முத்துராசா குமார் கவிதைகள்

எச்சித்தட்டு

புதையலாகத் தென்பட்டது
தட்டில் பொறித்தப் பெயர்.
வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை.
இரவில் எப்படியும் அபகரித்துவிட
புதையலுக்கு மேலே
வனம் செய்து
நீர் தேக்கினேன்.
வனம் அழித்து வறட்சியாக்கியும்
புதையலைப் பெயர்க்க முடியவில்லை.
மூன்று வேளைத் தோல்விகள் தாளாது
பெயருடைய ஆளையே
விழுங்க எழுந்தேன்.
சுவரில் தொங்கும்
கண்ணாடிச் சட்டகத்துக்குள்
சேரில் அமர்ந்திருந்தார் அவர்.
பெயரைப் பச்சைக் குத்துகையில்
இரத்தம் கக்காத தட்டு போல
தடயமின்றி சட்டகத்தை விழுங்கினேன்.

•••

காலசித்தப் பிறழ்வு.

விளக்குமாறு குச்சியைக் கடக்கும்
மரவட்டையாக
தண்டவாளத்தில் தலை வைத்த
உடலைப் பொருட்படுத்தாது
விரைகின்றன ரயில்கள்.
தூக்குக்கயிறுகள் அணிகலன்களாகின்றன.
நரம்பறுக்கும் கத்திகள்
பிறந்தநாள் ‘கேக்’கென குதூகலிக்கின்றன.
போர்வெல் துளைகளின்
குதிகாலளவுத் தண்ணீரில்
குதித்தாக வேண்டிய நிலை.
நஞ்சுச் சொட்டுகள் ஏப்பமாகின்றன.
தற்கொலைகள்
உடல்களை மதிக்காத காலம்.

~ முத்துராசா குமார்

Previous article ப்ரியா தம்பி”யின்  “பேசாத பேச்செல்லாம்” கட்டுரைத் தொகுப்பு.
Next articleகாணாமல் போவது எத்தனை வசீகரமானது.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments