Saturday, Oct 16, 2021
Homeபடைப்புகள்தொடர்கள்நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – (பகுதி 8 )தீக்குச்சி தின்னும் வனம்.

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – (பகுதி 8 )தீக்குச்சி தின்னும் வனம்.


தீக்குச்சி தின்னும் வனம்.

Steve McQueen என்றதும் நினைவிற்கு வரும் அமெரிக்க நடிகரின் உருவத்தை தனது திறமையின் வழியாகவும் தவிர்க்க முடியாத கதைகளை முன் வைக்கும் திரைப்பட இயக்குனர் என்ற பதாகையை தொடர்ந்து நிறுவிக் கொண்டிருப்பதாலும் கருப்பின Steve McQueen மெல்ல பதிலீடு செய்து வருகிறார் எனில் அது மிகையன்று. பிரிட்டனில் Powerlist என்ற பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன், சாராம்சம் : பிரிட்டனில் வாழும் 100 ஆற்றல்மிக்க கருப்பின மக்களைப் பட்டியலிடுதல். அப்பட்டியலில் சமீப காலமாக முதல் பத்து இடங்களில் தொடர்ந்து இடம்பெற்று கொண்டே இருக்கும் முகம் இவருடையது. அவர் இயக்கி 2014 ஆம் ஆண்டு ஆஸ்காரில் முதன்மையான இடம் பெற்ற 12 Year a Slave திரைப்படம் வெளியான பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அப்பட்டியலின் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றபடியே இருந்திருக்கிறார். தற்போது  தனது வாழ்நாளின் மிக முக்கியமான திரைப்படங்களின் தொகுப்பினை Small Axe தொடர் மூலம் எடுத்திருக்கும் இவர், நிச்சயம் அடுத்த ஆண்டுகளில் முதலிடத்திற்கு உயரக்கூடும் எனக் கருதுகிறேன்.

தான் இந்த இனத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் எந்த ஆதிக்கமனப்பான்மையும் இல்லை அதில் தனக்கான அடையாளத்தின் அறிவிப்பு மட்டுமே இருக்கிறது என்று மேலோட்டமான பார்வையில் கருத இடமிருக்கிறது. ஆனால், அது முற்றிலும் அறியாவாதம். தான் என்பதற்குச் சாதமாக வரலாற்றின் ஒழுக்கு இருக்கும் போது தான் என்ற தனிமனித இறுமாப்புகளின் கூடுதல்கள் திரண்டு ஒரு இனத்தின் நிலைப்பாடாக ஆகி, இன்னும் மெல்ல பெருகி இனச்செருக்காக உருமாறக்கூடும். அது தவிர்க்கவே இயலாத படி ‘பிறர்’ என்ற கருதுகையைச் சரிசமமாக வளர்த்துவிட்டிருக்கும். அந்த பிறரை இழியோராக அடையாளமிட்டாக வேண்டியது அத்தியாவசியமான அடுத்த நிலை. அதற்காக திட்டமிடப்பட்ட அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் பெருக்கி நிரப்ப வேண்டிய நிர்பந்தம் அந்த செருக்குண்ட இனத்திற்கு தேவைப்படுகிறது. இது இழிவு செய்யப்பட்ட இனத்தினரின் வாழ்வின் சுவாசக்குழாயை நெருக்குகிறது. பல நேரங்களில்  ஒடுக்கப்பட்ட ‘பிறர்’ தங்களது நிலை குறித்து தகவமைப்பும் கொண்டு விடுகின்றனர். சில நேரங்களில் அது ஆற்றாமையாலும் சினத்தினாலும் பழியுணர்வினாலும் வன்முறையாக அவர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. இறுமாப்பு கொண்ட இனமோ அதைத் தனது பிரச்சாரத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. ’தான் என்பதே வன்முறை இதில் தான் இன்னார் என்பது எத்தனை வன்முறை’ என்று கவிஞர் தேவதேவன் தீராவினாவொன்றை எழுப்பியுள்ளார்.

நிறத்தை பிரித்தறிவதற்கான குணநலனாக நிறுவுவது வெகு எளிது. அது தன்னைத் தானே நிறுவும் வல்லமை கொண்டது. கருமை இருள் என்பது தீமையின் குணமென்றும், வெண்மை ஒளி நலத்தின் குணமென்றும் ஆண்டாண்டுகளாக பேசிவரும் தொன்மங்கள் உலகெங்கிலும் ஓங்கி ஆயிரமாண்டுகளேனும் ஒலித்திருக்கும். அதன் வழியே புழங்கிய மனங்கள் அந்த பிரிவினையை மானுடச் சருமத்தின் நிறத்திற்கும் போட்டுப் பார்க்கிறது. பொருந்தாத சட்டையை மானுட அமைப்பே சேர்ந்து ‘கருப்பினத்தோருக்குப்’ போட்டுவிடுகிறது. அவர்களது சட்டையில் திருட்டு, பரத்தைமை, அழுக்கு, வன்மம், மடமை என்ற அழுகியமலர்களின் வடிவங்கள் செயற்கையாக நிறுவப்பட்டுவிடுகிறது. அவர்களை ஆடச்சொல்லி அவர்களது சடங்குகளையும் மொழியையும் நையாண்டி செய்து மகிழ்கிறது வெள்ளைச் சருமம். ஓரிரு கருப்பர்கள் தங்கள் கூட்டத்தின் பிரதிநிதியாகச் சிந்திக்கத் தொடங்குவதோ, நாகரீகமான வாழ்வை பரிட்சார்த்திப்பதோ வெண்ணிறத்தோருக்குக் கடும் உளைவையும் கொந்தளிப்பையும் தருகிறது.

மூடர்கூட்டத்தில் இருந்து ஒரேயொரு புனிதன் தோன்றி நிலைத்துவிட்டாலும் வரலாற்றின் புனைவுகள் கேள்விக்குறியாகிவிடுமே, அந்த ஒருவனைப் பின் தொடர்ந்து நூற்றுவர் வந்துவிட்டால் சமநிலை கெட்டுவிடுமே என்று தகிக்கிறது வெள்ளையர்களின் ஆச்சார மனங்கள். வெந்து தனியத்தான் போகிறோம், அதற்கு முன் நாமும் மனிதன் தான் என்பதை ஆணித்தரமாக உலகிற்குத் தெரிவித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஓரிரு மனங்கள் கருப்பர்களுக்குள் உலவியபடியே இருக்கின்றன. வரலாறு குருதியை முன்வைத்து செய்து வந்த பித்தலாட்டங்களைப் புரிந்து கொண்ட போராளிகளைக் கொண்டிருக்கிறது புத்தினம். கூடவே, வன்முறை இருபுறக் கூர்வாள் என்பது இரண்டு இனத்தோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அதைத் தவிர்க்க எத்தனை முடியுமோ அத்தனை வீரியத்தோடு மல்லுகட்டி தற்சமநிலை பேணுபவர்களே மகத்தானவர்கள். எதிரிகள் பார்வையிலோ அவர்களே ஆபத்தானவர்கள்.

வெள்ளையர் நிலத்தில் வாழ்ந்துவரும் ஆஃப்ரிக்க கரீபியன் மக்களின் குடியிருப்புகளின் மீது அரசின் துணையுடன் தொடர்ந்து நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளையும் அதற்கு எதிராக ஒற்றைத் தீக்குச்சியென இருளைக் கிழிக்கும் சிலரின் எதிர்குரல்களையும் 5 படங்களின் தொகுப்பாக கொண்டிருக்கிறது. Small Axe என்பது உயர்ந்தோங்கி நிற்கும் மரத்திற்கு எதிராக கூர்மை கொண்டிருக்கும் சிறிய கோடரி என்ற குறியீட்டுப் பதம். இது பாப் மார்லேயின் பாடலில் இருந்து எடுத்தாளப்படுகிறது.

Small Axe திரைப்படங்கள் :

 

 

 

 

 

 

Mangrove

 

 

 

 

 

Lover’s Rock

 

 

 

 

 

Red, White and Blue

 

 

 

 

 

 

 

 

Alex Wheatle

 

 

 

 

 

Education.


  • கமலக்கண்ணன்
பகிர்:
Latest comment
  • Small. Axe பற்றி தெரிந்துக் கொண்டது பயனாக அமைந்தது.கட்டுரையாளருக்கு மிக்க நன்றி.

leave a comment