7 – புலன்விசாரணை
போலீஸ், தெருவில் நுழையும் காய்கறி கடைக்காரன், பால்காரன், அயன்வண்டிக்காரன், துணி துவைப்பவன் என ஒருவர் விடாமல் விசாரிக்கத் தொடங்கியது. அனைவரையும் வண்டியில் ஏற்றிப் போலீஸ் ஸ்டேசன் கொண்டுச் சென்றார்கள். தெருவில் சந்தேகப்படும்படி செல்லும் அனைவரையும் ஜீப்பில் ஏற்றினார்கள். இதில் குப்பை பொறுக்கும் சிறுவர்களும் அடங்குவார்கள்.
இவர்களிடம் இருந்து என்ன பெரியதாய் விசயம் கிடைத்துவிடப் போகின்றது? இவ்வளவு பெரிய கடத்தலில் இவர்கள் எப்படி ஈடுபட முடியும் என்ற சந்தேகம் ஏற்படலாம். போலீசுக்கு சிறியதாக ஒரு விசயம் கிடைத்தால் போதும், அந்தப் புள்ளியில் இருந்து தொடங்கிக் கடைசிவரை போய்விடுவார்கள். இறுதியில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவார்கள்.
ஒரு துப்பு கிடைத்துவிடாதா? போலீஸ் விசாரிக்கின்றது எனத் தெரிந்தால் குற்றவாளிக்கு ஒரு பதற்றம் ஏற்படும். குற்றவாளி அருகில் இருந்தால் ஏதாவது தடையத்தை விட்டுச் செல்ல நேரிடும். எல்லா சலசலப்பும் அந்த ஒரு சிறிய புள்ளியைத் தேடியே நகர்கின்றது.
எல்லோரையும் விசாரிக்கின்றனர் எனத் தெரிந்ததும் தெரு அடங்கிப்போனது. ஒருவரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. ஒவ்வொருவரிடமும் புதிதாக யாரையாவது பார்த்தீர்களா? என்ற கேள்வியை போலீஸ்காரர்கள் கேட்டுத் துளைத்தனர்.
ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றவர்களிடம், “உனக்கு தெரியும் ஒழுங்கா சொல்லிவிடு!” என்ற மிரட்டலோடு மனிதாபிமானமற்ற முறையில் கம்பு கொண்டு அடிக்கவும் செய்தனர். இந்த உருட்டல், மிரட்டல், அடி அங்கிருந்தவர்களைப் பேச வைத்தது. ஒவ்வொருவராகத் தங்களுக்குத் தெரிந்த விசயத்தைக் கூற ஆரம்பித்தனர்.
எல்லா விசாரணைகளுக்குப் பின்பும், காய்கறி கடைக்காரன் உள்ளேயே உட்கார வைக்கப்பட்டான். பால்காரன் முன்னுக்கு பின்னாகத் தகவல் கொடுத்ததால் பின்பக்கம் கைகள் கட்டப்பட்டு, அறையின் மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். அயன் வண்டிக்காரனும், சலவைக்காரனும் சம்பவம் நடந்த அன்று ஏரியாவிற்கு வரவில்லை என்பதால் விடுவிக்கப்பட்டனர்.
பால்காரன் பேப்பர் காரனுக்கு தெரியும் என்று கூறியதால் செய்தித்தாள் போடும் ஏஜெண்டை பிடித்து, செய்தித்தாள் விநியோகிக்கும் பையனை அழைத்துவரச் கூறியிருந்தார் காந்திராஜன். ஒருவழியாக செய்தித்தாள் விநியோகிக்கும் பையனும் பிடித்து வரப்பட்டான். இப்போது, அவனிடம் விசாரணையைத் தொடங்கினார்.
“டேய் ஒழுங்க உனக்கு தெரிந்த விசயத்தை சொல்லிடு. இல்ல, அதோ அங்க கால் வீங்கி கை வீங்கி உட்கார்ந்து இருக்கான் பாரு பால்காரன், அவனை அடிச்ச மாதிரி நொறுக்கிப் பிடுவோம்.”
“சார்! எனக்கு எதுவும் தெரியாது.”
“நல்லா யோசித்து சொல்லு. அவசரம் இல்லை. விசாரிக்கிற விதத்தில் விசாரிச்சாதான் வருமான்னு, அதுக்கு நான் பொறுப்பில்ல. நீயே முடிவு பண்ணிக்க. இரண்டு நாளைக்குள்ளே புதுசா யாரையும் பார்த்தியா?”
“சார் அப்படி யாரையும் பார்க்கலை. “
“சார்! இப்படி எல்லாம் கேட்டா பதில் சொல்ல மாட்டான். முருகா அந்த லத்தியை கொண்டு வா!” என ஏட்டு ரத்தினவேல் கத்தினார்.
“சார் ! இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு வடநாட்டுக்காரன். அப்பளக்கம்பெனிக்காரர் வீட்டையே பார்த்துகிட்டு நின்னுகிட்டு இருந்தான். நான் தான் இங்கெல்லாம் வாங்க மாட்டாங்கன்னு அவனை விரட்டி விட்டேன்.”
“அவனை அடையாளம் காட்ட முடியுமா?”
“சார். அவனை அடையாளம் காட்ட முடியும்.”
“சரி வேறு ஏதாவது நினைவுக்கு வந்தா சொல்லு. அந்த ஓரத்தில் உட்கார். பால்காரனுக்கு புத்தி சொல்லி தெரிஞ்சதைச் சொல்லச் சொல்லு.”
அந்த பையன் பால்க்காரன் அருகில் சென்று, “ஏன் அண்ணே! இந்த வேண்டாத வேலை. நான் உனக்கு என்ன பாவம் செய்தேன். ஆனா என்னை மாட்டி விட்டதுக்கு செமத்தியா உதை வாங்கி இருக்கப் போல…”
சுந்தராஜனுக்கு வெளியில் என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை. அவர் கையில் வைத்திருந்த போனையே பார்த்துக் கொண்டிருந்தார். மணி ஆறு ஆகியதும், அவரது செல்போன் ஒலிக்க ஆரம்பித்தது. போலீஸ் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் துரை சுதாரிக்க ஆரம்பித்தார். அவர் போன்காலை ட்ரேஸ் செய்ய ஆரம்பித்தார்.
“ஹாலோ! யார் பேசுறது?” என பதற்றமாகக் கேட்டார்.
“சார். நான் சிந்தாமணியில் ராமூ அங்கிள் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கின்றேன். நேத்து இரவு அங்கிள் வீட்டுக்கு வரலையாம். அவர் போனும் சுவிட் ஆப் ஆகியிருக்காம். அதான் அத்தை விசாரிக்கச் சொன்னாங்க. கொஞ்சம் அங்கிள் இருந்தா போனைக் கொடுங்க. அத்தை பேசணுமாம்.”
“ஏய்! உன் போன் என்னாச்சு? வீட்டில் தகவல் கொடுக்கலையா? இந்தா உன் மனைவி பேசணுமாம்” என எரிந்து விழுந்தார்.
“சொல்லும்மா! அய்யா வீட்டில்தான் இருக்கேன். எப்படியும் இன்று குழந்தைகள் கிடைத்துவிடுவார்கள். போலீஸ் போன் யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொன்னதால் சுவிட் ஆப் பண்ணிட்டேன். சரி வை. நாளைக்குதான் வீட்டுக்கு வருவேன்.”
“பவுன் போல் பிள்ளைங்க. காசு போனா சம்பாதிச்சிடலாம். கேட்கிறத கொடுத்துக் கூட்டிகிட்டு வர்றச் சொல்லுங்க.”
“கண்டதை பேசாதே. போனை வை. எல்லாம் அவுங்கப் பாத்துக்கிடுவாங்க.”
“என்னத்த தப்பா சொன்னேன். இப்படி கோபிச்சுக்கிறீங்க. சரி வைக்கிறேன்.”
காந்திராஜனுக்கு போனில் தொடர்பு கொண்டு சப் இன்ஸ்பெக்டர் துரை, “சார், கொஞ்சம் நேரம் முன்னாடி சுந்தராஜன் போனுக்கு கணக்குபிள்ளையோட மனைவி பேசினாங்க. ஆனா, அந்தச் செல் போன் நம்பர் சதீஸ் குமார் என்ற இருபத்து இரண்டு வயசு பையனோடது. பணம் கொடுத்து கூட்டிகிட்டு வாரச் சொல்லுங்கன்னு பேசிகிடாங்க. எதுக்கும் இரண்டு தட்டு தட்டி விசாரிங்க.” என்றார்.
சிந்தாமணி அப்பளக் கம்பெனிக்கு அருகில் குடியிருக்கும் கணக்கு பிள்ளையின் மனைவி ராமுவையும், அவருக்கு போன் கொடுத்து உதவிய பக்கத்து வீட்டு பையன் சதீஸ் குமாரையும் ஏட்டு ரத்தனவேல் போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்திருந்தார்.
“ஏன்மா பிள்ளைகளைப் பணம் கொடுத்துக் கூட்டிகிட்டு வரச் சொன்னீய்யே! ஏன்? நீயா கடத்தி வச்சிருக்க. இந்த கடத்தலில் உனக்கும் உன் புருசனுக்கும் சம்பந்தம் இருக்கா?” என ஒரு லேடி கான்ஸ்டபிள் கன்னத்தில் அறை கொடுத்துக் கேட்டார்.
“அம்மா! புள்ளைகள் மேல் உள்ள பாசத்தினால் கேட்டேன். நாங்க எதுக்கும்மா கடத்துறோம்.”
அவளின் அடுத்தக் கன்னத்தில் ஓங்கி அறைந்தபடி“ புருசன் சாப்பிட்டானா? தூங்கினானா? வீட்டுக்கு எப்ப வருவான்னு கேட்காம, காசை கொடுத்து பிள்ளைகளை மீட்கச் சொல்லிருக்கே. உனக்கும் அந்த கும்பளுக்கும் என்ன சம்பந்தம். உன் புருசனை நாலு மிதி மிதிச்சு கேட்டா சரியா போகும். உன் சேலையை அவுத்து விட்டு, இந்தா கம்பிக்குள்ள் இருக்கிற இவனுங்களுக்கு முன்னாடி அடிச்சாதான் சொல்லுவீயா?”
“இதென்ன கொடுமையா இருக்கு. எதை வேணுமானாலும் உருவி கேளுங்க. அம்மணமா கூட நிப்பாட்டுங்க. சோறு போடுற தெய்வத்துக்கு துரோகம் நினைக்கிற ஆளுங்க நாங்க இல்லை.”
அவளது அருகில் நின்ற சதீஸ்குமாரை லத்தியால் கால்களில் அடித்த போலீஸ் காரர் ஒருவர், “நாயே! அவ யாருடா உனக்கு? இரண்டு பேரும் கூட்டாளிகளா? பணம் இருக்குன்னு தெரிஞ்சு ஆள் வச்சு கடத்திருக்கீங்க?”
அவன் அடித்த அடியில் மூத்திரம் இருந்துவிட்டான். மற்றொரு அடி லத்தியால் அடித்த போது,
“சார்! போன் பேசக் கொடுத்தேன் சார். இது தப்பா?”
“எப்பவும் இந்த அம்மா உன்கிட்ட தான் போன் வாங்கி பேசுவாங்களோ? சரி நீ என்ன படிச்சிருக்கே?” என இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“சார்! ப்ளஸ் டூ படிச்சிருக்கேன். அதுக்கு மேல் படிக்க வைக்க வசதி இல்லை. அதான் வீட்டுப்பக்கத்திலே ஒரு அப்பளக்கம்பெனியில் வேலை பார்க்கின்றேன்.”
அதற்குள் காந்திராஜனின் போன் அலறியது. அவர் உடனே செல்போனை ஆன் செய்து பேசினார்.
“சார். அவன் கால் ஹிஸ்டரியை பார்த்துட்டேன். ஒரு மாசத்துக்கே பத்து கால் தான் பேசியிருக்கான். பார்க்க நல்ல பையன் மாதிரி தெரிகிறான். எதுக்கும் அவன் போனை வாட்ச் பண்ண சொல்லியிருக்கேன்.” என்று துரை போனில் பேசினார்.
“சரி . நீங்க போங்க. எப்ப ஸ்டேசன் கூப்பிட்டாலும் வரணும். உங்க முதலாளி போனுக்கு தேவையில்லாமல் கால் செய்து பேசக்கூடாது. எதுவும் தகவல் தெரிஞ்சா சொல்லணும். அந்த பேப்பரில் உங்களைப் பற்றிய விபரங்களை எழுதிக் கொடுத்துட்டு போங்க.”
இருவரும் எழுதிக் கொடுத்து போலீஸ் ஸ்டேசனை விட்டு வெளியில் வந்து வீட்டிற்கு செல்ல ஆட்டோ பேரம் பேசினார்கள்.
“ஏ! முருகா, இரண்டு பேரையும் கூப்பிடு” என்று காந்திராஜன் கூறினார்.
போலீஸ்காரர் முருகன் வேகமாக சென்று அவர்களை மீண்டும் ஸ்டேசன் அழைத்து வந்தார்.
“அந்த பெஞ்சில் உட்காருங்க” என்று உள்ளே சென்றவர், செய்தித்தாள் விநியோகிக்கும் பையனிடம், “அதோ அந்த பெஞ்சில் அமர்ந்திருக்கிற பையனையும் அந்த பெண்மணியையும் பார்த்திருக்கியா ? நல்லா யோசனை பண்ணி சொல்லு” என அனுப்பி வைத்தார்.
அவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் குடிக்க வருவது போல் அவன் வந்தான்.
“என்ன அக்கா உங்க பையனா? அடிதடி கேசா? அக்கா காசை பார்க்கதே! அள்ளி வீசினா இந்த போலீஸ் விட்டுறுவானுங்க.” என பேச்சு கொடுத்தபடி அவர்களை நன்றாக உற்று பார்த்தான்.
அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். ஆனால், சதீஸ் குமார் அவமானத்தால் தலை குனிந்தபடி பயந்து அமர்ந்திருந்தான்.
“காலேஜ் படிக்கிற பையன் மாதிரி இருக்கே. ஏன் இந்த அடிதடி?” என அவனை உற்றுப்பார்த்தான் செய்தித்தாள் விநியோகிக்கும் பையன்.
இருவரும் பேசாமல் அவனை முறைத்து பார்த்தனர்.
செய்தித்தாள் விநியோகிக்கும் பையன் அறைக்கு உள்ளே சென்று, “சார்! ரெண்டு பேரையும் இதுக்கு முன்னால் எங்க ஏரியாவில் பார்த்தது இல்லை. சொல்ல போனால் அவுங்களை முதல்முறையா இப்பதான் பார்க்கிறேன்.” என்றான்.
“சரி நீங்க போகலாம்.” என்று காந்திராஜன் அனுப்பி வைத்தார். இருவரும் எதற்கு மீண்டும் அழைத்தார் என்பதை அறியாமல் குழம்பி போய் ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் சென்றனர்.
சுந்தராஜனின் செல்போன் அலறியது. சுந்தராஜன் பேச ஆரம்பித்தார். சப் இன்ஸ்பெக்டர் துரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போன்காலை ட்ரேஸ் பண்ண ஆரம்பித்தார். இந்த முறை வந்த கால் அமெரிக்கா, லண்டன், மும்பை, ஈரோடு என லோக்கேசன் மாறி மாறி காட்டியது. கால் பிரவேட் நம்பர் என்பதால் கண்டு பிடிக்க சிரமமாக இருந்தது. அந்த காலின் பயர்வால் உடைத்து கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஆனால், அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது.
சுந்தராஜன் அவர்கள் கூறிய எல்லா விதிகளுக்கும் தலையாட்டினார். ‘மாட்டுத்தாவணி வந்துவிடுகின்றேன்’ என தன் பைக்கை எடுத்துக் கிளம்பினார். அவருக்கு பின்னால் அவரது கணக்குபிள்ளை ராமு பணம் வைக்கப்பட்ட சூட்கேசை பிடித்தப்படி அமர்ந்தார். இருவரும் முன்னும் பின்னும் போலீஸ் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டனர். சுந்தராஜனின் காதில் போனில் பேசியவனின் குரல் ஒலித்தது.
“போலீசை அழைத்து வந்தால், உன் குழந்தைகளைப் பார்க்க முடியாது. நல்லா முடிவு பண்ணி எதையும் செய்.”
தொடரும்….
–க.சரவணன்