தவிப்பு


“உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றது, நான் எழுதி முடிக்காத குறுங்கதை. “சரி சொல்!”, என்றேன்.

“நீ என்னை எழுதத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் முடிக்கவில்லை. எப்பொழுது  முடிப்பதாக உத்தேசம்?” என்று கேட்டது.

“நானும் மறக்கவில்லை! மீண்டும் உன்னை எழுத ஆரம்பிக்க தோதான மனநிலையில் நானில்லை. கொஞ்சம் பொறுத்துக்கொள். விரைவில் முடித்து விடுகிறேன்” என்றேன்.

“எனக்குத் தெரியும், இந்த வார்த்தைகளைத் தான் சொல்வாயென்று. உனக்கு இப்பொழுது வாசகர்கள் கூடி விட்டார்கள் என்ற ஆணவம்! முன்பெல்லாம் நீ எழுதும் கதைகளை ஒருவரும் சீண்ட மாட்டார்கள். அந்தநாட்களில் மாய்ந்து, மாய்ந்து எழுதுவாய்.”

“இன்று அப்படியா? நிலைமை மாறிவிட்டதல்லவா? அதிகப்படியான லைக்கும், கமெண்டும், கிடைப்பதால் என்னையெல்லாம் இப்படிக் காக்க வைக்கிறாய்! என்னை எப்படி வேண்டுமென்றாலும் படைத்துவிட முழு அதிகாரம் உனக்கு இருப்பதால், உன் மமதை மேலும் கூடிவிட்டது திமிர் பிடித்தவன்!!”

“இப்படி பாதியில் கைவிடப்பட்ட என் போன்ற கதைகளின் வேதனை ஒரு போதும் எழுத்தாளர்களுக்கு புரியபோவதில்லை! இதற்கு, பேசாமல் என்னை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விடு அல்லது தீயில் எரித்து விடு! இப்படி உயிருள்ள பிணமாய் வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. உன் கற்பனையில் நான் தோன்றியிருக்கவே கூடாது” என்றது கோபமாக.

“உன்னை கிடப்பில் போட்டது என் தவறுதான். ஆனால் நீ மிகையாக கற்பனை செய்து கொள்கிறாய். புரிந்து கொள்!

நீ அச்சில் வரவேண்டிவள்! உனக்கான வார்த்தைகளை நான் சேகரம் செய்து கொண்டிருக்கிறேன்.”

“நீ என் குழந்தை. தெரிந்தே உன்னை ஒருபோதும் குறைகளுடன் பிரசவிக்க மாட்டேன். என்னை நம்பு! மீண்டும் சொல்கிறேன். உன்னை நான் மறக்கவில்லை! பாதியில் தூக்கி எறியும் எண்ணமும் இல்லை. இந்த கொரோனா முடக்க காலத்தில் உலகமே ஸ்தம்பித்து கிடக்கிறது. சில தருணங்களில் எல்லோரையும் போலவே நானும் சோர்ந்து போகிறேன்.”

“எழுத்தாளனுக்கு வார்த்தைகள் வராத காலம், கடலுக்குச் சென்ற கிழட்டு மீனவன் வெறுங் கையுடன் கரை திரும்புவது போல. என்னால் சொற்களை கோர்க்க முடியவில்லை. உணர்வுகளை புகுத்த முடியவில்லை. ஏதோ ‘ரைட்டர் பிளாக்’ என்கிறார்கள். அதுவாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன். உனக்கு நினைவிருக்கிறதா? உன்னை பாதி எழுதி முடிக்க, எனக்கு சொற்ப நேரமே எடுத்தது. திடீர் வெள்ளமாய் கரைபுரண்டு பாய்ந்து வந்தாய், முடிக்கும்நாளில் பாலை நிலமாய் என் கற்பனை வறண்டு போய்விட்டது. மனம்கூடி வரும்வரை கொஞ்சம் பொறுத்துக்கொள்.” என்றேன்.

“நொண்டிச் சாக்கு சொல்லாதே! எனக்குத் தெரியும் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நீ இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அதிகமாக எழுதினாய்! அதைவிட அதிகமாக வாசித்தாய்! துவண்டு போயிருந்தவர்களுக்கு உன் எழுத்தால் நம்பிக்கை ஊட்டினாய்! என்னை எழுதத் தொடங்கியப் பிறகு மட்டும் பாதியில் நிறுத்திவிட்டாய்.”

“அதையெல்லாம் விடு, நீ இன்று கூட எனக்குப் பிறகு எழுதத் தொடங்கிய ஓர் குறுங்கதையை முடித்து முகபுத்தகத்தில் பதிவிட்டாய். கருமம்! அதுவெல்லாம் ஒரு கதையா? எனக்கு அவளை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் என்னை எழுதி முடிக்க மட்டும் உனக்கு

தோன்றவில்லை. கேட்டால், ஆயிரம் வெற்றுக் காரணங்களை அடுக்குகிறாய்.”

“இதை உன்னிடம் எதிர்பார்த்தேன், பாவம்! அவசரத்தில் பிறந்தவள்தான். இருந்தாலும் அவள் பாணியில் அவள் அழகு! இப்பொழுது நான் உன்னிடம் சொல்வதை அவளுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்துக்கொள். உன்னை மீண்டும் தொடங்க ஒரு உத்வேகம் வேண்டும் அதனால் தான் அவளை முதலில் எழுதி முடித்துப் பதிவிட்டேன்” என்றேன்.

ஏதோ புரிந்துகொண்டவள் போல அமைதியானாள். ஒருவேளை என் மேலிருந்த கோபம் கொஞ்சம் தணிந்திருக்கக் கூடும்.

சிறிது நேரம் நிசப்தம் நிலவியது. பிறகு மீண்டும் அமைதியாக தன் காகிதப் பக்கத்தில் உறங்க ஆரம்பித்தாள்.


  • நரேஷ்

6 COMMENTS

  1. வித்தியாசமான கண்ணோட்டத்தில் மிக அருமையான ஒரு முயற்சி.. கதை கதையைப்பற்றிக் கதாசிரியருடன் உரையாடுகின்ற இடங்களில் – வாழ்வில் பிற சந்தர்ப்பங்களுக்கும் ஏற்புடைய – பெரிதாக வெளித்தெரியாத/ பேசப்படாத, அனுபவித்து மட்டுமே அறியக் கூடிய உணர்வுகளை அழகுற வடித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

    பயணம் நெடிது நீளவும், சிகரங்கள் தொடவும் நிறைவான வாழ்த்துகள் சகோதரா!

    • கதையை உணர்ந்து வாசித்துள்ளீர்கள். ஓர் கதை அதற்கான வாசகர்களை சென்றடையும் போதுதான் நிறைவு பெறுகிறது. அந்த வகையில் உங்கள் பின்னுட்டம் விசேஷமானது ! மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் அன்பும், ஆதரவும் தேவை சகோதரி

  2. வித்தியாசமாக இருக்கிறது நரேஷ் .இன்னும் எதிர்பார்க்கின்றேன் 💚

    • மிக்க நன்றி நர்மி ! மேலும் மாறுப்பட்ட முயற்சிகள் வரும். தொடர்ந்து அன்பும் ஆதரவு தேவை

    • ஆரம்பமே அசத்தல். கேள்வியும் பதிலுமாக ஆர்வத்துடன் படிக்க தூண்டும் எழுத்து நடையும் சொற்களும் இறுதியில் வாசித்தவர்களை ஒரு தவிப்போடு முடித்திருக்கும் கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

      • /ம.மீனாட்சிசுந்தரம் /
        மிக்க நன்றி, உங்களின் வாழ்த்து என்னை பூரிப்படைய செய்து விட்டது! இதே அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து தாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.