மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பிய போது முதலாவது ஜீவனாக வாசலில் நின்றுகொண்டிருந்தது சீனுதான். என்னைப் பார்த்ததும் அத்தனை உற்சாகம் அதன் முகத்தில். கழுத்து வரை பாய்ந்து பாய்ந்து உடல் பூராவும் தன் எச்சில் நாவைப் பதித்தது. கையிலிருந்த பையைத் தூக்கிப் போட்டுவிட்டு சீனுவை அள்ளியெடுத்து மார்போடு அணைத்துக்கொண்டேன். அதன் உடல் நடுங்கியது. உயிர் பதறியது. கால்களை அழுத்தி விண்டு விண்டு குதித்தது. ஒருவாறாக அதன் தலையை நிமிர்த்தி கண்களைப் பார்த்தேன். முகத்தில் அப்படியொரு சிரிப்பு. களிப்பு, கொண்டாட்டம்.
நாய்களின் சிரிப்பையெல்லாம் மனித குலத்தின் புன்னகையோடு ஒப்பிடவே முடியாது. அதன் சவுந்தர்யமும், தூய்மையும், வெள்ளைப் பளிங்கின் மீது நேர்த்தியாக விழும் சிவப்பு லேசர் கோடுகளைப் போன்ற வதனப்பிரகாசமும் மனதை உருக்கிவிடக்கூடியவை. சிரிப்பு மட்டுமல்ல, நாய்களுக்கு அழவும் தெரியும். பேசவும் தெரியும். சுதாரிப்புகளைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தவும் தெரியும். தவிர அவற்றின் உணர்வியல் வெளிப்பாடுகள் மிகவும் நுணுக்கமானவை. மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு ஒரு மண்ணும் புரியாது. அதை ஒரு அப்பழுக்கற்ற இதயத்தோடு அணுக வேண்டும். அதை ஒரு ஜீவனாகவும், மனிதருள் ஒரு சகபிறப்பாகவும் கருதவேண்டும். சதா அதைக் கொண்டாட வேண்டும். அதனோடே வாழவேண்டும். இப்படிப் பல.
சீனு அப்போது என்னுடைய தோள் வரை ஏறிவிட்டிருந்தது. வாலைச் சுழற்றி சுழற்றி முகத்தில் அடித்தது. பின்னால் வளைந்து பிடறிக்கும் கழுத்துச் சட்டைக்கும் இடையில் தெரிந்த தோள்பகுதியை நக்கி நக்கி முத்தம் வைத்தது. முன்னால் ஒட்டுமொத்த வீடும் நடந்துகொண்டிருக்கும் ஒரு திவ்ய நாடகத்தின் மெய்க்கருவைப் புரிந்துகொண்டு கண்கள் கலங்க நின்றது. சாதனா அழுதே விட்டாள். இப்பேரண்டத்தில் தன்னைவிடவும் தன் கணவன் மேல் பிரியம் கொண்டிருக்கும் ஒரு ஜீவனைப் பார்க்க அவளுக்குப் பெரும் அங்கலாய்ப்பாய் இருந்தது. அங்கலாய்ப்போ அல்லது சந்தோஷமோ தெரியவில்லை. பார்வையில் கொஞ்சம் பொறாமையும் மீதம் இருந்தது.
முடியாது என அடம்பிடித்த சீனுவை ஒருவாறு இறக்கிவிட்டு, கால்களில் கிடந்த சப்பாத்தைக் கழற்ற ஆரம்பித்தேன். குனிந்ததை வாய்ப்பாய் வைத்துப் பாய்ந்து வாயில் நக்கியது சீனு. நக்கியது என்றுகூட அதைச் சொல்வது அபத்தமாக இருக்கிறது. தன் நாவால் ஸ்பரிசம் செய்தது. அதுவரை என் வலக்காலைப் பிடித்துக்கொண்டு அமைதியாக நின்றுகொண்டிருந்த கோகுலை தூக்கியெடுத்து கட்டிக்கொள்ள சீனு அவகாசம் கொடுக்கவில்லை.
மூன்று மாதங்கள் கடந்து வீடு திரும்பும் ஒருவனுக்கு அவனுடைய நாய் மட்டுமல்ல, ஒரு மனித கூட்டமும் இருக்கிறது என்பதைச் சுதாகரித்துக்கொள்ள பத்து நிமிடங்கள் எடுத்திருக்கிறது எனக்கு. அதுவும் கோகுல். தினமும் தென் சூடானிலிருந்து வீட்டுக்கு எடுக்கும் வீடியோ கோலில் அதிகமாகப் பேசுபவன் அவன்தான். அடுத்த முனையில் இருக்கும் எனக்கு அவன் பேசுவதில் பாதிதான் புரியும். மீதிப் பாதியில் அரைப்பங்கை சாதனா மொழிபெயர்க்க வேண்டும். எஞ்சிய பாதியில் அவன் என்ன பேசினான் என்று அவனைத் தவிர இந்த லோகத்தில் யாருக்கும் தெரிந்திருக்காது. இப்படிக் கடந்துபோய் கடைசியில் அழைப்பைத் துண்டிக்கும் போதுதான் பெரும் யுத்தம் வெடிக்கும்.
“வேண்டாம் வேண்டாம்” என்று அடம் பிடிப்பான் கோகுல். நான் இருக்கும் ஊரிலோ நேரம் அதிகாலையை எட்டிக்கொண்டிருக்கும். தவிர இரவில் குறைந்தது நான்கு மணி நேரமாவது நான் தூங்க வேண்டும். இல்லையென்றால் மறுநாள் வயிற்றின் மூலையில் தூங்கிக்கொண்டிருக்கிற அல்சர் தலையைத் தூக்கி பேயாட்டம் போட ஆரம்பித்துவிடும். இதையெல்லாம் கோகுலுக்குப் புரியவைக்க முடியாது. புரியவைக்க வேண்டும் என்கின்ற தேவையும் இல்லை. இதெல்லாம் அவனைக் கடந்த ஒரு உலகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலங்கள். கடைசியில் ஒருவாறு குழைந்து, ‘நாளை பேசுகிறேன் செல்லம்’ என்றால் ஓவென வெடித்து அழ ஆரம்பித்துவிடுவான். பின்னர் நிலைமையைச் சமாளிக்க இன்னுமொரு அரை மணிநேரம் போராட வேண்டியிருக்கும்.
அன்று அலுவலகத்தில் கடுமையான வேலை. ஒரு நிமிடம்கூட கவனத்தைக் கலைக்க முடியவில்லை. முதல் நாள் தென் தென் சூடானின் தென்மேற்கில் இருக்கும் ஒரு கிராமத்தில் திடீரென மூண்ட ஒரு யுத்தத்தில் ஒட்டுமொத்த கிராமமுமே இடம்பெயர்ந்து போனது. எறியப்பட்ட குண்டுகள் வீடு, வளவுகள் என்று எதையும் பார்க்கவில்லை. ஏன் மனிதர்களைக்கூடப் பார்க்கவில்லை. பார்த்தால் அதை எப்படிப் யுத்தமென்று அழைக்க முடியும். அந்த ஒரே நாள் சண்டையில் சுமார் முப்பது பேர்வரை மாண்டு போனார்கள். அதில் பத்து சிறுவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒரு சிறுவனின் கழுத்தில் விழுந்த ஷெல் அவன் தலையை துண்டாய் அறுத்துப் போட்டிருந்தது. அந்தக் காட்சியையும், எங்கள் அலுவலகத்தில் அது ஏற்படுத்திய பெருஞ் சலனத்தையும் என்னால் இன்றுவரை மறக்க முடியாது. விபரிக்கவும் முடியாது. இப்பொழுதெல்லாம் சிறுவர்களுடைய சாவைத் தாங்கிக்கொள்ளும் என்னுடைய மென்டல் ரெசிஸ்ரன்ட் அல்லது சகிப்புத்தன்மை அறவே கெட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறேன்.
எங்களுடைய நிறுவனம் தென் சூடானில் மனிதாபிமானமாகப் பணியாற்றும் ஒரு முக்கிய ஸ்தாபனம். அதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொது சனங்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு நிலைமை அங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அழிவுகளை எப்படியெல்லாம் உருவாக்க முடியுமோ அப்படியெல்லாம் உருவாக்கும் திறமை படைத்தவர்கள் அவர்கள். ஒவ்வொரு நாளும் போர், ஒவ்வொரு நாளும் சாவு, ஒவ்வொரு நாளும் இடப்பெயர்வுகள். மனம் தாளாமல் சுருண்டு விழுந்தாலும், என்மட்டில் உடலும், மூளையும், ஜீவகாருண்யமும் ஸ்தூலமாகவே ஒத்துழைத்தது.
அன்றைய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி எங்களால் உதவ முடியும் என்கின்ற பாரிய திட்டமிடலில் கழிந்தது அன்றைய நாள். காலை ஆகாரத்திற்குப் பின்னர், எட்டு மணிக்கு அறைக்கு வந்து சேரும் வரை ஒரேயொரு ரோமனி கிறீம்ஸ் பிஸ்கட்டைத் தவிர வேறு எதையும் எடுத்துக்கொள்ளவில்லை.
அறைக்கு வந்து, குளித்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தேன். முதல்நாள் வைத்த கோழிக்குழம்பும், அரபிக் ரொட்டியும் குளிரூட்டிக்குள் இருந்தது என் நல்லூழ் என்றே நினைத்துக்கொண்டேன். அவற்றை வெளியில் எடுத்து, வெம்மையாக்கிக்குள் வைத்துச் சூடாக்கி, தட்டில் நிரப்பி வைத்துக்கொண்டு முன்னறைக்குள் வந்தபோதுதான் சாதனாவின் அழைப்பு வந்தது.
“கோகுல் பேசணுமாம். ஒரு மணித்தியாலமா சண்டபோட்டுக்கொண்டு இருக்கிறான். இந்தாங்க”
“குடு… ஹலோ…”
“ஹலோ அப்பா…”
உடம்பில் முழு நாளும் சேர்த்து வைத்திருந்த அத்தனை களைப்பும், சலிப்பும், ஆற்றாமையின் பெரும் வதையும் ஒரே நொடியில் காணாமல் போனது. அகத்தின் படபடப்பு நூர்ந்து சரிந்தது. தொலைபேசியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கோகுலின் குரலை ஊன்றிக் கேட்டேன். மீண்டும் அந்த மதுரக்குரல் காதுகளுக்குள் பாய்ந்தது.
“அப்பா… டேய் அப்பா…”
வயது வந்தவர்களின் பெரும் துயரத்தைப் போக்குவதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்ட ஒரு பாஷைதான் மழலை மொழி என்று தோன்றுகிறது. அதன் அழகியல் சுத்தம், போதாமைகளிலிருந்து மானிட சமூகத்தை மீட்டெடுக்கும் பெரும் கருவியாக இருக்கிறது. கோகுலுடனான உரையாடலைத் தொடர்ந்தேன். நான் மேலே சொன்னது போல, உங்கள் குழந்தைகள் மட்டில் நீங்கள் அடைந்திருக்கும் அனுபவங்களைப் போல, அவனை மட்டும் பேச விட்டு நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பாவம், பிள்ளை இவ்வளவு நீளமான கதையை எப்படி இவ்வளவு நேரமும் தாங்கி வைத்துக்கொண்டிருந்தான் என்று தெரியவில்லை.
புரியாத வார்த்தைகள். இலக்கணம் முறிந்து தொங்கும் நீண்ட வசனங்கள். முற்றுப்புள்ளியை கால்புள்ளியாக மாற்றிக்கொண்டிருக்கும் மொழியின் வேகம். அவன் சொன்ன கதையின் பாதிதான் எனக்குப் புரிந்தது. அவனுடைய பேச்சின் ஒவ்வொரு இரு வினாடி நிறுத்தத்திலும் வந்து விழும் சீனு என்கின்ற சொல்லை மட்டும் சரியாகப் பிடித்துக்கொண்டேன். சீனு என்பதை அவனுக்குச் சரியாக உச்சரிக்கத்தெரியும். அப்பா, அம்மா, டேய், மண்ணாங்கட்டி போன்ற அதி உன்னத தமிழ் வார்த்தைகளுக்கு அடுத்த படியாக அவன் அழுத்தமாக உச்சரிக்கும் ஒரே வார்த்தை சீனுதான்.
கோகுல் தன்னுடைய நீண்ட கதையைச் சொல்லி முடித்துவிட்டு மூச்சு வாங்கினான். புரியாவிட்டாலும் எவ்வளவு பெரிய கதை! ப்ராவோ என்றேன். ஒரு சிலம்பனும் இல்லை.
சிறுவர்கள் இப்படித்தான். அவர்களிடம் சொல்வதற்கு ஏகப்பட்ட கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதைச் சொல்வதற்கும், அமைதியாக அதைக் கேட்பதற்கும் தோதான மனிதர்களைத்தான் அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது. ஆனால் தங்கள் கதை முடிந்ததும், அல்லது சொல்வதற்கு மேலும் எதுவும் இல்லை என்று தெரிந்ததும், அதற்கு உடனடியாக முடிவு கட்டிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடுவார்கள்.
தொலைபேசியைத் தாயிடம் கொடுத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டான் என்று தெரிந்தபோதுதான் என்னுடைய முதல் குவளம் சோற்றை எடுத்து வாய்க்குள் திணித்தேன்.
“என்ன கதை? சீனுவாம்… என்ன சம்பவம்?”
சாதனா சம்பவத்தை விபரித்தாள்.
சாதனாவுக்கு நயோமி என்றொரு நண்பி உண்டு. இருவரும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். நீண்ட நாள் நட்பு. நயோமி அன்று சாதனாவைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்திருக்கிறாள். உள்ளே வந்த நயோமி சாதனாவின் கையில் இருந்த கோகுலைப் அள்ளியெடுத்துத் தூக்கியபோதுதான் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. எங்கோ கிடந்து அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த சீனு திடீரெனப் பாய்ந்து அந்நண்பியின் காலைக் கவ்வியிருக்கிறது. நல்ல கடியாம்!
நான் “கோகுல கீழ போட்டுடலயே?” என்றேன் ஆவேசமாக. நாய் பாயும் போது கையில் என்ன இருக்கிறது என்றா மனிதர்கள் கவலைப்படுவார்கள் என்கின்ற ஒரு முன்தீர்மானத்தின் தூண்டலால் வந்த கேள்வி அது. அரை நிமிட அமைதியை விழுங்கிவிட்டு, “இல்ல… பாவம் அவள், நல்ல கடி” என்றாள் சாதனா. குரலில் பெரும் துயரம் அப்பியிருந்தது. நான் அப்போதுதான் நயோமியின் நிலையை சுதாகரித்துக்கொண்டேன். கோகுலுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று தெரிந்தப் பிறகுதான் நயோமியின் ஆபத்து மூளையில் உறைத்தது.
நண்பி நன்றாகப் பயந்து போனாளாம். இதுவரை தன்னை எந்தவொரு நாயும் தீண்டியதில்லை என்றாளாம் (அவள் நாய் என்று குறிப்பிட்டது நாயை மட்டும்தானா அல்லது மனிதர்களையும் சேர்த்தா என்று தெரியவில்லை!). கண்கள் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டாள் என்று சாதனா சொன்னபோது எனக்கும் பாரமாகத்தான் இருந்தது. அதன் பின்னர் நடந்ததெல்லாம் அதிகம் சுவாரஷ்யமற்ற விடயங்கள். வைத்தியசாலை, காயத்துக்குக் கட்டு, தடுப்பூசி, வீடு.
நயோமியின் கதையின் முடிவில் கோகுல் பற்றி சாதனா சொன்னதுதான் என்னை அதிகம் பாதித்தது. பாதித்தது என்பதைவிட பயமுறுத்தியது என்று சொல்வது தகும். சம்பவம் நடந்து சுமார் இரண்டு மணிநேரம் வரை கோகுல் எதுவுமே பேசவில்லை என்றபோது உள்ளுக்குள் படக் என்றது. என்ன நடந்தது என்கிற பிரக்ஞையற்றுக் கிடந்த முகத்தில் பெரும் பீதி அப்பியிருந்தது என்றாள். சாதனா கதை கேட்டு அலட்டிய போதும் அவனால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. “பிள்ளை நல்லாப் பயந்து போனான்” என்றாள் சாதனா. பயப்படாமல்?
கோகுலின் அந்த நீண்ட மௌனம் குலைந்தபோது அவன் உச்சரித்த முதல் வார்த்தை “அப்பா”. ஏனென்று சாதனாவுக்குப் புரியவில்லை. எனக்குப் புரிவது போல் இருந்தது. குழந்தைகளுக்கு தாய் எவ்வளவு பெரிய முக்கியம் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியமானது அவர்களுடைய பசியன்றி வேறொன்றுமில்லை. ஆனால் ஆபத்து, பயம் என்று வருகிறபோது தாயின் வளையத்துக்குள் இருந்தாலும் “இது அப்பாவின் டிப்பார்ட்மென்ட்” என்கின்ற எண்ணத்தை அவர்கள் வளரும் சூழலும், காலமும் அவர்களுக்கு உணர்த்திவிடுகிறது. அதன் பொருட்டு அவர்கள் தங்கள் அப்பாக்களை ஒரு கேடயமாகவும், பதுங்கு குழியாகவும் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆபத்து நெருங்கும் போது அவர்களை அறியாமலேயே அப்பாவின் புஜங்கள் ஞாபகமாய் வந்துவிடுகின்றன. இதை யாரும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை. இயற்கையிடமிருந்து அவர்களே இதைக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.
விடுமுறைக்கு வந்திருக்கும் தன் தகப்பனை கோகுல் விடுவதாயில்லை. கதிரையில் இருந்த என்னை மொய்த்து மொய்த்துக் கதைத்தான். பாய்ந்து குதித்தான். உடம்பில் ஏறி முறித்தான். முத்தம் தந்தான். தலைமுடியை இழுத்து கெக்கபெக்கே எனச் சிரித்தான். என்னவொரு கொண்டாட்டம் அவனுக்கு.
குழந்தைகளை விட்டுவிட்டு தூரத்தில் இருக்கும் அப்பாக்களின் மனம் பலவீனமானது. அவர்களுடைய பலவீனமாக குழந்தைகளே இருக்கிறார்கள்.
கலங்கிய என் கண்களை அவன் துடைத்துவிடாமல் பார்த்துக்கொண்டேன். மோட்டுவளையைப் பார்த்து கண்ணீரைத் தேக்கிக் கொண்டேன். கால்களுக்குள் சுருண்டு, தன் தலையை மட்டும் என் வலக்காலின் மேல் பாதத்தில் வைத்துக்கொண்டு படுத்துக்கிடந்தது சீனு.
காலையில் குளிக்கலாம் என்று குளியலறைக்குள் போனபோதுதான் பிரச்சினையைக் கவனித்தேன். முழுச் சுற்றுச் சுற்றிக் கழற்றினாலும் குழாயில் நீர் சொட்டுச் சொட்டாகத்தான் வடிந்தது. எனக்கு வீட்டு வேலைகளில் அனுபவம் இல்லை என்று அடிக்கடி சாதனா குற்றம் சாட்டுவாள். இதைக்கூட நான் கொஞ்சம் கௌரவமாகத்தான் சொல்லுகிறேன். அவளுடைய வசை அச்சொட்டாக இப்படித்தான் இருக்கும். “உங்களுக்கு உங்க வேலைய விட்டா ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது!”. கூடவே அம்மாவையும் இழுத்து தெருவில் விட்டு இரண்டு வசைகளைச் சேர்த்துக்கொள்ளாவிட்டால் அவளுக்கு ஆகாரம் செரிக்காது. ‘வளர்ப்புச் சரியில்லையாம், தன்னுடைய கழுத்தில் கட்டிவிட்டார்களாம்’ என்பதுதான் சாரம். அதைக் கேட்பதற்கு பெரும் அபத்தமாகவும் பரிசுகேடாகவும் இருக்கும். ஆனாலும் அதற்கு பரிகாரம் செய்யும்படி என்னால் அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு நேர்த்தியாகச் செய்யத் தெரியவில்லை.
குழாயின் மேல் உள்ள திருகாணியைக் கழற்றி உள்ளுக்குள் இருக்கும் இருண்ட வெளியைத் துழாவித் துழாவிப் பார்த்தேன். தண்ணீரின் சிலம்பனே இல்லை. இல்லை, ஒரு பக்கம் சிறியதொரு நீர்க்கசிவு மட்டும் இருந்தது. பிரச்சினை குழாயில் இல்லை என்று தெரிந்ததும் அதை மீண்டும் இறுக்கிப் பூட்டினேன். சாதனாவிடம் வந்து என் கண்டுபிடிப்பைப் பிரஸ்தாபித்தேன். தக்காளியை நறுக்கியபடி “அது எனக்கு எப்பவோ தெரியும்!” என்றாள்.
உண்மைதான், மனைவிக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
நான்கு மணிக்குத்தான் அதைச் சரிக்கட்டும் நிறுவனம் ஒரு பணியாளரை அனுப்பியிருந்தது. ஆள் படு ஜோராக வந்து வாசலில் சிரித்துக்கொண்டு நின்றார். வழமையாக குழாய்–தண்ணீர் பார்க்க வரும் மனிதரல்ல அவர். ஆள் கருத்து, புஜங்கள் புடைக்க ஆஜானபாகுவாகத் தெரிந்தார். ஒட்டுமொத்த குழாய் வலையமைப்பையும் ஒரே மணி நேரத்தில் பிடுங்கி எடுத்துவிடும் தைரியம் அவர் முகத்தில் தெரிந்தது. உள்ளே அழைத்துப்போய் பிரச்சினையை விளக்கினேன். இதில் இத்தனை நேரம் விளக்கம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது என்பது போல் பார்த்தாள் சமையலறைக்குள் நின்றுகொண்டிருந்த சாதனா. சரிதான், குழாயில் தண்ணீர் வரவில்லை, அவ்வளவுதானே விஷயம். எதற்காக இந்த இழுவை இழுக்க வேண்டும்? என்னுடைய வெட்டி அனுமானங்களும், முன்தீர்மானங்களும் ஒரு அனுபவமிக்க பிளம்பருக்குத் தேவையா என்ன? மனைவிக்கே அது பயன்படுவதில்லை. மேலதிகமாக ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்காமல், வந்த பணியாளரைத் தன் வேலையைப் பார்க்க அனுமதித்தேன்.
வெறும் இருபது நிமிட வேலை. எங்கோ ஒரு அடைப்பு இருந்ததாம். தன் கண்டுபிடிப்பைச் சர்வசாதாரணமாகச் சொன்னார். கேட்டுக்கொண்டிருந்த சாதனாவின் முகத்தில் வெளிச்சம் விழுந்தது. ‘அதுதான் கண்டுபிடிப்பு!’ என்கிற நையாண்டிச் சிரிப்பு வேறு. மேன்மை பொருந்திய குடும்பத் தலைவனாகக் தண்ணீர்க் குழாயைத் திறந்து பரிசோதித்துப் பார்த்தேன். ஜலம் சர் எனக் கொட்டியது. பிரச்சினையும் தீர்ந்தது.
பணியாளர் வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு மாடியிலிருந்து கீழே வந்தார்.
நடு ஹோலில் அவனுடைய அத்தனை பரிபாரங்களையும் பரத்திப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தான் கோகுல். வந்தவர் பேசாமல் கோகுலைப் பார்த்து சிரித்துவிட்டு – அதிகபட்சம் ஒரு ஹாயாவது சொல்லிவிட்டு – போயிருக்கலாம். அவர் விதி வலியதாக இருந்தது. அருகில் போய் திடீரென கோகுலின் கன்னங்களைப் பிடித்துக் கிள்ளினார். கோகுல் வீரென்று அழுதான். பிறகென்ன, பின்னாலிருந்து ஒரே பாய்ச்சல்.
மனுசனின் பின்னங்கால் சதையில் மூன்று இடங்களில் கடி. சீனுவின் மூன்று பற்களின் அடையாளங்கள் தெரிந்தன. ஒரே செக்கனில் அவ்வடையாளங்களை மூடி இரத்தம் பாயத் தொடங்கியது. சாதனா சீனுவைப் பிடித்துக் கட்டினாள். நான் பதறிப்போய் மனிதரைப் பிடித்து அருகிலிருந்த கதிரையில் அமர்த்தினேன்.
நல்ல கடி. அந்த மனிதரை என்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த களுபோவிலை வைத்தியசாலைக்குப் போனேன். பாவம், போகும் வழியில் மனுசன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது. எனக்குள் எழுந்து முகடு கட்டிவிட்ட பெரும் குற்றவுணர்வை அவர் துடைத்துப் போக்க முயன்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். “என்ன சேர் செய்றது… நாய் அதுவரை சும்மாதானே கிடந்தது. யாரு கண்டா இப்பிடி கவ்வும் எண்டு…”. யதார்த்தத்தைப் பேசினாலும் ஒரு எஜமானாக எனக்கு அதைப் செரித்துக்கொள்ளும் தைரியம் இல்லை. அதற்கான முழுப் பொறுப்பையும் நான்தானே எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடைய உயிருக்கு ஆபத்து என்றால்கூட என்னால் அதிலிருந்து ஓடித்தப்ப முடியாது. சீனுவை விட்டுவிடுவார்கள். அது நாய். நாய்களைச் சட்டம் தண்டிப்பதில்லை. என்னைத்தான் பிடித்து கூண்டுக்குள் போட்டு உருட்டியெடுப்பார்கள்.
வைத்தியர் காயத்தைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து என்னை எறும்பூதுபோல் பார்த்தார். நான் தலையைக் குனிந்துகொண்டு நின்றேன். “எங்கள் நாய் கடி நாயில்லை டொக்டர்… இதுவர யாரையும் இப்பிடிக் கடிச்சதில்லை… என்ன நடந்தது எண்டே தெரியல…” என்று வெளிவராத படத்துக்கு விமர்சனம் எழுதிக்கொண்டு நின்றேன். வைத்தியர் திடீரெனச் சிரித்தார். அர்த்தம் விளங்காத சிரிப்பு. பின்னர் சிரிப்பை நிறுத்திவிட்டு “நாய் எப்போதும் நாய்தான்!” என்று யாருக்கும் தெரியாத ஒரு மிகப்பெரிய தத்துவத்தைச் சொன்னார். தலையை ஆட்டினேன்.
வைத்தியர் மேசையிலிருந்த சீனுவின் பிரத்தியேக தடுப்பூசிப் புத்தகத்தைக் கையில் எடுத்தார். ஒவ்வொன்றாகப் பார்த்தார். ஊன்றி ஊன்றி வாசித்தார். எதையோ முதலே தீர்மானித்துவிட்டுத் தேடுவதைப் போல் இருந்தது. அதில் ஒரு தடுப்பூசி தவறவிடப்பட்டிருந்தாலும் என்னுடைய சோலியை அவர் முடித்துவிடுவார் என்று தோன்றியது.
சாதனா தினமும் வணங்கும் சிவபெருமானின் கடாட்சம் கிட்டியது. தடுப்பூசிகளில் எந்தச் சிக்கலும் இல்லை.
வீட்டுக்கு வந்தபோது சீனு தனக்கு வழக்கமான கதிரையில் தூங்கிக்கொண்டிருந்தது. எப்படியென்று தெரியவில்லை. நடந்து முடிந்த சம்பவம் சீனு மீது எனக்கு ஒரு துளி கோவத்தைக்கூட உண்டுபண்ணவில்லை. நம் வீட்டில் இருக்கும் ஒருவர் ஒரு தவறை இழைத்துவிட்டால் என்ன செய்வோம்? வெளுத்துக் கட்டவா முடியும்? தவிர, சம்பவத்தைக் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால் ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகப் புரியும்.
சீனு இதுவரை இரண்டு பேரைத்தான் கடித்திருக்கிறது. அவ்விரண்டு பேரும் அதற்கு அறிமுகமில்லாத மூன்றாம் ஆட்கள். அதுகூடப் பெரிய விடயமில்லை. சீனுவுக்கு யாரென்றே தெரியாத அந்த இரண்டு பேரும் கோகுலைத் தூக்குவதற்கு அல்லது நெருங்குவதற்கு முயன்றவர்கள். அது கோகுலை நோக்கி வந்த ஆபத்துகள் என்றுதான் கருதியிருக்கிறது சீனு. அதன் முகத்தை மீண்டும் ஒருதடவை பார்த்தேன். தன் கோகுல் குட்டியைப் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டேன் என்கிற திருப்தி அதன் கண்களில் ஜொலித்துக்கொண்டிருந்தது.
அதன் மீது தவறில்லை. அப்படியெனின் யாருடைய தவறு அது? அந்த இரண்டு பேரின் தவறா? இல்லை, முழுத் தவறும் என்னையும் சாதனாவையும்தான் சேரவேண்டும். எஜமானர்கள்தான் தங்கள் செல்லப் பிராணிகளின் அழிச்சாட்டியங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
சாதனாவை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். அத்துர்சம்பவம் ஏற்படுத்தியிருந்த மன இறுக்கத்தை மொட்டை மாடியும், சாதனாவும் போக்குவார்கள் என்று தோன்றியது. வெளியில் மாலை கருகிக்கொண்டிருந்தது. மேற்கில் சூரியன் அடைந்துகொண்டிருந்தான். எங்கள் மொட்டைமாடியில் நின்றுகொண்டு தலையை ஒரு சுழற்றுச் சுழற்றினால் களுபோவிலையின் அத்தனை வசீகரமும் கண்களில் படும்.
நடுவில் இருந்த ஊஞ்சல் இருக்கையில் இருவரும் அமர்ந்தோம். தன்னோடே இரண்டு தேனீர் குவளைகளையும் கொண்டு வந்திருந்தாள் சாதனா. இளஞ் சூட்டு தேனீரின் முதல் மிடறு உள்ளே இறங்கியபோது இதம் குளிர்ந்தது, சாதனா ஆரம்பித்தாள்.
“சீனுவ என்ன பண்ணுறது?”
“என்ன பண்ணுறதெண்டா…”
“அப்ப இத இப்பிடியே விட்டுடுறதா? இன்னும் எத்தின பேர்ல வாய் வைக்குமோ தெரியா…”
“அதுட தப்பில்லையே அது?”
“அப்ப? யார்ட தப்பு? லூசா உங்களுக்கு?”
“இல்ல, நகுலன்ட ‘ஒரு றாத்தல் இறைச்சி’ கதை படிச்சிருக்கியா?”
“என்ன உளர்றிங்க?”
“அட ஆமா… ஏன் உளர்றேன்… நகுலன் என்றொரு எழுத்தாளர். நன்றாகக் கதையெழுதும் ஆசாமி. அந்தக் கதையில இப்பிடித்தான் அவர் நாய்க்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இறைச்சி வாங்கி வைப்பார். இது தவறாம நடக்கிற ஒரு சம்பவம். பழக்கப்பட்டதால, வெள்ளி எண்டாலே அந்த நாய்க்கு இறைச்சித் துண்டு ஞாபகம் வந்திடும். இப்படி இருக்கேக்க, ஒரு வெள்ளிக்கிழம அவரால இறைச்சி வாங்கேலாமப் போயிற்று. என்ன பண்ணுவார் மனுசன். அடுத்த கிழமை சேர்த்து வைத்துவிடலாம் என்று முடிவெடுத்தார். வழமையா வெள்ளி அண்டைக்கு நாய்க்கு இறைச்சி வைக்கிற நேரம் 12 மணி. அண்டைக்கும் 12 மணிவர அது தன்ட இறைச்சிக்காகக் காத்துக்கொண்டு இருந்திச்சு. இறைச்சி வரல. அவர்ட கால வந்து நக்கிச்சு. அப்பவும் அவரால அந்த இறைச்சித் துண்ட வாங்கி நாய்க்கு வைக்க முடியல. 12 மணியும் கடந்து போயிட்டு… நாய் பொறும மீறிட்டு. கடைசில, ஹெஸ், அந்த நாய் என்ன பண்ணிச்சு?”
“என்ன பண்ணிச்சு?”
“நகுலன்ட கால்ல பாஞ்சு, கட்டிச் சத இருந்த இடத்தில ஒரு கவ்வு!”
“இப்ப என்ன சொல்ல வாறீங்க? இலக்கியம் கதைக்கிற நேரமா இது… உங்களோட பெருத்த உவத்திரவமாப் போச்சு. இப்ப நம்ம சீனுக்கு என்ன செய்யிறதெண்டு சொல்லுங்க?”
“அதான் சொல்றன். சீனுவக் குத்தம் சொல்ல ஏலாது. தன்ட குற்றமில்லாத ஒண்டுக்கு அதத் தண்டிக்கவும் ஏலாது. அது வேற, தான் நல்ல காரியம் பண்ணிக்கிட்டு இருக்கோம் எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கு. நமக்கு விசுவாசமா இருக்கிறதாவும், கோகுல் மேல தனக்கு இருக்கிற அக்கறைய அது நிரூபிச்சிட்டதாகவும் நினைச்சுக்கொண்டு இருக்கு. சோ, அத தண்டிக்க முடியாது இல்லையா?”
“சரி, அதுக்காக இத இப்பிடியே விட்டுட்டா சரியா…?”
“இல்ல… நாமதான் கவனமா இருக்கணும்”
“என்ன கவனம்… ரெண்டு பேரில வாய வச்சுட்டுது. அவங்களுக்கு எதுவும் ஏடாகூடமா நடந்துச்செண்டா என்ன பண்றது?”
“சட்டம் நம்ம மேலதான் பாயும்… சரி என்ன பண்ணலாம் எண்டுறாய்?”
“கொண்டுபோய் கொஞ்ச நாளைக்கு பெட்ஸ் ஹொஸ்டல்ல விடுவோம். அவங்க டோக் பிகேவியர் ட்ரெயினிங் வேற குடுப்பாங்களாம். எல்லாம் படிச்சு திருந்தினப்புறகு வீட்டுக்குக் கொண்டுவரலாம்”
எனக்கு அதில் உடன்பாடு இருப்பதாகத் தோன்றவில்லை. அதுவும் மிக முக்கியமாக அந்தப் பிரிவு. அதை அவ்வளவு இலகுவாக எங்களால் கடந்துபோய்விட முடியாது. கோகுலைக் கொண்டுபோய் ஹோஸ்டலில் விடச்சொன்னாலும் இதே மனநிலைதான் எனக்கு இருக்கும். இரண்டு பேரும் வேறுவேறல்ல எனக்கு. ஒன்றுக்கு இரண்டு கால்கள், மற்றையதுக்கு நான்கு கால்கள். ஒன்றுக்கு தமிழில் பேசத் தெரியும், மற்றையதுக்கு அதன் மொழியில்தான் பேசத்தெரியும். தவிர அதன் மொழியை நாம் கற்றுக்கொள்வதுதான் இலகு, முறை, அறம். அதற்கு நம் மொழியைத் திணிப்பது அயோக்கியத்தனமானது.
“என்ன சத்தத்தக் காணல…”
சாதனா இதை விடப்போவதில்லை. வழமைபோலவே தன் முடிவை தீர்மானித்துவிட்டுக் கலந்துரையாடலுக்கு வந்திருக்கிறாள். வெறும் அரசியல்தான் இது. இங்கு நான் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. என் அறிவும், பேச்சும், வாக்கும் இங்கு சப்பரம் ஏறப்போவதில்லை. தவிர, நான் இந்த வீட்டில் பெரும்பாலும் விருந்தாளியாகவே இருக்கிறேன். வெளிநாட்டிலிருந்து அவ்வப்போது விடுமுறைக்கு வந்துவிட்டுப் போகும் ஒரு ‘கௌரவ’ வேடம் தரித்த புருஷன். இன்னும் இரண்டு வாரங்களில் வேறு மீண்டும் தென் சூடானுக்குக் கிளம்பிவிடுவேன்.
இது சாதனாவின் இராட்சியம். அவள் நடாத்தும் நிர்வாகம். இங்கு நடக்கப்போகும் அத்தனை பிரச்சினைகளையும் சாதனாதான் ஒத்தை மனுசியாக நின்று எதிர்கொள்ள வேண்டும். ஆதலால், அவளுடைய முன்மொழிவை ஏற்றுக்கொள்வதுதான் சரியென்று தோன்றியது. எப்படியோ ஒரு நாய் மீது இருக்கும் ஜீவகாருண்யத்தைவிட மனைவி மீது வைக்கும் நம்பிக்கைதான் ஒரு புருஷனுடைய எதிர்காலத்துக்கு அவசியமானது.
“சரி அப்பிடியே செய்வம்… எத்தின நாளைக்குச் சீனுவ அங்க விடுறது?”
“நான் செக் பண்ணினன். குறைந்தது 3 மாசமாம். போய் இருக்கட்டும். அப்பதான் திருந்துவான்…”
“சரி டீல். அனுப்பிடலாம்”
திட்டத்தைத் தீட்டிக்கொண்டு படிகளில் இறங்கி கீழ் வீட்டுக்கு வந்தோம். முன் ஹோலுக்குள் இருள் குவிந்து கிடந்தது. படுக்கை அறைக்குள் மட்டும் ஒரேயொரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கோகுல் அந்த அறைக்குள்தான் தூங்கிக்கொண்டிருந்தான். சாதனா சமையலறைக்குள் போக, நான் வலப்பக்கம் இருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தேன்.
கட்டிலில் கோகுல் தூங்கிக்கொண்டிருந்தான். கையில் அவனுக்குப் பிரியமான பூனைக்குட்டிப் பொம்மை இருந்தது. கால்மாட்டில் அவனுடைய வலக்காலை நக்கியபடி சீனு அமர்ந்திருந்தது.
-அமல்ராஜ் பிரான்சிஸ்
அற்புதமான கதை. உணர்வே களைத் தூண்டி விடும் பக்குவமான எழுத்து. இலங்கைத் தமிழ் அழகு கொஞ்சுகிறது. நன்றி !