சோதனை
1.
என்னைச்
சோதனை செய்து பார்க்க,
பரி சோதனை செய்து பார்க்க,
சுய பரி சோதனை செய்து பார்க்க,
என்னைத் தவிரச்
சோதனை மாதிரி
வேறு எது/யார்
இருக்க முடியும்
2.
இன்ப துன்பியல்
நாடகம் இது
இரு வேளை
இரு உணர்வு
போவதும் வருவதும்
இல்லவும் உள்ளவும்
ஒன்றே
3.
பவளமல்லிகை உதிர்கிறது
இளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறது
ஒன்றில் நாற்றம்
ஒன்றில் நாற்றமின்மை அல்லது
குறைந்த நாற்றம்
இரண்டிலும் மொய்க்கிறது
ஒரே வண்டு.
4.
உள்ளே திரு நீற்றுத்தட்டை நீட்டுகிறான்
வெளியே பிச்சைத் தட்டை
நீட்டுகிறான்
இரண்டிலும் ஈவது
ஒன்றே.
5.
கூடல் நேரக் கூந்தல் சூடுவதும்
பூதவுடல் பாடைப் பிணம் சூடுவதும்
பரமன் பூஜைக்குச் சூடுவதும்
ஒரே மலர்
வாசனை மட்டும்
வேறு வேறு வேறு
அழல்
1.வாகனப் பயணத்தில் சற்று முன்
இடப்புறம் இருந்த கண்ணீர் அஞ்சலி பதாகையில் தெரிந்தவன்
சற்று தூரம் பயணம் கடந்திருக்கச்
சாலையின் வலப்புறமாக நின்று யாரிடமோ
இடக்கையை நீட்டி “லிப்ட்”
கேட்கிறான்.
தூரத்து மலையின் விசும்பலில்
உண்ணிப்பூக்கள் மலர்கின்றன.
2.
சாலையைக் கடக்கையில்
வாகனத்தில் அடிபட்டு இறந்தவன்
உடலில் பட்ட மண்ணைத் துடைத்தபடி
யாரும் கவனிக்காததைக் கவனித்தபடி
எதிர்புறம் நடக்கிறான்
சிறுவனைப் போல.
சிவப்பு மஞ்சள் பச்சை நிறங்களைக்
கண்களாகக் கொண்டவர்கள்
எதிரும் புதிரும்
சாரி சாரியாக நடக்கிறார்கள்
3.
பௌர்ணமியில் இறந்தவன்
வீட்டுக் கூரையில் படுத்தபடி
நிலவின் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறான்
கிரகங்களை விழுங்கும் மயக்கமுற்ற
பாம்பினை உடலில் மேயவிடும்
பாம்பாட்டி திரும்பவும் மகுடி ஊத
4.
தூக்குக் கயிற்றில்
கழுத்தை நெரித்துக் கொண்டவன்
சீரலைவு இயக்கத்தில்
அங்குமிங்கும் சென்றுவருகிறான்
ஓர் ஊஞ்சலைப் போலக்
காற்று அசைந்து கொண்டிருப்பதை
அறியும் விழிகளைப் போலக்
கால் பெரு விரல்கள் சிரிக்கின்றன
5.
ஊர்ப் பெருங்கிணற்றில்
நீச்சலறியாமல் விழுந்தவன்
கிணறு முழுதும் கொப்புளிக்குமாறு
நீரிலிருந்து காற்றுக் குமிழ்களை
அனுப்பிக் கொண்டேயிருக்கிறான்
மேகங்கள் உள் வாங்குகின்றன
6.
கலவரத்தில் கொலையுண்டவன்
பசியால் துடிதுடிக்க
இதயம் படபடக்க
இரு கைகளைக் கூப்பியபடி
அழுகிறான் .
அந்தப் பாடல்
எரியும் நகரமெங்கும் ஒலிக்கின்றது
தழலின் ஓசை அடங்குவதாயில்லை.
நற்புலரி
இந்தக் காலை இவ்வளவு சீக்கிரம்
வந்திருக்கக் கூடாது
இழவுச் செய்திகளைத் தாங்கி வரும்
குறுஞ்செய்திகள் அதிகமென்பதால்
இந்தச் சூரியனாவது சற்றுத் தாமதமாக
வந்திருக்கலாம்
தும்பி, வண்டு, வண்ணத்துப் பூச்சிகளுக்கும்
இதே காலைதானே
வாழ்த்துச் செய்திகளைக் கொணர்ந்திருக்கும்.
காற்றுவெளியில் பிரிகை அடையும்
ஒளியைத் தூசிகள்தாம் அடையாளப்படுத்துகின்றன.
விடாது கத்திக்கொண்டேயிருக்கும்
தவிட்டுவால் குருவியின் துணைக்குக்
காகங்களும் கரைகின்றன.
அதிசயமாகத் தங்க அரளிப் பூக்கள்
பூத்திருக்கின்றன தொட்டியில்.
கொன்றை மரமேறிப் பந்தலாகப் படர்ந்திருக்கும் பிச்சிப்பூக்கொடியில்
இன்னும் அரும்பு விடவில்லை.
விருந்தினரைப் போல மிகப்புதுமையாக வந்திருக்கும்
இந்தக் காலை மீதேறிதான்
இன்றைய பயணம்.