வியாகுலன் கவிதைகள்1) மூஸ் கவிதைகள்

I.

அந்தப் பூனை

என் மடியில்

படுத்திருந்தது ஒரு நிலவின்

அமைதியைப் போல

அந்தப் பூனைக்கு

வினோதமான

பெயர்கள் எல்லாம் இல்லை.

மூஸ்… மூஸ்… என்றுதான்

அப்பத்தா கூப்பிடுவார்கள்

சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில்

விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ்

 

பூனைக்கு

மூஸ் என்று யார்தான்

பெயரிட்டு இருப்பார்கள்

அந்த மூஸ் என்ற பெயர்

அப்பத்தாவிற்கு

யாரிடமிருந்து இடம்பெயர்ந்திருக்கக்கூடும்

மூஸ் என்ற பெயரும்

இப்போது இல்லை

அப்பத்தாவும் இப்போது இல்லை

பூனைகள்

வினோதமான பெயர்களுடன்

அலைந்து கொண்டிருக்கின்றன.

 

II.

அந்த அயன் வண்டியில்

படுத்துக் கொண்டு

உறங்காமல் விழித்துக்

கொண்டிருக்கிற –- அந்த மூஸ்

சும்மா இருப்பது போலத்தெரிகிறது

ஆனால் சும்மா இல்லை.

 

III.

அவளது மடியில்தான்

அந்தத் தாய்ப்பூனைத் தனது

குட்டிகளைப் போட்டது

தாய்ப்பூனைக்கு அவளது மடி

ஆகாயம் போலிருந்தது.

குட்டிகளுக்கு மரக்கிளை போலிருந்தது

அவளுக்கோ

அவளது மடியில்

அய்ந்தாறு அடைக்கலாங்குருவிகள்

வட்டமிட்டு விளையாடுவது போலிருந்தது.

 

IV.

அவள் அந்த பூனைக்குட்டிக்குப்

பால் வைக்கப்போகும்போது

அது தனது மிருதுவான பாதங்களுக்கடியில்

இரையைப் பதுக்கியபடி

முகத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தது.

 

 

2) விதி இருந்தது

 

அமிர்தவல்லிப் பாட்டியின்

ஐந்து ஆண்குழந்தைகளும்

நதியோடு போயின

அன்றுதான் அவள் தாதியானாள்

 

உறவில் யார் பிரசவித்தாலும்

முதல் செய்தி அவளுக்குப்போகும்

பிரசவவாடை மலர்கிற வீடுகளில்

அமிர்தவல்லிப் பாட்டியின் விதியிருந்தது

 

தலைநிற்காதக்

குழந்தையைக் குளிப்பாட்டும்

வித்தையை அறிந்திருந்தாள்.

யாருக்கும்

அவ்வளவு சுலபத்தில்

வாய்க்காத

வித்தையது

கால்களை நீட்டியபடி

குழந்தையைக் கிடத்திக்

குளிப்பாட்டத் துவங்குவாள்

அவள் ஒவ்வொரு குவளைத்

தண்ணீர் ஊற்றும்போதும்

நதியோடு போன

தன் குழந்தைகள் –- அவள்

நினைவில்

மிதந்திருக்கும்

 


  • வியாகுலன்
Previous articleசியாம் சுதாகர் கவிதைகள் (மலையாளம்) , தமிழில் யூமா வாசுகி.
Next articleவாட்டர் மெலன்(கன்னடம்) -கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழில் – நல்ல தம்பி
Avatar
வியாகுலன் • பவளக்கொடி சிற்றிதழ் ஆசிரியர் • வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள்: தான்யம், கல்மடந்தை, நிலாச்சரீரம், முதிர் நாவல் நகரம், தாய் அணில்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments