தாம்பத்தியம்-சாரா ஜோசப் ஆங்கிலத்தில் : J. தேவிகா

              

இன்று அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி. உண்மையில் நான் நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பினேன். இதோ இப்போது அவளெதிரே. ஆனால் அவள் என்மீது பாயவில்லை. பார்த்தால் ஆத்திரத்தோடு இருப்பதுபோலவும் தெரியவில்லை. குட்டிபோட்ட பூனையைப்போல நகங்களையும் பற்களையும் காட்டவுமில்லை. பார்வையால் என்னைத் துளைக்கக்கூட இல்லையே? அற்புதம்!

ஈரம் லேசாய் பரவிய சமையலறைத் தரையில்  கடகடவென்று ஆடும் தேங்காய்துருவியில் உட்கார்ந்து துருவிக்கொண்டிருக்கிறாள், நான் வந்ததைப் பார்த்தும் அவள் முகத்தில் எந்த மாற்றமுமில்லை. செருமினேன்.. அதைக்கேட்டு அவள் கண்கள் மட்டும் லேசாக அசைந்தன, அவ்வளவுதான். அடிமுட்டாளைப் போல நான் அங்கே நின்றுகொண்டிருந்தேன். ஏதோ பெரிதாக வெடிக்கப்போவதற்கு முன்னுள்ள அமைதியா?. சோதித்துத்தான் பார்ப்போமே.. ஈரத்தரையில் நானும் அவளருகில் குத்திட்டு அமர்ந்தேன். ஈரம் ஏறி அவள் புடவையில் கரைகட்டியிருந்தது.. முந்தானையை எடுத்து மிகுந்த மரியாதையோடு, மிகச் சிரத்தையாக அவள் மடிமீது போட்டேன், உக்கிரமான தாக்குதலை அவளிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் அவள் முகத்தில் துளிகூட சலனமில்லை.

அவளிடம் இன்னும் நெருங்கி உட்கார்ந்துகொண்டேன். தேங்காயைத் துருவும்போது அவளது கக்கங்களிலிருந்து வேர்வைமணம் எழுந்தது. எனக்கு அவளது வேர்வைமணம் ரொம்பப் பிடிக்கும். அவளது வேர்வை வீச்சமடிப்பதில்லை. என்னைவிட அவள் ரொம்ப சுத்தமாக இருப்பவள், உண்மையைச் சொல்வதென்றால், அவளது எல்லா இடமும் சுத்தமாக, மணத்தோடு இருக்கும், நல்ல மணமுள்ள பூவைப்போலே. எனது அழுக்குகளோடு அவளை ஒப்பிட்டுப் பார்க்கும்போதெல்லாம் நான் பதற்றமாகிவிடுவேன்.

ரகசியமாக என் நாசியை அவளது கக்கங்களுக்கு அருகே கொண்டுசென்றேன். ஏதோ ஈயை விரட்டுவதுபோல் என் மூக்கைச் சட்டெனத் தட்டிவிட்டாள். நல்லவேளை, வேறெதுவும் அசம்பாவிதமாய் நடக்கவில்லையே! நிம்மதி.

வேர்வை தேங்காய் துருவுவதால் வந்திருக்காது. நாள்முழுவதும் கடுமையாக வேலைபார்த்து  வேர்வை சேர்ந்து இப்போது அவள் முதுகிலிருக்கும் அழகிய ஓடை போன்ற பள்ளத்தில்  வழிந்தோடுகிறது. உண்மையைச் சொல்லவா, அவள் மட்டும் அனுமதித்தால் இப்போதே அதைச் சுத்தமாக நக்கி எடுத்துவிடுவேன். ஆனால் அப்படி எதையாவது செய்யப் போனேன் அவ்வளவுதான்! என்ன நடக்கும்னு சொல்லமுடியாது. அவள்மேல் எனக்கு இருக்கும் இரக்கமும் பரிவும் அவள் கண்ணுக்குத் தெரியாது. வேறெதற்கோ செய்கிறமாதிரித்தான் அவளுக்குத் தோன்றும்..

 வெளிர்ப் பச்சைநிறச் சேலை உடுத்தியிருந்தாள். தேன்நிறக் கெண்டைக்கால் சதைகள் பளிச்செனத் தெரிய சேலையைத் தூக்கிச் செருகியிருந்தாள். இதில் கிளர்ச்சியடைய என்னதான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். பதினைந்து வயதிலிருந்து அவள் என்னுடன் இருக்கிறாள். இப்போது அவளுக்கு முப்பத்திரண்டு வயது. இரண்டு வால் குழந்தைகளையும் பெற்றெடுத்து விட்டாள். ஆனால் இப்போதும் அவளது கால்கள் (அதிலும் முழங்காலுக்கு மேலே) உருண்டு, தேனைவிடவும் இனிமையாய் இருக்கும். மேலே சொன்னதில் அந்த இனிமையைப் பற்றி மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. அனுபவித்திருந்தால்தானே ! என்ன ஆளய்யா “நீ” என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இதற்கு நானும் கொஞ்சம் காரணம்தான். நானே எல்லாவற்றுக்கும் காரணமல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும். அவள் எப்படிப்பட்டவள்? உங்களுக்கு அவளைத் தெரியாது, மிக வித்தியாசமானவள் அவள். மிக விசித்திரமானவள்.

அது கிடக்கட்டும். அந்த தேன்கால்கள் சுத்தமாக இருந்தன, அங்கங்குத் தெரிந்த கருந்திட்டுக்களைத் தவிர. எங்கிருந்து வந்தன கருந்திட்டுகள்? உதவாக்கரை மனிதன் என்னால்தான். பதினைந்து வயதில் அவள் என்னிடம் வந்தபோது அவளது உடல் கருப்போ கிருப்போ இல்லாமல், பளீரென இருந்தது, தொட்டால் வழுக்கிக்கொண்டு போகுமளவு அவளது சருமம் மிருது. இதையெல்லாம் அப்போது நான் கவனிக்கவேயில்லை. நான் எவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவன் என்பதை யோசித்துப்பாருங்கள். அவளைக் குற்றம் சொல்லமுடியாது. இது முழுக்க முழுக்க என் தவறுதான். இப்போதிருப்பதைவிட இரண்டு மடங்கு  தாழ்வுமனப்பான்மையோடு அப்போது நானிருந்தேன். தடியன் எனக்கு அவளை நேருக்கு நேராய் பார்க்கக்கூடத் திராணி கிடையாது…. அப்புறமல்லவா அவளது முழு உடலையும் பார்ப்பது! ஆங்… தேனில் படிந்த திட்டுக்கள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேனே. எங்களின் இரண்டாவது மகனுக்கு எக்சீமா வந்தது. (எப்படி வராமல் போகும்! என்னைவிட அழுக்குப் பண்டம் அது!) அவள் தினமும் வாசற்படியில் அவனை உட்கார்த்திவைத்து, சிரங்குப் பொருக்குகளைத் தேய்த்தெடுப்பாள். தேத்தாங்கொட்டைச் சாற்றை ஊற்றி தோலுரிந்த சேனைக்கிழங்கைப் போல அவன் சருமம் செவேரென ஆகும்வரை அழுத்தித் தேய்த்துவிடுவாள். புடவையை உயர்த்தி இடுப்பில் செருகிக்கொண்டு இப்படியே தொடர்ந்து இருவாரங்கள் அவனைத் தேய்த்துவிட்டதில், அவளது தேன்நிறக்கால்களிலும் சிரங்குகள் வெடித்தன. விடாமல் சிகிச்சை எடுத்து அவை மறைந்துவிட்டன, ஆனால் தழும்புகள் போகவில்லை, மனதிலிருந்து மறைய மறுக்கும் நினைவுகளைப் போல. அவள் சருமம் ரொம்ப, ரொம்ப மிருது உணர்ச்சி கொண்டது. இதற்கு நானும் காரணம்தான். அழுக்கனான எனக்கு மகனாய் பிறந்ததாலேதான் அவனுக்கும் எக்சீமா வந்தது – அழுக்கு அப்பனுக்கு அழுக்குப் பிள்ளை. ஒருவேளை எக்சீமா என் இரத்தத்திலேயே இருக்கிறதோ என்னவோ. ஆனால் அவள் மட்டும் விட்டிருந்தால் அந்தத் தழும்புகள் போவதற்குக் களிம்பு வாங்கித் தந்திருப்பேன்; அதை அவள் கால்களில் தேய்த்துக்கூட விட்டிருப்பேன். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை.

  நான் அவளது முழங்காலில் இருந்த மங்கிய தழும்பைக் கள்ளத்தனமாகப் பார்த்தேன், அதற்கு மேலும் ஏதோ பார்க்கக் கிடைத்ததைப் போல; அவள் மட்டும் என்னை விட்டாளானால்…. ஆனால் அவளோ துருவுவதைச் சட்டென நிறுத்திவிட்டு சிரட்டையைப் பலத்த சத்தத்துடன் கீழே வைத்தாள். என்னைக் கண்டுகொள்ளாமல் கதவைத் திறந்துகொண்டு வராண்டாவிலிருந்த அம்மிக்கல்லை நோக்கிச் சென்றாள்.

இப்போதுவரை என்னோடு ஒரு வார்த்தையாவது பேசவேண்டுமே! எனக்குப் பயம் வந்துவிட்டது. அவளுக்குள் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது, இனி எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம். வழக்கமாக இதுபோல நான் ஊர்சுற்றிவிட்டு வந்தால் எனக்கு நல்ல பூசை கிடைக்கும்.

 சமயங்களில் அவளது ஆக்ரோஷத்தைப் பார்க்கும்போது எனக்குச் செத்துப்போய் விடலாமா என்றுகூடத் தோன்றும். ஆத்திரம் தீரும்வரை அவள் பொருட்களையெல்லாம் விசிறியெறிந்து உடைப்பாள், அதைவிடக் கொடுமை கையில் கிடைத்ததை வைத்து தன் தலையிலேயே அடித்துக்கொள்வாள், அது இரும்புக்கழியாகவே இருந்தாலும் சரி! இதையெல்லாம் என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும், அவளது கையிலிருக்கும் பொருளைப் பிடுங்கக்கூட என்னை விடமாட்டாள். இழுத்து அவள் கன்னத்தில் இரண்டு அறை கொடுக்கவேண்டுமென அப்போது என் மனம் பரபரக்கும், ஆனால் இதற்கெல்லாம் நான் பொறுப்பில்லாமல் இருப்பதுதான், என் கையாலாகாதத்தனம்தான் காரணம் என்பது உறைக்கும்; என் கை நகராமல் அப்படியே நின்றுவிடும்.

இப்படித்தான் ஒருமுறை ஆத்திரத்தில் எதையோ போட்டு உடைத்துவிட்டு அவள் கூறிய வார்த்தைகள் கண்ணாடிச் சில்லுகள் போல என் மனதில் பதிந்துவிட்டன:

  “என்  வாழ்க்கையை உடைக்கிறேன், என்  கஷ்டத்தை நொறுக்குகிறேன். இதில் உங்களுக்கென்ன வந்தது? உங்களுக்கென்ன நஷ்டம்??”   

தான் அனுபவிக்கும் கஷ்டத்தை இப்படி மறைமுகமாக உடைத்தெறிவதெல்லாம் அப்படியொன்றும் சுலபம் கிடையாது, அதை அனுபவித்தால்தான் புரியும். அதைப்பற்றி எனக்கு முழுக்கத் தெரியும் என்பதால்தான் நான் அவளைப்பொறுத்துக்கொண்டிருக்கிறேன். என் தரப்பில்தான் தவறுகள் நிறைய. எனது மௌனம் பொறுப்பில்லாத கோழையின் மௌனம். அவளை எப்படித் தேற்றுவது என்றுகூட எனக்குத் தெரியாது. அவளும் நானும் அவ்வளவு வேறு வேறானவர்கள்! அதனால்தான், அவள் தனக்குள் அடைபட்டுக்கிடக்கும் வேதனைகளை இப்படியெல்லாம் காட்டுவதைத் தடுக்க எனக்கு எந்த உரிமையுமில்லை. தடுக்கப் போகவும் மாட்டேன்.

சமையற்கட்டுக்குள் சென்று அடுப்புத்தீயைக் கிளறிவிட்டேன். பசிக்கோழி வயிற்றைக் கிளறிக்கொண்டிருந்தது. சத்தமிடாமல் மூடி வைத்திருந்த பாத்திரங்களைத் திறந்துபார்த்தேன். ஒன்றில் சோறு வடித்து வைத்திருந்தது. நறுக்கிய தடியங்காய்த் துண்டுகள் ஒரு தட்டிலிருந்தன. சாப்பிடுவதற்கு அங்கு நான் கண்டது இந்த இரண்டையும்தான். ஒரு பாத்திரம் நிறைய நீரை உள்ளே இறக்கிவிட்டு வெளியே வந்தேன். இரு வாலுகளும் ஒன்றோடொன்று வெளியே சண்டையிட்டுக் கொண்டிருந்தன. எனக்கோ ஆத்திரம் பொங்கியது. உள்ளுக்குள் அடங்கிக்கிடந்த கோபமெல்லாம் நாக்குக்கு வந்துவிட்டது. முற்றத்தில் குதித்து இருவரில் ஒருவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.

    “அம்மா உன்னை அடிச்சாளாடா?”

     “இல்லயே.”

     “ஓ, நெஜமாவா? அப்படின்னா உன்னை அவ கொஞ்சினாளாக்கும்?”

என் குரல் கூரையை முட்டியது. அந்தக் குட்டிச்சாத்தான் என் கைப்பிடிக்குள் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. முற்றத்திலிருந்த மற்றவனோ ஓவென அழத்துவங்கினான். சனியன்கள்! அவர்களை விட்டுவிட்டேன். இதையெல்லாம் அவள் எப்படி எடுத்துக்கொள்கிறாள் என்று பார்க்கத்தான் அவர்களை மிரட்டினேன். என்ன செய்து என்ன பயன்?

 உற்றுக்கேட்டேன். அம்மிக்கல்லின் ஓசை அடங்கிவிட்டது. அடுப்படியில் பாத்திரங்கள் கலகலத்தன. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அடுப்படிக்குள் நுழைந்தேன். பிள்ளைகளின் கூப்பாடுகளைக் கேட்டு அவளிடம் எதாவது மாற்றமுண்டா என்று  ஓரக்கண்ணால் பார்த்தேன். அவள் முகம் இப்போதும் அம்மிக்கல்லைப் போலவே இறுகிக் கிடந்தது.      

 பானையிலிருந்த தடியங்காயோடு அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கிக்கொண்டிருந்தாள். அவளது மார்பிலிருந்து சேலை விலகியிருந்தது. பளீரிடும் சிவப்புநிற ரவிக்கை அணிந்திருந்தாள். எனக்கு ரொம்பப் பிடித்த ரவிக்கை. கழுத்து இறக்கம் குறைந்த ரவிக்கை. அவள் அதை அணியும்போது அவளை நான் திருட்டுப்பார்வை பார்த்ததுண்டு. ஆனால் அந்தப்பகுதி தேன்நிறமில்லை. பழுத்த எலுமிச்சம்பழ நிறம், என்னை சந்தோசப்படுத்தும் நிறம். அந்த இடம் மட்டும் ஏன் அந்த நிறமென்று அவளைப் படைத்தவனுக்கே வெளிச்சம். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் இரக்கமில்லாமல் சேலையை இழுத்து விட்டு ஒன்றுமே தெரியாததுபோல் வேலையைத் தொடர்ந்தாள். சுவையோ மணமோ இல்லாத தடியங்காயுடன் காரத்தைக் கலந்து அடுப்பிலேற்றினாள். அவ்வளவுதான்.

எனக்குக் கோபம் வருமா வராதா? ஆனால் அதைச் சொல்லி எதற்கு? அவள் அனுபவிக்கும் கஷ்டங்களையும் தனிமையையும் பார்க்கும்போது என் கோபம்கீபமெல்லாம் ஒன்றுமேயில்லை. என் ஏமாற்றங்களெல்லாம் அற்பமானவை.

பொறுத்துக்கொள்ள முடியாமல் இரக்கத்தோடு அவளருகே போனேன். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் வெடுக்கெனத் திரும்பி அங்கிருந்து போய்விடுவாள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவள் பாட்டுக்கு அழுக்குப்பாத்திரங்களை ஒவ்வொன்றாகக் கழுவி அடுக்கிக் கொண்டிருந்தாள். அது முடிந்ததும் கரித்துணியால் அடுப்படியைச் சுத்தமாகத் துடைத்துவிட்டு அந்தத் துணியையும் அலசினாள், தன் கைகளையும் பலமுறை சுத்தமாகக் கழுவிக்கொண்டாள். தடியங்காய்குழம்புக்குக் கடுகு தாளிக்கத் தயாரானாள். இத்தனை வேலைகளும் செய்தவள் என்னை மட்டும் கண்டுகொள்ளவேயில்லை. இப்படியே போனால் உடனே இல்லாவிட்டாலும் இரவு படுப்பதற்கு முன்பேனும் சண்டை நிச்சயமாய் வெடிக்கப்போவது எனக்கு உறுதியானது.

ஒரு வாளி நிறைய சுடுநீரோடு அவள் குளியலறைக்குப் போவதைப் பார்த்தேன். உடனே ஓடிப்போய் அவளிடமிருந்து வாளியை வாங்கிக்கொண்டேன், கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடுதான். சில நேரம் இப்படி ஏதாவது செய்யப்போனால் அவள் வேண்டாமென்று என் கையைத் தட்டிவிட்டு தரையதிர எரிச்சலுடன் சென்றுவிடுவாள். ஆனால் இன்று நான் வாளியைத் தொட்டதுமே தன் பிடியை விட்டுவிட்டாள். இதை நான் எதிர்பார்க்கவில்லை; அவள் விட்ட வேகத்தில் வாளி அலுங்கிக் கொஞ்சம் நீர் தரையில் சிந்தியது. நான் அவளைப் பார்த்து அசடுவழிந்தேன். என்ன செய்து என்ன! அவள் முகம் தோலெடுத்த தடியங்காய்த் துண்டைப்போல இப்போதும் உணர்ச்சியற்று இருந்தது. எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. என்னை அவள் குறைகூறித் திட்டவில்லை, ஒரேயொரு கோபப்பார்வை கூட என்மீது வீசவில்லை. அவளுக்கு ஒன்றுமில்லை என்றால் எனக்குத்தான் ஏதோ ஆகிவிட்டது.

நீரை யாருக்காகக் குளியலறைக்குக் கொண்டு சென்றாள் என்று தெரியவில்லை.; அதிகாலையிலிருந்தே சுற்றித்திரிந்து கொண்டிருந்ததால் மேலெல்லாம் ஒரே பிசுபிசுப்பு. இல்லாவிட்டாலும் என் வேர்வை ரொம்ப நாறும். வேர்வைவாடை மட்டுமல்ல, என் உடம்பில் எங்கிருந்து வருகின்றன என்றே தெரியாத கடும்வாடைகள் வீசும், பயங்கரம்! என் வாயும் வாடை அடிக்கும். எப்போதேனும் அந்த வாடை என் உதட்டுக்கு வந்துவிட்டால் எனக்கே குமட்டிக்கொண்டு வரும்! கொடூரம்! இதனால்தான் நான் அவளை முத்தமிட்டதேயில்லை. அவளுக்கு அது குமட்டியது, எனவே நான் அவளை முத்தமிடுவதையே நிறுத்திவிட்டேன். எத்தனைப் பெரிய கஷ்டம் இது! அவளுக்குப் பதினைந்து வயதிருந்தபோதே என் பற்களெல்லாம் காரைபிடித்து மஞ்சள்படிந்து சொத்தையாய் இருந்தன (ஒரு முத்தத்திற்குக்கூடக் கொடுப்பினையில்லாத வாழ்வைப் பற்றி அவள் ஆவேசமாவதை நானெப்படி குறைகூறமுடியும்!) அவளது உதடுகளோ இனிமையானவை. தேனில் ஊறவைத்த செர்ரிப்பழங்களைப் போல. கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து, சுவைத்து உண்ணலாம். அவற்றின் வடிவமும் மிருதும் ஒருவனைப் பைத்தியமாக்கிவிடும். ஆனால் அந்த உதடுகளின் மிருதுத்தன்மை பற்றிப் பேச எனக்கென்ன அருகதை?. (எனக்கு அளிக்கப்பட்டவை!) அந்த உதடுகளால் அவள் என்னை முத்தமிட்டதேயில்லை. அவளது உதடுகள் சுகந்தமானவை. மலரொன்றை முகர்ந்து பார்ப்பதைப் போலே அவளுடைய உதடுகளை முகர முடியும், (அவள் உடம்பில் எங்குதான் மணமில்லை)

குளியலறை வாசல்வரை அவளது நிழல் வந்து சட்டென மறைந்துபோனது. 

“இந்த சுடுதண்ணி யாருக்கு?” நிதானமாகக் கேட்டேன். பதிலில்லை. அவள் தன் நிழலோடு அடுப்படிக்குப் போனாள். நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்..  “இந்தத் தண்ணி…?”

     “உ-ம்!”

 என்ன உ-ம்? இதை நான் என்னவாகப் புரிந்துகொள்வது?  திரும்பிவந்து குளிக்கத் துவங்கினேன். உடம்பில் நன்றாகச் சோப்பு தேய்த்துக்கழுவிச் சுத்தமாகக் குளித்தேன். என் உள்ளாடைகளிலிருந்து எழுந்த துர்நாற்றத்தை – அய்யோ கடவுளே – என்னாலேயே அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒருமுறை அவற்றை மோந்து பார்த்தேன், வீச்சம் தாங்காமல் தலையை உதறிக்கொண்டேன். பல காரணங்களுக்காக நான் அலைந்துதிரிய வேண்டியிருப்பதால்தான் (‘இது பொய்!’ என்பாள் அவள்.) உள்ளாடைகளை ஒழுங்காக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. சபிக்கப்பட்ட அந்த உள்ளாடைகளிலும் சோப்பை போட்டு நன்கு தேய்த்து அலசினேன். பெரிய அவஸ்தையொன்று என் உடலிலிருந்து வெளியேறியதைப் போல் ஆசுவாசமாயிருந்தது.

சிறிய துவாலையை இடுப்பில் சுற்றிக்கொண்டு குளியலறையிலிருந்து அடுப்படி வழியாக நடந்தேன், வேண்டுமென்றேதான் அப்படிச் சென்றேன்; இது நகைப்புக்குரிய செயல், இதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை எனத் தெரிந்திருந்தும் சென்றேன்.

அவள் மீண்டும் நீர் சுடவைத்துக் கொண்டிருந்தாள். அப்படியென்றால் நான் குளித்த நீரை வேறு எதற்காகவோ எடுத்து வந்தாள் போலிருக்கிறது. நான் ஓர் ஆபத்தான சூழலில் சிக்கிக்கொண்டேன் என நினைக்கிறேன். கட்டிய கணவனுக்கு உன்னால் ஒரு வாளி சுடுதண்ணீர்கூடத் தரமுடியாதா என்று கேட்கும் துணிவும் எனக்கில்லை. ஏனென்றால், அவள் அனுபவித்துவரும் கஷ்டம், தனிமை, இழப்புகளோடு ஒப்பிட்டால் என் அரைவேக்காட்டுக் காரணங்களுக்குச் சல்லிக்காசுகூட மதிப்பு கிடையாது.

உடைமாற்றிக் கொண்டு தலைவார கண்ணாடியருகே சென்றேன். ஹக், முகமா இது! புன்னகைக்க முயன்றேன், இன்னும் கொடூரமாய் இருந்தது!

நான் என்ன அவ்வளவு அசிங்கமாகவா இருக்கிறேன்? கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றேன். என்னை முழுமையாக ஆராய்ந்தேன்.

அப்படியொன்றும் மோசமாக இல்லையே நான்?. என்னிடம் சில குறைகள் உண்டுதான், ஆனாலும் சுமாராகவாவது இருக்கிறேனே, அது போதுமே!. அப்படியானால் எங்குதான் கோளாறு? அவளோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து ஏமாற்றமடைந்து தாழ்வுமனப்பான்மையினுள் தலைகுப்புற விழுந்துவிடுகிறேன், அதுதான் உண்மையான காரணம்! த்ஸ்க்!

கேசத்தைப் படியவாரி பவுடர் பூசிக்கொண்டு அடுக்களை வழியாகச் சென்று வெளியே வந்தேன். அவள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். வழக்கம்போல் முழங்கால் தெரிய சேலையைத் தூக்கிச் செருகியிருந்தாள். முழங்காலுக்கு மேலும் கீழும் அவளது கால்கள் செதுக்கிவைத்த சிற்பத்தின் நேர்த்தியோடு இருந்தன. எனது கால்களோ அசிங்கமானவை. அதிலும் என் பாதங்கள்; என் அம்மா குடும்பத்திலிருந்து எனக்குக் கிடைத்த அருவருப்பான இரு பாதங்கள். அகன்ற, பெரிய, முரட்டு, கன்னங்கரேல் பாதங்கள்… பரம்பரைச் சொத்து! ஆனாலும் கொஞ்சம் நகத்தை வெட்டிகிட்டி சுத்தமாக வைத்திருந்தால் நன்றாகத்தான் இருக்கும். என் கால்நகங்கள் பயங்கரமாக இருக்கும். தாறுமாறாக  வளர்ந்து, நீண்டு சீரில்லாமல் இருக்கும். நான் அவற்றை அவ்வப்போது வெட்டிவைத்துக் கொள்ளலாம்தான். நான் அதில் அக்கறை காட்டியதேயில்லை. அவற்றை வெட்டினால் என்ன வெட்டாமல் அப்படியே விட்டால்தான் என்ன, அதனால் மனிதகுலத்திற்கு ஒன்றும் நல்லது நடந்துவிடாது என்பதுபோல இருப்பேன். பதினைந்தே வயதான அவளது மிருதுவான மேனியை என் கால்நகங்கள் பதம்பார்த்துவிட்டன; பாவம் அவள், பயத்தில் அலறியேவிட்டாள். அன்றுதான் என் வாழ்வில் முதல் முறையாகக் கத்தியை எடுத்து என் கால்நகங்களை வெட்டியெடுத்தேன். எனக்கு அது ஒரு தேவையில்லாத வேலை என்றுதான் இப்போதுவரைக்கும் தோன்றுகிறது.

அவள் குழந்தைகளை நன்கு துடைத்துவிட்டாள்; துவைத்துவந்த துணிகளைப் போட்டுவிட்டாள்; கண்ணாடி முன் நிற்கவைத்துத் தலைவாரி, அவர்களின் முகங்களுக்குக் கொஞ்சம் டால்கம் பவுடர் பூசலானாள். உள்ளங்கையில் கொஞ்சம் பவுடரைக் கொட்டி, அதை அவர்களின் முகங்களில் ஒரே சீராக மென்மையாகத் தடவினாள். என் முகத்திலோ பவுடர் உதடுகளிலும் மோவாயிலும் குழிவிழுந்த கன்னங்களிலும் திட்டுதிட்டாகப் படிந்துகிடந்தது, பிணத்துக்குப் பவுடர் போட்டதுபோலிருந்தது  என் முகம். மரத்து கரடுதட்டிப்போன எனது உள்ளங்கைகளால் பவுடர் பூசிக்கொண்டதால்தான் அப்படி. அவள் கைகள் இப்படியா இருக்கும்?

சோறும் தடியங்காய்க் குழம்பும் சாப்பிட அவள் குழந்தைகளை அழைத்த விதத்தை உற்றுக் கவனித்தேன். உப்புசப்பில்லாத சோற்றுருண்டைகளைப் போலவே அந்த குரலிலும் எந்த உணர்ச்சியுமில்லை! இன்று காலை நான் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போதே வீட்டில் சமைக்க எதுவும் இல்லை என்பதை ஞாபகப்படுத்தினாள். சீக்கிரமே வந்துவிடுவதாகக் கூறிவிட்டுத்தான் கிளம்பினேன். ஆனால் அவள் சொன்னதை ஒரேயடியாக மறந்துவிட்டு வேறு வேலைகளில் மூழ்கிப்போய்விட்டேன். இதோ இப்போதுதான் வீடுதிரும்பியிருக்கிறேன். இந்த தடியங்காயும்கூட எங்கள் வீட்டுக்கூரைமீது படர்ந்திருக்கும் கொடியிலிருந்து பறித்ததுதான். நாங்கள் சத்தம் காட்டாமல் சாப்பிட்டு எழுந்தோம்.

இரு வாலுகளும் படுத்ததும் தூங்கிவிட்டன. அவள் தன் கூந்தலை அவிழ்த்தாள் – உயிருக்குள் ஊடுருவும் வாசனை அவள் கூந்தலுக்கு– அதை அள்ளிக் கொண்டையாக முடிந்துகொண்டு படுக்கத் தயாரானாள். பளீரிடும் சிவப்பு ரவிக்கையின் கீழ்ப் பொத்தான்கள் இரண்டை எடுத்துவிட்டாள். பிரா கொக்கிகளையும் அவிழ்த்தாள். அணிந்திருந்த சேலையை உருவி துணியடுக்கில் வைத்தாள், அதற்குப் பதிலாகக் கருப்புக் கரையிட்ட முண்டு ஒன்றை உள்பாவாடைமீது சுற்றிக்கொண்டாள். மெல்லிய ஈரத்துண்டை தோள்மீது போர்த்திக்கொண்டாள். இவ்வளவும் செய்தபோதும்கூட அவள் என்னைக் கண்டுகொண்டிருக்க வேண்டுமே. இத்தனைக்கும், சேலையை அவள் அவிழ்த்தபோது அவளது பின்புறத்தையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசியாக அவள் முகத்திற்கு ஏதோ எண்ணெய்யைப் பூசிக்கொண்டு நிமிர்ந்தாள். நன்கு பழுத்துச் சிவந்த முகப்பருவொன்று அவள் முகத்தில் மின்னிக்கொண்டிருந்தது.

கட்டிலில் கால்நீட்டிப் படுத்துக்கொண்டேன். அவள் வழக்கமாகக் குழந்தைகளுடன்தான் படுத்துக்கொள்வாள். நீண்டபெருமூச்சுடன் விளக்குகளை அணைத்துவிட்டு அவள் படுக்கைக்குச் செல்வதையே படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அது என் மனதை எவ்வளவு புண்படுத்தியது என்று அவளுக்குத் தெரியாது. நாள்முழுவதும் நான் எங்கெங்கோ அலைந்து திரிவதற்கு அதுதான் காரணம் என்பதும் அவளுக்குத் தெரியாது. அவளோடு சேர்ந்து நானும் அனுபவிக்கும் இந்த நரகவேதனை அவளுக்குத் தெரியாது.

எப்போதும்போல இன்றும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. எப்போதும்போல இன்றும் எனக்குள்ளே பிசாசு அலறியது. படபடப்புடன், சந்தேகத்தோடு, அவமானத்தில் கூனிக்குறுகிப்போய் மெல்ல அவளருகே ஊர்ந்து சென்று அவளைத் தொட்டேன்.

 அடுத்த நொடி ஒரு குண்டுவெடி!

“போ தள்ளி, போயிரு இங்கிருந்து”

மறுவார்த்தை பேசாமல் என் படுக்கைக்கே ஊர்ந்துவந்துவிட்டேன். அவளது இழப்புகளோடும் நசுக்கப்பட்ட ஆசைகளோடும் ஒப்பிடும்போது நான் மீண்டும் ஊர்ந்து படுக்கைக்குத் திரும்பியது ஒரு விஷயமேயில்லை. என்னால் அவளைத் தூண்டியெழுப்பத்தான் முடியும்; மீண்டும் அவளை உறங்கவைக்க முடியாது. எந்தவிதத்தில் பார்த்தாலும் மனப்பொருத்தமேயில்லாத தம்பதியர்;  நாங்கள்தான்.

ஆசிரியர் குறிப்பு:

சாரா ஜோசப்:

மலையாள இலக்கிய உலகின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் சிறுகதை ஆசிரியருமான சாரா ஜோசப் அவர்கள் கேரளத்தின் திரிச்சூரில் 1946ஆம் ஆண்டு பழமைவாதம் மிக்க கிறித்துவக் குடும்பமொன்றில் பிறந்தார். ஆசிரியராகத் தம் பணியைத் துவங்கி பின்னர் பேராசிரியராக உயர்வு பெற்றார். தம் இளம்வயதில் கவிதைகள் புனையத்துவங்கியவர் மெல்ல மெல்ல புனைவுகளையும் சிறுகதைகளையும் நோக்கி தம் எழுத்தை மடைமாற்றிக்கொண்டார். இவரது புனைவுகள் ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், பெண்களின் அகவலிகளையும் காத்திரமாகப் பதிவு செய்கின்றன. சாரா ஜோசப் எழுத்தைத் தவிர சமூக செயற்பாட்டாளராகவும் மக்களிடையே பிரபலமாக விளங்குகின்றார். ஆலாஹாவின் பெண்மக்கள், மட்டாத்தி, ஒதப்பு ஆகியவை இவருடைய மிக முக்கிய புதினங்கள். ஆலாஹாவின் பெண்மக்கள் தமிழில் நிர்மால்யா அவர்களால் மொழிபெயர்ப்பட்டுள்ளது. ”தாம்பத்தியம்” எனும் இச்சிறுகதை சாரா ஜோசப் அவர்களின் “The Masculine of Virgin” எனும் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலை மலையாள மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் மொழிபெயர்ப்பாளர் J.தேவிகா அவர்கள்.

சாரா ஜோசப்

Courtesy: From Masculine of Virgin Stories of Sarah Joseph: Translated and introduced by
J.Devika; Edited by Mini Krishnan; Oxford University Press.

Previous articleஅவக்
Next articleஅற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]
சசிகலா பாபு
உயிர்மை வாயிலாக ”ஓ.ஹென்றியின் இறுதி இலை”, காலச்சுவடு வாயிலாக “மறையத் தொடங்கும் உடல் கிண்ணம்” ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “கல்குதிரை”, “காலச்சுவடு” ஆகிய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. ”பெர்சியாவின் மூன்று இளவரசர்கள் – ரோகிணி சவுத்ரி”, “வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய்”, “பாஜக எப்படி வெல்கிறது – பிரசாந்த் ஜா”, “சூன்யப் புள்ளியில் பெண் – நவல் எல் சாதவி”, “குளிர்மலை – ஹான் ஷான்” ஆகிய இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர் வெளியீடு வாயிலாக வெளியாகியுள்ளன. வாக்குறுதி, அமாவும் பட்டுப்புறாக்களும், சொல்லக் கூடாத உறவுகள் போன்ற மொழிபெயர்ப்பு நாவல்கள் வெளிவந்துள்ளன.

2 COMMENTS

    • அழுக்கு – ஆண் மனங்களின் குறியீடு. சிறப்பு. மொழிபெயர்ப்பு அழகு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.