Thursday, Aug 18, 2022
Homeபடைப்புகள்கவிதைகள்சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்

சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்

1) நந்தினிக்குட்டி

நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம்

கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள்

ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி

தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும்.

குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார்

 

மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும்

மிட்டாய் கிடைக்கிறது.

அவளுக்கு சந்தோசமில்லை

 

தாத்தா நம்ம வீட்டுக்கு ஏன் வரல?

குடில் கட்டிருக்க வீட்டிலதான் டான்ஸ் பண்ணுவாங்களா?

யேசுசாமி நல்லவர்னு சொல்றவங்க வீட்டுக்குத்தான் வருவாங்களா?

ஸ்டார் லைட்டெல்லாம் போட்டவங்க வீட்டுக்குத்தான் போவாங்களா?

 

அவமதிப்பு தயக்கம்; பரஸ்பர இறுக்கம்; மதமாற்றக் குற்றச்சாட்டு

இதெல்லாம் நந்தினிக்குட்டிக்கு தெரியவில்லை

அவளுக்கு அதெல்லாம் பொருட்டுமில்லை

நிறைமாத அம்மாவுக்கு சமாதானப்படுத்த வழியுமில்லை

இரவின் கனவுகளில்

ஊசியிலைகள்

ஸ்லெட்ஜ் வண்டிகள்

சிவப்பு வெள்ளை ஏல்ஃப்கள்

குலுங்கும் மணிகள்

பனிக்கட்டிகள்

அவளுக்கு குளிரடிக்கிறது

 

காலை எழுந்ததும் மீண்டும்

தாத்தா ஏன் வரலை

அழுகிறாள் நந்தினிக்குட்டி

 

அந்த கிறிஸ்மஸ் அன்று நந்தினிக்கு

தம்பிப் பாப்பா பிறந்தது

கிழக்கே  ஒரு வால்நட்சத்திரமும்

அப்போதும் ஜிங்கிள் பெல் தாத்தா வரவில்லை

நந்தினிக்குட்டி சிரிக்கவுமில்லை

 

2) தங்கம் பாட்டி

தங்கம் பாட்டிக்கு திருமணம் ஆகவில்லை

ஏதோவொரு உறவினர் வீட்டில் வேலைசெய்து வாழ்கிறாள்

தெருக்கதைகள்  எல்லாம் அவளுக்குத் தெரியும்

அவளுடைய கதை யாருக்கும் தெரியாது

 

எப்போதும் நீர் கோர்த்திருக்கும் கண்கள் அவளது

எல்லோர் துக்கமும் அவளது

எல்லோர் சந்தோஷமும் அவளது

எதைப் பேசினாலும் கண்கலங்குவாள்

எதைக் கேட்டாலும் தேம்பியழுவாள்

தொட்டால் உதிர்ந்து பரவும் மெர்க்குரிக் கண்கள்

 

பாத்ரூமில் விழுந்த மேரிக்கு  காலொடிந்ததை

எதிர் வீட்டு ராஜண்ணனுக்கு பிரமோஷன் கிடைத்ததை

தெருக்கோடி குமார் தூக்கிட்டு இறந்ததை

ஐந்தாவது வீட்டு ஷீலாவுக்கு ஆண்குழந்தை பிறந்ததை

 

சந்தோஷமோ துக்கமோ

யாருக்காகவேனும் அழுகிறாள்

அவளுக்காகவும் அழுகிறாள்

தெருவில் நடக்கும் சம்பவங்களானது

அவள் வாழ்வு

தெருவெங்கும் உருள்கின்றன

அவள் சிந்தும் துளிகள்

தூய அன்பின் பாதரச உருண்டைகள்

.

 

இன்று மதியம் அவளுக்கு வந்த அழைப்பை எடுத்துப் பேசுகிறாள்

யாரோ ஒருவரின் சாவை எதிர்முனை சொல்கிறது

எப்போதும் எல்லாவற்றிற்கும் அழுதவள் இன்று அழவில்லை

 

தங்கம் பாட்டி

என் அம்மாவுக்கும் பாட்டி

என் பையனுக்கும் பாட்டி

என் மனைவிக்கும் பாட்டி

தெருவின் பேரக்குழந்தைகளுக்கும் பாட்டி

எல்லோருக்கும் பாட்டி

எனக்கும் பாட்டி

பிறக்கும்போதே பாட்டியாகப் பிறந்த பாட்டி

 

 

3) பீவிக்கண்ணும்மா

எப்போதும் அந்தத் திண்ணையில்தான் இருப்பு

மஞ்சளும் வெள்ளையும் கலந்த கவுணி.

கையில் உருளும் தஸ்பீஹ்

பிஸ்மி சொல்லாமல் எதையும் செய்வதில்லை.

எப்போதாவது வெத்திலை

 

“பிளா பீக்கண்ணு “

நலம் விசாரிக்கையில் பொக்கைவாய் சிரிப்பு

அவ்வப்போது

“தாயோளிப் பயலுவ”

யாரையாவது ஏசுவாள்

பலரும் கஷ்டநஷ்டங்களை சொல்லி அழுகையில் எப்போதும் சொல்வாள்

“போங்கோ எல்லாம் அல்லாஹ் ஹயராக்கித் தருவான்”

துக்கங்களுக்கு

“ஹயாத்து மௌத்து நம்ம கையிலேயா இரிக்கி “

 

நினைவு தெரிந்த நாள்வரை

திண்ணையை விட்டு எங்கும் பெயர்ந்ததில்லை

அவளது இருப்பு

யுகம் யுகமாய் அங்கேயே நிலைகொண்ட இருப்பு

திரும்ப முடியாத குகையொன்றில் நுழைந்து

அங்கேயே குடிகொண்ட பேரிருப்பு

 

பனையோலை விசிறியை தொடும்போது மட்டும்

அவள் கண்களில் காதல் வழியும்

அது உப்பா செய்த விசிறி

ஏனோ உப்பா இறந்த வருடம் முழுக்க

பீக்கண்ணும்மா

சிரிக்கவுமில்லை அழவுமில்லை


சிவசங்கர். எஸ். ஜே

 

பகிர்:
Latest comment
  • அற்புதமான கவிதைகள்… பாராட்டுகள் அண்ணன் எஸ்.ஜே.சிவசங்கருக்கு….

leave a comment

error: Content is protected !!