தேக யாத்திரை -இன்ட்ல சந்திரசேகர்

ந்த மனிதன் செத்துவிட்டான். மனைவி, மகள், அம்மா, உறவினர்கள் எல்லாரும் கதறி அழுகின்றனர். சினஜாலய்யா மகனாகயிருந்தாலும்கூட அவன்மட்டும் அழவில்லை. அவன் வேதனைப் படுகிறான். தன் மனதில்பட்டதை எல்லாரிடமும் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் சர்ச்சுக்கு அருகாமையில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து, மழுங்கிய வெறும் நகத்தை வாயால் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். சட்டென்று சர்ச்சை நோக்கிப் பார்வையைத் திருப்பினான். வண்ணமயமாக இருந்திருக்க வேண்டிய சர்ச் வெளிறிப்போய் வெள்ளையாகச் சாட்சியளித்தது. சிலுவை, மணி ஸ்தம்பம், ஏசுகிருத்துவின் உருவ பொம்மை, அவர் அணிந்திருந்த ஆடையெல்லாம் வெள்ளை நிறத்தில் இருந்தன. அங்கே வெள்ளைச்சுவரும் வசனங்களும் தவிரச் சீரியல் விளக்குகள், ஒளி பிரதிபலிக்கும் பல்புகள், வண்ணக் காகிதங்கள் போன்ற எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. அந்தச் சர்ச்சை அப்படி அவனால் பார்க்கமுடியவில்லை. பயம் தொற்றிக்கொண்டது. இரண்டாவது வருகைதான்  வந்துவிட்டதோ என்று பயந்து கண்களை மூடிக்கொண்டு மறுபடியும் பார்த்தான். இந்த முறை சாதாரணமாகவே தெரிந்தது. வியர்த்துக் கொட்டியது. வியர்வையைத் துண்டால் துடைத்து சாதாரண மனிதனானான்.

செத்துப்போனவரின் அருகில் யாரோவொரு புதிய மனிதர் வந்திருக்கிறார் என்பதைப் பெரிதாகக் கேட்கிற அழுகுரலின்மூலம் தெரிந்துகொண்டான் சினஜாலய்யா. அந்த அழுகுரல்களால் அவனின் அப்பா இறந்துவிட்டார் என்ற விசயம் நினைவுக்கு வந்து மீண்டும் பெருமூச்சு விட்டான். தொலைவில் வண்டிச்சத்தம் கேட்டது. அவசரம் அவசரமாகச் சாலையில் சென்று பார்த்தான். அந்த வண்டியில் வருகிற பாஸ்டரைப் பார்த்ததும் இதயமே நழுவியது போலிருந்தது சினஜாலய்யாவிற்கு. நழுவிய இதயம் கீழே விழுந்துவிட்டதென்று நினைத்துக்கொண்டானோ என்னமோ லுங்கியை இடுப்புக்குமேல் இழுத்துக்கட்டி, காதிலிருந்த பாதிக் குடித்த பீடியைப் பற்றவைத்து ஒரே தம்மில் அரைப் பீடியும் காலியாகிறமாதிரி இழுத்து வேக வேகமாக இசாக்கொல்ல சந்தையை நோக்கி நடந்தான்.

          “என்னடா ஜாலா இவ்வளவு பெரிய வேலய பாத்துருக்கான் ஒங்கப்பன், நேத்து தானய்யா அண்ணாச்சிக்கடைக்குப் போயிட்ருக்கும்போது என்னம்மா நல்லாயிருக்குறயானு விசாரிச்சாரு, காலங்காத்தால இப்படி ஆயிட்டே” என்று அழுதபடி சினஜாலய்யாவின் இரண்டு கைகளைப் பிடித்துக்கொண்டு நிறுத்தினாள் நரசம்மா.

                “சரி விடு! நீ என் வீட்டுக்குப்போ எனக்குக் கொஞ்சம் அர்ஜன்ட்டா வேலையிருக்கு” என்று அவளின் முகத்தைக்கூடப் பார்க்காமல் முன்னோக்கி நகர்ந்தான்.

 வேகமாக நடக்கும் பொழுதெல்லாம் ரப்பர்செருப்பு படபடவென்று உள்ளங்கால்களில் பட்டது. எதிரில் வரும் வண்டிகளையோ, அனுதாபத்துடன் பார்க்கும் ஜனங்களையோ அவன் பார்க்க விரும்பவில்லை. இப்படிப்பட்டவொன்று இதற்கு முன் எதாவது நடந்திருந்தால் கொஞ்சம் பொறுமையாக இருந்திருப்பான். விதி இதுவே முதல்முறை இப்படி நடந்தது. ஊரில் கிசுகிசு பேசுவார்களோ, பெரிய மனிதர்கள் என்ன சொல்லுவார்களோ, உண்மையில் ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ, வீட்டுப்பக்கத்திலிருக்கிற பாஸ்டரின் முகத்தில் நாளையிலிருந்து எப்படி முழிப்பதோ, இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையெனில், அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று ஆலோசித்தவாறே இசாக்கொல்ல சந்தைக்குப் போகவேண்டியவன் நேராகக் கல்லறைத் தோட்டத்துக்குப் போனான்.

                ஆனந்துபாபு சினஜாலய்யாவைப் பார்த்ததும் கல்லறைத் தோட்டத்திலிருந்து  வெளியே வந்து,

                “மாமோய்.. என்ன நீயே வந்துட்டயா?” நாங்க குழி எடுக்கமாட்டோமா நீ அங்கபோயி ஆகவேண்டிய காரியத்த பாரு போ” என்று உறுதியளித்துச் சென்றான்.

                “நா வந்தது அதுக்கு இல்லடா” என்று முணுமுணுத்துக்கொண்டு இன்னொரு பீடியைப் பற்றவைத்தான் சினஜாலய்யா.

                “என்னாச்சு மாமா?” என்று அவனது கவலையை உணர்ந்தவாறு கேட்டான் ஆனந்துபாபு.

                “டேய்! ஆனந்து, ஒன்ட்ட ஒரு விசயம் கேட்குறன் அது சரியா தப்பான்னு நீயே சொல்லு” என்று பீடியை ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் மத்தியில் வைத்து ஆழமாக இழுத்து வாயில் வருகிற புகையை இரண்டு ஊதிலே வெளியே அனுப்பி, பீடியைப் பக்கவாட்டில் இருக்கிற கால்வாயில் போட்டுவிட்டு, லுங்கியைக் கீழே இழுத்து தொடையின் நடுவில் பிடித்துக்கொண்டு அங்கேயே  உட்கார்ந்தான் சினஜாலய்யா.

                “ஏதோ பெரிய விவகாரம் போலயிருக்கு…  மாமா என்ன சங்கதி, நடக்குறதெல்லாம் பார்த்தா நீ தா ஒங்கப்பனை மேல அனுப்புனயா…..” என்று சிரித்தபடி பக்கத்தில் அமர்ந்தான் ஆனந்துபாபு.

                “அடேய்! மூடுடா! எப்ப என்ன பேசனும்னு தெரியாதா ஒனக்கு” என்று கொஞ்சம் கோபமாக  ஆனந்துபாபுவைப் பார்த்தான் சினஜாலய்யா.

                சினஜாலய்யாவுக்குப் போன் வந்தது.

                “பாஸ்டரய்யா சொல்லுங்க” என்றான் போனை எடுத்து.

                அவர்கள் போனில் பேசுவதைக் கேட்பதற்கு முயற்சித்தான் ஆனந்துபாபு. சினஜாலய்யா சிரிப்பதற்கு முயற்சித்தாலும் அவனின் முகத்தில் கவலை வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனாலும்  போனின் விசயம் மாத்திரம் காதில்விழவில்லை ஆனந்துபாபுவிற்கு.

                “சரிங்கய்யா நா கொஞ்ச நேரத்துல போன் செய்யுறன்… நீங்க அப்ப வாங்க. முன்னாடியே வந்திராதீங்க” என்று போனைத் துண்டித்தான்.

                “என்ன சொல்றாரு பாஸ்டரு, சீக்கிரமே ஜெபம் செஞ்சு பெட்டியில வைக்கணுங்கிறாரா என்ன?” என்றான் சந்தேகத்துடன் ஆன்ந்துபாபு.

                “டேய்! அவரு நம்ம பாஸ்டரு இல்லடா” என்றான் போனைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு.

                “நம்ம பாஸ்டரு இல்லன்னா வேறயாரு ஒனக்குப் போன் செஞ்சது” என்று முகத்தை ஆச்சர்யமாக வைத்துக்கொண்டு கேட்டான் ஆனந்துபாபு.

                “அதான்டா என் அப்பா போவருல்லா ஊருல உள்ள அந்தச் சர்ச்சுக்கு… அந்தப் பாஸ்டரு” என்றான் சினஜாலய்யா.

                “யாரு அந்தப் பெந்தேகோஸ்தேகாரங்க சர்ச்சுக்கா… என்னவாம் அவங்களுக்கு”

                “என் அப்பா பெந்தேகோஸ்தே சபைக்குப் போறவருல்ல அவங்கள வச்சு ஜெபம் செஞ்சு குழியில வைக்கலாம்னு நினைக்குறன்,  அத தெரிஞ்சுக்கலாம்னு அந்தச் சர்ச்சு பாஸ்டர் போன் பண்ணாரு” என்றான் ஆனந்துபாபுவின் முகத்தைப் பார்த்து.

                “ஒங்கம்மா… அப்பன் மவன் ரெண்டு பேரும் சேந்து ஊரையே சீல் வைக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா” என்று கோபத்தோடு மேலே எழுந்தான் ஆனந்துபாபு.

                மறுபடியும் சினஜாலய்யாவின் சட்டைப்பையில் போன் அடித்தது.

                “பாஸ்டரய்யா அதைதான் பேசிட்டுருக்கேன்.. என்ன என் கிராமத்துக்குக் கௌம்பிட்டீங்களா?” பேசிக்கொண்டே படாரென்று எழுந்தான்.

                “டேய் மவன்களா! இது நடக்குற வேலயில்ல, மயிரு குழிய தோண்டுறத நிறுத்திட்டு வாங்கடா, அந்தப் பெந்தேகோஸ்துகாரனுகளே வந்து தோண்டிக்கட்டும்” என்று கத்தினான் ஆனந்துபாபு குழி தோண்டுகிற இளையவர்களின் பக்கம் சென்று. இதைக் கேட்டதும் குழி தோண்டுவதை நிறுத்திவிட்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடத் தொடங்கினார்கள்.

                “இந்தக் குலப்பெரியவங்க ஏமாத்துறானுக அதனாலதான் நம்ம சபைக்கு இந்த நெலமை வந்துட்டு” என்றான் நன்றாகக் குடித்திருந்த ஜெபுலோன்.

                “டேய் மவனுகளா அந்தக் குடிகாரன பக்கத்துல இல்லாம தூரமாக் கூட்டிட்டுப் போங்கடா என்ன பேசனும்னுகூட அர்த்தமில்லாம பேசுறான் ஞாயத்த” என்றார் ஒரு குலப் பெரியவர்.

                “ஆரம்பத்துலயே அந்தச் சர்ச்சுக்குப் போறவங்கள கூப்பிட்டு பேசியிருந்தா உண்மையிலயே இந்தக் கூட்டத்துக்கு அவசியமே வந்திருக்காது, அப்ப என்னவோ அவங்கவங்க இஷ்ட்டபடி விட்டுடீங்க, அவங்க என்னன்னா அந்தப் பெந்தேகோஸ்தே சபைகாரங்கள ஒரேயடியா கிராமத்துக்குக் கூட்டிட்டு வந்துட்டானுக”  என்றான் அந்தக் கூட்டத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு புகையிலைப் போட்டுக்கொண்டிருந்த பிரசாத்து.

 குலப்பெரியவர்கள் ஐந்துபேர் சுவரில் சாய்ந்துகொண்டு யார் முகத்தையும் பார்க்காமல் தலையை இரண்டு முழங்காலுக்கு நடுவில் வைத்து ஆட்டிக்கொண்டு, ஒருத்தரென்னவோ ஈக்குச்சியை வைத்து எறும்பை வேட்டையாடிக் கொண்டிருந்தார். இன்னொருவர் என்னவோ பல்லுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட மாட்டுக்கறி உப்புக்கண்டத்தைக் குச்சியால் நோண்டிக் கொண்டிருந்தார். ஒருத்தர் என்னவோ ஸ்கிரீன் உடைந்த பழைய நோக்கியா போனில் யாரோ ஒருவரின் நம்பரைத் தேடிக் கொண்டிருந்தார். மற்ற இரண்டு பெரியவர்கள் ஏதோ பக்கத்தில் உள்ளவர்களுக்குக்கூடக் கேட்காதவாறு முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

                “ஒப்பன் மவனுகளா! செத்துப்போன மனுசனை வூட்டுல வச்சுக்கிட்டு இந்த மீட்டிங் எதுக்குடா வெரசா எதாவது ஒரு முடிவெடுக்கணும்லா” பொறுமையிழந்தார் சினங்கய்யா.

                “டேய் மவனே! அதுக்கு இல்லடா. என்ன! அந்தப் பாஸ்டரு வந்து ஜெபம் செஞ்சா குழியில படுக்கமாட்டங்கறான்னா அந்த மனுஷன், மவனே! இந்த நேரத்துக்கெல்லாம் புதைச்சுட்டே வந்துருப்போம் இந்த ஜாலய்யா செஞ்ச வேல இதல்லாம்” என்று சத்தம்போட்டுப் பேசினார் கோட்டய்யா.

                “யப்பா ஜாலய்யா! சரி ஏதோ நீங்கல்லாம் அந்தச் சபைக்குப் போனா போகட்டும்னு விட்டுட்டோம், இந்தக் கிராமத்துல இதுவரைக்கும் எப்பயும் இப்படி நடக்கல, நம்மளோடது பேப்பிஸ்ட்டுச் சபை. இன்னைக்கு இல்ல, கழிஞ்ச அம்பது வருசமா ரெண்டாவது சபைய நம்ம ஊருக்குள்ள அடியெடுத்து வைக்க விடல. அவ்வளவு பெரிய சரித்திரம் இருக்கு இதுக்கு. எந்தச் சபைக்காரங்களா இருந்தாலும் ஜெபம் பண்றது ஏசு கிறிஸ்த்துக்குத் தானே… வேறு ஆளுக எதுக்கு? நம்ம பாஸ்டரே ஜபம் செஞ்சு ஒங்க அய்யாவை அடக்கம் செய்வாரு அவங்களுக்குப் போன் செஞ்சு சொல்லு வரவேண்டாம்னு, நாங்க ஒன்ன அந்தச் சபைக்குப் போவாதன்னு ஒன்னும் கட்டுப்படுத்தலயே” என்று வாயைத் திறந்தார் குலப் பெரியவர் ஹக்கய்யா.

                “என் அப்பாவோட கடைசி ஆசை மாமா! பெந்தேகோஸ்தே சபைகாரங்கிட்ட அடக்கம் செஞ்சுக்கணும்னு” முணுமுணுத்தான் சினஜாலய்யா.

                “டேய் ஜாலா! ஒன் சப்ப பேச்ச எங்கக் கிட்ட பேசாத, இப்ப நம்ம பாஸ்டரு ஜெபம் செஞ்சு பெட்டியில் வச்சா செத்துப்போன ஒங்க அப்பன் எந்திச்சு வந்து ஒன்ன செருப்பால அடிப்பானா?”  நயவஞ்சகமாகக் கேட்டான் ஜெபுலோன்.

                “மாமா! நீ சொன்னமாதிரி யாரு பிரார்த்தனை செஞ்சாலும் கடவுளுக்குத் தானே! அவங்க அப்பா விருப்பப்படி அவனை அவங்ககிட்ட ஜெபம் செஞ்சுக்கச் சொல்லு, தப்பு என்னயிருக்கு” என்றார் கூட்டத்திலிருந்து இர்மியா.

                “டேய்! நீகூட அந்தப் பெந்தேகோஸ்தே சபைக்குப் போறவன்தானே அதுக்குத்தான் சப்போர்ட்டு பண்றன்னு எங்களுக்குத் தெரியும். நீ மூடிக்கோ” கோபப்பட்டான் மோகன்.

                “டேய் மோகனு ரொம்பப் பேசுன மூஞ்சிய ஒடச்சுருவன் மவனே!” இர்மியா மேலே எழுந்தான்.

                “இல்லைன்னா என்ன… சந்தோஷமா சேர்ந்து சபை வச்சிகிட்டு, எவ்வளவு விருப்பு வெறுப்பு இருந்தாலும் திட்டிக்கிட்டாலும் மறுபடியும் கல்யாணத்துக்கோ காரியத்துக்கோ எல்லாரும் ஒன்னாவோம், அந்தப் பெந்தேகோஸ்தே சபைக்குப் போறவங்க நம்ம காரியத்துக்கும் வர மாட்டாங்க. நம்ம கல்யாண ஜெபத்துக்கும் வரமாட்டாங்க. முந்தாநேத்து எங்க அப்பாவோட காரியத்துக்குச் சொந்த சித்தப்பா பொண்ணுகள கேட்டா அந்தச் சபைக்குப் போறவங்க காரியத்துக்கு வரக்கூடாதுண்ணான்னு சொன்னா. எந்தப் பைபிளில் சொன்னாங்கய்யா காரியத்துக்குப் போகக் கூடாதுன்னு, தாலியும் பொட்டும் வைக்கக்கூடாதுன்னு’ பெரிதாகக் கத்துன்னான் மோகன்.

                “டேய் மோகனு! இன்னொரு தடவ அந்தச் சபைய பத்தி தப்பா பேசுன, நா என்ன செய்வன்னு எனக்கே தெரியாது”  வெறித்தனமான கோபத்துடன் பல்லைக் கடித்தான் இர்மியா.

                அந்தப் பெந்தேகோஸ்தே சபைக்குப் போற அஞ்சாறு பேரு இர்மியா அருகில் வந்து அமர்ந்தார்கள்.

                “ஒம்மா நிம்மதியா ஒன்னா சேந்துயிருக்குற ஊர கெடுக்குறானுக இந்தப் பாஸ்டருங்க” என்றான் எப்பொழுதும் சர்ச்சுக்குப் போகாத சேகர்.

                “தம்பி நல்லவிதமா பேசு, நடுவுல பாஸ்டர்கள் என்ன செஞ்சாங்க. என் தாத்தா, என் அப்பா, நானு இந்தச் சபையிலயே பிறந்து வளர்ந்தவங்க, கடவுளுக்கு ஊழியம் செய்யுறவங்க, ஒங்க ஊருல பிரச்சனை பண்ண வேண்டிய தேவை எனக்கு என்னயிருக்கு. நீங்க யார வச்சுனாலும் ஜெபம் பண்ணிக்கோங்க எனக்கு என்ன வந்துச்சு நா போறேன்” என்று மேலே எழுந்தார் பாஸ்டர். “

                “நீ மட்டும் கொஞ்சமாவா சாப்பிட்ட இந்தப் பேப்பிஸ்ட்டுச் சபையைக் கிறிஸ்து சபையில சேர்க்கணும்னு ஒன்னால முடிஞ்ச அளவுக்கு நீ வெவகாரம் செய்யல எங்க கிராமத்துக்காரங்ககிட்ட நல்லவன் மாறி நடிச்சது எனக்குத் தெரியாதுனு நெனச்சயா?” சேகர் சவால் விட்டான்.

                அந்தப் பேச்சைக் கேட்டதும் ஊரே நடுங்கியது. அங்கங்கே இருந்தவர்கள் மரம் மாதிரி நின்றார்கள். குலப்பெரியவர்கள் சேகரையும் பாஸ்டரையும் மாறி மாறி பார்த்தார்கள். விவகாரம் பெரிதாகப் போகிறதேவென்று சினஜாலய்யா ஞாயிற்றுக்கிழமை அறுக்கப்படுகிற ஆடு மாதிரி திருதிருவென்று பார்த்தான்.

                “என்னப் பேசுறய்யா நீ… முதல்ல என்னைக்காவது நீ ஜெபக்கூட்டத்துக்கு வந்துருக்கயா? முதல்ல நீ என்ன பேசுறன்னு உனக்கே புரியுதா… கடவுளோட புள்ளைகள புடிச்சுக்கிட்டு ஒன் இஷ்டபடி பேசிட்டுயிருக்க இந்தக் குலப்பெரியவங்களும் இவ்வளவு ஜனங்களும் வாயை மூடிக்கிட்டு பாத்துட்டுயிருக்காங்க இப்ப புரியுது யாரோ ஒன்ன ஏத்தி விடுறாங்கன்னு. என்மேல அபாண்டமா பழி சுமத்தினா கடவுள் பாத்துட்டுச் சும்மாயிருக்க மாட்டாரு” என்று நடந்து சென்றார் பாஸ்டர் வேக வேகமாக வண்டியின் பக்கம்.

                “டேய்!  வழி தப்புனவனே! நீ யாரப் பத்தி என்ன பேசுறடா. கண்ணு அவிஞ்சுரும்டா பாஸ்டரை இப்படிப் பேசுனா, வாய மூடிட்டு நீ வீட்டுக்குப் போடா” என்றாள் சேகரின் ஆச்சி.

                “அவன் ஏதோ தெரியாம பேசிட்டான் பாஸ்டர் அய்யா, நீங்க உட்காருங்க என்று கையைப் பிடித்துப் பின்னால் இழுத்து, நாற்காலி அருகில் கூட்டி வந்தான் எலமந்தா. பாஸ்டர் கோபத்தோடு நாற்காலியில் அமர்ந்தார். ஆனால், குலப் பெரியவர்கள் சேகரை எதுவும் சொல்லாததற்கு மட்டும் மிகுந்த வருத்தப்பட்டார். ஏதோ மோசம் நடக்கிறதென்று தனக்கு இருக்கிற ஞானத்தால் தெரிந்துகொண்டார்.

                “சுத்தியிருக்குற கிராமங்கள்ல தெருவுக்கு ஒரு சபைய வச்சிக்கிட்டு அடிச்சுட்டு சாவுறாங்க. எங்க சபை பெருசுன்னா பெருசுதான்னு. சொந்த அண்ணன் தம்பிகளே பிரிஞ்சு போறாங்க இந்தச் சபைகளால. அவங்க கல்யாணத்து இவங்க போவமாட்டாங்க. இவங்க கல்யாணத்துக்கு அவங்க வரமாட்டாங்க. நம்ம கிராமத்துலயே இப்பவரை ஆம்பளைத்தனமா ஒரு சபைதான் இருக்கு. எல்லாரும் ஒரு வார்த்தையில நிக்கிறோம். ஓத்தா! அதையும் இல்லாம பண்ணிருங்க நம்மளும் அடிச்சுக்கிட்டு சாவோம்” கத்தினான் சேகர்.

                “டேய் ஜாலா! எதுக்குடா ஊரையே இரண்டாக்குற… மவனே! நான் சொல்றது என்னன்னா… நம்ம பாஸ்டர்கிட்ட ஜெபம் செஞ்சி ஒன் அப்பன குழியில வைடா” என்றார் இன்னொரு குலப் பெரியவர் ஏசேப்பு.

                “எங்க அப்பாவோட கடைசி ஆசை மாமா, அந்தப் பெந்தேகோஸ்தே சபைக்காரங்கள வச்சு அடக்கம் செஞ்சுக்கணும்னு” மீண்டும் அதையே முணுமுணுத்தான் சினஜாலய்யா.

                “மாமா! இந்தப் பேச்ச தவிர வேற பேச்சு பேசாதன்னு சொன்னாரா ஒங்க பாஸ்டரு” என்று சிரித்தான் ஆன்ந்துபாபு.

                எல்லாரும் சிரித்தார்கள். சினஜாலய்யாவிற்கு முகத்தை எங்கே வைத்துக்கொள்வது என்று புரியவில்லை.

                “இங்க பாருங்க, இப்பவே நம்ம கிராமத்துல நூத்துக்குப் பத்துப்பேரு அந்தப் பெந்தேகோஸ் சர்ச்சுக்குப் போறாங்க. நாம கண்டும் காணாம விட்டுட்டோம். இப்ப அவங்கள இங்க நுழையவிட்டா அப்புறம் எல்லாரும் ஆரம்பிச்சுடுவாங்க, அவங்க வந்து நம்ம கிராமத்துல ரெண்டாவது சர்ச்சுக் கட்டி கிராமத்தையே ரெண்டா உடைச்சுருவாங்க. நம்ம கிராமம் எப்பையும் போல ஒண்ணா இருக்கணும்னா நாம ரெண்டாவது சபைய எந்த வகையிலயும் இங்க வரவிடக்கூடாது” பெரிதாகச் சொன்னான் மோகன்.

                “அவன் சொல்றதும் வாஸ்தவம் தான். ஒன் சபைகாரங்கள நான் அங்க போகக் கூடாதுன்னு கண்டிச்சு சொல்லல, உன்னையும் அங்க போகாதனு சொல்லல, நம்ம கிராமம் ஒண்ணா சேந்து இருக்கணும்னா அவங்கள இங்க வரவிடமாட்டோம். அப்புறம் ஒன் இஷ்டம். ஒங்க அப்பாவை நம்ம பாஸ்டர் கையால ஜெபம் செஞ்சு குழியில வைக்கிறயா? இல்ல, எனக்கும் ஊருக்கும் சம்பந்தம் இல்லன்னு உன் இஷ்டப்பிரகாரம் நடக்கப் போறயா? ஒன் இஷ்டம். ஆனா அவங்க கிராமத்துல நுழஞ்சாங்கனா மட்டும், ஒனக்கு எந்தக் கல்யாணத்துலயும் தாம்பூலம் கொடுக்குறதும் இல்ல, உனக்கும் நம்ம கிராமத்துக்கும் சம்பந்தமும் இல்ல. பாஸ்டரா, இல்ல எங்க வார்த்த முக்கியமா” என்று மேலே எழுந்தார் குலப் பெரியவர் இஸ்ராயிலு.

                பாஸ்டர்கூட மேலே எழுந்தார்.

                “இன்னும் என்னடா ஒன் பிரச்சனை, எந்திச்சுப்போ, புரியலையா சொன்னது, இல்லன்னா அந்தச் சர்ச்சுலயிருந்து வெளிய அனுப்பிருவாங்கன்னு பயப்படுறயா… என்னடா ஜாலா? வாயத் தொறந்து பேசு, எங்க முடிவு இதுதான். அப்புறம் ஒன் இஷ்டம்” மேலே எழுந்தார் இன்னொரு குலப் பெரியவர் திமேத்தி.

                “இப்படி பேசுனா எப்படி உட்காருங்க பெரியப்பா…” என்றார் சினஜாலய்யாவின் தரப்பு சொந்தக்காரர் ஒருவர்.

                “பாருங்க, எங்க தாத்தா, எங்க அப்பா, நானு இந்தச் சபையில ஒரு பாகம். நா வேற, சபை வேற கிடையாது, ஒங்க இஷ்டப்படி நிர்ணயம் எடுத்துகிட்டா பாத்துட்டு சும்மா இருக்குறதுக்கு நா சாதாரண மனுஷன் கிடையாது. கடவுளோட பிள்ளை. நான் இங்க இருக்குறப்போ வேற ஒருத்தன் வந்து என் சபையில நுழைஞ்சா நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்கணுமா? அதுக்குத்தானா என் குடும்பம் எல்லாம் நம்ம சபைய இன்னைக்கு வரைக்கும் இறுக்கி புடிச்சுட்டுயிருக்கோம். இது நம்ம சபைக்கு நல்லதுக்கு இல்ல” வருத்தத்தோடு சொன்னார் அந்த ஊர் பாஸ்டர் கத்திக்கொண்டு.

                “டேய் மவனுகளே! அந்தச் சினஜாலய்யா நினைச்ச மாதிரியே நடத்திக்காட்டிட்டான்டா” இறுமிக்கொண்டே வந்தான் ஆனந்துபாபு அங்கே.

                “என்னாச்சுடா” என்று மேலே எழுந்தார் அய்யண்ணா, இளைஞர்கள் எல்லாரும் டென்சனோடு பார்த்தார்கள் அவன் பக்கம்.

                “ஓ! ஏசேபு மாமா! ஓ! சுப்ப மாமா….. ஒப்பன் மவனுகளா அந்தப் பெந்தேகோஸ்துகாரங்க வந்தானுக… குழிதோண்டுனானுக… மனுஷனை அடக்கம் செஞ்சுட்டு  அவங்கவங்க வீட்டுக்கு அவங்கவங்க போயிட்டானுக. எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றபடி அவ்வளவு தூரத்தில் மரத்துக்குக்கீழ் அமர்ந்திருந்த குலப்பெரியவரிடம் சொன்னான்.

                அங்கேயும் இங்கேயும் ஐந்தாகல் விளையாடுகிற பெண்கள், டீக்கடையில் அமர்ந்து பேசுகிற ஆடவர்கள், மரத்தின்கீழ் உட்கார்ந்து போனை அழுத்திக் கொண்டிருக்கிற இளைஞர்கள், கிழடு கட்டைகள், பொட்டுப் பொடுசுகள் ஒரு நூறு பேருக்குக் குறையாமல் அங்கே கூட்டம் கூட்டமாக வந்தடைந்தார்கள்.

                “டேய் மவனே! நீ சொன்னது நிசமா” என்றார் ஆச்சர்யமாகக் கூட்டத்திலிருந்த கொண்டய்யா.

                “வேணும்னா சமாதி கிட்ட போயி பாருங்க… நா சொன்னது சும்மான்னு நினைச்சா” என்றான் ஆனந்துபாபு.

                “ஒப்பம் மவனே! வெடி வெடிக்கும்போது போலாமேனு அப்படியே கண்ணை மூடுனன். அவன் மூஞ்சியகூடப் பாக்கமுடியல குழியில வச்சிட்டாங்க, கடைசியா பார்க்காம போயிட்டமே” வருத்தப்பட்டான் ரோசய்யா.

                “யாரு யாரு சாவுக்கோ நம்ம பறையங்க போயி தப்பு அடிச்சிட்டுயிருந்தோம், உண்மையான பறையன் சாவுக்குத் தப்புத் தாளம் இல்லாம செஞ்சுட்டீங்களேடா மவனுகளே” என்று மிகுந்த வருத்தப்பட்டான் எத்தனையோ பேருக்குத் தப்பு அடித்து வழியனுப்பிய எலீசா.

                “அடே! அந்தப் பெந்தேகோஸ்தே சபைகாரனுக்குத் தப்பு அடிக்கிறது… இனிப்புகளை எறியுறது… பூப்போடுறது இஷ்டம் இருக்காதாம் நாம அவங்களைத் தடுத்துடுவோம்னு நினைச்சு வேக வேகமாகத் தூக்கிட்டுப் போயி அடக்கம் பண்ணீட்டானுக. நா அங்கயிருந்துதான் வர்றன்” என்றார் அங்கே வந்த ராஜேஷ்.

                “அவங்க யாரு நம்ம கிராமத்துக்கு வந்து செத்த மனுசனை ஓத்துட்டுபோனா நம்ம குலப் பெரியவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க. மவனுகளா!” என்று வாயடைத்துப் போனான் ஏசுரத்தினம்.

                “மூணு சட்டிச் சோறு தின்னுட்டு கட்டில்ல தூங்குறாங்க” சிரித்தான் அய்யண்ணா.

                எல்லாரும் சிரித்தனர்.

                “ஒங்கொம்மா! ஒவ்வொருத்தனுக்கும் ஒரு சின்ன எறும்பு செத்தாலும்  குலப்பெரியவங்கதான் ஞாபகத்துக்கு வர்றாங்களோடே. இந்தக் கிராமத்துல இருக்குறவங்கல்லாம் என்னமோ குலப்பெரியவங்கப் பேச்சைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கிறமாதிரி. அப்பவே… எங்கப் பேச்ச மீறினா தாம்பூலம்கூடக் கொடுக்கமாட்டோம்ணு கறாரா சொன்னமே, குலத்தில இருந்து வெளிய அனுப்பிடுவோம்னு சொன்னோமே உங்க எல்லாரு முன்னாடியும். ஏ மவனே! அவன் போயிட்டான் பாரு அவனுக்கு அந்தச் சபைமேல பைத்தியம் எவ்வளவு தலைக்கு ஏறிச்சோ” ஆவேசமாகச் சொன்னாரு குலப்பெரியவர் ஹக்கையா.

                “ஆமா கல்லறைகிட்ட நம்ம பாஸ்டரு இல்லய்யா?” அவரு எப்படி ஒத்துக்கிட்டாருடா.“அவரு ஒத்துக்கமாட்டார்னு நம்பி, நாங்கெல்லாம் வீட்டுக்குவந்துட்டோம்” என்றான் சுகுர்ணாவ்.

                “எல்லாரும் அப்படித்தான் நெனைச்சோம், அவங்க வந்து வாக்குவாதம் செஞ்சும் இவருகூட ரொம்ப நேரமா ஒத்துக்கல்ல, அவங்ககிட்ட இருந்து தப்பிச்சுகிறதுக்கு வண்டி எடுத்துக்கிட்டு அந்தப் பஜாருக்கும் இந்தப் பஜாருக்கும் சுத்துனாரு. கொஞ்ச நேரத்துல ஏதோ ஒரு போன் வந்துச்சு. அவ்வளவுதான் டக்குனு ஒத்துக்கிட்டாரு. அந்தப் போன் செஞ்சது யாரு. இவரு எதுக்கு ஒத்துக்கிட்டார்னு கொஞ்சம்கூடப் புரியல. அதுக்குள்ள தூக்கிட்டு வந்துட்டாங்க” என்று சொன்னான் ராஜேஷ்.

                “அப்போ குழிக்கு ஜெபம் செஞ்சது யாரு” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான் ஜல்லிக்குவியல் மேல் அமர்ந்திருந்த சேகர்.

                முதல்ல நம்ம பாஸ்டரு ஜெபம் பண்ணி மூணுவாட்டி மண்ணுப் போட்டாரு. அங்க இருந்த நம்ம ஆளுக கொஞ்சபேரு நம்ம பாஸ்டர் கூடவே மண்ணு போட்டாங்க. அப்புறம் அவங்க வந்து அவங்க பாஷையில ரொம்பச் சத்தம்போட்டு ஜெபம் செஞ்சுகிட்டு, பாஸ்டர்கூட நம்ம ஆளுக எல்லாம் சிரிச்சுகிட்டே வெளியே வந்தோம். பிறகு அவங்களும் ஜெபம் செஞ்சு மிச்சமிருக்குற குழிய மூடிட்டுப் போயிட்டாங்க” என்று விவரித்தான் ராஜேஷ்.

                “செத்த மனுஷனை ரெண்டுவாட்டி மூடூன பெரும நம்ம ஊருக்குத் தான் சேரும் பாரு. ஊர் ஊரெல்லாம் பேசிக்குவாங்க இந்தச் சரித்திரத்த” என்றான் அங்குப் புகையிலைப் போட்டுக் கொண்டிருந்த பிரசாத்.

                “ஓ! மாமா ரெண்டுவாட்டி மூடுறது இல்லய்யா ஒங்கொம்மா! பாரு இந்தச் சபையெல்லாம் சேர்ந்து மெதுவா ஒண்ணா இருக்குற நம்ம ஊர, ரெண்டுதுண்டா பிரிக்கலனா கேளு” என்று வெறித்தனமான கோபத்துடன் கையளவுக்கு ஜல்லியை வீசுனான் சேகர். அது தவறாமல் சென்று அந்தப் பக்கம் நிறுத்தப்பட்டிருந்த பாஸ்டரின் வண்டியில் பட்டு வண்டிக் கண்ணாடி உடைந்தது.

                “டேய் வழிதப்புனவனே! ஒனக்கு எதுக்குடா யாரு எப்படிப் போனா என்ன! இது கடவுளோட விசயம்டா! எப்படின்னாலும் அப்படிப் பேசக்கூடாது….. என்று, “பரலோகப் பிதா! ஏசய்யா! என் மகன் உம்மைப் பற்றி அறியாமல் தூஷித்தான் அப்பா, தெரியாமல் பேசிய பிழைகளை மன்னியுங்கள், அவனை உம்முடைய ரத்தத்தால் பரிசுத்தப் படுத்துங்கள், உம் திருக்கைகளால் தொடுங்கள், அவன் மனதை மாற்ற உதவுமாறு தயை செய்யுங்கள் என்று வேண்டுகிறேன் பிதாவே! பாருங்கள் பரலோகப் பிதாவே! செய்த தவறுகளைப் பட்சாதபத்தோடு ஒத்துக்கொண்டால் மன்னிக்கிற பெரிய தேவனய்யா நீர்…” என்று அங்கேயே முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள் சேகரின் பாட்டி. எல்லாரும் கண்களை மூடிக்கொண்டார்கள்.

தெலுங்கில்: இன்ட்ல சந்திரசேகர்

இன்டல சந்திரசேகர்:

                ஹைதராபாத்திலுள்ள ஆஹாகான் அகடாமியின் நாடகத்துறைப் பேராசிரியர். நாடக இயக்குநர், ஒளி ஒலியமைப்பாளர், எழுத்தாளர், நூற்றுக்கணக்கான நாடகங்களை இயக்கியவர். ஆந்திரப்பிரதேச, பிரகாசம் மாவட்டத்தில் கண்டுலுருவில் பிறந்தவர். இவரின் கதைகள் தெலுங்கு இதழ்களில் வெளிவந்துள்ளன. நாடகத்துக்கான நந்தி விருது பெற்றவர். இவரின் கதைத் தொகுப்பு ரங்குல சீகட்டி ஆகும். விசாலாந்திரா பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ‘எர்ர கப்பிலால்ல வேட்ட”என்பது இவரின் நாவல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.