துப்பறியும் பென்சில் 1 – தொடர் கதை

1.பூங்காவில் குழந்தைகள்

மஞ்சள் மாலைப்பொழுது. உடலுக்கு இதம் அளிக்கும் தென்றல் காற்று. எப்.எம் ரேடியோவில் இளையராஜா பாட்டு. டீ அருந்த ரோட்டோரக் கடைகளில் மக்கள் குவிந்தனர். சிலர் மாலை செய்தித்தாளுக்குள் தலை புதைத்து இருந்தனர். சிலர் அலுவலக வேலையில் உள்ள சிக்கல்களை அலுப்புடன் பகிர்ந்துக் கொண்டிருந்தனர். சிலர் இளையராஜாவை ரசித்துக் கொண்டே டீயை சுவைத்தனர். 

நேரமாக ஆக வானம் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கத் தொடங்கியது. வெயில் இருளுக்கு வழிவிட்டு சாலையில் இருந்து விலகி மறைந்து சென்று கொண்டிருந்தது.

பள்ளி முடிந்து குழந்தைகள் எறும்புகள் போல் வரிசையாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நன்றாக வளர்ந்த சிறுவர்கள் பேருந்துகளின் படிக்கட்டில் நின்றப்படி கம்பிகளில் வெளவால் போன்று தொங்கிக் கொண்டுச் சென்றனர். ஆங்காங்கே தூங்கி வழிந்த சாலைகள், ஆந்தைப் போன்று விழித்துக் கொண்டன. இரவுக்கான சாட்சியாகப் பறவைகள் கூடு அடையத் தொடங்கின. ஆலமரங்களில் உச்சியில் இருந்த  வெளவால்கள் விழித்துக் கொண்டு கூச்சல் இட்டு பறந்தன.  

அலுவலகம் முடித்து பலரும் வீடு திரும்பத் தொடங்கினர். சாலை இன்னும் நெருசலாகத் தொடங்கியது.  சாலையில் விதவிதமான வாகனங்கள் ஒளிகளைப் பாய்ச்சி சீறிப்பாய்ந்தன. 

மதுரை, புதூர் செல்லும் வழியில் உள்ள தாமரைத் தொட்டி சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த புதிய சிக்னல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த சிக்னலைக் கடந்து செல்ல வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன. 

அந்த சந்திப்பின் மேற்குபுறத்தில் பூங்கா ஒன்று இருந்தது. கிழக்கு பக்கம் செல்லும் சாலை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு சென்றது. பூங்காவின் எதிர்புறத்தில் தாமரை வடிவில் செய்யப்பட்ட தண்ணீர் ஏற்றும் தொட்டி உள்ளது. 

அதோ! சிக்னலின் பச்சை நிறம் ஒளிர்கின்றது. அழகர்கோவில் செல்லும் பேருந்து ஒன்று சிக்னலைக் கடந்துச் சென்றது. அந்தப் பேருந்தில் செல்பவர்கள் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதைக் கண்டு ரசித்தனர். வாங்க ! நாமும் அந்த பூங்காவிற்குள் நுழைவோம்.  இந்த பூங்காவில் இருந்துதான், இந்தக் கதை ஆரம்பமாக இருக்கின்றது. ஆகவே, இந்த பூங்காவை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

பூங்கா எப்போதும் போல் அழகாக காட்சியளித்தது. பூங்காவில் ஓங்கி வளர்ந்த வேம்ப மரங்கள் கோடையின் வெப்பத்தைத் தணித்துப் பூங்காவை குளிரச் செய்துக் கொண்டிருந்தன. மூக்குத்தி போன்று காட்சியளித்த வேப்பம் பூக்கள், பூங்கா எங்கும் உதிர்ந்து தரையில் கிடந்தன. அப்பூக்கள் வெண் கம்பளம் விரித்தது போன்று காட்சி அளித்தது.  அவைக் குழந்தைகளை வரவேற்றன. குழந்தைகள் பூக்களை மிதித்தபடி ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். 

பூங்காவில் விளையாடும் குழந்தைகளின் குரலில் ஆனந்தம் பூத்திருந்தது. எல்லாப் பூங்காவையும் போன்று சறுக்கல், ஏற்ற இறக்கம், ஊஞ்சல், இராட்டினம் போன்ற விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. இவைகள் குழந்தைகள் விரும்பும் வண்ணங்களில் வர்ணம் தீட்டப்பட்டிருந்தன. மஞ்சள், சிவப்பு, பச்சை எனக் குழந்தைகளைக் கவர்ந்தன. பூங்காவின் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன.

பூங்காவின் மத்தியில் நீர் ஊற்று இருந்தது. மீனின் வாயில் இருந்து நீர் கொப்பளித்து வெளிவருவது போன்று செய்திருந்தார்கள். மீன் தங்கநிறத்தில் வர்ணம் அடிக்கப்பட்டு மின்னிக்கொண்டிருந்தது. தங்க மீனின் வாயில் நீர் கொப்பளித்து வருவதைக் குழந்தைகள் அதிசயமாகப் பார்த்தார்கள். 

மாலைவேளையில் ஐந்து மணிக்கே, வாட்ச்மேன்  வர்ண விளக்குகளை எரிய விட்டிருந்தார். வண்ண விளக்கு ஒளியில் தங்கமீனின் வாயிலிருந்து வானவில் வெளியேறுவது போன்று நீர் ஊற்று காட்சியளித்தது. குழந்தைகள் மீனின் வாயில் இருந்து வெளியேறும் நீராலான வானவில்லை ரசித்துப் பார்த்தனர். பல குழந்தைகள் சாரலில் நனைவதற்கு ஆசைப்பட்டனர். 

குழந்தைகளில் பலரும் வேகமாக வீசும் காற்றுக்கு, பாதை மாறி, சாரலாக வெளிப்படும் நீர் துளிகளில் வர்ணத்தைத் தேடிப் பிடித்து மகிழ்ந்து  விளையாடினர். அவர்கள் கைகளில் எந்த வர்ணமும் ஒட்டாதது கண்டு ஆச்சரியப்பட்டனர். எல்லா நிறங்களும் ஒன்று சேர்ந்தால் கிடைப்பது வெண்மைதான் என்ற அறிவியல் ரகசியம் அறியாதக் குழந்தைகள் வர்ணங்களைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.   

இரு மரங்களுக்கு இடைப்பட்ட நிழலில் ஆங்காங்கே இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் அந்த இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

குழந்தைகள் பெரியவர்களைத் தொந்தரவு செய்யாமல் விளையாடினார்கள். அங்கிருந்த பெரியவர்கள் பலரும் நீர் ஊற்றை ரசிப்பதற்காகவே, அதன் எதிரில் உள்ள இருக்கைகளில் அமர்வதற்கு ஆசைப்பட்டனர். எப்போதாவது சில குழந்தைகள் அங்கு அமர்ந்து நீருற்றை வேடிக்கைப் பார்ப்பதும் உண்டு. 

பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது. நடைபாதை தவிர்த்து, மீதி இடங்களில் புற்கள் வளர்க்கப்பட்டு, சீராக வெட்டப்பட்டிருந்தன. பூங்கா பசுமை போர்த்தி கண்களுக்கு குளுமை அளித்துக்  கொண்டிருந்தது. 

பெரியவர்கள் எப்போதும் போல் அன்றைய செய்தி தாளில் வந்த முக்கிய செய்திகள் குறித்துப் பேசினார்கள். அரசியல் பேசும் சிலர், சில நேரங்களில் சண்டை போட்டுக் கொள்வதும் உண்டு. இன்றும் சிலர் அரசியல் பேசத்தொடங்கி இருந்தனர். ஆனால், குழந்தைகள் எதை பற்றியும் கவலைப்படாமல், ஓடி ஆடி விளையாடுவதில் தான் மும்மரமாக இருந்தார்கள்.

 

குழந்தைகள் விளையாடும் போது விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எப்படி? பள்ளியில் படிக்கும் போது கவனமில்லாமல் இருப்பதேன்? பள்ளி குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி இருப்பதில்லையா? விளையாடுவதற்கு அனுமதிப்பதில்லையா? விளையாட்டாய் கல்வி கற்றுத் தருவதில்லையா?! 

அன்றைய மாலை செய்தித்தாளை ரம்யாவின் தாத்தா கையில் பிடித்திருந்தார். அவருக்கு அருகில் ராம்குமாரின் தாத்தா அமர்ந்திருந்தார். இருவரும் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். 

“அந்த கௌசல்யாவைப் பார்த்தியா? பெத்தவங்களுக்குத் தண்டனை வாங்கி கொடுத்திருச்சு! தீர்ப்பு படிச்சுப் பார்த்திய்யா?” என ரம்யாவின் தாத்தா கேட்டார். 

“அட… என்னப்பா பெரிய தீர்ப்பு..அந்த பெண் சாதி மறுப்பு திருமணம் செய்த போது.. மானம், கௌரவம், மரியாதைன்னு அவ பெத்தவங்களுக்கு புற அழுத்தம் கொடுத்து, குற்றம் நடக்க காரணமாக இருந்த சொந்தக்காரச் சாதி வெறியர்களை விட்டுட்டாங்களேப்பா..” என ராம்குமாரின் தாத்தா பேசினார்.

 ”அந்த பெண்ணோட தைரியத்தையும் பாராட்டாமல் இருக்க முடியலைப்பா.. ஒத்தப்பிள்ளையானாலும் இப்படி புள்ளையத்தான்  பெத்துக்கணும்.”

“தாத்தா… கீழே தள்ளி விட்டுட்டான்..ம்ம்ம்ம்” என அழுது கொண்டு ரம்யா ஓடி வந்தாள். 

“அதானே..என்னடா இன்னும் அழுதுகிட்டு வரலையேன்னு நினைச்சேன்..” என சிரித்தார் ராம்குமாரின் தாத்தா.

“என்னடாம்மா..? அழாதே.! அழாமல் சொல்லு.”

“தாத்தா.. ரமேஷ்…ஊஞ்சல் விளையாட விட மாட்டீங்கிறான்… அவனே ஊஞ்சல்ல ஆடுறான். கீழே இறங்குன்னா அடிக்க வர்றான். ஓடி வந்தேனா.. கீழே விழுந்துட்டேன்…” 

“சரி வா.. ஊஞ்சலில் ஆட வைக்கிறேன்…” என அழைத்து சென்றார் ரம்யாவின் தாத்தா.

ஊஞ்சல் விளையாடுவதற்குதான் சண்டைகள் எப்போதும் நடக்கும். அந்த பூங்காவில் இரண்டு ஊஞ்சல்கள் மட்டுமே இருந்தன. குழந்தைகள் ஊஞ்சல் விளையாடுவதற்கே ஆசைப்பட்டனர். ரமேஷ் போன்ற சில குழந்தைகள் அதிக நேரம் ஊஞ்சல் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

ஊஞ்சல் தரையில் இருந்து பறந்து மேலே செல்லும் போது, பூங்காவின் செடிகள், செடிக்களில் மலர்ந்துள்ள பூக்கள், மரங்கள், மரங்களின் பட்டைகள், கிளைகள், இப்படி ஒவ்வொன்றாகப் பார்த்து கொண்டே குழந்தைகள் வானத்தைக் கண்டு மகிழ்ந்தனர். வானத்தில் இருந்து கீழே இறங்கி வரும்போது பூங்காவின் மதில் சுவர்களைத் தாண்டி பிரதான சாலையில் வரும் வாகனங்களைப் பார்த்து மகிழ்வார்கள். அதுவும் சூரியன் முழுவதும் மறைந்ததும், வானத்தில் இருந்து கீழே இறங்கும் போது, பிரதான வீதிகளில் வரும் வாகனங்களின் விளக்குவெளிச்சம் அவர்கள் முகத்தில் விழும் போது கூக்குரல் இட்டு ஆனந்தப்பட்டனர். சூரியனின் ஒளியை பெற்று, பிரதிபலிக்கும் நிலவைப் போன்று குழந்தைகளின் முகங்கள் வாகனங்களின் ஒளியில்  அழகாகப் பிரகாசித்தன.   

தூரத்தில் தாத்தாவை அழைத்து கொண்டு வரும் ரம்யாவை கண்டதும், ரமேஷ் ஊஞ்சலின் வேகத்தைக் குறைத்தான். 

“டேய் பேராண்டி, ரம்யாவும் ஊஞ்சல் ஆடணுமில்லையா?”

“தாத்தா.. அவளை ஊஞ்சல் ஆடுறதுக்குதான் கூப்பிட்டேன்..அவ அடிக்கத்தான் வர்றேன்னு ஓடி கீழே விழுந்துட்டா..”

“சரி.. போம்மா.. விளையாடு..” என ஊஞ்சலில் ஏறி அமரச் செய்தார். ஊஞ்சலைத் தள்ளி விட்டார்.  அப்போது ரம்யாவின் வகுப்பு தோழி சுபா ஓடிவந்தாள்.

“தாத்தா.. நீங்க போங்க..நான் ஆட்டி விடுறேன்…” என்றாள்.

அவர் சிரித்தபடி மீண்டும் இருக்கைக்கு வந்தார்.

“ஏம்பா.. பெரியசாமி.. ரம்யாவோட விளையாடுவாங்களே..சுமதி, சுமித்ரா அவுங்களை காணாமே..?” என ராம்குமாரின் தாத்தா கேட்டார். 

“அட பேப்பர் படிக்க மாட்டீய்யா… சும்மா வாட்ஸ்அப்தான் பார்ப்பீய்யா? பாரு.. கௌசல்யா தீர்ப்பு பற்றி பேசியதில்,  அதைச் சொல்ல மறந்துட்டேன்…”

“சரி..சரி, விசயத்துக்கு வாப்பா..”

“அட .. ஸ்கூலுக்கு காரில் போகும் போது.. டிராபிக் போலீஸ்ன்னு சொல்லி எவனோ இரண்டு பேர் வண்டியை நிறுத்தி இருக்கானுங்க. டிரைவரும் போலீஸ்ன்னு பதறி நிறுத்தி இருக்கான். அவன் கிட்ட லைசன்ஸ் .. இன்சுரன்ஸ்.. அது இதுன்னு கேட்டு இருக்கானுங்க, எல்லாத்தையும் எடுத்து டிரைவர் காட்டியிருக்கான். குழந்தைகளை வச்சு ஓட்டுறவன்.. ஓவர் ஸ்பீடில் ஏன் வந்த? ஸ்டேசனுக்கு வண்டியை விடு.  நீ வண்டி ஓட்டுற லட்சணத்தை உன் ஓனர் தெரிஞ்சுகிடட்டும் என வண்டிச் சாவியைப் பிடிங்கி இருக்கிறார்கள்…”

“அட பாவமே..!”

“இவன்  ‘சார் மன்னிச்சிடுங்க.. இனி ஓவர் ஸ்பீடில் வர் மாட்டேன்’ னு சொல்லி பாக்கெட்டில் வச்சிருந்த நூறு ரூபாயை நீட்டி இருக்கான். லஞ்சம் கொடுக்க பார்க்கிறீய்யா..ன்னு இரண்டு அதட்டு போட்டு, அவனைக் காரை விட்டு கீழே இறக்கி, மோட்டர் சைக்கிளில் உட்கார்ன்னு அதட்டி உட்கார வச்சிருக்கானுங்க.. ஒருத்தன் காரை ஓட்ட.. இன்னொருத்தன் காரை பின் தொடர்ந்து பைக்கில் அவனை உட்கார வைச்சு போயிருக்காங்க.. திடீர்ன்னு கார்..மாட்டுத்தாவணியைத் தாண்டி.. ரிங் ரோட்டில் மறைஞ்சிடுச்சு.. பின்னாடி பைக்கில் வந்தவன் டிரைவரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி அடுத்து ரிங் ரோட்டில் இறக்கி விட்டுட்டு.. உன் முதலாளிக்கு போன் பண்ணு.. அவன் குழந்தையைக் கடத்திட்டோம்ன்னு சொல்லு.. போலீஸ்க்கு போனா கொன்னுடுவோம்ன்னு…சொல்லி பறந்துட்டானாம்..”

“அடப்பாவமே…! எப்படி எல்லாம் நடக்குது.. உழைக்காம அடுத்தவன் காசைத் திருடித் திங்கணும்ன்னு தான் நினைக்கிறானுங்க..”

“பாவம்ப்பா..! அந்த பிள்ளைங்க..! ரெண்டு பொண்ணும் என்ன பாடு படுதோ..”

“ அது சரி இளையவள் இரண்டாவது படிப்பாளா?”

“அட.. மூத்தவ என் பேத்தியோட ஐந்தாவது படிக்கிறா.. இளையவள் மூன்றாம் வகுப்பு படிக்கிறாளாம்..ஐம்பது லட்சம் பணம் கேட்டு இருக்கானுங்கப்பா”

”என்னது ஐம்பது லட்சமா..? அவ்வளவு பணம் அவுங்க அப்பா வச்சிருக்காரா.. வீட்டைப் பார்த்தா சிறியதா தானே தெரியுது ?”

“அட ! குழந்தைகள் உயிரை விட பணமா முக்கியம்? பணம் எல்லாம் சம்பாதிச்சிக்கலாம். “

“அத சொல்லு.. சரி போலீசுக்கு போயிருக்கலாமே..?”

“மதியம் வரை எதுவும் தகவல் இல்லைன்னு தெரிஞ்ச பின்னாடி போலீசுக்கு போயிட்டாங்க..”

“டிரைவரை பிடிச்சு ரெண்டு தட்டு தட்டினா சொல்லிடப் போறான்.. இவ்வளவு நடந்திருக்கு..உடனே போன் அடிச்சு சொல்ல வேண்டாமா?”

“போலீஸ் டிரைவரை பிடித்து விசாரிச்சுகிட்டு தான் இருக்காங்களாம்..?”

“அட போப்பா.. நம்ம வாத்தியார் வீட்டில் திருடு போய் இரண்டு மாசம் ஆகுது ஒருதகவலும் சொல்ல மாட்டீங்கிறாங்க..போலீஸ் எல்லாம் வேஸ்ட்ப்பா.. தெய்வம் தான் அந்த குழந்தைகளைக் காப்பாத்தணும்”

குழந்தைகள் தங்களுடன் எப்போதும் விளையாடும்  சுமதியும், சுமித்ராவும் வராதது குறித்து கவலைக் கொள்ளவில்லை. அவர்கள் தங்களை மறந்து சறுக்கில் ஏறி சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர். சிலர் அங்கிருந்த ஏற்றம் இறக்கத்தில் குதித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். வாட்ச் மேன் விசில் ஊதினான். மணி ஏழு முப்பது. 

ரம்யாவை கையில் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார், பெரியசாமி தாத்தா. 

“பாப்பா… யார் கூப்பிட்டாலும் ஸ்கூலை விட்டு வெளியில் போகக்கூடாது” என்றார் பெரியசாமி தாத்தா.

“தாத்தா.. நம்ம சுமதியையும், சுமித்ராவையும் கடத்திட்டாங்களாம்! உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும். முகம் தெரியாதவங்ககிட்ட எப்பவும் கவனமா இருக்கணும். தெரியாதவங்ககிட்ட தேவையில்லாமல் பேசக்கூடாது. அவுங்க பேச்சு கொடுத்தாலும் கண்டுக்கக் கூடாது. அப்படியே தொந்தரவு பண்ணினால்.. அதோ எங்க பெரியப்பா வர்றார்..அவரோட வர்றேன்னு நழுவிடணும்.. சந்தேகம் வந்தா கத்திடணும்.. யாரையாவது துணைக்கு கூப்பிடணும்.., பள்ளிக்கூடத்தில் இருந்தா தைரியமா ஆசிரியர்களிடம் இவர் யார்ன்னே தெரியாதுன்னு போலீசை அழைக்கச் சொல்லணும்”

”சரிங்க தாத்தா.. பாவம் சுமதி.. சாப்பிட்டாலான்னு தெரியலை. எப்படி சிரிச்சு விளையாடுவா தெரியுமா? சாமிதான் காப்பாத்தணும்”

“அந்த குழந்தைகளை நினைச்சா வருத்தமாத்தான் இருக்கு. போலீசில் சொல்லி இருக்காங்க. பார்ப்போம்! சீக்கிரம் கிடைச்சிடுவாங்க.”

இவ்வாறு பேசியப்படி இருவரும் பூங்காவை விட்டு வெளியேறினார்கள். பூங்காவை விட்டு வெளியேறி நான்கடி எடுத்து வைத்த ரம்யா தாத்தாவை நிறுத்தினாள்.  ரம்யா என்ன நினைத்தாலோ தெரியவில்லை, ஓடிச் சென்று பூங்காவின் கதவருகே நின்றாள். 

பூங்காவின் கதவு பல வண்ணப் பென்சில்களால் செய்யப்பட்டிருந்தது. சிவப்பு வண்ணப் பென்சில் அருகில் சென்று எதையோ ரகசியமாக கூறினாள். 

பெரியசாமி தாத்தா அவளை விநோதமாகப் பார்த்தார். அவள் வேகமாக தாத்தாவிடம் திரும்பி வந்தாள்.  

”என்னம்மா! ஏன் ஓடி போனே?” எனக் கேட்டார்.

“தாத்தா! சுமதி எப்பவும் இந்த பென்சல்களிடம் எதையாவது பேசுவாள். நானும் இன்னிக்கு அப்படி பேசிட்டு வந்தேன்” என்றாள். 

“அப்படி என்னம்மா பேசுவா ?”

“பேனா காணம் போச்சு. பென்சில் காணம் போச்சு. புத்தகம் தொலைஞ்சு போச்சுன்னு இந்த பென்சில்கள் கிட்ட சொல்லிட்டு போவா தாத்தா! காலையில் எழுந்து பார்த்தால் தொலைஞ்ச பொருள் கிடைச்சிருக்கும்ன்னு சொல்லுவாள்.  அவள் சாய்ந்தரம் இங்க வரும்போது பென்சில்களுக்கு தாங்க்ஸ் சொல்லுவாள். நான் அதை நம்ப மாட்டேன்.. ஆனா, இப்ப அவளே தொலைஞ்சு போயிட்டா .. அதான், அவளைக் கண்டு பிடிச்சுதான்னு பென்சில்களிடம் சொல்லிட்டு வந்தேன்.”

தாத்தா சிரித்தபடி நடந்தார். 

”ஏன் தாத்தா சிரிக்கிறீங்க ?” எனக் கேட்டாள் ரம்யா. 

“அட போம்மா.. போலீஸ்கிட்ட சொல்லியே இதுவரை கடத்தல்காரன்களைப் பிடிக்கலையாம்.. கடத்தல்காரனுங்க.. போனில் தொடர்ந்து பேசிகிட்டு.. சுமதியோட அப்பாவை மிரட்டி காசு கேட்டுகிட்டுத்தான் இருக்கானுங்க.. அவனுக பேசுற செல்போன் டவர் வைச்சே போலீசால் பிடிக்க முடியலை..இப்ப இந்த பென்சில்தான் தேடிக் கண்டுபிடிக்கப் போகுது !”  

இருவரும் பேசியப்படி நடந்து சென்றன. அவர்களைப் பார்த்து பென்சில்கள் புன்னகைத்தன. 

 

தொடரும்…. 


-க.சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.