டெல்டாவின் புதிய குரல்-கதிர்பாரதி கவிதைகள் குறித்து -கண்டராதித்தன்

செங்கதிர்ச்செல்வன் என்ற அழகிய பெயர்கொண்ட கதிர்பாரதியின் முதல் தொகுப்பு மெசியாவிற்கு மூன்று மச்சங்கள், அவரது முதல் தொகுப்பிலிருந்தே மிகுந்த கவனம் பெற்றவராகத் தமிழ்க் கவிதையுலகிற்கு அறிமுகமாகிறார். பின்னர் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் என்ற அற்புதமான தலைப்புகொண்ட மற்றொரு தொகுப்பு வெளியாகிறது. இந்த முதலிரண்டு தொகுப்புகளின் மூலம் தமிழ்க் கவிதைப் பரப்பில் கதிர்பாரதியின் கவிதை நிலைபெற்றுவிட்டன.

குறிப்பாக இவ்விரண்டு தொகுப்புகளும் ஒரு அறிமுகக் கவிஞனின் கவிதைகளாக இல்லாமல், தொய்வற்ற நடையில் வாழ்வும், நிலமும், அனுபவங்களும் செறிந்த மொழியுடன் இக்கவிதைகள் தோன்றியிருந்தன. எனவே இத்தொகுப்புகள் வெளியானபோது அதற்குரிய தகுதியான கவனத்தைப் பெற்றது. கதிர்பாரதியின் முதலிரண்டு தொகுப்புகள் ஒரு நாவலாசிரியனின் அனுபவத்தைக் கொண்டவை, இவ்விரண்டு தொகுப்புகளையும் இக்கட்டுரைக்கு முன்பாக நான் வாசித்தபோது நினைத்தது. தற்போது மறுவாசிப்பிலும் இக்கருத்து மாறவில்லை. இக்கவிதைகள் தொடர்ந்து வளமிக்க மண்ணின் வாழ்வியல் கூறுகளையும், நிலக்காட்சிகளையும், கவிஞரின் அந்த பருவத்திற்கே உரிய கடும் காமமும், அதன் ஏக்கமும் சேர்ந்து ஆற்றொழுக்கான நடையில் எழுதப்பட்டவை.

ஏறக்குறைய சிற்றிதழ் மரபு வடிந்துகொண்டிருந்த காலத்தில் எழுதவந்த கதிர்பாரதி, அதன் தாக்கத்தைக் கவனத்தில் கொண்டிருந்தார் எனப்படுகிறது. ஆனால் படைப்பின் வடிவத்தில், சொல்லல்முறையில் இதை அவர் பொருட்படுத்தவில்லை, அவ்வாறு முன்முடிவுகள் இருந்திருந்தால் முதலிரண்டு தொகுப்புகளில் இவ்வளவு  கூடுதலான சொற்சேர்க்கைகளுடன் கவிதைகளை எழுதியிருக்க மாட்டார். முன்னத்தி ஏர்களை நாம் பெரும் கவனப்படுத்தி வாசித்திருக்கும்போது அதன் தாக்கம் நம்மை அறியாமல் நமது படைப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ஒரு வளரும் கவிஞன் இந்த சவாலைத் தாண்டி வரும்போது அவனது தனித்தன்மை பளிங்கைப்போலத் தெரியும். அப்படித் தெரியக்கூடிய கவிஞனே விரல் விட்டு எண்ணக்கூடிய வரிசைக்கு  வந்து நிற்கிறான்.

கதிர்பாரதியின் மூன்று தொகுப்புகளிலும் குறிப்பிட வேண்டிய பிரமாதமான அம்சமாக நான் காண்பது அவரது விசேஷமான தலைப்புகள். கதிர்பாரதி என்ற பெயரை தற்போது நான் கேட்டால் அம்மாவை  மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது என்ற கவிதையின் தலைப்புதான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். யூமா வாசுகி ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ என்று ஒரு தொகுப்பிற்குத் தலைப்பிட்டிருப்பார் அது போல அழகான தலைப்பு இது.

வாசிப்புப் பழக்கம் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தின் புதிய வாசகனை மிகுந்த சவாலுக்கு உட்படுத்தாத, சோர்வூட்டாத வார்த்தைக் கோர்வைகளைக் கொண்டவை கதிர்பாரதியின் கவிதைகள், இது புதிய வாசகர்களை கதிர்பாரதியின் கவிதைகளை நோக்கி நகர்த்தியிருக்கும் அம்சமாகவும் கருதலாம்.

அவரது மெசியாவிற்கு மூன்று மச்சங்கள் என்ற தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.

கொண்டலாத்தி குகுகுகுக்கும் கோடை

துளிர்ப்பு திகைந்தாயிற்று

வேம்பின் பொன் தளிர்களை ஆராதிக்கத் தொடங்கிவிட்டது கோடை

புளிப்புச் சுவை கூடிய மாங்காயைக் கடித்துவிட்டு மிழற்றுகிற கிளிக்காக

இனி, இதமிதமாய்ப் பெய்யும் பொன்செய் வெயில்

ஊருக்குள் புகுந்து மோகினியென எழுந்து சுழலும் சூறைக்காற்றைத்

துரத்தியோடிக் களிப்பார்கள் சிறார்கள்

வாத நாராயணன் தன் சக்கரவடிவப்பூக்களை

காற்றின் போக்கில் உதிர்த்து விளையாடும்

மகசூலைக் களஞ்சியத்தில் சேர்த்துவிட்டுச் சோம்பித் திரிகிறவன்மீது

கொட்டிக் குளிர்விக்கும் பெருமழை

சோபிதம் கொண்டொளிரும் அந்தியிலிருந்து

அசைபோட்டபடி மந்தைக்குத் திரும்பும் பசுவின் முதுகில்

கொண்டலாத்தி குகுகுகுக்கும்.

என இக்கவிதை தொடர்கிறது. இக்கவிதையின் தலைப்பிற்கேற்ற பொருளில் கச்சிதமான ஆக்கமாயிருந்தது. என்னைப் பொறுத்தவரையில் நான் நிறுத்தியிருக்கும் இடத்தோடு இக்கவிதை  முடிந்துவிடுகிறது. ஆனால் கதிர் இன்னும் நான்கு வரிகளைச் சேர்த்திருக்கிறார். இருந்தாலும் எனக்கு இந்த இடத்தோடு இந்தக் கவிதை முடிந்துவிட்டதாகவே படுகிறது. இதற்கென இரண்டொருமுறை வாசித்துப்பார்த்தேன்.

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்தத் தயிரரவம்

என்ற ஆண்டாள் பாசுரத்தையும், நண்ணி வருமணி யோசையும் பின்னங்கே நாய்கள் குலைப்பதும் என்ற பாரதியாரின்  பாடலும் நினைவிற்கு வந்தது.

 இக்கவிதை தொடங்கியதிலிருந்து முடியும் வரை அழகான சொற்கட்டுகளுடன் நிலக்காட்சியைக் கடத்திவிடுகிறது.

இக்கவிதையின் மூலம்:

1. கவிதை தனது தேர்ந்த மொழி நடையுடன் வாசகனுக்கு மாற்று அனுபவத்தைத் தருகிறது.

2. அல்லது ஏற்கனவே தான் கண்டிருந்த அனுபவத்தை இக்கவிதை வாசிப்பின் மூலம் மீண்டும் மடைமாற்றித் தன் சொந்த அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது.

3. மொழியளவில்  நாம் பயன் படுத்தியிருந்த பதச் சேர்க்கைகளின் மூலம் ஒரு புத்தாக்கமான வரிகளை அமைப்பதன் மூலம் கவிஞர் வெற்றியடைந்திருக்கிறார் எனப் புரிந்து கொள்ளலாம்.

இதனை இக்கவிதையில், கொண்டலாத்தி குகுகுகுக்கும், மிழற்றுகிறக் கிளி, இதமிதமாய், பெய்யும் பொன்வெய்யில், சோபிதம் கொண்ட அந்தி எனப் பல்வேறு வார்த்தைகளுடன் இக்கவிதையை செம்மைபடுத்தியுள்ளார்.

கவிதையின் கருப்பொருள் இருண்மையற்றும், தெள்ளத் தெளிவானதாக இருந்தும் கவிதானுபவம் கூடிவந்துவிடும், சில சமயம் அதே கவிதை தட்டையான பொருளற்ற வகையில், புதிய அனுபவத்தைத் தராமலும் நின்றுவிடும். மேற்கண்ட கவிதை அதன் கட்டுமானத்திற்காகவும், அழகிய பதச்சேர்க்கைக்காகவும், அதன் மூலம் வரையப்பட்ட நிலக்காட்சிக்காகவும் நிலை பெறுகிறது.

கவிதை என்பது உணர்வுகளைக் கட்டவிழ்த்தல் மட்டுமல்ல, அது உணர்வுகளிலிருந்து தப்பித்தல். அது கவிஞன் தன்னை வெளிப்படுத்துதல் மட்டுமல்ல, கவிஞன் தன்னிலிருந்து தப்பித்தல் என்று டி.எஸ்.எலியட் கருத்து ஒன்று உள்ளது.

தன்கவிதையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ளத் துணிந்தவனே மேலான படைப்பின் பக்கம் தன்னை நகர்த்திச் செல்வான் என்பதே என் எண்ணம்.பொதுவாக கவிதையியலைப்பொருத்த வரையில் இன்று நான் திடமான அபிப்பிராயமாகக் கருதும் ஒன்றிலிருந்து அதே திடமான எண்ணத்துடன் வெளியேற வேண்டிய சந்தர்ப்பங்களும் எனக்கு அதிகமாக உள்ளது.

 ஒவ்வொரு கவிதைக்கும் அது சொல்லப்பட்டமுறைக்கும், அதன் அமைப்பிற்கும் என ஒவ்வொருமுறையும் கவிதைகள் தொடர்பான எனது பார்வைகள் நிலையற்று இருப்பதை என்னால் உணரமுடிகிறது.

காலாதிபதி என்றவொரு கவிதை;

என் மிதவையை யாரோ தொந்தரவு செய்கிறார்கள்

மேல்நோக்கி எழும் அதன் ஆன்ம வேட்கையை அமிழ்த்தி

ஆழத்தில் வைக்கவும் எத்தனம் நடக்கிறது.

அலைகளின் இயல்புக்கேற்ப

இறந்த காலத்தில் தாழ்ந்து எதிர்காலத்தில் உயர்ந்து

நிகழ்காலத்தில் மிதப்பதைப் பகடி செய்வதாக

தங்கள் பதற்றத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்

கிலி உண்டாகத்தான் செய்யும்

அடி வயிற்றில் கார்காலத்தை அடைகாக்கும்

முதுகுப்புறத்தில் வெய்யில் சுமக்கும் அதன் மேல்

குறுக்குவாட்டாகக் கிடப்பேன் எப்போதும்

காலாதிபதியாக.

நிகழ்கால அரசியலைச் சொல்லும் கவிதையாக இதைநான் உணர்ந்தேன். தேவைக்கதிகமான சவடால்கள் இல்லை, உணர்ச்சி பொங்கும் வார்த்தைப் பிரயோகமில்லை ஆனால் அழுத்தமான உணர்வெழுச்சியைத் தரக்கூடிய கவிதையாக காலாதிபதி உருவாகியிருக்கிறது.

ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் தொகுப்பிலும், முந்தைய தொகுப்பின் தன்மைகளான நிலக்காட்சிகளும் அதன் மாந்தர்களும் காணக்கிடைக்கிறார்கள். தலைப்புக் கவிதையும் கூட திரும்பக் கிடைத்துவிடுகிறது.

“விதைப்பு நேரத்தில்

பாறையில் விதை மணிகளின்

சேமிப்புக் கிடங்கிலிருந்து

இந்தாருங்கள் உங்களுக்கொரு மணி”

“இந்த உலகமே அவன் வீடு

தன் மனம்சாய்க்க

மனுஷ்யகுமாரனுக்கோ ஒரு மடியில்லை”

என்கிறது கவிதை. பொதுவாக கதிர்பாரதி கவிதையின் கருப்பொருட்களுக்காக மெனக்கெடுவதில்லை எனத்தெரிகிறது. பல கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம் என வாசிக்கும்போது தோன்றுகிறது. சில கவிதைகளில் பயன்படுத்தியிருக்கும் உருவகம் அந்த கணநேரத்துத் துடிப்பாகக் கடந்துவிட நேர்கிறது.

ஏறக்குறைய அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளுடன் இரண்டாவது தொகுப்பு உள்ளது. நான் முன்பே குறிப்பிட்டதுபோல கதிரின் முதலிரண்டு தொகுப்புகள் கதாசிரியன் தன்மையைக் கொண்டிருப்பவை. அதற்காகக் கவிதையாகவில்லையா எனக் கூறக்கூடாது. சஞ்சலமற்ற வார்த்தைகளை வாசகனின் மனதில் அடுக்கிக்கொண்டே போகிறார். அவரது குடும்பப் பின்னணியாக உள்ள கிருத்துவ வாழ்வு அவரது கவிதைகளின் மிகப்பெரும் பலமாக உள்ளது.

இரண்டாவது தொகுப்பிலுள்ள ஆதியாகம் கவிதையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்,

“தேவன்

இரு கண்களைப் படைத்தார்

அவை திறந்திருக்கும்போது பகலும்

மூடியிருக்கும்போது இரவு உண்டாகின

அவற்றை நல்லதெனக்கண்டார்

நாசியைப் படைத்து அதன் துவாரங்களில்

தன் ஆவியை ஊதினார்

அவற்றிலிருந்து வெளிவந்த சுவாசத்தால்

காற்றுவெளி உண்டானது

அதையும் நல்லதெனவே கண்டார்

வயிற்றோடு இணைந்த இடுப்புப் பகுதி

சதைத் திரட்சிகள் ரோமக்கால்களை உருவாக்கியபோது

சமவெளிகள் ஈரச்சுனைகள்

மலைமுகடுகளோடு வனங்களும் உண்டாகின

மலை சமவெளி வனத்தில் இரையுண்டு

என்று போகும் கவிதையின் மெல்லிய பகடியும், ஒரு சிலுவையும் ஐந்து அப்பங்களும் இரு மீன்களும். கவிதையில்

என் அப்பம் என் மீன் என் உரிமை

எனக்குரியதைப் பத்திரப்படுத்துவது

பரம்பிதா சமூகத்தின் சட்டமோ…

எதிர்ப்பின் விதையொன்றை நடுகிறான் சிறுவன்

என்ற கவிதையின் தீவிரமும் கதிர்பாரதியின் பலகவிதைகளுக்குள் குழைந்து காணப்படுகிறது.

பிறகு உயர்திணைப்பறவை என்ற மூன்றாவது தொகுப்புடன்  புதிய வடிவெடுக்கிறார். நான் முன்பே குறிப்பிட்டதுபோல, கதிர்பாரதிக்கும் தனது முந்தைய தலைமுறையின் கவிதை சிடுக்குகள், அதன் வடிவங்கள் அல்லது அதுகுறித்த தரவுகள் ஒரு பொருட்டேயில்லை என்பது போல உயர்திணைப்பறவை தொகுப்பின் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அதனை அவர் தொகுப்பாக்கியுள்ள முறையும் அலாதியானது.

பொதுவாக ஒன்றிரண்டு தொகுப்புகள் வெளியான பின் சூழலின் தன்மைக்கேற்ப கவிஞர்கள் தம்மை மாற்றிக்கொள்வதுண்டு. கதிர்பாரதி இதனைப் புறந்தள்ளி இப்பெருந்தொகுப்பில் நறுக்குத் தெறித்தாற் போன்ற குறுங்கவிதைகளை எழுதிப்பார்த்துள்ளார்.

1.

ஆயிரம் தூண்கள் வைத்த நகரத்தார் வீடு

தன்னந் தனியாக

ஒரு புறா

குரலெழுப்பி

மிரட்ட

பயந்து ஒடுங்குகிறது

எதிரொலியில்

2.

கன்னி மாடத்தில் வளரும் ஆலங்கன்று

அங்குலம் அங்குலமாக

வீட்டின் ஆன்மாவிற்குள் நுழைகிறது

ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்

அவ ஒரு இளவரசனுக்காக…

3.

விசேஷ வீட்டின்

உறவினர் கூடுகையில்

அந்தரங்கமாய்ப் பூக்கும்

புன்னகை ஒன்றை

மிக மிக அந்தரங்கமாகக்

கண்டுகொள்கிறது

ஒரு கணம்

விசும்புதலுக்கு உள்ளே

புன்னகைத்தலுக்கு வெளியே,

4. வே.பாபு

மழை நேர ஏரியின்

அளவு காட்டும் மரத்தில்

வழியும் நீரில்

எதிர்கொண்டு ஏறும் பறக்கும் மீன் நீ.

என்று தன்னெழுச்சியும், தன்னுலகும், அனுபவமும், ஏக்கமும், நிராகரிப்பும் நிறைந்த கவிதைகள் இத்தொகுப்பு முழுக்க வாசிக்கலாம். பெரும்பாலான கவிதைகளை இவர் முகநூலில் எழுதும்போதே வாசித்துள்ளேன்.

கதிர்பாரதி தனக்குப் பின்னொட்டும் முன்னொட்டும் இல்லாதவராகவே எனக்கு அறிமுகமாகியிருந்தார். அவரது கவிதைகள் மூலம் டெல்டாவின் புதிய குரல், தொனி வந்து சேர்கிறது. இது அந்த பிரதேசங்களிலிருந்து ஏற்கனவே வந்த படைப்புலகை விட்டு விலகி இருந்தது. அதன் துயரம், ஆதங்கம், வலி, துளிர்த்து எழுதல் ஆகியவை புதிது. அதிலும் பதட்டமில்லாத எதிர்க்குரல் இதன் உட்கிடையாக இருப்பது இன்னும் சிறப்பு. இவரது படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டுள்ளன என்பதாகவே நான் கருதுகிறேன். இதற்காக அவர் மிகுந்த மகிழ்ச்சியடையலாம்.

மிகச் சமீப காலத்தில் மதிப்புரைகள், விமர்சனக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகளுக்குச் சற்று மவுசு குறைந்தாற்போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு தசம ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய கட்டுரைகள் வாசிக்கப்படும்போது அது படைப்பாளிக்கும், விமர்சகருக்கும் மட்டுமல்லாமல் வாசிப்புச் சூழலுக்குள்ளும், எழுத்திற்குள்ளும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.ஆனால் ஏன் இத்தகைய சூழல் உருவாகியுள்ளது என்பதைக் கவனித்தால் சமூக ஊடகங்களின் தாக்கத்தைக் குறிப்பிட வேண்டியதாக உள்ளது.

அத்தோடு மட்டுமல்லாமல் காலமாற்றத்தையும் விஞ்ஞான வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இருதசம ஆண்டுகளில் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது என்பதை நாம் ஏற்க வேண்டும்.ஆனால் மொழியில் புதிய படைப்பாளிகளும்,வாசகர்களும் உருவாகிவருவது நிற்கவில்லை என்பது வினோதம். தீவிர இலக்கியம், வெகுஜன இலக்கியம், முற்போக்கு இலக்கியம் எனப் பல்வேறு பவுண்டரி லைன்கள் இப்போது இல்லை.எனவே இக்காலகட்டத்தில் நிகழும் தொடர்ச்சியான இடைநில்லா படைப்புகளை அன்றாடம் கவனித்த வரையில், புதிய எழுத்தாளர்களிடம் அற்புதமான தருணங்களைக் கண்டுவிட முடிகிறது. அந்த வகையில் சில பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது உத்தேசமாக பத்து பதினைந்து ஆகச்சிறந்த படைப்பாளிகள் கிடைத்து விடுகின்றனர். அவர்கள் தங்கள் போக்கைத் தனித்தும், முன்பிருந்தவற்றிலிருந்து முற்றிலும் துண்டித்துக்கொள்ளாமலும் கடைபிடித்துவருகின்றனர். அது அவர்களைத் தனித்துவமான படைப்பாளிகளாக மாற்றிவிடுகிறது. கதிர்பாரதி இத்தன்மை கொண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.