கால் கடுத்து நின்றிருக்கும்
இரும்புக்குக்
குளிர் நடுக்குகிறது.
அடி தெரியாமல்
தழைய தழைய
கால் போர்த்திவிடுகிறது
காடு.
“காடு தன்னை காட்டிக்காம விடாது கேட்டுகிட்டியா” என்றான் லூர்துசாமி அவனுடன் வந்த செயபாலிடம்.
அவர்கள் கண் முன்னே தன் ஆறு கைகளையும் பரத்தி வைத்துக் கொண்டு நின்றிருந்தது அந்த மின்சாரக் கோபுரம். கிட்டத்தட்ட நூற்றிருபது அடி உயரம் இருக்கும். மண்ணிலிருந்து கிளம்பி வந்து, குவளை வடிவில் ஊதா நிறத்தில் பூவிடும் படர்கொடிகள் அந்த மின் கோபுரத்தின் கீழ்ப்பகுதியை தழையத் தழைய மூடியபடி இன்னும் இன்னும் என ஏறிச் சென்று, அந்த கோபுரத்தின் பாதி உயரத்தைத் தொட்டுவிட்டன. போர்த்தியிருந்த அப்படர்கொடிகளின் அடை, ஒருகணம் காற்றில் மொத்தமாக அசைந்ததில் அந்த இரும்புக்குத் துடிப்பு வந்து அடங்கியது போல இருந்தது.
“இது நம்ம இலாகாக்குள்ள இருக்கற பதினொன்னாவது டவர்” தொடர்ந்தான் லூர்து.
லூர்துசாமி அந்தப் பகுதியின் லைன் மேன். அந்தப் பகுதியில் இருக்கும் ஒரே ஒரு லைன் மேன் என்றும் சொல்லலாம். மேலதிகாரிகளிடம் முறையிட்டுக் கடந்த மூன்று வருடங்களாகக் கெஞ்சிக் கூத்தாடி இப்போது தான் அவனுக்கு ஒரு உதவியாளன் அகப்பட்டிருக்கிறான். அவன் தான் செயபால். அந்தக் காட்டுப் பகுதியை லூர்தால் ஒற்றை ஆளாகச் சமாளிக்க முடியவில்லை. இரண்டு பேருமே கூட போதாது தான். குறைந்த பட்சம் இரண்டு பேராவது அமைந்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.
இந்தக் காப்புக் காடுகள் ‘சரக்கல்’ காப்புக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. மொத்தம் இருநூற்று நாற்பது சதுர கிலோமீட்டர்களுக்குப் பரந்து விரிந்து கிடக்கின்றன. காடென்றால் மலைக்காடு தான். மேலிருந்து பார்த்தால் கீழடுக்கு மலைமுகடுகள் ஏற்றமும் இறக்கமுமாகத் தென்பட்டு சமவெளி நோக்கிச் சரியும். அங்கே மழையோ பனியோ இல்லை அது போன்ற ஏதோ ஒரு மேகச் சலனம் எப்போதுமே இருந்துகொண்டிருந்து காட்டின் காற்றை உலரவிடுவதில்லை. காப்புக் காட்டின் ஒருபக்கம் சமவெளியில் கீழ்ப்பரிகம் என்கிற இடைநிலை ஊராட்சி. மறுபக்கம் சரக்கல் என்கிற மலை மேல் அமைந்த ஊர். சரக்கலில் இருந்து கீழ்ப்பரிகம் வரச் சாலையில் சுற்றி வந்து சேர நாற்பது கிலோ மீட்டர். ஆனால் மலைத்தொடர்களுக்குக் குறுக்காக வந்தால் பதினெட்டே கிலோமீட்டர் தான். அதைப் புரிந்துகொண்டு இத்தகைய மின்சாரக் கோபுரங்களை முடிந்த அளவுக்கு மையக்காட்டுக்கு பாதகம் விளைவிக்காமல் காட்டின் திறந்தவெளிகளில் மேடை அமைத்து மேலேற்றியிருக்கிறார்கள்.
லூர்துக்கு சரக்கல் வாரியத்தில் வேலை. அவனுக்கு கீழ், சரக்கல் சப்-ஸ்டேக்ஷனில் இருந்து ஆரம்பித்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் முப்பது டவர்கள். அதற்குப் பிறகு இருக்கும் டவர்கள் எல்லாம் கீழ்ப்பரிகம் வாரியத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. சரக்கலுக்கு மேல் இன்னும் இழுக்கப்போவதாக அறிவித்திருந்த அரசாங்கத் திட்டம் இன்னும் இழுபறியில் உள்ளது.
“என்னணா பாதி அவுந்த கைலிய இழுத்துப் பிடிச்சுட்டு நிக்கிறா மாதிரி நிக்குது. இப்போ இதுல எங்க எப்படி கால் வச்சு ஏறுறதாம்? எல்லாத்தயும் பிச்சுபோட்டு பேசாம மொத்தமா உருவி உட்ருவோமா?” என்றான் செயபால்.
“இன்னிக்கி நீ பிச்சுப்போட்டா நாளைக்கே அது மறுபடியும் ஏறிரும். நீ நிக்கிற காடு அப்படி. காடு தெரியாம பேசக்கூடாது. இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் நின்னுட்டு கடந்தா உன் கால்லயே சுத்துப் போட்டு ஏறப் பாத்திரும் பாத்துக்க” என்றான் லூர்து சற்று நகைத்தபடி.
“வேறெப்படிண்ணா ஏறுறது? இரும்பே தெரியலையே”
“பொறுமையா ஏறுவோம் விடு. அதுங்கலால நமக்குப் பாதகம் ஒன்னும் இல்லல. அப்றம் என்ன. அங்கங்க கொடிய விலக்கிவிட்டுகிட்டு தெரியுற இரும்புல கொக்கிப் போட்டு ஏற வேண்டியது தான். இவ்ளோநாள் அப்படித்தானே தனியாளா நான் பண்ணிட்டிருந்தேன்”
இருவரும் கையில் கொண்டுவந்த அவர்களின் மேல் உடுப்பை மாட்டிக்கொண்டார்கள். மொத்த சாமான்களையும் கீழே ஓரிடத்தில் கூடையில் வைத்துவிட்டார்கள். வேண்டுமென்கிற போது மேலிருந்து கொக்கிப் போட்டு இழுத்துக்கொள்வார்கள். அவர்கள் உடுத்திய உடுப்பில் அங்கங்கு வளையங்கள். தொடைப்பக்கம் இரண்டு. இடுப்பு பகுதியில் இரண்டு நெஞ்சுக்கருகே இரண்டு. அந்த வளையங்களில் கயிற்றுக் கொக்கிகளை மாட்டிக்கொள்ளச் சொன்னான் லூர்து.
ஒவ்வொரு இடமாக இரும்பில் கைவைத்து ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு கொக்கிப் போட்டு கொக்கிப் போட்டு இருவரும் அந்த கோபுரத்தின் மேலே ஏறிக்கொண்டிருந்தார்கள்.
செயபால் ஓரிடத்தில் நின்று விட்டான். பாதி உயரத்தில் நின்று காட்டைச் சுற்றியும் முற்றியும் பார்த்தான். கைகளைப் பரத்தி வைத்து நின்றபடி அவன் கண் முன் வரிசையாக ஏறி இறங்கிச் சென்றுகொண்டிருந்த டவர்களை நோட்டமிட்டான். பின்னர் கீழே குனிந்து பார்த்தான். மொத்தக் காட்டையும் மூடிவிட்டிருந்தன அந்த ஊதாநிறப் பூவிடும் படர்கொடிகள். கீழே தரையே தெரியவில்லை. படுதா போட்டு போர்த்தியதுபோல இருந்தது அவனுக்கு. காடு இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்குகிறது என்றும் எண்ணிக்கொண்டான். அன்று வெயில் சற்று இளகியிருந்தது. சுளீரென்று உரைக்கவில்லை. இளவெயில் போன்று தான் அந்த உச்சி பகலிலும் இருந்தது. ஊதாநிறப் பூக்கள் பூமியில் விழுந்த அந்த இளவெயிலை வாங்கிக்கொண்டு வானத்தைப் பார்த்துச் சிரிப்பதுபோல இருந்தது.
செயபால் பேச்சுக் கொடுத்தான். “அண்ணா இந்தச் செடி இந்த டவருல மட்டும் இவ்ளோ தூரம் வரை ஏறியிருக்கு. மத்த டவருலலாம் கொஞ்ச உயரத்துக்குத் தான் ஏறியிருக்கு. பாத்தீங்களா?”
லூர்தும் நின்றான். “பேசாம ஏறி வா. ஒவ்வொரு இடத்துலயும் நின்னு நின்னு இப்படி பாத்துக்கிட்டே இருந்தா பாத்துகிட்டே இருக்க வேண்டியது தான். வந்த வேலைய பாக்கணுமில்ல”
“என்னண்ணா மொதநாள் தானே. இப்படி கிடுக்குப்பிடி பிடிக்கிறீங்களே.”
“லேய், மேல ஏறிவா மொத”
“மொத்த கண்ணையும் சுத்தி இருக்கற காட்டுலயே தொலைச்சுறாத. கொஞ்சம் இரும்பையும் பாத்து ஏறி வா. பூச்சிப் பொட்டுலாம் இரும்பு மேல போகும் வரும். அதுகளுக்கு கையக்கொடுக்காத ஏறு”
இருவரும் மேலே வந்தனர். லூர்து தன் இடை வளையத்தில் சொருகியிருந்த கயிற்றுச் சுருளை அவிழ்த்துவிட்டார். அது நங்கூரம்போலச் சென்று கீழே தரையில் மோதியது. அதன் முனையில் ஒரு கொக்கி இருந்தது. கிணற்றில் தண்ணீர் மொள்ளுவதுபோல கீழே சாய்த்து வைத்திருந்த பலகை ஒன்றைக் கொக்கியில் மாட்டி மேலே இழுத்தார். அது மேலே வந்ததும் அதனைத் தனக்குக் கீழே இருபக்கமாக இருந்த தாங்கு கம்பிகளுக்கு மத்தியில் நிறுத்திப் போட்டு அதன் மேல் நின்றுகொண்டார். அந்தப் பலகை நல்ல மாம்பலகை. அதிராமல் அசையாமல் போட்ட இடத்தில் சரியாகப் பொருந்தியது. செயபாலும் அவர் செய்தது போலவே செய்து அவனுக்கானப் பலகையைக் கீழிருந்து இழுத்துப் போட்டுக்கொண்டான். அந்தப் பலகைகளில் இருவரும் சாவகாசமாக நிற்க முடிந்தது.
“இனிமே நம்ம பாட்டுக்கு வேலைய பாக்கலாம்” என்றான் லூர்து.
“இதோ ஒவ்வொரு கையும் ஒவ்வொரு வொயர புடிச்சிட்டிருக்கு பாத்தல்ல. அதுல ஏதும் பழுதாயிருக்கான்னு ஃபர்ஸ்ட் பாக்கணும். துரு கிரு இருந்தா, இதோ இந்த ஆயில ஸ்ப்ரே செஞ்சு கழுவி விடணும். க்ளவுஸ கையில போட்டுக்கிட்டல்ல.”
செயபால் சுற்றி முற்றியும் கூர்ந்து பார்த்தான். ஓரிரு இடங்களில் ரப்பர் கட்டைகளைத் தளர்த்தி அந்த ஸ்பிரேயை அடித்துச் சுத்தம் செய்தான். மற்றது எல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை என்றான். லூர்துவும் ஒருமுறை பார்த்துக்கொண்டார்.
“எல்லாம் சரியா தான் இருக்குணா”.
“நீ இப்போ செஞ்சது பால பாடம் தான். இந்த இரும்பையும் கம்பிகளையும் மட்டும் வச்சு சொல்ற. அது ஓரளவு சரி தான். ஆனா சுத்தியிருக்கற காட்டையும் பாக்கணும். இன்னும் நீ கவனிக்க வேண்டியது நெறைய இருக்கு. ஏன்னா இந்தக் காடு அப்படிப்பட்டது.”
“நாம இப்போ மேல ஏறி வந்தது எதுக்குன்னு நெனைக்கற?”
“போற கரண்டு எங்கும் ஷார்ட் ஆகிடக் கூடாதுன்னு ஒயர்கள பழுது பார்த்துச் சரி செய்ய அதானண்ணா”
“ஆமா. அதான். ஷார்ட் சர்க்யூட் ஆச்சுன்னா மொத்தமும் போச்சு. அப்றம் இதோ மேல இருக்க சரக்கல்ல எந்த வீட்லயும் ஒத்த குண்டுபல்பு கூட எரியாது. அப்புறம் எல்லாரும் நம்ம சட்டையைப் புடிக்க லைன் கட்டி வந்து நிப்பானுங்க”
“மழை பெஞ்சு இடி இடிச்சு வானத்திலேந்து வெட்டுற மின்னல். அது என்னங்கற? அதும் ஷார்ட் சர்க்யூட் தான். வானத்துலேந்து பூமிக்கு இறங்குது அது. இம்மி கணம் தான் நீடிக்கும் அது. ஆனா மொத்தமும் போயிட்டிருக்கும்.”
“தோ ரெண்டு லைனுக போகுதே, அதுல ஒன்னு வானம். ஒன்னு பூமி. ரெண்டும் ஒன்ன ஒன்னு தொட்டுக்காம இப்படி நீண்டுகிட்டே போகுது பாத்தியா. வானத்தையும் பூமியையும் காத்து பிரிக்குது. தண்ணீ சேக்குது. இந்த கம்பிங்கள சுத்தி இருக்கறத எல்லாத்தையும் முடிஞ்ச வரைக்கு காத்தாவே வச்சுருக்கணும். தண்ணீ தெரிஞ்சுட கூடாது அதுங்களுக்கு. அப்படி தெரிஞ்சிருச்சுன்னா ஏதோ பொசுங்கப் போவுதுன்னு அர்த்தம். அப்படி பொசுங்க வச்சு அத காத்தா மாத்திக்கும் அது”
“நான் இங்கே வேலைக்கு சேந்த புதுசுல பெரிய மலைப்பாம்பு அந்த ஏழாவது டவர்ல இந்த ஒயர்களுக்கு நடுவுல தொங்கிக் கிடந்து பொசுங்குனத பாத்துருக்கேன். மழைபெஞ்சு காத்தடிச்சா ஒடிஞ்சுட்டு வந்து விழற மரக்கிளை கூட பொசுங்கிப்போயிடும் பாத்துக்கோ. கரண்ட்டு தண்ணியை எப்பவுமே தெரிஞ்சுக்க பாக்கும். அப்படி அதத் தெரிஞ்சுக்க விடாம தடுக்கறது தான் நம்ம வேலையே”
செயபால் அவர் சொன்னதை வைத்துக்கொண்டு வேறு எதுவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறதா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஒருமுறை பார்த்தான். அப்படி எதுவும் தட்டுப்படவில்லை.
“வேற என்னண்ணா இருக்கு செக் பண்ண?”
“சுத்தியும் கண்ணை வெளக்கி பாத்துட்டியா?”
“பாத்துட்டேன்ண்ணா”
“ம்ம். அதோ அங்க ஒரு நூலாம்படை ஆடிட்டிருக்கா. நல்லா பாரு”
செயபால் அவர் சுட்டிய திசையில் கண்களைக்கொண்டு கூர்ந்து கவனித்தான். அங்கு ஒரு மிகப்பெரிய சிலந்தி வலை காற்றில் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவற்றின் இழைகள் சுத்தமாகக் கண்ணுக்கே தென்படவில்லை. விழுகின்ற வெயிலில் ஒரு கோணத்திலிருந்து உற்றுப் பார்த்தால் பிரதிபலிப்பில் அதன் இழைகளைப் பார்க்க முடிந்தது.
“ஆமாண்ணா. தெரியுது”
“அந்த நூலாம்படையை எடுத்துவிடு” என்றான் லூர்து.
“என்னண்ணா விளையாடுறீங்க. இவ்ளோ தூரம் மேல ஏறிவந்து இப்படி ஒட்டடை அடிக்கச் சொல்றீங்களே” என்று அலுத்துக்கொண்டான் செயபால்.
லூர்து சிரித்தான். அது அவனைச் சீண்டுவது போல இருந்தது.
“அட சொன்னதை மட்டும் செய் தம்பி” என்றான்.
அவன் தன்னிடமிருந்த நீண்ட கழி ஒன்றை வைத்து அந்தச் சிலந்தி வலையை அகற்றப் பார்த்தான். அதிகமாக எக்க வேண்டியிருந்தது. அவனால் அந்தச் சிலந்தி வலையை எட்டமுடியவில்லை.
லூர்துசாமி பின்னிருந்து அவன் தடுமாறாமல் பிடித்துக்கொண்டான்.
“இப்போ எக்கி அடி”
அவனால் சிலந்தி வலையை எட்ட முடிந்தது. கழியைக் காற்றில் சுற்றித் துழாவியபடி இருந்தான்.
லூர்து சொன்னான். “இதுவும் நம்ம வேலை தான். சொல்லப் போனா இங்க இதான் பெரிய வேலையே. இவ்ளோ நேரம் நீ பாத்ததுலாம் ஒன்னுமே இல்ல”
“புரியலண்ணா”
“அடிச்சு முடி சொல்றேன்”
உண்மையிலேயே மிகப்பெரிய சிலந்தி வலை தான். மையத்தைச் சுற்றி நூறு வட்டங்களாவது இருக்கும். ஒவ்வொன்றும் மையத்திலிருந்து அழகாகக் கோர்க்கப்பட்டிருந்தது. அந்த மையம் கருவிழி போல. அந்த வலை கண் போல. ஒரு பார்வை அல்லது கண்காணிப்பு. எவரோ தன்னை முடிந்தளவு ஒளித்து வைத்துக்கொண்டும் மறைத்து வைத்துக்கொண்டும் காட்டின் மேல் தன் பார்வையை இப்படிப் படரவிடுகிறார்கள். காட்டின் கண்கள் ??? இல்லை இல்லை காற்றின் கண்கள். ஆனால் வலையைப் பின்னிய சிலந்தியை ஏனோ காணவில்லை.
செயபால் லூர்திடம் பேச்சு வளர்த்துக்கொண்டே அந்தச் சிலந்தி வலையைக் கலைத்துவிட்டுக் கொண்டிருந்தான்.
“சிலந்திய காணலை பாத்தியா. நாம ஏறி வந்த போது அது கீழ எறங்கிப் போயிருக்கும்” என்றான் லூர்து.
சிலந்தி வலையில் அங்கங்கு வெண்ணிறத்தில் முடிச்சு முடிச்சாகத் தெரிந்தது.
“அதெல்லாம் என்னணா?”
“சிலந்தி அதோட இரையான பூச்சி, பொட்டு, புழு எல்லாத்தயும் இப்படித்தான் சிக்க வச்சி பொட்டலம் கட்டிப் போட்டு வைக்கும். அப்புறம் அது மெதுவா சாப்டுக்கும்”
“அதுலாம் அதோட இரையா? என்னது இப்படி மம்மி மாதிரி சுத்தமா எதுமே வெளிய தெரியாத மாதிரி மூடி கட்டிப்போட்டு வச்சிருக்குதுங்க”
“ஆமா”
“இதோ காடு ஃபுல்லா இப்படித் தொறந்து கெடக்கு. அதை விட்டுட்டு இங்க வந்து கடைய போட்டிருக்குதுங்கன்னா காரணம் இல்லாம இருக்காது.”
செயபால் வேலையை முடித்துவிட்டுச் சுதாரித்துக்கொண்டு நின்றான்.
“இன்னும் ஒருநாள் கூட போச்சுன்னு வை, அதோ கீழ பரிகத்து போஸ்டுமரத்துல ஊருற கட்டெறும்பக் கூட இது இழுத்திடும். அந்த வலையில இன்னோரு இரையா நீ அதப் பாக்கலாம். நாம கரெண்டு அனுப்ப கம்பி போட்டா, இதுங்க அதோட இரையப் புடிக்க நம்ம போட்ட கம்பியை யூஸ் பண்ணிகிதுங்க பாரு. நம்ம விரிக்கிற வலை மேல அதுங்க அதுங்களோட வலைய விரிக்குதுங்க “
“சிலந்திகளும் அதுங்களோட கரண்ட்ட அனுப்பித்தான் இரைய புடிக்குதுங்க போலருக்கு” இதை யாரும் கேட்டுவிடக்கூடாதது போல மெல்லிய குரலில் சொன்னான் லூர்து.
“இப்போ இந்தக் கம்பில போற கரண்ட்டுல எது நம்ம கரெண்ட்டு எது அந்த சிலந்தியோட கரெண்ட்டு?” இதை அவனே கேட்டுக்கொண்டு சிறிது நேரம் குழப்பிக்கொண்டு நின்றான்.
பிறகு தொடர்ந்தான். “சிலந்தி அது பாட்டுக்கு விரிச்சுக்கிட்டே போகுது. இன்னும் இந்த வலைல நாலு சுத்து அதிகமாப் போயிருச்சுன்னா? இதோ அந்த இரண்டு ஒயரும் தொட்டுக்காம போகுதே அதையும் சேத்துக்கும் சிலந்தி. சிலந்திக்கு அந்த நாலு சுத்துக்கு ஒரே நாள் போதும். ஒரே நாள்ல நாலு சுத்துல இந்த ரெண்டு ஒயரையும் சேத்துக்கும் போது உலகமே அந்த செலந்திக்கு இரையான மாதிரி தானே?”
“அது சரிண்ணா. அந்த சிலந்தியோட இழை நம்ம கரெண்ட்ட எப்படிக் கடத்தும்? அது மெல்லீசான பட்டு நூல் மாதிரி தான இருக்கு. அது கரண்ட்ட கடத்துமா?”
“அப்படி கேளு. இப்ப தான் பிடிகயிற பிடிச்சு கரெக்ட்டா மேலேறி வந்துருக்க. இவ்ளோ நேரம் நீ கீழ தான் நின்னுட்டிருந்துருக்க” லூர்து கீழே கை காண்பித்து நகைத்தபடி சொல்லி நிறுத்தினான். செயபால் “என்ன இவர்?” என்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அத விடு. மொதல்ல நான் ஒன்னு கேக்கறேன். நீ சொல்லு. மொதநாள் அதுவுமா உன்ன நான் ஏன் இங்க வேறெந்த டவருக்கும் கூட்டிட்டுப் போகாமே இந்த பதினொன்னாம் டவருக்கு கூட்டிட்டு வந்தேன் சொல்லு.”
“தெரியலயே”
“காரணமாத்தான். அதோ அங்க அந்த மொகடுல தெரியுது பாரு கருமேகம். அது இன்னும் நாலு மணி நேரத்துல இந்த டவர கடந்து தான் இறங்கிப்போகும். இன்னும் ரெண்டு மணி நேரத்துல நீ அந்த மேகத்துக்குள்ள இருப்ப. மேகம் உன்னய விட்டுத் தாழும் போது உன் சட்டை நனையாம இருக்காது. எல்லாத்தயும் நனச்சுட்டுப் போயிடும் அது. பாதி டவர் வரை நனஞ்சு போயிருக்கும். அதோ அந்தக் கொடி வந்துருக்கில்ல அந்த உசரம் வரை நனச்சிருக்கும். அந்த மேகம் ஒரு சமயம் மாத்தி எப்பயாவது பத்தாவது டவர் வழியா போவும், இல்ல ஒரு சமயம் பன்னெண்டாவது டவர் வழியா போவும். மழை இல்ல அது. நனைக்க மட்டும் தான் செய்யும். வெறுமன ஈரத்த மட்டும் தான் விட்டுட்டுப் போகும். பெய்யுறதுக்கு முந்தி மேகத்துல இருக்கற மழைன்னு வேணும்ணா வச்சுக்கலாம்”
“ஒரு வேளை இன்னிக்கி இந்தச் சிலந்தி வலைய கலைக்காம விட்டுட்டு, நாளைக்கு வந்து பார்த்தா அந்த மேகம் நகர்ந்து போனதுக்கப்றம், அந்த ஈரம் அந்த சிலந்தி வலை மேல படிஞ்சு உன் கண்ணு முன்னாடியே ஒரு நட்சத்திரம் மாதிரி அது எரிஞ்சு விழறத பாப்ப. எல்லாம் இப்படின்றத்துக்குள்ள நடந்து முடிஞ்சுருக்கும்”
“அந்தச் சிலந்தி வலையோட திடகாத்திரம் என்னங்கற. லேசுப்பட்டதில்லை அது. அது மேல எது பட்டாலும் பச்சக்குன்னு ஒட்டிக்கும். அதுல இருக்குற பசை, தன் மேல படுறது தண்ணியா இருந்தாலும் தட்டானா இருந்தாலும் நல்லா இறுக்க புடிச்சு வச்சுக்கும்.”
“காத்துல ஆடறதுனாலயே அது ஒன்னும் நோஞ்சான் கெடையாது. என்ன காத்து அடிச்சாலும் என்ன மழையடிச்சாலும் அது பாட்டுக்கு அறுபடாம அப்படியே இருக்கும். இவ்ளோ உயரத்துல இருக்கற அது அசைஞ்சு அசைஞ்சே தன்னைத் தக்க வச்சுக்குது இல்லன்னா காத்தும் மழையும் அத அசைய வச்சே காபந்து பண்ணுது. நான் சொன்னேன்ல எல்லாம் காரணமாத்தான். காத்தாலயும் மழையாலயும் முடியாதது நம்மலால முடிஞ்சுருது. நம்மலால மட்டும் தான் அந்த வலையை இப்படி ஈஸியா கலைச்சுப் போட்டுட முடியுது”
லூர்தண்ணனால் இப்படி எல்லாவற்றைப் பற்றியும் நூல் பிடித்தபடி விளக்கமுடிகிறது என்று செயபால் வியந்துகொண்டான். லூர்தண்ணன் முதலில், பெய்யறதுக்கு முந்தி இருந்த மழை என்று சொன்னபோது செயபாலுக்கு சில்லென்று இருந்தது. மணக்கப் போகும் தன் காதலியை எண்ணிக்கொண்டான். அவளையும் இங்கு ஒருமுறை கூட்டி வந்து ஏற்றிவிட்டு அப்படி நனைய வைக்கலாம் என்று எண்ணிக்கொண்டான். அடுத்து லூர்து உங்கண்ணு முன்னாடியே பொசுங்கிக் கீழ விழும் என்று சொன்னபோது அந்த ஆசை கலைந்து போனது.
“வந்த வேலை முடிஞ்சுது. பேசாம இங்கேயே ஒக்காந்து சாப்பிட்டுட்டு போலாம்.”
இருவரும் கயிறைக் கட்டி கீழே இருந்த சோற்றுக் கூடையை இழுத்தார்கள். கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் கையைக் கழுவிக்கொண்டு அந்த மரப்பலகையிலேயே அமர்ந்து மதிய உணவு உண்டார்கள்.
உண்ட உடனேயே கீழே இறங்காமல் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைத்து “இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போகலாமாணா?” என்றான் செயபாலு. லூர்தும் சரி என்று தலையசைத்தான். இருவரும் தங்களை அமர்த்திக் கொண்டார்கள். செயபாலு கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு பலகையிலேயே படுத்துவிட்டான். அருகில் லூர்து கால் மூட்டுகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தான்.
இருவரும் காட்டின் மோனத்தில் சிறிது நேரம் ஆழ்ந்திருந்தனர். செயபால் சிறிது நேரம் கண்களை மூடித்திறந்தான். லூர்து முன்னிருந்த காட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் சுரத்தே இல்லை. வெறும் வெற்று நோக்கு தான். காடலுத்தவன் போன்றிருந்தான். அவனைப் பார்த்துக்கொண்டிருந்த செயபால் அவர்களிடையே இருந்த மௌனத்தைக் கலைத்தான் .
“என்னண்ணா ஒரே யோசனையா இருக்கீங்க? “
“அது எதுக்கு ஒனக்கு? கீழப் போவமா?”
“ஆமா நீ எந்த ஊர் சொன்ன?”
“தகரை”
“என்னா வயசு உனக்கு?”
“இருவத்தி நாலு”
“அவ்ளோ சின்ன பையனா நீ”
“அடுத்த மாசம் கல்யாணம் வச்சுருக்கேண்ணா. அவசியம் வந்துருங்க”
“பார்ரா. இவ்ளோ சீக்கிரமாவேவா”
“ஆமா லவ் மேரேஜ்” என்று தலையைச் சொறிந்தான் செயபால்.
“பரவால்லையே. வேலைக்குச் சேந்த புதுசுலயே கல்யாணம். நல்லது. பொண்ணு எந்த ஊரு?
“தோட்டப்பாடி”
“ம்ம்ம்”
“உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சாண்ணா? எத்தனை புள்ளைங்க?”
“இன்னும் இல்லடா. முப்பது வயசு ஆகுது. ப்ளஸ் டூ முடிச்சுட்டு நேரா இங்க வந்து சேந்தவன், சேந்தவன் தான். காடே கெதியா ஓட்டிட்டு கெடக்குறேன்”
“அட ஏதாவது பொண்ண வீட்டுல பாக்க சொல்லுங்க”
“அட நீ வேற ஏன் டா. உள்ள ஒருத்தியை வச்சுக்கிட்டு வெளில தேட முடியல”
“அதான பாத்தேன். யார்ணா அது?”
“அவசியம் தெரிஞ்சுக்கணுமா ஒனக்கு”
“சும்மா சொல்லுங்கண்ணா. நமக்குள்ள என்ன? “
“சரக்கல் சர்ச் இருக்குல்ல பாத்திருப்பியே. அதுல கூட்டிப் பெருக்கி சுத்தம் செஞ்சு ஊழியம் பாக்குற ஒரு பொண்ணு. அவ தான். அமலம்ன்னு பேரு”
“உங்க லவ்வ அவங்கள்ட்ட சொல்லிட்டீங்களா?”
“சொல்ல முடியலயே. அவ முன்னாடி போய் நின்னா வார்த்தைய மென்னு முழுங்கறேன். குரலே எழமாட்டேங்குது”
“அவளும் பிடிகொடுக்க மாட்றா. மசிய மாட்டேங்கிறா. இத்தனை நாளா பக்கத்துலயே தான் இருந்துட்டு வாறா. எனக்கு சர்ச்சுக்கு பின்னாடி தெருவுல வீடு. அவளுக்கு சர்ச்சுக்குள்ளயே. தெனமும் அவள தாண்டித்தான் வர்றது போறது எல்லாம். ஒன்ன விட ரெண்டு வயசு மூத்த பொண்ணு”
“அந்தக்காவ வேறயாராச்சும் வந்து தட்டிறப் போறாங்கண்ணா”
“தெரியல. இதுநாள் வரை யாரும் போட்டிக்கு இல்ல. அவள கல்யாணம் பண்ணிகுடுக்கற அளவுக்கு அவ வீட்டில வசதி பத்தாது. அவளுக்கு அம்மா மட்டும் தான். அதுக்கும் இப்போ புரை விழுந்து போய் கண்ணு தெரியாம கிடக்கு. சர்ச்சோ ஃபாதரோ பண்ணி வச்சா தான் உண்டு. அட அவங்க இவள அனுப்பி வச்சுட்டா சர்ச்சு வேலைய யார் பாக்குறது”
“அவங்களுக்கு ஒங்க மேல் ஒரு இது உண்டா? நீங்க ஃபீல் பண்ணியிருக்கீங்களா?”
“எனக்குத் தெரியல. நான் அவள பாப்பேன். நான் பாக்குறது அவளுக்குத் தெரியும். அவளுக்கென்ன அவளுக்கு. ஊருக்கே தெரியும். ஆனா அவ என்ன மயிறா கூட மதிக்க மாட்டா. அவ கண்ணுல அப்படியொரு ஏளனம் தெரியும். எனக்கு ஆத்திரமா வரும். சும்மா கூட்டிப் பெருக்கி ஆயா வேலை பாக்குற அவளுக்கே அவ்ளோ இருக்குதுன்னா ஒரு கவர்மெண்ட் உத்யோகத்தில இருக்கற எனக்கு எவ்ளோ இருக்கணும். ஆனாலும் அவ முன்னாடி புழுவா நெளியவேண்டிய நிலைமை. ஒன்னுமே இல்லன்னாலும் பொண்ணா இருக்கறதுனாலேயே வர திமிரு ஒன்னு இருக்குல்ல. அது தான் அவளுக்கு”
“அப்பப்ப அடுப்பெரிக்க விறகு வெட்ட, சுள்ளி பொறுக்கன்னு சொல்லிக்கிட்டு காட்டுப் பக்கம் அவ கூட்டாளிகளோட வருவா. அப்பயும் அவள பாத்துகிட்டே நிப்பேன். காட்டுல வச்சு அவள பாக்கும் போது பித்தே பிடிச்சுடும் எனக்கு. அவ இல்லாம எனக்கு எதுவுமில்லன்னு தோணிப்போயிடும். அவள ஆசையா பாத்துட்டிருப்பேன். ஆனா அவ என்ன அருவருப்பா தான் பாக்கற மாதிரி இருக்கு. பாக்கற கண்ணுல இருக்கற அருவருப்பு தான், நெளியற புழுவை இன்னும் இன்னும் நிமிண்டிவிட்டு நெளிய வைக்கிதோ என்னவோ? அப்படி நிமிண்டிவிடறது எனக்குமே வேண்டியிருக்கோ என்னவோ?”
“அப்போ உங்களால உங்கள வெளிப்படுத்திக்கவே முடியல இல்லயாண்ணா. சங்கடப் படாம கேட்டுக்கறதுன்னா நான் ஒன்னு சொல்லுறேன்”
“என்னடா சொல்லப்போற அப்படி?”
“பேசாம அவங்கள தொட்டுப் பார்த்துடுங்கணா. ரெண்டுல ஒன்னு தெரிஞ்சு போவும்”
“லேய் என்ன பேசுற. தெரிஞ்ச பயலா இருந்தா இந்நேரம் கெட்ட வார்த்தை போட்டிருப்பேன். தெரியாதவனா போயிட்ட”
“இல்லண்ணா முயற்சி பண்ணிப் பாருங்க”
“லேய் திரும்ப திரும்ப என்ன அதையே சொல்லிட்டிருக்க.. உன்ன விட மூத்தவன் கிட்ட பேசுறன்னு மறந்துட்டியா?”
“எனக்குத் தெரிஞ்ச உபாயத்த உங்க கிட்ட சொன்னேன்”
“லேய் நீ எனக்குப் பாடம் எடுக்கறியா? இத்தனை நேரமா நீ என்கிட்ட கேட்டுகிட்டு இருந்த. இப்போ இதுக்கு நான் உன்கிட்ட கேட்டுக்கணுமா?”
“இதுல எதுக்குண்ணா பெரியவன் சின்னவன்னு வயசு வித்தியாசம்லாம் பாத்துகிட்டு. தெரிஞ்சவங்க தெரியாதவங்க கிட்ட சொல்றதா எடுத்துக்கலாமே. நான் அப்படித்தான் உங்க வார்த்தையைக் கேட்டுகிட்டேன்”
லூர்து கொந்தளித்துப் போனான். “ஓ எல்லாம் தெரிஞ்சவனா நீ. அப்படி என்னத்தலாம் தெரிஞ்சு வச்சுருக்க நீ”
“ஒரு ஆம்பள தொடுறதுக்கு முன்னாடி இருக்கற பொண்ணு வேற. தொட்டப்பெறகு இருக்கற பொண்ணு வேற”
“லேய் என்னடா ஆம்பள நீ? சும்மாதானே வாய் கிடக்கு, எதாச்சும் சொல்லிவிட்டு போவோம்ன்னு சொல்ற மாதிரியே தெரியலயே நீ”
லூர்துசாமிக்கும் இதனைக் கேட்டுத் தொலைக்கக் கூடாது என்றுதான் முதலில் இருந்தது. ஆனால் கொதிப்படங்காமல் கேட்டே விட்டான்.
“அந்த தோட்டப்பாடி புள்ளைய இப்படித் தான் உஷார் பண்ணியா?”
செயபால் அமைதியாக “ஆமாம்” என்றான்.
அதற்குப் பின் அவர்கள் அதுபற்றி உரையாடிக் கொள்ளவில்லை. லூர்துசாமி வெறும் காரியத்திலேயே கண்ணாய் இருந்தான். செயபாலும் வேலையில் சூட்டிகையாகவே இருந்தான். சீக்கிரமாகவே அந்த வேலைக்கும் அந்தக் காட்டுக்கும் தன்னைப் பொருத்திக் கொண்டான். ஒருநாள் லூர்து செயபாலுடன் கம்பி ஏறிக்கொண்டிருந்த போது அமலம் மட்டும் தனியாகச் சுள்ளிப் பொறுக்க வந்திருந்தாள். இப்போதெல்லாம் அவள் தனியாகத்தான் வருகிறாள். லூர்துக்கு அவளிப்படி இவ்வளவு தூரம் காட்டுக்குள் தனியாக வருகிறாளே என்பது வருத்தமாக இருந்தது.
அவர்களுக்கு அந்த பதினொன்றாம் டவருக்கு அடிக்கடிச் சென்று சிலந்தி வலையைக் கலைத்துவிட்டு வர நேரிட்டது. அவர்கள் கலைக்க கலைக்க சிலந்தி அதே இடத்தில் கட்டிக்கொண்டிருந்தது. “இதோட ஆறாவது நாள். போய் பாத்துட்டு வருவோம்” என்று லூர்து செயபாலைக் கூட்டிச் செல்வான். சிலமுறை செயபாலுமே ஞாபகப்படுத்துவான். லூர்தின் கணிப்பில் சிலந்திக்கு மின் கம்பிகளைத் தொட்டபடி மொத்த அகலத்துக்கும் வலை கட்டி முடிக்க ஏழு நாள் பிடிக்கிறது. இப்படி வாரத்துக்கு ஒருமுறை சென்று அவர்கள் அந்த டவரில் ஏற வேண்டியிருந்தது.
செயபால் தன் திருமணத்தின் காரணமாக பத்துப் பதினைந்து நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். தன் திருமணத்துக்கு லூர்தையும் வற்புறுத்தி அழைத்தான். பழ வகைகளுடன் வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைத்துச் சென்றான். அந்நாட்களில் லூர்து காட்டுக்குள் தனியாக வலம் வந்துகொண்டிருந்தான். செயபால் இல்லாதபோது அவனை நினைவுறுத்தும்படியாக அவன் முதல்நாள் சொன்னதெல்லாம் லூர்துக்கு நினைவு வந்தது. அவனில்லாத வெற்றிடத்தை அவன் உதிர்த்த வார்த்தைகள் எடுத்துக்கொண்டது. லூர்துக்கும் தன்னைவிடச் சின்னப் பையன் அவன் முன்பு தான் மிகவும் யோக்கியவானாக நடந்து கொண்டுவிட்டோமோ அல்லது தன்னை அவனிடம் அப்படிக் காட்டிக்கொண்டுவிட்டோமோ என்றிருந்தது.
காடு பற்றி எல்லாம் தனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் காமம் பற்றி இன்னும் புரியாததன் தன்னிரக்கம் லூர்தைச் சூழ்ந்தது. அப்படி என்ன செயபால் தவறாகச் சொல்லிவிட்டான்? ஒருமுறை முயன்று பார்த்தால் தான் என்ன? இவ்வளவு நாளாக அவள் முன் புழுவாகத் தானே நெளிகிறேன். மிஞ்சிப் போனால் அதுவே பின்னரும் தொடரும். இன்னும் கூடிப்போனால் ஊரார் முன்னும் நெளிய வேண்டிவரும். அவ்வளவு தானே. எப்படியானாலும் நமக்கு உடல் கூசி நெளிவது புதிதில்லையே. சிலவற்றுக்குத் தூண்டல் இப்படி வெளியிலிருந்து வர வேண்டியிருக்கிறது. அப்படி வந்தால்தான் உண்டு. இல்லையென்றால் நமக்கு உரைப்பதேயில்லை. எண்ணெய்யில் தோய்ந்துபோய் சுடர் குன்றும் விளக்கின் திரிமுனையைத் தொட்டு வெளிநீட்டிவிட ஒரு குத்தூசி தேவைப்படுகிறது.
ஒருநாள் ஐந்தாம் டவரில் லூர்து வேலைபாரத்துக் கொண்டிருந்தான். தூரத்தில் எவரோ ஒரு பெண் அசைவது அங்கிருந்து தெரிந்தது. அமலம் தான். விறகு எடுக்க வந்திருக்கிறாள். இன்றும் தனியாகத் தான் வந்திருக்கிறாளா பாவமே என்றிருந்தது முதலில். வேலையை முடித்துவிட்டு லூர்து கீழிறங்கினான். அவள் மும்முரமாகக் கையில் வைத்திருந்த அரிவாளால் அதுவரை சேமித்து வைத்திருந்த விறகுகளை வெட்டி ஒரே அளவிலான விறகுகளாகச் சேர்த்துக்கொண்டிருந்தாள். லூர்து சட்டென அவளை நோக்கித் தன் திசையை மாற்றினான். லூர்து வருவதையும் அவன் அங்கிருப்பதையும் அவளும் கவனித்திருக்கவில்லை. கீழே குனிந்து அடுக்கிய விறகுகளை, கொண்டுவந்திருந்த சணல் கயிற்றால் இருபக்கமும் இறுக்கிக் கட்டிக்கொண்டாள். கையிலிருந்த அரிவாளை விறகுகளுக்கு மத்தியில் எங்கோ சொருகி வைத்தாள். வியர்த்திருந்த முகத்தைக் கொண்டுவந்திருந்த துவாலையால் வழித்துத் தலையில் வைத்துச் சும்மாடு போலக் கட்டிக்கொண்டாள். லூர்து அவளுக்குப் பின்னால் நெருங்கிவிட்டிருந்தான். அப்போதெனப் பார்த்துத் தலை தூக்கிய அவ்வெண்ணத்தால் அவனுக்குமே உள்ளுக்குள் புழுங்கிப் புழுங்கி அனல் எழுந்து உடல் வியர்த்து வந்தது. அவள் கட்டி வைத்திருந்த விறகுக்கட்டை குனிந்து எடுத்து, இருகைகளையும் உயர்த்திச் சும்மாட்டின் மேல்வைத்து நிதானித்துக் கொண்டிருந்தபோது லூர்து அவள் பின்னால் போய் நின்றான். சட்டென லூர்துக்கு தொடுதலின் எல்லை எதுவெனப் புரிபடாமல் குழப்பம் வந்தது. அவள் தூக்கி உயர்த்தியிருந்த கைகளுக்குக் கீழே ஒரு பக்கமாக அகன்று திறந்து கிடந்த சேலையில் அவளது இடை தெரிந்தது. கருத்த இடை. அதில் வியர்த்துப் பூத்திருந்த நீர் மணிகள் இன்னும் கீழிறங்காமல் நின்று கொண்டிருந்தன. அவளது சேலையின் இடைக்கட்டு ஒருபக்கமாகச் சற்றுத் தாழ்ந்திருந்து இடுப்பெலும்பின் துருத்தல் வெளித்தெரிந்தது. பின்னால் நின்றிருந்த லூர்து சட்டெனக் கையை முன்பக்கமாகக் கொண்டுசென்று அந்த துருத்தலில் கைவைத்து அவளை அழுத்திப் பிடித்து நின்றான். அமலம் அதிர்ந்து திரும்பினாள். அதிர்ச்சியில் அவள் தலையில் வைத்திருந்த விறகுக்கட்டு கீழே சரிந்தது. தடுமாறிய இருவரும் சேர்ந்தே கீழே விழுந்தனர். லூர்து அவளது இடையையே இன்னும் பற்றிக் கொண்டிருந்தான். அவள் இடைவழியாகவே அவன் கைகளை விட்டு நழுவிப் போய் தன்னை விடுவித்துக்கொண்டு கட்டவிழ்ந்து சிதறிக் கிடந்த விறகுகளுக்கு மத்தியில் அவனை உதறித் தள்ளிவிட்டு எழுந்துகொண்டாள். லூர்து தரையிலேயே கிடந்தான். அவனுக்கு கைக்குள் அகப்பட்ட சுண்டெலி சட்டெனத் தன் கைகளிலிருந்து நழுவிப் போனது போல இருந்தது. மறுகணம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இழையொன்றைப் பற்றிக்கொண்டு ஏறிய புழு ஒன்று எடை தாளாமல் அதன் கீழிருந்த இலைத்தலத்தில் வந்து விழ, விழுந்த அப்புழுவை எவரோ விரலால் சுண்டி வீசி எறிந்திருக்கிறார்கள் என்றுபட்டது. அமலமும் தன்னை அவசர அவசரமாகச் சரிபண்ணிக்கொண்டு விறகுக்கட்டைகளைக் கட்டியும் கட்டாததுமாக அடுக்கி, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்று சென்றாள். அவள் பார்வையில் அதே அருவருப்பு. தரையில் கிடந்த லூர்தின் உடலில் உண்மையாகவே புழுவின் நெளிவு புகுந்து கொண்டதுபோல இருந்தது.
லூர்துக்குச் சில நாட்களுக்கு இதே நினைப்பாகவே இருந்தது. எந்த வேலையும் ஓடவில்லை. காட்டிலேயே தான் திரிந்தான். ஆனால் காட்டைக் கைவிட்டிருந்தான். நேரில் எதிர்ப்படும் அமலத்தை ஒருபோதும் பார்த்திடவே கூடாது. அவள் பக்கமே பார்வை திரும்பிவிடக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான். குற்றவுணர்ச்சியில் இரவு தூக்கம் வரவில்லை. செயபாலை எண்ணித் தூற்றினான். “அவன் தான் அப்படிச் சொன்னான்னா தனக்கு எங்க போச்சு புத்தி” என்று திட்டியபடி தன் பக்கமே வந்தான். பிறகு மீண்டும் செயபாலிடமே திரும்பினான். அவன் மேலேயே தன் மொத்த எரிச்சலையும் கொட்டினான். அவன் கெட்ட கேட்டுக்கு அவனுக்கு ஒரு கல்யாணம் வேற என்று எண்ணிக்கொண்டான்.
ஆனால் அதே சமயம் கணநேரத்தில் துளிர்த்த அந்தக் காமமும் இன்னும் வடியவில்லை. தனக்குள் ஒரு ஓரத்தில் எஞ்சியிருக்கத்தான் செய்கிறது என்பதையும் உணர்ந்தான். இதோ இந்தக் கையில்தான் அவளது இடுப்பெலும்பு துருத்தலில் திமிறி ஏறிய இடைச்சதையும் அதன் வழுவழுப்பையும் இன்னும் அவன் நினைத்துப் பார்க்கும் போதும் அந்தத் தீண்டல் இனிமையாகத்தான் இருக்கிறது. அவளுக்கு எப்படியிருக்கும் இப்போது? இங்கு என் கையில் அவள் சிற்றிடையின் வழுவழுப்பு எப்படி எஞ்சுகிறதோ அது போல அங்கே அவள் இடையில் காய்த்துப் போய்க்கிடக்கும் என் உள்ளங்கையின் சொரசொரப்பும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் தானே.
இனி நடந்ததை எப்படிச் சரி செய்ய முடியும்? அவளிடம் சென்றே மன்னிப்பு கேட்பதா? அது சரிவராது. செய்த பாவத்தை வேண்டுமானால் பாவ மன்னிப்புக் கூண்டில் சர்ச் ஃபாதரிடம் ஒத்துக்கொண்டு மன்னிப்பைக் கோரலாம். அதுவும் கூட தனக்கான சமாதானத்தைத் தானே தேடிக்கொள்ள விழைவதன் பொருட்டே. சரி என்று முடிவெடுத்து, ஒவ்வொரு நாளும் சர்ச்சுக்குச் சென்றான். ஆனால் நேராகச் சர்ச்சுக்குள் நுழைந்து கர்த்தருக்கு முன் மண்டியிட்டு வெறும் சிலுவைக்குறியைப் போட்டுக்கொண்டு வெளியே வந்துவிடுவான். பாவ மன்னிப்பும் கேட்க முடியாமல் தன்னை ஒத்துக்கொள்ள முடியாமல் அவனை எதுவோ அலைக்கழித்தது.
சர்ச்சைச் சுற்றி எவரையும் ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் அவசர அவசரமாக வருபவனாகவும் செல்பவனாகவும் இருந்தான். அமலத்தின் அருவருப்புப் பார்வை சர்ச்சைச் சுற்றிய எல்லா ஜன்னல்களிலிருந்தும் வாயில்களிலிருந்தும் அவனைத் துரத்துவது போலப் பிரமை எழும். அப்போதெல்லாம் அவனுக்கு உடம்பு ஊறி அரிப்பது போல இருக்கும். சட்டைக்குள் கை விட்டு உதறிவிட்டுக்கொண்டே இருப்பான்.
அன்று மாலை லேசாகத் தூறல் போடத் துவங்கியிருந்தது. அந்தத் தூறல் வலுக்காது என்று லூர்துசாமிக்குத் தெரிந்திருந்தது. அன்று அவன் தன்னைத் திரட்டி வைத்துக்கொண்டான். ஃபாதரிடம் தன்னை முழுதாக ஒப்படைக்கத் தயாரானவனாக இருந்தான். “இன்னிக்கு எப்படியாவது பாவ மன்னிப்பு கேட்டுடணும்” என்று தனக்குள் பலமுறை முணுமுணுத்தபடி பூமியைப் பார்த்துக் குனிந்திருந்தவாறே சர்ச்சுக்குள் நுழைய முற்பட்டான்.
நுழைவு வாயிலில் எவரோ அவனை அழைப்பது போலத் தெரிந்தது. அமலம்தான் நின்று கொண்டிருந்தாள். ஒருவேளை அது பிரமையோ என்றெண்ணி அவளைக் கடந்து செல்லப் பார்த்தான். “ஒரு நிமிஷம்” என்றது குரல். அவளே தான் அது.
அவள் அவனை நெருங்கி வந்து மெல்லிய குரலில், “தொட்டதுக்கு அப்பறம் பார்க்கறதுல இருக்க ருசி கொறஞ்சு போயிடுச்சா என்ன? முன்னெல்லாம் வச்ச கண்ணு வாங்காம வெறிச்சு வெறிச்சு பாப்ப. இப்போ என்ன குனிஞ்ச தலை நிமிராம?” என்றாள்.
லூர்துசாமி தலை உயர்த்தி அவளை நோக்கினான். அவள் அவன் கண்களை நேர்ப்பார்த்து, “என்ன வந்து தொடுறதுக்கு உனக்கு இத்தனை நாள் எடுத்துருக்கு இல்ல” என்றாள். அவன் முன்பு கண்ட பெண் இல்லை இவள். அவன் அந்தக் கணத்தை அப்படியே உறையச் செய்து பிடித்து வைத்துக்கொள்ள முயன்றான். ஆனால் மழைத்தூறல் மண்ணில் பட்டதால் எழும் மணம் அவனது நாசியை நிறைத்து அவன் கவனத்தைக் கலைத்தது.
மறுநாள் வானம் தெளிந்திருந்தது. முதல்நாள் இரவு முழுதும் அமலத்தின் நினைப்பாகவே இருந்து உறங்கிப்போயிருந்தான். எழுந்ததுமே கூட அவள் நினைப்புதான் முதலில் வந்தது. ஆனால் சட்டெனச் சம்பந்தமில்லாமல் அந்த பதினொன்றாம் டவர் குறித்த நினைவு எட்டிப்பார்த்தது. நேற்றுடன் ஏழாவது நாள் முடிந்திருக்கிறது. கவனிக்காமல் இருந்துவிட்டோம். இந்நேரம் ஷார்ட் சர்க்யூட் ஆகியிருக்க வேண்டுமே என்று தோன்றியது. அப்படி ஏதும் ஆகவில்லையா என்ன? உடனே சப்-ஸ்டேஷனில் விசாரித்துவிட்டுவரப் புறப்பட்டுச் சென்றான். அங்கும் அப்படி எதுவும் பதிவாகவில்லை. இப்படி கணக்கையும் விட்டுவிட்டோம் காட்டையும் விட்டுவிட்டோமே என்று தன்னையே நொந்துகொண்டான். இருந்தும் காடு தன்னைக் காப்பாற்றி விட்டிருக்கிறது. எப்படி இது என்கிற ஆச்சரியம் அவனைத் தின்றது. தன் கணிப்பில் ஏதாவது தவறு நேர்ந்திருக்குமோ? அப்படி இருக்க நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை. நேராகப் பதினொன்றாம் டவர் நோக்கிக் காட்டுப் பாதையில் நடந்தான். டவரை அடைந்ததும் மேலே ஏறினான். உச்சியில் ஏறி பலகை போட்டு நின்றுகொண்டான். அவன் கண் முன் அந்த சிலந்தி வலை தெரிந்தது. ஆனால் காற்றில் அதன் வாடிக்கையான அலைதல் இல்லாமலிருந்தது. அதில் சுத்தமாகவே அசைவில்லை. ஊசலில்லை. கெட்டிப்பட்டுப்போனது மாதிரி இருந்தது. ஆனால் அவ்வலை அந்த இரு மின்கம்பிகளையும் தொட்டுக்கொண்டுதான் இருந்தது. அவனுக்குப் புரிபடவில்லை. பின்னர் ஒன்றைக் கவனித்தான். சிலந்தி வலையின் இழைகளில், அதன் தடிமன் கூடிப் போய் வெண்ணிறத்தில் இருக்கும் இழைகள் பொன்னிறத்துக்கு மாறியிருந்தன. வலையின் ஒரு ஓரத்தில் சிலந்தி தென்பட்டது. அந்தச் சிலந்தியிலும் ஒரு வேறுபாடு தெரிந்தது. முழு ரோந்தில் ஈடுபட்டிருந்த அதனிடம் அதன் வாடிக்கையான சுறுசுறுப்பு இல்லை. வலையின் இழைகளில் அது சற்று தவங்கி தவங்கித் தான் நடந்து கொண்டிருந்தது. சிலந்தியும் பொன்னிறமாக மாறியிருந்தது. கோந்தோ மரப்பிசினோ போன்ற ஒரு திரவம் அதன் மேல் வழிந்திருக்கிறதோ? சிலந்தி அதிலேயே தோய்ந்தது போலக் கிடந்தது. அதனால் தான் அது அப்படி தவங்கித் தவங்கி நடக்கிறதோ? அதுவரை வழுக்காத அதன் வலை அதற்கு இப்போது வழுக்குகிறது. வலை முழுக்க இருக்கும் இழைகளில் அந்தப் புது திரவத்தின் பங்கையும் சேர்த்துக்கொண்டு பாவு போட்டபடி லாந்திக்கொண்டிருந்திருக்குமோ அந்தச் சிலந்தி?
அது என்ன திரவம்? எங்கேயிருந்து வந்திருக்கும்? லூர்து சுற்றியும் முற்றியும் ஒன்றையும் விடாமல் கவனிக்கத் தொடங்கினான். ஒருகணம் தலையுயர்த்தி மின் கோபுரத்தின் உச்சியில் பார்த்தான். அங்கே அது தலைகாட்டியது. அவன் இன்னும் இரண்டு அடுக்குகளைக் கடந்து ஏறி உச்சியை நெருங்கி அதனைக் கண்டுகொண்டான். தலைகாட்டியது அந்த ஊதாநிறக் குவளைப்பூதான். எப்படியோ ஒரே ஒரு கொடி மட்டும் இத்தனை நாட்களாகக் கண்ணில் படாமல் உச்சிவரை சுற்றி ஏறி வந்திருக்கிறது. லூர்து அந்தக் குவளைப்பூவைத் தன் அருகே தழைத்துப் பார்த்தான். பூ கனத்துப் போயிருந்தது. அதன் மடல்களில் சில துளிகள் சொட்டியிருந்தன. பூவுக்குள் இன்னும் தேன் இருந்தது. ஆனால் அதுவும் கெட்டிப்பட்டிருந்தது. அந்தக் கனத்தைத் தாங்க முடியாமல் பூவுமே சற்றுத் தொய்ந்துபோனது போலிருந்தது. அந்தக் குவளைப்பூவில் தேன் நிறைந்து ததும்பி இருந்திருக்கிறது. பருக ஆளில்லாமல் அது நிரம்பி நிரம்பி வெளியே வழிந்திருக்கிறது. அது நேராகச் சிலந்தி வலையிலிருந்த சிலந்தியின் மேல் விழுந்திருக்கிறது. சிலந்தியைத் தோய்த்துத் தவங்க வைத்த அந்தப் பொன்நிறத் திரவம் இந்தத் தேன் தான். சிலந்தி வலையின் அனைத்து இழைகளிலும் தேன் தான் கம்பி பதத்தில் உறைந்துபோய் படிந்திருக்கிறது. உறைதேனில் மின்சாரமும் பாயாது. அதன் வழுவழுப்பில் நீராலும் கோர்த்துக்கொண்டு நிற்க முடியாது.
ஒற்றைப் பூவை பூக்க வைக்கவா இவ்வளவு உயரம் வரை ஏறி வர வேண்டும் அது? அதோ கீழேயே எண்ணற்ற குவளைப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றனவே. தேனெடுத்துச் செல்ல எத்தனை வண்டுகள் எத்தனை தேனீக்கள் மொய்க்கின்றன அவற்றை. ஆனாலும் உச்சியில் வந்து ஒரு பூவை மலர வைத்துவிட வேண்டும் அதற்கு. ஏன்? தேனைப் பத்திரப்படுத்துவதற்காகவா? எதனிடம் இருந்து? தன்னை வந்து மொய்ப்பனவற்றிடமிருந்தா? உச்சிக்குக் கொண்டுவந்து மலர வைப்பதில் தேனை எப்படிப் பத்திரப்படுத்த முடியும்? மின்சாரம் செல்லும் கம்பிகளிலிருந்து எழும் ஓசை கண்ணுக்குத் தட்டுப்படாத ஒரு பெருங்குளவியின் ரீங்காரத்தை ஒத்தது. அந்த ஓசைக்குச் செவிமடுக்கும் மற்ற குளவிகளோ தேனீக்களோ உச்சியில் பூக்கின்ற பூக்களை ஒருபோதும் அண்டாது. தேனும் பாதுகாக்கப்பட்டுவிடும். தேன் பாதுகாக்கப்படுவதற்கு அந்தச் சிலந்தியும் ஒரு வகையில் உடந்தை. அதற்கும் பங்குண்டு. மீறி மொய்க்க வரும் தேனீக்களை அது அதன் வலையில் விழவைத்து இரையாக்கிவிடும். எல்லாம் காட்டின் ஏற்பாடு.
தன்னை வந்து மொய்க்க ஆளில்லை என்று அந்த உச்சிப்பூ ஏங்கினால்? ஏக்கத்தில் சுரந்து சுரந்து மடல் தொய்ந்து இப்படித் தன் தேனைச் சிந்த வேண்டியது தானா அது? காடு பார்த்துக் கொள்ளும் அதை.
அருமையான கதை, நடை, களம்.