கடைசி புகைப்பிடிப்பாளன்


விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது கடைசி சிகரெட்டை விரைவில் மகிழ்ச்சியுடன் புகைப்பேன். பூமியில் தனித்திருக்கும் கடைசி புகைப்பிடிப்பாளனாக என்னை ஆக்கிவிட்டு, எனது சகா ஓவியர் குசகாபே சற்றுமுன் மரணத்தைத் தழுவினார். இந்தத் தருணத்தில், இரவு வானத்தினூடாக தேடல் விளக்குகள் மூலம் எடுக்கப்படும் எனது புகைப்படங்கள், அநேகமாக உலங்கூர்திகளிலிருக்கும் தொலைக்காட்சிக் காமிராக்கள் மூலம் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கலாம். என்னிடம் மூன்று பாக்கெட் சிகரெட்டுகள் மீதமிருக்கின்றன. அவற்றைத் தீர்க்காமல், சாவதற்கு எனக்கு விருப்பமில்லை. எனவே ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று என்று தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறேன். எனது தலை மரத்துப் போனது போலத் தோன்றுகிறது, எனது கண்கள் சுழலத் துவங்குகின்றன. இன்னும் சிறிது நேரம்தான், அதன் பின் நானும் உயிரற்றுக் கீழே தரையில் விழுந்துவிடுவேன்.

புகைப்பதற்கு எதிரான இயக்கம் துவங்கி, சுமார் பதினைந்து, பதினாறு ஆண்டுகள் இருக்கும். ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன் புகைப்பவர்களுக்கான அழுத்தம் தீவிரமடையத் துவங்கியது. இவ்வளவு குறுகிய காலத்தில், உலகின் கடைசி புகைப்பிடிப்பாளனாக நான் தனித்துவிடப்படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் துவக்கத்திலிருந்தே அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பரவலாக அறியப்பட்ட எழுத்தாளராகிய நான் பெரும்பான்மையான நேரம் வீட்டிலிருந்தபடியே எழுதிக் கொண்டிருப்பேன். ஆதலால், சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பார்க்கவோ, உணரவோ வெகு சில சந்தர்ப்பங்களே அமைந்தன. செய்தித்தாள்களில் செய்தி வெளியிடும் பாணி எனக்கு அருவெறுப்பாகத் தோன்றியதால், நான் அவற்றையும் வாசிப்பதில்லை – அவை எனக்கு இறந்த மீன்களையே நினைவுபடுத்துகின்றன. நான் ஒரு சிறுநகர மாகாணத்தில் வசித்துவந்தேன். எனவே தேவையேற்படும் போது எனது பதிப்பாளர்கள் என்னைத் தேடி வந்து சந்திப்பார்கள். நான் இலக்கிய வட்டங்களை வெறுக்கும் நோக்குடையவன் ஆதலால், தலைநகரத்திற்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதே இல்லை.

புகைப்பதற்கு எதிராகச் செயல்படும் கூட்டம் பற்றி எனக்குத் தெரியும். பத்திரிகைகளிலோ வேறு எதிலுமோ, அறிஞர்கள் தங்களது ஆதரவுக் கருத்தையோ, எதிர்ப்புக் கருத்தையோ எழுதியபடி இருப்பார்கள். விவாதத்தில் இரு தரப்பினரின் தொனியும் படிப்படியாக அதீதமாகிச் சென்றதையும் நான் அறிவேன். ஒரு கட்டத்தில், புகை எதிர்ப்புக்கு ஆதரவான கூட்டம் திடீர் வளர்ச்சியடையவும், எதிர்த்தரப்பு குறுகிய காலத்தில் மறைந்துவிடவும் செய்தன.

நான் வீட்டிலேயே இருந்துவந்ததால், இவற்றிலிருந்து எல்லாம் முற்றிலும் விலகியிருந்தேன். எனது வளரிளம் பருவத்திலிருந்து ஒரு போதும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக புகைப்பவனாகவே நான் இருந்து வந்தேன். ஆனாலும், ஒருவரும் எனக்கு அறிவுரை கூறியதோ, என்மீது புகார் கூறியதோ இல்லை. என் மனைவியும், மகனும் அமைதியாக அதனை ஏற்றுக்கொள்ளப் பழகியிருந்தனர். நான் இலக்கியப் பணிகள் ஆற்றுவதற்கும், நவீன எழுத்தாளராக வருமானம் ஈட்டுவதற்கும் கட்டுக்கட்டாக சிகரெட்டுகள் ஊதுவது முற்றிலும் அத்தியாவசியமான தேவை என்று ஒருவேளை அவர்கள் உணர்ந்திருக்கலாம். ஒரு வேளை நான் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுபவனாக இருந்திருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். சில காலத்திற்கு முன்பாகவே, புகைப்பிடிப்பாளர்கள் தங்கள் பதவி உயர்வை இழக்கத் துவங்கியிருந்தார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு நாள், சிறார் பத்திரிகையின் பதிப்பாளர்கள் இருவர் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கும் பொருட்டு என் வீட்டுக்கு வந்தனர். நான் அவர்களை வரவேற்பறையில் அமர வைத்தேன். வந்தவர்களில் இருபத்தி ஏழு அல்லது இருபத்தி எட்டு வயதுள்ள பெண், என்னிடம் “புகை பிடிக்காததற்கு நன்றி” என்று அழுத்தமாகத் தலைப்பிட்ட ஒரு அலுவல் அட்டையை நீட்டினாள்.

உண்மையில், அந்த சமயத்தில் அது ஒரு வித்தியாசமான செயல் அல்ல. நிறைய பெண்கள், புகைப்பதற்கு எதிரான உணர்வுகளை தங்கள் பெயர் அட்டையில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் எனக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே நான் அடைந்த எரிச்சலை உங்களால் யூகிக்க முடியுமென நினைக்கிறேன். அவள் நிலையிலிருக்கும் எந்தவொரு இதழின் பதிப்பாளருக்கும், என்னைப் போன்ற ஒரு நவீன எழுத்தாளர் நிச்சயம் தீவிரமாக புகைப்பவராகவே இருப்பார் என்று தெரிந்திருக்கும். அப்படி தெரியவில்லை என்றாலும் கூட, புகைப்பவராக இருக்கக் கூடிய ஒருவரிடம் அப்படி ஒரு பெயர் அட்டையை நீட்டும் போது, அதுவும் ஒருவரிடம் தனக்காக ஒரு வேலையைச் செய்யும்படி கேட்டு வரும் போது, அது முற்றிலும் தவறானதாகவே தோன்றும் – அவர் உண்மையில் புகைப்பிடிப்பாளராக இல்லாமல் இருந்தால் கூட அவ்வாறே தோன்றும்.

நான் வேகமாக எழுந்தேன்.

“மன்னிக்கவும், என்னால் உங்கள் நன்றியை ஏற்றுக்கொள்ள இயலாது,”  நான் கடுமையான குரலில் கூறினேன். ”நான் இடைவிடாமல் புகைப்பிடிப்பவன். சிகரெட் கையில் இல்லாமல் என்னால் ஒரு வேலை தொடர்பாக கலந்தாலோசிப்பது பற்றி கற்பனைகூட செய்ய முடியாது. ஆனாலும், இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்ததற்காக நன்றி!”

அவள் தன் புருவங்களை சுழித்து உயர்த்தினாள். அவளது சகபணியாளரான இளைஞன் வேகமாக எழுந்து, பணிவான பாவனையில் என்னிடம் கூறினான், “தயவுசெய்து கோபம் கொள்ளாதீர்கள். இது ஒரு மாதிரியான… உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன்…”. நான் அறையை விட்டு வெளியேறுகையில் அவனும் பின் தொடர்ந்தான். சிறிது நேரத்தில், அவர்கள் இருவரும் தங்களுக்குள் வாதிட்டபடி கிளம்பிச் சென்றனர்.

எனது அதீத எதிர்வினையை நினைத்து நானே திகைப்படைந்தேன். அவர்கள் டோக்கியோவிலிருந்து நான்கு மணி நேரம் பயணம் செய்து என்னைக் காண வந்திருந்தனர். நான் விரும்பியிருந்தால், சுமார் ஒரு மணி நேரம் சிகரெட் புகைக்காமல் அவர்களிடம் பேசியிருக்கவும் முடியும். ஆனால், நான் ஏன் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? அவர்கள் என்ன, சிறிது புகையை சுவாசித்தால் உடனே இறந்துபோகும் மாயக் குழந்தைகளா என்ன? புகைப்பிடிக்காமல் அவர்களுடன் பேசுவதற்கு நான் சம்மதித்திருந்தால், சற்று நேரத்தில் எனக்கு எரிச்சல் அதிகமாகி, அவர்களுடன் சச்சரவில் போய் முடிந்திருக்கவும் வாய்ப்பிருந்தது. ஒப்பிட்டளவில் இது எவ்வளவோ பரவாயில்லை என்று எனது செயலுக்கு நானே நியாயம் சேர்த்துக்கொண்டேன்.

எனது துரதிர்ஷ்டம், அந்த பெண் பதிப்பாளர் புகைப்பதற்கு எதிரான இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக இருந்திருக்கிறாள். அந்த நிகழ்வினால் மிகவும் கோபமுற்ற அவள், என்னைப் பற்றி விஷமத்தனமான அவதூறுகளை அவளது பத்திரிகையிலும், மற்ற பதிப்பக இதழ்களிலும் எழுதத் துவங்கினாள். அதோடு நிற்காமல், புகைப்பிடிக்கும் அனைவரின் மீதும் வெறுப்பை உமிழ்ந்திருந்தாள். புகைப்பவர்கள் அனைவரும் அறிவற்ற, முரட்டுப் பிடிவாதமுடைவர்கள், கொடூரமான மூர்க்கத்தனமுடையவர்கள், தலைக்கனம் கொண்ட ஆணவமுடையவர்கள், வெறித்தனம் கொண்ட சுயநலவாதிகள், வீறாப்பு மிக்க கொடுங்கோலன்கள் என்று அவள் எழுதி வந்தாள். புகைப்பவர்களுடன் பணியாற்றுவது ஆபத்து நிறைந்ததும், கடினமானதுமாகும். அத்தகைய பணிகள் தோல்வியிலேயே முடியும். ஆகவே, புகைப்பவர்கள் எல்லாப் பணியிடங்களில் இருந்தும் விரட்டப்பட வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள இந்த எழுத்தாளரின் படைப்புகளை வாசிப்பது உகந்ததல்ல. இவரின் புகைக்கும் பழக்கம் காரணமாக, வாசகனும் கெட்டுப்போய்விட வாய்ப்பிருக்கிறது. புகைப்பவர் அனைவருமே முட்டாள்கள், புகைப்பவர்கள் அனைவருமே மன நோயாளிகள் என்பது அவளது வாதமாக இருந்தது.

அதற்கு மேல், என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவள் என்னை மட்டும் குறிவைத்துத் தாக்கியிருந்தாலும் பரவாயில்லை, அவள் புகைப்பவர்கள் அனைவரையும் அவமானப்படுத்துகிறாள். ஆகவே, ஒரு சரியான பதிலுரையை அளிக்க வேண்டும் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போது, நான் வழக்கமாகக் கட்டுரை எழுதும் ‘உண்மையின் வதந்திகள்’ இதழின் தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. புதிதாக அதிகாரம் பெற்றிருக்கும், புகைப்பதற்கு எதிரான கும்பலின் அழுத்தத்திற்கு நான் பணிந்துபோய் விடக்கூடாது என்றும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நான் உடனே, அந்த இதழுக்கான அடுத்த கட்டுரையை எழுதினேன். அதில் கீழ்க்காணும் வரிகள் இடம் பெற்றன:

”புகைப்பவர்களுக்கு எதிரான பாகுபாடு புதிய எல்லைகளைத் தொட்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது. இது புகைப்பிடிக்காதவர்களின் வீம்பு மற்றும் மேம்போக்கான எண்ணம் ஆகியவற்றின் கலவையினால் உண்டாகிறது. புகைப்பதற்கு எதிரான கருத்தாளர்களுக்கு இது குறித்துப் போதுமான புரிதல் இல்லை. ஏனென்றால் அவர்களுக்குப் புகைக்கும் பழக்கமில்லை. சிகரெட் புகைப்பதால் வாய்ப்புற்று குணமாகிறது. புகையிலை நரம்பு அழற்சியைத் தணிக்கிறது. புகைப்பிடிக்காதவர்கள் ஆரோக்யமாகவும், உறுதியான உடல் கட்டமைப்போடும் இருக்கிறார்கள் என்பது ஒத்துக்கொள்ளக் கூடியதுதான். அதற்குக் காரணம் அவர்களில் பலர் விளையாட்டுகளில் பங்குகொள்கின்றனர். ஆனால் அவர்கள் காரணமின்றி சிரிக்கக் கூடியவர்கள். அவர்கள் எது குறித்தும் தீவிரமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள். அவர்களால் சுவாரஸ்யமாகப் பேச இயலாது. அவர்களது உரையாடல் ஆழமற்றவை, பேசும் விஷயங்கள் சாரமற்றவை. அவர்களது சிந்தனை குவியமற்றும், தெளிவற்றும் இருக்கும். அவர்கள் திடீரென்று இலக்கற்று பேசக் கூடியவர்கள். அவர்களால் ஒரு விஷயத்தை பல்வேறு அடுக்குகளில் விவாதிக்க முடியாது. அவர்களது தர்க்கம் தூண்டக் கூடியதாக அன்றி ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும். அவர்கள் கூறும் விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும், அதே நேரம் அவர்கள் மிக சலித்துப் போன தீர்மானத்திற்கு விரைவாக உடன்படுகிறவர்களாகவும் உள்ளனர். விளையாட்டை எடுத்துக் கொண்டால், அவர்கள் நீண்ட நேரம் உற்சாகமாகச் செயல்படுகின்றனர். ஆனால் எங்களுக்கு அதில் பெரிய ஆர்வமில்லை. ஆனால் தத்துவம் அல்லது இலக்கியம் சார்ந்த உரையாடல் என்றால் அவர்கள் தூங்கி வழிகின்றனர். பழங்காலத்தில், தீவிரமான ஆலோசனைக் கூட்டங்களில் எல்லாம் அடர்த்தியான சிகரெட் புகையே மறைத்திருக்கும். ஆனால் இப்போது ஆலோசனைக் கூடங்கள், காற்று மாசுநீக்கிகள், இயனி மின்னாக்கிகள் போன்றவற்றால் சுத்திகரிக்கப்படுகின்றன. இதன் பொருள், நாம் நல்ல சாவகாசமான மனநிலையில் ஆலோசனை நடத்துகிறோம் என்பதா? எல்லாம் எதிர்மறை செயல். இப்போது ஆலோசனைக் கூட்டங்கள், துவங்குவதற்கு முன்பே முடிந்துவிடுகின்றன அல்லது அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் கிளம்பிச் செல்லும் அவசரத்திலேயே இருக்கின்றனர். புகைப்பிடிக்காதவ்ர்களால் நீண்ட, ஆழமான, கடினமான விவாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்ல நினைத்த விஷயத்தை சொல்லி முடித்தவுடன் அல்லது வந்த வேலை முடிந்தவுடன், அவர்கள் எழுந்து சென்றுவிடுகின்றனர். அவர்கள் சற்று நேரம் பொறுமை காக்க முடியாது. யாராவது அவர்களைத் தடுத்து நிறுத்தினால், அவர்கள் பொறுமையிழந்து தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி இருப்பர். ஆனால் அவர்கள் கோபமடைந்தால், தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருப்பர். அது மட்டுமல்ல, அவர்கள் ஆணோ, பெண்ணோ – அனைவரும் உடலிச்சை பித்துப்பிடித்தவர்களாகவே இருப்பர். உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்தச் செலுத்த, அவர்கள் தங்கள் மூளையை உபயோகிக்க மறந்துவிடுகின்றனர். பாவம், உடல் நலத்திற்காக மூளையைப் பணயம் வைக்கின்றனர். அதாவது, அவர்கள் அறிவாற்றல் குறைந்தவர்களாகி விடுகின்றனர். தலைக்குள் வெற்றிடத்தை வைத்துக்கொண்டு, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து என்ன பயன்? பெருங்கூட்டமாய் இருக்கும் முட்டாள் முதியவர்கள், எண்ணிக்கையில் குறைவாய் இருக்கும் இளைஞர்களுக்குப் பாரமாகி விடுவர். அவர்கள் நூறு வயது வரை, கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கப் போகிறார்களா என்ன? புகையிலை, உண்மையில் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு. அது மனிதர்களுக்கு ஆழ்ந்த உணர்வுகளைத் தருகிறது. அப்படியிருந்தும், இன்று செய்தியாளர்கள்கூட, புகைக்கு எதிரான அலைவரிசைக்குத் தாவிக் குதித்துக் கொண்டிருக்கின்றனர். இதை எல்லாம் என்ன சொல்ல! செய்தித்தாள் பதிப்பிக்கும் அறைகள் புகையிலைப் புகையின் இருண்ட மேகங்களால் சூழப்பட்டிருக்க வேண்டாமா? இப்போதெல்லாம் செய்தித்தாள்கள் ஏன் சுவாரஸ்யமற்று இருக்கின்றன? – காரணம், செய்தி பதிப்பிக்கும் அறைகள் அதீத சுத்தமாக இருப்பதால் தான்!”

இந்த கட்டுரை பதிப்பிக்கப்பட்டவுடன், ஓர் எதிர்ப்பு அலையை உருவாக்கியது. ஆம், புகை பிடிக்காதவர்களிடமிருந்துதான். ஆனால் அந்த எதிர்ப்பில் புதிதாக ஒன்றுமில்லை. இந்த எழுத்தாளர் எழுதியதில் “புகைப்பிடிக்காதவர்கள்” என்ற வார்த்தைக்குப் பதிலாக “புகைப்பவர்கள்” என்று மட்டும் மாற்றி என்னுடைய கருத்தாக ஏற்றுக்கொள்ளலாம் – என்பது போன்று சில முட்டாள்\தனமான எதிர்வினைகளும் வந்தன. புகைப்பிடிக்காதவர்களின் கருத்துக்களை வெளியிட எந்த நியாயமான காரணங்களும் இல்லை என்றாலும், அந்த எதிர்வினைகளும் ‘உண்மையின் வதந்திகள்’ இதழில்  முறையாக வெளியாயின.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, எனக்கு விஷமத்தனமான தொலைபேசி அழைப்புகளும், வெறுப்பு நிறைந்த அஞ்சல்களும் வரத் துவங்கின. “நீ இளமையில் சாக விரும்புகிறாயா, முட்டாளே!” என்பன போன்ற வார்த்தைகளைக் கொண்ட வசவு அழைப்புகள் வந்தன. கடிதங்களும் இவை போன்றே இருந்தன. சில நேரங்களில் அவை நகைப்பூட்டுவதாக இருக்கும் – உதாரணமாக ஓர் அஞ்சலில், ஒரு தார் உருண்டை அனுப்பப்பட்டு, “இதைத் தின்றுவிட்டு, செத்துவிடு!” என்ற குறிப்பும் வந்திருந்தது.

விரைவில், சிகரெட் விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களிலும் முற்றாகத் தடை செய்யப்பட்டன. மந்தையைத் தொடரும் மக்களின் மனப்பான்மை பிரதானமாகியது, புகைப்பிடிப்பவர்களுக்கு எதிரான பாகுபாடு மிக வெளிப்படையாக வளரத் துவங்கியது. நான் பெரும்பான்மையான நேரம், வீட்டிலிருந்தபடியே எழுதி வந்தாலும், புத்தகங்கள் வாங்குவது போன்ற ஏதாவது வேலைக்கு எப்போதாவது வெளியே செல்வதுண்டு. அப்படி ஒரு சமயத்தில், அருகிலுள்ள பூங்காவில் “நாய்களுக்கும் புகைப்பவர்களுக்கும் அனுமதி இல்லை” என்ற வாசகத்தைப் பார்த்தவுடன் எனக்குக் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது.

ஆக, நாங்கள் இப்போது நாயை விட எந்தவிதத்திலும் மேம்பட்டவர்கள் அல்ல. அதைப் பார்த்தவுடன் எனது எதிர்ப்புணர்வு அதிகமானது. அதனை அப்படியேவிட எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. இத்தகைய ஒடுக்குமுறைக்கு நான் பணிந்து செல்வதா? நான் மனிதன் இல்லையா?

ஒரு பல்பொருள் அங்காடியின் விற்பனைப் பிரதிநிதி மாதம் ஒரு முறை, பத்து அடுக்குகள் சிகரெட் கொண்டு வந்து என் வீட்டில் கொடுத்து வந்தான். அது அமெரிக்கத் தயாரிப்பான ’மோர்’ தரவகையைச் சேர்ந்தது. நான் ஒரு நாளைக்கு சுமார் அறுபது அல்லது எழுபது சிகரெட்டுகள் புகைப்பேன். ஆனால், சில நாட்களில் வெளிநாட்டு சிகரெட்டுகளின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. தடைக்கு முன், நான் இருநூறு அடுக்குகள் கையிருப்பு வைத்துக்கொண்டேன். விரைவில் அவை அனைத்தும் காலியாகின. பிறகு நான் உள்ளூர் தயாரிப்புகளைப் புகைக்க வேண்டியதாயிற்று.

ஒரு நாள் இலக்கிய நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் பொருட்டு, நான்  டோக்கியோவிற்குச் செல்ல வேண்டி இருந்தது. நான் சில ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் பதிப்பகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு அது. நான் என் மனைவியிடம் ரயிலில் முன்பதிவு செய்யச் சொல்லி இருந்தேன்.

”புகைப்பிடிக்கும் வசதி கொண்ட இருக்கைகளுக்கான கட்டணம் 20 சதவீதம் கூடிவிட்டன” என்று கூறியபடி என் மனைவி டிக்கெட்டை என்னிடம் கொடுத்தாள். அதோடு, “அதுவும் புகைக்கும் வசதி ஒரே ஒரு ரயிலில் மட்டுமே இருக்கிறது. டிக்கெட் விற்பனையாளர் என்னை ஏதோ காட்டு விலங்கைப் பார்ப்பது போல பார்ததபடி டிக்கெட்டை முன்பதிவு செய்து தந்தார்” என்றாள்.

அந்த புகைக்கும் வசதி கொண்ட ரயிலில் நுழைந்ததும் எனக்குப் பயங்கர திகிலாக இருந்தது. இருக்கையில் உடைந்துபோய் இருந்தன, ஜன்னல்கள் அழுக்குப் படிந்திருந்தன. சில அதிக அளவில் விரிசல்விட்டுப் போய், ஒட்டு நாடாக்களால் ஆங்காங்கே ஒட்ட வைக்கப்பட்டிருந்தன. தரை முழுவதும் குப்பைக்கூளங்கள் சிதறிக் கிடந்தன. கூரைப்பகுதியில் சிலந்தி வலைகள் அடர்ந்திருந்தன. அசுத்தம் மிகுந்த அந்த வண்டியில், வெறுப்பான பாவனையில் ஏழெட்டு புகைப்பிடிப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். கிரெய்க்கின் பியானோ இசைக் கோப்பின் தெளிவில்லாத ஒலி, ஒலிப்பெருக்கி வழியாக கசிந்து வந்தது. இருக்கைகளுக்குப் பக்கவாட்டில் இருந்த சாம்பற் படிக்கங்கள் முழுவதும் சிகரெட் துண்டிகள் நிறைந்திருந்தன. அவை சமீபத்தில் சுத்தம் செய்யப்பட்டதற்கான அறிகுறியே தென்படவில்லை. ரயில் பெட்டியின் முடிவில் இருந்த கதவுகளில் “அடுத்த பெட்டிகளுக்கு செல்ல முடியாது” என்று குறிப்பிட்டு இருந்தது. பெட்டியின் பின்புறம் சிறு துவாரமிட்ட ஒரு கொப்பறை இருந்தது. அதுதான் கழிவறை. துவாரம் வழியாகப் பார்த்தால், மனிதக் கழிவுகள் எல்லாம் தென்பட்டன. கழிவுத் தொட்டியில் குழாய்களே இல்லை – கையால் இயக்கப்படும் நீர் உந்தியும், சுவரில் சங்கிலியால் மாட்டப்பட்ட தகரக் குவளை மட்டுமே இருந்தன.

எனக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டு, அடுத்த நிலையத்தில் இறங்கிவிட முடிவு செய்தேன். அங்கிருந்து, ஒரு வாடகையூர்தி எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். போகும் போதே இவ்வளவு மோசமான அனுபவம் என்றால், அங்கே நிகழ்வின் போதோ, தங்கும் விடுதியிலோ என்னென்ன நிகழுமோ யார் கண்டார்?

விரைவில், நகர புகையிலை வணிகர்கள் தாங்கள் விற்று வந்த வாடிக்கையாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர். எனது உள்ளூர் விற்பனையாளர்கள் ஒவ்வொருவராக அத்தொழிலை விட்டு விலகிச் சென்றனர். நான் நீண்ட தூரம் நடந்து சென்று சிகரெட் வாங்கி வரும் நிலை ஏற்பட்டது. இறுதியில், எனது சுற்று வட்டாரத்தில் ஒரே ஒரு புகையிலை வணிகர் மட்டுமே எஞ்சி இருந்தார்.

”நீங்களும் தொழிலை விட்டுவிடுவதாக தயவு செய்து கூறிவிடாதீர்கள்!” நான் அந்த கடைக்கார முதியவரிடம் கெஞ்சினேன். அதோடு, “ஒரு வேளை விடுவதாக இருந்தாலும், உங்களிடமிருக்கும் மீதி இருப்பு அனைத்தையும் என் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்து விடுவீர்களா?” என்றும் கேட்டேன்.

அவ்வாறுதான் நிகழ்ந்தது, அதுவும் அன்றைய இரவே. “நான் தொழிலை விட்டுவிடுகிறேன்”, என்று மீதியிருந்த கட்டுகளை என்னிடம் கொடுத்தபடி அவர் கூறினார். அப்படியொரு சந்தர்ப்பத்திற்காகவே அவர் காத்திருந்திருப்பார் போல. நான் அவ்வாறு கூறிவிட்டு வந்ததும், அந்த வாய்ப்பை வீணடிக்க விரும்பாமல் அவரது கையிருப்பை என்னிடம் கொடுத்துவிட்டுக் கடையை மூடிவிட்டார்.

புகைப்பவர்களுக்கு எதிரான பாகுபாடு இன்னும் தீவிரமடைந்தது. மற்ற நாடுகளில் எல்லாம், புகைப்பது ஏற்கனவே முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுவிட்டது. வழக்கம் போல, நாம் ஜப்பானியர்கள் அதிலும் பின்தங்கியே இருக்கிறோம். இன்னமும் சிகரெட்டுகள் விற்கப்பட்டுக்கொண்டும், மக்கள் புகைத்தபடியும் இருந்தனர். புகைப்பிடிக்காதவர்கள் இதனை தேசிய அவமானமாகக்  கருதியபடி, புகைப்பவர்களை மனிதனைவிடக் கீழானவர்களாக நடத்தத் துவங்கினர்.  தெருக்களில் வெளிப்படையாகப் புகைப்பவர்கள், அடித்து விரட்டப்பட்டனர்.

மனித ஆன்மாவின் மேன்மையானது, இத்தகைய கிறுக்குத்தனங்கள் கை மீறிப் போவதை எப்போதும் தடுக்கும் என்று ஒரு கோட்பாடு உண்டு. ஆனால் எனக்கு அதில் மாற்றுக் கருத்துண்டு. “கை மீறப்போவது” என்பதற்கான சரியான வரையறை ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவதுண்டு. ஆனால், மனித இனத்தின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால், இத்தகைய கிறுக்குத்தனங்கள் பலவிதமான வெறிச்செயல்கள் அல்லது கூட்டுக் கொலைகள் போன்ற தீவிரவாத செயல்களுக்கே இட்டுச் சென்றிருக்கின்றன என்று எண்ணிலடங்கா எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும்.

புகைப்பவர்களுக்கு எதிரான பாகுபாடு விரைவில், சூனிய வேட்டை அளவிற்குச் சென்றது. அத்தகைய பாகுபாடு காட்டுபவர்கள் தங்கள் செயல்கள் கிறுக்குத்தனமானவை என்பதை உணரவில்லை ஆதலால் அதனைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. மதம், நீதி அல்லது “சரிநிலை” என்ற பெருமிதப் போக்குகளின் பெயரால் நிகழ்த்தப்படும் தீவிரவாதம் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு சிறிதும் குறைவானதல்ல. நவீன மதமான “ஆரோக்கியம்” என்ற பெயரிலும், நீதி, சரிநிலை என்ற பதாகைகளின் துணைகொண்டும், புகைப்பவர்கள் மீதான வன்மம், கொலை செய்யும் அளவிற்குத் தீவிரமானது. தொடர் புகைப்பிடிப்பாளரான பிரபலம் ஒருவர், கடையில் பொருட்கள் வாங்குவதற்கு வந்த பதினேழு அல்லது பதினெட்டு வெறித்தனம் மிகுந்த  குடும்பத் தலைவிகள் மற்றும் இரண்டு காவலர்களால் தெருவில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார். தொடர் வேண்டுதல்களுக்குப் பிறகும் அவர் புகைப்பதை நிறுத்தவில்லையாம். அவர் இறக்கும்போது, தோட்டாக்கள் மற்றும் சமையல் கத்திகள் மூலம் துளைகளிடப்பட்ட அவரது உடலில் இருந்து நிகோட்டினும், தாரும் பீய்ச்சியடித்ததாகக் கூறப்பட்டது.

நிலநடுக்கத்தின் மூலம், டோக்கியோவின் மக்கள் தொகை அடர்ந்த பகுதி ஒன்றில் தீப்பற்றியபோது, அது புகைப்பிடிப்பாளர்களின் திட்டமிட்ட சதி என்ற வதந்தி பரவியது. எனவே சாலைகளில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, தப்பிக்க முனைபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மூச்சுவிட சிரமப்படுபவர்களாக இருந்தால், புகைப்பிடிப்பாளர்கள் என்று அனுமானிக்கப்பட்டு, அந்த இடத்திலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டனர். அடிமனதில் குற்றவுணர்வின் சிறு நிழல் தோன்றினாலும், பாகுபாட்டாளர்கள் வெறிகொண்டு தண்டனை வழங்கத் துவங்கினர்.

தேசிய புகையிலை நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டு, நிர்ப்பந்தத்தால் மூடப்பட்டதும், புகைப்பிடிப்பாளர்களுக்கான இருண்ட காலம் துவங்கியது. தேசிய புகைப்பதற்கெதிரான முன்னணி என்று தங்களை அழைத்துக்கொண்டோர், இரவு நேரங்களில் தங்களின் முகங்களை வெள்ளை நிற முக்கோண முகக் கவசத்தால் பாதி மூடியபடி, ஒளிக்கம்பங்களை சுழற்றிக் கொண்டு தெருக்களில் வலம் வருவர். அவர்கள் மிச்சமிருந்த வெகு சில புகையிலைக் கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

மறுபுறம் நானோ, நவீன எழுத்தாளர் என்ற தனிச்சலுகையைப் பயன்படுத்தி, எனது பதிப்பாளர்களை எனக்காக சிகரெட் வாங்கி வர அறிவுறுத்தினேன். அதன்படி நான் முன்பைப் போலவே தாராளமாக புகைத்தபடி இருந்தேன். “எனது சம்பளத்தை சிகரெட்டுகளாகக் கொடுத்துவிடுங்கள். புகை இல்லையென்றால், கட்டுரைகள் இல்லை” என்று கறாராகக் கூறினேன்.

பாவம் அவர்கள், குறுக்கும் நெடுக்குமாகத் தேடியலைந்து தொலைதூரக் கிராமங்களிலோ அல்லது நிழல் உலக புகையிலை வணிகர்கள் வியாபாரம் செய்யும் கள்ளச் சந்தையிலோ இரகசியமாக விற்கப்படும் சிகரெட்டுகளை வாங்கிவந்து, எனது படைப்புக்கான காணிக்கையாகச் செலுத்துவார்கள்.

அவ்வாறு புகைப்பது நான் மட்டுமே அல்ல. சில கீழ்த்தரமான பத்திரிகையாளர்கள் இன்னும் புகைத்துக் கொண்டிருந்த சில பிரபலங்களைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகளை அவ்வப்போது வெளியிடுவார்கள். அத்தகைய கட்டுரைகளில், என்னைப் போல, புகைப்பிடிப்பாளன் என்று தன்னைப் பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொண்டு, வெளிப்படையாகப் புகைக்கும் பழக்கும் கொண்ட நூறு மனிதர்களின் பட்டியல் இடம் பெற்றிருக்கும்.

“மூர்க்க குணமுடைய இந்த முட்டாள்களில் யார் கடைசி புகைப்பிடிப்பாளராக நீடித்திருப்பர்?” என்றுதான் அதற்குத் தலைப்பிட்டிருப்பார்கள்.

அதன் விளைவாக, வீட்டிலிருந்தாலும்கூட எனக்குத் தொடர் அபாயம் இருந்து வந்தது. என் வீட்டு ஜன்னல்களில் கற்கள் எறியப்பட்டன, சந்தேகிக்கும்படியாக, என் வீட்டுச் சுவரைச் சுற்றி, புதர்களில் இங்கும் அங்கும் நெருப்பு எரியூட்டப்படும். எத்தனை முறை அழித்தாலும், மீண்டும் மீண்டும் என் வீட்டுச் சுவர்களில் பல வண்ண வாசகங்கள் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கும்.

“புகைப்பிடிப்பாளன் இங்கே வசிக்கிறான்”

“நிகோட்டின் விஷத்தால் செத்துப் போவாய்!”

“தேசத் துரோகியின் இல்லம்”

இழிவுபடுத்தும்படியான தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும் தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தன, பெரும்பான்மையானவற்றில் வெளிப்படையான மிரட்டல்களே இருந்தன. ஒரு கட்டத்தில், என் மனைவியால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவள் எங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு அவளது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

”யார் கடைசி புகைப்பிடிப்பாளன்?” என்ற தலைப்பிட்ட கட்டுரைகள் தினமும் செய்தித்தாள்களில் வரத் துவங்கின. சில கருத்துரையாளர்கள் தங்கள் ஊகங்களைத் தெரிவித்தனர், போகப்போக பட்டியல்களிலுள்ள பெயர்களும் குறைந்துகொண்டே வந்தன. எண்ணிக்கை குறையக் குறைய தலைகீழ் விகிதத்தில் அழுத்தம் அதிகரித்தபடி இருந்தது.

ஒரு நாள், நான் மனித உரிமைகள் ஆணையத்திற்கு தொலைபேசி அழைத்தேன். உணர்ச்சியற்ற தொனியில் ஒருவன் கடனே என்று பதிலளித்தான்.

“எங்களால் உங்களுக்கு உதவ முடியாது. எங்களது பணி, புகைப்பிடிக்காதவர்களைப் பாதுகாப்பதே.”

“சரி, ஆனால் இப்போது புகைப்பிடிப்பாளர்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டனரே.”

“வெகு நாட்களாகவே அப்படித்தான் இருக்கிறது. பெரும்பான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கவே நாங்கள் இருக்கின்றோம்.”

“அப்படியா? நீங்கள் எப்போதும் பெரும்பான்மையின் பக்கம்தான் இருப்பீர்களா?”

”ஆம், நிச்சயமாக. பொதுவான கொள்கையே அதுதானே.”

எனவே, என்னை நானே பாதுகாத்துக் கொள்வது தவிர வேறு வழியிலை. புகைப்பது அதுவரை சட்டப்படியான குற்றமல்ல. ஆனால் அதனால் ஏற்பட்ட விரக்தியினால் கூட இருக்கலாம், தாக்குதல்கள் தீவிரமாகிக் கொண்டே வந்தன. நான் என் வீட்டைச் சுற்றி முட்கம்பிகளை நட்டு, இரவில் அவற்றில் மின்னூட்டம் செலுத்தி வைத்திருந்தேன், மாற்றியமைக்கப்பட்ட கைத்துப்பாக்கியையும், சாமுராய் வாள் ஒன்றையும் எப்போதும் பாதுகாப்புக்காக வைத்திருந்தேன்.

ஒரு நாள், இதே நேரத்தில், என் அருகாமையில் வசித்த ஓவியர் குசகாபேவிடமிருந்து அழைப்பு வந்தது. முதலில், குழாய் மூலம் புகைப்பவராக இருந்து பின்பு  அவரது அபிமான “ஹாஃப் அன் ஹாஃப்” தரவகை கிடைக்காததால் சாதாரண சிகரெட்டுக்கு மாறியிருந்தார் அவர். செய்தித்தாள்களில் எப்போதும் குறிவைக்கப்படும், எஞ்சியிருக்கும் சுமார் இருபது “புகைக்கும் கலைஞர்களில்” அவரும் ஒருவர்.

”நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது” குசகாபே புலம்பினார். ”நாம் விரைவில் தாக்கப்படுவோம் என்று கேள்விப்பட்டேன். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தேசிய புகைப்பதற்கெதிரான முன்னணியினரைத் தூண்டிவிட்டு நமது வீடுகள் பற்றியெரியும் படங்களை செய்திகளில் காட்டத் திட்டமிட்டு இருக்கின்றனர்.”

“துரோகிகள்” நான் தொடர்ந்தேன். “அவர்கள் முதலில் இங்கே வந்தால், நான் உங்கள் இடத்திற்குத் தப்பி வரலாமா?”

“நாம் இருவரும் ஒரே படகில்தான் பயணிக்கிறோம், இல்லையா? அவர்கள் முதலில் என்னைத் தாக்கினால், நான் தப்பித்து உங்கள் இடத்துக்கு வருகிறேன். பிறகு, நாம் இருவரும் ஒன்றாக டோக்கியோவிற்குச் செல்வோம். அங்கே எனக்கு ஒரு பாதுகாப்பான இடம் தெரியும். அங்கே நம் சகாக்கள் சிலரும் இருக்கிறார்கள். நாம் அனைவருக்கும் ஒரே விதி விதிக்கப்பட்டிருந்தாலும், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வீரமரணம் அடைவோம்!”

”ஆம், ஒத்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் சிறப்பான மரணத்தை எய்துவோம். வருங்கால பாடப்புத்தகங்களில், ‘இவர்கள் வாயில் சிகரெட்டோடு மரணமடைந்தவர்கள்’ என்று எழுதட்டும்’.”

நாங்கள் இருவரும் சிரித்தோம்.

ஆனால், அது சிரிக்கக்கூடிய விஷயமாக இருக்கவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு மாலையில், குசகாபே உடலில் ஆங்காங்கே தீக்காயங்களுடன் என் வீட்டுக்குக் காரோட்டி வந்தார்.

“அவர்கள் என்னைக் கண்டுபிடித்துவிட்டனர்,” அவர் தன் காரை என் வாகனக் கூடத்தில் நிறுத்தினார். பிரதான வீட்டிலிருந்த பயன்பாட்டு அறையைத்தான் நான் வாகனக் கூடமாக மாற்றி வைத்திருந்தேன். ”அவர்கள் அடுத்து இங்கே தான் வருவார்கள். நாம் அதற்கு முன் கிளம்பலாம்.”

”ஒரு நிமிடம்,” வாகனக் கூடத்தின் கதவைச் சாத்தியபடி நான் கூறினேன். “முடிந்த அளவு சிகரெட்டுகளை எடுத்துக்கொள்கிறேன்.”

“நல்ல யோசனை. நானும் கொஞ்சம் எடுத்து வந்திருக்கிறேன்.”

நாங்கள் காரின் அடிப்பாகத்தில் கட்டுகளை அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போது, என் வீட்டைச் சுற்றி கலவரச் சத்தம் கேட்டது. வீட்டின் முன் தாழ்வார ஜன்னல் நொறுக்கப்பட்டது.

”அவர்கள் வந்துவிட்டார்கள்” நான் பதற்றமான எதிர்பார்ப்போடு, “நாம் செல்வதற்கு முன் அவர்களுக்குக் கொஞ்சம் வித்தையைக் காட்டுவோமா?”

“அப்படியா? நல்லது, நிச்சயம் காட்டுவோம். எனக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றிக் கொண்டே இருக்கிறது!”

தோட்டத்தை ஒட்டியிருந்த சாப்பாட்டு அறைக்குச் சென்றோம். பின் சுவரிலிருந்த மின்னூட்டப்பட்ட முட்கம்பியில் சிக்கிய ஒருவன் கதறிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவனது உடலிலிருந்து வெடிக்கும், நெரிக்கும் சத்தகங்கள் கேட்டன. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உலோகக் கலத்திலிருந்த எண்ணெய்யை சூடுபடுத்தினேன். மாற்றியமைக்கப்பட்ட கைத்துப்பாக்கியை குசகாபேவிடம் கொடுத்தேன். சாமுராய் வாளை நான் எடுத்துக் கொண்டேன்.

கழிவறையில் சத்தம் கேட்டது. ஒருவன் ஜன்னலை உடைத்து உள்ளே ஏறிக்குதிக்க முயற்சி செய்துகொண்டிருந்தான். அவன் அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையிலிருந்து குதித்து வந்திருக்க வேண்டும். நான் அவனது கையை முழுங்கையோடு வெட்டி வீசினேன்.

”…………”

அவன் சத்தமேதும் கொடுக்காமல், ஜன்னலில் இருந்து மறைந்துபோனான்.

இன்னும் பத்துப் பதினைந்து நபர்கள் தோட்டம் வழியாகக்  குதித்து வந்தனர். அவர்கள் முட்கம்பியை வெட்டித் தள்ளிவிட்டு வந்திருக்க வேண்டும். ஒவ்வொருவராக, கதவுகளையும், ஜன்னல்களையும் நெம்பித் தள்ளத் துவங்கினர். குசகாபேவுடன் சிறு ஆலோசனைக்குப் பிறகு, நான் எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்று, அங்கு வராண்டாவில் இருந்து தோட்டத்தை நோக்கி கொதிக்கும் எண்ணெய்யை கொட்டினேன். ஈனர்கள் வலிதாங்காமல் ஊளையிடத் துவங்கினர். குசகாபே கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்க வேண்டும் என்பதற்கான சமிக்ஞை அது. எங்கும் திகிலூட்டும் அலறல்களும் கூச்சல்களும் தொடர்ந்தன.

நாங்கள் இவ்வளவு தயாராக இருப்போம் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. காயமடைந்தவர்களைத் தூக்கிக் கொண்டு கும்பல் பின்வாங்கியது. ஆனால், என் வீட்டின் முன்கதவிற்கு அருகே தீ வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். வீடு முழுவதும் புகை நிரம்பத் துவங்கிவிட்டது.

”புகை விரும்பிகளுக்கான சிறந்த பிரிவுபச்சாரப் பரிசு” குசகாபே இருமியபடியே நக்கலாகக் கூறினார். ”ஆனால், உயிருடன் எரிக்கப்பட எனக்கு விருப்பமில்லை, வாருங்கள், இங்கிருந்து கிளம்பலாம்!”

குசகாபேவின் கார் மெர்ஸிடெஸ் பென்ஸ் வகையைச் சேர்ந்தது – நல்ல தொட்டி போன்று இருக்கும் அதன் அமைப்பு. அப்போது என்னிடம் கார் எதுவும் இல்லை. சில நாட்கள் முன், என் மகன் வந்து என் காரை தனது பாட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டான்.

பென்ஸ் கார் கிளம்பி, வாகனக்கூடத்தின் கதவை இடித்துத் தள்ளிவிட்டு, ஓடுபாதையில் சீறிக்கிளம்பியது. பிறகு தெருவிற்குள்ளும் அதே வேகத்தில் திரும்பினோம். அங்கே என் வீட்டின் முன் குழுமியிருந்த பத்துக்கும் மேற்பட்ட புகைப்படக்காரர்களையும், செய்தியாளர்களையும் குப்பைக்கூளத்தைப் போல் இடித்துத் தள்ளிவிட்டோம் என்று நினைக்கிறேன் – அதனால் என்ன?

“நல்ல வேடிக்கையாக இருந்தது!” வண்டியோட்டியபடியே குசகாபே சிரித்தார்.

டோக்கியோ செல்லும் வழியெங்கும் இருந்த சாலைத் தடுப்புகளை எல்லாம் எப்படி தவிர்த்துவிட்டுச் சென்றோம் என்று இப்போதும் எனக்குத் தெரியவில்லை. எங்கள் வீடுகள் எரிந்துகொண்டிருந்தது நிச்சயம் தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிபரப்பப்பட்டிருக்கும். தேசிய புகைப்பதற்கெதிரான முன்னணியினரும், காவல்துறையினரும் எங்களைத் தேடிக்கொண்டிருக்கக்கூடும். ஆனால், நாங்கள் இரவு முழுவதும் வண்டியோட்டியபடி, விடியும் போது தலைநகருக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.

குசகாபே சொன்ன பாதுகாப்பான இடம், ரொப்போங்கியில் ஒரு ஆடம்பர அடுக்கக கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்தது. அங்கே, நாங்கள் சுமார் இருபது சகாக்களைச் சந்தித்தோம். அவர்களும், தங்களது கிராமப்புற வீடுகள் கொளுத்தப்பட்டதால், அங்கிருந்து தப்பித்து வந்திருந்தனர். உண்மையில், இது ஒரு தனியார் விடுதி, குசகாபே இதில் பங்குதாரர்களுள் ஒருவர். முதலாளி கூட எங்களில் ஒருவர்தான். நாங்கள் பற்றுறுதி மற்றும் தடுப்பாற்றலின் பேரில் சூளுரைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம், புகையிலையின் கடவுளைப் போற்றி எங்களின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்தோம். உண்மையில், புகையிலையின் கடவுளுக்கு ஒரு பௌதிக உருவம் இல்லை. பற்ற வைக்கப்பட்ட ’லக்கி ஸ்ட்ரைக்’ வகை சிகரெட்டின் சிவப்பு வட்டத்தை உயர்த்திய பின், புகையை உள்ளிழுக்கும்போது அதை வணங்கிக் கொண்டோம்.

அடுத்த ஒரு வாரத்திற்கும் மேலான எங்களது போராட்டத்தைப் பற்றி நான் விலாவாரியாகக் கூறப்போவதில்லை. அது மிகவும் சோர்வூட்டக்கூடியதாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வதானால் நாங்கள் நல்லதொரு போராட்டத்தை நடத்தினோம். எங்களது எதிரி தேசிய புகைப்பதற்கெதிரான முன்னணி மட்டுமல்ல, அவர்களோடு காவல்துறையும் இராணுவமும் சேர்ந்துகொண்டது. உண்மையில் இராணுவம் அவர்களது கருவியாகத் தான் செய்லபட்டது. இப்போது ஒட்டுமொத்த உலகின் கூட்டு மனசாட்சியும் அவர்களுடன் இணைந்து கொண்டது. அதற்கு உலக சுகாதார அமைப்பும், செஞ்சிலுவை சங்கமும் ஆதரவை வழங்கின. மாறாக, சட்டவிரோதமாக சிகரெட் விற்றுக்கொண்டிருந்த நேர்மையற்ற போக்கிரிகளிடம் தான் நாங்கள் ஆதரவு தேட வேண்டி இருந்தது. அவர்களைச் சார்ந்து இருப்பது புகைப்பவர்களாக எங்களது பெருமைக்கு இழுக்காகவே இருந்தது.

ஒரு வழியாக, எங்கள் நிலைமையைக் காணச் சகிக்காமல் புகையிலையின் கடவுள் இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு உதவ, தனது உதவியாளர்களை அனுப்பி வைத்தார். அவை “பீஸ்” சிகரெட் அட்டையில் இருந்த புறா, “கோல்டர் பேட்” சிகரெட் அட்டையில் இருந்த வௌவால், “கேமல்” சிகரெட் அட்டையில் இருந்த ஒட்டகம் மற்றும் “கூல்” சிகரெட் அட்டையில் இருந்த பென்குயின். அவற்றாலும் எங்களுக்குப் பெரிய பயன் இல்லை. கடைசியாக எங்களுக்கு உதவ வந்தது, ”புகைப்பவர்களுக்கான பற்பசை” நிறுவனத்தின் பளிச்சிடும் வெள்ளைப் பற்களுடன் இருந்த இளம் சாகச நாயகன். முதலில், அவனால் ஏதாவது காரியம் ஆகும் என்று நினைத்தோம். ஆனால், அவனது பளிச்சிடும் முகத்தோற்றத்திற்குப் பின்னால் எதுவுமில்லை என்று விரைவாகவே உணர்ந்து கொண்டோம்.

“நாம் போரின் பயங்கரத்தின் ஊடாக வாழ்ந்திருக்கிறோம், போருக்குப் பின்னான பற்றாக்குறையையும் தாக்குப் பிடித்திருக்கிறோம், எல்லாம் எதற்காக?” குசகாபே வினாவினார். ”உலகம் வளமாக ஆக ஆக, அதிக சட்டங்களும் கட்டுப்பாடுகளும் நம் மீது விதிக்கப்படுகிறது, அதனால் பாகுபாடுகள் அதிகரிக்கின்றன. இப்போது, நாம் சுதந்திரமாக நடமாடக்கூட முடியவில்லை. இது எதனால்?”

எங்கள் சகாக்கள் அனைவரும் வீழ்ந்துவிட்டனர், நாங்கள் இருவர் மட்டுமே எஞ்சியிருந்தோம். நாங்கள் துரத்தியடிக்கப்பட்டு, தேசிய பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் தஞ்சம் அடைந்தோம். அங்கே அமர்ந்தபடி எங்கள் உயிரினும் மேலான சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருந்தோம்.

“மக்கள் இதைத் தான் விரும்புகின்றனரா?”

”அவ்வாறுதான் நினைக்கிறேன்” நான் பதிலளித்தேன். “இறுதியில், இத்தகைய செயல்களை நிறுத்த நாம் யுத்தம் ஒன்றைத் துவங்க வேண்டும்.”

அந்த நொடியில், மேலே உலங்கூர்தியில் இருந்து சுடப்பட்ட கண்ணீர்ப் புகை குப்பி ஒன்று சரியாக குசகாபேவின் தலையில் அடித்தது. அவர் சிறிய சத்தமும் இன்றி, அப்படியே சரிந்தார். கீழே குழுமியிருந்த கூட்டத்தினர், திருவிழா போன்று மதுவருந்திய உற்சாகத்தில் ஆராவாரம் செய்தபடி கோஷமிடத் துவங்கினர்.

“ஒருவன் மட்டுமே மிச்சமிருக்கிறான்! ஒருவன் மட்டுமே மிச்சமிருக்கிறான்!”

ஆனால், முழுதாய் இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னும் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் விடாப்பிடியாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன். உண்மையில், என்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எப்படியும் இறக்கத்தான் போகிறேன் என்றாலும், எஞ்சியிருக்கும் எனது சக்தி அனைத்தையும் நான் பயன்படுத்துவேன்.

திடீரென்று, கீழே இருந்த கூட்டம் மொத்தமும் அமைதியாகியது, உலங்கூர்திகள் கண்பார்வையிலிருந்து மறைந்தன. யாரோ ஒருவன் ஒலிப்பெருக்கியில் பேசினான். நான் சிரமப்பட்டு, காதுகளைக் கூர்மையாக்கி அவன் கூறுவதைக் கவனித்தேன்.

“… இல்லையா. அதற்குள் மிகத் தாமதாகிவிடும். அது எவ்வளவு பெரிய இழப்பாகிவிடும். இப்போது அவன் புகையிலைக் காலத்தின் கலைப்பொருள். அவனை இயற்கையின் நினைவுச் சின்னமாக, வாழும் பொக்கிஷமாக ஆக்க வேண்டும். நாம் அவனைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு உதவுவீர்களா? நான் மறுபடியும் கூறுகிறேன். நாங்கள் புகைப்பவர்களைப் பாதுகாக்கும் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இதனை இன்று தான் அவசரத்தேவை கருதி உருவாக்கியிருக்கிறோம்…”

எனக்குள் ஓர் அதிர்வு ஏற்பட்டது. ஐயோ, வேண்டாம்! யாரும் என்னைக் காப்பாற்றிவிடாதீர்கள்! இது புதுவகையான சித்திரவதையின் துவக்கம். பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் முற்றிலும் அழியவே விதிக்கப்பட்டன. அவற்றை காட்சிப் பொருட்களாக மாற்றி, புகைப்படம் எடுத்து, ஊசி போட்டுப் பாதுகாத்து, தனிமைப்படுத்தி, அவற்றின் விந்தணுக்களைச் சேகரித்து, அவற்றின் பல்வேறு உடற்பாகங்களை அலங்கோலமாக்கி வதைக்கின்றனர். இறுதியில் என்ன நடக்கின்றது? அவை துவண்டுபோய் மடிகின்றன. அதோடு கூட முடிவதில்லை. அவை இறந்தபிறகும், பாடம் செய்யப்பட்டு கண்காட்சிகளில் வைக்கப்படுகின்றன. நான் எதிர்பார்த்தது அதைத் தானா?  இல்லை, நான் என் விருப்பப்படி இறக்கவே விரும்புகிறேன். நான் வேகமாக முன் நகர்ந்து, கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்தேன்.

ஆனால், காலம் தாழ்ந்துவிட்து. அந்தரத்தில் ஏற்கனவே பாதுகாப்பு வலையை விரித்து வைத்துவிட்டார்கள்.

எனக்கு மேலே உயரத்தில், இரண்டு உலங்கூர்திகள் நெருங்கி வந்தன. அவை இரண்டுக்கும் இடையே ஒரு கயிற்று வலை விரிக்கப்பட்டு இருந்தது. மெதுவாக, மிக மெதுவாக, அவை என்னை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தன…


 – யசுடாகா சுட்சூய்

ஆங்கிலத்தில்: ஆண்ட்ரூ டிரைவர்

ஆங்கிலம் வழி தமிழில்: பாலகுமார் விஜயராமன்


[tds_info]

ஆசிரியர் குறிப்பு 

யசுடாகா சுட்சூய் (1934) ஜப்பானிய நாவலாசிரியர், அறிவியல் புனைகதை எழுத்தாளர் மற்றும் நடிகர். இவர் புகழ்பெற்ற தனிஸாகி பரிசு, கவபாட்டா பரிசு, யொமியுரி இலக்கியப் பரிசு உட்பட பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார். இவரது பணிகள், ஜப்பானிய பின்நவீனத்துவ அறிவியல் புனைவுகளின் அடிக்களமாகக் கருதப்படுகின்றன. 1970-களில் இருண்மை நகைச்சுவை, மீபுனைவு உட்பட பல்வேறு வகையான எழுத்துப் பாணிகளை சோதனை முயற்சிகளாக செய்து பார்த்திருக்கும் இவர், தனது அரசியல் சரித்தன்மையற்ற அங்கதப் பார்வைக்காக பெரிதும் விமர்க்கப்படுகிறவர். இவரது படைப்புகள், திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்திருக்கின்றன. “கடைசி புகைப்பிடிப்பாளன்” சிறுகதை 1987-ம் ஆண்டு ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு, 2008-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியது.

 

மொழிபெயர்ப்பாளர் :

பாலகுமார் விஜயராமன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர். சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்து வருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது எட்டு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. விலங்குகள், பறவைகள், சூழலியல் சார்ந்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பான “கடவுளின் பறவைகள்” பரவலான கவனிப்பைப் பெற்றது.

[/tds_info]

Previous articleஜப்பானியக் கவிதைகள்
Next articleஒரு வலசைப் பறவை
Avatar
பாலகுமார் விஜயராமன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர். சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்து வருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது எட்டு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. விலங்குகள், பறவைகள், சூழலியல் சார்ந்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பான “கடவுளின் பறவைகள்” பரவலான கவனிப்பைப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.