்திருக்கும் காலம் என்பது கொடுமையானது. விளையாட்டு வீரனின் வாழ்வில் நேற்று நடந்து முடிந்த போட்டிகூட வெறும் எண்ணிக்கை மட்டும்தான். அதை வெகுசீக்கிரமே இயல்பாகவே மறந்துவிட்டு அவன் நாளைக்காகத்தான் எப்போதும் காத்திருப்பான். அதுமாதிரிதான் எனக்கு எழுத்தும். உணவில்லாமல் ஒருநாளும் இருக்க முடியாது என்பதைப் போல. கொரானா காலத்திற்குப் பிறகு, வியாபாரத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தினமும் பத்து வரியாவது எழுதாவிட்டாலும் படுக்கையில் குற்றவுணர்வோடுதான் உழல்வேன்.

தினமும் பத்து வரிகள் என்று நீங்கள் சொல்வது ஆச்சரியம் தருகிறது. விமர்சகர்களை விடுங்கள், நூற்றாண்டு கடந்து ஓடிக் கொண்டிருக்கும் நவீனத் தமிழிலக்கியத்தில் நீங்கள் உங்களை எந்த இடத்தில் சரியாகப் பொருத்திப் பார்க்க விரும்புகிறீர்கள்?

உலகம் ஒரு கிராமமாய்ச் சுருங்கிய பிறகு வாழத் துவங்கி இருக்கிற ஒரு தலைமுறையின் பாடுகளைச் சொல்கிறவனாக. ஒற்றைப் படிமமாய்ச் சொல்ல வேண்டுமெனில், அதேசமயம் நிலத்தில் அழுத்தமாகக் காலூன்றி வான்நோக்கி எம்பும் ஒரு பறவையாக.

தொலைக்காட்சி, பத்திரிக்கை, வணிகம், விவசாயம், எழுத்து என்று எல்லா துறைகளிலும் மாறி மாறி செயல்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் பிடித்த துறை எது? 

ஒற்றை வரியில் பதில் சொல்லியே ஆகவேண்டுமெனில் எழுத்துதான். அங்கேதான் நான் முழுமையாகக் கரைந்து போக முடிகிறது. ஆனால் கூடுமானவரை எனக்குக் கிடைக்கிற பாத்திரத்தில் எல்லாம் ஒரு நீரைப் போல நிறைவாக நிறைந்து போகவே முயன்று கொண்டிருக்கிறேன். கடற்கரையில் நிற்கையில் ஒரு மீனைப் போலத்தான் உணர்கிறேன். மிகச் சிறந்த கொள்முதல் ஒன்றை முடிக்கையில் மனம் குதூகலமடைவதையும் உணர்கிறேன்.

உங்களுடன் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும், புதிதாக எழுத வந்திருக்கும் யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள்? ஏதேனும் விமர்சனக் கருத்துகள் இருக்கின்றனவா?

இருப்பதிலேயே மிகச் சிக்கலான கேள்வி என்பது இதுதான். பெரும்பாலும் இக்கேள்வி பட்டியல் என்கிற வகைமைக்குள் போய் அடங்கி விடுகிறது. நிறைய உலகங்களில் இருந்தவன் என்பதால், நான் அதுவரை பார்க்காத, எழுத்தில் கொண்டுவர முடியாத உலகங்கள் எல்லாம் என்னை எளிதாகவே ஈர்த்து விடும். பெரும்பாலும் நான் வெளியான எல்லாவற்றையும் முறைசார்ந்து ஒரு விமர்சகனைப் போல அல்லது ஒரு அமைப்பாகத் தன்னைத் திரட்டிக் கொள்ள முனைகிறவரைப் போலப் படிப்பதில்லை. எல்லாவற்றையும் படித்தே ஆகவேண்டுமென்கிற கட்டாயத்தில் என்னை வைத்துக் கொள்வதே இல்லை. சிலநேரங்களில் பத்துப் பக்கம் படித்தபிறகு என்னை உள்ளுக்குள் இழுத்துப் போடவில்லை என்றால் அப்படியே வைத்துவிடுவேன். என்னை ஈர்க்கிற உலகத்திற்காகக் காத்திருப்பேன். பிறரின் பரிந்துரைக்கு முதன்மையான இடமளிப்பேன். அங்கே மொழி எனக்கு முக்கியமே இல்லை. சமீபத்தில்கூட மலையாள எழுத்தாளரான ஆர்.உண்ணி எழுதிய, மூன்று பயணிகள், பூச்சி உலகம் ஆகிய கதைகள் என்னைச் சுண்டி இழுத்தன. அதிலும் மூன்று பயணிகள் கதை போல எழுத முடிந்தும் ஏன் எழுதாமல் போனோம் என்கிற பொறாமை உணர்வுகூட வந்தது. அந்தக் கதை பற்றி இதுவரை ஐம்பது பேரிடமாவது வாய்வார்த்தையாகச் சொல்லி இருப்பேன். புத்தகக் கடையில் வேலைபார்க்கும் தம்பி ஒருவன் இந்தப் பரிந்துரையை எனக்களித்தான்.

நினைவிலிருந்தே சொல்கிறேன் இதை, அது மாதிரி சமகாலத்தில் சொல்ல வேண்டுமெனில், சில வருடங்களுக்கு முன்பு படித்த லட்சுமி சரவணக்குமாரின் கானகன் அவ்வாறு என்னை எண்ணச் செய்தது. விநாயகமுருகனின் வலம் நாவல் அப்படித் தோன்ற வைத்தது. குறிப்பாய் போகன் சங்கரின் உலகம், நேசமித்திரனின் உலகம் என்னை அப்படியே சட்டென உள்ளிழுத்துக் கொள்கின்றன. அங்கே நானறியாதவற்றைக் கண்டடைகிறேன், பரவசமடைகிறேன். கவிதைகளில் இப்போது என்று பார்த்தால், ஜெ.ரோஸ்லினுடையவற்றை, அவற்றின் இயற்கை சார்ந்த நுண்படிமங்களுக்காக ஊன்றிப் படிக்கிறேன். அப்புறம் சமீபத்தில் பா.திருச்செந்தாழையின் கதைகள் சிலவற்றைப் பொறாமையோடு படித்திருக்கிறேன். அதை அவரிடம் சொல்லவும் செய்தேன். அப்புறம் செந்தில் ஜெகநாதன். அப்படி என்னை சரவண கார்த்திகேயனின் இறுதி இரவு கதையும் உலுக்கிப் போட்டது. அதேமாதிரி மயிலன் ஜி சின்னப்பனின் மருத்துவ உலகத்துக் கதைகள் என்னை ஈர்க்கின்றன. போர் வாழ்வை எழுதுவதால் அகர முதல்வனும் சிலகதைகளில். குறிப்பாக, வெய்யில் கவிதைகளில் உள்ள திணைத் தன்மை என்னை மிகவும் கவர்கிறது. மறுபடி மறுபடி சொல்கிறேன், இது பட்டியல் அல்ல. இப்போது இவை மட்டுமே சட்டென நினைவில் வந்தன. நாளை வேறொன்றைப் படித்தால் உரக்கச் சொல்வதில் எனக்குத் தயக்கமே இல்லை. தவிர நான் விமர்சகன் இல்லை. ரசனை அடிப்படையில் மட்டுமே இலக்கியத்தை அணுகுகிறவன். எனக்கு எழுத வேண்டும் முதலில். அதுதான் என் நோக்கமும் பயணமும். அம்மனநிலைக்கு என்னை உந்தித் தள்ளுகிற எந்தப் படைப்பையும் விமர்சனமே இன்றி கொண்டாடுகிற பள்ளியைச் சேர்ந்தவன்.

நான் விமர்சகன் இல்லை என்று சொல்லித் தப்பி விடுகிறீர்கள். இந்த சுபாவம் தனிப்பட்ட விதத்தில் நான் உங்களிடம் கற்றுக் கொள்வது (எதிலும் கொஞ்சம் ஒதுங்கித் தனது வேலையை மட்டும் தொடர்ந்து பார்ப்பது) அது ஒருவகையில் வாழ்க்கைக்குச் சரிதான். ஆனால் ஒரு கலைஞனுக்குக் கொஞ்சம் விமர்சன மனமும் வேண்டும் இல்லையா? பொதுவாக அந்த மனநிலையை ஏன் தவிர்க்கிறீர்கள்?

கலைஞனுக்கு விமர்சன மனமும் வேண்டும் என்பதற்கு ஏதாவது விதி இருக்கிறதா என்ன? ஒரு படைப்பைப் படித்து ரசிக்கிற வேளையில், அதன் போதாமைகள் குறித்தும் சில நேரங்களில் பேசத்தானே செய்கிறோம்? நான் சொல்லவருவது முற்றிலும் வேறானது. விமர்சனமாய் அதைப் பகுத்துத் தொகுக்கிற நோக்கம்கொண்ட மனதோடு எந்தப் படைப்பையும் அணுகுவதில்லை என்கிறேன். ஒரு படைப்பினுள் அதன் குறைநிறைகளோடு கரைந்தோடிச் செல்லும் மனப்பாங்கைச் சொல்கிறேன். அந்தப் படைப்பிலிருந்து வெளியே வந்த பிறகு மிச்சமாய் அது எனக்குள் எதை விட்டுச் சென்றிருக்கிறது என்பதை ஒரு மாட்டைப் போல அசைபோடவே முயல்கிறேன். எனக்குள் சேகரமானால் அது எனக்காது என்பது என் எண்ணம்.

வாழ்கையில் ஒரு வரம் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் நினைக்கும் செயல் ஒன்று நடக்கும் என்பது. என்ன செயல் நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்?

தற்சமயம் இதுமட்டும்தான். “இறைவா எழுதுவதற்கான போதிய நேரத்தையும் சூழலையும் அமைத்துக் கொடு, மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்”.

கடைசியாக, எதிர்காலக் கனவு என்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் எழுத்துத் துறையிலும் இருக்கிறதா? இருந்தால் அதை எனக்குச் சொல்ல முடியுமா?

காயங்கள் வரும், செயலின்மை வரும், போதாமை சூழும். ஆனாலும் இவையெல்லாவற்றையும் மீறி “ஒரு லாங் இன்னிங்க்ஸ்” ஆட வேண்டும், எழுத்திலும் வாழ்விலும். அதுவே கனவும் விருப்பமும். ஆனால் அது என் கையில் இல்லை என்பதையும் அறிந்தே இருக்கிறேன். ஆனாலும் முனைப்பை மட்டும் ஒரு விதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.