ப்ரியா தம்பி”யின்  “பேசாத பேச்செல்லாம்” கட்டுரைத் தொகுப்பு.

ஒரு புத்தகத்தைப் வாசித்து முடித்த பிறகு அதைப்பற்றி நிறைய எழுத வேண்டுமென்று மனம் ஒருபுறம் பரபரக்க, இதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது என்ற நிறைவு மறுபுறமும் ஒருசேர ஏற்படும் உணர்வை அனுபவித்தது உண்டா.. அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்தது “ப்ரியா தம்பி”யின் “பேசாத பேச்செல்லாம்” கட்டுரைத் தொகுப்பு.

ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது ஏதோ ஒரு அத்தியாயத்தை வாசித்துவிட்டு, தேடி வாங்கிய புத்தகம். பொதுவான வாசகர்களுக்கு கதைகளோடு ஒப்பிடும்போது கட்டுரைகளின் மீதான ஈர்ப்பென்பது சற்று குறைவுதான், என்னையும் சேர்த்துதான். ஆனால், இந்த தொகுப்பினைப் பொறுத்தவரை, ஆசிரியரின் எழுத்துநடை  என்பது அழகான சிற்றோடையாய் இயல்பாய் ஓடி, நம்மையும் அதனுள் இழுத்துச் செல்கிறது.

ஆரம்பத்தில் “திரும்பத் திரும்பத் தூங்கச் சொன்னா 100 – க்கு கால் பண்ணி கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்” என்பதான மகளுக்கும், ப்ரியாவுக்குமான உரையாடலை மையப்படுத்தி,  இன்றைய குழந்தைகளின் தைரியத்தையும், அறிவின் விசாலத்தையும் எடுத்துரைத்து கேள்வியே கேக்க முடியாத சூழலில்  நாம் வளர்ந்த விதத்தோடு ஒப்பிடுவதில் தொடங்கி.. ஒரு தாயாக, மகளாக, தோழியாக, காதலியாக, மனைவியாக எல்லோரின் குரலாகவும்.. பொதுவெளியில் பேசத் தயங்குகிற  எல்லாவற்றையும் பேசுகிறது இந்த “பேசாத பேச்செல்லாம்”.

குழந்தைகள் மீதாக வீடும், பள்ளியும் திணிக்கும் அழுத்தங்களை, வன்முறைகளை, பாலின பேதங்களை பேசும் அதே நேரத்தில் “தெரிய வேண்டிய வயதில் எதுவுமே தெரியாமல் இருந்தது நம் பிரச்சனை என்றால், தெரியக் கூடாத வயதில் எல்லாம் தெரிந்து கொள்வது  இப்போதைய தலைமுறையின் பிரச்சனை” என்று ப்ரியா சொல்வது, ஏழு வயதில் மகனையும், ஐந்து வயதில் மகளையும் கொண்ட எனக்கு நேரடி அனுபவம்.

பெண்கள் டூவீலர் ஓட்டுவதை பற்றி “பெண்கள் வைத்திருப்பது வெறும் வண்டியல்ல, அவர்களின் இறக்கைகள் ” என்கிறார். உண்மைதான் முதன்முதலாக அப்பாவின் டிவிஎஸ் பிப்டியை தனித்து ஓட்டியபோது இறக்கை முளைத்தது போலத்தான் இருந்தது. வாசிக்கும் போதே இந்தப் புத்தகம் கிளறி விடும் நினைவுகள் ஏராளம். “புடவையைத் தவிர வேறெந்த டிரஸ் அணிபவர்களும் சாத்தான்கள் எனச் சொல்லிவந்த சுசிலா மேரி, தன்னுடைய 45- வது வயதில் சுடிதார் அணியத் தொடங்கினார், சுடிதாரை சாத்தானிடமிருந்து பிடுங்கி தேவனிடம் தந்ததும் அந்த டூவிலர்தான்” என்ற வரிகள் சட்டென்று அம்மாவை நினைவுபடுத்தின.

ப்ரியா தம்பி

அம்மா சைக்கிள் ஓட்டிப் பழக ஆசைப்பட்டபோது 40- களின் தொடக்கத்தில் இருந்தார். ஆளற்ற இரவுகளில், ஊரின் தார்ச்சாலைகளில்  சைக்கிள் அடுத்து வண்டியென நாங்கள் அம்மாவுக்கு கற்றுக் கொடுத்தபோது “இதுக்கு மேல கத்துக்கிட்டு என்ன செய்யப் போறோம்” என்று சிரித்த பெரியம்மாக்களும், அத்தைகளும் அடுத்தடுத்து மகள்கள் பின்னே ஓட, அதே இரவுகளில், சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டார்கள். சிறுநகர பேருந்து நிலையமொன்றின் முன் நின்று இதனை நான் அசைபோட்டுக் கொண்டிருக்கையில், டூவிலரில் சேலையணிந்த ஒரு நடுத்தர வயதுப்பெண்… சக வயதுப் பெண்கள் இருவரை பின்வைத்து கம்பீரமாக கடந்து கொண்டிருக்கிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு பிறகான அந்தப் பெண் மற்றும் குடும்பத்தாரின் மனநிலையைப் பேசும் அத்தியாயம் இந்த தொகுப்பில் மிக முக்கியமானது. வன்கொடுமைக்கு எதிராக போராடும் பெண்களைப் பற்றிய கருத்தினை “இருட்டை விட துளி ஒளி மேலானது” என்று அழுத்தமாக முன்வைக்கிறார். இந்திய சமூகத்தில் ஆண்குழந்தை வளர்ப்பு, ஆண் பெண் நட்பு சாத்தியக்கூறுகள், இது போன்ற அத்துமீறல்கள் அத்தனையும் கண்ணுக்குத் தெரியாத நூலிலையால் பிணைக்கப்பட்டவை.  ஆண் பெண் பால் பேதமற்று சக மானுடமாக, சாதாரணமாகப் பழகத் தொடங்குகிற ஒரு நாளில் இந்த நூலிலை முழுவதுமாக அற்றுப்போகும்.

அம்மா மகள் உறவு, அப்பா மகள் உறவுகளை  எந்தவித பாசாங்கான மேல்ப்பூச்சுமின்றி  உள்ளபடி சித்தரிக்கிறார். அப்பா மீதான மகள்களின்  பெருங்காதலை பேசும் அதே தருணத்தில் அந்த உறவில், சிறு விலகல் ஏற்படும் புள்ளியில் அப்பாக்களின் மனநிலையைப் பற்றி ஆண்களின் பக்கமும் நின்று கவனிக்க வைக்கிறார். வெறுமனே, ஆண்களைக் கைநீட்டி குற்றம் சாட்டாமல், அவர்களின் குணாதசியங்களை தீர்மானிப்பது “ஆண்மை”யின் மீதாக குடும்பமும்,  சமூகமும் கட்டமைத்து வைத்திருக்கும் வரையறையே.. அதைவிட்டு ஆண்கள் விலக முடியாத நிதர்சனத்தையும் ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

பாலியல் தொழிலாளிகள் மற்றும் திருநங்கைகளின் மீதான சமூகத்தின் பார்வை நம் சட்டையை உலுக்கி கேள்வி கேட்கின்றன. பெருநகரங்களில் பெருகிவரும் ஆண் பாலியல் தொழிலாளி பற்றி வருவது மெல்லியதொரு அதிர்வை ஏற்படுத்துகிறது. “முட்டை வடிவ வார்ப்பில் ஊற்றி வார்க்கப்பட்ட ஒருவன், சதுரமாக வெளிவர வேண்டும் என நினைப்பது நம் தவறுதானே?” என ஆண்களுக்கான நியாயங்களை அவர்கள் பக்கமும் நின்று பார்ப்பதோடு மட்டுமின்றி பெண்களின் பலவீனங்களையும் நேர்மையாக அலசுகின்றது. பெண்களுக்கு முதல் எதிரி பெண்தான் என்பதையும் சிறிய விசயங்களில் கூட பெண்களுக்கு இருக்கும் தயக்கங்களையும், அரைகுறைப் பெண்ணிய புரிதல்களைப் பற்றியும் தெளிவாக பதிவு செய்கிறார்.

ரம்யா ரவி

சினிமாவில் காட்டப்படும் கதாநாயகி பெண் பிம்பங்களுக்கான அபத்தங்களை பிரியா முகத்திலறைய பேசிக் கொண்டிருக்கும் இடத்தில், நேற்றுப் பார்த்த “மிஸ்டர். லோக்கல்” படத்தில் நயன்தாராவின் கேரக்டர் வடிவமைப்பு நினைவு வந்ததை தடுக்க இயலவில்லை… அந்த கேரக்டருக்கான அர்த்தம் என்னவென்பது படம் பார்த்து முடித்த பிறகும் விளங்கவில்லை. அதே சமயம் வெகுஜன ஊடகமான திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் நேர்மறையாக இருக்கும் பட்சத்தில் மாற்றங்களுக்கான வாய்ப்பு சிறிதளவேனும் உண்டென்று ஆசிரியர் குறிப்பிடுவதும் மறுக்க முடியாத உண்மை. இன்னும், இந்த விளம்பரங்கள், தொலைக்காட்சி தொடர்கள் முன்னிறுத்தும் பெண்பிம்பங்களைப் பற்றியும் கொஞ்சம் பேசியிருந்தால் இன்னும் நிறைவாய் இருந்திருக்கும்.

இந்த தொகுப்பு வெறும் பெண்களுக்கானது மட்டுமானதல்ல. காலம் காலமாக “இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியலயே”என்று புலம்பும் ஆண்களுக்காகவும்தான். அணிந்துரை எழுதிக் கொடுத்த ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் தொடங்கி, விமர்சித்து, பாராட்டி, உற்சாகப் படுத்தியதாக ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடும் முக்கால்வாசிப் பேர் ஆண்கள்தான். என்னுடைய கணவர் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டுமென்பது என்னுடைய நெடுநாளைய ஆசையும் கூட. ஆண்பெண் உறவுச் சிக்கல்களை மிக இயல்பாகப் பேசும் “பேசாத பேச்செல்லாம்” தமிழில் தவிர்க்க முடியாத கட்டுரைத் தொகுப்புகளில் இடம்பிடிக்கத் தகுந்த ஒன்று.

 

-ரம்யா ரவி

நூல்: பேசாத பேச்செல்லாம்(கட்டுரைத் தொகுப்பு)

ஆசிரியர்:  ப்ரியா தம்பி

பதிப்பகம் : விகடன்

விலை: ரூ 220 /-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.