நெலோகம்

ந்த வீட்டிலிருந்த உயிர்களைக் குளிர் நடுக்கிக் கொண்டிருந்தது. வீட்டுச் சுவரில் சூடு உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சின்னச் சின்னதாய் விரிசல் உண்டாகி நேற்று ஒரு பிளவாக மாறி, கருவியின் மின் இணைப்பு துண்டித்துப் போயிருந்தது. எங்களின் நான்கு நாள் வருமானத்தை, பணியாளுக்குக் கூலியாகக் கொடுத்து கருவியை சரி செய்துகொள்ளலாம் என்றாலும், மின்சாரத்தைத் திருடிப் பயன்படுத்துகிறோம் என்பது தெரிந்து அதைத் துண்டித்து விடுவார்கள். அதனாலேயே சரி செய்ய யாரையும் கூப்பிடவில்லை.

விரல் நுனிகள் சில்லிட்டதால் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை நடு சாமத்தில் திடீரென்று எழுந்து அழுதது. அக்கா குழந்தையைத் தூக்கினாள். நான் சூடான நெகிழி பானம் தயாரிக்க ஓடினேன். விரல்களைத் தேய்த்து உஷ்ணம் உண்டாக்கி, தன் குழந்தையை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் அக்கா. பானம் குடித்ததும் குழந்தை குளிரும் பயமும் தணிந்து சிரித்தது. குளிர் என்னும் கொடூரனை எப்படித் திருத்தலாம் என்று யோசித்துக் கொண்டே உறங்கிப் போனோம்.

அதிகாலையிலிருந்து பத்து மணி வரைக்கும்தான் எனக்கு வேலை. தெருக்களில் இருக்கும் குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய், எத்தனை கிலோ என்று பார்த்து, காசு வாங்கிக் கொள்வேன். அதன்பின்பு, மாலை வரை குழந்தை ஸ்ரீயைப் பார்த்துக் கொள்வேன். அக்கா, அருகிலிருக்கும் நெகிழிப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.

உண்ணும் பொருள் முதல் உறங்கும் வீடு வரை எல்லாமே நெகிழிகளால் நிறைந்திருப்பதால், ஊர் முழுக்க பல நெகிழிப் பொருள் நிறுவனங்கள்தான். பயன்படுத்தப்பட்ட, பழைய பொருட்களிலிருந்து, நெகிழித் தூள் சேகரிக்கும் பணி அக்காவுக்கு. கூர்மையான பற்கள் கொண்ட ராட்சத ரம்பங்கள் வைத்து, பெரிய பெரிய நெகிழிப் பொருட்களைப் பிரிப்பார்கள். பின்னர், அங்கே சிந்திக் கிடக்கும் நெகிழித் தூள்களைச் சேகரிக்க வேண்டும். பசிக்காக நடுவில் அந்தத் தூளைத் தின்று, வேலையிலிருந்து தினக்கூலியோடு, உணவுக்குத் தேவையான நெகிழித் தூள்களையும் தந்துவிடுவார்கள். அதனால், பசியில்லாமல் நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. குழந்தைக்கு அதையே காய்ச்சி பானமாகக் கொடுத்துவிடுவோம். எனக்கும், அக்காவுக்கும், செப்புத்தூள் தூவப்பட்ட நெகிழி சிப்ஸ் ரொம்பப் பிடிக்கும். வாரமொரு முறை வாங்கி சாப்பிடுவோம். எங்களின் உச்சபட்ச மகிழ்ச்சி கொட்டும் தினமது. ஸ்ரீ வளர்ந்து, வகைவகையாகக் கேட்கும்போதுதான் பிரச்சனை வரும்!

குப்பை சேகரிப்பவர்களுக்காக கம்பெனியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் கருவிகளுடனும், கூடையுடனும் அன்று வழக்கம்போல கிளம்பினேன். காலையிலேயே கம்பெனி அலுவலகத்துக்கு வந்துவிட்டு, பிறகு வேலைக்குப் போகுமாறு சொல்லியிருந்தார்கள். அலுவலகம் அடையும்போதே அங்கே பயங்கர சண்டை நடந்து கொண்டிருப்பதற்கான சமிக்கைகளாக வசவு வார்த்தைகள் வாசலுக்கு வெளியே வந்து விழுந்து கொண்டிருந்தன.

உள்ளே நுழைந்ததும் ஓரமாக நின்றுகொண்டிருந்த ஷியாமளாவிடம் விஷயத்தைக் கேட்டறிந்தேன். கம்பெனியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி என்று உடன்படிக்கை. வேலை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் பொதுவாக வீட்டுக்கு அருகிலிருக்கும் பகுதியாகப் பார்த்துப் பிரித்துக் கொடுப்பார்கள். இதில் சிலருக்குப் பிரச்சனை இருந்திருக்கிறது. அவர்கள் இருக்கும் பகுதியில் பெரிய பெரிய நிறுவனங்கள் இருந்தால், அங்கே வெளியே குப்பை கொட்டும் பழக்கமில்லை.  அதனால் தங்களுக்கு பாதிப்பு வருகிறது, நிறையப் பணம் கிடைப்பதில்லை என்று புகாரிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க சுழற்சி முறையில் பகுதிகளைக் கொடுத்துவிடலாம் என்று  முடிவெடுத்திருக்கிறார்கள் கம்பெனிக்காரர்கள். அவர்களுக்கு என்ன கவலை! எங்கோ தூரத்தில் இருக்கும் பகுதிகளை எல்லாம் கொடுத்தால் எப்படி ஒருவரால் பணிக்குச் செல்ல முடியும்? அதனால், உள்ளே கைகலப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். எப்படியிருந்தும் முடிவில் மாற்றம் வராததால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ள வேண்டிய சூழல்.

எனக்கு இருபது கிலோமீட்டர் கடந்து வேலை. மறுநாளிலிருந்து தொடங்க வேண்டும். நகரத்தை இணைக்க அதிவேக ரயில்கள் இருந்தன. அதிவேகப் பேருந்துகள் இருந்தன. ஒரு குடிமகளாக நான் என் ஒரு மாத வருமானத்தை அதில் கட்டணமாகச் செலுத்த வேண்டும். என் போன்றவர்களுக்கு என்று குறைந்த காசிற்கு குறைவேகப் பேருந்தோ ரயிலோ இல்லை. நாளையிலிருந்து அங்கே எப்படிச் செல்வது என்று யோசித்தேன். அக்காவிடம் விஷயத்தைச் சொன்னபோது பதறினாள். இனி, குழந்தையை எப்படிப் பார்த்துக் கொள்வது? பணி நேரத்தில் மூன்று மணி நேரம் அவள் குறைத்தால்தான் எங்கள் இருவராலும் சமாளிக்க முடியும். குழந்தையை சமாளிக்கலாம். பணப் பிரச்சனையை அல்ல.

“இப்ப இருவது கிலோமீட்டரு எப்டி போவ?”

“அதான் தெரியல. கம்பெனிக்காரனுங்க பகுதிய மட்டும் பிரிச்சுக் கொடுத்துட்டு போயிட்டாங்க. எப்டி போவீங்க, என்ன ஏது, ஒன்னுஞ்சொல்லல”

அக்கா மௌனமானாள்.

பிறகு, நீண்ட யோசனைக்குப் பிறகு, “எங்கூட வேல பாக்குற சில ஆளுக, பின்னாடி இருக்கக் காட்டுப் பாதை வழியா நடந்து வராங்க. மெயின் ரோட்டுல நடந்தெல்லாம், நீ நேரத்துக்கு வேலைக்குப் போக முடியாது. அதுனால, அந்தக் காட்டுப் பாதையைப் பத்திக் கேட்டுட்டு வரேன். நாளைக்கு ஒரு நாளு லீவ் சொல்லிடு. நானும், வேலை நேரத்த மாத்துறத எங்க கம்பெனியில சொல்லிடுறேன்” என்றாள்.

தலையசைத்து வைத்தேன். குளிருக்கு இதமாக நெகிழி பானம் அருந்தினோம். எங்கள் பொக்கிஷக் குப்பையிலிருந்து கிடைத்த கிழிசல் கம்பளித் துணியால், ஸ்ரீயைக் குளிர்க் கரங்கள் தீண்டாமல் சுற்றி வைத்தோம். பிறகு, இரவு உணவுக்கு நெகிழி சீவல் பாக்கெட்டைப் பிரித்து, கொஞ்சம் கொறித்துவிட்டுத் தூங்கிப் போனோம்.

மூன்று நாட்களாகக் காட்டுப் பாதையில் நடந்து போய் வருகிறேன். நகரச்சாலைகளில் நடக்கும் வழியெங்கும் கிடக்கும் குப்பைகளை அள்ளிப் போட்டுக்கொண்டே போகலாம். இப்போது போக வர ஆகும் ஒரு மணி நேரத்தைக் காசாக்க முடியாமல் சும்மாவே போகிறது. ஆனால், இந்தப் பாதையும், சின்னஞ்சிறு செடிகளும் மரங்களும், ஒரு நாளுக்கான புத்துணர்ச்சியைத் தந்துவிடுகின்றன. ஸ்ரீயைத் தூக்கிக் கொண்டு இங்கே வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மீண்டும் வீட்டுக்கு வரவே மாட்டேன் என்று அடம்பிடித்து விளையாடிக் கொண்டிருப்பான். நகரத்தின் முடிவில்தான் இந்த காடு இருந்தது. ம்ம்ம்.. இந்தக் காட்டின் எல்லையிலிருந்து நகரம் தொடங்கியிருந்தது. நாங்கள் ஒதுக்குப்புறப் பகுதியில் வசித்து வந்தோம். எங்களுக்கு இந்த இடத்தில்தான் ஓரளவு வசதி இருந்தது. பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களில், எங்கள் வீடுகளை அமைத்துக் கொள்ள முடிந்தது.

பணி முடிந்து பகல் பத்தரை மணி வாக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நான் வந்தபின் வேலைக்குப் போவதற்காக அக்கா காத்துக் கொண்டிருப்பாள். சுற்றி யாருமில்லாமல் நான் மட்டும் ஓர் உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு. பாதை நெடுக காட்டின் வாசனை மாறி மாறி வித்தை காட்டிக் கொண்டிருந்தது. பாதையை விட்டு விலகி சற்று உள்ளே போய்ப் பார்த்தால் என்ன என்னும் குறுகுறுப்பு உண்டானது. ஒரு நிமிடம், அக்காவை நினைத்துப் பார்த்தேன். சரி, ஒருநாள் கொஞ்சம் தாமதமாகப் போனால் என்ன என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.

மனிதர்கள் செல்லும் பாதைக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ மரங்கள் அடர்த்தியாக இல்லை. நடப்பதற்கு ஏதுவாக இருந்தது. ஆனால், தார்ச் சாலைகளிலேயே நடந்துவிட்டு, கால்களில் உள்ள செருப்பை மீறி கற்கள் குத்த நடப்பது சற்றே சிரமமாக இருந்தது. இத்தனை நாட்கள் இவ்வளவு அருகில் வசித்துவிட்டு ஏன் இங்கெல்லாம் வராமல் போனேன்! ஆமாம், வேலைக்குப் போவதும் வீட்டைக் கவனிப்பதுமே முழு வேலையாகிவிட்டது, இதற்கெல்லாம் எப்படி நேரமிருக்கும்? அதுவும் வீட்டுப் பெரியவர்கள் ஒவ்வொருவராக இறந்து போனதும், அக்காவுக்கும் எனக்கும் பசிக்கு சம்பாதிப்பதே முடியாத காரியமாகிவிட்டது. அக்காவின் விருப்பப்படி ஸ்ரீயைத் தத்தெடுத்து… பொக்கிஷக் குப்பையிலிருந்து எடுத்து, அவனை வளர்ப்பதும், அவனுக்குத் தேவையானதைச் சேர்த்து வைப்பதிலேயே முழு கவனமும் இருக்கிறது எங்களுக்கு.

தூரத்தில் ஒரு பையன் மரத்திலேறிக் கொண்டிருந்தான். அவன் கிட்டத்தட்ட நான் பார்த்திருந்த நகரத்து மனிதர்களைப் போலவே உடை அணிந்திருந்தான். என்ன செய்யப் போகிறான் என்று யோசிப்பதற்குள், மரத்தில் காய்த்திருந்த பழங்களைப் பறித்துத் தின்றான். யாரென்று தெரியவில்லை, திரும்பிப் பார்த்தால் நான் வந்திருந்த பாதை காணவில்லை. சிந்தனையில் காட்டுக்குள் வெகுதூரம் வந்திருக்கிறேன் போல. எனக்கு அந்தப் பையனைப் பார்க்க வியப்பாக இருந்தது. நகரத்தில் யாரும் பழங்களைத் தின்று பார்த்ததில்லை. நெகிழியும், உலோகத் தூள்களும் பிரதான உணவாக இருந்தது. மரப் பொருட்களையும், அதில் கிடைக்கும் காய்கனிகளையும், நார்களையும் நாங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு மூலப்பொருட்களாக மட்டுமே பயன்படுத்தி வந்தோம். எங்கள் வீட்டுப் பூனையும் நெகிழி பானம் குடிக்கும். இவன் எப்படி இந்தப் பழங்களைச் சாப்பிடுகிறான்? என்ன பிரச்சனை இவனுக்கு? ஒருவேளை பைத்தியக்காரனாக இருப்பானா? எனக்கு அவனருகில் செல்ல பயம் வந்தாலும் யாராக இருக்கும் என்னும் கேள்வியும், ஒருவேளை வழிமாறி வந்திருந்தால் கூட்டிப் போகலாம் என்றும் யோசித்து அப்படியே நின்றேன்.

அவன் பழங்களைப் பறித்துக்கொண்டு கீழிறங்கினான். என்னைப் பார்த்திருக்க வேண்டும். என்னை நோக்கி ஓடிவந்தான். கீழே கிடக்கும் கல்லையும், முள்ளையும் மதிக்கவில்லை. மூச்சிரைக்க என்னருகில் வந்து நின்றான். என்னைப் படித்துப் புரிந்துகொள்வது போலச் சுற்றி வந்தான். நான் ஓடுவதா வேண்டாமா என்னும் சிந்தனையிலேயே தேங்கி நின்றேன்.

“What is your name? Where are you coming from?” என்றான். எனக்கு யாராவது ஆங்கிலம் பேசுவது கேட்டால், இது ஆங்கிலம் என்று மட்டும் தெரியும். கம்பெனிக்காரர்கள் பேசிக் கேட்டிருக்கிறேன். சிறுவயதில் பள்ளிக்குப் போகும் வாய்ப்பிருந்தபோது, சிற்சில வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன். இவன் என்னிடம் ஆங்கிலத்தில் என் பெயர் என்னவென்று கேட்கிறான் என்று மட்டும் புரிந்தது. அவன் ஆங்கிலத்தில் பேசியவுடன் இவன் நம்மூரில் இருப்பவன்தான் போல என்று நினைத்து கொஞ்சம் தெம்பு வந்தது.

“ரேணு” என்றேன் நான். அவன் பெயரை அறிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது எனக்கு.

நான் அவனிடம், “what is your name?” என்றேன்.

சிரித்துக்கொண்டே “அம்ரோஷி” என்றான்.

எனக்கு அவனைப் பிடித்திருந்தது. தலைமுடியைக் கழுத்து வரை வளர்த்திருந்தான். இழுத்துக்கட்டி ஒரு முடிச்சிட்டிருந்தான். மேலுக்கும் கீழுக்கும் சேர்த்தவாறு ஒரே துணியால் சுருட்டிக் கட்டியது போன்ற ஆடை அணிந்திருந்தான். ஒரே வண்ணத்திலான ஆடையில் ஆங்காங்கே வேலைப்பாடுகளுடன் இருந்தது. கால்களில் செருப்பு போல அணிகலன் இருந்தது. உடல்வாகு எல்லாம் இதுவரை பார்த்த ஆண்களிலிருந்து வேறுபடவில்லை.

நான் அவனை அளந்து கொண்டிருந்தபோது,

“Why did you come here?” என்று தொடங்கி ஆங்கிலத்தில் பெரிதாகப் பேசினான். நானே ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஒப்பேற்றிக் கொண்டிருப்பேன். அதுவும் முதல் கேள்விக்கு நான் பதில் சொல்லியதும் எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்று அவன் நினைத்திருப்பான். நான் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தேன்.

தான் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு,

“ஒனாமா நனெகா” என்பது போல என்னவோ கேட்டான். இதற்குமுன் அவன் பேசியது எனக்குப் புரியவில்லை என்றுணர்ந்து, அவன் வேறு மொழியில் கேட்டிருக்கக்கூடும். என்னிடம் பதிலில்லை.

“உன் பேரென்ன? என்ன பண்ணிட்டு இருக்க இங்க?” என்றான் இப்போது. அவனுக்குத் தமிழும் தெரிந்திருந்தது. பிறகென்ன ஒரே மூச்சில் நான் என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு, அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமானேன்.

என்னைக் கைப்பிடித்து இன்னும் அடர்ந்த காட்டுக்குள் கூட்டிப் போனான். அங்கே எனக்குப் புரியாத ஓர் உலகமே இயங்கிக் கொண்டிருந்தது.

பெருவாரியாக அடுக்குமாடிக் கட்டிடங்கள் நிறைந்த நகரப் பகுதியிலிருந்து வந்த எனக்கு, மக்கள் தனித்தனி குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்தது புதுமையாய் இருந்தது. என்னை ஒரு குடிசைக்குள் அழைத்துப் போனான் அம்ரோஷி. எல்லா பொருட்களும் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. மரப் பொருட்களை நடுவில் இடைவெளி விட்டுவிட்டுக் கட்டியிருந்ததால் வீட்டுக்குள் குளிர் இல்லாமல் இருந்தது. இந்த இடத்துக்கு வந்துவிட்டால் ஸ்ரீ நடுங்காமல் தூங்குவான் என்று நினைத்துக் கொண்டேன். குடிசையின் வெளியே அம்ரோஷியின் தாயும் தந்தையும் இணைந்து வேலை செய்து கொண்டிருந்தனர். செடியின் கிளைகளைப் பறித்துக் கொண்டு வந்திருந்தனர். அவை நீரினால் சுத்தமாகக் கழுவப்பட்டிருந்தது. அதிலிருந்த இலைகளை மட்டும் பறித்துக் கொண்டிருந்தார் அம்ரோஷியின் தாயார். பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து அதில் இந்த இலைகளைப் போட்டார்கள். பிறகு, இன்னொரு பாத்திரத்தில் காய்களை வேகவைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருந்ததால் ஈர்க்கப்பட்டு வாங்கிப் பார்த்தேன். கீழே வைக்கும்போது பாத்திரம் உடைந்து போனது. பாத்திரங்கள் மண்ணைக்கொண்டு செய்யப்பட்டிருந்தன.

வெந்து கொண்டிருக்கும் காய்களையும், இலைகளையும் வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. சிறிது நேரத்தில் நீரை வடிகட்டிவிட்டு, உப்பு மற்றும் வேறு பல பொருட்கள் சேர்த்துக் கொண்டிருந்தனர். அம்ரோஷியிடம் என்ன நடக்கிறது என்று கேட்டேன். அவர்கள் உணவு சமைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.

உணவுக்கு அதிகப்படியாக நாங்கள் செய்யும் வேலையெல்லாம் நெகிழித் துகள்களைக் கொதிக்க வைத்து பானம் செய்வது மட்டுமே. பல்வேறு சுவைகளில் துகள்கள் கிடைக்கும் என்பதால் நாங்கள் விருப்பப்பட்ட பாக்கெட்டைப் பிரித்துக் கொட்டி பானம் தயாரித்துக் கொள்வோம். ஆனால், அம்ரோஷியின் வீட்டில் இஷ்டத்துக்கு பொருட்களைச் சேர்த்துச் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

அம்ரோஷியைப் பார்த்த பின்பு மொத்தமாக அக்காவை மறந்துவிட்டிருந்தேன். என்னைத் தேடிக் கொண்டிருப்பாள். ஒருவேளை பணியில் நேரமாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பாள். அவளின் ஒருநாள் சம்பளத்தை இழந்துவிட்டோம். பரவாயில்லை. நாளை வீட்டுக்குப் போனதும் அவளை சமாளித்துக் கொள்ளலாம்.

சமையல் முடிந்திருந்தது. சமைத்த இடத்தை அம்ரோஷியும், அவனின் தாயும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அம்ரோஷியின் தந்தை என்னிடம் பேச்சுக் கொடுக்க அமர்ந்தார். என்னைப் பற்றி அறிந்துகொண்டு பெருமூச்சுவிட்டார். அவருக்கு நகரத்தில் நடக்கும் அத்தனையும் பரிச்சயப்பட்டிருந்தது. எனக்குத்தான் இவர்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.

“நீங்க ஏன் இங்க இருக்கீங்க?” என்று கேட்டேன்.

அவர் புன்னகைத்தார்.

“உங்க குடிச வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”.

“ஒருநா என்னோட எங்க ஊருக்கு வரீங்களா? இல்ல, அம்ரோஷிய மட்டுமாவது என்னோட அனுப்பி வைக்கிறீங்களா? அவனுக்கு என் அக்காவையும் ஸ்ரீயையும் காமிக்கணும்”

எதற்குமே அவர் பதில் சொல்லவில்லை.

சாப்பிடலாம் என்றார்கள். உணவை நடுவே வைத்து அதைச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள். தத்தமது தட்டுகளில் உணவை வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல், நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

உணவில் கை வைக்காமல் நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த அம்ரோஷியின் அப்பா, பேச ஆரம்பித்தார்.

“முன்னாடிலாம் நீயோ நானோ எல்லோரும் ஒன்னா ஒரே இடத்துலதான் இருந்தோம். இதோ, இப்போ நாங்க சாப்பிடுறோமே இதே மாதிரி அரிசி, பருப்பு, காய்கனி அப்படின்னுதான் சாப்பிட்டு வந்தோம். நம்மளோட உற்பத்தி முறையாலும், லாப வெறியாலும் ஒரு கட்டத்துல சாப்பட்டுல நுண்துகள்களா நெகிழியும், உலோகமும் கலக்க ஆரம்பிச்சுச்சு. இதோ இப்போ குடிசைப் பகுதிகள்ள  இருக்குற எங்கக்கிட்ட அப்போ அதிக பணபலம் இருந்துச்சு. அதுனால, எங்களுக்குன்னு தனிப்பட்ட இயற்கையான முறையில உணவு, நீர், தூய காற்று உற்பத்தின்னு எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டோம். ஆனா, காலப்போக்குல எங்களோட எண்ணிக்கை குறைஞ்சது. நெகிழியையும் உலோகத்தையும் செரிக்கும் ஆற்றலை பரிணாமம் உங்களுக்குக் கொடுத்துச்சு. இப்போ, நாங்க நாடோடிகளா காட்டுல ஒதுங்கி வாழ்றோம்” என்றார்.

பேருரை ஒன்றை ஆற்றிவிட்டு, என்னைப் பார்க்காமல் சோற்றை உருட்டி வாயில் போட்டு பசியாற்றத் தொடங்கினார். இவர் பொய் சொல்கிறார் என்பது போல விழித்துக் கொண்டிருந்தேன்.

“எங்களப் பத்தி, உங்க ஸ்கூல்ல பாடம் இருக்குது. நீ பேசுறதையும், மலங்க மலங்க முழிப்பதையும் பாத்தா ஸ்கூலுக்குப் போகலைன்னு நினைக்கிறேன்” என்றான் அம்ரோஷி. “இன்னும் யாரும் திருந்தலை போல” என்று அம்ரோஷியின் தாயார் முணுமுணுத்துக் கொண்டார்.

நான் எதுவும் பேசவில்லை. நிகழ்வுகள் என்னை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தன. எனக்கு அவர்களின் உணவு விநோதமாக இருந்ததால், நான் கையில் வைத்திருந்த நெகிழித்துகள் பாக்கெட்டைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினேன். அப்படியே, அம்ரோஷியின் தட்டில் ஒரு பிடி வைத்தேன். எனக்காக அவன் அதைச் சுவைத்துப் பார்த்தான். அவன் எனக்கு ஒரு கைப்பிடி சோற்றை உருட்டிக் கொடுத்தான். வாயில் போட்டதும் குமட்டிக்கொண்டு வந்தது. வெளியே ஓடினேன்.


இ. ஹேமபிரபா,                                                                               

ஆராய்ச்சியாளர்,

இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனம்.

[email protected]

Previous articleஅந்நியன்
Next articleபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.
இ. ஹேமபிரபா
ஹேமபிரபா தற்போது இஸ்ரேல் டெக்னையான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”, ‘அறிவுக்கு ஆயிரம் கண்கள்’ ஆகிய அறிவியல் நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார்.

7 COMMENTS

 1. உங்களின் எளிய உரைநடைக்கு நன்று… கதையின் களத்தில் பயணிக்க சற்று அவகாசம் ஆனது….பயணிக்க தொடங்கிய உடன் கதை முற்று பெற்றதாக நான் உணர்கிறேன். உங்களின்
  கற்பனைக்கு வாழ்த்துக்கள்.

 2. இப்படி ஒரு நாள் என்றும் வந்துவிட கூடாது என்ற பயம் ஒற்றி கொண்டது

 3. புதிரான தொடக்கம் 👆🏻
  புரியாமலே வாசிப்பு தொடர்ந்தது🦋
  இறுதியை நெருங்குகையில் புரிந்தது 🌱
  இந்த நிலையை நெருங்கி கொண்டிருக்கிறோமோ என்ற பயம் பற்றிக் கொண்டது 😔
  இயற்கையை…இப்போது இருப்பதையாவது பேணச் சொல்லும் எச்சரிக்கை கேட்டது✍️
  மிக்க நன்றி 🙏🏻

 4. “இது நிஜத்தில் உண்மையாக போகும் கதை!”

  ஆனால் இது கனவாகவே போக விரும்புகிறேன்!

 5. கதை எழுது வதும் ஆரம்பித்துவிட்டீர்களா. நெலோகம் என்றவுடன் நேனோவை பற்றி கூறுவீர்கள் என்று நினைத்தேன். அதில் தானே நீங்கள் வேலை செய்கிறீர்கள். ஆனால் ஒற்றை சுழியும் இரட்டை சுழியும் மாறுபடுகிறது என்று சந்தேகித்தேன். கதையைப் படிக்க ஆரம்பித்தவுடன் அதென்ன நெகிழி பானம் முதல் சந்தேகம் என்று எழுத ஆரம்பித்தேன். எல்லாம் நெகிழி என்று கதை செல்லும் பொழுது கதையே அதுதான் என்று புரிய வந்தது. எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் என்பதை அழகாக கூறினீர்கள். நமது சாம்பார் சோற்றை ஒரு கவளம் சாப்பிட்டு விட்டு அக்காவிற்கும் ஸ்ரீ விற்கும் கொண்டு செல்வார் என்று நினைத்தேன். ஆனால் டப்பென்று கதை முடிந்து விட்டது. நல்ல முயற்சி நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

 6. அருமை. பொறுப்பான கதையாடல். நல்ல எச்சரிக்கை . தொடர்க வாழ்த்துகள்.

 7. நெலோகம் விபரீத உலகம். எதிர்காலத்தில் நிகழும் ஆபத்தைக் கூறும் அறிவியல் புனைவுக்கதை. நெகிழி உபயோகம் எந்த அளவிற்குப் போகும் என்பதன் கற்பனை.
  உணவுப்பழக்கத்தில், Junk foods எவ்வளவு உடல்நலத்தைப் பாதிக்கிறது (குறிப்பாகப் பெண்குழந்தைகளுக்கு) என்பதை நன்கு தெரிந்தே அதை உண்கிறோம். அதைப் பார்க்கையில் இந்தக்கதையில் இருப்பதோ கூட சிலநூறு வருடங்கள் கழித்து நிதர்சனமாகலாம். நல்ல கற்பனை, சற்றும் சொல்ல வேண்டியதில் இருந்து விலகாது கதை நகர்த்தும் யுத்தி. பாராட்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.