சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்

”நான் மாஸ்டர் சுரேந்திர வர்மாவோட சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.” என மாயா தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி சொன்னாள்.

சென்னையின் பரபரப்புகள் பாதிக்காத ஆழ்வார்பேட்டையின் டி.டி.கே சாலையில் மேலும் ஆழ்ந்த அமைதியுடன் நாடக ஆர்வலர்கள் மட்டுமே அறிந்திருந்த அந்தச் சபாவின் பெரிய காலியான அரங்கை எதிர் நோக்கியிருந்த சூர்யா அவளைப் பார்க்காமலேயே சோர்வாக “அந்த நாடகத்த அப்படியே போடலாமே. இன்னைக்கும் பெரிய மாற்றம் தேவைப்படாது” என்றான். அவர்கள் இருவரின் குரல்களும் அரங்கை மோதித்தெறித்து எதிரொலித்தது.

“இல்ல. எனக்கு அப்படித்தோணல. இருபத்தி மூனு வயசுல அதை நடிச்சப்ப பரவசமாவும் புரட்சிகரமானதாவும் இருந்துச்சு. இப்போ முப்பத்திரண்டு வயசுல அப்படித் தோணலடா”

“ம்”

“கத ஞாபகம் இருக்கா உனக்கு”

கையை நீட்டி சோம்பல் முறித்தபடி,“ஓ! இருக்கே. ஆண்மையில்லாத அரசன். கன்னிமையோடு இருக்கும் அரசி சீலவதி. வேற அரசனோட இரவைக் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்வாங்க. அந்த நிகழ்வுல கலந்துக்கிட்டு அவளோட ஒரு இரவைக் கழிக்கும் காதலன்.” அவள் முகத்தைப் பார்த்து “நீயும் வினோத்தும் நடிச்சீங்க அதுல” ஏதோ கசப்பை உணர்ந்தவனாக மேலும் இடைவெளி விட்டு ”ஆனா நாடகம் எதிர்பார்த்த அளவுக்கு போகலயே. அதுவும் நினைவிருக்கு” என்றான்.

“நாடகம் சரியாப் போறத பத்தியெல்லாம் என்னைக்கு நாம யோசிச்சிருக்கோம்” என மாயா அவன் சொல்வதைப் பொருட்படுத்தாத தொனியில் சொன்னாள்.

“சுரேந்திர வர்மா சார் கிட்ட பெர்மிஷன் வாங்கனும். தமிழ்ல மொழிபெயர்ப்பு வந்திருக்கு பதிப்பகத்துகிட்டயும் அனுமதி வாங்கனும்” என்றான்.

“நான் சொல்றத மொதல்ல காதக் குடுத்து கேளு. அந்த ப்ளேயை நான் அப்படியே போடப்போறதில்ல. அது முடியற இடத்திலிருந்து இன்னொரு நாடகத்த எழுதிருக்கேன். அதத்தான் போடனும்னு சொல்றேன்”

“ஓ! அதான் முடிவு பண்ணிட்டியே”

“நான் என்ன எழுதிருக்கேன்னு கேக்கனும்னு தோணல இல்ல”

”அது கிரேட் ப்ளே. அப்படியே எடுக்கலாம். இன்னும் ரெலவன்ஸ் இருக்கு”

அவனை நோக்கி இருக்கையை முழுமையாகத் திருப்பி நேராக உட்கார்ந்து அவன் கண்களைப் பார்த்தவாறு “உனக்கு நான் சொல்றது புரியலன்னு நினைக்கிறேன். சுரேந்திர வர்மா எடுத்தது பெண்ணியச் சாயலோட இருக்கு. இன்னைக்கு இன்னும் அதே பிரச்சனை இங்க இல்ல.” என்று கூறி சற்று நிறுத்தினாள். அடுத்து அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று புரிந்தவன் போல் சூர்யா உடலைத் தளர்த்தினான்.

 ”கட்டுக்கடங்காத சுதந்திரம். குற்றவுணர்ச்சியில்லாததன்மை.” கலைந்து கலைந்து பேசினாள். சற்று நிமிர்ந்து உட்கார்ந்து ”நாம சுதந்திரம்னு நினைச்ச எதுவும் அத்தனை மகிழ்ச்சிகரமானதா இல்லயோன்னு தோணுது.” என்றாள்.

“எனக்கு ஒட்டுமொத்தமாவே இந்த ப்ளே மேல இண்ட்ரஸ்ட் இல்ல. மார்டன் தியேட்டர்ஸ்ல இந்தமாதிரி பழைய புராணங்கள நாடகமா நிகழ்த்தறத பத்தி வினோத் விமர்சனம் செய்யறதக் கேட்டிருக்கேன். எனக்கும் கூட அவன் கருத்துல ஒரு சாய்வு உண்டு. புராணம். இதிகாசம். புல்ஷிட்” என முகத்தைச் சுழித்தான்.

மாயா எரிச்சல் அடைவது தெரிந்தது. அதை அடக்கியவளாக “நீ காதாப்பாத்திரங்கள பற்றி மட்டும் யோசிக்கற. நான் அது வழியா வர்ற கேள்விகள பாக்கறேன். அது காலத்துக்கும் மாறாது. பதில் வேணும்னா ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறும்”

“நான் அதப்பத்தி மட்டும் சொல்லல.”

“தெரியும். ஆனாலும் கூட இரு.”

அவன் தன் கனத்த சுருள் மண்டையை உதறியவனாக ” நீ சொன்னா அந்த செண்ட் தாமஸ் மெளண்ட்ல இருந்து கூட தலைகீழா குதிப்பேன் மாயா. சரி சொல்லு. எங்க இருந்து ஆரம்பிக்கப் போற?” என்றான்.

புருவத்தை உயர்த்திக் கோணலாகச் சிரித்தபடி மேலும் நிமிர்ந்து உட்கார்ந்து,”மேடை அமைப்புல இருந்தே ஆரம்பிக்கனும். மேடை அரங்கத்த இரண்டா பிரிக்கனும். ஒரு பாதி, குறிப்பா இடது பக்கம் எனக்குத் தண்மையை அளிக்கக்கூடிய ஒரு காட்சியமைப்பை உருவாக்கனும். அடர்ந்த நீலமும், வெள்ளையும் பிரதானமா இருக்கனும். வலது பக்கம் இருக்க வேண்டியது ஒரு பிரம்மாண்டமான படுக்கை. கதகதப்பும், ஏகாந்தமும் தெரியும்படியான சிவப்பு ஒளி கொடுக்கனும். சிவப்பு நிறத்தோட பல வேரியண்ட்ஸ்ல..” என்று சொல்லிவிட்டு முன்னால் திரும்பி மேடையை வெறித்துப் பார்த்தாள்.

”சிவன்-சக்தி மாதிரி கற்பனை பண்றியா?”

“ரொம்ப மண்டைய அலைய விடாத. ஒரே ஆளுக்குள்ளயே இந்த ரெண்டு தன்மையும் இருக்கு. அதோட உறவாட்டம் தான் இங்க எல்லாமும்னு தோணும் எனக்கு.” என்றாள். “நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்” என சற்று நக்கலாகச் சொன்னாள்.

“போடி. பின்ன நான் நடிக்க மாட்டேன் பாத்துக்க”

“நீ தான் பிரதோஷனா நடிக்கனும்” என்று இயல்பாகச் சொன்னாள்.

அவன் அதிர்ச்சி அடைந்ததை மறைக்க முயல்பவனாக “இது ஏற்கனவே இருக்கற ஒரு நாடகத்தோட தொடர்ச்சினா முதல்ல அந்த நாடகத்துல என்ன நடந்ததுன்னு சொல்லனும் இல்ல?”

“மறந்துட்டேன் பாரேன். நரேட்டர் கட்டாயமா வேணும். நரேந்திரனுக்கு கால் பண்ணிடு. நான் பிரகாஷ் சார், பாலா கிட்ட பேசிடறேன்”

*

 நாள்: செப்டம்பர் 7, 2021. மாலை 6.30-7.30

 நாடகம்: சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்

இடம்: ஆழ்வார்பேட்டை ட்ரீம் நாடக சபா.

பாத்திரங்கள்: அரசன்: ஒக்காக் (பிரகாஷ்ராஜ்), தலைமைச்சேடி: மகத்தரிக்கா (பாலா), அரசி சீலவதி (மாயா), காதலன் பிரதோஷன் (சூர்யா)

இசைக்கருவிகள்: ஹார்மோனியம், சிதார், மிருதங்கம்

கட்டியங்காரன் நரேந்திரன் திறக்கப்படாத மேடைக்கு முன் வருகிறான். அவன் வெண்பட்டு ஜிப்பாவும் கணுக்கால் தெரியுமளவு வெள்ளை கால்சட்டையும் அணிந்திருக்கிறான். பொன்பட்டு நிறத்தில் இடப்பக்கத் தோளில் தொங்கும் சால்வை மறுபக்கம் வலக்கையில் தொங்குகிறது. தங்கநிற வேலைப்பாடு நிறைந்த காலணி மேடையின் கறுப்பான தரையில் மின்னுகிறது. வைரக் கடுக்கன் ஜ்வாலிப்பாக அவன் அசைவுகளில் மின்னி மறைகிறது. கைகளில் பெரிய கங்கணங்களும், க்ரிம்சன் சிவப்புக்கல் பதித்த மோதிரம் ஒரு கையிலும், டீல் பச்சைக்கல் பதித்த மோதிரம் மறு கையிலும் மின்னப் பொலிந்து எழுந்தவன் போல முகம் நிறையப் புன்னகையுடன் உள்ளே வருகிறான். கைகளை அரங்கை நோக்கி விரித்து…

”அரங்கில் குழுமியிருக்கும் நாடக ரசிகர்களுக்கு வணக்கம். இது மாயா எழுதிய நாடகம். இந்தி நாடக ஆசிரியர், வாத்தியார் சுரேந்திர வர்மாவின் ”சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக்” அதாவது“சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை” என்ற புகழ்பெற்ற நாடகத்தை அறிந்திருப்போம். அதிலிருந்து அடுத்த கட்ட நகர்வான ”சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்” நாடகம் இப்போது, இங்கே நிகழவிருக்கிறது.

முதல் கதையின் எளிய சுருக்கம் இதோ உங்களுக்காக…

மாலவத்தின் அரசர் ஒக்காக் திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் அரசி  சீலவதியை கருவுறச் செய்ய இயலாமல் இருந்தார். அரசி கருவுறுவதற்காக கடமைப்பாவையாகி நியோக முறைப்படி மூன்று முறை பிற ஆணுடன் கூடியிருக்கலாம் என்றும், அந்த ஆணை அவளே தேர்ந்தெடுக்கலாம் என்றும் முடிவுசெய்யப்பட்டது. தன் இணையை அரசி தேர்ந்தெடுக்கும் அந்த நிகழ்வுக்கு எதிர்பாராமல் வந்த அவள் காதலன் பிரதோஷனுக்கு அவள் மாலை அணிவிக்கிறாள். அவனுடனான முதல் இரவில் முதல் முறையாக ஒரு ஆணுடன் முழுமையாகக் கூடியிருப்பதன் இன்பத்தை அவள் அறிகிறாள். அது கொடுக்கும் எழுச்சி இந்த உலகையே வேறொன்றாக அவளுக்குக் காட்டுகிறது. ஒக்காக் இந்த இன்பத்தைத் தனக்கு ஐந்து வருடமாக மறைத்து வைத்திருப்பது துரோகம் என்று அவள் கருதுகிறாள். ஒக்காக்கிடம் மட்டுமல்ல ராஜகுரு, முதல் மந்திரி என யாவரிடமும் அவள் தான் அனுபவித்த அந்த இன்பத்தின் உச்சியிலிருந்து உரையாடுகிறாள். மீதமிருக்கு இரு வாய்ப்பையும் பயன்படுத்தி தன் வாழ்நாளில் தான் அனுபவிக்கச் சாத்தியமான இரு இரவுகளையும் அடைய விரும்புவதாகச் சொல்கிறாள். ஒரு பெண்ணுக்குச் சமூக இடம், பௌதீக வசதி, உணர்ச்சி நிறைவு, உடல் சுகம் என பல்வகை காரணங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் தேவை உள்ளதாக ஒக்காக்கிடம் சீலவதி சொல்வதோடு நாடகம் முடிகிறது. அடுத்த வாரத்திற்கான நிகழ்வுக்கான தண்டோரா சத்தத்துடன் கூடிய அறிவிப்போடு சுரேந்திர வர்மாவின் நாடகம் முடிகிறது. மாயாவின் நாடகம் இரண்டாவது இரவைப் பற்றியது.”

கட்டியங்காரன் மேடையின் மறைவுப்பகுதிக்கு சென்றுவிடுகிறான்.

(மேடை முழுவதும் திறக்கப்படுகிறது. உள்ளே வலது இடது எனப் பிரிக்கப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிறத் திரைகள் போடப்பட்டுள்ளன. வலப்பக்கம் இருக்கும் வெள்ளைத்திரை மட்டும் திறக்கப்படுகிறது. முழு நிலவு மேலெழுந்துள்ளது. வெண்மையும் அடர் நீலமும் கலந்த ஒளி வலப்பக்க மேடையை நிறைத்துள்ளது. அரசர் ஒக்காக் வெண்பட்டு ஆடையையும், தென் நாட்டின் முத்துக்களையும் அணிந்திருக்கிறார். தலைமைச் சேடியான மகத்தரிக்கா அடர் நீல நிறத்தில் சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டியிருக்கிறாள். அவள் காலில் கறுப்பு நிறக்கயிறும், காதிலும், கழுத்திலும், கைகளிலும் வெள்ளியாலான தடித்த வளைய ஆபரணங்கள் அணிந்திருக்கிறாள்.)

காட்சி 1

(கட்டியங்காரன் குரல்: அரசரான ஒக்காக் அமர்ந்திருக்கிறார். அரங்கில் பணிப்பெண்ணான மகத்தரிக்கா மதுக்கோப்பைகளைத் துடைத்தபடி அவர் அருகில் நின்று கொண்டிருக்கிறாள்.)

மகத்தரிக்கா: அரசே அகிபீனா கொண்டு வரட்டுமா? தூங்குவது நல்லது.

ஒக்காக்: வேண்டாம். நான் பழகிவிட்டேன் மகத்தரிக்கா. மதுகூட தேவைப்படாது. நான் விழித்திருக்க விரும்புகிறேன். உலகின் எத்தனை கோடி உயிர்கள் இந்த இரவு உடலின்பத்தில் மூழ்கி திழைத்துக் கொண்டிருக்கும் இல்லயா?

ம: ம்…

ஒ: இன்று உன் அருகாமை கூட எனக்கு அவசியமில்லை. நீ நிஜமாகவே வீட்டுக்குப் போகலாம். உன் கணவன் ஊரில் இருக்கிறான் தானே. எனக்காக உங்கள் இனிய இரவை நீங்கள் பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம்.

ம: (சிரிக்கிறாள்…)நீங்கள் சங்கோஜப்படவில்லையானால் ஒன்று சொல்லட்டுமா.

ஒ: அழகே மகத்தரிக்கா! நாம் சங்கோஜப்பட்டுக்கொள்ள இனி என்ன இருக்கிறது. என் அனைத்துப் பலவீனங்களையும் அறிந்தவள் நீ. என்ன வேண்டுமானாலும் சொல்.

ம: இன்று நான் வீட்டுக்கு விலக்காயிருக்கிறேன். எனக்கு இரண்டாவது நாள்.

ஒ: (வாய்விட்டு சிரிக்கிறார்…) மகத்தரிக்கா.. இந்த மாதிரி நேரத்தில் தானே உன் கணவனின் அரவணைப்பு தேவை? நீ வீட்டுக்குச் சென்று ஓய்வெடு.

ம: அரவணைப்பா. அவர் என் அருகே கூட வரமாட்டார். ஆயிரம் வேலைகள் அவருக்கு. நான் சூதப்பெண் என்பதால் இந்த நாட்களிலும் வேலை இருந்தால் செல்லத்தான் வேண்டும். அவர் இரவு படுக்கைக்கு அழைக்க முடியாத எரிச்சலில் வேறு இருப்பார். அவரையும் குற்றம் சொல்வதிற்கில்லை. கடும் உடலுழைப்பு செய்யக் கூடியவர். நான் இங்கேயே இருக்கிறேன்.

ஒ: சீலவதிக்கு இரண்டு நாட்கள் தான் மாதவிலக்கு ஆகும். முதல் நாள் துடிதுடித்துப் போவாள். முதல் முறை அவளை அப்படி பார்த்தபோது நான் பதற்றமடைந்துவிட்டேன் மகத்தரிக்கா. அவள் அருகிலேயே இருப்பேன். இந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு மாதமும் அவளை விட நானே அவளுக்கு தேதியை நினைவூட்டுவேன். (இடைவெளி)

ம: அரசே! ஒன்று சொல்லட்டுமா

ஒ: நீ என் பாங்கியாகிவிட்டாய் இந்த இரவுகளின் வழி. தயங்காமல் சொல் மகத்தரிக்கா.

ம: (புன்னகைத்துக்கொண்டே…)

அரசே… நீங்கள் எல்லாப் பெண்களும் கனவுகளில் விரும்பும் சிறந்த காதலர். கணவனாக்கிக் கொள்ள ஒவ்வொரு பெண்ணும் விரும்பக்கூடியவர்.

ஒ: இந்த இரவில் அவளுக்கு ஒரு கணம் கூட என் நினைவு வர வாய்ப்பில்லை என்பதையே சென்றமுறை அவள் உறவு முடிந்து வந்து பேசிய பேச்சில் உணர்ந்தேன். அந்த அளவுக்கு இந்த உடல் பந்தம் பெரிய பிணைப்பை உருவாக்குமா மகத்தரிக்காக? நான் வாழத் தகுதியற்றவன் போல உணர்கிறேன். இந்த ஆறு நாட்களில் ஒவ்வொரு நாளும் நான் தற்கொலை செய்வதைப் பற்றியே யோசித்தேன். இயற்கைக்கு முரண் எனில் பல கோடி விந்துகளில் என்னை ஏன் என் அன்னை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? நான் பிறந்திருக்க வேண்டாம் மகத்தரிக்கா.

மது வேண்டும். எடுத்து வருகிறாயா?

ம: எடுத்து வருகிறேன் அரசே! (மகத்தரிக்கா கோப்பைகளைத் துடைத்து மதுவையும், பழங்களையும் எடுத்து வைக்கிறாள். முதல் கோப்பையை ஊற்றியதுமே உடனடியாகக் காலி செய்துவிட்டு அவளைப் பார்க்கிறான் ஒக்காக்.)

ஒ: சொல். நான் பிறந்திருக்கவேண்டாமே?

ம: எனக்குச் சரியாகத் தெரியவில்லை. எந்தக் காரணகாரியமும் இன்றி ஒரு நிகழ்வு நிகழ்வதில்லை என அன்னை நம்புவாள். அதையே நான் என் வாழ்க்கைக்கும் எடுத்துக் கொண்டேன்.

உடல் என்பது கணவன் – மனைவி உறவில் ஆரம்பக்காலப் பிணைப்பை எளிதில் உருவாக்கக்கூடியது என்பது மறுப்பதற்கில்லை. இளமையின் கனவுகள் அதனால் நிறைந்தவை. உடலின் மாற்றங்கள், வனப்புகள் என நம் கண் முன் அவை நீண்டு கொண்டிருக்கையில் அவை புறந்தள்ளமுடியாதது தான். இளவயதில் புறமாகவே ஒருவர் நம்மை ஈர்க்கிறார் முதலில். ஆனால்… அதன்பின் வாழ்வு அதை மட்டும் சார்ந்ததல்ல.

ஒ: மகத்தரிக்கா. உடல் உறவு இல்லாமல் ஒருவர் இன்னொருவருடன் இணக்கமாக வாழ்ந்துவிட இயலும் என்கிறாயா?

ம: சிந்தித்துப் பாருங்கள் அப்படி எத்தனை உறவுகள் நம்மிடம் உள்ளன. அன்னை, ஆசிரியர், நண்பர்கள், பிள்ளைகள் இன்னும் எத்தனையோ.

ஒ: ஆனாலும் மகத்தரிக்கா… குடும்பம் என்ற அமைப்பின் அடித்தளமாக உடலுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும் தானே இருக்கின்றனர்.

ம: உண்மைதான். நீங்கள் பெரும்பான்மை பற்றிப் பேசுகிறீர்கள். வரலாற்று நெடுகிலும் சிறுபான்மைச் சமூகம் ஒன்று பிறந்து வாழ்ந்து, மடிந்து கொண்டுதான் இருக்கிறது. யாருடைய பொருட்படுத்தலுக்கும் ஆளாகாமல். சமூக ஏற்பும் மறுப்பும் அரசியல், சட்டம், பொருளாதாரம் எனப் பல காரணிகளால் முடிவு செய்யப்படுகின்றன. நாளையே அவை மாறலாம். ஆனால் உயிர்-இயல் அதைக் கடந்தது.

ஒ: இயற்கைக்கு முரண் என நீ நினைக்கவில்லையா?

ம: இயற்கை பேரன்னையின் வடிவம் என்று என் அன்னை சொல்வாள். வலுத்தது வாழும் என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமாக இந்த வரலாற்று வீரர்கள் முதிர்ச்சியின்றிப் பிதற்றிக் கொண்டது என்று சொல்வாள். அவர்களே அங்ஙனம் வீர வசனம் பேசி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாய்ந்து போவதைக் கால நெடுகிலும் பார்த்த பேரன்னைகளின் சாட்சியாய் அவள் சொன்ன வரி அது. போரில் மாண்டு போகிறவர்களைக் குறிப்பிட்டு இயற்கைக்கு எந்த ஆற்றலை அழிக்க வேண்டும் என்பது தெரியும் என்பாள். கனிவும், கருணையும் இல்லாதவைகளே அழிகின்றன அரசே!

ஒ: (கண் கலங்குகிறான்.) இந்தப் பொழுதில் நான் என் தந்தையிடம் பேரன்பு வைத்திருந்த ஆணிலியை நினைத்துக் கொள்கிறேன். நான் சீலவதியைக் காதலிக்கிறேன் மகத்தரிக்கா. (மேலும் ஒரு கோப்பை மதுவை அவனே விரைவாக ஊற்றி அருந்துகிறான்.)

ம: அதற்கிணையாகவே பெண்ணிலிகளும் உண்டு அரசே! நீங்கள் செய்ய வேண்டியது அரசியைக் கனிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே. அவள் அந்தச் சக்தி பீடத்திலிருந்து தணிந்து வரும்வரை அவளுக்காக நீங்கள் இந்தக் காலகட்டத்தின் எந்த மதிப்பீடுகளும் இன்றி காத்திருக்க வேண்டும். அவள் அங்கிருந்து இறங்கி வந்து விரிந்த கரத்துடன் உங்களை சிறுமகவாக்கி அன்னையாக ஆகலாம். இல்லையெனில் அவளே சுருங்கிக் குழைந்து உங்கள் கைகளில் சிறுமகவாக ஆகலாம்.

இந்த இரண்டும் நிகழவில்லையெனினும் நீங்கள் இந்த வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் அரசே! உங்கள் மக்களுக்காக, இந்த நாட்டுக்காக உங்கள் கடனை முடிந்து நிறைவெய்த வேண்டும். பாண்டு மகாராஜாவுக்குக் கிடைத்த மாத்ரி போல உங்களுக்கு ஒருவள் கிடைப்பதன் பொருட்டு நீங்கள் காத்திருக்கலாம்.

ஒ: (கைகளால் முகத்தைப் பொத்தி அழுகிறார். மீண்டும் ஒரு கோப்பை மதுவை எடுத்துச் சிந்தியவண்ணம் பாதியை மட்டும் குடிக்கிறார்.) அவையெல்லாம் காவியத்தில் மட்டுமே நிகழக்கூடியது. பொய்கள். மகாவியாசரை நான் வெறுக்கிறேன்.

ம: கதைகள் விண்ணிலிருந்து மட்டும் முளைவிடுவதில்லை அரசே. அவை பெரும்பாலும் மண்ணுக்குரியதே.

ஒ: (அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறான்) இந்த ஆறு நாட்கள் ஒவ்வொரு இரவும் நான் உறக்கமில்லாமல் தவித்தேன் மகத்தரிக்கா. கடந்து போன ஒரு இரவில் அவள் பிறனுடன் கொண்ட உறவை நினைத்தும், வரவிருந்த இந்த இரவை நினைத்தும் நான் வாழாவிருந்தேன்.

ம: அரசே! முன்னைய இரவை விட நீங்கள் பதற்றம் தணிந்திருக்கிறீர்கள். முன்பு மணல் கடிகாரத்தைத் துளித்துளியாக எண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். எந்தத் துன்பமும் அப்படித்தான். மெல்ல நம்மை இலகுவாக்கி அதை நம் வாழ்வோடு பிணைத்து ஏற்றுக் கொள்ளச் செய்யும். நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் உங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வை.

ஒ: (புன்னகைத்து அவள் கண்களைக் கனிவுடன் நோக்குகிறார்) தனித்திருக்கும் இந்த அல்லி இன்று என்னை உளம் விரியச் செய்கிறது மகத்தரிக்கா. நானே இன்று அந்த சக்கரவாகப் பறவைக்குத் தாமரைத்தண்டின் சாற்றை அளிக்கிறேன்.

ம: (புன்னகைக்கிறாள்) அது நித்தமும் உணவளிக்கும் அரசியை உங்களில் இன்று கண்டு கொள்ளலாம்.

ஒ: (எழுந்து மாடத்தின் முனியில் நின்று குளத்தை நோக்கி கைகளை விரிக்கிறார். குளத்தின் முனையிலிருந்த மரத்தில் சக்கரவாகப் பறவை வந்து தனியே அமர்கிறது. அவர் தாமரைத்தண்டின் சாற்றைக் கைகளில் ஏந்தியதும் அவர் தோள்களில் வந்து அது அமர்கிறது.)

(மென்மையாக) இந்த இரவு யாவருக்கும் இனிமையாகுக!

(ஹார்மோனியம்…)

(திரை மூடப்படுகிறது)

காட்சி 2

கட்டியங்காரன்: அரசி சீலவதியும், இந்த இரவில் அவளுடன் உறவு கொள்ள அவள் தேர்ந்தெடுத்த காதலன் பிரதோஷனும் மஞ்சத்தில் இருக்கிறார்கள்.

(இடப்பக்கத் திரை மூடப்பட்டு வலப்பக்கத் திரை திறக்கப்படுகிறது. இளஞ்சிவப்பும் அடர் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒளியூட்டப்பட்ட அரங்கு. சீலவதி பிரதோஷனின் மார்பில் சாய்ந்திருக்கிறாள். அடர் ரத்தச் சிவப்பு நிற வெல்வெட் போர்வையை இருவரும் போர்த்தியிருக்கிறார்கள்)

சீலவதி: பிரதோஷ்ஷ்…

பிரதோஷன்: ம்…

சீ: மகிழ்ச்சியாக இருக்கிறாயா?

பி: ஓ…

சீ: (அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள்.) ஆறு நாட்கள் முழு நிலவு தேயும் ஒவ்வொரு இரவையும் கடத்த நான் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா?

பி: (உத்தரத்தைப் பார்த்துக் கொண்டே எதையோ யோசித்தபடி)ம்.

சீ: (அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி…) உனக்கு அவ்வாறு இல்லயா? வேறு பெண்கள் நிறைய இருக்கிறார்களா? ஏன் பேசவே மாட்டேன் என்கிறாய்.

பி: எல்லாப்பெண்களுக்கும் ஒரே கேள்வி. (புன்னகைத்தவாறு எழுந்து அமர்கிறான்)

சீ: எல்லாப்பெண்களும் நானும் ஒன்று இல்லை (சிணுங்கியவாறு சொல்கிறாள்)

பி: ஐந்து வருடங்களுக்கு முன் என்னை நீ இக்கேள்வியைக் கேட்டிருந்தால் இதை விட உணர்ச்சிகரமாகப் பல இனமொழிகளைச் சொல்லியிருப்பேன் சீல். நீ திருமணமாகிச் சென்ற இரவு ஒவ்வொரு மணித்துளியையும் கடத்தச் சிரமப்பட்டேன். அதன் பின் மெல்ல அதிலிருந்து விலகவே வணிகத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டேன். மறுக்கப்பட்டவர்களே உலகின் அனைத்து இன்பங்களையும் தேடி அடைவார்கள். செல்வத்தைத்தவிர எனக்கு எந்த ஒன்றும் பெரிதாக இல்லை. அனைத்தையும் அது அளித்தது. எந்தப் பெண்களையும் நான் விலைக்கு வாங்கிக் கொள்ளவில்லை. ஓரிரவுக்கே அழகிகளை என்னால் தேவைப்படும்போதெல்லாம் தேடிக் கொள்ள முடிந்தது. கடல் கடந்து சென்ற எத்தனை இடங்கள். எத்தனை அழகிகள். பெரும்பாலும் மறந்துவிட்டன.

சீ: (முகம் மிகவும் ஏமாற்றமும் ஏக்கமும் கோபமும் கொள்கிறது. அதை மறைக்க முயற்சித்துக் கொண்டே அவள் ஒரு சிவப்பு நிறச் சால்வையை எடுத்து உடலில் சுற்றிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தவாறு கேட்கிறாள்) பின் ஏன் இங்கு வந்தீர்களாம்? ஒரு பொய்யாவது சொல்லியிருக்கலாம் (சலித்துக் கொள்கிறாள்)

பி: (அவன் அவளைப் பார்க்கிறான்) அந்த எல்லாப் பெண்களிலும் உன்னைத்தான் தேடினேன் சீல். அதனால் தான் ஐந்து வருடங்களுக்குப் பின்னும் இந்த செய்தி கேள்விப்பட்டதும் உன்னைச் சந்திக்க வந்தேன். ஆனால்…

சீ: என்ன ஆனால்?

பி: இன்று இந்த அறையில் உன் இந்தத் தாபப் பார்வையில் நான் என்னை இதே போல நோக்கி அறிவழிந்து கண்ணீர் விட்ட வேறுசில பெண்களின் முகத்தையும் காண்கிறேன்.

சீ: (சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனை அந்நியன் போல் பார்க்கிறாள்.) பிரதோஷ்! உண்மையாகவா?

பி: இந்த ஐந்து வருடத்தில் என்னை நீ நினைத்ததுண்டா?

சீ: ஆரம்பத்தில் எப்போதாவது. பின்னர் ஒவ்வொரு இரவிலும் அவரின் குளிர்ந்த தேகத்தை அணுகி அனலாக்கி வெறுமையோடு திரும்பி வரும்தோறும் நீ என்னிடம் கெஞ்சி மன்றாடியதை நினைத்து அழுதிருக்கிறேன்.

பி: (சிரிக்கிறான்) அரசர் இயல்பாக இருந்திருந்தால்?

சீ: (கோபமாக) தெரியவில்லை. வணிகர்களுக்கே உரிய குறுக்குப்புத்தி.

பி: சீலவதி. உன்னைக் கடக்கவே முடியாது என்று நினைத்தேன். ஆனால் இன்று உணர்கிறேன். நீ என்பது எனக்கு ஒரு நிமித்தம் மட்டுமே. எத்தனை காதல்களை உதாசீனப்படுத்தியிருக்கிறேன்? அதுவும் இது தான். (அரங்கத்தை வெறிக்கிறான்..)

சீ: உன்னுடைய கணக்குகளையும் அறிவையும் கழற்றிவைத்து விட்டு இந்த ஒரு இரவாவது என்னுடன் முழுப்பைத்தியமாக இருக்கக்கூடாதா?

பி: முதிர்வில்லா காதலில் அது சாத்தியம் தான் சீல். ஆனால் நான் சென்றபின் இதை மிகவும் கனப்படுத்தி நீ உன் வாழ்க்கையைத் தொலைத்து விடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். மேலும் நான் முழு வணிகன். வணிகன் நல்ல காதலனாக உண்மையில் இருக்க முடியாது. நடிக்க வேண்டுமானால் முடியும். என்னால் உணர்வு மேலான இடத்தில் அதைச் செய்ய இயலவில்லை. அப்படிச் செய்வது இந்தப் பாதையிலிருந்து பிய்த்துச் சென்று என்னைப் பைத்தியமாக்கிவிடும். அதை விரும்புகிறாயா?

சீ: இல்லை. அப்படி இல்லை. உங்களுக்கு என்மேல் காதல் இல்லை. அவ்வளவுதான். அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.

பி: (அவன் மிகவும் சோர்வாக) அது நீ கற்பனை செய்து கொள்வது. உன் தாழ்வுணர்ச்சியிலிருந்து வருவது.

சீ: சீ! நீயும் ஒரு ஆண்மகனா? எது தாழ்வுணர்ச்சி சொல்? உன் விஷத்தைக் கக்கிவிடு

பி: (எதையோ உணர்ந்தவனாக.) இது இப்படித்தான் முடியும் என்பதை அறிந்திருந்தேன்.

சீ: (ஏளனமாக) அனுபவசாலி இல்லயா?

பி: இப்போது என்னைத் தாக்க ஆரம்பித்துவிட்டாய். அனுபவசாலி என்பதை இரு இரவுகளில் அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன். இல்லையெனில் மூன்றாவது இரவில் வேறொருவனுடன் உறவு கொண்டு ஒப்பிட்டுப்பார்.

சீ: (தலையில் அடித்துக் கொள்கிறாள்) சீ! சீ! என்னை அருவருப்பாக உணர்கிறேன்

பி: இதற்குமேல் இங்கிருக்க வேண்டாம் என நினைக்கிறேன். அது இருவருக்குமே நல்லது. நான் செல்கிறேன் (எழுந்து உடைகளை மாற்ற ஆரம்பிக்கிறான்)

சீ: (எழுந்து மேலும் இறுக்கமாகச் சால்வையைச் சுற்றிக் கொண்டு பதற்றத்துடன் பிரதோஷனின் கால்களைப் பாய்ந்து பற்றி..) வேண்டாம். செல்ல வேண்டாம். இன்னும் சூரியனின் முதல் கிரணம் நம்மை வந்து தொடவில்லை. செல்லாதீர்கள் (கதறி அழுகிறாள்.)

பி: என்னைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்காதே.

சீ: என்னை விட்டுப்போகாதே. (அவள் மேலும் இறுக்கமாகப் பற்றி அழுகிறாள். பிரதோஷன் உறைந்து போய் நின்று முகத்தில் பரிதவிப்பையும், பதற்றத்தையும் கடந்து மெல்ல ஏளனத்தைக் கொண்டு வருகிறான். அவன் அவளை உதறி அவ்வாறே கிளம்பிச் செல்வதைக் கையறு நிலையுடன் சீலவதி துடித்தபடி பார்க்கிறாள். அவன் சென்றபின் அந்த அரங்கம் அதிரும்படி கதறி அழுகிறாள். பலதரப்பட்ட சிவப்பு விளக்குகள் அதிர்வுடன் அவள் மேல் பாய்ச்சி ஒளியூட்டப்படுகிறது. வலுவிழந்து அவள் படுக்கையில் சரிகிறாள்)

(மிருதங்கம், சிதார், ஹார்மோனியம்)

(திரை மூடப்படுகிறது.)

காட்சி 3

கட்டியங்காரன்: தண்மையின் வலப்பக்கத் திரை திறக்கப்படுகிறது. அரசர் ஒக்காக் அமர்ந்திருக்க மகத்தரிக்கா நிற்கிறாள்.

மகத்தரிக்கா: அரசே! பிரதோஷன் வெளியே சென்றுவிட்டார்.

ஒக்காக்: அதற்குள்ளாகவா? இன்னும் சூரியனின் முதல் கிரணம் தொடவில்லையே. இன்னும் இரு நாளிகைப் பொழுதுகள் இருக்கிறதே. எத்தனை நீண்ட காலம்.

ம: (புன்னகைக்கிறாள்)

ஒ: நான் சென்று இப்போது அரசியைச் சந்திக்கலாமா?

ம: இல்லை. வேண்டாம். அவர்களாகவே இங்கே வருவார்கள்.

(ஒக்காக் கலவையான எண்ணத்துடன் இருக்கையில் சாய்ந்தவாறு அமர்கிறான்.

இப்போது வெம்மையின் திரையும் திறக்கப்படுகிறது. இரண்டு அரங்கும் ஒன்றை ஒன்று தொடும் புள்ளி நாடக மேடையின் மையத்தில் ஒளி நிரம்பியதாக உள்ளது.

கட்டியங்காரன் குரல் மட்டும்: “சூரியனின் முதல் கிரணம் வந்து மண்ணைத் தொடுகிறது. பிரதோஷனுடனான முதல் இரவிற்குப் பின் குளிக்க மறுத்து அறையில் நிரம்பியிருக்கும் மதன வாசனையில் திழைக்கவிருப்பதாகச் சொன்னவளுக்கு அறையின் அந்த வாசனை அருவருப்பைக் கொடுத்தது இப்போது. அதை உடலில் வெளிப்படுத்தியவளாகச் சிவப்பு நிற ஆடையை எடுத்து உடலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு எழுந்து அமர்கிறாள். தலைமைச்சேடியான மகத்தரிக்கா அவளை நோக்கி மெல்லச் செல்கிறாள்.

ம: அரசி. குளிப்பதற்கு ஏற்பாடு செய்யட்டுமா?

சீ: (தீர்க்கமாக)ஆம். உடனடியாக. விரிவான தலைக்குளியல் செய்யவிருக்கிறேன். அந்தப்புரத்தின் என் அணுக்கமான அனைத்துப் பெண்களையும் அழைப்பாயாக.

ம: ஆகட்டும் அரசி.

சீ: மகத்தரிக்கா. இந்தக் கட்டிலில் புரண்டு அழுத இரண்டு நாளிகைப் பொழுதுகளும் உன் சொற்களையே நினைவுகூர்ந்தேன்.

ம: எதை அரசி (அவள் புன்னகைத்தாள்)

சீ: உன் புன்னகையிலேயே அதை நீ உணர்ந்தது தெரிகிறது. நடிக்காதே. உன் சூதப்புத்தி நானே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறதல்லவா?

ம: (பணிவாக. தலையைத் தாழ்த்திக் கொண்டு) இல்லை அரசி.

சீ: (பெருமூச்சுடன்) இனி அவமானப்பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது. நீ இந்த ஆறு நாட்களாக கூறிக் கொண்டிருந்தாயே, ”நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்படுமளவு அப்படி ஒன்றும் இது பெரிய விஷயமில்லை” என. அதை உணர்ந்தேன். போதுமா.

ம: (சிரிக்கிறாள்) வாழ்வில் முதிர்ச்சியின் கணங்கள் அவ்வாறு தான் “இவ்வளவுதானா” தருணங்களின் தொகையே அவை. அதை அறியாமல் சென்று கொண்டே இருப்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். எல்லாவற்றிலும். நன்று. நீங்கள் விரைவில் உணர்ந்து கொண்டீர்கள்.

சீ: மகத்தரிக்கா… (அவள் கைகளைப் பற்றிக் கொண்டு) உன்னை ஒன்று கேட்கலாமா? உண்மையை மட்டும் சொல்ல வேண்டும்.

ம: கேளுங்கள் அரசி

சீ: எனக்கே தெரியும். இருந்தாலும் கேட்கிறேன். நான் அழகாக இருக்கிறேனா?

ம: அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்?

சீ: சொல்லடி

ம: நீங்கள் பேரழகி

சீ: அந்த வணிகக் கீழ்மகன் என்னை உதறிச் செல்லும்போது என்மீதே எனக்கு அருவருப்பாக இருந்தது மகத்தரிக்கா.

ம: புரிகிறது அரசி. காதல் இல்லாத இடத்தில் உறவு கொள்வதில் வரும் அருவருப்பு அது. நல்லது.

சீ: (முகத்தைப் பொத்தி அழுகிறாள்) எனக்கு மட்டும் ஏன் இப்படி. எல்லாம் சரியாக இருந்திருக்கக் கூடாதா? சாதாரணமாக இருந்திருக்கக் கூடாதா?

(அரங்கு முழுவதும் இருட்டாகிறது. சீலவதியின் முகத்திற்கு மட்டும் வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. அரங்கை மாயா வெறித்துப் பார்க்கிறாள்.)

மகத்தரிக்கா… மாலவத்தின் எல்லையில் இருக்கும் மிக எளிய கிராமம் இந்த்ரி. ஓர் ஏழைக் குடும்பத்தில் ஆறு சகோதரிகளுடன் ஏழாவது பெண் மகவாகப் பிறந்தேன். சிறுவயதிலிருந்தே தந்தையின் அரவணைப்பை அறிந்ததில்லை. முழு வயிறு நிரம்பி நான் தூங்கியதாக ஒரு நாளும் நினைவில் இல்லை எனக்கு. அக்காக்களின் திருமணங்கள், அவர்களின் பாடுகளையும் பார்த்திருக்கிறேன். என் முதல் காதலும் முதல் தித்திப்புமானவன் இந்த பிரதோஷன். அது முறிந்தபோதும் ராணியாக இந்த வாழ்வில் நிறைவு காணவே விழைந்தேன். மிகுந்த கவனத்துடன் என் கன்னிமையைப் பாதுகாத்து அரசனுக்காக எடுத்து வந்து ஏமாற்றம் அடைந்திருந்தேன். பிரதோஷனுக்காக அதை மீண்டும் அளிக்க இந்தப் பிரபஞ்சம் எனக்கு வழிவிட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். எல்லாம் மீண்டு விட்டதாக நினைத்தேன். ஆனால் அவன் வெறுமையை ஏற்றி விட்டு இன்று செல்லும்போது மனம் பதறுகிறது. நான் வேறொன்றை எதிர்பார்த்தேன். என் ஆசை நாயகனாக எப்போதும் அவன் இருப்பான் என. அவனுக்கு எல்லாப் பெண்களும் நானும் ஒன்று என அவன் உணர்ந்ததை அருகிருந்து பார்த்தபோது நொடிந்துவிட்டேன் மகத்தரிக்கா. ஏன் இப்படி நடக்க வேண்டும். ஏன் எனக்கு எதுவும் எப்போதுமே சரியாக நடக்க வில்லை. இந்த ஒரு முறையும் கூட.

(வெளிச்சம் மாத்தரிக்கவின் மேலும் பாய்ச்சப்படுகிறது…)

ம: அரசி… நாம் சரி என்று நினைக்கும் எல்லாமும் எப்போதும் சரியாக இருப்பதில்லை. நமக்கு நடப்பதைத் தவிரப் பிற சாத்தியங்கள் கற்பனையானவை. அதில் நமக்கு எவ்விதத்திலும் கட்டுப்பாடும் கிடையாது. கண் முன் நடப்பவற்றைக் கொண்டு மட்டுமே நம்மால் ஏதாவது முடிவுக்கு வர இயலும்.

ஒருவேளை நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்த யாவும் நடந்திருந்தால் கூட நீங்கள் முழுமையாக மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. அப்போதும் இதே உணர்வையே தான் அடைந்திருப்பீர்களோ என்னவோ.

சீ: (அரசி அவளை நிமிர்ந்து பார்க்கிறாள்..) எல்லாமும் இத்தனை விரைவாகத் தெரிந்து கொண்டிருக்கத்தேவையில்லை. இன்னும் சற்று.. (செல்லமாக அவளைக் கட்டிக் கொள்கிறாள்.)

ம: இதுவே தாமதம் தான். (கண் சிமிட்டுகிறாள்)

சீ: போடி

ம: அரசரைச் சந்திக்க விரும்புகிறீர்களா?

சீ: (எதையோ உணர்ந்தவளாக அவள் தோளிலிருந்து பிரிந்து) இந்த இரு நாளிகைப் பொழுதும் அவரையும் அவர் அரவணைப்பையும் தான் முதலில் நினைவுகூர்ந்தேன் மகத்தரிக்கா. சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின் உலகம் வேறாக இருக்கிறது. அங்கு அவரைத் தவிர என்னால் வேறு யாரையும் சிந்திக்க முடியாத அளவு இந்த ஐந்து வருடமும் அவரே நிரம்பியிருக்கிறார்.

மகத்தரிக்கா எனக்கு மட்டும் ஏன்? உள்ளமும் உடலும் ஒருங்கிணைந்த ஒருவன் கிடைத்திருக்கக்கூடாதா?

ம: (உணர்ச்சிகள் இல்லாமல்) அதுதான் நடக்கவில்லையே. நடந்திருந்தால் இத்தனை உளநாடகங்களை நீங்கள் நடித்துப் பார்த்திருக்க முடியாது. யாருக்கும் கிடைக்காத அனுபவம்.

சீ: ம்.

ம: அரசரும் இதே கேள்வியைத் தான் கேட்டார். நீங்கள் இருவரும் சேர்ந்து அதற்கான விடையைக் கண்டுபிடிக்கலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடி முழுகப்போவதில்லை.

சீ: குடி! ம்.

ம: அரசரைப் பார்க்க விழைகிறீர்களா?

சீ: ம். (எழுந்து நிற்கிறாள்..)

ம: இதோ அமர்ந்திருக்கிறார். உங்கள் வசை மொழிகளைக் கேட்பதற்கென்றே. சென்ற முறையைப் போலவே. ஆனால் இம்முறை குற்றவுணர்வுடன்.

(அரங்கம் முழுவதும் வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. சீலவதி வெம்மையான இடத்திலிருந்து நடுவிலிருக்கும் ஒளி நிரம்பிய பகுதியைக் கடந்து மெல்ல தண்மையான பகுதியை அடைகிறாள். உடன் சிதார் இசை மென்மையாக இசைக்கப்படுகிறது.)

ஒக்காக்: (எதுவும் பேசாமல் மெளனமாக எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்கிறான். மெல்ல அவன் சீலவதியின் கண்களைச் சந்திக்கிறான். அவனையறியாமல் தவிப்பு வெளிப்பட்டு கண்கள் நிறைகிறது. சீலவதி அவன் மடியில் குழந்தையைப் போல ஓடிச் சென்று சுருங்கிக் கொள்கிறாள். அடக்கி வைத்திருந்தவன் போல அவள் மேல் படிந்து அவனும் கதறி அழுகிறான்)

ஒ: ஓ சீலவதி! என் நினைவு உனக்கு இன்னும் உள்ளதா?

சீ: ம்.

ஒ: உனக்குத் தவறிழைத்துவிட்டேன் இல்லயா?

சீ: (முனகலான குரலில்.) தெரியவில்லை.

ஒ: ஆம். தவறிழைத்துவிட்டேன்.

சீ: இல்லை. அப்படியில்லை.

ஒ: நான் மட்டும் உனக்கு இந்த வாழ்க்கைக்குப் போதும் என்று நினைக்கிறாயா? நீ முழுமையடைவாயா?

சீ: (நிமிர்ந்து அமர்கிறாள்)நான் குழம்பியிருக்கிறேன் அரசே. முழுமையடைவதைப் பற்றி என்னால் இப்போது எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் அதற்கு இன்னொருவர் தேவையில்லை என்பதை மட்டும் நம்புகிறேன். உங்கள் அருகமைவில் மட்டுமே என்னால் மகிழ்ச்சியாக எந்தப் பாவனையும் இல்லாமல் இருக்க முடிகிறது. என்னிடமிருக்கும் அனைத்து வெப்பத்தையும் இந்த வாழ்க்கையில் உங்களுக்குக் கொடுக்க சித்தமாயிருக்கிறேன். உங்களிலிருந்து தண்மையின் இனிமைகளைப் பகிர விழைகிறேன். ஒன்றுக்கும் மேற்பட்ட உடலைப் புணர்வது பற்றிய சிந்தனை ஆன்மாவைக் கத்தியால் பிளந்து கூறுபோடுவதைப் போல் இருக்கிறது. நான் என் ஆன்மாவைக் கண்ணுக்குத்தெரியாத துண்டங்களாக ஆக்க விரும்பவில்லை. உடல்களைத் தேடிச் செல்லும் அந்தப்பாதையின் இறுதியை என்னால் இன்று தரிசிக்க முடிந்தது ஒக்காக். நான் உங்களுடன் உங்கள் காதலில் இந்த அணைப்பிற்குள்ளேயே இருக்க விரும்புகிறேன்.

ஒ: சீலவதி! (இறுக்கமாக அணைத்துக் கொள்கிறான்.)

(திரை மூடப்படுகிறது. முன்னால் தண்டோராக்காரன் வருகிறான். தண்டோராச் சத்தம் முழக்கப்படுகிறது.)

“மல்ல நாட்டின் குடிமக்கள் யாவருக்கும் தெரியப்படுத்தும் செய்தி என்னவென்றால் அரசருக்கும் அரசிக்கும் புதல்வனாக நம் அரசரின் தமையன் ஓரியின் புதல்வன் சிபி தத்தெடுக்கப்பட்டு பட்டத்து இளவரசராக முடிசூடும் விழா வரும் வெள்ளியன்று நடக்கவிருக்கிறது. நாட்டு மக்கள் விழாவுக்குக் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்புச் செய்யுமாறு அரசர் ஒக்காக்கும், அரசி சீலவதியும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்”

(தண்டோரா சத்தத்துடன் திரையில் இருள் கவிகிறது)

***

4 COMMENTS

  1. கணந்தோறும் நிறமாறும் வானம்போல பல்வேறு மன அவசங்களையும் எழுத்தில் வடித்த ரம்யாவுக்கு வாழ்த்துக்கள். அருமை.

  2. அருமை, எக்காலத்திற்கும் பொருந்தும் கரு… அறிவியலில், தொழில்நுட்பத்தில்,சுதந்திரத்தில் எத்தனை முன்னேற்றம் அடைந்து சென்றாலும் வாழ்வினை செலுத்தும் விசை அன்பும், கருணையும் மட்டுமே ..

  3. ஆழியை அலைகளாக மட்டும் மனதில் காணப் பழக்கப்
    பட்டோரின் பிம்பமாய் அஞ்ஞான சீலவதி தம்பதியர்.
    அஞ்ஞான விளிம்பிலிருந்து ஞானம் அடைந்த பாத்திரம், பிரதோஷன்..
    கால பருவங்களில் பக்குவப்பட்டு நிகழ்வுகளை சாட்சியாய் கடந்து செல்லும் வைரம் பாய்ந்த ஞான அகம் மகத்தரிக்கா
    இவ்வாறு 3 ஞான நிலைகளை கோர்த்து, கதாசிரியையாக அஞ்ஞானி சீலவதி வேடம் தரித்து தன் ஞானத்தை சொல்லும் மகத்தரிக்காவாக பிரளமிக்கிறார் “நீலி” இரம்யா அவர்கள்.
    சிறந்த வாசிப்பனுபத்துடன் வாழ் புரிதல் தந்தமைக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.