ஜோஸ் சரமாகோ நேர்காணல்

கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso)

தமிழில் ச. ஆறுமுகம்

 

பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட முதல் போர்த்துக்கீசியர், அவரே. அவ்விருதினைப் பெறுவது குறித்த அவரது எண்ணங்களைக் கேட்டபோது, அவர், “நோபல் சிறப்புகளை, அழகுப் போட்டியில் வெற்றிபெற்று, ஒவ்வொரு இடத்திலும் போய்க் காட்டுவதைப் போன்றதாகக் கருதமாட்டேன். அதைப் போன்றதொரு அரியணைக்கு என்றுமே நான் ஆசைப்பட்டதில்லை; அதுபோலவெல்லாம் என்னால் நினைத்துங்கூடப் பார்க்கமுடியாது.” என்றார்.

ஜோஸ் சரமாகோ, போர்த்துக்கல் நாட்டின் மத்திய ரிபாட்ஜோ பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானமுள்ள ஊரகத் தொழிலாளர் குடும்பத்தில் 1922 இல் பிறந்தார். அவருக்கு இரண்டு வயதானபோது, குடும்பம், அவரது தந்தை காவல்துறை காவலராகப் பணியாற்றிய, லிஸ்பன் நகருக்குக் குடிபெயர்ந்தது. அவரது பதின் வயதுகளில் பொருளாதாரச் சிரமங்களால் வழக்கமான உயர்நிலைப் பள்ளியிலிருந்து தொழிற்பள்ளிக்கு மாறவேண்டியதாகிப் பிற்காலத்தில் முழுநேரப் பணியாக எழுத்தினைக் கொள்ளும் முன்னர் கம்மியர் உட்படப் பல்வகைப்பட்ட வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது.

1947 இல், அவரது இருபத்து நான்காவது வயதில், பாவத்தின் நிலம்` (Land of Sin) என்ற அவரது முதல் நாவலினை வெளியிட்டார். `விதவை` (The Widow) என முதலில் பெயரிடப்பட்டிருந்த அதனை, பதிப்பாளர் தாம் அந்தக் கிளுகிளுப்பூட்டும் தலைப்பு அதிகப் பிரதிகளை விற்கச்செய்யும் என்ற நம்பிக்கையில் அப்படி மறுபெயரிட்டார். (அந்த வயதில் அவருக்கு விதவைகளைப் பற்றியோ பாவம் பற்றியோ எதுவும் தெரியாதிருந்ததென, சரமாகோ பிற்காலத்தில் குறிப்பிட்டார்.) அதன் பின்னர் பத்தொன்பது ஆண்டுகளாக அவர் எந்த நூலும் வெளியிடவில்லை. 1966 இல் அவரது முதல் கவிதைத் தொகுதி, The Possible Poems வெளிவந்தது. அப்படியே, 1977 இல் Manual of Painting and Calligraphy என்ற அவரது இரண்டாவது நாவலினை வெளியிட்டார். அறுபது மற்றும் எழுபதுகளில் பத்திரிகைத் துறையில் சுறுசுறுப்பாக இயங்கிய அவர் Díario de Notícias என்ற இதழின் உதவி இயக்குநராகவும் குறுகிய காலம் பணியாற்றினார். குறிப்பாக, வருமானம் குறைந்த சில நேரங்களில், பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தும் ஈடுகட்டிக்கொண்டார். 1969 இல் போர்த்துகீசிய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்த அவர் பற்றுமிக்க ஒரு உறுப்பினராகவே திகழ்ந்திருந்தார்; அவரது படைப்புகளும் சமூக விமரிசனம் மற்றும் அரசியலோடு நுணுக்கமாகப் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கின்றன.

1974 கார்னேஷன் புரட்சியின் தாக்கத்தில் படைத்த Raised Up from the Ground 1980 இல் வெளியாகியதும், சரமாகோ, அவரது இலக்கியக் குரலினை, ஒரு நாவலாசிரியராக நிலைநிறுத்திக்கொண்டார். போர்த்துக்கல்லின் அலென்டேஜோ பகுதி, விவசாயத் தொழிலாளர்களின் மூன்று தலைமுறைக் கதை பரவலாகக் கவனம் பெற்றதுடன், லிஸ்பன் நகர விருதினையும் பெற்றது. 1982ல் அவர் வெளியிட்ட Baltasar and Blimunda நாவல் அவரது எழுத்துப் பணியினை உலக அளவுக்கு உயர்த்தியதுடன், அமெரிக்காவில் அவரது முதல் நாவலாக 1987 இல் வெளியானது. அவரது அடுத்த நாவல் The Year of the Death of Ricardo Reis போர்த்துகீசிய பென் கிளப் விருதினையும் பிரிட்டனின் புகழ்பெற்ற தனிநபர் அயல்மொழிப் புனைவு விருதினையும் பெற்றது. ஐபீரிய தீபகற்பம் ஐரோப்பாவிலிருந்தும் விடுவித்துக்கொண்டு அதன் லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க வேர்களைத் தேடி அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் செல்கிறதான `கல்தெப்பம்` The Stone Raft, நாவல் ஐரோப்பாவின் ஐரோப்பியத் தன்மையை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியிலான போராட்டத்தின் மீதான எல்லையில்லாக் கற்பனை விமரிசனமாக வெளியாக, அவரது வெற்றி தொடர்ந்தது. 1989 இல் The History of the Seige of Lisbon வெளியானது. அந்த நாவலில், நடுத்தர வயதுடைய ஒரு தனிமைப்பட்ட மெய்ப்புத் திருத்துநரும், அவரது மன அளவிலான உணர்ச்சிக் குறைபாட்டிலிருந்து அவரை மீட்டெடுத்த அவரது பணி முதல்வரும் வசீகரம் மிக்கவரும் அவரைவிட மிகவும் இளம் வயதினருமான பதிப்பாசிரியர் மீது காதல் கொள்பவருமான ரெய்முண்டோ சில்வா என்ற கதைசொல்லும் பாத்திரத்தில் அவருடைய சாயல் அதிகமாகவே உள்ளதென அண்மையில், ஒரு வரைவில் ஒத்துக்கொண்டுள்ளார். அந்த நாவல், 1988 இல் அவர் மணம் புரிந்த மனைவி ஸ்பானிய ஊடகவியலாளர் பிலார் டெல் ரியோவுக்கு,  அதன் பிறகான அனைத்து நூல்களையும் போல அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

1991 இல் சரமாகோ வெளியிட்ட The Gospel According to Jesus Christ   நாவல்  போர்த்துகீசிய எழுத்தாளர் சங்கத்தின் விருதினை வென்றதோடு ஐரோப்பிய ஒன்றிய அரியாஸ்டோ இலக்கியப் போட்டிக்கான பரிசீலனைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதெனினும், போர்த்துகீசிய அரசாங்கம், அதன் பழமைவாத  மையங்களுக்குத்  தலைவணங்கியும், கத்தோலிக்க தேவாலயத்தின் அழுத்தத்துக்கு அடிபணிந்தும், அந்த நாவலைப் போட்டியிலிருந்தும் விலக்கித் தடைவிதித்தது. “போர்த்துக்கல் நாட்டில் முழுமையாக நிலவும் ஜனநாயகத்தில் இத்தகைய ஒன்று நிகழ்ந்திருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்தமுடியாதது. இதுபோன்ற ஒரு காட்டுமிராண்டி நடவடிக்கையை நியாயப்படுத்தக்கூடிய வேறு அரசாங்கம் ஏதாவது இருக்கிறதா, என்ன? இது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது.” என சரமாகோ, அவரது எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.

இந்தப் பிரச்சினைக்குப் பின் சரமாகோ, வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த லிஸ்பனை விட்டு மனைவியுடன் புறப்பட்டு, ஸ்பானிய கானரித் தீவுகளில் ஒன்றான லான்சரோட் தீவுக்குக் குடிபெயர்ந்து, அங்கே, அவரது மனைவியின் சகோதரி வீட்டுக்கு அடுத்ததாகவே ஒரு வீட்டினைக் கட்டி அதிலேயே இப்போதும் அவர்களுடைய மூன்று நாய்களுடன் – ஒன்று டெரியர், மற்ற இரண்டும் நடுத்தர அளவிலான அடர்மயிர் இனம், காமோஸ், போப் மற்றும் கிரேட்டா – வசிக்கிறார். அங்கே சென்ற பின், சரமாகோ இரண்டு நாவல்களை வெளியிட்டிருக்கிறார்: நவீன மனிதனின் கிறுக்குத்தனமான, சக மனிதனுக்குத் துன்பம் விளைவிக்கும் செயல் பற்றியதான குலைநடுங்கச் செய்யும் நீதிக்கதையான Blindness மற்றும் All the Names; மேற்கொண்டும் ஐந்து தொகுதிகளாக அவரது லான்சரோட் நாட்குறிப்புகள்.

1997 மார்ச் மாதத்தில் வெப்பம் மிகுந்த ஒரு மாலைப்பொழுதில் லான்சரோட்டிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இந்த நேர்காணல் நிகழ்ந்தது. (அவர், லான்சரோட் தீவின் வளர்ப்பு மகனாகிக்கொண்டிருந்தார்.)    அவரது மனைவி, அவரது வீட்டினை ஒரு குட்டிச் சுற்றுலாவாகவே, செவ்வக வடிவிலானதும் புத்தகங்கள் வரிசைவரிசையாக ஒழுங்குற அடுக்கப்பட்டு, அதன் நடுவில் `ஒரு அருமையான எந்திரம்’ என சரமாகோ அறிவித்த கணினியுடன் சாய்வு மேஜை ஒன்றும் இருந்த சரமாகோவின் படிப்பறையையும், மிகக் குறுகிய நேரத்துக்குள், சுற்றிக் காட்டினார். போர்ட்டோ தெல் கார்மென், அருகிலமைந்துள்ள ஃபோர்ட்டவென்சுரா தீவு, கடற்கரை மற்றும் லான்சரோட்டின் உலோக நிறத்து நீலவானம் எல்லாவற்றையும் காட்டுகிற மாதிரியான சாளரங்கள் அமைந்த ஒரு சுவருடனான ஒரு பெரிய அலுவலகம் இரண்டாவது மாடியில் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. கட்டுமானப்பணி சத்தங்களாலும், கட்டப்பட்டிருந்தாலும், பிலாரைத் தம் பக்கம் பிடித்திழுத்த நாய்களின் குரைப்பொலியாலும் எப்போதாவது ஏற்பட்ட சிறு தடங்கல்கள் இருந்தாலும், சரமாகோவின் ஆழ்ந்த நகைச்சுவை உணர்வும் விருந்தினரை இயல்பாக உணரவைக்கவேண்டுமென்கிற அக்கறையில் `எனக்கு நெருக்கமானவரே` என என்னை இடையிடையே, அடிக்கடி அழைத்ததுமாகச் சேர்ந்து உரையாடல் குறிப்பிடத்தக்கவகையில் சிறப்பாக அமைந்தது.

 

கேள்வியாளர்:

உங்களுக்கு லிஸ்பனை இழப்பதான ஏக்கம் இருக்கிறதா?

ஜோஸ் சரமாகோ:

லிஸ்பனை இழந்த ஏக்கம் அல்லது ஏக்கமில்லாதிருப்பதல்ல, பிரதான மையம். உண்மையிலேயே அதை இழப்பதெனில், கவிஞர் சொல்வதைப் போல, அந்த உணர்வு – தண்டுவடம் மரத்துப் போகிற உணர்வு –  உண்மையில்,  நான் அந்தச் சில்லிடுகிற உணர்வினை உணர்வதில்லை.

நான் அதைப்பற்றி நினைக்கத்தான் செய்கிறேன். எங்களுக்கு அங்கே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எப்போதாவது ஒருமுறை அங்கு செல்கிறோம்; ஆனாலும், இப்போது லிஸ்பனில் எனது உணர்வு, மேற்கொண்டு எங்கு செல்வதென்று தெரியாத ஒரு நிலை தான் – மேற்கொண்டு லிஸ்பனில் எப்படித் தங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. ஒருசில நாட்கள் அல்லது ஒன்றோ இரண்டோ வாரம் நான் அங்கிருக்கும்போது என்னுடைய பழைய பழக்கவழக்கங்களுக்குத் திரும்புகிறேன். ஆனால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் இங்கு வந்துவிடவேண்டுமென்றுதான் நினைத்துக்கொண்டிருப்பேன்.  இந்த இடத்தையும் இங்குள்ள மனிதர்களையும் விரும்புகிறேன். இங்கு நன்றாக இருக்கிறேன். இதை எப்போதாவது விட்டுச் செல்வேனென நான் நினைக்கவில்லை. நல்லது, நானும் புறப்படுவேன், ஒருநாள், நாம் எல்லோருமே புறப்படவேண்டியதுதானே, ஆனால், விருப்பமில்லாமலேதான் நான் செல்வேன்.

கேள்வியாளர்

பல்லாண்டுகளாக வசித்து, எழுதிவந்த சூழ்நிலையை விட்டுவிட்டு, அதற்கப்பால் லான்சரோட்டுக்கு வந்தபோது, உடனேயே இந்த இடத்துக்குப் பழகிவிட்டீர்களா? அல்லது, முந்தைய பணிச் சூழ்நிலையினை இழந்துவிட்ட தாக்கம் இருந்ததா?

சரமாகோ

எளிதில் பழகிவிட்டேன். நான், என் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ளாத வகை மனிதனென்றே நம்புகிறேன். எனக்கு எது நடந்தாலும், நல்லதோ, கெட்டதோ, எதையும் நாடகத்தனமாக்கிவிடாமல் என் வாழ்க்கையை இதுவரை வாழ்ந்துவந்திருக்கிறேன். அந்தக் கணங்களை நான் வாழ்ந்து கடக்கிறேன், அவ்வளவுதான். இருப்பினும், துயரத்தை உணரும் நேரங்களில், நானும் அப்படியே உணர்கிறேன்தான், ஆனால் அதற்காக, …. நான் …………. அதையே வேறு வகையில் சொல்கிறேனே, – மிகைச்சுவை வழிவகைகளை நான் தேடிக்கொண்டிருப்பதில்லை.

இப்போது நான் ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் நான் படுகிற வேதனை, சித்திரவதை இருக்கிறதே, பாத்திரங்களை வடிவமைப்பதிலுள்ள கஷ்டங்கள், சிக்கல் மிகுந்த விவரிப்புகளில் ஏற்படுகின்ற நுட்பமான வேறுபாடுகள் பற்றியெல்லாம் உங்களிடம் சொல்வது எனக்கு கூடுதல் ஆர்வம் தருகிறது. நான் சொல்லவருவது, நான் செய்யவேண்டியவற்றை, எவ்வளவு இயல்பாகச் செய்யமுடியுமோ, அவ்வளவுக்கு இயல்பாகத்தான் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை, எழுத்து என்பது ஊதியத்திற்கான ஒரு பணி. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு விஷயங்களென்று சொல்லிக்கொண்டு, எழுத்துச் செயல்பாட்டிலிருந்து  உழைப்பினைப் பிரித்து நான் வேறுபடுத்தவில்லை. முக்கியம் அல்லது பயனுள்ளதென, குறைந்தபட்சம் எனக்காவது, முக்கியம் அல்லது பயனுள்ளதெனத் தோன்றுவதைச் சொல்கிற ஒரு கதையைச் சொல்வதற்காக சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக, அல்லது ஒன்றன் முன் ஒன்றாக, நான் ஒழுங்கமைக்கிறேன். அதில், இதைவிடப் பெரிதாக ஒன்றுமில்லை. அதை என்  `ஊதியத்துக்கான பணி` எனக் கருதுகிறேன்.

கேள்வியாளர்

நீங்கள் எப்படி வேலைசெய்கிறீர்கள்? தினந்தோறும் எழுதுகிறீர்களா?

சரமாகோ

தொடர்ச்சி தேவைப்படுகிற ஒரு வேலை எனில், உதாரணத்திற்கு ஒரு நாவலெனில், தினமும் எழுதுகிறேன். எனக்கும் வீட்டில் எல்லாவகையான இடையூறுகளும், பயணத்திலான இடர்பாடுகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்றாலும், அது அல்லாதபடிக்கெனில் நான் ஒரு ஒழுங்கினைக்கொண்டவன். மிகவும் கட்டுப்பாடுடையவனும் கூட. ஒரு நாளுக்குக் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் வேலைசெய்யவேண்டுமென்ற கட்டாயத்தை நான் ஏற்படுத்திக்கொள்வதில்லை; ஆனால், எனக்கு ஒரு நாளுக்குக் குறிப்பட்ட பக்கங்கள் பொதுவாக அது இரண்டு பக்க அளவுக்கு, வேலை தேவைப்படுகிறது. இன்று காலையில் ஒரு புதிய நாவலுக்கான இரண்டு பக்கங்கள் எழுதினேன். நாளைக்கும் மற்றொரு இரண்டு பக்கங்கள் எழுதிவிடுவேன். ஒரு நாளுக்கு இரண்டு பக்கங்கள் என்பது அதிகமானதில்லையென நீங்கள் நினைக்கலாம். ஆனால்,  வேறு வரைவுகள் எழுதுதல் மற்றும் கடிதங்களுக்குப் பதிலெழுதுதல் போன்ற வேலைகளையும் நான் செய்தாக வேண்டியிருக்கிறதே; இன்னொரு பக்கம் பார்த்தால், ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் என்பது ஒரு ஆண்டுக்கு அநேகமாக எண்ணூறு பக்கங்கள் ஆகிவிடுகிறதே.

முடிவாகப் பார்த்தால், நான் மிகவும் சராசரியான ஒரு சாதாரணமானவன். என்னிடம் மாறுபாடான பழக்கங்கள் எதுவும் இல்லை. நான் நாடகத்தனமெதுவும் செய்வதில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நான் எழுத்துச் செயல்பாட்டினை உணர்ச்சிமயமாக்குவதில்லை. படைப்பாக்கத்தில் நான் படுகிற சிரமங்கள் பற்றிப் பேசுவதில்லை. வெற்றுப் பக்கம், எழுத்தாளர்களுக்கான எழுத்துத் தடை போன்றெல்லாம் நாம் எழுத்தாளர்கள் பற்றிக் கேள்விப்படுகிறோமே அவற்றைப் பற்றியெல்லாம் எனக்குப் பயமில்லை. அதுமாதிரியான சிக்கல்கள் எதுவும் எனக்கு இல்லை. ஆனால், எந்தவகைப்பட்டதானாலும் வேலையென்று ஒன்றினைச் செய்கிற எந்தவொரு மனிதருக்கும் ஏற்படுவது மாதிரியான சிக்கல்கள் எனக்கும் ஏற்படுவதுண்டு. சிலநேரங்களில் விஷயங்கள் எப்படி வரவேண்டுமென நான் விரும்புகிறேனோ, அப்படி வரவே வருவதில்லை. நான் விரும்பிய வகையில் அவை வராதபட்சத்தில் அவை எப்படி வருகின்றனவோ அப்படியே அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

கேள்வியாளர்

கணினியில் வரைவுகளை நீங்களே நேரடியாக உருவாக்கிக்கொள்கிறீர்களா?

சரமாகோ

ஆமாம். அப்படியேதான் செய்கிறேன். செம்புகழ்த் தட்டச்சுப்பொறியில் நான் கடைசியாக எழுதிய நூல் ` லிஸ்பன் முற்றுகையின் வரலாறு` (The History of the Seige of Lisbon). விசைப்பலகைக்கு மாறியதில் எனக்கு எந்தச் சிரமமுமேயில்லை என்பதுதான் உண்மை. கணினி ஒருவரின் எழுத்து நடையில் சமரசம் கொள்ளச் செய்துவிடுகிறதெனப் பரவலாகச் சொல்லப்படுவதற்கெல்லாம் மாறாக, நான் பயன்படுத்துவது போல – ஒரு தட்டச்சுப்பொறியைப் போலப் – பயன்படுத்தும்போது எதையும் சமரசம்செய்துகொள்ள வேண்டியதில்லையென்றுதான் நான் நினைக்கிறேன். இப்போதும்  தட்டச்சுப்பொறியேதானிருந்தால், அதில் நான் என்ன செய்வேனோ, அதையேதான் கணினியிலும் செய்கிறேன், ஒரே வேறுபாடு, இதில் மேலும் வசதியாக, விரைவாகச் செய்யமுடிகிறது. எல்லாமே முன்பைவிடச் சிறப்பானதாக இருக்கின்றன. கணினியால் எனது எழுத்துமுறையில் எந்தக் கெட்ட விளைவுமில்லை. கையால் எழுதுவதிலிருந்து தட்டச்சு முறைக்கு மாறியபோது அது எழுத்து நடையை மாற்றிவிடுமென முன்னர் சொன்னது போலவேதான் இப்போதும் சொல்கிறார்கள். அப்படி நடை மாறுமென நான் நம்பவில்லை. ஒருவருக்கென, அவருக்கேயான நடை, அவருக்கேயான சொற்பட்டியெனத் தனியாகயிருக்குமானால், கணினிப் பயன்பாடு அதை எப்படி மாற்றிவிடமுடியும்?  அது  எப்படியிருந்தாலும்,   தாளுக்கும் அச்சுப்பக்கத்துக்குமான வலிமைமிக்க ஒரு உறவினை – இயல்பாகவே நான் கடைப்பிடிக்கவேண்டிய அதனை – தொடர்ச்சியாகக் கடைப்பிடித்துத்தான் வருகிறேன். நான் முடித்த ஒவ்வொரு பக்கத்தையும் எப்போதுமே அச்செடுத்துவிடுகிறேன். அச்செடுத்த பக்கம் இல்லையென்றால், எனக்கு நிறைவுணர்வு என்பது ………..

கேள்வியாளர்

உங்களுக்கு அழுத்தமான ஒரு நிரூபணம் கையில் வேண்டும்.

சரமாகோ

ஆமாம், அதுவேதான்.

கேள்வியாளர்

ஒரு நாளுக்கு இரண்டு என்ற அந்தப் பக்கங்களை முடித்தபின்பு, உங்கள் பிரதியில் திருத்தங்கள் செய்கிறீர்களா?

சரமாகோ

ஒரு முறை நூலின் முடிவுக்கு வந்துசேர்ந்துவிட்டேனென்றால், உடனேயே  மொத்தப்பிரதியையும் முழுவதுமாக மீண்டும் மறுவாசிப்பு செய்கிறேன். பொதுவாக அந்தக் கட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கின்றன – குறிப்பான விவரங்கள் அல்லது நடையில் சிற்சில மாற்றங்கள், அல்லது, பிரதியினை மேலும் கூர்மைப்படுத்துவதான மாற்றங்கள் – ஆனால் பெரிய அளவிலான மாற்றங்கள் நிச்சயம் கிடையாது. எனது நூலில் கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடும் முதன்முதல் நான் எழுதுகிற பிரதிதான் என்பதோடு அது, அப்படிக்கப்படியேதான் இருக்கிறது. வேறுசில எழுத்தாளர்கள் செய்வதுபோலெல்லாம் நான் செய்வதில்லை – கதையின் சுருக்கமென்ற பெயரில் ஒரு இருபது பக்கம் எழுதுவது, அதுவே பின்னர் எண்பது பக்கமாகிப் பின்னர் இருநூற்றைம்பது பக்கமாகப் பெருத்துவிடும். நான் அப்படிச் செய்வதேயில்லை. எனது நூல், நூலாகவே தொடங்கி, அங்கிருந்து அப்படியே வளர்கிறது. இப்போதும் பாருங்கள், என்னிடம் நூற்று முப்பத்திரண்டு பக்கமுள்ள ஒரு புதிய நாவல் இருக்கிறது; நான் அதனை நூற்று எண்பது பக்கங்களாக மாற்ற முயற்சிக்கமாட்டேன்; அந்தப் பக்கங்கள் அப்படியேதான் இருக்கும். அந்தப் பக்கங்களுக்குள்ளாகவே மாற்றங்கள் நிகழலாம், ஆனால் முதல் வரைவு ஒன்று எழுதும்போது தேவைப்படுகிற அளவுக்கான, அதாவது அந்த வரைவு முழுமையாக மற்றொரு வடிவம்கொள்ளத்தக்கதான, அதன் நீளம் அல்லது உட்பொருளில் மாற்றம் ஏற்படுத்துவதான வகைகளாக இருக்காது. பிரதியைச் செம்மைப்படுத்தத் தேவைப்படுகிற மாற்றங்களே தவிர, அதற்கும் மேலாக எதுவுமில்லை.

கேள்வியாளர்

அப்படியென்றால், திட்டவட்டமான ஒரு முன்கருத்துடன்தான் நீங்கள் எழுதத் தொடங்குகிறீர்கள்.

சரமாகோ

ஆமாம். எந்தவொரு இடத்தைச் சென்று சேரவேண்டுமென்று நான் நினைக்கிறேனோ, அதைக் குறிப்பாகச் சென்றடைவதற்கு, அந்த இடம் குறித்த தெள்ளத்தெளிவான ஒரு முன்கருத்து என்னிடம் உண்டு. ஆனால் அது   மாற்றவே முடியாததான ஒரு திட்டமென்பதில்லை. முடிவில் நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ, அதைச் சொல்லிவிடுகிறேன்; ஆனால், அந்தக் குறிக்கோளுக்குள்ளாகவே நெகிழ்வுத் தன்மையும் இருக்கிறதென்றுதான் சொல்கிறேன். நான்  என்ன சொல்கிறேனென்பதை விளக்க அடிக்கடிப் பயன்படுத்துகிற ஒரு ஒப்புவமை : நான் லிஸ்பனிலிருந்து போர்ட்டோவுக்குப் போய்ச்சேரவேண்டுமென்பது எனக்குத் தெரியும்; ஆனால், அந்தப் பயணம் நேரடியான ஒன்றாக இருக்குமாவென்று எனக்குத் தெரியாது. காஸ்டெலோ பிராங்கோ வழியாகக் கூட நான் செல்லலாமென்பது கிண்டலாகத் தெரியும்; ஏனென்றால் காஸ்டெலோ பிராங்கோ நாட்டின் உட்பகுதியில் கிட்டத்தட்ட ஸ்பானிஷ் எல்லையில் இருக்கிறது; லிஸ்பன் மற்றும் போர்ட்டோ, இரண்டும் அட்லாண்டிக் கரையிலேயே அமைந்துள்ளன.

நான் சொல்வது, ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு நான் பயணிக்கும் பாதை எப்போதுமே வளைந்தும் நெளிந்தும் செல்கிறது; ஏனென்றால் அது கதை விவரிப்பின் வளர்ச்சியோடு இணைந்திருக்கிறது; கதைவளர்ச்சிக்கோ முதலில் தேவைப்படாத சில விஷயங்கள் அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் எனத் தேவைப்படுவதாயிருக்கிறது. கதைவிவரணை ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் தேவைகளை நிறைவுசெய்தாக வேண்டியிருக்கிறது என்பதால் எதுவுமே முன்தீர்மானிக்கப்படுவதாயில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு கதை முன்தீர்மானிக்கப்பட்டால் – அதுவும் செய்யக்கூடியதுதானென்றாலும், கடைசி விவரம் வரையில் எழுத்தில் கொண்டுவரவேண்டும் – அப்போது அந்த நூல் முழுவதுமே ஒட்டுமொத்தத் தோல்வியாகிவிடும். அந்த நூல் உருவாகி நிகழ்வுக்கு வருமுன்பே நிகழுமாறு கட்டாயப்படுத்துவதாகிறது. ஒரு நூல் என்பது அதுவாகவே பிறந்துவருகிறது. ஒரு நூல் உருவாகும் முன்பே அதை நிகழ்வுக்கு வருமாறு நான் கட்டாயப்படுத்தினால், சொல்லப்படுகிற கதையின் இயல்பான வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுவதாகிறது.

கேள்வியாளர்

நீங்கள் எப்போதுமே இப்படித்தான் எழுதிவருகிறீர்களா?

சரமாகோ

எப்போதுமே இப்படித்தான். வேறு முறையில் நான் எழுதியதேயில்லை. இந்த வழிமுறையில் எழுதுவது – மற்றவர்கள் என்ன சொல்வார்களோ எனக்குத் தெரியாது – திடமான கட்டமைப்புகளுடன் கூடிய நூல்களைப் படைப்பதற்கு என்னை அனுமதிக்கிறதென்றே கருதுகிறேன். என்னுடைய நூல்களில் ஒவ்வொரு கட்டமும், ஒவ்வொரு கணமும் கூட ஏற்கெனவேயே நிகழ்ந்திருப்பதைக் கணக்கில்கொண்டே நகர்ந்துசெல்லும். கட்டிடம் கட்டுபவர், முழுக்கட்டுமானமும் சரிந்துவிடாமலிருப்பதற்காக ஒன்றோடொன்றைச் சமநிலைப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதுபோலவேதான், ஒரு நூலும் அதன் முன்தீர்மானிக்கப்பட்ட மேற்கட்டுமானத்தையன்றி, அதன் தர்க்கத்தை அதுவே தேடிக்கொண்டு வளர்ந்து செல்லும்.

கேள்வியாளர்

உங்கள் கதைமாந்தர்கள் எப்படி? உங்களை எப்போதாவது வியப்பிலாழ்த்தியதுண்டா?

சரமாகோ

சில பாத்திரங்களுக்கு அவ்வவற்றுக்கேயான வாழ்க்கை உண்டென்றும் நாவலாசிரியர் அதைப்பின்தொடரவேண்டுமென்கிறதுமான கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், கதைமாந்தரின் ஆளுமை வீச்சுக்கு எதிராகச் செயல்படுமாறு நாவலாசிரியர் கட்டாயப்படுத்திவிடாமல் கவனமாக இருக்கவேண்டியுள்ளது; அதற்காகக் கதைமாந்தருக்குத் தனித்துச் செயல்படும் உரிமையெல்லாம் கிடையாது. அந்தப் பாத்திரம் நாவலாசிரியன் கையில் மாட்டிக்கொண்டுள்ளதுதான். ஆனால் அது என் கையில் மாட்டிக்கொண்டிருக்கிறது என்ற விபரம் அதற்குத் தெரியாமலே மாட்டிக்கொண்டிருக்கிறது. கதை மாந்தர்கள் கயிற்றில் கட்டுண்டு ஆட்டுவிக்கப்படுகிறார்கள்; ஆனால் கயிறு நீளமாகவே விடப்பட்டிருக்கிறது; கதைமாந்தர்கள் தனித்தியங்குகிற விடுதலை என்னும் மாயையில் வலம்வருகிறார்களென்றாலும் அவர்கள் செல்லக்கூடாதென நான் நினைக்கிற இடத்துக்கு அவர்களால் செல்லமுடியாது. அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் நாவலாசிரியன் கயிற்றை இழுத்து, பொறுப்பாளனாக நானொருவன் இங்கிருக்கிறேனென அவர்களுக்குச் சொல்லவேண்டும்.

கதைக்குள் உலவுகின்ற கதைமாந்தர்களிடமிருந்து தனியாகப் பிரித்துவிட முடியாததுதான் கதையென்றாலுங்கூட, நாவலாசிரியன் படைக்கவிரும்புகின்ற கட்டுமானத்திற்குப் பணிபுரிவதற்காகவே கதைமாந்தர்கள் உள்ளனர். நான் ஒரு கதைமாந்தரை அறிமுகப்படுத்துகிறபோது, அந்த கதைமாந்தர் எனக்குத் தேவைப்படுவதையும் அவரிடமிருந்து நான் எதைப்பெறவேண்டுமென்பதையும் நான் அறிவேன்; ஆனால், அந்தக் கதைமாந்தர் இன்னும் உருவாகவில்லை – அதாவது உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார். அந்தக் கதைமாந்தரை உருவாக்குவது நான்தானென்றாலும், ஒருவகையில் பார்த்தால், நான் உடனிருக்கையில் அது தானாகவே உருவாவது. அதாவது, கதைமாந்தரை அதன் தன்மைக்கெதிராக என்னால் உருவாக்கமுடியாதென்பதுதான். நான் அக்கதைமாந்தருக்கு மதிப்பளிக்கவேண்டும்; இல்லையெனில் அது, அதன் இயல்புக்கு மீறிய விஷயங்களைச் செய்யத் தொடங்கிவிடும். எடுத்துக் காட்டாக, அந்தக் கதைமாந்தரின் இயல்புக்குள் வராதெனில், அதை குற்றமெதையும் இழைக்குமாறு செய்துவிடமுடியாது – அதுவும் அக்குற்றச் செயலின் நியாயப்பாட்டினை வாசகனுக்குத் தெரிவிப்பது அவசியமாக இருக்கும்போது, குற்றநோக்கு எதுவுமில்லையெனில், அது எவ்விதப் பொருளுமில்லாததாகிவிடும்.

உங்களுக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒரு உதாரணம் உள்ளது. `பால்டசாரும் பிலிமுண்டாவும்` ஒரு காதல் கதை. உண்மையில் சொல்லவேண்டுமெனில், அது, அழகான ஒரு காதல் கதை. ஆனால், நாவலின் கடைசியில் தான், காதல் வார்த்தைகளே இல்லாத ஒரு காதல் கதையை நான் எழுதியிருக்கிறேனென்பதை உணர்ந்தேன். காதல் வார்த்தைகளென நாம் கருதுகிற எந்தவொரு வார்த்தையினையும் பால்டசாரோ அல்லது பிலிமுண்டாவோ, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவேயில்லை. இது முன்திட்டமிடப்பட்டதென வாசகன் நினைக்கலாம்; ஆனால் அப்படியல்ல. நானே முதலில் வியந்துபோனேன். இது எப்படியென நினைத்துப்பார்த்தேன். உரையாடலில் உடலியல் ஈர்ப்புள்ள சொல் ஒன்று கூட இல்லாத ஒரு காதல் கதையினை நான் எழுதியிருக்கிறேன்.

எதிர்காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் மறுபதிப்பு ஒன்றில் இந்த இருவருக்குமான உரையாடலில் மாறுதல்களைச் செய்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வார்த்தைகளைப் புகுத்தினேனென்றால், அது அந்தக் கதைமாந்தர்களை முழுமையாகப் பொய்மைப்படுத்திவிடும். கதையின் இப்போதய வடிவத்தை அறியாத வாசகன், ஏதோ ஒன்று சரியாக இல்லையேயென்றுகூட உணரலாமென நான் நினைக்கிறேன். இந்த கதைமாந்தர்கள் முதல்பக்கத்திலிருந்தே அருகருகாக இருப்பவர்கள்  இருநூற்றைம்பதாவது பக்கத்தில் திடீரென `நான் உன்னைக் காதலிக்கிறேன்` என எப்படிச் சொல்லமுடியும்?

கதைமாந்தரின் இயல்புத்தன்மைக்கு மதிப்பளிக்கவேண்டுமென நான் சொல்வதன் பொருள் அதுதான் – தனிநபரைக் கட்டமைக்கின்ற அவரது உட்புற உளவியல் தன்மையான அவருக்கேயுரிய ஆளுமைத்தன்மைக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்யவைக்காமலிருப்பது. அது ஏனெனில், நாவலில் இயங்கும் ஒரு கதைமாந்தரும் இவ்வுலக மக்களில் ஒருவர் – போரும் அமைதியும் நடாஷா இவ்வுலக மக்களில் ஒருவர்; குற்றமும் தண்டனையும் ரஸ்கோல்நிக்கோவ் மற்றுமொரு மனிதர்; சிவப்பும் கறுப்பும் ஜூலியன் மற்றுமொரு மனிதர் – இலக்கியம் உலக மக்கள்தொகையை அதிகப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. இந்தக் கதைமாந்தர்களை, நாம், நாவல்கள் என அழைக்கிற காகித இதழ்த் தொகுப்புக்குள் அமைந்துகிடக்கும் வெறும் வார்த்தைகளின் கட்டமைப்புகளென, இவ்வுலகில் இயக்கமில்லாத பிறவிகளென நினைப்பதில்லை. நாம் அவர்களை உண்மை மனிதர்களென்றே மதிக்கிறோம்.  அனைத்து நாவலாசிரியர்களுக்கும் இருக்கின்ற கனவென நான் நினைப்பது – அவர்களின் கதைமாந்தர்களில் ஒருவர் “குறிப்பிடத்தக்க ஒருவராக” ஆகிவிடவேண்டும் என்பதுதான்.

கேள்வியாளர்

உங்கள் கதைமாந்தர்களில் அந்தக் `குறிப்பிடத்தக்க ஒருவராக` நீங்கள் யாரைப் பார்க்கவிரும்புகிறீர்கள்?

சரமாகோ

அநேகமாக முன்னனுமானித்தல் என்ற குற்றத்தைச் செய்கிறேனென்றாலும், உண்மையைச் சொல்வதெனில் எனது கதைமாந்தர்கள் எல்லோரையுமே – `ஓவியம்தீட்டுதல் மற்றும் கையெழுத்தியலின் நூல்` ஓவியர் எச் முதல் `அனைத்துப் பெயர்களும்` சென்ஹார் ஜோஸ் வரையிலானவர்கள் எல்லோரும் உண்மையிலேயே அந்தக் குறிப்பிடத்தக்கவர்கள்தாம். அதற்கான அடிப்படையாக நான் கருதுவது, என்னுடைய எந்தவொரு கதைமாந்தரும் – உண்மையான ஒரு தனிநபரின் வெறும் நகல்மனிதரோ – அல்லது இன்னொருவரைப் போன்றவரோ இல்லை. அவர்கள் அவளோ, அவரோ, யாராயினும் ஒவ்வொருவரும் இவ்வுலகத்தில் வாழ்பவர்களாகவே தங்களை இணைத்துக்கொள்கின்றனர். அவர்கள் பௌதீக உடலென்ற ஒன்று மட்டுமே இல்லாத கற்பனைப் புனைவுமனிதர்கள். அவர்களை நான் இப்படித்தான் பார்க்கிறேன், ஆனால், நாமறிவோம், எழுத்தாளர்கள் ஒருபாற் கோடுபவர்களாயிருப்பதாக ஐயப்பாட்டுக்குட்படுத்தப்படுவதாக …………….

கேள்வியாளர்

என்னைப் பொறுத்தவரையில், `பார்வையின்மை` மருத்துவரின் மனைவி மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மனிதர். குறிப்பிட்ட அவளது  உருவம் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது;  அதில் வருகிற எல்லாக் கதைமாந்தர்கள் பற்றியுமே விரிவான விளக்க விபரங்கள் இல்லாமலிருந்துங்கூட இதர கதைமாந்தர்கள் பற்றியுங்கூட அப்படியேதான் பார்க்கிறேன்.

சரமாகோ

இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, அவளது மிகச்சரியான குறிப்பிட்டதொரு தூல உருவத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்; அதுவும் உடல் சார்ந்த எந்த விவரிப்பின் விளைவுமில்லாததென்பது மிக நிச்சயமானது; ஏனெனில் நாவலில் அவ்வாறான எதுவுமே இல்லை. கதைமாந்தரின் மூக்கு அல்லது நாடி எப்படி இருந்ததென்று விவரிப்பது முறையான ஒரு செயலென்று நான் கருதவில்லை. என்னுடைய கணிப்பு என்னவென்றால், வாசகர்கள் அதனைச் சிறிதுசிறிதாக, அவர்களுக்கேயுரிய கதைமாந்தர்களைக் கட்டமைத்துக்கொள்வதையே விரும்புவார்களென்பதுதான் – அந்த ஒருபகுதி வேலையை நாவலாசிரியன், வாசகரிடம் ஒப்படைப்பதே நல்லது.

கேள்வியாளர்

பார்வையின்மை குறித்த முன்கருத்து படிப்படியாக எப்படி உருப்பெற்றது?

சரமாகோ

என்னுடைய எல்லா நாவல்களையும்போலவே பார்வையின்மையும் எனது சிந்தனைகளுக்குள் அதுவாகவே திடீரெனப் புகுந்து வந்தது. ( இதுதான் அதிகச் செறிவான சூத்திரமாவென எனக்கு உறுதியாகத் தெரியவில்லையென்றாலும், இதைவிடச் சிறப்பான ஒன்றினை என்னால் கூறமுடியவில்லை.) ஒரு உணவகத்தில் மதிய உணவின் வருகைக்காகக் காத்திருக்கும்போது, எந்தவித முன்தகவலுமில்லாமல், திடீரென நாமெல்லோருமே பார்வையிழந்துவிட்டால் என்னவாகுமென்ற நினைப்பு வந்தது. அந்தக் கேள்விக்கான பதிலாக  `இப்போது மட்டுமென்ன, நாம் உண்மையிலேயே பார்வையற்றவர்களாய்த் தானே இருக்கிறோம்` என்றுதான் தோன்றியது.  இதுதான் நாவலின் கரு. அதன்பின்னர், நாவலின் தொடக்கச் சூழ்நிலைகளை மனத்துக்குள் வரித்துக்கொண்டு அவற்றின் விளைவுகளாகத் தொடர்நிகழ்வுகள் பிறந்துவருமாறு அனுமதிப்பதை மட்டுமே நான் செய்யவேண்டியிருந்தது. அவை பயங்கரமான விளைவுகளாயிருந்தனவென்றாலும் எஃகு போன்ற உறுதிநிறைந்த தர்க்கத்தைக் கொண்டிருந்தன. `பார்வையின்மை`யில் அதிகளவு கற்பனையில்லை; காரண காரிய உறவுநிலைகளைத் தொடர்ச்சி விட்டுப்போகாமல் வெறுமனே விவரிப்பதுதான்.

கேள்வியாளர்

`பார்வையின்மை` எனக்கு மிகவும் பிடித்திருந்தது; ஆனால் அதை வாசிப்பது எளிதாக இல்லை. அது ஒரு கடினமான நூல். மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பு.

சரமாகோ

என்னுடைய நெடுநாள் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஜியோவான்னி போர்ட்டீரோ இறந்துவிட்டார், தெரியுமா?

கேள்வியாளர்

எப்போது?

சரமாகோ

பெப்ருவரியில். எய்ட்ஸில் இறந்தார். இறக்கும்போது `பார்வையின்மை`யைத் தான் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்; அதை முடித்துவிட்டார். முடிக்கின்ற கட்டத்தில், மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளின் எதிர்விளைவாகப் பார்வையில்லாமற் போகத் தொடங்கியது. மேலும் கொஞ்சகாலத்திற்கு உயிரைத் தக்கவைத்துக் கொள்ள மருந்தைத் தொடர்ந்து உட்கொள்வதா அல்லது அதை உட்கொள்ளாமலிருந்து அதன்விளைவாக மேற்கொண்டும் சிக்கல்களை வரவழைத்துக்கொள்வதா என்ற இருமை நிலைகளில் ஒன்றைத் தேர்வுசெய்யும் கட்டாயத்திலிருந்தார். பார்வையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழியை அவர் தேர்ந்தெடுத்தாரென்பதைச் சொல்லித்தானாக வேண்டும்; அதுவும் அவர் பார்வையின்மை குறித்த ஒரு நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அது மனதை உருக்கும் ஒரு பேரழிவுச் சூழ்நிலை.

கேள்வியாளர்

`லிஸ்பன் முற்றுகையின் வரலாறு` நாவலுக்கான கருத்து எப்படி உருவானது?

சரமாகோ

கிட்டத்தட்ட 1972 லிருந்தே அப்படியொரு கருத்து எனக்குள் இருந்தது : முற்றுகைக்குள்ளான ஒரு நகரத்தின் முற்றுகை குறித்த கரு; ஆனால் நகரத்தை முற்றுகையிடுபவர்கள் யாரென்பது தெளிவில்லாமலிருந்தது. பின்னர் அது, 1384 இல் காஸ்டிலினியர்களால் நடத்தப்பட்ட லிஸ்பன் முற்றுகையென்றும் அதுவே முதல் முற்றுகையென்றும் நான் நினைத்த உண்மையான ஒரு முற்றுகையாகவே பரிணமித்தது. நான் இதனை பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மற்றொரு முற்றுகையுடன் இணைத்தேன். முடிவில் அம்முற்றுகை அவ்விரண்டு வரலாற்று நிகழ்வுகளும் கலந்த கலவையாகவே இருக்க, அதை நான் சிலகாலத்துக்கு நீடித்த முற்றுகையாக, முற்றுகைக்குள்ளான தலைமுறையினர்களோடு முற்றுகையிட்ட தலைமுறையினரும் இணைந்த ஒன்றாக நான் கற்பனை செய்தேன். ஒரு அபத்தமான முற்றுகை. அதாவது, நகரம் சுற்றி வளைக்கப்பட்டது, மக்கள் அதைச் சூழ்ந்து நின்றனர்; ஆனாலும் அதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை.

முடிவில் இவையனைத்தும், நாவல் உருவாக்கத்தில் ஒன்றிணைந்தன, அல்லது எனக்குத் தேவைப்பட்டவாறு வரலாற்று உண்மை குறித்த கருத்தாக்கத்தின் மீதான ஆழ்சிந்தனையாகின. வரலாறு உண்மையானதா?  நாம் குறிப்பிடுகிற வரலாறு, முழுக்கதையினையும் திருப்பிக் கூறுகிறதா? வரலாறு, உண்மையில் ஒரு புனைவு – கண்டுபிடிக்கப்பட்ட தரவுகளால் அது உருவாக்கப்படுவதென்பதாலல்ல, அப்படி; பின், அது எப்படியென்றால், அந்தத் தரவுகளை ஒருங்கிணைப்பதில் பெருமளவுக்கு புனைவு செயல்படுகிறது. கதைக்குத் தேவைப்படுகின்ற ஒரு ஒருங்கிணைவினை, ஒரு தொடர்ச்சியினைத் தருகின்ற குறிப்பிட்ட சில தரவுகள் தெரிவுசெய்யப்பட்டு ஒன்றிணைக்கப்படுவது தான் வரலாறு. அந்தத் தொடர்ச்சியை உருவாக்குவதற்காக பல தகவல்கள் விலக்கப்படவேண்டியதாகின்றன. மாறுபட்ட ஒரு உணர்வினை அல்லது புரிதலைத் தருகின்ற தரவுகள் வரலாற்றுக்குள் எக்காலத்துக்கும் நுழையாமலேயே உள்ளன. வரலாறு முடிவுற்ற ஒரு பாடத்துறையாக முன்னிலைப்படுத்தப்படக்கூடாது. இது இப்படித்தான்; ஏனெனில் அது இப்படித்தான் நிகழ்ந்ததென யாராலுமே கூறமுடியாது.

லிஸ்பன் முற்றுகையின் வரலாறு வெறுமனே வரலாற்றுப் பதிவினை மேற்கொள்வதற்கானதல்ல. அது வரலாறு மீதான ஒரு ஆழ்சிந்தனை; வரலாற்றினை உண்மையானதாகக் கருதுகிற, அல்லது வரலாறு உண்மையான ஒன்றாகவும் இருக்கலாமெனக் கருதுகிற அல்லது அப்படியுமான நிகழ்வாய்ப்புகளில் ஒன்றாகக்  கருதுகிற, ஆனால் அது பலநேரங்களில் ஏமாற்றுகிற ஒன்றாக இருந்தபோதிலுங்கூட, அதனைப் பொய்மையெனக் கருதாத ஆழ்சிந்தனை. அலுவல்முறை வரலாற்றோடு `அது அப்படி இல்லை` என முரண்படுவது அவசியம்; ஏனெனில் அது இன்னுமொரு `ஆம்` என்பதை நோக்கி நம்மைச் செலுத்துகிறது. இதைத்தான் நம்முடைய வாழ்க்கையிலும், புனைவின் வாழ்க்கையிலும், சித்தாந்தங்களின் வாழ்க்கையிலும் செயல்படுத்தவேண்டும். எடுத்துக்காட்டாக, புரட்சி என்பது ஒரு `இல்லை`; அந்த `இல்லை` என்பது `ஆம்` என உடனடியாக அல்லது காலப்போக்கில் மாற்றப்படுகிறது; ஆகவே, அது, அந்தநேரத்தில் இன்னொரு `இல்லை` என்பதுடன் முன்வைக்கப்படவேண்டும். சிலவேளைகளில், `இல்லை` என்பது நம் காலத்தில் மிகமிக அவசியமான ஒரு சொல் எனக் கருதுகிறேன். அந்த `இல்லை` ஒரு தவறாகவே இருந்தாலும் அதன் மூலம் நாம் பெறவிருக்கின்ற நன்மை, எதிர்மறைத் தன்மையினை  விஞ்சிவிடுகிறது. இன்றைக்கு இருக்கிறபடியான நிலையில் இந்த உலகத்திற்கு `இல்லை` என்பது ஒரு எடுத்துக்காட்டு.

இந்த நாவலைப் பொறுத்தவரையில், அது பெருநோக்கமென எதுவுமில்லாதது – அது ஒரு சிறிய `இல்லை` தானென்றபோதிலும் இப்போதும் அது ஒருவரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறத்துடனுள்ளது.  1147 இல்  போர்த்துக்கல் அரசன் லிஸ்பனை மீளவெற்றிகொள்வதற்கு புனிதப்போர்த் தியாகிகள் உதவினர் என்ற அலுவல்முறை வரலாற்று வாக்கியத்துக்குள் ஒரு `இல்லை` யைப் புகுத்தியதால் – ரெய்முண்டோ மற்றொரு வரலாற்றினை எழுதுமாறு இட்டுச்சென்றான்; ஆனால் அவனது சொந்த வாழ்க்கையினை மாற்றிக்கொள்வதற்கான வழியினையும் அவனே திறந்துகாட்டினான். அந்தச் சொற்றொடருக்கான அவனது எதிர்நிலை அவன் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கைக்குமான ஒரு எதிர்நிலை ஆகிறது. அந்த எதிர்நிலை அவனை மற்றொரு நிலைக்கு எடுத்துச்சென்றது; அது அவனை அவனது வழக்கமான அன்றாடச்செயல்களிலிருந்தும் – நாளுமான அவனது இருண்மையிலிருந்து, அவனது சோகத்திலிருந்து – அவனை  அப்புறப்படுத்தியது. அவன் இன்னொரு நிலைக்கு நகர்வதோடு மரிய சாராவுடனான உறவுநிலையிலும் மற்றுமொரு நிலைக்கு மாறுகிறான்.

கேள்வியாளர்

லிஸ்பன் முற்றுகை வரலாறு முழுவதிலும் ரெய்முண்டோவும் மரியசாராவும் அந்நியர்களாக – அவர்களின் சொந்த நகரத்துக்குள்ளும் வெளியாட்களாகவே முன்னிறுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் `மூர்` என்றுகூடத் கூறிக்கொள்கின்றனர்.

சரமாகோ

ஆம். அதுதான், அதுவேதான். முடிவில், நாமெல்லோரும் அப்படித்தான் இருக்கிறோமென்றே நான் நம்புகிறேன்.

கேள்வியாளர்

நீங்கள் `நாம்` எனக்குறிப்பிடுவது, போர்த்துக்கீசியர்களையா?

சரமாகோ

ஆமாம். ஆனால் போர்த்துகீசியர்கள் மட்டுந்தானென்றில்லை. நாமெல்லோரும் நகருக்குள் வாழவேண்டியிருக்கிறது – நகரமென்பதை கூட்டாக வாழும் முறை எனப் புரிந்துகொள்ளவேண்டுமென்ற பொருளில் கூறுகிறேன் – ஆனால், அதேநேரத்தில் நாம் வெளியாட்களாக, மூர் உடலளவில் நகரத்துக்குள் இருந்துகொண்டும் அதேநேரத்தில் நகரத்துக்கு அந்நியப்பட்டுமாக இருக்கின்ற அந்தப் பொருளிலான மூர்களாக – நாம் நகருக்குள் மூர்கள்தாம். அது எதனாலென்றால், மாற்றத்தைச் செயல்படுத்த இயலுகிற வெளியாளாக அவர் இருக்கிறார். நகரச் சுவர்களுக்குள் இருந்துகொண்டே, வெளியிலிருக்கிற அவரால் அந்த நகரில் மாற்றத்தை விளைவிக்க இயலுகிற ஒருவரை மூர், மற்றவர், மாறுபட்டவர், மாறுபட்ட ஒருவர் என நாம் சொல்கிறோம் – ஒரு ஆக்கபூர்வ நன்னோக்கு உணர்வில் அப்படி நாம் நம்பிக்கைகொள்கிறோம்.

கேள்வியாளர்

முன்னர், கடந்த காலத்தில் போர்த்துக்கல் குறித்த உங்கள் அக்கறை மற்றும் ஆர்வங்களை வெளிப்படுத்தியிருந்தீர்கள். போர்த்துக்கல்லின் தற்போதய நிலை மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் அது இணைவதான திட்டம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சரமாகோ

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேனே. பேட்டி ஒன்றின்போது ஐரோப்பிய யூனியனுக்கான நமது ஆணையாளர் ஜோயாவோ டியூஸ் டே பின்ஹீரோவிடம் போர்த்துக்கல் செய்தியாளர் ஒருவர், “ போர்த்துக்கல், அதன் தேசிய இறையாண்மையில் பெரும்பகுதியினை இழக்கும் அபாயமிருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா?” என்ற கேள்வியை எழுப்பினார். அவர், “தேசிய இறையாண்மை என நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? பத்தொன்பதாம் நூற்றாண்டில், டேகஸ் நதியில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய கப்பல்படை ஒன்றின் தளபதி அனுமதிக்கமாட்டாரென்பதால் ஒரு போர்த்துக்கீசிய அரசு ஆட்சியில் அமரவேமுடியாமற்போயிற்று.” எனப் பதில் சொல்லிவிட்டு, ஹஹ்ஹாவென எள்ளிச் சிரித்தார். அந்த வரலாற்று நிகழ்வு நகைச்சுவை ஏற்படுத்துவதென்பது மட்டுமின்றி மேற்கொண்டும், போர்த்துக்கல்லுக்கு இறையாண்மை இழப்பு குறித்து எவ்வித முன்சிந்தனையும் கூடாது, ஏனெனில் நாம் அப்படி ஒன்றினைப் பெற்றிருந்ததேயில்லை எனவும் நம்புகிற ஒரு ஐரோப்பிய யூனியன் ஆணையாளர் இந்த நாட்டுக்குத் தேவையா?

ஐரோப்பிய யூனியன் சிந்தனை மேலும் முன்னெடுக்கப்படுமானால், நம்முடைய அரசியல்வாதிகள் மட்டுமில்லை, பிற நாட்டு அரசியல்வாதிகளுடைய பொறுப்புணர்வும் மங்கிவிடும். அதிலிருந்து, அடிப்படையில் அவர்கள் எப்படியிருக்கிறார்களோ – வெறுமனே முகவர்களாக – அப்படியே மாறிப்போவார்கள்; ஏனென்றால், நமது காலத்தின் மிகப்பெரும் பொய்மைகளில் ஒன்றுதான் ஜனநாயக நடைமுறை என்பதும். இந்த உலகில் ஜனநாயகம் செயல்படவில்லை; பின் எது செயல்படுகிறதென்றால், சர்வதேச நிதியின் அதிகாரம்தான் செயல்படுகிறது. அத்தொழில்களில் ஈடுபடுபவர்கள் தான் உலகத்தை உண்மையில் இயக்குகின்றனர். அரசியல்வாதிகள் வெறும் பதிலிகளே – அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார அதிகாரம் எனப்படுபவற்றிற்கிடையில் உண்மையான ஜனநாயகத்தை மறுக்கின்ற, அதற்கெதிரான ஒருவித வைப்பாட்டிவகை உறவு இருக்கிறது.

அதற்குப் பதிலாக நீங்கள் எதனை முன்வைக்கிறீர்களென மக்கள் என்னைக் கேட்கலாம். நான் எதனையும் முன்மொழியவில்லை. நான் வெறுமனே ஒரு நாவலாசிரியன் தான், என் கண்ணில் தெரிகிற உலகத்தைப்பற்றி அப்படியே எழுதுகிறேன், அவ்வளவுதான். அதை மாற்றுகிற வேலை என்னுடையதல்ல. அதனை என்னால் மாற்றவும் முடியாது, இன்னும் சொல்லப்போனால், அது எப்படியென்று கூட எனக்குத் தெரியாதுதான். உலகம் எப்படி இருக்கிறதென நான் நம்புகிறேனோ, அந்த வரம்புக்குள் என் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுகிறேன்.

இப்போது, எழுகின்ற கேள்வி, நான் எதையாவது ஒன்றினை முன்வைக்கவேண்டுமெனில் அது எதுவாக இருக்குமென்பதே. பின்னோக்கிய வளர்ச்சி எனச் சிலநேரங்களில் நான் குறிப்பிட்டதையே முன்வைக்கிறேன். வளர்ச்சி என்றாலே முன்னோக்கியதாக இருக்கும்போது, பின்னோக்கிய வளர்ச்சி என்பது முரண்பாடாகத் தோன்றலாம். பின்னோக்கிய வளர்ச்சி என்பதை மிக எளிதாகச் சொல்வதெனில் இதுதான் : நாம் வளர்ந்திருக்கிற நிலை – பணக்காரர்கள் அல்ல, ஆனால், உயர் மத்தியதர வர்க்கத்தினர் – நம்மை ஒரு வசதியான வாழ்க்கைக்கு அனுமதிக்கிறது. பின்னோக்கிய வளர்ச்சியெனச் சொல்வது “இத்துடன் நிறுத்திக்கொண்டு, பின்தங்கி நின்றுவிட்ட அந்த கோடிக்கணக்கான மக்களை நோக்கித் திரும்புவோம்”. இது எல்லாமே கற்பனைக் கனவுநிலைதான். நான் லான்சரோட்டில் வசிக்கிறேன். இந்தத் தீவில் ஒரு ஐம்பதாயிரம் பேர் வசிப்பார்கள். மீதி உலகில் என்ன நிகழ்கிறது? இந்த உலகின் ரட்சகராக ஆகும் நோக்கமென்றெல்லாம் எதுவும் எனக்குக் கிடையாது. ஆனால், இந்த உலகினை இன்னும் நல்லதொரு வாழ்விடமாக மாற்றமுடியுமென்கிற எளிமையான நம்பிக்கையுடன் நான் வாழ்கிறேன். இந்த உலகினை மிகவும் எளிதாக இப்போதிருப்பதைவிட நல்லதொரு உலகமாக மாற்றிவிடமுடியும்தான்.

இந்த நம்பிக்கைதான், நான் வாழ்கிற இப்போதய உலகத்தை எனக்குப் பிடிக்கவில்லையெனச் சொல்லுமாறு செய்கிறது. உலகம் முழுவதுமான புரட்சியென நான் காண்பது – என்னுடைய கற்பனைக் கனவுப் பார்வைக்காகத் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் – நன்மையான ஒன்றினைத்தான். நாமிருவரும் காலையில் விழித்தெழுந்ததும், இன்று நான் யாரொருவரையும் துன்பத்துக்குள்ளாக்கமாட்டேன் எனச் சொல்லிக்கொள்வதோடு, மறுநாளும் அதையே மீண்டும் சொல்லிக்கொண்டு உண்மையில் அதன்படி வாழ்ந்தோமானால், இந்த உலகம் குறுகிய காலத்திற்குள்ளாகவே மாறிவிடும். ஒருவகையில் இது முட்டாள்தனம்தான் – ஆனால், இது நடக்கப்போவதேயில்லை.

இவையெல்லாமும் சேர்ந்து இந்த உலகத்தில் பகுத்தறிவின் பயன்பாடு குறித்த கேள்விக்கு என்னை இட்டுச்செல்கின்றன. இதுதான் நான் ஏன் பார்வையின்மையை  எழுதினேன் என்பதற்கான விளக்கம். இதுவேதான், இந்தப் பிரச்சினைகளெல்லாம் உள்ளடங்கியிருக்கிற ஒருவகை இலக்கிய நூலுக்கு வழிகாட்டி இட்டுச்சென்றது.

கேள்வியாளர்

நீங்கள் எழுதியவற்றில் பார்வையின்மை தான் மிகமிகக் கடினமான நாவல் எனச் சொல்கிறீர்கள். இதற்குக் காரணம், நீங்கள் அடிப்படையில் ஒரு நன்னம்பிக்கையாளராக இருப்பதால், வெண்மைப் பார்வையின்மைக் கொள்ளைநோய்த் தொற்றின்போது மனிதன் அவனது சகமனிதனிடம் வெளிப்படுத்திய குரூரக் கொடுமையினையும் இந்த நடத்தையினையும் எழுதுவதிலேற்படுகின்ற இக்கட்டான நிலை தானா?

சரமாகோ

நான் ஒரு அவநம்பிக்கையான்தான், ஆனால் என்னை நானே என் தலையில் சுட்டுக்கொள்ளுமளவுக்கு அவநம்பிக்கையில்லை. நீங்கள் குறிப்பிடுகிற குரூரம் நாவலில் மட்டும் தானென்றில்லை, உலகம் முழுவதிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிற அன்றாட அவலம். இந்தக்கணத்தில்கூட நாம் வெண்மைப்பார்வையின்மைத் தொற்றால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். பார்வையின்மை என்பது,  மானுடப் பகுத்தறிவில்லாத்தன்மைக்கு ஒரு உருவகம். இந்தப் பார்வையின்மை, எந்த மனச்சிக்கலையும் ஏற்படுத்தாமல், இந்த பூமிக்கிரகத்தில் கோடானுகோடி மக்களைப் பசியில் தவிக்க விட்டுவிட்டு, செவ்வாய்க்கிரகப் பாறைகளின் உருவாக்கம் குறித்த ஆய்வுசெய்ய விண்ணூர்தியினை அனுப்பச் செய்கிறது. நாம் ஒன்று, குருடர்களாக அல்லது  கிறுக்கர்களாகத்தானிருக்கவேண்டும்.

கேள்வியாளர்

கல்தெப்பமும் சமூகப் பிரச்னைகளைத்தான் பேசுகிறது.

சரமாகோ

நல்லது, முற்று முழுதாக அப்படியே இல்லை, ஆனால் மக்கள் அந்த வகையில் பார்ப்பதற்கே முதல்நிலை அளித்தனர். ஐரோப்பாவிலிருந்து ஐபீரியத் தீபகற்பம் பிரிவதாகவே மக்கள் அதனைப் பார்க்க விரும்பினர். இதுவும் கதையின் ஒரு பகுதிதானென்றாலும், கதையில் என்ன நடக்கிறதென்றால், ஐபீரியன் தீபகற்பம், அதுவாகவே ஐரோப்பாவிலிருந்து பிரிவதோடு, அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து அகன்றுசெல்லவும் செய்கிறது. ஆனால், நான் சொல்வது ஐரோப்பாவிலிருந்தும் பிரிவதல்ல; ஏனென்றால் அதில் எந்தப் பொருளும் இல்லை. நான் சொல்லவிரும்பியதும் தொடர்ந்து சொல்வதும் நடப்பியல் உண்மையென நான் எதை நம்புகிறேனோ, அதைத்தான் – போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்குரிய வேர்கள்  முற்றுமுழுதாக ஐரோப்பியத்தில் மட்டுமேயில்லை. நான் வாசகர்களுக்குச் சொல்வது, கேட்டுக்கொள்ளுங்கள், நாம் எப்போதுமே ஐரோப்பியர்களாகவே இருந்துவருகிறோம், நாம் ஐரோப்பியர் என்பதோடு எப்போதும் ஐரோப்பியராகவே இருப்போம் – அதைவிட்டு வேறுவழியுமில்லை. ஆனால், நமக்கு வேறு சில பொறுப்புகளும் உள்ளன, வரலாறு, பண்பாடு மற்றும் மொழி இயல்பு குறித்த பொறுப்புகள். அதனால், உலகத்தின் இதர பகுதிகளிலிருந்தும் நம்மை, நாமே பிரித்துக்கொள்ளவேண்டாம், தென்னமெரிக்காவிலிருந்தும் நாம் பிரிந்துவிடவேண்டாம், ஆப்பிரிக்காவிலிருந்தும் பிரிந்துவிடவேண்டாம். இது ஏதோ ஒரு நியோகாலனிய ஆர்வக்கோளாற்றினைப் பிரதிபலிப்பதல்ல. ஆனால், கல்தெப்பத்தில் நிகழ்வதைப்போல ஐபீரியன் தீபகற்பம் தென் அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் நடுவில் சென்றமர்வதற்கு ஒரு காரணம் உள்ளது. அது என்னவென்றால் தெற்கு, தெற்கு, தெற்கு என்றே நாம் வாழ்நாளெல்லாம் பேசிக்கழிக்கிறோம். தெற்குதான் சுரண்டல் நிலமாக எப்போதுமே இருந்துவருகிறது. அந்தத் தெற்கு வடக்கிலிருந்தாலும் கூட நாம் அப்படித்தான் சொல்லவியலும்.

கேள்வியாளர்

உங்கள் லான்சரோட் நாட்குறிப்புகளில் நியூயார்க்குக்கான உங்கள் கடைசிப் பயணம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதில் அந்த நகரத்தின் தெற்கு வடமன்ஹாட்டனாக இருக்கிறதென்கிறீர்கள்.

சரமாகோ

ஆமாம், அந்தத் தெற்கு வடக்கில்தான் அமைந்திருக்கிறது.

கேள்வியாளர்

நாட்குறிப்புகளில் செல்ஸீ விடுதி பற்றிய உங்கள் விவரிப்பினை நான் மிகவும் மகிழ்ந்து அனுபவித்தேனென்பதை நான் உங்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும்!

சரமாகோ

ஓ, அது மிகவும் கொடுமையானது. என்னுடைய வெளியீட்டாளர் என்னை அங்கே தங்கவைத்துவிட்டார், ஆனால், அது யாருடைய திட்டமென்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அங்கே தங்க விருப்பமென நான் சொல்லியதாக நினைத்துக்கொண்டார்கள் – ஆனால் நான் அப்படிச் சொல்லவேயில்லை. அந்தக் கட்டிடத்தை வெளியேயிருந்து பார்த்திருக்கிறேன்; மிகவும் கண்ணைக்கவர்வதாக நினைத்துமிருக்கிறேன், ஆனால், என்னை அங்கு தங்கவையுங்களென நான் சொல்லவேயில்லை. தயவுசெய்து நம்புங்கள். அந்த விடுதிக்கு ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறதென்பதற்காக அவர்கள் என்னை அங்கே தங்கவைத்திருந்தார்களென யூகிக்கிறேன். ஆனால், வரலாறுள்ள வசதி குறைந்த விடுதி மற்றும் வரலாறில்லாத வசதியுள்ள விடுதி இவையிரண்டில் ஒன்றினைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், நான் ….. எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டிருந்தேன், ஆனால், என்ன இது, அது போன்ற ஒரு இடத்தை நான் பார்த்ததேயில்லை.

கேள்வியாளர்

ஐரோப்பாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் உங்களுக்கு அகன்றவொரு  பெரிய வாசகர் வட்டமுள்ளதெனினும் அமெரிக்காவில் குறைவான வாசகர்களே உள்ளனர்.

சரமாகோ

மிகத்தீவிரம் பொருந்திய  விஷயங்கள் உண்மையில் அமெரிக்க வாசகர்களுக்குச் சிறப்பாகத் தெரிவதில்லை. இருந்தாலும் எனது நூல்களுக்கு அமெரிக்காவிலிருந்து வரப்பெற்ற மதிப்பாய்வுகள் சிறப்பானவையாக இருந்தன.

கேள்வியாளர்

திறனாய்வாளர்களின் அபிப்பிராயங்களை நீங்கள் முக்கியமானவையாகக் கருதுகிறீர்களா?

சரமாகோ

எனக்கு முக்கியமானது எதுவென்றால், ஒரு நல்ல பணி என்பதன் என்னுடைய தரநிர்ணயத்தின்படி எனது பணியை நான் சிறப்பாகச் செய்கிறேன் – அதாவது நான் விரும்பிய வகையில் நாவல் எழுதப்பட்டுள்ளது. என் கைகளைவிட்டுச் சென்ற பின், அது வாழ்க்கை சார்ந்த மற்றெந்த விஷயமும் போலவேதான். ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுத்து, அதற்கு அனைத்திலும் சிறப்பானதே நடக்குமென நம்புகிறாள். ஆனால், வாழ்க்கை குழந்தைக்குரியது; தாய்க்குரியதல்ல. குழந்தை அதன் வாழ்க்கையை உருவாக்கும் அல்லது அதன் வாழ்க்கையைப் பிறர் உருவாக்குவார்கள்; ஆனால், அது அந்தத் தாயின் கனவின்படியானதாக நிச்சயம் இருக்காது. பன்மடங்கு வாசகர்களால் எனது நூல்கள் மாபெரும் மதிப்புடன் வரவேற்கப்படுமென நான் கனவுகாண்பதில் பொருளெதுவும் இல்லை; ஏனென்றால் அந்த வாசகர்கள் எனது நூல்களை அவர்கள் விரும்பிய வகையில்தான் வரவேற்பார்கள்.

என்னுடைய புத்தகங்கள் வாசகர்களைத் திருப்திப்படுத்தும் தகுதியைப் பெற்றுள்ளனவாக நான் கூறமாட்டேன். ஏனெனில் அப்படிச் சொல்வது, ஒரு புத்தகத்தின் தகுதி என்பது வாசகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததென்பதாகிவிடும். அது உண்மையல்ல என்பது நமக்குத் தெரியும்.

கேள்வியாளர்

அமெரிக்காவுக்கான அந்தப் பயணத்தின்போது நீங்கள் போர்த்துகீசிய சமூகத்தினர் பலர் வாழ்கின்ற மாசெச்சூட்ஸ் பகுதியிலுள்ள ஃபால் நதிக்கும் சென்றீர்கள்.

சரமாகோ

ஆம். என்னுடைய புத்தகங்களில் எதன் காரணமாகவோ ஆர்வமுள்ள புலம்பெயர்ந்தோர் பலரோடு எனக்குச் சில தொடர்புகள் இருந்தன. இப்போதெல்லாம் இலக்கியம் குறித்துப் பேசுவதில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டபோதிலும், வியப்பூட்டும் வகையில் எனக்கு எப்போதுமே நல்ல கூட்டம் சேருகிறது. நான் எழுதுவதாலேயே, இதில் ஒரு முரண்பாடு இருப்பதாக யூகிக்கிறேன். நான் புத்தகங்களை எழுகின்றவனாக இருக்கும்போது வேறு எதைப்பற்றி நான் பேசவேண்டும்? நான் எழுதத்தான் செய்கிறேன், நல்லது, ஆனால், எழுத்தாளராவதற்கு முன்னரும் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதோடு, இந்த உலகில் வாழுகின்ற எவரொருவரையும் போலவே எனக்கென்றும் பல அக்கறைகள், ஆர்வங்கள் உள்ளன.

அண்மையில் போர்த்துக்கல்லின் பிராகாவுக்கு எனது இலக்கிய நூல்கள் குறித்த ஒரு மாநாட்டுக்காகவே சென்றிருந்தாலும், நாங்கள் வேறுபல விடயங்கள் குறித்தும் – போர்த்துக்கல்லின் அப்போதய நிலை மற்றும் அதுகுறித்து என்ன செய்யலாமென்றும் – பேசினோம். நான் அங்கே சொன்னது, மனித இனத்தின் வரலாறு மிகச் சிக்கலான ஒன்றாகத் தோன்றுகிற போதிலும் உண்மையில் அது மிக மிக எளிமையானது. நமக்குத் தெரிகிறது, நாம் ஒரு வன்முறை உலகில் வாழ்கிறோம். நமது இனத்தின் உயிர்வாழ்தலுக்காக வன்முறை அவசியமானது – மிருகங்களை நாம் கொல்லவேண்டியிருக்கிறது. அல்லது நமக்காக, நாம் உண்பதற்காகச் சிலர் அவற்றைக் கொல்லவேண்டியிருக்கிறது. நாம் பழங்களைப் பறிக்கிறோம்; நம் வீடுகளை அழகுபடுத்துவதற்காகப் பூக்களைக்கூடப் பறிக்கிறோம். இவை அனைத்துமே பிற உயிரினங்களுக்கு எதிராக நிகழ்த்தும் வன்முறைச் செயல்களே. மிருகங்களும் இதே முறையில் தான் நடந்துகொள்கின்றன. சிலந்தி, ஈக்களைத் தின்னுகிறது, ஈக்கள் வேறெந்தப் பூச்சி வகையையும் உண்ணுகிறது. ஆனாலும் மிகப் பெரும் வேறுபாடு ஒன்று உள்ளது. மிருகங்கள் குரூரமானவை அல்ல. சிலந்தி அதன் வலையில் விழுந்த ஈயினைச் சுருட்டும் போது அது வெறுமனே மறுநாளைக்கான மதிய உணவினைத் தான் குளிர் பதனப்பெட்டியில் பத்திரப்படுத்துகிறது. மனிதன் தான் குரூரத்தைக் கண்டுபிடித்தவன். மிருகங்கள் ஒன்றையொன்று சித்திரவதை செய்வதில்லை; ஆனால் நாம் வதை செய்கிறோம். இந்த பூமிக் கிரகம் முழுவதிலுமே நாம் மட்டும் தாம் குரூரம் நிறைந்தவர்கள்.

இந்த உற்றறி கருத்துக்கள் என்னைக் கீழ்க்காணும் கேள்வியை, அது முற்றுமுழுதுமாக சட்டவியல்சார்ந்ததென நான் நம்புகிற கேள்வி நோக்கி என்னைச் செலுத்துகின்றன. நாம் குரூரமானவர்களென்றால், நாம் பகுத்தறிவுள்ள ஜீவன்களென, நாம் எப்படி உரிமைகொண்டாடமுடியும்? ஏனெனில் நாம் பேசுகிறோமா? நாம் சிந்திக்கிறோம் என்பதாலா? நம்மால் படைப்பாக்கம் செய்ய முடிகிறதென்பதாலா? இவையெல்லாவற்றையும் செய்கிற திறமுடையவர்களாக நாம் இருக்கின்ற போதிலும் எதிர்ச்செயல்கள் மற்றும் குரூரச் செயல்கள் செய்வதிலிருந்தும் நம்மைத் தடுக்கவியலவில்லை. ஒரு அறம் அல்லது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையான இது குறித்து விவாதிக்கப்படவேண்டுமென நான் உணர்கிறேன்; அதனாலேயே இலக்கியம் பற்றிப் பேசுவதில் அல்லது விவாதிப்பதில் நான் மிகமிகக் குறைவான ஆர்வம் கொண்டவனாக இருக்கிறேன்.

சிலவேளைகளில் நான் எனக்குள்ளாகவே நினைத்துக்கொள்கிறேன், இந்த பூமிக்கிரகத்தைவிட்டுச் செல்ல நம்மால் ஒருபோதும் முடியாதென்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், நாம் அண்டவெளிக்க்குள் பரவிவிட்டால், நாம் இங்கே இப்போது எப்படி நடந்துகொள்கிறோமோ அதற்கு மாறுபட்டு நாம் நடந்துகொள்ளப்போவதில்லை. அண்டவெளியை நாம் வாழ்விடமாக்கிக் கொண்டோமென்றாலும் – அது நம்மால் முடியுமென்று நான் நினைக்கவில்லை – நாம் அதைக் கெடுத்துவிடுவோம். நாம், இந்த பூமிக்கிரகத்தில் நற்பேற்றின் காரணமாக அடர்ந்திருக்கும் ஒரு வகை வைரஸ்களாகத் தானிருக்கவேண்டும். அண்மையில், சூப்பர்நோவா ஒன்று வெடித்துவிட்டது குறித்து வாசித்துக்கொண்டிருக்கும்போது  இவையனைத்தையும் நான் மீள ஒன்றுதிரட்டி நினைத்துப்பார்த்தேன். அந்த வெடிப்பிலிருந்து கிளம்பிய வெளிச்சம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு  பூமியை வந்தடைந்தது. அது இங்கு வந்துசேர்வதற்கு ஒருலட்சத்து அறுபத்தாறாயிரம் (1,66,000) ஆண்டுகளானது. நல்லது, அப்பாடா, அபாயமொன்றுமில்லையென நான் நினைத்தேன், நம்மால் ஒருபோதும் அங்கு செல்லவியலாது.

நன்றி : பாரிஸ் ரெவ்யூ.

1 COMMENT

  1. சரமாகோ வின் பேட்டி மிக அருமை. இந்திய படைப்பாளிகள் அறிய வேண்டிய தகவல்கள் நிறைந்திருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர் ச. ஆறுமுகம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.