ஊரே ஆகாதது எனச் சொன்னாலும், அந்த வடக்குப் பார்த்த வீட்டில் இருந்து வெளியேற அம்மாவிற்கு மனசே இல்லையென்பது முருகனுக்குத் தெரியும். வேலிப் படலைத் தாண்டுகிற வாடைக் காற்று வீட்டிற்கு அடைகொடுத்திருத்திருந்த மரக் கதவின் இடுக்குகள் வழியாக உள்நுழைகையில், அரிசிச் சாக்கைப் போர்த்திக் கொண்டு, அப்பாவின் நெஞ்சில் கால்போட்டுத் தூங்கிய காட்சி மறுபடி அவனது நினைவில் எழுந்தது. அப்பாவின் உடல்சூட்டை அவனது உடல் இன்னமுமே ஞாபகம் வைத்திருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்த அதேவேளையில், வெகுசீக்கிரமே அந்த உடற்சூட்டில் இருந்து தன்னை அவர் விலக்கி வைத்ததற்கான காரணத்தை அறியவும் துடித்தான்.
தூரத்தில் இப்போது அதேமாதிரிச் சுருண்டு தூங்கும் தங்கைகளைப் பார்த்த போது, அவனுக்குள் துக்கம் நுரைப் பாலெனப் பொங்கியது. அதிலும் மூத்தவளை எப்படிக் கரை சேர்க்கப் போகிறேனோ எனத் தந்தையின் இடத்தில் தன்னை வைத்து யோசித்தான். மூத்தவள் லட்சுமிக்கு ஏழே வயதாகியிருந்த போதிலும், தலைமுடி எல்லாம் செம்பட்டை பாவி, நரைப்பிற்கும் கருமைக்கும் நடுவாந்திர நிலையில், கடுங்காப்பியைத் தலையில் ஊற்றிய கணக்காய், முதிய பெண்ணொருத்திக்கு இருப்பதைப் போலவே ஆகிவிட்டது. அப்படித் தலையில் சிக்குப் பிடித்து அலைகிற பைத்தியக்காரி ஒருத்தியையுமே சந்தையில் கண்டிருக்கிறான் முருகன். பள்ளிக்கூடத்தில் உடன்படிக்கிற பிள்ளைகள் ஏகடியம் பேசுகிறார்கள் எனச் சொல்லிப் போகவே மறுத்து விட்டாள் லட்சுமி.
அப்பா இருந்தபோது பக்கத்து ஊர் மருத்துவமனைக்கு அவளைச் சுமந்து கொண்டு போய்க் காட்டினார். முருகனுமே அப்போது உடன் போயிருந்தான். “லட்சத்தில ஒருத்தருக்கு வர்ற குறைபாடு இது. யாராலயும் இதை குணப்படுத்த முடியாது. நல்லா படிச்சு சம்பாதிச்சா வெளிநாட்டில விக்கற விலைகூடின சவுரிமுடி வாங்கி மாட்டிக்கலாம். அதனால பள்ளிக்கூடத்துக்கு போகணும். என்ன பாப்பா? டாக்டர் தாத்தா சொல்றதை கேட்டுக்கிட்டீயா?” என்றார் அங்கிருந்த முதியவர். மாட்டேன் என மாட்டைப் போலத் தலையை அசைத்தாள் லட்சுமி.
வெறும்கையோடு அனுப்பக்கூடாது என்பதால், ”இதை தவறாம சாப்பிட்டா முடி கருகருன்னு வந்திரும் என்ன?” எனச் சொல்லி நான்கைந்து நிறத்திலிருந்த சத்து மாத்திரைகளை மட்டும் கைநிறைய அள்ளிக் கொடுத்துத் திருப்பி அனுப்பினார். அழுகிற குழந்தைக்குக் கையில் ஒட்டிவிடப்படுகிற சவ்வு மிட்டாய் அதுவென்பதை மூன்றுபேருமே அறிந்திருந்தனர்.
அங்கிருந்த கடையொன்றில் போய், அப்பா மூன்று சீனிச்சேவு பொட்டலங்களை வாங்கி வந்தார். பின்னர் சைக்கிளில் அவளை முன்னே அமர வைத்து, முருகன் பின்னே தொற்றி ஏறிக் கொள்ள எதிர்க்காற்றைக் கிழித்துத் தள்ளாடியபடியே மிதித்துக் கொண்டு ஏரிக்கரையோரமாக வந்து நிறுத்தினார். “பாப்பா முடி இல்லாட்டி என்ன? மனுஷங்க வாழ்றதுக்குத்தான் பொறந்திருக்கோம். எந்த எதிர்காத்தையும் எதுத்து வாழக் கத்துக்கணும். அப்பா இருக்கறவரைக்கும் நீ வெறும் லட்சுமி இல்லை. மஹாலட்சுமி” என்றார் அப்பா.
பாப்பாவைச் சமாதானப்படுத்தத்தான் அப்பா அவ்வாறு சொல்கிறார் என முருகன் முதலில் நினைத்தான். ஆனால் அப்பா தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு அதைச் சொன்னதைப் போல உணர்ந்தான். அதுவரை மூஞ்சியைத் தூக்கிவைத்திருந்த பாப்பா, அப்பா சொன்னதைக் கேட்டு மலர்ந்து சிரித்தாள். இரண்டுபேரும் எந்தக் கவலையும் இல்லாமல், வீட்டில் இருக்கிற மற்ற இருவரைப் பற்றிக்கூட யோசிக்காமல், ஏரிக்கரையில் அமர்ந்து சீனிச் சேவை ஒன்றொன்றாய் எடுத்துத் தின்னத் துவங்கினார்கள். ஒவ்வொரு கடிக்கும் ஒவ்வொரு மாத்திரையாகத் தூக்கி ஏரிக்குள் எறிந்து இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிற காட்சியை முருகன் விநோதமாகப் பார்த்தான்.
அதிலிருந்த கெளுத்தி மீன்கள் அம்மாத்திரைகளை எடுக்கப் போட்டி போடுகிற காட்சியை நுணுக்கமாகப் பார்த்தபடியே இருந்தான் முருகன். வீட்டிற்கு வந்தவுடன் இடுப்பில் சின்னவளைச் சுமந்து கொண்டிருந்த அம்மாதான் ஒருபாடு அழுது தீர்த்தாள். “இந்த மனுஷனை வச்சுக்கிட்டு என்னதான் பண்ண போறேனோ? அறிவிருக்கிற எந்த மனுஷனாவது டாக்டரு தந்த மாத்திரையை ஏரிக்குள்ள வீசுவானா? இவளை கட்டிக் கொடுக்க நாந்தான் படாதபாடு படவேண்டி இருக்குமே? பெரிய துரையானே என் வாழ்க்கையில விடிவே இல்லையா?” எனத் துவங்கினாள்.
மிதமான சாராய போதையில் அவள் அழுவதைச் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. அப்பாவின் குலதெய்வம் பெரிய துரையான் என்றால் அம்மாவிற்கு, மாமனார் முறைமாதிரி. ஒண்டிக்கொள்ள உறவு என எதுவுமே இல்லாத அம்மா, அப்பா குறித்த மனச் சங்கடங்களை அந்தத் திசை நோக்கியே எப்போதும் ஒப்புவிப்பாள். கண்ணிருக்கிற சாமியான பெரிய துரையானைத்தான் அவள் பெரிதும் நம்பினாள். ஆனால் அந்தக் கோவிலில் வைத்துத்தான் அப்பாவிற்குமே சாவு நேர்ந்தது.
பெரியதுரையான் கெடாவெட்டில் சாராயம் குடித்து விட்டு, பக்கத்திலுள்ள கிணற்றில் விழுந்த பூனையைக் காப்பாற்ற முயன்று, குப்புற விழுந்து தலைக் கல்லில் மோதிச் செத்தார் அப்பா. அவரது உடலைத் தூக்குவதற்காகப் போன போது, “ச்சீய் நீயெல்லாம் ஒரு மனுஷனா? உனக்கெல்லாம் கண்ணே இல்லையா? ஏழை பாழைகளோட நிக்காத நீயெல்லாம் சாமின்னு எதுக்கு இருக்கணும்? இதுக்கு நீயெல்லாம் பீயை திங்கலாம்” எனச் சொல்லிவிட்டுக் காறியுமிழ்ந்த அம்மா, இனி வாழ்நாளில் அந்தக் கோவிலின் படியைக்கூட மிதிக்க மாட்டேன் எனச் சபதம் போட்டுத் திரும்பினாள். பிள்ளைகளிடமுமே அங்கே வைத்தே சத்தியமும் வாங்கினாள். ஒருதடவை அதைமீறி முருகன் அங்கே கெடா வெட்டிற்குப் போய்விட்டுப் பின்னர் மனம்கேட்காமல் கைநனைக்காமலேயே திரும்பி வந்து, அதைப் பற்றி வெளியே சொல்லாமல் கமுக்கமாக இருந்து கொண்டான்.
அப்பாவின் சாவு காரியத்திற்கு வந்த சொந்தங்கள் அவர்களது குல முறைப்படி, அரிசி பருப்பு காய்கறிகளைத் தானமாகக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அடுத்த ஒருமாதத்திற்கு இருப்பு வரலாம் எனக் கணக்குப் போட்டான் முருகன். அப்பாவின் பழைய சட்டையையும் கைலியையும் எடுத்து அணிந்து கிளம்பிய அவனை வாசலில் அமர்ந்து பாத்திரம் தோய்த்துக் கொண்டிருந்த அம்மா நிமிர்ந்து பார்த்தாள். சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவரைப் போலவே அவன் துள்ளி ஏறியமர்ந்ததையுமே பாதி தோய்த்த ஈயக்கரிப் பாத்திரத்தைக் கையிலேந்தியபடி கவனித்தாள். “மொளைச்சு மூணு எலை விடறதுக்குள்ளயே என்னை மாதிரி பாவனை பண்ண ஆரம்பிச்சிட்டான். ஒடம்பாலையும் மனசாலையும் வயசை மீறி நிக்கறவனை கொஞ்சம் கண்டிஷனாதான் வச்சிக்கணும்” என அவளது புருஷன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அரைக்கைச் சட்டையையே பெரிதாக இருக்கிறது என்பதால் சுருட்டி விட்டிருந்தான். ஆனாலும் ஓரளவிற்கு அவனுக்குப் பொருந்திப் போயிருந்தது அச்சாயம் போன சட்டை.
பள்ளி வாத்தியாரின் முன்நின்ற முருகன், “சார் படிச்சா நல்லா வரலாம்ணு எனக்கு நல்லா தெரியுது? ஆனா முடியாட்டி என்ன பண்றது? படிக்காதவங்க எல்லாம் முன்னேறலீயா என்ன? அதனால வேலைக்கு போகலாம்ணு முடிவு பண்ணிட்டேன். என் மேல அக்கறை கொண்டவரு நீங்க. அதான் சொல்லிட்டு போகலாம்ணு வந்தேன்” என்றான். தன்முன் இவ்வளவு தீர்மானமாக நிற்கிற அந்தப் பதினைந்து வயதுச் சிறுவனை ஆதரவோடு பார்த்த வாத்தியார், “படிப்புங்கறதே இந்த வாழ்க்கையை வாழக் கத்துக்கிறதுதான். வாழ்றதுக்குத்தான் எல்லாமும். பொருளீட்டறதுக்கு முன்னாடி எந்த ஞாய தர்மத்துக்கும் இடமே இல்லைதான். பொருளில்லாதவங்களுக்கு இந்த பூமி இல்லைங்கறதை ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தர் சொல்லிவச்சிட்டு போயிட்டார். அதுக்காக பொருள் மட்டுமே வாழ்க்கையும் இல்லை பார்த்துக்கோ. அது உனக்கு ஒருநாள் புரியவும் செய்யும். என்னைக்காச்சும் தோணறப்ப வந்து பாரு” என்றார்.
பிறகு என்ன நினைத்தாரோ, உள்ளே போய் பையிலிருந்து காசை எடுத்துக் கொண்டு வந்து, அவன் மறுத்தபோதும் விடாமல் வற்புறுத்திப் பையில் திணித்தார். முதல் சம்பாத்தியமே பிச்சையைப் போல அமைந்துவிட்டதே என மனதிற்குள் முருகன் குமைந்தாலும், அவரது ஆதரவான செய்கையை நினைத்துத் தன்னைச் சமாதானமும் செய்து கொண்டான். ஏரிக்கரையில் போய்நின்று ஒவ்வொரு நோட்டாய் உருவி வீசலாமா? என்றுகூட நினைத்தான்.
அம்மாவிடம் அவன் அனுமதியெல்லாம் கேட்கவில்லை. “இங்க பொழைக்க எந்த வழியும் இல்லை. விருதுநகருக்கு போயிடலாம். சித்தப்பா அங்க இருக்காருல்ல. அவர் வீடுபிடிச்சு விடறேன்னு சொல்லி இருக்கார். நான் வேலைக்கு போறேன். நீ பாப்பாக்களை பார்த்துக்கோ” என்றான். “அவரை போலவே இவனும் சொல்பேச்சு கேட்காம கோட்டி பிடிச்சு திரியறானே” எனச் சொல்லித் துவங்கிய அம்மா, வெகுதீர்மானமாய் நிற்கிற அவனைப் பார்த்துவிட்டு, அழுகையை அடக்கிச் சரியென்பதைப் போலத் தலையை அசைத்தாள். தன் முடிவிற்குக் கட்டுப்பட்ட விதத்தில் அவள் தலையாட்டிய காட்சி முருகனிற்குள் உத்வேகத்தைக் கிளர்த்தியது. அவ்வுணர்வைக் கொண்டே மிச்சப் பயணத்தையும் கடந்து விடலாம் எனவும் நம்பிக்கை கொண்டான்.
அப்படித்தான் அதுவரை அவர்கள் இருந்த ஊரைவிட்டுக் கிளம்பலாம் என முடிவு செய்தார்கள். தங்கைகளை எழுப்பி கடுங்காப்பிப் போட்டுக் கொடுத்தாள் அம்மா. வழக்கமாக எதையாவது தொணதொணவெனப் பேசிக் கொண்டே இருக்கிறவள், அன்றைக்கு ஒருசொல்கூட உதிர்க்கவில்லை என்பதையும் உணர்ந்தான். எல்லோரும் கிளம்பி வாசலுக்கு வந்து நின்ற போது, அம்மா தெற்கே திரும்பி பெரியதுரையான் இருக்கிற திசையையே பார்த்துக் கொண்டு கொஞ்சநேரம் நின்றாள். அவள் மனதிற்குள் வேண்டுகிறாளோ? ஆனால் அவளது முகக்குறி கொண்டு எதனையுமே கணிக்க முடியவில்லை அவனால். அதன்பிறகு அம்மா கணிக்கவே முடியாதவளாகவும் மாறிப் போய்விட்டாள்.
பிறகு முருகனை நோக்கித் திரும்பிய அவள் போகலாம் என்பதைப் போலச் சிறு அசைவைக் காட்டினாள். சைக்கிளின் பின்னே மூட்டை முடிச்சுக்களைக் கட்டியிருந்தான். கூடவே நடந்து வந்த ஒரு ஆடு, ஒரு நாய், மற்றும் அந்த நால்வரோடு ஒரு நடைபயணம் துவங்கியது. அவர்களுக்கு எதிரே ஒற்றையடிச் செம்மண்பாதை விரிந்து கிடந்தது. அப்போது வாகை மரத்தில் அமர்ந்திருந்த தனித்த செம்போத்தொன்று கூவி மழையறிவிப்பு செய்தது. அந்தக் கூவலைக் கேட்ட அம்மா கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பாப்பாக்களுமே அச்செய்கையைப் போலச் செய்தார்கள்.
ஏரிக்கரையோரமாக அன்றைக்கு அப்பாவோடு அமர்ந்திருந்த இடத்திற்குப் பக்கமாய் வந்த போது முருகன்தான் அந்தக் காட்சியைப் பார்த்தான் முதலில். கருவேல மரமொன்றினடியில் குத்தவைத்து அமர்ந்திருந்தான் அந்தப் பையன். லட்சுமியை விட ஒரு அங்குலம் உயரமாக இருப்பான். முகத்தைக் கோணி வைத்துக் கொண்டு அழுகிறவனைப் போல அமர்ந்திருந்தான். அம்மா அவனைக் கவனிக்கவில்லை என்பதையும் நோட்டமிட்டான். அவனைக் கடந்து நடந்த போது, திரும்பிப் பார்த்தான். எழுந்து நின்ற அந்தப் பையன் பின்னாலேயே நடந்து வந்தான்.
குறுகுறுப்பு ஒண்ணுக்கு வருவதைப் போல முட்டவே, சிறிதுநேரம் கழித்து மறுபடி திரும்பிப் பார்த்தான் முருகன். காலில் முள்தைத்திருப்பதாலோ என்னவோ, நொண்டியபடியே வந்த அந்தப் பையன், அம்மாவைப் பின்புறமாக வந்து கட்டிப் பிடித்துக் கொண்டவுடன், அவள் திரும்பிப் பார்த்து, “யார் சாமி நீயி? எங்கருந்து வர்ற? என்னாச்சு உனக்கு?” எனப் பதறினாள்.
அவன் அம்மாவின் பின்புறத்தில் முகம் பதித்து விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான். எரிச்சல் முட்டவே முருகன், சைக்கிளை நிறுத்தி விட்டு ஒருகையால், அவனது சட்டையைப் பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயலுகையில், “எதுக்கு சின்ன புள்ளைகிட்ட இவ்வளவு வன்முறையா நடந்துக்கிற?” என்றாள். அவள் அப்படி எதிர்த்துச் சொன்னது முருகனுக்கு எரிச்சல் மூட்டியது.
அவனைப் பிரித்தெடுத்து முன்பக்கம் கொண்டு வந்த அம்மா, “ஏன் சாமி? எங்கருந்து வர்ற? அம்மாளை தொலைச்சிட்டீயா? வேற எங்காச்சும் தேடிப் பாரு. நானில்லை உன் அம்மா” என்றாள். அவன் அதையெல்லாம் புரிந்துகொள்ளாத தன்மையுடன் முகத்தை வைத்துக் கொண்டு நின்றான். முகத்தைக் கோணிக்கொண்டு இருப்பதுதான் பிறவி இயல்போ? அவனுக்குப் பிறவியிலேயே பேச்சே வரவில்லையோ? என நினைத்தான் முருகன். அம்மா மேலும் முன்னோக்கி எட்டுவைத்து நடக்கையில், மறுபடி வந்து அவளது சேலையைப் பற்றிக் கொண்டான்.
அம்மா தன் பார்வையை அந்தத் தொலைவானம் வரைக்கும் வீசினாள். அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லையங்கே. அவள் புரிந்து கொண்டதைப் போலவொரு பாவனையை முகத்தில் கொண்டு வந்தாள். பிறகு சேலைத் தலைப்பால் அவனது முகத்தை, கன்ணிலிருந்த இளமஞ்சள் நிறப் பீளையை, அவன் வாயில் வழிந்த கோழையை அழுத்தித் துடைத்துவிட்டு, கையால் அவனது கலைந்து கிடந்த தலைமுடியைச் சரிசெய்தாள்.
பிறகு யாரை நோக்கியோ சொல்வதைப் போல, “தரித்திரத்தை சுமந்துகிட்டுதான் நாங்க போறோம். வழித்துணையா உன்னை யாரோ அனுப்பி வச்சிட்டாங்க போல. நீயும் வா சாமி. நாலு உசிர்களுக்கு சமைக்கிறேன். நீ ஐஞ்சாவதா இருந்துட்டு போ” என்றாள். அந்தக் கணத்தில் முருகனுக்கு உள்ளுக்குள் உலை கொதித்தது. அம்மா ஒரு வார்த்தையைப் பூமியின் பாதத்தில் வைத்துவிட்டால், அதைப் பின்னால் எடுத்துக் கொள்ளவே மாட்டாள், கைதவறிச் செய்தால்கூட என்பது முருகனுக்குத் தெரியும். தன்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி அந்த முடிவை எடுத்தாள்? என்கிற கேள்வி அவனுக்குள் முளைவிட்டது. உடனடியாக மறுக்க வேண்டுமென எண்ணம் உதித்த போதும், அதை வெளிப்படுத்த முடியவில்லை அவனால்.
அக்கேள்வியை உள்ளத்துள் தேக்கி அவளை உற்றுப் பார்த்த போது, “அய்யோ பாவம், வாயில்லா ஜீவன். இவனும் இந்த நாயும் ஆட்டுக்குட்டியும் ஒண்ணுதான். இனிமே இவனுமே உங்க உடன் பிறப்புதான். என் வார்த்தையை யாரும் மீறமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. சொத்தா இங்க இருக்கு? கிடைக்கிற சோத்தில நாலு பருக்கை இவனுக்கும் கெடைச்சிட்டு போகட்டுமே?” எனச் சொல்லிவிட்டு, பெரியதுரையான் இருக்கிற பக்கமாய்த் திரும்பி நின்று பார்த்தாள்.
அந்தக் கணத்தில் முருகன் பெயரறியாத அந்தச் சிறுவனை அடியாழத்தில் இருந்து வெறுத்தான். தன்னிடம் அனுமதி கேட்காமல் அதை அவள் செய்திருக்கக்கூடாது, அப்புறம் தன்னிடத்திற்கு என்ன மரியாதை? என்பதைக் கடைசிவரை உள்ளுக்குள் வைத்து உழற்றிக் கொண்டே இருந்தான். மேற்கொண்டு தடத்தைப் பார்த்து நடக்கையில், “உன் பேரு என்ன சாமி?” என்றாள் அம்மா. அவன் ஒன்றுமே தெரியாதவனைப் போல விழிக்கையில், “பேரு என்ன பெரிய பேரு? பேர் வச்சா போதுமா? சோறு போடணுமே? இனிமே உன்பேரு விக்னேஷூ. என் மூத்தவனுக்கு இதைத்தான் வைக்க நெனைச்சேன். அப்ப முடியலை. இப்ப வச்சிட்டேன்” எனச் சொல்லிவிட்டு ஒரு குழந்தையைப் போலச் சிரித்தாள். அவளோடு சேர்ந்து கொண்டு பாப்பாக்கள் இருவருமே சிரித்தபடி அவனை ஒரு பொம்மையைப் போலக் கவ்விக் கொண்டார்கள். எப்படிப் பெருந்துக்கத்தை உடனடியாக மறந்தார்கள்? தள்ளி நின்று அம்மூவரையுமே பார்த்தான் முருகன். விக்னேஷூமே கோணப் பயலாய் கோழை வழியச் சிரித்தான்.
அந்தக் கணத்தில் அந்நால்வரிடம் இருந்தும் மனதார விலகினான் முருகன். அதற்குப் பிறகு அவன் பொறுப்புணர்வு என்பதை மட்டும், இடுப்பில் எப்போதும் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிற சூரிக் கத்தியைப் போலச் சொருகிக் கொண்டான். புதிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்த பிறகு, முருகன் நினைத்த மாதிரி எல்லாம் வாழ்க்கை அத்தனை எளிதாக இருக்கவில்லை. பட்டுத் துணியைத் தெருவில் விரித்து அதன்மீது நடக்கச் செய்யும் அதுவென்பதைப் போலக் கற்பனையில்தான் இருந்தான். மாறாக அது அவனை வாழைக் கறைபடிந்த வேட்டியை, படிகாரம் போட்டுக் குளத்து மேட்டுக் கல்லில் ஓங்கியறைந்து வெளுப்பதைப் போலக் கசக்கிப் பிழியத் துவங்கியது.
சித்தப்பாவின் சிபாரிசின் பேரில் சந்தையில் பழமண்டியொன்றில் எடுபிடி வேலை கிடைத்தது. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் தேனியில் இருந்து லோடு வந்துவிடும் என்பதால், எந்நேரமும் எங்கேயும் நகராமல் அந்த மண்டியின் பழம் அழுகிக் கசங்கிய மணத்திற்குள்தான் படுத்துக் கிடக்க வேண்டும். வாழைக்கறை பட்டு நமநமவென அரிக்கும் உடலை வறக்வறக்கெனச் சொறிந்தபடி படுத்துக் கிடக்கும் முருகன், முகத்தில் லாரியின் மஞ்சள் விளக்கொளி பட்டதும் படக்கென விழித்துக் கொள்வான்.
சாலையில் படுத்துக்கிடக்கிற லோடுமேன்கள் அந்த ஒளி முகத்தில் பட்டதும் துடித்துக் கொண்டு எழுந்து லாரியை நோக்கி ஓடுவதையும் முதல்நாள் பார்த்தான். வாழ்க்கை அதன் போக்கில் எல்லோருக்குமே புதிய பழக்கம் ஒன்றைக் கற்றுக் கொடுத்துவிடுகிறதோ? அந்தச் சமயத்தில் அப்பா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என ஒரு நினைப்பு வந்த போது, அதை விடாமல் நாயைக் கல்லாலடித்து விரட்டுவதைப் போலத் துரத்தியடித்தான். தனியாகவே அந்த ஒளியைத் துரத்திப் போய்விட முடியும் என்கிற வைராக்கியமுமே பிறந்தது அவனுக்கு.
“இந்த வேலை அந்த வேலைன்னு இல்லை. முதல்ல ஒரு வேலையில உக்கார குண்டி பழகணும். அப்படி உக்காந்து பழகிட்டா அப்புறம் எங்க போனாலும் பிழைச்சிக்கலாம். அதனால ஒழுங்கு மரியாதையா மனச அலையவிடாம இங்கேயே இரு” எனச் சொல்லித்தான் சித்தப்பா அங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டார். பல்லைக் கடித்துக் கொண்டு அதன்பேரிலேயே அந்த வேலையில் இருந்தான் முருகன். ஆனால் வாழ்க்கை இரண்டு வருடங்களாக அந்த மண்டிக்குள்ளேயே, தின்று கொழுத்த பெருத்த எலியொன்றைப் போலச் சுருட்டிப் பதுக்கி வைத்துக் கொண்டது.
வீட்டிற்கும் அவனுக்குமான போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பித்ததும் அக்காலத்தில்தான். ஆரம்பத்தில் அந்தக் கோணை முகத்தானைக் கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் பிரயத்தனப்பட்டான் முருகன். அப்பா செய்வதைப் போலவே வீட்டிற்குள் நுழைந்ததும் கைகால் கழுவி விட்டு, பையில் இருக்கும் பணத்தை எடுத்து அம்மாவின் பார்வை படுகிறபடி ஒரு இடத்தில் வைத்தபிறகு வெளியே போய்க் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொள்வான்.
தூரத்தில் இருந்து அங்கே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பான். அங்கே அம்மா அந்த மூவரோடு கரைந்து அமிழ்ந்து கிடப்பதைப் பார்க்கப் பார்க்க வெறியாக இருக்கும் முருகனுக்கு. அப்போதெல்லாம் மூத்தவளும் இளையவளுமே கூட முருகனை நெருங்கி வர புதுசாய் அச்சப்பட்டார்கள். அந்த நால்வரும் தன்னைத் தவிர்த்துவிட்டு தனியாய் புத்தம் புதுவாழ்வொன்றைத் துவங்கி விட்டதாகவும் நினைத்தான் முருகன். அம்மாவுமே குறைந்த சொற்களோடுதான் அவனோடு புழங்கிக் கொண்டு இருந்தாள். இதைப் பற்றியெல்லாம் தன்சக லோடுமேன் ஒருத்தனிடம் சொன்ன போது, “வெளிச்சத்தை நோக்கி நீதாம்லே நெருங்கி போகணும். ஒருநாள்ள சாகிற விட்டில் பூச்சிக்குக்கூட இந்த உண்மை தெரிஞ்சிருக்கு. மனுஷனுக்குப் புரியலையா? விலகி விலகி போயிட்டு இருட்டா இருக்குன்னு புலம்புனீன்னா எப்படி?” என்றான்.
ஆனால் முருகனால் அந்தப் புதிய உருப்படியுடன் நெருங்கிப் போகவே முடியவில்லை. எந்நேரமும் முகத்தைக் கோணி இளித்தபடி நடக்கும் அந்த உயிர் அவனது தன்னிருப்பைக் குலைத்தபடியே இருந்தது. அதெப்படி ரேஷனரிசிச் சோற்றைப் போல வெந்து சாகிற தன்னிடம் அனுமதி கேட்காமல் அம்மா அதைச் செய்தாள் என்று அப்போதுமே நினைத்தான். இந்த மாதிரி எண்ணங்களை எல்லாம் விரட்டக் கொஞ்சமாய்ச் சாராயம் குடிக்கவும் பழகிக் கொண்டான். உடலில் ஒட்டியிருக்கிற பழமண்டி மணம் எனச் சொல்லிக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையும் பிறந்தது.
வீட்டிற்குப் போவதற்கு முன்பு சந்தையின் மூத்திரச் சந்திற்குப் பக்கத்தில் இருக்கிற கொய்யா மரத்தில் இருந்து கொழுந்து இலைகளை மென்றுவிட்டுப் போவான். தவிர, தூரத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கிற அவனை நெஞ்சோடு ஆரத் தழுவி உச்சந்தலையில் அம்மா முத்தம் கொடுக்கப் போகிறாளா? இல்லை, தங்கைகள்தான் மடியில் புரண்டு விளையாடப் போகிறார்களா? என்கிற விட்டேற்றித்தனமும் இணைந்துகொண்டது அவனிடம்.
அப்படியொரு நாள் கொஞ்சம் கூடுதலாகக் கண் சிவந்து கிடக்கிற மாதிரித் தோரணையில் வீட்டிற்கு அரைக்கிலோ ஆட்டுக்கறியை எடுத்துக் கொண்டு போனான். அவன் போய் அமர்ந்த தோதை ஓரக் கண்ணால் அம்மாவுமே பார்த்தாள். வட்டிலில் நாலைந்து கறித் துண்டுகளை பார்த்ததுமே முருகனுக்குள் கோபம் கொப்பளித்தது. வட்டிலை மண் தரையில் வீசியெறிந்த அவன் எதிரே நின்றிருந்த அம்மாவை பார்த்து, “கொஞ்சமாச்சும் கருணை இருக்கா உனக்கு? உழைச்சு களைச்சு வர்றவனுக்கு நாலு துண்டுதானா? இருக்கற கஷ்டத்தில எதுக்கு ரோட்டில போற நாயை எல்லாம் நடுவீட்டில வச்சு பொங்கிப் போட்டு சாவடிக்கிற. நாய் நாலு பருக்கையா தின்னுது? அது கறியும் சோறும்ல கேட்குது” என்றான். சொன்னபிறகே அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்பதும் உறைத்தது.
இடுப்பில் சேலையைச் சொருகிக் கொண்டு அவனை நோக்கி அம்மா நடந்துவந்த போது, சின்னப் பையனைப் போல அவனுக்குள் நடுக்கம் வந்தது. அடிக்கப் போகிறாளோ? அவனது கண்ணைப் பார்த்து, “எம்புருஷன் என்னோட படுத்துக் கிடந்த பவிசுக்காக என்னன்னாலும் பேசுவான். நானும் பொறுமையா கேட்டுக்குவேன். உசுர் வாழ என்ட்ட பாலைக் குடிச்சிட்டு படுத்துக் கிடந்த பயல் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டீயா? மரியாதையா பேசு இல்லாட்டி நாக்கை இழுத்து வச்சு அறுத்திருவேன். உன் காசும் வேண்டாம் மயிரும் வேண்டாம். நான் கல்லுடைச்சாவது எம்புள்ளைகளை காப்பாத்திக்குவேன்.” என்றாள் தீர்மானமாய்.
அப்போது தூரத்தில் தங்கைகளோடு அந்த நாயும் வாயைக் கோணிக் கொண்டு சிரித்தபடி நின்று அக்காட்சியைப் பார்த்தது. தங்கைகளின் முகத்தில் கலவரம் தெரிந்தது. அந்த நாய்க்கு அங்கே என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை. ஆங்காரம் பெருக்கெடுத்துப் பக்கத்தில் இருக்கிற கட்டையை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி அடிக்கப் பாய்ந்தான் முருகன். அப்போது அவனுக்கு எதிரே அரிவாள்மனையைக் கையில் ஏந்தி நின்ற அம்மா, “அவம் மேல கைபட்டிச்சு உன் சங்கை அறுத்திருவேன் பார்த்துக்கோ. ஞாயத்துக்கு முன்னாடி பெத்த பிள்ளையாவது மசிராவது?” என்றாள். அவனது போதையெல்லாம் அந்தக் கணத்தில் அக்னி வெயிலைக் கண்ட குட்டை நீரைப் போல வற்றியடங்கி, அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். உடனடியாகவே சுருக்கெனப் பதிலுக்கு ஏதாவது அம்மாவை நோக்கிப் பேசவேண்டுமென எழுந்த உணர்வை அடக்கிக் கொண்டான் முருகன்.
எவனோ ஒருத்தனுக்காகச் சொந்தப் பிள்ளையை அப்படிச் சொல்வாளா? என்கிற கேள்வி அவனுள் ஓடியது. அந்தப் பயல் இல்லாத நாடகம் போட்டு அவர்களிடம் பரிதாபத்தை வென்றுவிட்டான் என்றும் தோன்றியது. ஒன்றும் பேசாமல் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு சைக்கிளைத் தள்ளியபடிச் சந்தைக்குக் கிளம்பினான் முருகன். மூவரில் யாராவது தன்னை வீட்டிற்கு அழைப்பார்கள் என அந்த நேரத்திலும் எதிர்பார்த்தான். ஆனால் யாரும் அழைக்கவில்லை, அம்மாவின் சொல்தான் அங்கே இறுதியாயிற்றே?
அம்மா சொன்ன மாதிரியே கல்லுடைக்கிற வேலைக்குக் கிளம்பிப் போனாள். அவளிடம் போய் நின்று பேசமுயற்சித்த போது, “நாய் நரி பறவைன்னு எல்லா உசுருமே தான் சோத்துக்கு தானேதானே உழைக்குது? நான் மட்டும் என்ன செறப்பு? இனியாச்சும் எவர் கையையும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கிறேன். உனக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சுன்னா அந்த மூணு உசிர்களுக்கும் சேர்த்து செய்யு. என்னை என் வழியில விட்டிரு. ஒரு அம்மாவா கடைசியா இதைத்தான் உண்ட்ட கேட்கிறேன்” என்று அவள் சொன்ன போது அவளது கண்கள் கலங்கி இருந்ததை முருகன் பார்த்தான். ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்த போது, தூரத்தில் மூன்று பேரும் அமர்ந்து எதையோ பேசிக் கொண்டு இருந்தார்கள். தங்கைகளை மட்டும் தனியாக எப்படி அழைப்பது? என்கிற யோசனையில் எதுவுமே கொடுக்காமல் வெளியேறினான் முருகன்.
அதற்குப் பிறகு வீட்டிற்குப் போவதைச் சுத்தமாகக் குறைத்துக் கொண்டான். அம்மா இல்லாத நேரங்களில் மட்டும் போய் சாமி படத்திற்கு அடியில் பணத்தை வைத்துவிட்டு வருவான். அந்தப் பணம் எடுக்கப்படாமலேயே குவிந்து சேர்ந்து கொண்டிருப்பதையும் பார்த்தான். ஆனால் தன் கடமையில் இருந்து வழுவிவிடாத செயலைத் தவறாமல் மேற்கொண்டான். அப்போது அப்பாவைத் தன்னுள் இருத்தி நினைத்தும் கொண்டான்.
அம்மாவென்கிற அங்குசம் மனதளவில் இல்லாமல் போனபிறகு அவனுக்குள் தினவெடுக்கத் துவங்கி விட்டது. சந்தையில் தினவிற்கான அத்தனை வாய்ப்புகளும் காய்கறி மூட்டைகளைப் போலவே குவிந்தும் கிடக்கின்றனதானே? அம்மாவால் விளைந்த வெறுப்பு அவனுள் வெம்பின பழத்தின் புழுக்க மணத்தைப் போலப் பெருகி நிறைந்தது. எந்தச் சமாதானத்தினாலும் அதைத் துடைத்தழித்து ஈடுகட்ட முடியவில்லை.
எங்காகிலும் உள்ளுக்குள் திரளும் அவ்வெறுப்பை இறக்கி வைக்க அவனையறியாமல் துடித்தான். எதிரே தட்டுப்படுகிற உயிர்களின் மீது அதை இறக்கி வைக்கத் துவங்கினான். யாரையுமே மனதளவில்கூட அடித்திராத அவன், காரணமே இல்லாமல் சந்தையில் கேட்பாரில்லாமல் திரியும் ஆட்களை மட்டுமல்ல, மாடுகளைக்கூட அடித்துத் துன்புறுத்தத் துவங்கினான். அப்படிச் செய்கையில் உள்ளுக்குள் இருக்கிற வெறியடங்கி மனம் சமாதானம் அடைவதாகவும் தோன்றியது அவனுக்கு. ரத்த ருசி கண்டவுடன் பிறகு அதுவே பழக்கமாகவும் ஆகிவிட்டது.
அம்மா பற்றிக் கொள்ளச் சொன்ன அதைவிடுத்து குடி, சோக்கு, சீட்டு என மற்ற மூன்றைச் சேர்ந்து கொண்டான். இதைப் பற்றியெல்லாம் தயங்கிச் சொன்ன அவனுடைய சித்தப்பாவிடம், “ஆட்டமெல்லாம் கழுத்துக்குக் கத்தி வர்ற வரைக்கும்தான்” என்று அம்மா சொன்னது அவன் காதிற்குமே வந்து சேர்ந்தது.
ஆள் ஓங்குதாங்காக இருந்ததாலும், சண்டைக்குண்டான கைப்பழக்கம் வந்துவிட்டதாலும், சந்தையில் மற்ற வியாபாரிகள் தங்களுக்குள் நடக்கிற சில்லரைச் சண்டைகளுக்காக அவனைப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினர். அவன் சந்தையில் யாரைப் பார்த்தாலும் கையை ஓங்கிக் கொண்டு, நாக்கைத் துருத்துகிறவனாக மட்டுமே அறியப்படத் துவங்கினான். இதன் காரணமாகவே கையில் காசுபணமும் புரளத் துவங்கியது. அது கூட்டாய் வருகையில் கண்ணடியும் சேர்த்துத்தானே வரும்? “ஏசு நாதர் மாதிரி கல்லடிகூட வாங்கிடலாம்ப்பா. ஆனா ஊர் மக்களோட கண்ணடி மட்டும் வாங்கிரக் கூடாது. அது நின்னு கொல்லுற சனியன்” என்றார் மூத்த வெங்காய வியாபாரி ஒருத்தர்.
”இன்னைக்கு மீசை மொளைச்சவன் அதிகாரம் பண்றதை நாம பாத்துக்கிட்டு இருக்கணுமா? நாம என்ன பொண்டுக பயல்களா? நாம செஞ்சோம்ணா சந்தையில தேவையில்லாத பிளவு வந்துடும். வெளியூர் ஆட்களை வச்சு காதும் காதும் வச்ச மாதிரி சீக்கிரமே செஞ்சி விட்டிரலாம்” எனச் சந்தையில் அவனுக்கு எதிரான ஆட்களும் சேரத் துவங்கினர்.
அந்தக் கூடுகை குறித்த செய்தி முருகனின் காதுகளையுமே வந்தடைந்தது. “பார்றா. அவனுக செய்றதுக்கு நாம என்ன ராமசாமி தியேட்டர் சந்தில நின்னு காசுக்காக வாவாவான்னு காலை விரிச்சுக்கிட்டு கூப்பிடறவளா? வரட்டும். ஆட்டை அறுக்கிற மாதிரி கழுத்தை அறுத்து சந்தை வாசல்ல எலுமிச்சம்பழம் கருப்புக் கயிறு கட்டி தொங்க விடறேனா இல்லையான்னு பாரு” என்று மார்தட்டினான். சந்தை அவனுக்குப் பகலில் இருப்பதைப் போல இரவிலுமே பரபரப்பாகவே இருந்தது அப்போதெல்லாம்.
இடையில் நாலைந்து தடவை மட்டுமே வீட்டிற்குப் போய்விட்டு வந்தான். மூத்தவளைப் பார்த்து, கேரளாவில் இருந்து ஒருத்தர் கொண்டுவந்து தந்த தலைக்குத் தேய்க்கிற எண்ணெயைக் கொடுத்த போது, “தேய்க்கிறேண்ணே. ஆனா தம்பி வந்த பெறகு முடியெல்லாம் ஒரு விஷயமான்னு தோண ஆரம்பிச்சிருச்சு. அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்திருச்சுண்ணே” என்றாள் பெரிய மனுஷி மாதிரி. “ஆமா தொம்பி” என எதுவோ சொல்லத் துவங்கிப் பின் வாயை அடக்கிக் கொண்டான். அதெல்லாம் புரியாத மாதிரி மற்ற இருவரும் தூரத்தில் அமர்ந்திருந்தனர்.
அந்தக் கோணப்பயல் மட்டும் குறுகுறுவென முருகனையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் உடனடியாகவே வீட்டில் இருந்து வெளியேறினான். எதிரே அம்மா நடந்து வந்த போது அவனும் நடையைத் தளர்த்தினான். “ஒரு உசுரை வளர்க்குறது அதுக நல்லா வாழ்றதுக்குத்தான்” எனச் சொல்லிவிட்டு அம்மா வீட்டை நோக்கிப் போனாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் எனக் கொஞ்ச நேரம் நின்று பார்த்தான் முருகன்.
வருஷநாடு போய் நல்லதாய் இரண்டரை அடிக்கு ஒரு அருவாளை அடித்துக் கொண்டு வந்து, அதுவே துணையெனப் படுக்கத் துவங்கினான் முருகன். அம்மா சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதேசமயம் முன்வைத்த காலை பின்வைக்க முடியாது என்பதையும் உணர்ந்தான். எந்த நேரமும் அவனைச் சுற்றி ஆட்கள் இருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டான். அப்போது, “ஒருத்தன் கூட்டம் சேர்க்கிறான்னா, தனிச்சு நிக்கிற மனசை விட்டுட்டான்னு அர்த்தம்” என்றார் ஒருத்தர், அவன் காதுபடவே.
அவரை ஓங்கி அறையலாம் எனத் தோன்றிய கணத்தில், கூடவே வேண்டாமென்கிற எண்ணமும் வந்தது முருகனுக்கு. ஆனாலும் ஆட்கள் உடனில்லாமல் இருப்பது நல்லதல்ல என்கிற முடிவிற்கே வந்து சேர்ந்தான். பொதுவாய் இதுமாதிரி ரௌடி வாழ்வில், வீரியத்தைவிட காரியம்தான் பெரிசு என்பதை அனுபவத்தில் கற்றும் கொண்டிருந்தான். உண்மையில் முகத்தில் நைச்சியத்தைத் தேக்கி நடிகன்மார்கள் மாதிரியும் இருக்கத் தெரிந்திருக்க வேண்டும் இந்தத் தொழிலில்.
உள்முகம் வெளுத்துவிடுமோ என்கிற கவலையை உதறி, முகத்தில் அச்சத்தைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி சந்தையில் வளைய வந்தான் முருகன். சந்தையில் கால்வைத்த போது இருந்ததைப் போல, விடக்கூடாது இந்த வாழ்வை என்கிற வைராக்கியத்தைத் தனக்குள் திரட்டிக் கொள்ளப் போராடினான்.
எவ்வளவு கவனமாக அலைந்தாலும், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தபோது, பழக்கமான குடும்பப் பெண்ணொருத்தியைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போகையில் நிதானம் தவறிவிட்டான் முருகன். வெளியூரில் இருந்து வந்த மூவர் கொண்ட குழு அவனைச் சுற்றுப் போட்டது. பளபளக்கிற அரிவாள்களைக் கண்டதும் அந்தப் பெண், “சாமி சாமி என்னை விட்டிருங்க. படுத்தா நாலு காசு கெடைக்கும்ணு வந்த தேவிடியா நானு” என்றாள்.
உயிரென்றதும் சடக்கென அவள் மாறிய விதம்தான் முதலில் அவன் முகத்தில் அறைந்தது. அடுத்ததாய் அவனுக்குள் இருந்த நாய் விழித்துக் கொள்ளவே எழுந்து ஓடத் துவங்கினான். பின்னாலேயே அவர்கள் அவனை விரட்டிக் கொண்டு ஓடினார்கள். சந்தையின் வெளி விளிம்பில் ஓடியவனுக்குள் மேற்கொண்டு எங்கே ஓடுவது? என்கிற கேள்வி எழுந்தது.
மாடு நுகத்தடியைப் போட்டதும் பழக்குவிக்கப்பட்ட தன் தடத்தை நோக்கி நடைபோடுவதைப் போல வீடு இருக்கும் திசை நோக்கி வெறிகொண்டு ஓடத் துவங்கினான். முருகனின் ஓட்டத்திற்கு வந்தவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதலில் ஒருத்தன் தவங்கிப் போய் நின்று கொண்டான். அடுத்ததாக இன்னொருத்தனும். கடைசியாக இருந்தவன் முருகனை விட வீச்சுடையவன் என்பதால் விடாமல் விரட்டிக் கொண்டு ஓடினான்.
அந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் பொருளீட்ட முடியாது என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. வீட்டை நெருங்கின சமயத்தில் கால்தடுமாறி பெருஞ்சப்தமெழுப்பி விழுந்தான் முருகன். நெஞ்சில் காற்று கட்டிக் கொண்டு பேரிளைப்பு வந்தது. மல்லாக்கப் படுத்த அவனை நெருங்கி அரிவாளோடு நின்றான் அவன். வெட்டுவது குறித்துத் திட்டமிடுகிற தருணத்தில் அவனது காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட உருவத்தைக் குனிந்து பார்த்தான்.
முருகனுமே பார்த்தான் அக்காட்சியை. கோணப் பயல் அவனது காலைக் கட்டிக் கொண்டு ஏங்கியேங்கி அழுதான். முகத்தைக் கோணி வாயினோரம் கோழை சுனையைப் போல வழிய, உள்ளத்தை உருக்குகிற மாதிரி அழுதான். அரிவாளோடு நின்றவன் அவனையே கூர்மையாக உற்றுப் பார்த்தான். இடையில் கையெடுத்துக் கும்பிட்டுக் காட்டிக் கோணப் பயல், மீண்டும் அவனது காலைப் பிடித்து அழுதான். கருணை என இத்துணூண்டாவது மனதில் இருக்கிற எந்த மனுஷனையும் கலங்கடித்து விடுகிற காட்சியாக இருந்தது அது.
வெட்ட வந்தவன் என்ன நினைத்தானோ, திரும்பித் தான் வந்த திசையில் ஓடத் துவங்கினான். அமர்ந்த நிலையிலேயே முருகன் சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு எழுந்து நின்றும் வேறு யாராவது இருக்கிறார்களா? என நோட்டமிட்டான். இளைப்படங்கி தனது முழங்காலைக் கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்து கோணப்பயலையே குறுகுறுவெனப் பார்த்தான்.
வழிந்த கோழையைச் சட்டையைக் கொண்டு துடைத்துவிட்டு, கண்களில் மிச்சமிருக்கிற நீர்பொங்க மலர்ந்து சிரித்தான் அவன். சற்றுமுன்னரான பெருந்துயரத்தைச் சட்டென எப்படிக் கடந்தான்? அப்போது தனக்குப் பின்னே அம்மாவின் நிழலாடிய காட்சியும் தெரிந்தது. அம்மா தன்னைக் கவனிக்கிறாள் என்பதை உள்ளூர உணர்ந்த பிறகு சுருக்கென அதைச் சத்தமாகச் சொன்னான் முருகன்.
“ஆனாலும் நல்லா நடிக்கிறடா நீயி”.
முருகனுக்குச் சீனிச்சேவு திங்க வேண்டும் போலவிருந்தது அப்போது.