கிறிஸ்துமஸ் சமயத்தில்…

1

பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர்.

வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று விட்ட அவளது பெண் யெஃபிமியா முதலில் இரண்டு கடிதங்கள் எழுதினாள். அதன் பிறகு ஏனோ அவர்களது வாழ்க்கையிலிருந்தே அவள் காணாமல் போய்விட்டது போலிருந்தது. அவளைப் பார்க்கவும் முடியவில்லை, அவளிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை. அவள் உயிரோடு இருப்பதற்கான எந்த வகை அறிகுறியும் இல்லை. காலை நேரங்களில் பசுவிடமிருந்து பால் கறந்து கொண்டிருக்கும் போதும், அடுப்பு மூட்டும்போதும், இரவில் அரைத் தூக்கம் கொள்ளும்போதும் – எந்த நேரமானாலும் கிழவிக்கு ஓயாத ஒரே ஒரு சிந்தனை மட்டும்தான். ’மகள் யெஃபிமியாவுக்கு என்னதான் ஆகியிருக்கும்.., அவள் அங்கே உயிரோடுதான் இருக்கிறாளா’, என்பதுதான் அது. அந்தத் தாய் ஒரு கடிதம் போட்டிருக்கலாம்; ஆனால் வயதான அந்தத் தகப்பனுக்கு எழுதத் தெரியாது. எழுதுவதற்கு அவர்களுக்கு யாருமே இல்லை.

ஆனால்..இப்போதோ கிறிஸ்துமஸ் வேறு வந்து விட்டதால், வஸிலிஸாவால் அதற்கு மேலும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் யெகரைத் தேடி அவனிருந்த மதுக்கடைக்கே வந்து விட்டிருந்தாள். மதுக்கடை உள்ளிட்ட அந்தத் தங்கும் விடுதிக்குப் பொறுப்பாய் இருந்தவனுடைய மனைவியின் தம்பிதான் யெகர். இராணுவத்திலிருந்து திரும்பி வந்தது முதல் வேறெந்த வேலை வெட்டியும் இல்லாமல் மதுக்கடையே பழியாய்க் கிடந்து கொண்டிருந்தவன் யெகர்.  உரியபடி பணம் கொடுத்தால் கடிதங்களை நல்ல முறையில் அவன் எழுதித் தருவான் என்று எல்லோரும் பேசிக் கொள்வதைக் கேள்விப்பட்டதால் அந்தக் கடையிலிருந்த சமையல்காரியிடமும், வீட்டுக்காரியிடமும் அது பற்றிப் பேசி உறுதிப்படுத்திக் கொண்டு அவள் வந்திருந்தாள். அதற்கான கட்டணம் பதினைந்து கொபெக் என்று பேசி, அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டிருந்தார்கள்.

அதனால்.. இப்போது, கிறிஸ்துமஸ் விடுமுறையின் இரண்டாவது நாளன்று, மதுக்கடையிலுள்ள சமையலறையில் அந்த வேலை நடந்து கொண்டிருந்தது. பேனாவைக் கையில் பிடித்தபடி மேஜையருகே உட்கார்ந்திருந்தான் யெகர். அவனுக்கு முன்னால் கவலையும் வருத்தமும் தோய்ந்த முகத்தோடு நின்று கொண்டிருந்தாள் வஸிலிஸா. மிகவும் மெலிந்த தோற்றமும் பழுப்பு நிற வழுக்கைத் தலையும் கொண்ட வயது முதிர்ந்த அவள் கணவன் பியோடர் அவளோடு கூட வந்திருந்தான். கண் தெரியாதவனைப் போல் வெறுமே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான், அவன். அடுப்பிலிருந்த சட்டியில் வறுபட்டுக்கொண்டிருந்த பன்றிக்கறி ஆவிபறக்கக் கொதித்தபோது எழுந்த ஓசை ’ ஃப்ளூ, ஃப்ளூ’ என்று கத்துவது போலிருந்தது. அது பயங்கரச் சூடாக இருந்தது.

 

‘’நான் என்னதான் எழுத வேண்டும்?’’, என்று மீண்டும் ஒரு தரம் கேட்டான் யெகர்.

’ம்..என்னது?’’, என்று கேட்டபடி அவனைக் கோபத்தோடும் சந்தேகத்தோடும் பார்த்தாள் வஸிலிஸா.

‘’இதோ பாருங்கள். .என்னை சங்கடப்படுத்த வேண்டாம். நீங்கள் ஒன்றும் ஓசியாக எழுதவில்லை. பயமே வேண்டாம், உங்களுக்கு என்ன பணம் உண்டோ அதைக் கொடுத்து விடுவோம். சரி..இப்படி எழுதுங்கள் ‘எங்கள் அன்பு மருமகன் ஆண்ட்ரீ ஹ்ரிஸன்ஃபிச்சுக்கும், எங்களது ஒரே பிரிய மகள் யெஃபிமியா பெட்ரோவ்னாவுக்கும், என்றென்றும் எங்கள் அன்பும், வந்தனமும், பெற்றோரான எங்கள் ஆசிகளும் உரித்தாகட்டும்.’

  ‘’ம்.. எழுதியாயிற்று, மேலே சொல்லுங்கள்’’

‘’..ம்.. அப்புறம்.. அவர்களுக்கு மகிழ்ச்சியோடு எங்கள் வாழ்த்துக்களைத்  தெரிவிக்கிறோம். நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம், நன்றாக இருக்கிறோம். நீங்களும் அப்படியே இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். பரமண்டலத்தில் இருக்கும் தேவன் அதற்கு அருள் செய்யட்டும்’’

குழம்பிப்போனது போல் கிழவரை ஒரு முறை பார்த்தாள் வஸிலிஸா.

’’ம்… நீங்களும் அப்படியே இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். பரமண்டலத்தில் இருக்கும் தேவன் அதற்கு அருள் செய்யட்டும்’, என்று அதையே திரும்பச் சொல்லியபடி அழத் தொடங்கினாள் அவள்.

அதற்கு மேல் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. இதற்கு முன்னாலும் எத்தனையோ இரவுகள் தூக்கமில்லாமல் – இதே சிந்தனையாக இருந்த நேரங்களிலும் கூட- டஜன் கடிதங்கள் எழுதினாலும் தான் சொல்ல நினைப்பதைத் தன்னால் முழுமையாகச் சொல்லி விட முடியாது என்றே அவளுக்குத் தோன்றியிருக்கிறது. மகளுக்குத் திருமணமாகிக் கணவனோடு சென்றபிறகு இன்றுவரை எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன. அந்த முதிய தம்பதியர் பிரிவின் வேதனையோடுதான் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். தங்கள் மகளைப் புதைத்து விட்டது போன்ற ஏக்கத்தோடு இரவு முழுவதும் நெடுமூச்செறிந்தபடி.

அவள் போன பிறகு, கிராமத்திலேயும் கூடத்தான் எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கின்றன? எத்தனை திருமணங்கள்…எவ்வளவு மரணங்கள்? எத்தனை நீண்டதொரு குளிர்காலம்? எவ்வளவு நீளமான ஒரு கோடைகாலம்?

“வெப்பம் மிக அதிகம்”, என்று தன் வெயிஸ்ட் கோட் பட்டனைக் கழற்றிக்கொண்டே சொன்னான் யெகர்.

“எழுபது டிகிரி (கிட்டத்தட்ட 140o F) கூட இருக்கலாம். சரி.. இன்னும் என்ன எழுத வேண்டும்? சொல்லுங்கள்..”

வயதான அந்த தம்பதியர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

“ஆமாம்.. உங்கள் மருமகன் பீட்டர்ஸ்பர்கில் என்ன செய்து கொண்டிருக்கிறான்?”

“அவர் ஒரு இராணுவ வீரராய் இருந்தவர் நண்பரே”, என்று பலவீனமான குரலில் பதிலளித்தார் கிழவர்.

“இராணுவப் பணியிலிருந்து நீங்கள் விலகிய அதே சமயத்திலே தான், அவரும் அதிலிருந்து வெளியேறினார். அவரைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இப்போது.. பீட்டர்ஸ்பர்கில் ஒரு நீர்சிகிச்சை மருத்துவ மையத்தில் வேலை பார்க்கிறார். நோயாளிகளைத் தண்ணீர் மூலம் குணப்படுத்தும் ஒரு டாக்டரிடம் வாயிற்காவலராய் வேலை பார்த்து வருகிறார் என்று நிச்சயமாய்த் தெரியும்.”

தன் சட்டைப் பையிலிருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் காட்டிய கிழவி, “இதோ, இதில் இருக்கிறது பாருங்கள்.. இது யெஃபிமியாவிடமிருந்து எப்போதோ வந்த கடிதம். எப்போது வந்ததோ அது கடவுளுக்குத்தான் தெரியும். ம்… இந்த உலகத்திலேயே அவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ”

சற்று நேரம் யோசித்து விட்டு வேகமாக எழுத ஆரம்பித்தான் யெகர்.

‘’இப்போது உங்கள் வாழ்க்கை இராணுவப்பணியோடு பிணைக்கப்பட்டிருப்பதால் போர் நடவடிக்கைகளுக்கான அலுவலகம் வகுத்திருக்கும் ஒழுங்கு விதிமுறைகள், மற்றும் அடிப்படைச் சட்டங்கள்  பற்றி நீங்கள் அறிந்து கொள்வது நல்லதென உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம். இராணுவ அதிகாரிகள் கைக்கொள்ள வேண்டிய நாகரிக நடைமுறைகளையும் அந்தச் சட்டங்களிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்’’  

தான் எழுதிய பகுதியை அவன் வாய்விட்டு சத்தமாய் வாசித்துக் கொண்டிருந்தபோது வஸிலிஸா தான் சொல்ல நினைத்ததையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘போன வருடம் அவசியத் தேவைக்குக் கூடப் பணம் இல்லாமல் அவர்கள் எப்படித் தவித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் வைத்திருந்த சோளத்தை வைத்து கிறிஸ்துமஸ் வரை கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது எப்படி, அவர்கள் வைத்திருந்த பசுவை ஏன் விற்க வேண்டியதாயிற்று…’ என்பதையெல்லாம்…!

அதோடு தங்களுக்குக் கொஞ்சம் பணம் வேண்டும் என்றும்… நோயுற்றிருக்கும் அவளது வயதான தந்தை எப்படிக் கஷ்டப்படுகிறார் என்றும்… அவர் சீக்கிரமே கடவுளிடம் போய்ச் சேர்ந்து விடப் போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை என்பதையும் கூட! ஆனால்..இந்த விவரங்களையெல்லாம் வார்த்தையில் சொல்வது எப்படி? எதை முதலில் சொல்வது, எதை அடுத்தத்தாகச் சொல்லுவது?

  ‘’இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்”, என்றபடி தொடர்ந்து எழுதிக்கொண்டு போனான் யெகர். 

‘’இராணுவச் சட்டங்கள் பாகம் ஐந்தின்படி ஒரு இராணுவ வீரர் பொதுச்சொல்லாலும் குறிக்கப்படுகிறார், சிறப்புச்சொல்லாலும் குறிப்பிடப்படுகிறார். முதல் படிநிலையில் இருப்பவர் தளபதி, இறுதிப் படிநிலையில் இருப்பது தனிப்பட்ட….’’ 

தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு மெதுவாக இப்படிச் சொன்னார் கிழவர். “பேரக்குழந்தைகளை ஒரு தரம் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும்!”

“என்னது பேரக்குழந்தைகளா?”, என்று வெடுக்கென்று கேட்ட முதியவள்

“அப்படி யாருமே இல்லாமல் கூட இருக்கலாம்”, என்று கோபமாய்ச் சொன்னாள்.

“ஒருவேளை அப்படி இருந்தாலும் இருக்கலாமே.. யாருக்குத் தெரியும்?”

யெகர் வேகமாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டே போனான்.

‘’அதன்படி உள்ளே இருக்கும் எதிரி யார், அது இல்லாமல் இருக்கும் எதிரி யார் என்று நீங்களே எடை போட்டு விடலாம். நமக்குள்ளே இருக்கும் எதிரிகளிலெல்லாம் மிகப் பெரிய எதிரி பாக்கஸ்* தான்!’’ 

மீன் தூண்டில்களைப் போல் தாளை உழுதபடி தனக்குத் தந்த வேலையை முடிக்கும் மதர்ப்போடு அவனது பேனா கிறீச்சிட்டுக் கொண்டிருந்தது..

யெகர் ஒவ்வொரு வரியையும் மிக வேகமாகப் பலமுறை படித்து முடித்தான். ஒரு ஸ்டூலில் உட்கார்ந்தபடி மேஜைக்கடியில் தன் கால்களை அகலப்பரத்தி வைத்துக் கொண்டிருந்தான் அவன். நல்ல ஊட்டத்தினால் கொழுத்துக்கிடந்த அவன் முகம் பண்படுத்தப்படாத ஒரு மிருகத்தின் முகத்தை ஒத்திருந்தது. அவனது சிவந்த கழுத்து காளைமாட்டின் கழுத்துப் போல் இருந்தது. மொத்தத்தில் அவனைப் பார்க்கவே அசிங்கமாய் அருவருப்பாய் இருந்தது.

நாகரிகமில்லாத காட்டுமிராண்டி போலத் தோற்றமளித்த அவனுக்கு, தான் அந்த மதுக்கடையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதில் ஒரு பெருமையும் கூட இருந்தது. வஸிலிஸாவுக்கு அவனது அநாகரிக நடவடிக்கைகள் நன்றாகப் புரிந்தாலும், வாய் விட்டு ஏதும் சொல்ல முடியவில்லை; யெகரைக் கோபமாகவும், சந்தேகத்தோடும் பார்க்க மட்டுமே அவளால் முடிந்தது.

அவளுக்குத் தலை வலிக்கத் தொடங்கி இருந்தது; அவன் போட்ட சத்தத்திலும் அவன் பேசிய மூளையில்லாத வார்த்தைகளைக் கேட்டதிலும், அங்கிருந்த வெம்மையிலும், புழுக்கத்திலும், அவள் எண்ணங்கள் பலவாறாகக் குழம்பிக் கொண்டிருந்தன. அவளால் அதற்கு மேல் எதையும் யோசிக்கவோ பேசவோ முடியவில்லை. அவன் தாளில் கிறுக்கிக் கொண்டிருந்ததை முடிக்கும் வரை அவள் வெறுமே காத்திருந்தாள். அவ்வளவுதான். ஆனால் அந்தக் கிழவரோ முழுமையான நம்பிக்கையோடு காணப்பட்டார். தன்னை அங்கே அழைத்து வந்த தன் வயதான மனைவியிடத்திலும், யெகர் மீதும் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அதிலும் குறிப்பாக அந்த நீர் சிகிச்சை மையத்தைப் பற்றி அவர் குறிப்பிடும்போது அந்த நிறுவனத்தின் மீதும், வியாதியை குணமாக்குமென்று சொல்லப்படும் தண்ணீரின் மீதும்  அவர் உண்மையாகவே நம்பிக்கை வைத்திருந்தார் என்பது நன்றாகப் புலப்பட்டது.

கடிதத்தை எழுதி முடித்துத் தன் இடத்தை விட்டு எழுந்து கொண்ட யெகர் மறுபடியும் ஒருமுறை முதலிலிருந்து அதை வாய் விட்டுப் படித்தான். கிழவருக்கு எதுவும் புரியாவிட்டாலும் அதை நம்பும் பாவனையில் தலையை ஆட்டி ஆமோதித்தார்.

“போதும்..சரியா இருக்கு, கடவுள் உங்களுக்கு நல்ல சுகத்தைத் தரட்டும்.. போதும்.. அவ்வளவு போதும்”

மேஜை மீது ஐந்து கொபெக் மதிப்புள்ள மூன்று நாணயங்களை வைத்து விட்டு அவர்கள் மதுக்கடையிலிருந்து வெளியே வந்தார்கள். இந்தப்பக்கம், அந்தப்பக்கம் திரும்பாமல் – கண் பார்வை அற்றவர் போல நேர்ப்பார்வை பார்த்தபடி இருந்தார் முதியவர். அவர் முகம் பூரண நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. 

ஆனால் வஸிலிஸாவோ அந்தக் கடையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட நாய் ஒன்றைக் கையால் விரட்டியபடி, “சீ போ..சனியன் பிடிச்ச பிசாசே!!” என்று கோபமாய்க் கத்தினாள். 

அன்று இரவு முழுவதும் அந்த முதியவள் உறங்கவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவளை சஞ்சலத்துக்குள்ளாக்கியபடி இருந்தன. விடிந்ததும் எழுந்து பிரார்த்தனை செய்து விட்டுக் கடிதத்தை அனுப்புவதற்காக ஸ்டேஷனை நோக்கிச் சென்றாள் அவள்.

அங்கிருந்து ஸ்டேஷன் ஏழெட்டு மைல் தொலைவில் இருந்தது.


2

டாக்டர்.பி ஓ மோஸல்வெய்ஸரின் நீர்சிகிச்சை மையத்தில் புத்தாண்டு தினத்தன்றும், பிற நாட்களைப் போலவே வேலை நடந்து கொண்டிருந்தது. மையத்தின் வாயிற்காவலனான ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச் மட்டும் புதிய பின்னல் வேலைப்பாடுகளுடன் கூடிய  சீருடையில் இருந்தான். அவனது காலணிகள் கூடுதலாக பாலிஷ் செய்யப்பட்டு மின்னிக் கொண்டிருந்தன. எதிர்ப்படும் ஒவ்வொரு நபருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.

அப்பொழுது காலை நேரம்; கதவருகே நின்றபடி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான் ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச். சரியாகப் பத்து மணியான போது வழக்கமாக அங்கே வரும் வாடிக்கையாளர்களில் ஒருவரான ஜெனரல் ஒருவர் உள்ளே வந்தார்; அவரைத் தொடர்ந்து ஒரு போஸ்ட்மேனும்.

ஜெனரல் தன் மேல்கோட்டைக் கழற்ற உதவிக்கொண்டே “மேன்மை தங்கிய தளபதி அவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!”, என்றான் ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச்.

“நன்றி நண்பரே! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!”

மாடிப்படியில் ஏறி மேலே போனபிறகு, அங்கிருந்த அறைக்கதவைச் சுட்டிக்காட்டி, “அந்த அறையில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார் ஜெனரல். (தினமும் அதே கேள்வியைக் கேட்பதும் அதை எப்போதும் மறந்து விடுவதும் அவருக்கு வாடிக்கை)

“அது மஸாஜ் செய்யும் அறை ஜெனரல்!”, ஜெனரலின் காலடிச்சத்தம் தேய்ந்து மறைந்தபின், அன்று வந்திருந்த அஞ்சல்களைப் பார்த்த ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச், அதில் ஒன்று தன் பெயரிலும் வந்திருப்பதைப் பார்த்தான். அதைப் பிரித்துப் பார்த்து அதிலுள்ள பல வரிகளையும் படித்த பிறகு செய்தித்தாளைப் பார்த்துக்கொண்டே தன்னுடைய அறைக்கு மெள்ள நடந்து சென்றான். அவனது அறை மாடிப்படிக்குக் கீழுள்ள வழிநடையை ஒட்டினாற்போல் இருந்தது.

அவனது மனைவி யெஃபிமியா படுக்கையில் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். இன்னொரு மூத்த குழந்தை அவளருகில் நின்றபடி தன் சுருட்டைத் தலையை அவள் முழங்கால் மீது வைத்துக் கொண்டிருந்தது. மூன்றாவது குழந்தை படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தது.

அறைக்குள் நுழைந்த ஆண்ட்ரீ மனைவிடம் கடிதத்தைத் தந்தபடி “ஊரிலிருந்து வந்திருக்குன்னு நினைக்கிறேன்”, என்றான்.

பிறகு கையிலிருந்த பேப்பரிலிருந்து கண்ணை நகர்த்தாமல்  அறையை விட்டு வெளியே சென்றான். கடிதத்திலிருந்த ஆரம்ப வரிகளை நடுங்கும் குரலில் யெஃபிமியா படித்துக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்து கொண்டிருந்தது. அதைப் படித்தபிறகு… அதற்கு மேல் எதையுமே அவளால் படிக்க முடியவில்லை. உடைந்து சிதறிப் போய்க் கண்ணீர் பெருக்கியவளாய்த் தன் முதல் குழந்தையை மார்போடு தழுவி முத்தமிட்டபடி பேசத் தொடங்கினாள் அவள். அப்போது அவள் சிரித்துக் கொண்டிருந்தாளா, அழுது கொண்டிருந்தாளா என்றெல்லாம் இனம் பிரித்துச் சொல்வது கடினம். 

’’இது பாட்டி கிட்டே இருந்து வந்திருக்கு, உங்க தாத்தா கிட்டே இருந்து வந்திருக்கு.. என்னோட ஊரிலே இருந்து வந்திருக்கு. வானலோகத்திலே இருக்கிற அன்னை கிட்டே இருந்து….அங்கே உள்ள ..புனிதர்கள்… தியாகிகள் கிட்டே இருந்து வந்த மாதிரி..! இந்த நேரம்… எங்க கிராமத்திலே இருக்கிற கூரை மேலே எல்லாம் பனி அப்பிக் கிடக்கும். மரங்களெல்லாம் வெள்ளை வெளேர்னு இருக்கும். பையங்க எல்லாம் ஸ்லெட்ஜிலே சறுக்குவாங்க. எனக்குப் பிரியமான உன்னோட வழுக்கைத் தாத்தா கணப்பு கிட்டே குளிர் காய்ஞ்சுக்கிட்டிருப்பார். அப்புறம் பழுப்பு நெறத்திலே ஒரு குட்டி நாய்… எனக்கு மட்டுமே சொந்தமான என் செல்லங்கள்!’’

அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தான் மூன்று நான்கு முறை அவள் ஏதோ கடிதங்களைத் தன்னிடம் கொடுத்து போஸ்ட் செய்யச் சொன்னது ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச்சுக்கு நினைவு வந்தது. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஏதாவது அவசர வேலை குறுக்கே வந்து விடுவதால் அவன் அதை மறந்து விடுவான்; பிறகு அந்தக் கடிதங்களும் எங்கோ தொலைந்து போய்விடும்.

‘’அங்கே இருக்கிற வயல்களிலே சின்னச்சின்ன முயல்கள் துள்ளி ஓடிக்கிட்டிருக்கும்”, ஜபம் செய்வது போலத் தொடர்ந்து ஏதேதோ பேசியபடி தன்   மகனை முத்தமிட்டுக் கண்ணீர் பெருக்கியபடி இருந்தாள் யெஃபிமியா.

‘’உன்னோட தாத்தா அன்பானவர்; மென்மையான மனசு அவருக்கு. பாட்டியும் நல்லவங்க, இளகின மனசும் கூட. அங்கே கிராமத்துக்காரங்க எல்லாருமே இதமான உள்ளம் கொண்டவங்கதான். எல்லாருக்குமே கடவுள் பயமும் உண்டு. அங்கே ஒரு சின்ன சர்ச்சும் இருக்கு. விவசாயம் பண்றவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அங்கே பாடுவாங்க. புனித அன்னையே, எங்களைக் காப்பாத்து கடைத்தேற்றுன்னு எல்லாரும் வேண்டிக்குவாங்க’’ 

மீண்டும் ஒரு வாயில் மணி அடிப்பதற்குள் சற்றுப் புகைத்து விட வேண்டுமென்று தோன்றியதால் ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச் அறைக்குள் நுழைந்தான். உடனே யெஃபிமியா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தான் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்திக் கொண்டாள். கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்; ஆனாலும் அவள் உதடுகள் இன்னும் கூட நடுங்கிக் கொண்டுதான் இருந்தன. அவள் எப்போதுமே அவனைக் கண்டால் பயந்து நடுங்குபவள். அப்ப்பா!! எப்படிப்பட்ட பயம் அது? அவனது காலடிச் சத்தம் கேட்டால்…, ஏன் அவன் கண்ணைப் பார்த்தாலே கூட அவள் அச்சத்தால் விதிர்விதிர்த்துப் போவாள். அவன் முன்னிலையில் எந்த ஒரு வார்த்தையும் சொல்ல அவள் ஒருபோதும் துணிந்ததில்லை.

ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச் சிகரெட்டைப்பற்ற வைத்துக்கொண்டதுமே மாடியிலிருந்து அழைப்பு மணி அடித்தது. பற்ற வைத்த சிகரெட்டைப் போட்டு விட்டுத் தீவிரமான முக பாவனையுடன் வாசலுக்கு விரைந்தான் அவன்.

அப்போதுதான் குளியலை முடித்திருந்த ரோஜா நிறப் பளபளப்போடு படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தார் ஜெனரல்.

அறைக் கதவொன்றைச் சுட்டிக்காட்டியபடி அங்கே என்ன இருக்கிறதென்று அவர் கேட்க, ட்ரௌசர் பைக்குள் தன் கைகளை விறைப்பாக நுழைத்துக்கொண்டபடி, ’’சார்கோட் குளியல்** ஐயா!’’, என்று உரத்த குரலில் பதில் தந்தான் ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச்.


*  பாக்கஸ் — ஒயின் வகை. மதுவின் ரோமானியக் கடவுளைக் குறிப்பது –Bacchus: Roman god of Wine.

** சார்கோட் குளியல் — ழீன் மார்டின் சார்கோட் என்ற பிரெஞ்சு மருத்துவரின் பெயர் கொண்டது; கணுக்கால் வரை சுடுநீரிலும்  உடலின் பிற பகுதிகள் குளிர்நீரிலும் மூழ்கியிருக்கும்படி மேற்கொள்ளும் குளியல் இது. 


ஆண்டன் செக்காவ்

தமிழில்:- எம் ஏ சுசீலா            


ஆசிரியர் குறிப்பு:

ஆண்டன் செக்காவ்:

விக்கிபீடியாவில் வாசிக்க

எம் ஏ சுசீலா: எம். ஏ. சுசீலா (பிறப்பு: பெப்ரவரி 27, 1949) ஒரு சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கட்டுரையாளர்.  குற்றமும் தண்டனையும் – தஸ்தயெவ்ஸ்கி, அசடன் – தஸ்தயெவ்ஸ்கி  ஆகிய மொழிபெயர்ப்பு நாவல்களையும் தஸ்தயெவ்ஸ்கி சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

2 COMMENTS

  1. இரு பாச பிரிவுகளின் ஆற்றாமையை மனங்கொத்தி பறவையாக உணர முடிந்தது மேடம்…
    வயது முதிர்ந்த பெற்றோரின் இறுதிகட்ட ஏக்கங்களும், பழைய நினைவுகளின் வலிகளும் ஒரு துருவமாக..
    வாழ்க்கைப்பட்டு சென்றதனால் தன் பெற்றோரை பார்க்க இயலவில்லை என்றமகள் நிலையில் நின்ற தவிப்பு ஒரு துருவமாக இருதுருவ நிலைகளின் பரிதவிப்பை அழகாக ஆண்டன் செகோவ் மூலத்தை தங்களுக்கே உரிய பாணியில் படைத்து உள்ளீர்கள் மேடம்… 💐💐💐🙏🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.