கோடையில் தளிர்த்த குளுமை- (வண்ணதாசன் கதைகள்)

1

தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவம் மிக்க எழுத்தாளர்கள் மிகச்சிலரே. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஆ.மாதவன் போன்று, எழுபதுகளில் எழுதவந்த சிறுகதை ஆசிரியர்களின் பெரும் பட்டாளத்தில் தனித்துவமானவர் வண்ணதாசன்.

நவீன ஓவியத்தின் செறிவான தீற்றலுக்கு நிகரான உள்ளுறைகளைச் சிறுகதைகளில் படைத்தவர். இன்னொருவகையில் சொல்வதானால் கவிதையின் தொனிப்பொருளை ஏற்ற நவீன உரைநடைக் கவிதை எனலாம். முதல் கால் நூற்றாண்டு காலத்தில் எழுதியவை வடிவம் சார்ந்த நவீனத்துவ அழகியலை ஏற்றவை. இவ்வம்சம் நுட்பமாக சிறுகதையின் நுண்ணலகு உணர்வோடு கூடிவந்திருக்கின்றது. அடுத்தகட்ட கால்நூற்றாண்டுக் கதைகளில் மரபின் இழைகள் கூடுதலாகப் பின்னிவந்திருக்கின்றன. இந்தப் பிரிப்பு ஒரு வசதிக்காகத்தான்

வண்ணதாசனை தி.ஜானகிராமன், அசோகமித்திரன் எழுத்து வழி வந்தவர் எனச் சிலர் மதிப்பிட்டுள்ளனர். அதைவிட கி.ராஜநாராயணன் வழிவந்தவர் என்றுகூடச் சொல்லலாம். இப்படி அடையாளப்படுத்துவது ஒரு வசதிக்காகத்தான். எழுத்தின் வெளிப்புறச் சாயலில் தோன்றும் தோற்றத்தை வைத்துச் சொல்கிற முறையாகத்தான் தெரிகிறது. அடர்ந்த கருமேகத்தின் நிழல் மலையில், குன்றுகளில், நிலத்தில் படிவதைப் பெயர்த்து எடுத்துவிட முடியாததுபோல வண்ணதாசனின் கதைக்குள் இயல்பாகப் படிந்துவிடும் சில காட்சிகள், குறிப்புப் பொருளாக மாறிவிடும் தன்மை அசோகமித்திரன் எழுத்தில் படிந்துவராத ஒன்று. இது வண்ணதாசன் கதைகளின் தனித்துவமான அம்சம். அசோகமித்திரனின் வடிவ அழகியல் நேரானது. இயல்பானது. மொழியப்படும் தோற்றத்தில்தான் இவரோடு இனங்காண முடியுமே தவிர, சிறுகதையின் உள்ளுறை சார்ந்து வண்ணதாசன் தனித்துவமானவர். அவருக்குப் பின் எழுதவந்த ‘புதிய வண்ணதாசர்களால்’ இந்த நுட்பத்தை உணர்வோடு சிறுகதைக்குள் உண்டாக்க முடியவில்லை. பொக்கானவர்கள்.ஜெயகாந்தன் எழுதி எழுதி ஓய்வெடுக்கத் தொடங்கிய காலத்தில் ஜெயகாந்தன் போலவே முற்போக்கான முடிவுகளைத் தந்து எழுதுவது பெரும்போக்காக இதழ்களில் வந்தன. அவை எதுவும் ஜெயகாந்தன் எழுத்துபோல வலுவாக இல்லை. ஜெயகாந்தன் மரபில் நின்று புதுமை செய்தார். மற்றவர்களால் அதைக் கண்டடைய முடியவில்லை. வண்ணதாசனின் எழுத்து வாசகர்களை வசீகரிக்கிறது; மேன்மைப்படுத்துகிறது. கோவில்பட்டி, அருப்புக்கோட்டை போன்ற வறண்ட பிரதேசங்களிலிருந்து வரும் இலக்கிய வாசகர்கள் வண்ணதாசன் காட்டும் உலகின்மீது பிரியம் கொள்கின்றனர். வறண்ட வாழ்க்கைச்சூழலில் வளர்ந்தவர்கள் வண்ணதாசன் காட்டும் உலகை விரும்புவது இயற்கையானது. வெயில் குறைந்த இதமான வாழ்க்கையை விரும்பும் உள்ளத்திற்கு வண்ணதாசன் எழுத்துக்கள் ஈர்க்கும். வண்ணதாசன் கதை உலகம் போல வாழவேண்டும் என்று தோன்றும் ஆசையினால் உருவாவது. எனக்கும்கூட ஒரு வாசகனாக இருந்து படிக்கும் மனநிலையை வண்ணதாசனின் கதையுலகம் தருகின்றது. எழுத்தாளன் வாசக மனநிலையில் சகபடைப்பாளியைப் படிப்பது சற்று சிரமமானது. வண்ணதாசன் அந்த சிரமத்தை நீக்கி விடுகிறார். அவர் தரும் நுண்ணிய தகவல்கள் கதைகளை நிஜமாக மாற்றிவிடுகின்றன. இவரது கதைகள் வெவ்வேறு வழித்தடங்களில் மானிட வாழ்வின் விசித்திரங்களைச் சொல்கின்றன.

         2 

வண்ணதாசன் கதையை வாசிக்கத் தொடங்கியதும் நம்மை உடனே கவர்ந்து விடுவது அவரது எழுத்தின் விவரணை. தேர்ந்தெடுத்த இடச்சூழலையும், உறவுச்சூழலையும், சந்திப்புகளையும் மிகச்செறிவான விதத்தில் நெய்து நிஜமாக்கிவிடுவார். அந்த இடம் எப்படி இருந்தது – இருக்கிறது; மனிதர்கள் எப்படி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்; அதில் இருக்கிற நெருக்கம், அல்லது நெருக்கமின்மை என்ன? பேச்சில் கவனமாகத் தவிர்க்கிற சொற்கள் என்ன; மனிதர்களுக்கிடையே நேர்கிற சந்திப்பில் வெளிப்படும் அவர்களின் ஆசைகள் விருப்பங்கள் எப்படி மனதின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்றன என்பதையெல்லாம் கனிவான மொழியில் கொண்டுவந்து விடுகிறார். கணவன் மனைவி என்றில்லாத இருவரின் பழக்கவழக்கங்களில் நாசூக்கான நடத்தைகளில், பேச்சுக்களில் வெளிப்படும் ஒருவித மறைமொழிகள், பார்வைகள், நிற்கும் நடக்கும் தோரணைகள் அனைத்தும் இந்தப் பண்பாட்டு மரபின் அதிநுட்பங்களாக மொழியப்படுகின்றன. அந்தந்த நேர மனநிலைகளை ஒட்டி கணவன் மனைவியின் – முக்கியமாகப் பெண்களின் நடத்தையில் வெளிப்படும் மாற்றங்கள் துல்லியத்தோடு காட்சிரூபங்களாக அசைகின்றன. இதெல்லாம் வண்ணதாசனுக்கே உரிய கைவண்ணம். ஓர் இடத்தில் ஒரு சூழலில் மனிதர்களின் நானாவினோதங்களை அதிகபட்ச அசைவுகளோடு வெளிப்படுத்தியவர் வண்ணதாசன்தான். இது அவரின் தனித்துவமான கலைவெளிப்பாடு எனலாம்.

அவரவரின் அன்றாட பாடுகளின் ஊடே, வேலைகளின் ஊடே கைப்பழக்கமாக, மனப்பழக்கமாக அந்த நொடியில் வெளிப்படும் பிரியங்களாக, நோண்டலாக, தீண்டலாக வேலையின் சுவடுகளாக அப்பியிருக்கும் ஒட்டியிருக்கும் அடையாளங்கள் அந்த கதாமாந்தர்களுக்கு அழகை உண்டாக்குகின்றன; நிகழ்வைத் துடிப்புள்ள கணமாக மாற்றுகின்றன. கதை நிகழ்வின் போக்கில்
இவை உண்டாக்கும் வசீகரங்களைத் தமிழில் வேறொரு எழுத்தாளன் இவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்தியதில்லை. இதை அவர் பயிற்சியின்மூலம் பெறவில்லை. மனவார்ப்பின் குணாம்சத்திலிருந்து உருவாகி வந்ததைக் கலையாக மாற்றுகிறார். இந்த உயர்வான அம்சம் அவரது முதல் தொகுப்பில் ‘மிச்சம்’ முதல் கதையிலேயே செழுமையோடு துலங்குவதைக் காணலாம்.

ஒரு லென்சை வாங்க ஆசைப்படுகிற வாங்க முடியாமையை ஏற்று விளையாடுகிற சிறுவனைப்பற்றிச் சொல்வதுபோல விரித்து குடும்பத்தின் வறுமையையும், நோயையும், கடுமைகளையும், வாழ்கிற வாழ்க்கைகளை உள்ளுறையின் சன்னமான பின்னணியில் வெளிப்படுத்திவிடுகிறார். மழைக்கால செடிகள்போல இந்த கவனிப்புகள் கதை முழுக்கத் தளிர்க்கின்றன. யதார்த்தத்தில் காலூன்றி மெல்லமெல்ல மனவிசனங்களைத் தொட்டு உணர்ச்சிகரமான ஒரு புள்ளியைத் தொடும் கதைகள் நிறையவே உள்ளன. விசயம் புற உலக விவரணையால் மறைந்து நம்மை ஏமாற்றிவிடக் கூடிய கதைகளும் உண்டு. ஒரு பார்வையில் விசயகனம் இல்லாமல் வெறும் விவரணையாக மட்டுமே இருக்கிறதே என்று தோன்றவும் செய்கின்றன.

வண்ணதாசன் வறுமையை ஏழ்மையை நேரே பாய்ந்து தொடும் விதமான முறையில் எழுதியதில்லை. விவரணையில் உரசி எரியும் தீக்குச்சிபோல பிரகாசித்துவிட்டு மறைந்து விடுகின்றன. ஏழ்மை என்பது சொல்லப்படாமல் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் கோலங்களிலிருந்து காட்டுகிறார். ‘கனிவு’ சிறுகதைத் தொகுப்பிற்கு முந்தைய தொகுப்பு வரைக்குமான கதைகளில் இந்த அம்சத்தைக் காணலாம். இதில் செண்டிமென்ட் தலைதூக்கி நிற்கும் இடங்களும், பச்சாதாபத்தை உண்டாக்கச் சொல்லப்பட்ட இடங்களும் சில கதைகளில் இருக்கின்றன. அந்தக்காலத்து வாழ்க்கை நெருக்கடிகள் சற்று மங்கவும் செய்கின்றன. இதையெல்லாம் மீறி விதவிதமான தொழில் சார்ந்து எழுதப்பட்ட கதைகளின் புதிய சூழலும், பின்னணியும், வாழ்க்கையும் இப்போதும் கவனிக்கத்தக்கவையாக இருக்கின்றன, மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை உண்டாக்கவில்லை என்றாலும் கூட.பெரிய அளவில் விமர்சகர்களால் பேசப்படாத இவரது பல கதைகளுக்கு வாசக வசீகரம் இருக்கிறது. அது ‘ஞாபகம்’ கதைபோல ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் நேர்ந்திருக்கும்; நேர்ந்திருக்கிறது. பவா செல்லத்துரைக்கு ‘மிச்சம்’, பா.லிங்கத்திற்கு ‘பழைய பாடல்கள்’, தேவதச்சனுக்கு ‘கடைசியாகத் தெரிந்தவர்’, கந்தர்வனுக்கு ‘வெள்ளம்’, நாசருக்கு ‘பாடாத பாட்டெல்லாம்’, சுனிலுக்கு ‘முழுக்கைச் சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்’ கதைகள் பிடித்ததற்கு அவர்களது வாழ்க்கையிலிருந்து அவர்களது மனநிலைக்கு நெருக்கமான சித்திரங்களிலிருந்து ஈர்த்திருக்கக்கூடும்.மேலான கருத்துகளை வெளிப்படுத்தும் முற்போக்குக் கதைகள், அந்த முற்போக்கு அம்சத்திற்காக மட்டுமே வாசிக்கப் படுகின்றன. அந்தக் கதைகளில் முற்போக்கை முன்னிறுத்தும் தன்மை இல்லாவிட்டால் அவற்றை வாசிக்க முடியாது. வண்ணதாசனும் முற்போக்குக் கதைகளைத் துவக்கக் காலத்தில் நிறையவே எழுதியிருக்கிறார். பொருளாதாரத்தில் நசுக்குண்டு மீளமுடியாது வாழமுற்பட்டவர்களின் உலகின்மீது அவருக்கு அக்கறை உண்டு. அக்கதைகளில் வெளிப்படும் முற்போக்கு அம்சங்களை நீக்கிவிட்டால் கூட, அக்கதைகளைப் படிக்கமுடியும். காரணம் வாழ்வின் இன்னபிற நுட்பமான இழைகளால் பின்னப்பட்டிருக்கும் பண்பாட்டுக் கூறுகளும் மானிட அசைவுகளும்தான். அவை நமக்குள் ஓர் அந்தரங்கமான நெருக்கத்தை ஏற்படுத்துவதால்தான். இந்தக்கலைத்துவம் கந்தர்வன், தமிழ்ச்செல்வன் போன்ற ஒருசிலரின் கதைகளில்தவிர பிற முற்போக்காளர்களின் கதைகளில் இல்லை.

                                3

சிறந்த கதையா நல்ல கதையா என்ற அம்சங்களை எல்லாம் தாண்டிச் சிலகாட்சிகள் மானிட விநோத கற்பனைகளை, மாந்தர்களின் கோணல் புத்திகளை, நுண்ணிய தகவல்களை, இன்னபிற பண்பாட்டு வெளிப்பாடுகளை நிகழ்வின் சூழலில் வெகு இயல்பாக வெளிக்காட்டிக் கடந்து போய்விடுகிறார். இந்த இடங்கள் சாதாரணமான கதைகளைக்கூடப் பொருட்படுத்தும்படியாக ஆக்கிவிடுகின்றன. சிறந்த சிறுகதையாக அமையவில்லை என்று தள்ளும்போது அந்தக் கதைகளுக்குள் இருக்கும் இந்த இலக்கிய அனுபவங்களைப் பெறாமலே போய்விடுகிறோம். வாடகைக்கு இருப்பவரைச் சத்தம்போட்டுப் பேசக்கூடாது. பக்கத்து வீடுகளில் போய் அமர்ந்து பேசக்கூடாது என்பது மாதிரியான ரகம். குடியிருக்க வந்தவரின் பாட்டி இறந்துவிடுகிறார். ‘சத்தம் போட்டு அழக்கூடாது, அழவேண்டுமானால் ஆற்றுக்குப் போங்கள்’ என்கிறார். வீட்டு உரிமையாளரின் மகன், அப்பாவின் இந்த ஈவு இரக்கமற்ற தன்மையைப் பொறுக்கமுடியாமல் குமுறுகிறான். இந்த ‘வடிகால்’ கதையில் வீட்டுக்காரருக்கு ஒரு துக்கசம்பவம் வந்துசேர்கிறது. ஓர் ஒப்பீடாகப் போய்முடிகிறது. ஜெயகாந்தன் (நந்தவனத்தில் ஓர் ஆண்டி) இம்மாதிரியான கதைமாந்தர்களின் குணவியல்புகளை எளிய கதைகளில்கூட திறந்துகாட்டிவிட்டு மேலே நகர்ந்துவிடுகிறார்.

‘நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும்’ என்றொருகதை. நல்லஓவியனும் நல்லநடிகனும் வாய்ப்பில்லாமல் முடங்கிப்போய் விடுவதைச் சொல்லும் கதை. கலைத்துறை, சிறந்தவர்களைக் கைவிட்ட பின்னும் அவர்கள் அந்த உலகத்திலிருந்து மீளமுடியாமல் அமிழ்ந்து கிடப்பதையும், அவர்களைப் பொருட்படுத்தாமல் கலைத்துறை பணத்தைக் குறியாகக்கொண்டு செல்கிற
முரணையும் சொல்கிறது. சிலருக்கு இந்தக்கதை பிடித்திருக்கலாம். சிலருக்கு ஈர்ப்பைத் தராமல் போகலாம். முன்பு என்னைக் கவர்ந்த கதை இப்போது வாசித்தபோது அந்தளவு கவரவில்லை. ஆனால் இக்கதையில் மரம் வெட்டுகிற காட்சியை நண்பனிடம் விவரிக்கிற அந்தத் துல்லியம் இப்போதும் கவர்கிறது.

‘ஆறுதல்’ முன்பு வாசித்தபோது முக்கியமான கதையாகத் தோன்றவில்லை. இப்போது படித்தபோது முக்கியமான கதையாகத் தோன்றுகிறது. அக்கதை மறைத்து வைத்திருக்கும் வாழ்க்கைச் சிதைவு துலங்கியதும் வேறொரு பரிமாணம் கொள்கிறது. “எலக்ரிசிட்டி போர்டுக்காரன் கம்பிகளைத் தளர்த்திவிட்டிருந்ததையும், கோடாரி வீச்சில் செதிலாகத் துள்ளி விழுந்ததையும், கோடாரியைத் தலை பின்னும் போது சீப்பைக் கொண்டையில் சொருகிக்கொள்வது மாதிரி மரத்தில் கொத்தி செருகிவிட்டுக் கீழே வந்து கயிறுகட்டி இழுத்ததையும், இழுக்கும்போது பாடினதையும், பசங்கள் எல்லாம் ராட்சசன் சாய்கிற மாதிரி மரம் கப்பும் கிளையுமாக மொரமொரவென்று முறியும்போது ‘ஓ’ வென்று கூச்சல் போட்டதையும், சலார் என்று புழுதியில் இலை விசிறினபடி முந்தானையைக் தட்டிக் கீழே விரித்துப் படுத்துக்கிடக்கிற கிழவிமாதிரி ரொம்ப அசதியோடும் பதனத்தோடும் அது கிடந்ததையும்,
கிளைகிளையாக ஏறி மேலே உட்கார்ந்து அமுக்கி அசைத்து ஊஞ்சல் ஆடினதையும், நாலஞ்சு குட்டிஆடுகள் கவட்டைக்கிடையிலே முட்டமுட்ட ஓடிவந்து குழையைத் தின்றதையும், சாக்கடைக்குள்ளே ஒரு பக்கத்து மரம் முழுக்க விழுந்து அதில் எச்சில் இலையெல்லாம் மோதிக்கொண்டு இருந்ததையும்,மரம் வெட்டுகிறவன் விரட்டிவிரட்டி ஏசியதையும் நாடகம் நடிக்கிற மாதிரிச் சொன்னான்.” “பீடியைச் சாக்கடையில் சர்ரென்று சுண்டியெறிந்து, சகதியில்படாமல் தாண்டி பிச்சு அறைக்குள் நுழைந்தான்”. இப்படியான விவரணை.

மரம் வெட்டுகிறதைப் பார்க்கிறது உண்டுதான். இந்தக் காட்சி எழுத்தில் கொண்டுவருகிறபோது நம்மை அருகிலிருந்து பார்த்த அனுபவத்தைக் கொண்டுவந்து விடுகிறது. பள்ளிப்பருவத்தில் வேடிக்கை பார்த்த ஒரு கணத்தை மீட்டெடுக்கிறது. இந்த விவரணை ஈர்க்கிறது. இம்மாதிரி ஈர்க்கிற காட்சிகளுக்கு அப்பால் கதை மானிட சாரத்தைத் தொடும்போதுதான் சிறந்த கதையாகிறது. சாரத்தைத் தொடாதபோது சில அழகிய காட்சிகள் வாசிக்கப்படாமல் போய்விட நேர்கிறது. வண்ணதாசனின் கதைகள் எவற்றால் சிறந்தவை ஆகின்றன என்று கேட்டால் ஒற்றை வரியில் சொல்லமுடியாத பல அழகியல் கூறுகள் ஒவ்வொரு கதையிலும் வெகு இயல்பாய்க் கூடிக்கூடி முழுமையை அடைவதால்தான் எனலாம்.

‘ஆறுதல்’ கதையில் ஓர் அசைவின் துல்லியத்தை விவரிக்கிறார். “வாசல் முழுவதும்’’ இருட்டாக இருக்க, எங்கள் வீட்டின் வெளிச்சம் பின்பக்கத்திலிருந்து விரைந்து காட்டும்படியாக அவர்களிருக்க…, நடுவயது தாண்டியும் உரத்தும் அன்னியோன்னியமாகவும் இருந்த அந்தக்குரலையும் எனக்கு இனங்கண்டு கொள்ளமுடியவில்லை. நாக்கு தடித்த மாதிரியும் பக்கவாதத்தால் வாய் கோணிப் பேசுகிற மாதிரியும் ஏதோ ஓர் வித்தியாசத்துடன் இருந்த குரலில் சந்தோஷமூட்டும்படியும் ஏதோ கலந்திருந்தது.” என்ற விவரணையில் ஒரு ஓவியக்காரனின் படிமமும் அடுத்து ஒரு நாடகக்காரனின் கண்ணும், ஒரு உளவியல் காரனின் மனமும் ஒன்றாகக் கலந்து இயைந்து உருவாகி வந்திருப்பதைக் காணமுடியும்.

வண்ணதாசனுள் எப்போதும் ஒரு ஓவியக்காரன் பதுங்கியபடியே இருக்கிறான். படைப்பிலக்கியச் செயல்பாட்டில் விழித்துக் கொள்கிறபோது துல்லியமான காட்சிப் படிமங்கள் எழுத்தில் பொங்கி வந்துவிடுகின்றன. பாலியல் தொழில் செய்யும் பெண் விடுதி அறையில் படுத்திருக்கிறாள். விடிவதற்கு முன்னான நேரம். வந்தவன் குளியலறை விளக்கை அணைக்காமலே போய் விடுகிறான். “ஒருக்களித்து சாத்தியிருந்த பாத்ரூம் கதவின்சந்து வழியே வெளிச்சம் நுழைந்து இவள் படுத்திருந்த கட்டிலின் திசையில் குறுக்குவாட்டாக விழுந்தது… எப்போதாவது மழுங்கின வெளிச்சத்தில் நிலா அப்பியிருக்க ஊதாவாய், பிருபிருவென்று மணல் மணலாக உதிர்ந்த மேகமும் ஊதாவுமாய் “இருக்கும் வானத்தை ஜன்னல் வழி பார்த்திருக்கிறாள்.” எந்தச் சூழலிலும் இந்த ஓவியப் பார்வை அவருள் விழித்துக்கொள்கிறது.

4

வண்ணதாசனின் முக்கியமான ஓர் அம்சம் வடிவஒருமை கூடிவந்த கதைகளில் விசயம் நுட்பமாகவும் நெருக்கடியான உறவின் இழைகளாலும் பின்னப்பட்டுவிடுகின்றன. விசயம் மென்மையானதாகவோ, சின்னதாகவோ இருக்கலாம். அல்லது கனமானதாகவோ உக்கிரமானதாகவோ இருக்கலாம். கதையின் மையப்புள்ளி நீரில் விரியும்வளையம் வளையமாகவோ, பெரிய வளையம் சிறுத்து சிறுத்து சிறு புள்ளியில் வந்து குவிதலாகவோ கதையிதழ்கள் அடுக்கப்பட்டுவிடுகின்றன. இறங்கி வரும் விண்பறவையின் விரிந்த இறக்கையின் சிறகுகளின் அடுக்குகளாகவும் பொருத்தமுற அமைந்துவிடுகின்றன.

வண்ணதாசன் சிறுகதைவெளிக்குள் மிகத் துல்லியமான விதத்தில் மானுடச் சலனங்களையும் காட்சிப்புலன்களையும் அக்கணத்தில் தோன்றும் கற்பனையின் சிறகடிப்புகளையும் மலர்த்திவிடுகிறார். சிறந்தகதை சாதாரணக்கதை என்ற மதிப்பீடுகளுக்கு அப்பால் இந்த ஆக்கத்திறனின் வண்ணம் நெடியோடும்,வடிவோடும், துடிப்போடும் மனசைத் தீண்டுகிறது. படைப்பிலக்கியத்தில் அவர் சாதித்திருக்கிற இப்பகுதி தனியானது.

புதுமைப்பித்தன் கதைச்சுரங்கத்திற்குள் கெட்டிதட்டிப்போன மரபு இறுக்கத்தின் மீது பளீர் பளீரென விமர்சன வாள்வீச்சுக்கள் எகிறி விழுகின்றன. மாறாக வண்ணணாசனின் கதைவெளிக்குள் பண்பாட்டுக் கூறுகள் வண்டலாகப் படிந்திருக்கின்றன. ஒரு வகையில் உரைநடைக் கவிதைகள் என்றோ, கதை ஓவியங்கள் என்றோ சொல்லலாம். அவரின் ஓவிய மனம்தான் சிறுசிறு அசைவுகளையும் கதைகளில் தீட்டுகிறது. அதிலே ஆழ்கிறது. இந்த அம்சத்தினாலே நாவல் என்ற விரிந்த தளத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ளவில்லையோ என்றும் தோன்றுகிறது.

‘வரும்போகும்’ ‘போட்டோ’ ‘பாடாத பாட்டெல்லாம்’ போன்ற கதைகளில் கவனிக்கத்தக்க அல்லது கவனித்திருக்கிற அசைவுகளை, வெளிப் பாடுகளை எழுதியிருக்கவே செய்கிறார். இக்கதைகள் ஒருமைக்குள் கூடிவராததாலே கதை நம்மைப் பாதிப்பதில்லை. கலைத்துப் போடுதல், மையமழித்தல், நோக்கமற்று விரித்தல், வடிவமற்று எழுதுதல் என்று பின்நவீனத்துவத்தை முன்வைத்துப் பல வியாக்கியானங்கள் சொல்கிறோம் இன்று, எந்தக் கூறல் முறையாகவும் இருக்கட்டும்; முதலில் அது வாசகனைப் பாதிக்கவேண்டும். இந்தப் பின்நவீனத்துவ வெளிப்பாட்டு முறைகளின்வழி அக்கதை வாசகனைப் பாதிப்பிற்குள்ளாக்குமேயானால், அக்கதையின் சிறந்த வெளிப்பாட்டு வடிவம். வாசகனின் மனதை ஈர்க்கவில்லை என்றால் அது கோட்பாட்டுக் கதையாக எஞ்சி காய்ந்துவிடும். அல்லது விமர்சகர் ஊர்ஊராகத் தூக்கிச்சுமந்து அலைய வேண்டியதுதான். வண்ணதாசன் என்ற படைப்பாளியின் பல கதைகள் ஈர்ப்பதற்கும் சிலகதைகள் மனதிலிருந்து நழுவிப்போய்விடுவதற்கும் வடிவம் ஒரு முக்கிய அம்சத்தைத் தக்கவைத்திருக்கிறது என்றே எனக்குப்படுகிறது. கருடகம்பத்தை ஆலையில் கடைவது மாதிரிதான். சிறுகதைக்கு வெற்றிகரமான மாற்று வடிவத்தை – முக்கியமாகப் பின் நவீனத்துவம் இதுவரை உருவாக்கி விடவில்லை. எழுதிப்பார்த்த கோலங்களாக இருக்கின்றன. ‘வரும்போகும்’, ‘பூனைகள்’ ‘ஊமைப்படங்கள்’ முதலிய கதைகளை முன்வைத்துக் கூட இந்தப் பாதிப்பு விசயம் எப்படி உருவாகிறது என்று அறிய முற்படலாம்.

வேற்று ஆடவன் மீது திருமணமானபெண் கொண்ட பிரியத்தை, ஒரு வகையான துயரத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஆதரவை நேர்த்தியாகச் சொல்லப்பட்ட கதை ‘சில பழைய பாடல்கள்’ கதை. இந்தக் கதையை இன்று எழுதும் இளைஞன் எழுதியிருந்தால், காமத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பான். விசயம் அதுவல்ல; வாழ்வின் இப்படியான எல்லைகளும் உண்டு என்பது புரிவதில்லை. இக்கதையில் வரும் ஆடவன் சலனமற்ற யோக்கியவானும் அல்ல. சலனம் உள்ளவன்தான்; காமத்தை விரும்புகிறவன்தான். முயலாத மனத்தடைகள் உள்ள ஒருவன். அவ்வளவுதான். அந்த விதவைப் பெண்ணைத் தன் மனைவியிடம் அறிமுகம் செய்துவைக்கிறான். அன்றிரவு அவன் மனைவி புதுதினுசாக இணைந்தபடி இருக்கிறாள். இந்த இடத்தைப் பிடித்ததும் கதை அதுவரை திறக்காத கதவைத் திறந்துவிடுகிறது. கதை இதுவல்ல; கதைக்குள் இப்படியான சிறுகாட்சி வருகிறது. அவ்வளவே. வண்ணதாசன் கதையில் நெருக்கம் நாளை நிகழலாம். நிகழாமலேகூட இருக்கலாம். அது அந்தப் பெண்ணின் விருப்பத்தில் மட்டுமே இருக்கிறது. வண்ணதாசனின் மிக முக்கியமான கதைகளில் ஒன்றாகக் கொள்ளமாட்டேன் என்றாலும் உறவை லாவகமாக முன்வைத்திருக்கிறார் என்பேன். நல்ல காதல் கதை என்றால் இலக்கணம் மாறுவதாகத் தோன்றும். உண்மையில் நல்ல காதல் கதை.1979இல் எழுதியிருக்கிறார் என்பது முக்கியம். பழையபாடல் என்பதுகூட அன்று புதிய பாடலாக வந்து சந்தோசத்தைத் தந்த தருணங்கள் இன்று வெறுமனே அந்த சந்தோசத்தை நினைவுகூர்கிற காலமாக மாறிவிட்டதைச் சொல்வதாகவும் இருக்கிறது. அவள் விதவை; வறுமை நெருக்குகிறது. அவள் அவளாக இருக்கிறாள்; வாழ்க்கை அழைக்கிறது. ஏச்சுக்கு உள்ளாக நேருமோ என்ற கவனம் விழிக்கிறது. இப்படி யூகிக்க இடம் இருக்கிறதே தவிர உறுதியாக எதுவும் இல்லை. அவளது வாழ்க்கை சந்தோசமற்று வேதனையையே துணையாக இழுத்துச்செல்லவிருக்கிற காட்சி பாரமாகிறது நமக்கு.

கசடதபற இதழாளர்கள் தமிழ்ச் சூழலில் தோற்றுவித்த கதையற்ற கதைக்குத் தோதான ‘பூனைகள்’ கதையை அவ்விதழுக்கு என்று எழுதி வெளியிட்டுள்ளார். வீட்டில் அசிங்கம் செய்து வைத்துவிடும் பூனை ஒருநாள் அறையில் மாட்டிக் கொள்கிறது. அதை விரட்டி பயமுறுத்துவதுதான் கதை. இறுதியில் பூனையின்மீது ஒரு கனிவு தோன்றுகிறது. கதை இந்த தளத்தில் இயங்கியபடி வேறொரு விசயத்தைத் தாவிப் பிடிக்கவேண்டும்; அது நிகழவில்லை. பூனை மீது சுரக்கும் அன்பாகமட்டும் முடிந்துவிட்டது. பூனை – மனிதன் இருவருக்குமான எதிர்கொள்ளலைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ஆனால் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தவில்லை.

கணவன் மனைவியரிடையே கசப்பும் இனிமையும் மாறிமாறித் தோன்றும். கணவனின் கோணத்தில் மனைவி வெறுக்கத்தக்கவளாகத் தோன்றுவதையும் அவளே பிரியமுள்ளவளாக மாறுவதையும் ‘வரும்போகும்’ கதையில் காட்டுகிறார். கதை எங்கெங்கோ அலைந்து இந்த இடத்திற்கு வருகிறது. இது ஒரு நெடுங்கதை எனக்கொள்ளலாம். அந்த வடிவத்தில் அவரால் மேலதிகமான வீச்சை வெளிப்படுத்த முடியவில்லை. ஒரு சிறுகதையை வளர்த்து குறுநாவல் போல ஆக்கியிருப்பதாகத்தான் படுகிறது. ‘சின்னு முதல் சின்னுவரை ’ குறுநாவல்கூட விசயம் சிறியதுதான். சிறுகதைக்கான விவரணையின் வசீகரத்தால் மேலெழுந்துவிட்ட படைப்பு அது. முக்கியமாக அதில் கூடிவந்த ஒருமை கூடுதல் அழுத்தத்தையும் அழகையும் தருகிறது. ‘வரும்போகும்’ படைப்பில் தொடர்பற்று சிதறிக்கிடக்கும் நிகழ்ச்சிகளைக் கணவன் மனைவியின் சிறுகசப்பில் கொண்டுவந்து கொட்டுகிறார். அந்தக் கசப்பின் வெவ்வேறு இழைகளாக அவை இல்லை. அப்படி அமைகிற போதுதான் அந்நிகழ்ச்சிகள் கூடுதலான அழுத்தத்தை உண்டாக்கும். இதைத்தான் செறிவு என்று கூறமுடியும். ‘சின்னு முதல் சின்னுவரை’ யில் அப்படி அடர்த்தி உருவாகி வந்துவிட்டது.

தீப்பாச்சியின் கணவன் சிதம்பரம் குடிகாரன். மனைவியின் கள்ளக்காதலைச் சொல்லிச்சொல்லி அடிப்பவன். தனக்குப் பிறந்தவன் மூத்தவன் மட்டும்தான் என்று அவனை இழுத்துக்கொண்டு எங்கெங்கோ செல்பவன். அலைந்து திரிந்து திரும்ப தீப்பாச்சியிடமே சேர்ந்து முரண்பட்டபடியே வாழ்கிற சிதம்பரம் கதைசொல்லியின் நண்பன். கதையின் துவக்கத்தில் தீப்பாச்சி இடுப்பில் ஒரு குடமும் தலையில் ஒரு குடமுமாகச் சுமந்து வந்தபடி வரவேற்கிறாள். அவள்  குடம் வைத்திருப்பதைப் பற்றி, எல்லோரும் இடப்பக்க இடுப்பில் குடத்தை வைத்தால் இவள் வலக்கை பக்கம் அணைப்பாள் என்றுவருகிறது. இது ஒருபழக்கம் என்பதாக வாசித்து நகர்ந்து விடுகிறோம். வித்தியாசமான பழக்கத்தைச் சொல்கிறார் என்பதுபோலத்தான் தோன்றுகிறது. கதையின் ஓட்டமும் அப்படித்தான் ஓடி முடிகிறது. கதையை வாசித்து முடித்த பின்னும் அதுபற்றி கூற ஒன்றுமில்லை. தற்செயலாக அந்த குடம் வைக்கும்முறை ‘அவள் வித்தியாசமானவள்’ என்பதைத் தீப்பொறிபோலத் தோன்றி மறைந்துவிடுவதைச் சொல்கிறது என்பதைக் கண்டதும் குறிப்பால் அமைந்த அந்த அமைதி ஒரு நவீன ஓவியக்காரனின் அர்த்தமிக்க தீற்றலாக மாறுகிறது.


தீப்பாச்சிக்குப் பிறந்த இரண்டாவது மகன் மற்றொரு காதலால் பிறந்தவன்தான். வறுமையில்தான் அவள் அன்றாடபாடு போகிறது. ஐந்துபேர் படுத்துத் தூங்கமுடியாத குச்சு வீட்டில்தான் குடும்பம் நடக்கிறது. சின்னவன் தீப்பாச்சியின் அம்மாவோடு (பாட்டி) பக்கத்து வீட்டில்தான் தூங்குவதும் இருப்பதும். காரணம் இருக்கிறது. ‘அம்மா வந்தாள்’ அலங்காரத்தம்மாள் போல தீப்பாச்சி இல்லை. சிவசுவுடனான உறவு காமத்தால் ஆனது. அவனுக்குப் பிறந்தவர்கள் மூன்றுபேர். தீப்பாச்சிக்குப் பிறந்த திருவாரியமுத்து காதலால் பிறந்தவன். சின்னவன் பேரு என்ன என்று கேட்கிறான் கதைசொல்லி. அது ‘அவுகளுக்கு பிடிச்ச சாமி பேரு’ என்கிறாள். ‘அருளிச் செய்ததாக’ உணர்கிறாள். இந்த மகன் இந்த வீட்டில் கணவன் மனைவியோடு வளராமல் பாட்டியிடம் வளர்வதற்கும் ஒருகாரணம் இருக்கிறது. கதைசொல்லி “எங்கே சிதம்பரம்” என்று கேட்டதும் “அவருக்கென்ன கலெக்டர் வேலையா… இங்கதான் எங்காவது திரியும்” என்கிறாள். எளிய பெண்ணின் எளிய விமர்சனம். வீட்டுக்கு வந்த சிதம்பரம் நண்பனைக் கண்டதும் பிராயத்து பிள்ளை அடிப்பதுபோல “இவரு எப்ப வந்தாரு” என்று கையை ஓங்கி பொய்யாக டொப்பென போட்டுத் தொடுகிறான்.

வண்ணதாசனின் இந்த அகமாந்தர் கதைகளைப் படிக்கும் போதெல்லாம் எனக்குப் பருத்திச்செடியோ, ஒரு பூச்செடியோ, ஒரு மரமோ கண்முன் தோன்றும். கதையைப் படித்துச் செல்லும்போது இந்த தாவரம் ஒன்று வருகிறது. பூவெடுக்கிற பருவத்தில் தண்ணீரில்லாமல் மழை இல்லாமல் வாடிவதங்கி நெஞ்சைப் பிசைகிற கோலம் ஒன்று தோன்றும். அந்தச் செடிகளை நோக்கி நீண்டநாள் வராத ஒரு மாயவன் திடுக்கென வேகமாக வருகிறான். அவன் வருவதைப் பார்த்து அந்தச் செடி வாட்டத்தோடு தன் கைகளை விரித்து சோகத்தை மறந்து வரவேற்கிறது. மாயவன் தான் கொண்டுவந்த நினைவின் ஊற்றை அதன் வேரில் கவிழ்க்கிறான். வதங்கிக் கிடந்த அந்த பருத்திச்செடி, அந்தப் பூச்செடி, அந்த மரம் ஜிலுஜிலுவென தெளிச்சியடைந்து நிமிர்கிறது. வாட்டம் மாயமாகி இலைகள் பளபளக்கின்றன. புதிய பூவொன்று பூக்கிறது. அப்படிப் பூத்துக் குலுங்கும் பூவின் புன்னகையைத்தான் வண்ணதாசன் தன் கதையில் நிகழ்த்துகிறாரோ என்று எனக்குத் தோன்றும். அபூர்வமாகச் சிலசமயம் உதிர்த்துக் கிளை நுனியெல்லாம் காய்ந்து சுள்ளியாகி நிற்கிற உயிர்க்கோலம் மனசைப் பிழியச்செய்கிறது. அதையும் மீறி தளிர்விடக் குதித்துக் கொண்டிருக்கும் உயிரை அந்தச் செடியிலோ மரத்திலோ காணும்படியும் தோன்றும் எனக்கு. ‘ஆறு’ ‘விசாலம்’ ‘நிலத்து இயல்பால்’ ‘பழைய பாடல்கள்’ ‘ஜன்னல்’ ‘போய்க் கொண்டிருப்பவள்’ ‘வேரில் பழுத்தது’ போன்ற கதைகள் இங்கு நினைவிற்கு வருகின்றன. முற்போக்கு எழுத்து முற்போக்கு எழுத்து என்கிறோம். முற்போக்காளர்களால் எழுத முடியாத வகையில் தீட்ட முடியாத வண்ணத்தில் எழுதியவர், தீட்டியவர் வண்ணதாசன். வறுமையை ஒரு துயரக் காவியமாக வண்ணதாசனால் வடிக்க முடிந்திருக்கிறது.

                      5

வண்ணதாசன் கதைகள்  முரண்களைத் தீவிரமாக முன்வைத்துப் பேசாதது போலத் தெரியும். கதை ஒரு நிகழ்வைச் சொல்வதுபோல அமைந்து உறவுச் சிக்கலாலோ சமூகச் சிக்கலாலோ கைகூடாது போகிற எதிர்பார்ப்புகளைப் பேசியிருப்பது தெரியவரும். எதிரெதிர் நிலையில் மனிதர்களின் கபடங்களை வெளிப்படுத்தும்படியாக எழுதிவிடும்போது இலகுவான பிரச்சனையின் கண்டடைதலாகத் தெரிந்துவிடும். வண்ணதாசன் நிகழ்கிற நிகழ்வின் கோலத்திலிருந்து இந்த சிக்கலைக் காட்டுகிறார். இந்த விசயத்தை உணர்ந்துகொள்ள அவர், கதைகளுக்கு வைத்திருக்கிற தலைப்புகள் உணர்த்துகின்றன.

‘ஜன்னல்’ கதை, மூர்க்கமான காட்சியைக் காட்டுவதாக இருந்தாலும், புஜ்ஜி வேறு ஜன்னலைத் திறக்கிறாள் என்பதும் உள்ளுறை. அந்த ஜன்னல் வழி தெரிபவர் பெண்ணைச் சகமனுஷியாகப் பார்க்கிற அன்புமிக்கவர். ஒரே ஜன்னல்வழி இரு வேறுபட்ட மனிதர்களைக் காட்டுகிறார். எதிர்பாராத இடத்தில் பிரியமான தோழியை மற்றொரு தோழி சந்திக்கிறாள். இருவரும் இளம்பருவத்தினர். அதற்கு ‘வருகை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். அவரது வருகை தோழிக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. தெருவில் போய்க்கொண்டிருந்த தோழியை உலர் சலவையகத்தில் வேலை செய்யும் தோழி அவளின் பின்புறச் சாயலைக் கண்டே ஓடிப்போய் பிடித்து நிறுத்துகிறாள். அவளின் கையில் தட்டச்சு பயிற்சி நிலையத்திலிருந்து வந்த காகிதம் இருக்கிறது. இருவரும் பள்ளித் தோழிகள். பிரியத்தோடு சர்பத் வாங்கித் தருகிறாள். கதைத் தோழிகளின் சந்திப்பு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதுபோல போகிறது. தெருவில் ஒரு லோடை ஏற்றி வந்த லாரி அந்த பெரிய தெருவின் நொடிப்பள்ளங்களில் மெதுவாக நகர்ந்து குடோனுக்குப் போகிறது. நிற்காமல் போகிறது. அந்த வண்டியில் தொற்றி ஏற லோடுமேன்கள் ஓடுகிறார்கள். அந்த லோடுலாரி வாரத்திற்கு ஒரு முறையோ பத்துநாட்களுக்கு ஒரு முறையோ வரும். அப்படி வரும் நாட்களில்தான் கூலி கிட்டும். ஓடுபவர்களில் முன்னால் நல்ல திடகாத்திரமான வாலிபர்கள் ஓடுகிறார்கள். நடுக்கட்டு வயதுடைய இருவர் மூச்சு வாங்க ஓடுகிறார்கள். வயதான இருவர் ஓட முடியாமல், வேர்க்க வேர்க்க லாரியை நோக்கி ஓடுகிறார்கள். லாரி ஓட்டுநர் நிறுத்தி ஏற்றவில்லை. பலர் அந்த வேலையைப் பிடிக்க ஓடுகிறார்கள். இந்த காட்சியை வந்த தோழி பார்க்கிறாள். ஒரு மௌனம் பொருளாகிறது. கதை சொல்லாத ஒரு துக்கத்தை மேலே தூக்கி வருகிறது. தோழி மகிழ்ச்சியாகவா இருக்கிறாள்? ஓட முடியாமல் லோடு லாரியை நோக்கி வேலையைப் பிடித்துவிட ஓடிக்கொண்டிருக்கும் வயதானவர்கள் அவளுக்கு என்னவோ செய்திருக்க வேண்டும். தோழிக்காவது ஒரு உலர் சலவையகத்தால் நிற்க முடிந்துவிட்டது. வேலை வாய்ப்பில்லாமல் வேலையைத் தேடிக்கொண்டிருக்கும் அவளது இக்கட்டை கதையில் கண்டடைகிறபோதுதான் அந்த அபூர்வமான வருகை முரணாக இருப்பது விளங்கும். இந்த லாரி லோடுமேன்களின் ஓட்டம் அவளது பார்வையில் அர்த்தம் பொதிந்த கணமாக மாறுகிறது. நமக்கும்தான். கதை ‘லாரியின் வருகை’யை சொல்கிறதா? தோழியின் வருகையைச் சொல்கிறதா? வேலைவாய்ப்பும் நமது வாழ்க்கையைச் சொல்கிறது. வேறுவழியில்லை; சாகும்வரை பிழைக்க ஓடித்தான் ஆகவேண்டியிருக்கிறது. சாதாரணம் போல தோற்றம் தந்த கதை ஒரு அசாதாரணக் கதையாக மாறிவிட்டது. இதுதான் வண்ணதாசனின் கதை அழகியல். அவர் கதைகளில் சொல்லப்படும் கதைகளைவிட சொல்லப்படாத கதைகள் மிக ஆழமாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருக்கின்றன. கதையிலிருந்து கிளைக்கும் காட்சிகள், மிகச்சின்னதான கிளைக்கதைகள் அப்படியே நம் மேலோட்டமான பார்வையைப் புரட்டிப் போட்டுவிடுகின்றன. இந்த விமர்சன தெனாவெட்டர்களை ஏமாற்றிவிட்டுப் போய்விடும் இடங்கள் நிறைய. ‘வெள்ளம்’ ‘வெளியேற்றம்’ ‘நிலை’ போன்ற பலகதைகளின் தலைப்பு வேறொன்றையும் சுட்டி நிற்பதை அறியலாம். ஒரு மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவது மட்டுமல்ல ‘வெளியேற்றம்’ அதன் குளிர்மையோடு இருந்த உறவையும் அப்புறப்படுத்திவிட்ட வெறுமையையும் சொல்லாமல் சொல்கிறது.

‘மிச்சம்’ கதையில் பாலியல் தொழிலிலுள்ள ஒரு பெண்ணின் விடிகாலைப் பொழுதின் புற உலகமும், பிரியமான கோலமும் அடர்ந்திருக்கின்றன. அந்த அடர்ந்த பசுமையிடையே சட்டெனத் தொண்டைக்குள் சில நாட்களாக வருத்தியெடுக்கும் தீராத நோவு பற்றியும், படுக்கையறையில் அவளைப் படுத்தியெடுத்த விதவிதமான முகங்கள் பற்றியும் நீருக்குமேல் வாலடித்து துள்ளி எழுந்த கெண்டை மீன் சட்டெனப் புதைந்து விடும் அபூர்வம் போல இருக்கின்றன. வாசித்துக்கொண்டே வரும்போது, இந்த இடத்தைத் தவறவிட்டால் கதை வெறும் நிகழ்வாக மட்டுமே தோன்றிவிடும்.

‘உப்புக்கரிக்கிற சிறகுகள்’ ‘கிருஷ்ணன் வைத்தவீடு’, ‘அழைக்கிறவர்கள்’ ‘ஒட்டுதல்’ ‘ஊரும் காலம்’ ‘ஈரம்’ ‘அவர் பொருட்டு எல்லோருக்கும்’ ‘ரதவீதி’ ‘எண்கள் தேவையற்ற  உரையாடல்கள்’ ‘ஒருவர் இன்னொருவர்’ ‘இங்கே இருக்கும் புறாக்கள்’ போன்ற கதைகளில் மெல்லிய மர்ம இழை ஒன்று ஒட்டுமொத்தக்  கதைகளின் உயிராக நெய்யப்பட்டிருக்கிறது. அந்த இழையைத் தவறவிடுகிறபோது வெறும் நிகழ்வாகவும் அதைக் கண்டடைகிற கணம் புதிய பார்வையை வெளிப்படுத்துகிற சிறுகதைகளாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன. 

‘அவர் பொருட்டு எல்லோருக்கும்’ கதை என்ன? பேருந்துப் பயணத்தில் மழையற்ற கடும் வறட்சியைச் செய்தித்தாளின் மூலம் முன்னிருக்கையில் அமர்ந்தவர் பேசுகிறார். பின்னிருக்கையில் இருந்தவர் ஒரு விவசாயி. செய்தித்தாளில் குடிதண்ணீருக்கு அலைந்து தவித்த சிறுவர்கள் சிரட்டைகொண்டு குழியில் நீர்கோரும் புகைப்படம் வந்ததை வாங்கிப் பார்க்கிறார். கதை முழுக்க வறட்சி பற்றியும், மழை விழ வேண்டும் என்பதைப் பற்றியும் பேச்சாக முன்பின் எழுகிறது. பின்னிருக்கையில் இருந்தவர் திடுக்கென “சாகிற வரைக்கும் எங்க அம்மை இதையேதான் கேட்டுக்கிட்டு இருந்தா. மழை பெய்யுதா, மழை பெய்யுதான்னு அவ ராத்திரி எல்லாம் கேட்கிற சத்தம் ரொம்ப நாளைக்குக் காதில விழுந்து கிட்டே இருந்தது எனக்கு. மழை சத்தத்தைக் கேட்காமலே மண்டையைப் போட்டா அவ… மழைச்சத்தம் சம்சாரிக்கு மந்திரம் மாதிரி’ என்கிறார். கதை சொல்லிக்கும் ஒரு சிலிர்ப்பு எழவே செய்கிறது. “கோவில் கொடை நடக்கிற இடத்தில் மஞ்சள் வேட்டியும் திருநீற்றுக் கொப்பரையும் வேப்பிலையுமாக அவர்
நின்றுகொண்டிருக்க, துண்டை இடுப்பில் கட்டினபடி நான் குறி கேட்பது மாதிரி ஒரு மனநிலை வந்துவிட்டது” என்று எழுதுகிறார். இந்த மாதிரிதான் ஒரு உரையாடலில், ஒரு காட்சியில்; ஒரு விவரணையில் இந்தக் கதையின் வேர் புதைந்து வெளியே கிளையாக அடர்ந்து நிற்கிறது.

‘உயரப்பறத்தல்’ ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ ‘பெய்தலும் ஓய்தலும்’ என்கிற மூன்று தொகுதிகளில் கதையற்ற கதைகளாக அதிகம் இருக்கின்றன. இந்தக் கதைகளின் உள்ளுறையின் ரகசியங்கள் தெரிந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு எளிய நல்ல கதைகள் என்பதற்குமேல் தோன்றவில்லை. இந்த இடத்தை வண்ணதாசனும் உணர்ந்திருப்பார்போல. 1997முதல் 2007 வரைக்குமான இந்தப் பத்தாண்டு கதைகளில் மெல்லிய தன்மையை விட்டு விலகி மீண்டும் அடர்த்தியான கனபரிமாணத்துடன் எழுதப்பட்ட கதைத் தொகுதிகளாக ‘ஒளியிலே தெரிவது’ ‘சிறு இசை’ ‘நாபிக்கமலம்’ மூன்று தொகுப்பைத் தந்திருப்பது பெரிய தாண்டலாக இருக்கிறது. வண்ணதாசனின் அணுக்கமான பல வாசகர்கள் இத்தொகுப்புக்களை உள்வாங்கிக் கொண்டிருக்கவில்லை. அன்பைப் போதித்த வண்ணதாசன் அசிங்கத்தைப் போதிக்கிறார் என்பதாக மிரண்டு விலக்கிவைத்ததை என்னிடம் அறுபது வயதைத் தாண்டிய வாசகர்கள் சொல்கிறார்கள். வண்ணதாசன் அடைந்திருக்கும் பக்குவத்தை வாசகர்கள் அடையவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. வண்ணதாசன் முற்றும் துறந்த ஒரு ஞானியின் மனோநிலையில் விலகி நின்று மாந்தர்களின் இயல்பைச் சொல்ல முயன்றிருக்கிறார் என்று அவர்கள் பார்க்கவே இல்லை. அவர்களிடம் எழும் பதட்டம் பழைய வண்ணதாசனாக இல்லையே என்பதுதான். ஒரு கலைஞனுக்குள் குடியேறியிருக்கும் ஞானியின் பார்வையால் விளைந்த அசாத்தியமான கதைகளை இவர்கள் தவறவிட்டு விட்டார்களே என்று தோன்றுகிறது.

‘ஒரு கூழாங்கல்’ ‘ஒளியிலே தெரிவது’ ‘எதுவும் மாறிவிடவில்லை’, ‘மன்மத லீலையை’, ‘சற்றே விலகி’ ‘நாபிக்கமலம்’ கதைகளின் ஊடாக காமத்தை மட்டுமா சொல்ல வருகிறார்? காமத்திலிருந்து மீண்டெழுகிற இடங்கள் எவ்வளவு முக்கியமானவை! காமத்திற்குச் சம்பந்தமற்றுப் பிரியும் ஒரு கிளையில் கால் வைக்கிற இடத்தில் ஆன்ம ஈடேற்றத்தின் எழுச்சியை அல்லது புதிய மனிதனாகப் புத்துயிர்ப்பு பெறும் நிலையைக் காட்டுகின்றன. காமத்தின் வழியாகக் கடந்து நிற்கும் ஞானத்தையல்லவா சொல்ல வருகிறார். பச்சையாகச் சொல்லப்பட்டது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. பச்சைத்தனத்திற்கு அப்பாலான ஓர் அன்பை வெளிப்படுத்த முயல்வதைத் தவற விடுகின்றனரே என்று தோன்றுகிறது. இவ்விதமான இச்சை மொழியிலிருந்து விலகி தூய்மையின் பார்வையிலிருந்து சொல்லப்பட்ட ‘இன்னொன்றும்’ ‘ஒரு சிறு இசை’ ‘மகாமாயீ’போன்ற கதைகளும் இருக்கின்றனவே! இரு வகை கதைகளின் நோக்கமும் ஒன்றாக விளைவதைக் கவனிக்கத் தவறுகிறோம். ‘சின்னு முதல் சின்னுவரை’ கதையை விரும்பி ஏற்ற வண்ணதாசனின் வாசகர்கள் இந்தத் தொகுப்புகளை முகச்சுழிப்போடு தள்ளுவது வேடிக்கையாக இருக்கிறது. காரணம் இத்தொகுப்புகளில் பெண்களின் பாலியலைப் பேசியதாக இருக்கும் என்று படுகிறது. அதிலும் முக்கியமாகப் பெண்களின் ‘இல்லீகல்’ காமத்தைப் பேசியதனால் இருக்கலாம். மரபுப் பார்வை இக்கதைகளின் வெளிக்குள் புகவிடாமல் தடுக்கிறது என்றுதான் சொல்லவேண்டியதிருக்கிறது. ‘சிநேகிதிகள்’ ‘எண்கள் தேவையற்ற உரையாடல்கள்’ ‘பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்’ ‘பூரணம்’ ‘தண்ணீருக்கு மேல் தண்ணீருக்குக் கீழ்’ ‘அந்தப் பன்னீர் மரம் இப்போது இல்லை’ ‘தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள்’ போன்ற கதைகள் ஏதோ ஒரு புள்ளியில் இந்த மீறல்களைத் தொட்டுச் செல்கின்றன. ஆனால் காம நுகர்ச்சி இல்லாமல் அதன் விளைவுகளின் வழி வந்திருக்கும் புதிய வாழ்க்கையைத்தான் காட்டுகின்றன என்பதை மறுக்க முடியுமா?

6

காமம் மானுடத்தின் அடிப்படையான உயிரம்சம். உடலில் தோன்றும் பசி போல அது ஒர் இச்சை உணர்வு. மனித உணர்வுகளில் எந்த ஒன்றையும் எழுத்தாளனால் நிராகரித்து எழுத முடியாது. எழுத்து தர்மம் என்பதே அதுதான். அதனை எப்படி அணுகுகிறான்? அதில் வெளிப்படும் பார்வை என்ன? அதனை எப்படிப் படைத்திருக்கிறான் என்கிற அடிப்படையில்தான் அதன் இலக்கியத் தகுதி உருவாகிறது. வண்ணதாசன் அதன் விதவிதமான நாடித்துடிப்புகளைக் கண்டு கதைகளில் வைத்திருக்கிறார். அதன் விளைவுகளைச் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையின் சிக்கலில் ஓர் அம்சமாய் படிந்திருப்பதைச் சொல்லி இருக்கிறார்.

காமம் கூடுதலாகவோ குறைவாகவோ எதிர்பாலினத்தின் தோற்றப் பொலிவிலிருந்து எழுகிறது. இந்த உடல்வனப்பு காமத்தைப் பல்வேறு விதங்களில் கற்பனை பண்ண வைக்கிறது. அவரவர் கற்பனையின் வடிவங்கள் வேறானது. ஆடவரின் காம எழுச்சிபற்றி சொன்ன தமிழ்க் கதைகள் ஏராளம். பெண்களின் கண்களிலிருந்தும் விருப்பங்களில் இருந்தும் சொல்லப்பட்டவை மிகமிகக் குறைவு. பொருளியல் நெருக்கடியிலிருந்தும் உறவின் பிடியிலிருந்தும் வெகு லாவகமாகத் தப்பித்துவிடுவது காமம். ஒருவரின் தோற்றம் வசீகரிக்கிறது; ஒருவரின் தோற்றம் வசீகரிக்காமல் போய்விடுகிறது. இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய் கணவனின் சிஷ்யனாக வரும் பியோவைப் பார்த்ததும் அடிவயிற்றிலிருந்து துடிப்பொன்று புரண்டு எழுகிறது. அங்கங்களில் வெளிப்படும் கவர்ச்சி ; நிற்கும் அமரும் சாயலில் எப்படி உரசி ஒட்டவேண்டும் என்று இழுக்கிற இழுப்பு ஒரு சுழல்போல ஈர்க்கிறது. குடித்துவிட்டு எங்கெங்கோ கிடக்கும் கணவனை எந்தெந்த நண்பர்களோ வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். எந்த வேலையிலும் நிலைக்க முடியாத கணவன் மதிப்புமிக்க அறிவாளிதான். அவனது மதிப்பும் அவளுக்குத் தெரிகிறது. வாழ்க்கைக்குப் பணமும் முக்கியமாக இருக்கிறது. இருவருக்குமான கசப்பு இந்த வகையில் இருந்திருக்கலாம். குடிகாரக் கணவனைப் பியோவும் ஒரு நாள் தாங்கிக்கொண்டு வருகிறான். அவனைப் பார்த்ததும் இனம் புரியாத கிளர்ச்சி ஏற்படுகிறது. அந்த தாயின் – பெண்ணினுள் வியாபிக்கும் கிளர்ச்சியை ‘குளிப்பதற்கு முந்தைய ஆறு’ கதையில் பார்க்கலாம். ஜன்னல் பக்கம் பூவைத் தொட எக்கும் பியோவின் பின்புறத்தில் விரும்பி உரச நேர்ந்த கிளர்ச்சியைச் சொல்லியும் சொல்லாமலும்ஆழ்மனதின் துடிப்புகளை எழுதிக்காட்டியிருக்கும் இடத்தைப் போன்று அக்கதையில் இன்னும் சில உண்டு. பெண்ணின் காமத்தை ஒரு வாழ்க்கையின் சிக்கலுக்குள் வைத்து இலக்கிய சாகசமாக மாற்றி இருக்கிறார். இன்று காமத்தைப் பலர் எழுதுகிறார்கள். இலக்கியமாகத்தான் இல்லை.

மகன், சொத்துக்களை முறையாக எழுதிவைக்கவில்லை என்று உதைத்து அடித்துப்போட்ட கிழத்தந்தையை மருமகள் கேள்விப்பட்டு ஓடிவந்து பண்டுவம் பார்க்கிறாள். மகன் வடக்குத் தெருக்காரியைச் சேர்த்துக்கொண்டு இவளை விரட்டிவிட்டவன். பிரிந்திருந்த அவள் அடிபட்டுக் கிடக்கும் மாமனாருக்குக் கஞ்சிவைத்துத் தருகிறாள். குப்புறப் படுக்கவைத்து கோவணத்தின் முடிச்சிற்கும் முதுகுத்தண்டு முடிகிற இடத்திற்குமாகத் தவிட்டு ஒத்தடம் கொடுக்கிறபோது கிழவனுக்குச் சுகமாக இருக்கிறது. மெல்ல மாமனாரைச் சுகப்படுத்தி நடமாட வைக்கிறாள். இவர் வெள்ளைக்கார அதிகாரிக்கு உதவியாளராக இருந்தவர். இவரைப் பேட்டி காண வருகிறாள் ஒரு சுட்டிப்பெண். அவளிடம் பலவற்றைப் பேசுகிறார் கிழவர். தன் மனைவியை வெறுத்தது பற்றிச் சொல்கிறார். அவளது வடிவம் பிடிக்காததைப் பற்றிச் சொல்கிறார். அந்த இளம் வயதில் அதிகாரியின் மனைவியான வெள்ளைக்காரச்சி தன்னைச் சிறுத்தைபோல கட்டி உருட்டி சல்லாபித்ததைச் சொல்லிவிட்டு தன் மருமகளை அழைத்து அணைத்து ‘மரியாதை குறித்து ஒரு தூரத்தில் இருக்கிறாளே தவிர இவளை விட சிநேகிதம் என்ன உண்டு’ என்று சொல்கிறார். கம்பிமேல் நடப்பது போலக் காமத்தைக் கையாண்டிருக்கிறார்.

‘சற்றே விலகி’ கதையில் வரும் கபாலியா பிள்ளை பெண்களை இச்சையோடு பார்ப்பவர். எண்பதைத் தொடும் வயது. மனைவி, மருமகள் வேலை செய்ய வரும் உறவுக்காரப் பெண், தெரு குமருகள் என இவரது குறுகுறு பார்வையைக்கண்டு ஏசுபவர்கள். மூத்த மகனின் இரண்டாவது பெண் பெரிய மனுஷியாகும்போது இளையவன் “இந்த கெழட்டு நாயிகிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். வயசுவந்த பிள்ளைகள நல்ல முறையா காப்பாத்தணுமன்னா வேற வீட்டுக்குக் குடிபோயிரு” என்கிறான். இவனின் மனைவி தூங்கும்போது நின்று வெறித்துப் பார்ப்பதைக்கண்டு அடியும் உதையும் கொடுத்தவன்; தனிக் குடித்தனம் போனவன் அவன். மூத்தவன் அந்த முடிவை எடுக்கவில்லை. இந்தச் சிக்கலை இயல்பாக எடுத்துக் கடக்கிற மகன்களும் உண்டு. பெரியவனின் மூத்தபெண் தாத்தாவிடம் வெகு பிரியமாக இருக்கிறாள். துண்டு நழுவும் நேரங்களில் தெரியும் நிர்வாணமோ அவருடைய பழக்க வழக்கங்களோ, எதுவுமே பேத்திக்கு அசூசையாக இல்லை. பேத்தி எழுந்துபோன சமயம் மடிக் கணினியில் ஒலிக்கும் ஒருபெண்ணின் இசை நிகழ்ச்சியில் மெல்ல மெல்ல கரைகிறார். அவருக்குள் திடுக்கென ஒரு உணர்ச்சி எழுகிறது. மறுகணம் தடாலென விழுகிறார். ‘பகவதி’ எனப் பேத்தியை அழைக்கிறார். அந்தக் களங்கமில்லா குமரு துண்டு விலகக்கிடக்கும் தாத்தாவைத் தூக்கி அரவணைத்து நீர் ஊற்றுகிறாள். பேத்தியிடம் அவருக்குக் காமமில்லை. அல்லது காமத்திலிருந்து மீட்சியைப் பேத்தியின் ஒட்டுதலில் இருந்தே பெறுகிறார். பேத்திக்கோ தாத்தா ஒரு பிரியமான மனிதர். அவரை அவள் தடையற்று நேசிக்கிறாள். அவளின் பார்வையில் தாத்தாவின் நடத்தையில் களங்கமில்லை. கபாலியா பிள்ளையின் பகிரப்படாத காம ஏக்கத்தின் வழி இந்த இடத்தைக் கண்டடைந்ததைச் சொல்கிறார். கபாலியா பிள்ளையிடம் காமக்கண்ணும் உண்டு. தேவியின் கண்ணும் உண்டு. பேத்தி அவருக்குத் தேவி. சந்தேகங்களால் வசை பாடப்பட்ட ஒரு மனிதனிடம் ஒரு சின்ன அகல்விளக்கு ஜொலிக்கவும் செய்கிறது.

‘நீதானே என் பொன்வசந்தம்’ என்கிற திரைப்படப் பாடல் கணவனின் இன்னொரு பெண் மீதான இச்சையைச் சிதறடிக்கும் விதமாக, மனைவியின் பெருங்காதலை அறியும் விதமாக கதைக்கே ஜீவத்துடிப்பாக மாறி விகசிப்பதைச் ‘சுலோசான அத்தை, ஜெகதா, மற்றும் ஒரு சுடுமண் காமதேனு’ கதையில் உணரமுடியும். மனைவி குளித்துவிட்டு முன் தோளில் கூந்தலைப் போட்டுக் கொண்டு அவனோடு இணைந்த சுகத்தையும் நினைத்துக்கொண்டு ‘நீதானே’ என்ற அந்தப்பாடலை பகலெல்லாம் முணங்கும் ஒரு மனநிலைதான் அவனைச் சிதறடிக்கிறது. நம்மில் பலர் வேறு பெண் மீதான இச்சையைப் பொசுக்கி சுடுமண் காமதேனுவாக மாறிப்போகிற இடம் இது. அவளுக்கு அவன்தான் உலகம். பெரிய வெளி அவளுக்கு இல்லை. அந்த உலகம் அவளுக்கு நம்பிக்கைக்குரியது. அதைச் சிதறடித்துவிட வேண்டாம் என்று மீறத் துடிக்கும் காமத்தைப் பொசுக்கிக் கொள்ளுகிற ஆண்களின் உலகம் அக்கதை.

இப்படி ‘நாபிக்கமலம்’ ‘தண்ணீருக்குமேல் தண்ணீருக்குக் கீழ்’  ‘தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள்’ ‘சிநேகிதிகள்’ ‘ஒரு கூழாங்கல்’  ‘ஒளியிலே தெரிவது’ கதைகளின் உள்ளடுக்குகளை எடுத்துவைக்க முடியும். காமத்தையும் காமத்திலிருந்து மீட்சி பெற்ற தருணத்தையும் இதுபோன்ற கதைகளில் காணமுடியும். பழைய நினைவுகளைச் சுழற்றி கல்லில் அடித்து நொறுக்கும் தருணங்களும் உண்டு. அம்மாதிரி இடங்களில் புதிய மனிதனாக பெண்ணின் மாபெரும் இழப்பை அறிந்து துடிப்பவனாக மாறிப்போகிறான். இதற்குச்சிறந்த உதாரணம் ‘கூழாங்கல்’ கதை. 

7

தாத்தாக்களின் பாட்டிகளின் இறுதிக் கால நடமாட்டங்களை வண்ணதாசன் போல எவரும் தீட்டியதில்லை என்றே சொல்லலாம்.; இது எவ்வளவு பெரிய பேறு. இந்தத் தாத்தாக்களின் பிரச்சனைகள் தமிழ் மனத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்தக் கதைகளைப் பிறமொழிகளில் அசலாக மொழிபெயர்ப்பது என்பது மிகவும் சவாலானது. விசயத்தை மொழிபெயர்த்துவிடலாம். பண்பாட்டு மனத்தையும் வழக்கங் களையும், நடத்தைகளில் உறைந்திருக்கும் மௌனங்களையும் மொழி பெயர்ப்பில் கொண்டு வந்துவிட முடியுமா என்பது சந்தேகமே!

மகாமாயீ’ என்றொரு சமீபத்திய கதை, அவரது சாதனைகளில் ஒன்று. ஒருவேளை ‘மகாமாயீ’ கதைக்கு முன்னத்தி கதையோடு எழுதுவதை விட்டிருந்தால் தமிழ்ச்சிறுகதை வரலாற்றின் பேரிழப்பு வரிசையில் ஒன்றாகப் போயிருக்கும். ஓர் எழுத்தாளன் தனது இறுதிமூச்சு இருக்கும்வரை எழுதவேண்டும் என்பது தனது ஓட்டத்தில் இம்மாதிரியான மைல்கல்லை நட்டுவிட்டுப் போவதற்குத்தான்.

மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த பையனைக் காதலிக்கிறாள். அப்பாவிற்கும் தம்பிக்கும் விருப்பம் இல்லை. மகள் பிடிவாதமாக இருக்கிறாள். அம்மா முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறாள். அப்பா வேறு வழியில்லாமல் இறங்கி வருகிறார். புது வீடு கட்டியபின் முதன் முதல் அம்மாவைப் பெற்ற அம்மா (பாட்டி) மாமு ஆச்சி வருகிறாள். பல்விழுந்த பொக்கைவாய்க் கிழவியான மாமு ஆச்சியைப் பொறுத்தளவில் பேத்தி காதலனைத் திருமணம் செய்யலாம். அல்லது அப்பா சொல்லுமிடத்திலும் திருமணம் செய்யலாம். அது ஒரு பொருட்டல்ல ஆச்சிக்கு. ஆனால் இந்தக் குடும்பத்தின் வாழையடி வாழையெனத் தொப்புள் கொடி உறவைத் தொடர்ந்து கொண்டு செல்பவள். நீதான் என்று ஆசிர்வதிக்கிறாள். பேத்தியின் எந்த முடிவாக இருந்தாலும் ஆச்சியைப் பொறுத்தளவில் அவளே குலக்கொழுந்து என்கிறாள். மிகச்சுருக்கமாகக் கதையின் விசயம் இது. இந்தக் கதையின் இதயமாய் துடிக்கும் ஒரு விவரணை தற்செயலாக அமைந்துவிட்டிருக்கிறது. அவள் இளம்பிராயத்தில் பெருக்கெடுத்தோடும் ஆற்றை மழை நாளில் நீச்சலடித்துக் கடந்துபோய் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்து விவசாய வேலைகளை ஜரூராக செய்யத் தொடங்கிய அந்த நாளின் ஆவேசத்தை நினைவு கூறுகிறாள். “மாமு ஆச்சியும் நெகிழ்ந்து போய்த்தான் இருந்தாள். ‘இப்படி ஒரு கன்னிமார் எங்கையைப் பிடிச்சு முத்தங்கொஞ்சுறது என் பாக்கியம் வேலு. இதுக்காகத்தான் வடக்குவா செல்வி என்னைப் போயிட்டுவான்னு இங்க அனுப்பிவச்சாபோல இருக்கு” என்று கண் கசிய அப்பாவைப் பார்த்துப் புலம்பினாள். குனிந்து சேலையில் முகம் துடைத்துக் கொண்டாள். அப்படித் துடைக்கும்போது விலகியதில் மாமு ஆச்சியின் இடது மார்பு தொய்ந்து உலகூட்டுவதாகக் கிடந்தது. அப்பா அந்தக் கருத்தக் காம்பைப் பார்த்துக் கும்பிடுவது போல் விரல்களைப் பூட்டிக்கொள்வதைத் திலகா பார்த்துவிட்டுக் குனிந்து கொண்டாள்.” காமத்தை உதறி எழுந்து கவித்துவ உச்சத்தை எட்டும் இந்தப் பார்வையை மனசை எப்படி ஒதுக்கமுடியும்? இந்த மகளும் நாளை ‘மகாமாயீ’ யின் வடிவம்தானே! இந்த இடம் வாசகனுக்காக விடப்பட்டிருக்கிறது. எனக்கு என் அம்மாவைப் பெற்ற பாட்டி வெவ்வேறு பார்வைகளில் பேச்சுக்களில் தொடர்ந்து தோன்றினாள்.


புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ கதையில்வரும் கணவன் மனைவி இருவரின் அந்யோன்யம் புகழ்பெற்ற ஒன்று. நோய்வாய்ப்பட்ட நிலையில் அவளின் எகத்தாள பேச்சு. அந்தப் பேச்சை மானசீகமாக ரசிக்கிற கணவன், முடியாதபோதும் கணவனுக்காக முயன்று செய்கிற பிரியமான சமையல்.எல்லாமுமே ஒரு அற்புதமான சுருதியில் அக்கதையில் வெளிப்படும். வண்ணதாசனின் ‘நிறை’ கதையில் இந்த சுருதி நேரடியாக இல்லை. ஒரு மனிதனுடைய இறுதிக்கால வீழ்ச்சியின் நினைவடுக்கிலிருந்து கிளர்ந்து வருகிறது. அவரின் அனைத்துவிதமான கம்பீரங்களும், பெருமிதங்களும் அவரின் மனைவியாலே இயல்வதாகி வந்திருக்கிறது என்பதும், அவள் இறந்தபின் அவரிடம் இருந்ததாக நம்பப்பட்ட மதிப்பிற்குரிய அம்சங்களை அவரே ஒவ்வொன்றாக உதிர்த்துக்கொள்ள நேர்கிற துர்பாக்கியத்தை அவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களோடு நவீன காவியமாக்கியிருக்கிறார். இந்த நடத்தைகளை வண்ணதாசன் கவனித்திருப்பதுபோல வேறொருவர் கவனித்து எழுதியதில்லை.


மிக நுணுக்கமாகப் பாத்திரங்களை வார்த்தவருக்கு நோபல்பரிசு தரலாம் என்று முடிவெடுத்தால் வண்ணதாசன்தான் முதலில் வருவார். இன்னும் சலித்து கிழவர்களைக் கிழவிகளை மிகச் சிறப்பாக ஆசாபாசங்களோடும் உடல் மொழியோடும் பெருமிதத்தோடும் சூட்சுமங்களோடும் படைத்தவருக்கு மட்டுமே அந்தத் தகுதி என்றால் வண்ணதாசன் மட்டுமே நிற்பார். நான் அறிந்த வகையில் நான் புரிந்துகொண்ட வகையில் வயதானவர்களை மிகத் தீவிரமான துல்லியத்தோடு இலக்கியத்தில் பெயர்ந்தவர் வண்ணதாசன் மட்டுமாகத்தான் தெரிகிறார். தாத்தாக்களும் ஆச்சிகளும் வண்ணதாசன் கதைகளில் பூரணத்துவம் அடைந்துவிட்டனர். முழுக்க முழுக்க தாத்தாவையும் ஆச்சியையும் கதாமாந்தர்களாக வைத்து வார்த்த கதைகள் பன்னிரெண்டு பதிமூன்று இருக்கும். அந்தக் கதைகளும் வண்ணதாசனின் மிகச் சிறந்த கதைவரிசையில் முன்நிற்கின்றன. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது; ஒரு ஓவியக்காரனின் கற்பனை கைகொடுத்ததா? உளவியலாளனின் கைவிளக்கிலிருந்து தரிசனம் கிட்டியதா? ஒரு இனக்குழு மக்களின் கூட்டு அசைவியக்கத்திலிருந்து உருவாகி வந்ததா? என்று பிரித்துப் பார்த்துவிட முடியாத இணைவின் பின்னலிலிருந்து அக்கதைகள் உயிர் பெற்றிருக்கின்றன.

இதேபோல இனியொரு உண்மையையும் இவ்விடத்தில் சொல்ல வேண்டும். குடும்ப உறவுகளை மாய்ந்து மாய்ந்து எழுதிய பெண் எழுத்தாளர்களிடம் உருவாகி வராத பெண்கள் எல்லாம் வண்ணதாசன் கதைகளில்தான் ரத்தமும் சதையுமாக நடமாடுகிறார்கள். தெருவில், வீட்டு அறைகளில், அடுக்களைகளில், முற்றங்களில், அலுவலகங்களில், பயணங்களில், சக தோழியர்களோடு, தோழர்களோடு, காதலர்களோடு பேசுகையில், ஏச்சுக்களில், ஏடாசிப் பேச்சுக்களில், காமத்தின் பிடிகளில், காதல் மொழிகளில், கண்ணீரின் தத்தளிப்புகளில், சைகைகளில், அசைவுகளில், வேலையின் நெளிவு சுழிவுகளில், பார்வைகளில், மௌனங்களில் என எத்தனையோ அசைவுகளில் அசலான பெண்களைப் பார்க்கிறோம். ஒரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட பெண்கள்தான் இவர்கள். என்றாலும் நடையுடை பாவனைகள் துல்லியமானவை. பெரும்பாலும் இந்தப் பெண்கள் கீழ்நடுத்தர வர்க்கத்தைச்
சேர்ந்தவர்கள். கணவனைச் சார்ந்து இருப்பவர்கள். சிலர் முதல் தலைமுறையாக வேலைக்குச் செல்பவர்கள். பலர் வாழ்க்கையை இழந்தவர்கள். ஒரு நூற்றாண்டில் பெண்களிடம் புழங்கும்பரிபாஷைகளை எல்லாம் இவரின் கதைவழி கண்டுகொள்ள பெரும் திறப்பாக இருக்கிறது.

பெண்களின் புறங்கைகளில் ஒட்டியிருக்கும் அரிசிமாவை, பள்ளிக்குச் செல்லும் பிள்ளையின் சடையைப் பின்னியபடி பற்களில் கவ்விய ஹேர்ப்பின்னை, முறுக்கு மாறாத புது கொலுசைக் காட்டி நிற்கும் காலின் கர்ணமொழியை, கக்கத்தில் இடுக்கிய கைப்பையை, அழுத கண்ணை இடதுதோளிலோ வலதுதோளிலோ முகம் சாய்த்துத் துடைத்துக் கொள்வதை, ரெப்பையின் ஓரம் தீட்டும் கண்மையை, நடையில் வெளிப்படும் பின்னழகின் தளுக்கை, மரணத்தின் இழப்பைச் சொல்லும் மூக்குத்தி இல்லாத இடத்தின் வெளுப்பை, கருப்பு வளையலை, நாடியை இறுக்கிப்பிடித்து விதவைக்குப் பொட்டிடும் தோழியை, மார்பற்ற பெண்ணின் உக்கிரமான மனநிலையை, ஈரத் துண்டோடு தொங்கும் பின் கொண்டை கிடக்க கோலமிடும் கைகளை, சிறுமியின் உந்திச் சுழியை, மாராப்பைத் தோளில் அள்ளிப்போடும்போது தெரியும் அபூர்வ கவர்ச்சியை, நைட்டி மீது குற்றாலத் துண்டைப் போட்டு வாங்கிச்செல்லும் மீனோடு வரும் பேச்சுக்களை, இப்படி பெண்களின் அசைவுகளையும் கனவுகளையும் வெறுப்புகளையும் பெருமிதங்களையும் அபூர்வமாகச் சிறுமைகளையும் சொல்வதில் அவருக்குத் தீர்ந்தபாடில்லை. மேஜிக்காரனின் வாயிலிருந்து ரிப்பன் வருவதுபோல வந்துவிழுகிறது. திருநெல்வேலி சுடலைமாடன் வீதிப்பெண்கள் வண்ணதாசனை நன்றாகவே வளர்த்திருக்கிறார்கள். இவரும் நன்றாகவே கற்றிருக்கிறார். பெற்றிருக்கிறார். கற்றதையும் பெற்றதையும் இலக்கியமாக மாற்றி நமக்குத் தந்திருக்கிறார். கண் பட்டை போட்டுக்கொண்டு ஓடும் குதிரையாக வண்ணதாசனைப் பார்க்கமுடியவில்லை.

பொதுவாக அவரது கதைமாந்தர்கள் ஒரு கட்டத்தில் தங்களை என்னவிதமாய் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். மீறுகிறார்கள்.முட்டிமோதுகிறார்கள், முட்டிமோதியும் மீறமுடியாமல் அந்த சுழலின் ஓட்டத்திலே இயைந்து பயணப்பட்டு விடுகிறார்கள் என்கின்ற கதையின் மையத்திற்கு முன்னும் பின்னுமான வாழ்வின் சில காட்சிகளை, சந்திப்பின் விலகல்களை வீழ்ச்சிகளை, மீட்சிகளை, நம்பிக்கையின் கீற்றுக்களை வண்ணதாசனின் கதைகள் சொல்கின்றன. காலம் தந்த பல படிப்பினைகளை ஏற்று அவர்கள் இன்று வந்து நிற்கும் இடங்களைச் சொல்கின்றன. விதிக்கப்பட்ட இந்த வாழ்க்கையை அமைதியுடனும் திடத்துடனும் கைகோர்த்துக்கொண்டு முன்னகர்வதுதான் நல்லவழி என்ற இடத்தில் வந்து நிற்கின்றன. காலம் மாறுகிறது; காலத்தில் மனிதர்கள் மாறவும் செய்கிறார்கள் என்பது வண்ணதாசனின் பார்வை. இந்த அல்லல்களுக்கிடையில் சிலசமயம் கருணையுள்ள தாய்மையின் வடிவைச் சந்திக்க நேர்கிறது. சிலசமயம் நல்ல தோழமையை உணரமுடிகிறது. சிலசமயம் சரிவை ஏற்க முடிகிறது. சிலசமயம் உளச்சிக்கலிலிருந்து விடுபட்டு மேலெழமுடிகிறது,

தமிழில் முன்னவர்களால் எழுதப்படாத சில உறவுகளை வண்ணதாசன் எழுதியது மட்டுமல்ல. பிறரால் இப்படி எழுதிவிட முடியாத நெருக்கத்தில் இதயப்பூர்வமான உருவங்களாக முன்வைத்திருக்கிறார். ‘மழைவெயில்’, ‘மனுஷா மனுஷா’,‘கூறல்’‘குளிப்பதற்கு முந்திய ஆறு’ எனக் கணிசமான கதைகளைச் சொல்லலாம்.

  ‘தற்காத்தல்’ கதையில் வரும் கிட்டணம்மா – சுந்தரம் உறவு பால்யத்தில் களங்கமின்மையால் தோன்றும் அண்ணன் தங்கை உறவு பற்றியது. வண்ணதாசனின் கதை உலகத்துப் பெண்களில் வெகுசிலர் கணவனிடமிருந்து விலகிவாழ முடிவெடுக்கின்றனர். ஆண்களின் வன்முறையாலும் ஏமாந்து வதைபட்ட பெண்கள் எடுக்கும் சுயமுடிவுகளாக  இருக்கின்றன. படும்பாடுகளிலிருந்து எழும் எதிர்ப்பு என்று சொல்வதைவிட கசப்பாலும் துன்பத்தாலும் ஆனதாக இருக்கின்றன. கணவனிடம் முற்றாகக் காதல் வற்றிய தருணங்களில் விலகுதல் நிகழ்கிறது. ஆணாதிக்கத்தின் நுண்ணிய குரோதங்கள் இக்கதைகளில் வெளிப்படுகின்றன. சுயம் அறிந்து செயல்படும் அம்பை போன்றோரின் எழுத்தின் திசைக்கு மாறாக, பண்பாட்டு குணாம்சத்திலிருந்து ஊறிவந்த பெண்களின் மீறலாக இருக்கின்றன.

                            8

வண்ணதாசனின் கதைகளில் வரும் மாந்தர்களை ஒரு வசதிக்காக அகமனிதர்கள் புறமனிதர்கள் என்று பிரித்துவிடலாம். அல்லது குடும்ப உறவுகளைப் பேசும் கதைகள் என்றும் சமூக உறவுகளைப் பேசும் கதைகள் என்றும் பிரிக்கலாம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க நேர்ந்த புற மாந்தர்களின் செயல்பாடுகளின்வழி மானிட செயல்பாடுகளை முன்வைப்பனவும், நட்பின் இழைவழியோ, உறவின் இழைவழியோ காதலின் இழைவழியோ திரும்பச் சந்திக்க நேர்ந்த அகமனிதரின் மானுட அக வெளிப்பாடுகளை ஒரு சுடர்போல காட்டி மீண்டும் தன் போக்கில் நகர்பவை என வகுத்துக்கொள்ளலாம்.

புறமாந்தர் பற்றிய கதைகள் சிறுகதைக்குரிய வடிவநேர்த்திகொண்டவை. உணர்வின் தளம் சற்று அடங்கியும் புனைவின் தளம் சற்று
எழும்பியும் அமைகின்றன. அவர்களின் செயல்பாடுகளில் புதிய வெளிச்சத்தைக் காண்கிறோம். இந்த புறமாந்தர் பற்றிய கதைகளில்
வண்ணதாசன் என்ற எழுத்தாளன் மனிதர்களின் அசைவுகளை,ஊறிவரும் கற்பனைகளை, எழுந்துவரும் கனவுகளை, பேச்சுக்களை,உள்ளத்தின் துடிப்புகளை, காலம் உணர்த்திய மாற்றங்களைஅனுபவம் கண்டடைந்த சின்ன சின்ன தெறிப்புகளைப் பண்பாடுசார்ந்து தன்னிலிருந்து மீட்டுக்கொள்கிறார். இதைத்தான் நுட்பம் என்கிறோம். நுட்பம் என்ற தனியான ஒன்றில்லை.

‘அப்பாவைக் கொன்றவன்’ கதையைப் பாதிக்கப்பட்டவர் சார்ந்து மட்டும் பேசாமல் ஒரு சமரச உடன்பாட்டிற்குக் கொண்டுபோய் நிறுத்துகிறாரே என்று சிலர் சொல்லக்கூடும். இதில் இன்ன சாதியாரின் கொலையுண்டவனின் பெண்சார்ந்த கதை என்ற சார்பு இல்லை. அப்படி இது இன்னசாதியாரின் மகள்தான் என்று ஒருவர் சொல்லி கோட்பாடு ரீதியாக விமர்சிக்கலாம். விசயம் அதுவல்ல. கொலை செய்வதனை மன்னிப்பதும் அல்ல. யேசு சொன்னாரே ‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்று, அதைத்தான் வாசகனுக்குச் சொல்ல வருகிறது. பார் இந்தச் சிறுமியின் கோலத்தை; அவளின் எளிய கனவை; சிதைந்த குடும்ப உறவை; சின்ன ஆசையை. விசயம் கதைக்குள் அல்ல. கதைக்கு வெளியே வைக்கப்படுகிறது. வண்ணதாசனின் படைப்பு அழகியலில் இதுவும் ஒன்று. டால்ஸ்டாயின் கதைகள் ஆன்மீக எழுச்சியை முன்வைப்பவை என்கிறோமே அந்த எழுச்சியைத்தான் வேறுகோணத்தில் வண்ணதாசன் கதைகள் முன்வைக்கின்றன. அவை சற்று சன்னமாக வெளிப்படுகின்றன.

சாதிக் கலவரத்தில் கொல்லப்பட்ட மனிதனின் மகளைப் பேருந்து நிறுத்தத்தில் கொன்ற மனிதன் சந்திக்கிறார். பதினைந்து நிமிட சந்திப்பு; அந்தப் பள்ளி மாணவியோ ஊருக்குள் பேருந்து வராததால் ஊரின் விலக்கில் நிற்கிறாள். தேர்வுக் காலம்; பதட்டத்தோடு எட்டி எட்டி சாலையைப் பார்க்கிறாள். அங்கு வண்டிக்காக அந்த மனிதரும் வந்து நிற்கிறார். அந்த பெரியவரின் தோற்றத்தில் என்னென்னவோ மாறுதல். முறுக்கிய மீசையாக இல்லை. மீசை தன்பாட்டுக்குத் தொங்குகிறது; அடர்த்தியற்ற தலைமுடியும் ஏர்நெற்றியும் தெரிகிறது. மாணவியை யார் வீட்டுப் பிள்ளை என்று விசாரிக்கிறார். தன்னைப் பெரியப்பா படிக்க வைப்பதாகச் சொல்கிறாள். அவர், ‘நல்லா இருக்கட்டும்’ என்று பொதுப்படையாக ஆசீர்வதிக்கிறார். அந்தப் பெண்ணையும், குடும்பத்தாரையும் ஆசீர்வதிக்கிறார். மாணவியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் பரல்கற்களைக் குடைக்கம்பியால் குத்தியபடியும், தட்டிக்கொண்டும் இருக்கின்றது கை. பழைய யோசனை போலும். அவருக்கான பேருந்து இவர்களைத் தாண்டி தள்ளிப்போய் நிற்க ஓடிப்போய் ஏறியவர் படியில் நின்றபடி வெகுதூரம் வரை அந்த குமருக்கு கையசைக்கிற காட்சியும் அவருள்ளும் குமருள்ளும் எழுகிற புதிய உணர்வுகளைத்தான் வண்ணதாசன் சொல்ல நினைத்தது. சாலையின் எதிர்ப்பக்கம் கடை வைத்திருப்பவர் ஓடிவந்து “உன் அப்பாவ கொன்றவன்” என்று கூறிய போதும் அவளுள் அந்த மனிதன் புதிய மனிதனாகவே தோன்றுகிறார். வெகுதூரம் வரை அவர் அந்த குமருக்குக் கைகாட்டுகிறார். ஒரு பிராயச்சித்தம்; ஒரு பாவமன்னிப்பு. இழப்பை உணர்ந்துகொண்ட எளிய மனிதன். இப்போது அந்த மனிதனுள் வெறுப்பு இல்லை. தனது ஆசீர்வாதத்தைச் சொல்ல வேறு வழியில்லை; தாயின் நிர்க்கதி. ஓயாத உழைப்பு, ஏழ்மை, நோயின் தாக்கம், வாத்திச்சியின் பரிவு, ஆசாபாசத்திற்குமேல் விழுந்த வெட்டு, படிப்பு மீது இருக்கும் பிரியம் இவையெல்லாம் கதையில் மெல்ல இயைந்து இயைந்து வந்து இதற்கெல்லாம் காரணமான மனிதனிடமிருந்து வரும் புதிய சுருதியைத் தொடுகிறது. மாணவிக்கு அந்தப் பெரியவன் கொலைகாரன் என்றும் தெரிகிறது. நின்ற மனிதனுக்குத் தன்னால் கொலை செய்யப்பட்டவனின் இளம்குருத்து என்பதும் தெரிகிறது. இது நிகழ்ந்திருக்க வேண்டாம் என்ற தத்தளிப்பு சொல்லப்படாமல் ததும்புகிறது. புத்துயிர்ப்பு பெற்ற ஆன்மாவை எவராலும் அழிக்கமுடியாது என்று கார்க்கி சொன்னது இதைத்தான். குமருவும் புத்துயிர்ப்பு பெற்றிருக்கிறாள் என்பதுதான் இதில் வெகு விசேசம்.

வண்ணதாசன் அதிகமும் தன்னைச்சுற்றியுள்ள பெண்களின் உலகைப் பேசியது போலத் தெரியவரும். உண்மையும் கூட என்றாலும் கவனித்துப் பார்த்தால் நிரம்ப புறமாந்தர்களின் அன்றாடப் பாடுகளைக் கதை உலகிற்குள் கொண்டு வந்திருப்பது தெரியும். துணைநடிகர், ஸ்டுடியோகாரர், மேஜிக்-ஷோ நடத்துபவர், அச்சிடுபவர், தொழிலாளர், வியாபாரி, பாலியல் தொழிலாளி, எனப் பலரின் வாழ்க்கை சிறுகதைகளாக மாறியிருக்கின்றன. அவரது மொழி நடை ஈரவாடை கூடிய மெல்லிய பனித்திரைபோல மறைந்திருக்கிறது.

வண்ணதாசன் தன்னை மறந்து மூழ்கிப்போவது அகமனிதர்கள்  பற்றி எழுதும்போதுதான். இந்தப் பிரதேசத்தில் வண்ணதாசனை உறவுகளின் மன்னன் எனலாம். தொப்புள்கொடி அறுத்து வெதுவெதுப்போடு நம்பிக்கைகளில் மாற்றிவிட்ட குழந்தைகள் அவை. வண்ணதாசன் கதைகளைச் சில விமர்சகர்கள் நாஸ்டால்ஜியா என்கின்றனர். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனிடம் இல்லையா? அவரின் புகழ்பெற்ற ‘கயிற்றரவு’ ‘செல்லம்மாள்’ கதையைப் படித்துப் பார்க்கலாம். மானுடச்  சிக்கலை விதவிதமாக எழுதிவைத்த எழுத்துக் கலைஞன் கு.அழகிரிசாமியிடம் இல்லையா? ‘சந்திப்பு’ ‘இரண்டு சகோதரர்கள்.’ கதைகளைப் படித்துப் பார்க்கலாம். நிரம்ப நினைவலைகள்  இல்லாதவனிடம் வலுவான கதையை உண்டாக்கமுடியாது. படைப்புக் கலைக்கு அதுவே ஊற்றுக்கண். செறிவான அனுபவத்திலிருந்துதான் வாழ்க்கை பற்றிய பார்வை உருவாகிறது.. இழந்துபோன காலத்தின்மீது ஏன் துக்கம் ஏற்படுகிறது? முக்கியமாகத் திருமணமாகும்வரை மனிதர்களின் வாழ்க்கை பெரும் கொண்டாட்டமாக நகர்கிறது. அந்தக் கொண்டாட்டத்தின் வெளிக்குள்தான் அத்தனை காயங்களும், சவால்களும், வீழ்ச்சிகளும், சிறு எழுச்சிகளும் நிகழ்ந்திருக்கின்றன. திருமணத்திற்குப் பின்னான காலம் ஒருவகையில் செக்குமாட்டு வாழ்க்கைதானே! எனவே அந்த உயிர்ப்பான உலகம் முக்கியமானதல்லவா? மனம் போன போக்கில் சென்றடைந்த அனுபவங்கள் புதுசல்லவா? அந்தப் புதுசான வலிகள், திகைப்புகள், சரிவுகள், சிறு வெற்றிகள் உண்டாக்கும் உணர்வுகள் பழகிப்போன தடத்தில் கிட்டுவதில்லை. மனதின் வேடிக்கைகள் அந்த புதுசில்தான் கண் விழிக்கின்றன. அவைதாம் இலக்கியத்தில் உயிர்நாடியாக மாறுகின்றன. எனவே அந்த உயிர்ப்பான உலகம் முக்கியமானதல்லவா?  இன்னொன்று அந்த உலகத்திற்குள் புகுந்து ஏக்கத்தைச் சொல்கிறாரா? அவர்களின் இன்றைய வாழ்க்கையைச் சொல்கிறாரா? என்பதுதான் முக்கியம்.


வண்ணதாசனின் கதைகளின் மையம் நேற்றைய காலமும் இன்றைய காலமும் சந்திக்கிற புள்ளியில்தான் இருக்கிறது. நேற்றைய அந்த மனிதன் இன்று எப்படி இருக்கிறான் என்பதுதான். இன்று தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்ற இடத்தில்தான் எழுத்தாளனின் பார்வை துலங்குகிறது. மிகமிக முக்கியமான அம்சம் அந்த மனிதன், அந்த மனுஷி நேற்றைய சூறாவளியில் புரட்டி வீசப்பட்டதில் காயங்கள் ஆறிய நிலையில் இன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தேர்ந்த வாசகர்கள்கூடத் தவறவிட்டுவிடுகிறார்கள். இன்றைய எதிர்கொள்ளலில் நேசத்தை மட்டும் வெளிப்படுத்துவதாகத் தோற்றம் தருகின்றது. இது இலக்கியத்தின் வலுவான பகுதியாகவோ பலகீனமான பகுதியாகவோ இருக்கலாம். நம்முன் டால்ஸ்டாய், தாஸ்தாவேஸ்கி என்கிற இரு உதாரணங்கள் இருக்கவே செய்கின்றார்கள். டால்ஸ்டாய்  வன்மத்தை விரித்து வைத்து அதற்கு அப்பாலான நேசத்தை வற்புறுத்துகிறார். வண்ணதாசன் வேறொரு வகையில் சொல்ல முற்படுகிறார். இம்மாதிரியான மனிதர்கள் வழி அவர் கண்டடைந்த அனுபவத்தை ஒரு சொல்லில் சொல்ல வேண்டுமானால் ‘கனிவு’என்று சொல்லலாம். இம்மாதிரியான கதைகளை மட்டுமே வண்ணதாசன் எழுதியதில்லை. மனிதர்களின் பல்வேறு முகங்களைத் திரை விலக்கிக் காட்டவே செய்கிறார். இந்த இடத்தில் நான் சொல்ல வருவது இந்த அகமாந்தர் கதைகளில் கூடிவரும் கதை இழையானது தன்னை மறந்து பீறிடும் எழுச்சியில் நிகழ்வது. நுண்ணிய அசைவுகளை எல்லாம் ஓவியம்போல தீட்டு தீட்டு என்று கிளர்த்துகிறது. முக்கியமாகப் பெண்களின் உலகை விரிக்கும்போதெல்லாம் இந்தப் பரவசம் அச்சு அசலாக எழுந்து வந்துவிடுகிறது. இந்த வகை கதையுலகத்திற்குள் சாதாரணக் கதை, நல்லகதை, சிறந்த கதை என்று இருக்கவே செய்கிறது. நெருக்கடிகளின் உக்கிரத்தன்மையால் இது நல்ல கதை; இது சாதாரணக் கதை என்று அமைகின்றன. இந்தக் கதைகளில் மொழியப்பட்டிருக்கும் விவரிப்பும், அக்கணத்தில் தோன்றும் கற்பனைகளும் விநோத தோற்றங்களும் நுகர்ச்சியின் சுருதிகளும், புதுசான உதாரணங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக அக்கதைகளில் வெளிப்படும் வெளிச்சங்களும் பல கதைகளில் அழகோடு ஜொலிக்கின்றன. பெரிய விசயங்களைச் சொல்லாமல் இருக்கலாம். சிறியதும் அழகுதானே. சூரியகாந்திப் பூவும், முல்லைப்பூவும் வடிவில் வேறு வேறானவைதான். ஆனால் முல்லைப்பூவில் ஒரு வாசம் இருக்கிறது என்பதை மறைத்துவிட முடியாது. வண்ணதாசனின் கதைகளும் அப்படியே!

‘அவளுடைய நதி அவளுடைய ஓடை’ ‘ஆறு’ ‘குளிப்பதற்கு முந்தைய ஆறு’ ‘வெள்ளம்’ ‘நடேசக்கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும்’ ‘அருளிச்செய்தது’ ‘அழுக்குப்படுகிற இடம்’ ‘ரதவீதி’ ‘ஓர் உல்லாச பயணம்’ ‘பசுக்கள் ’ ‘அன்பின் வழியது’ ‘வேரில் பழுத்தது’ ‘அழைக்கிறவர்கள் ’ ‘விசாலம்’ ‘மிதிபட’ போன்ற கதைகளைவிட மிகச்சிறந்த கதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைப் படிக்காமல் வண்ணதாசனைக் கடப்பது என்பது துரதிஷ்டவசமானது. இந்த நல்ல கதைகளின் ஊடாகத்தான் அவரின் மிகச்சிறந்த கதைகளை அடைய வேண்டும். ஏனெனில் இக்கதைகள் வாழ்வின் சில முக்கியமான தருணங்களைச் சந்திக்க வைக்கின்றன. அல்லது சந்திக்கிறோம்.

‘அவளுடைய நதி அவளுடைய ஓடை’ கதையில் காம்பவுண்ட் குடியிருப்பில் உள்ள பெண்கள் வீட்டுவேலை ஓய்ந்ததும் ஒன்றாக அமர்ந்து பழமைபாடுவது புதுமைபாடுவது நடக்கும். கணவனைக் கண்டதும் கூட்டாக அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்று சைக்கிள் செல்ல வழிவிட்டு நிற்பது; கணவனைப் பின்தொடர்ந்து செல்லும் மனைவியைப் பற்றி மனையாட்டிகள் கேலிபேசுவது; அந்தக் கேலிப்பேச்சில் தொனிக்கும் உள்ளர்த்தங்களை ரசிப்பது; எதிர்வீட்டுப் பிள்ளைகளை நிறுத்தி வைத்து நல்லா படிக்கணும் என்று சொல்வது பையனுக்கு மட்டும்தானா என்று எழுதுவது; கணவன் வரும் போதெல்லாம் மற்றவர்கள் எழுந்து நின்று மதிப்பதின் வழியே தன் அப்பாவின் உலகிற்குள்  நீந்துவது என்று வீட்டுப் பெண்களின் உலகை வேறு யார் எழுதியிருக்கிறார்கள்? வேலைக்குப் போகும் கணவன்மார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் என்கிற ஒரு குட்டி உலகம் தெருக்களில் இருக்கத்தான் இருக்கின்றது. இந்தக் கதையை ஒரு நிலவுடைமை மனப்பான்மையைச் சொல்லும் கதை என்று ஒருவர் சொல்லலாம். அப்படியே இருக்கலாம். அந்தப் பெண்ணின் தனி உலகம் என்பது ஒன்று இருக்கலாம். நிலவுடைமையின் எச்சசொச்ச மனநிலையில் வாழும் வாழ்க்கை இருக்கிறது. அது ஒருஉலகம். அது ஒருமனநிலை. அந்த உள்ளத்தை, அந்தக்கனவை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கூடுவிட்டு கூடுபாய்தல் வாசகனுக்கும் தேவை. அவளுடைய நதி அது; அவளுடைய ஓடை அது. அந்தக் கனவை, உள்ளத்தை வேண்டுமென்றால் ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் அந்த உலகை முதலில் பார்க்கத் தெரியவேண்டும். ஒரு பறவைபோல ஒரு மண்ணைக் கிளரும் கோழிக் குஞ்சுபோல ரசிக்கத் தெரியவேண்டும். அப்புறம்தான் விமர்சனம். வேலை விட்டு கணவன் வரும்போது கூடியிருந்து பரிபாசைகளோடு பேசித்திரிந்த வீட்டுப்பெண்கள் அப்படியே மெல்ல விலகிப் பிரியும் அந்த சூழல் தெரிந்ததுதான். ஆனால் பிற எழுத்தாளர்களால் எழுதப்படாத சூழல். இப்படிப் பிறரால் முக்கியமற்றதாகவோ அல்லது பொருளற்றதாகவோ விடப்பட்ட பகுதிகளை வண்ணதாசன் முக்கியமாக்கி இருக்கிறார். பொருள் உள்ளதாக மாற்றியிருக்கிறார். இப்படி எழுதும்போதே எனக்கு உடனே நினைவில் வரும் மற்றொரு கதை ‘மழைவெயில்’ அதை இங்கு சொல்லப்போவதில்லை. வாசகர்கள் அந்த அனுபவத்தைத் தேடிப் பெறட்டும்.

‘ஆறு’ கதையில் தாய்மாமன் மகனுக்குக் குஞ்சும்மாள் இல்லை என்று முடிவான இரவு சாப்பிடாமல் அம்மா அழுதபடி சிணுங்குவதும் அப்பா இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறதுமான காட்சியைக் குஞ்சு வேலைசெய்யும் இடத்தில் வரதட்சணை இன்னபிற காரணங்களால் கணவனால் தள்ளிவைக்கப்பட்ட பார்வதி அக்காவிடம், இவள் ஆற்றின் மீது அடிக்கடி பறப்பதுபோல தனக்குக் கனவு வருகிறது என்று சொன்னதைக் கேட்டு தலையைத் தடவி கண் கலங்க நல்ல சொப்பனம் என்று குஞ்சுக்கு ஆறுதல் சொல்கிற இடங்களை எப்படி விட்டுவிட முடியும்? பக்கம்தானே என்று அம்மாவை மருத்துவமனையில் விட்டு ஆற்றைப் பார்க்க வருகிற குஞ்சுவின் கனவு நிஜத்தில் முரணாக இருக்கிறது. அந்த ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடவில்லை. சாக்கடை நீரால் வறண்டு கிடக்கிறது. இப்படியான தொனிப்பொருள் இவரது கதைகளில் மிக நுட்பமாக
வெளிப்படுகிறது.

கதைசொல்லி, பேருந்தில் தன் திருமண நிகழ்வில் வாசித்த நாதஸ்வர கலைஞன் நடேசகம்பன் மகனைப் பார்த்ததும் அந்த நினைவில் மூழ்கிப் பேச விரும்புகிறான். வண்டியில் கூட்டம். மனைவி நாதஸ்வர கலைஞனைக் கவனித்திருக்க முடியாது என்று கூட்டத்தில் முன்பக்கமாக மனைவியை எட்டிப்பார்க்கிறான். பேருந்திலிருந்து இறங்கியதும் அவள் பார்த்திருக்க முடியாத நாதஸ்வர கலைஞனைப் பற்றிச் சொல்ல மகிழ்ச்சியோடு முன்பக்கம் பார்க்கிறான். இறங்க வேண்டிய இடம் வருவதற்கு முன்பே எழுந்து நிற்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. ஆனால் இறங்கும் போது இடித்துக்கொண்டு இறங்காமல் மற்றவர்கள் இறங்கிய பின் நருவிசாக இறங்குவாள். அவ்விதமே இறங்கி வருகிறாள். (இப்படியொரு கவனிப்பு) கணவனை நோக்கிச் சிரித்துக்கொண்டே வந்த மனைவி “அத்தான் பஸ்ஸில அகிலாண்டத்து அத்தானைப் பார்த்தேன். எத்தனை வருசமாச்சு” என்று தன் இளம்பிராயத்தில் அந்த கிராமத்து அத்தான் செய்த பிரியமான செயல்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு வந்ததைச் சொல்கிறாள். நாம் பார்ப்பதை இன்னொருவர் பார்க்காமல் போவதும் இன்னொருவர் பார்க்கிறதை நாம் கவனிக்காமல் தவறவிடுவதுமான பார்வையையும் அவரவருக்கானப் பிரியங்கள் அவரவருக்கான சுருதிகளை மீட்டுவதைச் சொல்கிறது. அத்தோடு நின்றுவிடுகிறதா கதை! மனைவியின் முகத்தில் இளம்பிராயத்து மகிழ்ச்சி ஒரு சுடர்போல சட்டென ஜொலிப்பதைச் சேர்த்தல்லவா சொல்கிறது கதை. பழைய நினைவலை ஒன்று இன்று பரவசத்தை ஏற்படுத்துகிறதே! இது ஏன்? அப்படியான களங்கமற்ற அன்பு கடந்துபோயிருக்கலாம். இன்று அது வாழ்வை அர்த்தப்பூர்வமாக்கிவிட்ட நிமிடத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இந்த நாஸ்டால்ஜியா விமர்சகர்கள் இதையும் கவனித்தால் இலக்கியத்திற்கு ஒரு துளி நீருற்றுவதாகும்.


வண்ணதாசன் வடிவரீதியாகவும் பார்வைரீதியாகவும் இரு வித்தியாசமான கதைகளை எழுதியிருக்கிறார். ‘பூனைகள்’ ‘ஓர் அமரர் ஊர்தியை முன் வைத்து’ கதைகள் அவை. மரணம் நெருங்கி வந்தும் சில சமயம் விலகிப்போய்விடும் அசாதாரண நிலையும், எதிர்பாராத வகையில் மரணம் அள்ளிச் சென்றுவிடுகிற திகைப்பும் சதா நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சூழலிலிருந்து மீண்ட ஒருவனின் மரணம் குறித்த சந்திப்புகளையும் நெருங்கிவந்து விலகிச்செல்கிற நிமிடங்களையும் கணிக்கமுடியாத பாதை எதிர்கொண்டு பிரித்து அழைத்துச் செல்கிறது என்பதை ‘ஒரு அமரர் ஊர்தியை முன் வைத்து’ கதையில் அறிந்துகொள்ள முயல்கிறார். மரணம் வருவதும் – வந்த மரணம் விலகிச் செல்வதும் – நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கிளைத்துச் செல்லும் வழிகள் போல விநோதமானவை என்று கண்டடைகிறார். சிறுகதை என்பதே புதிதாக ஒன்றைக் கண்டடைவதுதான். அதுதான் அதன் இலக்கிய நோக்கம். இந்த மரணம் வெறுமையைத் தருவது போலவே வெளிச்சத்தையும் தரவல்லதாக இருக்கிறது. நாம் விட்டுச் செல்லும் அர்த்தமுள்ள விசயங்களில் வெளிப்படுகிறது என்பதை ஒரு பார்வையாக ‘யாளிகள்’ கதையில் திரை விலக்குகிறார்.

நடத்தைகளில் உடல் அசைவுகளில் முகக்குறிப்புகளில் நினைத்ததைச் சூசகமாக வெளிப்படுத்துகிற கலையின் உச்சத்தைத் தொட்டவர். அகத்தின் ரகசியங்களை மொழியில் ததும்ப வைத்தவர். எத்தனையோ நூற்றாண்டுகளாக மக்களின் வெளிப்பாட்டு முறைகளிலிருந்து உருவாகி உருவாகி வந்த தமிழ்ப்பண்பாட்டின் நுண்ணிய வெளிப்பாடுகளைத் தனித்த அழகியலாக, அழகியல் என்று சொல்லப்படாத அழகியலாக மீட்டெடுத்தவர். நிகழ்விடையே தக்க சமயத்தில் அர்த்தங்களோடு பொங்கிவரும் கணத்தையெல்லாம் கதைகளில் கொட்டி வைத்தவர். இதனை ஒருவித செவ்வியல் தன்மைக்கு உயர்த்திய அழகியல் செல்வங்களின் பிதாமகன் வண்ணதாசன். கி.ரா.வும் இதில் பெரும் சாகசக்காரர்தான். இந்தத் தமிழ்ப்பண்பாடு அழகியல் கதையின் பேசு பொருளிலிருந்து உருவாகி கதையின் நிஜத்தன்மைக்குப் பேரெழிலைத் தருகின்றன. ஒவ்வொரு கிணற்று நீருக்கும் ஒவ்வொரு சுவை இருப்பதுபோல அக்கதையிலிருந்து ஊற்றெடுத்த அசைவுகள்  அவை. வேற்றுக் கிணற்று நீரைக் கொண்டுவந்து ஊற்றிய நீரின் சுவையல்ல. வண்ணதாசன் வேப்பமரம் போல, வேலிபருத்திச்செடி போல, கொளுஞ்சிச் செடிபோல அசலான தமிழ்க்கதைக்காரராக இருக்கிறார். பெரிய விசயங்களைப் பேசுவோரின் கதைகளில் இந்த சின்ன சின்ன விசயங்கள் இல்லாமல் இருப்பதாலே பொக்காகப் போகின்றன. வண்ணதாசனின் பேரார்வம் கதையைச் சொல்வதில் அல்ல, அதன் உயிரை அள்ளுவதில் இருக்கிறது. கதையின் சொல்முறை வடிவங்கள் எளிய விதத்திலானவைதான். நான்கைந்து வடிவங்களில் அமைபவைதான். ஆனால் விவரணை செய்யும் மொழிசார்ந்து தமிழின் தனித்துவமான கலைஞன் என்பேன். வண்ணதாசனின் மொழியைக் கதை ஓவியத்தின் உச்சம் எனலாம். இது தமிழுக்கு வண்ணதாசன் வழங்கியிருக்கும் பெரும் கொடை.

வண்ணதாசனின் மகத்தான கதைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்று கதைகளின் தலைப்பு வரிசைகளைத் தொட்டபடி பார்த்தேன். வலிமிகுந்த மௌனங்களை, உடைப்பெடுத்த துயரங்களை, வற்றிப்போன வசந்தகால காதல் நதிகளை, அற்புதமான சந்திப்புகளை, வித்தியாசமான களங்களை, வறுமையின் கோரங்களை, காமத்தின் மர்மங்களை, வக்கிர எண்ணங்களைக் கண்டுசொல்லும் இடங்களிலெல்லாம் வண்ணதாசனின் கலை ஆற்றல் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. இதுவரை வண்ணதாசன் எழுதியிருக்கும் (தொகுப்பாக வந்தவைகள் மட்டும்) 180 கதைகளில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் மிகத்தரமான கதைகளைத் தந்திருக்கிறார் என்பது எனது மதிப்பீடு. அந்த வகையில் அறுபது கதைகள் வண்ணதாசனின் பெயரை உலக அளவில் நிலை நிறுத்துகின்றன. மேலும் முப்பது கதைகள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூறு கதைகள் என்பது மிகப்பெரிய சாதனை. இவ்வளவு தரமான கதைகளைத் தந்த தமிழ் எழுத்தாளர் மற்றொருவர் இப்போதைக்கு இல்லை. தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் வண்ணதாசன் என்ற பெயரை யாரும் அசைத்துவிட முடியாது. வண்ணதாசனின் கதையுலகம் குறித்தும் வடிவம் குறித்தும் எனக்கும் கறாரான விமர்சனம் உண்டு. ஆனால் தரம் குறித்தும் தனித்துவமான கலை குறித்தும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.