அதோ…சைபீரிய நாரை

சைத்ரீகன் பற்றிய முதல் அபிப்பிராயமே நல்லவிதமாயில்லை. அவனைச் சந்தித்தால் தப்பித்தவறி வீட்டுக்கு அழைத்துவிடாதே என்றுதான் நண்பர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். வேறொன்றுமில்லை குறைந்தது பத்துநாட்கள் வீட்டில் கூடாரமிட்டுவிடுவான். சைத்ரீகனின் குரல்வளையில் துர்தேவதையொன்று குடியிருப்பதாகவும் அது அவனது தொண்டையிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு ஒரு சடங்கியல் ஒலியை அளிப்பதாகவும் சொல்லியிருந்தனர். சைத்ரீகன் என்று அழைக்கப்பட்டாலும் ஓவியங்களெதுவும் நானறிய அவன் வரைந்ததில்லை. ஒலி ஓவியன் என்று சொல்லிக்கொள்வானாயிருக்கும். அவனது பாட்டியின் ஆவியைத்தேடி ஊர்சுற்றிக் கொண்டிருப்பதாக ஒருமுறை சொன்னான். மூதை போதை வாதை என்று அவனை நான் மனத்துக்குள் வரையறுத்துக் கேலி செய்வேன். மற்ற நண்பர்களிடம் அவனைப் பற்றி நானாய்க் கேட்டதில்லை. கேட்டிருந்தாலும் யாரும் நல்ல அபிப்பிராயங்கள் சொல்லப்போவதில்லை. 

 இரவு. மதுரை சந்திப்பு ரயில் நிலையம். நானும் அவனும் நின்று கொண்டிருக்கிறோம். மதியம் தூத்துக்குடியிலிருந்து கிளம்பி இருவரும் மாலையில் மதுரை வந்து சேர்ந்திருந்தோம்.

சைத்ரீகன் நேற்று காலையில் என் அலுவலக வாசலில் நான் வரும்வரைக் காத்திருந்தான். வந்ததும் வராததுமாய் “மலையா? கடலா?” என்றான். அவன் அப்படித்தான். புரிவதுபோல் பேசுவதில்லை. கொஞ்ச நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்ததுபோல் பேசாமல் அமர்ந்திருந்தான். அதிலிருந்து விடுபட்டு பிறகு வருகிறேன் என்று போய்விட்டான். அது ஓர் எச்சரிக்கைபோல் இருந்தது.

அலுவலகத்தில் அரசியல் கணக்குகள், முதல்வரின் உடல்நலம் குறித்த யூகங்கள், எதிர்க்கட்சியின் வியூகங்கள், எல்லாம் பேசிக்கொண்டு இடைவெளியில் வேலைசெய்து கொண்டிருந்தோம்.

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தைந்து டிசம்பர் மாதம் முப்பத்தொன்றாம் நாள். வருடத்தின் கடைசி நாள் கிளம்பி குடும்பத்தோடு ஏதேனும் கோயிலுக்கோ அல்லது சுற்றுலாத் தலங்களுக்கோ செல்வது என் சமீபத்திய  வழக்கம். வருடத்தின் முதல் நாள் திருத்தலங்களிலோ, மனமகிழ் இடங்களிலோ கழிப்பது புது வருடத்தைப் பொலிவாக்கும் என்ற நம்பிக்கை. இந்தமுறை திருச்செந்தூர் கோவிலுக்குப் போக முடிவு. செந்திலாண்டவன்குடி தேவஸ்தானத் தங்குமிடம் சத்திரத்தில், அறைவேண்டி முன்கூட்டி மணியார்டர் அனுப்பியிருந்தேன். எப்படியும் மாலை கிளம்ப வேண்டியிருக்கும். மதியம் சரியாக உணவு நேரத்திற்கு அலுவலக வளாக வேப்பமர நிழலில் அமர்ந்திருந்தான் அவன்.  சனியும் இந்த சைத்ரீகனும் ஒன்றுதான் பிடித்தால் விடமாட்டார்கள். வேறு வழியில்லை மதியம் வீட்டுக்கு அழைத்துப் போனேன். சாப்பிட்டு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டிருக்கும்போது போஸ்ட் மேன் வந்து சத்திரத்திலிருந்து மணியார்டர் ரிடர்ன் ஆனதைச் சொல்லித் திருப்பித் தந்தார். அவன் என்னை ஒருகணம் பார்த்தான். உதடு கோணி சின்னதாய் சிரித்தது போலிருந்தது. எப்படியாவது மாலைக்குள் இவனிடமிருந்து தப்பிப் பிழைக்கலாம் என்றால் இப்படியொரு சம்பவம். ஒருவகையில் அறை கிடைக்காதது நல்லதுதான். குடும்பத்தோடு இவனும் ஒட்டிக் கொண்டால் அது எல்லோருக்கும் சங்கடம். முதல் விஷயம் இவன் பேச்சு யாருக்கும் புரியாது. சமயத்தில் அவனுக்கே புரியாது.   

அலுவலகத்தில் வரும்போதே தகவல் சொல்லியாகிவிட்டது. அதுவுமில்லாமல் இது மூன்று வருடமாக ஏற்பட்டிருக்கும் வருடாந்திர வழக்கம். இனி இவனை வீட்டில் வைத்துக்கொண்டிருக்க முடியாது. வீட்டு முற்றத்தில் ஒரு சிகரட்டை ஆழமாக இழுத்துக்கொண்டே மதுரை போவோமா என்றான். நான் அவன் மனம் மாறுவதற்குள் சரி என்றேன். தூத்துக்குடியிலிருந்து பஸ்ஸில் ஆடி அசைந்து  நாலு மணிநேரம். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட். அவன் அலைக்கழிந்து கொண்டேயிருந்தான். கண்ணும் மனமும் காலும் ஒரு நிலையில் இல்லை. பழைய புத்தகக்கடைத் தெருவுக்குள் நுழைந்தான் நான் பின் தொடர்ந்தேன். பெரிய எழுத்துக் கதைகள் புத்தகங்களைக் கண்டதும் கால்களை மடக்கி கடைத்தெருவில் அமர்ந்து குழந்தையைப்போல் வாசிக்க ஆரம்பித்தான். நான் சுற்றிப் பார்த்துத் தேவையான புத்தகங்கள் ஒன்றிரண்டை எடுத்துக் கொண்டு காசு கட்டிவிட்டுப் பார்த்தால் சைத்ரீகனைக் காணோம். அவன் அடுத்த கடையில்  ஒரு புத்தகத்தைத் தீவிரமாய்த் தேடிக் கொண்டிருந்தான். சி.எல்.எஸ் என்கிற கிறித்தவ இலக்கியக் கழக புத்தக நிலையத்தில் சிறிது நேரம். வேறு வேறு பிளாட்பாரக் கடைகளில் சிலநேரம். அப்படியும் இப்படியுமாக அவன் அலைவதும் நான் பின் தொடர்வதுமாக மணி ஏழு ஆகியிருந்தது. திடீரென ப.சிங்காரத்தைப் பார்ப்போமா என்றான். அவரொரு எழுத்தாளர் என்று தெரியும். நான் அவர் புத்தகங்களைப் படித்ததில்லை. இங்கேதான் தங்கியிருக்கிறார் என்று ஒரு லாட்ஜ் பெயர் சொன்னான். புயலிலே ஒரு தோணியைப் பற்றி சில துண்டு துண்டான வார்த்தைகள். பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு விடுதி மாடிக்குப் போனோம் அறை பூட்டியிருந்தது. அவன் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளவில்லை. இது வழக்கம் என்பதுபோல் இருந்தது அவன் நடவடிக்கை. கீழே படியிறங்கி நின்றதும் கட்டபொம்மன் சிலையருகே ஒரு கிழவிக் கடை உண்டு சாப்பிடுவோமா? எனக் கேட்டான். மதுரை தோசை மதுரையின் காரச்சட்னி. நிறைந்து நடந்தோம். சைத்ரீகனின் கூடே நடப்பது எனக்கு ஏதோ திகில் படத்தின் யூகிக்க முடியாத அடுத்த காட்சியைப் போலிருந்தது. எப்போது என்ன செய்வான் என்பதைக் கணிக்க முடியாததே அவனிடம் ஒரு ஈர்ப்பையும் சுவாரசியத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது. சாப்பிட்டவுடன் ஒரு பீடாக்கடையில் நின்றான். அவனுக்கு எல்லோரையும் தெரிந்திருந்தது. அல்லது அப்படி நடந்துகொண்டான். நான் அவன் பின்னே நாய்க்குட்டியாய் தொடர்ந்தேன்.  

 பீடாவை சாலையோர நடைபாதையில் குத்தவைத்திருந்து ரசித்து சவைத்துத் துப்பினான். பிறகு எதோ அவசர வேலை இருப்பதுபோல எழுந்து உடையைச் சரிசெய்துகொண்டான். என்னிடம் ஒரு சிறு பயணப்பை. அவனிடம் அதுவுமில்லை.

பாடம் எடுக்கும் வாத்தியார் முகத்தைக் குழந்தைகள் ஏறிடுவதுபோல நான் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘’இப்போ ஸ்டேஷன் போனா ரெண்டு வண்டி கெளம்பும்.  ஒண்ணு போடிநாயக்கனூர் இன்னொன்னு ராமேஸ்வரம். எந்த வண்டி முதல்ல கெளம்புதோ அதில போவோம். புது வருச சூரியனை மலையில பாக்கலாமா கடல்ல பாக்கலாமா?’’

 ஒரு நாடக மேடையில் ராஜபாட் வேடமிட்டவன் வெளிப்படுத்தும் கம்பீரத்தோடு  இருந்தது அவனது அந்தப்  பேச்சும் உடல்மொழியும். என் பதிலுக்குக் காத்திருக்காமல் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். நாய்க்குட்டி மூச்சிரைக்கப் பின் தொடர்ந்தது.

————-

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் பாம்பன் பாலத்தைக் கடந்தது. சுற்றிலும் நீர் நடுவே ரயிலில் பயணிப்பது ஏதோ ஜாலக் கதைகளில் உலவுவதாக அந்த அதிகாலையில் உணர்ந்தேன். சைத்ரீகன் அறிதுயிலில் இருந்தான். எனக்கும் ராமேஸ்வரத்துக்கு வருவது இதுதான் முதன்முறை.  இராமேஸ்வரக் கடலில் முங்கி எழுந்தோம்.கோவிலுக்குப் போக அவனும் வலியுறுத்தவில்லை. எனக்கும் விருப்பமில்லை. ஈரத்துணி கடல் காற்றில் உலரும்வரை காத்திருந்தோம். முதலில் ராமர்பாதம் போக முடிவு செய்தான். அதற்கான பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் அவன் உடலில் ஒரு மாற்றம். பக்தர் கூட்டத்தோடு இருவரும் ராமர் பாதம் பார்த்துவிட்டுப் பிறகு சிற்றுண்டி முடிந்ததும் தனுஷ்கோடிக்குப் போவோமா என்றான்.  இருபுறமும் கடல் சூழ நடுவிலிருந்த சாலையா பாதையா என அறியாத தடத்தில் தனுஷ்கோடிக்கு நடந்தோம். யாரையோ அவசரமாகச் சந்திக்கப் போவதைப்போல சைத்ரீகனின் நடை வேகமெடுத்தது.

திடீரென அவன் என்னிடமிருந்தும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டான். அவன் நடை தூளியை ஆட்டுவது போல மாறியது. 

“அய்யோ பாவி மக்கா… சின்னப் பிஞ்சுகளே.. என் கிழவிகளே.. ஏய்..மைனிமாரே…” அவன் குரல் சடங்கியல் தன்மையை அடைந்துகொண்டிருந்தது.. ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன் நடந்த துயரை இப்போது நடந்ததுபோல பாவித்து அவன் ஓலமிட்டான். அவன் உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. திடீரென பாட்டி என்றான். அழுதான். கடலைப் பார்த்து கெட்டவார்த்தைகளை இறைத்தான். வானும் கடலும் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. என்னையும் அவனையும் தவிர அங்கு யாருமில்லை. கடல் நடுவே நாங்கள் சிறு தோணிகள் போல அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தோம்.

முன்னே போன தோணி திடீரென புயலில் சிக்கியது. கடல் அதைத் தூக்கி எறிந்தது. காற்று புரட்டி எடுத்தது. சுழலில் சிக்கிச் சின்னாபின்னமானது. பலமுறை கவிழ்ந்து முறிந்து கடைசியில் கரையில் வீசியது.

சுள்ளென்ற வெயில் ஆனால் சூடு தெரியாதபடி காற்று. “இதே டிசம்பர் மாதம்தான். அந்த ஓலம் என்னைக் குலைக்கிறது அய்யோ. உப்புநீரில் மூழ்கிய உயிர்களே, மணல் குவியலில் மூச்சுத்திணறி மரித்த உயிர்களே. என் மூதைகளே. என் ரத்தமே” அவன் உடலில் இதுவரை நான் காணாத ஆவேசம் ஏறியது. நான் பின்னே நடக்க என் முன்னே ஒரு நாடக ஒத்திகையையொத்த ஒன்றை  நிகழ்த்திக் கொண்டிருந்தான். நான் மெல்ல துடுப்பிட்டு அந்தப் புயலில் சிக்காமல் கரையேறினேன்.

தனுஷ்கோடியை நெருங்கியதும் அவன் நடத்தை இன்னும் விநோதமானது.   

“தொன்முது கோடியே உன்னைக் காண முதன்முதலில் வந்தேன். எனெக்கென்ன தருவாய்”  கடல் மணலை வாரி வாரி உடலில் இட்டுக்கொண்டே கேட்டான்.

“கானலம் பெருந்துறையே உன் ஞாழல் பூக்களைப் பறிக்க வந்திருக்கிறேன். எங்கே உன் பூக்களைச் சொரி.”

“போட் மெயில் அதோ வருகிறது.’’

“அதோ சூறைக்காற்று புயல்.”

“அன்று கிறிஸ்துமஸ் ஆராதனை யேசுவே.”

“மழை காற்று சுழல்.”

“நரிகளின் ஊளை ஊ ஊ”

“குழந்தைகள் மணல்வீடுகள் அய்யோ”

 “மணல் காற்று வீசுகிறது”

“அய்யோ இரயில்.”

ஊ ..ஊ .. அவன் வாயில் வலது கையை செங்குத்தாக உதட்டோடு சேர்த்து அணைகட்டி கூ.. சிக்கு புக்கு என்று ஊளையிட்டபடி ஓடினான்.

இப்போது ரயில் முன் பக்கம் திடீரெனச் சரிந்தது. ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன.  பிறகு மொத்தமாய் மணலில் கவிழ்ந்தது. கீரிப்பிள்ளை ஈர மணலில் புரண்டு உடலைப் புரட்டுவதுபோல் மணலில் உருண்டுகொண்டிருந்தான்.

 நான் செய்வதறியாது அவனை அப்படியே விட்டுவிட்டு பத்து பதினைந்து குடில்கள் இருந்த அந்தச் சிதிலமடைந்த ஊரைச் சுற்றிப் பார்க்க எழுந்தேன். அறுபத்துநான்கில் நிகழ்ந்த புயல் தனுஷ்கோடியைச் சின்னாபின்னமாக்கி இருந்தது. பத்திரிகைகளில் பிரதான செய்தியாகப் படித்தவை நினைவுக்குள் எழுந்தன. மெட்ராஸ் எழும்பூரிலிருந்து வரும் படகு மெயில் என்று மக்கள் அழைக்கும் போட் மெயில் ரயில் பயணிகளோடு கடலில் கவிழ்ந்தது. புயலில் பலியான மனிதர்கள். புகைப்படங்கள். படப்பிடிப்புக்கோ வழிபாட்டுக்கோ வந்திருந்த ஜெமினியும் சாவித்திரியும் ராமேஸ்வரத்தில் சிக்கித் தப்பிப் பிழைத்தது. இறுதியில் அரசு தனுஷ்கோடியை இனி மனிதர்கள் வாழமுடியாத இடமாக அறிவித்தது. எல்லாம்.

தேவாலயத்தின் மேல் காரை இருபது வருட உப்புக்காற்றில்  கரைந்து, சிரங்கு பிடித்த கைபோல, ஆனால் இன்னும் கம்பீரமாய் மணல் நடுவே நின்றுகொண்டிருந்தது. கிழக்கு நோக்கி நடந்தேன். இருவர் நிற்பதற்கேற்ப சிறு கூடாரம் போன்ற ஒரு அறை அநேகமாக அது ஏதோவொரு கட்டடத்தின் மேல்மாடமாக இருக்கலாம். நான் நடந்துகொண்டிருக்கும்போது மெல்லிய சந்தனநிறமும் தந்தநிறமும் கலந்த மணற்பரப்பின் நடுவே துருவேறிய காப்பி நிறத்தில் நீண்ட இரும்புத் துண்டுகளைப் பார்த்தேன். நெருங்கியதும் தெரிந்தது அது தண்டவாளம். மேல்நோக்கி வளைந்தும் பக்கவாட்டில் நெளிந்தும் இடையே இடையே  துண்டாகியும் குறுக்குக் கட்டைகளோடு தண்டவாளம். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இன்னும் உறுதியாக இன்னும் வலுவாக இருந்தது.   மேற்கூரை இல்லாமல் சாய்வோடு தூரத்தில் ரயில் நிலையம் அதே சிதிலங்களோடு. மெட்ராசிலிருந்து போட் மெயிலில் வந்திறங்கி இங்கிருந்து பிரிட்டிஷ் காலத்தில்  தலைமன்னாருக்கு படகில் போயிருக்கிறார்கள். மெட்ராஸ் இலங்கை போக்குவரத்து அப்போது பிரசித்தமாயிருந்திருக்கிறது.

 மீண்டும் மாதாகோயில் அருகே வந்தேன். யாரும் இல்லை. உள்ளேயிருந்து ஒரு பிரார்த்தனைக் குரல். அவன்தான் உள் கூடத்தில் பீடத்தின் முன்னே மண்டியிட்டு நின்றிருந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர். நான் தொந்தரிக்கவில்லை. “மரியே அந்த ஜனங்களை ஏன் தண்டித்தாய். தேவ மாதாவே அவர்கள் ஆத்மாக்களை ஸ்வஸ்த்தப்படுத்தும். தேவ கன்னியே உம்மை மன்றாடுகிறேன்.” அவனது குரலில் ஏற்ற இறக்கங்கள் கூடி வெளியிலிருந்து கேட்க மக்கள் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வதுபோல் தோன்றியது. என் காதுகளுக்குள் அவன் குரலோடு பியானோ சத்தம் கூடக் கேட்டது. நான் கொஞ்சம் தள்ளி நடந்தேன். ஒரு தொடக்கப்பள்ளி. சுற்றுச்சுவரில் ஒரு கல்வெட்டு. குழந்தைகளின் ஆரவாரம் கேட்டது. தூரத்தில் ஆலயமணிச் சத்தம். சைத்ரீகனோடு அலைந்த ஒருநாளிலேயே எனக்கும் மாயாஜால அனுபவங்கள் நடப்பதாக நினைத்தேன். பசித்தது. பையிலிருந்த கடலை உருண்டையை வாயிலிட்டேன். தாகம் எடுத்தது. கொஞ்ச தூரத்திலிருந்த குடிசையை நோக்கி நடந்தேன். தண்ணீர் உப்பு கரித்தது. குடில் நிழலில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும்போது அவன் வந்து சேர்ந்தான். நான் பையிலிருந்து எடுத்த கடலை உருண்டையை நீட்டினேன். அவன் என்னை உதாசீனப்படுத்திவிட்டு குடிசைக்குள் நுழைந்து வெளியே வருகையில் ஆளுக்கு ஒரு தட்டில் மீன் சாப்பாடு கொண்டு வந்தான். நான் நிச்சயம் ஒரு தேவதைக் கதைக்குள் இருப்பதாக மனம் கற்பனை செய்தது. சாப்பிட்டு முடிந்து நான் சற்று கண்ணயர்ந்தேன். இனி இப்போது வீட்டுக்குத் திரும்புவேன் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. முழித்துப் பார்த்தபோது சைத்ரீகன் மணலைக் குவித்து  தண்டவாளம் செய்து அதன் குறுக்கே படுத்திருந்தான். கடல் பக்கம் பார்த்தபடி அவன் தலை இருந்தது.

நான் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தி மெல்லச் சாய்ந்துகொண்டிருந்தது. வானமும் கடலும் ஒரே நிறத்தில். தந்த நிறத்தில் மணற்பரப்பு . மூன்று நிறக் கடல்கள் என நினைத்துக் கொண்டேன். கரையை ஒட்டி முட்டியளவு தண்ணீரில் புயலில் உருக்குலைந்த படகொன்று கறுத்த நிறத்தில் ஓர் ஓவியம்போல் நின்றுகொண்டிருந்தது. அதன் முதுகில் வெள்ளையாய் ஒரு பறவை.

நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனது குரல்வளையிலிருந்து வழமையான சடங்கோசை எழும்பியது. நாரை.. அதோ சைபீரிய நாரை..  கூக்குரலிட்டான். பித்துப் பிடித்ததுபோல எழுந்து படகை நோக்கி ஓடினான். அந்த வெள்ளைப் பறவை இவன் அருகில் வரும்வரை காத்திருந்து சட்டென எழுந்து  பறந்தது. நானும் இவனது ஓட்டத்தைப் பார்த்து சிறிது இடைவெளியில் பின்னேயே ஓடினேன். அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. படகு அருகில் நான் வந்தபோது சைத்ரீகன் கடலுக்குள் சற்று தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தான். முட்டியளவு நீர் இப்போது தொடையளவு இருந்தது. அவன் ஓடிப்போன நீர்ப்பாதை  மட்டும் சிவப்பாக இருந்தது. ஏதேனும் உடைந்த மது புட்டி கால்களைக் கிழித்து ரத்தம் ஒழுகி இருக்கலாம் . தூரத்தில் அவனைப் பார்த்தேன். இப்போது இடுப்பளவு நீரில் ஓடிக்கொண்டிருந்தான்.

கடல் சிவப்பாய் மாறிக்கொண்டிருக்க அவன் கடலுக்குள் ஓடினான். தொலைதூரம் தொலைதூரம் என் கண்ணுக்கு எட்டா தூரம் வரை. தொடுவானத்தை நோக்கி. பிறகு அவனைக் காணவில்லை. நான் சில யுகங்கள் காத்திருந்தேன். கடலில் சிவப்பு மேலும் பரவியது. அது வானத்துக்கும் ஏறியது. சைத்ரீகனைக் காணவில்லை. இப்போது முழுதும் கண்ணிலிருந்து மறைந்துவிட்டான். நான் கடலையும் ஆகாயத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீலக் கடலும் நீல வானமும் சிவப்பாய் மாறி அதுவொரு தீக்குறியாய் எண்ணி மனம் தவித்துக் கொண்டேயிருந்தது.  

நான் பார்த்துக் கொண்டேயிருக்கக் கடலின் மேற்பரப்பில் சில சித்திரங்கள் தோன்றின ரத்த நிறத்தில். துல்லியமான விவரணைகளுடன் பெரிய கித்தானளவு சித்திரங்கள். எல்லாம் ரத்த நிறத்தில். ஆதிகால குகை ஓவியங்களிலிருந்து நவீன மேற்கத்திய ஓவியங்கள் வரை நினைவூட்டும் பலப்பல ஓவியங்கள் மிதந்து அலையோடு வந்து கரையில் மோதி அழிந்தன. அந்தப் பக்கம் கடலிலிருந்து மெல்ல மெல்ல சித்திரங்கள் ஒரு திரவம் கசிவதுபோல் வானத்தில் பரவிக்கொண்டிருந்தன. ரத்த வண்ணத்தில். நான் அந்தக் காட்சியின் மாந்திரீகத்தில் மயங்கி கரையில் சிதறிக்கிடந்தேன். கண்கள் மெதுவாய் மங்கியது.

 திடீரென தூரத்தில் வெள்ளை சிறகோடு கடலிலிருந்து ஒரு பறவை மேலெழுந்து பறந்தது. உயர  எழும்பியபோது கறுத்த வண்ணம் அதன் இறக்கைகளில் மின்னியது அதன் அலகும் முகமும் சிவப்பாக  ஒளிர்ந்தது.

1 COMMENT

  1. மனம் நிரப்பும் கதை. தனுஷ்கோடி துயரம், அதை கதையாக்கிய விதம், சைத்ரீகனின் செயல் என அனைத்துக் கூறுகளும் சிறப்பு. சைத்ரீகன் பாத்திரமற்ற பாத்திரமாய் கதை முழுக்க நிறைந்திருக்கிறான். அவனை கண்டடைவதும் கதைக்குள் கதையாக பரிணமிக்கிறது. மகிழ்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.