கிணறு – சிறுகதை

ந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவர்மெண்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மெண்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கட ஊட்டுக்கு முன்னால் ஒரு பேக்கரி இருந்தது அப்போது. சுவரெல்லாம் கருப்பு அப்பிக் கிடக்கும்.மேலே தகரக் கூரை. உள்ள சுடச்சுடப் பாண் வேகும். வெறும் மேலோட பாண் சுடும் ஆக்கள் வேர்வை ஊத்த ஊத்த வேலை செய்வார்கள்.அனேகமாக சிங்கள ஆக்கள் தான் ஊர்ல இந்த மாதிரி வேலைகளுக்கு வாரது. பேக்கரிச் சுவர்ல கரிக்கட்டையால, கொட்டை கொட்டையாக தமிழ்லயும் சிங்களத்திலயும் கிறுக்கியிருப்பார்கள்.படங்களும் அம்பு குத்தின இதயங்களும் இன்னுமென்னனவெல்லாம் இருக்கும். அதெல்லாம் முழுசா வாசிக்கிறதுக்கு ஊட்டுல உட மாட்டாங்க. சின்னப் புள்ளகள் பார்க்கக் கூடாத சமாச்சாரம் போல

அந்த பேக்கரியின் ஒரு பக்கம் ஒட்டினது போல நிஸாரா மாமி வீடு. மத்தப் பக்கம் கீழிறங்கிப் போகும் ஒரு ஒற்றையடிப் பாதை. அதில பத்துப் பதினஞ்சு எட்டு வைத்தால் அந்தக் கிணறு வரும்.

எங்கட ஊட்டுக்கு வேறயா தனியா ஒரு கிணறு. அழகான பச்சைச் செழும்பு படர்ந்திருக்கும். வாளியை உள்ளே விட்டு தண்ணீர் அள்ளும் போது உள்ளுக்குள் உயிர் ததும்பும் ஜீவகிணறு. ஆழத்தில பெயர் தெரியாத தாவரங்களும் மீன்களும். நல்ல ஜின்கள் கூட இருந்திருக்கலாம். ஊட்டில ஏதாவது மனஸ்தாபம் என்டா நான் ஓடி வந்து அந்தக் கிணற்றுக் கட்டுல தான் தொத்தி ஏறி உக்கார்ந்து கொள்வேன். கொஞ்ச நேரம் உள்ளுக்கு எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். வளையம் வளையமாச் சுற்றி இறங்குகிற கல்லுகளுக்கிடையே கொடிகள் பிணைந்து கனத்துக் கிடக்கும். அதன் இருள் ஆழத்துக்குள் வெறுங்கண்களுக்குப் புலப்படாத மர்மங்கள் இருப்பதாகப் பலமுறை நினைத்திருக்கிறேன்.அதுக்குள்ள இறங்கினா முடிவுறாத பாதாளம் போல இன்னொரு உலகத்துக்கு இட்டுச் சென்று விடும் என்ற எண்ணம் இப்பவும் எனக்குள்ள இருக்குது. கைக்குள்ள கிணறு இருந்தாலும் நாங்க குளிக்கிறது அனேகமாக ஊட்டுக்குள்ள இருக்கிற பாத்ரூம்ல தான்.அது ஊட்டுக்கு முன்ன இருந்தததால சுத்தி இருந்த கொங்க்ரீட் மதிலுக்கு அங்கால இருந்து எம்பினா குளிக்கிறது கொள்ரது தெளிவாக விளங்கும். இந்த ஒரு காரணத்தினால கிணற்றுத் தண்ணீர் அதுக்கு கிட்ட இருந்த கறிவேப்பிலை,மருதாணிச் செடிகளைக் குளிப்பாட்டத் தான் அதிகம் பயன்பட்டது

சொந்தமா கம்பீரமா எங்க கிணறு இருந்தாலும் அந்தக் கவுமன்ட் கெணறைப் பார்க்க வேணும் என்று தான் உள்ளுக்குள் ஆசை கொப்புளிக்கும். எங்களுக்கெல்லாம் அங்க போக அனுமதி கிடையாது.அங்க என்னதான் மர்மம் இருக்கிறதோ என்று மனசு கிடந்து அடித்துக் கொள்ளும்

நோன்பு காலம் தான் இதற்கெல்லாம் ஒரே வாசல். ரமழானில நாங்க பிள்ளைகள் ஸஹர் செஞ்ச பிறகு தூங்குறதில்ல.பென்ஸில் கலர எடுத்து  வித விதமா மனிச ரூபங்கள் வரைவோம். இதில ஆண்கள வரைஞ்சா சரியா வராது, பொம்புளக்கி மீச வச்சா மாதிரி ஜோக்கா வரும். அப்பவெல்லாம் உருவம் வரையுரது பாவம் என்று சொல்ல ஒத்தரும் இருக்கல்ல. பின்னாளயில் தான் இந்த அரப்படிச்ச கதையெல்லாம் பெரியாக்கள் கதைக்க தொடங்கினது

பெருநாளைக்கு கூட்டாளிமார்களுக்கு அனுப்ப பேப்பர்கள வெட்டி ஒட்டி கார்ட் செய்யுறது,அல்லாட்டி ஊட்டுல இருந்த கீஸ்கீஸ் போனிக்காவ வெச்சுக் கத சொல்றது இந்த மாதிரி வேலைகள் அந்த நேரத்தில் தான் நடக்கும். அமுக்கினாகீஸ் கீஸ்என்று சத்தம் வாரதால தான் அந்தப் பெயர் அந்த ரப்பர் பொம்மைகளுக்கு. அதுல ரெண்டு ஒட்டகச்சிவிங்கி இருக்கும். அதுல உயரமான பிங்க் நிறச் சிவிங்கி வாப்பா,குட்டையான ப்ரெளன் சிவிங்கி உம்மா என்றும் மற்ற நாய்,பூனை,கரடி பொம்மைகள் பிள்ளைகள் என்றும் கத போகும்.

சுபஹுக்குப் பின்னால ஊரே அமைதியடைஞ்சிருக்கும். சில ஊடுகளுக்குக் கிட்டப் போனா கொறட்டை சத்தம் கூடக் கேட்கும்.

அப்ப தான் ரோட்டில கொஞ்ச தூரம் நடந்து பார்ப்போம். பாதை அப்படியேஹோஎன்று விரிச்சுப் போட்டு வெறிச்சோடிக் கிடக்கும். ஒரு காக்கா இருக்காது. மீன்காரன் அந்த நாளைகளில் வரவே மாட்டான். போஸ்ட்மேன் ஒம்பது மணி தாண்டித்தான்கிணு கிணுவென்ற சைக்கிள் மணி ஒலிக்க வருவார்டியூசனுக்குப் போகும் பிள்ளைகள் இடைக்கிடை தென்படுவார்கள். அப்படி ஒரு நாளில் தான் அந்த மகா பெரிய மர்மக் கிணற்றைப் பார்க்கப் போகிற வாய்ப்புக் கிடைத்தது

ஊட்டில எல்லாரும் நல்ல தூக்கம். நான் கிணற்றுக் கிட்டப் போவமா வாணாமா என்டு ரெண்டு மனசோடு ஊட்டு முன்னுக்கு குறுக்கும் நெடுக்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் தைரியமான வினாடியில் போவது என்று முடிவு  தீர்க்கமாய் முளைத்தது.முன் ரோட்டத் தாண்டினேன்.சாலி நானாட கடை பலகைக் கதவில் பூட்டுத் தொங்கியது.பேக்கரியில் சந்தடி இல்லை. பேக்கரிப் பக்கத்து ஒற்றையடிப்பாதை

அங்குமிங்கும் பார்த்தவாறு படபடப்போடு போய் அந்த மர்ம நீருடம்பப் பார்த்தாகி விட்டது. அதிக நேரம் தாமதிப்பது ஆபத்து.சிட்டெனப் பறந்து ஊட்டு முற்றத்துக்கே திரும்பி வந்திட்டேன்எங்க ஊட்டுக் கிணற்றை விட அது கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருந்தது.

கிணறு நல்ல அகலம்.நீள்சதுர வடிவம். சுற்று மதில் அவ்வளவு உயரமா இல்ல. ஆண்கள் பெண்களுக்கிடையில் சின்னத் தடுப்பு. ஆனா எட்டிப் பார்க்குமளவான உயரம் தான்.

கையால அள்ளித் தண்ணி சேர்ந்தலாம் போல கிணறு கொள்ளாத தெளிந்த தண்ணீர். இரண்டு பக்கமும் இரண்டு சுற்றிலும் பச்சைப் பசேலென நிலமெங்கும் அடர்ந்து முறுகிய செடிகொடிகள். முறுக்கிய நைலோன் கயிற்றில்  என்று கட்டி வைக்கப்பட்ட இரண்டு  அலுமீனியம் வாளிகள்தேமேஎன்று உட்காரவைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மட்டும் வாயிருந்தால் ஆயிரத்தொரு இரவுகளை விட சுவாரஸ்யமான கதைகள் கிடைத்திருக்கும்.

இங்க தான் மனாஸிர் நானாவுக்கும் தேவயாணி அக்காவுக்கும் பயங்கரச் சண்டை மூண்டது. மனாஸிர் நானாவின் ஊர் அக்கரைப்பற்றோ அட்டாளச்சேனையோ எனக்கு சரியாக ஞாபகம் இல்ல, கிழக்குப் பக்கம். இங்க படிக்க வந்து பக்கத்துல  ஒரு ஊட்டில போர்ட் ஆகியிருந்தார். அவருக்கு தமிழ் ஆக்கள் என்டால்  கண்ணில காட்டக்கூடாது. அவர்ட ஊட்டில ரொம்ப நெருக்கமான யாரையோ புலிகள் சுட்டுக் கொன்ற வெஞ்சினம், பார்க்கிற எல்லாத் தமிழரையும் எதிரியாகப் பார்க்க வச்சிருந்தது

தேவயாணி குடும்பம் முஸ்லிம்கள அண்டி வாழ்றவங்க. வசதியில்லாத வறுமைப்பட்ட ஆக்கள். தேவயாணி அக்காவுக்கு மிருகக் காட்சிசாலை புலி மட்டும் தான் தெரியும். ஒரு வாளியில் ஆரம்பித்த சின்னச் சண்டையில் மனாஸிர் நானா தேவயாணி அக்காவை தூஷணத்தால் தாறு மாறாய் ஏச அவவும் திருப்பிப் பேச பிறகென்ன. தேத்தண்ணிக் கோப்பைக்குள்ள புயல் அடிச்ச மாதிரி பெரும் சண்டைஅது முடிய, பிறகு அதைவிடப் பெரும் பிரச்சினை. எரிமலையாய் ஆரம்பித்த சண்டை  இறுகிப் பனிக்கட்டியாகிக் கனிய அதிக நாட்கள் எடுக்கவில்லை. கெணற்றடிச் சண்டை காதலா மாறிட்டுது. அந்தக் காதலுக்கு மனாஸிர் வீட்டிலயோ சுற்றியிருந்த சமூகத்திடமிருந்தோ எந்த அங்கீகாரமும் இல்லை. இப்போ தேவயாணி அக்காஊடுகள்ள சமையலுக்கும் எடுபுடி வேலைக்கும் போறா. மனாஸிர் நானா எங்கயோ ஒரு கடல் கடந்த தேசத்தில் மனைவி பிள்ளைகளோடு இருப்பதாகக் கேள்வி, சரியாகத் தெரியல்ல.

கவர்மெண்ட் கிணற்றுக்குக் குளிக்கப் போகும் ஆக்களின் தொகை காலப் போக்கில் குறைந்து போய்விட்டது. பேக்கரி இடுக்கால் தலையத் துவட்டிக் கொண்டு வரும் ஆண்களையோ, வாளியில் கழுவி முறுக்கிய துணித்துண்டுகளோடு வரும் பெண்களையோ இப்போ மருந்துக்கு மாதிரி தான் காணலாம்.

நிஸாரா மாமிக்கும் வயசாகி விட்டது.அவங்க வீட்டுப் பின்புறம் இறங்கினா அதே வளவுக்குள்ள தான் கிணறு. எல்லோரும் வீடுகளை உடைத்துக் கட்டுவது போல் அவங்களும் , தங்கட சின்ன ஊட்ட கொஞ்சம் அங்கால இங்கால ஒடச்சிக் கட்டியிருக்கிறாங்க. அவட பிள்ளைகள் மூணு பேரும் வளர்ந்து கலியாணமும் முடிச்சிக் கொடுத்தாயிற்று. நாலஞ்சி பேரப்பிள்ளைகள் வேறு.

சின்னச் சின்ன ஊடுகள் இருந்த தெருவில், மடமடவென்று பெரிய மாடி ஊடுகள், கடைகள் எல்லாம் முளைத்து ஊரே மாறி விட்டது.மேல தூவின சீனியோட பியானரோல் சுடச்சுட வரும் முன்னுக்கு பேக்கரியை மூடி மிச்சம் காலமாகிறது. அந்தப் பக்கத்துக்கே அடையாளமாக இருந்த சாலி நானாவின் கடை அவர் மெளத்தானதிற்குப் பிறகு எவரெவரோ செஞ்சி பார்த்தார்கள். சரிவரவில்லை, இப்ப அங்க கடை இருந்த அடையாளமே இல்ல. சாலி நானா இருக்கிற நேரம் சொல்லுவார்உம்மா வாப்பாவத் தவிர வேற எதுண்டாலும் கேளுங்க, தாரன்என்டு. சாலி நானாக் கடை குட்டி ரொட்டி. பச்சைக்கொச்சிக்காயும் சின்ன வெங்காயமும் போட்டு அவித்த மாவில செய்த தேங்கா ரொட்டியும் கட்டசம்பலும் நினைக்கவே வாய் ஊறுது. முன்னுக்கு தொங்க விட்டிருக்கும் புளி வாழைக் குலையும் பக்கத்தில் கத கத வென கொதிச்சுக் கொண்டிருக்கும் டீ பொயிலரும் அதுக்கிட்ட நிக்கிற சாலி நானா முகமும் இன்னமும் கண்ணுக்குள்ள அப்படியே சித்திரம் மாதிரி இருக்கிறது

இந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் எல்லாமே மாறிப் போயிருக்க ஊர் மட்டும் அப்படியே இருக்க வேணுமா என்ன?  

ஊடுகளில் தனிக்குளியலறைகள், வெந்நீர் வசதியோடு வந்த பின்னர் கிணற்றுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் அல்லது கட்டுமானப் பணிக்கு வரும் சிங்கள பாஸ் உன்னஹேகள் தான்.

நிஸாரா மாமி அப்படி ஒரு அதிரடி வேலை மட்டும் செய்யவில்லை என்றால் எல்லோருக்கும் அந்தக் கிணறு இருப்பதே கிட்டத்தட்ட மறந்து போயிருக்கும்.

அவட மூத்த மகள் ஹுசைனா, மாமி வீட்டுக்குப் பின்னால உள்ள கையகல இடத்தில கொஞ்சம் பெரிசா வீட்டைக் கட்டி குடிவந்திருக்கிறா. இரண்டு வீட்டுக்கும் இடையில மூச்சு எடுக்கிறதுக்கு மட்டும் ஒரு குட்டியூன்டு நிலத்துண்டு. நிலம் விக்கிற விலையில் அவங்கள குறை சொல்லவும் முடியாது. வீட்டுக்கு இடது பக்கத்தில் ஒட்டியது மாதிரி அந்தக் கிணறு.

கிணறு தனித்திருந்தது.

எல்லாருக்கும் எல்லாத்துக்கும் தேவையாயிருந்த கிணறு இப்போது ஒரு இடைஞ்சலாக மாறிப் போய்விட்டது. கிணற்றிலிருந்து வடிந்தோடும் கழுவி விட்ட தண்ணீ அப்படியே வீட்டுக்குள்ள வருகிறது. சோப்புத்தண்ணீர் நிஸாரா மாமி ஆசையா வச்சிருக்கும் கறிவேப்பிலைச் செடி வரை ஓடி வந்து நுரை தள்ளுகிறது.கொல்லைப் புறம்  காய்கறி கழுவிய தண்ணீரை வீச வந்தால்  தடித்தடியாய்க் குளிப்பவன்களது உடம்பு வந்து கண்ணுக்குள் விழுகிறது.

ஊரில டெங்குப் பிரச்சினை வேறு தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.தண்ணீர் தேங்குமிடமெல்லாம் ஆபத்தும்  தேங்கிக் கிடந்தது. ஆஸ்பத்திரியில் ஒரே கட்டிலில் ரெண்டு மூன்று நோயாளி என்று சொல்லுகிறார்கள். பீ .எச். பொலிஸையும் கூட்டிக் கொண்டு வந்து  ஊடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லா இடமும்  நுளம்புக் குடம்பிகளைத்தேடிக் கொண்டிருக்கிறார்கள். யாரென்ன செய்து தான் என்ன, அனேகமாக தெரிஞ்ச எல்லாக் குடும்பங்களிலும் யாராவது ஒருத்தருக்காவது டெங்கு.ஊருக்குள்ளே மையத்துக்களும் விழுந்து கொண்டிருக்கின்றன. நுளம்புக் குடம்பிகளச் செக் பண்ண வந்த சிங்களப் பொம்புள ஒன்றுக்கும் டெங்கு வந்து செத்ததா வதந்தி வேறு. ரினாஸ் டொக்டரும் ஐஸீயூ என்று சொல்றாங்க.

இந்தக் களேபரம் போய்க் கொண்டிருக்கையில் தான் நிஸாரா மாமி ஒரு நாள் எங்கட ஊட்டுக்கு வந்திருக்கிறா

கிணறு  அங்கின ஈக்கிரதால சரியான நெலும்பு, டெங்கும் அதால தான் வார, பொய்யோ நான் செல்ரது, அத மூடச் சொல்லி  டீஸீயாலேம் சொன்ன’  

எங்கட ஊட்டுக்கு மேல்ப் பக்கம் இருக்கிற காணி ஒன்டுல இருந்து மண் கொஞ்சம் டிப்பர்ல வெட்டி தந்தா கிணற்றை மூடி விடலாம் என்று நிஸாரா மாமி சொல்றா.

எங்கட உம்மா நாலு விசயம் தெரிஞ்சவ. நாட்டுல நடக்குற செய்திகள் எங்களுக்குத் தெரியாட்டியும் அவக்கு நல்லாத் தெரியும் .செய்திக் கண்ணோட்டம் எல்லாம் சீரியஸா உட்கார்ந்து பார்த்து விளங்க எடுக்கிறவ. ஏதாவது தெரிஞ்சுக் கொள்ளணும் என்டா நாங்களே அவகிட்ட கேட்டுத் தெரிஞ்சு கொள்றது அதிகம்.

நீங்க தனியா இத செய்ய வாணம். இது டீஸிட வேல. ஊர்ல எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டியத தனியா நீங்க மட்டும் செய்றது சரியில்லகடசீல குத்தம் ஒங்களுக்குத் தான் வந்து சேரும்’  என்று உம்மா ஒரு மாதிரியா மாமிய சமாளிச்சு அனுப்பிட்டா.

எல்லாம் அமைதியாத் தான் போய்க்கொண்டிருந்தது

மாமி திடீரென இப்படியொரு குண்டத் தூக்கிப் போடுவா என்று யாருக்குத்தெரியும். சரியாப் பார்த்தா குண்டை அல்ல. அவ அவங்கட மகள்ட வீடு கட்டி மிஞ்ச சமான்கள், ஒடச்சிப் போட்ட செங்கல் துண்டு கொங்கிரீட் துணுக்கு,கலு தெல்,கம்பு கட்டைகள் எல்லாத்தையும் கிணற்றுல கொட்டி  கழுத்து வரைக்கும் இறுக்கி நெறச்சிட்டு சத்தமில்லாம இருந்திட்டாங்க

அடுத்த நாள் பின்னேரம் ஒரு பாஸ் உன்னஹே வேலைக் களைப்பு போக  கவர்மெண்ட் கிணற்றுக்குக் குளிக்க வந்திருக்கிறான். சிங்கள ஆக்கள் காலையில் குளிக்கிறல்ல, எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு அந்தியாகித் தான் குளிக்கிற என்று சொல்லுவாங்க.

வந்து பார்த்தா கெணறு மூடிக் கிடந்திருக்கு. ஒரு சொட்டுத் தண்ணீர் வெளியே தெரியல்ல. அவன் ஈரக்குலை நடுங்கியிருக்கு, பதறிப் போய் பக்கத்துல உள்ள ரெண்டு மூன்று ஆக்களிடம் சொல்லி இருக்கிறான்.

கொஞ்ச நேரம் போகல்ல. திபு திபுவென ஆக்கள் சேர்ந்துட்டாங்க. கிணற்றுக்கருகில் தண்ணீருக்குப் பதில் ஆட்கள் வெள்ளம்.குய்யோ முறையோ என்று சப்தங்கள். நிஸாரா மாமிக்கு நல்ல நல்ல பாசைகளில் பயான் நடந்து கொண்டிருந்தது.

மாமி நல்ல உறுதியான மனுசி. வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே அதிகம் கண்டவ. அவவும் விடல்ல. டீஸியால வந்த ஒருத்தன் சொல்லித் தான் அவங்க கிணற்றை மூடினதாச் சொல்ல அவசர அவசரமாக ஒரு குழு டீஸிக்கு கிளம்பிப் போனது.

நகரசபையில்நாங்க  அப்படி தனியா ஒருத்தருக்கு மூடச் சொல்ல மாட்டோம், அப்படியிருந்தா கடிதம் அனுப்பியிருப்போம்என்று சொல்லியிருக்கிறார்கள். போன வேகத்தில்  மடமடவெனத் திரும்பி வந்த ஆக்கள்உங்களுக்கு வந்த கடிதத்த காட்டுங்கஎன்று  மல்லுக்கு நின்றது.

மாமியிடம் கடிதம் இல்ல, அவனுகள் தான் சொன்னான்கள் என்று அவ திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறா.யாரும் அவ சொன்னத காதில வாங்கினதாத் தெரியல்ல.

டொல்பின் வேன் ஒன்று வந்து பேக்கரிக் கிட்ட நிற்கிறது. அதிலிருந்து வெள்ளைச் சேர்ட் வெள்ளைச் சாரத்தோட போகிறார் பள்ளிக் கொமிட்டி மெம்பர் முஸீன் ஹாஜியார். இன்னும் கூட்டம் அதிகரிக்கிறது.

இங்கிருந்து நாங்க பாக்கிறது அவங்களுக்கு விளங்காம ஜன்னலுக்குள்ளால எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வளவு பெரிய பெரிய ஆம்புளகள், இளந்தாரிப் பொடியங்கள் எல்லாம் இவ்ளோ காலம் எங்கிருந்தாங்கஉம்மா புதினப்பட்டு சொல்றா. அவ சொல்லுவதில் நூறு வீதம் நியாயம் இருக்குது. அந்த பேக்கரிக்குப் பக்கத்துல தான் ஊரில அரைவாசி  குப்பை கிடக்கும். ஊத்த பேக் ஒவ்வொரு கலர்ல கட்டி  அந்த இடத்துக்கு முன்னால கொண்டு வந்து வீசிட்டுப் போயிடுவாங்க. நாத்தம் மூக்கைப் பிய்த்து மண்டைக்குள் ஏறி  உட்கார்ந்து கொள்ளும். அவங்கவட முற்றம் சுத்தமா இருக்க ஊத்தப் பேக்கள் அந்த ரோட்டோரம் கிடந்து நாறும். அத எவ்வளவு தான் கொண்டு போய்  சந்தியில் இருக்கிற பெரிய குப்பைத் தொட்டியில் போட்டாலும் இங்க அடுத்த நாள் காலை ஊத்த பரகத்தா புதுசா நிரம்பிக் கிடக்கும். வளர்ந்த ஆம்புளகள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு நடு இரவில் ஊத்த பேக்குகள கொண்டு வந்து போட்டுட்டு போறத நானே பல முறை கண்டிருக்கிறேன்.

அதே பேக்கரிக்கு மேல இருக்கிற மாடித் தட்டு கொஞ்சம் மறைவான இடம்.முழுசா கட்டாம இடையில் நிப்பாட்டி  நாலைந்து வருஷமா அது அப்படியே தான் இருக்கிறது. மஃரிபு ஆனா அங்க பொடியன் கூட்டம் சேர்ந்துக் கொண்டு பாட்டும்  கூத்துமா சப்தம். பக்கத்துல இருக்கிற ஊடுகள்ள இருக்கிறவங்க ஜன்னல இழுத்து மூடி கர்டின போட்டு விடுவாங்க

அந்த நேரத்தில மருந்தெடுக்கப் போயிட்டோ அல்லது அடுத்தூட்டில  விக்கிற ஷல்வார் மெடீரியல் பார்க்கவோ போற பொம்புளப் புள்ளைகள் அவன்கள்ட வாயில விழுந்து அரை படுவார்கள். கலியாணம் முடிச்சு குழந்தை குட்டி இருக்கிற ஆக்களும் அங்க வாரதா கதைஉள்ள கசாமுசாவெல்லாம் நடக்கிறதா ஆக்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.என்ன கசாவோ முசாவோ, வெளியிருந்து பார்த்தா அங்க மையிருட்டு. உள்ள என்ன நடக்கிறதென்று எங்களுக்கும் தெரியா. ஆனா  அந்தத் தெருவுக்கே அதுவொரு பெரிய தலைவலி. ஆனா இதத் தட்டிக் கேக்குறதுக்கு ஆள் இல்ல. பயமோ அல்லது நமக்கெதுக்கு வம்பு என்ற மனப்பாங்கோ தெரியாது. அந்த நேரமெல்லாம்  இல்லாத ஆக்கள், இளந்தாரிப்பொடியன்கள் எல்லாம் இப்ப சூர் ஊதினா கபுறுகளிலிருந்து ஈசல் போல மையத்துக்கள் எழும்பி வார மாதிரி வாரான்கள்.அதத் தான் உம்மா அப்படிப் பூடகமாகச் சொன்னா என்று நினைக்கிறேன்.

அந்திச் சூரியன் கரையும் போது கிணற்று ஏரியாவே கலியாண ஊடு மாதிரி ஆகிட்டுது.அங்கயும் இங்கயுமா வயர் இழுத்து  பல்புகள் தொங்க விடிய விடிய வேலை. கிண்ற்றுல போட்ட கம்பு,கல்லு,கருப்பு எண்ணெய் எல்லாவற்றையும் எடுத்து வெளியே போடணுமே.

இரவிரவா வேலை நடக்குது,கெணத்த இறைக்கிறாங்க. வேலை செய்யுற ஆக்களுக்கு சூடா பட்டீஸும் இஞ்சிப் பிளேன்டியும் போகுது

நிஸாரா மாமி ஊட்டு ஜன்னல் எல்லாம் டப் டப் என்டு மூடிப்படுகுது.உள்ளுக்கு இருந்து ரேடியோவ கொஞ்சம் சத்தமாக போட்டிருக்கிறாங்க போல. வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் ஸலவாத்தும் என்கிறது முஸ்லிம் நிகழ்ச்சி.அப்ப சரியா ஒன்பது மணி ஆயிருக்கும்

கிணற்றடியில் சந்தடி ஓயல்ல.லைட் எல்லாம் பிரகாசமா எரியுது. எங்கட ஊட்டு மேல் தட்டு ஜன்னலால மாறி மாறிப் பார்க்கிறோம். நள்ளிரவு தாண்டியும் கிணறு இறைப்பு நல்ல உற்சாகமாக நடக்குது.

அடுத்த நாள்.

சுபஹுக்கு எழும்பி அவ்ராதுகள எல்லாம் ஓதுர நிஸாரா மாமி அன்டக்கி  சொணங்கித் தான் எழும்பினா. முந்தின நாள்ட நிகழ்ச்சி எல்லாம் மனசுக்குள்ள ஓடுது. அவட  தலை, பாரமாக இருக்குது.

கெணத்துப் பக்கம் ஜன்னல திறந்தா  ரெக்ஸோனா சோப் வாசம்.

கறிவேப்பிலச் செடியச் சுத்தி சோப்பு நுரை தள்ளுது.

அத பார்க்க முடியாம மாமி படக்குனு தலய திருப்பிக் கொண்டுட்டா.


-ஷமீலா யூசுப் அலி


குறிப்பு:

 ‘புதிய சொல்’  இதழில் வெளியான இந்தச் சிறுகதை ஆசிரியரின் உரிய அனுமதிப் பெற்று ‘பெட்டகம்’ பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.