காணாமல் போவது எத்தனை வசீகரமானது.

தினம் தினம்

எத்தனையோ பேர்

காணாமல் போகிறார்கள்

குழந்தைகள்

முதியவர்கள்

பெண்கள்

மனநிலை சரியில்லாதவர்கள்.

காணவில்லை விளம்பரங்கள்

செய்தித்தாள்களில்

தொடர்ந்து

வருகின்றன.

 

அவள் மட்டும்

தொலைவதே  இல்லை

எங்கு போனாலும்

வழி தெரிந்து விடுவது

கொடுந் துயரம்.

காணாமல் போகக்கூட

ஆணாக வேண்டும்

 

தொலைவதற்கு முன்பான

முன்னேற்பாடுகளின் பட்டியல்

நெடுஞ்சிகை மழித்தல்

காயம் முற்றும் மூடும் காவி

ருத்ராட்ச மாலை

திருவோடு

அணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கை

ஏதோவொரு ரயில்

நிறைவு.

 

நடந்து நடந்து

பூமியாள

உணவும் நீரும்

இரந்து உண்

அகந்தை அழி

நான் தொலை

இந்த உடலுடனான

பிணைப்பு ஒழி

புள் போல் பற

வனாந்திரத்தில்

உடல் விடு

 

காலமாவதற்கு முன்பு

நிச்சயமாய்

காணாமல் போய்விட வேண்டும்.

 

-தேன்மொழி சதாசிவம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.