1. நவம்பர் என்பது
இரவின் உறையிலிட்டுச்
சிறு ஈசலும்
என்னை எங்கோ அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக
வேறொரு காலத்தின் கொக்கியில் தொங்கியபடி
இந்த இடத்தின் ஒக்கலில் உட்கார்ந்திருக்கும்
ஒரு தபால் பெட்டி
விளம்பர பொம்மைகளின் முன்
கூனிக்குறுகி நிற்க நேரிடும்
கறுப்புச் சந்தர்ப்பங்களும் கூட…
2. இழப்பின் வரலாறு
நீயும் நானும்
ஒரு மர்மமான தட்டச்சுப்பலகையில்
அருகருகே வசிக்கும்
இரண்டு எழுத்துக்களாக இருக்கிறோம்.
உன்னை அடுத்து நானோ அல்லது
என்னைத் தொடர்ந்து நீயோ
வருகைபுரிந்தால்
மொத்தமும் அர்த்தமிழந்துவிடும்.
வருத்தம்தான். வருத்தமேதான்.
இந்த முறை நாம்
இப்படிப் பிரிந்துசென்றிருக்கிறோம்
ஒருவரையொருவர்.
3. நடனம்
காகங்களின் கண்கள் வழியே
காகங்கள் மட்டும் பார்க்காத
ஒரு நண்பகல் நேரம்
சாலை காலியாக இருந்தது
வண்டியை முடுக்கிக்கொண்டு வந்தவன்
திடுமென நிதானித்துச்
சற்று வழிவிடுகிறான்
அப்புறம் தலையைப் பக்கவாட்டில் திருப்பி
முகமன் தெரிவிக்கிறான்.
யாரோ இருக்கிறார்கள் போல
யாரும் தென்படாத இடங்களில்.
4. தொலைவிலிருந்து பார்த்தல்
கல்லூரி படிக்கையில் அவன் காசிக்கு ஓடிப்போனான்
இனி திரும்பிவரக்கூடாது என.
படித்துறைகள் தகித்தன
கங்கை நீர் ஊசியாகத் துளைத்தது
ஊருக்குத் திரும்பும்போது
முதியவரொருவர் தன் நண்பரிடம்
ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தான்
விரக்தியான குரலில் பேச்சுக்கிடையே
காசியைச் சுற்றிப்பார்க்க வந்தவரைக்
காசி சுற்றிப் பார்த்துவிட்டது என அவர் உரைத்தது
இன்னும் உக்கிரமான மௌனத்தினுள் அவனை வீசியெறிந்தது
மறுநாள் ஊரில்
வாரணாசித் தெருக்களைக் கண்டான்
மாலைநேரப் படிக்கட்டுகளில் அமர்ந்து
மணிகர்ணிகாவின் படித்துறையில்
விறகுகளோடு விறகாகத்
தன் சடலம் எரிந்துகொண்டிருப்பதைப்
பார்த்தான்.