“எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்.” -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்


காவிரிப்படுகை அடையாளப்படுத்திக் காட்ட, அதன் இயல்புமாறாமல் மொழியைக் கையகப்படுத்திக் கொண்டு மண்ணின் மொழி சார்ந்து படைப்புகளைத் தந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் நா.விச்வநாதன். கால இடைவெளி இல்லாமல் வாழ்வின் போக்கை எழுத்தோடு விசாலமாக்கியே பார்க்கும் மனநிலைக் கொண்டு தன் இருப்பு எழுத்து இருக்கும் வரை என்று அறுதியிட்டு வாழ்பவர். கவிதையும், சிறுகதையுமாகப் படைப்பாக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவரோடு, தஞ்சை மண் சார்ந்த படைப்புக்களத்தைப் பற்றி பொதுவாகக் ‘கனலி  கலை இலக்கிய இணையதளத்தின்’ நேர்காணல் பகுதிக்காக பேசியதிலிருந்து….

 

  1. இக்காலச்சமூகத்தில் பல மனிதத்தொகுதிகள் தம்மை அடையாளப்படுத்தி வாழ்கின்றனர். இதனுள் படைப்பாளன் என்பவன் யார்?

மனிதத்தொகுதிகள் தம்மை அடையாளப்படுத்தி வாழ்கின்றனர். இதில் படைப்பாளனும் ஒருவன். தனியாக தன்னைப் படைப்பாளன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவோ, அடையாளப்படுத்தவோ செய்வது சரியன்று. படைப்பாளன் தனியாக இல்லை. எந்தக் கிரீடமும் தரித்திருக்கவில்லை. தமிழ்ச்சூழலில் அதிகாரமும் இல்லை. சாதாரண தஞ்சாவூர் மனிதனாக, ஏதேனும் காரணத்தால் இடம் பெயர்ந்தால் அந்த மனிதனாக இருப்பவன் தான். ஒரு தச்சன், ஒரு நகைத்தொழிலாளி, ஒரு விவசாயி, ஓர் அரசு ஊழியன் போன்றவனே. எழுத்தாளனின் PRODUCT அடைவது வெகு சொற்பமான பகுதிகளில், வெகு சொற்பமானவர்களிடம் மட்டுமே. வள்ளுவன் காதலுக்குச் சொன்னது இதற்கும் பொருந்தும், “சிலர் அதன் செவ்வித் தலைப்படுவர்”.

  1. கருத்தியல் ரீதியாகப் படைப்பாளன் தம்மை எப்படி உருவாக்கிக் கொள்கின்றனர்?

பெரிய அளவிலான உருவாக்கம். இதில் முயற்சி இருக்கிறது. மற்ற எழுத்தாளர்களை விட தான் பெரியவன் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஓர் எழுத்து, எழுத்தினாலே இந்த தன்முனைப்பு நோய் வந்துவிடுகிறது. இதில் கருத்து, அதனை எழுத்தாக வடிப்பது என்பது சிரமமானதாக இருக்கிறது.

  1. எழுத்து என்பது என் உயிர், எழுத்து என்பது என் உணர்வு இந்த பிம்பத்தை உடைக்காமல் தான் படைப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறதா? இல்லை, நடப்பியலில் எது பின்பற்றப்படுகிறதோ அதை படைப்பாளர்கள் தீர்மானித்துக் கொள்கின்றனரா?

ஏற்கனவே, எழுதினவர்களின் எழுத்தையே தொடர்கின்றனர். இதில், எழுத்து என்பது என் உயிர். எழுத்து என்பது என் உணர்வு. இந்த பிம்பத்தை உடைக்காமல் எழுத்து வந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இங்கு முழுநேர எழுத்தாளன் இல்லை. எழுத்தை வைத்து ஜீவிக்க முடியாது என்பது விஷயமில்லை. அவரவர்கள் பொருளியல் ரீதியில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டே பேனா பிடிக்கிறார்கள். அரசு ஊழியர்களும், வங்கிப்பணியாளர்களும், காப்பீட்டுக்கழகக்காரர்களும் தான் எழுத்தாளர்கள்.

நல்ல சுகாதாரச் சூழ்நிலையில் இலக்கியத்தைக் கருத்தை வளர்க்க ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை. உலக இலக்கியத்தில் பொதுமரபு, உண்மையும் அழகும் என்று இருவார்த்தைகளில் அடக்கிவிடலாம். இங்குத் தமிழில் வெற்றுக்கோஷங்கள்  ஒரு ஏழெட்டு பேர்களால் எழுப்பப்பட்டு ஏழெட்டு கோஷ்டிகளில் இவர்கள் எழுதுவதே இலக்கியம் என்றானது. இதில் சாரமில்லை. சண்டையும் சச்சரவும் புழங்குகின்றன. வாசகனுக்கு இந்த சலசலப்பை ரசிக்கத்தக்கதாக மாற்றிவிட்டார்கள். நல்ல இலக்கியம் என்பது அரிதாகிவிட்டது. நேர்காணல் கேள்வியை விட்டு விலகுவதாகக் கருதுவது கூடாது. கேள்விக்குள் அடங்கிய பதில்தான். கருத்தியல் ரீதியாக படைப்பாளன் இயங்குவதில்லை. கருத்தோடு பயணிப்பதில் ரசனை இருக்க முடியாது. எந்தக் கருத்துக்களுமற்ற நாட்டார் இலக்கியங்கள் எவ்வளவு சுவாரசியமாக இருக்கின்றன. எந்த இடது சாரி எழுத்தினாலும் சிறந்த இலக்கியங்களை முழுமையாகத் தர இயலாது. ஒரு சட்டகத்திற்குள் அந்த எழுத்து அடங்கி விடுகின்றது. ஒற்றைப்பார்வைத் தன்மையோடு எழுத வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இந்த இடதுசாரி அமைப்பிலிருந்து கொண்டேதான் இதைப் பேசுகிறேன். சுய விமரிசனத்திற்கும் மறுபரிசீலனைக்கும் இங்கு தாராளமான இடமுண்டு என்றறிவேன். வெறும் அறிக்கைகள் இலக்கியமாகா என்பது என்னளவில் சரிதான். இலக்கியத்தில் ‘களிப்பு ‘ முக்கியம். அப்போது தான் தரம் இருக்கும்.

  1. ‘சுயம்’ என்ற ஒற்றைச்சரடின் மனித இருப்புகளுக்கானவன் படைப்பாளன். இதை ஏற்க முடியுமா?

எழுத்தாளன் தனக்காக எழுதிக் கொள்ள முடியாது. எழுத்தாளனின் ‘சுயம்’ என்பது மாறக்கூடியது. எழுத்தாளன் சுயத்தை இழக்கக் கூடாது என்று தான் எழுத ஆரம்பிக்கிறான். எழுத்தாளனின் சுயம், அபிலாஷ்களை, விரக்தி, சந்தோஷங்களை வாசகன் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. வாசகனும் எழுத்தாளனும் நேர்கோட்டில் பயணிப்பதில்லை. அதுவும், எழுத்தாளன் பத்து அல்லது இருபது வருஷமே எழுதுகிறான்.

  1. சமகால எழுத்துச்சூழல் இனவேட்கை, அரசியல், தொடர்பற்ற உதிரிகள் எனத் தாமாக ஒரு வடிவம் கொண்டு கதை சொல்லிச் செல்கிறது. ஏன் பதற்றமில்லாமல் படைப்பை வெளிக்கொணர முடிவதில்லை. எந்த இடத்தில் அது சிக்கலாகிறது? எந்த இடத்தில் சாத்தியப்படுகிறது? எந்த இடத்தில் போதாமையாக அடைப்பட்டு நிற்கிறது?

இனவேட்கை, அரசியல், தொடர்பற்ற வசதிகள் என்பவை செயற்கையாகக் கட்டமைக்கப்படுகின்றன. எழுதியபிறகு தன் எழுத்துக்குப் படைப்பாளி பொறுப்பேற்பதில்லை. இது வசதியானது. பக்கத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களை அடிக்கடி எட்டிப்பார்ப்பது. ஒரு போட்டி மனச்சூழல் உருவாகிறது. ஒட்டப்பந்தய மனோநிலை. பதற்றம், ஜெயிக்க வேண்டும் என்பதுதான். அவரவர் எழுத்து அவர்களுக்கான நாலு வாசகர்கள். சரியான பதற்றம் நல்ல எழுத்துக்கு வழிகோலும். இங்கு மாறாக இருக்கிறது. சிக்கலாகும் இடமும் இல்லை. சாத்தியமாகும் இடமும் இல்லை. அவரவர் ஞானத்திற்கு ஏற்றவகையில், உகந்த வகையில் எழுதுவது என்பது தான் நடக்கிறது. பழைய தலைமுறை – இன்றைய எழுத்து முறை என்ற இரண்டு காலங்களிலும் நின்றவன் நிற்பவன், சரியாகவே இதன்போக்கை அனுமானிக்க முடியும். அன்றைய எழுத்தால், போதுமானது இருந்தது. இவற்றை ஒரு இலக்கிய மாமியாராக இருந்து சொல்லவில்லை. இன்றைய போதாமை தொடர்ந்து இருக்கவே செய்யும். எழுத்தாளன் உபதேசியாராக எல்லாம் கற்றவராக பிரமையில் இருக்கும் வரை இது தொடரும்.

  1. மொழி என்ற பொதுமையைச் சேகரமாக்கித் தத்தமது படைப்பை பிரத்யேகப்படுத்த தான் அனைவரும் முனைகிறோம். அவ்வகையில், தஞ்சைக்கென்று என்ன அடையாளப்படுத்துதலைக் காட்டமுடியுமென நினைக்கிறீர்கள்?

தஞ்சைக்கென்று அடையாளப்படுத்த நிறைய இருந்தது. தஞ்சைக்கென்று ஒரு மொழி இருந்தது. தஞ்சைமொழியைப் புரிந்து கொண்ட, கு.ப.ரா., தி.ஜானகிராமன், மௌனி, எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ் இருந்தார்கள். தஞ்சைக்கென்று என்ன அடையாளம் இருக்கிறது? பெரியகோயில் மட்டும் தான். தஞ்சாவூர் எழுத்து என்ற ஒன்றில்லை இன்று.

உண்மையில், தஞ்சாவூர் பலநூறு வருஷங்களாக தமிழர்களால் ஆளப்படவில்லை. தஞ்சை அடையாளம் நாயக்கர்களால், மராத்திய மகாராஜாக்களால் கட்டமைக்கப்பட்டது. அந்தந்த அரசர்கள் காலத்தில் அவரவர்கள் மொழி முன்னிறுத்தப்பட்டது. தஞ்சாவூர் அடையாளம் எது? நகரக் கட்டமைப்பும் மாற்றப்பட்டது. ஒரே தெருவில் தெலுங்கு பேசுபவர்கள், மராத்தி பேசுபவர்கள், குஜராத்தி, இந்தி பேசுபவர்கள், கன்னடம் பேசுபவர்கள் வாழ்கிறார்கள். கலவையான பேச்சு மொழிகள். வித்யாசமான சடங்குகள், பழக்க வழக்கங்கள் – வேறு எந்த ஊரிலும் இப்படிப்பார்க்க முடியாது. இன்று பார்க்கும் தஞ்சாவூர் அசல் தஞ்சாவூர் அல்ல.

  1. ஒரு படைப்பை படைத்து அதற்கான வட்டச்சுழலில் சிக்கி மகிழ்வும், வருத்தமும் கொண்டு இலக்கியம் படைக்கமுடியும். அதே நேரத்தில் வாசிப்பாளர்களை படைப்புச்சூழலுக்குள் கொண்டு சேர்த்து இலக்கியத்தை வளர்க்க முடியும் என்றொரு நிலையும் உண்டு. இதை எப்படி பார்க்கிறீர்கள்.

வாசிப்பாளனைப் படைப்புச்சூழலுக்குள் கொண்டு வருவது என்பது சிரமமானது. ஆயிரம் மனநிலைகளில் வாசகன் இருக்கிறான். அவற்றை விலக்கி எழுத்தாளன் மனநிலைக்கு கொண்டு வர வேண்டும். ஏன் இது? அவரவர் மனநிலைக்கு ஏற்ப வாசகனைக் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பது பிழை – அவரவர் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. எழுத்து ஒன்றும் சட்டப்புத்தகமோ, தர்மசாஸ்திர வரிகளோ இல்லை. வாசகனைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆள நினைப்பதும் சரியானதாகாது. வாசகனே நல்ல எழுத்தைத் தீர்மானிக்கிறான் என்று ஒன்றை தான் சொல்லலாம். மௌனி சிலருக்குப்பிடிக்கிறது. பலருக்குப் பிடிக்கவில்லை. யார் குறை இது? மௌனி அறிவிப்பே செய்கிறார். ‘என் சிந்தனைக்கு தமிழ் மொழி போதுமானதாக இல்லை’. மேலும் ஒரு எழுத்தை வாசிக்கும் போது எழுத்தாளனும் வாசகனே. இவ்வளவு விஷயங்களுக்கு மத்தியில்தான் இலக்கியம் வளர முடியும்.

  1. பொதுவாக எழுத்து என்பதற்கு பல விளக்கம் சொல்வார்கள். ஒரு படைப்பாளன் சமூகத்திற்கானவன் என்ற கருத்தியல் எதை உட்படுத்துகிறது? எதும் நிர்பந்தமா? தனக்கான எழுத்தை முன் வைக்கும் போது சமூகம் என்றொரு தொன் அமைப்பு குறுக்கிடுகிறதா?

உண்மையில், இந்த வினா கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்பதை ஒத்தது தான். கலை மக்களுக்கு தான். கலை கலைக்காகவே என்ற முழக்கத்திலிருந்து பெற்ற பரிணாம வாசகம் தான் கலை மக்களுக்காகவே என்பதும். இரண்டும் ஒன்றுதான். பயனாளர்கள் இன்றி சரக்கு மதிப்புப் பெறாது. கலை கலைக்காகவே என்ற முழக்கம் ஒரு உந்து சக்திதான். கலை என்பது மக்கள் சார்ந்தது தான். மக்களுக்கானது தான். க.நா.சு சொல்வது “கலையின் ராஜ்யம் விஸ்தாரமானது அல்ல. அந்தக் குறுகிய பிரதேசத்திற்குள் தான் எல்லாமே நடக்கிறது”.

  1. கும்பகோணத்தில் உள்ள ‘ரைட்டர்ஸ் கடை’ என்ற இடத்தில் இலக்கியவாதிகள் உரையாடும் இடமாகப் பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் ‘மாஸ்டர்லெவல்’ எழுத்தாளர்கள் கூடும் இடம். இதில் நீங்கள் பங்குப் பெற்றச் சூழலுண்டா?

கும்பகோணம் “ரைட்டர்ஸ் கடை” – தொண்டர் கடை என்பார்கள். சொல்லப்பட்டதுதான். இலக்கியத்திற்கான அர்ப்பணிப்பாளர்கள் சேருமிடம். தி.ஜா-வை இளமையில் சந்தித்தது தான். அப்போது அவர் முதியவர். இதே போன்று  “தஞ்சாவூர்  ‘சும்மா’ இலக்கியக்கும்பல்” தஞ்சை ப்ரகாஷ் முயன்றது. இன்ன இடம் என்றில்லை. பெரியகோவில் புல்வெளி, பிளாட்பாரம், மூத்திரநாற்றச்சந்துகள், டீக்கடைகள், ப்ரகாஷ் விரும்பியவைதான். என் அஞ்சலகம் இப்படி எங்கும் திடுமெனக்கூடும். பெரிய ஜாம்பவான்கள் வந்து பொறுப்போடு கலந்து கொண்டது இதில்தான். சிலோனிலிருந்தெல்லாம் வருவார்கள். ஒழுங்கான மேடையில் திட்டமிட்டு இலக்கியம் பேசியது சொற்பமே. பரவெளியைப் பார்த்துக்கொண்டு சுற்றிலும் நிகழும் அசூயையான நிகழ்வுகளை ரசித்துக்கொண்டு, இலக்கியம் பேசியது ஓர் அநுபூதி. இந்த அநுபூதி எங்களுக்கு கிடைத்தது. மூத்திரநாற்றத்தோடு பொரிக்கடலை, மிக்ஸர் மென்றுக்கொண்டு காஃப்கா, முரகாமி, போர்ஹே பேசியது நாங்களாகத்தான் இருக்கும்.

  1. தி.ஜா வின் எழுத்துகள் மீது ஆண், பெண் உறவை அலசிப் பார்த்தவர் என்றொரு பார்வை உண்டு. அது அவரின் தனிப்போக்கு எனக்கொள்ளலாம். அதைக் கூட பூடமாகவே சொல்லிச் செல்வார். இதை ஏன் கேள்வியாக்குகிறார்கள்? இங்கு, உடல் என்பது ஏன் புனிதத்தில் நீந்திக் கொண்டேயுள்ளது?

அவர் பூடமாகவே சொல்லவில்லை. உரையாடல், உடல் மொழி வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றார். அவர் அப்பா பௌராணிகர். தன் தந்தை புராணக் கதைகள், இதிகாசங்கள் சொல்ல செல்லும் போது தி.ஜாவும் உடன் செல்வார். அந்தப் பேச்சில், தொன்மங்களில் மறைக்கப்ட்ட விஷயங்கள் ஏன் மறைக்கப்பட்டது என்ற கேள்வியெழ, அந்த விஷயங்களை வெளிப்படுத்தவே முனைந்தார். தன் எழுத்தில் அப்படித்தான் எழுத ஆரம்பித்தார். பொதுவாக, படைப்பாளனிடம் ஏன் என்ற சிந்தனை அதிகமாகும்போது அதைச் சார்ந்த விஷயங்கள் தலைக்குள்ளிருந்துக் கொட்ட ஆரம்பிக்கும். அதான் நடந்தது தி.ஜா.வின் வாழ்வில். தன் மகளிடம் நேரிடையாகவே இந்த உறவு நிலைகள் பற்றி விவாதித்திருக்கார். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய விஷயம். அவரிடம் எந்த மறைப்பும் இல்லை. நாமும் மறைத்துப்பார்க்கவும் ஒன்றுமில்லை இதில். உடல் என்ற ஒன்று வெளிப்படையானது என்பதைத் தம் எழுத்துகளின் வழியே சொல்லிச் சென்றவர்.

  1. தி.ஜா மண்மொழி உரையாடலைக் கதை உருவங்களின் வழிக் கொண்டு வந்து நிறுத்தித் தன் நிலக்காட்சியைக் காட்சிப்படுத்திவிடுவார். இம்மையப்படுத்துதல் இயல்பானதா? இந்த இடத்தில் படைப்பாளர்களின் பொதுமை மறைக்கப்பட்டு ஏன் பிறந்த நிலம் அரிதாரம் பூசிக்கொள்கிறது?

தி.ஜா வைப்பற்றி நிறையப் பேசியாகிவிட்டது. பேச இன்றும் செய்திகள் இருக்கின்றன. மண்மொழி உரையாடல் என்கிறீர்கள். பழக்கமான வாசனையைத்தானே நுகர முடியும். தன் நிலக்காட்சிகளை அப்படியே சொல்கிறார் என்பது தான் அவரது மேதமை. நகாசு பூசிச்சொன்னால் சிறப்பாக இருக்காது. செயற்கைத் தன்மை வந்துவிடும். தமிழ் நிலத்தில் எல்லா இடங்களிலும் தி.ஜா.சொல்லும் விவகாரங்கள் இருக்கவே செய்கின்றன. அங்கிருக்கும் எழுத்தாளர்கள் அவரவர் மொழியிலேயே தான் சொல்ல முடியும். தி.ஜாவின் மொழி உக்கிரம் அல்லது நளினம் அல்லது செய்நோத்;தியில்தான். பிராமணத் தமிழ் என்பது அடிப்பட்டுப்போகிறது. வாசகன் தனக்கான மொழியிலேயே வாசிக்கிறான்.

தி.ஜானகிராமனின் வெற்றிச் சூத்திரம் இதுதான் நாம் தினமும் காணும் சம்பவங்கள் தாமே. நமக்குத் தோன்றாத விஷயங்களை தி.ஜா. எப்படி எடுத்துக் கையாள்கிறார் என்ற பிரமிப்பு தருகிறது. தி.ஜா. எதையும் பூடகமாகச் சொல்லவில்லை. அப்பட்டமாகவே பேசிகிறார். இசை ஒரு சுருதி மாதிரி ஊடே வருவது தான் அழகு. தி.ஜா வை விரும்பும் பலர் இவர்கள் மரபானவர்கள். ஆசாரசீலர்கள். தி.ஜா-வை விடமுடியாதவர்கள். தி.ஜா. மேல் வேறுவித பிம்பத்தை உருவாக்குகிறார்கள். தி.ஜா நம்ம ஆள் என்பதை நிலைநாட்ட இது நடைபெறுகிறது என்பது பிழையானதல்ல. நடக்கிற விஷயம் தானே என்பதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தம் ஆச்சாரத்தையும் விட முடியவில்லை. தி.ஜானகிராமனையும் விடமுடியவில்லை.

தெரிந்ததையே திரும்பத் திரும்ப கண்டுக்கொள்வதில் மனித மனம் எல்லையற்ற திருப்திக் காண்கிறது. சிந்தனைகளிலும், வார்த்தைகளிலும் பழக்கப்பட்டது தான் திருப்தி அளிக்கிறது என்பது தான் உண்மை. ஒரு கேள்வி பதில்; அலங்காரத்தம்மான மிகை? இல்லை. தஞ்சாவூர் மேலவீதிக்கு  வா. நான் அலங்காரத்தை இப்போது காண்பிக்கிறேன். ‘தி.ஜாவின் காமம் என்பது அன்புதான்’. இதைப்புரிந்துக் கொள்ளவிட்டால் விதிவழியாக  வந்த மரபுகள். தகர்க்கப்படுகிறது என்ற வைதீக மனம் வந்துவிடும். இது இயற்கையானதுதான். அநேகமாக, ஒவ்வொரு தஞ்சாவூர் குடும்பங்களிலும் இப்படித்தான். Xerox காபி மாதிரி. ஒரு அக்ரஹாரம் என்பது மேற்கே பெருமாள் கோயில், கிழக்கே சிவன் கோயில் மேலக்குளம் கீழக்குளம், பெரி’யாம், ரெண்டரை பங்கு வீடு, பரமாச்சரியார், நிலம், ஆறு என்று தான் இருக்கும். வீடுகள் கூட அன்று ஒரே அமைப்புதான். திண்ணை, ரேழி, முற்றம் ஊஞ்சல் உக்ராண அறை, பூஜை அறை, கொல்லை, கிணறு, சீட்டாட்டம், அவதூறு, கோர்ட் வியாஜ்யம் எல்லாம் ஒரே மாதிரி தான். வாழ்வியல் முறையும் ஒரே மாதிரிதான். பாலியல் மீறல்கள் பொதுவானவைதாம். எல்லா விஷயங்களும் கோயில்களோடு இணைக்கப்பட்டிருந்தன. உழைப்பை நம்பாத பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலங்கள் கொடையாகப் பெற்று சுகவாசிகளாகவே இருக்கும் போது ஒவ்வொன்றையும் உற்றுநோக்கும் தன்மையிருந்தது. உழைக்கும் சமூகத்திற்கு நேரமில்லை. நளினக்கலைகள் அவர்களுக்கு இல்லை. தி.ஜாவும் ஒரு மிராசுதார் தான். அத்வைதி தான். உன்மனதில் படிந்திருக்கும் இவைகளைப் புறந்தள்ளிதான் அவரது எழுத்து மேலே வந்தது. வைதிகம் அவரை எப்படி நடத்தியது என்பதை அவரே சொல்வார்.

  1. தமிழ்ச்சிறுகதை போக்கில் தி.ஜா அதிகமாக கதை உருவங்களை நடமாடவிடுவார். குறிப்பாக, பெண்கள் பல பருவங்களிலும் (குழந்தமை முதல் முதுமை வரை) வந்து போவார்கள். இது ஒரு வகை பெண் நிலைப்பாட்டிற்கான எழுத்து எனக் கொள்ளலாமா?

“சிலிர்ப்பு” கதையிலும், ‘பாயசம்’ கதையிலும் இதற்கு விடை கிடைக்கும் என்று கருதுகிறேன்.

  1. தஞ்சைக் களப்படைப்பாளர்கள் நூற்றாண்டின் நுழைவு வாயிலில் நிற்கின்றனர். நவீனத் தீவிர இலக்கியவெளி என்ற புள்ளியில் இந்த எழுத்தின் போக்குகள் எதும் மாற்றத்தைத் தந்திருக்கிறதா?

தஞ்சாவூர் தவிர பிற பிரதேசங்களிலும் நிலைமை இதுதான். தீவிர இலக்கியவெளி என்பது புரியவில்லை. மகாபாரதம், இராமாயணம் முதலானவற்றிலும் தீவிர இலக்கியவெளி என்று நீங்கள் புரிந்து கொண்டது இருக்கவே செய்கிறது. மாற்றம் தவிர்க்கவே முடியாது. தஞ்சை மண்தான் தமிழ் இலக்கியத்திற்குத் தலைமைத் தாங்கியது என்பதெல்லாம் இன்று இல்லை. எனவே, தீவிர இலக்கியம், அதிதீவிர இயக்கம், மென்மையான இயக்கம் என்பதைக் கலந்து கட்டியானது எனலாம். கரிசல்காட்டு மனிதர் பணி நிமித்தமோ, மணவினை நிமித்தமோ வணிகம் நிமித்தமோ, தஞ்சாவூரில் நிலை கொள்ளும்போது தஞ்சாவூர் மண்காரர் தான். இதேபோலத் தான் கரிசல் காட்டுக்குப்போன தஞ்சாவூர் எழுத்தாளரும்.

  1. அப்படியென்றால் என்ன கருத்து வாதத்தை தஞ்சைக்களம் முன் வைக்கிறது? நீங்கள் எப்படி அதைப் பார்க்கிறீர்கள்?

கருத்து என்பது வாழ்க்கை தான். இலக்கியம் மொழியைக் கொண்டு ஆனது. மகிழ்ச்சி, எக்களிப்பு, வெறுப்பு, கோபம் ஆங்காரம் ஆக வேடிக்கை விளையாட்டு கிண்டல் கேலி என்று எத்தனையோ பாவனைகளை வெளியிட மனிதன் ஆரம்ப முதல் சொற்களைப் பயன்படுத்தி இயங்கி ஏற்றுக்கொண்ட வார்த்தைத் தருகின்றன. என்பது மனிதன் செய்து கொண்ட அற்புதமான சிருஷ்டி. வெறும் கருத்தை முன் வைத்தால் அறநூலாகிவிடும். உலக இலக்கியந்தான் பொது மரபு. உண்மையும் அழகும் தான் க.நா.சுவின் கருத்தும் இதுவே. நான் க.நாசு வின் ஸ்கூல். உங்களின் கேள்விக்கு இந்த என் பதில் பொருத்திப் போகிறதா என்பது தெரியவில்லை. என்றாலும், ஹையர் செகண்டரி கேள்வி பதில் மாதிரி ஒரு நேர்காணல் இருக்கக்கூடாது. கேள்வி தாண்டியும் வரும் சில பதில்களை ஏற்க வேண்டும்.

  1. ஏனென்றால், தஞ்சைப் படைப்பாளர்கள் அப்பகுதியில் வாழ்வியலை, சமூக நோக்கோடு பார்க்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதை மறுக்கிறீர்களா?
நா.விச்வநாதன் நூல்கள்

தஞ்சைப் படைப்பாளிகளிடம் சமூக நோக்கு இல்லை என்று தான் இந்தக் கேள்வியின் தொனியைப் புரிந்துக் கொள்கிறேன். மேலை நாடுகளில் எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தின் தாக்கம் பெரிது. ஆல்பர்ட் காம்யூவுக்கும் ழான் பால் சார்த்தர்க்கும் பிரான்ஸ் அதிபர் டீகால் பயந்தார் என்ற செய்தி உண்டு. இங்கு நிலைமை வேறு. எழுத்தாளன் கடைசி சமூகத்தில் இருப்பவன். குரலும் மெல்லியது. அன்று, பிராமணர்களே பெரும்பாலும் எழுதினார்கள். கதைகளில் கிடைப்பது பிராமண வாழ்வின் மகிழ்ச்சி, சோகம், மீறல்கள் பிழையன்று. இது அனைத்து சமூகத்திற்கும் பொதுவானது. வெண்மணி போன்ற பெருஞ்சோகநிகழ்வைத் தட்டையாக சிலர் எழுதினார்கள். அவை கட்டுரைகள் செய்தித்தாள்களின் செய்திகள். குடும்பஉறவுகளைப் பற்றி எழுதும் போது அதில் சமூகம் வந்துவிடுகறிது. சமூகம் என்று தனியாக இல்லை. 1944-களில் நடை எப்படி இருந்தது என்ற வரலாற்றையும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

  1. படைப்புக்கும், பிறந்த மண்ணுக்குமான உறவை இந்த புழங்குவெளியில் எப்படி அணுகமுடியும்?

பிறந்த மண் என்பது எப்போதுமே நேசத்திற்குரியதாகிறது. நிலம் குடும்பத்தின் அங்கம். உறுப்பினர் ஆண்டுதோறும் நஷ்டத்தையே தந்தாலும் அதன் பாலான நேசம், உறம், நெருக்கம் குறைவில்லை. நிலத்தை வணங்குதல் மரபு. பூமி பூஜை நல்லேர் கட்டுதல் முதல் பூமா தேவி என்று நிலத்திற்கு ஒரு தெய்வீகத்தன்மை கூட உண்டு. நிலம் அது தரும் பயன்கள் வேண்டாம் என்னும் போது வேறு உத்யோகக்காரர்கள் எதிர்வினை ஆற்றவில்லை. மீத்தேன் எரிவாயுத்திட்டம் பகாசுர கம்பெனிகளின் நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் பொதுவான விவசாயி மூர்க்கமாக எதிர்த்தது இதனால்தான். குடும்ப உறவைப் பிரிதல் என்பது சோகமானது.

  1. பல ஆண்டுகளாக தஞ்சைக்கள எழுத்தாளர்களோடு பயணித்திருக்கிறீர்கள். புரிதலான அந்த மனநிலை கொண்டாட்டத்தைத் தந்திருக்கிறதா? தட்டுப்படாத விஷயங்களை நிகழ்த்தியிருக்கிறதா? இலக்கியத்துக்கான பங்களிப்பாக மாறியிருக்கிறதா? உங்களின் அனுபவத்தின் வழி விளக்குங்கள்…..

நிறைய இன்று நான் சுமாரான எழுதுவதற்குக் கூட இவை காரணம். இளமையில் பெரிய எழுத்தாளுமைகளோடு நான் அலைந்திருக்கிறேன். ஒவ்வொரு அலைச்சலும் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. வன்மையற்ற என் பேனாவால் அப்படியே கலையாக மாற்ற முடியவில்லை என்பதுதான். தட்டுபடாத  விஷயங்கள் சிலவற்றை என் கட்டுரைத்தொகுப்பில் (புனைவுவெளி)  சிறிது காட்டியிருக்கிறேன்.

  1. நகுலன் அன்றைய காலக்கட்டத்தில் விசித்திரமானவராகப் பார்க்கப்பட்டார் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

நகுலனிடம் ஒரு செயற்கைத்தன்மை இருந்தது. அவரது எழுத்து எனக்குப் பிடித்தாலும் செயற்கைத்தன்மையை இனம் காணமுடிகிறது. மனப் பிறழ்வானவராக வாழ்வதை விரும்பினார். உலகம் வெறுக்கத்தக்கது என்ற கோட்பாடு இருந்தது. ஆயிரம் குறைகள் இருந்தாலும் உலகம் நேசிக்கத்தக்கது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இந்த மனோபாவம் வலிந்து செய்யப்பட்டது. ஒரு கும்பகோணத்துக்காரரால் அவ்வாறு இருக்க முடியுமா? வாழ்வில் நிச்சயம் புதிர்கள் இல்லை. அவநம்பிக்கைக் கொண்டவனுக்கு தான் எவ்வளவு மகிழ்ச்சியை இழந்துவிட்டோம் என்பது தெரியாது. நம்பிக்கையுள்ளவனுக்கு அது தெரியும். மௌனி கூட நகுலன் டைப் தான். பிறர், தன்னை விபரீதமாகப் பார்ப்பதில் ஈடுபாடு.

  1. மௌனம், மனப்பிறழ்வு, மொழிக்குப் பிடிதராத வாழ்வின் புதிர்ப்பாடுகள் – இதனைக் கலைத்துப்போட்டு தான் பெரும்பாலும் நகுலன் படைத்திருப்பதைப் படைப்பு வெளி எப்படி நோக்குகிறது?

மௌனம், மனப்பிறழ்வு, புதிர்கள் இருக்கலாம். அவை வாழ்வை சோகமயமாக்குவதில்லை. நகுலனால் நேராகப் பார்க்க முடியாத பலவீனம் இருந்தது. காலையில் எழுந்தவுடன் கொல்லைப்பூ புதிதாக மலர்ந்திருப்பதைப் பார்க்கும் போது ஏற்படும் பரவசம் துல்லியமானது. அன்றைய பரவசத்திற்கு இது கூட போதும். “இருப்பதற்காகத்தான் வந்தோம். இல்லாமலே போகிறோம்” என்ற நகுலனின் மொழியை அவதானியுங்கள்.

  1. சில நேரங்களில் இப்படைப்புகள் வாசிப்பவருக்குப் புரிபடா மாயை தான் வசப்படா நிலை தான். இன்றும் சொல்லப்போனால் மனதின் ‘அசல்’ என்பது சட்டகங்களுக்குட்பட்டு கோடுகள் நிறைந்தது. இதில் கிழிசலும், நல்லதும் உண்டு. இதை ஏன் பின்னப்பட்ட வலைக்குள் அடைக்க வேண்டும்?

எழுத்தாளனின் பொறுப்பு மாதிரி வாசகனுக்கும் பொறுப்பு இருக்கிறது. மெனக்கிடல் இருக்கிறது. புரிந்து வாசிப்பது படைப்பாளியைக் கௌரவப்படுத்துவது தான். இங்கே, ஒவ்வொரு வாசகனும் விமரிசகனாகிவிடுகிறான். இந்த அபாயத்தால் இது நேர்கிறது.

  1. அந்தக் காலத்தில் அரசின் சட்டத்திட்டங்களில் சம்பந்தமில்லாததை வெளிப்படையாக உணர்த்தியவர் கரிச்சான் குஞ்சு. இதைப்பற்றி உங்களிடம் எதும் உரையாடியிருக்கிறாரா?

கரிச்சான் குஞ்சுவின் உரையாடல் அலைச்சல் சார்ந்தது. நல்ல ஞானி. ஏதோ, தரையில் கால் பதித்து நடக்கக் கற்றுக் கொள்ளாமல் இருந்துவிட்டார். ஆன்மீகம், புரட்சி போன்றவற்றைக் கலவையாகப் புரிந்து கொண்டார். வேதகாலம், பொற்காலம் என்ற கருத்து இருந்தது. அவ்வப்போது மீண்டுவருவார். இந்த உலகத்தின் அற்பமான சட்டத்திட்டங்களுக்கு நான் உட்படாதவன் என்ற கருத்து இருந்தது. அரசு பாடத்திட்டம் அவருக்கு உவப்பாக இல்லை. அதனால் தான், பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் பாடம் நடத்தாமல் வேறு பேசி பழியேற்றுக் கொண்டார். பள்ளி நிர்வாகத்தோடு சண்டை. பிரெஞ்சுநிறுவனம் பாண்டிச்சேரியில் வேலைகிடைத்தும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

  1. “மனதைப்படித்தவர்” எனக் கரிச்சான் குஞ்சுவை அடையாளப்படுத்தலாம். வாழ்வின் தத்துவ விசாரணையும், விமர்சனமும் இவரது எழுத்தில் போலித்தனமில்லாமல் விரவிக்கிடக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தை எப்படிப் பார்க்கலாம்?

கரிச்சான் குஞ்சுவின் ஞானம் அவருக்கு எதிராகச் செயல்பட்டது. “அதீத ஞானம் அலைச்சலைத் தரும்” கரிச்சான் குஞ்சு முழுமையடையாமல் போனதற்கு இது காரணம். எல்லா விஷயங்களையும் இந்த உலகில் தான் தேடவேண்டியுள்ளது. எவர்கள் ஸம்பூதியை காரிய பிரம்மத்தை உபாஸிக்கிறார்களோ அவர்கள் இன்னும் காரிருளில் பிரவேசிக்கிறார்கள்.

  1. ஜெயகாந்தனால் ‘சிம்மம்’ என அழைக்கப்பட்டவர் கரிச்சான் குஞ்சு. இங்குப் படைப்பாளர்கள் உண்மையாகவே அடையாளப்படுத்தப்படுகின்றனரா? இதைப்பற்றி உங்கள் கருத்து?

ஜெயகாந்தனால் சிம்மம் என்று அழைக்கப்பட்டார். அவரது வீட்டில் கரிச்சான் குஞ்சுவிற்கென்றே தனி நாற்காலி உண்டு. கரிச்சான் குஞ்சுவைப் பற்றிக் கணிசமான தொடர், இலக்கிய உரையாடல்கள் இல்லாமல் போனது. அவரை சுட்டிக் காட்ட அவரது ‘பசித்த மானிடம்’ ஒன்றே போதுமானது. சிலருக்கு இது நேர்வதுண்டு.

  1. கவிஞர், கட்டுரையாளர், பதிப்பாளர், எழுத்தாளர் பல மொழி அறிந்தவர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்னோக்குப் பார்வைக் கொண்டவரோடு வெகுதூரம் உறவாடிய தஞ்சை ப்ரகாஷ்-னுடைய அகத்தின் அசலை கொஞ்சம் சொல்லுங்களேன்….

எங்களுக்கெல்லாம் ஆசான் தஞ்சை ப்ரகாஷ். அவர் வித்யாசமானவர். அவரைப் பாராட்டுவதை விட பூஜித்துப் பக்தி செய்கிறோம் என்ற குற்றச்சாட்டு எங்கள் மேல் உண்டும. ஏற்கவே வேண்டும். புதிதாகச் சிந்திப்பது தேசத்துரோகம் போல் பார்க்கப்படும் போது ப்ரகாஷ்  பேச்சு, எழுத்து, எல்லாமே வேறுவிதமாகப் பார்க்கப்பட்டது. யுத்தம் புரிந்தார். சாந்திக்காக, உண்மைக்காக யுத்தம் புரிவதை அவர் நேர்த்தியாகச் செய்தார். அதனால், சேதமடைந்தவர்கள் ஏதேதோ கூறினார்கள். அவர் எதையும் பொருட்படுத்தியதே இல்லை. அவர் அகத்தை எட்டிப் பார்த்தார். நிறையவே கிடைத்தது. தான் பெற்றதையெல்லாம் பிறருக்கு உடனே வழங்கிவிடும் வள்ளல் தன்மை இருந்தது. பரந்த வாசிப்பு, கேள்விகளின்றி பல ஏராளமான பதில்கள் அவரிடமிருந்தன. அவர் யாராகவும் இல்லை. TRUTH LIBERATES. கிருத்துவ ஞானமும், இந்து தத்துவ விசாரமும், இஸ்லாமிய ஒழுங்கும் அவரிடம் நிறைய இருந்தது. அறிவுக்கு அப்பாற்பட்டது உண்டு என்று நம்பினார். ஒரு அமானுஷ்ய உலகத்தைச் சிருஷ்டித்தார். அவரது எழுத்து துணிச்சலானது. இலக்கிய விவாதத்தில் ஆதரவு, அனுதாபம், விரோதம், பாராட்டு என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் கிடையாது. இலக்கிய விசாரம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

  1. தஞ்சைப்ரகாஷ் ஒர் தீவிரமான இலக்கிய இயக்கத்தின் வழியில் தன் பிரதான பங்கை அளித்தவர். அந்தச் செயல்பாடுகள் இன்றும் தஞ்சையில் தொடர்கின்றதா?

இல்லை.  யாரும் ஒரு பார்வையில் இல்லை. கோஷ்டிகள் தான் அதிகம். கரிசல் இலக்கியத்துக்கென ஒரு அடையாளம் இருந்தது. தஞ்சை மண்ணுக்கு இல்லை. போட்டி அதிகம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை கிடையாது. கூட்டமும் பொதுவானதாக இல்லை. விமர்சனங்கறது தஞ்சையில் ஏற்றுக் கொள்ளப்படாதது. புகழ்தல் மட்டும் தான் தேவைன்னு ஒரு சூழல் உருவாகிவிட்டது. இலக்கியங்கறது கருத்து, வேறுபாடுகள் நிறைந்தது. அதை நாம் படைப்புக்குள்ள வைத்துப் பார்க்கும் போது நிறை, குறைகள் என இருக்கும். அதை, இங்க ஏற்க மாட்டாங்க.

தஞ்சை ப்ரகாஷ் தீவிர இலக்கியவாதி இல்லை. கொஞ்சம் பழமை பார்த்தார். அதனுள், சமகாலத்தைப் புகுத்திப்பார்த்தார். அதனைப் பேசவும் செய்தார் கூட்டங்களில் அதெல்லாம், இலக்கியம் தாண்டிய மனசுல நிற்க கூடிய உரையாடல். அதனாலயே அவரை ஏற்றுக் கொண்டவர்கள் அதிகம்.

பொதுவாக, பழமை, புதுமையெல்லாம் தாண்டி இப்ப நவீனம் ங்கறாங்க. என்னைப் பொறுத்தவரை எது நிற்கிறதோ அது தான் நவீனம்.

அதைப் பார்க்கக் கூடிய மனோபாவம் இங்க இல்லை.

  1. எங்கள் தஞ்சாவூர் மண்ணில் அன்னியப்பட்டுப்போன பலதரப்பட்ட ஜனங்களின் வாழ்வின் போக்கை இந்த நாவலில் (கள்ளம்) சொல்லி இருக்கிறேன்” எனத் தஞ்சைப்ரகாஷ் சொல்லியிருப்பதின் அணுகுமுறையை விவரிக்க முடியுமா?

“கள்ளம்” நாவலில் அந்நியப்பட்டவைகளை சொல்லி இருந்தார். ‘கள்ளம்’ என்பது மனிதனின் கள்ளம் தான். அவர் இருக்கும் போது யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் கா.நா.சு, தி.ஜா, மௌனி, எம்.வி.வி, சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, எனப் பலரும் அவரைப்பார்த்து வந்து கொண்டிருந்தார்கள். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு வரும் அனைத்து தமிழ் அறிஞர்களும் பிரகாஷ் சந்திக்காமல் சென்றதில்லை. இவரும் ஒரு பயணியாகத்தான் இருந்தார். அவர் மறைந்த பிறகு அவருக்கு அபாரமான மார்கெட் வந்தது. மீனின் சிறகுகள், கள்ளம், கரமுண்டார் வூடு, மிஷன் தெரு, நூல்கள் பிய்த்துக்கொண்டு போகின்றன வியாபார மதிப்பு. இது ஏன் எனப்புரியவில்லை.

  1. மணிக்கொடித் தொடங்கி வைத்த எழுத்தாளர்களுள் கு.ப.ரா. வின் எழுத்து தனித்திருந்தது. அவரை ‘அகமனவியலாளன்’ என்றே சொல்லலாம். அப்படித் துழாவிச் செல்வார். கதைகளை முடிக்கும் போது ஒரு புள்ளி கதையைத் தொடங்கி வைக்கும். இதைப் பற்றி உங்களின் மனதின் எண்ணம் என்ன?

கு.ப.ரா. வின் எழுத்து கச்சிதமாக இருந்தது. எழுத்துக்கலையை புரிந்து கொண்டவர். அகமனவியலாளன் என்பது சரி. அவருடைய ‘ஆற்றாமை’, ‘விடியுமா’ போன்றவை உலகத்தரத்தவை. அப்படி எல்லாம் திடீர் திருப்பம் கொடுப்பவர் இல்லை.  கவிதை நடைக்கும் சற்று அடங்கிய நடை. ‘சிறிது வெளிச்சம்’ கதை கு.ப.ரா. வின் அடையாளம். கு.ப.ரா. புதிரை விடுவிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். மொழி அவருக்கு கைகொடுத்தது. இத்தனைக்கும் கு.ப.ரா. மற்றும் அவரின் சமகாலத்தில் எழுதியவர்கள் ஆங்கிலம் கற்றவர்கள். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்தது தமிழ். வங்க இலக்கியங்களில் தனி ஈடுபாடு. அரவிந்தர் உபயம். அநேகமாக தங்களின் ஆதாரமாக  சரத்பாபுவையும், பங்கிம் சந்திர சட்டர்ஜியையும் எடுத்துக் கொண்டார்கள். ‘துர்க்கேசநந்தினி’-யை மூலத்தில் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே வங்காளி கற்றார் கு.ப.ரா. இதில் ஆங்கிலம் பக்கம் சார்ந்தவர் க.நா.சு. மட்டுமே. பொதுவாக, காந்தியத் தாக்கம் எல்லோரிடமும் இருந்தது. சில சுதந்திரப்போராட்டத்தில் கைதாகி சிறை சென்றவரும் உளர். கு.ப.ரா. அரசு ஊழியராக இருந்தார். மற்றும் பிரச்சார நெடி சிறிதும் இன்றி எழுத விரும்பினார். இது பிழையன்று. சி.சு. செல்லப்பா, பி.எஸ்.ராமையா அரசியலில் ஈடுபட்டார்கள்.

  1. 1930 லிருந்து 1950 வரையான இருபதாண்டுக் காலத்தில் நடைபெற்ற சுதந்திரப்போராட்டம், ஆங்கில அரசின் அடக்குமுறைகள், அத்துமீறல்கள், சமூக நீதிக்கானப் போராட்டக்களங்கள் போன்ற எவற்றையும் கு.ப.ரா, க.நா.சு போன்றோர் தம் படைப்புகளில் கொண்டு வர விரும்பவில்லை. அவர்களுக்கென்று இலக்கிய உலகைப் படைத்து வாழ்ந்தார்கள் என்று சொல்லப்படுவதைப் பற்றி உங்களின் பார்வை?

சுதந்திரப் போராட்டத்தில் சி.சு.செல்லப்பா ‘ சுதந்திர தாகம்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார்.

மற்றவர்கள் மனரீதியாக இல்லை. அதைத் தவிர எழுத்தாளன் எல்லோரும் கலந்துக் கொள்ளணும் என்ற விதி இல்லை. சிலர் ஈடுபட்டார்கள். கு.ப.ரா. அரசு ஊழியராக இருந்ததால் முடியவில்லை. அதையும் தாண்டி பலருக்கு இலக்கியமே வாழ்க்கை. அதற்கு அர்ப்பணித்துக் கொண்டார்கள். பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டார்கள். யாரிடமும் கேக்க வாய்ப்பில்லை. க.நா.சு. எழுதுவது மட்டுமே கொண்டார்.  இப்ப உள்ள ஜெயில் போராட்டம் போல அந்நாள்களில் கிடையாது. சிறையில் அடைத்தால் பல வருஷங்கள் கிடக்க வேண்டியது தான். வன்முறை அதிகம். இதை உணர்ந்த கு.ப.ராவும், தி.ஜா.வும் எழுத்தில் சமூக மாற்றத்திற்கான வழிவகையைப் புகுத்த ஆரம்பித்தனர். அதனை, மக்களுக்கான உழைப்பாக அவர்கள் நினைத்தார்கள்.

  1. கும்பகோணத்தில் பக்கத்து பக்கத்து வீடுகளில் கு.ப.ராவும், ந.பிச்சமூர்த்தியும் சிறுவயதில் ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவருக்கும் தாய்மொழி தெலுங்கு. ஆனால், தமிழ் தான் பேச்சுமொழி. எழுத்துமொழி. இந்த இடத்தில் படைப்பாளர்களுக்கு மொழி தன்னை எவ்வாறு மாற்று உரு செய்துக்கொள்கிறது என்பதை விளக்க முடியுமா?

அநேகமாக, அன்று தமிழில் மறுமலர்ச்சி எழுத்தை முன்னெடுத்தவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர்களே. அ.வெ.ர ரெட்டியார். கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, சாலிவாகனன், சிட்டி வீட்டில் புழங்குமொழி தெலுங்கு தான். ந.பிச்சமூர்த்தி வீட்டில் தெலுங்கில் தான் பேசுவார். கு.ப.ரா. தமக்கையோடுத் தெலுங்கில் தான் உரையாடுவார்கள். ஆனால், இருந்தது தமிழ்க்களம் இவர்களின் தெலுங்கை ஆந்திரா ஏற்காது. கொச்சைத்தெலுங்கு. ஸ்ரீ தியாகராஜர் கீர்தனைகள் சுத்தமான தெலுங்கு அல்ல. தெலுங்கு தெலுங்கர்கள் ஆதிக்கம் அன்றிலிருந்தே இருந்தது. அரசியலில் இன்றும் சரிபாதி தான். இது வெறுப்பு அல்ல. வரலாறு.

  1. க.நா.சு வின் சிறுகதைகள் ‘குடும்பம்’ என்ற நிறுவனம் சார்ந்து மட்டுமுள்ளது. அதை அடித்தளமாகவே கருதி தன்னளவிற்கான பிரச்சாரமாக்கி மேற்கொண்டார் என்பது பற்றி…..

க.நா.சு பிரசங்கி அல்ல. நல்ல இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றுதான் விரும்பினார். ஒரு பத்து பேரை எழுத வைக்கவும், ஆயிரம் பேரை வாசிக்க வைக்கவும் தான் என் முயற்சி என்பார். அது நடந்தது. க.நா.சு இன்றேல் பல மேலை நாட்டு நூலின் இலக்கியம் அறிமுகமே ஆகியிருக்காது. ‘உலக இலக்கியம்’ என்ற வாசகம் க.நா.சு தான் கொண்டு வந்தது. தமிழ் தமிழ் என்று பாராட்டி சுயநலத்திற்காக பெருமை பேசுகிறவர்கள் உலக இலக்கியத்தில் தமிழ்தான் என்ற ஸ்தானத்தை ஏற்பதற்கு ஒன்றும் செய்யாதவர்கள்,  செய்ய இயலாதவர்கள் என்பார். பாரதியார் காலத்துக்கு என்று நாம் அதிகமாக முன்னேறிவிடவில்லை. வழிகாட்ட ஒளி இல்லாததால் பின்வாங்கி இருக்கிறோம் என்றார். க.நா.சு வின் சிறுகதைகள் ‘குடும்பம்’ என்ற நிறுவனம் சார்ந்தது தான். அதில்தான் சொல்ல முயன்றார். தனக்கான பிரச்சாரமாக மாற்றிக் கொண்டார் என்பது பிழை. இதை பயிற்சிக்களமாகவே மேற்கொண்டார்.

நட் ஹாம்சன், செலிமா லாகர் லெவலின் மதகுரு, ஸர்லாகர் குவிஸ்டின், பாரபாஸ், ஹெர்மென், மெல்;விலின், திமிங்கல வேட்டை, தாமஸ்மன் மாறிய தலைகள் என்ற பட்டியலை பார்த்தால் புரியும். ஆந்த்ரே ழீடு, டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கி, ஃபாக்னர், பால்சாக் முதலான பெயர்களையும் க.நா.சு. வியந்து சொல்வார். நல்ல இலக்கியம் தமிழில் வர வேண்டும் துல்லியமான மொழிபெயர்ப்புகள் என்பதில், கருத்து வேறுபாடு உண்டு. படைப்பின் ஜீவனை சுதந்திரமான மொழிபெயர்ப்பில் வசப்படுத்துவதிலேயே இருந்தார். க.நா.சு விடம் சிலர் விசித்திரமானக் கருத்துகள் இருந்தன. இப்போது அவையே நிஜமாயின.

  1. ஒரு படைப்பாளனை மற்றொரு படைப்பாளனால் தான் உணரமுடியும். அது போல க.நா.சு உணர்ந்து கூறியதாக எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

குறிப்பிடுகிறேனே .. ”  எந்த இலக்கியாசிரியரையுமே அவருடைய லேடஸ்ட் நூலை, சிறுகதையில் வைத்து தான் மதிப்பீடு செய்யவேண்டுமென்பதில்லை. அவருடைய சிறந்ததை வைத்து தான் சொல்லவேண்டும். அந்தச் சிறந்தது சமீபத்தியதானாலும் சரி தான்- இருபதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதானாலும் சரி தான் “இது க.நா.சு சொன்னது தான்.

  1. தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி மூன்று பேரும் பல ஒற்றுமைகளை உடைய, ஒரு மையத்திலிருந்து உருவாகிய காவிரியின் மைந்தர்கள் என்று பிரபஞ்சன் கூறியது பற்றி உங்கள் புரிதல்….

பிரபஞ்சன் சொன்னது சரிதான். தஞ்சையில் வசிச்ச காலம் சொற்பமே. தஞ்சை ப்ரகாஷ் இயக்கம் காரணமாக அவரது தஞ்சை வருகை நிறைய இருந்தது.

  1. தஞ்சை வட்டாரக் கதை மொழியைத் தீவிரமாகத் தன் இருப்பாக முன் வைத்த சி.எம்.முத்து குறித்து சொல்லுங்கள்….

சி.எம். முத்துவின் எழுத்து தஞ்சை வட்டார குறிப்பிட்ட சமூகத்தின் வட்டார வழக்கு. தி.ஜாவின் பிராமண மொழி வழக்கு மாதிரி கள்ளர் சமூக வழக்கு என்றால் தான் சரியாக இருக்கும். அவரது பள்ளிவாசிப்பு சொற்பம். இதுவே, இவருக்குக் கூடுதல் பலம். அசல்தன்மை சொலவடைகள், சடங்குகள், திருவிழாக்கள், சாவு நிகழ்ச்சிகள் முதலானவை அதே பிரிவினரின் வேறொரு இடத்தில் சரிபட்டு வருவதில்லை. வித்தியாசமாக இருக்கும். அந்தச் சமூகத்தின் ஏற்றதாழ்வுகள் குறித்து புதியச் செய்திகளைத் தருகிறார். கட்டுரைத் தன்மை வாய்ந்தது என்பார். அவர் விஸ்தாரமாக எழுதும் போது அப்படிதான் தோற்றம் அளிக்கும். ஐயாயிரம் பக்கத்தில் இப்போது நாவல் எழுதுவதாக சொல்வது திடுக்கிடவைக்கும். முத்துவிடம் சரக்கு இருக்கிறது.

  1. நடப்பியலில் தஞ்சை சார்ந்துள்ள படைப்பாளர்களின் படைப்புகளைச் சக எழுத்தாளன் என்ற முறையில் கவனிப்பீர்களா? விமர்சனப்படுத்துவது உண்டா?

வாசிக்கறதும் உண்டு. விமர்சனமும் உண்டு.

  1. மருத நிலத்தில் அடையாளம் கொண்டுள்ள நீங்கள் இசையை எப்படி உணர்கிறீர்கள்?

இசை உடன் பிறந்தது. இசையாளனாக சூழல் அவசியமாகப்படவில்லை. படிப்பும் பாடாந்தரமும் இல்லாத கிராமத்துப் பெண்களின் நடவுப்பாட்டு, குலவை, சடங்குப் பாட்டுகளை நுட்பமாகக் கேட்டால் இசை இலக்கணம் வகுத்த வேங்கடமகியின் கனகாங்கி, தோடி, சக்ரவாகம், ரீதிகௌளை முதலான ராகங்களின் சாயல் அழகாய்த் தென்படும். தி.ஜா பாத்திரங்கள் இசையை உண்பது போல, உறங்குவதுபோல, அன்றாட நிகழ்வோடே இயந்து பாவிக்கிறார்கள். தி.ஜாவிடம் எனக்கும் இசை தெரியும் என்ற தூக்கல் பிரகடனம் ஏதுமில்லை‌. சமையலறையில் களைப்பறியாமலிருக்க கள்ளக்குரலில் பெண்கள் தன்னிச்சையாக இசைப்பது போலத்தான். தி.ஜா இசைபற்றித் தன் எழுத்தில் சொல்லியதை விட வாசகன் புரிந்துகொண்டது அளப்பறியது. “சுருதியும் குரலும் ஜீவன் பரம்பொருளோடு ஐக்கியமாவது போல ஆகவேண்டும்’ என்பார் ஜானகிராமன். அவரது இசை எழுத்து இதுதான். இதுவே போதுமானது. மற்ற எழுத்தாளர்களின் வரிகளையும் இப்படித்தான் அவதானிக்க வேண்டும்.

  1. பொதுவாக, நிலம் இல்லாமல் எதுவுமில்லை. குறிப்பாக, மருதநிலம் மக்களின் வாழ்வியலோடு இறுக முடிச்சிட்டு நிற்கின்றது. இந்த முடிச்சை இம்மண் சார்ந்த படைப்பாளர்கள் மொழிக்கான அங்கீகாரமாக பார்த்திருக்கின்றரா? முன்னோடிகளிலிருந்து தொடங்குங்கள்…

நிலம் அதன் உடமையாளர்கள் வேறு. உழைப்பவர்கள் வேறு. இதில் எவருடைய வாழ்வியலைப் பதிவு செய்வது? முதாலாளித்துவம், உழைக்கும் வர்க்கம் என்ற பேதம் வந்துவிடும். 1960 க்கு பிறகான தஞ்சாவூர் விவகாரங்கள் வேறு.

  1. இன்றைய தமிழ்ச் சூழலை வழிநடத்திச் செல்லக் கூடிய, முன்னெடுக்கக் கூடியதொரு இயக்கம் சார்ந்த அமைப்புகள் எந்த வகையில் தம் பங்களிப்பை மொழிக்கு அர்ப்பணிக்கின்றன என்று விளக்க முடியுமா?

அரசியல் சமூகம் மத சம்பந்தமான விஷயங்கள் சார்ந்த இயக்கங்கள் தோன்றி சில நேரம் நல்லபடியாகவும், பல நேரம் வசித்திரமாகவும் பயன் தரும். இது அவரவர் அரசியல், மதம் சார்ந்த விஷயங்களுக்குப் பாதுகாப்பானதாக இலக்கியத்தை மாற்றி விடுகிற ஆபத்து உண்டு. தற்காலச் சூழல் அப்படியாகிவிட்டது. தனி மனித இலக்கியச் சாதனையே நிற்கும். மற்ற விஷயங்களில் இருக்கிற உற்சாகம் இலக்கியத்திலும் வேண்டும். ஒரு இரண்டாயிரம், மூவாயிரம் பேருக்குத் திருப்தி ஏற்பட்டாலே போதும். இந்தத் திருப்தி ஏற்படுகிறபோது இலக்கியத்தரம் பற்றிய ஒரு அசல் இயக்கம் தமிழ்நாட்டில் செயல்படத் தொடங்கிவிடும். என் முப்பத்தாண்டு இலக்கிய அனுபவம் இத்தகைய பதிலைத் தான் வற்புறுத்துகிறது. சிந்தனைகளிலும், வார்த்தைகளிலும் பழக்கப்பட்டது தான். திருப்தியளிக்கிறது. சரியோ தவறோ இவை தான் நடக்கின்றன.

  1. இந்த இயக்கம், அமைப்பு சார்ந்த சூழல் உங்கள் எழுத்துப்பணிக்கு முன்னேற்பாடாக இருந்திருக்கிறதா?

அரசு ஊழியனான எனக்கு இயக்கம் என்ற வார்த்தை வேறு பொருளைத்தான் தரும். அகவிலைப்படி, சம்பள உயர்வு, பதவி உயர்வு என இப்படி. இதுவே, நான் சார்ந்த இடதுசாரி இயக்கத்தின் பிரதான கோட்பாடாக மாறிவிட்டன. இதுவே, மக்களிடமிருந்து அன்னியப்படுத்திவிட்டன. அமைப்பு சார்ந்து சூழல் இறுக்கமானது தான். எந்த இயக்கமும் ஆரம்ப சூரத்தனத்தோடு பிரமாதமாகவே தொடங்குகின்றன. இது சடங்கு மாதிரிதான். திராவிட இயக்கங்களிடம் ஒருவித இணக்கம் இருந்தது. மக்களுக்கு அருகில் இருந்தார்கள். திராவிட இயக்கங்களை விட  இடதுசாரி இயக்கங்களிடம் சடங்குகள் அதிகம்.

  1. தஞ்சை பல ஆளுமைகளை நிறுவியத்தளம். நிறுவிக் கொண்டுள்ள, நிறுவக் காத்திருக்கிறத் தளம். இதை உங்களின் அனுபவப் பார்வையில் எப்படி உள்ளீடு செய்வீர்கள்? என்ன விதமாக உணர்கிறீர்கள்?

தஞ்சை இப்போது கலப்பு தான். வணிகம், மணவினை, வேலை நிமித்தம், முதலானவை அசல் தஞ்சையைக் காணாமலடித்துவிட்டது. தஞ்சையின் அடையாளங்களாக பெரியகோவில், மராத்திய அரண்மனை போன்ற சிலவே மிச்சங்கள். எனவே, தஞ்சை மண் சார்ந்த எழுத்து என்பது இல்லை. சிலர் மாறுபடலாம். அசல் தஞ்சைவாசியான எனக்கு இப்படிச்சொல்ல உரிமை உண்டு.

  1. உங்களுடைய எழுத்துப்பணியை இனி வரும் காலம் எப்படி வடிவமைக்குமென நம்புகிறீர்கள். (உங்களுக்கான பிரத்யேக எழுத்தாக மாறிக்கொள்ளுமா) துல்லியப்படுத்துங்கள்…

எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன். கடந்த காலம் போனது, எதிர்காலம் வரப்போவது. நிகழ்காலம் நிச்சயம். இப்போது சொற்பமாக எழுதி இருந்தால் திருப்தி தான். பெரிய அங்கீகாரமும் இல்லை. பெரிய வாசகர் திரளும் இல்லை. இலக்கியத்தரம் எண்ணிக்கைகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓட்டெடுப்பின் மூலமும் தீர்மானிக்க முடியாது. சொற்பத்திலும் திருப்தி தான். வாழ்கிறேன். இது வெற்றிகரமான வாழ்க்கையின் அடையாளம் தான்.


நேர்கண்டவர்: ம.கண்ணம்மாள்

6 COMMENTS

  1. இந்த நேர்காணலின் வாயிலாக தஞ்சை எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது.

    நன்றி

  2. தன் மண் ,தனது மண்ணுக்குரிய படைப்பாளிகள் என்று விதந்தேத்தாமல் தன்னை மதிப்பிடுவது போலவே தன் மண்ணையும் ,மைந்தர்களையும் விமர்சனம்,சுயவிமர்சனம் என்ற ரீதியில் விச்வனாதனின் நேர்காணல் இருந்தது.அதில் நேர்மையும் இருந்தது ந.நேர்காணல் கண்ட கண்ணம்மாவுக்கும் ,விண்ட விச்வனாதனுக்கும் வாழ்த்துக்கள்.

  3. நன்றி: கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
    யவனிகா ஸ்ரீராம் அவர்களின் முகநூல் பதிவு:

    இந்நேர்காணலில் மெல்லிய சோகமும் மறைந்த காட்சிகளுக்கிடையே சமகால வெறுமையும் மிஞ்சுகிறது

    தஞ்சையின் இலக்கிய சாட்சியாகவும் மாறும் கலை வாழ்வின் பரிமானங்களை அமைதியாய் ஏற்றும் தன் படைப்புகளுக்கான சுய விமர்சனத்தோடு இக்காணலைத்தந்துள்ளார்.அக்கால லெஜண்ட்ஸ் பலரின் இறுதிக்கால நிலையை தஞ்சையில் வைத்து நா விச்வநாதன் என்னிடம் பகிர்ந்து கொண்டது ஞாபகத்தில் உள்ளது.

    மிக நேர்மையான பதில்கள்.எங்கோ எதுவோ தொடர்பு அறுந்துபோனது போன்ற உணர்வு

    நவீனம் படைப்புகளைத் தொடும்போது அனைத்து அழகியல் சிதைவுகளையும் உண்டாக்கி நவீனத்துவத்தின் கோட்பாட்டை
    அறிவித்து விடுகிறது.
    கலையின் வர்க்க மாறுபாடுகள் நிலம் வேளாண்மை தாளாண்மை
    காதல் குடும்பம் கோவில் இசை மற்றுமான கலையின்பங்களின் உடமைகளில் குறுக்கிடுகிறது

    மேலும் அதை பரிவர்த்தனை ஆக்குவதில் பிரக்ஞையற்று நவீனத்தின் சாரம்சங்களை தகர்த்தவாறே வேறு வேறு அழகியல் வகைமைகளை அவை எட்ட முயல்கின்றன.

    தஞ்சை எழுத்துகளில் உரைநடை க்ளாசிக் என்று பலதையும் தி.ஜாவிடமிருந்து தொடங்கி ஆய்வு செய்யலாம்.
    குறிப்பாக திராவிட அரசியல் வளர்ச்சி பெற்ற காலத்தில் தஞ்சை மண்ணில் கிராமப்புற அடித்தள மக்களின் கதைகள் மேலெழும்பியதாக ஒரு விலகலைச்சுட்டலாமா?

    அந்த அறுந்துபோன கண்ணி எதுவாக இருக்கமுடியும்?
    உழவாரங்கள் முடிந்து கோவில் பாத்யதைகளை அரசு சட்ட நிர்வாகங்கள் ஊராட்சி நகராட்சி மன்றங்கள் தேர்தல் முறைமைகள் சாதிகள் என நவீனத்துவம் காவிரி டெல்டாக்களில் பேசு பொருளாகிய பின்பு கநா சுவின் மொழிபெயர்ப்புகள் பலவும் நிலம் மீதான பிதுரார்ஜித குடும்ப அழகியல் வடிவங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சொல்வது இலக்கியத்தில் க்ளாசிக் சார்ந்த கலைத்தொகுப்பாக இன்னும் நீடிப்பதாகச் சொல்லலாமா

    நிலஉடமை அழகியல் இன்னும் முடிவிற்கு வரவில்லை என்பது போல அல்லது பின்நவீனத்துவத்தில் இத்தகையப் படைப்புகள் (தஞ்சை பிரகாஷ், கந்தர்வன், முத்து போன்றோரின் மிகை அழுத்தம் கொண்ட படைப்புகள் மார்க்ஸீய பண்புருவாக்கங்கள் பாலியல்பின் நடைமுறை யதார்த்தங்கள் உள்ளூர் மொழி வழக்குகள்)எவ்வாறு இருத்தலைப் பேசுகின்றன
    குறியீட்டுத்தளங்கள் எதன்மீது தீர்த்துவிடப்படுகின்றன என்றெல்லாம் இந்நேர்காணல் ஒரு நீட்சியை அளிக்கிறது
    அன்பும் நன்றியும் சீனியருக்கு.

    பின்நவீனத்துவமா என்று அசூயைப்படுபவர்களுக்கு “காலனியகாலத்தஞ்சையின் உற்பத்தி மாற்றங்கள் என்ற நூலை பரிசளிக்கிறேன்.

  4. தஞ்சை மண்ணின் எழுத்துலக ஜாம்பவான்கள் குறித்து அருமையானதொரு நேர்காணலை ஒழுங்கு செய்த கனலி அமைப்புக்கு நன்றி. விடைகள் விசாலமானது என்றாலும் தொடர்புடைய வினாக்களைத் தொடுத்த கவிஞர் கண்ணம்மாளின் வாசிப்பனுபவமும் இங்கு ஒளிர்கிறது. தன் காலத்தைய/ தனக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் குறித்து விஸ்வநாதனின் பதில்கள் நேர்மையானவை; அசலானவை. இந்நேர்காணலைச் சிறு நூலாக வெளியிடத் தகுந்த சாத்தியப்பாடுகள் உண்டு. அதற்கான முன்முயற்சி களைச் தொடர்புடையோர் செய்யலாம்.

    • காத்திரமான வினாக்கள்; காத்திரமான பதில்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.