நீக்கம்

கிபாலன் அலுவலகத்திற்குப் போக காரை எடுக்கச் சென்றபோது, அவன் அம்மா, “மகி, மாஞ்செடி எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சி பாரேன்” என்றாள். அவனை முன்பே அழைத்து வந்து, அந்தச் செடியைக் காட்டியிருக்க இயலாது. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்தவன், `வேலை’ என்று மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். இடையில் போய் அழைத்திருந்தால் நாயாகக் கத்தியிருப்பான். அல்லது மடிக்கணினியைத் தூக்கிப் போட்டு உடைத்திருப்பான். அதனால் காத்திருந்து, அவன் அலுவலகத்திற்குப் போக வெளியில் வரும்போது சொன்னாள்.

அது இமாம் பசந்த் மாஞ்செடி.  நன்றாக வளர்ந்திருந்தது. காற்றில் அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகக் குச்சியை நட்டு, அது கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. செடிக்குக் காலையில் தண்ணீர் ஊற்றும்போதுதான் அதன் வளர்ச்சி பற்றி அவள் கவனம் கொண்டாள். பூச்சி அரித்திருந்த அந்த மாங்கொட்டையின் ஓட்டை  ஓரமாகச் சிறிது நறுக்கிவிட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நட்டிருந்தாள். மகிபாலன் அந்தக் கொட்டை வளராது என்று கூறியிருந்தான். அவள் வளர்த்துக் காட்டுகிறேன் என்று வளர்த்தாள். மகிபாலன் குறைப்பிரசவசத்தில் பிறந்தவன். அவன் பிழைப்பது சிரமம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவள் மனத் திடத்தைக் கைவிடவில்லை. மகிபாலனுக்குக் காட்டியது போன்ற திடத்தை அந்த மாங்கொட்டைக்கும் கொண்டாள். அது துளிர் துளிராக வளர்ந்து நின்றது.

மகிபாலன் அந்தச் செடியைப் பார்த்தான். அவ்வளவு நேரம் அந்தச் செய்தியை அவள் நெஞ்சில் தேக்கி, எப்படி மகிழ்ச்சியடைந்தாளோ, அதைப்போல அவனும் அடைவதைப் போல இருந்தது. சட்டெனப் பைத்தியம் பிடித்ததுபோல ஓடி, அந்தச் செடியைப் பிடித்து இழுத்து, துண்டு துண்டாகப் பிய்த்துப் போட்டுவிட்டு, காரை எடுத்துக்கொண்டு வந்தான்.

பாதி தூரத்தில் கனிஸ்ரீ அலைபேசியில் அழைத்தாள்.  அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தான். லே ஆஃப் லிஸ்ட்டில் பெயர் இருக்கிறதா எனக் கேட்பாள். தெரியாது என்று சொன்னாலும் நம்பப் போவதில்லை. அழைப்புச் சத்தம் இறைஞ்சுவது போலவும் இருந்தது. இது போன்ற நேரத்தில் எடுக்காமலும் இருக்க முடியாது. சில நேரம் கடைசி அழைப்பாகவும் இருந்துவிடும். கரோனா பொது முடக்கக் காலத்தில் ஆட்களைக் குறைத்தபோது மீனாவின் அழைப்பை கணேசன் எடுக்காமல் இருந்தான். அவள் தற்கொலை செய்துகொண்டாள். பதறி அழைப்பை எடுத்தான்.

“சொல்லுங்க கனி”

“சார், இன்னைக்கு லீவு வேணும்”

“ஆபிஸ் சிச்சுவேஷன் தெரிஞ்சுகிட்டே கேட்குறீங்களே.  லீவு எடுக்காதீங்க. இன்னைக்கு லிஸ்ட் வந்துடும்ங்கிறாங்க. எதுவா இருந்தாலும் வந்திடுங்க. என்ன பிராப்ளம்?”

“அம்மா ஆர்கேஎம் ஆஸ்பிட்டல்ல அட்மிட். நைட் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சின்ன பிரச்சினை. அப்பா கத்தியை எடுத்து, அம்மா கையில் வெட்டிட்டார். கை நரம்பு கட் ஆயிடுச்சுன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. பிளட் ரொம்பப் போயிடுச்சாம். கொஞ்சம் சீரியஸ்.”

“வருத்தமாதான் இருக்கு. இருந்தாலும் என்ன சொல்லுறதுனு தெரியல. உங்க அப்பாவையோ, சொந்தக்காரங்களையோ கூட இருந்து பாத்துக்கச் சொல்லிட்டு, நீங்க வந்துடுங்க. போலீஸ் கேஸ் ஆகியிருக்குமே. ஏதாவது உதவி தேவையா?”

“போலீஸுக்கு கம்ப்ளைன்ட் பண்ணணும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. அப்பா எப்படியோ சமாளிச்சார். இதுவரை பிரச்சினை இல்லை. ட்ரீட்மென்ட் பாக்குறாங்க. பில்தான் தீட்டுறாங்க.”

“சரி வந்துடுங்க.”

எரிச்சலாக இருந்தது. தேவையில்லாமல் ஹாரனைத் தொடர்ந்து பலமுறை அழுத்தினான். முன்னால் விரைந்தவர்கள் திட்டிவிட்டுப் போனார்கள்.

“இந்த மட்டிப்பையன் ஒவ்வொரு முறையும் அப்ராடு போய், ஏதாவது ஒரு கம்பெனியைப் பார்வையிட்டு, விவரங்கள் தெரிந்துகொண்டு வரும்போதெல்லாம் இந்தப் பிரச்சினை வந்துவிடுகிறது. அந்த கம்பெனியோட ஆண்டு டர்ன் ஓவர் எழுபது பில்லியன் யூ.எஸ் டாலர். இந்த கம்பெனியோட டர்ன்  ஓவர் நூற்று இருபது பில்லியன் யூ.எஸ் டாலர். அதுவும் குறைவான ஆட்கள் மூலம். நாம என்ன செய்துகிட்டு இருக்கோம்? ஃபயர் பண்ணுங்க. ஆட்களைக் கில் பண்ணுங்க. எல்லாம் தெண்டம். அட நாயே!  என்னைக்காவது வேலை செய்கிறவன் டர்ன் ஓவர் எவ்வளவுன்னு யோசிச்சிருக்கியாடா… ரோடு போட்டதுக்கான பணத்தை முழுமையா எடுத்த பிறகு டோல்கேட் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி தப்பு. அது போல பிசினஸுக்குப் போட்ட பணத்தை முழுமையா எடுத்த பிறகு வரும் பணத்தை ஒருவன் எடுப்பதும் தப்பு. நாயே, நீதான்டா வேலை செய்கிறவனின் உழைப்பில் சேர்த்த பணத்தைச் சுரண்டித் திங்கிற. நீதான்டா எங்க கம்பெனிக்கு தேவையில்லாத தெண்டம். உன்னைத்தான்டா முதலில் கில் பண்ணணும்.”

திடீரெனப் பயந்து காரின் பின் இருக்கையைப் பார்த்தான். யாருமில்லை. ‘அப்பா’ என்று இருந்தது. மன அழுத்தத்தைக் குறைப்பவர் யானிதான். ‘த ஸ்டார்ம்’-ஐ ஒலிக்க விட்டவாறு ஓஎம்ஆரில் உள்ள அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்.

பத்து மணிக்குள் வைத்துவிடவேண்டும் என்று விரல் பதிவை அவசரம் அவசரமாக வைத்துவிட்டு ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்கள். செக்யூரிட்டிகள் வழக்கம்போல ஒவ்வொருவருக்கும் புன்னகைத்தபடியே வணக்கம் வைத்தார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் தாங்கள் பெறும் கடைசிநாள் வணக்கம் என்பதைப் போலவே இருந்தது.

மகிபாலன் உள்ளே நுழைந்ததும், அவனை ஹரி சைகையால் கூப்பிட்டான்.  வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தவன், `பார்’ என்பதைப் போலக் காட்டினான். வீடியோவில் ரமேஷ் இருந்தான். வண்டியிலிருந்து கீழே விழுந்து, அவனை ஓரமாகத் தூக்கி உட்கார வைத்து, தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

“சார், மத்திய கைலாஷ் கிட்ட வந்துகிட்டிருந்தேன். முன்னாடி போன கார்காரன் டக்குன்னு பிரேக் அடிச்சிட்டான். கன்ட்ரோல் பண்ண முடியல. கீழே விழுந்துட்டேன். பெரிசா ஒண்ணு காயம் இல்லை. சோல்டர்ல கொஞ்சம் தேஞ்சிடுச்சு. சட்டை கிழிஞ்சிடுச்சு. புது சட்டை ஒண்ணு வாங்கிப் போட்டுட்டு வந்துடுவேன்.”

‘என்ன சொல்வது’ என்பதைப் போல மகிபாலன் முகத்தை ஹரி பார்த்தான்.

“சரி வாங்க ரமேஷ். இதுக்கு எதுக்கு வீடியோ?”

அவனுக்குப் பேச இடம்கொடுக்காமல் மகிபாலன் நறுக்காக முடித்தான். வீடியோ அழைப்பைத் துண்டித்த ஹரிக்கு மகிபாலன் மீது கோபம் வந்தது.

“அவனை ஏன் வரச் சொன்ன. வீட்டுக்குப் போகச் சொல்ல வேண்டியதுதான”

“அப்ப, நீயே சொல்லியிருக்க வேண்டியதுதான. என்னை ஏன் கூப்பிட்டுப் பேசச் சொன்ன?  இந்த நேரத்துல அவனை வீட்டுக்குப் போன்னு சொல்ல முடியுமா? அவனே பத்து மணிக்குச் சரியா வர முடியல, நீ நம்ப மாட்டியேங்கிற பயத்துல வீடியோ கால் போட்டிருக்கான். அவனை நான் வீட்டுக்குப் போகச் சொல்லி, அவன் அதைத் தப்பா புரிஞ்சுகிட்டு. ஏதாவது ஏடாகூடமாகி, அது என் மேல விழணுமா?”

மகிபாலன் கூட்ட அறைக்குள் போனான். அவனின் ஒவ்வொரு செய்கையுமே முக்கியம் என்பதைப்போலக் கண்ணாடி மேஜையைச் சுற்றி இரு பக்கமும் வரிசையாக உட்கார்ந்திருந்த எல்லோரின் கண்களும் அவனைப் பின் தொடர்ந்தன. மைய இருக்கையில் போய் உட்கார்ந்தவன், எல்லோரையும் முறுவலோடு பார்த்தான். எல்லோரும் இறந்து போன கண்களைக் கொண்டு பார்ப்பதைப் போல உறைநிலையில் இருப்பதாகத் தெரிந்தது. முழுதும் பனிக்கட்டியால் எழுப்பப்பட்டதைப் போன்ற கண்ணாடிக் கட்டுமானமும், தாங்க முடியாத குளிர்சாதனத்தின் குளிரும் இந்த இடத்திற்கு அசல் பிண அறையின் தன்மையைக் கொடுத்துவிடுகிறது என நினைத்தான்.

“லிசன். எளிமையா சொல்றேன். உங்கள் முன்னால் இரண்டு டீ கிளாஸ் இருக்கு. இரண்டும் ஒரே சைஸ், ஒரே மாடல், ஒரே குவாலிட்டி. ஆனா, ஒரு கிளாஸில் மட்டும் சின்னதா பிடி இருக்கு. இதில், எந்த கிளாஸை எடுப்போம்? பிடி உள்ளதை. ஆனா, அந்தப் பிடியால் பயன் இருக்குமா என்றால் மோர் ஆர் லெஸ் இருக்க வாய்ப்பு இல்லை. பிடி இல்லாமலேயேகூட கிளாஸைப் பிடிச்சிக்கிட்டு டீயைக் குடிச்சிடுவோம். அதே நேரம், பிடி உள்ள கிளாஸையே எடுக்கிறோம் இல்லையா? அதுதான் நம்முடைய புராடெக்ட்டுக்கும் காம்படீட்டர் புராடெக்ட்டுக்கும் உள்ள வித்தியாசம். ஒரு பிடி நம்மைவிட அவுங்க கூடுதலா கொடுத்திருக்கலாம். அல்லது நாம ஒரு பிடி அவுங்களைவிடக் கூடுதலா கொடுக்க வேண்டியிருக்கலாம். அந்தப் பிடி என்னன்னு கண்டுபிடிச்சிட்டாப் போதும். கம்பெனி டர்ன் ஓவர் எங்கேயோ போய்விடும். அதுக்கு உங்களிடம் என்ன ஐடியா இருக்கு?’’

உறைநிலை ஜீரோ டிகிரிக்கும் கீழே போய்க் கொண்டிருப்பதைப் போல இருந்தது. எவரிடம் இருந்தும் சத்தம் வரவில்லை. அவன் டீ கிளாஸையும் பிடியையும் குறிப்பிடத் தொடங்கியபோது, அது ஏதோ அறிவிப்புக்கான தொடக்கம்போல இருந்து, எல்லோரின் வயிற்றுக்குள் வெப்பம் பரவியது. அது இல்லாமல் போனதும் மெல்லமெல்ல தணிந்து, மீண்டும் உறைநிலைக்கு வந்தது.

“சத்யன்… கனிஸ்ரீ… சைந்தவி… மோகன்… குமார்… ராஜேஷ்… கல்பனா…. வெங்கட்… சிந்து …. ரூபி… மித்ரா… ஆனந்த்…”

“யாரும் வாயத் திறக்காம இருந்தா, என்ன அர்த்தம்? கல்பனா உங்ககிட்ட என்ன இருக்கு?”

“சார், டோட்டலா ப்ளாங்கா இருக்கு. வேலையே யாருக்கும் ஓட மாட்டுது.”

“என்னங்க ப்ளாங், அது, இது மண்ணாங்கட்டின்னுகிட்டு. லிஸ்ட்ல என் பேர் கூட இருக்கலாம்ங்க. அதைப் பத்தி நான் யோசிச்சிக்கிட்டே இருக்க முடியுமா? இப்ப என்ன வேலைன்னுதான் பாக்கணும். அதுக்கு உண்மையா இருக்கணும். ஒரு தலை வெச்சிருக்கிற நமக்கே இவ்வளவு பிரச்சினைன்னா, நம்ம எல்லோருடைய தலைகளையுமே சேர்த்து வெச்சிருக்கிற நிர்வாகத்துக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கும்? ஸீ, ஒரு மாம்பழத்தில் எப்படிப் பூச்சி அரிக்கும் தெரியுமா? மாமரம் பூ வைக்கும் பாருங்க. அப்பவே, வண்டு அதோடு முட்டைய பூவில் போட்டுடும். பூ காயாகி, கனியாகும்போது முட்டையும் பல மாற்றங்கள் கண்டு, வண்டு வளரும். அதுக்குத் தேவையான ஆக்சிஜன் பழத்திலேயே கிடைக்கும். சரி, பழத்தில் இருப்பது வண்டா, பூச்சியா? ரெண்டில் ஏதோ ஒண்ணு. என்ன செய்வோம். அந்த இடத்தை கட் பண்ணிட்டு சாப்பிடுவோம். இல்லையா? அது போலத்தான் இதுவும். எனக்குத் தெரிஞ்ச ஒருத்தவங்க பூச்சி அரிச்ச கொட்டை ஓட்டைக் கொஞ்சம் நறுக்கிவிட்டு, அதை நட்டு வளர்த்திருக்காங்க. நானே பார்த்திருக்கிறேன். அதுபோல நிர்வாகமும் யோசிக்கும் இல்லையா?”

அதிகமாகப் பேசுவது போல உணர்ந்ததும் பேச்சை நிறுத்தினான். பூச்சி அரிப்பையும் வேலை செய்கிறவர்களையும் ஒப்பிட்டுக் கூறியது சரியான உதாரணமா? ‘உன் வேலைக்குப் பாதுகாப்பு இருக்கு. அதனால என்ன வேணும்னாலும் பேசுவடா’ என்றுதானே எல்லோரும் நினைப்பார்கள்.

“சைந்தவி, எம்டிக்குக் கொடுக்குறதுக்காக ஈவென்ட் பற்றி பிபிடி ஒண்ணு ரெடி பண்ணச் சொன்னேனே, என்ன ஆச்சு?”

“அது மித்ரா ரெடி பண்ணுறாங்க சார். ஈவினிங்குள்ள முடிஞ்சிடும்”

“சீக்கிரம் முடிங்க.  சரி, ஐடியாவ எல்லாரும் மெயில்ல அடிச்சிப் போடுங்க. அப்படியே எம்டி பிஏவுக்கும் சிசி வையுங்க. அடுத்த மீட்டிங்கில் யாரும் இப்படிச் சிலை போல உட்காரக் கூடாது.”

எல்லோரும் எழுந்து போக, சைந்தவி மட்டும் உட்கார்ந்திருந்தாள். அந்த டிபார்ட்மெண்ட்டில் மகிபாலனுக்கு அடுத்த நிலையிலிருந்தாள். எல்லோரும் போய்விட்டார்களா என்று ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

“என்ன சார், டென்ஷனா இருக்காப் போல இருக்கு.”

“டென்ஷன்லாம் இல்லைங்க. சொல்லுங்க.”

“நேத்து நைட் எம்டியோட நடந்த மீட்டிங்கில என்ன முடிவாச்சி சார்…”

“எம்டி அவர் முடிவிலிருந்து இறங்கி வரவே இல்லைங்க. நாங்கள் சொன்ன எதுவும் எடுபடவில்லை. ஆட்களை கில் பண்ணுறது உறுதி.”

“நம்ம டிபார்ட்மெண்டில் எத்தனை பேரு சார்.”

“அதுலாம் எச்ஆர் முடிவுங்க. எம்டி அவங்களை ரொம்ப நம்புறார். நாம சொல்லுறதைக் கேட்கவே மாட்டுறார்.”

“உங்ககிட்ட ஆட்களைப் பற்றி ஒப்பினியன் கேட்டிருப்பாங்களே..”

“ஓரலா கேட்டாங்க. ஆனா, ஆட்களோட சம்பளம், அதோடு அவங்களால நிறுவனத்துக்கு வரும் இன்கம். இதை இரண்டையும் வைச்சு கணக்கிட்டு முடிவு செய்றாங்கப் போல. இதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. உதவி செய்றேன்னு உபத்திரவம் செய்யுறது ஒண்ணு இருக்கு பாருங்க… அதுதான் பர்செனல் டிபார்ட்மெண்ட்ங்குறது. வேலை செய்கிறவனுக்கும், அவனை வேலை வாங்குறவனுக்கும் உதவி செய்யுறதுக்காக வந்தவன்தான் இந்த பர்செனல் டிபார்மெணட்காரன். இன்னைக்குப் பாருங்க அவன்தான் எல்லாக் கம்பெனியையும் ஆட்டிப் படைக்கிறான். ஓனருக்கும் மேல ஏறி உட்கார்ந்துகிட்டு. ஏதாவது ஸ்டேட்டிஸ்டிக்க அப்பப்ப எடுத்துக் கொடுத்து, எம்டியைப் போட்டுக் குழப்பி, எவனையாவது வீட்டுக்கு அனுப்பிட்டு, இவுனுங்க வேலைய தக்க வைச்சிப்பானுங்க. என்ன சொல்ல..”

“லிஸ்ட்டில் என் பேரு இருக்கா சார்.”

“உண்மையாவே எனக்குத் தெரியாதுங்க. ரூபி பத்தி மட்டும் பல முறை கேட்டாங்க. இப்பக்கூட பாருங்க. ரோட்டைப் பார்த்தவாறு கண்ணாடிச் சுவரோரம் சாய்ஞ்சுகிட்டு போனில் பேசிக்கிட்டு நிப்பாங்க. ஆனா நல்ல ஒர்க்கர். டைம்க்கு வேலையை முடிச்சி கொடுத்துடுவாங்க. நல்ல நாலெட்ஜ். அது செல்லுமா? இப்படி எம்டி போற வழியிலேயே நின்னுக்கிட்டு இருந்தா… அவங்ககிட்ட பல முறை நான் நேரடியாவே சொல்லிட்டேன். கேட்க மாட்டுறாங்க.”

“கொஞ்சம் அவுங்க அப்நார்மல் சார். எம்டி தோட்டத்துல இயற்கையா விளைஞ்சுதுன்னு இமாம் பசந்த் மாம்பழம் மூணு கொடுத்தாங்களே, அதில் ஒரு கொட்டைய அவுங்க ஹாஸ்டலில் நட்டிருந்தாங்களாம். அது செடியா வளர்ந்திருக்காம். லே ஆஃப் செய்தி வரத் தொடங்கியதிலிருந்து, அந்தச் செடியைப் பார்க்கும் போதெல்லாம், அதைப் பிச்சிப் போடணும் என்பதைப் போலவே வெறி வருகிறதாம்.”

“அப்படியா?”

சிரித்தான். அவளும் சிரித்தாள்.

“ சரி. அடுத்து ஹெட்ஸுங்ககூட எல்லாம் சேல்ஸ் டிபார்ட்மெண்ட்டில் மீட்டிங் இருக்கு. நேரமாயிடுச்சி. எல்லோரும் போய்ட்டாங்க போல இருக்கு.”

மகிபாலன் எழுந்து வெளியே போனான். சைந்தவியும் எழுந்து வெளியே வந்து, அவள் இருக்கையில் அமர்ந்தாள். அவளுக்காகவே காத்திருந்த மித்ரா எழுந்து வந்தாள்.

“மேடம், லிஸ்ட் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?”

“கல்லுளிமங்கன் வாய் திறப்பானா? தெரியாதுன்னு சாதிக்கிறான்.”

“எனக்குப் பயமா இருக்கு மேடம். என் முகத்தைக்கூட சில நாளா பார்க்காமதான் பேசுறார். பிபிடி பத்திகூட உங்ககிட்டத்தான் கேட்டார் பாத்திங்களா…”

“அவன் மறந்திருப்பான். எனக்கு மட்டும் பயம் இல்லைன்னு நினைக்கிறீயா?  கம்பெனிகளுக்கு அனுப்ப வேண்டிய லெட்டர்ஸை எல்லாம் அனுப்பிட்டுத்தான் போகணும்னு நேத்து சொல்லிவிட்டான். எழுபது கம்பெனிகளுக்கு லெட்டர்ஸ். மெயில் அனுப்பி தாவு தீந்துச்சு. நைட் ஒன்பது மணி வரை இருந்து முடிச்சிட்டுதான் போனேன். என்னிடம் இருக்கும் வேலையையெல்லாம் வேகவேகமாக முடிச்சி வாங்குறாப்போல இருக்கு. கொஞ்ச நாளைக்கு என் சீட்டு கிட்ட வந்து பேசாத. கூடிகூடி பேசுறோம்ன்னு நம்ம ரெண்டு பேரையும் கில் பண்ணிடப் போறானுக.”

மித்ரா எதுவும் கூறாமல் திரும்பி வந்து அவளுடைய இருக்கையில் உட்கார்ந்தாள். சனியன் பிடித்தவள். அவளுக்குத் தேவை என்றால் நகரவிடாமல் பேசிக்கொண்டே இருப்பாள். இந்தச் சனியன் ஒழிந்தால் நன்றாக இருக்கும். மெயிலின் ஞாபகம் வந்து அலைபேசியில் அதைப் புதுப்பித்துப் பார்த்தாள். அவரவரின் மெயிலுக்குத்தான் அறிவிப்பு வரும் என்று சொல்லியிருந்தார்கள்.

கண்ணாடிச் சுவரோரம் நின்றிருந்த ரூபியும் மெயிலைப் பார்த்தாள். அலுவலக மெயிலுக்குப் பதில் அவளுடைய மெயிலே மேலே இருந்தது. அதில் ஆதி அனுப்பியிருந்த பழைய மெசேஜ்கள்தாம் இருந்தன. அதை அழித்துவிடலாமா வைத்திருக்கலாமா என்று யோசித்தாள். அம்மா இறந்து போனபோதே எல்லாம் முடிந்து போனது போல இருந்தது. இப்போது அவனும் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல் இல்லை என்று வேறொருத்தியைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறான். இப்போது வேலையும் போகப் போகிறது. உயிரோடு இருந்து என்ன லாபம்? இந்தக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, அப்படியே கீழே குதித்துவிடுவோமா? ஐயோ வேண்டாம். கண்ணாடிக்கு வெளியே தெரியும் மரம்தான் எத்தனை அழகு. சலனமற்ற இந்தப் பிண அறையில் தெரியும், ஒரே உயிருள்ள அசைவு. அதை ஏன் களங்கப்படுத்த வேண்டும். இன்னும் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவள் சட்டென நிதானத்துக்கு வந்தவளாக அவளுடைய இருக்கைக்குத் திரும்பி, அவசரமாகக் கடிதம் ஒன்றை அடிக்கத் தொடங்கினாள்.

அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மெண்ட் சித்ரா ரெஸ்ட் ரூமுக்குப் போனாள். அவள் வலது கண்ணோரம் வீங்கியிருந்தது. அதை யாருடைய பார்வையிலும் படாமல் வைக்க முயல்வதைப் போலத் தலையை அங்கங்கே திருப்பிக்கொண்டு போனாள்.  ஆனால் அதைக் கவனித்துவிட்டு கனிஸ்ரீ எழுந்து அவளோடு போனாள்.

“ஏன்டி உன் கண்ணுகிட்ட வீங்கியிருக்கு?”

“அங்க வா. சொல்லுறேன். எல்லாம் உன்னாலதான்.”

“என்னாலயா? என்னடி சொல்லுற.”

“அமைதியா வாடி. சொல்லுறேன்.”

அவர்கள் போனபோது, கவிதா ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தாள். அவளிடம் சித்ரா பேசினாள். கனிஸ்ரீயும் அவளும் பேசிக் கொள்வதில்லை. அதனால் அவளைப் பார்க்காதது போல அவள் ரெஸ்ட் ரூமுக்குள் போனாள்.

“என்னடி டல்லா இருக்க.”

“பீரியட்ஸ்”

“இப்பதான் வந்தது போல இருக்கு. உனக்கு மட்டும் பத்து நாளைக்கு ஒருமுறை வருமா?”

“தெரியலடி. ஒரே ஸ்ட்ரெஸ். வேலை போயிடுமோனு பயமா இருக்கு. இது போனா, வீட்டிலேயே தங்க வெச்சிடுவார் எங்க வீட்டுக்காரர். இந்த வேலைக்கே கெஞ்சி கூத்தாடிதான் வந்தேன். அவர் கையை எதிர்பார்த்து உட்காருறாப் போல போயிடும்.”

“உன் கண்ணுகிட்ட ஏன் வீங்கியிருக்கு.”

“நேத்து நைட்டு செவுத்துல இடிச்சிக்கிட்டேன். என் பையன் பெட்ரூமில் இருந்து ஓடினான். பிடிக்கலாம்னு நானும் ஓடினேன் பாரு. தெரியாம செவுத்துல  இடிச்சிக்கிட்டேன்.”

“பாத்து போகக்கூடாது. நல்லவேளை, கண்ணுக்கு ஒண்ணும் ஆகல.”

கனிஸ்ரீ வெளியே வந்ததும், அவள் புறப்பட்டாள். சித்ராவும் ரெஸ்ட் ரூமுக்குப் போய் வந்தாள்.

“என்னடி ஆச்சி? என்னாலன்னு வேற சொல்லுற?”

“உன்னால எல்லாம் ஒண்ணும் இல்ல. ஆபிஸ்ல யார் கிட்டயும் லே ஆஃப் பத்தி பேசிக்கிட்டு இருக்காதேன்னு என் வீட்டுக்காரர் சொல்லியிருந்தார். நிர்வாகத்திலேயே ஒரு சீக்ரெட் டீம் வைச்சிருப்பாங்க. அவுங்க பல்ஸ் பாப்பாங்க. உனக்கு அவ்வளவு விவரம் பத்தாது. அதனால், எதுவும் பேசாத. வர்றதைப் பாத்துக்கலாம்னு சொல்லியிருந்தார். அவுங்க ஆபிஸ்ல அப்படிச் செய்வாங்களாம். லூஸ் டாக் விட்ட பலருக்கு வேலை போயிருக்குன்னு சொல்லியிருந்தார். நீ நைட்டு, உன் சிஐடி, அதான் வெங்கட் ஏதோ புது தகவல் சொல்லுறானு என்னையும் கான்ஃபரன்ஸ் கால்ல கனெக்ட் பண்ணிட்டியா. பெட்ரூம்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தேன். டிவி பாத்துக்கிட்டு இருந்தவர் உள்ள வந்துட்டாரு. பொய் சொல்ல முடியல. அறைஞ்சிட்டாரு.”

“ஸாரிடி. எப்போதும் போடுறாப் போல போட்டுட்டேன். நேத்து நைட்டு உங்கிட்ட மட்டுமா? வீட்டிலும் பெரிய தப்புப் பண்ணிட்டேன்டி.”

“அழாதடி. அழாதடி.”

“சத்தியமா முடியல. ஒரே ஸ்ட்ரெஸா இருக்கு. வேலையை விட்டு அனுப்பிட்டாக்கூட பரவாயில்லைன்னு இருக்கு. என் அப்பா, அம்மாவுக்கு இதோட சீரியஸ்னஸ் புரியவே இல்லை. அவுங்க எப்போதும் ஹேப்பியா இருக்காங்க. என்னால அதைச் சகிச்சுக்கவே முடியல. தினமும் நைட்டுல அவுங்களோட ரம்மி விளையாடணும். எனக்கு கேம் உள்ளவே போக முடியாது. ஆனாலும் விளையாடுவோம். நேத்தும் அப்படித்தான் விளையாடினோம். இருபது கேம் விளையாடினோம். எல்லாத்திலும் எனக்குத் தோல்வி. எங்க அம்மா என்னைக் கேலி பண்ணிக்கிட்டே இருந்தாங்க. எனக்கு எப்படி கோபம் வந்ததுன்னே தெரியல. எங்க அப்பா எப்போதும் விளையாடும்போது  ஏதாவது ஃப்ரூட்ஸ் வெட்டி ஒரு தட்டில் வைச்சிருப்பார். அதைச் சாப்பிட்டுக்கிட்டே விளையாடுவோம். அந்தத் தட்டில் ஒரு கத்தி இருந்தது பாரு. அதை எடுத்து எங்க அம்மா கழுத்திலேயே, இரண்டு குத்து குத்திட்டேன்.”

“என்னடி சொல்லுற.”

“ஆமாம். எப்படி நடந்ததுன்னே எனக்குப் புரியல. அந்த நேரத்தில் ஏதோ பைத்தியம் பிடிச்சது போல இருந்தது. அப்பாவுக்குத் தெரிஞ்ச ஆஸ்பிட்டல் ஆர்.கே.எம். கோபத்துல அப்பாவே குத்திவிட்டதுபோல சேர்த்திருக்கிறார். கழுத்துல நல்லா இறங்கிடுச்சு போல. டாக்டர்ஸ் சீரியஸ்ன்னு சொல்லியிருக்காங்க.”

“ஆபிஸுக்கு ஏன் வந்த?”

“ஆஸ்பிட்டல்ல இருக்க பயமா இருக்கு. வீட்டுலேயும் தனியா இருக்க வேணாம்னு, ஆபிஸுக்கே போன்னு அப்பா அனுப்பி வைச்சார். எனக்கு போன்கால் வரும்போதெல்லாம் அம்மாவுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு. தப்புப் பண்ணிட்டேன்”

“ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் ஆகாது. அழாத. வா. எல்லார்கிட்டயும் இதைச் சொல்லிக்கிட்டு இருக்காத…”

கனிஸ்ரீயை அழைத்து வந்து அவளுடைய இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, சித்ரா அவளுடைய இருக்கைக்குப் போனாள்.

சேல்ஸ் டிபார்ட்மெண்டில் ஆலோசித்த அனைத்து துறையின் தலைவர்களும் எம்டி அறைக்குள் போனார்கள். திரும்பி வந்தார்கள். மீண்டும் ஆலோசித்தார்கள். மீண்டும் போனார்கள். திரும்பி வந்தார்கள். எச்ஆர் டிபார்ட்மெண்ட்காரர்கள் எம்டி அறைக்குள் ஏதேதோ பைல்களை எடுத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் திரும்பி வந்ததும், மீண்டும் தலைவர்கள் போனார்கள். அவர்கள் போய் திரும்பி வந்த ஒவ்வொருமுறையும் அலுவலக சிஐடிகள் ஒவ்வொரு புதுப்புது தகவலைக் கண்டறிந்து அவரவர் நெருக்கத்துக்குக் கடத்தினார்கள்.

மெயிலையே இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருந்த சத்யன் அலுத்து, டீ குடிக்க அலுவலகத்தை விட்டு வெளியில் சாலைக் கடைக்குப் போனான். அவனைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ரூபி, ரமேஷ், மோகன், சிந்து ஆகியோரும் போனார்கள். டீ கடையில் அவர்களுக்கு முன்பு சீனியரான சுகன் தனியாக நின்று, சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்தும், “டீ குடிக்கிறீங்களா” என்றவாறே “அஞ்சு டீ” என்று கடைக்காரரிடம் சொன்னான். “வேறு எது வேணும்னாலும் சாப்பிடுங்க” என்று சிகரெட்டை நன்றாக இழுத்து அணைத்துவிட்டு, கணக்கில் பதிந்து கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றான். அவன் செல்லும்வரை ஒரு வார்த்தையும் பேசிவிடக்கூடாது என்பதைப்போல மௌனமாகவே நின்றவர்கள், டீ வந்ததும் சத்தமாகக் குடித்தார்கள்.

“அவரை எச்ஆர் தனியா கூப்பிட்டுப் போகச் சொல்லிட்டாங்கப் போல. முப்பத்தொன்னோட அவரு கதையை முடிக்கிறாங்க “ என்றான் சத்யன்.

“பாவம். அவரு பொண்ணுக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். இன்விடேஷன்ல எல்லாம் நம்ம கம்பெனி பேரைப் போட்டு அடிச்சிட்டாராம். இப்ப வேலை போச்சுன்னா, மாப்பிள்ளை வீட்டுல பொய் சொன்னாப்போல இருக்கும்னு பயப்படுறாரு. மூணு மாசம் டைம் கேட்டாராம். முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். என்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு” என்றாள் சிந்து.

“பாவமா… அவனா… லவடா. அவன் பவரா இருந்தப்ப எவ்வளவு திமிரா பேசுவான் தெரியுமா? ஒருமுறை இன்க்ரிமெண்ட் போட்டிருந்தப்ப தினேஷ் போய், சார் எனக்கு ஏன் ரொம்ப கம்மியா போட்டிருக்கீங்கன்னு கேட்டிருக்கான். அதுக்கு, ‘உங்கப்பன் இதுக்கு கோமணத்தை அவுக்கலன்னு நினைச்சின்னா எழுதிக் கொடுத்துட்டுப் போ’ன்னு சொல்லியிருக்கான். நாயி. தினேஷும் அமைதியாகத்  திரும்பி வந்திருக்கான். நானா இருந்தா அறைஞ்சிருப்பேன்.”

“நீ அறைவ. வசதியானவன். அவன் சூழல் என்னவோ?” என்றான் ரமேஷ்.

“நான் வசதியானவனா? சேவிங்ஸைத் தவிர வேற எதுவும் என்கிட்ட  கிடையாது தெரியுமா? சம்பளம் எவ்வளவா இருந்தாலும் அதில் நாற்பது சதவீதம் எடுத்து வைக்கணும்.”

“உன்னால சேவிங்ஸ் பண்ண முடியது. முடியாதவங்க?” என்றான் மோகன்.

“எல்லோராலும் முடியும். பணமே இல்லன்னா ஆட்டம்போடாம அமைதியாக இருப்போம்ல. அதுபோல இருக்கணும்.”

“என்ன ப்ரோ, காலையில வண்டியிலிருந்து கீழே விழுந்த பிறகும், ஆபிஸ் வந்திருக்கீங்கன்னு, ஒரே டாக்கா இருக்கு…”

ரூபி பேச்சை மாற்றும் வகையில் ரமேஷைப் பார்த்துக் கேட்டாள்.

“வீட்டுக்குப் போகச் சொல்வானுகன்னு நினைச்சேன். வரச் சொல்லிட்டானுக. ஆனா, அவனுக சொல்லுறதுக்கு முன்னே நானேதான் வந்துடுறேன்னு சொன்னேன். ஹரி எப்போதும் நான் லேட்டா வர்றதா கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டே இருப்பான். அதனால், வீடியோவுல போட்டுக் காட்டினேன். இந்த நேரத்தில், லேட்டா வர்றதையே காரணம் காட்டி என் கதையை முடிச்சிடுவானுகளோன்னு பயம்.”

“நானும் கொஞ்ச நேரத்துக்கு முன்ன வரையும்கூட இவனுகளுக்குப் பயந்துகிட்டேதான் இருந்தேன். வதைமுகாம்ல இருக்காப்போல. ஒரே டார்ச்சர். இப்ப ரிசைன் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். லெட்டரையும் அடிச்சி வைச்சிட்டேன்” என்றாள் ரூபி.

“என்ன சொல்லுறீங்க ப்ரோ. அவனுகளுக்கு நல்ல செருப்படியா இருக்கும். எந்த கம்பெனியில ஜாயின் பண்ணப் போறீங்க?” என்றான் மோகன்.

“எங்கேயும் ஜாயின் பண்ணப் போறது இல்ல. இந்தியா முழுவதும் புல்லட்ல சோலோ டிரிப் அடிக்கப் போறேன். அப்படியே அங்கங்கே வசிக்கும் பழங்குடியினரையும் சந்தித்து அவர்களுடைய ஃலைப் ஸ்டைலை யூடியூப்பில் போடப் போறேன். வருமானம் வந்தா, அப்படியே நேபாளம், தாய்லாந்துன்னு நைபர் கன்ட்ரிஸுக்கும் போய், அதைத் தொடரலாம்னு யோசனை. பூமிக்குத் தீங்கு செய்யாத வாழ்வு இன்னும் பழங்குடியினர்கிட்டத்தான் இருக்குன்னு நினைக்கிறேன்.”

“சூப்பர் ப்ரோ. வேற லெவல்.”

எல்லோரும் டீ கிளாஸைக் கொடுத்துவிட்டு, சுகன் கணக்கில் எழுத வேண்டாம் என்று பணத்தைக் கொடுத்து விட்டு அலுவலகத்திற்குள் வந்தனர்.

மகிபாலன் அவசரமாக எச்ஆர் அறைக்குள் போனான். எச்ஆர் ஹெட் ரீத்து  உட்காரக்கூடச் சொல்லாமல், புருவக் கத்தியைத் தூக்கிக்கொண்டு சிடுசிடு முகத்தோடு அவனைப் பார்த்தாள். எப்போதும் ஆண் பெண் பேதம் இல்லாமல் தனது வயதையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு கன்னத்தைக் கிள்ளி, ‘அழகா இருக்கடா செல்லம்’ என்பவள், எப்படி இப்படி நடந்துகொள்கிறாள் எனத் தெரியாமல் அவன் திகைத்தான்.

“உங்களை ஸாக் பண்ணியாச்சு. இந்தாங்க லெட்டர்.”

“என்னையா? ரீசன் மேடம்?”

“கம்பெனி சீக்ரெட்டை வெளியே சொன்னதுக்காக.”

“நானா? கம்பெனியைப் பத்தி எங்கயும் பேசலையே, மேடம்.”

உடம்பு முழுவதும் அவனுக்கு மரத்துப் போவது போல இருந்தது. உடல் வியர்த்து நெஞ்சு வலிப்பதுபோலும் இருந்தது.

“ரூபி பத்தி நாம பேசிய மேட்டர் எப்படி வெளியே போச்சு.”

வாய் குழற அப்படியே மயங்கி விழுந்தான். எம்.என் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வந்தது. அவனைத் தூக்கிக்கொண்டு விரைந்தது. ஒவ்வொருவரும் அவனுடனான உறவின் இழைக்கேற்ப ஒவ்வொரு கருத்தைப் பகிர்ந்துகொண்டு, மெயிலையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தனர். கனிஸ்ரீக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. அவள் அலுவலகம் என்பதை மறந்து சத்தமாக அழுதாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.