சதி

மி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது. 

பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு தனது அம்மாவை அடைந்து விடுவான். தாமதிக்காமல் கிளம்பி விடுவார்கள். யாரையாவது எறிடும்போது ஒரு புன்னகை. எமி தன்னையறியாமல் கன்னி மரியத்தை நினைத்துக் கொள்வாள். சாந்தம் கைக் கொண்ட கண்கள். யாருக்கும் மரியாதையைத் தூண்டி விடக் கூடிய முகம். தினமும் கட்டிக்கொண்டு வரக் கூடிய புடவைகள் எல்லாம் கூட மென் வர்ணங்களிலானவை. கண்டிப்பாக விலை கூடியவை தாம், சந்தேகமில்லை. எமி ஆயாவைக் கூப்பிட்டு விசாரித்தாள். ஏதோ ஒரு வார்த்தையை இருபது தடவை எழுதுகிறானாம். கிளம்ப சொன்னாலும் மறுத்து விட்டு எழுதிக் கொண்டிருக்கிறான் என்றார்கள். ஜாக்கின் வயது பத்துக்கு மேலிருக்கும். இரண்டாம் வகுப்பில் தான் உட்கார வைத்திருக்கிறார்கள். 

வழக்கமாக வந்து நின்று பழக்கம் இல்லாத அந்த பெண்மணிக்கு சிரமமாக இருக்குமோ என்று தோன்றியது. ஆயா சென்று ஒரு அடக்கமான இடத்தில் சிறிய நாற்காலி ஒன்று போட்டு உட்கார சொன்னபோது அவர்கள் மறுப்பதைப் பார்க்க முடிந்தது. அருள் கூறுவது போன்ற அந்த சிரிப்பு தான் எவ்வளவு அழகு? எமி நினைத்தாள், கண்ணியத்தைப் பேணுவதற்கு பணம் வேண்டும். தேவன் சிலருக்கு அதை கொடுக்கிறார். அவர்கள் இருக்கிற அபார்ட்மெண்ட் உயர்ந்த மதிர் சுவர்களுக்கு நடுவே விஸ்தாரம் கொண்டு இருக்கும். மனிதர்கள் யாராவது அந்த சுற்றுவட்டாரத்தில் வசிக்கிறார்களா என்கிற சந்தேகமே வரும். கார்டன் உண்டு. ஜாக்கின் வீட்டு மொட்டை மாடிக்குப் போனால் பாதி நகரத்தை பார்க்க முடியுமாக இருக்கும். இந்த பள்ளி இருக்கிற உள் தெருவிற்கு இவர்களோ, இவர்களின் கணவரோ வரும்போது வீடுகளையோ, கடைகளையோ இரைச்சல் உண்டாக்குகிற ஆட்களையோ எதையுமே ஏறிடாமல் கடந்து வருவது தெரியும். தலை குனிந்தவாறு வருவதைக் கூட எமி பார்த்திருக்கிறாள். ஒரு கூச்சம் இருக்கத்தான் செய்யும். ஒரு பெரிய கார் நுழைந்து வந்து விட முடியாத சந்துக்கு வந்தாக வேண்டும் என்பது அவர்களுக்கு இருக்கிறது . 

பள்ளியில் அவர்களுக்கு தனி மரியாதை உண்டு.

எமி கூட அவர்கள் தனது அலுவலக பொறுப்பை கண்டு வியக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. பணம் கட்ட வரும்போது தேவைக்கு அதிகமாக ஓரிரு வார்த்தைகள் பேச முயன்றிருக்கிறாள். அது எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை. சிறிய அவமானம் தோன்றியிருக்கிறது. பேசினால் தான் என்ன. நான் என்ன கடனா கேட்டு விடப் போகிறேன். அதை சொல்ல முடியாது, ஜாக்கின் அம்மா என்னோடு நன்றாக பேசுவார்கள் என்று சொன்னால் அவளது கணவன் அவங்க கிட்ட ஒரு பத்தாயிரம் ரூவா இருக்குமாணனு கேட்டுப் பாரேன் என்று சொல்லாமல் இருக்க மாட்டான். அவனைத் திட்டிவிட்டு நான்கு நாளில் இவளும் அதைக் கேட்காமலிருக்க முடியாது. உன்னைப் பிடி, என்னைப்பிடி என்று மட்டுமல்ல, யாரையாவது பிடி என்று அல்லவா ஓடிகொண்டிருக்கிறது வாழ்க்கை?

எமி ஏதோ வேலையாக போகிற சாக்கில் அங்கே வந்து ஓரிரு பிள்ளைகளை அதட்டி விட்டு அவர்களின் பக்கம் வந்தாள். 

அதுதான், அந்தப் புன்னகை. 

இவளும் பதிலுக்கு புன்முறுவலித்தாள். 

தாண்டி செல்வது போல கொஞ்சம் நகர்ந்து பிறகு அவர்களை நோக்கி திரும்பி வெகு நாகரீகமான மொழியில், ” சாரி ரொம்ப நல்லா இருக்கு ”  என்றாள். 

‘  ஓ !  தாங்க்ஸ்  “

”  ஜாக் எழுதறான். “

”  சொன்னாங்க  “

”  படிக்கணும்னு அவனுக்கு தாட் இருக்கு “

”  நைஸ்  “

” இப்ப எல்லாம் அவன் மத்த பசங்க கூட பேச டிரை பண்றான். பொதுவா உங்க வீட்ல யாருமே நெறைய பேச மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். ஜாக்கோட அப்பா பேசவே மாட்டார். நீங்களும் தான் ! “

மிகவும் மெதுவான குரலில் அவர்கள்  ” நான் யார் கூடவும் பேச மாட்டேன் ”  என்றார்கள். 

ஒரு அமைதி வந்து விட்டது. எமி தன்னையறியாமல் அவர்களை முகம் பார்த்து நிற்க, அவர்கள் அந்த தயார் புன்னகையை செய்து விட்டு பையன் வரப் போகிற திசையைப் பார்த்தார்கள். 

போயிருக்க வேண்டியவள் தான். ஆனால் எமியால் என்னவோ அந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ”  எதுக்கு பேச மாட்டீங்க ? “

அவர்கள் இதற்கு என்றில்லாமல் ஒரு விதமாக தலையசைத்தார்கள். 

” நான் ரொம்ப வளவள. எல்லார் கூடவும் பேசுவேன். ஸ்கூல்ல வேலைக்கு வந்த பெறகு அது இன்னும் ஜாஸ்தியாயி போச்சு. கொஞ்ச நேரம் வாய மூட மாட்டியா ன்னு கேப்பாரு என் ஹஸ்பென்டு. பேசறது தான் எனக்கு புடிக்கும் !

” எனக்குப் புடிக்காது !  “

” அதான் சொல்றீங்களே, ஆனா எதுக்கு புடிக்காதுன்னு சொல்ல மாட்டேங்கறீங்க ? ” என்பது முடிப்பதற்குள் அவர்கள் சொன்னார்கள். ”  தேவடியாளுங்க !  “

எமி தன்னையறியாமல் பின் வாங்கினாள். 

தவறாக எதையாவது காதில் போட்டுக் கொண்டு விட்டோமோ என்கிற ஐயத்துடன் பார்க்க, 

” எல்லாருமே சதி பண்ணிக்கிட்டே இருக்கற தேவடியாளுங்க. பக்கத்து வீட்ல ஒருத்தி கொழம்புல உப்பு அள்ளிக் கொட் றா. இந்த பக்கத்துல ஒருத்தி பெட் ரூம்ல இருக்கற லாப்டு மேல உக்காந்துகிட்டு என் புருஷன் எப்ப அவரோட பூளை வெளியே எடுப்பார்னு பாத்துகிட்டுருக்கா. நாலு வேலக்காரிங்கள வேலைக்கு வெச்சேன். எல்லாருமே நடு ஹால்ல உக்காந்து பீ  போயி வெச்சாங்க. அதெல்லாம் ஏன், முன்ன ஒரு வீட்ட வித்துட்டு வந்தமே, அங்க இருந்து ஒரு தேவடியா தெனமும் என் காதுல வந்து பேசறா !

அவர்களுடைய குரல் உயர்ந்து கொண்டே போயிற்று.    

எல்லோரும் கூடி விட்டார்கள். 

அத்தனை பேருடைய முகத்திலும் அவ்வளவு அதிர்ச்சி. 

அந்த பேச்சு பல சந்துகளுக்கு போயிற்று. மழைக் காலத்தில் ஆற்றுத் தண்ணீர் ஊருக்குள் வருவது போல. கடவுளின் ராஜ்ஜியம் படுத்து விட்டது. சாத்தான் எழுந்து கொண்டு விட்டான். அந்நிய மதங்களை ஆரம்பத்தில் கூட்டு சேர்த்து கொண்டு அழிவு வேலைகளை செய்து கொண்டிருந்தவன் இப்போது சொந்த மதத்திலேயே அழுகின கனிகளை கண்டு பொறுக்கிக் கொள்ள ஆரம்பித்து விட்டான். எல்லாம் அவன் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர். தின்று தூங்கி சாமான் போட்டுக் கொண்டு அயலான் மீது பிசாசுகளை ஏவிக் கொண்டு நமக்கு கொட்டைகளைக் காட்டி பரிகாசம் பண்ணுவதெல்லாம் இன்னும் எத்தனை நாள்? எவ்வளவு செருப்படி வாங்கி மயக்கத்தில் இருந்தாலும் தெய்வம் ஒருநாள் எழுந்தே தீரும். இவர்களுடைய அராஜகங்களை முடித்து வைத்தே தீரும் !

அவசரமாக அழைத்து வரப்பட்ட ஜாக்கை பார்த்ததும் பேச்சு நின்றது. 

கோணிப்போயிருந்த முகம் சில வலிப்புகளுக்கு அப்புறம் தன்னை சீர் செய்து கொண்டிருந்தது. 

முந்தானையைப் போர்த்திக் கொண்டு, அவர்கள் யாரையும் எதிர் கொள்ளாமல் சற்றே அடக்கத்துடன் அவனது கரத்தைப் பற்றிக் கொண்டு, ஆயாவிடம் இருந்த பை மற்றும் இன்ன பிறவையை வாங்கிக் கொண்டார்கள். அழைத்துக் கொண்டு நடந்தார்கள். எமி எத்தனையோ தரம் இந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறாள். ஆனால் இப்போது பார்க்கும்போது அவர்கள் நடந்து போவது பயங்கரமாக இருந்தது. ஜாக் மூளை வளராத பையன். கைகள் திருகிக் கொண்டு கால் என்பது ஏதோ புடலங்காய்களைப் போல இரண்டு தொங்கும். கட்சங்களுக்கு நடுவே பிதுங்குகிற அந்த இயந்திர ஊன்றுகோல்கள். அவன் அவர்களோடு போகும்போது கேட்கிற விசுக் விசுக் என்கிற சபதம் இன்று தனியாகக் கேட்டது. வேறு ஒரு விஷயமும் இருக்கிறது. ஜாக்கிற்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் கூட மனநலம் பழுதுபட்ட குழந்தைகளின் விடுதி ஒன்றில் தான் பாராமரிக்கப்படுகிறாள். 

மறுநாள் எதுவுமே நடக்காத மாதிரி அவர்கள் ஜாக்கை கூட்டிக் கொண்டு போனார்கள். 

மாலையில் அவனை தாமதம் செய்ய விடுவதில்லை.                           

எமி தான் மிகவும் சிரமமாக இருந்தாள். இரவெல்லாம் தூங்காத மாதிரி இருந்தது. விழித்தால் அடித்துப் போட்டு தூங்கின மாதிரியும் இருந்தது. முகப் பொலிவு குறைந்து கொண்டிருக்கிறதோ? பிசாசு பற்றின இட்டுகட்டலில் பல சந்தேகங்களும் பயங்களும் வந்து கொண்டிருந்தன. அது கூட பரவாயில்லை, தனது கன்னி மரியம் காட்டின அந்த குலைந்த முகம், அவள் இப்போது கூட இந்தக் கனவில் இருந்து விழித்துக் கொண்டு விட்டால் நல்லது என்று நம்பினாள். அவ்வப்போது நெஞ்சார்ந்து தோத்திரம் சொல்லி அவர்கள் குணமடைய வேண்டுமே என்பதாகப் பிரார்த்தித்துக் கொண்டாள்.     

திரு ராபர்ட் அவர்களுக்காக தான் தினமும் காத்திருந்தார்கள்.

ஜாக்கின் அப்பா. 

ஒருநாள் அவனைக் கூட்டிக் கொண்டு அவர் வந்தபோது பிடித்துக் கொண்டு அலுவலகத்துக்குள் உட்கார வைத்துவிட்டார்கள். ஒரு சாட்சிக்கு என்பது போல எமியும் அழைத்துக் கொள்ளப்பட்டாள். பள்ளியின் தாளாளர் அய்யப்பன் ஒரு விவேகி. உபதேசி. பிரசங்கியும் கூட. அவரது இந்த கர்வம், ஒரு பேச்சைத் துவங்கினால் அதில் முன்னுரை வைக்கும். ஒவ்வொரு தலைப்பாக வைத்து அதற்கு விளக்கவுரை நிகழ்த்தும். எமி அங்கேயே ஒரு பாயைப் போட்டுக் கொண்டு பயங்கரமாக தூங்க விரும்பினாள். இறுதியில் வர வேண்டிய இடத்துக்கு சேர்ந்தார். 

தலையிடாமல் இருக்க முடியவில்லை. 

எமி சொன்னாள்,  அவர்களை நல்ல ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து இயல்புக்கு கொண்டு வர வேண்டும்.               

ராபர்ட் மிகவும் கனிந்த நிலையில் இருந்தார். 

இது மாதிரி பல இடங்களில், பல பேர் விவரித்துக் கேட்ட விஷயங்களாக இருக்கும் போல, ஒரு சிறிதும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. சமாதானம் கொள்ளுங்கள் என்பது போல தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். யாருமே பேசாமல் இருந்த போது கூட அவரது தலையசைப்பு நிற்கவில்லை. தேநீர் கிடைக்குமா என்று கேட்டார். ஆயா சென்று அதை வாங்கிக் கொண்டு வரும்வரை தனியாகவே அவர் அந்த அறையில் அமர்ந்திருந்தார். துக்கத்தை விழுங்கிக் கொள்கிற அவருக்கு தனிமை எதற்கும் நல்லது என்று எல்லோரும் விலகி சென்று விட்டார்கள். நிஜமாகவே ஆமி பாவமான அந்த மனிதனுக்காக தனது மனதிற்குள் மண்டியிட்டாள். மனதில் தோன்றிய கர்த்தாவின் முகம் எதற்கோ சிறிய நம்பிக்கையை எழுப்பியது. 

எல்லோரும் ஆசுவாசமாக டீ குடித்தார்கள். 

கடைசியாக அவர் கிளம்புகிற நேரத்தில் எமி சீக்கிரம் டாக்டரைப் பார்த்து விடுங்கள் என்றாள். 

அதற்கு அவசியமில்லை என்றார் அவர். 

”  உங்க பேரு என்ன ? “

” ஆமி  “

” நீங்க எல்லாம் அந்த சாத்தான் பக்கம் தான் என்று எங்க இரண்டு பேருக்கும் தெரியும். இங்கே இருக்கிற தேவடியாள்களில் மிகப் பெரிய தேவடியாள், சாத்தானின் நேரடித் தேவடியாள் நீ தான் என்று எனது மனைவி கண்டறிந்து சொல்லியிருக்கிறாள். அவள் ஒரு உளவாளி என்பது உங்கள் யாருக்கும் தெரியாதில்லையா? எப்பேர்ப்பட்ட சதி? எப்பேர்ப்பட்ட சதி? இல்லையென்றால் இந்தக் குப்பைத்தொட்டி ஸ்கூலில் வந்து படிப்பானா என் குழந்தை? அவனுடைய பழுதுபட்ட அங்கங்கள் தான் சொஸ்தமாக ஆகாமல் இருந்திருக்குமா. பிசாசுகளே, பிசாசின் பிள்ளைகளே ! “

என்று சுழன்று நாற்காலியை எடுத்து எமியின் தலையை குறி வைத்துத் தாக்கும்போது அனைவரும் பிடித்துக் கொண்டார்கள். அப்புறம் நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

எமி காய்ச்சல் வந்து விடுமுறை எடுத்துக் கொண்டாள். மயக்கமும் விழிப்பும் பிரார்த்தனையுமாக நாட்கள் கடந்தது. தகப்பனும் தாயுமற்ற குழந்தைகளுக்கு இந்த உலகில் என்ன மாதிரி ஏற்பாடுகள் இருக்கின்றன என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். இதை வேறு யாரிடம் கேட்பது என்று அவளுக்கு தெரியவில்லை. 


-மணி எம்.கே.மணி

1 COMMENT

  1. மணி சார்,
    மிகக் குறைந்த வார்த்தைகளில் பெரும் வியப்பை அளித்து விட்டீர்கள்.
    சிறப்பான ஒன்று.நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.