உமா மகேஸ்வரி கவிதைகள்


சூரியன் ஒளிரும் திரைகள்
வாகன கீதம்
நொறுங்கிய வளர் பிறை
பத்திரமாயிருக்கிறது
மல்லிகைச் சரத்தருகே
இருள் தித்திக்கும் மரங்கள்
சோம்பல் முறிக்கும் காலை
அங்கே ஏனோ பூக்காத
மஞ்சள் மலர்கள் இங்கே
எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன…உடைந்த ஒரு மனதில்
சிராய்தததோ
ஒரு  சொல் சிலாம்பு
துடைத்தும் போகாதது.
இம் முறை ஒரே ஒரு தூர்ந்த
முத்தத் தடம்

காதல் நிரம்பிய ஈடன் என்றும் இழக்கப் படுவதில்லை.
அதற்குக் கதவேதும் அமைக்கவில்லை கடவுள்
எல்லாம் எல்லாமே
கிடைக்கும்
இல்லாத தே இல்லை
துன்பமென்பதே இல்லை…
இன்பம் இன்பம் இன்பம் மட்டுமே
திகட்டத் திகட்ட.
அப்புறம்தான்
ஏவாள் அந்தப் பாவத்தைச்
செய்தாளாம்
அதுவும் பெண்தானா
அவனும் பங்கு பெற…
உலகம் வெடித்து விரியத் திறந்நது
பரவியது பாவத்தின் ருசி
ஒவ்வொரு கலவியிலும்.
நம் காலடியில் ஊர்கின்றன
மினுமினுக்கும் அழகிய அழகிய
சர்ப்பங்கள்
தாழம் பூ கமகமக்கும்
மர்ம அறைகளை மறைத்து ரசிக்கிறோம்…
நேசிக்கிறோம் சாத்தானின் சகவாசத்தை .

பழரசக் கோப்பையில்
உன் உதடுகளின் முதல் ப்ரிய நிறம் கண்டு திடுக்கிட்டு நகர்த்துகிறேன்
தனித்த குளிரிரவுகளில் உன் தோள் கதகதப்பை கற்பனை செய்யாதிருக்க சபதமிட்டுத் தோற்கிறேன்
புடவைகளுக்கடியில் கிடக்கும்
உலர்ந்த அந்த முதல் மல்லிகைச் சரத்தில்
உன் விரல்களைக்  கண்டு பிடிக்கிறேன்
கசக்கிக் கிழித்தெறிந்த காதல் வரிகள் என்னிடமே திரும்புகின்றன
மீண்டும் …
ஓரத்தில் எப்போதும் அந்த
அவசர ஈரக் குரல்
ஒரே ஒரு வினாடிஊடுருவல் .

பூத்துச் சரியும் இப்பொழுது
பொருட்படுத்தாவிட்டால்
போய்ச் சேர்ந்து விடும்
கடுத்த நிபந்தனைகள் உருளும்
இத் தரைப் பளிங்கில்
நான்  கால் பதிக்க முடியாது தடுமாறாமல்
தழுவல்கள் கசகசக்கும்
இக்கட்டிலை நாம்
தள்ளி வைத்து விடலாம்
குளியல் தொட்டிக்குள்
காலளைய விரும்புகிறேன் நான்
நீயோ சிகரெட்டை ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டு
மோதிய புன்னகைகள்
போதுமான இடைவெளிகள்
நெருடல்களற்று நீளும் சாலை
திரள்வதைத் தேடாமல்
பொழிவதில் அழியலாம்
பொத்தி வைக்கலாம் இக்குளிரிரவை

நினைப்பதை நிறுத்தவியலவில்லை
நீ நிரந்தரமென்பதை.
என் அத்தனை வாசல்களிலும்
கை நிறைந்த நட்சத்திரங்களோடும்
தேன் நிறக் கண்களோடும்
அனுதினம் காத்திருப்பாய்
அழியாப் புன்னகையோடு.நீள் சதுரக் கண்ணாடி
குறுகலாக்கிய கன்னங்களோடு.
ஒரு காரணமுமற்ற
உடனடி உடைசல் ,
தலை கீழ் அருவியாக
என் தரைகளில் பீறிட்டது.
உனக்கான தேநீரில்
ஒவ்வாமையின் ஏடு
படிகிறது.
நாள் தோறும் நிறைகின்றன
நமதிரு கோப்பைகள்
நம்பிக்கையில்.
கிணற்றடி மைனாக்கள்
கிளுகிளுத்துத் திரிகின்றன.
விண் மீன் இடைத்
தூரம் நம்
கரிய காதல் .
அல்லது தீபத்தின் அடி இருள்
உன்னத ஆனந்தம்
அல்லது மகத்தான துயரம்.
எப்படியும் இந்த
அல்லது அந்த அதீத எல்லை
அளையும் நதியின்
அடியாழத் தாவரங்களை
அறியாதவன் நீ
நடக்கும் வீதியோரக்
கூழாங்கற்களின்
விசும்பலையும்.
தனிமையோ
சிசுவிரலொத்த
பசிய இலையின் மேற்பரப்பு.
இப்போதுதான்
வெயிலேறிய ஜன்னலில்
சாயம் நீங்கும் உன் சொற்களைக் காயப் போட்டேன்
உன் வாசனை நாசி துளைக்க.

– உமா மகேஸ்வரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.