வருடக்கணக்கில் திரும்பி வராத, முற்றிலுமாகத் தொடர்புகளேதுமில்லாமல் போய்விட்ட தனது கணவனை நினைத்து, ஒரு ஞாயிறு பூஜை முடித்து சர்ச் வளாகத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்த தருணத்தில், அவனது நினைவுகள் மேலெழுந்து ரெலினா ராஜேஷ் வாய்விட்டு அழத்துவங்கியபோது மரநிழலில் குழுமியிருந்தவர்களிடம் சிறிய சலசலப்புகள் உருவாகின. வெட்டவெளியில் உலகின் முன்பாக அழுதிடும் குறுகுறுப்பில் அவள் ஒடுங்கியபடியிருந்தாள். அவளது மூத்த மகன், ‘அப்பா இல்லேனா என்னம்மா, நாங்க இருக்கோம் உங்கள பாத்துப்போம்’ என்றபடி தனது கசங்கிய கைக்குட்டையால் அவளது கண்களை ஒத்தினான். இரண்டாவது பையனும் அவளது தோள்பட்டையில் சாய்ந்தவாறே வேகமாகத் தலையை ஆட்டி அதை ஆமோதித்தான். அவள் அழுகை நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. அதில் ஏமாற்றத்தின் குறுகலான ஒரு வடிவம் மிதந்து கொண்டிருந்தது. குழந்தைகளை மார்போடு அணைத்துக்கொண்டாள். அவளது ஆழமான விம்மல்கள், நெருக்கமான அணைப்பின் ஒரு தேற்றல் அவர்களுக்குத் தேவையாகயிருந்தது. குழந்தை யேசுவைச் சுமந்தபடி நின்றிருந்த மரியத்தின் பெரிய சிலை அந்த நடுவான வெய்யிலில் காய்ந்துகொண்டிருந்தது. கடைசியாக ஒருமுறை அதைப் பார்த்து மனதிற்குள் சிலுவையை வரைந்து தனது கைகளை இடமும் வலமுமாக ஆட்டி முத்தத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டாள். கணவனின் நீண்டநாள் பிரிவில், அவர்களுக்குள்ளிருந்த காதலை நினைத்துத் துய்த்துக் கரைந்து போயிருந்தாள். முழுவதுமாகத் தீர்ந்து கானல் நீராகிப் போய்விட்ட அந்தக் காதலை மீண்டும் மீண்டும் ஒரு வரைபடமாய் தனக்குள் எழுப்ப முயன்று தோற்று அதைப் பாதியிலேயே கைவிட்டிருந்தாள்.
நெருடல்களால் விட்டுப்போன உறவினால் ஏற்பட்டிருந்த வலியின் தழும்பை சதா அவள் தடவிக்கொண்டிருந்த போதுதான் மதனின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்தது. தனக்குள் மீதமிருந்த காதலின் ஒரு வடிவத்தை அவன் கண்டுபிடித்துக் கொடுத்த தருணங்களும் முறைகளும் அவளுக்குப் பிடித்திருந்தது. தினமும் அலுவலகத்தைச் சுத்தம் செய்வதும், தேநீர் கலந்து பணியாளர்களுக்குக் கொடுப்பதும், மதனும் இன்னும் சில பணியாளர்களும் தங்கியிருக்கும் மூன்று அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை ஒருநாள் விட்டு ஒருநாள் தூய்மை செய்வதுமான ஒப்பந்தநிலைப் பணியாளராக அவளிருந்தாள். மதன், தொகுப்பு கட்டடத் திட்டங்களுக்கான நிறுவனத்தில் தரம் நிர்ணயக்குழுவில் மேற்பார்வையாளர்களில் ஒருவனாக இருந்தான். தமிழகத்தின் தென் மூலையிலிருந்த ஒரு ஊரிலிருந்து வந்திருந்தான். பெண் சரீரத்தின் மீதான அதீதமான ஏக்கமும் வனப்பும் நிறைந்த வயதிலிருந்தான். மிகச் சாதாரணமாக இருக்கும் தன்னிடம் அவனுக்கு எது பிடித்திருந்ததென ரெலினாவிற்கு முழுவதுமாகத் தெரியவில்லை. சதா அவள் பின்னாலே அலைந்து கொண்டிருந்தவனிடம் பேசிப்பார்த்தாள். பெரிய நிறுவனத்தில் வேலைசெய்வதான எந்தவித கெத்துமில்லாமல் அவன் பேசியது அவளுக்குப் பிடித்துப் போனது. சிரிப்பும், நையாண்டியுமான அவனது தென் தமிழக உச்சரிப்புப் பேச்சில் சில பழைய கதைகளை மறக்க முடிவதை நினைத்து உண்மையில் மனதிற்குள் மகிழ்ச்சியாகவே அவள் உணர்ந்தாள். ஆசுவாசத்தின் முதல் படியை இப்படித்தான் நிரப்பினாள். பிறகு அது எல்லையற்று சகலவிதமாக வளரத்தொடங்கியிருந்தது. கட்டடத் திட்டம் மற்றும் மேம்பாட்டுக்கான அவர்களது அலுவலக வளாகத்திற்குள் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்களைப் போல நடந்துகொண்டு, இடைவெளிகளைக் கடைபிடித்துத் தங்களுக்குள்ளான உறவை மிகுந்த பாதுகாப்பாகத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
அவனுக்கு, அவளது சற்றுப் பெரியதான மார்பகங்கள் மீது தான் முதலில் ஈர்ப்பும் கவர்ச்சியும் ஏற்பட்டது. சமதளமான அவளது வயிற்றுக்கு மேலாகக் கொஞ்சம் பெரியதாகவே அது தனித்துத் தெரிந்தது. அதிகமும் வேலைப்பாடுகள் ஏதுமில்லாத காட்டன் சுடிதாரில் மிகவும் நேர்த்தியாகக் கண்கள் கூசாதவாறு, மெலிதான முக அலங்காரத்துடன் கோதுமையின் நிறத்தில், மெல்லிய நளினத்துடன் நடந்து நடந்து அலுவலகத்திற்குள் அவள் வேலை செய்து கொண்டு திரியும்போது அவனது கண்கள் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் அவளது மார்பகங்களில் தான் குவிந்திருக்கும். அதன் வனப்பில் லயித்துப் போய் கிடந்தான். எப்போதும் அவனது முதல் பார்வை அவளது மார்பகங்களில் குத்தி நின்று கிறங்கி பிறகு தான் உடலெங்கும் சுழலும். ஒரு போதும் அவனால் அதை மாற்றிக்கொள்ளவே முடிந்ததில்லை. அவளுடனான பழக்கத்திற்குப் பிறகு, ஒரு முறை அவளிடமே அதைச் சொல்லியுமிருக்கிறான். அவள் அதைக் கேட்டுச் சிரித்தபடி நாணித் தலைகுனிந்து பேச்சற்று நின்றிருந்தாள். தனது கட்டடப் பணியிடத்தில் நிறைந்திருந்த ஆண் பணியாளர்களுக்குள் இருந்த கடுமையான போட்டிகளுக்கிடையில் அவளைத் தனக்கானவளாக ஆக்கிக் கொண்டதை நினைத்துக் கொஞ்சம் பெருமையாகவும் உணர்ந்திருந்தான்.
*
முன்பே திட்டமிட்டபடி, ஒரு விடுமுறை நாளில், சென்னை கடற்கரை செல்லும் புறநகர் மின்சார இரயிலில், ஓரளவிற்கு ஆட்கள் குறைவாக இருந்த பெட்டியில் இருவரும் ஏறிக்கொண்டனர். சேலையில் கொஞ்சம் வனப்பும், அழகும், நளினமும் கூடியிருந்தது அவளுக்கு. இப்போதுதான் முதல் முறையாக அவளைச் சேலையில் பார்க்கிறான். சன்னல் வழியாக எதிர்க்காற்று அவளுடைய தலை முடியைச் சதா கலைத்தபடியிருந்தது. அனிச்சையாக அவளது கைகள் முடியைச் சரிசெய்தபடியே இருந்தை அவன் வெகுவாக ரசித்தான். ஒவ்வொரு முறையும் கைகள் மேலெழுந்து இறங்கும் போதும் இடைவெளியில் தெரிந்திடும் மார்பகத்தை ஓரக்கண்களில் ரசித்தான். அவ்வப்போது சேலையை இழுத்துவிட்டு அதைச் சரிசெய்தபடியிருந்தாள் ரெலினா. அதன் மீதான ஆர்வத்திலேயே அவளுடனான ஒவ்வொரு நொடியையும் அவன் கழித்துக் கொண்டிருந்தான். எழும்பூரில் இறங்கி அருகிலிருந்த தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றனர்.
இருளில், தனது கையை மெதுவாக அவளுடம்பிற்குள் நுழைத்து மெல்லிய வருடல்களால் அவளைத் தீண்டிக்கொண்டிருந்தான். மென் அசைவுகளில் அவனது விரல்கள் அவளுடலில் இலக்கற்று நகர்ந்துகொண்டிருந்தன. விளக்குத் திரியைப்போலத் தனக்குள் எரிந்தபடி மென்மையாக அசைந்து கொண்டிருந்தாள் அவள். முதல் முறையாகப் படரும் அவனது தொடுதலை திடீரென முளைத்திருந்த ஒரு ஈரத்தின் திரட்சியைப் போல அச்சத்துடனும் ஆர்வத்துடனும் உணர்ந்துகொண்டிருந்தாள். தனது இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மயக்கத்தின் முதல் நிலையில் படிந்து கிடந்தாள். ஒவ்வொரு திறப்பாகத் தனக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவனும் உணர்ந்து லயித்துப் போயிருந்தான். இன்னும் இன்னும் என அவனது மனது விரிந்து கொண்டிருந்தது. ஒரு எல்லைக்குக் கொண்டுசென்று அதை முடிக்க எத்தனித்துக் கொண்டிருந்தான். மலரின் மெல்லிய சாய்வாக அவள் இருக்கையில் கிடந்தாள். திரையில் எதோ ஓடிக்கொண்டிருந்தது. அவனது கையை எவ்வளவு நீட்டியும் மடக்கியும் அவளது ரவிக்கையின் வழியாக அவளது திரண்ட மார்பகத்தினை அவனால் தொட முடியாமல் இருந்தது. ஏமாற்றத்துடன், குவிந்தபடியிருந்த ரவிக்கையின் மேற்புறங்களைத் தடவிக்கொண்டிருந்தான். அவள், அவனது கையை அதுவரையில் மட்டுமே அனுமதித்தது போலச் சற்று இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தாள். சற்று மேலெழுந்து உட்கார்ந்தவாறு மார்பகங்களை நெருங்கும் அவனது விரல்களை நிறுத்திக் கீழிறக்கினாள். உறைந்து போயிருந்த உணர்ச்சிக் குவியல்களின் ஒவ்வொரு புள்ளியையும் அவன் தொட்டு மீட்டெடுக்கும் போது அவள் தன்னையே மறந்துபோகத் துவங்கினாள். இருவருக்கும் இருள் கொஞ்சம் பழகிவிட்டது. அவனது நாசிக்கு அருகில் தனது உதட்டை நீட்டினாள். அவன் மெலிதாக அதைக் கவ்வி சத்தமின்றி உறிஞ்சத்துவங்கினான்.
சாலையில் நடந்து வந்தபோது சூரியன் மேற்கின் எல்லையில் கிடந்தான். ஆரஞ்சு நிற வெய்யில் தரையில் நகர்ந்து கொண்டிருந்தது. அவள் அவனது கைகளை இறுக்கமாகப் பற்றியிருந்தாள். அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. கைகளைச் சிறிது வீசியபடி நடந்து கொண்டிருந்தனர். இருவரும் எதுவும் பேசவில்லை, அல்லது பேசுவதற்குத் தோன்றவில்லை. அந்த நிகழ்வின் சாரத்தை இருவரும் ரசித்து அனுபவித்தனர். காபி கடையொன்றில் அமர்ந்து காபி குடித்துவிட்டு, குழந்தைகளுக்கென சில தின்பண்டங்களைக் கட்டி வாங்கிக் கொண்டாள்.
“தியேட்டரில் நடந்தது பிடிச்சிருந்துச்சா..?” மெல்லிய குரலில் தொடங்கினான்.
‘’ம்..” சொல்லும்போது அவளது கண்கள் விரிந்திருந்ததை அவன் கவனித்தான். மேலும் அவளாகவே தொடர்ந்தாள்,
“ நிறைய்ய நாளாச்சு, இப்படி உணர்வுகளுக்குள்ளாக முழுவதுமாகக் கரைந்து.. ” என்றாள் சிறிய நாணத்துடன்.
“அடுத்த வாரத்தில் என் ரூமில் இரண்டு பேரும் ஊருக்கு போறானுங்க.. நீ சொன்னா அங்க பிளான் பண்ணலாம்..” கோர்வையில்லாமல் மெலிதாகக் கேட்டான்..
“அத அப்புறம் பாக்கலாம்” என்றாள் பெரிதாகச் சிரித்தபடி…
*
மரங்களின் இலைகள் சுருண்டு கிடக்கும் மாலைநேரத்தில் பஜாரில் காபி கடையொன்றில் தன் குழந்தைகளுடன் அவனுக்காகக் காத்திருந்தாள். குழல் விளக்குகளின் வெள்ளை ஒளிகளில் கடைகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. குழந்தைகள் இருவரும் தட்டிலிருந்த பஜ்ஜியைக் கொறித்துக் கொண்டிருந்தனர். அவனது வருகையை எதிர் நோக்கி வாசலைப் பார்த்தவாறு அவள் அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில், குழந்தைகள் அவனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்ன நினைப்பார்கள்? போன்ற எண்ணற்ற கேள்விகளின் சலனங்கள் பரவியிருந்தன. ஒரு அவசரத்தின் தொனியில் அவளது முகம் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருந்தது. தனது குழந்தைகளிடம் அவன் பேசிப் பழகப்போகும் தருணங்களுக்கான ஏக்கத்தைச் சுமந்தபடி நகர்ந்துகொண்டிருந்தன நிமிடங்கள்.
முன்திட்டமிடப்படாத வருகையைப் போலான செயற்கையான இயல்புடன் கடைக்குள் நுழைந்து அருகிலிருந்த மேஜையில் அமர்ந்துகொண்டான். தற்செயலாக அவனைச் சந்திக்கும் பார்வையில் அவனைப் பார்த்துப் பேசத்துவங்கினாள் ரெலினா. நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு ‘சார் தான் எனது பணியிடத்தின் மேலாளர்’ என்று தனது குழந்தைகளிடம் அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவன் அளவாகச் சிரித்து குழந்தைகளை நோக்கிக் கையசைத்தான். என்ன படிக்கிறார்கள், எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் போன்ற வழமையான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே காபியை அருந்தி முடித்தான். அவர்களுக்கும் தனக்குமான பில்லைக் கட்டிவிட்டு வெளியேறத் தயாரானபோது, மெலிதாகச் சுருட்டிய இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அவளது கைகளுக்குள் யாருக்கும் தெரியாதவாறு இரகசியமாக நுழைத்திருந்தான். ‘அங்கிளை சண்டே வீட்டுக்கு வரச்சொல்லு, உன்னுடைய பிறந்தநாளுக்கு அங்கிளைக் கூப்பிடு’ என்றாள் இளையவனிடம். அவனும் தனது சிறிய குரலில் ‘நீங்கள் கண்டிப்பாக சண்டே வரவேண்டும்’ என்றான். சிரித்துக்கொண்டே ‘கட்டாயம் முயல்கிறேன்’ என்றபடி மீண்டும் ஒருமுறை எல்லோரிடமும் சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டு வெளியேறினான். அவள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இளையவனின் பிறந்த நாளுக்கென புதிதாக ஆடைகள் வாங்குவதற்காகப் பெரிய கடையொன்றிற்குள் நுழைந்திருந்தாள். சுருண்டு கிடந்த ரூபாய் நோட்டுக்களை விரித்துத் தனது சிறிய பர்சுக்குள் வைத்து உள்ளங்கையில் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
இந்தச் சந்திப்பை அவள் திட்டமிட்டுச் சொன்னபோதே அவன் வர முடியாது என மறுத்துப் பார்த்தான் ஆனால் அவளது பிடிவாதத்தால் வரவேண்டியதாகி விட்டது. அவளது இளைய மகனது பிறந்தநாளுக்கான பரிசுத் தொகையை அவனிடமே கொடுக்க வேண்டும் எனச் சொல்லிக் கெஞ்சிப்பார்த்தாள். அவன் அதைக் கடைசிவரை ஒத்துக்கொள்ளவேயில்லை. அவள், அவர்களது தனிமையான சந்திப்புகளில் தனது குழந்தைகள் பற்றியும், வீட்டைப்பற்றியுமே அவனிடம் சொல்லிக்கொண்டிருப்பாள். அவர்களது செய்கைகளை, அவர்களின் பள்ளியில் நடந்தவற்றை, நகைச்சுவைகளை, விட்டுச் சென்ற கணவனை நினைத்து அழும்போது ஆறுதல் படுத்துவதை என அவர்கள் குறித்த எதையாவது சொல்லிக்கொண்டேயிருப்பாள். அவன், அசைந்திடும் அவளது உதடுகளையும் மார்பகங்களையுமே பார்த்தபடியிருப்பான். மேலும் ஓய்ந்திடாமல் அவளது வீட்டையும், குழந்தைகளையும் பார்க்க வரவேண்டும் எனச் சொல்லி நச்சரித்துக் கிடந்தாள். ஆனால் அவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே காது கொடுத்துக் கேட்க மாட்டான். தனிமையில் நிகழக்கூடியதான இரகசியமான சந்திப்புகளுக்கான ஒற்றை லயத்திலேயே அவளை அவனது மனம் நிறைத்து வைத்திருந்தது.
இரண்டு விதங்களில் அவள், தனக்கான இந்த வாழ்வைச் சமப்படுத்தி வைத்திருந்தாள். ஒன்று தனது குழந்தைகளின் மீதான பேரன்புகளைக் கொண்டும் மற்றது மதனது காமம் தோய்ந்திருந்த காதலின் அளவற்ற உணர்ச்சிகளினால் நிரம்பியிருந்த தற்போதைய உறவைக் கொண்டும்தான். இவற்றில் எதனொன்றின் மீதான ஏமாற்றத்தையும் அவளால் எதிர்கொள்ள முடியாததாகவே நினைக்கத் துவங்கியிருந்தாள். மதன் மீதான, இந்த உறவின் மீதான நம்பிக்கைகள் கொஞ்சம் ஊசலாட்டத்திலிருந்தாலும் அவனை அவளுக்குப் பிடித்திருந்தது. அவன், அவளை அப்போதைக்கான வடிகாலாக மட்டுமே நினைத்துச் சுற்றிக்கொண்டிருந்ததால் அவளது குழந்தைகளுடனான நெருக்கத்தைத் திட்டமிட்டே தவிர்த்து வந்தான்.
*
லேசாக மழை பெய்து முடிந்திருந்தது. சாலைகளில் ஈரம் படிந்திருந்தன. அவனது அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான பால்கனியின் கம்பிகளில் மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. அதன் ஓரத்தில் நின்றபடி பாதி மீதமிருந்த சிகரெட்டைப் பற்றவைத்து இழுத்து புகையைக் காற்றோடு விட்டுக்கொண்டிருந்தான். அவனது பார்வை கீழேயே குவிந்தபடி அவளது வருகையை எதிர்பார்த்துக் கிடந்தது. உணர்ச்சிகளின் தீவிரமான மனநிலையில் அவளை எதிர்பார்த்திருந்தான். ஒரு சிறிய தீக்குச்சியைப் போல உரசி அவளை நெருப்பாக்க நினைத்திருந்தான்.
கொஞ்ச நேரத்தில் அவனது குடியிருப்பிற்குள் நுழைந்தவள், திறந்திருந்த அவனது அறையை நோட்டமிட்டு விட்டு, அருகிலிருந்த மற்ற பணியாளரின் அறையைப் பெருக்க ஆரம்பித்திருந்தாள். பழைய காட்டன் சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள், சால்வையைத் தோளின் ஒரு பகுதியிலிருந்து இழுத்து இடுப்பைச் சுற்றிக் கட்டியபடி அவளது வேலையைத் துவங்கியிருந்தாள். பின்னால் அவளது அசைவைக் கவனித்தபடி, நின்றிருந்த மதனை எதிரிலிருந்த மரப்பீரோவின் கண்ணாடியில் பார்த்த பிறகு, இரண்டு மார்புகளுக்கு நடுவிலிருந்த சால்வையை முழுவதுமாக இழுத்து விட்டபடி, ‘என்ன’ என்பதைப் போலப் பார்த்தாள். அவளுக்காகத் தான் இன்று விடுமுறை எடுத்திருப்பதாகச் சொன்னான். மேலும் அருகிலிருந்த அறைகளிலிருந்த மூவரும் ஊருக்குச் சென்றிருப்பதாகவும் சிரித்தபடி கூடுதலாகச் சொன்னான். அதற்கு என்ன என்பதைப் போலப் பார்த்துவிட்டு, மூலையில் குப்பையைக் குவித்து அள்ளினாள். அவள் குனிந்தபோது பின்னாலிருந்து அவளைக் கட்டிப்பிடித்து காதுமடல்களைக் கடித்தான். திணறியபடி அவனது இறுக்கத்திலிருந்து வெளியேற முயன்றாள். முடியவில்லை. வேண்டாம் என்பதைப் போலத் தலையாட்டியபடி அவனது இறுக்கமான பிடிக்குள் நின்றிருந்தாள். அவனது நெருக்கத்தை மனதிற்குள் விரும்பினாள். தனது அறைக்கு அவளை நகர்த்திக்கொண்டு வந்தவன். தொடர்ந்து முத்தமிட்டபடி அவளது மார்புகளை அழுத்தமாக அமுக்கிக்கொண்டிருந்தான். அவள் திமிறி அவனைவிட்டு வெளியேறி, அறையின் மூலையில் மூச்சுவாங்க நின்றிருந்தாள்.
மீண்டும் வலுக்கட்டாயமாக அவளைப் பின்னாலிருந்து அணைத்தபடி, ஒரு கையால் சுடிதாரின் கீழ்முனையைப் பற்றி மேல்நோக்கி இழுக்கத் துவங்கினான். அவள் அதை மறுத்து அவனது பிடியிலிருந்து விலக முயன்றபடி, தனது மார்புப் பகுதியில் ஒரு கையைக் குறுக்காக வைத்தபடி மறுகையால் சுடிதாரைக் கீழ்நோக்கி இழுத்தபடியிருந்தாள். அவன் அவளது கழுத்தில் உதடுகளை அழுத்தி முத்தங்களைப் பதித்தான், காதுமடல்களைக் கடித்து நுனி நாக்கால் வருடிக்கொடுத்தான். அவளது நளினம் நிறைந்த அசைவுகள் அவனுக்குச் சம்மதம் கொடுத்தாலும், அவளது கைகள் சுடிதாரை மேல் நோக்கி நகர விடவில்லை. அவன் தனது ஒரு கையை அவளது தொடைகளுக்குள் நுழைத்து சல்வார் பேண்ட்டோடு இறுக்கிக் கொண்டான்.
“ப்ளீஸ் இன்னைக்கு வேண்டாம், நான் கொஞ்சம் வேகமாகப் போணும்” என முணுமுணுத்தபடியிருந்தாள்.
“இன்னைக்குத் தான் எல்லாவற்றிற்கும் சரியான நாள்” என்றபடி அவளது சல்வார் பேண்டை முழுவதுமாக இழுக்கப் பார்த்தான், அவளது கைகள் அதற்கு எவ்வித மறுப்பேதும் சொல்லாததால், சீக்கிரமாக முழுவதுமாக இழுத்து விட்டான். அது அவளது குதிக்காலில் இடறியது, காலிலிருந்து அதை இழுத்து வெளியே எறிந்தான். சுடிதாரின் மேலாகக் கைகளைக் குறுக்காகக் கட்டியபடி அரைநிர்வாணமாக அவள் நின்றாள். காமத்தின் இடைவிடாத துடிப்பொன்று அந்த அறை முழுவதுமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
உணர்ச்சியின் பெரும் குவிப்பில் அவளது சுடிதாரைக் கீழிருந்து பிடித்து இழுத்து ஒரே மூச்சில் கழற்றி எறிந்தான். கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியபடி தனது உள்ளாடையை மறைத்துக் கொண்டாள். அவன் அதையும் உருவ முயன்றபோது அவளது கண்களில் கண்ணீர் வடியத்துவங்கியது. அவளது காமத்திற்குள் படர்ந்திருந்த சிறிய தனியான வேதனையொன்றை நினைத்துப் பயந்து கொண்டிருந்தாள். பின்கழுத்தில் உதடுகளை அழுத்தி முத்தங்கள் கொடுத்தபடி, அவளது உள்ளாடையைத் தீவிர முனைப்பில் கழட்டினான். அதீதமான பஞ்சுகளால் உட்புறத்தில் நிரப்பப்பட்டு மேற்புறமாகச் சற்று உப்பியிருந்த அது, மென்மையான சிவப்புத் துணியில் சிறிய பூக்களின் பின்னல்களுக்கிடையில் தைக்கப்பட்டிருந்தது. இறகின் வழுவழுப்போடு அது கழன்று அவளது உடலிலிருந்து நழுவிக் கீழே கிடந்தது. முழுவதுமாகச் சூம்பிப் போய் வற்றிய நிலையில் தளர்ந்து, நீளவாக்கில் சற்று பெரிய கோடு மாதிரி கீழிறங்கித் தொங்கிக் கிடந்தன அவளது முலைகள். தடித்த காம்புகளில் பால் கசிந்து நின்றிருந்தது. குறுக்காகக் கைகளை வைத்து அவற்றை மறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள். கண்களில் ஒரு மிரட்சியின் வடிவம் ஒட்டிக்கொண்டிருந்தது. அவளது முலைகளை வெறுப்பின் சாயலோடு ஆச்சரியத்துடன் பார்த்தவாறே அதிர்ச்சியில் அவன் இமைக்காமல் நின்றிருந்தான். சில நொடிகளில் அவனது உணர்ச்சிகள் வடிந்து வெற்றுடலாகி நிற்பதைப்போல அவன் உணர்ந்திருந்தான். மதிலில் சாய்ந்தபடி அரைநிர்வாணமாக நின்றுகொண்டிருந்த அவளைப் பார்ப்பதற்கே அவனால் முடியவில்லை. உடைகளின் வெளியே அவன் பார்த்து அனுபவிக்க விரும்பிய கற்பனையான வடிவிலிருந்து அது முற்றிலுமாக மாறிக்கிடந்தது. அருவருப்பின் முற்றிய நிலையை அவனது மனம் அடையத் துவங்கியிருந்தது. கண்ணீருடன் நின்றிருந்த அவள் தனது முலைகளில் ஒன்றைத்தூக்கி அவனை அழைத்தாள். அவனதை வெறுப்போடு பார்த்தான். முகத்தைச் சுருக்கியபடி, தரையில் கிடந்த அவளது உள்ளாடையை எடுத்து அதீதமான பஞ்சுகளைக்கொண்ட உப்பலான அதன் மேற்புறத்தைத் தடவியவாறே அவளது கண்களைப் பார்த்தான். அது அவனிடம் எதையோ இறைஞ்சி அழும் தொனியிலிருந்தது. அவளிடம் அதை நீட்டினான். அதை வாங்காமல் தடித்த காம்புகளில் கசிந்திருந்த பாலைப் புள்ளியாக்கி அவனிடம் மீண்டும் காண்பித்தாள். அவனதை ஆழ்ந்த வெறுப்பின் சாயலோடு பார்த்துவிட்டு பால்கனிக்குப் போனான். வானையே வெறித்தபடி சிகரெட் குடித்துவிட்டுச் சில நிமிடங்கள் வரை அங்கேயே நின்றிருந்தான்.
உடைகளை உடுத்திக்கொண்டு, மெத்தை விரிப்புகளைச் சரிசெய்துவிட்டு அதன் ஒரு ஓரத்திலமர்ந்து அவள் பேசத் துவங்கும்போது அவன் அவளது மடியில் படுத்துக் கண்களை மூடிக்கிடந்தான். உடைகளின் பரப்பினூடாக பெரிதாகத் திரண்டு நின்ற அவளது மார்பகங்களை அவனது கை தடவிக்கொண்டிருந்தது. இரண்டாவது பையன் பிறந்ததற்குப் பிறகான சில மாதங்களில் அவளது இரண்டு முலைகளும் சூம்பி நீர்த்துப்போய் பழைய காய்ந்த சுரைக்காயைப் போலாகிவிட்டதெனச் சொன்னாள். பால் கசிவது இப்போதுவரை நிற்காமல் தொடர்வதாகவும், அவ்வப்போது அதில் கடினமான வலிகளை உணர்வதாகவும் பொத்தேரி SRM மருத்துவமனையில் தொடர் வைத்தியம் பார்ப்பதாகவும் கலங்கியிருந்த கண்களுடன் கோர்வையாகச் சொன்னாள். அவளும் கணவனும் மருத்துவமனைக்குச் சென்று முதன் முதலாக இது குறித்து விவரம் கேட்ட போது ஹார்மோன்களின் அளவற்ற சிக்கல்களினாலும் சீரற்ற தன்மையினாலும் இது வந்திருப்பதாகவும், மேலும் தீவிரத்தன்மையில் இது அவளது ஆயுள் உள்ளவரை தொடரவும் வாய்ப்புள்ளதாகவும் தொடர் மருத்துவத்தில் இதைக் கட்டுப்படுத்தி வைக்கலாம் என்றும் மேலும் நீண்ட ஆங்கிலத்தில் இந்த நோய்க்கான பெயரொன்றையும் மருத்துவர்கள் கூறியதாகவும் சொன்னாள். மாதவிடாய் காலத்தில் சற்று அதிகமான வலியை இப்பொழுதெல்லாம் அதில் உணர்வதாகவும், அந்த வலி பழைய கத்தியைக் கொண்டு தனது மார்பங்களை அறுத்திடுவது போலிருப்பதாகவும் கண்ணீருடன் சொன்னாள். மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய ஒரு வாரத்தில் அவளது கணவன் அவளை விட்டுச் சென்று விட்டதாகவும், அப்போது தனது இரண்டாவது மகனுக்கு மூன்று வயதென்றும், கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக அவனுக்குப் பத்தாவது பிறந்தநாள் கொண்டாடியதையும் சுவரின் ஒரு புள்ளியில் பார்வையைக் குவித்தவாறு அசட்டுத்தனமாகச் சிரித்தபடி ஞாபகப்படுத்தினாள். அவனுக்கு அடரிருளில் நுழைந்திருப்பது போலிருந்தது. எதுவும் புரியவில்லை. மனது, குழப்பத்தில் பெரிய இரைச்சலில் சிக்கிக்கொண்டது போலாகிக் கிடந்தது. அவனால் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றத்தின் திரண்ட கசப்பு அவனது உடல் முழுவதுமாக தீவிரமாகப் படர்ந்திருந்தது. திடீரென எழுந்து சட்டையை மாற்றிக்கொண்டு அறையிலிருந்து விருட்டென வெளியேறினான். தனது காய்ந்த முலைகளில், அவனது உதடுகளின் மெல்லிய ஸ்பரிசத்தால் வருடிடும் காதலை எதிர்பார்த்து ஏமாந்து போயிருந்தாள் ரெலினா. அவளது கண்கள், அவன் வெளியேறிய வாசலைப் பார்த்தபடியே கண்ணீரைக் கொட்டத்துவங்கின.
ஒரு உறவு கடைசியாக அவளை விட்டுச் செல்லும் முறைகளை அவள் நன்கு அறிந்திருந்தாள், உறுத்தும் அதன் சிக்கல்கள் நிறைந்த வலிகளும் அவளுக்குத் தெரியும். முன்பே எதிர்பார்த்திருந்தது தானென்றாலும் ஒரு நம்பிக்கையில் இவ்வுறவை இதுவரை வளர்த்துக்கொண்டு வந்திருந்தாள். ஆனால் முன்பே அவள் உத்தேசித்திருந்த அதே முடிவுதான் அவளுக்குக் கிடைத்திருந்தது. சில நம்பிக்கைகளும், விருப்பங்களும் உடைந்திடும் பொழுதுகளை நீங்கள் கவனித்திருந்தால், அவற்றைப் பாதுகாத்து வைத்திருந்த மனதிற்குள் நிகழும் கணக்கற்ற விரிசல்களையும், ஆழமான துயரங்களையும் அதன் வலிகளையும் உங்களால் உணர்ந்துகொள்ள முடியும். அவளுக்குள் பரவத்துவங்கியிருந்த வெற்றிடத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தனக்குள்ளே உலர்ந்து போகத் துவங்கினாள். காதலில் படர்ந்திருக்கும் எல்லையற்ற பேரன்பின் சிறு வடிவமொன்றை யாரிடமாவது பார்த்துவிடுவதான அவளது ஏக்கம் அவளது உடல் முழுவதும் சுற்றியபடி மெல்லிய கோடாய் மாறிக்கிடந்தது.
*
தொடர்ச்சியாக இரண்டு நாள்களுக்கு மேலாகியும் ரெலினா அலுவலக வேலைக்கு வரவில்லை. அவளது அலைபேசி முற்றிலுமாக அணைந்து கிடந்தது. அதுவரையிலான நிகழ்வுகளை மனத்திரையில் ஓடவிட்டு அலுவலக நேரங்களிலும் இருக்கையிலேயே அமர்ந்து மனது வெம்பி தலை கவிழ்ந்து கிடந்தான் மதன். அவனுக்குக் கிடைத்திருந்த ஏமாற்றத்தில் கண்ணீர் கொஞ்சமும் வரவில்லை ஆனால் மனதின் குறுகுறுப்பு அவனை நசுக்கத்துவங்கியிருந்தது. மிக மோசமாக அவளது நம்பிக்கையைக் குலைத்து விட்டதான நினைப்பு அவனை நிம்மதியிழக்க வைத்திருந்தது. அவனது சிறு சிறு தவறுகள் ஒன்றிணைந்து உருவாகியிருக்கும் இந்த நிலைமையை உடனடியாகக் கலைத்துத் தப்பித்துக் கொள்வதற்கான வழி ஒன்றை அவன் தேடத்துவங்கினான். இரண்டு நாள்களும் அதீத மதுவில் அவளைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.
மூன்று நாள்களுக்குப் பிறகு அவள் வேலைக்குத் திரும்பியிருந்தாள். முகத்திலும் அசைவுகளிலும் முன்பை விடத் தெளிவும் நளினமும் கூடியிருந்தது. சிரிப்பின் மென்மையை எல்லோரிடத்திலும் பகிர்ந்தபடியிருந்தாள். எந்தவித மாற்றங்களுமின்றி அவளது அன்றாடப் பணிகளில் தன்னை நிறைத்திருந்தாள். எதுவுமே நடக்காதது போலான இயல்பான பார்வைகளை அவள் மதன் மீது பரவவிடும் போது, அவன் உணர்ச்சியற்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். சற்றுத் தூக்கி நிறுத்தப்பட்ட அவளது மார்பகங்களை அவன் காண நேர்ந்த போது, அதீதமான பஞ்சுகளால் தைக்கப்பட்ட சற்று உப்பிய உள்ளாடையே அவனது கண்களுக்குத் தெரிந்தது. அப்போது அவனது வலியின் கீறலை யாரோ அதீதமாக அழுத்துவது போலிருந்தது அவனுக்கு. ஆனால் அவள் எப்போதும் தனக்கிருக்கும் குறைகளின் வடிவத்தை வேறொன்றின் வாயிலாக நேர்மறையின் வெளிப்பாடாக மாற்றி அவளது வாழ்வைச் சமப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அவளிடம் எந்தச் சலனமுமில்லை. நான் இப்படித்தான், என் உடல்வாகு இது தான். நீயும் நானும் விரும்பும் காதலையும், காமத்தையும் பங்கிட்டுக் கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும் இதனால் எந்தக் குறையும் வந்துவிடப் போவதில்லை. உனக்கு நான் வேண்டும் என்றால் என் பலவீனத்தையும் நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒருவகையில் அது தான் பேரன்பு, அதைத் தான் எதிர்பார்க்கிறேன் என்பதையே அவள் ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருந்தாள். அவளது நடவடிக்கைகளும் இதையே பிரதிபலித்தன. அவனிடமும் இதைத்தான் சில நாட்களுக்குப் பிறகான சந்திப்புகளில் சொல்லவும் செய்தாள். அவன் உணர்ச்சிப் பெருக்கின் தீவிரத்துடன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அதற்குப் பிறகு சில நேரங்களில், கிடைத்திருந்த வாய்ப்புகளில் அவனது அறையில், எரிந்துகொண்டிருந்த காமத்தின் வாசனைகளை இருவரும் முழுவதுமாக ரசித்து அனுபவித்து முடித்திருந்தனர்.
*
அவன் தங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காகத் தரைதளத்தின் மூலையில் ஒரேயொரு அறைகொண்ட சிறிய பகுதியில் கணவனும், மனைவியும், பள்ளியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும் பெண் பிள்ளையுமாக வசித்து வரும் சிறிய குடும்பத்தைச் சில நாட்களாகச் சற்று கவனிக்கத் துவங்கியிருந்தான் மதன். அவனது அறைத் தோழர்கள்தான் ‘மேரி ஆண்டி’யென அலுவலகம் விட்டுத் திரும்பும்போது அந்தப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். தெலுங்கு கலந்த தமிழில் அவர்களது உரையாடல்களிருக்கும். அவர்கள் சொல்லும் சிறிய நகைச்சுவைகளுக்குக் கூடப் பெரிதாகச் சிரித்தபடியிருப்பாள். ஆனால் மதன் ஒருநாளும் அவளிடம் பேசியதில்லை. சிலமுறை வீட்டின் சாவிக்காக அவளை அழைத்திருக்கிறான் அவ்வளவுதான். எப்போதும் அறையின் வெளியே பிளாஸ்டிக் சேரில் முழுவதுமாகத் தன்னைத் திணித்து அமர்ந்தபடி அறைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை வெறித்தபடியிருப்பாள். சில மாலை வேளைகளில் அவளுடன் குடியிருப்புவாசிகளில் சிலருமாக – அவளது வயதை ஒத்த பெண்களும் சற்று வயதான ஆண்களுமாக – அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அதில் முக்கியமாக ஒவ்வொரு வீட்டின் திரைகளைக் கடந்து செல்லும் கோணங்களும், சொற்களுமிருக்கும்.
மேரி தான் மூன்று மாடிகளின் வராந்தா, படிக்கட்டுகள் மற்றும் தரைதளத்திலிருக்கும் பார்க்கிங் ஏரியா முழுவதுமாகப் பெருக்கி சுத்தம் செய்து வந்தாள். மேரியின் கணவன் சவேரிமுத்து காலை வேலைகளில், அருகிலிருந்த ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலைசெய்து வந்தான், இரவில் சரியாகப் பதினோரு மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்பின் இரும்பு வாயிற்கதவைப் பெரிய பூட்டால் பூட்டிவிட்டுத் தனது அறைக்கு வெளியே சிறிய கட்டிலில் படுத்துக்கொள்வான். குடியிருப்புகளின் உரிமையாளர்களால் நிர்வகிக்கப்பட்ட சிறிய அமைப்பின் மேற்பார்வையில் இத்தகைய வேலைகளுக்கென மேரி குடும்பம் நியமிக்கப்பட்டு சம்பளமாக ஒரு சிறுதொகையும் வழங்கப்பட்டு வந்தது. அவள், மேலும் அருகிலிருக்கும் சில வீடுகளுக்கு வேலைக்குச்சென்று வந்து கொண்டிருந்தாள்.
அவளது மகள் ஜான்சி, அவளது சிறிய கண்களின் வழியாகத் தன்னைப் பார்ப்பதும், தான் திரும்பப் பார்க்கும் போது நெளிந்து பார்வையைக் கீழ்நோக்கிக் குவித்துக் கொள்வதையும் சில நாட்களாகக் கவனித்து வந்தான் மதன். கடைசி இரண்டு தடவையும் சாவியைக் கேட்கும்போதும் ஓடி வந்து அவளே எடுத்துக் கொடுத்தது அத்தனை இயல்பானதா? என நினைக்கத்துவங்கினான். முன்பு சிலமுறை அவளைப் பார்க்க நேர்ந்தபோதும் அவளிடம் எந்த ஈர்ப்பும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. ஜான்சிக்கு சிறிய கண்கள், அது எப்போதும் பரிதாபத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கும். தோள்பட்டைவரை கத்தரித்திருந்த முடி அடர்த்தியாகப் புரண்டுகிடக்கும். சிறுவயதில் சுடு தண்ணீரை அடுப்பிலிருந்து இழுத்துக் கொட்டிவிட்டதில் முகத்தில் இடது புறமாக நெற்றியிலிருந்து கழுத்துவரை தோல் கருகி சுருக்கங்களுடனான வடுக்கள் படர்ந்திருந்தன. அது தோள்களிலும் பரவி வயிற்றின் அடி வரை நீண்டுகிடந்தது. அத்தனை கோரமில்லையென்றாலும் முதல் முறையாகப் பார்ப்பவர்களிடமிருந்து இரக்கத்தை வெளிக்கொண்டு வந்திடும் வடிவமாக அது இருந்தது. நெற்றியில் வைத்துக்கொள்ளும் சிறிய பொட்டு அவளை வேறொரு வகையில் இன்னும் எடுப்பாக ஆக்கிக் காண்பித்தது.
ஜான்சியின் கண்களிலும், உடலசைவுகளிலும் புதிதாகப் பரவியிருந்த காதலின் மெல்லிய ஆசைகளை நேருக்கு நேராகப் பார்த்தபடியிருந்த மதன் அவளை வீழ்த்துவதற்கான குறிகளில் தன்னை முழுவதுமாகத் தயார் செய்தபடியிருந்தான். சில நாட்களுக்குள்ளாகவே அவளது அலைபேசி எண்ணை வாங்கியிருந்தான். இரவுகளில் குறுஞ்செய்திகளால் இருவரும் தூக்கமிழந்தனர். தினமும் அலுவலகம் விட்டுத் திரும்பும்போது முதல் மாடியின் மாடிப்படிகளில் முத்தங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவளினுள் எரிந்து கொண்டிருந்த காமத்தில் ஒரு சிறிய பூவைப்போலச் சரிந்து அவனுக்குள் கிடந்தாள் ஜான்சி. அவளது சிறிய முலைகளைத் தடவிக்கொடுத்தபடி எப்போதும் ஒரு கிறக்கத்தில் வைத்திருந்தான் மதன். அவனது அறைக்கு அழைத்துக்கொண்டு போவதற்கான நாட்களை எதிர்நோக்கியபடி காத்திருந்தான். இந்த இடைப்பட்ட நாட்களில் ரெலினாவுடனான சந்திப்புகளையும், அலைபேசி அழைப்புகளையும் முற்றிலுமாகத் தவிர்த்திருந்தான்.
ஒரு மதிய உணவிற்குப் பிறகான நேரத்தில், சுற்றிலுமாக எவருமில்லை என்பதை இருவரும் உறுதிப்படுத்திக் கொண்டு முதல் தளத்தின் யாருமற்ற மாடிப்படிகளின் திருப்பத்தில், பின்புறமாக ஜான்சியை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கைப்பிடிச்சுவரோடு சாய்த்தபடி அவளது காதுமடல்களில் இதழ் ஒத்திக் கிடந்தான் மதன். தனக்கானப் பரீட்சைகள் முடிந்து விட்டதாகவும், நாளை மறுநாள் ஆந்திராவிலிருக்கும் தனது சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதாகவும், திரும்ப வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேலாகுமெனவும் அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனும் ‘ம்’ போட்ட படியே பின்புறமாக அவளை இறுக்கிக்கொண்டிருந்தான். அவனது கைவருடல்களில் மயங்கிக் கண்கள்சொருகி நின்றிருந்தாள். இருவருக்குள்ளும் எந்த பயங்களுமற்று நிகழ்வில் மிதந்து ஒன்றிக்கிடந்தனர்.
மதனது குடியிருப்பைச் சுத்தம் செய்துவிட்டு மெலிதான செருப்பொலி சப்தத்தில் இறங்கிக்கொண்டிருந்த ரெலினா மேலிருந்தபடியே கைப்பிடிச்சுவரின் இடைவெளி வழியாக அவர்களின் அசைவுகளை ஒருவாறு கவனித்திருந்தாள். யாரென்றுதான் அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. காலடிகளை மேலும் மெதுவாக்கிக்கொண்டு இறங்கி வந்து முதல்தளத்தின் வராந்தா முனையிலிருந்து பார்த்தபோது கீழே மதனும், ஜான்சியும் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தனர். அதிர்ச்சியில் முழுவதுமாகச் சலனமற்று அப்படியே நின்றுவிட்டாள். சில நொடிகளில் ஜான்சி அவளைப்பார்த்து ‘அக்கா’ என முணுமுணுத்து அவனது இறுக்கத்திலிருந்து பதறி வெளியேறினாள். அப்போது தான் மதன், கண்களை மேலே குவித்து அரைகுறையாக ரெலினாவைப் பார்த்தான். திடுக்கிட்டுத் தலையைக் குனிந்தவாறு நின்றான். அவள் எதையும் பார்க்காத மாதிரி சற்று வேகமாக அவர்களைக் கடந்து கீழிறங்கிப் போனாள்.
ஒன்றின் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதென்பது, அதை எப்போதும் பரிசீலனைக்குக் கொண்டுவந்து பிரித்து பிரித்து அதன் அடுக்குகளைக் காண்பித்துக் கொண்டிருப்பதில்லை. மாறாக அதை எல்லாவழிகளிலும், நிலைகளிலும் முற்றிலுமாக நம்புவதிலிருந்தே அது துவங்குகிறது. அதே நம்பிக்கையை உடைத்துக்கொண்டு வெளியேறுவதென்பது மிகச்சரியாக நிரந்தரமாகப் பிசிறுகளற்று அதை அறுத்துக்கொள்வது தான்.
அடுத்த சில நாட்களில் ரெலினா வேறு வேலையைத் தேடிக்கொண்டாள். அவளது அலைபேசி முழுவதுமாக அணைத்துக்கிடந்தது. சில நாட்களுக்குப் பிறகு உபயோகத்தில் இல்லாமல் போனது. கடைசியாக இருந்த சில நாட்களில் யாரிடமும் அவள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மதன் எவ்வளவு முயன்றும் அவளது வாயிலிருந்து ஒற்றைச் சொல்லைக் கூட வரவழைக்க முடியவில்லை. சில மறைமுகமான விசாரிப்புகள் வழியாக அவளது விலாசத்தைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, அவள் அங்கிருந்தும் சென்றுவிட்டிருந்தாள். மிகச்சரியாக நிரந்தரமாகப் பிசிறுகளற்று அந்த உறவிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
*
மதனும் வேறுசில காரணங்களால் பணியிடத்தை மாற்றிக் கொண்டான். அவனுக்குப் புதிய இடம் தேவையாகயிருந்தது. நிறையத் தற்காலிகமான காதலிகளால் பொழுதுகளைக் கரைத்துக்கொள்ளும் மனச்சிதறலுக்கு உள்ளாகியிருந்தான். மனதின் சிறிய கீறலொன்றிலிருந்து எழும் வலிகள் குடிக்கும்போது சற்று அதிகரித்தது. அதை நிரந்தரமாக அனுபவிக்கும் முடிவில் அவனது நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தானவன். ஜான்சியுடனான உறவும் சில மாதங்களிலேயே, அவள் கல்லூரி செல்ல ஆரம்பித்த உடனே முடிவுக்கு வந்திருந்தது. திடீரென அந்த உறவிலிருந்து அவள் வெளியேறியவுடன் பற்றிக் கொள்வதற்கென எதுவுமற்ற வெளியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். அவளது பாதி கருகிய முகத்தின் சுருக்கத்தை நடுநிசியில் கண்டு அலறி சில சமங்களில் வெம்பிக்கொண்டிருந்தான்.
மார்பகங்களை மூடியபடியிருந்த உள்ளாடையுடன் புணர்ந்த ரெலினாவின் கோதுமை நிற முகத்தை அவனால் துளியும் மறக்க முடியவில்லை. புணர்வின் போதான அவளது அசைவுகளும், முனகல்களும், சிரிப்பொலிகளும் அவனது மூளையில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தன. தற்காலிகக் காதலிகளில் யாரைப் புணர்ந்தாலும் அவர்களது முலைகள் சூம்பிக் காய்ந்துபோன சிறிய சுரைக்காய் போல நீண்டு கிடந்ததைக் கண்டு பயமும், வெறுப்பும் அடைந்திருந்தான். பிரிவின் தொடக்கத்தில் அவளிடமிருந்த வறட்சியான மௌனம் அவனைத் தினந்தோறும் அறுத்துக்கொண்டிருந்தது. கடைசி வரை எதுவும் சொல்லாமல் சென்றுவிட்ட அவளின் மனதை சதா ஆராய்ந்து, அவள் தன்னைப் பற்றி நினைப்பதான, சொல்வதான காதல் வார்த்தைகளை அரூபமாக நினைத்து அதன் வழியே கிடைக்கும் சிறிய நிம்மதியை அனுபவித்தான். அவள் மீதான காதல் உறவில் சில பொய்களும் ஏமாற்றுகளுமிருந்தாலும், தனக்குள்ளிருந்த காமத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டதில் துளியும் விரசமின்றி உண்மையாகவே இருந்ததாகத் தனக்குள் சொல்லிக்கொண்டு அழுதுகிடந்தான். அவளுக்கும் அது தேவையாக இருந்ததெனவும், பிறழ்வுறவின் மெல்லிய சரடுகளைப் பற்றிக்கொண்டு சிறிய இரகசியங்களில் அவற்றை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டதாகவும் இதில் தனிப்பட்ட முறையில் அவளுக்கு மட்டுமான காயங்கள் என எதுவுமில்லை என்றும் திரும்பத்திரும்ப நம்பிக்கொண்டிருந்தான். ஜான்சியுடனான தனது சபல உறவை நினைத்துத் தனக்குள் வருந்தவும் தொடங்கியிருந்தான். அவனது உறவை ரெலினா அறுத்துக்கொண்டு சென்றதென்பது, எப்போதும் அவள் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருந்த அவனது விரலையும் சேர்த்துப் பிசிறில்லாமல் அறுத்துக்கொண்டு சென்றிருந்தது போலிருந்தது அவனுக்கு. அவன் மீதான, அவனுடனான இத்தகைய உறவு குறித்து அவளிடம் மிச்சமிருக்கும் கடைசியான வார்த்தைகளை ஒரு முறையேனும் நேரில் கேட்டுவிட இடைவிடாது அலைந்து கொண்டிருந்தது அவனது மனது.
நிறைய நாட்களுக்குப் பிறகு, அவனது பழைய வேலையிடத்தில் தன்னோடு குழுவிலிருந்த நண்பனொருவனைத் தற்செயலாகப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சுவாக்கில் ரெலினாவைப் பற்றிய செய்தியையும் சொல்லிச் சென்றான். அவளது தூக்கி நிறுத்தப்பட்டிருந்த மார்பு மீதான ஏக்கம் அந்த பழைய அலுவலகத்தில் சிலருக்குள் ஒரு இரகசிய ஆசையாகத் துளிர்த்திருந்ததே ரெலினா குறித்த பேச்சு எங்களுக்குள் துவங்கியதற்குக் காரணமாகயிருந்தது. அவள் உடல் சற்று இளைத்து, மார்பகங்களில் இறுக்கங்கள் தளர்ந்து சரிந்து போயிருந்ததாகவும் சொன்னான். எனக்கு அவளை உடனடியாகப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. பிசிறில்லாமல் அறுத்துக்கொண்டு சென்ற எனது விரலை அவளிடமிருந்து முடிந்தால் மீட்டுக் கொண்டுவரவும் இல்லையென்றால் அந்த விரலோடு எனது முழுவுடலையும் முடிந்தவரை போராடி ஒட்டிவிட வேண்டுமெனவும் அவன் நினைத்திருந்தான்.
*
கடைசியாக நான் அவளைப் பார்த்தது, தாம்பரம் சானிடோரியம் அருகிலிருந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறையின் மாநில தலைமையகத்திற்குப் பின்புறமாகத் தொடங்கும் மலையின் அடிவாரத்திலிருந்து மேலேறிடும் திலகர் நகரின் இரண்டாவது தெருவில் வசிப்பதாக என் நண்பனின் மூலமாகக் கேள்விப்பட்டுச் சென்றிருந்த போதுதான். கைகளில் அவளது குழந்தைகளுக்கான கேக்குகளும் பிஸ்கட்டுகளும் வாங்கியிருந்தேன். அவளுக்காகக் கொஞ்சம் பூச்சரத்தை இலையில் மடித்து பையின் ஓரத்தில் திணித்து வைத்திருந்தேன். சாய்தளத்தில் ஏறிடும்போது வந்திடும் சோர்வும் தளர்வும் சீக்கிரமாக என்னுள் பரவியிருந்தது. தெருவில் ஏறும்போதே சற்று தூரத்தில் மரண ஓலம் ஒன்று கேட்டது. நான் கொஞ்சம் தயங்கியபடியே மேற்கொண்டு நடையைத் தளர்த்தி மெதுவாகச் சென்று கொண்டிருந்தேன். வீதியில் பரபரப்பும், அழுகையும் படர்ந்திருந்தது. பெரும்பாலானோர் ஒரே புறமாக முன்னோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். நானும் அந்த வீதியில் நிகழ்ந்திருக்கும் ஏதோ அசம்பாவிதத்தை உள்ளுணர்ந்து மெதுவான நடையில் கவனத்தைக் கொண்டிருந்தேன். சந்திற்குள் திரும்பிக் குறுகலான முனையிலிருந்த சிமெண்ட் சீட்டுகள் போடப்பட்டிருந்த சிறிய வீட்டின் முன்பாகக் கூட்டம் கூடிக்கிடந்தது. நான் கூட்டத்தின் கடைசியில் ஒட்டிக்கொண்டு நின்று அந்த வீட்டின் வாசலை இமைக்காமல் பார்த்தேன். அப்பொழுது தான் உடைக்கப்பட்டிருந்த அதன் பழைய மர வாசற்கதவு சில துண்டுகளாகக் கீழே கிடந்தன. பெரும் அழுகையின் கூக்குரலில் பெண்கள் அழுதபடி சுற்றி நின்றிருந்தனர். தடித்த மர உத்திரத்தில் ரெலினா தூக்கிட்டுத் தொங்கியபடியிருந்தாள். விறைத்துத் தொங்கிக்கொண்டிருந்த அவளது கால் பாதங்களை அவளது பிள்ளைகள் ஆளுக்கொன்றாகப் பிடித்துக்கொண்டு பெருங்குரலில் அழுதபடி நின்றிருந்தனர். அவளது கண்கள் மேற்புறமாகக் குத்திட்டு நின்றிருந்தன. நான் அதைப் பார்த்தபோது பதைபதைத்து நம்பமுடியாமல் இன்னும் முன்னேறி வாசலுக்கு அருகில் வந்திருந்தேன். அந்தச் சலனமற்ற முகத்தில் படர்ந்திருந்த ஒரு ஏக்கம் என்னை நிலைகுலைய வைத்தது. சில ஆண்கள் அவசர அவசரமாக வீட்டினுள் நுழைந்து பெண்களை வெளியேற்றிவிட்டு அங்குச் சரிந்து கிடந்த மர நாற்காலியை நிமிர்த்தி மரவிட்டத்திலிருந்த சேலையை அறுத்தெடுப்பதற்கு முயன்றுகொண்டிருந்தார்கள். நானும் இன்னும் சிலருமாக அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி தரையில் கிடத்தினோம். அவளது கண்கள் தலைக்குப் பின்புறமாக நின்றிருந்த என்னை இமைக்காமல் பார்த்தபடியே இருந்தது. அதில் ஒரு விரக்தியின் மெலிதான ஒளி பரவியிருந்தது. அந்த நொடியில் எனது கண்கள் அவளுக்காக உண்மையாகவே கசிந்து நிரம்பின. அவளைப் படுக்க வைத்ததும் வீடு முழுவதுமாக நிறைந்து போயிருந்தது. அந்த மிகச்சிறிய வீட்டைச் சுற்றிலுமாக ஒருமுறை பார்த்து முடித்து, கையிலிருந்த பாலிதீன் கவரை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நகர்ந்து வாசலுக்கு வந்தேன். திரும்பி அவளைப் பார்க்கும்போதும் அந்தக் கண்கள் கூர்மையாக என்னைப் பார்ப்பது போலவேயிருந்தன. இறுக்கிக்கொண்டிருந்த அவளது வலதுகையின் விரல்களுக்குள் பிசிறுகளற்று அறுக்கப்பட்ட எனது ஆள்காட்டி விரல் துடித்துக்கொண்டிருப்பது போல எனக்குத் தெரிந்தது. யாரிடமும் எதுவும் கேட்காமல் நெரிசலினூடாக வந்த வழியே மீண்டும் திரும்பி நடக்கத் துவங்கினேன்.
மலைப்பாதையின் இறக்கத்தில் எனது நடையில் ஒரு அவசரம் இயல்பாகவே கூடியிருந்தது. மனதில் ஒரு இறுக்கத்தின் வலி திமிறமுடியாதவாறு குத்தி நின்றது. இந்த முடிவிற்கு அவளை எது தள்ளியிருக்கும்? உடலிலிருந்த தாங்கமுடியாத வலியா? நானா அல்லது என்னைப்போல வேறொருவனா..? சரியாக நான் வரும் இந்தநாளை அவள் ஏன் தேர்ந்தெடுத்திருந்தாள்? என்னிடம் ஏதும் சொல்ல நினைத்திருப்பாளா? அல்லது இது தான் என்னிடம் சொல்வதற்கென அவள் வைத்திருந்த கடைசிச் சொற்களா? குழந்தைகள், எல்லாம் முடிந்த பின்னர் அந்த விட்டத்தை எப்படிப் பார்ப்பார்கள்? அந்தச் சேலையில் சிறு வயதில், அந்தக்குழந்தைகளைக் கிடத்தி முன்பு என்றோ ஒருநாள் தாலாட்டுடன் தொட்டிலிட்டு ஆட்டியிருப்பாளா? குழந்தைகள் அவளின் வாசத்தை எப்படி மறந்து போவார்கள்..? அந்த கேக்கின் சுவையை எப்படி உணர்வார்கள்..? எண்ணற்ற கேள்விகளால் என் உடல் முழுவதுமாகப் பெரும் அழுத்தங்கள் நிரம்பி, ஏதோவொன்று என்னை அமுக்குவது போலவும் அதனால் நிலைகுலைந்து மண்ணுக்குள் எனதுடல் அமிழ்ந்திடுவது போலவும் அப்பொழுது தீவிரமாக நான் உணர்ந்தேன்.