அத்தியாயம் 16
கறுப்பு நாய் எழுந்து கொண்டு, வாசிப்பறையை விட்டு நகாடாவை வெளியேற்றி இருண்ட நடைக்கூடத்தின் வழியாக சமையலறைக்குக் கூட்டிப் போனது, இரண்டு சாளரங்கள் மட்டுமே அங்கிருக்க இடம் இருட்டாயிருந்தது. தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தாலும் கூட, ஒருவகை மந்தநிலை அங்கு நிலவியது, பள்ளியின் அறிவியல் ஆய்வுக்கூடத்தைப் போல. பெரிய குளிர்சாதனப்பெட்டியின் கதவுகளுக்கு முன்னால் போய் அந்த நாய் நின்றது, வட்டமடித்துத் திரும்பி உயிரற்ற பார்வையால் நகாடாவைத் துளைத்தது.
இடப்பக்கக் கதவைத் திற, தாழ்ந்த குரலில் அது சொன்னது. பேசியது நாயல்ல மாறாக ஜானி வாக்கரென்பது நகாடாவுக்குத் தெரியும், அதன் வழியாக நகாடாவோடு அவன்தான் பேசினான். நாயின் கண்களினூடாக நகாடாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தனக்குச் சொல்லப்பட்டதைச் செய்தார் நகாடா. அவோகாடோ-பச்சை நிறக் குளிர்சாதனப்பெட்டி அவரைக் காட்டிலும் உயரமாயிருந்தது, மேலும் இடப்புறக்கதவை அவர் திறந்தபோது திடுமென்ற ஒலியுடன் வெப்பநிலைக் காப்பகம் உயிர்பெற, ஓர் உறுமலோடு மோட்டாரும் இயங்கத் தொடங்கியது. வெண்ணிற நீராவி, மூடுபனியைப் போல, துரிதமாக வெளியேறியது. குளிர்சாதனப்பெட்டியின் இந்தப் பகுதியென்பது – மிகக் குறைந்த வெப்பநிலையில் இயங்கச் செய்திருந்த – ஓர் உறைவூட்டும் அறை.
உள்ளுக்குள் ஏறத்தாழ 20 வட்டமான, பழம் போன்ற சங்கதிகளின் வரிசை தென்பட்டது, அழகாக அடுக்கப்பட்டிருந்தன. வேறொன்றும் இல்லை. நகாடா நன்றாகக் குனிந்து இன்னும் நெருங்கிச் சென்று அவற்றைப் பார்த்தார். நீராவி தெளிந்தபோது அவையெல்லாம் பழமேயில்லை மாறாக பூனைகளின் வெட்டுப்பட்டத் தலைகளென்பதை அவர் கண்டுகொண்டார். அனைத்து வண்ணங்களிலும் வடிவங்களிலும் இருந்த வெட்டுண்டத் தலைகள், பழங்களுக்கான அடுக்குநிலையில் இருக்கும் ஆரஞ்சுகளைப் போல மூன்று அடுக்குகளாக அவை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பூனைகளின் முகங்கள் உறைந்திருந்தன, நேர்கொண்ட பார்வையோடு. நகாடா எச்சில் விழுங்கினார்.
நன்றாகப் பார், நாய் ஆணையிட்டது. கோமா அங்கிருக்கிறாளா இல்லையா என்பதை உனது கண்களாலேயே பார்த்துக் கொள்.
நகாடாவும் இதைச் செய்தார், பூனைகளின் தலையை ஒவ்வொன்றாக ஆராய்வதை. அவர் அச்சப்படவில்லை – அவரது மனம் தொலைந்து போன குட்டிப்பூனையைக் கண்டுபிடிப்பதில் உறுதியாயிருந்தது. ஒவ்வொரு தலையாக ஆராய்ந்தார் நகாடா, அவற்றினடுவே கோமாவினுடையது இல்லையென்பதை உறுதி செய்தார். அதில் எந்தச் சந்தேகமுமில்லை – அவற்றினடுவே ஆமையோட்டுப்பூனை ஒன்று கூட இல்லை. வினோதமான வகையில், உடம்பில்லாத பூனைகளின் முகங்கள் வெறுமையான உணர்வுகளோடிருந்தன, அவற்றில் ஒன்று கூட நோவுற்றதாகத் தெரியவில்லை. அது, குறைந்தபட்சம், ஆசுவாசம் நிரம்பிய பெருமூச்சை நகாடாவிடம் கொணர்ந்தது. ஒரு சில பூனைகள் தங்களுடைய கண்களை மூடியிருந்தன, ஆனால் பெரும்பான்மையானவை சூனியவெளியில் ஏதோவொரு புள்ளியை வெறுமனே வெறித்துக் கொண்டிருந்தன.
“என்னால் இங்கே கோமாவைப் பார்க்க முடியவில்லை” தட்டையான தொனியில் நகாடா சொன்னார். தனது தொண்டையைச் செருமிக் கொண்டு குளிர்சாதனப்பெட்டியின் கதவை மூடினார்.
உனக்கு சர்வநிச்சயமாகத் தெரியுமா?
“ஆமாம், நிச்சயமாகத் தெரியும்.”
நாய் எழுந்து கொண்டு நகாடாவைத் திரும்பவும் வாசிப்பறைக்கு அழைத்துச் சென்றது. ஜானி வாக்கர் இன்னும் சுழல் நாற்காலியில்தான் அமர்ந்திருந்தான், அவருக்குக் காத்திருப்பவனாக. நகாடா உள்ளே வந்ததும், வரவேற்பது போலத் தனது பட்டுத்தொப்பியின் விளிம்பைத் தொட்டு மகிழ்வுடன் புன்னகைத்தான். பிறகு தன் கைகளை பலமாகத் தட்டினான், இருமுறை, உடனே நாய் அறையை விட்டு வெளியேறியது.
“அந்தப் பூனைகளின் தலைகளையெல்லாம் வெட்டியவன் நானே” என்றான். தன்னுடைய விஸ்கி கோப்பையை உயர்த்தி சிறிது அருந்தினான். “அவற்றை நான் சேகரிக்கிறேன்.”
“ஆக அந்தக் காலிமனையில் பூனைகளைப் பிடித்து அவற்றைக் கொல்வது நீங்கள்தான்.”
”மிகவும் சரி. புகழ்பெற்ற பூனை-கொலையாளி ஜானி வாக்கர், உனக்கான சேவையில்.”
`“நகாடாவுக்கு இது சரியான வகையில் புரியவில்லை, எனவே நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் தப்பில்லையே?”
“நீ என் விருந்தாளி!” என்றான் ஜானி வாக்கர், தனது கோப்பையை உயர்த்திக் காட்டி. “எதை வேண்டுமானாலும் கேட்கத் தயங்காதே. என்றாலும், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, உனக்குப் பிரச்சினை இல்லையென்றால், நீ அறிந்து கொள்ள விரும்பும் முதல் விசயம் ஏன் இந்தப் பூனைகளையெல்லாம் நான் கொல்கிறேன் என்பதாகத்தான் இருக்கும் என யூகிக்கிறேன். ஏன் அவற்றின் தலைகளைச் சேகரிக்கிறேன் என்பதும். நான் சொல்வது சரியா?”
“ஆமாம், மிகச் சரி. அதைத்தான் நகாடா அறிந்து கொள்ள விரும்புகிறான்”
ஜானி வாக்கர் தன் கோப்பையை மேசையின் மீது வைத்து விட்டு நகாடாவை நேருக்கு நேர் பார்த்தான். “இதுவொரு முக்கியமான ரகசியம், வெறுமனே யாரிடமும் இதைச் சொல்லி விட மாட்டேன். உனக்காக, திரு.நகாடா, நான் அதில் விலக்கு எடுத்துக் கொள்கிறேன், ஆனால் மற்ற மனிதர்களிடம் நீ இதைச் சொல்வதை விரும்ப மாட்டேன். அப்படியே நீ சொன்னாலும் அவர்கள் அதை நம்புவார்களென்று அர்த்தமல்ல” அவன் ஏளனமாகச் சிரித்தான்.
”கவனி – வெறுமனே அது தரும் கேளிக்கையுணர்வுக்காக நான் பூனைகளைக் கொல்லவில்லை. அதை வேடிக்கையாக நினைக்குமளவுக்கு நான் மனநலம் பிறழ்ந்தவனல்ல” அவன் தொடர்ந்தான். “கையில் நேரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாத ஏதோவொரு கழைக்கூத்தாடி அல்ல நான். இத்தனை பூனைகளைப் பிடித்து வந்து கொல்ல எக்கச்சக்கமான நேரமும் முயற்சியும் தேவைப்படும். அவற்றின் ஆன்மாக்களைச் சேகரிப்பதற்காக நான் பூனைகளைக் கொல்கிறேன், விசேச வகையிலான புல்லாங்குழல் ஒன்றை உருவாக்க அவற்றைப் பயன்படுத்துகிறேன். மேலும் அந்தப் புல்லாங்குழலை வாசிக்கும்போது இன்னும் உருவில் பெரிய ஆன்மாக்களைச் சேகரிக்க அது என்னை அனுமதிக்கும். அனேகமாக இறுதியில் நான் உருவாக்கக்கூடிய புல்லாங்குழல் இந்தப் பிரபஞ்சத்தை இணை சொல்லுமளவுக்குப் பெரிதாயிருக்கும். ஆனால் முதலில் பூனைகளின் கதையைப் பார்ப்போம். ஒட்டுமொத்த செயற்திட்டத்தின் ஆரம்பப்புள்ளி அவற்றின் ஆன்மாக்களைச் சேகரிப்பதே. எல்லாவற்றிலும் நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை ஒழுங்குமுறை இருக்கிறது. ஒரு வகையில் நம்முடைய மரியாதையை வெளிப்படுத்தும் வழிமுறை அது, எல்லாவற்றிலும் சரியான ஒழுங்குமுறையைப் பின்பற்றுவது. பிற ஆன்மாக்களைக் கையாளும்போதும் இதைத்தான் செய்ய வேண்டும். நான் இங்கே கையாள்வது அன்னாசிகளோ அல்லது தர்ப்பூசணிகளோ கிடையாது, ஒத்துக் கொள்கிறாயா?”
“ஆமாம்” எனப் பதிலளித்தார் நகாடா. ஆனால் உண்மையில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு புல்லாங்குழல்? பக்கவாட்டில் பிடித்துக் கொள்ளும் புல்லாங்குழலையா அவன் சொன்னான்? அல்லது அனேகமாக நேராக நீட்டிப் பிடிக்கும் இசைக்குழலையா? என்ன மாதிரி சத்தத்தை அது உண்டாக்கும்? மேலும் பூனைகளின் ஆன்மாக்கள் என்று அவன் எதைச் சொல்கிறான்? இவை யாவுமே, குறைபாடுடைய அவரின் உள்வாங்கும் திறனுக்குள் அடங்காதவையாக இருந்தன. ஆனால் நகாடாவால் ஒரேயொரு விசயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது: கோமாவை அவர் கண்டுபிடித்து, இங்கிருந்து அவளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.
”கோமாவை வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டுமென்பதைத்தான் நீ விரும்புகிறாய்” என்றான் ஜானி வாக்கர், ஏதோ நகாடாவின் மனதை வாசிப்பவனைப் போல.
“ரொம்பச் சரி. நகாடா கோமாவை அவளுடைய வீட்டுக்கு அழைத்துப் போக விரும்புகிறான்”
”அதுவே உன் குறிக்கோள்” என்றான் ஜானி வாக்கர். ”நமது குறிக்கோள்களைத்தான் வாழ்வில் எல்லோரும் பின்பற்றுகிறோம். இயல்பான ஒன்றுதான். பூனைகளின் ஆன்மாக்களைக் கொண்டு உருவாக்கிய புல்லாங்குழலை ஒருபோதும் நீ கேட்டதில்லை என்று யூகிக்கிறேன், கேட்டிருக்கிறாயா என்ன?”
”இல்லை, நான் கேட்டதில்லை.”
”நிஜமாகவே நீ கேட்டிருக்க மாட்டாய். உன் காதுகளால் அதை உன்னால் கேட்க முடியாது. ”
”நம்மால் கேட்க முடியாத புல்லாங்குழலா?”
”சரிதான். உண்மையைச் சொன்னால், என்னால் அதைக் கேட்க முடியும்,” என்றான் ஜானி வாக்கர். “என்னாலும் அதைக் கேட்க முடியாதென்றால் இது எதுவுமே தேவைப்படாது. என்றாலும், சாதாரண மனிதர்களால் அதைக் கண்டுகொள்ள முடியாது. அப்படியே கண்டுகொண்டாலும், அவர்கள் அதை உணர மாட்டார்கள். கடந்தகாலத்தில் அதைக் கேட்டிருந்தாலும் அவர்களுக்கு நினைவிருக்காது. நிச்சயமாக, வெகு வினோதமான புல்லாங்குழல்தான். ஆனால் ஒருக்கால் – ஒருக்கால் மட்டுமே – உன்னால் அதைக் கேட்க முடியலாம், திரு.நகாடா. இப்போது என்னிடம் ஒரு புல்லாங்குழல் இருந்திருந்தால் நாம் முயற்சி செய்திருக்கலாம், ஆனால் என்னிடம் இல்லையென்று அச்சங்கொள்கிறேன்.” பிறகு, எதையோ நினைவுகூர்வதைப் போல, ஒரு விரலை மட்டுமே நேர் மேலே நீட்டினான். “உண்மையில், நான் வளைத்துப் பிடித்த பூனைகளின் தலைகளை வெட்டத் தயாராயிருந்தேன். அறுவடை நேரம். அந்தக் காலிமனையில் பிடிபடக்கூடிய பூனைகள் யாவும் எனக்குக் கிடைத்து விட்டன, எனவே அங்கிருந்த நகரும் நேரம் வந்து விட்டது. நீ தேடிக் கொண்டிருக்கும் பூனையும், கோமா, அவற்றுள் இருக்கிறது. இயல்பாகவே, அவளின் தலையை நான் வெட்டி விட்டால், அவளை வீட்டுக்குக் கோய்சுமிக்களிடம் அழைத்துப் போக உன்னால் இயலாது, முடியுமா என்ன?”
”அதுவும் சரிதான்,” என்றார் நகாடா. கோமாவின் வெட்டுப்பட்டத் தலையை கோய்சுமிக்களிடம் அவரால் கொண்டு போக முடியாது. அந்த இரண்டு குட்டிப் பெண்களும் அதைப் பார்த்தால் சாப்பிடுவதை என்றென்றைக்குமாக மறந்து விடுவார்கள்.
”நான் கோமாவின் தலையை வெட்ட விரும்புகிறேன், ஆனால் அது நிகழக் கூடாதென்று நீ விரும்புகிறாய். நம்முடைய இரு குறிக்கோள்கள், நம்முடைய இரு விருப்பங்கள், எதிரெதிராக. உலகில் இதுபோல நிறைய நடப்பதுண்டு. ஆகவே என்னவென்று நான் உனக்குச் சொல்கிறேன் – நாமொரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். நான் சொல்ல வருவது என்னவென்றால், எனக்காக நீ ஏதாவது செய்தால், உபகாரத்தைத் திருப்பிச் செலுத்தும் வகையில் கோமாவை உன்னிடம் நலமுடன் பத்திரமாகத் தருவேன்.”
நகாடா ஒரு கையைத் தலைக்கு மேலே உயர்த்தி தனது நரை-கலந்த-கேசத்தைத் தீவிரமாக உலுக்கினார், எதையாவது எண்ணிக் குழம்பும்போது அவருடைய வாடிக்கையான பாவனைநிலை அதுவே. ”என்னால் செய்ய முடிந்த காரியமா?”
”ஏற்கனவே அது குறித்துப் பேசி விட்டோமென்று நினைக்கிறேன்,” வறண்ட புன்னகையோடு ஜானி வாக்கர் சொன்னான்.
”ஆமாம், நாம் பேசினோம்,” என்றார் நகாடா, நினைவு வந்தவராக. ”அதுதான் சரி. ஏற்கனவே நாம் அது குறித்துப் பேசி விட்டோம். என்னை மன்னியுங்கள்.”
”நம்மிடம் நிறைய நேரமில்லை, எனவே நான் நேரடியாக முடிவுரைக்குள் குதிக்கிறேன், உனக்கு ஒன்றும் சிக்கல் இல்லையெனில். எனக்காக நீ செய்யக் கூடியதென்பது என்னைக் கொல்வதே. வேறு வார்த்தைகளில் சொன்னால், என் உயிரை எடுத்து விடு.”
கை இன்னும் தலை மீது வீற்றிருக்க, நகாடா வெகு நேரம் ஜானி வாக்கரை வெறித்துக் கொண்டிருந்தார். “நகாடா உங்களைக் கொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்களா?”
“ரொம்பச் சரி,” என்றான் ஜானி வாக்கர். “உண்மையாகவே, எனக்கு இந்த வாழ்வு சலிப்பும் வெறுப்புமாக உள்ளது. நீண்ட, வெகு நீண்ட காலம் வாழ்ந்து விட்டேன். எனது வயது கூட எனக்கு நினைவில்லை. பூனைகளைக் கொல்வதும் எனக்குச் சலிப்பும் வெறுப்புமாகவுள்ளது, ஆனால் உயிரோடுள்ளவரை அதை நான் செய்தாக வேண்டும் – ஒவ்வொரு பூனையாக அடுத்தடுத்துக் கொன்று அவற்றின் ஆன்மாக்களைச் சேகரிப்பதை. விசயங்களை அவற்றுக்கான சரியான வரிசையில் நிகழ்த்துவது, ஒன்றாம் படிநிலையில் இருந்து பத்தாம் படிநிலை வரை, பிறகு மீண்டும் ஒன்றுக்கு. முடிவேயில்லாமல் மீண்டும் மீண்டும். இதற்கு மேல் என்னால் முடியாது! எனது செயல்களை எவரும் மதிப்பதில்லை, யாரையும் அவை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. ஆனால் இந்தச் செயல்பாடு தீர்மானிக்கப்பட்டதாகும். ’நான் வெளியேறுகிறேன்’ எனச் சொல்லி விட்டு திடீரென்று நான் செய்வதை என்னால் நிறுத்தி விட முடியாது. மேலும் எனது உயிரை மாய்த்துக் கொள்ளவும் வழியில்லை. அதுவும் கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. எல்லாவித விதிமுறைகளும் இதில் அடங்கியுள்ளன. சாக விரும்பினால், என்னைக் கொல்ல வேறு யாரையாவது நான் தேடிக் கண்டடைய வேண்டும். அங்குதான் நீ உள்ளே வருகிறாய். நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டுமென்று விரும்புகிறேன், தீவிரமான வெறியோடு என்னை வெறுத்தொதுக்கி – பிறகு என்னை அழிக்க வேண்டும். முதலில் என்னைக் கண்டு அச்சப்படு. பிறகு என்னை வெறு. இறுதியில் என்னை நீ கொன்று விடு.”
”ஆனால் ஏன் – என்னை ஏன் கேட்கிறீர்கள்? நகாடா இதற்குமுன் ஒருபோதும் யாரையும் கொன்றதில்லை. எனக்கு அதில் எந்தத் திறமையும் கிடையாது என்கிற வகைமையைச் சேர்ந்தது.”
“எனக்குத் தெரியும். யாரையும் நீ கொன்றதில்லை, அதை விரும்பவும் மாட்டாய். ஆனால் நான் சொல்வதைக் கேள் – இத்தகைய சாக்குப்போக்குகள் கைகொடுக்காது என்பதைப் போன்றத் தருணங்களும் வாழ்வில் வரும். எதிரே நிற்கும் வேலைக்கு நீ தகுதியானவனா இல்லையா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படாத தருணங்கள். நீ அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஒரு எடுத்துக்காட்டுக்கு, போரில் அது போல நிகழும். போர் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?”
“ஆம், எனக்குத் தெரியும். நகாடா பிறந்தபோது மிகப்பெரிய போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
”போர் தொடங்கும்போது வீரர்களாக மாற மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். துப்பாக்கிகளை ஏந்தி போரில் முன்னணிக்குச் சென்று எதிர்த்திசையில் உள்ள வீரர்களைக் கொல்ல வேண்டும். அவர்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை பேரை. மனிதர்களைக் கொல்வது உனக்குப் பிடிக்குமா இல்லையா என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். அது வெறுமனே நீ செய்ய வேண்டிய காரியம், அவ்வளவே. இல்லையென்றால் அங்கு கொல்லப்படுவது நீயாக இருப்பாய்.” ஜானி வாக்கர் தனது ஆட்காட்டி விரலால் நகாடாவின் மார்பைச் சுட்டினான். “பூம்!” என்றான். “மனிதகுலத்தின் வரலாறு, ரத்தினச்சுருக்கமாக.”
“ஆளுநர் நகாடாவை ஒரு வீரனாக மாற்றி மனிதர்களைக் கொல்ல ஆணையிடப் போகிறாரா?”
“ஆமாம், ஆளுநர் அதைத்தான் செய்வார். யாரையாவது கொல்லும்படி உனக்குச் சொல்வதை.”
இதைப் பற்றி யோசித்தாலும் நகாடாவால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பதையெல்லாம் கிடப்பில் போட்டு விட்டு ஆளுநர் ஏன் இதைச் செய்ய வேண்டும்.
“இதை நீ இப்படிப் பார்க்க வேண்டும்: அதாவது இதுவொரு போர் என்பதாக. நீ ஒரு வீரன், தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும். ஒன்று நான் பூனைகளைக் கொல்வேன் அல்லது நீ என்னைக் கொல்வாய். இரண்டில் ஒன்று. இப்போதே இங்கேயே நீ ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இதுவொரு மூர்க்கமான தெரிவாகத் தோன்றலாம், ஆனல் இதை கணக்கில் கொள்: வாழ்வில் நாம் எடுக்கக்கூடிய பெரும்பாலான தெரிவுகள் இதேபோன்று மூர்க்கமானவையே.” ஜானி வாக்கர் தனது பட்டுத்தொப்பியை மெல்லத் தொட்டுப் பார்த்தான், அது இன்னும் அங்குதான் உள்ளதென்பதை உறுதி செய்து கொள்வதைப் போல.
”இங்கே உன்னைக் காப்பாற்றக்கூடிய சங்கதி என்னவென்றால் – நிஜமாகவே அப்படியொன்று உனக்குத் தேவைப்படுமெனில் – நான் சாக விரும்புகிறேன் என்பதுதான். என்னைக் கொல்லும்படி நான் உன்னைக் கேட்டிருக்கிறேன், ஆகவே எந்த விதமானக் குற்றவுணர்வின் வேதனைகளாலும் நீ அவதிப்பட வேண்டியதில்லை. நான் எதை எதிர்பார்க்கிறேனோ அதைத்தான் துல்லியமாக நீ செய்யப் போகிறாய். ஏதோ சாக விரும்பாத ஒருவரை நீ கொல்வதாகப் புரிந்து கொள்ளத் தேவையில்லை. சொல்லப் போனால், நீயொரு நல்ல காரியத்தைத்தான் செய்கிறாய்.”
தனது முன்நெற்றியில் துளிர்த்த வியர்வை முத்துக்களை நகாடா துடைத்துக் கொண்டார். “ஆனால் இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்வது நகாடாவுக்குச் சாத்தியமேயில்லை. உங்களைக் கொல்லும்படி நீங்கள் என்னிடம் சொன்னால் கூட, எவ்வாறு அதைச் செய்வதென்பது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது.”
”நீ சொல்வது புரிகிறது,” வியந்து பாராட்டுவதைப் போலச் சொன்னான் ஜானி வாக்கர். “இதற்குமுன் ஒருபோதும் யாரையும் நீ கொன்றதில்லை, ஆகவே எவ்வாறு அதைச் செய்வதென்பது குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது. அப்படியென்றால் சரி, நானே விளக்குகிறேன். யாரையும் கொல்வதற்கான பயிற்சித்திறனென்பது, திரு நகாடா, தயக்கத்தை விட்டொழிப்பதில் இருக்கிறது. நம்முடைய காழ்ப்புணர்ச்சிகளில் மனதை ஊன்றித் துரிதமாகச் செயலாற்ற வேண்டும் – கொலையை நிகழ்த்துவதற்கானத் துருப்புச்சீட்டு அதுதான். என்னிடம் இங்கேயே அற்புதமான எடுத்துக்காட்டு உள்ளது. அது மனிதனல்ல, ஆனால் சூழலைப் புரிந்து கொள்ள உனக்கு உதவக்கூடும்.”
ஜானி வாக்கர் எழுந்து கொண்டு, மேசைக்குக் கீழே பாவியிருந்த நிழல்களுக்குள்ளிருந்து ஒரு பெரிய தோற்பையைத் தூக்கினான். தான் உட்கார்ந்திருந்த நாற்காலியின் மீது வைத்து அதைத் திறந்தான், குதூகலமான இசையைச் சீழ்க்கையடித்தவாறே. ஏதோ மந்திரதந்திரக் காட்சியைப் போல, பெட்டிக்குள்ளிருந்து ஒரு பூனையை வெளியே எடுத்தான். இதற்குமுன் ஒருபோதும் இந்தப் பூனையை நகாடா பார்த்ததில்லை, வெகு சமீபத்தில்தான் பதின்மத்தை எட்டியிருந்த, பழுப்புநிற, உடலில் வரியோடும் ஆண்பூனை. கால் ஊனமுற்றிருந்தாலும் அதன் கண்கள் திறந்திருந்தன. பூனை நினைவோடு இருப்பதாகத் தெரிந்தது, ஆனாலும் பேருக்குத்தான். இன்னும் தனக்குப் பிரியமான இசையைச் சீழ்க்கையடித்தவாறே – டிஸ்னியின் ஸ்னோ வொயிட்டில் வரும் “ஹேய்-ஹோ!”, ஏழு குள்ளர்களில் ஒருவன் அதைப் பாடுவான் – அப்போதுதான் பிடித்த மீனைத் தூக்கிக் காட்டுவதைப் போல ஜானி வாக்கர் பூனையை உயர்த்திப் பிடித்திருந்தான்.
“நான் இந்தப் பெட்டிக்குள் ஐந்து பூனைகளை வைத்திருக்கிறேன், எல்லாமே அந்தக் காலிமனையில் இருந்தவைதான். புதிய தொகுதி. சரியாகச் சொன்னால், இப்போதுதான் பிடித்தது, புதர்களிலிருந்து புத்தம்புதிதாக. முடமாக்குவதற்காக அவை எல்லாவற்றுக்கும் ஊசி போட்டிருக்கிறேன். மயக்க மருந்தல்ல – அவை உறங்கவில்லை என்பதோடு வலியை உணரவும் முடியும், ஆனால் அவற்றால் தங்களுடைய கைகளையோ கால்களையோ அசைக்க முடியாது. அல்லது அவற்றின் தலைகளைக் கூட. அவை மூர்க்கமாகப் போராடாமலிக்க இதை நான் செய்திருக்கிறேன். நான் செய்யப் போவது என்னவென்றால் அவற்றின் மார்புகளை ஒரு கத்தியால் இரண்டாகப் பிளந்து, பிறகும் துடிக்கின்ற இதயங்களைப் பிடுங்கி, தலைகளை வெட்டப் போகிறேன். உன் கண்களுக்கு முன்னால். நிறைய ரத்தமிருக்கும், கற்பனையே செய்யவியலாத வலியும். யாராவது உன் மார்பை வெட்டித் திறந்து உனது இதயத்தைப் பிடித்திழுத்தால் எவ்வளவு வலிக்குமென்பதை யோசித்துப் பார்! பூனைகளுக்கும் இது பொருந்தும் – நிச்சயமாக வலிக்கும். அந்த பாவப்பட்ட சின்னஞ்சிறு ஜீவன்களை எண்ணி நான் வருந்துகிறேன். ஏதோ நானொரு உணர்வேயில்லாத, குரூரமான கொடூரன் என்று அர்த்தமல்ல, ஆனால் இது குறித்து என்னால் வேறேதும் செய்ய முடியாது. வலி இருந்தாக வேண்டும். அது விதிமுறை. இங்கு நீ பார்க்கும் அனைத்திலும் விதிமுறைகள் உண்டு.” நகாடாவைப் பார்த்து அவன் கண்ணடித்தான். “வேலையென்றால் வேலைதான். குறிக்கோளை அடைய வேண்டும், அவ்வளவே. ஒவ்வொரு பூனையாகத் தீர்த்த பிறகு, இறுதியில் கோமாவைக் கொல்வேன். ஆகவே என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்க உனக்குச் சிறிது நேரமே உள்ளது. நினைவில் கொள், இப்போது – ஒன்று நான் பூனைகளைக் கொல்வேன் அல்லது நீ என்னைக் கொல்வாய். வேறெந்தச் சாத்தியமுமில்லை.”
ஜானி வாக்கர் முடமான பூனையை மேசையின் மீது வைத்தான், இரண்டு கைகளால் இழுப்பறையைத் திறந்து பெரிய கறுப்புப் பொட்டலத்தை வெளியே இழுத்தான். உறையைக் கழற்றி அதன் உள்ளீடுகளை மேசையில் பரப்பினான். சிறிய மின்ரம்பம், வெவ்வேறு அளவுகளில் அறுவைக்கத்திகள் மற்றும் ஒரு பெரிய கத்தி ஆகியவை அவற்றிலிருந்தன, ஏதோ அப்போதுதான் கூர்தீட்டியது போல யாவும் பளபளத்தன. மேசையின் மீது அவற்றை வரிசையாக அடுக்கியபோது ஒவ்வொரு கத்தியையும் ஜானி வாக்கர் பிரியமாகப் பரிசோதித்தான். அடுத்து, வேறொரு இழுப்பறையிலிருந்து நிறைய உலோகத்தட்டங்களை வெளியே எடுத்து, அவற்றையும், மேசையின் மீது அடுக்கினான். பிறகு இழுப்பறைக்குள்ளிருந்து பெரிய கறுப்புநிற நெகிழிப்பை ஒன்றை வெளியே எடுத்தான். மொத்த நேரமும் “ஹேய்-ஹோ!”-வைச் சீழ்க்கையடித்தவாறே.
”நான் சொன்னது போல, திரு.நகாடா, அனைத்திலும் ஒரு நியாயமான ஒழுங்குமுறை உள்ளது,” என்றான் ஜானி வாக்கர். ”மிகுந்த தொலைநோக்கோடு நீ பார்க்க வேண்டியதில்லை. அவ்வாறு செய்தால் இப்போது என்ன செய்கிறாயோ அதைத் தவற விட்டுத் தடுமாறுவாய். வெறுமனே கண் முன்னாலிருக்கும் சங்கதிகளின் மீது மட்டும் நீ கவனம் செலுத்த வேண்டுமென்று நான் சொல்லவில்லை, புரிகிறதா? சிறிதளவேனும் தொலைநோக்கோடு சிந்திக்க வேண்டும், இல்லையென்றால் எதன் மீதாவது மோத நேரிடும். சரியான ஒழுங்குமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் அதே வேளையில் எதிர்நோக்கியுள்ள சங்கதிகளின் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம், எதில் நீ ஈடுபட்டிருந்தாலும்.”
ஜானி வாக்கர் தனது கண்களைக் குறுக்கி பூனையின் தலையில் மெல்லத் தட்டினான். தனது ஆட்காட்டி விரலின் நுனியைப் பூனையின் வயிற்றில் மேலும் கீழுமாக நகர்த்தினான், பிறகு வலதுகையில் ஓர் அறுவைக்கத்தியை எடுத்து எவ்வித எச்சரிக்கையுமின்றி அதன் வயிற்றில் நேர்கீழாகக் கீறினான். எல்லாம் ஒரு கணத்தில் நிகழ்ந்து விட்டது. அடிவயிறு அகலமாகத் திறந்து கொள்ள செந்நிற உள்ளீடுகள் வெளியே சிதறின. பூனை அலற முயன்றது, ஆனால் மிகக்குறைந்த சத்தத்தைக் கூட அது வெளியிடவில்லை. எல்லாவற்றின் காரணமாக, நாக்கு மரத்துப் போயிருக்க அதனால் வாயைத் திறக்கக்கூட முடியவில்லை. ஆனால் மிகப்பயங்கரமான வலியில் அதன் கண்கள் நெளிந்து திருகின. மேலும் இந்த வலி எத்தனை கொடூரமாக இருக்குமென்பதை நகாடாவால் யூக்கிக முடிந்தது. ஒரு கணத்துக்குப் பிறகு ரத்தம் வெளியேறிப் பாய்ந்தது, ஜானி வாக்கரின் கைகளை நனைத்து அவனுடைய மேலங்கியின் வழியாகக் கீழே வழிந்தோடியது. ஆனால் அவன் அதை மதிக்கவில்லை. இன்னும் “ஹேய் – ஹோ!”வைத் துணைக்கழைத்துக் கொண்டவனாக, தனது கையை பூனையின் உடம்புக்குள் திணித்து சிறிய அறுவைக்கத்தியின் உதவியால் அதன் சிறிய இதயத்தைத் திறமையாக வெட்டியெடுத்தான்.
குருதி தோய்ந்த சதைக்குவியலைத் தன் உள்ளங்கைக்குள் வைத்து நகாடா பார்க்க வேண்டுமென்பதற்காக அவருக்கு முன்னால் நீட்டினான். ”நன்றாகப் பார். இன்னும் துடிக்கிறது.”
பிறகு, உலகின் மிக இயல்பான சங்கதி அதுதானென்பதைப் போல, இதயத்தை தன் வாய்க்குள் போட்டு அமைதியாக மெல்லத் தொடங்கினான், சாவகாசமாக அதன் ருசியை ரசித்தபடி. சூட்டுக்கலத்தில் உள்ள அப்பத்தைச் சூடாக எடுத்துச் சாப்பிடும் குழந்தையைப் போல அவன் கண்கள் மின்னின.
கையின் பின்புறத்தால் வாயில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு உதடுகளையும் கவனமாக நக்கிச் சுத்தமாக்கினான். “புத்தம்புதியதாகவும் வெதுவெதுப்போடும். இன்னும் என் வாய்க்குள் துடித்துக் கொண்டிருக்கிறது.”
ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தனக்கு முன்னால் நிகழும் காட்சியை நகாடா பார்த்தவாறிருந்தார். அவரால் பார்வையைத் திருப்பவும் முடியவில்லை. புத்தம்புது ரத்தத்தின் மணம் அறையை நிறைத்தது.
தன்னைக் கிளர்ச்சியூட்டும் இசையை இன்னும் சீழ்க்கையடித்தவாறே, ஜானி வாக்கர் பூனையின் தலையை ரம்பத்தால் அறுத்தான். ரம்பத்தின் பற்கள் எலும்புகளை அரைத்து அவற்றைத் துண்டாக்கின. என்ன செய்கிறோம் என்பதில் அவன் தெளிவாயிருப்பதாகத் தெரிந்தது. கழுத்தெலும்பு அவ்வளவு அடர்த்தியானதாக இல்லை, எனவே அந்த அறுவைச் செயல்பாடு சீக்கிரமே முடிவுற்றது. என்றாலும், அவ்வொலி வினோதமான பாரத்தைக் கொண்டிருந்தது. வெட்டிய தலையை தட்டத்தின் மீது ஜானி வாக்கர் மிகுந்த பிரியத்துடன் வைத்தான். ஏதோவொரு கலை வேலைப்பாட்டை ரசிப்பது போல, கண்களைக் குறுக்கி மிகத் தீவிரமாக அதை உற்று நோக்கினான். சீழ்க்கையடிப்பதை ஒரு நொடி நிறுத்தி, தனது பல்லுக்குள் சிக்கியிருந்த எதையோ விரலால் பிடித்திழுத்து, மீண்டும் வாய்க்குள் போட்டுக் கவனமாகச் சுவைத்தான், பிறகு உதடுகளைச் சப்புக் கொட்டி, திருப்தியடைந்தவனாக, அதை விழுங்கினான். பின்னர் கறுப்பு நெகிழிப்பையைத் திறந்து இறந்த பூனையின் உடலை இயல்பாக அதற்குள் தூக்கியெறிந்தான், ஒன்றுக்குமாகாத ஏதோவொரு ஓட்டை எறிவதைப் போல.
“ஒன்று முடிந்தது,” என்றான் ஜானி வாக்கர், உதிரந்தோய்ந்த தன் கைகளை நகாடாவுக்கு முன் அகல விரித்தபடி. “சற்று அதிகப்படியான வேலைதான் இல்லையா, என்ன நினைக்கிறாய்? அழகிய புத்தம்புது இதயத்தைச் சுவைக்கலாம், ஆனால் நம் மீது எவ்வளவு ரத்தம் படிகிறது பார்த்தாயா? இல்லை, எனது இந்தக் கரம் எண்ணிக்கையிலடங்காக் கடல்களைச் செந்நிறமாகச் செய்திடக்கூடும், பச்சையிலிருந்து சிவப்பாக. மேக்பெத்தில் வரும் வரி. மேக்பெத் அளவுக்கு இது மோசமில்லை, ஆனால் சலவைக்காகும் செலவுகளைச் சொன்னால் நீ நம்ப மாட்டாய். இன்னும் சொல்லப் போனால், இதுவொரு விசேசமான மேலங்கி. அறுவை சிகிச்சைக்கான அங்கியையும் கையுறைகளையும் மட்டுமே நான் அணிய வேண்டும், ஆனால் என்னால் முடியாது. மற்றொரு விதிமுறை, என நான் அச்சங்கொள்கிறேன்.”
நகாடா ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, ஏதோவொன்று அவருடைய மூளைக்குள் சுழன்றடிக்கத் தொடங்கியிருந்தாலும் கூட. அந்த அறை முழுக்க ரத்தத்தின் மணம், “ஹேய் – ஹோ!”-வின் விகாரங்கள் அவர் காதுகளுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன.
ஜானி வாக்கர் தனது பையிலிருந்து அடுத்த பூனையைப் பிடித்து வெளியே எடுத்தான், வெண்ணிறப் பெண்பூனை, அப்படியொன்றும் இளமையானதல்ல, அதன் வாலின் நுனி சற்றே வளைந்திருந்தது. முன்பு செய்ததைப் போலவே, சிறிது நேரத்துக்கு அந்தப் பூனையின் தலையை அவன் தட்டிக் கொடுத்தான், பிறகு சாவகாசமாக அதன் வயிற்றில் கண்ணுக்குத் தெரியாதக் கோட்டைக் கிழித்தான். அறுவைக்கத்தியை எடுத்து மறுபடியும் மார்பைப் பிளக்கும் வகையில் விரைவான வெட்டைப் போட்டான். மற்றவை யாவும் முன்பு போலவே நிகழ்ந்தன. மௌனமான அலறல், துள்ளத்துடிக்கும் உடல், வெளித்தள்ளும் உடலின் உள்ளீடுகள். ரத்தந்தோய்ந்த இதயத்தை வெளியே எடுப்பது, அதை நகாடாவிடம் காட்டுவது, வாய்க்குள் அதைப் போட்டுக் கொள்வது, மெதுவாக மெல்லுவது. திருப்திகரமான அந்தப் புன்னகை. அவனுடைய கையின் பின்புறத்தால் ரத்தத்தைத் துடைப்பது. எல்லாமே பின்னணி இசையாக ஒலிக்கும் “ஹேய் – ஹோ!”-வோடு.
தனக்கான நாற்காலியில் தொப்பென்று விழுந்து கண்களை மூடினார் நகாடா. கைகளால் தலையைப் பற்றிக் கொண்டார், விரல்நுனிகள் உச்சிப்பொட்டில் புதைந்திருந்தன. நிச்சயமாக ஏதோவொன்று அவருக்குள் குமுறிக் கொண்டிருந்தது, அவருடைய அடிப்படை இருப்பையே உருமாற்றத்துக்கு உள்ளாக்கியிருந்த பயங்கரக் குழப்பநிலை. வேகவேகமாக மூச்சிரைக்க, ஒரு கூர்மையான வலி அவரின் தொண்டையை அறுத்தது. அவரது பார்வையும் கடுமையாக மங்கத் தொடங்கியிருந்தது.
“திரு.நகாடா,” ஜானி வாக்கர் உற்சாகமாகச் சொன்னான், “அதற்குள்ளாக மயங்கி என் மீது விழுந்து விடாதே. முக்கிய நிகழ்வுக்கு இனிமேல்தான் நாம் போகவிருக்கிறோம். அது ஆரம்பக்காட்சிதான், வெறும் முன்-தயாரிப்புகள். இப்போதுதான் நாம் சரியான அணிவகுப்புக்கு வருகிறோம், தெரியுமா. எனவே உன் கண்களை அகலத் திறந்து நன்றாகப் பார்த்துக் கொள். இதுவே ஆகச்சிறந்த பகுதி! இது உன்னைக் களிப்பூட்ட வேண்டுமென்பதற்காக நான் எதிர்கொண்டக் கடுஞ்சிரமங்களை நீ பாராட்டுவாய் என்று நம்புகிறேன்.”
அவனுடைய இசையைச் சீழ்க்கையடித்தவாறே, அடுத்த பூனையை வெளியே எடுத்தான். நாற்காலிக்குள் மூழ்கியவராக, நகாடா தனது கண்களைத் திறந்து அடுத்த பலியைப் பார்த்தார். அவரது மூளை முழுக்க வெறுமையாயிருக்க, அவரால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை.
“நீங்கள் ஏற்கனவே ஒருவரையொருவர் அறிவீர்கள் என நம்புகிறேன்,” என்றான் ஜானி வாக்கர், “என்றாலும் தேவையான அறிமுகங்களை நானும் செய்து வைக்கிறேன். திரு.நகாடா, இது திரு.கவாமுரா, திரு.கவாமுரா, திரு.நகாடா.” நாடகீய வழிமுறையில் ஜானி வாக்கர் அவனது தொப்பியை உயர்த்தினான், முதலில் நகாடாவை வாழ்த்துபவனாக, பிறகு முடமாகிக் கிடந்த பூனையிடமும்.
“இப்போது நீங்கள் முகமன் சொல்லி முடித்து விட்டதால், நேரடியாக நாம் விடைபெறுதலுக்குப் போகலாமென்று நினைக்கிறேன். ஏய்! உன்னைத்தான், போய் வா! புயலில் சிதறும் மலர்களைப் போல, சொல்லப் போனால், மனித வாழ்வும் நீண்ட விடைபெறுதல்தான்.” கவாமுராவின் மென்மையான வயிறை அவன் மெல்லத் தடவினான். “நீ என்னைத் தடுக்கப் போகிறாயென்றால் இதுவே அதற்கான சமயம், திரு.நகாடா. நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது, நான் தயங்க மாட்டேன். புகழ்பெற்ற பூனை. கொலையாளியான ஜானி வாக்கரின் அகராதியைப் பொறுத்தவரை, உன்னால் கண்டுபிடிக்க முடியாத வார்த்தை உண்டெனில் அது தயக்கம் என்பதுதான்.”
பிறகு உண்மையாகவே எவ்விதத் தயக்கமுமின்றி அவன் கவாமுராவின் வயிற்றைக் கிழித்துத் திறந்தான். இம்முறை அலறலைக் கேட்க முடிந்தது. அனேகமாகப் பூனையின் நாக்கு முழுதாக மரத்திருக்கவில்லை அல்லது நகாடாவால் மட்டுமே கேட்க முடிந்த வகையில் விசேசமான அலறலாக அது இருக்கலாம். படுபயங்கரமான, ரத்தத்தை-உறைய வைக்கும் அலறல். நகாடா கண்களை மூடிக் கொண்டு, நடுங்கும் தலையை தனது கரங்களால் பற்றிக் கொண்டார்.
“நீ பார்த்தாக வேண்டும்!” ஜானி வாக்கர் ஆணையிட்டான். “நம்முடைய விதிமுறைகளில் அதுவும் ஒன்று. கண்களை நீ மூடிக் கொள்வதால் எதுவும் மாறாது. என்ன நடக்கிறது என்பதை நீ பார்க்காமலிருப்பதால் எதுவும் மறைந்து விடப் போவதில்லை. சொல்லப் போனால், அடுத்த முறை நீ கண்களைத் திறக்கும்போது சங்கதிகள் இன்னும் மோசமாயிருக்கும். நாம் வாழும் உலகம் அப்படிப்பட்டது, திரு நகாடா. உன் கண்களை அகலத் திறந்து வை. கோழைதான் கண்களை மூடுவான். கண்களை மூடுவதும் காதுகளை இறுக்கப் பொத்துவதும் நேரத்தை நகர விடாமல் செய்யாது.”
தனக்குச் சொல்லப்பட்டதைச் செய்த நகாடா கண்களைத் திறந்தார்.
அவை திறந்திருக்கின்றன என்பதை உறுதி செய்த பிறகு, கவாமுராவின் இதயத்தை விழுங்கும் காட்சியை ஜானி வாக்கர் நிகழ்த்தினான், அதைச் சுவைக்க முன்பைக் காட்டிலும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டான். “மிருதுவாகவும் வெதுவெதுப்பாகவும் உள்ளது. புத்தம்புதிய விலாங்குமீனின் ஈரலைப் போல,” ஜானி வாக்கர் கருத்துரைத்தான். பிறகு ரத்தந்தோய்ந்த ஆட்காட்டி விரலை வாய்க்குக் கொண்டு போய் அதை உறிஞ்சினான். “ஒருமுறை இதன் ருசிக்குப் பழகி விட்டால், நீயும் உள்ளிழுக்கப்படுவாய். மிகக்குறிப்பாக பிசுபிசுக்கும் ரத்தத்தின் சுவைக்கு.”
அறுவைக்கத்தியில் படிந்திருந்த ரத்தத்தை அவன் துடைத்தான், எப்போதும் போல மகிழ்ச்சியாகச் சீழ்க்கையடித்தபடி, பிறகு கவாமுராவின் தலையை ரம்பத்தால் அறுத்தான். கத்தியின் கூரான பற்கள் எலும்பினூடாக அறுக்க ரத்தம் எல்லா இடங்களிலும் தெறித்தது.
“தயவு செய்து, திரு.வாக்கர், இதற்கு மேலும் நகாடாவால் இதைத் தாங்க முடியாது!”
ஜானி வாக்கர் சீழ்க்கையடிப்பதை நிறுத்தினான். தனது வேலையை நிறுத்தி விட்டு காதுமடல்களில் ஒன்றைச் சொறிந்தான். “இது வேலைக்காகாது, திரு.நகாடா. நீ வருத்தப்படுவதை எண்ணி நானும் வருந்துகிறேன், உள்ளார்ந்து, ஆனால் வெறுமனே இப்படி ‘சரி, நீ சொல்வதைப் போல’ என்று சொல்லி விட்டு என்னால் இதை நிறுத்த முடியாது. நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். இதுவொரு போர். ஒரு முறை போர் தொடங்கி விட்டால் அதை நிறுத்துவது சிரமம். வாளை ஒரு முறை உருவிய பிறகு, நிச்சயமாக ரத்தம் தெறிக்கத்தான் செய்யும். கோட்பாட்டுக்கோ அல்லது தர்க்கத்துக்கோ இதனோடு எந்தச் சம்பந்தமுமில்லை, எனது அகங்காரத்துக்கும் கூட. வெறுமனே இதுவொரு விதிமுறை, எளிமையும் பரிசுத்தமும் நிறைந்தது. இதற்கு மேலும் பூனைகள் சாகக்கூடாதென்று நீ விரும்பினால், என்னைக் கொல்ல வேண்டும். எழுந்து நில், உன்னுடைய வெறுப்பை திரட்டி என்னை அடித்து வீழ்த்து. மேலும் அதை நீ இப்போதே செய்தாக வேண்டும். அவ்வாறு செய்தால் எல்லாம் முடிந்து விடும். கதையின் முடிவுரை.”
ஜானி வாக்கர் மீண்டும் சீழ்க்கையடிக்கத் தொடங்கினான். கவாமுராவின் தலையை வெட்டுவதை முடித்து அதன் தலையற்ற உடலை குப்பைப்பைக்குள் எறிந்தான். இப்போது உலோகத்தட்டத்தில் மூன்று தலைகள் வரிசையாக இருந்தன. மிதமிஞ்சியத் துயரத்தை அவை அனுபவித்திருந்தன, ஆனால் உறைவூட்டும் அறையில் வைக்கப்பட்டிருந்த பூனைகளின் தலைகளைப் போல இவற்றின் முகங்களும் வினோதமான வெறுமையோடிருந்தன.
“அடுத்து வருவது சயாமீஸ்,” இதைச் சொல்லி விட்டு ஜானி வாக்கர் தனது பைக்குள்ளிருந்து முடமாகிக் கிடந்ததொரு சயாமீஸ் பூனையை வெளியே எடுத்தான் – இயல்பாகவே அது மிமியாக இருக்க நேர்ந்தது. “ஆகவே இப்போது நாம் சின்னஞ்சிறு ‘மி சியாமனோ மிமி’யிடம் வருகிறோம். புச்சினியின் இசை நாடகத்திலிருந்து வரக்கூடியது. இந்தச் சிறிய பூனையிடம் நிஜமாகவே ஓர் அழகான பசப்புத்தன்மை உள்ளது, ஒத்துக் கொள்கிறாயா? நான் புச்சினியின் மாபெரும் விசிறி, என்னளவில். புச்சினியின் இசையை எடுத்துக் கொண்டால் – அதை நான் என்னவென்று பெயரிட்டு அழைப்பது? – ஏதோவொரு வகையில் அந்தந்தக் காலக்கட்டங்களுக்கு எதிரானது, சதாசர்வ காலங்களிலும். வெறும் மக்கட்திரளுக்கான பொழுதுபோக்கு என நீ வாதிடலாம், ஆனால் ஒருபோதும் அதற்கு வயதாவதில்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படியான கலைச்சாதனை.”
”மி சியாமனோ மிமி”-யின் ஒரு பகுதியை அவன் சீழ்க்கையடித்தான்.
“ஆனால் உன்னிடம் சொல்லியாக வேண்டும், திரு நகாடா, மிமியைப் பிடிக்க நான் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருந்தது. தந்திரமும் எச்சரிக்கையுணர்வும் நிரம்பிய பூனை, எதையும் சட்டென்று அடையாளம் கண்டுகொள்கிறாள். எதற்குள்ளும் எளிதாக ஈர்க்கப்படும் வகையைச் சேர்ந்தவளல்ல. மிகக் கடினமான வாடிக்கையாளர். ஆனால் ஈடுஇணையற்ற பூனை – கொலையாளியான ஜானி வாக்கரை ஏமாற்றக்கூடிய பூனையென்று எதுவும் இதுவரை பிறந்திருக்கவில்லை. நான் பெருமை பீற்றுகிறேன் அல்லது அதைப்போன்ற ஏதோவொன்று என்ற அர்த்தமில்லை. வெறுமனே அவளைக் கைப்பற்றுவது எத்தனை கடினமாயிருந்தது என்பதை உனக்குத் தெரிவிக்க முயற்சி செய்கிறேன்… எப்படிப் பார்த்தாலும், இதோ உன் முன்னால்! உன் தோழி மிமி! சயாமீஸ்களே எப்போதும் எனக்கு மிகப் பிடித்தமானவை. உனக்கு இது தெரிந்திருக்காது, ஆனால் சயாமீஸ் பூனையின் இதயம் உண்மையில் அதியற்புதமாயிருக்கும். ஒரு வகையில் பூங்கிழங்குகளைப் போல. பரவாயில்லை, மிமி. ஒருபோதும் அஞ்சாதே – ஜானி வாக்கர் வந்து விட்டேன்! உனது வெதுவெதுப்பான, சுவைமிகுந்த சின்னஞ்சிறு இதயத்தை ருசிக்க. ஆஹ்ஹ் – நீ நடுங்கிக் கொண்டிருக்கிறாய்!”
“ஜானி வாக்கர்,” தனக்குள்ளாக மிகுந்த ஆழத்திலிருந்து தாழ்வான குரலில் வார்த்தைகளைப் பலவந்தமாக வெளியேற்ற நகாடாவுக்குச் சாத்தியமானது. “தயைகூர்ந்து, நிறுத்து. இல்லையென்றால், நகாடா பைத்தியமாகிப் போவான். இதற்கு மேலும் நான் நானாக இருப்பதாக உணர முடியவில்லை.”
ஜானி வாக்கர் மிமியை மேசையின் மீது வைத்து விட்டு பழக்கத்தின் காரணமாகத் தனது விரல்களை அதன் வயிற்றின் மேல் மெல்ல ஊர்ந்திடச் செய்தான். “ஆக இனிமேலும் நீ நீயாக இல்லை,” கவனமாகவும் அமைதியாகவும் அவன் சொன்னான். “அது மிகவும் முக்கியம், திரு நகாடா. ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு மனிதன் தன்னியல்பில் இல்லையென்பது.“ இதற்கு முன் அவன் பயன்படுத்தியிராத அறுவைக்கத்தியை எடுத்துத் தன் விரல்நுனியால் அதன் கூர்மையைச் சோதித்தான். பிறகு, வெட்டுக்கான ஒத்திகை போல, கையின் பின்புறத்தில் கத்தியைக் கொண்டு கிழித்தான். சிறிது நேரத்தில் ரத்தம் பீறிட்டு, மேசையின் மீதும் மிமியின் மீதும் சொட்டியது. ஜானி வாக்கர் ஏளனமாகப் புன்னகைத்தான். “இதற்கு மேலும் ஒரு மனிதன் தன்னியல்பில் இல்லை.” மீண்டும் சொன்னான். “இனிமேலும் நீ நீயாக இல்லை. அதுதான் துருப்புச்சீட்டு, திரு.நகாடா. அற்புதம்! எல்லாவற்றையும் விட முக்கியமான விசயம் அதுதான். ‘ஓ, என் மூளையெங்கும் தேள்களின் கூட்டம்.’ மறுபடியும் மேக்பெத்.”
எதுவும் பேசாமல், நகாடா எழுந்து நின்றார். யாருமே, ஏன் நகாடாவே கூட, அவரைத் தடுத்திருக்க முடியாது. அகலமாக எட்டு வைத்து மேசைக்கு நடந்து சென்று மாமிசம் நறுக்கும் கத்தியைப் போலத் தோற்றமளித்த ஒன்றை அவர் எடுத்தார். அதன் மரக்கைப்பிடியைத் தீர்க்கமாகப் பற்றி, கத்தியை ஜானி வாக்கரின் வயிற்றில் செருகினார், கறுப்புநிற மேலங்கியை ஊடுருவி, பிறகு வேறொரு இடத்தில் மறுபடியும் குத்தினார். அவரால் எதையோ கேட்க முடிந்தது, பெரிய சத்தமொன்றை, முதலில் அவருக்கு அது என்னவென்றுத் தெரியவில்லை. பிறகு அவர் புரிந்து கொண்டார்: ஜானி வாக்கர் சிரித்துக் கொண்டிருந்தான். வயிற்றிலும் மார்பிலும் குத்துப்பட்டு, ரத்தம் வெளியே சிந்திக் கொண்டிருக்க, அவன் வெறித்தனமாகச் சிரித்தான்.
“அதுதான் வேண்டியது!” அவன் அலறினான். “நீ தயங்கவில்லை. அருமையான செய்கை!” இதுதான் வாழ்விலேயே அவன் கேட்ட மிகச்சிறந்த நகைச்சுவை என்பதைப்போல சிரித்தான். என்றாலும், விரைவில், அவனுடைய சிரிப்பு விம்மலாக மாறியது. அவனது தொண்டையில் கொப்பளித்த ரத்தம் மூட முடியாதக் கால்வாயைப் போல சப்தமெழுப்பியது. பயங்கரமான வலிப்பு உடலை உலுக்க அவனது வாயிலிருந்து ரத்தம் வடிந்தது, அடர்த்தியாகவும் கொழகொழப்பாகவுமிருந்த சதைக்குவியல்களோடு – அவன் சாப்பிட்ட பூனைகளின் இதயங்கள். ரத்தம் மேசையின் மீது பரவியது, நகாடாவின் குழிப்பந்தாட்டச்சட்டை வரைக்கும். இரண்டு ஆண்களும் ரத்தத்தில் நனைந்திருந்தார்கள். மிமியும் கூட, மேசையில் கிடந்ததால், அதில் தோய்ந்து போயிருந்தது.
நகாடாவின் காலடியில் ஜானி வாக்கர் தடுமாறி விழுந்தான். பக்கவாட்டில் கிடந்தான், குளிரான இரவில் சுருண்டிருக்கும் குழந்தையைப் போல, சந்தேகத்துக்கிடமின்றி செத்திருந்தான். அவனது இடது கை தொண்டையை இறுகப் பற்றியிருக்க, வலது கை எதையோத் தொட நீண்டதைப் போல நேராக உயர்ந்திருந்தது. வலிப்புகள் நின்றிருந்தன, இயல்பாகவே, அவன் சிரிப்பும். மெலிதான கேலியை இன்னும் அவன் உதடுகளில் காண முடிந்தது. மரத்தளத்தின் மீது ரத்தம் பாவியிருக்க எங்கோ ஒரு மூலைக்குள் அவனுடைய பட்டுத்தொப்பி உருண்டு கிடந்தது. ஜானி வாக்கரின் தலையில் பின்புறமிருந்த கேசம் அடர்த்தியற்றதாயிருக்க, கீழிருந்தத் தோலைப் பார்க்க முடிந்தது. தொப்பியில்லாமல் மிகவும் முதிர்ந்தவனாகவும் ரொம்பவே நோய்மையுற்றவனாகவும் தெரிந்தான்.
நகாடா கத்தியைக் கீழே போட்டார், தொலைவில் சத்தமுண்டாக்கியவாறு நகரும் ஏதோவொரு பெரும் எந்திரத்தின் பற்சக்கர ஒலியைப் போன்ற பயங்கரமான ஒலியுடன் அது தரையின் மீது விழுந்தது. நீண்ட நேரம் நகாடா அவ்வுடலின் அருகே நின்றிருந்தார். அறைக்குள் இருந்த எல்லாமே செயலற்று உறைந்திருந்தன. ரத்தம் மட்டும், சத்தமேயின்றி, தொடர்ந்து வழிந்து கொண்டேயிருக்க, ரத்தக்குளம் தரையெங்கும் படர்ந்து பரவியது.
இறுதியில், நகாடா தன்னைச் சுதாரித்துக் கொண்டு மேசையில் கிடந்த மிமியைத் தூக்கினார். அவருடைய கைகளில் வெதுவெதுப்பாகவும் தளர்ந்தும் அது வீற்றிருக்க, முழுக்க ரத்தத்தால் மூடியிருந்தாலும் ஆபத்தேதுமில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவரிடம் எதையோ சொல்ல விரும்புவதைப் போல பார்த்தது மிமி, ஆனால் மருந்து அதன் வாயை நகர விடாமல் தடுத்தது.
பிறகு நகாடா கோமாவைப் பெட்டிக்குள் கண்டெடுத்து அதையும் தூக்கிக் கொண்டார். இதுவரை அதன் புகைப்படங்களை மட்டுமே அவர் பார்த்திருந்தார், ஆனால் இப்போது இனிமையான நினைவுகளின் அலையை உணர்ந்தார், வெகு-நாட்களுக்கு முன் தொலைந்த நண்பனைப் பார்ப்பது போல. இரண்டு பூனைகளையும் பற்றியவாறு நகாடா நீள்சாய்விருக்கையில் அமர்ந்தார். “நாம் வீட்டுக்குப் போகலாம்,” அவற்றிடம் சொன்னார், ஆனால் அவரால் எழ முடியவில்லை.
கறுப்புநாய் எங்கிருந்தோ தோன்றி இறந்துபோனத் தன் முதலாளியினருகே சென்று அமர்ந்தது. ரத்தச்சகதியினை அது நக்கியிருக்க வேண்டும், ஆனால் நகாடாவால் அதை உறுதியாக நினைவுறுத்த முடியவில்லை. அவருடைய தலை பாரமாகவும் மங்கலாகவும் இருக்க, ஆழமாக மூச்சையிழுத்துக் கொண்டு கண்களை மூடினார். அவருடைய மூளை மங்கத் தொடங்கி, அதை அவர் உணருமுன்பாகவே, இருட்டுக்குள் மூழ்கிப் போனார்.
– ஹாருகி முரகாமி
தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்
இந்த மொழிபெயர்ப்பு நாவல் விரைவில் வெளியாக இருக்கிறது.