எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் உண்மையில் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே அவ்வாறான ஒரு கருத்து தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்ததே தவிர யதார்த்த எழுத்திற்கு இன்று வரை எந்தவிதமான பாதகமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து யதார்த்தவாத கதைகள் (சிறுகதைகள், நாவல்கள்) என எழுதப்பட்டும் பேசப்பட்டும் தான் இருக்கிறது. மேலும் யதார்த்தத்திற்கு மிக நெருக்கத்தில் உள்ள படைப்புகள் கொண்டாடவும் படுகின்றன. அதே நேரத்தில் மற்ற வகை எழுத்துக்களைக் குறைகூறுவது நோக்கமல்ல.
யதார்த்தக் கதைகள் எதை வெளிப்படுத்துகிறது என்ற சரியான புரிதல் இருக்குமானால், அதன் முக்கியத்துவத்தை உணரலாம். யதார்த்தக் கதைகள், ஒரு காலகட்டத்தையும் அந்தந்த காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களையும் அந்த காலகட்டத்தின் மனிதர்கள், வாழ்க்கைமுறை, கலாச்சாரம், பண்பாடு, மொழி, சமூகம் பொருளாதாரம் எனப் பல விஷயங்களை தன்னுள்ளே பொதிந்து வைத்துள்ளது. யதார்த்தக் கதைகள் எப்போதுமே ஒரு வரலாற்றுச் சாட்சியாக இருக்கிறது.
அந்தவகையில் வண்ண நிலவனின் கதைகளும் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான ஒன்றாக உள்ளது. அவர் அறுபது மற்றும் எழுபதுகளின் திருநெல்வேலியைத் தொடர்ந்து தனது கதைகளில் சித்தரித்துக்கொண்டே இருக்கிறார். அந்த காலகட்டத்தின் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் பொருளாதார நிலை வறுமை அதன் காரணமாக அந்த மனிதர்களிடத்தில் உருவாகும் கசப்பு என வண்ண நிலவன் கதைகளில் அதிகம் யதார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது. அதிகம் பேசப்படும் கதைகளான “பலாப்பழம், எஸ்தர், யுகதர்மம், காரை வீடு, மயான காண்டம் கதைகளில் இதன் கூறுகளைக் காணலாம். “வண்ணநிலவன் கதைகளில் பெண்கள்” எனத் தனியாகப் பேச வேண்டிய அளவிற்கு அவரது பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.
ஒருபயணத்தின் போது நண்பர்களுடனான ஒரு உரையாடல் இப்படித் தொடங்கியது, ‘சிறுகதைகளில் காலத்தின் பங்கு என்ன’ அதாவது ஒரு சிறுகதை ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் இருக்க வேண்டுமா அல்லது கால வரம்பென்பது தேவையில்லையா என்று விவாதிக்கப்பட்டது. இதில் என்னுடைய கருத்து சிறுகதை என்பது ஒரு கால வரம்புக்குள் இருக்க வேண்டும் என்பதே. மூன்று தலைமுறைக் கதைகளை ஒரு சிறுகதைக்குள் அடக்கும்போது அதில் நிச்சயம் போதாமைகள் இருக்குமென்பதே என் எண்ணம். அதாவது இது பக்கஅளவைப் பற்றியதல்ல, கதையின் காலஅளவைப் பற்றியது. பெரும்பாலும் பக்க அளவை வைத்தே தமிழ் சூழலில் குறுங்கதையா, சிறுகதையா, நெடுங்கதையா என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், எனது அப்போதைய கேள்வி காலஅளவு. ஆனால், நண்பர்களின் கருத்துகள் வெவ்வேறாக இருந்தன.
சமீபத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் கதைகளைத் தொடர்ந்து படித்தபோது ஒவ்வொரு கதையும் எனது நிலைப்பாட்டை உறுதி செய்வதுபோலவே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவரது பெரும்பாலான கதைகள் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை, அல்லது காட்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒரு சினிமா ரசிகன் ஒரு ஷாட்டை அல்லது நன்றாக உருவாக்கப்பட்ட ஒரு காட்சியை ரசிப்பதுபோலவே நான் வண்ணநிலவனின் சில கதைகளை என்னால் ரசிக்க முடிந்தது. அதில் கதையோ, கருத்தோ, சொல்வதற்கென ஒரு விஷயமோ கூட இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட கதைகளில் கூட எனக்குக் காட்சியின்பம் இருந்தது. இதற்குச் சரியான உதாரணம் ‘பலாப்பழம்’ கதையைச் சொல்லலாம். அந்த கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு குறும்படத்திற்கான Script இருந்தது. அதன் முடிவோ அல்லது கதை என்ன சொல்லவருகிறது என்பதை தாண்டி ஒரு கதாபாத்திரத்தின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் இவற்றைச் சரியாக வாசகனுக்குள் கடத்தியிருந்தார். ஒரு தேர்ந்த எழுத்தாளனால் மட்டுமே செய்யக்கூடிய விஷயமாக நான் அதைக் கருதுகிறேன்.
அளவான தேவையான விவரணைகள் மற்றும் உரையாடல்கள் எனப் பல கதைகள் short and sharp ஆக இருந்தது. அவர் இதை விழிப்புடன் தான் செய்திருப்பார் எனத் தோன்றவில்லை. அவருடைய மொத்தப் படைப்புகளையும் சேர்த்துப் பார்க்கும்போது அது அவரது இயல்பிலேயே இருக்குமென்று தோன்றுகிறது. அதே நேரம் ஒரு எழுத்தாளரது கதைகளை மட்டும் வைத்துக்கொண்டு அவரது இயல்பு குணநலன் கொள்கை மற்றும் கோட்பாடு விருப்பு வெறுப்புகளை ஆராய்வது ஏமாற்றத்தையே தரும்.
எப்படி Short and sharp என்பது அவரது சிறுகதைகளுக்கு எப்படி ஒரு கச்சிதத்தையும் தனித்த அடையாளத்தையும் கொடுத்திருக்கிறதே அதுவே அவரது நாவல்களுக்குச் சிக்கலான விஷயமாக மாறிவிடுகிறது. பெரிதாக விவரித்துப் பேச வேண்டிய உணர்வுகளைக் கடத்தவேண்டிய இடங்களையெல்லாம் தாண்டித் தாண்டி ஓடிவிடுகிறது. ஆனால், தனிப்பட்டமுறையில் கடல் புரத்தில் எனது விருப்பத்திற்குரிய நாவல். நான் தீவிர இலக்கியம் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் நான் வாசித்த முதல் நாவல். ஒரு வடிவமைப்பாளனாக தமிழின் அனைத்து முக்கிய எழுத்தாளர்களின் ஒரு நூலையாவது வடிமைத்துவிட வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டு. அந்த வகையில் வண்ணநிலவன் அவது ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் கம்பாநதி ஆகிய நாவல்களுக்கு அட்டை வடிவமைக்கு வாய்ப்பு அமைந்தது. அப்போது அந்த இரு நாவல்களையும் மறுவாசிப்பு செய்தபோதும் அதே கருத்து தான் மீண்டும் எழுந்தது.
வண்ணநிலவன் தனது கதைகளில் நிகழ்த்தும் உரையாடல்கள் இருவேரானது. ஒன்று நேரிடையானவை. மற்றொன்று கதாபாத்திரங்கள் தங்களுக்குள்ளேயே நிகழ்த்தும் உரையாடல். அவருடைய அக உரையாடல்களே பெரும்பாலும் யதார்த்தத்திற்கு நெருக்கமாகவே உள்ளது. மனிதன் வெளிப்படையாகப் பேசத்தயங்கும் விஷயங்களை, யோசிக்கத் தயங்கும் விஷயங்களை எப்போதும் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள். மனித மனத்தின் கசப்புகள், போதாமைகள், இயலாமைகள், வெறுப்புகள் என அவை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உதாரணமாக ‘யுகதர்மம்’ கதைகள் குமாஸ்தா தனக்குள் பேசிக்கொள்வதைச் சொல்லலாம். தன்னால் திருமணம் செய்து வைக்க முடியாத இயலாமையை, ‘இவ யார்கூடயாவது போயிடக்கூடாதா’ என்று சொல்லும்போது. பெரும்பாலான கதாபாத்திரங்கள் மருந்து வாங்க முடியாதவர்கள், உணவு இல்லாதவர்கள் பஞ்சத்தில் வெளியேறுபவர்கள் கடன் கேட்கத் தயங்குபவர்கள் என நடுத்தரவர்க்கத்தினராகவும் கையறு நிலையிலும் இருக்கிறார்கள்.
யதார்த்தம் என்பது நிலையில்லாதது. அது நாளுக்குநாள் இல்லை, நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. நேற்று சாத்தியமே இல்லாத ஒன்று இன்று நம் அன்றாட வழக்கமாக மாறியிருக்கிறது. இருந்த இடத்திலிருந்து அந்த நொடியே உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருப்பவரிடம் பேச முடியுமென்பது அறுபதுகளில் ஒரு அறிவியல் புனைவாகவோ அல்லது சாத்தியமற்றக் கற்பனையாகவோ தோன்றியிருக்கலாம். ஆனால், இன்று அது யதார்த்தம். இன்று எழுதப்படும் கதைகளில் அது ஒரு சாதாரண நிகழ்வு. சினிமாவில் தோல்வியடைந்த இயக்குநர்களைப் பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அவர் காலத்திற்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளவில்லையென. பெரும்பாலும் கலை இலக்கியத்தில் வீழ்ச்சியடைபவர்கள் அல்லது ஒரு கால கட்டத்திற்குப் பிறகு அதே வீச்சுடன் படைப்புகளைப் படைக்க முடியாதவர்களைச் சற்று கூர்ந்து நோக்கினால் பெரும்பாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே நின்றிருப்பார்கள். அவர்களால் அந்த காலகட்டத்தை விட்டு வரமுடியாமலேயே போய்விடும். இதைத் தமிழிலக்கியத்தில் நாம் பலரிடமும் பார்க்கலாம். வண்ணநிலவன் அவர்களுக்கு அதுவே நிகழ்ந்திருப்பதாக நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவரது கதைகள் மீண்டும் மீண்டும் பழைய யதார்த்தத்தை விட்டு வெளியேறி, எழுதப்பட்ட அந்த காலத்தின் யதார்த்திற்குள் நுழையவேயில்லை.
வரலாற்றுக் கதைகள் அல்லது நாவல்களை எழுத முற்படுபவர்கள் பெரும்பாலும் அந்த காலத்தைப் பற்றி வரலாற்று நூல்கள், கட்டுரைகள் எனத் தேடிப் படிப்பது வழக்கம். ஆனால், அதனுடன் அந்தந்த காலத்தில் அந்த பகுதியை ஒட்டி எழுதப்பட்ட யதார்த்தவாத கதைகளில் அதிக நுட்பமான தகவல்கள் கிடைக்கக்கூடும். அந்த வகையில் வண்ணநிலவனின் கதைகளில் அறுபதுகளிலிருந்து எண்பதுகள் வரையான திருநெல்வேலியைக் குறித்த பலவிதமான தகவல்களை அவர் தன் கதைகளின் ஊடாக நிரப்பியுள்ளார். அவர் அதை விழிப்புடன் தான் செய்தார் என்று சொல்வதற்கில்லை. ஆனால், உண்மையான யதார்த்தவாத கதைகளின் தன்மையே அதுதான் என்பது என் கருத்து. அது அன்றாடத்தைப் பேசுவதுபோல் தோன்றினாலும் பெரும்பாலும் அது ஏதோ ஒன்றைப் பதிவுசெய்து வரலாற்றின் பக்கங்களில் வைத்துவிடுகிறது. அது எப்போதும் ஒரு தேர்ந்த வாசகனின் கண்களுக்கு நிச்சயம் அகப்படுமென்று நம்புகிறேன். வண்ணநிலவனின் கதைகளில் உள்ள யதார்த்தமும், அதில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள மனிதர்களும் அவர்களது வரலாறும் நிச்சயம் ஒவ்வொரு தேர்ந்த வாசகனையும் சென்றடையும்.
வண்ணநிலவன் அவர்கள் முழுவீச்சுடன் எழுதிய காலகட்டமென்பது சிற்றிதழ்களின் மகத்தான காலகட்டம். தமிழிலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்களுக்கென்று ஒரு பெரிய இடம் எப்படி எப்போதும் இருக்குமோ, அதேபோல் அந்த காலகட்டத்தில் செயல்பட்ட படைப்பாளிகளின் பெயரும் இருக்கும். இனி எந்த ஒரு காலத்திலும் தமிழ்ச் சிறுகதை வரலாறோ அல்லது தமிழ் சிற்றிதழ்களின் வரலாறோ எழுதப்பட்டாலும் அதில் எப்போதுமே வண்ணநிலவன் என்ற பெயர் இருக்குமென்றே நம்புகிறேன்.
சமீபத்தில் விளக்கு விருது பெற்ற அவருக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்…
அருமை. வண்ணநிலவன் பற்றிய மிகவும் யதார்த்தமான பதிவு