நத்தை சேகரிப்பு

நத்தைகள் சேகரித்தால் என்ன?” 

ஸ்டானுக்குதான் இந்த அற்புதமான யோசனை உதித்தது. ஐந்து குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் சேகரிப்புப் பழக்கம் ஒன்றும் புதிதில்லை. 

பிரவுன் தம்பதியைப் பார்க்க விருந்தினர் யாராவது அவர்களுடைய வீட்டுக்குப் போனால், நாற்காலியில் உட்காருவதற்குள்ளாகவே சிறுமி எட்டி, தன் சேகரிப்பான அஞ்சலட்டைகள் பற்றி சொல்ல ஆரம்பித்துவிடுவாள். கண்ணியம் காரணமாக, அவர் அவளுடைய சேகரிப்பு குறித்த தகவலுக்கு மேலோட்டமாய் சிறு ஆர்வம் காட்டினாலும் போதும், என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள்ளாகவே, இயற்கை, நிலவமைப்பு, நடிகைகள், தேவாலயங்கள் மற்றும் வேடிக்கையான படங்களுடன் கூடிய அஞ்சலட்டைகள் அடங்கிய பருத்த ஆல்பம் ஒன்று அவரது மடியில் கிடத்தப்பட்டுப் பார்வையிட கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார். சிறிது நேரத்தில் அவரை அறியாமலேயே ஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் என தூரதேசங்களிலிருந்து பட அஞ்சலட்டைகளை வரவழைத்துத் தருவதாக வாக்களித்துக் கொண்டிருப்பார். மிக முக்கியமாய் ஜப்பானிலிருந்து.

அஞ்சலட்டைகள் சேகரிப்பில் அவளோடு போட்டிபோடும் தோழியொருத்திக்கு சட்டித்தொப்பியும் கிமோனோவும் பிரசித்தமான அந்நாட்டிலிருந்து ஒரு அஞ்சலட்டை கிடைத்திருப்பதும் அதில் வெடிமருந்தின் வாடை வீசுவதாக ஃப்ராங்க் சொன்னதும் முக்கியக்காரணங்கள். இறுதியாக விருந்தினர் அவ்வீட்டை விட்டுப் புறப்படும் தருணம், தன் நண்பனின் நண்பன் யாருக்காவது டோக்கியோ அல்லது கோபேயில் யாரையாவது தெரிந்திருந்தால், வெடிமருந்தின் வாடையுடன் கூடிய அஞ்சலட்டை பெற வெகு ஆவலாகக் காத்திருக்கும் சிறுமி எட்டியின் முகவரிக்கு உடனடியாக ஒரு அஞ்சலட்டையை அனுப்பும்படி ஒரு வரி எழுதப்போவதாக உறுதிமொழி கூட அளித்திருப்பார். 

ஃப்ராங்க் சிகரெட் பெட்டியின் அட்டைகளைச் சேகரித்தான். மேலட்டையின் மேலிருக்கும் மோகம், பின்னாளில் உள்ளே இருக்கும் பொருளின் மேல் உண்டாகிவிடுமோ என்று பயந்த அவன் பெற்றோர் அவனை அப்பழக்கத்திலிருந்து மாற்ற எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளும் வீணாகின. அந்த ஆறு வயது பாலகன், பின்னாளில் ஒரு தறுதலையாக, தலையில் நார்த்தொப்பியும், கழுத்தில் கைக்குட்டையுமாக பல்லிடுக்கில் போதைப்பொருளை அடக்கியபடி தாயின் மனக்கண்ணில் அடிக்கடி தோன்றிய காட்சி அவளைக் கலவரப்படுத்தியது. அவள் அவசரமாக அவனுக்கு ஒரு தபால் தலை ஆல்பமும் சில வெளிநாட்டு தபால் தலைகளையும் பரிசளித்தாள். அவனுக்கோ அதில் துளியும் ஆர்வமில்லை. அவனுடைய புவியியல் பாடத்திறனை மேம்படுத்துவதற்காகவே பரிசளிக்கப்பட்டதோ என சந்தேகித்தான். 

நாணயங்கள், கிளிஞ்சல்கள், பாடமாக்கப்பட்ட இலைகள்.. இதுபோல் இன்னும் என்னென்னவோஅவன் பெற்றோரால் பரிந்துரைக்கப்பட்டன. எதுவும் பயனளிக்கவில்லை. அவனுடைய பள்ளியில் ஹீரோ போல ஆராதிக்கப்பட்ட ஜானி, சிகரெட் அட்டைகளை சேகரித்தான் என்பதால் பிற சேகரிப்பு எதுவும் ஃப்ராங்க்குக்கு பொருட்டாகத் தெரியவில்லை. 

முன்பு தீப்பெட்டி அட்டைகளை சேகரித்த இளையவன் ஸ்டான், பூவிதைகளுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் மாறியிருந்தான். அவன்தான் இப்போது நத்தைகளை சேகரிக்கும் யோசனையை சொன்னவன். 

அந்தப் பின்மதியவேளையில், வராந்தாவில் படர்ந்திருந்த ரோஜாச்செடியின் கிளைகளை அளவாய் வெட்டிக் கொண்டிருந்த அப்பாவும் பக்கத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தையல் வேலையில் ஈடுபட்டிருந்த அம்மாவும் ஸ்டானின் யோசனையைக் கேட்டு அதிர்ந்தனர். அந்தக் காரியத்தை முளையிலேயே கிள்ளிவிட எழுந்த அம்மாவை அப்பா தடுத்தார்.

உஷ்.. எதுவும் சொல்லாதே.. தயவு செய்து எதுவும் சொல்லாதே.

அம்மா ஆச்சர்யத்தோடு அமைதியானாள். அப்பா குழந்தைகளை கவனிக்கலானார். கீழே புல் தரையில் மூன்று குழந்தைகளும் கூடி இந்த புதிய யோசனையை பரிசீலித்துக்கொண்டிருந்தார்கள். 

இன்று காலையில் பான்சி செடியில் பார்த்தேன். நூறு கூட என்னால் சேர்க்கமுடியும்.ஸ்டான் சொன்னான்.

எனக்கு வேறு நல்ல இடங்கள் தெரியும். நான் சேர்க்க ஆரம்பித்தால் உன்னை மிஞ்சிவிடுவேன். அத்திமரத்தில் எக்கச்சக்கமாக இருக்கும். உனக்கு அதெல்லாம் எட்டாது.என்றான் ஃப்ராங்க்.

அத்திமரத்தை விடவும் வேறு நல்ல இடமெல்லாம் எனக்கு தெரியும். உன்னிடம் சொல்ல மாட்டேன்.இது ஸ்டான்.

ஃப்பூ.. நான் உங்க ரெண்டு பேரையும் சீக்கிரமாகவே மிஞ்சிவிடுவேன். லட்சக்கணக்கான நத்தைகள் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். நான் கூட சேகரிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.இடைபுகுந்தாள் எட்டி.

கூடாது.. கூடாது. இது என்னுடைய யோசனை. நான் மட்டும்தான் சேகரிப்பேன். வேறு யாரும் செய்யக்கூடாது. அப்படிதானே ஃப்ராங்க்?”

ஆமாம், எட்டி, நீ சேகரிக்கக் கூடாது. அவன்தான் முதலில் சொன்னான். ஆனால் நான் சேகரிக்கலாம். ஏனென்றால்.. அவனுக்கு என்னுடைய வெட்டுக்கிளியைக் கொடுத்திருக்கிறேன்.”  என்றான் ஃப்ராங்க்.

ஆனால்.. உனக்குதான் உன்னுடைய சிகரெட் அட்டை இருக்கிறதே.ஸ்டான் பதற்றத்தோடு சொன்னான்.

அப்படியா தம்பி.. சரிஅப்படியென்றால் என்னுடைய வெட்டுக்கிளியைத் திருப்பிக்கொடு.” 

ஸ்டானுக்கு அதில் விருப்பமில்லை. தற்சமயம் அது ஸ்டானின் மூடிய கைக்குள் படபடத்துக் கொண்டிருந்தது. 

வீட்டின் வாசல்படியிலிருந்த நத்தையைப் பார்த்துதானே உனக்கு அந்த யோசனை வந்தது, ஸ்டான்?” எட்டி கேட்டாள். 

கொஞ்சநேரத் தயக்கத்துக்குப் பிறகு ஸ்டான் ஆமாம் என்றான். அவன் சேகரித்து வைத்திருந்த தீப்பெட்டி அட்டைகளை ஒருநாள் தோட்டத்தில் மறந்து வைத்துவிட்டதால் எல்லாம் காற்றில் பறந்துபோய்விட்டன என்றும் அன்றிலிருந்தே தான் வேறு எதையாவது சேகரிக்க ஆரம்பிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் இருந்ததாகவும் அதனால்தான் இந்த யோசனை வந்தது என்றும் ஸ்டான் சொன்னான்.

ஆனால் எனக்கும் அந்த நத்தையைப் பார்த்த பிறகுதான் நத்தை சேகரிக்கும் எண்ணம் வந்தது. நான் சொல்ல வந்தேன். அதற்குள் நீ முந்திக்கொண்டாய்.என்றாள் எட்டி.

இல்லை, நீ யோசிக்கவே இல்லை.

நான் யோசித்தேன்

நீ யோசிக்கவில்லை

நான் யோசித்தேன்.

அப்படியென்றால்… இனிமேல் நானும் அஞ்சலட்டை சேகரிக்கிறேன். அம்மாவுக்கு வரும் அஞ்சலட்டைகளில் பாதி இனிமேல் எனக்குதான்.

உன்னிடம்தான் ஆல்பம் இல்லையே…”

அதனாலென்ன, ஒன்று வாங்குவேன்.

உன்னிடம்தான் பணம் இல்லையே?” 

இந்தக் குரூரத் தாக்குதலை ஸ்டான் எதிர்பார்க்கவில்லை. அவனிடமிருந்த கடைசி அரை பென்னியும் அன்று காலையில்தான் சிவப்பு வெள்ளை வரிமிட்டாய்க்காக வீணடிக்கப்பட்டது. சொல்லப்போனால் அவர்கள் யாருக்குமே பிடிக்காத மிட்டாய் அது. ஆனால் அரை பென்னி அளவே கையிருப்பு இருக்கும் காலத்தில் மிட்டாய் ஆசைக்கு ஈடுகொடுக்கத்தக்க வகையில் பெரியதாகவும் நீண்ட நேரம் கரையாத தன்மையும் கொண்டிருந்தது. வாங்கியதை வீணாக்க வேண்டாம் என்று சப்பிச்சப்பி ஒரு கட்டத்தில்  நாக்கு எரிய ஆரம்பிக்கவும், வேறு வழியில்லாமல் அதை தோட்டத்து மூலையில் ஜெரானியம் புதர்களுக்கிடையில் எறிந்திருந்தான். இப்போது அவன் நிற்கும் இடத்திலிருந்து அதைப் பார்க்க முடிந்தது. மிட்டாயின் சிவப்பு வெள்ளை வரிகள் தெரியாதபடி எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தன. 

ஸ்டானின் முகம் கோபத்தால் சிவந்துபோனது. 

சரி, அதற்கு பதிலாக என்னுடைய வெட்டுக்கிளியை கொஞ்சநேரம் உன் முதுகில் ஊற விடுகிறேன்.அவன் திக்கியபடி சொன்னான்.

அது என்னுடைய வெட்டுக்கிளி..குறுக்கிட்டான் ஃப்ராங்க். இந்த நிமிஷமே அதை என்னிடம் திருப்பிக்கொடு. நான் நத்தைகளை சேகரிக்கக்கூடாது என்றால் என் வெட்டுக்கிளியை என்னிடமே கொடு.

ஆனால்.. ஆனால் அதற்கு பதிலாகத்தான் நான் என்னுடைய வெள்ளைக் கோலிகுண்டை உனக்குக் கொடுத்தேனே.அழுகையும் ஆத்திரமுமாக சொன்னான் ஸ்டான். இதை ஃப்ராங்க் அப்போது மறந்துவிட்டிருந்தாலும் சமாளித்தான்.

வெட்டுக்கிளி வெள்ளைக் கோலிகுண்டை விடவும் உயர்வானது. நீ கட்டாயம் அதை எனக்குத் தந்துதான் ஆகவேண்டும். உன்னுடன் சண்டை போட்டாவது அதைப் பெற்றுக்கொள்வேன்.

வராந்தாவிலிருந்து தங்கள் பெற்றோர் தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே அப்போது அவர்களிடம் இல்லை. 

சமீபத்தில் அண்ணனுடன் போட்ட குத்துச்சண்டைகளில் தானே வெற்றி பெற்றதை நினைத்துப்பார்த்தான் ஸ்டான்.

இரு, வெட்டுக்கிளியை பத்திரமாக வைத்துவிட்டு வருகிறேன்.ஸ்டான் உற்சாகத்துடன் போனான். காலியான ஜாம் டப்பா ஒன்று கண்ணில் பட்டதும் வெட்டுக்கிளியை அதனுள் பத்திரமாக மூடிவைத்துவிட்டு, முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டும் முஷ்டியை மடக்கிக்கொண்டும் அண்ணனை நோக்கிச் சென்றான். எப்போதும் போல எட்டி இடையில் புகுந்து தடுத்தாள்.

ஏய், நீங்க சண்டை போடக்கூடாது. நிறுத்துங்க.. அம்மா உங்களை சண்டை போடக்கூடாது என்று சொல்லியிருக்காங்க.. இல்லையா?”

நீ ஒழுங்காக ஓரமாகப் போய்விடு. இல்லையென்றால் நடப்பதே வேறு.” சொல்லிக்கொண்டே ஃப்ராங்க் அவளைப் பிடித்துத் தள்ளினான். 

சிறியவன் ஸ்டானை வழிக்குக் கொண்டுவருவது எளிதென்று நினைத்த எட்டி, அவனுடைய சின்னஞ்சிறு முஷ்டியைப் பிடித்துக்கொண்டு சண்டையை நிறுத்துமாறு சொன்னாள். எதிர்பாராதவிதமாக ஸ்டான் வட்டமடித்து அவளுக்குப் பின்னால் கைகளைக் கொண்டுசென்று அவளைப் பின்புறமாகத் தள்ளினான். நிலைதடுமாறிய அவள் சற்றுதூரம் ஓடி நின்றாள். சகோதரர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் சண்டைக்கு ஆயத்தமானார்கள். இக்காட்சியைக் கண்ட அம்மா, பிரச்சனையை இவ்வளவு தூரம் வளரவிட்டதற்காக அப்பாவை முறைத்தபடி நாற்காலியை விட்டு எழுந்தாள். ஆனால் அவர் அவள் தோள்களை மெதுவாய் அழுத்தி மறுபடியும் நாற்காலியில் அமரச்செய்தார்.

அமைதி.. அமைதி.. நீ பாட்டுக்கு தைத்துக்கொண்டிரு. என் குழந்தைகளைக் கவனிக்க எனக்கு இதுபோல் சந்தர்ப்பம் அடிக்கடி வாய்க்காது. இதெல்லாம் விளையாட்டு சண்டைகள். இவற்றில் பகைமை இருக்காது. அவர்களைத் தனியாக விடு. எட்டி என்ன பண்ணுகிறாள் என்று பார்க்க விரும்புகிறேன்.

வருத்தமும் அவமானமும் உற்ற சிறுமி ஒருத்தி என்ன பண்ணுவாள் என்பதைக் காணும் அந்த வாய்ப்பு உடனடியாகவே கிடைத்தது. எட்டி ஜாம் டப்பா இருக்குமிடத்துக்கு ஓடிச்சென்று ஸ்டானின் பொக்கிஷமான, அவனுடைய வெள்ளைக் கோலிகுண்டுக்கு மாற்றாகப் பெறப்பட்ட அழகிய இறக்கைகளும், கிறீச்சிடலும் கொண்ட வெட்டுக்கிளியை விடுவித்துப் பறக்கவிட்டாள். பிடிபட்டதிலிருந்து அடைபட்டே கிடந்ததால் சற்று சோர்ந்திருந்த அவ்வெட்டுக்கிளி மின்னும் இறக்கைகளைப் படபடத்தபடி சண்டையிடுபவர்களுக்கு மத்தியில்.. இன்னும் சொல்லப்போனால் ஸ்டானின் கன்னத்தை உரசியபடி பறந்து உற்சாகத்துடன் பக்கத்திலிருந்த யூகலிப்டஸ் மரத்தைத் தஞ்சமடைந்தது.

எவ்வளவு பெரிய வெட்டுக்கிளி!ஸ்டான் சொன்னான். 

நான் உனக்குப் பிடித்துக் கொடுத்ததை விடவும் பெரியது இல்லை.ஃப்ராங்க் சொன்னான். 

இங்கே பாருங்க.எட்டி பழிவாங்கிவிட்ட சந்தோஷத்துடன் காலியாயிருந்த ஜாம் டப்பாவைக் காட்டினாள். 

அம்மா மறுபடியும் எழுந்து மறுபடியும் தடுக்கப்பட்டாள். எட்டி தண்டிக்கப்படவேண்டும் என்றும் தாயின் தலையீடு கட்டாயம் இருக்கவேண்டிய கட்டம் அது என்றும் சொன்னாள். ஆனால் அப்பா மறுபடியும் அவளை ஆசுவாசப்படுத்தினார்.. 

கவனி.. இது ஒரு பாடம், கவனி.” 

அம்மா, பாடத்தில் ஈடுபாடில்லாத மாணவி போல பார்த்திருந்தாள். எட்டியின் இங்கே பாருங்கஎன்ற அறிவிப்பின் அடுத்த நொடியே சண்டை முடிவுக்கு வந்தது.

ஸ்டானின் குட்டி முகம்   சற்றுமுன் சிவந்திருந்ததை விடவும் அதிகமாய் சிவப்பேறியிருந்தது. முதலில் நம்பமுடியாதவனாகப் பார்த்தவன் பிறகு கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓடினான். அவளோ பயங்கரமாய் சிரித்துவிட்டு அவனுக்கு முன்னால் ஓடினாள். புல்தரையிலும், நடைபாதையிலும், வீட்டைச் சுற்றியும் அவர்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். எட்டி சிட்டாகப் பறந்துகொண்டிருந்தாள். ஸ்டான் மூச்சு வாங்க அவளைத் துரத்திக்கொண்டிருந்தான். ஃப்ராங்க் தம்பியோடு ஓடியபடி அவனை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தான். ஒருவழியாக இருவரும் அவளை ஒரு மூலையில் மடக்கிப் பிடித்தார்கள். 

ஒருத்தருக்கு ரெண்டு பேரா.. இது நியாயம் கிடையாதுஎன்றாள் எட்டி.

ஃப்ராங்க்குக்கு கோபம் வந்தது. அவன் நியாயமாக விளையாட விரும்பினான். இந்த விஷயத்தில் அவன் தன்னை ஒரு நடுவராக பாவித்துக்கொண்டான், பாரபட்சமாக தான் நடந்துகொள்ளக்கூடும் என்றபோதும். 

நான் உன்னைத் தொடவே மாட்டேன்.கடுப்பாய் சொன்னதோடு, தன் நேர்மைக்கு உத்திரவாதமாய் இரு கைகளையும் பாக்கெட்டுகளுக்குள் திணித்துக்கொண்டான்.  

ஆனால் எதிரி அகப்பட்டுக்கொண்டபோதும் ஸ்டானால் என்ன செய்ய முடியும்? பெண்களை அடிப்பது, கிள்ளுவது, உதைப்பது யாவும் உடல்ரீதியாகவும் ஒழுக்கரீதியாகவும் கூடாதென்பது பெற்றோர் விதித்திருக்கும் கட்டுப்பாடு. பெண்பிள்ளைகளின் முடியைப் பிடித்திழுப்பது கூட விதிகளுக்குப் புறம்பானது. முன்பெல்லாம் அந்த ஒரு செயலே அவ்வளவு திருப்தியை அளிக்கும்.    

வெற்றி பெற்றவன் வேறு ஏதேனும் வழியில் தன் வெற்றியைப் பறைசாற்ற விரும்பினான். சிறுமியின் கையில் இருந்த பொம்மை அதற்கு வழி சொன்னது. அவள் எதிர்பாராத நேரத்தில் வெடுக்கென்று பொம்மையைப் பிடுங்கியவன், அதன் பிங்க் நிற கவுனைப் பிடித்து தலைக்கு மேலே ஒரு சுழற்று சுழற்றி வேலிக்கு அப்பால் எறிந்தான். 

இப்போதும் பொறுக்கமாட்டாமல் அம்மா எழுந்தாள். இந்த முறை அவளது கண்கள் கிட்டத்தட்ட கலங்கிவிட்டிருந்தன. ஒருமணி நேரத்துக்கு முன்பு வட்டமாய் அமர்ந்து தோள்களில் கைபோட்டுக்கொண்டு ஒற்றுமையாய் ஒரே புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த அவளுடைய சின்னஞ்சிறு குழந்தைகள் ஒருவருக்கொருவர் இப்படி நடந்துகொள்வார்கள் என்பதை அவளால் துளியும் நம்ப முடியவில்லை. 

நான் கட்டாயம் தலையிட்டுதான் ஆகவேண்டும்அம்மா சொன்னாள். 

வேண்டாம்.. வேண்டாம். இப்போது இருக்கிற பிரச்சனையைப் பார்த்தாயா? உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்துக்கொள்ள விடு. பையன்களால் எட்டிக்கு ஒரு பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. தான் தவறு செய்துவிட்டோம் என்று உணர்ந்திருக்கிறாள். இல்லையென்றால் இந்நேரம் கண்ணைக் கசக்கிக்கொண்டு ஸ்டான் மீதான புகாருடன் நம்மிடம் வந்து நின்றிருப்பாள்.

அழுதுகொண்டே புல்தரையைக் கடந்து வெளிவாயில் கதவைத் திறந்துகொண்டு ஓடும் மகளைப் பார்த்தபடி செய்வதறியாது அமர்ந்திருந்தாள் அம்மா. அவளைத் தொடர்ந்து ஃப்ராங்க்கும் ஓடினான். அவனுடைய வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு இன்னமும் தன் கைகளைப் பாக்கெட்டுக்குள்ளேயே வைத்திருந்தான். ஸ்டான் பின்னால் போனான். மூவரும் திரும்பி வரும்வரை முழுதாய் ஐந்து நிமிடங்களுக்கு அம்மா வெளிவாயிலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். 

முதலில் எட்டி வந்தாள். அவளுடைய ஒரு கையில் பொம்மை இருந்தது. மற்றொரு கைக்குள் எதையோ மூடி பத்திரமாக எடுத்துவந்தாள். இரண்டு சிறுவர்களும் உற்சாகத்துடன் அவர்களும் தங்கள் கைகளுக்குள் எதையோ பொக்கிஷம் போலப் பொத்திப் பாதுகாப்போடு வந்தார்கள். எல்லோருடைய முகத்திலும் அமைதி தவழ்ந்தது, சண்டையெல்லாம் என்னவோ ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நடந்த மாதிரி. 

பொம்மை புதர்ச்செடியின் மேல் விழுந்ததால் அதில் சிறு கீறலும் விழவில்லை. பொம்மையை எடுக்கப்போனபோது அந்த புதருக்கடியில் அவர்கள் மூன்று நத்தைகளைப் பார்த்தார்கள். இரண்டு பெரியவை. ஒன்று குட்டி. வெட்டுக்கிளியை இழந்த துக்கத்தில் இருந்த ஸ்டானை ஈர்த்தது அந்த குட்டி நத்தைதான். அவன் அதை எடுத்து உள்ளங்கைக்குள் பொத்திக்கொண்டான். அதுவும் பாசமாய் அவன் கையோடு ஒட்டிக்கொண்டது அல்லது அப்படி ஒட்டிக்கொண்டதாக அவன் நினைத்தான். 

சரி, நாம் எல்லாருமே நத்தைகள் சேகரிக்கலாம். அந்த இரண்டையும் நீயும் எட்டியும் வைத்துக்கொள்ளுங்க. எனக்கு தனியாக, பாவமாக இருக்கிற குட்டி நத்தைகள் மட்டும் போதும்.ஸ்டான் பெருந்தன்மையுடன் தலையை ஆட்டி ஆட்டி சொன்னான். இப்படியாக சமாதானக்கொடி மீண்டும் பறக்கவிடப்பட்டது. நத்தைகளைப் போட்டுவைக்க அட்டைப்பெட்டிகளைத் தேடுவதிலும் நத்தைகளுக்கு உணவாக எந்த இலைகளைத் தரலாம் என்று ஆலோசிப்பதிலும் ஒற்றுமையாயினர். 

அப்பா, குழந்தைகளின் அழைப்பில்லாமலேயே அவர்களுக்கு உதவிசெய்ய, தானே முன்வந்தார். பழைய சாமான்கள் அறையிலிருந்து அவர்கள் எடுத்து வந்திருந்த மூன்று மரப்பெட்டிகளின் முன் பக்கம் கம்பி வலை அடைத்துக் கொடுத்தார். பெட்டிகளின் பின்புறம் சிறிய துவாரம் அமைத்து நத்தைகளுக்கு தீனி போட வழி செய்து அதற்கொரு கதவும் செய்துகொடுத்தார். நத்தை சேகரிப்புக் கூண்டுகள் தயாராகிவிட்டன. அப்பாவிடமிருந்து கிடைத்த இந்த எதிர்பாராத உதவியால் குழந்தைகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

ஸ்டானின் நத்தை சேகரிக்கும் யோசனையை ஆரம்பத்திலிருந்தே அவர் வரவேற்றதின் காரணம் இப்போது அம்மாவுக்குப் புரிந்துபோனது. இரவுப்பொழுதுகளில் கையில் லாந்தர் விளக்கோடு தோட்டத்துக்குச் சென்று இந்த குட்டிக் கொள்ளையர்களைப் பிடிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் கோஸ், பூச்செடி, முளை விட்ட விதைகள் யாவும் அதீத விளைச்சல் தரவிருக்கும் காட்சி அவள் கண்முன்னால் விரிந்தது. 

ஒரு வாரத்திலேயே ஃப்ராங்க் 49 நத்தைகளின் உரிமையாளன் ஆனான். எட்டி இருபத்தெட்டுக்கு சொந்தக்காரி. அவள் இப்போது 33 நத்தைகளின் சொந்தக்காரியாக இருந்திருக்கவேண்டும். தவறுதலாக நத்தைக்கூண்டின் கதவை ஒரு மணிநேரம் திறந்துவைத்துவிட்டாள். ஐந்து தப்பிவிட்டன. ஆச்சர்யம் தரும் விதமாக, அடுத்தநாளே ஃப்ராங்க்கின் சேமிப்பில் ஐந்து கூடுதலாயின. தன்னுடைய காணாமற்போன நத்தைகள்தான் அவை என்று எட்டி சொல்லிக்கொண்டே இருந்தாள். அவற்றின் கண்களைக் கொண்டும் உணர்விழைகளை அவை அசைப்பதை வைத்தும் தன்னால் அவற்றை அடையாளம் காணமுடிகிறது என்றாள். வழக்கு தந்தையிடம் போயிற்று. நத்தைக்கூண்டுகள் இருக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் அவை கண்டெடுக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் தீர்ப்பு ஃப்ராங்க்கின் பக்கமே வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் மனைவியிடம் சொன்னார், பெட்டிக்குள் அடைபட்டு பைத்தியம் பிடித்தாற்போலிருந்த நத்தைகள் விடுபட்டவுடன் முந்தைய நத்தைவேக சாதனைகளை முறியடிக்கும் வேகத்துடன் வெறித்தனமாகப் பயணித்திருக்க வாய்ப்புள்ளது என்று. 

ஸ்டானிடம் பதினைந்து நத்தைகள்தான் இருந்தன. பெரிய குண்டு நத்தைகளை அவன் தொடுவதே இல்லை. பார்த்தாலே பாவமாயிருக்கும் குட்டி நத்தையோ.. கண்ணாடி போன்ற ஓடுடைய வெளிர் சாம்பல் நிற சிறிய நத்தையோ கண்ணில் பட்டுவிட்டால் போதும், மறுநொடியே அவை ஸ்டானின் அநாதை நத்தையில்லத்தில் அனுமதிக்கப்பட்டுவிடும். உடைந்த பிஸ்கட்கள், சின்னச்சின்னதாய் வெட்டப்பட்ட உருளைக்கிழங்குத் துண்டுகள், கீரை என பிரமாதமான விருந்தும் படைக்கப்படும். புதிய நத்தையோதிடீரென்று பெருவிருந்தொன்றைப் பார்த்த அதிர்ச்சியில் கூட்டுக்குள் ஒடுங்கிய நிலையில் அசைவற்று இருக்கும். ஸ்டான் ஒரு இலையை அதன் ஓட்டின் அருகில் கொண்டுபோய் வைத்து உபசரிப்பான். சொப்பு சாமான்களிலிருந்து ஒரு குட்டித்தட்டைத் தேடி எடுத்து அதில் பாலை ஊற்றி கிட்டத்தட்ட அதன் வாயருகில் வைத்துவிட்டு வா.. வந்து பால் குடிஎன்று அழைப்பான். 

தோட்டத்திலிருந்த பெரிய ஆப்பிள் மரத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நத்தைக்கூண்டுகளைப் பார்வையிட ஊரில் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள். பேக்கரி கடைக்காரருக்கு எந்நேரமும் ரொட்டிகள் விநியோகிக்கும் பணி இருந்ததால் அவரால் நேரில் வந்து அவற்றைப் பார்க்க நேரம் இடங்கொடுக்கவில்லை. எனினும் ஃப்ராங்க்கைப் பார்க்கும்போதெல்லாம்.. அவனுடைய மான்ஸ்டர்எப்படி இருக்கிறது என்று விசாரிக்கத் தவறுவதில்லை. மேலும் அடுத்த வருட விவசாயக் கண்காட்சியில் அவனைப் பங்கேற்குமாறும், சந்தேகமே இல்லாமல் அவனுடைய மான்ஸ்டர்க்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்றும் உறுதியாகச் சொன்னார். 

கறிக்கடைக்காரர் நத்தைகள் சேகரிப்பு குறித்து அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தபால்காரர் பேரார்வம் காட்டினார். அவ்வப்போது அவற்றின் நலம் விசாரிப்பதோடு, நேரம் இருந்தால் நத்தைக்கூண்டுகள் இருக்கும் இடத்துக்கே வந்து பார்வையிடுவார். புள்ளி நத்தை இறந்துவிட்டதா அல்லது தூங்குகிறதா என்று பார்த்து சொல்வார். தவிரவும், அக்கம்பக்கத்து வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் நத்தை கிடைத்தால் தபால் பைக்குள் போட்டுக் கொண்டுவந்து அவர்களிடம் சேர்ப்பார். 

வீட்டுக்கு வரும் விருந்தினர்களை குழந்தைகள் இரண்டுவிதமாகப் பிரித்தார்கள். நத்தை சேகரிப்புக் குறித்து சொல்லப்படும்போது ஆர்வம் காட்டுபவர்கள் மற்றும் அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளாதவர்கள். இரண்டாமவர்கள் எந்த இடையூறுமின்றி தனித்து விடப்படுவார்கள். முதலாமவர்களை சிறப்பான வரவேற்போடு நத்தைக்கூண்டுகள் இருக்குமிடத்துக்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் இதுவரை கண்டிருக்கவே வாய்ப்பில்லாத அழகான குட்டி நத்தையையும், பெரிய ராட்சஸ நத்தையையும் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். 

ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் பாதிரியார் ஒரு பின்மதிய வேளையில் பிரவுன் தம்பதியின் வீட்டுக்கு வந்திருந்தார். பழைய பாதிரியார் நத்தை சேகரிப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே அருவருப்பாய்ப் பார்ப்பார். பொதுவாகவே தேவாலயங்கள் இதுபோல் அப்பாவி சிற்றுயிர்களை அடைத்து வைத்திருப்பதற்கு எதிராகவே இருக்கும் (உண்மையில் அவை மகிழ்ச்சியாகவே இருந்தாலும்) என்பதால் குழந்தைகள் புதிய பாதிரியாரிடம் நத்தைகள் பற்றி வாயைத் திறக்கவில்லை.  

அம்மாவும் பாதிரியாரும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு பூந்தோட்டம் பற்றித் திரும்பியது. தோட்ட ஆர்வலரான பாதிரியார், தான் வளர்த்த பூப்படுகைகள் அழிந்துபோனதைப் பற்றி மிகுந்த வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். 

நான் என் வாழ்க்கையில் எத்தனையோ தோட்டங்கள் வளர்த்திருக்கிறேன். எத்தனையோ அழிவுகளைப் பார்த்திருக்கிறேன். பச்சைப்புழு, கம்பளிப்புழு முதல் முயல், எலி வரை. ஆனால் எதுவுமே இந்த நத்தைகள் தொல்லைக்கு ஈடாகாது. தேவாலயத்தின் தோட்டங்களைப் பாழ்படுத்தும் அவற்றை என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.”  

தான் வந்தது முதல் இந்நேரம் வரையிலும் அறையின் ஒரு பக்கம் அமைதியாய், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருந்த குழந்தைகள் இவ்விஷயத்தை அவர் சொன்னதும் கண்கள் மின்ன அவரருகில் வந்து நிற்பதைக் கவனித்தார். 

 “ஒருவேளை நாங்க…”

நீங்க எங்களைக் கேட்டிருந்தா..

நாங்க அங்கே வரலாமா?”

அம்மா சிரித்தபடி விஷயத்தை சொன்னாள். தங்களுக்கும் நத்தைகளால் பெருந்தொல்லை இருந்தது என்றும் இப்போது குழந்தைகளின் நத்தை சேகரிக்கும் பொழுதுபோக்கால் அத்தொல்லை இல்லை என்றும் விளக்கினாள். பாதிரியார் அவற்றைப் பார்க்க விரும்பியதால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அவரை ஆப்பிள் மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்கு அந்த யோசனை பெரிதும் பிடித்திருந்தது. இப்படி நல்ல போஷாக்கான நத்தைகளை தான் எங்குமே பார்த்ததில்லை என்றார். 

நத்தைகளைப் பட்டினி போட்டால்.. எல்லாவற்றையும் கொண்டுபோய் குளத்தில் விட்டுவிடுவேன் என்று அம்மா சொல்லியிருக்காங்க. அதனால் நாங்க ஒருநாள் கூட அவற்றுக்கு தீனி போடாமல் இருந்ததே இல்லை. ஃப்ராங்க் மட்டும் ஒருநாள் மறந்துவிட்டான்.என்றாள் எட்டி.

நான் மறக்கவில்லை. கொஞ்சமாய் கொடுத்தேன். உன்னிடம் இருக்கும் 28 நத்தைகளுக்கு கொடுக்கிற தீனியை விடவும் 49 நத்தைகளுக்கு நான் அதிகமாக கொடுக்கவேண்டியிருக்கும். ஞாபகம் வைத்துக்கொள்என்றான். 

எட்டி தன் கணக்கிலிருந்து ஐந்து நத்தைகள் ஃப்ராங்க்கின் கணக்கில் சேர்ந்துவிட்டதை மறக்காமல் குறிப்பிட்டாள். பிறகு தங்களால் அவற்றுக்கு எந்தக் கெடுதலும் இல்லை என்று விளக்கினாள்.  

நாங்கள் யாரும் ஒருபோதும் அவற்றைத் துன்புறுத்தியதே கிடையாது. அம்மா அதற்கு அனுமதிக்கமாட்டாங்க. ஃப்ராங்க் மட்டும் ஒரே ஒரு தடவை அப்படி நடந்துகொண்டான்.என்றாள்.

நான் ஒன்றும் அவற்றைத் துன்புறுத்தவில்லை. அவற்றுக்கு நல்லது செய்யத்தான் முயன்றேன். ஒருவன் தன் வீட்டை முதுகிலேயே சுமந்துகொண்டு அலைவது எவ்வளவு கஷ்டம். அந்தக் கஷ்டத்திலிருந்து அவற்றை விடுவிக்க முயற்சி செய்தேன். அவ்வளவுதான்.”  

பாதிரியார் அவனது இரக்க குணத்தை மெச்சினார். ஓட்டுடன் வாழும் உயிரினங்களுக்கு ஓட்டை விலக்குவது மகிழ்ச்சி அளிக்காது என்பதையும் எடுத்துரைத்தார். ஸ்டான் தன்னுடைய புதிய வரவான ஆலிவர் ட்விஸ்டின்பால் அவரது கவனத்தைத் திருப்பினான். 

அதன் கொம்புகள் மிகவும் மெலிந்திருக்கின்றன.. இனியும் வளருமா அல்லது அதற்கு உடம்பு சரியில்லையா?” 

அதற்கு இன்னும் பற்களே வளரவில்லை.. குழந்தை என்று நினைக்கிறேன்.

பற்களா?” எட்டி ஆச்சர்யப்பட்டாள்.

நீங்கள் எங்களை கேலி செய்கிறீர்கள்.. நத்தைகளுக்கு பற்கள் கிடையாது.என்றான் ஃப்ராங்க்.

கொஞ்சம்தான்மொத்தமே 14,175 பற்கள்தான். குறுக்குவாக்கில் 135 வரிசை, ஒவ்வொரு வரிசையிலும் 105 பற்கள். ஒருநாள் என்னுடைய இடத்துக்கு வாங்க.. நுண்ணோக்கி உதவியோடு உங்களுக்கு அவற்றின் பற்களைக் காட்டுகிறேன்.” 

குழந்தைகள் வாயைப் பிளந்தார்கள். 14,175 பற்களா?

ஃப்ராங்க் சொன்னான், “மோட்லிக்கு என்ன பிரச்சனை என்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அவள் சில நாட்களாகவே மூலையில் முடங்கிக்கிடக்கிறாள். நான் ஒரு தடவை கூண்டுக்குள் சர்க்கரையைத் தூவினேன். அதைத் தின்றதால் அவளுக்குப் பல்வலி வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.” 

ஏகப்பட்ட பல்வலியாயிருக்கும்.பாதிரியார் சிரித்தார். 

அவர்களின் செல்லப்பிராணிகள் பற்றி மேலும் பல தகவல்கள் சொன்னார். ஒரே ஒரு பாதம் அதுவும் அடியில் தட்டையாகவும் ஓரங்களில் நெளிவுகளும் கொண்டது. ஒரு பாதம், ஆனால் பதினாலாயிரம் பற்கள். நத்தைகள் உலகில் செருப்பு தயாரிப்பவர்களை விடவும் பல் மருத்துவர்களுக்குதான் கிராக்கி அதிகம்என்றார். 

இன்னொன்றும் சொன்னார், “ஸ்ட்ரைப்பி சாகவில்லை. குளிர்காலத்தில் நத்தைகள் இயங்காநிலைக்குச் சென்று தற்காலிக உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். கூட்டுக்குள் முடங்குவதற்கு முன்பு தங்கள் உடலிலிருந்து சுரக்கும் கொழகொழப்பான திரவத்தைக் கொண்டு கூட்டின் வாயிலை மூடிவிடும். இந்நிலைக்கு epiphragm என்று பெயர்.”  

புதிய நண்பரால் பெரிதும் கவரப்பட்டக் குழந்தைகள் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு வாசல் வரை சென்று வழியனுப்பினர். அவருடைய தோட்டத்தில் நத்தைகளை சேகரிக்க அவர் அனுமதி அளித்ததற்காக மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தனர்.  

ஒரு வாரம் கழிந்த நிலையில் ஃப்ராங்க்கிடம் 156, எட்டியிடம் ஃப்ராங்கின் கணக்கில் சேர்ந்துவிட்ட ஐந்து போக 117, நோஞ்சான் மற்றும் குட்டி நத்தைகள் மட்டுமே ஏற்புடையவை என்பதால் ஸ்டானிடம் 64 என்ற கணக்கில் இருந்தன. 

இப்போது வீட்டுக்கு ஒரு புதிய விருந்தினர் வந்திருந்தார். பிரவுன் தம்பதியினர் தங்கள் கடைசி இரு குழந்தைகளுடன் மலைப்பிரதேசமொன்றுக்கு விடுமுறை நிமித்தம் ஒரு வார காலம் சென்றிருந்தார்கள். மற்ற மூன்று குழந்தைகளையும் வீட்டையும் நிர்வகிக்க ஒரு அத்தை நியமிக்கப்பட்டிருந்தார். வீட்டு வேலைகளே அவருக்கு ஏராளமாக இருந்ததால் நத்தைகள் குறித்து அவர் ஆர்வம் காட்டவில்லை. ஒரே ஒரு முறை ஆப்பிள் மரத்தடிக்கு வந்தவர் அங்கு கண்ட காட்சியால் அரண்டுபோய்விட்டார். 

இன்று வீட்டுக்கு இன்னும் இருவர் வந்திருந்தனர். அதே ஊரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், பிரவுன் தம்பதியினரின் வேண்டுகோள்படி வீட்டை மேற்பார்வை பார்த்துப் போவதற்காக வந்திருந்தார். உடன் அவர் மகளும் வந்திருந்தாள். அவள் அழகாகவும் இளமையாகவும் இருந்தாள். மற்றெல்லாக் குழந்தைகளையும் போலவே இவர்களும் அவளைப் பார்த்து வாயைப் பிளந்து நின்றார்கள். விஸ்டரியா மலர்களுடன் காட்சியளிக்கும் அவளது பரந்து விரிந்த, மஸ்லின் கவுனையும், கை நீளத்துக்கு சுருக்குகளோடு தவழ்ந்த மெல்லிய லேஸ் துணியையும், அவளது நீலநிறக் கண்களையும், பொன்னிறக் கூந்தலையும் அதற்கு மேலும் அழகூட்டிய தொப்பியிலிருந்து நீண்டு அசைந்த சல்லாத்துணியையும் ஆச்சர்யத்தோடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். அவள் வெகு அழகாயிருந்தாள். அவள் தோற்றம் இதைப் போன்ற சிறிய வீடுகளுக்கு வரக்கூடியதைப் போல இல்லை. அதனால் ஃப்ராங்க் அவளெதிரில் நத்தைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தான். 

சற்று நேரத்துக்குப் பிறகு அத்தையும் அப்பெண்ணின் தாயும் அருகருகே அமர்ந்து ஊர்க்கதைகளைப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அழகி செய்வதறியாது அங்குமிங்கும் உலவினாள். பின் அறையை விட்டு வராந்தாவுக்கு வந்தாள். குழந்தைகள் மரியாதையான தூரத்தில் நின்றிருந்தனர். அவள் அவர்களை லட்சியம் செய்யவில்லை. தன் உடைக்கு நெருக்கமாக அவர்கள் வராதவரை தனக்குப் பிரச்சனை இல்லை என்பது போலிருந்தாள். 

தோட்டத்திலிருந்த அந்த பழைய ஆப்பிள் மரம் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு தானும் தன் தோழியும் அன்றைய பின்மதியம் பங்கேற்கவிருக்கும் பூங்கா விழா நினைவுக்கு வந்தது. இடுப்பிலணியும் பூச்சரடுக்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான் பாக்கியிருந்தது.  

எவ்வளவு அழகான பூக்கள்.. நான் கொஞ்சம் பறித்துக்கொள்ளட்டுமா குழந்தைகளா?” அழகி கேட்டாள்.

குழந்தைகள் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு அதில் விருப்பமில்லை என்று நினைத்தவள், அவர்களது கஞ்சத்தனத்தை எண்ணி எரிச்சலடைந்தாள்.  

அங்கே.. அங்கே.. நாங்க.. எங்க நத்தைகளை வைத்திருக்கிறோம். உங்களுக்கு அதைப் பார்க்கப் பிடிக்காது.ஒருவழியாக ஃப்ராங்க் வாயைத் திறந்தான். 

அறியாத விஷயங்களைப் புரிந்துகொள்ள அவள் ஒருபோதும் மெனக்கெடுவதில்லை. இப்போதும் அவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தாது ஆப்பிள் மரத்தை நோக்கி மிதந்தபடி சென்றுகொண்டிருந்தாள். 

ஒருவேளைஒருவேளை.. நத்தைகள் உங்களுக்குப் பொருட்டில்லை என்று நினைக்கிறேன்.. அதுவும் என்னிடமிருப்பது போன்ற குட்டி நத்தைகள்.ஸ்டான் எதிர்பார்ப்புடன் சொன்னான். 

அழகியோ தலைக்கு மேலிருந்த இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ஆப்பிள் மரக்கிளையை ஒடிப்பதிலேயே கவனமாய் இருந்தாள். 

ஃப்ராங்க் அவளுடைய கவுனுக்கு அருகில் வந்து நின்றான். அவன் முகம் சிவந்திருந்தது. என் மான்ஸ்டர் போன்ற அழகு நத்தைகளைக் கூட நீங்க பார்க்க விரும்பமாட்டீங்களா?.”

எட்டி தன் நத்தைக் கூண்டைக் காட்டி, “இது என்னுடையது.. மொத்தம் நூற்றி இருபத்திரண்டு. ஐந்து மட்டும் தவறுதலாக ஃப்ராங்கின் கூண்டில் சேர்ந்துவிட்டது.என்றாள்.

அழகி பூக்கிளையை ஒடித்துக்கொண்ட பின் பார்வையை மெல்ல கூண்டுகளின் பக்கம் திருப்பினாள்.

ஐயோ.. கருமம் இதென்ன.. நத்தைகளா?” அதிர்ச்சியுடன் கேட்டாள்.

அழகிக்கு தன் மீதான நன்மதிப்பு குறைந்துவிடக்கூடாது என்றெண்ணிய ஃப்ராங்க் அதை நிலைநாட்டும் முயற்சியில் தீவிரமாய் இறங்கினான். 

நத்தைகள் நீங்கள் நினைப்பது போலில்லை. மிகுந்த சுவாரசியம் மிக்கவை. அவற்றுக்கு ஒரே வரிசையில் நாற்பதாயிரம் பற்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு பாதம்தான் உள்ளது. கூட்டை மூடிக்கொள்ள விரும்பினால் எபிடாப் என்ற பசை உருவாக்கும்.ஃப்ராங்க் சொல்லிக்கொண்டே போனான். 

ஆனால் அழகியோ தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள். நீங்கள் எல்லாம் பயங்கரமான, அசிங்கமான, குரூரமானக் குழந்தைகள்…” அவள் கத்தினாள். அவளது அழகு, நளினம் எல்லாம் குலைந்து நடுங்கிக்கொண்டிருந்தாள்.  

மலைப்பிரதேசத்திலிருந்து திரும்பிவரும் வழியில், அப்பா அம்மாவிடம் ஒரு யோசனை தெரிவித்தார். மலையிலிருந்து ஒரு பெட்டி நிறைய சேகரித்துக் கொண்டுவரும் விதவிதமான கூழாங்கற்களை நத்தைக்கு மாற்றாக குழந்தைகளிடத்தில் அறிமுகப்படுத்தி, அவர்களிடமிருந்து நத்தைகளைப் பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்த எண்ணியிருப்பதாக சொன்னார்.   

வீட்டிற்கு வந்திறங்கியதும், வரவேற்பு, விசாரிப்பு எல்லாம் முடிந்தவுடன், அப்பாவும் அம்மாவும், தங்கள் வீட்டு தோட்டம், கோழிகள், பூனைகள் எல்லாம் எப்படி இருக்கின்றன என்று பார்க்க தோட்டத்துப் பக்கம் சுற்றப் போனார்கள். குழந்தைகள் தாங்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு போனார்கள். 

உங்க நத்தைகள் எல்லாம் எப்படி இருக்கின்றன?” அம்மா கேட்டாள்.  குழந்தைகள் காலியான மூன்று கூண்டுகளையும் காட்டினார்கள்.  

உயிருள்ள ஜீவன்களை இப்படி அடைத்துவைப்பது கொடுமை அம்மா..சற்றே வருத்தத்தோடும், சமீபத்தில் திடீரென்று விழித்துக்கொண்ட மனசாட்சியின் பெருமிதத்தோடும் எட்டி சொன்னாள்.  

ஆமாம்.. ரொம்ப அசிங்கமும் கூடஃப்ராங்க் சோகமாய் சொன்னான். 

ஆனால்.. ஆனால்.. அவற்றை என்ன செய்தீர்கள்?” அப்பா பதற்றத்துடன் கேட்டார்.

நாங்கள் அவற்றை விடுவித்துவிட்டோம்குழந்தைகள் ஒத்தக் குரலில் சொன்னார்கள்.

எங்கே.. எங்கே?” கத்தினார் அப்பா.

நம் தோட்டத்தில்தான்.. வேறு எங்கே?” குழந்தைகள் சொன்னார்கள்.

ஸ்டான் தன் துயரார்ந்த முகத்தை அம்மாவின் கைகளில் தேக்கியபடி சொன்னான், “நான் என்னுடைய குட்டி நத்தைகளை முட்டைக்கோஸ் தோட்டத்தில் விட்டேன்.. பாவம் அவற்றுக்கு அங்கே போதுமான தீனியே கிடைக்காது, எனக்குத் தெரியும்.

ஒரு பெரிய கேவல் அவனிடமிருந்து வெளிப்பட்டது. 


மூலக்கதை – The day of the snail By Ethel Turner

தமிழாக்கம் – கீதா மதிவாணன்.


மூலக்கதை ஆசிரியர் குறிப்பு :- ஆஸ்திரேலியாவின் சிறார் இலக்கியப் படைப்பாளிகளுள் முக்கியமானவர் திருமதி ஏத்தெல் டர்னர் (1870 – 1958). இவர் இங்கிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வளர்ந்தவர். பதினெட்டு வயதில் சிறார் மற்றும் இளையவர்களுக்கான பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்த இவர், தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். சிறுகதைகள், பாடல்கள், நாவல்கள் என ஏராளமாகப் படைத்துள்ளார். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவரது கதைகளில் வரும் சிறார்கள் தைரியமும் தற்சார்பும் உடையவர்கள். இவருடைய சிறார் கதைகள் பல ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் உருவாக்கம் பெற்றுள்ளன. நியூ சௌத் வேல்ஸ் முதல்வரின் இலக்கிய விருதுகள் சம்மேளனம், ஆண்டுதோறும் இவரது பெயரால் “சிறந்த சிறார் இலக்கியப் படைப்பாளிக்கான ஏத்தெல் டர்னர் விருது” வழங்கி சிறப்பித்து வருகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.