தேசிய நெடுஞ்சாலை

மாமாவின் கடைக்கு செல்வது செங்கனுக்கு ரொம்பவே பிடிக்கும். மாமாவின் கடை என்பது ஒரு தேநீர்கடை. அது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடைக்கு பின்னபுறமே வீடு அல்லது இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் சொல்லலாம். வீட்டில் மூன்று அறைகள் என்றாலும் கதவினை திறந்தவுடன் முடிந்துவிடும் அளவு தான் இருக்கும். ஒரு சுங்கச்சாவடியை தாண்டியது வரிசையாக இருக்கும் தேநீர்கடைகளில் மாமாவின் தேநீர் கடையும் ஒன்று. கடைக்கு பக்கத்திலேயே ஒரு தங்கும் விடுதியும் இருக்கும். அங்கே தங்குபவர்கள் இந்த கடையில் கூடுதலாக உணவு உண்பார்கள். மற்றபடி எல்லா கடைகளிலும் எப்போதும் ஆட்கள் இருப்பார்கள்.

செங்கனுக்கு மாமாவின் கடை, மாமா, மாமி, மாமா பையன் பைந்தமிழன் எல்லோரையும்விட அந்த நெடுஞ்சாலை ரொம்பவே பிடிக்கும். மாமா வீட்டிற்கு வந்தால் நடு இரவு வரை கூட மாமா அருகிலேயே அமர்ந்து இருப்பான். ஆனால், அவன் பார்வை நெடுஞ்சாலை மீது மட்டுமே இருக்கும். ஓடும் வண்டிகள், விதவிதமான ஹார்ன் சத்தங்கள், வெறுமை, இரவின் அமைதி எல்லாமே செங்கனுக்கு பிடிக்கும். மாமாவின் கடையில் தேநீர் மட்டுமல்லாமல் பல்வேறு நொறுக்கு தீனிகளும் கிடைக்கும். சிகரெட் விற்பதில்லை. இதனால் மாமாவிற்கு இழப்பு தான் என்றாலும் பரவாயில்லை என்பார்.

வெள்ளி இரவே மாமாவின் வீட்டிற்கு வந்துவிடுவான் செங்கன். ஐந்தாம் வகுப்பு தான் படிக்கின்றான் ஆனால், தனியாகவே மினி பஸ் ஏறி சுங்கச்சாவடி வரை வந்து, அங்கிருந்து நடந்து வந்துவிடுவான் மாமா கடையின் வாசலில் அமர்ந்ததுமே அவனுக்கு அப்படி ஒரு நிம்மதி ஒட்டிக்கொள்ளும். மாமாவின் மகன் பைந்தமிழன் இவனோடு விளையாட விருப்பப்படுவான். அன்றும் அப்படித்தான் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இன்னும் இருட்ட ஆரம்பிக்கவில்லை. அடுத்த இரண்டு நாட்கள் இந்த நெடுஞ்சாலையோடு என்று ஆனந்தமாக இருந்தான் செங்கன்.

வெள்ளை நிற கார் ஒன்று கடையின் சில அடிகள் முன்னர் நின்றது. அதில் இருந்து ஒருவர் இறங்கி வந்து மாமாவிடம் ஏதோ விசாரித்தார். வண்டி நின்றுவிட்டது. அருகே யாரேனும் மெக்கானிக் இருப்பார்களா என கேட்டார். அவர் தமிழும் இந்தியும் கலந்து பேசினார். மாமா தனக்கு தெரிந்த நண்பருக்கு போன் செய்து வரச்சொன்னார்.

“பத்து நிமிஷத்துல வந்துடுவார். வா சார். வந்து உட்கார்ந்துக்கோங்க” என்றார். அவர் காருக்கு சென்று தன் மனைவியையும் குழந்தையையும் அழைத்து வந்தார். பையனுக்கு பைந்தமிழன் வயது தான் இருக்கும். இரண்டாம் அல்லது முதல் வகுப்பு படிப்பான். செங்கனும் பைந்தமிழனும் அவனைப் பார்த்து சிரித்தார்கள். சிறுவன் தலை குனிந்துகொண்டான். “வா தம்பி” என்றான் செங்கன். “சலோ பேட்டா” என்றார் சிறுவனின் அப்பா. மெக்கானிக் வர தாமதமாகிக்கொண்டு இருந்தது. சிறுவனின் அம்மா கொஞ்சம் பதட்டமாக இருந்தார். மாமா மாமியிடம் எதோ சொல்ல சிறுவனின் அம்மாவை உள்ளே அழைத்துச்சென்றார். பத்து நிமிடங்கள் கழித்து ஒருவித நிம்மதியுடன் வெளியே வந்தார். ஆனால் இந்த பத்துநிமிடத்தில் சிறுவன் சிணுங்கியபடியே இருந்தான். வீறிட்டு அழவில்லை. சன்னமான குரலில் சிணுங்கினான்.

மெக்கானிக் வண்டியை பார்த்துவிட்டு எஞ்சினில் கோளாறு கொஞ்சம் வேலையும், நேரமும் எடுக்கும். ஸ்பேர் பார்ட்ஸ் ஊருக்குள்ள போய் வாங்கணும் அதுவும் கடை திறந்திருக்கான்னு தெரியல என்றார். ”சார், நீங்க எங்க போறீங்க எதுக்கு போறீங்கன்னு தெரியல. அவசரமான்னு தெரியல. வண்டிய இங்க விட்டுட்டு பக்கத்துல ஒரு சுமாரான லாட்ஜ் இருக்கு. தங்கிக்கோங்க. காலையில காளி காரை சரி செய்ததும் கிளம்பிடலாம். பத்து கிலோ மீட்டர்ல ஊர் இருக்கு அங்க இப்ப போனாக்கூட இதே போல ரூம் தான் கிடைக்கும். உங்க விருப்பம் போல செய்யுங்க” என்றார் மாமா.

இத்தனை பேச்சுகளுக்கு நடுவே நிறைய வாடிக்கையாளர்கள் வந்து தேநீர் பருகிவிட்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால், அதனைவிட முக்கியம் அந்த சிறுவன் இவர்களுடன் ஒட்டிக்கொண்டான். அந்த காட்சியை அவன் அம்மா பார்த்துக்கொண்டே இருந்தார். பையனை அங்கேயே விட்டுவிட்டு பக்கத்தில் இருக்கும் லாட்ஜிற்கு சென்று அறை வசதிகளை பார்த்து வரச்சென்றார்கள். போதுமான வசதி இருந்ததால் தங்க முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் அந்த சிறுவன் அங்கிருந்து வர சம்மதிக்கவில்லை. “லோகி…லோகி” என்று மட்டும் தான் சொல்லிக்கொண்டு இருந்தான். இரவு உணவினை மாமாவின் வீட்டிலேயே சாப்பிட சம்மதித்தார்கள்.

“சார், பையனுக்கு ஏதாச்சும் பிரச்சனையா?” எனக் கேட்டார் மாமா. அப்பாவும் அம்மாவும் மாறிமாறி பார்த்துக்கொண்டார்கள். குழந்தைகள் வெளியே விளையாடிக்கொண்டிருக்க “ஆமா தமிழ். அவன் ஒரு சிறப்புக் குழந்தை. வெளியூருக்கு போனா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு தான் சென்னை நோக்கி கிளம்பினோம். அங்க சும்மா பீச் பார்த்தான்னா சந்தோஷப்படுவான்னு நெனச்சோம் “ உடைந்த தமிழிலும், உடைந்த குரலிலும் பேசினார். “விடு சார். அவ்ளோ தான. இந்த ரோடு கூட பீச் மாதிரி தான். சிலருக்கு கடல், சிலருக்கு காடு, சிலருக்கு வானம், சிலருக்கு ரோடு சார். ரோடும் ஒரு மருந்து தான் சார். புள்ள சந்தோஷமா இருக்கான்” என்றார் மாமா. சிறுவனின் அம்மாவின் கண்களில் நீர் கசிய, ஆறுதலாக மாமி கைகளை பற்றிக்கொண்டார்.

இரவு அங்கிருந்து வர மறுத்துவிட்டான் சிறுவன். “லோகி லோகி” என்று சொல்லிக்கொண்டு இருந்தான். “அண்ணன் பேரு செங்கன். சொல்லு. போலோ செங்கன்”. “லோகி..லோகி” என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொன்னான். அவனும் மாமாவின் வீட்டில் செங்கனுடன் உறங்குவது என முடிவானது. மூன்று குழந்தைகளும் உறங்கியதும் “அவனை தூக்கிட்டு ரூமுக்கு போயிட்றோம்” என்றார் அப்பா. “அவன் பக்கத்துல தனக்கு விருப்பமானவன் இருக்கான்னு தூங்கறான். ஒரு நாள் விடு சார். அழுதான்னா நான் போன் அடிக்கிறேன்” என மாமா அனுப்பிவைத்தார். கடை கட்டி முடிக்க 12 ஆனது. கடையை மூடினாலும் கழுவி ஏறக்கட்ட அவ்வளவு நேரமானது. இடையிடையே காளிக்கு போன் அடித்து காரினை ஏற்பாடு செய்ய வலியுறுத்தினார்.

காலையும் அங்கேயே குளிப்பதாக சிறுவன் அடம்பிடித்தான். கார் பத்துமணி வாக்கில் தயாரானது. “தமிழ், இங்க பக்கத்துல காஞ்சிபுரத்துல நிறைய கோவில்கள் இருக்காம். நாங்க அங்க உங்க ரெண்டு பசங்களையும் கூட்டிகிட்டு போகலாமா? இன்னைக்கும் இங்கயே தங்கறதா இருக்கோம். பையன் சந்தோஷமா இருக்கான். இதைவிட வேற என்ன வேணும் சொல்லுங்க” என்றார். மாமா சம்மதிக்க ஜோராக தயாரானார்கள். பின்னிருக்கையில் மூவரும் அமர அம்மா காரோட்ட அப்பா இவர்களை பார்த்துக்கொண்டே வந்தார். விரும்பிய இடத்தில் நிறுத்தினார்கள். கோவில்களில் விளையாடினார்கள். செங்கன் ஒரு அம்மா தன் குழந்தையை பார்த்துக்கொள்வது போல பைந்தமிழனையும், சிறுவனையும் பார்த்துக்கொண்டான். செங்கனிடம் உனக்கு என்ன பிடிக்கும், வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க, என்ன படிக்கப்போற என நிறைய கேட்டார் சிறுவனின் அம்மா. மாமாவின் தேநீர் கடைக்கு திரும்ப பின் மாலையாகிவிட்டது. சிறுவன் சோர்ந்து இருந்தான். அம்மாவுடன் உறங்குவதாக அறைக்கு சென்றுவிட்டார்கள்.

மறுநாள் விடியற்காலையில் காரில் நால்வர் பயணித்துக்கொண்டு இருந்தார்கள். அப்பா காரோட்ட அம்மா அருகில் அமர பின்னிருக்கையில் செங்கனும் சிறுவனும். செங்கனின் ஊரினை நோக்கி கார் சென்றுகொண்டு இருந்தது. செங்கனின் தன் வீட்டருகே காரில் இருங்குவதை எண்ணி அகமகிழ்ந்து இருந்தான். கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி.

முன்னிரவு நடந்த உரையாடல் நினைவிற்கு வந்தது. அவன் அப்பா மாமாவிடம் “தமிழ், செங்கனோட பேசும்போது அவனுக்கு சைக்கிள் மேல ரொம்ப க்ரேஸ் போல தெரியுது. நீங்க தப்பா நெனைக்கலன்னா அவனுக்கு சைக்கிள் வாங்க நான் காசு தரட்டுமா? என் பையன் லோகி லோகின்னு சொன்னது அவன் நெருங்கின நண்பனோட பேரை. அவன் கூட படிக்கிறான் லோகித். அவன் பள்ளியில. அவன் பக்கத்துல தான் உட்காருவான். ஒரு சிறப்பு குழந்தை எப்படி பள்ளியில தனியா விட்றதுன்னு அவ்ளோ பதறிட்டு இருந்தோம் தமிழ். லோகித் தான் பெரிய ஆறுதலா இருந்தான். என் பையனை பத்திரமா பார்த்துகிட்டான். அவனை இவன் அடிப்பான், கிள்ளுவான் ஆனாலும் அவன் ரியாக்டே செய்ய மாட்டான். அந்த வயசிலயே அவ்ளோ புரிதல். ஒரு சக பெற்றோர்களுக்கு கூட அவ்ளோ புரிதல் இருப்பதில்லை. அதான் செங்கனை பார்த்ததும் அவனுக்கு லோகித் நெனப்பு வந்துடுச்சு. சாரி ஏதேதோ பேசறேன். இந்த பணத்தை வெச்சுக்கறீங்களா?”

“வேணாம் சார். வேணாம். என் பசங்களுக்கு அன்பு மட்டும் செலுத்த சொல்லித்தரேன். திரும்ப எதிர்பார்க்க கூடாதுன்னு சொல்றேன். இப்ப அவனுக்கு இதை கொடுத்தா அன்புக்கு பதில் ஏதாச்சும் கிடைக்கும்னு நெனச்சுகிடுவான். நீ போ சார். உன் கஷ்டம் எனக்கு புரியுது. நாளைக்கு காலையில ஊருக்கு போகும் போது செங்கனை அவன் வீட்ல மட்டும் விட்டுடு. அவனுக்கு கார்ல போறதுன்னா புடிக்கும்”

கார் செங்கனின் ஊரை அடைந்தது. செங்கன் வீட்டின் முன்னால் நின்றது. சிறுவன் செங்கனின் கைகளை விடவே இல்லை. சிரமப்பட்டு இறங்கினான். தன் பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுத்தான் “அங்கிள்,  இந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை லோகித்துக்கு கொடுத்திட்றீங்களா?”

கண்களில் நீர் வழிய அச்சிறுவனின் அம்மா செங்கனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.


-விழியன்

2 COMMENTS

  1. சிறப்புக் குழந்தைகளை அவர்களின் மனநிலை அறிந்து கையாள்வது பெரி யவர்களுக்கே கடினம் என்னும்போது செங்கன், லோகித் போன்ற குழந்தைகள் மிக இயல்பாக அவர்களுடைய உலகத்தில் நுழைந்து இணைந்து விளையாடி மகிழ்வதும் மகிழ்விப்பதும் மனம் நெகிழ்த்துகிறது. நல்லதொரு சமூக மாற்றத்துக்கு குழந்தைமையிலேயே வித்திடும் கதை.பாராட்டுகள் விழியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.