இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல வகை மீன் கொத்திகளிருப்பினும் பரவலாக காணக் கூடியது வெண்மார்பு மீன்கொத்தி ஒன்றே ஆகும். இதனை வெள்ளைத் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன் கொத்தி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆசியாவில் பரவலாகக் காணக் கூடியது. இது நீர் வளம் மற்றும் நீர்வளமற்ற பிற பகுதிகளான வேளாண்மை புரியும் பகுதிகளிலும், நகர்புற பகுதிகளிலும், வீடுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் காணலாம். ஏரி குளங்கள் சார்ந்த மின்கம்பம், கம்பி வேலி, மரக்கிளை போன்றவற்றில் அமர்ந்திருக்கும்.
நீரிலும் தரையிலும் காணப்படும் மீன், தவளை, ஓணான், அரணை, வெட்டுக்கிளி, புழு, பூச்சிகள் போன்றவற்றை இரையாகக் கொள்ளும். பிற பறவைகளின் குஞ்சுகளையும் உட்கொள்ளும் இயல்புடையது. மேலும் நீர்வாழ் பறவைகளான கொக்கு, நாரை, பாம்புதாரா, நீர்காகம் போன்ற பறவைகள் மரங்களின் மேல்அமைத்துள்ள கூடுகளின் கீழேயும் அருகேயும் உள்ள மரங்களின் கிளைகளில் அமர்ந்து, அப்பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்கையில் சிதறும் மீன்களை எடுத்து எளிதில் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் இயல்புடையது. சிறிய மீன் கொத்தி போலல்லாது அச்சம் கொண்டவை. இருப்பினும் தொடந்து நாம் அதற்கு எவ்வித இடையூறுமின்றி அப்பகுதியில் இருந்து வந்தால் அஞ்சாது எளிதில் பழகிவிடும் இயல்புடையது.
இப்பறவைகள் குறிப்பாக மழைக்காலங்களில் சில நேரங்களில் இரவில் கூட விளக்குகளால் ஈர்க்கப்படுவதைக் காணலாம், விளக்கொளியால் ஈர்க்கப்பட்ட பூச்சிகள் பறந்து கீழே விழுவனவற்றை பிடித்து விழுங்குவதை எப்போதாவது காணலாம்.
இவை வைத்திருக்கும் இரையைக் கவர (பிடுங்க) காகம், கருப்பு கழுகு போன்றவை முயற்சி செய்வதால் இதற்கு இடையூறாக இருப்பதுமன்றி சில சமயங்களில் இரையை இழக்க நேரிடுவதுமுண்டு.
ஆண் பெண் தோற்றத்தில் ஒன்று போலக் காணப்படும். வெண்மையான மோவாய், தொண்டை, மார்பு ஆகியவற்றோடு பசுமை தோய்ந்த நீல நிற உடலும், இறக்கைகளில் வெள்ளைத்திட்டும், செம்பவள நிற நீண்ட அலகும் சிவந்த கால்களும் கொண்ட உடலமைப்பைக் கொண்டது. 27–28 செ.மீ நீளம் கொண்டது. நன்கு வளர்ந்த மீன் கொத்தி நீல முதுகு, இறக்கைகள் மற்றும் வால் உள்ள பகுதிகள் அடர்நிறம் கொண்டிருக்கும். தலை, தோள்கள், பக்கவாட்டுகள் மற்றும் கீழ் வயிற்றுப் பகுதி ஆகியவை அடர் சிவப்பு நிறம் கொண்டும் தொண்டை மற்றும் மார்பகம் வெண்மையாகவுமிருக்கும். பெரிய அலகு மற்றும் கால்கள் சிவப்பு நிறம் கொண்டிருக்கும். வெள்ளைத் தொண்டை கொண்ட மீன் கொத்தி விரைவாக பறக்கக் கூடியது. இறக்கைகளைக் குலுக்கும் போதும் பறக்கும் போதும் நீல மற்றும் கருப்பு இறக்கைகளில் பெரிய வெள்ளை திட்டுகள் தெரியும். பாலினங்கள் ஒத்தவை, ஆனால் சிறிய குஞ்சுகள், நன்கு வளர்ந்த மீன் கொத்திகளுடன் ஒப்பிடுகையில் சற்று மங்கிய நிறத்திலிருக்கும்.
இவைகள் ஆற்றோர ஏரிகள், குளங்கள், மண் சரிவு, பாறைப் பொந்து, கிணற்றுச்சுவர், பாழடைந்த வீடுகளிலுள்ள இடிந்த சுவர்கள், கால்நடைகளுக்காக அடுக்கப்பட்டுள்ள வைக்கோல் போர்கள், சுவற்றிலிருக்கும் ஓட்டை போன்றவற்றில் சனவரி முதல் சூலை மாதம் முடிய கூடுகள் அமைக்கின்றன.
இதன் வலுவான அலகினைக் கொண்டு குடைந்து அமைக்கப்படும் பொந்து (கூடு) சுமார் ஒரு மீட்டர் தொலைவிற்கு முன்பக்கம் சற்று சரிவாக அமைத்து உள்ளே போகப் போக சற்றே உயர்த்தியும் இறுதியில் சிறிய குழியினை முட்டைகள் சரியாமலிருக்க அமைத்து அதில் 4 – 7 முட்டைகளிடுகின்றன. ஆண் பெண் இரண்டும் அடைகாப்பது மட்டுமன்றி குஞ்சுகள் பெரிதாகி பறந்து செல்லும் வரை உணவளிப்பதும், காவல்புரிந்து எதிரிகளிடமிருந்து காப்பது வரை செய்கிறது. இப் பொந்துகள் 1 – 5 மீட்டர் வரை உயரம் இருப்பதும் உண்டு.
மீன்கொத்திகள் இரண்டும் மாறி மாறி, அடைகாக்கும் இயல்பு கொண்டிருப்பினும் சில நேரங்களில் ஒன்று மற்றொன்றுக்கு உணவினை பொந்திற்கு உள்ளேயே சென்று கொடுப்பதும் உண்டு. குஞ்சுகள் பொரித்தவுடன் மூன்று நாள் அல்லது நான்கு நாட்களுக்கு குஞ்சின் மேலே படுத்து கதகதப்பான வெப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். பின்னர் பொந்திலிருந்து வெளியே வந்த பெற்றோர்கள் இருவரும் மாறி மாறி சிறிய மீன் குஞ்சுகள், சிறிய நண்டுகள் போன்றவற்றை பிடித்து மரக்கிளை அல்லது பாறைகளில் அடித்து நையச்செய்து பின்னர் பறந்து சென்று உள்ளிருக்கும் குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்கிறது. குஞ்சுகள் சற்று பெரிதானதும் உணவினை பெறுவதற்காக பொந்தின் முன்னால் வந்து விடும். அத்தருணங்களில் பெரிய பறவைகள் பொந்தின் முன்னாலேயே உணவு அளித்து விட்டு பறந்துவிடும். கூடு கண்ணில் படும்படியான தொலைவில் ஏதாவது ஒரு பறவை கண்காணிப்பில் இருந்து கொண்டு இருக்கும். ஆர்வமிகுதியால் அல்லது ஒன்றுக்கொன்று சண்டையிட்டும் சில குஞ்சுகள் பொந்திலிருந்து கீழே விழுந்து இறப்பதும் உண்டு.
முன்னர் அதனை படம் எடுக்க முற்பட்டபோது ஒருநாள் மாலையில் மழைத் தூரல்கள் விழுந்து கொண்டிருந்தன. எதிர்பாராத விதமாக மீன் கொத்தியானது அதன் முட்டையை பொந்திலிருந்து அலகில் எடுத்துக் கொண்டு வெளியேறுவதைக் கண்டு வியப்படைந்தேன். இடையூறு காரணமாக அங்கனம் செய்வதாக முதலில் எண்ணினேன். ஆனால் மறுநாள் அதிகாலையில் அங்கு சென்று காணும் பொழுது ஆற்றில் நீர் ஏறக்குறைய கூட்டினை நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆற்றுப் பெருக்கை முன்கூட்டியே உணர்ந்து முட்டையை எடுத்துச் சென்றதாகக் கருதினேன். கூகை ஆந்தை மற்றும் பக்கி (NightJar) போன்றவைகள் அலகினைக் கொண்டு முட்டையை இடம் மாற்றுவதைக் கண்டுள்ளேன். ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனரா எனத் தெரியவில்லை.
ஆற்றங்கரையில் வெண்மார்பு மீன்கொத்தி, ஒருமுறை நாகபாம்பினைப் (நல்ல பாம்பு) பார்த்தவுடன் மிகுந்த ஒலியை தொடர்ந்து எழுப்பியபடி பாம்பினை துரத்தியபடி தொடர்ந்தது. இதன் அலறலைக் கேட்ட பிற பறவைகளான மைனாக்களும், காட்டுச் சிலம்பன்களும் (Jungle Babbler) கூட்டமாக பாம்பினை வட்டமிட்டபடி அப்பகுதியை விட்டு பாம்பினை துரத்த தாக்க முற்பட்டது. அத்தருணத்தில் மீன்கொத்தி மிக அருகில் சென்று அலகால் கொத்த பலமுறை முயற்சி செய்தாலும் பாம்பு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் தப்பிச் சென்றது இன்றளவும் மறக்க இயலவில்லை.
கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் வாய்க்கால் கரையோரம் உள்ள சிறிய மரங்கள் மற்றும் பிற பகுதிகளில் குறிப்பாக அடர்ந்த முட்செடிகள் உள்ள பகுதிகளில் இவை இரவில் தங்கியிருக்கும். இதனை அறிந்த சிலர் டார்ச் லைட் கொண்டு அதன் கண்ணின் மேல் படுமாறு ஒளியினைச் செலுத்தி மீன்கொத்தியின் கண்பார்வையை மங்கச் செய்து உருண்டை தடியைக் கொண்டு அதனை அடித்து வீழ்த்தி உணவுக்காக எடுத்துச் செல்வர். இதனாலும் பாம்புகள், சிறிய உடும்புகள் போன்றவை பொந்துக்குள் சென்று முன்னால் இருக்கும் மீன்கொத்தியின் வளரும் குஞ்சுகளைப் பிடித்து விடும். இதனாலும் இதற்கு அழிவு ஏற்படுகிறது. இதுவரை மீன்கொத்தி இறந்து கீழே கிடப்பதை பார்த்ததில்லை,
புவியியல் வரம்பு எனக் கொண்டால் இவை ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லாவோஸ், லெபனான், மலேசியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, சிரியா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாட்டின் பகுதிகளில் காணப்படுகிறது