கனலி இணைய இதழ் வாசகர்களுக்கு வணக்கம் !
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் ஆசான்களில் ஒருவரான தி. ஜானகிராமனுக்கு ஒரு சிறப்பிதழ் வெளியிட வேண்டும் என்கிற பெரிய ஆசையும் கனவும் கனலி இணைய இதழ் தொடங்கிய போதே எங்களுக்கு இருந்தது. ஏற்கனவே, ‘சொல்வனம்’ – இணைய இதழ் தி.ஜானகிராமனுக்கு ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது என்றாலும் கனலி இணைய இதழும் அவருக்குப் பெருமைச் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
இந்தக் கனவிற்கு முதல் ஆதரவைத் தெரிவித்தவர் மூத்த வாசகர் வேலூர் பா.லிங்கம் அவர்கள் தான். அதன் பிறகு கவிஞர் ராணிதிலக் உடனான ஒரு உரையாடலில் சிறப்பாகச் செய்யுங்கள் என்று தி.ஜானகிராமனின் இரண்டு சிறுகதைகள் மற்றும் ஒரு நாடகத்தைத் தந்து உதவினார். அவர் வழியாக கவிஞர் ரவிசுப்பிரமணியத்தின் அறிமுகம் கிடைத்தது. அவரும் தன் பங்கிற்கு சில அரியப் புகைப்படங்கள் மற்றும் சிலசிறப்பான பழைய கட்டுரைகளை தேடித் தந்தார். இப்படி ஒருவர் மூலம் இன்னொருவர் என்று ஆதரவுக் கரங்கள் நீண்டு கொண்டேப் போனது. கடைசியாக தி.ஜானகிராமன் பற்றி இவர்களிடம் எல்லாம் படைப்புகள் கேட்கலாம் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம். பட்டியல் தயார் செய்த அன்றே அனைவருக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாகப் படைப்புகள் கேட்டோம். உடனடியாக கிடைத்த பதில்கள் ஆச்சரியப்பட வைத்தது. சற்று யோசித்தால், இதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது தி.ஜானகிராமன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமையின் எழுத்துகளில் மயங்காத இலக்கிய ஆளுமைகள் இங்கு உண்டா என்ன?
அந்த வகையில் கனலி இணைய இதழின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழுக்குச் சிறப்பான கட்டுரைகளை எழுதி அளித்த எழுத்தாளர்கள்:
- எழுத்தாளர் சி.எம். முத்து
- எழுத்தாளர் நா.விச்வநாதன்
- கவிஞர் சுகுமாரன்
- கவிஞர் ரவி சுப்பிரமணியன்
- எழுத்தாளர் சு.வேணுகோபால்
- எழுத்தாளர் பாவண்ணன்
- எழுத்தாளர் வண்ணநிலவன்
- எழுத்தாளர் கல்யாணராமன்
- எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்,
- கவிஞர் ராணிதிலக்,
- எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி,
- எழுத்தாளர் அ.வெண்ணிலா
- கவிஞர் கண்ணம்மாள் மனோகரன்
- எழுத்தாளர் வியாகுலன்
- எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப்
- எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன்
- எழுத்தாளர் உஷா தீபன்
- விமர்சகர் சரவணன் மாணிக்க வாசகம்
- எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன்
- எழுத்தாளர் ரா.செந்தில் குமார்
- எழுத்தாளர் திரிலோக சீதாராமன் அவர்களின் மகன் சுப்ரமணியன் சீதாராம்,
- மோகமுள்- திரைப்பட இயக்குனர் ஞான ராஜசேகரன்
- எழுத்தாளர் விக்ரம்
- எழுத்தாளர் முத்து
நினைவுகள், பகிர்வுகள், வாசிப்பனுபவங்கள், திறனாய்வுகள் என மிகச் சிறப்பான கட்டுரைகளை அளித்தவர்கள் அனைவருக்கும் கனலியின் நன்றியும் அன்பும் !
இந்த சிறப்பிதழில் தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்பு செய்த சிறுகதை, அவரின் பயணக் கட்டுரை, அவரின் கவிதை ஒன்று என்று தேடித்தேடி வெளியிட்டுள்ளோம்.
தி.ஜானகிராமன் வாழ்ந்த காலத்தில் அவரிடம் நெருங்கிப் பழகிய மாபெரும் இலக்கிய ஆளுமைகளான க.நா.சு, கரிச்சான் குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ், சிட்டி போன்றவர்களின் கட்டுரைகளையும் பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாரிசுகளிடம் உரிய அனுமதிப் பெற்று இந்த நூற்றாண்டுச் சிறப்பிதழில் வெளியிட்டுள்ளோம்.
மேலும் , தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த நண்பரான திருலோக சீதாராம் அவர்களின் மகனான சுப்பிரமணியன் சீதாராம் அவர்கள் எழுதியுள்ள நினைவுக் கட்டுரையும், மோகமுள் நாவலைத் திரைப்படமாக எடுத்த திரைப்பட இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்களின் கட்டுரை ஒன்றும் இந்த சிறப்பிதழில் வெளியாகியுள்ளது.
தி.ஜானகிராமன் மகளான உமாசங்கரி அவர்களைப் பற்றியும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். எழுத்தாளர் ராஜநாயகம் தான் உமாசங்கரி அவர்களின் அலைபேசி எண் தந்து உதவினார். உடனடியாக அவரிடம் பேசினோம். தி. ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியிடப் போகிறோம் என்று சொன்னவுடன் ‘மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார். உடனடியாக அவரின் கைவசம் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்றைத் தந்து உதவினார். உங்களின் நேர்காணல் ஒன்றும் வேண்டும் என்று சொன்னவுடன். ‘நிச்சயம் தருகிறேன்’ என்று கேள்விகளைப் பெற்று உடனடியாக எழுதித் தந்தார். அவருக்கு என்றென்றும் அன்பும் நன்றியும்.. அதே நேரத்தில் தி.ஜானகிராமனின் நேரிடையான நேர்காணல் ஒன்றுகூட இல்லையே என்கிற வருத்தம் மனதளவிலிருந்தது. உடனே ஆசிரியர் குழு நண்பர்கள் கூடிப் பேசி ஒரு திட்டத்தை முன் வைத்தார்கள். அது அவரின் கட்டுரைகளில் இருக்கும் சிறப்பான பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்குரிய கேள்விகளை உருவாக்குவதன் மூலமாக ஒரு நேர்காணல் வடிவத்தைத் தயாரிப்பது ஆகும் . இதை ஒரு வித்தியாசமான முயற்சியாகச் செய்திருக்கிறோம். அதைப் படித்துவிட்டு வாசகர்கள் தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எங்களுக்கு நிச்சயம் எழுத வேண்டும்.
தி.ஜானகிராமன் தனது மானசீக குருவான கு.ப.ரா- வுக்கு எழுதிய மிகச்சிறப்பான அஞ்சலிக் கட்டுரை ஒன்றை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று மாதக்கணக்கில் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் எங்களது முகநூல் பதிவைப் பார்த்து, அந்த கட்டுரையை எங்களுக்குத் தந்து உதவிய எழுத்தாளர் மாலன் நாராயணன் அவர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும்.
இந்த சிறப்பிதழுக்கு மிகச் சிறப்பாக ஓவியங்கள் வரைந்து அளித்த ஓவியர்கள் சுந்தரன் மற்றும் நெகிழன் ஆகியோருக்கு மிக்க அன்பும் நன்றியும்.
இப்படி, நிறைய நிறைய நன்றிகள் அனைவருக்கும் சொல்லிக் கொண்டே போகலாம்.
தி ஜானகிராமன் போன்ற நூற்றாண்டு காணும் ஓர் இலக்கிய ஆளுமைக்கு எத்தனை சிறப்பிதழ்கள் வெளியிட்டாலும், அதில் அவர்களையும் அவர்களின் எழுத்துக்களையும் முழுவதுமாக எக்காலத்திலும் உள்ளடக்கிக் கொண்டு வரவே முடியாது என்றே நினைக்கிறோம். ஏன் அவரே இதை ஒரு இடத்தில் சொல்கிறார்.
[ads-quote-center cite=’தி.ஜா’]” மீண்டும் சொல்கிறேன். கலைவடிவம் என்னுடையது. என் தவத்தின் பெருமையைப் பொறுத்தது. மூளியும் அதன் பெருமை. சட்டம் போட்டு என்னைப் பயமுறுத்தாதீர்கள் என்று. நான் உங்களுக்காக எழுதுகிறதைப் பற்றி நீங்கள் அந்தத் தீர்ப்பெல்லாம் சொல்லலாம். நான் கவலைப்பட வில்லை. வாலைப் போட்டுவிட்டு பல்லியைப் போல் தப்பிவிடுவேன்”[/ads-quote-center]
ஆம் அவர் தப்பிவிடக் கூடியவர் தான். அவருக்கு என்ன அவர் தப்பிவிடுவார். அவர் எழுத்துகள் என்கிற மாய இசையிலிருந்து நாம் தான் எக்காலத்திலும் தப்பிவிட முடியாது இல்லையா?.
ஆம், அவரும் பரிபூரணம் அவரின் எழுத்துக்கள் என்றென்றும் பரிபூரணம்.
அந்த பரிபூரணத்திற்கு நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியிடுவதில் ‘கனலி’ – கலை இலக்கிய இணைய இதழ் என்றென்றும் பெருமை கொள்கிறது.
நிறைவாகக் கனலி இணைய இதழின் நண்பர்களாகப் பயணிப்பதோடு கேட்கும் போதெல்லாம் பிழை திருத்தம், தட்டச்சு செய்வது என உதவிக் கொண்டிருக்கும் தோழர்கள் மகேஷ், சாருலதா, அனிதா ராஜேந்திரன் மற்றும் எழுத்தாளர்கள் கீதா மதிவாணன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கும் கனலியின் அன்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாசக நண்பர்கள் அனைவரும் கனலி-யின் “தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழை முழுவதுமாக வாசித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களையும் விமர்சனங்களையும் எங்களுக்கு எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைவருக்கும் நன்றி…!
[ads_hr hr_style=”hr-fade”]
[mkdf_button size=”” type=”” text=”New Update:” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”” target=”_self” color=”” hover_color=”” background_color=”” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]
தி.ஜானகிராமன் எழுதிய மந்திர அடுப்பு சிறார் இலக்கியச் சிறுகதை
இந்தக் கதை குறித்து கனலி-க்கு தெரியப்படுத்தி உதவியமைக்கு சிறார் இலக்கிய எழுத்தாளர் கொ.மா.கோ இளங்கோ அவர்களுக்கு அன்பும் நன்றியும்..!
[ads_hr hr_style=”hr-vertical-lines”]
சிறப்பிதழை வாசிக்க : தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்
– ‘கனலி’ இணைய இதழ் – ஆசிரியர் குழு
தொடர்புக்கு:
அலைப்பேசி: +91 90800 43026
மின்னஞ்சல்: [email protected]
சிறப்பான முறையில் தி ஜா. சிறப்பிதழ் வெளியிட்டமைக்கு நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்.