தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது -பகுதி-1

ஸ்ரீ நேசன் திருப்பத்தூர் வாணியம்பாடிக்கு அருகில் குந்தாணிமேடு கிராமத்தில் பிறந்தவர். இவரின் முதல் கவிதைத்தொகுதி “காலத்தின் முன் ஒரு செடி” 2002-லும், இரண்டாவது கவிதை நூல் “ஏரிக்கரையில் வசிப்பவன்” 2010-லும் வெளிவந்தன. மூன்று பாட்டிகள் என்கிற மூன்றாவது கவிதைத் தொகுப்பும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஜீ.முருகனுடன் வனம் சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். ஏலகிரி, ஜவ்வாது, நாயக்கனேரி போன்ற மலைப்பகுதிகளில் பல்லாண்டுகளாக இலக்கியக்கூடல்களை ஒருங்கிணைத்து வந்தவர்.தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கிருக்ஷ்ணகிரி அரசு

கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கல்வித்துறை சார்ந்து “தமிழின் இருமுதல் நாவல்கள்”, “சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள்” ஆகிய ஆய்வுநூல்கள் வெளிவந்துள்ளன. 2011-ல் உயிர்மை சுஜாதா அறக்கட்டளையின் விருதும், 2018-ல் இலக்கியவீதியின் அன்னம் விருதும் பெற்றுள்ளார். சாகித்திய அகாதமி, Muse India.com- ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் மற்றும் ஜம்மு பல்கலைக்கழகம் நடத்திய கவிதை தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். கல்லூரியில் மாணவர்களின் வாசிப்புத்திறன் வளர்க்க “நூல்வாசி” என்ற அமைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

  1. உங்களின் இளமைப் பருவம் எப்படிப்பட்டதாக இருந்தது? அப்பருவத்தின் வழியாக உங்களுக்குள் இருந்த கவித்தன்மை எப்படிப் படிப்படியாக உருமாறி ஒரு நவீன கவிஞராக உங்களை அடையாளப்படுத்தியுள்ளது?

அதிர்ஷ்டவசமாக என் குழந்தைப் பருவம் தொட்டு புத்தக வாசிப்புப் பழக்கம் எனக்குக் கிடைத்திருந்தது. அப்பா, தான் வாசகராயிருந்த வாராந்திர ராணியின் சிறுவர் பகுதியை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். அதில் இடம்பெற்றிருந்த சிறுவர் பாடல்கள் காரணமில்லாமல் ஈர்த்திருந்தது. அதேநேரம் சிறுவர் தொடர்கதையும். கூடவே வானொலியில் சிறுவர் சோலை நிகழ்ச்சியைக் கேட்கவும் என்னைப் பழக்கப்படுத்தியிருந்தார். குறிப்பிட்ட நாட்களில் அவற்றுக்காகக் காத்திருப்பேன். அகத்தின் தேவைக்காக அது காட்டும் சமிக்ஞையிலேயே நாம் புறத்தில் பயணிக்கிறோம்; கண்டடைகிறோம். என் அப்பா, அம்மாவழி தாத்தாக்கள் இருவருமே ராமாயண, பாரத கதை வாசிப்புப் பிரியர்கள். அவர்களோடு அந்த உலகத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளேன்.

அப்பாவுக்கு வாணியம்பாடியில் தையல்கடை இருந்ததால் ஆறாம் வகுப்பு முதல் நகரத்தில் பயின்றேன். எங்கள் கிராமத்திலிருந்து உயர்நிலைப் படிப்புக்காக நகரத்துக்குப் போன முதல் ஆள் நான்தான். மாலை, பள்ளி முடிந்தாலும் இரவுதான் அப்பாவுடன் ஊர் திரும்ப முடியும். பக்கத்திலிருந்த பெட்டிக் கடையில் குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களையும் ஓசியில் வாசிக்கும் வாய்ப்பமைந்தது. மாலை நேரங்களை அப்படித்தான் கழிப்பேன். பத்தாம் வகுப்பு பயின்றபோது கண்ணதாசன் மறைவை ஒட்டி, ராணியில் இராம.கண்ணப்பன் எழுதிய வாழ்க்கைத் தொடர் வந்தது. அதை வாசிக்கையில் என் மனதில் பதிந்த “கவிஞன்” என்கிற சித்திரம்தான் எனக்குள் இருந்த கவிஞனை உசுப்பியதாக நம்புகிறேன்.

மேல்நிலைப் பள்ளியில் படிக்கையில் காதலிக்கத் துணிந்த நண்பனுக்குக் காதல் கவிதை உபயம் செய்யுமளவுக்கு வளர்ந்து விட்டிருந்தேன். அப்படி எழுதப்பட்டவை மரபுக் கவிதையின் சாயல் கொண்ட புதுக்கவிதைகள். கல்லூரிக்கு வந்தபின்பே அப்துல் ரகுமான் உருவாக்கிய கவிராத்திரி நிகழ்வின் கவிதைப் போட்டிகளுக்காகப் புதுக்கவிதை எழுதும் தூண்டல் பெறுகிறேன். ஆண்டு மலரின் வாசகன் நான். மூன்றாம் ஆண்டில் “கரும்பலகை” என்ற பொதுத்தலைப்பில் எழுதிய என் கவிதை முதல் பரிசு பெற்றது. பரிசாகக் கிடைத்த அப்துல் ரகுமானின் பால்வீதியும், (ஜூ.வி.யில் தொடராக வந்து நூலாக்கப்பட்ட) கவிதைகள் குறித்த கட்டுரை நூல்களும் எனக்குள் புதுக்கவிதையின் உண்மையான விதையைப் பதித்தது. அதன் பின் கவியரங்க பாணியிலான கவிதைகளை எழுதுவதிலும், கவியரங்குகளில் பங்கேற்றவாறும் இருந்தேன். இக்காலகட்டத்தில்தான் கவிஞர்கள் ராமலிங்கம், குலசேகரன் அறிமுகமாகிறார்கள். அவர்களோடு சீரிய இலக்கிய கவிதை நூல்களும் அறிமுகமாகின்றன. நவீன கவிதைகளின் திசைக்கு இட்டு வந்த கவிதை நூல்கள், விக்ரமாதித்யனின் ஆகாசம் நீல நிறம், கலாப்ரியாவின் மற்றாங்கே, ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை, பசுவய்யாவின் யாரோ ஒருவனுக்காக ஆகியவை. தொடர்ந்து நவீன கவிதை நூல்களைத் தேடி வாசித்துக் கொண்டிருந்தாலும் எழுதும் துணிச்சல் இல்லாமலும் தேவை இல்லாமலும் இருந்தேன். வாசிப்பே போதுமானதாக நிறைவளிப்பதாகவும் இருந்தது. வாசிக்கத் தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்பே எழுதிய முதல் கவிதையைப் பிரசுரத்துக்கு அனுப்பினேன். அப்போதெல்லாம் ஒரு கவிஞரின் ஒரு கவிதைதான் பிரசுரமாகும். ஆகுமா ஆகாதா எனக் காத்திருக்கவேண்டும். இப்போது யோசித்துப் பார்க்கையில் தோன்றுகிறது. வாசிப்புப் பழக்கம் உரிய வயதில் எனக்குக் கிட்டாமல் போயிருந்தால் எனக்குள் இருந்த கவிஞன் வெளிப்படாமலேயே போயிருப்பான்.

  1. வருடத்திற்கு பத்து கவிதைகளுக்கு மேல் எழுதினால் கூட போதும் என்கிறீர்கள்? குறைவாக எழுதுவது அல்லது அதிகம் எழுதுவது ஒரு கவிஞனை எந்தவகையில் மாற்றியமைக்கிறது?

நான் குறைவாக எழுதுவதில் நிறைவுறுபவன் என்பதாலேயே இந்தப் பார்வையைக் கொண்டிருக்கிறேன். போதும் என்று சொல்லமாட்டேன். அவ்வளவுதான் முடிந்திருக்கிறது. தோன்றும் எல்லாவற்றையும் எழுதிவிடாதவாறு எனக்குள்ளிருக்கும் ஒரு தணிக்கையாளன் இதன் பின்புலத்திலிருக்கிறான். தவிர தானாகத் தோன்றி எழுதத் தூண்டுவதைத் தவிர நானாக முயலவே மாட்டேன். அத்தகைய முயற்சிகள் எனக்குச் சாதகமாக எப்போதும் இருந்ததில்லை. அதிலும் எழுதி முடித்தவற்றிலும் முழு திருப்தித் தந்த கவிதைகளையே நான் பிரசுரத்துக்குத் தருகிறேன். ஏனையவற்றைக் கைவிடுகிறேன். அல்லது காலம் தாழ்த்தி மீண்டும் எழுதிப் பார்த்து திருப்தி தந்தால் பயன்படுத்திக்கொள்கிறேன். இவ்வாறு படைப்பாக்கத்தில் முழு கவனத்துடன் இருப்பதால் வாசிப்பவரிடத்தும் தகுதியான இடத்தைப் பெறமுடியும் என நம்புகிறேன். அத்துடன் கவிதைகளைக் கையாளுவதில் மிகச் சிரத்தையும் பொறுப்பும் நேர்த்தியும் கொள்ள முடிகிறது.

  1. வாசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்களுக்கு அடிப்படையில் வெவ்வேறு வகையான வாசிப்பு முறைகள் இருக்கும். இளமைக் காலம் முதல் தற்போது வரை உங்களுக்கான வாசிப்பு முறை என்பது எப்படிப்பட்டதாக உள்ளது?

கவிதை வாசிப்புக்குச் சற்று மேலதிக முக்கியத்துவம் தருகிறேன் எனினும் இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் எனக்கு நாட்டமுண்டு. கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிபவன் எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில் நாட்டம் குறைவுதான். தேவைக்கு மட்டுமே அதைப் பயில்கிறேன். கல்லூரிப் படிப்பின்போதே நான் சமகால இலக்கியப் பரிச்சயமும் வாசிப்பும் பெற்றிருந்ததால் நான் நவீன இலக்கியத்தின் மாணவன் என்றே என்னைக் கருதினேன். தீவிர வாசிப்புக்குள் வந்த சமயம் க.நா.சுவை மிக ஆர்வத்துடன் தேடி வாசித்தேன். அவரை என் வழிகாட்டியாகவும் வரிந்துகொண்டேன். ஏறக்குறைய என் வாசிப்புக்கு மானசீகமான குரு அவரே. அவர் பரிந்துரைத்த நூல்களின் அடிப்படையிலேயே அமைந்தது என் ரசனையும் தேடலும். அதனால் பெரும்பாலும் fiction சார்ந்தே என் ஈடுபாடு இருந்தது. அதிலும் குறிப்பாக மொழிபெயர்ப்பில். ரஷ்ய இலக்கியங்கள், நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதமி நூல்களைப் பெரும்பான்மை வாசித்திருக்கிறேன். ஆங்கில வாசிப்பு எனக்குப் பழக்கமில்லை என்பதால் மொழிபெயர்ப்புதான் அதை ஈடுசெய்கிறது. மொழிபெயர்ப்பில் கவிதை நூல்கள் வந்தால் அதற்கு அதிக முக்கியத்துவம் தருவேன். இன்றுவரை நல்ல மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் முழுநிறைவைத் தருபவையாக உள்ளன.

  1. சட்டென்று ஏதேனும் கணத்தில் கவிதை ஒன்று மனதில் தோன்றும் போது அதை மனதில் முழுவதும் எழுதிப் பார்த்து விடுவீர்களா அல்லது தாளில் எழுதித் திருத்தங்கள் செய்து செம்மைப்படுத்துவீர்களா?

மனதில் தோன்றியதற்கும் அதை எழுதுவதற்கும் இடையே மனதின் செயல்பாடு ஒன்று நிகழ்கிறது. அது வேகமாக வரிகளைக் கோர்க்கிறது. அதை ஒரு கலைப்பொருளாகச் செதுக்குகிறது. கவிதையின் முத்தாய்ப்பான வரிகளுக்கு முயல்கிறது. சில அரிதான நேரங்களில் மட்டுமே கவிதை எழுதுவதற்கு முன்பே முழுமையாக நமக்குக் கிடைக்கும். பல நேரங்களில் முதல் வரி மட்டும் கிடைத்து கொஞ்சமாக வளர்ந்து நிற்க, அதை எழுதும் செயல்பாட்டில் தொடரும்போது அதுவாகவே நாம் சற்றும் எதிர்பாராத வேறுதிசையில் கொண்டு சென்றும் முடித்துத் தருகிறது. பெரும்பாலும் நான் கிடைக்கும் கவித்துவப் பொருளைச் செறிவான மொழிப்படுத்த முயல்பவனாகவே உள்ளேன். எழுதி முடித்த பின்பும் ஒரு கவிதை போதுமென நான் விட்டு விடுவதில்லை. மீண்டும் மீண்டும் ஒரு நாளின் பல மனநிலைகளில் – பல நாட்களாகக் கூட அவ்வப்போது – அதை வாசிப்பில் சீண்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஓசை கருதியோ, நயமான மாற்றுச் சொல் பெற்றோ திருத்தம் செய்து கொண்டேயிருப்பேன். முழு திருப்தி ஏற்படும்வரை. நான் நிச்சயமாகச் சொல்வேன். என் ஒவ்வொரு கவிதையும் இவ்வகையில் குறைந்தது ஐம்பது முறைகளுக்கும் குறையாமல் வாசிக்கப்பட்டிருக்கும்.

  1. முதல் கவிதை இன்றும் நினைவிலிருக்கிறதா? அதே நேரத்தில் பிரசுரமான முதல் கவிதை எது? இன்று அவற்றையெல்லாம் நினைவில் நிறுத்தும்போது எப்படிப்பட்ட உணர்வுகள் வருகின்றன?

ஆமாம், 1997-98 வாக்கில், முதல் கவிதை ” சிக்கல்”, சுப்ரபாரதிமணியன் நடத்திய “கனவு” இதழில் வெளிவந்தது. ஒரு மனநிலைப் பிறழ்வில் சிக்குவது குறித்தது. இலக்கிய உலகில் சிக்கிக்கொண்டதைப் படிமப்படுத்தியதாகவும் அமைந்தது. (அதற்கு முன்பு அச்சில் வந்தவை இசுலாமியாக் கல்லூரியிலும், புதுக்கல்லூரியிலும் பரிசு பெற்ற கவிதைகளின் ஆண்டு மலர் பதிவுகள்தாம்) அப்போதுதான் ராணிதிலக் அறிமுகமாகியிருந்தான். இருவரும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தோம். வாசிப்பை மட்டுமே கொண்டிருந்த நான், எழுதவேண்டும் எனத் தூண்டுதல் பெற்றது அவனுடனான உரையாடல்களுக்குப் பிறகுதான். இருவரும் எழுதியவற்றைப் பகிர்ந்து கொள்வோம். ஒருவருக்கொருவர் ஆலோசனை பெற்று திருத்தமும் செய்துகொள்வோம். தொடர்ந்து அழகியசிங்கரின் “நவீனவிருட்சம்” எங்கள் கவிதைகளைப் பிரசுரித்தது. 2000-இல் “புது எழுத்து” வருகிறது. இதழின் பின்னட்டையில் பிரசுரிப்பது; நான்கைந்து கவிதைகள் மொத்தமாகப் பிரசுரிப்பது என மனோன்மணி கவிதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். ஏற்கனவே ஜீ.முருகன் பரிச்சயமெனினும் பிறகே அவர் மூலம் சா.தேவதாஸ், கண்டராதித்தன், குமார் அம்பாயிரம், பழனிவேள், அசதா என நண்பர்கள் வட்டம் விரிகின்றது. ஏற்கனவே உள்ளூரில் குலசேகரன், நீலகண்டன், சுரேஷ் ஆகியோருடன் புதிய நண்பர்களும் இணைய வடதமிழகத்தில் நவீன இலக்கியம் தடம் பதிக்கிறது. ஜவ்வாது மலை, ஏலகிரிமலை, பஞ்ச பாண்டவர்மலை என நடத்திய இலக்கிய நிகழ்வுகள் மூலம் ஓர் இயக்கம் போன்ற செயல்பாட்டூக்கம் பெறுகிறோம். கவிதைப்பித்துத் தலைக்கேறியிருந்த காலம் அது. வாழ்வில் கவிதையைத் தவிர வேறெதுவும் முக்கியமில்லை என அதிலேயே உழன்ற மனநிலை. படிப்பு, வேலை, திருமணம் என்ற லௌகீக வாழ்வின் கடமைகளில் கொஞ்சமும் ஒட்டுதலில்லாமல் ஒரு விலகிய தன்மை. பின் திருமண நெருக்குதலுக்கு ஆளானபோதே வேலை பற்றியும் வருவாய் குறித்தும் கவலை கொள்ள நேர்ந்தது. அதற்குள் இளையவர்களெல்லாம் மேற்படி விஷயங்களில் முந்திச்சென்றுவிட்டதை அறிந்து உள்ளூர அவமானம் வேறு. ஆனாலும் இன்று ஒரு கவிஞனாக உருத்திரண்டு வந்திருப்பதில் அந்த இழப்புகளெல்லாம் இழப்பே அல்ல என்றே படுகிறது.

  1. புதுக் கவிதைகளும், நவீன கவிதைகளும் ஒரு நூற்றாண்டைத் தொடப்போகின்றன. நவீன கவிஞர்களில் முக்கியமான ஒருவராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இருபது நூற்றாண்டுகளாக பல்வேறு வகைகளில் கவிதையாகவே சிந்தித்து வளர்ந்த தமிழ் மனம், இருபதாம் நூற்றாண்டில் பற்றிக்கொண்ட புதிய வகைமை புதுக்கவிதை. பாரதியின் வசன கவிதைகளைப் புதுக்கவிதையின் தோற்றுவாயாகக் கொண்டால் நூற்றாண்டைக் கடந்துவிட்டது. ஒவ்வொரு கால் நூற்றாண்டுக்கும் ஒருதலைமுறை போல நான்கைந்து படிநிலையைக் கண்டிருக்கிறது. இதுவரை சில நூறு கவிஞர்களின் பங்களிப்பில் ஒரு மாபெரும் இயக்கமாக நிகழ்ந்து கொண்டுவருகிறது. கணிசமாக ஒவ்வொரு படிநிலையிலும் நான்கைந்து கவிஞர்களேனும் தமிழ் நவீன கவிதைக்குக் குறிப்பிடும்படியான பங்களிப்பைச் செய்துள்ளவர்களாகக் குறிப்பிட முடியும். மணிக்கொடி புதுக்கவிதைக்கு வித்திட்டிருப்பினும் எழுத்தில் தாம் அதன் விளைச்சல் மேம்பட்டிருந்தது. எழுத்துக் கவிதைகளில் குறுகிய வட்டத்தில் வாசிக்கப்படும் இருண்மைத் தன்மை மேலோங்கியிருந்ததால் அதற்கு எதிரிடையாக வானம்பாடி ஜனநாயகத்தன்மையும் சமூகப் பார்வையும் கொண்ட கவிதைகளுக்கு முக்கியத்துவம் தரும்வகையில் வெளிப்படுத்திக்கொண்டது. ஆனால் வானம்பாடிக்குப் பிறகு அதன் பிரகடனத்தின் தீவிரத்தோடு குறிப்பிடும்படியான வேறு இதழ்கள் இல்லை. அதில் பங்காற்றியவர்கள் பின்பு அரசியல், கல்வி, திரைப்படம் என வருவாயும் அதிகாரமுமிக்க துறைகளில் தம்மை நிறுவிக்கொண்டார்கள். எழுத்தின் போக்கைப் பின்பற்றி பிறகு வெளிவந்த பற்பல சிற்றிதழ்களே புதுக்கவிதையை நவீன கவிதையாகப் பரிணமிக்கச் செய்தன. அத்தகைய இதழ்களின் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புமிக்க பணியாக அதைச் செய்தார்கள். க.நா.சு., சி.சு.செல்லப்பா, பிரமிள் மூவரும் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கான பணிகளில் முக்கிய பல கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். வல்லிக்கண்ணன், ராஜமார்த்தாண்டன், கரிகாலன், போன்றோர் தமிழ்க் கவிதை வரலாற்றை வெவ்வேறு காலகட்டத்தில் பதிவு செய்துள்ளார்கள். சு.வேணுகோபால் முழு வரலாற்றை எழுதிமுடித்துள்ளதாக அறிகிறேன். பிரமிள் தொடங்கிவைத்துள்ளார் எனினும் ஆத்மாநாம்தான் சமூகப் பார்வையை நவீன கவிதைக்குள் கொண்டுவந்து அகவயக் கவிதை புறவயக் கவிதை என்கிற வேறுபாட்டைக் களைந்தவர். இத்தருணத்தில் “நவீன கவிதை” என்ற பெயரில் இதழொன்றைத் தொடங்கிய விக்ரமாதித்யன் நம்பியைக் குறிப்பிட்டாக வேண்டும். சமகாலத்தின் கவிதைகளை அடையாளங்கண்டு விக்ரமாதித்யன் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார். இன்று நவீன கவிதை தனி மனிதம், சமூகம் என இருவேறு நோக்கையும் ஒருங்கிணைத்து சமநிலைப்படுத்தியுள்ளது. இந்த ஒரு நூற்றாண்டுப் பயணத்தில் ஆற்றல்மிக்க கவிஞர்கள் எனக் குறிப்பிட ஒரு ஐம்பது பேரையேனும் இப்பின்னணியில் வளர்ந்து வந்திருப்பவர்களாகக் கூற முடியும். இன்று தமிழில் கவிதையெழுத வரும் ஒருவர் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து கவிதை பயணப்பட்டு வந்ததைக் குறித்த ஒரு பார்வையைப் பெற்று வருவது அடிப்படையானது போலவே பாரதி தொடங்கி பிச்சமூர்த்தி வழியாக வளர்ந்த நவீன கவிதைகள் குறித்த முழுப் பிரக்ஞையுடையவராக இருக்கும்போது தமிழ் நவீன கவிதை மேலும் உச்சங்களைத் தொட முடியும்.

  1. சமகாலத்தில் நவீன கவிதைகளின் போக்கு எப்படி இருக்கிறது? நிறைகள், குறைகள் இரண்டையும் பேசலாம்.

நாங்கள் எழுத வந்த தொண்ணூறுகளில் அமைப்பியல் முதலான கோட்பாடுகளும், லத்தீன் அமெரிக்கப் புனைவுகளும் தமிழில் அறிமுகமாகிப் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதுவரையிலான இலக்கிய மதிப்பீடு படைப்பாளியை முதன்மைப்படுத்தியிருந்த நிலையில் இக்காலகட்டம் முதலாகப் படைப்பை மையப்படுத்திப் பார்க்கும் புதிய அணுகுமுறை தமிழ்ச் சூழலில் அறிமுகமானது. ரசனை பூர்வ விமர்சனங்களுக்கு மாற்றாகக் கோட்பாட்டுப் பார்வையின் குறுக்கீடு முக்கியத்துவம் பெற்றது. இது விமர்சனத்துறையைக் காட்டிலும் படைப்பு ரீதியாக ஒரு புதிய விழிப்புணர்வைக் கொணர்ந்தது. மீட்சியின் வாயிலாகவும் தொடர்ந்து உலக கவிதை மொழிபெயர்ப்புகளின் மூலமாகவும் பிரம்மராஜனின் பங்களிப்புகள் கவிதை உருவாக்கத்தில் உள்முகமாக ஒரு மாற்றுணர்வை ஏற்படுத்தவே செய்தது. கவிதைகளில் கதைத்தன்மையும் கனவுத்தன்மையும் கூடிய படிமமாக்கப்பட்ட மிகுபுனைவம்சம் மிகுந்து கவிதைக்குப் புதிய தளமமைத்தது. இத்துடன் பெண்ணியத்தை அழுத்தமாக வெளிப்படுத்திய பெண் கவிஞர்களின் வரவால் கவிதை மொழியின் தன்மையில் அசைவு ஏற்பட்டது. கூடவே தலித் அரசியல் வெளிப்பாடுகள் கவிதைகளின் சமூகப் பார்வைக்கு அழுத்தம் தந்தன. கவிஞர்களை முன்வைத்து வகைப்பட்டிருந்த தமிழ்க் கவிதை இன்று புதிய போக்குகளை உள்வாங்கிக்கொண்ட பல கிளைகளாகப் பரிமாணம் பெற்று வளம் கண்டுள்ளது. ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் கவிதையரவு தோலுரித்துப் பொலிவடைந்தவாறு உள்ளது. இன்று அச்சு ஊடகம் மின் ஊடகமாகப் பிறழ்ந்ததில் கவிதையும் அன்றாடம் பகிரப்படும் செய்தியளவுக்கு மலிவாகியிருக்கிறது. நாங்கள் எழுதவந்த காலத்தில் ஒரு கவிதையை இதழுக்கு அனுப்பிவிட்டு அதன் தேர்வுக்கும் பிரசுரத்திற்கும் காத்திருப்போம். நிராகரிக்கும் ஆசிரியர்களும் இருந்தார்கள். இன்று எவ்வளவு எழுதப்பட்டாலும் உடனுக்குடன் வெளிப்படுத்திக் கொள்ளும், வெளிப்படுத்த முடியுமென்பதாலேயே எழுதிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது. இச்சூழலின் விளைச்சலைப் பொறுத்திருந்தே அறியமுடியும்.

  1. வாழ்க்கையில் லௌகீகப் போக்குகள் கவிதையின் மீதான பித்தைச் சற்று குறைத்தது என்கிறீர்கள்? இது எந்தளவுக்கு உங்கள் சமகால கவிதைகளில் தாக்கம் கொள்கிறது?

கல்லூரி நுழைவோடுதான் இலக்கிய வாசிப்பும் பரிச்சயம் ஆனது. ஒரு பக்கம் கல்வித்தகுதி கூடிக்கொண்டு வர இன்னொரு திசையில் கவிஞனாக உருவாகிக்கொண்டிருந்தேன். இலக்கிய வாசிப்பு சராசரி வாழ்வின் மீதான எதிர்பார்ப்பை மட்டுப்படுத்தியிருந்தது. ஒரு கலைஞனாக மனம் போன போக்கில் ஊர் சுற்றி, வாசித்து, அவ்வப்போது கவிதைகளை எழுதியும் கொண்டுமிருந்தேன்.

மேற்படிப்பில் சிரத்தைக் குறைந்தது. படிப்பை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்பின் மீது ஒவ்வாமை வந்தது. நான் எவரின் கீழும் ஊழியனாகப் பணியாற்றப் பிறக்கவில்லை என்றெல்லாம் நண்பர்களிடம் பிரகடனப்படுத்தியிருக்கிறேன். இதன் உச்சமாக என் முனைவர் பட்ட நெறியாளர் வீ.அரசு அவர்களிடம் எனக்கு டாக்டர் பட்டம் வேண்டாம் சார்; நான் ஊருக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டிருந்தேன். பின் ஏதேதோ குழப்பங்கள்; தெளிவுகள். முதல் காதலைத் தவறவிட்டதுபோல் இரண்டாவது காதலை தவிர்க்கக்கூடாத தவிப்புகள். கலையுலகில் மிதந்துகொண்டிருந்தவன், லௌகீக வாழ்வில் காலூன்ற வேண்டிய கட்டாயம். ஒரு கவிஞன் பலவித மனப் போராட்டங்களுக்குப் பின் கிரகஸ்தன் ஆக வேண்டிவந்தது. அப்புறமென்ன… அன்றாட வாழ்வின் கண்ணியிலிருந்து தப்ப முடியுமா என்ன?

திருமணத்துக்கு முன் “காலத்தின் முன் ஒரு செடி” தொகுப்பின் கவிதைகள் எழுதும் காலத்தில் அவற்றின் வாசகியாக இருந்த என் மனைவி என்னுடைய பல கவிதைகள் புரியவில்லை என்பார். முதல் தொகுப்பு வெளியீடும் என் திருமணமும் அடுத்தடுத்த நிகழ்வுகளாக ஏழு எட்டு மாத இடைவெளியில் நடந்திருந்தன. திருமணத்துக்குப் பின்புதான் இரண்டாம் கட்டமாக “ஏரிக்கரையில் வசிப்பவன்” தொகுப்புக் கவிதைகள் எழுதப்பட்டன. என் மனைவி முதல் வாசகியாக இருந்து புரியாத பகுதிகளைச் சுட்டவும், கவிதையின் முழுமை சிதைவுறாமல் சில திருத்தங்களில் அதை எளிதாக்கிக்கொள்வேன். ஒரு குடும்பஸ்தனாக மாறிய பின்பு அதற்கு முந்தைய என் விட்டேத்தியான மனநிலை பின்வாங்க நேர்ந்து தரையில் கால் பாவியதாய் என் கவிதைப்பயணம் தொடர்ந்தது. காலத்தின் கட்டாயமும் நெருக்குதலும் ஒருவிதத் தெளிவை ஏற்படுத்தின. இதனால் என் கவிதைத் தேர்விலும் பார்வையிலும் மொழியிலும் இயல்பாகவே ஒரு மாற்றம் கூடிவந்து விட்டிருப்பதாகத் தெரிகிறது. கவிதையின் படிமங்களாகியிருந்த கனவம்சமும் புனைவம்சமும் மொழிச் சோதனையும் தணிந்து, நேரடியான, எளிய மொழியாலான, கவித்துவத்தை ஆதாரமாகக் கொண்ட கவிதைகளாக மாற்றம் கண்டிருக்கின்றன. இதை என் கவிதைகளின் அடுத்த கட்ட முதிர்வு நிலையாகவே கொண்டேன்.

  1. பொதுச்சமூகத்தில் கவிஞன் என்பவன் சினிமாவுக்குப் பாடல்கள் எழுதும் நபர் என்கிற அடையாளம் தான் அதிகம் இருக்கிறது. பொதுநீரோட்டத்தில் கலந்திட சிற்றிதழ்கள் வழியாக உருவாகி வந்த கவிஞர்கள் விரும்பவில்லை. ஒருவகையில் அவர்கள் அப்படியான சில முயற்சிகளைச் செய்திருந்தால் நவீன கவிஞர்களும் அவர்களின் கவிதைகள் இன்னும் அதிகமான வாசகர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கும் இல்லையா. பொதுச்சமூகத்திலிருந்து விலகியிருக்கும் சிற்றிதழ் மரபு சரியான ஒன்று என்று நினைக்கிறீர்களா?

பொதுச் சமூகத்தின் கலை, இலக்கிய ரசனையிலிருந்து சிற்றிதழ் மரபு நிச்சயமாக வேறுபட்டது. விலகியிருப்பதே அதன் தன்மையும் தனித்துவமும். சிற்றிதழ்களில் இயங்குவோரின் தேடல் படைப்பு சார்ந்த ஒன்று; வாசகனைத் தேடும் முயற்சியெதுவும் அங்கில்லை. சிற்றிதழ் வாசகனும் சிறந்த இலக்கியங்களைத் தானே தேடிச்சென்று வாசிப்பவன். வாசிப்பு அவனுக்கு ஒருவித வாழ்வியல். எதிர்காலத்தில் அவனே ஒரு படைப்பாளியாய் பரிணமிக்க உள்ளவன். பொதுவாசகன் வெறும் நுகர்வோன். விளம்பரப்படுத்திக் கொள்ளும் எழுத்தையும் எழுத்தாளனையும் மட்டுமே அவன் அறிவான். தம் படைப்பு தம்மையொத்த தேடலும் சிந்தனையும் மிக்கவரிடம் சென்றடைந்ததா; அவர்கள் பொருட்படுத்துவதாக உள்ளதா என்பதே சீரிய எழுத்தாளனின் கவலை. அவன் எழுத்தையும் வாழ்க்கையையும் வெவ்வேறாக நினைப்பதில்லை. தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது; தொழில்முறை எழுத்தாளனாக இருக்கலாம். எவ்வளவுக்கு விற்றது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அதிக வாசகர்களுக்காக எழுத விரும்புகிறவன் வாசகர் எதை விரும்புவாரோ அதை எழுதி கேளிக்கையூட்டிக் காசாக்கும் கனவு கொண்டவராகவே இருக்க முடியும். ஒவ்வொரு காலத்திலும் புதுமைப்பித்தனும் கல்கியும் பிரம்மராஜனும் வைரமுத்துவும் வேறு வேறுதான். சீரிய படைப்பாளி தம் பங்களிப்பால் கலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வேட்கையுடன் செயல்படுகிறவராகவே இருக்கிறார். வாசகனைக் குறித்த எதிர்பார்ப்பும் அவர்களைக் கூடுதலாக்கும் எண்ணமும் முயற்சியும் அவருக்கு ஏற்படுமானால் எதை உன்னதம் எனத் தேடி வந்தாரோ அந்த நம்பிக்கையோடும், எது தம் மனதுக்கு நிறைவளிப்பதாய் கருதி எழுதிக் கொண்டிருந்தாரோ அந்த எழுத்தோடும், எது வாழ்வுக்கு அர்த்தம் தரக்கூடியது என நம்பினாரோ அதனோடும் அவர் சமரசம் செய்து கொள்கிறார் என்றே பொருள்.

  1. நல்ல கவிதை, மோசமான கவிதை, கவிதையாக மாறாத கவிதை என்றெல்லாம் பல்வேறு வகைமைகள் பேசப்படுகிறது. சரி உண்மையில் நல்ல கவிதை என்பதென்ன? எனக்குச் சிறந்தது என்று படுவது மற்றவர்களின் பார்வையில் மோசம் என்று படுகிறது. இத்தகைய முரண்பாடுகள் வழியாக உண்மையில் நல்ல நவீன கவிதைகளை ஒருவன் சென்றடைவது எப்படி?

ஒரு கட்டுரையாக எழுதினாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இதை வைத்துக் கொண்டு தொடர்புடைய சிலவற்றைக் கூற நினைக்கிறேன். ஒரு நல்ல கவிதையை ஒருவர் தம் வாசிப்பனுபவத்திலிருந்தே உணரமுடியும். இது ஒரு தேடல் கொண்ட தொடர் செயல்பாடு.

அவ்வாறான வாசகன் அடையும் ஒவ்வொன்றிலும் திருப்தியுறாது அடுத்ததை நோக்கிப் பயணிப்பான். நான் கண்ணதாசன், வைரமுத்து, அப்துல் ரகுமான் என ஒவ்வொருவராகக் கடந்து வந்தே விக்ரமாதித்யனையும் ஞானக்கூத்தனையும் கலாப்ரியாவையும் அடைகிறேன். பிறகு அங்கிருந்து பிரம்மராஜனையும், ஆத்மாநாமையும் அறிகிறேன். பிறகே நகுலன், பிரமிள் என வந்து சேர்கிறேன். பள்ளிகளில் பயில வருவோருக்குப் பாடநூல்கள் நற்கருத்துக்களைப் போதிக்கிற பாடல்களைத்தான் கவிதைகளாக அறிமுகப்படுத்துகின்றன. அப்படியும் கவிதைகளைச் சொல்லித்தர உணர்வுமிக்க ஆசிரியர் வேண்டும். பிறகு திரையிசைப்பாடல்கள். பெருவாரியான சமூகம் இவற்றுடன் மட்டுமே தம் கவிதையார்வத்தைப் பூர்த்தி செய்துகொள்கின்றது. இன்றும் அடிப்படை வாசிப்பு ஏதுமின்றித் தன்னை ஒரு கவிஞனாகப் பாவிக்கும் கல்லூரி மாணவன் T.ராஜேந்தர் தனமான எதுகைச் சொல்லடுக்கில் தன் திறமையை மெச்சிக்கொள்வதை ஓர் ஆசிரியனாக எதிர்கொள்கிறேன். பேராசிரியர்களுக்கும்கூட சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பியங்கள், பத்தி இலக்கியம் எல்லாமே கவிதைகள்தாம். அவர்களுக்குச் செய்யுள் வேறு; செய்யுளுக்குள் ஊடுருவி மிளிரும் கவித்துவக் கூறு வேறு என்பதைப் பிரித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லை. நல்ல அணிகளும், குறியீடுகளும், படிமங்களும் கவிதையின் அழகியலுக்கு அடிப்படையானவைதாம். இன்று நவீன கவிதை அவற்றையும் கடந்து அன்றாடம் எதிர்ப்படும் காட்சியிலிருந்தே அரிதாகக் காணக் கிடைக்கும் மற்றொன்றை நம்மிடம் பகிர்ந்து கவிதையின் முழுமையை உணர்த்திவிடுகிறது. உபரியாக எதையும் வளர்த்தெடுக்காமல் கவித்துவத் தருணத்தை நேரடியாக வழங்கிவிடுகிறது. இது தேடிப் புதிதாகக் கண்டடைவது கிடையாது. ஏற்கனவே ஒன்றுள் மறைந்துள்ளதைத் திறந்துகாட்டுவது. சிறியதாகவும் எளிமையானதாகவும் இருந்து மிகச்சிறந்த கவிதையுணர்வை இவை ஏற்படுத்திவிடுவதைக் கண்டுணர முடியும். வாசிப்பில் அர்த்த அலைகளை உருவாக்கும் ஒரு சிறுகவிதை கடலாகிவிடுகிறது. சங்க இலக்கியத்தில் குறும்பாடல்களாக அமைந்த குறுந்தொகையில்தான் அதிக சிறந்த கவிதைகள் உண்டு. இருவரிகளைக் கொண்ட திருக்குறளில் வீரியமான கவித்துவம் கொண்டவை பல. காளமேகத்தின் சிலேடைகள் மயங்கக் செய்யும் வித்தைகள் மட்டுமல்ல. உலகக் கவிதைகளில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் குறுகிய வடிவில் அதிக கவித்துவத்தை நிரப்பியவை. பாரதியின் அக்கினிக்குஞ்சு போல பாரதிதாசனின் அழகின் சிரிப்பு காட்சிகளையும் குறிப்பிடலாம். பிரமிள், நகுலன், ஆத்மாநாம், விக்ரமாதித்யன், தேவதச்சன் போன்றோரும் தம் சிறிய எளிய கவிதைகளில்தாம் அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள்.

  1. ராணிதிலக் ஒரு நேர்காணலில் உங்கள் கவிதைகள் குற்றவுணர்ச்சியின்பால் உருவாகுபவை. அதில் தத்துவமும் இயற்கையும் உண்டு. அதிலிருந்து எழும் கனவுகளும் கற்பனைகளும் என்னிடத்தில் இருக்கின்றன என்கிறார். இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? இருவருக்கும் இடையான உறவின் மீதான படிநிலைகளை எப்படி எங்களுக்கு எடுத்துச் சொல்வீர்கள்?

நாங்கள் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்து நட்பில் இருக்கிறோம். முதன்முதலில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் பேர்ணாம்பட்டில் அழகிய பெரியவன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அறிமுகமாகிறோம். அன்றே பலகாலம் பழகியிருந்த இயல்பில் என்னோடு என் ஊருக்கு வந்து விட்டான். அன்று முதல் இன்று வரை சிற்சில பிணக்குகளும் இடைவெளிகளும் நேர்ந்தனவெனினும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கிறோம். ஆமாம். என் மனசாட்சியிடம் பேசிக்கொள்வதையெல்லாம் அவனிடம் பேச முடியும் என்ற அளவுக்கு ஆத்மார்த்தமான நட்புடன். அதனால்தான் குற்றவுணர்வு குறித்த பேச்செல்லாம் வந்திருக்கக்கூடும். என்னுள் குற்றவுணர்ச்சி ஏற்படுத்திய, பொதுவெளியில் பகிர விரும்பாத பலவற்றை அவனிடம் ஓர் இலக்கியப் பிரதியாகப் பகிர்ந்து கொண்டிருக்கக்கூடும். கவிதை எழுதுகிற மனநிலையை உருவாக்குவதில் மனநிறைவுகளைவிட மனஅவசங்களுக்கு அதிகப் பங்கிருப்பதாக நினைக்கிறேன். குறிப்பாக மது அனுபவங்கள் உள்ளிருக்கும் கசடுகளாலான துயர வெளியைக் கிளறிவிட்டுத் தீவிரப்படுத்தக்கூடியவை. அவற்றைக் குறித்து அளவளாவும் தத்துவார்த்தத் தருணங்களாக அவை இருந்திருக்கக்கூடும். எங்களிடையே உரையாட வேறு விஷயங்களே இல்லை என்கிற மாதிரி கலை இலக்கியங்கள் குறித்தும் தொடர்புடைய மனநிலைகளையும் பேசிக்கொண்டிருப்போம். கவிதைகள் வாசிப்பது, விவாதிப்பது, எழுதுவது, திருத்தங்கள் செய்துகொள்வது, இதழ்களுக்குத் தருவது என ஒரே ரசனையின் இருவேறு முகங்களாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தோம். அவன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்ததாலேயே நானும் அதற்கான உந்துதல் பெற்றேன். ஆய்வு மாணவர்களான நாங்கள் இக்காலகட்டத்தை முழுமையாக கவிதையுலகுக்கே அர்ப்பணித்திருந்தோம். கல்வித்துறை சார்ந்த ஆய்வுச் சடங்குகளை முழுமையாக வெறுத்திருந்தோம். ஆய்வுப் போக்கு குறித்து எப்போதும் உரையாடிக்கொண்டதாகவோ கவலைப்பட்டதாகவோ நினைவில்லை. அந்த உலகம் சகிக்கமுடியாததாகவும் விரும்பத்தகாததாகவும் ஆர்வமூட்டாததாகவும் இருந்தது. நெருக்கடி வரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பல்கலைக்கழகம் போய் வருவோம். எங்கள் நெறியாளர்களும் (வீ.அரசு மற்றும் இ.சுந்தரமூர்த்தி) எங்களை எங்கள் போக்கில் விட்டிருந்தார்கள். கல்வித்தகுதி வழி பெறப்போகும் வேலைவாய்ப்புக் குறித்த சிறு எதிர்பார்ப்பையும் அப்போது நாங்கள் கொண்டிருக்கவில்லை. இருவரும் நிறைய ஊர் சுற்றினோம்; மூத்த கவிஞர்களைச் சந்திக்கச் சென்றோம்; கேள்விப்பட்டிருந்த கிடைத்தற்கரிய நூல்களைத் தேடி நூலகங்களில் அலைந்தோம். அதிகம் வாசித்தோம். இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றோம்; சில நிகழ்வுகளை நாங்களே முன்னின்று ஒருங்கிணைத்தோம். கோணங்கியின் அறிமுகமும் நட்பும் இன்னும் எங்களை உற்சாகப்படுத்தியிருந்தன. அவருடனும் சேர்ந்து திரிந்தோம். தொடர்ந்து வட தமிழகத்தில் நவீன இலக்கியப் பிரக்ஞையுடையவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இயங்கினோம்.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இருவருடைய முதல் தொகுதிகளும் வெளிவந்தன. அதற்குள் ஆய்வுப் படிப்பு ஐந்தாண்டுகளைக் கடந்திருந்தது. ஆய்வேடுகளை உடனடியாகச் சமர்ப்பிக்காவிடில் ரத்தாகும் சூழலில் வேகமாக ஒப்பேற்றிச் சமர்ப்பித்தோம். அதே வேகத்தில் நான் திருமணம் முடித்திருந்ததால் வேலை பார்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டேன். நான் வாணியம்பாடி இதுலாமியாக் கல்லூரியில் பணியில் சேர்ந்த நிலையில் அவனும் வேலூர் பள்ளி ஒன்றில் பணியேற்றிருந்தான். தற்காலிகப் பணிகள்தாம். அப்போதும் நிறையக் கடிதங்கள் எழுதிக் கொண்டேயிருப்பான். வார இறுதிநாட்களில் சந்தித்துக்கொள்வோம். அதன் பிறகு நான் குடும்பத்துடன் சென்னையிலும் திருமணத்துக்குப் பின்பு அவன் அய்யம்பேட்டையிலுமாக வாழ்க்கை. ஆண்டுக்கு ஒரு முறை கூட நேர் சந்திப்பில்லாத கைபேசி நட்பில் இருக்கிறோம். கவிதை, இலக்கியம் என்று அவ்வப்போதான செயல்பாடுகளை, வாசிப்பைக் குறித்து மட்டுமே பேசிக் கொள்கிறவர்களாகவே இப்போதும் இருக்கிறோம். திடீரென தொடர்பில்லாததுபோல சில மாதங்கள் கூட கடக்கும். எதிர்பாராது அழைத்துப் பரபரப்பாக எதையேனும் புதிதாகச் செய்துகொண்டிருப்பதைப் பகிர்வான். கும்பகோணவாசியான பிறகு அவன் பழம்பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடித் தொகுப்பது, மறுபதிப்புக் கொணர்வது என வேறொரு வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறான். எப்போதும் அவன் என்னைவிட இரண்டு மடங்கு வேகத்தில் பயணிப்பவன் என்ற அனுமானம் எனக்குண்டு. ஆனாலும் திடீரென நான் எல்லா தொடர்பையும் துண்டித்துக்கொண்டேன்; எல்லா நூல்களையும் நண்பர்களுக்குத் தந்து விட்டேன். எதையும் எழுதுவதோ வாசிப்பதோ இல்லை என அவ்வப்போது குதர்க்கமாக அறிவிப்பான். அவனை எனக்கு நன்றாகவே தெரியுமே. அப்படியில்லையென்றால்தானே நான் அதிர்ச்சி அடைவேன்.

  1. மொழிபெயர்ப்புகள் மீதான ஆர்வம் அதிகம் என்கிறீர்கள். தமிழிலக்கியச் சூழலில் மொழியாக்கம் செய்யப்படும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீதான உங்களின் பார்வைகள் என்ன?

ஆங்கிலத்தில் வாசிப்புப்பழக்கம் இல்லாத நான் மொழிபெயர்ப்புகள் வழியேதான் தமிழுக்கு வெளியில் உள்ள சிறந்தவற்றைப் பெற்றுக்கொள்கிறேன். மொழி பெயர்ப்புகளின் தரம் குறித்தெல்லாம் நான் இரண்டாம்பட்சமாகவே கவலைப்படுகிறேன். எனக்குத் தேவை பழகிக்கிடந்தவற்றிலிருந்து தடம் மாற்றிப் புதியதைக் காட்டும் கவிதைகள். பெயர்க்கப்பட்டாலும் அது எனக்குத் தமிழ் வழியாக நெருக்கமாகிவிடுகிறது. சில உச்ச அனுபவங்கள் எனக்கு மொழி பெயர்ப்புகள் வழியே மட்டுமே கிடைத்திருக்கின்றன. தொடக்கத்தில் கவிதைகளைக் காட்டிலும் சிறுகதைகள், நாவல்கள் ஏராளமாக வாசிக்கக் கிடைத்தன. உண்மையில் மொழிபெயர்ப்பில் புனைவுகளை வாசிக்கும்போதும் நான் கவிதைகளை வாசிப்பது போன்றே கிளர்ச்சியடைகிறேன். மீட்சியின் டி.எஸ்.எலியட் சிறப்பிதழ் கந்தலாகும் அளவுக்கு மீண்டும் மீண்டும் வாசித்திருந்தேன். மீட்சி வெளியீட்டில் முதலில் வந்த பிரம்மராஜனின் “உலகக் கவிதை” பின்பு கூடுதலாக வந்த “சமகால உலகக் கவிதை” இரண்டுமே அக்காலங்களில் எனக்குப் பெரும் உந்துதலைத் தந்துள்ளன. இன்றும் அலுக்காத, வாசித்துத் தீராத நூல்கள் அவை. ழாக் பிரெவரின், “சொற்கள்” தொண்ணூறுகளின் கவிஞர்கள் அனைவரையுமே பாதிப்புக்குள்ளாக்கும் அளவுக்கு எளிமையும் வலிமையும் மிக்கதாயிருந்தது. சி.மணி மொழிபெயர்ப்பில் வந்த “தாவோ தே ஜிங்”, யுவன் சந்திரசேகரின் ஜென் கவிதை மொழிபெயர்ப்பு “பெயரற்ற யாத்ரிகன்” மற்றும் சத்யமூர்த்தி மொழிபெயர்த்த ரூமியின் கவிதைகள் “தாகங் கொண்ட மீனொன்று” ஆகியவை தத்துவத்தையும் ஞானத்தையும் தமிழ்க் கவிதைகளாய் உணரச்செய்த சாதனைகள். பிரம்மராஜனின் “மெண்டல்ஸ்டாம் கவிதைகள்”, “மிரோஸ்லாவ் ஹோலுப்” சமீபத்திய நெருடாவின் “கேள்விகளின் புத்தகம்”, “மைக்கேல் ஒண்டாச்சி” கவிதைகளின் அகன்ற பரப்பும் கூறுமுறைகளின் பரிசோதனை அம்சமும் தமிழ்க் கவிதையுலகுக்குப் புதுமையையும் நுட்பத்தையும் ஆழத்தையும் கற்றுத் தரவல்லவை. சுகுமாரனின் பாப்லோ நெருதாவும் முக்கியமானது. ஜெயமோகனின் மொழிபெயர்ப்பிலான “தற்கால மலையாளக் கவிதைகள்” சராசரி நிகழ்வுகளின் வேறொரு பரிமாண அசாதாரணத் தன்மையைத் தொகுத்துத் தந்ததில் முக்கியமாகிறது. இத்துடன் ஒன்றுக்கு இரண்டாகத் தமிழ் வடிவம் பெற்றுவந்த சச்சிதானந்தன் கவிதைகளும் ஆனந்தகுமார் தந்த குஞ்ஞுண்ணி கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை. சபரிநாதனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த “உறைநிலைக்குக் கீழே” என்ற தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் கவிதைகளின் தொகுப்பு மற்றும் கோணங்கி சமீப ஆண்டுகளின் கல்குதிரை இதழ்களில் கவனமெடுத்து வழங்கும் பிறமொழிக் கவிதைகள் புதிதாக எழுத வருவோருக்கு புது ரத்தம் பாய்ச்சக் கூடியவை. மேலும் பல நூல்கள் உண்டெனினும் பட்டியலாய் நீண்டு விடக்கூடாது என்ற நினைப்பில் அதிக தூண்டுதல் பெற்றவற்றையே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும் க்ரியாவில் வந்த போதலேர், நாகார்ஜூனன் தந்த ரைம்போ கவிதைகளை நினைத்துக்கொள்கிறேன். எஸ்.வி.ஆர், யமுனா ராஜேந்திரன், இந்திரன் ஆகியோரின் பங்களிப்பை மறக்கவே முடியாது. மொழிபெயர்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்க் கவிஞர்களைத் தூண்டவே செய்கின்றன. தமிழ்க் கவிதைகளின் போதாமைகள் குறித்த பிரக்ஞையையும் அது வழங்கக்கூடும். வேறுபட்ட ரசனை கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்ட தகுதியுடைய கவிதைகளே இதன்மூலம் கிடைக்கின்றன. இருண்மைத் தன்மை மிகுந்து புரிதலில் தடை ஏற்படுத்துபவை, மொழிச்சிடுக்குகளால் தெளிவற்றவை, உரிய கவியெழுச்சித் தராத சாதாரண கவிதைகள் போன்றவை அடிப்படையிலேயே தவிர்க்கப்பட்ட பிறகே நமக்குப் பொருக்கு விதைகளாகக் கிடைக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பிற மொழிக் கவிதைகளை மொழிபெயர்ப்பின் வழியே பெற்றுக்கொள்வதன் மூலம் உலகளாவிய ஒரு கவித்தன்மையைத் தமிழ்க் கவிதைகள் பெற்றுக்கொண்டுள்ளன என்பது என் எப்போதுமான நம்பிக்கை.

  1. நிலப்பரப்பின் மீதான பற்று என்பது கவிஞனுக்கு அவ்வளவு முக்கியமான ஒன்றா என்கிற கேள்வி என்னுள் எழுகிறது. நவீன வாழ்வில் நிலம் என்பது ஒருவனுக்கு நிலையான ஒன்றாக இல்லை தானே, அதே மாதிரி இந்த மொழிப்பற்று, இனப்பற்று, தேசியப் பற்று மாதிரி இந்த நிலப்பற்று கூட வலதுசாரி சிந்தனையின் அளவுகோல் மாதிரி இருக்கிறதே?

நாம் ஒவ்வொருவரும் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பை ஒரு மரத்தின் வேர்போல உணர்வுகளால் பற்றிக்கொண்டுள்ளவர்கள்தாம். ஒரு கிராமத்தானாக -மேலும் கவிஞனாக – மண்ணின் மக்களோடும் வாழ்வோடும் மொழியோடும் பிணைப்பைக் கொண்டிருக்கிறேன். அதன் சாராம்சம் என்னையும் மீறி என் கவிதைகளில் படிவதை விரும்பவே செய்கிறேன். வட்டார எழுத்தாளனைப் போன்று ஆவணமாக்கும் தேவையோ ஆர்வமோ இல்லையெனினும் அதனினும் நுண்மையான அளவில் ஒவ்வொன்றும் எனக்குப் பயன்படுகின்றன. கவிதைகளின் பாடுபொருள் பிரபஞ்சத்தைத் தாண்டிய எல்லையின்மை கொண்டதெனினும் அது ஒரு விதையைப்போல் திரண்டிருக்கும் உள்ளிருந்தே பரந்து விரியும் தன்மையுடையது. அந்த விதை நிலப்பரப்பின் ஆதாரத்தில் விளைந்து வந்ததல்லவா? ஒன்றைச் சொல்கிறேன். நிலவு, இந்த உலக நிலப்பரப்பில் எங்கிருந்து பார்த்தாலும் அதே நிலவுதான். ஆனால் என் நிலப்பரப்பிலிருந்து பார்க்கும் நிலா மட்டுமே எனக்கு கூடுதல் நெருக்கமாயிருக்கிறது என நான் கூறினால் நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்களா? எங்கள் நிலப்பரப்பின் நாற்புறம் மலைகள் சூழ்ந்துள்ளன. நிலப்பரப்பு எனில் என் ஊர் மட்டுமல்ல. அது இம்மலைகளுக்கிடையிலான 20 – 30 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள 20 – 30 கிராமங்களை உள்ளிட்டதாக இருக்கலாம்.

என் அம்மாவைப் போல வேறொருவர் எனக்கு அம்மாவாக முடியாது என்பதுபோல, என் வீட்டைப் போல இன்னொருவர் வீடு எனக்கு வீடாக முடியாது என்பது போலவும் என் ஊர் சார்ந்த நிலப்பரப்பு பிறிதொன்றால் ஈடு செய்யவே முடியாது என்றே நினைக்கிறேன். எங்கு போனாலும் வீட்டுக்குத் திரும்புவது என்றிருக்கிறதல்லவா? அதிலுள்ள ஒரு நிம்மதிக்கு வேறொன்று மாற்றாகுமா? பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்தே நாம் வாழ்வின் ஒவ்வொன்றையும் அடிப்படையாகப் பெற்றிருக்கிறோம். அதைத் கொண்டே பயணியாகவோ வேறெங்கோ வாழ நேரும்போதோ புதிய அனுபவங்களை இளமையின் நினைவுவழி சமன் செய்துகொள்கிறோம். உறவுகள், மொழி, உணவு, இயற்கை சார்ந்த மலைகள், ஏரி, வயல்வெளி, மரங்கள்…போல. நீண்ட காலமாய் ஓர் இடத்தில் நம் பார்வையில் நிலைத்திருந்த ஒரு மரம் திடீரென்று காணாமல் ஆகும்போது அந்த வெறுமை நம்மைப் பாதிக்கிறது. என் நிலப்பரப்பில் நான் எவ்வளவு தனியாக இருக்கும்போதும் பாதுகாப்பாகவே உணர்கிறேன். ஆனால் இதன் எல்லைத் தாண்டி வேறெங்குச் சென்றாலும் பெறும் “வெளியில்” உள்ள உணர்வைத் தவிர்க்க முடிவதில்லை. இவற்றையெல்லாம் என் அனுபவப் பின்னணியிலிருந்தே கூறுகிறேன். நீங்கள் “நவீன வாழ்வில் “என்று பிரயோகிக்கிறீர்கள். ஊரில் பிறந்து வளர்ந்து பள்ளிக்குச் சென்று, மேற்படிப்புக்காக மட்டுமே நிலத்தை விட்டுப் பிரிதல் என்பதை அனுபவித்தவன் நான். மாறாக என் பிள்ளைகள் அவ்வாறான பின்னணி எதையும் பெறாதவர்கள். என் பணி நிமித்தமாக அவர்கள் பிறப்புடன் சம்பந்தமே இல்லாத எங்கெங்கோ தம் பிள்ளைப்பருவத்தைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். என் ஊர் என்பதால் மட்டுமே அவர்கள் ஊர் என்று ஆகிறதே தவிர வேறெந்த பெரிய ஒட்டுதலும் அவர்களுக்கு இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. என் பேச்சின் இத்தனை பிடிமானத்தையும் அவர்கள் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. இயல்பாகவே வெகு வேகமாக எல்லா கிராமங்களும் நகரமயமாகிக் கொண்டிருக்கும் நவீன வாழ்வியலில் ஒரு பற்றுக்கும் இடமோ தேவையோ இருக்காது என்றே படுகிறது. அப்படியெனில் வருங்கால கவிஞனிடம் இவற்றுக்கு மாற்றாக இருக்கப்போவது எதுவென்ற வினாவும் எழுகிறது.

பணி நிமித்தமாகத் தற்போதும் வெளியூரில் வசிப்பதால் எங்கள் ஊருக்கு நானும் ஒரு விருந்தாளி ஆகிவிட்டேன். அவ்வாறு போகும்போது அதன் முகம், சிறிது சிறிதாக மாறிவருவதை உணர்ந்து இருக்கிறேன். என்னோடு பிறந்து வளர்ந்தவர்கள் அருகிவிட ஊர் எனக்கு அடுத்த தலைமுறையால் நிரம்பியிருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடனில் வெளிவந்த “என் ஊர்” என்ற கட்டுரையை இவ்வாறு முடித்திருந்தேன். இப்போது இந்த விஷயத்தோடு தொடர்புடையது.

கடைசியில் ஒரு மனிதன் போய்ச் சேருமிடம்

அவன் சொந்த கிராமமே!

அவனுடைய அடுக்களையே!

அவனுடைய மனைவியின் சமையலே!

அந்திவேளையில் தன் வீட்டின் முன் இருந்தவாறு

தன் பேரனும் பக்கத்து வீட்டுக்காரியின் பேரனும்

 மண்ணில் ஒருசேர விளையாடுவதைப் பார்ப்பதுவே!’’

என்ற டி.எஸ்.எலியட்டின் கவிதை வரிகள் போல, பணி ஓய்வுக்குப் பிறகு நிரந்தரமாக, நிம்மதியாகக் குந்தாணிமேட்டில் வாழ்வதையே மனம் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது! நாற்பது வயதிலிருந்த இந்த ஏக்கம் இப்போதைய ஐம்பத்தைந்தில் தணிந்திருக்கிறது என்பதை ஆச்சரியத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.

தொடரும்.

(ஸ்ரீநேசனின் கவிதையுலகம், சமகால கவிதைகளின் மீதான அவரின் பார்வை, அவரின் தொகுப்புகளின் மீதான கருத்துகள் என்று நேர்காணலின் இன்னொரு பகுதி அடுத்த இணைய இதழில் வெளியாகும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.