தனுஜாவின் தன்வரலாற்றுப் பதிவு ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

ஒரு குழந்தை தனது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்து, இந்த உலகத்திற்குள் நுழையும் போதே, அக்குழந்தை மேல் அது விரும்பியோ விரும்பாமலோ இன, மத, சாதி, மொழியான சமூக அடையாளங்களும், உடல்ரீதியான நிற, பாலின அடையாளங்களும் சுமத்தப்படுகின்றன. இனி அக்குழந்தை தன்மேல் இச்சமூகத்தால் திணிக்கப்பட்ட அத்தனை அடையாளங்களையும், தனது குடும்ப, சமூக நலன் கருதி எந்தப் பிறழ்வும் ஏற்படாதவண்ணம், தான் உயிரோடிருக்கும் வரை காவிக்கொண்டு திரிய நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்(ன்).

தனுஜன் எனும் குழந்தை பிறக்கும் போது மேற்குறிப்பிட்ட அனைத்து சமூக அடையாளங்களோடு, அவன் வேண்டாத பாரமான ஆண் குறியோடு பிறந்ததனால், ஆண் என்ற அடையாளமும் வழங்கப்படுகிறது. இனி அவன் ஆணாக வாழ்ந்து முடிக்க நிர்ப்பந்திக்கப்படுவான்.

மீறின், அவன் தனது சொந்த உறவுகளாலும், சொந்த சமூகத்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவான். ஒரு குழந்தைக்கு ஆதரவு என்பது அவன் குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டும், தனுஜனுக்கு அது காலம் கடந்துதான் கிடைத்தது, இருப்பினும் அவனது சகோதரி தனுஜாவைப் புரிந்து கொண்டு அவனுக்காகக் குடும்பத்துடன் கதைத்தபோது எமக்கும் சற்று ஆறுதலாகவேயிருந்தது.இறுதியில் அவன் குடும்பம் தனுஜனை, தனுஜாவாக முற்று முழுதாக ஏற்றுக்கொண்டுவிட்டது தனுஜாவிற்கும் நிம்மதி எமக்கும்தான்.

இலங்கையில் மண்கும்பான் என்ற கிராமத்தில் ஆண்குழந்தையாகப் பிறந்து, மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது போரின் நிமித்தம், அகதியாகத் தமிழ்நாட்டில் காலடி பதிக்கின்றான் தனுஜன் எனும் சிறுவன். இவன்  பெண் தன்மையோடு காணப்பட்ட காரணத்தால் உடல் , மன, ரீதியான வன்முறையையும், பாலியல் ரீதியான வன்முறையையும் தனது ஆறுவயதிலிருந்தே அனுபவிக்கத் தொடங்கியிருந்தான். அவன் பெண் தன்மையோடு காணப்படுவதை அனைத்து சமூகங்களும், ஏளனமாகவும், அவமானமாகவும் கருதி அவனை ஒரு நலிந்த குரலற்ற உயிராக அடையாளப்படுத்தித் துன்புறுத்தி வந்திருக்கின்றது, வருகிறது. மேற்கத்திய நாடுகளில் சட்டங்களும், தண்டனைகளும் கொஞ்சம் கடுமையாக இருப்பதால் இது போன்ற தாக்குதல்கள் அதிகம் நடப்பதில்லை, ஆனால் ஜேர்மெனியில் பாடசாலைகளில் தனது சக மாணவர்களால் எள்ளலுக்கு உள்ளாகியிருக்கின்றான் தனுஜன். புரிந்துணர்வற்ற, சமநிலையற்ற குழந்தை வளர்ப்பையே மேற்குலநாடுகளிலும் காணப்படுகின்றது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

ஒவ்வொருநாளும் தனது அடையாளத்திற்காகவும், அதற்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்திற்காகவும், அன்புக்காகவும் ஒருவர் போராடிக்கொண்டிருக்க வேண்டிவருவது எவ்வளவு துரதிருஷ்டம், எந்த அளவிற்கு மன உளைச்சலைத் தரக்கூடியது, அத்தோடு, அந்த அடையாளத்திற்காக அவள் தொடர் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது?இதுதான் தனுஜாவின் வாழ்க்கை.

நான் பல திருநங்கைகளின் சுயவரலாற்றைப் படித்திருக்கின்றேன், இதுதான் நான் முதல்படித்த இலங்கைத்தமிழ் திருநங்கையின் தன்வரலாற்று நூல்.

தனுஜா ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றாள், தான் பல நாடுகளில் வாழ்ந்திருந்தாலும், இலங்கையில்தான் அதிகம் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகியதாக. மரணத்திற்குள் உழன்றுகொண்டிருக்கும் ஒரு நாட்டிலிருந்து இதைநான் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சியாகவும், அவமானமாகவுமிருந்தது. அத்தோடு தனுஜா தன்வரலாற்றை  எந்த மறைப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் மிகத் துணிச்சலோடு மிகநுணுக்கமாகவும், ஆழமாகவும், விரிவாகவும் பதிந்துள்ளாள். இந்நூலின் மூலம் வாசகர்களுக்குத் திருநங்கைகளின் மனம், உடல், உணர்வுகள் பற்றிய தெளிவு நிச்சயம் கிடைத்திருக்கும்.

தனுஜாவின் சிறுவயது நடவடிக்கைகளை  மனப் பகுப்பாய்வு செய்யின் அதனை “Pleasure principle” எனும் கோட்பாட்டுத் தத்துவத்திற்குள் அடக்கிவிடலாம். இது எல்லா மனிதர்களுக்கும் உரிய உளவியல் எனினும்,

தனுஜா மிகச் சிறுவயதிலிருந்தே தன்மேல் பிரயோகிக்கப்பட்ட பாலியல் சீண்டல்களைத் தனக்கு கிடைத்த அங்கீகாரமாக அடையாளப்படுத்தி வந்திருக்கின்றாள். தனது, சொந்தங்கள், குடும்பநபர்களிடமிருந்து கிடைக்காத அண்மை, அரவணைப்பு தன்மேல் பாலியல் வன்முறையை மேற்கொண்டவர்களிடமிருந்து கிடைப்பதாக நம்பி, அதனைக் காதலாகவும் தொடர்ந்து அடையாளப்படுத்தியிருக்கின்றாள். தன்னைப் பெண்ணாக அங்கீகரிப்பவர்கள், தன்னோடு பாலியல் தொடர்பை ஏற்படுத்தும் ஆண்கள் மட்டுமே என்ற எண்ணம் தனுஜா மனதில் ஆழமாகப்பதிந்து விட்டது.

ஒருவரின் அரவணைப்பு, அன்பைப் பெறுவதற்கு தனுஜாவிற்கு தெரிந்த ஒரே ஆயுதம், மறுப்பின்றி பாலியல் உறவிற்குள் ஈடுபடுவதே. மறுப்பின் தன்மேல் அன்பு கொண்டவராக அவள் நம்பும் நபரை இழக்க நேரிடும் என்ற அச்சம் அவளைத் தொடர்ந்து விரட்டிக்கொண்டேயிருக்கின்றது.

ஆனால் “ The reality principle ” எதுவெனின்

திருநங்கைகள்  நேசிக்கும் அவர்களது கலாச்சாரமே எப்படியெல்லாம் அவர்களைத் துன்புறுத்தியிருக்கின்றது என்பது சொல்லிலடங்காது. ஒருநாள்கூட பொதுவெளியில் சுரண்டல்கள், கேலிகள், சீண்டல்களுக்கு உள்ளாகாமல் அவர்களால் நிம்மதியாக நடமாட முடியாது. திருநங்கைகள் மேல் ஆணாதிக்க விந்துகள் போர்வைபோல் படருகின்றன.

பாடசாலையில் தொடங்கி, வேலைத்தளம் வரை இது நீளக்கூடியது. இதனால்தான் அவர்கள் தமக்கென்று உறவுகளைத் தேடிக்கொள்கின்றார்கள். அங்கேதான் அவர்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கின்றது. தனுஜாவும் தனக்கென்று திருநங்கைக்  குடும்பத்தைத் தேடிக்கொள்கின்றாள், அதே வேளை தனது சுமைகளை இறக்கி வைக்க இரண்டு கற்பனைத் தோழிகளையும் தேடிக்கொள்கின்றாள்.

தனுஜா தமிழ்க் கலாச்சாரத்தை நேசிப்பவளாக இருக்கின்றாள், தன்னை ஒரு ஆண்  முழுமையான பெண்ணாக ஏற்றுக்கொண்டு கணவன், மனைவி என்ற பந்தத்திற்குள் குடும்பமாக வாழவேண்டும் என்று ஏங்குகின்றாள்.  அதன் காரணமாக அவளது உண்மையான காதலை, அவளது பலவீனமாகக் கருதித் தொடர்ந்து ஆண்களால், முக்கியமாகத் தமிழ் ஆண்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றாள். காதல் வலைவீசி, ஆசை வார்த்தை காட்டி அவளைத் தமது காமவெறிக்குத் தொடர்ந்து இணங்க வைத்திருக்கின்றது இச்சமூகம்.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கு, எமது பழமைவாத கலாச்சாரம் போடும் கூத்து நாம் அறிந்ததே. இவ்வேளையில் ஒரு தமிழ் திருநங்கையை உண்மையாகக் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குறியே.

பெண்ணின் இருப்பு நிலை, சமத்துவம் குறித்த போராட்டங்களையே சீழ் பிடித்த இந்த சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், திருநங்கைகளின் வாழ்வு நிலை எப்படியிருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தனுஜாவின் கால்கள், பெண்ணென்ற அடையாளத்தை நோக்கி, விடாது ஓடிக்கொண்டிருக்கும் போது, இடையில் ஏற்படும் கடும் தடங்கல்களால் சோர்ந்து ஓட்டத்தை நிறுத்திக் கொண்டுவிடுமோ என்ற பதட்டம் ஒரு வாசகியாக நூலின் ஒவ்வொரு பக்கங்களைத் திருப்பும் போதும் எழுந்தவண்ணமேயிருந்தது. பலதடவைகள் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள முயன்றுமிருக்கின்றாள். ஆம் தன் உடலைக் காதலற்ற பலரும் காமத்திற்காக மட்டுமே உபயோகப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள், சமூகத்திலும் நிம்மதியான வாழ்வுரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வரும் நிலையில் தனுஜா தற்கொலைக்கும் முயன்றிருக்கின்றாள்.

நான் இங்கே சாதித்த சில திருநங்கைகளின் கூற்றுக்களை உங்களுடன் பகிர உள்ளேன்

// திருநங்கைகளைப் பற்றிய தெளிவும், புரிந்துணர்வும் கொண்ட ஒரு சமூக கலாச்சாரத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே, எம்மேல் மேற்கொள்ளப்படும் வெறுப்பு வன்முறையிலிருந்து விடுபடமுடியும்,

வெறுமனே டிரான்ஸ்ஃபோபிக் ஆக இருப்பது மட்டும் போதாது, கூட்டுச்சமூகமாக ​டிரான்ஸ்ஃபோபியாவுக்கு எதிராக உறுதியாகவும், திடமாகவும் செயல்படுவது முக்கியம். // என்கின்றார் கர்நாடகாவைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்துவரும், சமூகசெயல்பாடாளருமான ரிநேட்ரா கும்ராஜ்.

“ஒவ்வொரு மத சமூகத்திலும், எல்லா நேரங்களிலும், திருநங்கைகள், சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றார்கள். பிரச்சனை என்னவென்றால், தற்போதைய சமூகம் எங்களை முத்திரை குத்துவதில் அதிக அக்கறை கொண்டுள்ளது, அதற்குக் காரணம் அவர்கள் எங்கள் பிரச்சினைகளை உணராதவர்களாகவும், பால்நிலை பற்றி விவாதிக்க உரையாட, விரும்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள் ” என்கின்றார் அசாமைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி Swati Bidhan சுவாதி பிடான்

“எனது பெண்மைத்தன நடத்தை காரணமாக நான் பள்ளியிலும் கல்லூரியிலும் கேலி செய்யப்பட்டுத் தாக்கப்பட்டேன், ஆனால் எனக்குள் இருந்த போராட்ட குணம் என்னை ஒருபோதும் நம்பிக்கையை இழக்க விட்டதில்லை. என்னைக் குழப்பத்தில் தள்ளாமல், எந்த சந்தர்ப்பத்தையும் எதிர் கொள்ளும் வலுவை இந்த எனது போராட்ட குணம் தந்தபடியேயிருந்தது. இதுவே எனது உரிமைக்காக என்னைப் போராடவும் வைத்தது.” என்கின்றார் பாக்கிஸ்தானைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், முதல் திருநங்கை Model Kami Sid காமி சிட்

“அனைத்து அரசாங்கங்களும் ஒரு பலவீனமான சமூகத்திலிருந்து ஒருவரை ஒரு உயர் பதவிக்கு நியமிக்க விரும்புகின்றன, இதனால் சமூகத்தின் மற்றவர்களின் குரல்கள் குழப்பமடைகின்றன. நான் அதை நடக்க விடமாட்டேன்” என்கின்றார் Joyita Mondol ஜோயிரா மொன்டோல் இவரும் திருநங்கை நீதிபதி

” சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள், நீ உன் காயப்பட்ட நாட்களையே அதிகம் பேசிக்கொண்டிருக்கிறாய், மகிழ்ச்சியான தருணங்களும் இருக்குமே அதனை மிகவும் அரிதாகவே பேசுகிறாய் என்று. என் காயங்களை நான் வெளிப்படுத்தும் போது, அவை பொதுவெளிகளில் பேசப்படும் போது, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுமென்று நான் நம்புகின்றேன், இது என்னைப் போன்ற சிலரையேனும் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புவதால் நான் எதிர்கொண்ட வன்முறையை விவரிப்பது அவசியம் என்று நான் நம்புகிறேன். ” சமூக செயற்பாட்டாளர்  திருநங்கை ரேவதி.

வாழ்வு தந்த அனுபவங்கள், முதிர்ச்சி தனுஜாவை சிந்திக்கத் தூண்டியது, அதே கணம், அவளது வாழ்வின் மிகப்பெரிய திருப்பமாகப் பல்கலைக்கழக ஆசிரியரும், அய்ரோப்பா வாழ் தமிழ் திருநங்கைகளைக் குறித்து ஆய்வு செய்துகொண்டிருப்பவருமான செலினா புரஃபேர்க்கின் சந்திப்பு அமைந்திருந்தது. தனுஜாவை கனவுலகிலிருந்து மீட்டெடுத்து வாழ்வின் யதார்த்தத்திற்குள் கொண்டுவந்துள்ளார் செலினா. இந்த வழிநடத்தல் தனுஜா, தனுஜனாக இளம் வயதில் தடுமாறிக்கொண்டிருக்கும் போது அவளுக்குக் கிடைத்திருந்தால் இத்தனை துன்பங்களையும் அவள் அனுபவித்திருந்திருக்க மாட்டாள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

“இலங்கைச் சட்டப்புத்தகம் திருநங்கைகளை அங்கீகரித்து மதிப்பளிக்கின்றது, சமூகம் மதிப்பளிக்கத் தயாராகவில்லை, பெண்களின் உரிமை குறித்தே போதிய விழிப்புணர்வு இல்லாத பழமைவாத சமூகத்தில் திருநங்கைகளைக் குறித்து என்ன கரிசனை இருந்துவிடப் போகின்றது, இந்தச் சூழலுக்குள்தான் யாழ்ப்பாணத் திருநங்கைகள் அடைபட்டுக்கிடக்கின்றார்கள் என்கின்றாள் தனுஜா.

ஒருவரின் பிறப்பை, அவரது வாழ்க்கைத் தெரிவை எமக்கு உகந்தது இல்லையென்று படும்போது மிகவும் எளிதாக நாங்கள் அவர்களை அடையாளப்படுத்தி, அசிங்கப்படுத்திவிட்டு நகர்ந்து விடுகின்றோம். நோர்மல் என்னால் என்ன? எது அதிகமாக இருக்கின்றதோ அதுவே நோர்மல் என்று உலகம் அடையாளப்படுத்துகின்றது. இந்நேரம் மனுஷபுத்திரன் எழுதிய கவிதையின் சாரம் நினைவிற்கு வருகின்றது. உலகம் ஒரு மனநோய் மருத்துவமனை அதில் வாழும் நாம் அனைவரும் மனநோயாளிகள்.

தனுஜா இந்நூலில் இறுதியாகக் கேட்பது ”நீங்கள் இந்நூலைப் புத்தியால் மட்டுமே படித்திருக்கமாட்டீர்கள் என்றே நான் நம்புகின்றேன், ஏனெனில் எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்தன்மையும், எல்லாப் பெண்களுக்குள்ளும் ஆண்தன்மையும் கலந்தேயிருக்கின்றன, எனவே நீங்கள் இந்தப் புத்தகத்தை உங்களது ஆன்மாவாலும் வாசித்திருப்பீர்கள்” அதையே நானும் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் ஆன்மாவால் வாசிக்க வேண்டிய நுால் இது.

சுலபமாக வாசிக்கக் கூடிய தரமான இலக்கிய வடிவமாக இந்நுாலை சோபாசக்தி வெளிக்கொண்டு வந்திருக்கின்றார். ஏக்கத்தையும், கண்ணீரையும், விந்து நீரையும் சலிக்கச் சலிக்கச் சுவைத்துவிட்டேன் என்ற தனுஜாவின் முன்னுரை குறிப்பு சிலவேளைகளில் சிலருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தலாம், முழுதாகப் பிரதியைப் படித்தால் தெரியும் இந்நூல் வாசிக்க வேண்டிய காத்திரமான இலக்கியப்படைப்பென்று. இந்நூலை வெளியிட்ட கறுப்பு பிரதிகளுக்கும் நன்றி.

கறுப்பி சுமதி – கனடா

மார்ச் 27 ம் திகதி பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

தனுஜாவின் தன்வரலாற்றுப் பதிவு

ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

பதிப்பாசிரியர் ஷோபாசக்தி

வெளியீடு- கறுப்பு பிரதிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.