5.திருச்சி நோக்கி பயணம்
இரவு மணி பத்து. இருள் வீதியெங்கும் பரவி அச்சம் கொள்ளச் செய்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சிப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகள் மனதளவில் தைரியம் தந்து கொண்டிருந்தன. ஆனாலும், வண்டியூர் கண்மாயின் இருளில் இருந்து வண்டுகள் எழுப்பும் சத்தம் பேரச்சத்தை உருவாக்கவே செய்தது.
கே கே நகர் – பூங்கா சாலை மயான அமைதியில் இருந்தது. பூ பந்து அரங்கம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் தங்கள் வாகனங்களை முடுக்கி வீடு நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்கள்.
தெருவில் வாகனப் போக்குவரத்துக் குறைந்திருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மகிழுந்து, இருசக்கர வாகனம் என ஏதேனும் ஒரு வாகனம் மாட்டுத்தாவணியை நோக்கி விரைந்து சென்றது.
வண்டியூர் கண்மாய் ஓரம் இருந்த புங்கை மரத்தில் அமர்ந்திருந்த ஆந்தை திடீரென்று அலறியது. அப்போது, ஹாரன் ஒலித்தப்படி, பயங்கரமான வேகத்தில் ஒரு கார் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த கார் மாட்டுத் தாவணியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பூங்காவின் எதிர்புறம் கட்டிக் கொண்டிருந்த பெரிய கட்டிடத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பில் அமர்ந்து இருந்து போலீஸ் காரர் ஒருவர் வேகமாக இறங்கினார். அவர் பயங்கர வேகத்துடன் வரும் காரை தடுக்க முயன்று ஓடினார். ஆனால், அவர் வருவதைக் கண்டு, கூடுதல் வேகமெடுத்து கார் பறந்து சென்றது. அதனைத் தடுக்க முயன்ற போலீஸ்காரர் தடுமாறி தரையில் விழுந்தார்.
போலீஸ் ஜீப்பில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் ரவி டிரைவரிடம் ஜீப்பை வேகமாக ஸ்டார்ட் செய்யக் கூறினார். டிரைவர் ஜீப்பை ஸ்டார் செய்து வண்டியை நகர்த்தினார். கீழே விழுந்த போலீஸ்காரர் வேகமாக எழுந்து ஜீப்பில் ஏறிக் கொண்டார். ஜீப் வேகமெடுத்து, தாடுமாறிச் செல்லும் காரை துரத்திச் சென்றது.
இன்ஸ்பெக்டர் ரவி வாக்கி டாக்கியில் சந்தேகத்திற்குரிய வகையில் கார் ஒன்று கேகே நகரில் இருந்து மாட்டுத் தாவணியை நோக்கி விரைந்துக் கொண்டிருப்பதாகக் கண்ட்ரோல் ரூமிற்குத் தகவல் கொடுத்தார். அத்தகவல் மாட்டுத்தாவணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சேகருக்கு சென்றது. அவர் கேகே நகர் நோக்கி தனது ஜீப்பில் விரைந்தார்.
”காரில் குழந்தை இருக்கான்னு செக் பண்ணுங்க” எனக் கண்ட்ரோல் ரூமில் இருந்து வாக்கி டாக்கியில் கட்டளை வந்தது. “இருட்டில் தெரியவில்லை. பின்சீட்டில் இரு பெண்களும், முன் சீட்டில் ஒரு ஆணும் அமர்ந்திருந்தனர். வண்டி ஓட்டுபவன் குடி போதையில் இருப்பது போல் உள்ளது” என ரவி பதில் தந்து கொண்டிருந்தார்.
கார் உழவர் சந்தையை நெருங்கியது. அப்போது, எதிர்பாராத விதமாக உழவர் சந்தையில் இருந்து காய்கறிகள் ஏற்றிய லாரி வெளியில் வந்தது. கார் வந்த வேகத்தில் லாரி மீது மோதியது. டமார் என்ற பெரும் சத்தத்துடன் கார் தூக்கி எறியப்பட்டது. கார் எதிர் பக்கமாக மூன்று முறை குட்டிக் கரணம் அடித்து நின்றது. காரில் இருந்து மரண ஓலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரை கேட்டது. லாரி முன் பகுதி உருகுலைந்து போனது. மேலும், லாரி ஒரு முறை பிரண்டு கவிழ்ந்து நின்றது. லாரி டிரைவர் கை துண்டிக்கப்பட்டு மயக்கமாகி ஸ்டேரிங்கில் சரிந்து கிடந்தார்.
காய்கறி மார்கெட்டில் நின்றிருந்தவர்கள் வேகமாக ஓடி வந்தனர். அதற்குள் இரண்டு போலீஸ் ஜீப்களும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தன.
காரின் பின் கதவு திறக்கப்பட்டு மயக்கம் அடைந்த இரு பெண்கள் வெளியில் கொண்டு வரப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்க அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்திருந்தது. அம்புலன்ஸ்சில் ஏற்றும் போது ஒரு பெண்ணின் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டினை இன்ஸ்பெக்டர் ரவி எடுத்து பார்த்தார். அதில் அப்பெண் பெயர் மைதிலி என்றும். அவர் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் என்றும் இருந்தது.
“கண்ட்ரோல் ரூம்… இன்ஸ்பெக்டர் ரவி பேசுறேன். வேகமா போன கார் காய்கறி மார்கெட்டில் இருந்து வந்த லாரி மீது மோதி ஆக்ஸ்சிடெண்ட் ஆகிடுச்சு. அந்த வண்டியில் குழந்தைகள் எதுவும் இல்லை. வண்டியின் பின் சீட்டில் இருந்த மூன்று பெண் டாக்டர்களுக்கும் அடி பட்டு அப்போலோ மருத்துவமனைக்கு ஆன்ம்புலன்ஸில் அனுப்பி வைச்சுருக்கோம். டிரைவர் கால் துண்டிக்கப்பட்டு மயக்க நிலையில் ஜி.ஹெச் ல அட்மிட் பண்ணி இருக்கு. முன் சீட்டில் இருந்தவர் இறந்திட்டாரா இல்லை உயிரோடு இருக்காரான்னு தெரியலை. முகம் முழுவதும் இரத்தமா இருக்கு. அவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போறாங்க. வேறு தகவல் தெரிஞ்சா சொல்றேன். ஓவர்” என இன்ஸ்பெக்டர் ரவி தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேசன் பரபரப்பாக இயங்கியது.
“சார்… மாட்டுதாவணி நோக்கி போன கார் ஆக்ஸ்டெண்ட் ஆகிடுச்சாம். அதில் போனவங்க பெண் மருத்துவர்களாம்.” என்று ஏட்டு ரத்தின வேல் கூறினார்.
இன்ஸ்பெக்டர் காந்திராஜன் தன் செல்போனை எடுத்து சப்–இன்ஸ்பெக்டர் துரைக்கு பேசினார்.
“சார்.. இதுவரை அவன் பேசிய நம்பரை ட்ரேஸ் பண்ண முடியலை.”
“இனி ஒரு முறை பேசினால் போதும். நாங்க எப்படியும் ட்ரேஸ் பண்ணிடுவோம்.”
“மாப்பிள்ளை விநாயகர் சிக்னல் இருந்து பாஸ்போர்ட் ஆபீஸ் வரைக்கும் உள்ள எல்லா கேமிராவையும் செக் பண்ணியாச்சு. ஓட்டி வந்த காரில் யாரும் இல்லை. டிரைவர் முகத்தில் கர்ச்சிப் போட்டு ஓட்டியதால் அடையாளம் தெரியலை. எந்த கேமிராவிலும் அவனுடைய முகம் பதியலை. பிரைவேட் பார்டி கேமிராவை செக் பண்ணச் சொல்லி க்ரைம் பிராஞ்சில் இருந்து ஆள் அனுப்பி வைச்சிருக்காங்க.”
“சார்… போன் அடிக்குது” என சுந்தராஜன் கதறினார். அப்பளக் கம்பெனி ஓனர் சுந்தராஜனின் கைகள் நடுங்கின. அவருக்கு வியர்த்து ஊற்றத் தொடங்கியது. ஆனால், இந்த முறை செல்போனில் எண் தெளிவாகத் தெரிந்தது.
இன்ஸ்பெக்டர் செல்போனின் அழைப்பு மணியை அழுத்தி பேசக் கூறினார்.
“என்ன சார். உங்களுக்கு உங்க மகள்கள் பத்தி கவலை இல்லையா? உங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பி வச்சிருக்கேன். அதை பாருங்க. போலீஸ் ஸ்டேசனில் நீங்க உட்கார்ந்திருந்தா, உங்க பணம் மட்டும் தான் safe ஆக இருக்கும். பொண்ணுங்க பத்திரமா இருக்க மாட்டாங்க. இன்னும் பத்து மணி நேரம் டைம் தர்றோம். இப்ப மணி இரவு ஒன்று. காலை பதினொறு மணிக்கு பணம் வரணும். இல்லை, உங்களுக்கு பிடிச்ச மூத்த மகள் கையை வெட்டி பார்சலா வீட்டுக்கு அனுப்புவோம். சீக்கிரம் முடிவெடுங்க.” என போனை கட் செய்தான்.
சுந்தராஜன் போனை ஆன் செய்து உடனே வாட்ஸ் ஆப்பில் வந்த வீடியோவை பார்த்தார்.
வீடியோவில் அந்த இரண்டு பெண் குழந்தைகளும் மாருதி வேனில் அமர்ந்திருந்தனர். மூத்த பெண் “அப்பா பசிக்குதுப்பா. வேனிலேயே சுத்திட்டு இருக்காங்கப்பா. அவுங்க கேட்ட பணத்தை கொடுத்திடுங்கப்பா.” என்றாள். அருகில் இருந்த இளைய பெண்,”அப்பா பயமா இருக்குப்பா. துப்பாக்கி எல்லாம் வச்சிருக்காங்கப்பா. சீக்கிரம் எங்களை கூட்டிகிட்டு போங்கப்பா.”
சுந்தராஜன் கண்களில் அவரை அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து ஓடியது. அவரது இதயம் வேகமாக துடித்தது. இன்னும் கொஞ்சம் வேகம் கூடினால் இதயம் வெடித்து விடும்!
“சார்.. என்னை மன்னிச்சுக்கங்க. அவுங்க கேட்ட பணத்தை நான் கொடுக்க தயாரா இருக்கேன். எனக்கு என் பிள்ளைகள் ரொம்ப முக்கியம். பணம் போனா சம்பாதிச்சுக்குவேன். உயிர் போனா வராது.” என்றபடி ஸ்டேசனை விட்டு கிளம்பினார்.
இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் அவரைத் தடுக்க வில்லை.
“துரை. இப்ப பேசின நம்பரை டிரேஸ் பண்ணீங்களா?”
“சார். இப்ப வந்த நம்பர் திருச்சியில் இருந்து வந்திருக்கு. ராஜா தெரு பக்கத்தில் இருக்கிற சூப்பர் மார்கெட் அருகில் இருந்து பேசி இருக்காங்க. உடனே, திருச்சி போலீஸ் கமிசனருக்கு போன் பண்ணி அவுங்களைப் பிடிக்க சொல்றேன்.”
“உடனே போன் பண்ணுங்க. அவுங்களைப் பிடிக்கச் சொல்லுங்க. அந்த நம்பரை ட்ரேஸ் பண்ணுங்க.”
“சார். போன் இன்னும் ஆப் ஆகலை. போன் இப்ப நகர ஆரம்பிக்குது.”
“ தப்ப விடாதீங்க. உடனே, திருச்சிக்கு அனுப்ப போலீஸ் போர்ஸ் ரெடி பண்ணிறேன். நீங்க அங்க இருந்து கவனமா கண்காணிச்சு தகவல் கொடுங்க..” என்ற இன்ஸ்பெக்டர் காந்திராஜன்.
“சரி, சார். எனக்கு என்னவோ அவுங்க வண்டியில் போற மாதிரி தான் தெரியுது.”
“ஆமாம். அவுங்க அனுப்பின வீடியோவிலும் அக்குழந்தைகள் மாருதி வேனில் தான் அமர்ந்திருக்காங்க. சரி. நான் திருச்சிக்கு கிளம்ப தயார் ஆகுறேன்.”
காந்திராஜன் சுறுசுறுப்பாக கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இந்த கடத்தல் கும்பலை பிடிப்பதற்கு கமிஷ்னர் நியமித்திருந்த குழு தயாரானது. இரண்டு கான்ஸ்டபிள், ஒரு ஹெட்கான்ஸ்டபிள், ஒரு சப்–இன்ஸ்பெக்டர், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு ஏடிபிசி அமைந்த அக்குழு திருச்சிக்கு கிளம்ப தயாரானது.
“சார். நாம் அவசரப் பட வேண்டாம். வேறு வழியில் க்ளூ கிடைக்குதான்னு பார்க்கணும். இவ்வளவு எளிதா பிடிப்பட மாட்டாங்க.” என்று ஏடிபிசி திருஞானம் கூறினார்.
”சார், எனக்கும் அதே டவுட் தான். ஏன்னா, காரை ரொம்ப கவனமா எந்த கேமிராவிலும் முகம் தெரியாமல் பார்க் பண்ணி இருக்காங்க. அதே மாதிரி முதல் தடவை பேசும் போதும் ரொம்ப கவனமாக கால் ட்ரேஸ் பண்ண முடியாத படி பேசி இருக்காங்க. இப்ப எப்படி இப்படி பப்ளிக்கா பேசுவாங்க. அதுவும் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புவாங்க?” என சப் இன்ஸ்பெக்டர் மணிரத்தனம் கேள்வி எழுப்பினார்.
“இந்த கடத்தலுக்கு பின்னாடி டெக்னிக்கலான ஒருத்தன் இருக்கான். அவன் கணிணி அறிவு பெற்றவனாத்தான் இருப்பான்.” என ஏடிபிசி திருஞானம் கூறினார்.
“உண்மை. அப்ப நாம் எங்கிருந்து தொடங்கிறது?” என ஏட்டு ரத்தினவேல் கேட்டார்.
தீவிர யோசனைக்கு பின் காந்திராஜன், “ஏன் சார். அவர் வீட்டு பக்கத்தில் விசாரிப்போமே. அந்த ஏரியாவில் இருக்கிற ஐடி படிச்ச இன்ஞினியர், செயின் ஸ்னாச்சிங்கில் ஈடுபட்ட படிச்ச பசங்க இப்படி விசாரணையை ஆரம்பிப்போமே.”
”நல்ல யோசனை. உடனே ஆரம்பிக்கணும்.” என்றார் ஏடிபிசி.
“அப்ப நாம் இப்ப திருச்சி போகப் போறது இல்லையா?” என கான்ஸ்டபிள் முருகன் கேட்டார்.
“நீ போய் தினமணி தியேட்டர் கிட்ட இருக்கிற லோகு கடையில் டீ வாங்கிட்டு வா. அப்படியே போகும் போது பங்கஜம் காலணியில் சந்தேகத்துக்கு உரிய முறையில் யாரும் தெரிஞ்சா பிடிச்சுட்டு வா.” என்றார் இன்ஸ்பெக்டர் காந்திராஜன்.
வேனில் ஏறி அமர்ந்திருந்த ஏடிபிசி கீழே இறங்கி சிக்ரெட்டை பற்ற வைத்தார்.
“சார். ஒருவேளை உண்மையிலே அவுங்க திருச்சியில் இருந்து, திருச்சி போலீஸ் பிடிக்க போய் ஏடா கூடாமா ஆனா என்ன செய்வீங்க?” என ஏட்டு ரத்தனவேல் கேட்டார்.
“அதுக்கு வாய்ப்பே இல்லை. இந்நேரம் அவன்களுக்கு சுந்தராஜன் போலீஸ் ஸ்டேசனில் இருந்து கிளம்பி போனது தெரிஞ்சு இருக்கும். அவரும் தன்னிடம் உள்ள பணத்தை ரெடி பண்ணி. போன் போட்டு இருப்பார். ஆனா, போன் எடுக்க மாட்டாங்க.” என்றார் ஏடிபிசி.
”அதெப்படி சார் ?” என அப்பாவியாக கான்ஸ்டபிள் முருகன் கேட்டார்.
காந்திராஜன் போன் அலறியது. சப் இன்ஸ்பெக்டர் துரை போன் செய்திருந்தார்.
”சார், திருச்சி பஸ் ஸ்டாண்டை விட்டு சென்னை பைபாஸில் போன் மூவாகுது. இன்னும் கொஞ்சம் தூரத்தில் டோல் கேட் வந்திடும். அங்க பிடிச்சிடலாம். அப்புறம், சுந்தராஜன் அந்த நம்பருக்கு மூன்று தடவை கால் பண்ணினார். ஆனால், யாரும் அட்டண்ட் பண்ணலை”
“ரெம்ப நன்றி. திருச்சி போலீஸ் பிடிச்சதும் தகவல் கொடுங்க. அப்புறம் அந்த போன் வந்த இடத்தில் காமிரா எதுவும் இருந்தா அதில் பேசியவன் முகம் தெரியுதான்னு செக் பண்ணச் சொல்லுங்க.”
“சார். அந்த ஏரியாவில் கேபிள் டிவி வயர் கீழே விழுந்து, நம்ம காமிரா வயர்களை அறுத்திடுச்சு, அதனைச் சரி பண்ண நாளைக்கு தான் இன்ஞினியர் வருவாராம், நம்ம போலீஸ் வச்சிருந்த காமிராவில் பதிவு இல்லை. அந்த ஏரியாவில் பிரைவேட் பார்ட்டி காமிரா எதுவும் இல்லை. ராஜா ஸ்டோரில் உள்ள காமிரா நேற்று தான் ரிப்பேர் ஆச்சாம். நமக்கு இன்னும் ஐந்து நிமிடத்தில் எல்லாத்துக்கும் விடை கிடைச்சிடும்.” என்று போனை கட் செய்தார்.
“அவனுங்க பாபநாசம் படம் பார்த்திருப்பானுங்க. நாமளும் அதுமாதிரி படம் பார்த்து இருப்பது தெரிஞ்சிருக்காது. அங்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் சரக்கு ஏத்தி கிளம்புற மாருதி வேனில் போனைப் போட்டிருப்பானுங்க. நாம் எல்லோரும் இங்கிருந்து திருச்சி கிளம்பி போய் டயர்டு ஆகிடுவோம்னு நினைக்கிறானுங்க. நாம் அங்கே போய் சேருகிற நேரத்தில் சுந்தராஜனுக்கு போன் செய்து, ரூபாயை வாங்கிடத் திட்டம் போட்டிருப்பானுங்க.” என்றார் ஏடிபிசி.
“சார். நீங்க நினைச்ச மாதிரியும் நடக்க வாய்ப்பு இருக்கு. ஆனா, இங்கிருந்து அவனுக்கு தகவல் யார் கொடுக்கிறது. எப்படி சுந்தராஜன் குழந்தையைக் கடத்த திட்டம் போட்டானுங்க?” எனக் கேள்வி எழுப்பினார் ஏட்டு ரத்தனவேல்.
”எனக்கு தெரிஞ்சு. திருச்சிக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும். திரும்ப இரண்டு மணி நேரம் ஆக நான்கு மணி நேரம் பிடிக்கலாம். நான் ஊகிக்கிறது சரியா இருந்தா, அந்த கிரிமினல்ஸ் சரியா நான்கு அல்லது ஐந்து மணிக்கு கால் சுந்தராஜனுக்கு பண்ணுவாங்க. இப்ப நீங்க எல்லோரும் தூங்க போங்க. கண்ட்ரோல் ரூமில் இருக்கிற சப்–இன்ஸ்பெக்டர் துரையையும் தூங்க சொல்லுங்க.” என ஏடிபிசி கூறினார்.
“சார். சின்ன டவுட். இன்னும் பத்து நிமிடத்தில் செக் போஸ்ட்டில் அந்த செல் மாட்டிடும். அப்ப உங்க கணக்கு தப்பு ஆச்சே! எப்படி?” என்று இன்ஸ்பெக்டர் காந்திராஜன் சந்தேகம் எழுப்பினார்.
“காந்தி நீங்க நினைக்கிறது சரிதான். ஆனா என் கணக்கு சரியா இருந்திச்சின்னா. அந்த செல் போன் இன்னும் சில நிமிடங்களில் அமர்ந்திடும்.”
“சார். அப்படி பார்த்தாலும் அந்த வேனை மடக்கி பிடிச்சிடலாம். இரண்டு கிலோ மீட்டர் சரவுண்டிங்கில் தான் வேன் இருக்கும். போன் ஆப் செய்தால் அவனோட ஆள் அங்க தானே இருப்பான்”
“ இந்த குற்றத்தில் ஈடுபடுகிறவன் படிச்சவன். அவன் உங்களை விட ரொம்ப கிளவரா திட்டம் போடுறான். அந்த போனில் பேட்டரி பேக் அப் இன்னும் இரண்டு நிமிடம் தான் இருக்கும். அதுக்கு அப்புறம் ஆப் ஆகிடும். மணி ஒன்றுக்கு மேல் ஆகுது. அந்த வேன் டோல் கேட் வழியா போகாது. எங்காவது குறுக்கு ரோட்டில் இறங்கி பக்கத்து கிராமத்துக்கு லோடு சரக்கு இறக்கப் போகலாம். மேலும், இப்ப மளிகை கடை பூட்டி இருக்கும் என்பதால் வழியில் எங்காவது ஓரமா போட்டு தூங்கிடவும் வாய்ப்பு இருக்கு. அதனால், அந்த வண்டியை கண்டு பிடிக்க மூன்று மணி நேரம் ஆகலாம். மேலும், அந்த வண்டியைத் தேடி நாம் அலைந்து சோர்வாகிடுவோம்ன்னு அவுங்க கணக்கு.” என்றார் ஏடிபிசி.
“சார். சின்ன டவுட். அந்த வண்டி நம்பர் இருக்கு. வண்டி ஓட்டுறவன் போன் நம்பர் இல்லையா? கடை காரன் கிட்ட சொல்லி வண்டி ஓட்டுறவனை போலீஸ் ஸ்டேசனுக்கு வண்டியை கொண்டு வரச் சொல்லலாமே சார்” என கான்ஸ்டபிள் முருகன் கேட்டான்.
“சரியா கேட்ட. என் கணக்கு படி. வண்டிக்குள் இருக்கிற யாருக்கும் செல் போன் இருக்க வாய்ப்பு இல்லை. ஒண்ணு அவனுங்க கிட்ட இருந்து இந்த கும்பல் போனை திருடி இருக்கும். இல்லை.. அந்த போனை ஹேக் பண்ணி சுவிட்ச் ஆப் செய்து இருப்பானுங்க.” என்றார் ஏடிபிசி.
காந்திராஜன் போன் ஒலித்தது. துரை போன் செய்திருந்தார். காந்திராஜன் போனை ஆன் செய்தார்.
“சார். அந்த செல் போன் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு. ”
”சார். நீங்க சொன்ன மாதிரி போன் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு.” என்றார் காந்திராஜன்.
“அவரை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க. சரியா நான்கு மணியில் இருந்து சுந்தராஜன் நம்பரை நோட் பண்ண சொல்லுங்க. நிச்சயம் நாளைக்குள் அவனுங்களைப் பிடிச்சிடலாம்.”
”சார்., வண்டியில் வேறு யார்கிட்டேயும் போன் இருக்கான்னு செக் பண்ண சொல்லுங்க” என முருகன் கேட்டார்.
“சார். அந்த வேனை ஓட்டிகிட்டு போறவன் பெயர் மாணிக்கம். அவனோட செல்போன் திருச்சி பஸ் ஸ்டாண்டில் டீ குடிக்கிறப்ப தொலைஞ்சிடுச்சாம்.” என்றார் துரை.
“இந்த தகவல் யார் கொடுத்தது?” எனக் காந்தி ராஜன் கேட்டார்.
“திருச்சி போலீஸ் விசாரணை செய்த போது அந்த டிப்பார்ட் மெண்ட் ஸ்டோர் ஓனர் சொன்னாராம். இந்த ஸ்டோருக்கு சரக்கு இறக்கிறதுக்கு முன்னாடி டீ குடிச்சிருக்கானுங்க. அங்க தொலைஞ்சிடுச்சாம். அவுங்க ஓனர் கிட்ட இவர் போனில் இருந்து தான் பேசி இருக்கானுங்க.”
“சரி. இப்ப நீங்க கொஞ்சம் கண் உறங்குங்க. ஆனா, நான்கு மணிக்கு காந்திராஜன் செல் போனில் எந்த நம்பரில் இருந்து கால் வருதுன்னு கண்காணிக்கணும்.”
சரி எனத் துரை போனை வைத்தார்.
அனைவரும் ஜீப்பில் அமர்ந்தபடி உறங்கத் தொடங்கினார்கள்.
-க.சரவணன்