தமிழ் உரைநடை வளர்ச்சி -கட்டுரை

தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி, உரைநடையில் நூல் இயற்றுவதை ஏன் புறக்கணித்தனர்? உரைநடை நூல் எழுதும் வழக்கம் ஏற்படாத காரணம் என்ன? பண்டைக்காலத்தில் காகிதம்,பேனா,மை,பென்சில் முதலிய எழுது கருவிகள் இல்லை.பனையேடுகளில் எழுத்தாணியால் எழுதுவது மிகக்கடினமான காரியம்.ஆக எழுத்து வேலையை எவ்வளவு குறைக்கவேண்டுமோ அவ்வளவும் குறைக்க வேண்டியவர்களாயிருந்தனர். ஆக சுருங்கச் சொல்லல், சொற் சிக்கனம் போன்ற முறைகளை எழுத்தில் கைக்கொள்ள வேண்டியிருந்தது என்கிறார் மயிலை.சீனி. வேங்கட சாமி. உரைநடையில் நூல் இயற்றுவது எழுத்து வேலையை குறைக்காது மாறாக எழுத்து வேலையை மிகுதிப்படுத்தும். மற்றொரு காரணம் எழுத்தை நகல் எடுக்கும் வசதி இல்லை. ஆசிரியர்களுக்கும், கற்கும் மாணவர்களுக்கும் தாம் போதிக்கும்/கற்கும் நூல்களை மனப்பாடம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. மனப்பாடம் பண்ணுவதற்கு உரைநடை ஏற்றதல்ல. செய்யுள் நடை சிறந்தது. ஆக இக்காரணங்களினால் செய்யுள் நடையை ஏற்றுக்கொண்டு உரைநடையை கைவிட்டனர் என்ற யூகங்களுக்கும் இடமுண்டு.

16ம் நூற்றாண்டில் ஸீகன்பால்கு அறிமுகப்படுத்திய முதல் அச்சியந்திரம் தமிழ்நாட்டுக்கு வந்தது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டத்தில் அச்சியந்திரங்கள் முக்கிய பங்கு வகித்தது உரைநடை வளர்ச்சி மற்றும் அச்சியந்திரங்களின் அறிமுகத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் தவறான சமய காழ்புணர்வால் பல தமிழ் ஓலைச்சுவடிகள் அழிந்த அவலமும் நடந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.. தமிழ் இலக்கிய வரலாற்றில் 1880ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி(வியாழக்கிழமை) ஒரு முக்கிய நாள்.

இந்நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் 18ம் நூற்றாண்டில் மத்தியில் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அவல வரலாறை பார்க்கலாம்.
தமிழ்க் கல்வியில் மாணவர்கள், வித்துவான்கள்,புலவர்கள் சங்க நூல்களையும், சங்க காலத்துக்கு பிற்பட்ட நூல்களாகிய சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை முதலிய நூல்களையும் பயில்வது தொன்று தொட்டு வந்த வழக்கமாகும். ஆனால் இந்த வழக்கம் 18ம் நூற்றாண்டின் மத்தியில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நூல்களை வாசிக்கக் கூடாது என்ற கருத்து தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்த தவறான கருத்தை பரப்பி, தடைக்கு காரணமாணவர்கள் சைவ மடலாயங்களின் தலைமையில் இருந்த சுவாமிநாத தேசிகரும், சிவஞான சுவாமிகளூம் ஆவர்.

மிகுந்த சைவப் பற்றுடைய அதிகாரமிக்க இந்த இருவரும், சங்க நூல்களையும்,சமண, பொளத்த,வைணவ இலக்கியங்களையும் வாசிக்கக்கூடாது என்றும் சைவ நூல்களை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சுவாமிநாத தேசிகர் தன்னுடைய இலக்கணக் கொத்து என்ற நூலில் இத்தகைய நூல்களை இகழ்ந்து எழுதியுள்ளார். இதேபோல் சிவஞான சுவாமிகளூம் தன்னுடைய சோமேசர் முதுமொழியிலும் எழுதியுள்ளளார்.

தமிழ்க் கல்வி பெரும்பான்மையாக சைவ மடங்களில் கற்பிக்கபட்டுள்ளது. ஆக இவர்களின் கருத்தால் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சங்க இலக்கியம், சமண,பொளத்த நூல்களை படிக்கக்கூடாது என்ற கருத்து அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. இந்த குறுகிய தவறான கருத்தால் சில பழந்தமிழ் நூல்கள் மறைந்துவிட்டன. பல ஓலைச்சுவடிகள் பராமரிப்பின்றியும், மறைத்தும், ஒழித்து கட்டவும் செய்தனர். வளையாபதி, தகடூர் யாத்திரை போன்ற முக்கிய நூல்கள் இந்த காலத்தில் அழிந்து போனவை.

இந்த அவலம் 18ம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி 19ம் நூற்றாண்டு இறுதிவரை (ஏறத்தாழ நூறு ஆண்டுகள்) நிலைபெற்றிருந்தது. இதன் தாக்கம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களையும் (உ.வே.சா வின் ஆசிரியர்) விட்டு வைக்கவில்லை. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தம் மாணவர்களூக்கு சங்க இலக்கியம், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களை பாடம் சொல்லவில்லை. பெரும்பான்மையினரின் கருத்து உ.வே.சா, பிள்ளை அவர்களிடம் சங்க இலக்கியம் கற்றார் என்பதாக இன்றளவிலும் இருக்கிறது. இதை மயிலை சீனி.வேங்கடசாமி ஆதாரத்துடன் மறுக்கிறார். பிற்காலத்தில் சங்க இலக்கிய ஓலைச் சுவடிகளை தேடி அலைந்து அச்சில் புதுப்பித்த உ.வே.சாமிநாத ஐயர் அவர்களுக்கு, மகா வித்துவானிடம் பாடம் கற்கையில் சங்க இலக்கிய நூல்களின் பெயரே தெரியாது. ஆக இந்நூல்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுள்ளது என்பதை கவனிக்கவேண்டும்.

பிறகு எப்படி உ.வே.சாமிநாத ஐயர் அவர்களூக்கு சங்க இலக்கியம் பற்றி தெரிய வந்தது?
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி முதலிய அதி முக்கிய நூல்களை ஐயர் அவர்களூக்கு முதன் முதலாக தெரிவித்தவர் சேலம் இராமசுவாமி முதலியார். அச்சமயம் சேலம் இராமசுவாமி முதலியார் அவர்கள் கும்பகோணத்திற்கு முன்சீப்பாக வந்துள்ளார். நட்பு நிமித்தமாக உ.வே.சா அவரை சந்தித்தபோது ‘யாரிடம்/என்ன பாடம் கற்கிறீர்கள்?’ எனக் கேட்டாராம். உ.வே.சா தான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கற்பதாகவும். அந்தாதி, கலம்பகம்,பிள்ளைத் தமிழ், உலா,கோவை முதலிய நூற்களை எடுத்துக் கூறியுள்ளார். “இதையெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்றும், “பழைய சங்க நூல்களை ஏதாவது படித்ததுண்டா” எனவும் முதலியார் அவர்கள் உ.வே. சா வை வினவியுள்ளார். இதைக்கேட்ட ஐயரவர்கள் திடுக்கிட்டுள்ளார். உடனடியாக முதலியார் தன்னிடம் இருந்த சீவக சிந்தாமணி ஏட்டுச் சுவடியை கொடுத்துள்ளார். சங்க இலக்கியத்தைப்பற்றி முதலியார் தெரிவித்த செய்திகள் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் மனக்கண்ணை திறக்கச் செய்தது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கிய நூல்களை ஆராய்ந்து அச்சிடுவதற்கு உ.வே. சாமிநாத ஐயர் அவர்களூக்கு தூண்டுகோலாக இருந்து உற்சாகமூட்டியவர் முதலியார் அவர்கள்.

இதைப்பற்றி உ.வே.சா அவர்கள் தன்னுடைய என் சரித்திரம் என்றநூலில் “என்ன பிரயோசனம்?” என்ற தலைப்பில் முதலியார் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதிலிருந்து சில வரிகள்.

“ அவரிடம் என் நல்லூழ் என்னை கொண்டுபோய் விட்டது.அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது.” என உ.வே.சா எழுதியுள்ளார். உ.வே.சா  இராமசுவாமி முதலியாரைச் சந்தித்த நாள் மேற்குறிப்பிட்ட 1880ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி. தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிமுக்கிய நாள்.

ஆக சமயக் காழ்ப்பால் பல தமிழ் இலக்கியங்கள் மறைந்ததற்கு, இந்த மறைக்கப்பட்ட வரலாறும் முக்கியமாகும்.

தமிழ் உரைநடையின் ஆரம்ப கால வடிவம் சிலப்பதிகாரத்திலுள்ள கானல் வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை பகுதிகளில் பயிலப்பட்டுள்ளதை விநாசிதம்பி செல்வநாயகம் (தமிழ் உரைநடை வரலாறு) குறிப்பிட்டுள்ளார்.  17ம் நூற்றாண்டு வரை மூன்று வகையான உரைநடைகள் தமிழ் வழக்கில் இருந்துள்ளன. அதாவது 10ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை (1) உரையாசிரியர்கள் கையாண்ட நடை (2) சாசனங்களில் உள்ள நடை (3) மணிப்பிரவாள நடை என்ற மூன்று நடைகள் வழக்கில் இருந்துள்ளன.

மரபிலக்கியங்களுக்கு உரை எழுதிய இளம்பூரணர் காலம் முதல் நச்சினார்க்கினியர் காலம் வரை உரையாசிரியர்கள் காலம் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்களில் காணப்படும் உரை நடை பகுதிகள் சாசன நடை என அழைக்கப்படுகிறது. வடமொழி சொற்கள் தமிழில் புகுந்ததின் விளைவாக உண்டானது மணிப்பிரவாள நடை.

உரையாசிரியர்கள் கையாண்ட நடை இலக்கண வரம்போடு இருந்ததால், பொதுமக்கள் படித்து அறிந்து கொள்ள கடினமாக இருந்தது. சாசனத் தமிழ் பொது மக்களுடைய பேச்சுத்தமிழோடு ஒத்திருந்தது. வடமொழி சொற்களோடு கலந்த மணிப்பிரவாள நடையும் பேச்சுத் தமிழோடு ஒத்திருந்தது.

ஆனால் ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டில் காலூன்றியப் பிறகுதான் தமிழ் உரைநடை புதிய திசையில் செல்லத்தொடங்கியது. தங்களுடைய மதக் கொள்கைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக மக்கள் மத்தியில் புழங்கும் பேச்சுத் தமிழ் சொற்களையும், எளிய இலக்கண விதிகளோடு இணைத்து தமிழுக்கு ஒரு புதிய உரைநடையை உருவாக்கினார்கள்.

முழுதும் உரைநடையிலான தமிழ் நூல் ஐரோப்பியர்களால் எழுதப்பட்டது. 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர்தான் தமிழில் முதல் உரைநடை நூலை எழுதியவர் என்பது பெரும்போலோரின் கருத்து, ஆனால்  1577ம் ஆண்டு பெயர் தெரியாத ஒருவரால் எழுதப்பட்ட “கிருஸ்துவ வேதோபதேசம்” என்றநூல்தான் முதல் தமிழ் உரைநடை நூல். பிறகு 1578ம் ஆண்டு அண்ட்ரிக் என்ற பாதிரியார் “தம்பிரான் வணக்கம்” என்ற உரைநடை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவ்விரு நூல்களூம் இந்தியாவில் இல்லை. வெளிநாட்டில் ஏதோ ஒரு சில நூலகங்களில் இருக்கலாம். ஆனால் தமிழ் உரைநடை வேரூன்றி நிலைப் பெற்று வளரத் தொடங்கியது 19ம் நூற்றாண்டில்தான். 1577ல் முதல் உரைநடை நூல் உண்டானதற்குப் பிறகு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் (19ம் நூற்றாண்டு வரை) உரைநடையின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. காரணம் என்ன?

இடைப்பட்ட இந்த முன்னூறு ஆண்டு வரலாறு ஒரு குழப்பமான காலக்கட்டம்.. அதாவது பண்டைய தமிழ் மன்னர்களும்  சிற்றசர்களும் அரசாட்சி இழந்து பல புதிய அரசர்கள் தோன்றினர். குறுநில மன்னர்கள், பாளையங்காரர்கள் அரசாண்டனர். மற்றும் பிரெஞ்சு,இங்கிலீஷ் கம்பெனிக்காரர்களூக்கிடையான மோதல்கள், கர்நாடக நவாப்களின் போர்கள், பாளையங்காரங்களின் தொல்லைகள், மராட்டியர்களின் படையெடுப்புகள், திப்புசுல்தானின் கலகங்கள் என பல அரசியல் குழப்பங்கள் மக்களை பாடாய் படுத்தின. உயிருக்கும், பொருளுக்கும் எந்த உத்திரவாதமும் இல்லாத காலக்கட்டம். இத்தகைய குழப்பான காலக்கட்டத்தில் மக்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலவில்லை. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் குழப்பங்கள் ஓய்ந்து ஆங்கில அரசாங்கம் வலுவாக காலூன்ற தொடங்கியது. கிருஸ்துவ மதத்தை பரப்பும் நோக்கில் தமிழ்நாட்டில் பல பாடசாலைகள் உருவாக்கப்பட்டு மற்றும் பல பாதிரிமார்கள் எழுத்தில் உரைநடையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இப்பாடசாலைகளில் ஐய்ரோப்பிய முறைப்படி இலக்கியம்,பூகோளம்,சரித்திரம் முதலிய பாடங்கள் உரைநடை வாயிலாக கற்பிக்க ஆரம்பித்துள்ளனர். சமயத் தொண்டாற்ற  ஐரோப்பிவிருந்து வந்து இறங்கிய பாதிரிமார்களுக்கு தமிழ்மொழியை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருருந்த படியால், தமிழைக் கற்கும் பொருட்டு உரைநடை நூல்கள் அச்சிடப்பட்டன.  கிருஸ்துவ சங்கங்கள் நிறுவப்பட்டு மதச் சார்பான உரைநடை நூல்கள் விநியோகிப்பட்டுள்ளது.

கி.பி.16ம் நூற்றாண்டில் அச்சியந்திரங்கள் வந்திருந்தாலும், 19ம் நூற்றாண்டில்தான் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு அச்சியந்திரங்கள் வந்தன. அதாவது 16ம் நூற்றாண்டில் கிருஸ்துவ பாதிரிமாரிகளிடம்தான் அச்சியந்திரங்கள் இருந்தன. 19ம் நூற்றாண்டில்தான் இந்தியர்கள் அச்சியந்திரங்களை அமைக்கும் உரிமைப் பெற்றனர். இதே நூற்றாண்டில்தான் ஓலைச்சுவடிகளில் இருந்த பழைய தமிழ் இலக்கியங்கள் அச்சிடப்பட்டு அறிவுப் பரவலாக்கம் சாத்தியமாயிற்று. அச்சியந்திரங்களால் அனைவருக்கும் சொற்ப விலையில் தமிழ் இலக்கியம் வாங்கி வாசிக்கும் நிலை உருவானது. உதாரணமாக வீராமாமுனிவர் எழுதிய சதுரகராதி, ஓலைச் சுவடியாக வாங்கவேண்டுமென்றால் (19ம் நூற்றாண்டுக்கு முன்) இன்றைய மதிப்பில் ரூ.150 கொடுக்கவேண்டும். அதே நூல் அச்சு புத்தகமாக 19ம் நூற்றாண்டில் ரூ.2 க்கு கிடைத்ததாக முர்தாக் என்ற பாதிரிமார் 1865ல் எழுதியுள்ளார். ( John Murduch: Classified Catalogue of Tamil Printed Books with Introductory Notes, Madras. 1865 ).

 

ஆங்கிலேயர்கள் இந்திய மொழிகளில் பயிற்சி பெறுவதற்காக கிழக்கிந்திய கம்பெனியால் 1812ம் ஆண்டு The College of Fort St.George என்ற கல்லூரி உருவாக்கப்பட்டது. இச்சங்கம் சார்பில் அச்சியந்திரம், நூல் நிலையம், வாசக சாலை நிலையங்களும் அமைந்திருந்தன. இக்கல்லூரி ஏறத்தாழ 30 ஆண்டுகள் செயல்பட்டு 1856ம் ஆண்டு மூடப்பட்டது. இவர்கள் வெளியிட்ட பஞ்சதந்திர கதைகள், கதா மஞ்சரி போன்ற சில நூல்கள் முக்கியமானவை. அச்சியந்திரம் வந்த பிறகு, 19ம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தில் சில மாற்றங்கள் வந்தன. கிருஸ்துவ பாதிரிமார்கள் 19ம் நூற்றாண்டில் பல கல்விச் சாலைகளை அமைத்து ஐய்ரோப்பிய முறையில் பாடங்களை கற்பித்தார்கள். அது வரையில் தமிழ் நாட்டில் திண்ணைப் பள்ளிகளே இருந்துள்ளன. மேலும் தமிழ் இலக்கணத்தைத் தவிர வேறு எந்தப் பாடங்களும் கற்பிக்கப்படவில்லை. ஆக பாதிரிமார்கள் நிறுவிய கல்விச் சாலைகளில் தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல், வரலாறு, புவியியல், கணிதம், இயற்கை போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன. தமிழில் எண்களுக்கு தனி வரி வடிவங்கள் உண்டு. க,உ,ச,ரூ என்று புழக்கத்தில் இருந்த வடிவங்கள் எழுதுவதற்கு கடினமாக இருந்தபடியால், கிறிஸ்துவ பாதிரிமார்கள் ஐரோப்பிய எண்களை அறிமுகப்படுத்தினார்கள். ஐரோப்பிய எண் வடிவங்களான 1, 2, 3, 4  முதலியவை எழுதுவதற்கு எளிதாக இருந்ததால் இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக 19ம் நூற்றாண்டில் தமிழ் மொழி அடைந்த சிறப்புகளில் முக்கியமானதும் முதன்மையானது வசன நூல்களின் வளர்ச்சி. 19ம் நூற்றாண்டுக்கு முன் வசன நூல்கள் மிகக்குறைவாகவே வெளிவந்துள்ளன. அச்சியந்திரங்கள் முதலான வாய்ப்பான எழுத்துக் கருவிகள் இல்லாததானால், சுருக்கமாக எழுத்து வேலையை முடிப்பதற்கு செய்யுள் நடையையே 19ம் நூற்றாண்டு வரை கையாண்டுள்ளனர். 19ம் நூற்றாண்டில் பாதிரிமார்கள், மிஷனரிகள் வந்த பின், பழைய பாட முறைகள் மாற்றப்பட்டு புதிய பாடங்கள் புகுத்தப்பட்டு, பாடங்களுக்கு ஏற்றமுறையில் உரைநடை நூல்கள் இயற்றப்பட்டன. 19ம் நூற்றாண்டில் அதாவது 1862ல் தமிழ் ஆங்கில அகராதியை தொகுத்த வெளியிட்ட வின்ஸ்லோ பாதிரியார் தன்னுடைய நூலின் முன்னுரையில் “தமிழர்களுடைய வசன நடை இன்னும் வளர்ச்சியடையவில்லை. தமிழர்கள் பலர் பாக்களை விரைவாக பாடக்கூடியவர்களாக இருந்தும், பிழையின்றி உரைநடை எழுதத்தெரியாமல் இருந்தார்கள் “  எனும் பொருள்பட எழுதியிருந்ததை முக்கியமாக கவனிக்கவேண்டும்.

 

வீரமாமுனிவர் தமிழ் நாட்டில் 1710 முதல் 1747 வரை மறைப்பணியும், தமிழ்ப்பணியும் ஆற்றினார். உயிரெழுத்திலும், உயிர்மெய்யெழுத்திலும் வீரமாமுனிவர் கொணர்ந்த எகர ஒகர சீர்திருத்தம் நிலைபெற்று, இன்றும் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. பேச்சுத்தமிழை விவரித்து கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலையும், சதுரகராதியையும் தொகுத்தவர் இவர். இதைத் தவிர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், போன்ற நூல்களை ஐரோப்பிய மொழியில் வெளியிட்டவர். இதில் சதுரகராதி என்பது நான்கு வகையான அகராதியின் தொகுப்பு நூல். அவை: (1) பொருட்களின் பெயர்ச் சொற்களை தொகுத்து பெயர் அகராதி (2) பொருள்களின் பெயர்களை தொகுத்து பொருள் அகராதி (3) சொற்கள் பலவாக கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதை தொகுத்து தொகை அகராதி (4) எதுகை மற்றும் ஓசை வரும் சொற்களை தொகுத்து தொடை அகராதி.

வீரமாமுனிவர் மறைப்பணி ஆற்றிய அதே காலகட்டத்தில் 1706ல் தரங்கம்பாடியில் இரு ஜெர்மானிய பாதிரிமார்கள் டென்மார்க்கிலிருந்து வந்து இறங்கினார்கள்.  தனது காலனி நாடு ஒன்றில் கிறிஸ்துவின் நற்செய்தியை பரப்பும் மறைப்பணியை செய்யும் பொருட்டு டென்மார்க் மன்னர் நாலாம் பிரெட்ரிக் திட்டமிட்டபோது, அரசவை பாதிரிமார்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஸீகன்பால்கும், ஹெய்ன்ரிச் புளூட்சோவும். இவர்களைப் பற்றி விரிவாக ‘ தமிழ் அச்சுப் பண்பாடு ‘ என்ற நூலில் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலில் அச்சியந்திரத்தை நிறுவி நூல்களை அச்சிட்டவர் என்ற பெருமை ஸீகன்பால்குக்கே சாரும். ஸீகன்பால்கு அறிமுகப்படுத்திய அச்சியந்திரமும் நூல் வெளியீடுகளும் சாதாரண மக்கள் மத்தியில் அறிவுப் பரவலை சாத்தியமாக்கின. அச்சியந்திரம் அறிமுகம் மட்டுமல்லாமல் முக்கியமான மற்றொரு பணியையும் செய்தவர் என்பது கவனத்துக்குரியது என தன் நாலில் அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதாவது 13 வருடங்களே தமிழ்நாட்டில் வாழ்ந்து தன்னுடைய 34வது வயதில் காலமான ஸீகன்பால்கு தொடர்ந்து பிற மதத்தாருடனும், தமிழ் புலவர்களூடன் மற்றும் சாதாரண மக்களுடனும் உரையாடி தன்னுடைய கிருஸ்துவ கருத்துகளை அவர்களிடம் பிரச்சாரம் செய்தது மட்டுமல்லாமல், அவர்களூடைய கருத்துகளையும் குறிப்பெடுத்துள்ளார். சிலவற்றை மொழியாக்கம் செய்து ஐய்ரோப்பாவிற்கு அனுப்பியும் உள்ளார். இந்திய சமூகம், மதங்கள், கலாச்சாரம், பண்பாடு ஆகியன குறித்து பல கோணங்களை அறிமுகப்படுத்தியவர் ஸீகன்பால்கு.

 

மக்கள் மத்தியில் பரவலாக பயிலப்பட்ட நீதி வெண்பா, உலக நீதி, கொன்றை வேந்தன் ஆகிய மூன்று அற நூல்களை 1708ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இதே ஆண்டில் சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு போன்ற நூல்களை அடிப்படையாகக்கொண்டு ஐய்ரோப்பிய அகராதியக் கோட்பாட்டு அடிப்படையில் அகர வரிசையில் இரு அகராதிகளை தொகுத்துள்ளார். மக்களிடையே அதிகம் புழங்கும் சொற்களை கொண்டு ‘கிறிஸ்துவத் தமிழை‘ வளமாக்கினார். “தென்னிந்தியச் சமூகம்” என்ற ஸீகன்பால்குவின் முக்கிய நூல் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பிறகு 1921ம் ஆண்டு காலண்ட் என்பவரால் வெளியிடப்பட்டது. மற்றொரு நூலான “தென்னிந்தியக் கடவுளரின் வம்சாவழி” என்ற நூலை அவர் 1713ல் எழுதினார். இவ்விரு நூல்களும் தற்போது ஆங்கிலத்தில் படிக்க கிடைக்கின்றன.

புதிய ஏற்பாட்டை ஸீகன்பால்க் தமிழில் மொழிபெயர்த்ததால், லண்டனில் இருக்கும் ‘கிறிஸ்துவ அறிவுப் பரப்புக் கழகம்’ அச்சியந்திரத்தையும், 100 ரீம் காகிதத்தையும் தரங்கப்பாடிக்கு அனுப்பியது. ஆக 1712ல் தரங்கம்பாடியில் முதல் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டது.

இந்த நவீன அச்சியந்திரம் வருவதற்கு முன், 16ம் நூற்றாண்டில் அதாவது 1578ல் அண்ட்ரிக் அடிகளார் எழுதி வெளியிட்ட “தம்பிரான் வணக்கம்” என்ற நூல் முதலில் அச்சில் வெளிவந்த தமிழ்நூல் என்ற பெருமைப் பெற்றது. அண்ட்ரிக் அடிகளார்தான் இந்தியாவில் முதல் அச்சகத்தை கொல்லத்திலும், கோவாவிலும் நிறுவியவர். அவர் நிறுவிய அச்சியந்திரம் மரச்செதுக்குகளை பயன்படுத்தி இயங்கியது. எனினும் அச்சுக் கோர்த்து அச்சிடும் நவீன அச்சியந்திரத்தை கொண்டு தொடர்ந்து பல நூல்களை வெளீயிட்ட பெருமை ஸீகன்பால்குவையே சாரும். 16ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரை 313 நூற்கள் அச்சிடப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்பட்ட அச்செழுத்து வார்ப்புகள் பெரிதாக இருந்ததால், தரங்கம்பாடியில் பட்டறை அமைத்து ஈய எழுத்துகள் வார்க்கப்பட்டன. மேலும் காகிதத்திற்காக ஐரோப்பாவை நம்பி இருக்காமல், தரங்கம்பாடி அருகே பொறையாரில் காகித உற்பத்திக்கான ஒரு பட்டறையும் அமைக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் தமிழ் ஓலைச்சுவடிகள் மடங்கள், அரசவைகள் மற்றும் பெரும் செல்வந்தவர்கள் இல்லங்களிலேயே சேகரித்து வைக்கப்படிருந்தன. 1708ம் ஆண்டு ஸீகல்பால்க் ஓலைச்சுவடிகளை சேகரித்து தொகுத்து Bibliotheca Malabarica என்ற தமிழ் நூலகத்தை உருவாக்கினார். இந்த நூலகத்தில் தமிழிலக்கணம், அற நூல்கள், பக்தி இலக்கியம், தல புராணங்கள், காப்பியங்கள் என அமைந்திருந்தன. மொத்தம் நான்கு தொகுதிகளாக இந்த நூலகம் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் தொகுதியில் அவர் எழுதிய 14 நூற்கள், இரண்டாவது தொகுதியில் கத்தோலிக்க மறைப் பணியாளர்கள் எழுதிய 21 நூற்கள், மூன்றாம் தொகுதியில் 119 தமிழ் நூற்கள், நான்காம் தொகுதியில் இஸ்லாம் குறித்த 11 நூற்கள் அடங்கி இருந்தன.

தமிழில் செய்யுளுக்கு இருக்கும் நெடிய வரலாறு  உரைநடைக்கு கிடையாது. தமிழ் நவீன உரைநடையின் வயது ஏறத்தாழ 200-300 வருடங்கள் தான். பல தமிழ்க் கவிதைகள் உலகத்தரமானவை என்பதற்கு இந்நெடிய வரலாறும் ஒரு காரணம். மேற்கத்திய வரலாறு போல் தமிழுக்கு நெடிய உரைநடை வரலாறு இல்லை. முதல் தமிழ் நாவல் 1879ல் தான் வெளிவருகிறது.(பிரதாப முதலியார் சரித்திரம்).  ஆக தமிழ் எழுத்து உரைநடை என்ற வடிவத்தில் இன்னும் அதிகம் பிரயாணம் செய்யவேண்டியுள்ளது.

உதவிய நூற்கள்:

(1) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்—மயிலை சீனி. வேங்கடசாமி

(2) தமிழில் அச்சுப்பண்பாடு- அ.மார்க்ஸ்.

(3) தமிழ் உரைநடை வரலாறு- விநாசித்தம்பி செல்வநாயகம்

(4) என் சரித்திரம்- உ.வே.சாமிநாதய்யர்.


-எஸ். வாசுதேவன்

விமர்சகர் எஸ். வாசுதேவன் எழுதிய ” யாதென அழைப்பாய்…” (மருதா பதிப்பகம்) என்ற கட்டுரை நூல் 2016-ல் வெளிவந்தது. 2018-ம் ஆண்டு சிறந்த நூலுக்கான “மேலும்” விருது வழங்கப்பட்டது. அந்த நூலிருந்து இந்த கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.