சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1.சொன்னபடியே ஒரு மழைக்காலம்

ஒரு நிழலுமற்ற

நம் மரங்களும் வாடிவிட்டன

மழைக்காலம் சமீபத்தில் இருப்பதன்

அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன

நம் சிறிய இனிப்புகளை

முன்பு போலவே

பாதுகாக்க இம்முறையும் முயன்றோம்

இம்முறையும் நம் இனிப்புகள்

கரைந்துவிட்டன

சொன்னபடியே ஒரு மழைக்காலம்

பெய்யத் தொடங்கியிருக்கிறது

ஒரு நிழலுமற்ற

நம் மரங்களின் மேல்.

….

2. சாய்கிற பொழுதில்

எந்தக் கண்ணீரும் எனக்கு உதவவில்லை 

இதுவரை இசைக்காத இசைகள்

இதுவரை எழுதாத சொற்கள்

மற்றும்

நிரந்தர மௌனம்

சாய்கிற பொழுதில்

உன் சூரியன்களின் அமிழ்தல்கள்.

3.கறைபடிந்த தெய்வங்கள்

இசைகளை  நீ முழுமையாகத் தவிர்த்திருந்தாய்

ஒரு துளி காதலில்லை

உன் மனதில்

சதா நீல வானின் தனிமையில்

கிடந்தாய்

உன் மெளனம் கண்டு

அஞ்சின

அந்த வழியிலான பறவைகள்

உன் முன்னோர்கள்

மிகப்பெரிய லட்சியங்களின்

விக்கிரகங்கள் 

கறைபடிந்தன தெய்வங்கள்

நீ என்ன செய்தாய்

ஒரு காலத்தில் நின்றதைத் தவிர.

4.நஞ்சை உண்ட கண்டம்

நஞ்சை உண்டேன்

பிறெகெல்லாம்

கடவுளின் துயரம்

அதில் நிகழும்

மரித்தல்கள்

யாருடைய நஞ்சு இதெல்லாம்

பிறகும்

இதெல்லாம்  உண்டேன்

இன்னும் மிச்சமிருந்துவிட்டது….

5.தனிமையின் அதிகாலையில்

அதிகாலைத் தனிமையில்

குழாய் நீர் சொட்டுகிறது

எதையோ நினைவூட்ட விரும்பியதுபோல.

போர்கள் தீர்ந்துவிட்டனவா

மற்றும்

காதலின் இனிமை

மற்றும்

அடைதலின் வெற்று அகங்காரம்.

அதிகாலைத் தனிமை

மெல்லக் களங்கப்பட

மாசுபடுதலின்   குற்றவுணர்வின் புலரி

புலர்ந்துகொண்டிருந்தது.

Previous articleவ.அதியமான் கவிதைகள்
Next articleநீக்கம்
சதீஷ்குமார் சீனிவாசன்
கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் கும்பகோணத்தில் பிறந்தவர். உயிர்மை இணைய இதழில் பணிபுரிகிறார். இளம் கவிஞர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு "உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்" 2021லும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு " பாதி நன்மைகள் " இந்த வருடம் வெளியாகியிருக்கிறது. இரண்டு தொகுப்புகளும் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இவருக்கு விஷ்ணுபுரம் அமைப்பு "குமரகுருபரன் விருது" வழங்கிக் கவுரவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.