14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்:
ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா?
தாகூர்: தனித்தில்லை. எல்லையற்ற மனித ஆளுமை பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்கிறது. மனித ஆளுமையால் இணைத்துக்கொள்ள முடியாதது என்று எதுவுமில்லை, எனவே மனித உண்மைதான் பிரபஞ்ச உண்மை என்பதை இது மெய்ப்பித்துவிடுகிறது. உதாரணத்திற்கு நான் அறிவியல் மெய்ப்பு ஒன்றை எடுத்துக் கொள்கிறேன். ஒரு திடப்பொருள் புரோட்டான்களாலும் எலக்ட்ரான்களாலும் அவை இரண்டுக்கும் இடையான இடைவெளிகளால் ஆனது, ஆனால் பார்வைக்கு பருண்மையானது. அதேபோல,
மானுடம் பல தனிநபர்களைக் கொண்டது, எனினும், அவர்களுக்கிடையேயான மனித உறவுகளால் ஒன்றோடொன்று இணைந்தது, அதுவே மனிதர்கள் உலகத்தில் ஒற்றுமையாய் வாழ வழி செய்வது. இதே வகையில் மொத்த பிரபஞ்சமும் நம்முடன் தொடர்புடையதாக இருப்தாலேயே இது மனிதனின் பிரபஞ்சமாக உள்ளது. நான் இந்த சிந்தனையை, கலை, இலக்கியம் மற்றும் மனிதனின் ஆன்மீகப் பிரக்ஞை மூலமாகத் தொடர்கிறேன்.
ஐன்ஸ்டீன்: பிரபஞ்சத்தின் இயல்பு குறித்து இருவேறு புரிதல்கள் உள்ளன
1. மானுடத்தை சார்ந்திருக்கும் முழுமையான உலகம்.
- மனிதக் காரணியை சார்ந்திருக்காத ஒரு யதார்த்த உலகம்.
தாகூர்: நம் பிரபஞ்சம் மனிதனுடன் இணக்கமாக இருக்கையில், அது நித்தியமானதாகிறது. நாம் இதையே உண்மையென அறிகிறோம். நாம் இதையே அழகு என உணர்கிறோம்.
ஐன்ஸ்டீன்: அது முற்றிலும் பிரபஞ்சத்தின் மீதான மனிதனின் கருத்தாகும்.
தாகூர்: வேறு எந்த கருத்தும் இருக்க முடியாது. இந்த உலகம் ஒரு மனித உலகம் – அதைப் பற்றிய விஞ்ஞானப் பார்வையும் விஞ்ஞான மனிதனின் பார்வைதான். இந்த உண்மையை அளிக்கக்கூடிய சில காரண அனுபவங்களின் நியமங்கள் உள்ளன. நித்திய மனிதனின் நியமம் நம் அனுபவங்களின் வாயிலாக அவன் அனுபவங்களைச் சேர்கிறது.
ஐன்ஸ்டீன்: இது இது மனிதனின் போதமாகும்.
தாகூர்: ஆம். ஒரு நிரந்தர இருத்தல். நாம் அதை நம் உணர்வுகள் மற்றும் செயல்கள் மூலம் உணர்கிறோம். உச்ச மனிதனுக்கு, நம்முடைய வரையறைகள் போல் தனிப்பட்ட வரையறைகள் கிடையாது என்பதை உணர்கிறோம். அறிவியல் தனிப்பட்ட எல்லைகள் சார்ந்து பேசுவதில்லை; அது பொதுமறையான மனித உலகின் உண்மைகளைச் சொல்கிறது. மதம் இந்த உண்மைகளை உணர்ந்து இவற்றை நம் ஆழ்மனத் தேவைகளுடன் இணைக்கிறது; நம் தனிப்பட்ட உண்மையின் உணர்தல், பிரபஞ்ச முக்கியத்துவத்தை அடைகிறது.
மதம் உண்மைக்கு மதிப்பை அளிக்கிறது, மற்றும் நாம் உண்மையின் நன்மையை நம் இணக்கங்களின் வாயிலாக அறிகிறோம்.
ஐன்ஸ்டீன்: உண்மை, அல்லது அழகு மனிதனிலிருந்து தனிப்பட்டதல்லவா?
தாகூர்: இல்லை.
ஐன்ஸ்டீன்: அப்படியாயின் மனிதர்களே இல்லை என்றால் அப்பலோ ஆப் பெல்விடர் (வாட்டிகன் நகரில் அமைந்த புகழ்பெற்ற சிற்பம்) அதன்பிறகு அழகில்லாததா.
தாகூர் : இல்லை.
ஐன்ஸ்டீன் : நான் அழகு குறித்த இந்தப்புரிதலுடன் ஒத்துப்போகிறேன் ஆனால் உண்மை சம்பந்தப்பட்டதுடன் இல்லை.
தாகூர் : ஏன் உண்மை மனிதன் மூலம் தான் உணரப்படுகிறது.
ஐன்ஸ்டீன்: என்னால் என் புரிதலைச் சரியென நிரூபிக்க இயலாது. ஆனால் அது தான் என் மதம் சொல்வது.
தாகூர் : அழகு பிரபஞ்ச இருத்தலுடன் மிக ஒத்திசைவான இணக்கம் கொண்டிருப்பது. உண்மை, பிரபஞ்சம் எதை உண்மை என அறிகிறதோ அது. நாம், நம் தனிப்பட்ட பிழைகள் மற்றும் தவறுகள் வாயிலாக, நம் ஒருங்கிணைந்த அனுபவத்தின் வாயிலாக, ஒளிர்விடும் உணர்வுகள் வாயிலாக அறிகிறோம்- அப்படி இல்லையெனில் நாம் எப்படி உண்மையை அறிவது?
ஐன்ஸ்டீன்: அறிவியல் பூர்வமாக உண்மை என்பது, மானுடத்திலிருந்து தனித்து உருவாகிறது என்பதை நிரூபிக்க இயலாது என்றாலும் அதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் நம்புவது, உதாரணத்திற்கு பித்தாகோரியன் தேற்றம், வடிவியலில் சொல்லப்படும் கிட்டத்தட்ட உண்மையான ஒரு விசயம், மனித இருப்பிலிருந்து தனிப்பட்டது, சொல்லப்போனால், ஏதாவது உண்மை மனிதனிலிருந்து தனித்து இயங்குமானால் இந்த உண்மையை அது மெய்ப்பிக்கிறது. அதே போல, முதலாவதின் எதிர்மறை, அதற்கடுத்தவற்றின் எதிர்மறையின் இருத்தலை உறுதிசெய்கிறது.
தாகூர் : உண்மை, உலக இருத்தலில் ஒன்றானது, இல்லையென்றால், நாம் தனிநபர்களாய் யாவற்றை எல்லாம் உண்மை என உணர்கிறோமோ அவை எல்லாம் உண்மை எனச் சொல்ல முடியாது – குறைந்தபட்சம் அறிவியல் என்று விளக்கப்படும் உண்மை, அது தர்க்கங்களின் வாயிலாக மட்டும் கிடைக்கப்பெறுவது, வேறு வார்த்தைகளில் சிந்தனைகளில் உருப்பெறுவது, மனிதனைச் சார்ந்தது. இந்திய தத்துவயியலின் படி பிரம்மம் என்பது அறுதியான உண்மை, அது தனிமனித மூளையிலிருந்து தனித்து உருவாகுவதில்லை, அல்லது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது, தனிமனித முடிவிலியோடு முற்றிலும் ஒருங்கிணைந்து புரிதல் கொள்வது. ஆனால் அந்த உண்மை அறிவியலைச் சார்ந்தது அல்ல. உண்மையின் இயல்பு என நாம் கலந்துரையாடுவது ஒரு தோற்றம் – சொல்லப்போனால் எது உண்மை என மனித மனம் மூலம் தோன்றுகிறதோ அது மனிதனைச் சார்ந்தது, ஓருவேளை அதை மாயை அல்லது பிரமை என அழைக்கலாம்.
ஐன்ஸ்டீன்: எனில் உங்கள் உருவாக்கத்தின் படி, அது ஒருவேளை இந்திய உருவாக்கம், அது தனிமனித பிரமை அல்ல, ஒட்டுமொத்த மனிதர்களுடையது.
தாகூர் : அறிவியலில் நாம் தனிப்பட்ட மனங்களின் வரையறைகளைக் களைந்து, உண்மையின் விரிவாக்கத்தை உலகத்தின் மனத்தால் அடைகிறோம்,
ஐன்ஸ்டீன் : உண்மை நம் உணர்வுகளிலிருந்து தனித்து இயங்குவதா என்பதில் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
தாகூர் : நாம் உண்மை எனச் சொல்வது அகநிலைக்கும் புறநிலைக்குமான உண்மையின் கூறுகளில் பகுத்தறிவினால் இணக்கம் கொள்வது, இரண்டுமே மேம்பட்ட தனிமனிதனைச் சார்ந்தது.
ஐன்ஸ்டீன்: நாம், நம் தினசரி வாழ்க்கையில் கூட, உண்மை மனிதனிலிருந்து தனித்து இயங்குவது என்பதை உபயோகிக்கும் பொருட்களால் உணர உந்தப்படுகிறோம். இவற்றை நம் உணர்வுகளின் அனுபவங்கள் வழியாக நியாயமான முறையில் தொடர்புபடுத்த முடியும். உதாரணத்திற்கு, இந்த வீட்டில் யாருமில்லை என்றாலும், மேசை அது இருக்கும் இடத்தில் இருக்கும்.
தாகூர் : ஆம். அது தனிமனித மனத்திற்குப் புறவயமானது ஆனால் பொதுபுத்திக்குப் புறவயமானதல்ல. நான் மேசை என அறிவது, என்னிடம் இருக்கும் உணர்வுகளாலேயே அறியப்படுவது.
ஐன்ஸ்டீன்: நம்முடைய உண்மையின் இருப்பு மனிதனிடமிருந்து தனித்து இருப்பதா என்ற இயல்பான கருத்து விளக்கவோ, நிரூபிக்கவோ முடியாதது, ஆனால் அந்த நம்பிக்கை அதனால் குறைபட்டதல்ல, பழங்கருத்துமல்ல. நாம் உண்மையை உச்சமனிதனின் புறவயம் சார்ந்ததாய் பண்புறு கொள்கிறோம். அது நம்மால் களைய முடியாதது, நம்மால் அதன் அர்த்தம் என்ன எனச் சொல்ல முடியாதபோதும் கூட, உண்மை நிலை, நம் இருத்தலிலிருந்து, அனுபவங்களிலிருந்து, மனத்திலிருந்து தனித்து இயங்குவது.
தாகூர்; அறிவியல், மேசை தோற்றத்தில் திடப்பொருள் என நிரூபிக்கிறது. அதனாலேயே மனிதமனம் மேசையை மேசையாய் அறிகிறது, மனிதமனம் இல்லையெனின் மேசையின் இருப்பு அங்கில்லை. அதே நேரத்தில், மேசையின் ஸ்தூலவடிவம் என்ற அறுதியான உண்மை என்பது மின்னணுக்களின் மையத்தைச் சுழன்று தனித்துப்பெருகும் என்ற உணர்வு, மனிதமனம் சார்ந்தது என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியதாகிறது.
உண்மை குறித்த சந்தேகத்தில், உலக மனிதமனமும் அதே மனம் அடைத்திருக்கும் தனிமனிதமனமும் நிரந்தர மோதல் கொள்கின்றன. முடிவேயில்லாத ஒத்திசைவுக்கான செயல்முறைகள் நம் அறிவியலில், தத்துவத்தில், நெறிமுறைகளில் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எதுவாயினும், மனிதத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத எதுவும் நம்மைப்பொருத்தவரை இன்மையானது.
மனத்தை வெற்றிடத்தில் நிகழாத நிகழ்வுகளின் தொடர் கண்ணிகள் எனக் கற்பனைசெய்வது கடினமல்ல, ஆனால் நேரத்தில் தொடர்கண்ணிகளாய் இசைப்பண்ணுக்கு வருவதை ஒத்தது. அந்த மனத்தில் உண்மையின் உருவாக்கம் இசையின் உண்மையை ஒத்தது, அங்கே பித்தாகோரியன் வடிவியலுக்கு எந்த அர்த்தமுமில்லை. காதிதத்தின் மெய்மை இலக்கியத்தின் மெய்மைக்கு முற்றிலும் வேறுபட்டது. காகிதத்தை உண்ணும் பூச்சியின் மனதிற்கு இலக்கியம் என்பது இன்மையானது, ஆனால் மனித மனத்திற்கு இலக்கியம் காகிதத்தைவிட மிக உயர்வானது. அதே போல, மனித மனம் உணர்வால், பகுத்தறிவால் உணரமுடியாத உண்மை, நாம் மனிதர்களாய் இருக்கும் வரையில், ஒன்றுமேயில்லாதது.
ஐன்ஸ்டீன்: அப்படி எனில் நான் உங்களைவிட மதற்சார்புள்ளவனாகிறேன்.
தாகூர்: என் தனித்த இருப்புடன், மேம்பட்ட மனிதனும், பிரபஞ்ச மனிதமனமும் ஒத்திசைவு கொள்வதிலிருந்து உருவாவதே என்னுடைய மதம் ஆகும். என்னுடைய ஹிப்பர்ட் உரைகளின் பொருளடக்கம் இதுவே, நான் அதையே மனிதனின் மதம் என்று அழைக்கிறேன்.
கீழ்வருவது 19/8/1930ல் கஃபுத்தில் நடந்த இரண்டாவது உரையாடலின் சாரம்:
தாகூர் : அணுக்களின் முடிவிலியின் ஆட்சி அவற்றின் இணைவினையை நிறுவுகின்றன என்பதை இன்றைய கணிதவியலின் கண்டுபிடிப்புகள் நமக்குச் சொல்கின்றன. இருத்தலின் நாடகம் அதன் தன்மையில் முன்விதிக்கப்பட்டதல்ல.
ஐன்ஸ்டீன்: அறிவியல் கூறும் இந்த உண்மை நமக்கு எல்லாமே காரணகாரிய தொடர்புடையது என்று சொல்வதில்லை.
தாகூர் : ஒருவேளை இல்லாமல் இருக்கலாம்.; ஆனால் காரணகாரியத் தொடர்பு என்பது அதன் கூறுகளில் இல்லை, வேறு ஏதோ விசைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரபஞ்சத்தைக் கட்டமைக்கின்றன.
ஐன்ஸ்டீன்: ஒருவர் எப்படி உயர்மட்டநிலையில் இந்த ஒழுங்கு அமைகிறது என அறிய முயல்கிறார்; பெரிய அடிப்படைகள் ஒருங்கிணைந்து இருத்தலை வழிநடத்துகையில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. சிறியவற்றில் இந்த ஒழுங்கு உணரக்கூடியதாக இல்லை.
தாகூர் : இந்த இரட்டைத்தன்மை இருத்தலின் ஆழத்தில் இருக்கிறது- கட்டற்ற தூண்டுதல்களுக்கும், விருப்புறுதிகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் அதில் வினைபுரிந்து, ஒழுங்கமைப்பின் வளர்ச்சிக்கு ஏதுவாகின்றன.
ஐன்ஸ்டீன்: நவீன இயற்பியல் அதை முரண்பாடு எனச் சொல்வதில்லை. தூரத்தில் இருந்து பார்த்தால் அது மேகம், ஆனால், நீங்கள் அருகிருந்து பார்த்தால், அது ஒழுங்கில்லாத நீர்துளிகள்.
தாகூர் :மனித உளவியலில் இதற்கு இணையான ஒன்று உண்டு. நம்முடைய ஆர்வங்களும், விருப்பங்களும் கட்டுக்கடங்காதவை, ஆனால் நம் தன்மை அதன் அடிப்படைகளைக் சுருக்கி, மொத்த இணக்கத்திற்கு உதவுகிறது. இந்த அடிப்படைகள் கிளர்ச்சி ஏற்படுத்துபவையா, தனிப்பட்ட தூண்டுதல்களில் ஆற்றல் பெறுபவையா? பௌதிக உலகில் அவற்றைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த கோட்பாடு எதுவும் இருக்கிறதா?
ஐன்ஸ்டீன் : தனிமங்கள் கூட புள்ளியியல் ஒழுங்கின்படி இல்லை; ரேடியம் எப்போதுமே அதனுடைய பிரத்யேக ஒழுங்கைக் கடைபிடிக்கின்றது, இப்போதும் எப்போதும், இதற்கு முன் எல்லா சமயங்களிலும் செய்ததைப் போல. எனவே சாரம்சங்களில் ஒரு புள்ளியியல் ஒழுங்கு இருக்கிறது.
தாகூர் : இல்லையென்றால் இருத்தலின் நாடகம் ஒரு குறிக்கோள் இல்லாது போயிருக்கும். அதனுடைய தொடர்ந்த தற்செயலுக்கும் முனைப்புக்குமான இணக்கம் அதை என்றென்றும் புதிதாய், உயிர்ப்பித்து வைத்திருக்கிறது.
ஐன்ஸ்டீன்: நாம் எதைச் செய்தாலும் அல்லது வாழ்ந்தாலும் அதற்கான காரணங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன்;அதை நம்மால் பார்க்க முடியாது என்றாலும் கூட.
மேற்கண்ட உரையாடல்கள் Science and Indian Tradition; When Einstein met Tagore by David L. Gosling என்ற நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டவை. ஐன்ஸ்டீன் இயற்பியல் மேதை. தாகூர் கவிஞர், ஞானி. அறிவியல், அழகு, தத்துவம், மனிதனின் இருப்பு என நீளும் உரையாடல். சமகால முக்கியத்துவம் கருதி இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ் மொழிபெயர்ப்பு : சரவணன் மாணிக்க வாசகம்.
வாசிக்க மிகுந்த ஆர்வமாகக் காத்திருந்த படைப்பு. அளித்தவர் தாங்கள் என்ற surprise cherry on top. செம்மையான, மூலத்தை வாசிக்கும் உணர்வை ஏற்படுத்துகிற மொழிபெயர்ப்பு. நிறைவான வாழ்த்துகளும் பணிவன்பான வணக்கங்களும். இனிவரும் இலக்கிய இதழ்களில் தங்களது பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம் 🙂