உலகில் இயங்கும் ஒருவரை, ஒருவரில் இயங்கும் உலகத்தோடு இணைப்பதே இலக்கியம்!


தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன. ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன; அரசியல், சமூகம், பொருளாதாரம், நுகர்வு கலாச்சாரம் உள்ளிட்டவை சார்ந்து கட்டுரை, விமர்சனம் என அல்புனைவிலும் தொடர்ந்து பங்களித்துவருகிறார். உலகின் முதல் நவீன நாவல் என்று வழங்கப்படும், செர்வாண்டிஸின் ‘டான் கிஹோதே’ (Don Quixote) மீதான இவரது விமர்சன-ஆய்வுக்கட்டுரை (review-essay) சமகாலத் தமிழ் அல்புனைவுத் தளத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்வு (phenomenon).

ஒசூர் தொரப்பள்ளியில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கும் குன்றுகள் ஒன்றின் மரத்தடி நிழலிலும், மின்னஞ்சல்கள் வழியாகவும் இந்த உரையாடல் நிகழ்ந்தது. நேர்காணல் வடிவத்துக்காகத் தொகுக்கப்பட்ட உரையாடலின் பகுதிகள் இங்கு:

எப்படி இருக்கிறீர்கள்?

அவ்வளவாக நன்றாக இல்லையென்றே சொல்வேன். இன்றைய சூழலில் ‘நன்றாக இருக்கிறேன்’ என்பவர்களை நான் சந்தேகிக்கிறேன். பல கவலைகளோடு கைகளை, இன்பாக்ஸை, செல்போன் கேலரியை, தேடுபொறி வரலாற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நெருக்கடி வேறு. ஆனால் The Pursuer கதையில், when somebody has a can of nescafe it is not fatal yet என கொத்தஸார் எழுதியுள்ளதைப் போல, எனது ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகனமும், 100 சதவீத அரேபிகா காஃபியும், புத்தகங்களும், இசையும் என்னை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கின்றன.

கடந்த ஆறு மாதங்கள், அதாவது கொரொனாவின் வருகைக்குப் பிறகான காலகட்டம், ஒரு மனிதராக அன்றி, எழுத்தாளருக்கான உங்கள் உளவியலில்—மனோநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

கடந்த ஆறு மாதங்களாகக் கூட இல்லை, ஆறு ஆண்டுகளாகவே உற்சாகமான மனநிலை அரிதாகத்தான் இருக்கிறது. உலகம் முழுக்க வெறுப்புக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிற காலமாக இது மாறியிருக்கிறது. வெறுப்பு அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்னும் இடத்தை இப்போது அடைந்துவிட்டது. [நான்] ஒரு குறிப்பிட்ட சாதி, மொழி, இனம், மதத்தினரை வெறுக்கிறேன் என்பது தீவிரமான பிரச்சினையாகப் பார்க்கப்படாமல், trivial elementஆக மாறியுள்ளது; புதிய இயல்பாக மாறியிருக்கிறது. அந்த வெறுப்பு எனக்குள்ளேயும் மெல்ல மெல்லப் பரவிக் கொண்டிருக்கிறதோ என்கிற உணர்வு எனக்கு இருக்கிறது. அந்த வெறுப்பை எப்படி எதிர்கொள்வது, என்னுடைய மனதில் இருந்து எப்படி அதை வெளியேற்றுவது – அந்த ஒரு போராட்டம் – அந்த phaseக்குள்ள நான் இப்போது சென்றுகொண்டிருக்கிறேன் என்பதைத் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சிந்தனைகள் எல்லாம் இத்தனை நாட்களாகப் பேசிக் கொண்டிருந்தோம். இவை வெறுப்பு என்ற பாறையை எப்படி எதிர்த்து நின்றுகொண்டிருக்கிறன்றன, எந்தளவுக்கு இந்தத் தத்துவங்களுக்கும், இந்த கொள்கைகளுக்கும் வெறுப்பு என்ற பெரிய பாறையை எதிர்த்து நிற்பதற்கான துணிச்சல், உடல்வலு இருக்கிறது என்பதை அணுகிப் பார்க்க இப்போது தோன்றுகிறது. தனிப்பட்ட முறையிலும் சரி, சமூகத்திலும் சரி வெறுப்பு உள்ளே நுழைந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். முதன்முறையாக இந்திய அரசியலமைப்பை ஆழக் கற்க வேண்டுமென்று நினைக்கிறேன். இன்றைய இந்தியாவை ஒப்பிடும்போது நமது அரசியலமைப்பின் அடிப்படைகள், இலட்சியங்கள் எனக்கு ஆச்சரியமளிக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இஸ்லாமிய நண்பர்களைப் பார்ப்பதில் இருந்து—இஸ்லாமிய நண்பர்கள் அப்படி ஒன்றும் அதிகம் கிடையாது எனக்கு—இப்போது அவர்களைப் பார்ப்பது, இத்தனை ஆண்டுகளில் மாறியிருக்கிறது. நான் வெறுக்கிறேன் என்ற அர்த்தம் கிடையாது. அவர்களுடைய visibility என்னுடைய கண்களுக்கு வேறு மாதிரி தெரிய ஆரம்பித்துவிட்டது.

A subject to deal with என்ற இடத்தை இஸ்லாமியர்கள் இப்போது அடைந்திருக்கிறார்கள்; நம்முடைய சமூகம் அடைந்திருக்கிறது. அது மிகவும் ஆபத்தானது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் பெரும்பாலான மக்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களே அதிதீவிர வலதுசாரியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பத்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பலரும் இடதுசாரிகளாக இருந்தனர். பத்து ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சியில் பலரும் இப்போது காங்கிரஸ்காரர்களைப் போல் இருக்கிறோம். நாளைக்கே இந்தியா-சீனா போர் ஒன்று மூண்டால், பலரும் பா.ஜ.க-வினராகவே மாறிவிடுவோம். இந்த ஒரு அபாயம் தான் அது.

பத்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் உலகமயமாக்கத்தின் மாபெரும் வளர்ச்சியை இந்தியா கண்டது. Auto, IT, real estate இந்த மூன்று துறைகளும் இந்தப் பத்து ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியடைந்தன. அடிப்படைவாதத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. யார் ஒரு சமூகத்தில் பொருளாதார வல்லாண்மையோடு இருக்கிறார்கள், பொருளாதார வளர்ச்சியின் பலன்களை எந்தச் சமூகம் அதிகமாக அனுப்பவிக்கிறது என்கிற விஷயம் அடிப்படைவாதிகளுக்கு உண்டு.

மார்க்சியம் வீழ்ச்சியடைந்த பிறகு, உலகம் கலாசாரத்துக்குத் திரும்பியது. பின்நவீனத்துவம் அடிப்படையில் கலாசாரத்தை நோக்கி சிந்தனையைத் திருப்பிவிட்டதன் பெரிய துரதிர்ஷ்டம் வலதுசாரிகள் கலாசார அடையாளங்களைக் கைப்பற்றி இன்று உலகம் முழுக்க ஆள்கிறார்கள்.

பின்நவீனத்தும் இடதுசாரிகளை ஒழித்து, அடிப்படைவாதிகளுக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அதைத் தெரிந்து செய்தார்களா, தெரியாமல் செய்தார்களா என்று எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது.

இந்தக் கலாசார திருப்பம் என்பது பெரிய ஆபத்தில் போய் முடிந்திருக்கிறது.

வளர்ச்சி என்று நாம் பேசுகிறோம், இல்லையா. 1990-களுக்குப் பின்பு அனைத்துப் பிராந்தியங்களும் முழுக்கவே உலகமயம் ஆகிவிட்டன; சீனாவையும் சேர்த்து. சீனா, இந்தியாவைப் போல் 250 கோடி மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகள் WTO-உடன் ஒப்பந்தமிட்டு, உலகமயத்துடன் இணைந்த பிறகு உலகம் வேறு மாதிரி ஆகிவிட்டது. இது ஒரு மிகப் பெரிய திருப்பம். ஆரம்ப ஆண்டுகள் இந்தியாவில் இருந்த கதையாடல், பொருளாதாரம் சார்ந்து தான் இருந்தது. ‘இந்தியா ஷைனிங்’ — அத்வானியின் முக்கியமான தேர்தல் பிரச்சாரமாக இருந்தது.

உலகமயமாக்கத்தின் பலன்களை அனுபவித்து முடித்த பிறகு, 2008-இல் அது நெருக்கடிக்குள்ளாகிறது. அதன் தாக்கம் இங்கேயும் வரத் தொடங்கிவிட்டது. ஓரளவுக்கு அல்ல, பெரிய அளவில் உலகமயமாக்கத்தினால் இந்தியாவில் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இந்தியாவில் பல கோடி மக்கள், கீழ் மத்திய தர வர்க்கத்தில் இருந்து மத்திய தர வர்க்கத்துக்கு வந்திருக்கின்றனர். அதன் எண்ணிக்கை 30-35 கோடி. இது உலகின் பெரும்பான்மையான நாடுகளின் மக்கள்தொகைக்கு மேலே தான் இருக்கிறது.

இப்போது உணவுக்குப் பிரச்சினை கிடையாது. தான் விரும்பும் வாழ்க்கைமுறையை afford பண்ண முடியாததே இப்போதைய பிரச்சினை. ஒவ்வொரு தலைமுறையிலும் ஏழைகள் இப்படித் தான் உருவாகிறார்கள். பசி, உடுப்பு சார்ந்த ஏழ்மை இப்போது இருக்கிறது, ஆனால் அடுத்த கட்ட ஏழ்மையும் வர ஆரம்பித்திருக்கிறது. இப்போதைய மத்தியத் தர வர்க்கம், அடுத்த 20-30 ஆண்டுகளில் மத்தியத் தர வர்க்கமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். நமது கல்வி, உடல்நலம் அனைத்துமே கைக்கு எட்டாத தொலைவுக்கு உயர்ந்திருக்கின்றன.

காங்கிரஸ்காரர்கள் கலாச்சார விசயத்தில் Paupers. கலாசாரப் பின்புலத்தில் பா.ஜ.க-காரர்கள் பணக்காரர்கள். இந்தியாவிலே பா.ஜ.க-விற்குப் போட்டி காங்கிரஸ் அல்ல, திமுகதான் என்று நினைக்கிறேன். உலகமயமாக்கத்தில் பணக்காரர்களான இடைநிலை சாதிக்களுக்கு, கலாச்சார மேலாதிக்கம் (cultural supremacy) தேவைப்படுகிறது. தன்னுடைய அடையாளத்தை அதிகாரமாக்குவது எப்படி என்கிற விஷயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள் கவுண்டர்கள் கட்சி ஆரம்பிப்பார்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது. அவர்களில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தவர்கள்; பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த சமூகம், அடுத்ததாக அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்ற நிலைக்கு வருகின்றனர். பணம் மட்டுமே சமூகத்தில் அதிகபட்ச செல்வாக்கு கொடுப்பதில்லை, அதையும் தாண்டி அரசு அதிகாரத்தில் இருப்பதுதான் உச்சபட்ச செல்வாக்கு என்பதை ஒவ்வொரு சமூகமும் இப்போது உணர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் தான் கவுண்டர்கள் தமிழகத்தில் ஒரு கட்சி ஆரம்பித்திருக்கும் நிகழ்வு எல்லாம் நடக்கிறது; நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு சமூகத்துக்கான மாடலாக இது மாறிக் கொண்டிருக்கிறது. ஆகவே இடைநிலைச் சாதிகள் இந்து அடையாளத்திற்குள் இணைத்துக் கொள்கிறார்கள். ஜனநாயகம் இருக்கும்வரை, தேர்தல் இருக்கும்வரை சாதிதான் அச்சு. அடிப்படைவாதத்திற்கும், அருகி வரும் இயற்கை வளங்களை யார் கைப்பற்றுவது என்பதற்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலத்தை யார் ஆதிக்கம் செய்வது என்று. அடையாளம், பின்நவீனத்துவம் உருவாக்கிவிட்ட வெற்றிடம், உருவாகும் கண்காணிப்புப் பொறிகள், அழிக்கப்படும் இயற்கை, இவற்றிற்கு இடையே ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் சிறிய வெற்றிகளைத் தவிர்த்து ஏதும் உற்சாகமாக இல்லை. ரொம்ப பேசிவிட்டேனா?

பின்நவீனத்துவம் என்னும் சிந்தனைப் போக்கு இன்று வந்தடைந்திருக்கும் இடம்/நிலையாக நீங்கள் கருதுவது எதை?

உண்மைக்கான ஏக்கத்தை கதையாடலுக்கான ஏக்கமாக பின்நவீனத்துவம் மாற்றிவிட்ட பிறகு அதன் மோசமான விளைவுகளாகப் போலிச்செய்தி (Fake-news) அதை ஒட்டி உருவாகும் வன்முறையை நாம் பார்க்கிறோம். அனைத்துமே subjective realityயாக பார்ப்பது என்றால் நம்மால் ஒரு சமூகமாக ஒன்றிணைந்திருப்பது கடினம்தான். அதே சமயம் நமது அரசியல், மதக் கோட்பாடுகளும் உதவிகரமாக இல்லை.

சமீபத்தில் உம்பர்த்தோ ஈகோவின் Chronicles of Liquid Society எனும் நூலின் வழியாக Zygmunt Bauman எனும் சமூகவியலாளர்-தத்துவவாதியின் அறிமுகம் கிடைத்தது. பின்நவீனத்துவம் எல்லாவற்றிலும் நிலையற்றதன்மையை உருவாக்கிவிட்டது என்கிறார் ஈகோ. பவுமன் இதை ‘லிக்விட் சொசைட்டி’ என்று சொல்கிறார். அவர் எழுதியிருப்பதைச் சொல்கிறேன். நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து நமது பிரச்சினைகளை நாகரீகமான வழியில் தீர்த்துக் கொள்ள இருந்த ஒரு அமைப்பை நாம் இழந்துவிட்டோம் என்கிறார். நமது அரசியல்வாதிகள் மாஃபியா பாஸ்களைப் போலாகிவிட்டார்கள் என்கிறார். தனிமனிதர்களாக அதுவும் ஒரு நுகர்வோராக நம்மைச் சுருக்கிவிட்ட பின்நவீனத்துவக் காலகட்டத்திற்குப் பிறகு நம்மால் எதன் மீதும் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாமலும் ஆகியிருக்கிறோம்.

‘Certainty of the law is lost, the judiciary is regarded as an enemy, and the only solutions for individuals who have no points of reference are to make themselves conspicuous at all costs, to treat conspicuousness as a value and to follow consumerism. It is not just people, society itself is living in an increasingly precarious condition…’ என்கிறார், அதோடு முக்கியமான ஒன்றாக அவர் சொல்வது:

‘விண்ணிலிருந்து வரக்கூடிய மீட்பில், அரசில், புரட்சியில் நாம் நம்பிக்கை முடிந்த பிறகு நம்மிடமிருப்பது (அறச்) சீற்றம் மட்டுமே. அந்தச் சீற்றத்திற்கு அது எதை விரும்புவதில்லை என்று தெரிந்திருந்தாலும், அது என்ன செய்கிறது என்று அதற்கே தெரியவில்லை’ என்கிறார்.

சமீபத்தில் நாம் நீதித்துறையின் மீதும் நம்பிக்கையற்ற இடத்திற்குச் சென்றிருக்கிறோம். Conspicuous என்பதுதான் நாம் இன்றைக்கு சமூக ஊடகங்களின் வழியாகச் செய்து கொண்டிருக்கிறோம். Visibility இல்லையென்றால் நமது வாழ்க்கைக்கு என்ன மதிப்பிருகிறதென்ற இடத்திற்கு வந்துவிட்டோம். Visibility-க்காக நாம் கொடுத்திருக்கும் மிகப்பெரிய விலையை நம்மால் உணரக் கூட முடியாத இடத்தில் இருக்கிறோம். நாமே நமது தனிப்பட்ட வாழ்வின் உள்ளார்ந்த கூறுகளை பொது இடத்தில் கொட்டி, பின்பு பொது இடங்களில் உருவாகியிருக்கும் பிம்பங்களால் நமது தனிப்பட்ட வாழ்வின் உள்ளார்ந்த கூறுகளை நிரப்பி விட்டோம். மீண்டும் பின்நவீனத்துவத்திற்கு சென்றால், subjectivity என்ற ஒன்று உண்டா என்று அது கேட்கும். இப்போது அரசு சொல்கிறதே, privacy என்ற ஒன்று இல்லையென்று. நாம் இப்போது subjectivity-யும் privacy-யும் இல்லையென்ற இடத்திற்கு வந்தபிறகு, நமது நேர்மையான கோபம் வடிகாலற்று வெறுமனே ஊதிப்பெருகி நம்மை தனிமையின் இருளில் குமுறிக் கொண்டிருப்பவர்களாக ஆக்கியிருக்கிறது.

Liquid society என்ற கருத்தாக்கத்தை, அப்படி ஒன்று இருப்பதை அறியாமலேயே, ஜங்க் என்ற கதையில் பயன்படுத்தி இருக்கிறேன் என்று தோன்றுகிறது.

ஆனால் பல நாடுகளில் மத அடிப்படைவாதம் அதிகாரம் செலுத்துகிறது. ஹங்கேரியில் பாருங்கள் விக்டர் ஓர்பான் என்ன செய்கிறார் என்று. துருக்கியில், மியான்மரில், இலங்கையில், பாகிஸ்தானில்… இந்தியாவில் மதச்சார்பின்மை இறந்தே விட்டது. இந்தியா ஒரு ஐரோப்பிய நாட்டைப் போல சுதந்திரமும், தொழில்நுட்ப வளர்ச்சியும், சமூகப் பாதுக்காப்பும் உள்ள நாடாக ஆகக் கூடுமென்ற எதிர்ப்பார்ப்பு நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு இருந்திருக்கிறது. ஆனால் நம்மில் பலர் அதனைப் பாகிஸ்தானோடு போட்டி போடுபவர்களாக மாற்ற நினைக்கிறார்கள். இந்து-இஸ்லாமியப் பிரச்சனை இருநூறு ஆண்டுகளாகத் தீர்க்கபடாமலே போய்விட்டது நமது மாபெரும் துயரம். இந்தியச் சுதந்திரமே பல பகுதிகளின் ஒன்றிணைவினாலும், பிரிவினையாலுமே பெறப்பட்டது. இப்படி ஒன்றிணைவும், பிரிவினையும் ஒரே சமயத்தில் நிகழ்ந்ததால், நாம் ஒற்றுமைக்கும், சந்தேகத்திற்கும் இடையே ஊசலாடுகிறோம். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதமும் பெரிய நெருக்கடியாக உருவாகியது.

ஏன் சில நாடுகள் தத்தமது பெரும்பான்மை மதங்களின் சவுதி அரேபியாவாக ஆக விரும்புகின்றன என்ற ஒரு நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. மத அடிப்படைவாதத்திற்கு எதிராக பின்நவீனத்துவம் என்ன பேசுமென்று கேட்க ஆவல். மத அடிப்படைவாதமே ஒரு கதையாடல்தான் என்று சொல்லுமா? பின்நவீனத்துவவாதிகள் கொஞ்சம் விளக்கினால் தெளிவு கிடைக்கும்.

ஃபாசிசம்!

Exactly! சமீபத்திய அனுபவம் ஒன்றை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் தெருவில் முதல் வீட்டில் ஒரு திருட்டு. அதை விசாரிப்பதற்காக டெம்போ டிராவலர் வண்டி நிறைய போலீஸ் வந்திருந்தார்கள், ஏன் அத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை அந்த சமயத்தில் அந்த வாகனம்தான் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அன்றைக்குத் தெருவில் நுழையும்போது உண்மையில் எனக்குப் பயமாக இருந்தது. ஏனென்றால், அதற்கு முந்தைய நாள் தான் வாட்ஸ்அப்-இல் ஒரு அரசியல் கேலி நிலைத்தகவல் ஒன்றை வைத்திருந்தேன். எதிர்ப்பைவிட கிண்டலும் கேலியும் கூர்மையான அரசியல் ஆயுதமாகத் தான் நான் பார்க்கிறேன். உண்மையாகவே பயந்தேன். யாரோ இதுகுறித்து என்மீது புகாரளித்ததால் விசாரிக்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். இந்த பயத்தை உருவாக்குவதுதான் ஃபாசிசம்.

உங்கள் நண்பர்களை, சக பணியாளர்களை, உங்கள் தெருவில் வசிப்பவர்களை, குண்டர்களை, தொடர்பேயில்லாத யாரை வேண்டுமானாலும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, உங்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்த முனைகிற ஒன்றே ஃபாசிசம். அது உங்களை ஒதுங்கியிருக்கவும், ஊமையாக வாயடைக்கச் செய்வதையே வெற்றியாகக் கருதாது, மாறாக அதனோடு நீங்கள் இணைவதையே அதன் வெற்றியாகக் கருதுவது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவாகி வந்த ஒருவர் என்ற முறையில், அக்காலகட்டத்தின் கலை, இலக்கிய, சமூக, அரசியல் மாற்றங்கள் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த உங்கள் அவதானிப்புகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு 2K kid. 90-களில் இந்திய இலக்கியத்தில் தலித் இலக்கியம், பின்காலனிய இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம் என்று உருவாகிவந்தன. நான் அந்த அலைகள் ஓய்ந்த பின்பு எழுத வந்தவன் என்றே சொல்லலாம். Dalit emancipationனின் காலகட்டத்தில் தலித் இலக்கியம் கைகோத்து எழுந்தது. பெண்ணியக் கவிதைகள் பெருகின. சுகிர்த ராணி, சல்மா, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, மாலதி மைத்ரி என பொதுச்சமூகத்தின் கண்டனத்தையும் தாண்டி உருவானவர்கள் இவர்கள். 90-களுக்குப் பிறகான பெண்களின் கவிதைகள் ஒரு முக்கியமான பாய்ச்சல். சினிமாக்காரர்கள் இவர்களை ஆபாசம் என்று வசைபாடிய வேடிக்கையும் நடந்தது. ஈழ இலக்கியம் இந்தக் காலகட்டத்தில்தான் பெருமளவு இங்கே வாசிக்கப்படுகிறது. ஷோபா சக்தியின் கொரில்லா நாவலை நானும் என் நண்பன் ஒருவனும் எங்கள் சிற்றூரில் ஒன்றாக வாசித்தோம். அந்த நாவல் பெரிய கிளர்ச்சியை அளித்தது. 60-களுக்குப் பிறகு திராவிட இலக்கிய எழுத்தாளர் என்ற ஒருவர் வரவேயில்லை, அதே சமயம் இடதுசாரி எழுத்துக்களும் வசீகரமிழந்தன. இரண்டாயிரங்களில் ஜெயமோகனும், எஸ்.ரா-வும், சாருவும் இணையத்தைப் பயன்படுத்தி பெரிய வீச்சைப் பெற்றனர். இவர்களில் ஜெயமோகன் ஒருவித நியோ-கிளாசிக்கல் இடத்தை உருவாக்குகிறார். பலரும் அவரைப் போல எழுத முனைகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவரை நாடினால் இலக்கிய உலகில் கவனம்பெறலாம் என்று நினைக்கிறார்கள். தற்போது தமிழ் இலக்கியச் சூழலில் மட்டுமல்ல உலக இலக்கியச் சூழலே கூட சோர்ந்து போய்விட்டதான உணர்வு இருக்கிறது. ஆனால் இந்த அலுப்பை கிளாசிக்சைப் படித்துப் போக்க முனைகிறோம். மற்றொரு பக்கம் அமெரிக்க எதிர்க்கலாச்சார எழுத்தாளர்களை வாசித்துத் திருப்தியடைகிறோம். கிளாசிக்குகளைப் படிக்கலாமே ஒழிய, உருவாக்க முயலக் கூடாது என்று தோன்றுகிறது. லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் (László Krasznahorkai), திமிங்கிலத்தை The Melancholy of Resistance நாவலில் பயன்படுத்தியிருந்தாலும், அது மெல்வில்-இன் மோபி டிக் அல்ல. நாம் இந்த வேறுபாட்டை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். melodramaவை கிளாசிக்கென்று நம்பி ஏமாறக் கூடாது.

வாசிப்பு தீவிரமடையும் கணங்களில் எழுதுவது பற்றி ஒருவர் யோசிக்கக்கூடும். நீங்கள் எழுத முடிவெடுத்த கணம் எது? எப்படி எழுத வேண்டும் என்பது குறித்த முன்முடிவுகள் இருந்தனவா? அல்லது எழுத்து தன்னிச்சையான ஒன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்தீர்களா?

ஒரு வாசகனாகத் துவங்கி எழுத்தாளனான பிழையைச் செய்த எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். பல முன்முடிவுகள் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்தன. ஆரம்பத்தில் ராஜேஷ்குமாரைப் போல, பின்பு ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, போர்கேஸ், காஃப்கா, இப்போது மிஷிமா என்று நான் பலரோடு அடையாளம் செய்து கொள்கிறேன். ஒரு முழுநீள துப்பறியும் நாவலொன்றை எழுதியதே எனது முதல் எழுத்து. எனது அந்த அற்புதமான துப்பறியும் நாவலை வாசித்த எனது மாமா பையன், ‘அவனுக்குக் கோபம் வந்தது’ என்று ஓரிடத்தில் நான் எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி ‘அவனுக்கு மில்லி மீட்டர் மில்லி மீட்டராக கோபம் வந்தது’ என்று எழுது என்றான். ராஜேஷ்குமார் அப்படித்தான் எழுதுவார். அந்த நல்ல வாசகன் உருவாக்கிய எழுத்தாளனே நான். முன் கேட்ட கேள்விக்கான பதிலும் இதில் இருக்கிறது. தன்னிச்சையாக எழுத வேண்டுமென்று இப்போதுகூட நினைப்பதில்லை. ஒரு காலத்தில் கடிதங்களை அவ்வாறு எழுதியதுண்டு.

ஒரு பிரதி யாருக்காக எழுதப்படுகிறது என்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. நீங்கள் ஒரு பிரதியை யாருக்காக எழுதுகிறீர்கள்?

இதென்ன Achilles paradox போன்ற ஒன்றா? இந்தக் குழப்பம் எப்போதோ தீர்ந்துவிட்டதே. எழுதுபவரே அவரது படைப்பின் ஒற்றை வாசகராக இருக்கிற சூழலும்கூட, எல்லாப் பிரதிகளும் வாசிக்கப்படுவதற்காகவே எழுதப்படுகின்றன.

படைப்பு என்பது எழுதும்போது மட்டும் நிகழக்கூடியது அல்ல. அதற்குப் பல்வேறு நிகழ்வுகள், நினைவுகள் இத்யாதி பங்களிக்கின்றன. இந்தப் பின்னணியில் எப்போதெல்லாம் எழுத்தாளராக நீங்கள் உணர்கிறீர்கள்?

எழுத்தாளராக உணர்வது, எழுத்தாளராக இல்லாமல் உணர்வதற்கான இடைவெளி எனக்கு இப்போது குறைந்துகொண்டு வருவதாக நினைக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ள நினைத்தது ஈடேறாமல் போயிருக்கலாம். ரொம்ப productiveஆக இருக்க வேண்டும் என்று நினைத்த பத்து ஆண்டுகளில் இரண்டு புத்தகம்தான் வெளிவந்திருக்கிறது. அடுத்தப் பத்து ஆண்டுகளில் எழுத்தாளன் என்ற பகுதிக்குத் தான் அதிகபட்சமாக இடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் எழுத்தாளன் ஒருவன் வேலைக்குப் போவதாகத் தான் உணர்கிறேனே ஒழிய, வேலைக்குச் சென்றுவிட்டு வந்து எழுதுகிறவனாக நினைக்கவில்லை.

இரண்டாவது புத்தகத்தின் வெற்றிதான் காரணமோ என்று நினைத்தேன். அதுமட்டுமே இல்லை. வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததால், ஒரு தேர்வு இப்போது வந்திருக்கிறது. நிறைய செய்ய முடியாது என்பது நமக்குத் தெரிந்திருக்கிறது; நிறைய செய்வதற்கான சந்தர்ப்பமும், காலமும் கிடையாது என்று உணர்கிறேன். 30-ஐ ஒட்டிய வயதுகளிலே இதை உணர்ந்துவிடுவோம், இல்லையா? நான் பத்து ஆண்டுகள் பிந்திவிட்டதாக உணர்கிறேன்.

தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன? இங்கு உங்களை எங்கு பொருத்திப் பார்க்கிறீர்கள்?

உலக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கிய பிறகு தமிழில் எழுதப்பட்டவை எனக்குப் போதாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இங்கே நிகழ்ந்திருப்பவை சாதாரணமானவையல்ல. அது தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களுக்கு அளித்திருக்கும் வாய்ப்புக் குறைபாட்டால் உருவான போதாமை என்றே தோன்றுகிறது. இங்கே திருட்டுத்தனமாக விற்கப்படும் குட்காவைக் காட்டிலும் இலக்கியத்தின் சந்தை மதிப்புக் குறைவுதான். போலி சிகரெட்டுகளை, போலி புரதப் பவுடர்களைத் தயாரித்தால்கூட இங்கே பிழைத்துக் கொள்ள வழியிருக்கிறது. இலக்கியத்தில் இறங்குபவர்கள் ஏற்கனவே மூழ்கிவிட்டவர்கள்தான். நமது பள்ளிக் கல்வித்துறை ஸ்காண்டினேவிய கல்விக்கு ஒப்பான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யப் போவதாகச் சொல்கிறது. இங்கிருக்கும் தனியார் பள்ளிகள் அல்ல, அரசுக் கல்வித்துறை சொல்கிறது. பல வருடங்களுக்கு முன்பு சென்னை குவின் மேரிஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருத்தி தெரிதாவின் கோட்பாடுகளின் படி ஓவியம் வரைவதாகச் சொல்லியிருந்ததை நான் வாசித்தேன். ஒரு நாளாவது அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை அப்படி சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். மேலும் நான் நமது சமூகமே ஸ்காண்டினேவிய நாடுகளுக்கு ஒப்பான இடத்தை அடைய வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்கு ஏராளமான செல்வம் வேண்டும். அதற்கும் மேலாக சிறப்பான கனவு ஒன்று வேண்டும். என்னைப் பொறுத்தவரை இலக்கியம் இங்கே பல அசட்டுத்தனங்களின் கூடாரமாக இருக்கிறது. சமூக ஊடகக் கூச்சல்கள் வேறு காதை அடைக்கின்றன. தமிழ் இலக்கிய சூழலைப் பொறுத்தவரை நான் விலகி நிற்கும் ஓர் அந்நியன்.

உண்மையில் இலக்கியம் ஒரு மனிதனுக்கு என்ன தருகிறது. நுண்ணுணர்வு, அறம் போன்ற விளக்கங்கள் சலிப்பைத் தருகின்றன. இவற்றையெல்லாம் மீறி உண்மையில் ஒரு மனிதனின் வாழ்வில் கலை இலக்கியத்தின் பங்கு என்ன?

என்னைப் பொறுத்தவரையில் இலக்கியம் நமக்கு இந்தப் பரந்த வாழ்வைப் பற்றிய ஒரு familiarity-ஐத் தருகிறது. நான் ஒரு மீனவனல்ல. ஆனால் ஆழி சூழ் உலகு வாசிக்கும்போது அந்த வாழ்வு எனக்கு familiar ஆகிறது. நம்மால் தனிப்பட்ட வாழ்வில் அம்மணி அம்மாளை மன்னிக்க முடியுமா? ஆனால் பாருங்கள் அம்மா வந்தாளை வாசிக்கும்போது நாம் அவள் பக்கமே நிற்கிறோம். அவளுடைய நிலை கண்டு வருத்தமடைகிறோம். வாழ்வின் அனைத்துப் புலங்களின் மீதும் ஒரு நட்பை உருவாக்கித் தருவதே இலக்கியத்தின் பங்கு. உலகில் இயங்கும் ஒருவரை, ஒருவரில் இயங்கும் உலகத்தோடு அது இணைக்கிறது; வரலாறோ, அறிவியலோ இதைச் செய்வதில்லை.

இலக்கியத்தை அனுபவமாகப் பார்க்கும் வாசகனுக்கும், வாசிப்பின் நுண்ணுணர்வாகப் பார்க்கும் வாசகனுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன? தமிழிலக்கிய வாசகர்கள் மீது பொதுவான விமர்சனங்கள் ஏதும் உங்களுக்கு உண்டா?

ஒரு கதாபாத்திரத்தின் ஒரு குறிப்பிட்ட அனுபவம் என்னுடைய அனுபவத்தை ஒத்திருப்பதை வாசித்தால் எனது அனுபவத்தினால் உண்டான விளைவுகளின்பால் ஒரு அமைதி கிடைக்கிறது. அது எனக்கு மட்டுமே நேர்வதில்லை என்ற அறிதலால் விளையும் அமைதி; இது இலக்கியத்தின் முதல்படிதான். ஆனால் டோல்கெய்னை வாசிக்கும்போதும், டியூன் (Dune – Frank Herbert) நாவலை வாசிக்கும்போதும் நமக்கு என்ன கிடைக்கிறது? அங்கே நாம் பெறுகிற ஒன்று நாமல்லாத வேறொரு அனுபவம். இங்கே நமது அனுபவம் அல்ல நுண்ணுணர்வே செயல்படுகிறது. நாம் படைப்பின் வசீகரத்தில் மூழ்கி விடுகிறோம். அனுபவம், நுண்ணுணர்வு இதோடு ஒரு aesthetical pleasure-உம் கிடைக்கிறது. படைப்பில் இலயித்தல் என்பது நீச்சலடிப்பதைப் போன்றது. ஆழம், பரப்பளவு, நீரோட்டம், அலையடிப்பு இவற்றையெல்லாம் எவ்வாறு கையாள்வது என்று நீச்சல் வீரர்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல இலக்கியத்தின் அத்தனை கூறுகளையும் ஒரு வாசகர் அறிந்திருப்பது நல்லது. ஒரு தேர்ந்த வாசகரை உருவாக்குவது இலக்கியத்தின் ஓர் உபப் பணி என்றால் காலப்போக்கில் தேர்ந்த வாசகர்கள் நல்ல இலக்கியத்தையும் உருவாக்குவார்கள். இலக்கியம் என்பது ஒரு பயனாளர் கையேடு அல்ல; இலக்கியத்தின் மூலம் தனது அமைதியைக் குலைத்துக் கொள்ளத் தயாராக இருப்பவரே நல்ல வாசகர்.

அதே சமயம் தமிழ் வாசகர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட விமர்சனத்தை முன்வைக்க முடியவில்லை. பாவம் இருப்பதே ஏழு கோடிப் பேர்களில் இருநூறு பேர்தான், அவர்களுக்காக மூவாயிரம் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். இந்தச் சுமையையே அவர்களால் தாங்க முடிவதில்லை. மேலும் அவர்களுக்கு ஒரு சக வாசகனாக, நான் எப்போதுமே ஒரு நல்ல வாசகனாகவே இருப்பதை விரும்புகிறேன், ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். இலக்கியத்தை அறவுணர்வுக்காக வாசிக்கக் கூடாது. வாசிப்பென்பது மிகவும் பண்பாடான ஒரு பொழுதுபோக்கும்கூட.

‘மாஸ்டர்’ என்கிற கருத்தாக்கத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

நிச்சயமாக! ஒரு துறையில் குறிப்பிட்ட உயரத்தைத் தொடுபவர்களை நாம் மாஸ்டர்கள் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட படைப்பை வாசித்தாலேதான் அந்தத் துறையின் அடிப்படைகளை அறிய முடியும் என்கிறோம். தமிழில் ஜெயமோகன் அப்படியொரு இடத்தைத் தானே கோரி நிற்கிறார்; அடைந்தும் இருக்கிறார். அப்படி இலக்கியத்தின் அடிப்படையான படைப்புகளை உருவாக்கியவர்களை நாம் மாஸ்டர்கள் என்றுதானே சொல்கிறோம். நிலைக்கண்ணாடியில் எனது முகத்தின் மேற்பரப்பில் ஆவியுருக்களாகப் பல தோற்றங்கள் அடிக்கடி தெரிகின்றன. போர்ஹேஸ், காஃப்கா, ஜாய்ஸ், மிஷிமா என்று அவ்வுருக்களின் அடையாளங்கள் மங்கலாகத் தெரிகின்றன.

உங்கள் வாசிப்பில் நீங்காத தாக்கம் செலுத்திய/ செலுத்திக் கொண்டிருக்கிற எந்தப் படைப்பு/ படைப்பாளிக்கு ட்ரிப்யூட்டாக ஒரு நாவலை எழுதுவீர்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் ஒரே பதில் தான் கூறியிருப்பேன்: போர்ஹேஸ். இந்த ஐந்து ஆண்டு வாசிப்பில் சொல்வதற்கு நிறைய தேர்வுகள் இருக்கின்றன, தனியாக ஒன்றைச் சொல்ல முடியவில்லை.

இடலோ கால்வினோ (Italo Calvino), நாவல் குறித்த கட்டுரை ஒன்றில் அதன் மரபு, அது மாறிவந்த விதம் குறித்துப் பேசுகிறார். பொதுவாக உலகத்தை விசாரிப்பது, தத்துவார்த்த ரீதியாக அணுகுகின்ற நாவல்கள், தாமஸ் மன் மாதிரியான நாவலாசிரியர்கள் வழக்கொழிந்து போய்விட்டார்கள் என்கிறார். அவர் சொன்னதை ஒட்டி நான் சொல்கிறேன். கொர்த்தஸாரும் இதைச் சொல்கிறார், ஒரு பிரச்சினைக்குத் தீர்வு இருக்கிறது என்ற அணுகுமுறை சார்ந்த நாவலாசிரியர்களின் காலம் அறுபதுகளிலேயே முடிந்துவிட்டது. எல்லாவற்றையுமே ஒரு கேள்வியாக மட்டுமே முன்வைக்க முடியும் என்ற புள்ளியில் இருந்து தான் அவரது ஹாப்ஸ்காட்ச் (Hopscotch) நாவல் பேசுகிறது.

இப்போதைய சாத்தியம் என்ன? தமிழ் நிலத்தில் இருந்து ஒரு நாவலாசிரியன் உருவாகி வரவேண்டும் என்றால் எதைப் பற்றிப் பேச வேண்டும்? இனவரைவியல் நாவல்களின் காலமாக இருக்கிறது. தமிழ்ச் சூழலில் சுளுந்தீ, ஆழி சூழ் உலகு, அஞ்ஞாடி என இனவரைவியல் நாவல்கள் மேலெழுந்து வருகின்றன.

நான் ஒருவேளை நாவலே எழுதாமல் போனால்? சாத்தியங்கள் இருக்கின்றன, இருந்தபோதிலும், நாவல் எழுதுவேன் என்ற நம்பிக்கையில் நான் சொல்வதானால், ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ் மாதிரியான ஒரு படைப்பை, செர்வாண்டஸின் டான் கிஹோத்தே போன்ற ஒன்றை எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால், 300, 350 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் நாவல் என்ற வடிவத்தின் உச்சம் என்ற மனநிலையில், மிகவும் consciousஆகவே ஜாய்ஸ் யுலிஸஸ்-ஐ எழுதியிருக்கிறார். அவருக்குப் பிறகு எழுதப்பட்ட நாவல்கள் எவையுமே, அவருக்கு முன்பிருந்த நாவல்களின் பாணியில் வரவே இல்லை. அந்த மாதிரியான ஒன்றைத் தமிழிலக்கியத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் ஆசையிருக்கிறது. முடிவும் ஆசையும் பெரும்பாலும் ஒன்றாக இருப்பதில்லையே!

கிரிகோர் ஸாம்ஸாவைப் போல் வேறொரு உயிரினமான நீங்கள் மாறிவிட எண்ணியதுண்டா? ஆம் என்றால் எது, ஏன்?

கனவு மிருகம் கதையே அதுதான். அது ஒருவகையான காஃப்காவிய மனநிலையில்/ senseஇல் எழுதப்பட்டதுதான். காஃப்காவின் தாக்கம் என்னுடைய குறிப்பிட்ட கதைகளில் உண்டு. நாளை இறந்துபோன நாய், கனவு மிருகம் அப்படியான கதைகள்தான்.

மனிதர்களுக்கு மட்டும்தான் வேறு ஏதோ ஒன்றாக மாறிவிட வேண்டும் என்ற தீராத காதல் இருக்கிறது. Metamorphosis. அதைத் தான் அவன் கலை இலக்கியங்களில் வெளிப்படுத்துகிறான்.

Existence in the form of human being, கடவுளே தன்னுடைய வடிவில் தான் மனிதனைப் படைத்தார் என்று பல மதங்களும் சொன்னாலும்கூட, மொத்த உயிரினத்துக்கும் உச்சத்தில் வைத்தாலும்கூட, மனிதனுக்குத் தன்னுடைய இருப்பு/ இருத்தலின் மீது ஒருவித தீராத தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. அதனால் தான் வேறு ஒன்றாக உருமாற்றம் அடையத் துடிக்கிறான். அற்புதமான கலை எல்லாம் மனிதனின் தாழ்வு மனப்பான்மையில் இருந்தே தொடங்குகிறது. ஏனென்றால் தன்னுடைய இருப்பு மிகவும் சொற்பமான காலம்தான் இருக்கிறது என்கிற உணர்வு இருக்கிற ஒரே உயிரினம் மனித உயிரினம்தான். மனிதனுக்கு இரண்டு பிரச்சினைகள்: ஒன்று, தன்னுடைய வாழ்நாள் மிகவும் சிறியது, இரண்டு, இந்த உலகத்தின் விரிவும் வயதும் தன் ஆயுளுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டது, அவ்வளவு பெரியது. இந்த இரண்டையும் இணைப்பதற்கான கருவியாகத் தான் கலையைப் பார்க்கிறான். அதனால் தான் மனிதன் தன்னை ஒவ்வொருவிதமாக உருமாற்றிக் கொள்ள நினைக்கிறான்.

Man is between god and animals. அந்த நிலையில் தான் தன்னை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறான். கடவுள் இயல்பு மற்றும் விலங்கின் குணாம்சங்கள் (God nature and animal qualities) என்ற தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களில் போய் வந்து கொண்டிருக்கிறான். அதில் animal spirit-உம், god spirit-உம் என்று அவன் நம்புவதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு god spirit என்பது creative spirit. இந்த creative ability, படைப்பூக்கம் மனிதனில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் அடைப்படையில், முதன்மையாக ஒரு படைப்பாளி. Creator of his own conditions, his own objects, everything. இந்த இரண்டு காரணிகளும் ஊடாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் தொடர்ச்சியாக தன்னுடைய குணாம்சத்தை கடவுள், மிருகம் என்ற இரு தளங்களில் வைத்து கொண்டிருக்கிறான். மனிதத் தன்மை என்பதெல்லாம் உண்மையில் கிடையாது. திரும்பத் திரும்ப metamorphosis மேல் அவனுக்கு இருக்கும் காதல்…

மனிதன் தோன்றாத காலத்தையும் அவனுடைய காலத்தையும் இணைக்கும் ஒரு உயிரினம் என்றால் அது காண்டாமிருகம்தான். நீட்ஷே குதிரையைக் கட்டிப்பிடித்து disorientஆகிக் கீழே விழுந்தார், இல்லையா. அது மாதிரி ஏதாவது ஒரு சந்தர்ப்பம் என் வாழ்வில் நடந்தால் காண்டாமிருக்கத்தைத் தான் கட்டிப் பிடிக்க வேண்டும்.

காண்டாமிருகம் என்னதான் சக்திவாய்ந்த மிருகமாக இருந்தாலும், அதன் கண்பார்வை எல்லைகள் உடையது. மோப்ப சக்திதான் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மனிதனும் அப்படித்தான், அவன் எத்தனை பெரிய சிந்திக்கும் மனிதனாக இருந்தாலும், அவனுடைய திறன்கள் குறைவுதான். உடல் சார்ந்தும், சமூகம் சார்ந்த கட்டுப்பாடுகளில் இருந்தும் அவன் ஒரு காண்டாமிருகம்தான்.

தமிழ்ச் சூழலில் அயல் இலக்கியங்கள் வாசிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?

எனது பேராசை என்னவென்றால், தமிழ் எழுத்தாளர்களும், வாசகர்களும் தேச எல்லைகள் கடந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே. இங்கே எழுத வருகிற ஒருவர் இலக்கியத்தில் என்ன நடந்திருக்கிறதென்று தெரியாமலே எழுத வந்து ஒரு நான்கு வாசகர்களும் வாசித்துவிட்டால் தான் பெரிதாக எழுதிவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். அயல் இலக்கிய வாசிப்பு இந்த சுயமயக்கத்தை மட்டுப்படுத்தும் நல்லதொரு மருந்து. அதே சமயம் இன்றைய வாசகர்கள் உலக இலக்கியத்தின் உரைகல்லில் நமது இலக்கியத்தைத் தேய்த்துப் பார்க்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள். திருப்பூரில் உற்பத்தியாகும் ஓர் ஆயத்த ஆடைகள் சர்வதேச மதிப்பிடும் முறைகளின் படி இருக்கின்றனவா எனப் பார்க்கப் படுவதைப் போல நமது இலக்கியமும் அப்படியொரு பரிசோதனைக்கு உள்ளாகி வருகிறது. வாசகர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். ஆனால் வெறுமனே புத்தகங்களை தரவிறக்கம் செய்துவிட்டதாலேயே, உலக இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து விட்டதாக நினைப்பதும் இருக்கிறது. முதலில் தமிழ் எழுத்தாளர்கள்தான் எல்லைக் கட்டுபாடுகள் ஏதுமின்றி வாசிக்க வேண்டும். வாசிப்பதற்கு முன்பே இங்கே கருத்து சொல்வது நடக்கிறது. முன்முடிவுகளைப் போல இலக்கியக் கண்களைக் குருடாக்கும் கூர்மையான பொருள் வேறொன்றுமில்லை. எல்லா முன்முடிவுகளும், ஊகங்களும், பட்டியல்களும் ஏமாற்றமளிப்பதிலேதான் முடிகின்றன.

இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களைப் பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் நீங்கள்; டான் கிஹோத்தே நாவலைப் பற்றிய, சமீபத்தில் வெளியான உங்கள் விமர்சன-ஆய்வுக் கட்டுரை ஒரு முக்கியமான பங்களிப்பு. நமக்கு வந்து சேர்ந்திருக்கும் இலத்தீன் அமெரிக்க இலக்கியப் பிரதிகள் பற்றி உங்கள் மதிப்பீடுகள் என்ன?

இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மீதான நமது காதல் போர்கேஸாலும், மார்க்வேஸாலும் நடந்தது. ஆனால் இவர்கள் அல்லாமல் குறைந்தது ஒரு பத்து எழுத்தாளர்களாவது நம்மால் வாசிக்க முடியும். கொத்தஸார் எந்தவிதமான பாதிப்பையும் செய்யவில்லையே. மேற்சொன்ன இருவரும் அவர்களது எழுத்து முறைக்காகவே இங்கே வரித்துக் கொள்ளப்பட்டவர்கள். மச்சடோ அசீஸின் குறுநாவலையும், டான் கிஹோத்தேவையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. போர்ஹேஸின் கதைகளை பிரம்மராஜன் மொழிபெயர்த்து யாவரும் பதிப்பகமும், மார்க்வேஸை சுகுமாரன் மொழிபெயர்த்து காலச்சுவடும் வெளியிட்டுள்ளன. அமரந்தாவும், சிவக்குமார் ஆகியோர் நல்ல சிறுகதைகள் சிலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார்கள். போர்ஹேசின் கட்டுரை ஒன்று வெளி ரங்கராஜனின் சிறப்பாக மொழிபெயர்ப்பில் புது எழுத்து இதழில் சமீபத்தில் வந்துள்ளது.

எனது நண்பர் குணா கந்தசாமி, போர்ஹேஸ் வாழ்ந்த வீட்டையும், ஃபுயண்டஸின் கல்லைறைக்கும் சென்றிருக்கிறார். இங்கேயெல்லாம் போக வேண்டுமென்று தோன்றியதே நமக்கு இருக்கும் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மீதான காதலால்தான். மரியா வார்கோஸ் யோசாவின் கட்டுரை நூல் ஒன்றைச் சமீபத்தில் வாசித்தேன். உலகமயமாக்கலுக்கு ஆதரவான கட்டுரை ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். பெரூ நாட்டின் அதிபர் தேர்தலில் நின்று தோற்றவர் அவர். ஆனால் நமக்குக் கிடைத்த சித்திரங்கள் அரைகுறையானவை. ஆனால் அதே சமயம் ஒரு சமூகத்தின் மொத்த இலக்கிய ஆக்கங்களையும் மற்றொரு சமூகத்தில் நகலெடுத்துவிட முடியாது.

அயல் மொழி இலக்கியங்களில் தமிழுக்கு வரவேண்டிய படைப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், பிற மொழிகளுக்கும் சென்று சர்வதேச கவனம் பெறத்தக்க ஒரு படைப்பாக நீங்கள் கருதுவது எதை?

தமிழில் இருந்து படைப்புகள் ஏராளமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை எவையுமே தேவையான கவனத்தைப் பெறவில்லை. ஒவ்வொரு முறை நான் பெங்களூரில் உள்ள புத்தகக் கடைகளுக்குச் செல்லும் போதும் பெருமாள் முருகனின் நாவலில் ஒன்றின் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். திருக்குறள் தொடங்கி பெருமாள் முருகன் வரை பல படைப்புகள் வந்திருக்கின்றன என்றாலும் உலகம் வாசிக்கத் துடிக்கும் எழுத்தை அளிக்கும் சமூகமாக நாம் இல்லை என்பதே உண்மை. நாம் உலகோடு இணைந்திராத ஒரு சமூகமாக இருக்கிறோம். உலக இலக்கியமென்று வழங்கப்படுவதே ஐரோப்பிய, அமெரிக்க, தென் அமெரிக்க, ஆசியாவை எடுத்துக் கொண்டால் ஜப்பானிய இலக்கியமாகத்தான் இருக்கிறது. உலக இலக்கியமே அனைத்து நாடுகளையும், சமூகங்களையும் உள்ளடக்கியதில்லை. நாம் அதன் வட்டத்திற்கே வெளியே ஆடும் துள்ளல் மிக்க ஆட்டம்கூட அதன் கவனத்தை ஈர்க்கப் போதுமானதில்லை. உலக மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிற ஒரு பொருளை, சிந்தனையை, நிறுவனத்தை, அரசியல் சித்தாந்தத்தை நாம் உற்பத்தி செய்துதர முடியாதவர்கள் என்பதால் நம் மீது உலகின் கவனம் பதிவதில்லை. இங்கிருந்து எதை மொழிபெயர்த்தாலும் அசோகமித்திரன் சொல்வதைப் போல புத்தகக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமே ஒழிய, வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படப் போவதில்லை.

வெகுஜன கலாசாரம் (Popular culture) பற்றிய உங்கள் பார்வை என்ன; அங்கு என்ன நிகழ்கிறதென்று நினைக்கிறீர்கள்?

ஸ்பாடிஃபை என்பது வானொலி தானே? வானொலியைத் தான் நாம் மறுகண்டுபிடிப்பு செய்திருக்கிறோம். Turning Back the Clock என்ற கட்டுரையில் உலகில் பெரும்பாலான விஷயங்கள் பழையவைதான் என்கிறார் உம்பர்தோ ஈகோ. ரயில், கம்யூட்டரின் ஆதிவடிவம், மின்சாரம் இப்படி 95% பொருட்கள் வாழ்வியல் முறைக்கு 19-ஆம் நூற்றாண்டின் பொருட்கள் அடிப்படையாக இருக்கிறது. தமிழ்ப் புலத்தில் இந்த மாதிரியான சிந்தனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. இங்கு தீவிர இலக்கியவாதிகள் பாப்புலர் கல்ச்சரைப் பேசுவதில்லை, பாப்புலர் கல்ச்சரில் இருப்பவர்களுக்கு தீவிர இலக்கியத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டும் சேர வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. தீவிர இலக்கியத்தில் இருப்பவர்கள் பாப்புலர் கல்ச்சர் பற்றி கவலைபடத் தேவையில்லை, ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்க வேண்டும். நம்முடைய மொழியில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான தமிழ்த் திரையிசைப் பாடல்கள் ஆங்கிலக் கலப்பின்றியே எழுதப்படுகின்றன. தனி ஒருவன் படத்தில் என்னதான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக இருந்தாலும்கூட, ஜெயம் ரவியும் நயன்தாராவும் தமிழில் தான் எழுதுகிறார்கள். இதை பாப்புலர் ஊடகத்தின் ஒரு நேர்மறை அங்கமாகத்தான் பார்க்க முடிகிறது. தீவிர இலக்கியவாதி ஒருவர் இதிலிருந்து விலகி இருக்கும் சூழல் இன்று தேவையில்லை எனத் தோன்றுகிறது. அப்படி எப்பவுமே இருந்ததில்லை என்பதே உண்மை.

தாமஸ் பின்ச்சன், பாப்புலர் டியூன்களை உபயோகப்படுத்தியுள்ளார். பத்திரிகையில் வந்த தகவல்களைப் பயன்படுத்தியுள்ளனர். மோபி டிக்-இல் அமெரிக்காவுக்கு வந்த ஒரு வித்தைக்காரன் பற்றிய குறிப்பையும் மெல்வில் எழுதுகிறார்.

அதே சமயம் ஒரு பாப்புலர் கூறுகளை இலக்கியத்துக்குள் எப்படித் திறமையாகக் கையாள்வது என்பதைத் தான் நாம் இப்போது யோசிக்க வேண்டும். அதை அப்படியே ரியலிசமாக, ஒரு பாட்டை அப்படியே ஒலிக்கவிடுவது என்பதல்ல; அதை நாம் எப்படிக் கையாள்கிறோம், அது எப்படி நம் சிந்தனையை வடிவமைக்கிறது, சமுதாயத்தில் எவ்வளவு செல்வாக்கு, என்ன உயரத்தில், எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

அதே சமயத்தில், மொழிபெயர்ப்புகளுக்கு, குறிப்பாக அச்சு ஊடகம், தொடர்ச்சியாக இடம்கொடுத்துக் கொண்டிருப்பது நேர்மறையான அம்சம். பேனரை பதாகை என்று சிறுபத்திரிகை அல்ல, தின மணி தான் மொழிபெயர்த்தது; சுவரொட்டி, மின்னஞ்சல். சிறுபத்திரிகையில் இருந்து வந்திருந்தால், இத்தனைப் பரவலாக சென்றடைந்திருக்காது. அதே சமயம் சிறுபத்திரிகைக்காரர்களின் அளப்பரிய பங்களிப்பை பாப்புலர் மீடியாவும் பயன்படுத்துகிறது. கடந்த தேர்தலில் இருந்து பிரச்சாரம் என்பது பரப்புரையாக மாறியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பாப்புலர் கல்ச்சரை மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது, சினிமாவைத் தீவிர இலக்கியத்துக்கு வெளியே தான் வைத்துக் கொள்ளவேண்டும். எல்லா முக்கிய எழுத்தாளர்களும் சினிமாவில் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இசை, ஓவியம், நாடகம், எழுத்து என சினிமா, அனைத்துக் கலைகளின் கோவையாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் வியாபாரம் வேறு மாதிரி இருக்கலாம், அது இயங்கும் முறை வியாபாரத்தை மையப்படுத்தி இருக்கிறது. வில்லியம் ஃபாக்னர், கார்லோஸ் ஃபுயண்டஸ், கொர்த்தஸார் ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.

கிங் காங் படத்துக்கு போர்ஹேஸ் விமர்சனம் எழுதியிருக்கிறார், ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். தமிழ்நாட்டில் போர்ஹேஸின் ஒரு பகுதி மட்டும்தான் தெரியும். அவருக்கு ஜப்பானில் வந்த கம்யூட்டர்கள் பற்றி தெரிந்திருக்கிறது, அவை தரமிக்கவை என்று 1983-இல் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். அதைப் பார்த்திருக்கக்கூட மாட்டார் என்று நினைக்கிறேன். தீவிர இலக்கியத்தின் கூறுகளாக நீங்கள் கருதுபவை எல்லாம் பாபுலர் கல்ச்சரில் எப்படி இயங்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகவாவது அதோடு தொடர்பு இருக்க வேண்டும்.

இலக்கிய ஆக்கங்களில் தரவுகளைப் பயன்படுத்துவது பற்றிய விமர்சனம் இங்கு பரவலாக உள்ளதே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் மட்டும்தான் தரவுகளைப் பயன்படுத்தினாலே படைப்பாக மாறாது போன்ற பிற்போக்கான அபிப்ராயங்கள் இருக்கின்றன. பா. வெங்கடேசனின் தாண்டவராயன் கதை காலனிய காலம் எப்படி உருவாகிறது என்கிற canvasதான். தமிழ்ச் சூழலை மையமாக வைத்துச் சொல்ல வேண்டுமென்றால் தாண்டவராயன் கதை மிகப் பெரிய முயற்சிதான், முக்கியமான படைப்பாகத் தான் நான் அதைப் பார்க்கிறேன். எப்படி பின்தொடரும் நிழலின் குரல் global canvasஐக் கொண்டு எழுத ஆசைப்பட்ட ஒரு நாவலோ, அதே அளவுக்கான ஒரு முயற்சியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தாண்டவராயன் கதை வந்தது. பிரெஞ்சுப் புரட்சி, இங்கிலாந்து, திப்பு சுல்தான், தென்னிந்தியாவில் காலனியாதிக்கம் உருவானபோது நிகழ்ந்தவை போன்ற பல்வேறு விஷயங்களை அந்த நாவல் பேசுகிறது. இந்த நிலத்தின் அரசியல் என்று நாவல் முன்வைக்கும் விஷயங்களை விவாதிக்க, விமர்சனப்பூர்வமாக அணுக நிறைய இருந்தாலும்கூட இதைப் போன்று ஒரு பெரிய சொல்லாடலுக்கு ஆசைப்படுகிற விஷயம் தமிழில் நடக்க வேண்டும்; அதில் எவ்வளவு தூரம் தோல்வியடைகிறோம் என்பது இரண்டாவது. நாம் லண்டனுக்குச் செல்கிறோமா, இல்லையா என்பது தேவையில்லை. அமெரிக்கா நாவல் எழுதிய காஃப்கா அமெரிக்காவே சென்றதில்லை; போர்ஹேஸ் இந்தியாவுக்கு வந்ததில்லை, ஆனால் கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றை நாம் கேள்விகேட்பதே இல்லை.

இந்தத் தாழ்வு மனப்பான்மை, எழுத்தாளர்கள் மேல், குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் இருப்பவர்களே அதைச் சுமத்துகிறார்கள் இல்லையா, அது பெரிய தப்பு, அது ஒரு தீமை.

தன்னுடைய தெரு, பக்கத்து வீட்டு ஆட்களை எழுதுவதற்கு மட்டுமே தமிழ் எழுத்தாளருக்கு தகுதியிருக்கிறது, அதைத் தாண்டி அவன் ஒரு பூஜ்ஜியம்தான் என்பதை நாம் மாற்ற வேண்டும். அடுத்த மார்க்ஸ், அடுத்த ஃபூக்கோ, அடுத்த ஐன்ஸ்டீன், அடுத்த காந்தி, அடுத்த கூகுள், அடுத்த ராயல் சொசைட்டி ஆஃப் இலண்டன் போன்ற அமைப்பு இங்கிருந்து உருவானால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படிப்பட்ட கனவுகளைக் காண்பதற்கு இலக்கியவாதிக்காவது நாம் இடமளிப்பது நல்லது. தவிர ‘நாவலென்பதே தரவுகளை எங்கே எப்படிக் கையாள்வது எனும் கலைதான்’ என மார்க்வேஸ் சொல்லியிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம் இல்லையா?

இந்தப் பின்னணியில் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவியப் பிரச்சினைகளைப் புனைவில் பேசுவதில் தமிழ்ச் சூழலில் உள்ள பிரச்சினைகள், தடைகள் என்னென்ன?

காலநிலை மாற்றம் என்பது ஒரு Scientific orientation. நம் சமூகம் scientific orientation இல்லாத ஒரு சமூகம். இப்படியான ஒரு பின்புலத்தில் இதை அணுக முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்தச் சந்தேகம் தமிழில் உள்ள எழுத்தாளர்களுக்கு இருப்பதனாலேயே தமிழில் அதை ஒட்டி படைப்புகள் வரவில்லை என்று சொல்வேன்.

இந்தியாவில் இரண்டு அணு உலைகள் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆனால், அணு உலை எப்படி இயங்குகிறது என்று நமக்குத் தெரியாது; உதாரணத்துக்கு நியூட்ரினோ திட்டம் தேனியில் வருகிறது, ஆனால் நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன என்பது குறித்த ஓரியெண்டேஷன் யாருக்குமே கிடையாது. தமிழ்நாட்டின் மிகச் சிறந்த புத்திசாலி எழுத்தாளர்களுக்குக் கூட இருக்குமா என்பது சந்தேகமே. ஒருவேளை இணையத்தில், விக்கிபீடியாவில் படித்துவிட்டு பேசலாம்.

City of God நாவலில் இ.எல். டாக்டரோவ் நியூட்ரினோ பற்றி எழுதுகிறார், அவருக்கு நியூட்ரினோ பற்றித் தெரியுமா என்ற கேள்வி எழாத அளவுக்கு அந்தச் சமூகம் இருக்கிறது, ஏனென்றால் அறிவியல் மனோபாவம், தொழில்நுட்ப மேம்பாடு அங்கு இருக்கிறது. இப்படியான ஒரு பின்புலம் இருப்பதனால், நியூட்ரினோ பற்றி அவர் எழுதும்போது சந்தேகம் வருவதில்லை.

ஆனால், தமிழில் எழுதும் ஒருவர், காலையில் இருந்து மாலைவரை வங்கியில் பணிபுரியும் ஒருவர் நியூட்ரினோ பற்றி எழுதினால் இவருக்கு என்ன தெரியும் என்ற சந்தேகம் நமக்கு வரும். அணு உலை வெடிப்பு அல்லது குறைந்தபட்சம் கசிவு ஏற்பட்டால் எப்படிக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூட நமக்குத் தெரியாது. கல்பாக்கம் அருகில் உள்ள ஒரு பொறியாளருக்குக் கூட தெரியாது. இதைதான் அறிவியல் மனோபாவம் அற்ற மனநிலை என்று சொல்கிறேன்.

ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் இத்தகைய விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வுகள் பள்ளிக்கூடங்களிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. அபாயம் என்பதை மறுக்கவில்லை; உலகம் அபாயகரமானது என்றுதான் சொல்லிக் கொடுக்கிறார்கள். அணு உலைக்கு அருகிலேயே இருக்கும் நமக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை.

காலநிலை மாற்றம் பற்றி தமிழில் எழுதுகிறேன் என்றால், முதலில் வரும் சந்தேகம் இவனுக்கு என்ன தெரியும் என்பதுதான். சாதியைப் பற்றியோ, குறிப்பிட்ட அளவு அரசியல், பொருளாதாரம் பற்றி விஷயத்தைப் படைப்பாக எழுதிவிட்டால் அந்தச் சந்தேகம் வராது. ஏனென்றால் மூன்றையுமே புரிந்துகொள்வதற்கான கல்வியும் மனோபாவமும் நமக்கு இருக்கிறது.

வெளிப்படையாக நாமும் மேற்கத்தியச் சமூகமும் ஒன்றிணையும் புள்ளி எதுவென்றால், தண்ணீர், அது மிகவும் invisibleஆக மாறிக் கொண்டிருக்கிறது. 90-களில் பிறந்தவர்கள் தங்களுடைய 10 வயதில் பார்த்த ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலை அமைப்புகள் இன்று கிடையாது; இருந்தாலும் அவற்றில் தண்ணீர் கிடையாது. எனது நண்பர் ஒருவர் கலிஃபோர்னியாவின் டாஹோ ஏரியின் புகைப்படங்களை அனுப்பியிருந்தார். மானசரோவரைப் போலிருக்கிறது. தண்ணீர்ப் பற்றாக்குறைதான் என்றாலும் அங்கேயிருந்து ஒரு சொட்டு நீர் கூட எடுக்கப்படவில்லை என்றார். ஆனால் நமது குளங்கள், கண்மாய்கள், ஏரிகளில் பெரும்பாலானவை சாக்கடை நீரைத் தேக்கி வைத்திருக்கின்றன. குளத்தில் மாடுகள் நீரருந்துவதைப் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டன. நீர்நிலைகளில் நீர்க்காகத்தை மட்டுமே பார்க்கிறேன். தமிழகத்தின் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூரின் ஸ்டான்லி அணையே கூட நாற்றமடிப்பதாகச் சொல்கிறார்கள்.

இரண்டாவது, நமது கல்வி. நம்முடைய கல்வி எவ்வளவு மோசமாக இருக்கிறது, பாருங்களேன். கோயமுத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் பிறக்கிறேன். 100 கி.மீ சதுர பரப்பில் உள்ள தாவரங்கள், அங்கு என்னென்ன விதமான பயிர்கள் குறிந்த எந்த அறிதலும் இல்லாத கல்விதான் இங்கு இருக்கிறது. ஒருநாளும் ஒரு வாத்தியாரும் வெளியே அழைத்துச் சென்று இது இன்ன மரம் என்று அறிமுகப்படுத்தியது கிடையாது. அதற்கு நீங்கள் தனியாக தாவரவியல் படிக்க வேண்டும், அதுவும் உயர்நிலைக் கல்வி வந்தால் தான் சாத்தியம்.

கோயமுத்தூர் மாவட்டத்தை ஒட்டி வரலாற்றில் என்னென்ன நிகழ்ந்திருக்கிறது என்பதைக் குறித்த அறிவும் இல்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியில் உடுமலைப்பேட்டையில் விவசாயிகள் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடந்ததன் நினைவாக கல்தூண் ஒன்று உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு இதைக் காண்பிக்க வேண்டும். நம்மை ஒட்டி வரலாற்றில் என்ன நடந்திருக்கிறது என்ற கல்வியை இந்த அமைப்பு நமக்கு வழங்குவதில்லை. முமியா ஜமால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அவருக்கு அமெரிக்க பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கடிதம் எழுதியதாக நான் வாசித்திருக்கிறேன். ஒரு கைதிக்கு மாணவர்கள் கடிதம் எழுதுவதை இங்கே நாம் இதுவரையிலும் கற்பனைகூட செய்திருக்க மாட்டோம்.

இப்படித் தான் கல்வியையும் சமூகத்தையும் இணைக்க முடியும், இல்லையா? அப்படிப்பட்ட கல்வியும் சமூகமும் இணைக்க முடியாத இடத்தில் இருந்து வருபவன் எல்லாவற்றிலும் அப்படித் தானே இருப்பான், வேலை செய்வதற்கு ஒரு அடிமை மனநிலை தேவை. அதை மட்டுமே சிறப்பாக வடிவமைத்திருக்கிறோம். ஆனால் நாம் பெருமையடித்துக் கொள்ளும் கிராமிய வாழ்க்கைகூட இன்றைக்கு அதனைத் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. உலகின் தொழிற்சாலைகள் எத்தனை நாசக் கேட்டை செய்கின்றனவோ, அதே அளவில் விவசாயமும் செய்கிறது என்றால் நம்மவர்களுக்கு கோபம் வரும். விவசாய நிலங்களில் கொட்டப்படும் வேதிப் பொருட்களின் அளவு அப்படி இருக்கிறது. நாம் எதற்கெடுத்தாலும் மான்சாண்டோவை குறைசொல்லிப் பழகிவிட்டோம்.

சமீபத்தில் திசு-வளர்ப்பு (tissue-culture) நிறுவனமொன்றைப் பார்வையிடச் சென்றிருந்தேன். வாழை நாற்றுக்களை சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் வளர்த்தெடுக்கும் நிறுவனம் அது. கற்றாழைக் கூழைப் போன்றவொரு வேதிப்பொருட்களின் கூழில் வளர்கின்றன நமது வாழை நாற்றுக்கள். இலட்சக்கணக்கான நாற்றுக்களை குளிர்பதனம் செய்யப்பட்ட இடத்தில் பார்த்தேன். ஐரோப்பிய நிறுவனமொன்று காட்டு ஆர்ச்சிட் நாற்றுக்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்டரை அவருக்கு வழங்கியிருந்ததைக் காட்டினார். நார்வே நாட்டிற்கு இங்கிருந்து காட்டு ஆர்ச்சிட் நாற்றுகள் ஏற்றுமதி செய்யப்படும். நமது தக்காளி விதைகள் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவதைப் போல.

மூன்றாவது, தொழில்நுட்பச் சொற்கள். அவை ஏராளமானவை. அடுத்த காரணம் ஈடுபாடு. நம்மில் பெரும்பாலானவர்கள் கிளாசிக்கல் உலகத்திலேயே இயங்க விரும்புகிறோம். அதுதான் இங்கே விற்பனையாகிறது, சிலாகிக்கப்படுகிறது. புதிய பரிட்சார்த்தங்களுக்கு தயாராக இல்லாவர்களாகவும் இருக்கிறோம்.

சமீபத்தில் அன்னா கவனின் (Anna Kavan) ஐஸ் நாவலை வாசித்தேன். அன்னா கவன் தமிழ்நாட்டில் நான் கேள்விப்படாத ஒரு பெயர், எனக்கு யாரும் சொன்னதும் கிடையாது. இலக்கியப் புலத்தில் இருப்பவர்கள்கூட. ஆனால் எல்லோரையும் அறிமுகப்படுத்துவதும் சாத்தியமில்லை. புதிய எதார்த்தங்கள் உருவாகும்போது புதிய அறிமுகங்கள் கிடைக்கின்றன. சூழலியல் சார்ந்து தமிழில் தனித்துறையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. அப்படி எழுதினாலும் தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்ற ஒன்றாகவே இருக்கும். உலக அரங்கிலும் அப்படித்தானே இருக்கிறது. பின்நவீனத்துவத்திற்குப் பிறகு சூழலியல் விமர்சனம் என்றுகூட ஒன்று வந்ததே. கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு இலக்கியம், கலாச்சாரப் போக்குகளைப் பற்றி விவாதிக்கும் ஆறு நூல்களின் பட்டியலைப் பார்த்தேன் (எல்லாம் அமேசானின் புண்ணியம்). அதில் ஒன்று சுற்றுச்சூழல் அழிவும், நாவல்களும் என்ற தலைப்பில். நமது பல்கலைக்கழகங்கள் வெளியிடும் நூல்கள் குறைந்தபட்சம் பார்க்கும் தரத்திலாவது இருக்குமென்று நம்பவே வெகு காலம் ஆகும் எனக்கு.

இன்றைக்குப் பொதுவெளியில் பரவலான விவாதங்களுக்கு உள்ளாகும், அரசியலாக்கப்படும் தமிழ் வரலாறு, பண்பாடு அடையாளம் ஆகியவை குறித்த உங்கள் பார்வை என்ன?

காலனியாதிக்கம் — அதற்கு முன்பு, வரலாற்றுக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள், தமிழ்ச் சமூகம் வணிகச் சமூகமாகத்தான் இருந்திருக்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு முன்பே இங்கிருந்த வாணிபக் குழுக்கள் சீனா, ரோம் வரைக்கும் சென்றிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர்கள் பார்த்த கணக்கு வழக்கு, வரவு செலவாவது எழுதி வைத்திருப்பார்கள். வரலாற்றைப் பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம், அது நம் கலாசாரத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் வரவு செலவு பதிவு பண்ணாமல் எந்தக் கலாச்சாரமும் இருக்காது. கட்டாயம் இதைப் பின்பற்றாமல் எந்த வாணிபக் குழுக்களும் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள் கைம்பெண்களின் நலனுக்காக உருவாக்கிய இன்சூரன்ஸ் திட்டம் பற்றி வாசிக்கக் கிடைக்கிறது. எப்படி ‘feedback analysis’ என்கிற முக்கியமான மேலாண்மைக் கருதுகோளை ஜான் கால்வினும், இக்னாசியஸ் ஆஃப் லயோலாவும் பதினாறாம் நூற்றாண்டில் வளர்த்தெடுத்தார்கள் என்பதைப் பற்றி பீட்டர் எஃப் டிரக்கர் (Peter Ferdinand Drucker) எனும் முக்கியமான மேலாண்மைச் சிந்தனையாளர் எழுதியுள்ளார். இப்படி நமது வாணிபக் குழுக்களோ, அரசு நிர்வாகமோ தனிச்சிறப்பான முறைமைகள் எவற்றையெல்லாம் பாவித்தன எனும் அறிவு நமக்குக் கடத்தப்படவில்லை.

மேற்கில் நடந்த மாதிரி நாகரீகக் கூறாக அது மாறாமல் போய்விட்டது; தொழில்நுட்பம்கூட அடுத்தக் கட்டத்துக்குக் கடத்தப்படவில்லை.

மெல்வில்-இன் மோபி டிக் வாசிக்கிறேன். அதில் வரும் கப்பலின் பாகங்களைக் குறிக்கும் பெயர்களைத் தனியாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்துக்கான உதவி நூல்களில் கப்பல்களுக்கான பாகங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பெயரிட்டிருக்கிறார்கள். தமிழில் நான் தேடிப் பார்த்தேன். எவ்வளவோ சொல்கிறார்கள் இல்லையா, எனக்குத் தெரியாது, அவ்வளவு அரைகுறையான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவன் தான் நான்.

மெல்வில் குறிப்பிடும் கப்பல்களின் பாகங்களின் தமிழ்ப் பெயர்களை எனக்குத் தெரிந்த கல்வி, வாசிப்பில் இருந்து உடனடியாக என்னால் சொல்ல முடியாது. தேட வேண்டும், கிடைக்காமல் கூடப் போகலாம். ஆனால், என்னுடைய சமூகம் பற்றி நான் வெளியே சொல்லிக் கொள்கிறேன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் கட்டியவர்கள் என்று.

எந்தவொரு அறிவையும்கூட அடுத்த சமூகத்துக்குக் கடத்த முடியாத சமூகமாக இருந்திருக்கிறோம் என்பது வருத்தமளிக்கக் கூடிய விஷயம்.

நவீனத்துவ அணுகுமுறையில் தமிழ் அடையாளம் என்பதே நூறு ஆண்டுகள் தான்; அதிகபட்சம் 150 ஆண்டுகள். தமிழ் அடையாளமே இலக்கியத்தின் மூலம் உருவான ஒன்றுதான் என்பேன். ஒரு பெரிய பாரம்பரியத்தில் நம்மை இணைத்து வைப்பது இலக்கியம்தான். வேறு எந்த வெளிப்படையாகத் தெரியும் கருவி/ அமைப்புகூட நமக்குக் கிடையாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோவில்கள் இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூகத்தை இந்த நிலத்துடன் இணைப்பது இலக்கியம்தான். சங்க இலக்கியம் இல்லையென்றால் இந்தப் பெருமைகூட அடித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்தியாவில் கிடைக்கக் கூடிய கல்வெட்டுகளில் 70 சதவீதம் தமிழ் மொழியில் தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்; அதில் ஒரு 80 சதவீதம் இன்னும் வாசிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், தமிழ்ச் சமூகம் பற்றி என்ன தெரிந்திருக்கிறோம் என்பதுகூட இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

கீழை சமூகத்துக்கே வரலாற்றின் மீது பெரிய பிரேமை கிடையாது.

ராஜேந்திர சோழன் கடல் தாண்டி போர் புரிந்த மன்னன், இந்திய நிலப்பரப்பில் எடுத்துக் கொண்டால் ஒரு பெரிய மன்னன் தானே. இந்தியர்கள் போரே புரிந்ததில்லை என்று சொல்கிறார்கள். இந்தியர்கள் போரே புரிந்ததில்லை என்று சொல்லும்போது என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், குறிப்பாக இந்தியர்கள் என்றதும் மனதில் தோன்றுவது வட இந்தியா தான். சோழ மன்னர்கள் இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா வரை சென்றிருக்கிறார்கள், அங்கு என்ன விருந்துக்கா சென்றிருப்பார்கள்? போர் தான் செய்திருப்பார்கள். போரில் கொலைகளில் ஈடுபட்டிருப்பார்கள், ஆளுகைக்குக் கீழ் ஒரு காலகட்டத்தில் இணைத்திருப்பார்கள். இந்தியா என்ற இவர்களின் சொல்லாடலில் இவையெல்லாம் வருவதே இல்லை. தென்னிந்தியாவில் குறிப்பாக சோழர்கள் மட்டும்தான்; வேறு யாரும் அப்படி இல்லை என்றே சொல்லலாம். தென்னிந்தியாவில் சோழர்கள் இப்படியெல்லாம் போர் நடத்தியிருக்கிறார்கள் என்பது இந்திய ஓர்மைக்குள் வரவில்லை என்பதுதான் வருத்தம்.

இங்கு நாம் அசோகரைப் படிப்பது போல் உத்தர பிரதேசத்தில் ஒரு பள்ளியில் சோழர்களைப் பற்றிப் படிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. சிவாஜிக்கு சிலை வைப்பதாகப் பேசிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ராஜேந்திர சோழனுக்கு ஒரு சிலை கிடையாதே என்று ஒரு கார்ட்டூன் அவுட்லுக் இதழில் வரைந்திருந்தார்கள். தமிழ்ப் பத்திரிகைகள் ஒன்றில்கூட அப்படி நான் பார்க்கவில்லை.

காலனியாதிக்கம் ஒரு பெரிய இடையீடு. நமது சமூகத்திற்கும், கல்விக்கும் இடையே உள்ள இடைவெளியால் நீக்க முடியாத பெரிய பாதிப்புகள் நிகழ்ந்துவிட்டன.

கலாச்சார ஊடுருவலில் முதன்மைப் பிரச்சினையான இந்தி மொழித்திணிப்பு எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கிருந்து பிழைப்புக்காக பிரான்ஸுக்குச் செல்லும் ஒருவர், பிரெஞ்சு தான் கற்றுக் கொள்ள வேண்டும். பொள்ளாச்சி, கோயமுத்தூர் மாதிரியான ஊர்களிலேயே குழந்தைகள் ஜெர்மன் கற்றுக்கொள்கிறார்கள். என்னுடைய குடும்பத்திலேயே இந்த விஷயம் நடக்கிறது. பத்தாவது படிக்கும்போதே ஜெர்மனியில் இந்தக் கல்லூரியில் படித்தால், இந்த உதவித் தொகை கிடைக்கும் என்று அறிந்து ஜெர்மன் மொழி படிக்க வைக்கிறார்கள். ஆனால், வட இந்தியர்கள் தமிழகத்துக்கு வந்த பிறகு, அவர்களோடு பேசுவதற்கு நமக்கு இந்தி தெரியவில்லையே என்று நினைக்கிறார்கள். மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம், வட இந்தியாவில் இருந்து எத்தனையோ பேர் ஐரோப்பாவில் குடியேறியிருக்கிறார்கள், அங்கு போய் அவர்களுக்கு இந்தி தெரியவில்லை என்றா குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை. இந்தி தெரியாமல் போய்விட்டதே என்று வருந்தும் மோசமான குணம் தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. அப்படித்தான் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதும்.

அண்ணாதுரை சார்ந்த நேர்மறையான விஷயங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன, இல்லையா? அவருடைய இந்தி எதிர்ப்புப் பேச்சு ஒரு அற்புதமான rhetoricதான். சென்னையில் சாதாரண மக்களிடம் அவர் பேசிய பேச்சு வெற்று அலங்கார மொழியெல்லாம் கிடையவே கிடையாது. மாடியில் இருந்து தூக்கி வீசினால் குப்பையைக் கூட ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அவர் சொல்லும் விஷயம் இருக்கிறதில்லையா, இந்தி மொழியை ஏன் படிக்கக்கூடாது என்பதற்கான காரணமாக அவர் முன்வைப்பது இந்தி மொழியின் மூலமாகத் தெரிந்துகொள்வதற்கு எதுவும் இல்லை என்பதே அடிப்படை.

நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டால் தத்துவம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தத்துவத்துக்கான ஒரு பிடியை (value) ஜெர்மனி இப்போதும் கொண்டிருப்பதால் ஜெர்மன் கற்றுக் கொள்ளலாம்.

இந்தி கற்றுக் கொள்வதன் மூலம் இவை எதையும் நாம் கற்றுக் கொள்ள முடியாது. இந்தியே இந்த விஷயங்களுக்காக ஆங்கிலத்தை நம்பியிருக்கும்போது, அண்ணாதுரையின் தர்க்கம் அதுதான், இந்தி எதை நம்பியிருக்கிறதோ, அதை நான் கற்றுக் கொள்கிறேன். இந்தி என்பது புல்; ஆங்கிலம் நெல். நான் நெல் வளர்த்துக் கொள்கிறேன். ஏன் இரண்டையும் சேர்த்து வளர்க்க வேண்டும். அதுவே நெல்லை ஒட்டித் தான் இருக்கிறது.

இந்தக் கதையாடலை உருவாக்கியதில் தி.மு.க-வின் பங்கு முதன்மையானது; அதை வெறுத்து பேசும் நிலையில் இன்று நாம் இல்லை. அதை முற்று முழுக்க ஒதுக்கிவிட்டு, வெற்று அலங்காரம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. இன்றைக்கு அதைப் பற்றி நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளும் இடத்தில் தான் நாம் இருக்கிறோம் என்று தோன்றுகிறது.

எவ்வளவு மோசமான விஷயங்களையும் அலங்கார நடையில் பேசிச் செல்லட்டுமே, பேச்சு என்பதே ஓர் அலங்கார நடைதானே. இலக்கியத்தில் இல்லாத அலங்காரமா? தி.முக-வின் மேடைப்பேச்சு இல்லாமல் தமிழர் நாகரீகம் என்ற ஒரு கனவு உருவாகியிருக்குமா என்பது சந்தேகம் தான். ஒரு நாகரீகத்தைக் கட்டமைக்க வேண்டுமென்றால் அப்படி ஒரு rhetoric தேவை. எந்தவொரு காங்கிரஸ்காரர்களாலும் தமிழர் நாகரிகத்தை உருவாக்க முடிந்ததா? அந்த மாதிரியான ஒரு சொல்லாடலை உருவாக்க முடிந்ததா? ராஜாஜியால் முடிந்ததா. திமுகவுக்கு வெளியே வைத்துப் பார்ப்பதென்றால் ம.பொ.சி-ஐச் சொல்லலாம். தமிழ்ச் சமூகத்தை ஒரு நாகரீகமாக அணுகியதில், அதைச் சாதாரண மக்களின் மனதிலும் கொண்டுபோய்ச் சேர்த்ததற்கு திராவிட இயக்கத்தின் அலங்காரமான பேச்சு நடை பெரிய பங்காற்றியிருக்கிறது. இன்று அதைப் பின்புலமாக வைத்துதான் பல அரசியல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கே அதிகக் கட்டணம் கட்டி ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கும், அதுவும் ICSE பாடத்திட்டத்தில் படிக்கும் ஒருவர்கூட ஒரு மேதையாக உருவாகவில்லையே. அறிவியல், கணிதம், கணிணியியல், பொறியியல் என நாம் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும்போது தேவையில்லாமல் இந்தியைக் கற்பதில் நேரத்தை செலவழிப்பதினால் நமக்கு ஒரு புண்ணியமும் இல்லை. தத்துவமே நமது கல்வியில் கற்பிக்கப்படுவதில்லை எனும்போது இந்தி என்பது நமக்கு கூடுதல் சுமைதான். மாறாக இந்தியாவில் அவரவர் தாய்மொழி, ஆங்கிலம் என்கிற இரண்டாம் மொழி இருப்பதே அதன் வளர்ச்சிக்கு நல்லது.

ஆனால் நான் திமுககாரன் இல்லை. ஆனால் இந்தியாவில் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும், காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் சாதிக்காததை திமுகவும் அதிமுகவும் செய்திருக்கின்றன. நமது மருத்துவக் கட்டமைப்பை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு சிறப்பாக இருக்கிறது. இவ்வளவு ஏழ்மையான சமூகத்தில் பெரும்பணத்தை மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் செலவழித்திருக்கிறார்கள். அதிமுகவைவிட திமுகவின் பல பங்களிப்புகள் முக்கியமானவை. உதாரணத்திற்கு சுயமரியாதைத் திருமணம், எந்தவொரு மாநிலத்திலும் இப்படியொரு சிந்தனையே இன்னும் வரவில்லை.

நீங்கள் கண்டறிந்த அல்லது உங்களுக்கு வெளிப்பட்ட உண்மையாக நீங்கள் கருதுவது எதை?

இருப்பைப் (existence) பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது அதிகாரம் இல்லாத மனிதனால் சமூகத்தில் ஒரு entityயாகக் கூட இருக்க முடியாது என்பது எனக்கு இப்போது பிரத்யட்சமாகத் தெரிகிற உண்மை.

இருப்பே அதிகாரத்துடன் இணைந்துவிட்டது என்று தோன்றுகிறது. ஏன் வாழ்க்கை அர்த்தமற்றது என்று நினைக்கிறோம் என்றால், அதிகாரம் இல்லை என்று நம்புகிறோம். அதிகாரம் இல்லை என்று நினைக்கும்போது, இருப்புக்கான அர்த்தம் இல்லாமல் போகிறது.

One has to be feel powerful — you have to be feel powerful to create something.

ஒரு குறும்புக் கேள்வியுடன் இந்த உரையாடலை நிறைவு செய்யலாம் — எந்தப் பெண் எழுத்தாளரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்?

இந்த விசயத்தில் நான் Polygamy-ஐ ஆதரிக்கிறேன். விர்ஜீனியா வுஃல்ப்பின் மொழியின் மீதும், ஆண்டாளின் மீதும் காதலிருந்தாலும் வுஃல்பின் உடல் வற்றிப் போன படங்களே கிடைப்பதால் நான் விக்கி பேட்டிசன் (Vicky Pattison), ஜில்லியன் ஃப்லின்னைக் (Gillian Flynn) குறிப்பிடுகிறேன். பாருங்கள் நான் டோனி மாரிசனைக் குறிப்பிடவில்லையே! ஓரான் பாமுக்கிற்கு கிரன் தேசாயோடு உறவிருந்ததாக நாம் தெரிந்திருக்கிறோம், இல்லையா? ஸ்லோவேஜ் ஜிஜக் (Slavoj Žižek) லேடி காகாவோடு (Lady Gaga) டேட்டிங்க் செய்ததாக ஒரு வதந்தி இருக்கிறது. அப்படியொரு வதந்தியை நிக்கி மினாஜோடு (Nicki Minaj), கேட்டி பெர்ரியோடு (Katy Perry) என்னால் உருவாக்க முடிந்தால் அது எவ்வளவு பெரிய சாதனை!


சு. அருண் பிரசாத், க. விக்னேஷ்வரன்

2 COMMENTS

  1. அழகான, அருமையான நேர்காணல். பல விஷயங்களை திறனுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் பாலசுப்ரமணியம் பொன்ராஜ் வாழத்துகள்.

  2. மிக அருமை. சிறப்பான நேர்காணல் பாலா.வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.