தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது-ஸ்ரீநேசன்,பகுதி 2

புகைப்படத்திற்கு நன்றி – அஜயன் பாலா

16. முதல் தொகுப்பு வெளிவந்து இருபது வருடங்களாகின்றன. இருபது வருடங்களுக்குப் பிறகும் இந்தத் தொகுப்பு நவீன கவிதைகளை நேசிக்கும் வாசகனாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.தற்போது மறுபிரசுரம் கண்டுள்ள காலத்தின் முன் ஒரு செடி தொகுப்பின்மீது நீங்களாகத் தொகுத்துக் கொள்ளும் கருத்துகள் முக்கியம் என்று நினைக்கிறேன். அதைப்பற்றி ஏதேனும் கூற இயலுமா?

பல்லாண்டுகளாக வாசகனாக இருந்து, முப்பது வயதுக்குப் பிறகே முதல் கவிதை எழுதத் தொடங்கி, அதன் பின் ஐந்தாண்டுகளாக எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு 2002இல் என் முப்பத்தாறாவது வயதில் இந்த முதல் தொகுப்பு வெளிவந்தது. அச்சமயத்தில் தொகுப்பு வருவது குறித்துப் பெரிய ஆவலோ எதிர்பார்ப்போ இல்லை. நப்பாசையாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்வேன். எழுதிய கவிதைகள் ஒரு தொகுப்பளவுக்கு வரும் என்பதனால் அதைச் செய்யவேண்டி வந்தது.  மனோன்மணியிடம் பேசிப் புது எழுத்து மூலமாக வெளியிடலாம் எனத் திட்டமிட்டபோது அவர் ஏற்கனவே தொடர்ந்து இதழை வெளியிட்டுப் பணமுடையில் இருந்தார். எனவே நண்பர்களிடம் உதவி பெற்றுப் புது எழுத்து வெளியீடாகக் கொணரத் திட்டமிட்டோம். ஜீ.முருகன் முன்னெடுத்தார். எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே நண்பர்கள் ஆர்வத்துடன் உதவினார்கள். இவ்வாறே புது எழுத்துப் பதிப்பின் முதல் நூலாக, காலத்தின் முன் ஒரு செடி வெளிவந்தது. பிரம்மராஜன் கணிசமான தொகை வழங்கியதோடு அச்சகம் வரை வந்து ஆலோசனைகள் தந்தார்.  600 பிரதிகள் அச்சிட்டதில் நூறை மட்டும் நான் பெற்றுக்கொண்டு, மீதம் 500 பிரதிகளை விற்றுப் புது எழுத்து வளர்ச்சிக்கு நிதியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என மனோன்மணிக்கு தெரிவித்து விட்டேன். இரண்டு, மூன்று ஆண்டுகளில் பிரதிகள் தீர்ந்தன. சிங்கப்பூர் நூலகத்துக்குக் கணிசமாக நூல்கள் வாங்கினார்கள் என அறிந்தேன். தொகுதிக்கு வரவேற்பு இருந்ததால் பரவலான வாசக கவனத்தைப் பெற்றிருந்தது. பின்பு நண்பர்கள் பலர் மறுபதிப்பு கொண்டுவர நினைவூட்டிக்கொண்டே இருந்தனர். என்னவோ அடிப்படையில் உற்சாகமில்லாமல் இருந்தது. இதோ இருபது வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது ஏதோ ஒரு உந்துதலில் இம்மறுபதிப்பு வேலை  சாத்தியமாகியிருக்கிறது.

காலத்தின் முன் ஒரு செடி

இத்தொகுப்பின் ஒவ்வொரு கவிதைக்கும் பின்னணியில் என் அனுபவ நிகழ்வு இருக்கிறது எனக் கூறினால் நீங்கள் வியப்படையக்கூடும். புறவெளியிலோ அனுபவ வெளியிலோ கண்டடைந்த ஒரு சம்பவத்தின் அகத்தூண்டல் பெற்றே உருவானவை பெரும்பான்மை. கவிதையாகக் கண்டடைந்ததை நவீன கற்பனாவாதமாக ஆக்கிக்கொண்டிருக்கவும் கூடும் என்று நினைக்கிறேன். அமைதியான மொழியைத் தவிர்க்கவோ அல்லது மொழியமைதியைக் கலைக்கவோ முயலும் விருப்பத்தைக் கவிதைகளின் நடையில் முயன்றிருப்பதாகக் கூறுவேன். புற கவனிப்புகளை முற்றிலும் தவிர்த்த நிலையில், (சில காதல் சொல்லாடல்களைத் தவிர்த்து) அகவனுபவத்தில் கவிதைசொல்லியே முதன்மை வகித்துள்ளதாகவும் தோன்றுகிறது. அவனுக்கு அவனே முன்னிலை படர்க்கை எல்லாமும்… இந்த முதல் தொகுப்புப் பரவலான கவனிப்புப் பெற்றதெனினும் அடுத்து எழுதும் கவிதைகள் மொழியாலும் பொருண்மையாலும் அதன் தொடர்ச்சியாக இருந்துவிடக்கூடாது என நான் என்னை மீட்டுக்கொண்டு அதிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறி வந்திருப்பதாகவும் தெரிகிறது.

17. காலத்தின் முன் ஒரு செடி தொகுப்பிலிருக்கும் கவிதைகளை, தனிமை மீது பித்தேறி அலையும் மனிதன் ஒருவனின் கண நேர மயக்கங்கள், அவனுக்கு அதீதமான தவிப்பை எப்போதும் தந்துவிடும் தனிமையின் அத்தனை சுவைகளையும் உள்ளடக்கிய பல்வேறு கவிதைகள்  என்று இப்படியாக தொகுத்துக் கொள்கிறேன்.தனிமை மீதான அன்றிருந்த மயக்கங்கள் தற்போது விலகி உள்ளதா?

சரியாகத்தான் கூறுகிறீர்கள். ஆனால் நான் என்னை, என் கவிதைகளை இப்படிப் பகுத்தோ தொகுத்தோ கொண்டது கிடையாது. ஆனால் உணர்ந்திருக்கிறேன்; தனிமையும் அதைத் தீவிரப்படுத்தித் தரும் மனநிலைகளையும். சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கத்துக்கு ஆட்பட்டிருந்ததால் என் தனிமை நாட்டமே அதன் பால் என்னைச் செலுத்தியிருக்கக்கூடும். அல்லது வாசிப்பின் ருசிதான் என்னைப் பிறவற்றிலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தியதோ என்றும்கூட நினைக்கிறேன்.  இவ்விதம் தனிமையில் நாட்டம் கொள்ள என் தாழ்வுமனப்பான்மைக்குப் போதிய பங்கிருந்திருக்கலாம். அது என்னை ஊமையாக்கிவிடவில்லை என்பது என் நல்லூழ். தொடர்ந்து அகவயமாக உரையாடுவது எழுதும் செயற்பாட்டில் ஈடுபடும் ஒவ்வொருவரின் அடிப்படையுமாதலால் தனிமையே அதன் மேடையாகிறது. அது சூழ்ந்திருப்போரை விடை தந்து அனுப்புவதாலோ அல்லது கூட்டத்திலிருந்து நாம் விலகி வருவதன் மூலமாகவோ நாம் உருவாக்கிக் கொள்ளும் ஒன்றல்ல. எவ்வளவு கூட்டத்திலும்கூட மனநிலையில் தனிமையாக இருப்பது. அப்படி இருக்கும் ஒருவனுக்குள்தான் படைப்புத் தேடல் எப்போதும் உயிர்க் கொண்டிருக்கக்கூடும். அதை நான் ஒரு போதும் கட்டாயமாக்கிக்கொண்டதில்லை. நீங்கள் சொல்வதுபோல நான் அதன் மீது மயக்கம் ஏதும் கொண்டிருக்கவில்லை. தனிமை எனது இயல்பூக்கமாகவே இருந்திருக்கிறது. இதைத்தான் நகுலன், “தனியாக இருக்கத் தெரியாத- இயலாத ஒருவனும் ஒரு எழுத்தாளனாக இருக்க முடியாது” என்றுணர்ந்திருக்கக்கூடும். தனியாக மலைகளுக்குச் செல்லுதல் என் விருப்பங்களில் ஒன்று.  அப்புறம் தனியாகப் பயணிப்பதும். திரையரங்குகளில் மொத்தப் பார்வையாளரும் கைதட்டிச் சிரித்துக் களிக்கும் காட்சியின்போதும் நான் சிரிக்காமல் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அதுவும் என் தனிமைப்படுதலின் தடமே. இளமையில் வீட்டிலிருப்பது என்பதன் தேவை மிகக்குறைவு. அப்போது தனிமை கொண்டிருப்பினும் அது பிரச்சனைக்குரியதல்ல. இப்போது குடும்பம் உள்ளவனாக இருக்கையில் அவர்களூடாகவே நான் இருக்க வேண்டியுள்ளது. என் உடல்நலமின்மை என் தனிமைக்கு ஒரு வகையில் துணை புரிந்து கொண்டிருப்பதற்காக மகிழ்ந்து கொள்கிறேன். ஏனெனில் என் பணி நேரம் போக நான் படுக்கையறையிலிருந்தே  வாசிப்பது எழுதுவது எனத் தனியுலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

18.நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் போன்ற சில கவிதைகள், தொகுப்பிலிருந்து பிரிந்து நின்று வாசிக்கும் வாசகனுக்கு மிகச்சிறந்த அல்லது சிக்கலான அழகியல் அனுபவம் ஒன்றைத் தருகிறது. இந்தக் குறிப்பிட்ட கவிதை எழுதப்பட்ட அனுபவத்தின் பின்னணியை மட்டும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

ஏற்கனவே கூட இதைக் கூறியிருக்கிறேன். என் அடையாளமாகக் குறிப்பிடும் அளவுக்கு இது என் “Branded” கவிதைகளுள் ஒன்று என்று. நேரடியான எளிய மொழியில் எழுதப்பட்ட அபூர்வ அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. கவிதைசொல்லி தன்னை இளம்பெண்ணுக்கு மட்டுமின்றி வாசகனுக்கும் இயேசுவாகக் காணக் கொடுக்கும் அபயத் தருணத்தை மொழிப்படுத்தியது. முதல் தொகுப்பின் இறுதிக் கவிதைகளில் ஒன்றாக எழுதப்பட்ட  இந்தக் கவிதையின் மொழித் திருகலற்ற வெளிப்படைத்தன்மையும் இதன் பரவலான கவனத்துக்குக் காரணம். அதனாலேயே கூட அடுத்த தொகுப்புக் கவிதைகளின் போக்குக்கே இது மறைமுக உந்துதலாகவும் இருந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக இந்தக் கவிதையைத் தொகுப்பில் சேர்க்கலாமா வேண்டாமா என ஜீ.முருகனிடம் ஆலோசிக்கிற அளவுக்கு இதன் மீது சந்தேகம் இருந்தது. எழுதும் கவிதைகள் இப்படி இலகுவான விளக்கக்காட்சியுடையதாக  இருந்துவிடக்கூடாது என நான் அப்போது மெனக்கிடல் கொண்டிருந்ததேன். நள்ளிரவில் நகரத்திலிருந்து என் ஊருக்கு சைக்கிளில் திரும்பிய ஒரு தருணத்தில் நேர்ந்த அனுபவம். கவிதையில் உள்ள எல்லா உணர்வுகளும், அந்தப் பெண்ணின் கூற்று உட்பட உண்மையே. ஆனால் அன்று அது ஒரு கவிதைக்கான நிகழ்வாக  எனக்குத் தோன்றியிருக்கவில்லை. நான்கைந்தாண்டுகளுக்குப் பின்பு அதே போன்ற நள்ளிரவில் அதே போன்று தனியனாக சைக்கிளில் திரும்பியபோது எதிர்பாராது அச்சம்பவம் நினைவெழுந்தது. இம்முறை கவிதைக்குரிய ஒரு நிகழ்வாக அதை உணர்ந்தேன். மனதில் கவிதையாகக் கோத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததும் ஒரே மூச்சில் எழுதிமுடித்தேன். இந்த நேரத்தில் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. நிகழ்வின்போது கவனம் பெறாத சம்பவத்தின் சில கூறுகள் நினைவில் மேலும் கூர்மை அடைந்து முக்கியத்துவம் பெறுகிறது. இதை எழுதும் இத்தருணத்தில் அவ்விரவில் நிகழ்ந்த – ஆனால் கவிதையில் கூறப்படாத என் மனநிலையை இப்போது மீள்நினைவு கொள்கிறேன். நான் சைக்கிளில் ஏற்றிக்கொண்டதற்கும் அப்பெண் பேச்சினூடே ஏசப்பா மாதிரி வந்தீங்க என்று சொன்னதுக்கும் இடையே அதற்கு மாறான எண்ணவோட்டம் ஒன்று என்னுள்ளிருந்தது. அப்பெண் என்னை ஒரு புனிதனாக உருவகித்துக்கொண்டிருந்த வேளையில் நான் நேர்மாறான ஒரு கற்பனையின் கீழ்மையில் உழன்றிருந்ததை உணர்ந்த அந்தக் கணமே நான் பரிசுத்தனாக, அபயமளிப்பவனாக மனமாற்றம் பெற்றிருந்தேன். இப்போது அந்தக் கவிதை எழுதப்பட்டிருக்குமெனில் வேறொரு பரிணாமத்தை அடைந்திருக்கக்கூடும்.

19.கவிதைகளில் எளிமை என்கிற சொல்லாடலை எப்படிப் பார்க்கிறீர்கள்?முதல் தொகுப்பில் பெரும்பாலும் படிமம் அதிகம் பயன்படுத்தாமல் பல்வேறு அனுபவ கணங்களையும் நம்முள் தட்டி எழுப்பும் கவிதைகள் தொகுப்பில் உள்ளதால் இக்கேள்வியை முன் வைக்கிறேன். அதிகமாகப் பயன்படுத்தப்படும் படிமம் சார்ந்து உங்கள் கருத்துகளையும் எனக்குச் சொல்லலாம்.

கவிதையில் எளிமை என்பது கவிஞன் தான் கண்டடைந்த அனுபவத்தை எவ்வித சிரமமோ இடையூறோவின்றி வாசகன் அறியுமாறு உரையாடலின் போது பயன்படுத்தும் தொடர்பு மொழியை ஒத்ததான நேரடி மொழிவாகத் தெரியலாம். பரிமாற்றத்தின் எல்லைவரை கவிஞன் உடனிருந்து வாசகனிடம் கைமாற்றித்தருவது போன்றதாகவும் தோன்றக்கூடியது. வெறும் வாசகன், என்ன இருக்கிறது இதில் என அந்த எளிமையில் ஏமாற்றமடைவான். கவிஞன் தான் கூறவந்ததை எங்கு முடித்து வைக்கிறானோ அங்கிருந்தே அவன் கவிதையைத் தொடங்கியும் வைக்கிறான். தேடும் வாசகன் அதை லகுவாக அடைந்து விடுகிறான். ஒரு கருத்தை உரைநடையில் போன்று கவிதை பயன்படுத்தினாலும் அது கவிதை என்ற அளவில் மேலதிகப் பொருள்களை உடனிகழ்த்தவே செய்கிறது. இவ்வாறு சாதாரணமாகத் தோன்றும் எளிய கவிதைகள் அர்த்தப் பரிமாணங்களை உள்வைத்து முதல் வாசிப்பில் எளிதில் அடையக்கூடிய ஒரு கவித்துவத் தெறிப்பை மீறிய அசாதாரண அனுபவத்தை வழங்கக்கூடியதாக இருக்கும். சங்கக் கவிதைகள் எளிமையானவைதான். ஆனால் அங்குப் புரியாமையை ஏற்படுத்துவது வழக்கிலில்லாத மொழியும், உள்ளுறை, இறைச்சி உள்ளிட்ட அதன் கவிதைக் கோட்பாடுகள்  குறித்த அறியாமையுமே.

இதுவேதான் இன்றைய படிமக் கவிதைகளிலும் நிகழ்கின்றது. வாசிப்புப் பழக்கத்தில் படிமத்தை உணரக்கூடியவர்கள் எளிதாக அதன் அழகியலைப் பெற்றுக்கொள்கிறார்கள். அப்பயிற்சியில்லாதவர்கள் படிமத்தையும் தடையாக உணரவே செய்வார்கள். படிமம், கவிதைகளில் உவமை, உருவகம், குறியீடு போன்று ஓர் அணியாக இன்றி முழுக்கவிதையையுமே வேறொன்றாக்கித் தரக்கூடியது. கவிதையில் இயல்பாக அது தேவைக்கு இடம்பெறும்போது ஒரு பொருள் மிடுக்குத் தோன்றுகிறது. உணர்ச்சி வேகத்தோடு உருவாகி வருகையில் அது கவிதையின் அழகியலை இன்னும் ஒளிபெறச் செய்கிறது. பிரமிள் கவிதைகளில் இதன் நடனத்தைக் காணமுடியும். தனிக் காட்சியைப் படிமமாக்கித் தரும்போது அது ஓர் உத்தியளவுக்கே வியப்பளிக்கக்கூடும். ஆனால் ஓர் அனுபவம் அல்லது நிகழ்வு படிமமாக வெளிப்படுமெனில் அதிலிருந்து கவிதையின் உச்ச அனுபவத்தைப் பெறமுடியும். நேரடிக் கவிதையாளர்களும் எதிர்க்கவிதையாளர்களும் உருவாகி வந்தபின்பு படிமம்கூட பின்னுக்குத் தள்ளப்பட்டதைக் காண்கிறோம். அவர்கள் கவிதைக்கு எதிரானவர்கள் அல்லர்; அதன் அலங்கார உபரிகளுக்கு எதிரானவர்கள் அவ்வளவுதான். சிறு அலங்காரமுமற்ற எளிய காட்சியனுபவங்களில் கூறும்முறையில் உயரிய கவிதையனுபவத்தை மட்டுமே வழங்க விரும்புகிறார்கள். இன்றைய கவிதையின் உண்மையான சவால் எளிமைதான்.

20.ஏரிக்கரையில் வசிப்பவன் உங்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுப்பிலிருந்து இன்னும் வித்தியாசமான பாய்ச்சல்தான். முக்கியமாக அதில் வரும் அத்தனைக் கவிதைகளிலும் புனைவுகளுக்கான பல்வேறு சாத்தியங்கள் ஒளிந்திருக்கிறது என்றே கருதுகிறேன். என் கருத்து சரியா?

ஆமாம். ஏற்கனவே குறிப்பிட்டபடியே இரண்டாவது தொகுப்புக் கவிதைகளில் புற விஷயங்களில் ஆர்வம் கொள்பவனாக மாறியிருக்கிறேன். எப்போதும் போல ஒரு கவித்துவத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். கிடைப்பதை என்னுடைய அனுபவமாக்கிக் கலைப்பொருளாக்கும் கவிதைச் செயல்முறையில் புனைவின் துணையை ஏற்க வேண்டியிருந்திருக்கிறது. இதைத் திட்டமிட்டு மேற்கொண்டதாகக் கருதிவிடக்கூடாது. முதல் தொகுப்பின் நீட்சியாகவும் புனை கவிதைகளின் மீதான என் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். மேலும் எழுதும் செயல்பாடு கவிஞனே எதிர்பாராத பலவற்றைத் தானாகக் கொணர்ந்து தருவது அவனுக்குக் கொடைதான். ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுப்பில் அதை என் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே பெற்றிருக்கிறேன்.

ஏரிக்கரையில் வசிப்பவன்

21.ஏரிகள், மலைகள், மலர்கள் ஏன் கற்கள் உட்பட இயற்கையின் அத்தனை வடிவங்கள், பல்வேறு கணங்கள் கூட இந்தத் தொகுப்பில் சிறப்பான கவிதைகளாக மிளிர்கின்றன. அன்றும் இன்றும் இயற்கையுடனான உங்கள் உறவு எப்படி இருந்துள்ளது அல்லது இருக்கிறது?

கிராமவாசிகள் அனைவருமே  இயற்கையின் அங்கமாகவே இருப்பவர்கள். அவர்களே இயற்கையின் வடிவம்தான். தம் இயற்கைப் பற்றைக் குறித்துக் கூற அவர்களிடம் ஏதும் இருக்குமா என்ன? கிராமவாசியான நான், இயற்கையின் மீது ஆர்வம் உள்ளவன் எனக் கவிஞனாக இருந்து கூறினாலும் மிகைதான். இயற்கையை மிக அடிப்படையாகக் கொண்ட சங்கக் கவிதைகளின் மாணவன் நான் எனினும் சங்கப்புலவனுக்குரிய எந்தக் கடப்பாடும் என் கவிதைகளை முன்வைத்து எனக்கில்லை எனக் கூறத் தோன்றுகிறது. என் இளமைதொட்டுப் படுக்கையிலிருந்தே மலைமீது நிகழும் சூர்யோதயத்தைப் பார்க்கும் பேறுபெற்றவன் நான். கதவைத் திறந்து வெளியே வந்தால் விரிந்த வயல்வெளி. பத்து நிமிட நடையில் ஏரிக்கரை. வழியெல்லாம் தென்னந்தோப்பு. அடைந்தால் அங்கிருந்து காண நான்கு திசைகளிலும் கோட்டை அரண்களாய் தூர மலைத் தொடர். என் ஊரைக் காட்டிலும் அதிக ஈடுபாடு கொண்ட என் பாட்டி வீட்டுக்குப் போனால் வீட்டருகே மலைகள். அங்கு நிலத்துக்கு மத்தியிலேயே குன்றொன்று உண்டு.  விடுமுறைகளில் அந்த மலைகள் தாம் எங்களுக்கு பொழுதுபோக்குக் களம். வேறென்ன வேண்டும்.

கிராமத்திலேயே தொடர்ந்து நான் இருக்க நேர்ந்திடின்கூட இந்த ஈர்ப்புப் பெருகியிருக்காது. என்னுடைய கலையுணர்வின் லார்வா பருவத்தில் ஊரைப் பிரிந்து மாநகரவாசியாய் “மகாமசான”த்தில் வசிக்க நேர்ந்ததே கிராமத்தின் ஒவ்வொரு துகளோடும் என் பிணைப்பை நினைவில் மேலும் இறுக்கித் தந்ததாகக் கூறுவேன். அங்கும் தினந்தோறும் கடலைப் பார்ப்பதற்கான ஆர்வம் கொண்டிருந்தேன். கடற்கரையில் மட்டுமே என் இருப்பு இயல்பாய் இருந்தது. கடல் அவ்வளவு பெரிதென்றாலும் ஒருவகையில் எங்களூர் ஏரிக்கு மாற்றுதான். விரும்பி அடிக்கடி போகும் பிற இடங்களாகக் குன்றத்தூர் குன்றும், பரங்கிமலையும் இருந்தன. அதுவும் பௌர்ணமி நாட்களில் இவ்விடங்களுக்குச் செல்ல ஆர்வப்படுவேன். ஊரிலிருந்தால் பிறந்தநாள் போன்ற பிரத்யேகமான நாட்களில் மலைகளுக்குத் தனிமையில் செல்வதை  விரும்புவேன். ஒரு மலையிலிருந்துகொண்டு இன்னொரு மலையில் மழை இறங்கி வருவதைப் பார்ப்பதற்கு நிகரான பெருமகிழ்வு நிகழ்வு வேறு இருக்குமா என்ன? தினந்தோறும் அந்தியில் தனித்திருக்க ஏரிக்கரைக்குச் செல்வேன். ஏரி நிரம்பியிருப்பதும் வறண்டிருப்பதும் ஒரு பொருட்டேயல்ல. அந்திக்குப் பின் பெருகும் இருளில் மதகில் அமர்ந்து அதன் விரிந்த வெளியோடும் நிசப்தத்தோடும் மூழ்கியிருக்கும்போது என்னைச் சூழவுள்ள ஒவ்வொன்றின் சாராம்சமாக ஒரு மையத்தில் குவிந்திருந்து, பின் கொஞ்ச கொஞ்சமாக முழுவதும் இயற்கையின் ஆதி வடிவில் கரைந்து போவதாக என்னை உணர்வேன். பின் மறுநாள்  காலையில் துலங்கும் என் நிலப்பரப்பின் ஒவ்வொன்றிலும் என்னை உணர்வதான ஓர் ஐக்கியம், இயற்கையின் தொடர்பறுக்க முடியாத ஒரு புள்ளியில் துகளாக இருந்துகொண்டே எல்லாவற்றின் மீதும் நான் படிந்திருப்பதான பேரனுபவத்தை நல்கக்கூடியது. மலையேறினால் சிறுகல், வனத்தில் நுழைந்தால் ஒரு மலர், நீருள் மூழ்கினால் மீன், காற்றில் மிதந்தால் பறவை, நிலத்தில் திரிந்தால் விலங்கென என்னை இயற்கையுள்ளும் எனக்குள் இயற்கையையும் போஷித்துக்கொள்கிற முறைமையில்தான் நான் கவிஞன்.

22.எளிய விவரணையோடு தொடங்கும் உங்களது பல்வேறு கவிதைகள் முடியும் தறுவாயில் முற்றிலும் வேறொரு அசாத்தியமான அடுத்த வடிவத்தில் போய் நிற்கிறது. எடுத்துக்காட்டு: மூன்று பாட்டிகள் போன்ற கவிதைகள். தற்போது எழுதப்படும் நவீன கவிதைகள் இப்படி இருக்கலாமே என்று கூடத் தோன்ற வைத்து விடுகிறது. கவிதைகள் அடையும் அசாதாரணமான தளம் உண்மையில் எப்படி அமைய வேண்டும்?

ஒரு கவிதைக்கான உந்துதலை எவ்வாறு தேடிச்சென்று அடையமுடியாதோ அப்படியேதான் எப்படித் தொடங்குகிறோம் எங்கு முடிக்கிறோம் என்பதும் நம் தீர்மானத்துக்கு அப்பாற்பட்டதே. ஆனால் வாசிப்பின் ரசனையில் நம் ஆழ்மனம் சேகரித்துக்கொண்ட கவிதையின் அளவுகோல், படைப்பின்போது மறைமுகமாகச் செயலாற்றுகிறது என்பதை நம்புகிறேன். என்னளவில் ஒரு கவிதை ஓர் ஓடையைப் போல் மெதுவாகத் தொடங்கி அருவியைப்போல் உந்துதல் மிக்க ஒரு விசையாக நிகழவேண்டும். இணையாக ஒரு பாலியல் நிகழ்வைப்போல் என்றும்கூட குறிப்பிட விரும்புகிறேன். கட்டாயமில்லையெனினும் ஒரு கவிதை சிறுகதையின் முடிவைப் போல் முத்தாய்ப்புக் கொள்வது அதைச் சிறக்கவே செய்யும். அப்போதே அது வாசகனில் ஒரு தூண்டலை நிகழ்த்தும். முதல்வரி பொருத்தமாக அமைந்துவிட்டால் அடுத்த வரிகளை ஒரு கவிதை பொருத்தமான சொற்களோடு தானே வளர்த்தெடுத்துக் கொள்கிறது. அதன் ஓட்டத்தில் முன் யூகித்திராத முடிவையும் கவிதையே தேர்ந்தும் கொள்கிறது. கவிஞனுக்கும் சக மனிதர்களைப் போலவே சாதாரண கண்களே உண்டெனினும் காணும் ஒவ்வொன்றையும் அவன் கொடையாகக் கிடைத்திருக்கும் கலைப்பார்வையாலே காண்கிறான். அந்தக் கலைப் பார்வைதான் பிறருக்குச் சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஒன்றுக்குள் உள்ள அசாதாரணத்தைக் கவிஞனுக்குக் காட்டித் தருகிறது. பின்பு அவன் தன் கற்பனை மற்றும் உணர்ச்சியால் கவிதை எனும் கலைப்பொருளாக அதைச் செதுக்கித் தரும்போது தேடல் கொண்ட வாசகனுக்கு மாத்திரமே கவிஞன் கண்ட அசாதாரணம் காணக் கிடைக்கிறது. பிறருக்கோ அது உணர்வெதையும் எழுப்பாத வெறும் காட்சி அல்லது சொற்கள்தாம்.

23.இருளுக்குப் போவது அல்லது வெளிச்சத்திற்குப் போவது இவை இரண்டையும் பொதுவாக உங்கள் கவிதைகள் தவிர்க்கின்றன என்று எனக்குள் ஒரு முன் முடிவு இருக்கிறது. அது சரியா தவறா?

இதைக் கடந்தகாலத்திற்குள் உழல்வது அல்லது எதிர்காலத்துக்குள் நுழைவது என்பதாகப் புரிந்துகொள்கிறேன் அல்லது எடுத்துக்கொள்கிறேன். அப்படியெனில் சரிதான். சிறந்த கவிதைகள் எப்போதும் நிகழ்காலத்தில் இயங்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. குறிப்பாக நிகழும் தற்கணங்கள் கவிதைக்கு முக்கியம். கவிஞன் தான் கண்டடைந்த ஒரு கவிதைக்கான பொருள் இறந்தகாலத்ததுவாகிவிட்டபோதிலும் அதைக் கவிதையாகப் படைக்கையில் அதை உணர்ந்த நிகழ்காலத்தையே தம் கவிதைக்குள் வைக்கிறான். அதன்மூலம் அது என்றென்றைக்குமான நிகழ்காலத்தின் கவிதையாகிவிடுகிறது. கவிதையின் சிறந்த தன்மைகளுள் இதுவும் ஒன்று. அதனால் இறந்தகாலப் புலம்பலையோ எதிர்காலக் கனவையோ வைத்தெழுதப்படும் கவிதைகள் கவிதைகளாகக் கணக்கிலெடுக்க முடியாத தன்மையைப் பெற்று விடுகின்றன. அதனால்தான் வரலாற்றில் கற்ற பாடத்தைக் கருத்தாக ஆக்கி எழுதப்படும் அரசியல் கவிதைகளிலோ, எதிர்கால வாழ்வை வென்றெடுக்க வழி சொல்லும் தன்னம்பிக்கை கவிதைகளிலோ கவிதையைத் ‘தேட’ வேண்டியிருக்கிறது. ஒரு மனிதனாக நான் கடந்தகாலத்தின் நினைவுகளுக்கும் வருங்காலத்தின் கனவுகளுக்கும் இடையே அல்லாடுபவன்தான் எனினும் கவிஞனாக நான் எப்போதும் நிகழ்காலத்தின் குழந்தையே.

24.உங்களின் பல்வேறு கவிதைகளில் ஜென் கவிதைகளின் பாதிப்பு அதிகம் உள்ளது என்று நினைக்கிறேன். (பந்து பற்றிய நினைவு என்கிற கவிதை மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டு) ஒவ்வொரு கணத்திலும் வாழ்தல் என்பது கவிஞனுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது?

மூன்று பாட்டிகள்

இதைக் கடந்த வினாவின் தொடர்ச்சியாகவே எடுத்துக்கொள்கிறேன். எனக்கு ஜென் தத்துவத்திலும், கவிதைகளிலும் நாட்டம் உண்டு. ஆனாலும் முறையாகப் பயின்று தொகுத்துக் கொண்டவனில்லை. என் தனிமை நாட்டமே என்னை ஜென்னுக்கு அருகில் நகர்த்தியிருப்பதாக நம்புகிறேன். ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் பெருந்திரளில் இருந்துகொண்டு அவற்றினூடாகச் சலனமற்று நிசப்தத்துடன் உள்ள ஒன்றிலோ அல்லது அமைதி உறைந்து கிடக்கும் தனிமை வெளியில் சிறு அசைவை நிகழ்த்தும் உயிர்ச்சலனத்திலோ என்னை ஈடுபடுத்த முனைவதையே நான் என்னுடைய ‘ஜென்’னாகக் கருதுகிறேன். என்னுடைய தொடக்கக் காலக் கவிதைகளான ஆழ் மாற்றம், யாத்ரீகன், இளைப்பாறல், என்இன்உம் போன்றவை ஜென் மனநிலையில் உருவானதாகவே தெரிகிறது. “பயணம் மாத்திரம் உண்டு, பயனென் றெதுவும் இல்லை”. இது ஜென் உணர்விலான மனநிலையா எனத் தெரியாது. முப்பது வயதில் துறவியாகும் அகவிருப்பத்தை அந்தரங்கமாகக் கொண்டிருந்தேன். குன்றத்தூர் கோயில் படிக்கட்டில் துவராடைத் தரித்த யாசகர்களோடு கையேந்தாமல் முழு நாளும் அமர்ந்திருந்திருந்தேன். இவ்வகையில் கற்பனையில் எனை அழைக்கும் மையமாகத் திருவண்ணாமலை இருந்தது.  சமூகத்திலிருந்தும் என்னிலிருந்தும் விலகி நிற்கும் இத்தன்மையை வாசிப்பின்வழி வேறு வகையான புரிதலாக உள்வாங்கிக்கொண்டேன். ஆரம்பகாலத்தில் நான் வாசித்ததில் என்னைப் பெரிதும் கவர்ந்த ஜே.கே., ஓஷோ போன்றோரின் சிந்தனைகளுக்குப் பெரும் பங்கிருப்பதாகக் கருதுகிறேன். இவ்வகையில் ‘தோரோ’வை மிகச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு கணத்திலும் வாழ்தல் என்பது எவருக்கும் கூடுமானால் அது வாங்கிவந்த வரமாக இருக்க வேண்டும். நான் அவ்வாறானவனா அல்லது அதை விரும்புகிறவனா அதற்காக முயல்பவனா என்று வினவிக் கொள்கிறேன். ஆனால் வாழ்வின் பெரும்பான்மை நேரங்களில் நான் ஒரு கவிஞனாகச் சிந்தித்துக்கொண்டிருப்பவன், என்னைச் சுற்றி நிகழ்பவற்றை ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருப்பவன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.

25.ஒரு நிகழ்வின் அல்லது சம்பவத்தின் அடிப்படையில் உங்கள் கவிதைகள் அதிகம் சுற்றிச் சுழல்கின்றன. அதைத் தாண்டிப்போக மறுக்கும் கவிதைகள் என்று கூட இவற்றைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒரு புள்ளியில் கரைவது சுவாரஸ்யமான விளையாட்டுதான்; அதே நேரத்தில் அதுவும் சோர்வு தரும் விளையாட்டாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது இல்லையா?

ஆமாம். என்னுடைய கவிதையாக்கத்தின் அடிப்படை இவ்வகையானதுதான். மூன்று பாட்டிகள் முன்னுரையில் இது குறித்துக் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத் தனிப்பட்ட என்னுடைய பாணி என்று கூறிவிட முடியாது. தமிழ்க் கவிதையின் பொதுத்தன்மையாகக் கூட கூறலாம். சங்கப் பாடல்களிலிருந்து மரபாகத் தொடர்ந்துவரும் தன்னுணர்ச்சிக் கவிதைகளின் முக்கிய முறைமைதான் இது.  கவிதைக்கான உந்துதல் தருகிற ஒரு நிகழ்வைக் கண்டடைந்த கணம் முதல், படைப்பு மனம் அதை வட்டமிட்டுப் படைப்பாக்கும் செயலில் ஈடுபடுகிறது.  திட்டமிடாது தானாக வந்தமைந்த அல்லது தேர்வு கொள்ளும் பொருண்மையை அடிப்படையாகக் கொண்டு அதை ஒரு முழு கலைப்பொருளாக ஆக்கும் பொருட்டு மட்டுமே கவிஞன் உந்தப்படுகிறான். அதற்கு வெளியில் பயணப்பட அவனுக்குத் தேவையும் இருப்பதில்லை. என்னளவில் படைப்பூக்க மனநிலையில் கண்டடைந்ததை எழுதிக் கொள்பவன் நான். அரிதாகவே உணர்ச்சி வேகத்துடன் கூடிய மனநிலைகளில் எழுதியும் கண்டடைந்துள்ளேன். அன்றி மையமாகக் குவியும் என் சிந்தனை அமைப்பும் இதற்கான காரணமாக இருக்கலாம். இது கீழைத்தேயத்தின் உணர்வுமயமான படைப்பு மனம் தொடர்பானதும்கூட. மேற்கத்திய கவிதைகள்தாம் தொடர்ச்சியற்ற ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல்வேறு காட்சிகளை இணைத்து அறிவார்த்தமான படிமங்களாக்கிக் கொள்வதைக் காண்கிறோம். அத்தகைய உத்திகளை முயன்று பார்த்து அதை என் இயல்புக்கு ஒவ்வாத, உணர்வுடன் ஒன்றாத ஒன்றாக உணர்ந்ததால்  கைவிட்டுவிட்டேன். எனவே எனக்கிந்த செயல்பாடு (அ) விளையாட்டு உவப்பானதாக இருப்பதாலேயே அவ்வப்போது இதிலே ஈடுபட்டு வருவதாக இருக்கலாம். நான் ஒரு போதும் சோர்வோ அலுப்போ இவ்விஷயத்தில் அடைந்தது கிடையாது.

26.அற்புதமான கவிதைகள், கவிதைகள் சார்ந்த மிகச்சிறந்த விமர்சனக் கட்டுரைகள் இவற்றைத் தாண்டி நீங்கள் சிறுகதைகள், நாவல்கள் பக்கம் போகவில்லை. இதற்கு என்ன காரணம் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

பரந்த அனுபவத்தை விட நான் குவிந்த அனுபவத்தில் நாட்டம் கொண்டவன். எதையும் விரைந்து கூறிமுடிக்க விரும்புகிறேன். அவ்வாறு முடித்தவை முழுமை பெறவில்லையெனத் தோன்றினால் தொடர்ந்து பிடிவாதமாக நேரம் செலவிட்டு உடனே நிறைவு காண எண்ணுவேன். இந்த இயல்புக்குக் கவிதையே எனக்குத் தோதாக உள்ளது. இலக்கிய நுழைவுக்காலம் தொட்டு நான் என்னைக் கவிதை எழுதுபவனாகத்தான் பாவித்துக்கொண்டு செயலாற்றி வருகிறேன்.  ஞானக்கூத்தன், சி.மணி, ஆத்மாநாம், பிரம்மராஜன், தேவதச்சன், தேவதேவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், சமயவேல் என நான் மதிக்கும் மூத்த கவிகளில் கவிதைகளில் மட்டுமே பணியாற்றியவர்கள் அதிகம். என் சக கவிகள் யவனிகா ஸ்ரீராம், ஷங்கர்ராமசுப்ரமணியன், ராணிதிலக், கண்டராதித்தன் போன்றோரும் கவிதையை மட்டுமே முதன்மையாகக் கொண்டவர்கள். விதிவிலக்காக சிற்சிலர் கதைகளை எழுதிப் பார்த்திருக்கலாம். கவிதை உலகமே என் ஆன்மாவுக்கும் மிக நெருக்கமாக உள்ளது. நான் விவரணையாளனாக இல்லை; ஏனெனில் நான் ஒரு உணர்ச்சிக் குவியன். ஆனால் என் வாசிப்புக்களத்தைத் திரும்பிப் பார்த்தால் கவிதைகளைக் காட்டிலும் சிறுகதை, நாவல்களென புனைவுகளைத்தான் அதிகமும் வாசித்திருப்பேன். நண்பர்கள் கூட கேட்டிருக்கிறார்கள். இவ்வளவு நாவல்களை வாசிக்கிற நீங்கள் ஏன் நாவல் ஒன்று எழுதிப் பார்க்கக் கூடாது என்று. ஆனால் அது எனக்கு அசாத்தியமான வேலையாகவே தோன்றுகிறது. அதற்கான பொறுமையோ உழைப்போ என்னிடம் இல்லை. கூடவே நான் சோம்பலுடன்  இருக்க விரும்புகிறவன். ஆனால் கற்பனையில் என் இளமைப்பருவத்தைக் களனாகக் கொண்டு “குந்தாணிமேடு” என்ற நாவலை அத்தியாயம் அத்தியாயமாக எழுதிப் பார்த்திருக்கிறேன். அது என் ஊர்ப் பெயர். “ஒரு வேறு உலகன்” என்ற ஒரே சிறுகதை மட்டுமே எழுதி வெளியாகியுள்ளது. என்னைப்பொருட்படுத்தி வாசிக்கும் நண்பர்கள் சிலர் கதையை வரவேற்றனர். கொஞ்சம் உழைப்பையும் தயாரிப்புத் திறனையும் வரவழைத்துக் கொண்டு பொறுமையாக சில சிறுகதைகளை எழுதிப் பார்க்க ஆவலிருக்கிறது. பார்ப்போம்.

27.நவீன கவிஞன் ஒருவனின் உடலும் மனமும் எதிரெதிர் போக்கில் இயங்குவதைப்போல் உணர்கிறேன். இதைச் சரி செய்ய இயலாதா அல்லது இதை நான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளேன் என்று அர்த்தமா?

பொதுவாகவே கலைஞர்கள் மன உலக சஞ்சாரிகள், கற்பனாவாதிகள் என்பதனால் அவர்களின் வாழ்க்கை வழக்கங்களில் விசித்திரத்திற்குக் குறைவிருக்காது. அதிலும் குறிப்பாகக் கவிஞர்கள் எதை அணுகுவதிலும் உணர்ச்சிப் பெருக்கையும் உத்வேகத்தையும் அதிகம் கொண்டிருப்பவர்கள். உடல் குறித்த பிரக்ஞை இயல்பிலேயே அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். அன்றாட நடத்தைகளாலான வழக்கமான வாழ்க்கை நடத்துவதில் எப்போதும் அவர்கள் சலிப்படையவே செய்கிறார்கள். அந்தச் சலிப்பைப் போக்க கனவுகளையும் கற்பனைகளையும் பெருக்கி, திசை மாற்றும் வஸ்துகளை நாடுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. இவ்வகையில் பாரதிக்கு இருந்த பழக்கங்கள் குறித்த உரையாடல் பொதுவெளியில் புழங்காதவை.

நாங்கள் எழுத வந்த காலகட்டத்தில் குடி, சாகச செயல்போல எங்களை வளைத்திருந்தது. எழுதும் நண்பர்கள் கூடினால் முழு நாளும் அல்லது இரவெல்லாம் குடித்தோம்; ஓயாமல் பேசினோம்; இதற்கிடையில் எழுதவும் செய்தோம். அதனாலா என்று தெரியாது ஆனாலும் சிலர் உடல் நலிவடைந்தோம். தவிர உள ரீதியாகப் படைப்பு மனத்துடன் தீவிரமாக உழல்பவர்களாதலால் அன்றாட வாழ்வின் கடமைகளைக்கூடச் செய்துகொள்ளாது தவிர்க்கவோ தள்ளிப்போடவோ செய்ய நேரும். இதனால் பொதுச்சமூக வாழ்வுக்கும் அவர்கள் வாழ்வுக்குமான இடைவெளியும் அதிகரித்து ஒருவித மன நெருக்கடிக்கு ஆளாகலாம். சுய பிரச்சினையென்றாலும் சமூக பிரச்சனை என்றாலும் படைப்பாக்கம் என வரும்போது அதன் ஆழம் வரை சென்று உழல்பவர்கள் அவர்கள் மன உலகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல்நலத்துக்கு வழங்கத் தவறுகிறார்கள். உளவியல்ரீதியாகப் படைப்பாக்கத்துடன் “schizophrenia” நோய்மைக் கூறுகளுக்கும் தொடர்பிருப்பதையும் கூறவேண்டும். தமிழின்  உன்னத கவியான ஆத்மாநாம் “Affective Disorder” என்ற மனநலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிகிறோம்.

“பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்”,  “வைத்தியம் தெரிந்தும் செய்துகொள்ளா நோயாளி நான்” போன்ற அவரது கவிதை வரிகளில் போலவே நவீன கவிஞர்கள், கலைஞர்கள் மேதைமையும் பேதைமையும் கொண்டு அவர்களுக்கான தனி இயல்பைக் கொண்டிருப்பவர்கள்தாம் என்று தோன்றுகிறது.

28.தற்போது எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் யாரெல்லாம் நம்பிக்கை அளிக்கிறார்கள்? அவர்களுக்குச் சொல்லிட ஏதேனும் வரிகள் உங்களிடம் இருக்கிறதா?

தொண்ணூறுகளின் கவிஞர்கள் எனக் குறிப்பிடும்படியாகப் பத்துக்கும் மேற்பட்டோர் ஓர் இயக்கம்போல் தமிழில் உருவாகி வந்திருந்தோம். தலைமையானவர்போல் யவனிகா ஸ்ரீராம் இருந்தார். இன்றுவரை கோணங்கி தம் கல்குதிரையில் இவர்களில் பலரது கவிதைகளைப் பிடிவாதமாகப் பதிப்பித்து அக்கவிஞர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறார். அவர்களில் மிகக் குறைவாக எழுதி, குறைந்த எண்ணிக்கையில் தொகுதி வெளியிட்டிருப்பவன் நான். இவ்வகையில் கண்டராதித்தனையும் என்னோடு சேர்த்துக்கொள்ளலாம். இரண்டாயிரத்துக்குப்பின் வந்தவர்களில் சாகிப்கிரான், பயணி, ஸ்ரீசங்கர் குறிப்பிடத்தகுந்தவர்கள். மெளனன் யாத்ரீகாவையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு கவனம் பெற்றவர்கள் சபரிநாதன், வெய்யில், நரன், அகச்சேரன், பச்சோந்தி. இன்று ஒவ்வொருவருமே அவரவரளவில் ஆளுமைகளாக வளர்ந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் வே.நி.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், றாம் சந்தோஷ், ச.துரை, சூ.சிவராமன், சூரர்பதி என புதியவர்கள் என் வாசிப்புக்குள் வந்துள்ளார்கள். முகநூலில் நான் இல்லை என்பதால் புதியதாக எழுதுபவர்கள் குறித்து அறியமுடியாதவனாக இருக்கிறேன். மேற்கூறியவர்கள் என் வாசிப்புக்கும் ரசனைக்கும் பொருந்தி வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என முக்கியமாகக் கூற நினைக்கிறேன். சமீபத்திய என் மனநிலையில் கவிதை குறித்த எதிர்பார்ப்பின் அடிப்படையே புரண்டிருப்பதுபோல் ஓர் உணர்வு. இன்று வெளிப்படையான மதவாத அரசின் கருத்தியல் மற்றும் செயல்முறைக் கொடுங்கோன்மைக்கு முன் கையாலாகாக் குடிமகன்களாகக் கலைஞர்களும், சிந்திப்பவர்களும், அறிவுஜீவிகளும்கூட திக்பிரமையாளர்களாக மெளனத்திருக்கும் சூழலில் காத்திரமான ஒரு புதிய குரல் நம் கவிதைச் சூழலில் ஒலிக்குமா; ஒலிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் இருக்கிறேன். (மதவாதம் ஒரு பக்கம் எனில் அதற்கீடான மதத் தூய்மைவாதம் இன்னும் அதிர்ச்சியூட்டுகிறது. ஒன்றின் தொடர்ச்சிதான் மற்றொன்று. மதவாதம் சிறுபான்மையினரைக் குறிவைக்கிறது; தூய்மைவாதமோ மதத்துக்குள் இருக்கும் சிந்திப்பவர்களாகிய சிறுபான்மையைக் குறி வைக்கிறது. சல்மான் ருஷ்டிக்கு நேர்ந்திருப்பது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் பரவிவிட்டதன் சமிக்ஞை. இந்துவானாலும் இசுலாமியரானாலும் தூய்மைவாதத்தில் ஒருமித்துவிடுகிறார்கள்.) சமீபத்தில் ஷங்கர்ராமசுப்ரமணியனின் மொழிபெயர்ப்பில் வாசித்த, ஆகா சாகித் அலியின் கவிதைகள் இந்த உணர்வுக்குத் தீமூட்டியது போல உணர்ந்தேன். தொடர்ந்து இவ்வகையில் அருந்ததி ராயின் “பெருமகிழ்வின் பேரவை”யை ஒரு சமகால அரசியல் பேரிலக்கியமாக வாசித்து முடித்தேன். சமகாலத்தை எழுதினால் இவற்றை இப்படித்தான் எழுத வேண்டும்; இல்லையெனில் எழுதுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிக்கு ஆளானேன். புனைவு வாயிலாக அடைந்த இப்பெருக்கு கவிதையில் நிகழ்ந்திருக்கவேண்டும்; குறிப்பாகத் தமிழில் நிகழவேண்டும் என்ற ஆதங்கத்தில் அறைகூவல் விடுக்குமாறு எனக்குள் இதைக் கூறிக்கொள்கிறேன். புதிய பாரதிதாசன்களே, பிரமிள்களே ஆத்மாநாம்களே எழுக.

29.ஜவ்வாது, ஏலகிரி மலைகளில் நடத்திவந்த இலக்கியக் கூடல்களை ஏன் தற்போது நிறுத்தி விட்டீர்கள். மீண்டும் அவற்றைத் தொடர வாய்ப்புகள் உள்ளனவா?

90களின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படாத ரயில்வே மேம்பாலத்தில் சந்தித்து வந்த வாணியம்பாடி உள்ளூர் நண்பர்கள் கூடி “நவீனர்” என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி நூல் வாசிப்பைப் பகிரல், உலகத் திரைப்படங்கள் திரையிடல், ஆங்கிலப் புத்தாண்டுகளில் இலக்கிய உரையாடல் களமாகக் கூடல் என செயல்பட்டோம். பிரைட் டுடோரியலும் முக்கிய சந்திப்பு மையமாக இருந்தது. அதன் முதல் புத்தாண்டு நிகழ்வு என் வீட்டில் உரையாடலாகவும், இரண்டாவது புத்தாண்டு, ஏலகிரிமலையில் ஏரிக்கரை பெருமரத்தினடியில் (அப்போது அது சுற்றுலாத் தலமாகியிருக்கவில்லை) கட்டுரைகள் வாசிப்புடன் நிகழ்ந்தது. இதன் மூலகர்த்தாக்களாக சமீபத்தில் மறைந்த கவிஞர் ராமலிங்கமும், அண்ணன் சித்தார்த்தனும் இருந்தார்கள். பின்பு அதுவே கட்டாயமேதுமின்றி பலவாறான மாற்றங்களோடு விரிவடைந்து  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலகிரி, ஜவ்வாது மலை, நாயக்கனேரி எனத் தொடர்ந்து நிகழ்ந்தது. பிரம்மராஜன் எங்களுடன் இருந்த குறிப்பிடத்தகுந்த சில நிகழ்வுகள் முக்கியமானவை. ஜீ.முருகன், சா.தேவதாஸ், மு.குலசேகரன், மனோன்மணி, சுரேஷ், நீலகண்டன், ராணிதிலக், கண்டராதித்தன், குமார் அம்பாயிரம், பழனிவேள் ஆகியோர் மையத்தில் இருந்தனர். பா.வெங்கடேசன், ந.பெரியசாமி, சபரிநாதன், வே.பாபு, மனோமோகன், சூரர்பதி, சீனிவாசன் ஆகியோர் இறுதி ஆண்டுகளின் வருகையாளர்கள். இலக்கிய ஆர்வம் கொண்ட என் மாணவர்களும் உள்ளூர் நண்பர்களும் தொடர்ந்து பங்கேற்பார்கள்.

ராணி திலக்குடன் இணைந்து ஆற்காடு பஞ்ச பாண்டவர் மலையில் நடைபெற்ற போர்ஹே உரையாடல் நிகழ்வுக்கு கோணங்கியும் நாகார்ஜூணனும் சிறப்பு அழைப்பாளர்கள். ஒவ்வொரு நிகழ்விலும் அவ்வாண்டுகளில் வெளியாகியிருந்த 5 அல்லது 6 நூல்களுக்கும் குறையாமல் கட்டுரையாக எழுதி வாசித்து விவாதித்தோம். திறந்த அழைப்பாகவன்றி குறிப்பிட்ட நண்பர்களுக்குள் பகிர்ந்து ஒன்றுகூடுவோம். முறையான பதிவுகளாக்குவதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவ்வப்போது புது எழுத்தில் நிகழ்வு குறித்த பதிவோ நிகழ்வில் வாசித்த நூல் குறித்த கட்டுரையோ பதிவாகியிருக்கிறது அவ்வளவுதான். டிசம்பர் வந்தாலே வேலூரிலிருந்தோ, சேலத்திலிருந்தோ, ஒசூரிலிருந்தோ, திருவண்ணாமலையிலிருந்தோ நண்பர்கள் உற்சாகமாக நிகழ்வு குறித்துக் கேட்பார்கள். அதையே தொடக்கமாகக்கொண்டு நிகழ்வை ஒருங்கிணைப்போம். தொடர்ந்து செய்யப்படும் எதுவும் ஒரு சடங்காகிவிடுவதுபோல ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாய் குறையத்தொடங்கியது. தீவிர உரையாடல்கள் குறைந்து “கொண்டாட்ட” சந்திப்புகளாகத் தளர்ந்தது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட என் உடல்நலப் பாதிப்பால் மேலும் தொய்வு ஏற்பட்டது. வரும் நண்பர்களைக் “கட்டியாண்டு” திரும்ப அனுப்புவதற்கான வலு குறைந்துவிட்டது போலவும் தோன்றியது. அது ஒரு காலகட்டம் என்பது போல நினைத்துப் பார்க்கக் கூடியனவாக அந்த நிகழ்வுகள் மாறிவிட்டன. சமூக ஊடகப் பரவலும் நண்பர்கள் நேரில் கூடி விவாதிக்கும் தேவையை இல்லாமலாக்கியிருக்கிறது. பார்த்துக் கூடி உரையாடிக் களிக்கும் எல்லா மகிழ்வையும் விழுங்கிக்கொண்டிருப்பதில் முகநூலுக்கும் உரிய பங்கிருக்கும் போல. இப்பகுதியிலிருந்து அடுத்த தலைமுறையாக இலக்கியப்பித்தேறியவர்கள் எவரேனும் உருவாகி வரக்கூடுமெனில் நிச்சயமாக அவர்களுக்குப் பின்னிருந்து மீண்டும் சந்திப்புகளை ஏற்பாடு செய்யச் சித்தமாயிருக்கிறேன்.

30.ஐம்பது வருடங்களுக்குப் பிறகு வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? நவீன இலக்கியத்தில்  முக்கியமான ஒரு கவிஞராக இருப்பதையும் சேர்த்துத்தான் கேட்கிறேன்.

நான் பயின்ற எங்களூர் தொடக்கப் பள்ளியில் ஆண்டு இறுதியில் சுத்தம் செய்வதற்காகத் திறந்த டிரங்குப்பெட்டி நூலகத்திலிருந்து என்னை ஈர்த்த, “ஓநாய் பையன்” என்ற சிறுவர் நாவலை நான் வாசித்த வேளையில் (ராமன் ஆசிரியருக்கு நன்றி) இதே மொழியில் உலகின் பல சிறந்த இலக்கியங்களையும் வாசிக்கப்போகிறேன் என்று எப்படி நினைத்துப் பார்க்கவில்லையோ அதே போன்றதுதான் அப்பா வாசிக்க ஆர்வமூட்டிய ராணி இதழ் வழியே அறிமுகமான கண்ணதாசனின் வாழ்க்கைத் தொடரை ஆர்வமாக வாசித்த நாட்களில் இம்மொழியின் கவிஞனாக நானும் ஒருநாள் உருவாகப்போகிறேன் என்பதையும் அறிந்திருக்கவில்லை. ஒரு காலத்தில் வாசிப்பும் கவிதையும் என் காலைச்சுற்றிய பாம்பு, பின்பு அது நான் வாலைப் பிடித்த புலியானது. கொஞ்ச காலம் ஆட்டம் நடந்தது எனினும் இறுதியில் என்னைப் புலி உண்ணவே தந்தேன். ஒரு கவிஞனாக இப்பிறவியை நான் கடந்து கொண்டிருப்பது ஒரு பேறு. வாசிப்புக்கு இணையாக இளமையில் என் ஆர்வம் இரண்டு விஷயங்களிலிருந்தது. ஒன்று விளையாட்டு. பள்ளிப் பந்தயங்களில் முதலாவதாக வருவேன். பத்து வயதில் நான் Rheumatic fever எனும் வாதக் காய்ச்சலுக்கு ஆட்பட, அதனாலான மூட்டுவலி என் விளையாட்டை முடக்கியது. ஒருவகையில் அதனுடனான என் யுத்தம்தான் மலைப்பித்து எனக் கூறுவேன். அது பின் Rheumatic Heart desease ஆக வளர்ந்து இன்று அறுவை சிகிச்சை முதலான பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆர்வம் உயர்நிலைப்பள்ளி அளவில் தமிழ் ஆசிரியராகும் கனவு இருந்தது. பின்பு அது சற்றே கூடி கல்லூரிப் பேராசிரியராகப் பலித்திருக்கிறது. அதன் வழக்கத்திற்குள் இருப்பது என் கவிச்சுடரை மட்டுப்படுத்துகிறது எனினும் ஒரு வகையில் அணையாமல் காத்து வருகிறது. புத்தகங்களோடும் கவிதைகளோடும் இவ்வாழ்வின் பேரின்பம் பிணைக்கப்பட்டிருப்பதில் எனக்குப் பெருமைதான். அதேநேரம் என் வாழ்வில் குற்ற உணர்வு என்ற ஒன்று இருந்திருக்குமென்றால் அது என் பாலியலோடு தொடர்புடையதாக மட்டுமே. இன்று எனக்கு நண்பர்களாக இருப்பவர்களில் பெரும்பான்மையோர் இலக்கியத்தின் வழி அமைந்தவர்களே. குறிப்பாக  முதுகலைத் தமிழப் பயின்ற காலத்தில் சென்னையின் சாலைகளில் சோர்விலாது உடன் நடந்து இலக்கியம் பேசிய முரளி அரூபன், முனைவர் பட்ட ஆய்வுக்காலத்தில் ஆய்வை விட ஆர்வத்துடன் தினந்தோறும் சந்தித்து உரையாடிய போரூர் கண்ணன் இருவரையும் மறக்கவே கூடாத நண்பர்களென இப்போது நினைக்கிறேன். சென்னையின் அந்நியம் அந்நாட்களில் இவர்களால்தாம் களையப்பட்டது. இன்று இலக்கிய படைப்பாளிகள் ஒவ்வொருவரையும் சந்திக்காதவனாக இருப்பினும் மானசீக நண்பர்களாகக் கொண்டிருப்பது அற்புதமான உணர்வு.

ஆனாலும் இதுவரையிலான வாழ்வில் – காலை கண் விழித்து முக்கியமான ஏதொன்றையும் செய்து முடிப்பதற்குள் மாலை வந்துவிட்டதாக – என்னவோ ஒரு நிறைவின்மை. இனிமேல்தான் “இருந்து” செய்யப் போகிறோம் என்கிற மாதிரி இதுவரை நடந்தவை எல்லாம் அலைச்சலாகவே இருந்திருக்கிறது. அலைச்சல் மட்டும்தான் வாழ்க்கை என்ற புரிதலும் கிடைத்திருக்கிறது. முப்பத்தைந்து வயது வரை நாத்திகனாக என்னைப் பாவித்திருந்தேன். பின்பு என் வாழ்வில் யாரிடமாவது என்னை ஒப்புக்கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைமை  வந்தபோது கடவுள் கைகொடுத்தார். என் மனைவி அவரால் அனுப்பிவைக்கப்பட்டவர் என்றே நம்புகிறேன். இருப்பினும் இன்றைய சமூக அரசியல் நிலையைக் கணக்கில் கொண்டு இன்னும் ஆற்றல்மிக்க பெரியார் ஆக அவர் சமூகத்துக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறேன். இதுவே இப்போதைய என் கடவுள் கொள்கை. விரும்பி வாசித்த பலவும் மறந்து வருவதும் புழங்கிய இடங்கள் வேகமாக மாறிவருவதும் இழப்புணர்வைத் தருகிறது. கடந்த நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டதாயினும் பிறந்த ஊருக்குத் திரும்புதல் என்பதில் இன்னும் விருப்பத்துடன் இருக்கிறேன். அதே நேரத்தில் இந்தியாவின் முக்கிய தடங்களில் போகாத திசைகளில் பயணம் செய்வது கனவு விருப்பமாக இருக்கிறது. நீண்ட தூரப் பயணத்தை என் உடல்நிலை எதிர்கொள்ளவும் வெளியுணவை என் வயிறு ஏற்றுக்கொள்ளவும் கூடிய நாளில் அதற்கு ஆயத்தமாவேன் எனத் தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.