ஆர்.சூடாமணி கொண்டாட மறந்த தேவதை

ஆர்.சூடாமணி என்றதும் அவர் எழுதவந்த காலத்தில் எழுதவந்த இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. அதிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் வணிக பத்திரிகை சார்ந்தும் இயங்கியவர்களின்  படைப்புகளின் தீவிரத்தன்மையில் உள்ள வேறுபாடுகள் 50 ஆண்டுகால நெடும்பரப்பில் தெளிவாகத் தெரிகின்றன. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆ.மாதவன் போன்றோர் வணிகப்பத்திரிகைகளிலேயே தம் எழுத்தாற்றலையும் தரத்தையும் பேணி எழுதியவர்கள். ஒருவகையில் பார்த்தால் வணிக இதழ்கள் தந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள். இந்த வாய்ப்பு ஆண்களைவிட ஐம்பதுகளின் இறுதியில் பெண் எழுத்தாளர்களுக்கு அதிகம் வாய்த்தது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். வாசகர்களுக்கு நிறைய கதைகள் தேவைப்பட்டதால் நிறைய எழுத்தாளர்களுக்கு அது வாய்ப்பாகவும் அமைந்தது. இவர்களின் எழுத்துக்களை நாம் தனியாக ஆராய்ந்து அதன் போக்குகளையும் அன்றிருந்த தேவைகளையும் சொல்லலாம். அது வேறுவகையான பணி. வாசிப்பும் சமூக முன்னேற்றத்தில் அது ஆற்றியிருக்கும் பணியும் பொருட்படுத்த பேசத்தக்கதே. ஆனால் அதை அப்படியே இலக்கியப் பணியாகக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் ஆக்கங்கள் இலக்கியப்பூர்வமான வெற்றிகளைத் தராத இட்டுக்கட்டப்பட்ட பத்திரிகை கதைகளாக மலைபோல வந்து குவிந்தன. இவர்களின் எழுத்து இயக்கத்தில் நல்ல படைப்புகள் ஒன்றிரண்டு ஒட்டுமொத்த குவியலிலிருந்து கிடைத்திருக்கலாம். ஒரு படைப்பாளியாக அவர்கள் இயங்கியதில்லை என்பதைக் கணக்கில்கொண்டு தள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். சூடாமணி வெகுஜனப் பத்திரிகைக்கு ஏற்ற கதைகள் எழுதியிருக்கிறார். அதிலும் அவரது படைப்புமனம் வெளிப்பட்டிருப்பது முக்கியமானது.

ஆர்.சூடாமணிக்கு பத்தாண்டுகள் முன்பிறந்த சரோஜா ராமமூர்த்தி, சுமார் 600 கதைகள் எழுதியிருக்கிறார். அலுத்தம்மா 300 கதைகள் வரை எழுதியிருக்கிறார். சூடாமணி வயதொத்த கோமகள் 100 கதைகள் வரை எழுதியிருக்கிறார். ஜோதிர்லதா கிரிஜா 550 கதைகள் வரையிலும், ஜி.கே.பொன்னம்மா 350 கதைகள் வரையிலும் எழுதியிருக்கின்றனர். ராஜம்கிருஷ்ணன், லட்சுமி, வசுமதி ராமசாமி போன்றோர்கள் சிறுகதைகளை விட நாவல்களை அதிகம் எழுதிக் குவித்துள்ளனர். வணிக பத்திரிகைகளின் பெருக்கம், வாசிப்பு பழக்கத்தால் ஏற்பட்ட பெரும் பிரபல்யமான  கதைகளுக்கான அசுர தேவை இருந்ததால் தரம் என்ற ஒன்று இல்லாமல் ஆகின. வாராவாரம் பக்கங்களை நிரப்ப ஆள் தேவைப்பட்டது. இக்காலகட்டத்தில்தான் சிறுபத்திரிகைகள் தமது தனித்துவத்தைப் பேணி தரமான படைப்புகளுக்குத் தடம் அமைத்துத் தந்தன.

சூடாமணியின் அடுத்தத் தலைமுறை எழுத்தாளர்களான அனுராதா ரமணன் 1200 கதைகள், உஷா சுப்ரமணியம் 350, திலகவதி 300 கதைகள், 100 என்ற எல்லையைத் தொட்ட இந்துமதி, வாஸந்தி நாவல்களில் 40, 50, 60 என்ற எண்ணிக்கையைத் தொட்டார்கள். இந்தப் பெருங்குவியலைக் கிளரி குண்டுமணிகளைப் பொறுக்கிப் பார்த்தால் எத்தனைக் கதைகள் தேறும்  என்பது தெரியவரும். இந்த வணிக அலையில் சூடாமணியும் சிக்கிக்கொண்டதால் தனித்து அறியப்படாமல் போய்விட்டார்.

தொண்ணூறுகளின் இறுதிவரை வணிக இதழ்கள் சிறுகதைகள், தொடர்கதைகளுக்கு இடம் அளித்தன. தொலைக்காட்சித் தொடர்கள் தொண்ணூறுகளுக்குப்பின் பத்திரிகை கதைகளுக்கான இடத்தை இல்லாமல் ஆக்கியது. வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள், வாசிப்பைத் தொடங்கவேண்டிய இளம்தலைமுறையினர் தொலைக்காட்சிமுன் அமர்ந்து முடங்கிப்போயினர். அதிலிருந்து மீண்டவர்கள் இலக்கிய வாசகர்கள் மட்டும்தான். அந்த எண்ணிக்கை குறைவானது.

வணிகப் பத்திரிக்கைகளின் பொற்காலமாக 1950 முதுல் 1990 வரை 40, 50 ஆண்டுகளில் பெண்கள் கோலோச்சினர். இந்தப் பெருங்கூட்டத்தில் ஒரு படைப்பாளியாக இயங்கிய ஆர்.சூடாமணியை நாம் பிரித்துப் பார்க்க மறந்துவிட்டோம். தவறிவிட்டோம். சில இலக்கியத் தொகுப்புகளில் அவரது கதைகள் இடம்பெற்றிருந்தாலும் தவிர்க்க முடியாத படைப்பாளியின் வரிசையில் வைத்து விவாதிக்காமல் விட்டுவிட்டோம். இந்தக்காரியம் என்பதுகளிலோ தொண்ணூறுகளிலோ நடந்திருந்தால் பொருள் உள்ள தனது பணியைக் கேட்டு மகிழ்ந்திருப்பார். சூடாமணியுடன் நெருக்கத்தில் இருந்த அம்பை போன்றவர்கூட இதைச் செய்யவில்லை. நட்பாக இருப்பது என்பது வேறு. பணியை முன்வைப்பது என்பது வேறு. நான் வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ‘இறுக மூடிய கதவுகள்’ கதை வழியே சூடாமணியைக் கண்டடைந்தேன். இந்தக் கதை தந்த புத்தம் புதிதான அனுபவத்தால் அவரது பழைய கதைகளைத் தேடிப் படித்தேன். அவரது மிகச்சிறந்த குறுநாவலான ‘இரவுச்சுடர்’ கூட படிக்க வாய்த்தது. பத்தாண்டுகளுக்கு முன் தாமரையில் சூடாமணியின் மரணத்திற்கான அஞ்சல் குறிப்பில் இதுபற்றி எழுதியிருக்கிறேன். இவ்விடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. அவரது படைப்பாக்க ஆற்றலைச் சொல்லும்போதே படைப்பின் பலகீனத்தையும் குறித்துப் பேசவேண்டி இருக்கிறது.

ஆ.மாதவனின் கடைத்தெரு கதைகளையோ ஜெயகாந்தனின் விளிம்பு மக்களின் கதைகளையோ ஜி.நாகராஜனின் பாலியல் தொழிலாளி பற்றிய கதைகளை கி.ராஜநாராயணனின் கரிசல்காட்டுக் கதைகளையோ எழுத முடியாது என்பது புரிந்து கொள்ளக்கூடியதுதான். இந்த மனிதர்களின் வாழ்க்கைக்கோலம் சூடாமணியின் உலகத்திற்கு அப்பால் ஆனது. ஆனால் லா.ச.ரா. எழுதிய குடும்பக்கதைகளைவிட சிறந்த கதைகளை சூடாமணி எழுதியிருகிறார். அசோகமித்திரன் கதைகளின் ஒரு பகுதியை அவரால் எழுத முடிந்திருக்கிறது.

சா.கந்தசாமி, ந.முத்துசாமி, பிரபஞ்சன் இவர்கள் எழுதிய கதைகளை விட சிறந்த கதைகளைத் தந்திருப்பவர். நடுவயதில் மரணமடைந்த கிருஷ்ணன் நம்பி கதைகளின் எண்ணிக்கைக் கொண்டு பார்த்தால்கூட சூடாமணி கூடுதலான நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். பிரபஞ்சன், சா.கந்தசாமி முதலியோர் அவர்கள் எழுதிய நாவல்களில் நிற்கிறார்களே தவிர சிறுகதையின் ஆற்றலால் அல்ல. ஆனால் இவர்களது சிறுகதைகளுக்கும் ஓர் இடம் அளிக்கின்றனர். இவர்கள் பேசப்பட்ட அளவிற்குக் கூடுதலாகவே சூடாமணியின் கதைகள் குறித்துப் பேசப்பட்டிருக்க வேண்டும். அவர்சார்ந்து பேசப்படாமல் போனதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர் பெரும் பத்திரிகைகளில் நிரம்ப எழுதினார். சுமாரான கதைகளையும் சிறந்த கதைகளையும் மாறி மாறி எழுதினார் பத்திரிகையின் அவசரங்களுக்கு எழுதிய கதைகளில் அவரால் நிதானமான ஒரு தரத்தைப் பேணமுடியாமல் போயிருக்கிறது. இரண்டாவது இந்த இரண்டு நிலைகளையும் பிரித்தறிந்து சூடாமணியின் எழுத்தியக்கத்தைத் தொடர்ந்து வெற்றி தோல்விகளை வற்புறுத்திக் காட்டும் விமர்சகர்கள் இல்லை என்பது. இது சூடாமணியின் பொறுப்புசார்ந்தும்கூட. அப்படி விமர்சகர் பிரித்துப் பார்த்து உயர்வான கதைகளுக்கும், கலைச்சரிவான கதைகளுக்கும் உள்ள சிக்கலை இனம்காட்ட வேண்டிய கடமை என்று வற்புறுத்தவும் முடியாது. மூன்றாவதாக நானும் இலக்கிய ரவுடிதான் என்று அவ்வப்போது உதார்விட்டு சலசலப்பை ஏற்படுத்தும்படி அவர் நடந்து கொள்ளவில்லை என்பது. சூடாமணிக்குப்பின் எழுத வந்த பெண்களில் சிலர் போல புரட்சிகர வாயளப்பிலாவது ஈடுபட்டிருக்க வேண்டும். இம்மாதிரி சவடால்களிலிருந்து விலகி செயல்பட்டார் அதனாலே விரிந்த மனத்துடன் இலக்கிய ஆக்கங்களில் அவரால் செயல்பட முடிந்தது என்பது வேறு. மற்றொன்று சிற்றிதழ்ச்சூழலில் இயங்கியவர்களுக்குத்தான் தொடர்ந்து சிபாரிசுகளும், விமர்சனங்களும் வலுவாகவும் தொடர்ச்சியாகவும் கிட்டின. சிற்றிதழ்களில் மட்டுமே எழுதுபவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்பட்ட காலம். இந்த இலக்கியச்சூழலில் சூடாமணியைத் தொடர்ந்து எடுத்துவைத்துப் பேச இடமில்லாது போனது. க.நா.சு, சி.சு.செல்லப்பா, முன்னெடுத்த இதழ்களின் வழி சூடாமணியும் பெரிய பங்களிப்பைத் தரவும் இல்லை. அவர் கணையாழி, கலைமகள், தீபம் போன்ற இலக்கிய இதழ்களில் எழுதியிருந்தாலும், பெரிய இலக்கிய விவாதங்களை நடத்திய இதழ்கள் அல்ல அவை. க.நா.சு குழுவில் சூடாமணி பேசு பொருளாகவில்லை. முற்போக்கு குழுவான நா.வானமாமலை குழுவிலும் பேசுபொருளாகவில்லை. அவர் தாமரை ‘செம்மலர்’ போன்ற முற்போக்கு இதழ்களிலும் எழுதவில்லை. சரஸ்வதியில் ஒன்றிரண்டு கதைகள் எழுதியிருக்கிறார். அமைதியான முறையில் அங்கீகாரக் குரல் எழுப்பாமல் அவருக்கு வாய்ப்பளித்த இதழ்களில் எழுதினார். சுதேசமித்திரன், சதங்கை இதழ்களில் கூட எழுதியிருக்கிறார். குமுதம், குங்குமம், இதழ்களில் எழுத அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. கல்கி, ஆனந்தவிகடன், தினமணிக்கதிர் முதலிய வணிக இதழ்கள் தந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடர்ந்து எழுதியிருக்கிறார்.

சா.கந்தசாமி சாகித்திய அகாதமிக்காக தொகுத்த நான்கு தொகுப்புக்களிலும் சூடாமணிக்கு உரிய இடம் தரவில்லை. விட்டல்ராவ் தொகுத்த மூன்று தொகுப்புகளில் இரண்டில் இல்லை. மற்றொன்றில் இருக்கிறதா என்று தெரியவில்லை. சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த ‘100 சிறந்த சிறுகதைகள்’ தொகுப்பிலும் சூடாமணிக்கு இடம் தரப்படவில்லை. முக்கியமாக யார் தொகுத்தாலும் இடம்பெறக்கூடிய எழுத்தாளராக இருந்தும், இந்த விடுபடல் அவரைத் தொடர்ந்து இலக்கியத்தில் பேச்சுக்குரியவராக ஆக்கவில்லை. க.நா.சு., வெங்கட்சாமிநாதன் கூட ஆங்கிலப் பதிப்பிற்காகக் கதைகள் தொகுத்திருக்கிறார்கள். அதில் சூடாமணி கதைகள் இல்லை என்றுதான் என் நினைவு. சூடாமணிக்கு இதிலெல்லாம் நிச்சயம் வருத்தம் இருந்திருக்கக் கூடும். அவர் காட்டிக்கொண்டதில்லை. க.நா.சு.வாவது சூடாமணி பெயரை ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி சூடாமணி நல்ல எழுத்தாளரா என்று யாரோ கேட்க, பாவம் அப்பெண் உடல் குறைபாடுடையவர் அதனால் சொன்னேன் என்று க.நா.சு.சொன்னதாக அம்பை தன் வாய்ப்பேச்சாக குறிப்பிட சூடாமணி இப்படி ஒரு சலுகை எனக்குத் தேவையில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடுகிறார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. க.நா.சு.இன்று நம்மிடம் இல்லை. சுந்தரராமசாமி வாய்திறக்கவில்லை.

பின்வந்த சி.மோகன், ந.முருகேசபாண்டியன் போன்றோ ரிடமும் பேசியதில்லை. க.நா.சு.விடம்  இருந்த தீவிரத்தன்மை இவர்களிடம் இல்லை என்பதுதான் தெரியவருகிறது. அவர்கள் சூடாமணியை வாசிக்கவும் இல்லை. நல்ல எழுத்துக்காரர் என்று கண்டடையவும் இல்லை. இடதுசாரி விமர்சகர்கள் க.நா.சு. குழுவோடு சண்டை போடுவதிலேயே தங்கள் ஆயுளை மூழ்கடித்தார்கள். தனித்து சுயமாக மகத்தான படைப்புகளை, மேலான இலக்கியவாதிகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வேலையை அவர்கள் செய்யவில்லை. இவர்கள் இயக்கம்சார் இலக்கியவாதிகளை பேசுவதிலேயே தேங்கினர். ஜெயமோகன் எதிர்மறையாகவேணும் விமர்சித்திருக்கிறார்.

574 கதைகள் எழுதியிருப்பதாக சூடாமணியின் நெருங்கிய தோழியாகவும் வாசகியாகவும் இருக்கிற சீதாரவி, கே.பாரதி குறிப்பிடுகின்றனர். அவர்களின் பெருமுயற்சியில் ஒட்டுமொத்த கதைகளிலிருந்து 63 கதைகளைத் தேர்வு செய்து காலச்சுவடு வாயிலாக 647 பக்கங்கொண்ட பெருந்தொகுப்பொன்றை ‘தனிமைத்தளிர்’ என்னும் தலைப்பில் 2013-ல் வெளியிட்டுள்ளனர். இத்தொகுப்பிற்கு மூன்றாண்டுகளுக்கு முன் 2010ல் சூடாமணியின் மரணத்தை ஒட்டி அடையாளம் பதிப்பகத்தின் வாயிலாக 36 கதைகளைத் தேர்வு செய்து ‘நாகலிங்கமரம்’ என்ற தொகுப்பை திலீப்குமார் கொண்டு வந்திருக்கிறார். இதில் நல்ல விசயம் என்னவென்றால் இரு தொகுப்பிலும் ஏழு கதைகள் மட்டுமே மாறிமாறி இடம் பெற்றிருக்கின்றன. 99 கதைகளில் 92 கதைகள் கிடைக்கின்றன. நானூற்று எழுபது சொச்ச கதைகளில் இன்றும் 10 தரமான கதைகள் இருக்கக்கூடும். ஆக சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பாக 100 கதைகள் கிடைத்திருப்பது பொருட்படுத்தத்தக்  ஒன்று. திலீப்குமார், சீதாரவி, கே.பாரதி இம்மூவரே சூடாமணியின் இலக்கியத்தரத்தை நிலைநாட்ட முயன்ற முதன்மையான வாசகர்கள். 480 கதைகளின் பலகீனங்கள் பற்றி பேச இங்கு வாய்ப்பில்லை. இந்த 92 கதைகளில் சிறப்பின் மீது புழுதியாகப் படிந்து பேசவிடாமல் செய்திருக்கின்றன என்பதைச் சொல்லிக்கொள்ள முடியும். சூடாமணியின் 50 ஆண்டுகால தொடர் எழுத்தியக்கத்திலிருந்து கிடைத்திருக்கின்றன.

சூடாமணி புதுமைப்பித்தன் போன்றவரா என்றால் இல்லை; கு.அழகிரிசாமி போன்றவரா என்றால் இல்லை. ஜெயகாந்தன் போன்றவரா என்றால் இல்லை. அம்பை போன்றவரா என்றால் இல்லை. சூடாமணி சூடாமணி போன்றவர். இவர்களைப் போன்றே இவருக்கென்ற தனித்த படைப்பாக்க குணநலன் பெற்றவர். ஜெயகாந்தனைவிடக் கூட படைப்பெழுச்சி மிக்க குணத்தை கதைகளில் வெளிப்படுத்தியவர். கதைகளின் பேசுபொருள் சார்ந்து சற்றே பின் தங்கலாம். படைப்பு மனம் சார்ந்து சிறப்பாக செயல்பட்டிருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு தண்ணீர் ஊற்றி பரிசுத்தத்தை ‘அக்கினிபிரவேசம் கதையில் வழங்கமுடியும் என்றால் நடுவயதைத் தொடப்போகும் திருமணமாகாத பெண்ணின் காமத்துய்ப்பை ஏற்கிற பக்குவத்தை ‘சோபனாவின் வாழ்வு’ கதைவழி சூடாமணியால் சொல்ல முடிந்திருக்கிறது.

முன் தலைமுறை படைப்பாளிகள் போல புரட்சிகரமான கதைகளை ஆர்ப்பாட்டமாகத் தரவில்லை. மாறாக, நிதானத்தோடும் அமைதியோடும் தருகிறார். புரட்சிகரம் என்பதற்கு சூடாமணிக்கு முன்னரே நம்மிடம் ஆட்கள் உண்டு. அதிலிருந்து திரியை பற்றவைத்து வெளிச்சத்தை ஏற்றியிருக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். காப்பி அடிக்காமல் வேறொரு கோணத்தில் சொல்லும் திறன் சூடாமணிக்கு இருந்திருக்கிறது. இது விசயத்தில் சுந்தரராமசாமியை விட, துணிச்சலை ஏற்றுக்கொண்டவராக இருக்கிறார். சு.ரா.விற்கு பதில் சா.கந்தசாமியையோ கி.ராஜநாராயணனையோ கூட இவ்விடத்தில் பெயர் மாற்றிக்கொள்ளலாம். சூடாமணியின் கதைக்களனிலிருந்து ஊக்கம் பெற்று அம்பை சில கதைகளை தன் பார்வையில் எழுதியிருக்கிறார். உடனே ஒரு உதாரணம் தரவேண்டும் என்றால் சூடாமணியின் ‘வீணையின் எதிரொலிகள்’ கதையைப்போன்றே அம்பை எழுதியிருக்கும். ‘அசர மரணங்கள்’ கதையைச் சொல்லலாம். இப்படி சூடாமணியும் சுயம்புவான முன்னோடி என்பதற்கு உரித்தானவர்தான்.

2

1954ல் ‘பரிசு விமர்சனம்’ என்ற முதல் கதையை எழுதுகிறார். எடுத்த எடுப்பிலேயே (1954) தான் எழுதிய ‘நோன்பின் பலன்’, ‘அன்பு உள்ளம்’ முதலிய கதைகளின் வழி தரமான எழுத்தாளரின் வருகை என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார். அவரின் இறுதிகாலகட்டத்துக் கதைகள் வந்துகொண்டிருந்தபோது நான் கல்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 1998-ல் ‘வீம்பு’கதை கல்கி தீபாவளி மலரில் வெளிவந்தது. பேச்சுத்தொடர்பு அற்று பிரிந்துபோன தந்தைக்கும் மகனுக்கும் இடையே மறைந்துகிடக்கும் நெகிழ்ச்சியான தருணத்தைச் சொல்லும் கதை. பத்திரிகைகளின் தேவைகளுக்காக எக்கச்சக்கமான கதைகள் எழுதிக் கொண்டிருந்தாலும் அவர் இறுதிவரை நல்ல கதைகளையும் தந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. அவரது 50 ஆண்டுகால இலக்கிய வாழ்வு பொருளுள்ளதாக ஆகியிருக்கிறது.

முதல் பத்தாண்டு கதைகளில் ஒரு நிதானம், அழகுணர்ச்சி, ஆச்சர்யம் புனைவிற்குள் முற்று முழுதாக மூழ்கிக் கரைந்து போன தன்மை, அடர்த்தி, மனிதர்களின் எண்ணங்களில் நிகழும் வேறான அம்சங்கள், எதிர்பார்ப்புகள், எதிர்பாராத வெளிப்பாடுகள், மாந்தர்களில் யாரையும் தூக்காமல் யாரையும் இறக்காமல் அவர்களின் தன்னியல்பின் மீது எவ்வித சாய்வையும் கொள்ளாமல் பின்தொடரும் உள்ளார்ந்த ஆர்வம். இவற்றின் ஊடே இக்கட்டான நெருக்கடியில் ரொம்பவும் எளிமையுடன் அவர்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் மேன்மையான இடங்களை இக்கதைகள் கண்டடைகின்றன. அந்த உயர்வைச் சொல்வதில், அவ்விதமான மனிதர்களை இனம் காணுவதில் ஆர்.சூடாமணி கனிந்து விடுகிறார். இளம் வயதிற்கே உரிய மானுட நேயம், துக்கத்தில் பங்கெடுக்கும் துடிதுடிப்பு, களங்கமின்மை மீது கொள்ளும் மன எழுச்சி இக்கதைகளை எழுதுவதில் பின்னின்று இழைத்திருக்கின்றன.

குழந்தைகளின் உலகத்தையும் தாய்மையின் உலகத்தையும் மிகச்சிறப்பாக தன் கதைகளில் கொண்டு வந்திருக்கிறார். பல கதைகளில் குழந்தையும் தாயும் பிரிக்க முடியாத விதத்தில் பிணைந்திருக்கிறார்கள். ஒரு குழந்தையிடம் ஒரு தாயிடம் வெளிப்படும் அன்பிற்கு நிகரான வெறுப்பு குரூரமும் தோன்றும்தான். சூடாமணி காட்டும் குழந்தைகள் தாய்மார்கள் காட்டும் நேசிப்பில் நாம் பரிபூரணமான நம்பிக்கை கொள்கிற விதத்தில் புனைகதையை உருவாக்கி விடுகிறார். குழந்தைகளின் உலகத்தை சிறப்பாக எழுதியவர்களில் முக்கியமானவர் கு.அழகிரிசாமி, அவரைவிட மூன்று மடங்கு இதில் சாதனை புரிந்திருப்பவர் ஆர்.சூடாமணி, அவர் எழுதிய ஐம்பதாண்டுகளில் குழந்தைகளைத் தொடும்போதெல்லாம் படைப்பு மனோபாவத்தின் உச்சத்திற்குப் போய் விடுகிறார்.

மூர்க்கமும் வெறுப்பை உமிழும் மனிதர்களையும், மோசமான பழக்கவழக்கங்களையுடைய மனிதர்களையும், தீமையின் ஆட்டங்களையும் அவரால் எழுதியிருக்க முடியும். ஆனால் எழுதவில்லை. வணிக இதழ்கள் நல்வழி காட்டும் கதைகளை வெளியிடுவதில் ஒரே கொள்கையைக் கொண்டிருந்தன.  யோசித்துப் பார்த்தால் ஜெயகாந்தன் வணிக இதழ்களில் எழுதிய கதைகள் ஒருவகையில் நல்வழிகளைக் காட்டும் கதைகள்தானே. இது ஒரு ட்ரெண்டாகவே மாறியது. சூடாமணியும் இந்த வணிக இதழ்களின் நன்நெறிகளுக்கு ஆட்பட்டே நல்ல கதைகளை எழுதினார். பத்திரிக்கைகள் இதனை ஒரு சமூகத்தொண்டாகவே கருதி பிரசுரித்தன. வணிக இதழ்கள் நடத்தும் பரிசுப்போட்டி கதைகளில் தேர்வாகும் கதைகள் அனைத்தும் நல்ல முடிவு கொண்டவையாக வாழ்க்கைக்கு நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கும். ஜெயகாந்தனும் சூடாமணியும் இந்த எழுதப்படாத விதியை ரொம்பவும் இறுக்கிப்பிடித்துக் கொள்ளாமல் சாகசமாக எழுதித் தாண்டியிருக்கிறார்கள். அதே சமயம் பத்தாண்டு கழித்து கணையாழி, தீபம், சதங்கை, சுதேசமித்திரன், சௌராஸ்டிரமணி இதழ்களில் எழுத வாய்ப்பு அமைந்தபோது மூர்க்கமும் தீமையின் ஆட்டங்களையும் கொண்ட கதைகளை சுதந்திரமாக எழுதியிருப்பதைக் காணமுடிகிறது. இந்தக் காலகட்டத்தில் ‘கலைமகள்’ இதழிலும் காமம்சார்ந்த கதைகளைத் துணிந்து எழுதியிருக்கிறார். அதற்குமுன் கலைமகளில் எழுதிய கதையிலிருந்து கூட துணிச்சலான கதைகளை எழுதியிருக்கிறார். அக்கதைகளை கலைமகளும் வெளியிட்டிருக்கிறது என்பது ஒரு புதுமைதான்.

உத்திசார்ந்தோ மொழிசார்ந்தோ மெனக்கிட்டு திறமை காட்ட வேண்டும் என்ற எழுத்தாள தோரணை கிடையாது. புதிதான தேர்வில் கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம்தான் மேலோங்கி இருந்திருக்கிறது. முதல்காலகட்ட கதைகளில் உரையாடலைப் பேச்சுவழக்காகப் பயன்படுத்தவில்லை. ஒரு பொதுமொழியைக் கையாண்டிருக்கிறார். இந்தமொழி பேச்சுவழக்கிற்கு சற்றே நெருக்கமாகவும் இருக்கிறது. மாந்தர்கள் பேசுவதில் அந்நியத்தன்மை தெரியவில்லை. அறுபதுகளின் பிற்பகுதிகளில் உரையாடலில் இந்த பொதுமொழி பின்னகர்ந்து இயல்பான பேச்சுமொழியைக் கையாளத் தொடங்கியிருக்கிறார். ஐம்பதுகளில் தமிழ்ச்சினிமாவின் வசனங்களில் பொதுமொழி ஓங்கி ஒலித்தது. அது படைப்பிலக்கியத்திலும் லேசான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் மணிக்கொடி போன்ற இலக்கிய இதழ்களிலேயே புதுமைப்பித்தன் பேச்சுமொழியைக் கையாண்டிருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

பொதுவாகப் புறச்சித்தரிப்பு வலுவாக இல்லாதபோது கதை நம்மை அப்பால் நிறுத்திவிடும். அக்கதை வாசகனுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தாமல் போய்விடும். சூடாமணி கதைகளின் புறச்சித்தரிப்பு துல்லியமான விவரணைகளால் நிரம்பியதல்ல. வீடோ, தெருவோ, மரமோ, பூவோ, கடைகளோ, பயணங்களோ வேறு வேறு இடங்களோ, காலமாற்றங்களோ கதையின் ஊடாக வருகின்றன. அதன் இருப்பு குறித்த சந்தேகமே தோன்றாதவிதத்தில் கதை நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது. இதுபற்றியெல்லாம் நினைத்துப் பார்க்காதவிதத்தில் மாந்தர்களின் அகவிழிப்பில் கதை நகர்வதால் வாசிக்கிற நாமும் மெல்ல அதன் போக்கில் அமிர்ந்து விடுகிறோம். இந்த எழுத்துமுறை உண்டாக்கும் நம்பகத்தன்மை சூடாமணியின் மிகப்பெரிய பலமாகக் கருதுகிறேன். இந்த இடத்தில்தான் பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் தோற்றுப்போகின்றன. புறச்சித்தரிப்பை பல்லைக்கடித்துக்கொண்டு வலிந்து எழுதியிருப்பது தெரியும். புறச்சித்தரிப்பைக்கூட விட்டுவிடலாம். மாந்தர்களை, எழுத்தாளர்களை விளக்கி இழுத்துச்செல்லும் போதே அதன் புனைவுத்தன்மை நழுவிப்போகிறது. ஒரு பிரச்சனையை கதைவடிவில் சொல்ல முயன்றுள்ள தன்மை வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. சிவசங்கரி, வாஸந்தி, திலகவதி இவர்களின் நல்லகதைகள் என்ற சொல்லப்பட்டவற்றிலேயே இத்தன்மையைத்தான் பார்க்கிறேன். சூடாமணி கதைமாந்தர்களை இழுத்துச் செல்வதில்லை. அவர்களின் மனக்குமுரலை, வெறுப்பை, கனிவை அவர்கள் பின்நின்று அவர்களது மொழியில் எழுதுகிறார். சூடாமணி படைப்புமனம் கொண்டவர் என்று சொல்வது இதனால்தான். இந்தப்படைப்பு மனம் பலருக்கு வாய்ப்பதில்லை. கதைகளின் முடிவு சார்ந்து நன்மையின் பக்கம் திருப்பும்போது தோல்வியடையும் இடங்கள் சூடாமணியின் கதைகளில் உண்டு. கதையின் உள் இழைகள் இயல்பான குணத்தால் நெய்யப்பட்டு வந்திருப்பதை அறியலாம்.

சூடாமணியின் கதைமாந்தர்கள் தங்கள் உரையாடல் வழி உயிரோட்டமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களது ஏடாசிதனமான பேச்சு, குழந்தைகள் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்கள், நம்பிக்கைகள், பேய்க்கும் திருடனுக்கும், வெறுப்பை உமிழ்கிறவருக்கும் முத்தம் தர துணியும் கைக்குழந்தைகள், விடை தெரியாத நிலையில் வரும் பதில்கள், வெறுக்கிற மனநிலையில் வரும் சூட்சுமமான சொற்பிரயோகங்கள், தத்தளிப்பில் பெருகிவரும் வார்த்தைகள் இப்படி இப்படி மாந்தர்கள் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப வெகுவாக வெளிப் படுத்திக் கொள்கிறார்கள். பேச்சு என்பதே மன வெளிப்பாடுதான். உண்மையில் கதை எவ்வளவு பெரிய சிக்கலைப் பேசினாலும் அதன் கருத்தின் தெறிப்பில் மட்டும் இல்லை. இவ்விதமான உயிரோட்டமான அம்சங்களால்தான். ஜெயகாந்தன் கதைகளில் இந்த நுண்ணுர்வுகளே இருக்காது. அசோகமித்திரன் கதைகளில் தகவல்கள் இருக்கும் ஆனால் நுண்ணுணர்வுகள் குறைவுதான். ஜெயகாந்தன் அற்புதமான ஒரே ஒரு குழந்தை கதையைக்கூட எழுதியதில்லை. ‘அக்கிரகாரத்தில் பூனை’ கதை நினைவிற்கு வருகிறது என்றாலும், பூனைமீதான குழந்தையின் பிரியங்கள் வேறுவிதமான எண்ணங்கள் உருவாகி வரவில்லை. அக்கிரகாரத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் அதில் மேலோங்கி இருக்கும். அதாவது பூனையைக் கொல்வது தொடர்பாக. பேதமை, துள்ளல், புதிரான வினாக்கள்தான் குழந்தைகளின் ஆதார சுருதி. அதை சூடாமணி வசப்படுத்தியிருக்கிறார்.

சூடாமணியின் கதைகளில் அந்தந்த மாந்தர்களின் உணர்வுகளிலிருந்து உரையாடல் நிகழ்கின்றன. முக்கியமாக எதிர்மறை நேர்மறையான மாந்தர்கள் அவரவர்களின் நிலையிலிருந்து மோதிக்கொள்கிறார்கள். அவை அவர்களது உரையாடல்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றன. இந்த அசல்தன்மை மாந்தர்களை அழுத்தமாக மனதில் பதியச் செய்கின்றன. எழுத்தாளருக்கு வில்லன்கள் கிடையாது என்பதை பல எழுத்தாளர்கள் புரிந்து கொள்வதில்லை.

கதைகளில் சில அழகான தொடர்கள் வந்து விழுகின்றன. அவை மெனக்கெடாமல் கதையின் போக்கில், மாந்தர்களின் அக்கணநேரத்தில் தோன்றிய எண்ணங்களாக இருக்கின்றன. ஆசிரியரின் சிந்தனையாகவோ, வெளியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட படிமமாகவோ இருப்பதில்லை. கதையில் மாந்தரின் மனவெளிப்பாடாக இருக்கின்றன. ‘தான் நெருங்க முடியாதஓர் எல்லை இங்கு இருப்பதை விஜயா உணர்ந்து கொண்டாள்’, ‘நேரம் சென்றவாறு இருந்தது. கடிகாரத்தின் அசைவு ஒலிகள் உள்ளத்துள் தாக்கும் சவுக்கடிகளாகத் தோன்றின கௌரிக்கு’ ‘சாமா தாமே சிரித்துக்கொண்டார். தம் பேச்சும் சிரிப்பும் நினைவுகளும் ஏதோ ஒரு பள்ளத்துக்கு அணையிட்டுவிட வேண்டும் என்ற முயற்சியின் ஆவேசம் ததும்பியது அந்த பாவணையில் ‘இப்படி சூழமும் மனமும் அந்நேரத்தில் புனைவு மாந்தருக்குள் ஏற்படும் உணர்வை மொழிக்குள் கொண்டு வருகிறார். தி.ஜானகிராமன் இவ்விசயம் கைவரப்பெற்ற கலைஞன் அ.முத்துலிங்கம் வாசிப்பின் நினைவுத்திறனால் வெளியிலிருந்து கதைக்குள் பொருத்தமாக எழுதுவார்.

இவ்விதம் புனைவின் பல நல்லம்சங்கள் சூடாமணிக்கு இயல்பாகக் கூடி வந்திருக்கின்றன. புதுமைப்பித்தன் போல, ஜெயகாந்தன் போல இவரது கதைகள் கருத்தியல் உலகமல்ல. மெல்லுணர்வுகளின் உலகம். பரபரப்பை உண்டாக்கும் பிரச்சனைக்குரிய கதைகள் எழுதுவதன் வழி உடனடி பிரபல்யமும் அங்கீகாரமும் கிடைக்கவே செய்யும். அதன் தன்மை அத்தகையது. பரபரப்பூட்டக்கூடிய விசயத்தைக்கூட சூடாமணி அமைதியான மென்மையான குணத்தில் எழுதினார். சூடாமணி தன் கதைகளின் வழி தேடியது. விரும்பியது உறவுகளின் நேசத்தைதான். அந்தத்தேடலில் அவ்வப்போது கண்டடைந்தது சுயநலத்தையும் வெறுப்பையும்தான். இதில் உண்மையின் பக்கம் நிற்க விரும்பியவர். ஆரம்பகால கதைகளில் மனிதர்களிடம் புதைந்திருக்கும் அன்பை நாடுவதிலேயே பெரும்விருப்பம் கொண்டவராக வெளிப்படுகிறார். பின்வந்த காலங்களில் மனிதர்களிடம் உறைந்திருக்கும் கசப்பையும் நேசமின்மையையும் காணத்தொடங்கினார். ஐம்பதுகால மனிதர்களுக்கும் எழுபதுகால மனிதர்களுக்கும் இடையேகூட பண்புகள் மாறியிருக்கின்றன. அனுபவம் படைப்பாளியின் பார்வைகளையும் மாற்றும்தானே! இந்த வகையில் கு.அழகிரிசாமியின் படைப்புள்ளத்திற்கு நெருக்கமானவர் சூடாமணி.

3

குழந்தைகள் கணந்தோறும் புதுசாக வெளிப்படுத்திக் கொள்ளும் இயல்பான உலகத்தை ஆச்சரியப்படுத்தாமல் கொண்டு வந்தது; தாயுள்ளத்தின் வெவ்வேறு விதமான கருணையின் ஊற்றுக்கண்களைத் திறந்து பார்த்தது; வித்தியாசமான குணாதிசயங்களை உடைய மாந்தர்களின் ஆட்டங்களைக் கூர்ந்து பார்த்து எழுதுவது; துடிப்புமிக்க இளம் உள்ளம் நம் வாழ்க்கையில் ஊடாடும் நம்பிக்கைகளை வம்பிற்கிழுக்கிற போது அதில் வந்து மேவும் புதிய போலியான விளக்கங்களை புன்சிரிப்போடு முன் வைத்துத் தள்ளுவது என்ற விதங்களில் சூடாமணியின் முதல்பத்து பதினைந்தாண்டு கதையுலகம் நான்கைந்து வழிகளில் பயணப்பட்டிருக்கின்றன.

இன்று யுவன் சந்திரசேகரன், கதைக்குள் வைக்கும் பல கதைகள் என்ற பாணியை சூடாமணி ‘நட்சத்திரம் பொய்க்குமா?’ (1958) என்ற கதையிலேயே கையாண்டிருக்கிறார். எத்தனைவிதமான பாணிகளைக் கைக்கொண்டாலும் வாசகனை தாக்கி உலுக்காதபோது அக்கதை அவனைவிட்டு விரைவாக மறைந்துவிடும். எனவே கதை ஏற்படுத்தும் பாதிப்பு அக்கதைக்கு வலுவான அம்சத்தைத் தருகிறது என்பது என் எண்ணம். இந்த வகையில் ஆரம்பகாலகட்டகதைகளில் ‘நோன்பின் பயன்’ ‘அன்புள்ளம்’, ‘அந்த நேரம்’ ‘எட்டணா நாணயம்’ ‘யோகம்’ ‘அவன் வடிவம்’, ‘படிகள்’ ‘தெளிவு’ எட்டுகதைகளும் அநாயசமாக எழுதப்பட்ட அற்புதமான கதைகள். இந்த வரிசையில் சேரத்தக்க கதைகள்தான் ‘இரண்டின் இடையில்’ ‘உரிமைப்பொருள்’ கதைகள். ஆனால் ‘இரண்டின் இடையில்’ 14 வயது சிறுவனின் பருவமாற்றங்களை உணர்த்துவதற்கு பதில் ஆசிரியர் புகுந்து நிரம்ப விளக்கிவிட்டார். 28வயது வாத்திச்சி மீது விடலைப்பருவத்து பையனுக்கு வரும் கவர்ச்சி. அழகு எல்லாம் சரிதான். கதை முடிவில் அவளுக்கு திருமணமாகியிருப்பதாகவும் கணவனைக்கண்டு அவன் உடைந்து போவதாகவும் கதை முடிகிறது. திருமணம் ஆனதை ஏன் மர்மப்படுத்தவேண்டும்? இது சினிமாத்தனமானது. இந்த குறைகளால் இட்டுக்கட்டப்பட்ட கதையாகிறது.

‘உரிமைப்பொருள்’ இக்கதையில் வரும் பாலுவின் தாயான அகிலா ஒரு வித்தியாசமான பெண். பாலு தவறு செய்தால்தாய் அடித்து திருத்தலாம். மற்றவர் திருத்தக்கூடாது. இவன் விரும்பாதவர்களுடன் பேசினால் பிடிக்காது. உடையோ சாப்பாடோ தான் விரும்புவதை அவன் ஏற்கவேண்டும். அவனது தவறை மற்றவர் விமர்சனம் செய்தால் அவர்கள் முன் அவனை அடித்து அவர்களை வெறுப்படையச் செய்வது. இப்படி அவனுக்கு நல்லது செய்ய முன் வந்தாலும், யோசனை சொல்ல முன் வந்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் அவள் எதையும் ஏற்றுக்கொள்ளாதவளாக இருக்கிறாள். சில சமயம் அதற்கு மாற்றாகக்கூட செய்யத் தூண்டுகிறாள். நான் பெற்றோர் எனவே எல்லாவிதத்திலும் அவன் எனக்கு மட்டுமே உரியவன் என்ற பிடிவாதமும், நல்லெண்ணத்தில் அரவணைக்கிறவர்களைக் கசப்பால் துண்டிக்கிறவளாகவும் இருக்கிறாள் இந்ததாய்.

இம்மாதிரி வித்தியாசமான குணாதிசயம் கொண்ட மாந்தர்களை கதையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். அகிலாவின் நடத்தைகளை வேறு மாந்தர்கள் பேசுவது சரிதான். ஆசிரியர் இடையில் சன்னமாகவும், இறுதியில் புகுந்து பெரிதாக விளக்குவது தவிர்த்திருந்தால் சிறப்பான கதையாக மாறியிருக்கும். ஒரு கதையின் சிறப்பைக் குறைப்பது கூடுதலான ஆசிரியரின் விளக்கங்கள் என்பது உணரப்பட வேண்டும். நல்ல எடிட்டர் வேலை இதை சுட்டிக்காட்டி செம்மைப்படுத்துவதுதான். அப்படியான சகிருதயன் தமிழ்ச்சூழலில் இல்லை. வெகுஜன இதழ் வாசகர்களுக்கு இந்த விளக்கங்கள் தேவையாக இருக்கலாம். நல்ல கதைக்கு இவை உறுத்தல்கள்தான். ஆனால் சூடாமணி கதையின் பேசுபொருள் சார்ந்து தேர்வதும் விசயங்களைத் தொடுவதும் தமிழ்ச்சிறுகதை உலகிற்கு விசேசமானவை என்பதாலேயே அவர் முக்கியமானவராகிறார். ‘அக்கா’ ‘இதுபெரிது’ ‘ஒரு கீற்றுப்பெண்’ ‘ஓவியனும் ஓவியமும்’ ‘ஆராய்ச்சி’ ‘நிகழ்ச்சி’ பொருட்படுத்தக்க கதைகள்.

திலீப்குமார் தொகுப்பில் மூன்றாவதாக வரும் ‘நிகழ்ச்சி’ ஒரு காதல் கதை. இந்த கதை எழுதப்பட்ட ஆண்டு 1961 என்று இருக்கிறது. கதையின் காலம் எழுபதுகளின் பிற்பகுதியாக இருக்கிறது. டெலிவிஷன் இளைஞர்களிடம் காணப்படும் அமிதாப்பச்சன் பாஷன் அண்ணாசிலை திருப்பம், பற்றிய குறிப்புகள் வருகின்றன காலத்தை சரிபார்ப்பது நல்லது.

இருபது ஆண்டுகால உப்புசப்பற்ற திருமணவாழ்க்கை ஒருவகையில் அமைதியான சாதாரண குடும்பவாழ்க்கை. மறுநாள் அவளது வாழ்க்கையில் பரபரப்புமிக்கதாக ஆகப்போகிறது. அதை அறியாமல் நூலக புத்தகத்திற்குள் இருந்த சிறு காதல்கடிதத்தைப் படிக்கிறாள். யாராக இருக்கும் என்று ஒவ்வொருவராகத் தேடிச் செல்கிறது. திறமையாக எழுதப்பட்ட கதைதான். தன் மகள் மீது சந்தேகமா. அப்படியான நினைவோ தாய்க்கு வராதபடி எழுதியிருக்கிறார். குடும்பத்திற்கே தெரியாமல் நிகழ்ந்து முடிவது உண்மைதான். ஆனால் தாய்க்கு இயல்பாகத் தன் மகள் மீது சந்தேகம் வரத்தானே செய்யும். அப்படி வராமல் அதை கதைக்காக சூடாமணி தவிர்க்கிறார். இந்த கேள்வி எழுந்தபின் நன்றாக எழுதப்பட்டும் கதை தன் மதிப்பை இழக்கிறது.

‘நிகழ்ச்சி’ கதைக்கு நேர் எதிரான கதை ‘படிகள்’ சூடாமணி எழுதிய கதைகளிலேயே கவித்துவம் முழுமையாகக் குடியேறிய கதை இதுதான். ஆந்திரப்பிரதேசத்தில் ஒரு மலை அடிவாரத்தை ஒட்டிய மாண்டிஸோரி பள்ளிச் சூழலில் எழுதப்பட்ட கதை. மலைப்பிரதேசம், குழந்தைகளின் குதூகலம், விளையாட்டோடு கற்கும் கல்வியில் தோன்றும் மகிழ்ச்சி, ஆசிரியருடனான குழந்தைகள் கொள்ளும் நெருக்கம், சமத்துவம், நிபந்தனையற்ற அன்பு, உயர்ந்து நிற்கும் மலைச்சிகரம், அதன் அழகு, அதைச்சுற்றியுள்ள விதவிதமான நில அமைப்பு, இதமான குளிர்காற்று ஒவ்வொரு கணமும் வானத்தில் ஏற்படும் மேகங்களின் மாயாஜாலம், நிலப்பகுதியில் தெரியும் பாதைகோடுகள், பசுமை போர்த்தியிருக்கும் காட்சி, நீரோடை, களங்கமற்ற குழந்தைகளிடம் இருந்து வரும் அதிசய பேச்சு, தனிமையின் ஏகாந்தத்தைத் தரும் மலைப்பாதைப் பயணம் என ஒவ்வொரு நொடியும் சிகரத்தை நோக்கிப் பயணிப்பதாக இருக்கிறது. களங்கமற்ற குழந்தைகளின் ஆனந்தம் இடப்பக்கமும் அழகு கொஞ்சும் இயற்கைச் சூழல் வலப்பக்கமுமாக பிணைந்து இருப்பதாக எழுதப்பட்ட கதை. இயற்கையும் சிகரமும் குறியீடு என்று சொல்லாமல் அமைந்துவிட்ட அற்புதம் இக்கதையில் ஜொலிக்கிறது. அந்தச்சூழலே ஒரு தெய்வாம்சம் பொருந்திய இடமாக தவழ்வதை ‘படிகள்’ கதையில் கொண்டு வந்திருக்கிறார். அதிகாரமில்லாத அன்புமயமான தெய்வாம்சம் ஆட்சி செய்யும் இடமாக இருக்கிறது. கு.அழகிரிசாமி ‘திரிவேணி’ கதைவழி அடைந்த வெற்றிக்கும் மேலானதாக எனக்குத் தோன்றுகிறது. ‘படிகள்’ நாம் வந்துசேர வேண்டிய அழகுசொரியும் இடம் இது என்று காட்டுகிறது.

மாற்றாந்தாயால் வளர்க்கப்பட்ட ராமு என்ற இரண்டு வயது சிறுவனையும், அத்தாய் கர்ப்பம் அடைந்தபின் அப்பெண்ணின் தாய் அவனை அது உன்தாய் அல்ல என்று (பாட்டி) வக்கிரமாக சொல்லிச்சொல்லி திகைக்க வைத்து பிரிப்பதும், இது தெரியாமல் சுகப்பிரசவம் பெற்று மருத்துவ மனையிலிருந்து வரும் மாற்றாந்தாய், அம்மா செய்திருக்கும் சகுனித்தனம் தெரியாமல் அச்சிறுவனை தன் அன்பால் அள்ளும் கதைதான் ‘அன்புள்ளம்’ ஒரு வயதிலிருந்து வளர்த்த அத்தாயின் அன்புள்ளத்தை கோயிலாகக் கட்டி வைத்திருக்கிறார்.

சிறுவனின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றவிடாமல் அந்தப்பாட்டி தடுப்பதும் வெறுப்பதும் தான் கதையின் பகுதிகள். மகள் பாரதி மருத்துவமனைக்குச் செல்கிறாள்.மாற்றாந்தாய் தந்த பென்சிலை என் அம்மா தந்தது என்று பாரதியின் தங்கையிடமிருந்து பிடுங்குகிறான். கோவம் தலைக்கேற பாட்டி அடிக்கிறாள். பாரதி உன் அம்மா இல்லை. அவள் செத்துப்போய்விட்டாள். இது என் மகள் என்றுதிட்ட, இல்லை என் அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கிறாள் என்கிறான். உன் அம்மா செத்து நாளாகிவிட்டது நீ அம்மா இல்லாதவன் என்று சொல்ல ‘நீ பொய் சொல்ற’ என்கிறாள்.

பாட்டியின் கடுமை அவனுக்குத் தனக்கு அம்மா இல்லை என்று தத்தளிக்க வைக்கிறது. குழந்தை பிறந்து ஏழாம் நாள் வருகிறாள். பாட்டியின் துரத்தலில் கொட்டடியில் ஒதுங்கி கன்றுக்குட்டியுடன் பேசுகிறார் அம்மாவை எட்ட ஒளிந்து நின்று பார்க்கிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மறைந்து மறைந்து தன்னைப் பார்ப்பதைக் கண்ட அவள், அவனை அழைத்து மடியில் இருத்துகிறாள். அவனுக்கு பல சந்தேகங்கள். பல கேள்விகள் எழுகின்றன. ‘நீ என் அம்மா இல்லையா அம்மா’ என்கிறான். உன் அம்மாதான் என்கிறாள். ‘பாட்டி நான் உன் வயிற்றில் பிறக்கவில்லை என்கிறாளே. எனக்கும் ஞாபகமில்லையே’ என்கிறாள். யாருக்கும் வயிற்றிலிருந்து பிறக்கும்போது ஞாபகம் இருக்காது என்கிறாள். ‘உனக்குக்கூடவா’ என்கிறான். எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் தான் என்கிறாள்.

தாய் என்றால் என்ன என்று கேட்கிறாள். பல பதில்களைச் சொல்கிறான். இதையெல்லாம் நான் செய்திருக்கிறேனா என்கிறாள். ‘ஆமாம்’ என்கிறாள். இன்னும் என்ன செய்வாள் என்கிறாள். ‘முத்தம் தருவாள்’ என்கிறான். நான் முத்தம் தந்திருக்கிறேனா என்று கேட்கிறாள். ‘தினமும்’ என்கிறான். அவனுக்கு விளங்குகிறது. பாட்டி பொய் சொல்கிறாள். இவள் உண்மையான தாய் என்ற நினைப்பே மேலோங்குகிறது. தம்பி பாப்பாவைத் தொடச் சொல்கிறாள். மெல்ல தொட்டுவிட்டு ஓடிவந்து அவள் மேல் ஒட்டிக்கொள்கிறான். இவனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்கிறாள். ‘எனக்குத் தெரியலையே’ என்கிறான். உன் பெயர் ராமன். அவன் பெயர் லட்சுமணன் என்கிறாள்.

ஒரு மாற்றாந்தாய் தாய்மையின் பேருணர்ச்சியை அவனுக்கு வழங்குவதும், வெறுப்பை காட்டி காயப்படுத்திய பாட்டியின் நிந்தனையில் துயருற்ற களங்கமில்லா குழந்தை தாய்மையின் மகத்தான அரவணைப்பை உணர்வதுமாக இக்கதை ஒரு காவிய எல்லையைத் தொட்டிருக்கிறது. எல்லா காவியங்களும் சென்று தொடும் இடம் உன்னதத்தைத்தான். மாற்றாந்தாய் – பாட்டி – மூத்தாள் குழந்தை மூவரும் அவரவர் நிலையில் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்கின்றனர். 1954-ல் விகடனில் வந்த கதை. இந்த காவியமனம்தான் இவருள் இவ்விதமான பல கதைகளை எழுத வைத்த ஊற்றுக்கண் எனலாம். 70பதுகளில் நவீன வாழ்க்கையின் காற்று வீசுகிறது. அது பின்னால் பார்க்கலாம்.

சூடாமணியின் தொடக்ககால கதைகளைப் படிக்கிறபோது மகாபாரதம் போன்ற பெருங்காவியத்தின் கிளைக்கதைகளாக இணைத்தால்கூட பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. உணர்வுப்பூர்வமான கதைகள். துரோகங்களை மன்னிக்கிற தாயுள்ளம் அப்படித்தான் இருக்கிறது. அந்த 50களின் 60களின் தாய்மார்கள் காலத்தோடு மறைந்துவிட்டதாகவும் நினைக்கத் தோன்றுகிறது.

‘அவன் வடிவம்’ கதையில் வரும் பெண் தன் கணவன் தனக்கிழைத்த துரோகத்தை நினைத்து பொறுமுகிறாள். போலியோவால் கால்முடமான வளர்ந்த தன் பையனையும் வளர்ந்த பெண்பிள்ளையையும் வைத்துக்கொண்டு அவள் படும் அவதி ஒரு பக்கம் இருக்க, கணவன் மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து பெற்ற மகனை வீட்டுக்கே அழைத்து வருகிறான். மனைவிக்கும் மகளுக்கும் ஆத்திரம் பொங்குகிறது. அவனைப் பார்க்க மறுக்கிறாள். வார்த்தைகள் தடிக்காமல் கணவனும் மனைவியும் மோதிக்கொள்கின்றனர். மகள் உணவு படைக்கிறாள். ஊனமுற்ற தன் மகன் எந்த சந்தோசத்தையும் அடையாமல் முடங்கி இருக்க, இன்னொருத்திக்குப் பெற்றவனை துணிந்து அழைத்து வந்தது கடும் வேதனையை உண்டாக்குகிறது. அவனைப் பார்க்க மறுத்த அம்மாவின் தன் மானத்தை, அப்பாவிற்கு கொடுத்த அவமானத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறாள் மகள். வந்த அந்த ஆடவன் கிளம்பத்தயாராகிறான். அவளுள் என்னவோ ஒரு வேகம் திரள்கிறது. கணவன் கேட்ட வெற்றிலைபாக்கை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள். வந்த இளைஞன் தலைகுனிந்தபடி வெற்றிலை பாக்கை வாங்கிக்கொள்கிறான். அந்த நேரத்தில் அவனை முழுசாகப் பார்க்கிறாள். அம்மாவிடம் இருந்த உறுதி கடைசி நிமிடத்தில் உடைந்ததைக் கண்டு மகள் வெறுக்கிறாள். அம்மாவின் முகத்தைப் பார்க்கிறாள். ‘அவள் முகத்தில் வேதனையின் இடத்தில் இப்போதும் வேதனைதான் இருந்தது. ஆனால் கோபத்தில் இடத்தில் காணப்பட்ட பாவனை புரிந்துகொள்ள முடியாமல்’ தேடுகிறாள். தாயின் உதடுகள் துடிக்க தாபவேகத்துடன் பேசுகிறாள். “அதே சாயல்தாண்டி! அப்படியே இருக்கிறாள் அதே அச்சுதான், முகம், உடல்வாகு எல்லாம் அப்படியே சந்துருவின் கால் சரியாக இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்று பார்த்துவிட்டேன். இது போல் உயரமாய், கம்பீரமாய், கலகலப்பாய் இருப்பான். இன்று என் சந்துருவை முழுசாகப் பார்த்துவிட்டேன், விஜயா! கடவுளே… அந்த பையன் நன்றாகயிருக்கட்டும் இனிமேல் அவரிடம் கூட எனக்குக்கோபம் இல்லை” என்கிறாள்.

முடமில்லாது முழு அழகோடு தன் மகனைப் பார்க்க விரும்பிய தாயின் மனவெழுச்சியை இக்கதையில் வரைந்து காட்டிவிட்டார் சூடாமணி இப்படியான பிள்ளையைப் பெற்ற தாய்மார்களின் உள்ளக்கிடக்கையை ஏக்கத்தை ஒரு சந்திப்பின் வழி வெளிப்படுத்திவிட்டார். இன்னொன்று அந்த மகனை மகளாக மாற்றி சூடாமணி அவ்விடத்தில் வைத்தால் கதையின் ஊற்றுக்கண் நமக்குப் புலப்படும். சூடாமணியின் வயதொத்த பெண்களைப் பார்க்கும்போது அன்று அவரின் அப்பா அம்மாவிற்கு இப்படித்தானே தோன்றியிருக்கும்.

சிறுவயதில் அம்மைகண்டு உடல்குன்றிய சூடாமணியை ஒரு மகத்தான ஆளுமையாக உருவாக்கத் துணை நின்றதில் அவருடைய அப்பாவிற்கு மிகப்பெரிய பங்குண்டு. சூடாமணிக்கு வீட்டிலேயே வைத்து வளமான கல்வியை ஏற்படுத்தித் தந்தவர். முதல் கதை எழுதிய தினத்திலேயே பாராட்டி ஊக்கப்படுத்தியவர். மகள் எழுத்தின் வழி சிறப்பான இடத்தைப்பெற வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தவர். அவரது தாயும் அப்படிப்பட்டவரே. சூடாமணி பெண்ணிய கோட்பாடு சார்ந்து ஆணையோ பெண்ணையோ அணுகாமல் பிரச்சனையின் உண்மை சார்ந்து இறுதிவரை அணுகியதற்கு அவருடைய அப்பா ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

‘யோகம்’ தனக்கு குழந்தைகள் இல்லை என்று விட்டு வேலைக்கு வந்த ஒரு தாயின் கதை. இரு மகன்கள் குடும்பமாக இருந்தாலும் தாய்க்கு பாதுகாப்புத்தராமல் வெளியேற்றியவர்கள் என்பது முதலாளி அம்மாவிற்குத் தெரிய வருகிறது. சம்பளத்தை அந்த முதலாளி அம்மாவிடமே சேமித்து வைக்கிறாள். தாய் நல்ல இடத்தில் சேர்ந்து சம்பாதிப்பை அறிந்த மகன்கள் சுற்றிச்சுற்றி வருகின்றனர். தாயைக் கைவிட்ட அவர்களை முற்றாக வெறுக்கிறாள் முதலாளி அம்மா. அவன்களைத் துரத்தியும் அடிக்கிறாள். அவர்களுக்கு ஒருபோதும் கருணை காட்டாதே, ஆதரவு தராமல் விரட்டிய துரோகத்தை மறக்காதே என்று புத்திமதியும் கூறுகிறாள். அதற்கும் சரி என்கிறாள். இந்த கழிசடைகளை நம்பி ஏமாந்து விடவேண்டாம். உனக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் யாரிடம் நிற்பாய்? உனக்கு நீயேதான் உதவிக்கொள்ள முடியும். அவர்களுக்கு பணம் தான் குறி. நன்றி இருக்காது, கவனமாக இரு என்கிறாள். முதலாளியம்மா சொல்வது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான். மகன் திரும்ப வருகிறான். தாயிடம் தன் வறுமையை கூறி நைசாக பணத்தையும் பெற்றுக்கொண்டு செல்கிறான். இது அறிந்து முதலாளியம்மா கோவப்படுகிறாள். அதற்கு வீட்டு வேலைக்காரியும் தயங்கி பதில் சொல்கிறாள். “நன்றியை உணர்வது உணராததும் அவர்கள் பொறுப்பு அம்மா. என் குழந்தை கஷ்டப்படும்போது நான் எப்படி உதவாமல் இருக்க முடியும்! நான் என்ன செய்யட்டும் நம்மை இப்படி பெற்றது அந்த ஜெகன்மாதா அல்லவா” என்கிறாள். இப்படியும் ஒரு தாய். இயல்பான முடிவு. இயல்பான கனிவு.

பல கதைகளில் துரோகிகளை மன்னித்துவிடுகிறார். ரிஷியாக நின்று அவரால் சபிக்கத்தோன்றுவதில்லை. காந்தி, தாகூர், ஜே.கிருஷ்ணமூர்த்தி முதலியோரின் எழுத்தின் மீதும் செயல்களின் மீதும் சூடாமணி கொண்ட ஈடுபாடு அவரது படைப்புகளுக்கும் புதிய பார்வைகளைத் தந்திருக்கிறது. அதன் தாக்கம் அவரது படைப்புகளில் அமைதியான முறையில் வெளிப்பட்டிருக்கிறது. மனிதர்களை அன்பால் வெல்லமுடியும் என்பது சூடாமணியின் ஆழமான நம்பிக்கைகளுள் ஒன்று. அத்தோடு மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த கலைஞர் சூடாமணி என்பது அவர்களின் கதைகள் சொல்லும் சாட்சி. கண்ணனின் கொடையுள்ளம் போன்றது அவரது எழுத்தின் அடிப்படை. அவர் எழுத்தில் மட்டுமே அப்படி இருந்ததில்லை. தனது இறப்பிற்குப்பின் எட்டுகோடி சொத்துக்களை ஏழை எளிய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு இட்டும் சென்ற செயலைப் பார்க்கும்போது அவரது கதைகளில் வந்த தாய்க்கும் சூடாமணிக்கும் வேறுபாடு இல்லை.

முதல்கட்ட கதைகளில் ஆசிரியர் தலையீடு இல்லாத கதைகளும் எழுதியிருக்கிறார் மாந்தர்களின் வித்தியாசமான குணங்களை தெளிவாகச் சொல்கிறேன் என்று கதைக்குள் விளக்க உரைகளும் தந்திருக்கிறார். சீதாரவி, கே.பாரதி சேர்ந்து தொகுத்த ‘தனிமைத்தளிர்’ தொகுப்பில் ஆசிரியரின் தலையீடு உள்ள கதைகள் இருக்கின்றன. தேவையான நல்லகதைகள் என்பது அவர்களின் பார்வை. திலீப்குமார் தொகுத்த ‘நாகலிங்கமரம்’ தொகுப்பில், ஆசிரியரின் தலையீடு இல்லாதவை. சிறுகதையின் ஒருமை, வடிவம், நேர்த்தி குறித்த அக்கறையுள்ள ஒருவரின் அழகியல் அக்கதைகளுக்குக் கூடுதல் பலத்தைத் தருகின்றன. வடிவம் சரியாக அமைந்து பெரிய பாய்ச்சலை தராதகதைகளும், வடிவத்தில் சிறிய நெகிழ்ச்சி இருந்தும் பெரிய வீச்சைத்தரும் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இரு அம்சங்களையும் எற்றுத்தான் பார்க்கவேண்டியதிருக்கிறது.

வடிவ உணர்வோடு கூடிய கதை, முதலில் அது சாதாரண கதைதான் என்ற பலகீனத்தை முற்றாக ஒதுக்கி நாம் பார்க்கத்தவறிய பார்த்திராத மானுடகோணம் என்பதைக் காட்டுகிறது. ஒரு சிறுகதை வாழ்வின் பகுதிகளின் ஒன்று என காட்டி புதிய அறிதலை அளிக்கிறது. மனிதர்களை, இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்ள வைக்கிறது. வாசகன் நெருக்கம் கொள்வதிலும் விலகிப்போவதிலும் வடிவம் பெரிய பங்காற்றுகிறது என்றே நினைக்கிறேன்.

ரத்தமும் சதையுமான சிறுகதைகள் இருக்கின்றன. சில கதைகள் அனுமானத்தின் துணைகொண்டு வாழ்க்கையை வளைத்துப்பார்க்க முயன்றிருக்கின்றன. சில கதைகள் மன்னிப்பு வழங்குவதற்காக எழுதப்பட்ட பத்திரிக்கை கதைகள் இருக்கின்றன.

உளவியல் சார்ந்து எழுதுவதில் வல்லவர் என்று உசிப்புவிட்டே வந்ததால் உளவியலின் கொதிப்பை நேருக்குநேர் அணுகாமல் நல்லவராக்கும் நோக்கில் உளவியலைத் திருப்பி நகர்த்திக்கொண்டவராகவும் இருக்கிறார். ஒன்றே ஒன்றுதான் பத்திரிகைக்காக எழுதிய கதைகளிலும்கூட நம் மன நெருக்கம் கொள்ளும்படியான மாந்தர்களின் மன வெளிப்பாட்டை மீட்டிக்கொள்கிறார். இதைப்பிற பெண் எழுத்தாளர்கள் இவரளவு சரியாக கைக்கொள்ள முடிந்ததில்லை.

சூடாமணி தன்னை கோட்பாடுகளுக்குள் ஒடுக்கிக்கொண்டதில்லை. இயக்கம் சார்பாக நின்று எழுத வேண்டும் என்று விரும்பியதும் இல்லை. பெண் என்றும் ஆண் என்றும் பேதங்களுக்குள் நின்று எழுதத் தோன்றியதில்லை. பல செயல்பாடுகளில் பல இடங்களில் ஆணாதிக்கம் கோலோச்சுவதைக் கண்டு அவர் ஒதுக்கியதும் இல்லை. அதே சமயம் ஆண்களை கசப்புணர்வுடன் அணுகுவது என்பது படைப்பு செயல்பாட்டிற்கு எதிரானது என்பதை உணர்ந்துகொண்டவராக செயல்பட்டிருக்கிறார். ஏழைகளிடமும் பரந்த மனதுடன் அணுகினார். வீட்டுவேலை செய்யும் பெண்கள் மீதும், அவர்களது குழந்தைகள் மீதும், அநாதைகளிடமும் அதே பரிவுடன் அணுகினார். படுமோசமான மனிதர்களுக்குள்ளும் ஓர் இதயம் இருக்கிறது என்பதை ஏற்றார். சொந்த தாயிடமும் குரூரம் இருப்பதைக் கண்டு சொன்னார். துரோகம் இழைத்தவனை, அதிகாரம் செலுத்துபவனை சாத்து சாத்து என்று சாத்த வேண்டும் என்ற முன் திட்டத்தை தள்ளி வைத்து அதனைப் புரிந்து கொள்ள முயன்றார். ஒரு படைப்பாளியாக திறந்த மனதோடு இந்த மானுட சமூகத்தை அணுகுவதையே தனது படைப்பாக்கச் செயலாகக் கொண்டார்.

4

எழுபதுகளைத் தொட்டு எழுதப்பட்ட கதைகளில் தொழில் சார்ந்த தேர்வு இருக்கிறது. அதன் கஷ்ட நஷ்டங்களைச் சொல்வதில் முனைப்பு காட்டியிருக்கிறார். புனைவிற்குள் அதனை வாழ்க்கையாகவும் காட்டியிருக்கிறார் நுட்பமான உணர்வு கழன்று செல்வதை கவனத்தில் கொள்ளாமலும் எழுதியிருக்கிறார்.

மிக இளம் வயதிலேயே விதவையாகி தான் தனித்து வளர்த்த மகனுக்குத் திருமணம் செய்ய முடியாமல் போனதை நினைத்து உள்ளூர வருந்தும் தாயைப் பற்றி கதை ‘அன்னையின் முகத்துப் புன்னகை’, இரண்டு முறை அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டும் திருமணம் தடைபடுகிறது. முதல்முறை தாத்தாவின் மரணத்தைக் காட்டி நின்று போகிறது. இரண்டாவது முறை நிச்சயிக்கப்பட்ட பெண் கார்விபத்தில் மரணமடைந்ததால் நின்றுபோகிறது. இப்படியான மரணங்கள், அம்மாவிற்காக மகன் திருமணமே செய்யாமல் தியாகி ஆக்கத்தானே தவிர உண்மைக்கு எதிரானது. தாய் திருமணம் செய்துகொள் என்று சொல்லும் போதெல்லாம் அவன் அம்மாவிற்காக இப்பிறவி என்று பேசுகிறான். எவ்வித உணர்வும் அற்ற தியாகியாகக் காட்ட முனைவது மனித அம்சத்திற்கு எதிரானது. அப்படியே ஒரு மகன் நிஜத்தில் இருந்திருந்தால்கூட கதையில் உணர்வோட்டத் தோடும், நம்பகத்தன்மையோடும் உருவாக்கப்படவில்லை.

இரண்டாவது திருமணம் செய்து கொண்டவன் முதல் மனைவி இறந்த சம்பவத்தில் மன்னிப்பு கேட்க விரும்புவதாக எழுதப்பட்ட கதை, ‘மன்னிப்புக்காக’ அவன் இரண்டாம் மனைவியுடன் இனி சந்தோசமாக வாழப்போவது ஒரு முரட்டுத்தனமான உண்மை. சூடாமணி அவனை மன்னிப்பு கேட்க வைப்பதற்காகவே கதையை உருவாக்குகிறார். சூடாமணிதான் விரும்பிய திசையில் கதையை நகர்த்திக்கொண்டு அதற்கொரு உளவியலைக் கட்டமைக்கிறார். இப்படி நிறைய கதைகள் எழுதியிருக்கிறார்.

குமரிப்பெண் தனக்கு காதல் கடிதம் எழுதியவனை பாட்டியைக் கொண்டு பதிலடி கடிதம் கொடுத்து விரட்டும் கதை ‘கடிதம் வந்தது’ இதெல்லாம் பத்திரிகைத்தனமான கதைகள்.

தி.மு.க. ஆட்சியில் ஹிந்தி, சமஸ்கிருத பண்டிட்டுக்கள் வேலையிழந்து வறுமை சுழலில் சிக்கி நசிந்தவர்களைச் சொல்லும் ‘நீலத்தாமரை’, கண் தெரியாத மாற்றுத்திறனாளியின் தட்டச்சுப் பொறியை அநாயசமாக இயக்கும் திறனாய்வும் தன்மானத்தையும் சொல்லும் ‘என் பேர் மாதவன்’ (சுந்தரராமசாமி ‘விகாசம்’ என்று பின்பு ஒருகதை எழுதியிருக்கிறார்) ஒரு பூசகரின் வழி கடவுள் தனக்குள்ளும் இருக்கிறான், பிறந்தியாருக்குள்ளும் இருக்கிறான் என்பதைச் சொல்லும் ‘திருமஞ்சனம்’ மூன்று கதைகளிலும் தொழில் சார்ந்த தகவல்கள் அந்த மாந்தர்களுக்கு மிகவும் வலுவூட்டுகின்றன. சூடாமணிக்குத் தெரிந்த இப்பின்னணி கதைகளை நன்றாகக் காலூன்றவைக்கின்றன. இப்பின்னணியைத் தாண்டி கதைக்குள் மலரும் இயல்பான மலர்ச்சிகள் கூடிவரவில்லை. விசயத்தை சரியான விதத்தில் கொண்டு செலுத்திவிட்டால் மட்டும் போதாது. அக்கம்பக்கத்தில் தலைகாட்டும் இன்னபிற விசயங்கள் கதைக்கு நேரடியான எந்தப் பயனும் அளிக்காது போகலாம். அவை கூடி வந்த விதத்தில் உருவாகும் கதையின் வீச்சே தனி. அதுதான் படைப்பின் தனித்துவம். இந்த வகையில் பார்க்கும்போது சூடாமணி எழுதியிருக்கும் குழந்தைகள் சார்ந்த கதைகளின் உயிரோட்டம் சுகாதாரமானது. வசீகரம் மிக்கது. தாய்மையைப் பேசும் கதைகளும் சிறப்பானவை. இவ்விடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். மேன்மையான உணர்வுகளைச் சொல்லிவந்த கதையுலகிலிருந்து விலகி கசப்பான எதார்த்த உலகைக் காட்டுவதற்கு நகர்ந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. எழுபதுகளில் ஆளுமைமிக்க பெண்களையும் மன உணர்வின் தீவிரத்தையும் சேர்ந்தே எழுதியிருக்கிறார். இது மிக முக்கியமான ஒரு முன்னகர்வு. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவிதமான பெண்மனதை வலுவாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.

உணர்ச்சி ததும்பும் இளமை, காமமும் அன்பும் கலந்த தாய்மை, அறிவை நாடும் தோழமை என்ற மூன்று கட்டங்களை மூன்று திருமணத்தின் வழி கடக்கிறாள். அதையும் கடந்து தனித்து சுதந்திரமான தன் ஆளுமையை வெளிப்படுத்த நினைக்கும் கனிந்த ஞானத்திற்கான தேடல், தோழமை மிக்க நல்ல கணவனாலே வீழ்த்தப்படுவதைச் சொல்லும் ‘நான்காம் ஆசிரமம்’, பிறந்த வீட்டை உதறி கணவனின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு ஒரு கட்டுக்குள் வாழ்ந்த பெண் தன் தம்பியின் மரணத்தை தெரிய நேர்ந்தும் தெரியாததுபோல தன் வைராக்கியத்தை வெளிப்படுத்த கணவனை குறுகச் செய்யும். ‘பெருமையின் முடிவில்’ தான் புத்தி பேதலித்தவள் இல்லை என்று நிரூபிக்க முனைகிற தாய்க்கும், இவள் புத்திபேதலித்தவள்தான் என்பதை சீண்டியும் அலரியும் குழந்தைகளுக்கு பயமூட்டி தன்வசப்படுத்திக் கொள்ளும் குரூரமான மாமியாருக்கும் இடையே நிகழும் மோதலை வைத்து எழுதப்பட்ட ‘வீடு திரும்பினாள்’, ஒரு இசைமேதையை இசைமேதையாக அங்கீகரித்தபடி. அவளது கள்ளத்தனமான அந்தரங்கத்தை கண்டு அற்பனாக காட்டியபடி, அவனது அந்தரங்கத்தை பொதுவெளியில் சொல்வதற்கு வாய்ப்புத்தேடி வந்தபோது பொது வெளிக்கு அது வெறும் கிளுகிளுப்பாகிவிடும் என்பதை உணர்ந்து மறுக்கிற பக்குவம் மிக்க கிழவி ஒரு தருணத்தில் மிக இளம் வயதிலேயே இறந்துபோன அந்த கணவனின் புகைப்படத்தைக் காண்கிறபோது, அந்த இளம்வயது புகைப்படம் அவளுக்கு அந்த முதிய வயதில் தன் மகனாக ஒரு கணம் தோன்றுகிற புதுமையான மனக்காட்சியைக் காட்டும் ‘மேதையின் மனைவி’, மரணம் உறுதி என்பதைத் தெரிந்த தாய், யாரையும் வெறுக்காமல் பிள்ளைகள்மீது அன்பையும், வன்மத்தோடு குடும்பத்தில் சண்டை மூட்டிவிட்டுக் கொண்டிருந்த கணவனின் தங்கையின் தற்போதைய வறுமையைக் கண்டு கனிந்து உதவும் கதையான ‘ஒரு கூட்டுக் கடிதம்’, திருமணத்திற்கு முன்பே பெண்ணின் தனிப்பட்ட விருப்பங்களை கைவிடும்படி வரப்போகும் வசதியான கணவன் வற்புறுத்த அவளது தாய் தந்தையரும் நல்ல இடம் என்று சொல்லி நெருக்க சில விருப்பங்களைவிட்டு அவனது விருப்பங்களை ஏற்கிற பெண், ஓர் எல்லையில் தன் லட்சியக்கனவும் தகர்ந்து  போகும் நிலையை உணர்ந்து அவனை நிராகரிக்கிற முடிவை எடுக்கிறதைச் சொல்லும் ‘பிம்பம்’, பேரன் பேத்திகளைக் கண்டு 50 வயதிற்கு மேல் கணவனின் துணையோடு சமூகப்பொறுப்புள்ள பெண்ணாக மலர்ந்து ஒளிவீசுவதைச் சொல்லும் ‘செந்திரு ஆகிவிட்டாள்’ போன்ற கதைகளில் ஆளுமைமிக்க பெண்களை வலுவாக உருவாக்கி இருக்கிறார். ‘நான்காம் ஆயிரம்’ ‘மேதையின் மனைவி’ கதைகளில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சாரமான அறிந்ததிலிருந்து விடுதலையும் சுதந்திரமான மனிதப்பார்வையும் பின்னின்று பங்காற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

‘இணைப்பறவை’யில் வரும் மனைவியை இழந்த முதியவரின் வெளிப்படுத்த முடியாத துக்கம், ‘அவள்வீடு’ வரும் கணவனை இழந்த அண்ணிக்குத் தோழமையோடு உதவும் கொழுந்தன், குடும்பத்திற்காகவே உழைத்து வயது முதிர்ந்துபோன மகளுக்கு ஆண்தொடர்பு உண்டு என்பதைத் தெரிந்து வெதும்பும் தந்தை மெல்ல ஆண் மகனைப்போல பெண்மகளுக்கும் தேவையான ஒன்றுதானே என்று முதிர்ச்சியை வெளிப்படுத்தும் ‘சோபனாவின் வாழ்வு’ என்ன பல துணிச்சலான கதைகளை எழுபதுகளில் ஆர்ப்பாட்டமில்லாமல் எழுதியிருக்கிறார். உறவுச்சிக்கலை ஆண்களும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு நகரும் தன்மையில் காட்டியிருக்கிறார்.

முரண்பாடான இருதுருவங்களை உளவியல் ரீதியில் மோதவிட்டு சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட இக்கதைகளின் முடிவு பெரும்பாலும் அனுபவத்தில் கனிந்த கனிவாக முடிகின்றன. முடிவுசார்ந்து இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். வாசகர்கள் ஏதோ ஒருவிதத்தில் நல்ல பயனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தினால் நேசிப்பை நோக்கி நகர்த்தி விடுகிறார். இது பெரும்பத்திரிகை வாசக நோக்கம் இருந்தால்கூட இக்கதைகள் படைப்பு ரீதியாகப் பழுதில்லாமல் உருவாகியிருக்கின்றன. வலுவாக இருக்கின்றன.

திருமண பந்தத்தில் பெண்களின் தனித்துவங்கள் சிதைந்து போவதைப் பல கதைகளில் வெளிப்படுத்துகிறார். சமஸ்கிருத இலக்கியங்களில் புலமை பெற்றிருந்த பெண், சமஸ்கிருதம் தெரியாத கணவனின் குத்தல் பேச்சுக்களால் படிப்பதைக் கைவிட்டு குடும்பபாரத்தை ஏற்று எல்லோரையும் போல சாதாரண பெண்ணாக ஆகிப்போனதை (பிம்பம்), பாடம் ஒப்பிக்கவில்லை என்பதற்காக பள்ளிக்குழந்தைகளை நிர்வாணமாக்கித் துன்புறுத்தும் வக்கிர எண்ணம் கொண்ட ஆசிரியையை (துகள் செய்து கிடத்துவாள் தாய்) தன் பாலியல் சுகத்திற்காக சிறுவயது மகனை தன்னுடன் ஒட்டவிடாமல் வைத்திருக்கும் தாயை (தகப்பனையும்தான்) (தனிமைத்தனிர் தன் பக்கம் வறுமையையும் மாப்பிள்ளை பக்கம் ஊனத்தையும் காரணமாக வைத்து மகனின் திருமண விசயத்தில் பேரம் பேசி படு அற்பனாக நடந்து கொள்ளும் தகப்பனை (நாகலிங்க மரம்) வீட்டு வேலை செய்து பிழைக்கும் தாயின் சேமிப்பை சுரண்டி வாழும் மகன்களை (யோகம்) மருமகளை புத்திபேதலித்தவளாகக் காட்டுவதில் முழு ஆதிக்கத்தைக் காட்டும் மாமியாரை (வீடு திரும்பினாள் என்று எல்லோரையும் சேர்த்தே எழுதுகிறார்.

ஒரு படைப்பாளியாக பெண்சார்பாகவோ ஆண்சார்பாகவோ எழுதாமல் பிரச்சனையின் உண்மை முகத்தை எழுதுவதில் அவரிடம் இருக்கும் சத்திய ஆவேசத்தை மிக உயர்ந்த பண்பாகக் காண்கிறோம். இன்னொரு முக்கியமான அம்சம் மாந்தர்களின் நான் என்ற செருக்கை, தன் முனைப்பைக் குறுக்கி பலகீனங்களையும் போதாமைகளையும் பெற்றிருக்கும் மாந்தர்களாகக் காட்டுவது கதைகளுக்குக் கூடுதல் நம்பகத்தன்மையை அளிக்கின்றன. எழுத வந்த காலந்தொட்டு, எழுதுவதை நிறுத்திய முதிய காலம்வரை இந்த இலக்கியப் பார்வையிலிருந்து சற்றும் சூடாமணி விலகவே இல்லை. மாற்றாந்தாயின் மகனை தன் மகனின் உருவாகக்காணும் ஆரம்பகால கதைகளில் ஒன்றான ‘அவன் வடிவம்’ தொடங்கி கடைசி காலகட்டத்தில் எழுதிய ‘அடையாளம்’ கதை வரை இந்தப் பண்பைப் பார்க்கலாம்.

குடும்ப வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளை அணுகிப்பார்க்கிறார். தியாக உணர்வு மேலோங்கிய காலகட்டத்து ஆணும் பெண்ணும் வருகிறார்கள். தனித்து வளர்த்த தாயின் மரணத்திற்குக்கூட வராத ஈரமற்ற பிள்ளைகளும் வருகிறார்கள். மாமனார், மாமியார், தாய், தந்தை, அண்ணன், தம்பி, மகன், மருமகன், மருமகள், அண்ணி, கொழுந்தி, அத்தை, மாமன், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, தூரத்து உறவுகள் இவர்களிடையே தவழும் அன்பையும் பரிவையும் அதேபோல கசப்பையும் வெறுப்பையும் மிகையில்லாமல் உளவியல் கோணத்தில் காட்டுகிறார். பின்னிப்பிணைந்திருந்த இந்த உறவுமுறைகள் இன்றைய படைப்புகளில் காணமுடியாது. காலத்தின் கோலம் இவரது கதைகளில் அழகாகத் தீட்டப்பட்டிருக்கிறது.

சூடாமணியின் மிகப்பெரிய பலம், ஆணையும் பெண்ணையும் பேதம் பார்த்து உருவாக்காத தன்மை. ஆதிக்கமனம் கொண்ட ஆண்களின் அதிகாரத்தைத் துரோகங்களை வெளிப்படுத்துவதைப்போலவே, அவர்களிடம் கனியும் நல்லெண்ணங்களையும் பரந்த மனதுடன் உருவாக்கும் படைப்பு மனம் அவருடையது. அதே அளவு பெண்களையும் நிறுத்துகிறார். எதற்காகவும் மறைத்து எழுதுவதில்லை. இந்தக் கலைப்பார்வை யினாலே அம்பை போன்றோர் படைக்க முடியாத பல சிறந்த ஆக்கங்களைச் சூடாமணியால் தர முடிந்திருக்கிறது.

5

தொடர்ந்து பாலியல் சிக்கல் குறித்தும் வறுமை குறித்தும் எழுதிய கதைகளில் நுணுக்கமான நகர்வு நடந்தேறியிருக்கிறது. எழுபதுகளின் கதைகளில் தனிப்பட்ட மாந்தர்களின் பாலியல் இச்சையை அகத்தவிப்பின் வழி காண்கிறார். புறஉலகிலிருந்து பாலியல் சிக்கல் ஏற்படுவதை எண்பதுகளின் கதைகளில் அதிகம் காட்டுகிறார். எழுபதுகளில் வறுமையை வெளிப்படையாக வாழ்வின் கதியில் வைத்து எழுதியவர் எண்பதுகளில் உக்கிரமான நிகழ்வுகளின் பின்னணியில் மறைந்து வெளிப்படும்படி எழுதியிருக்கிறார். அந்த நிகழ்விற்கே வறுமைதான் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை யூகித்துக்கொள்ளும்படி நுட்பமாக எழுதியிருக்கிறார். அதேபோல கதைகளின் வடிவம் சார்ந்த பிரச்சனையிலும் இருவேறுவிதமான பிரச்சனைகள் தென்படுகின்றன. எழுபது கதைகளில் கதை உருவாக்க உள் இழைகளில் கவனமின்மையால் ஏற்படும் குறைகளையும், எண்பதுகளில் பிரச்சனையை நேர்முகமாக எதிர்கொள்வதற்கு முன்னமே கதையை நிறுத்திவிடுகிற தன்மையினாலும் காணமுடிகிறது.

மாற்றாந்தாயின் மகனை ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலை தகப்பன், அவனது இரண்டாம் இளம் மனைவி, பையனின் மாமன், அத்தை, பாட்டி இவர்களின் கோணங்களில் மிகச்சிறப்பாக உருவாக்கி, பிரச்சனையை நேர்முகமாகச் சந்திக்கவேண்டிய இடத்தில் திசைதிருப்பப்பட்ட கதை ‘பிரச்சனையும் குழந்தையும்’ சிறுவனை உறுதியாக வேண்டாம் என்கின்றனர் புதிய மாற்றாந்தாயும், அத்தையும் கணவனும், மாமாவும் தங்களின் மனைவியின் பக்கம் சாய்கின்றனர். பாட்டி நிராதரவான கணவனும், மாமாவும் தங்களின் மனைவியின் பக்கம் சாய்கின்றனர். பாட்டி நிராதரவான நிலையைக் கண்டு கலங்குகிறாள். மாந்தர்களின் சுயநலப்பித்தை கொதிப்புடன் காட்டியும், சிறுவனின் நிலைகுறித்து அணுகாமல் சம்பந்தமற்ற வேறு ஒரு அழகான நாய்க்குட்டி கதையை இணைக்கிறார். முரணை உக்கிரமாக வெளிப்படுத்தாமல் திசைமாறிப்போய் விடுகிறது. ஒருமை கூடாத கதை.

‘விலாசதாசர் ராமசாமி’ கதையின் உருவாக்கத்தில் இரண்டு பிரச்சனைகள். பத்தாண்டுகளாக வீட்டுத்தோட்டங்களைக் கவனித்து வந்த கிழவன் இறந்துபோகிறார். அவர் இறந்த ஒருவாரம் கழித்து அந்த வீட்டு முகவரிக்கு ஒரு கடிதம் வருகிறது. பெயர் ஜி.ராமசாமி. இந்த வீட்டில் அப்படியொரு ஆள் இல்லை என்று அனுப்பிவிடுகின்றனர். கதையில் என்ன விவரிக்கப்படுகிறதென்றால் 10 ஆண்டுகளாகக் கிழவரின் பெயரைக் கேட்காமலே இருந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அம்மா, மனைவி குழந்தைகள் யாருக்கும் தெரியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. அவ்வீட்டுத் தலைமகன் முத்துவின் பார்வையில் கதை சொல்லப்படும்போது, கதையின் முன் பாதியில் கிழவரைப்பற்றிய வெறுப்பான பார்வை வெளிப்படுகிறது. கடிதம் வந்தபின் தோட்டவேலை செய்த கிழவன் மீது கனிவான பார்வை வெளிப்படுகிறது. பொருத்தப்பாடாக இல்லை. ஆனால் அடுத்தடுத்து பார்க்கப்போகிற, சந்திக்கிற, நினைவிற்கு வருகிற மனிதர்களின் பெயர்கள் கிழவனின் பெயர்களில் ஒன்றாக இருக்குமோ என்று எழுகிற எண்ணங்கள் படைப்பு மனம் கொண்டதாக இருக்கின்றன. ஆனால் கடிதத்திற்கும் கிழவருக்கும் சம்பந்தமில்லாது இருக்கிறது. இந்த வகையில் ஒருமை கூடாமல் தோல்வியுற்ற படைப்புகள் நிறையவே இருக்கின்றன.

‘உதயப்படிவம்’ அற்புதமான ஓர் உளவியல் சிறுகதையாக வந்திருக்க வேண்டிய ஒன்று. சிறு பிசகால் விளக்கக் கதையாக மாறிவிட்டது. 15 வயது நிரம்பிய பிரகாஷ் என்ற விடலைப் பருவத்து இளைஞன், ராஜனின் மனைவியான சரளாவைச் சுற்றிச்சுற்றி வருகிறான். சில சந்தர்ப்பங்களில் சரளா பாடும்போது அவளது குரலை வியந்து புகழ்கிறான். அவளது குழந்தையிடம் நேசத்தோடு விளையாடுகிறான். இவனது வருகையைக் கவனித்து ‘உன் மீது அவன் காதல் கொண்டுள்ளான்’ என்கிறான். கணவனே மனைவியிடம் நேரடியாகக் கூறுவதும், பின் அவனது ‘வயது அப்படி அவன் சிதைந்து போகக்கூடும் என்று இரு சந்தர்ப்பங்களில் கூறுவது இயல்பிற்கு முரணாக இருக்கிறது. கணவன் இதை வெளிப்படையாக மனைவியிடம் கூறாமல் கண்காணித்து வந்திருந்தாலோ அல்லது மனைவியே ஒரு சந்தர்ப்பத்தில் காணும்படி எழுதியிருந்தாலோ மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியும் அவனது நடவடிக்கைகளுக்கு வெளிப்படையான விளக்கங்களைச் சொல்வதால் அமைதி கூடாமல் போய்விட்டது. இந்த பருவத்து பிள்ளைகளின் இனக்கவர்ச்சியைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள் என்று வாசகர்களுக்குக் கூறுவதுபோல இருக்கிறது.

பருவகாலத்தில் தோன்றும் இனக்கவர்ச்சியை வைத்து சூடாமணி ஐந்தாறு கதைகள் எழுதியிருக்கிறார். ‘இரண்டின் இடையில்’ (1966) என்ற கதையிலும் 14 வயது சிறுவனுக்கு பக்கத்துவீட்டு ஆசிரியை மேல் தோன்றும் காதலைச் சொல்கிறது. டியூசன் சென்றவனுக்குப் படிப்பிலும், சுறுசுறுப்பிலும் நேர்த்தியிலும் அக்கறை கொள்வது அவள் மீது தோன்றிய காதலால் தான் கதையின் இறுதிவரை திருமணம் குறித்துச் சொல்லாமல் ஆசிரியைத் திடீரெனத் தனக்குத் திருமணமாகி ஆறுமாதங்கள் ஆகிவிட்டது என்று சொல்வதோடு, அவர்தான் இவர் என்று அறிமுகம் செய்து வைக்கிறார். கதையை இப்படி மர்மப்படுத்தி வைத்திருப்பது பெரிய உறுத்தலாக இருக்கிறது. உண்மையின் அவனது பருவமாற்றம் தான் முக்கியம். சூடாமணி தேர்ந்து கொண்ட விசயம் சிறுவயது பாலியல் சார்ந்தது. கதைக்காகத் திருமணமாகாதவள் போல மறைக்கிறதும் முடிவில் திடுக்கெனத் திறப்பதும் மிகவும் பழைய பாணியாகத் தெரிகிறது. கதைக்கு சுவாரஸ்யம் கூட்டலாம். யோசித்துப் பார்த்தால் மர்மப்படுத்தத் தேவையில்லை தெரிந்த உறவாகத்தான் இருக்கமுடியும் என்று விளக்குவதே சிறுகதைக்கு எதிரானது. வாசகர்கள் அதன் மர்மத்தைத் தேடி விரித்துக் கொள்வதுதான் கலைக்கு பலமானது. ஏனோ பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலம்’ நினைவிற்கு வருகிறது.

சூடாமணிக்குப்பின்பு எழுதிவந்த ஆதவன் கதை மாந்தர்கள் வழி இந்தப்பாணியை விஸ்தாரப்படுத்தினார். உளவியல் சிக்கலைச் சொல்வதற்காகவே எழுபதுகளில் நிறையபேர் எழுதினர். இவ்விதமான உளவியல் சார்ந்த சிக்கலை வெகுலாவகமாகவும், நேர்த்தியாகவும் நுட்பமாகவும் எழுதியவர் இராஜேந்திரச் சோழன். ‘உதயப்படிமம்’ கதையைப் போன்றே அவர் எழுதிய ‘எதிர்பார்ப்புகள்’ கதை நினைவிற்கு வருகிறது. இக்கதையில் காமம் கண்டடைதலாகத் திறக்கப்படுகிறது. ஆ.மாதவனும் இதைச் சிறப்பாகக் கதையில் கொண்டுவந்தவர்.

வடிவம் சார்ந்த சிற்சில குறைகளை மீறி மாந்தர்களின் உளவெளிப்பாடுகளை நன்றாகக் கொண்டு வருவதினாலே படிக்க நெருக்கமாக இருக்கிறது. ‘உதயப்படிவம்’ சிறுகதை வெளியீட்டு முறையில் நேர்ந்த சரிவை கவனத்தில் கொண்டோ என்னவோ ‘விருந்தினர்களில் ஒருவன்’ கதையில் அதே காமம் சார்ந்த உணர்வை மிக வெற்றிகரமாகப் படைத்திருக்கிறார். அக்காலத்தில் ‘உதயப்படிவம்’ கதை குறித்த விமர்சனங்கள் வந்ததோ என்னவோ, தெரியவில்லை. அக்கதை சௌராஷ்டிரமணி தீபாவளி மலரில் வந்திருக்கிறது.

‘உதயப்படிவம்’ கதைக்குப்பின் எழுதப்பட்ட ‘விருந்தினர்களில் ஒருவன்’ வெகுநேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கிறது. இக்கதையில் நடுவயதைத் தாண்டியவரை மணந்துகொண்ட இளம்பெண். வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் ஒருவனான இளைஞனைக் கவனிக்கிறார். அவனது பார்வை முதலில் அசூசையைத் தந்தாலும் மெல்ல அவன் மீது உள்ளம் செல்வதை உணர்கிறாள். இளைஞன் மீது தோன்றும் காதலை, விருப்பத்தை அவளது அன்றைய நடவடிக்கை வழி கவனப்படுத்தியபடி அர்த்தப்பூர்வமான ஒரு மௌனத்தை உருவாக்கிக் காட்டுகிறார். இளமையின் ஏக்கத்தை கணவன் புரிந்துகொள்வது குறையாகத் தென்படவில்லை.

பெற்றோர்களின் அரவணைப்பிற்காக ஏங்கும் குழந்தையை நெருங்கவிடாமல் பாட்டியின் வளர்ப்பிலேயே விட்டுவிட்டு தாம்பத்தியத்தைக் கொண்டாடும் தம்பதியர், குழந்தையை ஒரு சுமையாகக் கருதுவதைச் சொல்லும் ‘தனிமைத்தளிர்’ கதையும் முக்கியமானதுதான். பெற்றோர்களைப் பற்றிய பாட்டியின் புரிதலும் சிறுமியின் ஏக்கங்களும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

சிறியவீடு. பிரியமான மகனுக்குத் திருமணமாகிறது. அவனது விருப்பத்திற்கு மீறி விதவைத்தாய் பணியாளர் விடுதிக்குச் செல்கிறாள். இந்த ‘அம்மா பிடிவாதக்காரி’ கதையில் 20 வயதிலிருந்து 45 வயது வரையில் அவள் தனது காமத்தை நசுக்கி ஒடுக்கிக்கொண்ட துன்பத்தைச் சொல்ல விரும்புகிறார். சரியான தேர்வும் பார்வையும்தான். கதையை மகன் பார்வையில் எழுதியதினால் இப்பிரச்சனையை விளக்க அம்மாவின் தோழியைக் கதைக்குள் இழுத்து வருகிறார். ஒருவேளை தாயின் பார்வையில் சொல்லப்பட்டிருந்தால் மிகச்சிறந்த கதையாக மாறியிருக்கும்.

சூடாமணியிடம் படைப்பு பார்வை இருக்கிறது. சொல்லப்படாத பகுதியைத் தேர்ந்துகொள்ள முடிகிறது. எழுத்தில் நெருக்கத்தைக் கொண்டு வந்துவிட முடிகிறது. தான் சொல்லியிருக்கும் முறை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதா? அதில் நடைமுறைக்கு ஒத்துவருகிறதா, விலகிப்போகிறதா? விசயத்தை விளக்குகிற இடமாக மாறிவிட்டதா, குறிப்பமைதியோடு உருவாகிவிட்டதா, திடீர் திருப்பம் முழுக்கதையின் உள்ளோட்டத்திற்கு வலு சேர்க்கிறதா? வாசகனுக்காக வைக்கப்பட்டிருக்கிறதா? அறிவுறுத்தலுக்காக ஒரு பக்கம் நீர்த்துப்போகும்படி வேண்டுமென்றே விடப்பட்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளை எழுதப்பட்ட கதைகள் மீது அவரே எழுப்பிப் பார்த்திருந்தால் இன்றும் பல நல்ல கதைகள் நமக்குக் கிடைத்திருக்கும். கலைமனம் கொண்ட படைப்பாளி எழுதும் போதே இவ்விதமான கேள்விகளுக்கு இடமில்லாமலே எழுதிவிடுவான். வாசகனைப் பற்றியே நினைக்காமல் உண்மையை நாடும் நோக்கில் புனைவிற்குள் ஆழும்போது இந்த பலகீனத்திற்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

முக்கியமான விமர்சகர்கள் இவர் எழுதிய காலங்களிலேயே படித்து விமர்சனம் செய்திருந்தால் அடுத்தடுத்து செம்மையான கதைகளை சூடாமணியால் தந்திருக்க முடியும். பெரும் பத்திரிக்கைகளில் எழுதும்போது அவ்வாசகர்கள் படைப்பு முறையில் உள்ள குறைகளைக் காணும் அளவு திறம் பெற்றவர்களாக இருப்பதில்லை. அவர்களுக்கு புதிய விசயம் என்று மட்டுமே தோன்றும். எனவே தொடர்ந்து எப்படி வளைத்து எழுதினாலும் அவ்வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஒருமை குறித்த கவலையில்லாமல் எழுதிவிடுகிறார்கள். 60, 70, 80, 90 என்பது சிற்றிதழ்களின் காலம். அங்கு எழுதப்படும் ஒவ்வொரு கதையும் விமர்சனத்திற்கு உள்ளானவை. அவ்விமர்சனம், அடுத்த கதையில் பலகீனமற்ற விதத்தில் எழுத வேண்டும் என்ற விழிப்பை படைப்பாளிக்குக் கொடுக்கிறது. பெரும்பத்திரிகைகளில் எழுதப்பட்ட கதைகளை முக்கியமான விமர்சகர்கள் படிக்காமல் விட்டு விடுவது ஒரு மரபாகவே இருந்து வந்திருக்கிறது. நண்பர்கள் சுட்டிக்காட்டி, இதழும் கிடைத்திருந்தால் கவனத்திற்கு வந்திருக்கலாம். இது சொற்பமே. எனவே கதைகளை எழுதியவர்களும் இதில் தப்பித்துக்கொள்வதை ஒரு வசதியாகக் கொண்டனர். சூடாமணியைப் பொருத்தளவில் நல்ல படைப்புமனம் கொண்டவராகவே இருக்கிறார். சிறந்த கதைகளை எழுதிவிடும் திறம் படைத்தவராகவும் இருக்கிறார். இந்தப் பெரும் பத்திரிகையில் எழுதும்போது நம்பகத்தன்மை சார்ந்து கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பல நல்ல கதைகள் வெகுஜன பத்திரிக்கை சார்ந்து கிடைத்திருக்கும். இதை சூடாமணி தவறவிட்டுவிட்டார் என்ற வருத்தம் சில கதைகளைப் படிக்கின்றபோது ஏற்படுகிறது. தொண்ணூறுகளுக்கு வரும்போது முன்சொன்ன பலகீனங்கள் ஒதுங்கி செம்மை கூடி வந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது. இந்த மாற்றம் மிகத் தாமதமாக நிகழ்ந்திருக்கிறது அதைப் பின்னால் பார்க்கலாம்.

6

சூடாமணி, ஓரளவு தந்தையின் வசதியான பின்புலத்தில் இருந்து எழுத வந்தவர் என்றாலும் வறுமை உண்டாக்கும் நெருக்கடிகளை அழுத்தமான வாழ்க்கைச் சித்திரங்களில் வைத்துக்காட்டியிருக்கிறார். வேறொரு விசயத்தைத் தீவிரமாகக் காட்டியபடி அதனிடையே வறுமையின் நரம்பொன்று சட்டென வெட்டித் துடிப்பதின் பக்கம் நமது கவனத்தைத் திருப்பிவிடுகிறார். சுழலும் காட்சிகளின் ஊடே இல்லாமையின் துக்கத்தை மௌனமாகக் காட்டுகிற கலை அமைதிமிக்க கதைகளை எழுதியிருக்கிறார். இக்கதைகள் வறுமையை நேரடியாக விவரித்து வறுமை இது என்று காட்டும் முற்போக்குக் கதைகளைவிட வறுமை என்று முழங்காது வாழும் கதியில் வறுமையைக் காட்டுவதால் மனதை அதிகம் பாதிக்கின்றன.

எழுபதுகளில் இருந்த வறுமை இன்று மங்கி இருக்கலாம். அதைப் புரிந்துகொள்கிற விதத்திலும் முன்னேறியிருக்கலாம். செல்வச்செழிப்பை நம் ஆடை அலங்காரங்களில் செலவழிப்பதில் மேட்டிமைத்தனத்தை எப்போதும் போல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘சுவரொட்டி’ கதையில் சாலையில் பயணம் செய்வோரை வைத்து எதற்கு விவரிக்கிறார். வாலிபர்கள் நாற்சந்தி சந்திப்பில் வைத்திருக்கும் கவர்ச்சியான விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். சோலி அவிழ்ந்துகிடக்க முதுகுகாட்டி படுத்திருக்கும் செக்ஸியான பெண்ணை ஆவலோடு பார்ப்பதை விவரிக்கிறார். சாலையில் செல்லும் பல்வேறு வயதினர் கவர்ச்சியான உடையணிந்த வசதியான பெண்கள் எல்லோரும் ஒரு கணம் பார்த்து நகர்கின்றனர். மேலாடை இல்லாமல் குளிரில் நடுங்கும் சிறுமியும் செக்ஸியான அந்தப்படத்தைப் பார்த்தபடி நிற்கிறாள். வாலிபர்கள் துரத்தியும் நகராமல் பார்க்கிறாள். உனக்கு என்னன்னு புரியாது ஓடு என்றதும், ‘எனக்குத் தெரியும். அவ சொக்காய்க்குள்ள இன்னொரு சொக்காயும் போட்டிருக்கா’ (பாடி) என்று குளிரில் நடுங்கியபடி சொல்லும் சேரிச்சிறுமியின் பேதமையான பதிலில் அக்கால சேரியின் ஒட்டுமொத்த வறுமையைப் பார்க்கும்படி கதையைத் திசைதிருப்பி விடுகிறார். 72-ல் உலக குழந்தைகள் ஆண்டு கொண்டாடப்பட்ட பின்னணியிலிருந்தும்கூட இக்கதையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

கடவுள் என்ற கருத்தாக்கத்தின் ஆன்மிக விழைவைச் சொன்ன ‘திருமஞ்சனம்’ கதையிலிருந்து நகர்ந்து கடவுள் இல்லை என்று உணர்ந்து வெற்றுச்சடங்கைச் செய்வதிலிருந்து விலகிவிடத் தவிக்கிற பிராமண பூசாரி குடும்பத்தின் வறுமை மனிதனை அற்பத்தனமும் சுயநலமும் மிக்கவனாக மாற்றிவிடும் அபத்தத்தைச் சொல்லும் ‘நாகலிங்கமரம்’ கதைகள் முக்கியமானவை. வறுமையை மட்டும் சொல்லாமல் வறுமை மனிதர்களின் உள்ளங்களில் என்னவிதமான எண்ணங்களை உண்டாக்குகிறது என்பதை சேர்த்து எழுதும் கலைத்திறம் பெற்றவராக இருக்கிறார். இதைத்தான் சக்தி வாய்ந்த எழுத்து என்கிறேன்.

வேலை இழந்து வீட்டுவாடகைத் தரமுடியாது பசியோடு வாழும் தம்பதிகள் பற்றி (நாம் என்ன செய்வது) கூலி வேலைக்குச் செல்லும் தாய்க்காகப் பள்ளிப் படிப்பை உதறிவிட்டு தங்கையைத் தூக்கிப் பராமரிக்கும் சிறுமி பற்றி (பொழுதுபோக) வறுமையிலும் நேர்மையை நம்பும் ஏழைச்சிறுவனும் தாயும் பற்றிய (நீல ரிப்பனும் வானவில்லும்) வறுமையைப் போக்க கல்வியைத் தொடராமல் குடும்பத்திற்காக உழைத்து மதிப்பற்றுப் போகும் மகனைப்பற்றி (தோழமை) காப்பகத்தில் குழந்தையைவிட்டு வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்ணைப்பற்றி என்று எத்தனையோ வாழ்க்கைச் சித்திரங்களை உயிரோட்டமாகத் தீட்டியிருக்கிறார்.

வறுமையையோ, ஏழ்மையையோ, தியாகத்தையோ, வேலையின்மையையோ சொல்வதினால் மட்டுமே இக்கதைகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. இந்த நெருக்குதல்களிலிருந்தும் மனிதர்களிடம் வெளிப்படும் மனவெழுச்சியின் அழகிய தருணங்களைத் திறந்து வைப்பதிலும், கைவிட்டுப் போன அழகிய தருணங்களால் வந்தடையும் வெறுமையையும் அடுத்தவர் வலி உணராது தன் வலியைப்பேசும் அபத்தத்தையும் திறந்து வைப்பதில் அக்கதைகள் முக்கியமான கதைகள் ஆகின்றன. இந்த மானுட உணர்வைத் தொடராத கதைகள் வெறும் கதைகளாகிப் போகின்றன.

‘துகள் செய்து கிடத்துவாள்’ ‘இரண்டாவது அப்பா’ ‘மழை’ போன்ற கதைகள் தீமைக்கு எதிரான, புரட்சி எண்ணம் கொண்ட கதைகள்தான். ஆனால் புனைவம்சம் கூடிவராது நாடகத்தன்மை கொண்ட உடனடி செயல்பாட்டை நோக்கியே உரையாடல் அடுக்கப்படுவதால் கலைத்தன்மை கூடிவராது வெறும் கதைகளாக எஞ்சுகின்றன. இன்னும் சரியாகச் சொல்வதாக இருந்தால் மேன்மையைச் சொல்லமுனையும் போது கலாப்பூர்வமான சித்தரிப்பும், கசப்பை கையில் எடுக்கும்போது தீர்வைநோக்கிய கவனத்தோடு விவாதத்தன்மை மேலோங்கியும் விடுகிறது. நாவலில் விவாதத்தன்மைக்கு ஒரு ஈர்ப்பும் சிறுகதையில் அது கூர்மையை மழுங்கடிப்பதாகவும் ஆகிவிடுகிறது. தேர்வு சார்ந்து நுட்பமான பார்வைகொண்ட கதைகளில் இவ்வம்சம் தலைதூக்கும்போது வாசகனுக்குள் ஒரு அலையை உண்டாக்குவதில்லை.

ஒரு வயது தம்பியைப் பராமரிக்க பள்ளிக்கல்வியைவிடநேரும் ஏழைச் சிறுமியைப் பற்றிய கதை ‘பொழுதுபோக’ அச்சிறுமியின் கோபம், அரவணைப்பு, அடி, வெறுப்பு, எதிர்பேச்சு, பொறுப்பு, ஆசை காவல் என்று மிகச்சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்திய கதை, மிகச்சிறந்த கதையாக ஆகியிருக்க வேண்டியது. சிறுமியை ஓர் எல்லையில் காபந்து பண்ணிவிட்டார் ஆசிரியர். பகலெல்லாம் கைக்குழந்தையோடு போராடிய சிறுமி மாலையில் பொழுதுபோக்கு பூங்காவிற்குத் தூக்கி வருகிறாள். வேலையற்ற ஓர் இளைஞன் அச்சிறுமியிடம் ஐஸ்வேண்டுமா என்று பேச ஆரம்பித்து தன் பக்கம் இழுத்து விடுகிறான். நாளை சந்திப்பதாக கதை முடிகிறது. நாளைய சந்திப்பில் என்ன ஆகுமோ என்பதை யூகத்திற்கு விட்டுவிடுகிறார். சிறுவர் சிறுமியரின் பேதமைமிக்க எண்ணங்களைச் சிறப்பாகப் பல கதைகளில் வெளிப்படுத்தியதுபோலவே இக்கதையிலும் கொண்டு வந்திருக்கிறார். சிறுமி அடுத்து எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்தான் பேசவேண்டிய பகுதி. ஏமாற்றப்படலாம், சீரழிக்கப்படலாம். வாழ்வின் உக்கிரத்தை நேர்முகமாக ஏற்பதுதான் எழுத்தாளனின் வேலை. அதைப்பேசாமல் நிறுத்திக்கொண்டார். கதையில் கூடிவந்த குழந்தமையின் அற்புதத்தை சிதைக்க வேண்டாம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ தனிப்பட்ட முறையில் சூடாமணிக்கு ஒரு சல்யூட் வைக்கலாம். நாகரீகமான எல்லையில் நிறுத்துகிறார் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் ஒரு மோசமான உண்மையை நிஜத்தில் தடுக்க முடியாது.

1975, 76 இரண்டாண்டுகள் மட்டுமே சிறுகதைகள் எழுதிய சிதம்பரம் என்பவரின் ‘அலை’, கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை மனம் பதைக்கச் சொல்கின்றன.

இதே போன்றுதான் ‘கதவை யாரோ தட்டும்போது’ ‘ஒரு நாற்காலியும் ஒரு மரணமும்’ ‘கிரிஜாவிற்கு என்ன ஆகும்’ கதைகளில் உள்ளியக்கம் சரியாக உருவாகி முடிவு சார்ந்து தீவிரத்திற்குள் நுழையாமல் அந்தரத்தில் நிற்கின்றன. முடிவுசார்ந்து செயற்கையான முடிச்சைப் போட்டு முடித்து வைக்கப்படுகின்றன.

‘தண்டனை’ கதையில் கணவனின் கள்ளக்காதலை அறிந்து வெதும்பும் மனைவியை சிறப்பாக உருவாக்கிவிட்டு, பத்து நாட்கள் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வந்ததை எந்த உணர்வும் இல்லாமல் விரிவாக கணவன் தட்டையாக ஒப்பிக்கிறான். ‘நானும் இப்படி உல்லாசம் போய்விட்டு வரலாமே’ என்று மனைவி பேசி அதிர்ச்சி தரும் பத்திரிகை கதையாகிப்போனது.

இவரின் பல கதைகளில் அகம் சிரத்தையுடன் எழுதப் பட்டும் முடிவுசார்ந்து திரும்பும்போது உருவாகி வந்த நம்பகமான வாழ்க்கைச் சித்திரங்கள் வீணே போகின்றன. மற்றொருவகையில் பிரச்சனையின் வேரை ஆழ்ந்து பார்க்காமல் விட்டுவிடுவதால் அதன் முழு ஆற்றலை புதிய திறப்பைக் காட்டாமல் போய்விடுகின்றன. மாறாக, அறத்திற்கு எதிரான – பரஸ்பர மதிப்பு இல்லாத தீய விசயங்கள் தோற்க வேண்டும். நல்லவற்றிற்கு ஏற்றம் தர வேண்டும் அதன் வழி வாசகர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் முடிவுகளைத் திருப்புவதால் பிரச்சனையின் உண்மை மழுங்கடிக்கப்படுகிறது. தீர்வுகளைத் தட்டில்வைத்துத் தர வேண்டியதில்லை. பிரச்சனையின் தீவிரத்தை நோக்கிப் பாய்வதுதான் எழுத்தாளனின் முதன்மையான கடமை. இத்தீவிரத்தன்மையோடு நேர்நிலை உச்சத்தைத் தன் போக்கில் இயல்பாக அடையவும் கூடும். அதுவும் மிகச்சிறந்த வெற்றிதான்.

80 கால கதைகளில் நவீன வாழ்வின் தாக்கம் அதிகம் இருப்பதைக் காணமுடிகிறது. பணி சார்ந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் செல்வதால் பழைய குடும்ப உறவுகளில் இருந்த நெருக்கம் கலைந்துபோகிறது. அந்நியர்களாகிப் போகின்றனர். வெளிநாடுகளில் வெள்ளைக்கார ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து குடியேறி, பெற்றோர்களைக் கைவிடுகின்றனர். பொறியியல்படிப்பு மருத்துவப்படிப்பு படிக்கும் தலைமுறை பெருகுகிறது. மனைவியிருக்க இன்னொரு பெண்ணை ஆண்கள் சேர்த்துக் கொள்கின்றனர். பெண்களின் தத்தளிப்பு பேசப்படுகிறது. விதவையின் மறுமணம் சாகசமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பெண்கள் கல்வியில் எழுச்சி கொள்கின்றனர். முதியவர்களின் உணர்வுகள், மரபான சம்பிரதாயங்கள் மெல்லக் கழன்று போகின்றன. அதை இளம் தலைமுறை பொருட்படுத்தாமல் கடக்கிறது. மனைவிமார்களின், தாய்மார்களின், முக்கியமாகப் பெண்களின் உணர்வுகளை மதிக்கின்ற மெல்லிய கீற்று தோன்றுகிறது. ஒட்டுமொத்தத்தில் சமூக மாற்றத்தின் புதியகாற்று வீசுவதை இக்காலகதைகள் காட்டுகின்றன.

தொடர்ந்து 6 குழந்தைகளைப் பெற்று நைந்துபோகிறாள் பெண். இன்னொரு கர்ப்பத்தை உடம்பு தாங்காது என்று சோர்ந்து போகிறாள். அதையும் மீறி கர்ப்பம் தரிக்கிறாள். பலமிழந்துபோன அப்பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்கக்கூடாது என்று டாக்டரிடம் பேசி அழைத்துவரும் பொறுப்பற்ற கணவன், சந்தையிலிருந்து வாங்கிய வீட்டுப் பொருட்களை அன்று அபூர்வமாகச் சுமந்து வருகிறான். அந்த பாரம் பெரிய அலுப்பையும் வலியையும் தருகிறது. தன் வலி உணரத்தெரிந்த அவனுக்கு அடுத்தவரின் வலி உணர முடியாத தன்மையை கரிய புன்னகையுடன் சொல்கிறது ‘டாக்டரம்மாவின் அறை’.

ஒரு தாய்க்குப் பிறந்த இரு சகோதரிகளின் எண்ணங்கள் திருமணத்திற்குப் பின் வெவ்வேறு பார்வை கொண்டவராக மாற்றிவிட்டதை நீண்டகாலத்திற்குப் பின்னான சந்திப்பில் வைத்து வெளிப்படுத்தும் ‘அந்நியர்கள்’ வயதான காலத்தில் முதுமையின் அடையாளங்களை எப்போதும் உதறி இனிமையாக்கிக் கொள்ள ஈடுபடுபவள், தன் இளமைக்காலத்தில் மூழ்கி அந்த இளமையின் ஊஞ்சலில் அமர்ந்து அசைபோடுவதில் ஆசைப்படுகிறாள். இன்னும் அந்த இளமைக்குள் போய்விட முடியும் என்று முதுமையில் முயல்கிறதை முன்னும் பின்னுமாகக்காட்டும் ‘நீலாயதாட்சி அம்மாள் வயது அறுபது’, மரணம் பற்றிய பயமில்லாது மகிழ்ச்சியோடு எதையும் செய்யும் தாத்தா, பேரனின் விபத்தில் விழிப்பு கொள்வதைத் தொடும் ‘உயில்’ கணவனின் மரணத்தில் அவன் அழகான காதலியைத் தேடிக்கொண்டதை, காதலற்று வெறும் மனைவியாக வாழ நேர்ந்த துக்கத்தைச் சொல்லும் ‘இருட்டில் இருந்தவள்’ கல்வியின் பெரிய எல்லையைத்தொடும் திருமணமானதை மிகப்பெரிய தகுதியாகக் கொண்டு தன் குரூர எண்ணங்களை வெளிப்படுத்தி மகிழும் அற்பத்தனத்தைச் சொல்லும் ‘வாழ்த்துக்கள்’ அறுபது வயது தாயை யாருடனும் நெருங்கவிடாது உதாசீனப்படுத்துவதும், வீட்டுக்கு வருபவர்களுடன் பிரியமாகப் பேசவந்தால் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் தொந்தரவு பேர்வழி என்று விரட்டும் மகளின் பார்வைக்கு அப்பால் முதிய வயதில் அறிவுச் செல்வத்தின் மீது கொள்ளும் அழகான ஆசையைச் சொல்லும் ‘ஒரு நாளின் 24 மணிநேரம்’ ‘கதைகளில் சொல்லப்பட்டதற்கு அப்பால் சொல்லாமல் விடப்பட்ட பகுதிகள் மிக வலுவாக இருக்கின்றன. பேசப்படாமல் கடந்து வரும் மௌனம் வாசகர்களிடம் நிறைய பேசுகின்றன. குறையில்லாத கதைகள் இவை.

ஆதிக்க சமூகத்தில் பிறந்த சிறுவர்கள் ஒடுக்கப்பட்ட சிறுவன் மீது கொள்ளும் குரூரமான தாக்குதல்களை மனம்பதைக்க கொடுத்திருக்கும் ‘வெளியில் நல்ல மழை’, சிறுவயதின் பிடிவாதத்தால் இரண்டாம் திருமணம் செய்யாமலே போன தாயின் துயரத்தை வேதனையோடும் உயர்ந்த மனநிலையில் பரிசீலிக்கும் மகனின் பார்வையில் சொல்லப்பட்ட இறுக மூடிய கதவுகள்’ முன் சொன்ன ‘வாழ்த்துக்கள்’ மூன்றும் 80களில் எழுதப்பட்ட கதைகளில் சாதனைகள். இதில் இரண்டு கதைகள் வெகுஜன இதழ்களில் வெளிவந்தவை. ‘இறுக மூடிய கதவுகள்’ கதையை அப்படியே காப்பியடித்து வசந்தால் எடுக்கப்பட்ட படம் தான் ‘கேளடி கண்மணி? அதற்குரிய அங்கீகாரத்தைக்கூட தராமல் மறைத்தவர்களை என்ன செய்ய!

தொண்ணூறுகளில் எழுதப்பட்ட கதைகளில் வடிவரீதியான குறைகள் அதிகம் இல்லை. தரம்சார்ந்து முன்னே பின்னே இருக்கலாம். எடுத்துக்கொண்ட விசயம் சார்ந்து நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார்.

எல்லா வயதினரையும் இக்காலத்திலும் எழுதி வந்திருந்தாலும் ஒப்பீட்டளவில் அறுபது வயதைத் தொடும் மாந்தர்களைப் பற்றி சற்றே அதிகம் எழுதியிருக்கிறார். வயதானவர்களை எழுதுகிறேன் என்று அழுத்தம் இல்லாமல் உறவுகளின் மையமானப் பின்னலில் வைத்து அவர்களது ஆசைகள், விரக்திகள், அதிகார தோரணைகள், பொழுது போக்குகள், தனிமைகள், நோய்நொடி தரும் அலுப்புகள், கோபதாபங்கள், முதிர்ந்து கனிந்த அனுபவத்தின் பரிவுகள் பிடிவாதங்கள் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற முனைப்பு இல்லாமல் குடும்ப இயக்கத்தின் ஊடே கவனப்படுத்தியிருக்கிறார்.

தொண்ணூறுகளின் கதைகளில் மைய இழையாக ஓடுவதை இரண்டு சொற்களில் சொல்ல வேண்டும் என்றால் வெவ்வேறான மனநிலைகளை வெவ்வேறான அணுகுமுறை கொண்டவர்களைச் சொல்லும் கதைகள் எனலாம். இதில் சாதனை என்று சொல்லத்தக்க இரு கதைகள் ‘அடிக்கடி வருகிறான்’ ‘அமெரிக்க விருந்தாளி’ வறியவர்களின் துயரங்களை அவர்களின் பாதையில் பின் தொடர்ந்து காட்டுவதே சூடாமணியின் ஆக்கமுறை. இதில் ‘புவனாவும் வியாழக்கிரகமும்’ கதை மிக முக்கியமான ஒன்று.

நமக்கு முழுமையாகத் தெரியாதவர்கள் நம்மிடம் சண்டை இட்டவர்கள், மணவிலக்குப் பெற்று பிரிந்து போனவர்கள், சுயநலம் கொண்டவர்கள் மகன்களின் முடிவுகளை ஏற்காத பெற்றோர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் கோபத்தால் வசைகளை விட்டவர்கள், என்று முரண்படுபவர்கள் அப்படியே நிராகரிக்கப்பட்டே ஆகவேண்டியவர்கள் இல்லை. இன்னொரு கோணத்தில் அவர்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள். நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் பக்கத்திலும் இருக்கும் நியாய உணர்வுகளைச் சற்றே மதித்து ஏற்றுக்கொள்ளும்போது வாழ்க்கை அர்த்தப்பூர்வமாக மாறுகிறது. இன்றைய வாழ்வில் ஏற்படும் உறவுச்சிக்கலை மாற்றத்தின் நிலையிலேயே வைத்து பரிவோடு அணுகுகிற குணம் கடைசிகால கதைகளில் அதிகம் காணமுடிகிறது. மனம் கனிந்து அணுகுகிறபோது முரண்கள் முரண்களாகத் தெரியாது. இந்தப்பார்வை மானிட உறவுகளை அழகானதாக மாற்றும் என்பதற்கு சாட்சியங்களாக ‘துளிர்’ ‘ஒரு மாலைப்பொழுதில் இரு தோழிகள்’ ‘நாமாவளி’ ‘மூன்று வருட இடைவெளி’ ‘வீம்பு’ கதைகளைச் சொல்ல முடியும். ‘மூன்று வருட இடைவெளி’ ‘வீம்பு’ ஒரே தன்மை கொண்ட கதைகள். ‘மூன்று வருட இடைவெளி’ கதையில் மிகை உணர்ச்சி சற்றே தலைதூக்கி விட்ட கதை. ஆனால் ‘வீம்பு’ மிகை உணர்ச்சி இல்லாமல் சொல்லப்பட்ட நல்ல கதை. அப்பா மகன் இருவரின் உள்ளார்ந்துகிடக்கும் அன்பைப் பேசுகிறது. சொல்லும் முறையில்தான் கதைகள் வெற்றியடைகின்றன என்பதற்கு ‘புவனாவும் வியாழக்கிரகமும்’ ‘அடிக்கடி வருகிறான்’ கதைகளைச் சொல்லலாம்.

மானுட வாழ்வில் உடனடியாக ஒரு புரிதலையோ, தீர்வையோ அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் அடைந்துவிட முடியாத சிக்கல்கள் இருக்கவே செல்கின்றன என்பதைச் சொல்லும் கதைகள்தான் இன்னும் வலுவான பாதிப்பை உண்டாக்குபவையாக இருக்கின்றன. ‘புவனாவும் வியாழக்கிரகமும்’ பெண்ணைப் பெற்ற கீழ் நடுத்தர வர்க்கத்துத் தகப்பனின் கூடிவராத திருமணத்திற்காக அலையும் அலைச்சலையும் முதிர்கன்னியாகிக் கொண்டிருக்கும் மகளின் நிலையை ஒரு ஒரு சிறு குறிப்பின் வழியும் உணர்த்தி துணுக்குற வைக்கிறது. சொல்லப்பட்ட பகுதி வலுவாகவும் சொல்லாமல் விடப்பட்ட பகுதி யேரலையாகவும் வந்து தாக்குகிறது. ‘மடியில் பூனை8 கதையும் இவ்வகையில் எழுதப்பட்ட கதைதான்.

மகனைப் பெண் கேட்டு வந்தவன் அப்பெண்ணின் இளம் விதவைத்தாயின் மீது கொள்ளும் காதலையும், அதனை உணர்ந்ததும் அவனை உடனடியாகத் துரத்தியடிக்கும் தாயின் உள்ளத்திற்குள் கிளம்பும் அந்தரங்கமான ஓர் உணர்வை வெகுநுட்பமாகச் சொல்லப்பட்ட கதை ‘அடிக்கடி வருகிறான்’ இக்கதையை 1997-ல் தன் 66ஆம் வயதில் எழுதியிருக்கிறார். என்பதைப் பார்க்கும்போது படைப்பிற்காக வைத்திருந்த திறந்த உள்ளத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

மனிதர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சுய பரிசீலனை செய்வதால் புதிய தெளிவுகள், வெளிச்சங்கள் கிட்டும். (ஒரு மனநிலை, பூமாலை) இதை கண்ட வலசாரை சட்டென பாய்ந்து கொத்தித் தூக்குவதுபோல வித்தியாசமான மாந்தர்களை தன் கதைகளில் பிடித்துக்காட்டியிருக்கிறார். தான் பெற்ற பிள்ளை தனக்கு மட்டும் சொந்தம். தன் விருப்பம் மீறி அக்குழந்தை அடுத்தவர்களிடம் நெருங்கிவிடக்கூடாது என்று கடுமையாக நடந்து கொள்ளும் தாய் (உரிமைப்பொருள்) உறவுக்காரர்களைப் பார்த்தால் நச்சரித்து காசுகேட்கும் வெறுக்கத்தக்க பழக்கத்தை உடையவரிடமும் முகிழ்க்கும் பிரியம் (ஒரு கீற்றப்பெண்) வயதில் மூத்த பெண்கள் மீது விடலைப் பருவத்து பையன்கள் கொள்ளும் காதல் (இரண்டின் இடையில் உதயப்படிவம்) அடுத்தவரின் வளர்ச்சியை அங்கீகரிக்காமல் சதா குத்திப்பேசும் குணம் படைத்த பெண் (வாழ்த்துக்கள்) முதுமையிலிருந்து விடுபட தன் பால்ய கால இளமையில் மூழ்கி பகற்கனவில் தன்னை மீட்டுக்கொண்டிருக்கும் வயதான பெண் (ஞாயிறு மாலை) மறதி உண்டாக்கும் தவறுகளால் பதட்டத்திற்கு உள்ளாகும் 60 வயது பெண் 1 அடையாளம்) என்று இக்கதைகளின் வெற்றி தோல்விகளைவிட மனிதர்களின் வித்தியாசமான நடவடிக்கைகளை கதைகளாக்கியிருப்பதில் கவனத்தைப் பெறுகின்றன. கி.ரா.போல பாவனைரீதியாக பாத்திரங்களை நளினப்படுத்தாமல் குணங்கள் மீது தன் பார்வையை முழுமையாகச் செலுத்தி எழுதியிருக்கிறார்.

அறுபது எழுபது எண்பதுகளில் எழுதிய பெருநகரப் பெண்கள் மாதர்சங்கம் என்ற அமைப்பை வைத்து நிறைய கதைகளில் பெண்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள். புரட்சிகரமான முடிவுகளைத் தரும் அமைப்பாகக் காட்டினார்கள். சூடாமணி கதைகளில் மாதர்சங்கம் வருகிறது. அதை வைத்து தீர்வுக்கதைகளை எழுதவில்லை. மாறாக புதிய தரவுகளை எடுத்துக்கொண்டு நெருக்கடியான வாழ்க்கைச் சித்திரங்களைத் தீட்டி விடைகாண முற்பட்டிருக்கிறார்.

சூடாமணியின் கதைகள் அதிகமும் பிராமண குடும்பங்கள் சார்ந்தவை. இதில் வீட்டுவேலைக்கு வரும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் பற்றியும் அவர்களது குழந்தைகள் பற்றிய கதைகள் கணிசமாக எழுதியிருக்கிறார். தன்னைச் சுற்றி இருந்த ஏழை உழைப்பாளிகளின் வாழ்வை கவனித்து எழுதி வந்தவர். நடைமுறையில் இன்னும் வழக்கத்தில் வராத சற்றே யதார்த்தத்தை மீறிய விசயங்களை நடைமுறையில் இருப்பது போன்று வலுவான யதார்த்த தளத்தில் நம்பகத்தன்மையோடு சில கதைகளை உருவாக்கியிருக்கிறார். கதையில் உருவாகி வந்த யதார்த்தம் வாசகனுக்கு நெருக்கத்தைத் தருகின்றன. (செந்திரு ஆகிவிட்டாள், சோபனாவின் வாழ்வு. ஒரு மாலைப்பொழுதில் இரு தோழிகள்…) உன்னதமான கனவும், சாத்தியத்திற்கான மனமும் கூடி அமைதியான தொனியில் எழுதப்பட்டதாலே இது சாத்தியமாகி யிருக்கிறது. சிலர் நடைமுறை யதார்த்தத்தைக்கூட கதைகளில் கொண்டுவரும்போது சொதப்பலாக்கி மனம் ஒன்றாமல் செய்துவிடுகின்றனர் என்பதிலிருந்து சூடாமணியின் எழுத்தை வித்தியாசப்படுத்திப் பார்க்கலாம்.

இல்லாமை அவர்களை எப்படியெல்லாம் துரத்துகிறது; அதை எப்படியெல்லாம் எதிர்கொண்டு முன் நகர்கிறார்கள் என்பதை மனிதநேயத்தோடு எழுதியிருக்கிறார். அவர்களைப் பித்தலாட்டம் மிக்கவர்களாகவோ, ஏமாற்றுப்பேர்வழியாகவோ எங்கும் காட்டவில்லை.

பிறவியிலேயே குறையுடையவர்கள் பற்றி பச்சாதாபம் காட்டாமல் அவர்களது குணநலன்களை தொடக்கத்திலிருந்தே எழுதி வந்திருக்கிறார்.

குடும்பம் என்ற மையத்திலிருந்து எழும் உறவு முரண்களைக் கொண்ட கதைகளில் நிதானமும் மாந்தர்களின் மன உணர்வுகளும் வெகுசிறப்பாகக் கூடி வந்திருக்கின்றன. முடிவில் அன்பை வற்புறுத்தும்படியாக எழுதப்பட்ட கதைகளிலும் மாந்தர்களை மனதிற்கு நெருக்கமான விதத்தில் நம்பகத்தன்மையோடு படைத்திருக்கிறார். குடும்பம் என்னும்போதே அதனோடு தொடர்புகொள்ளும் அத்தனை உறவுகளையும் பிற வெளிமனிதர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.

பண்பற்றவர்களை கதைகளில் விமர்சனத்திற்கு உட்படுத்தினார். நிராகரிக்கவும் செய்தார். சில சமயம் மனம் திருந்தி வந்தவர்களை தவறுகளை உணர வைத்தார். அரசியல் பொருளாதாரம், இடப்பெயர்வு என்ற பல்வேறு காரணிகள் வாழ்க்கையைப் பாதிப்பதைப் பார்க்கிறோம். அதன் சாட்சியங்களாக இருக்கின்றன அவரது கதைகள். நல்லவர்களும் குரோதமானவர்களுமானது குடும்பம் என்பதைக் காண்கிறார். அதன் நல்ல அம்சங்களை எழுதியது போலவே, அதில் அதிகாரம் கொண்ட ஆண்களின் ஒடுக்குமுறைகளையும் குரல் உயர்த்தாமல் எழுதினார். துரோகங்களால் நல்வாழ்வை இழந்து சுயமரியாதை யோடு எழுந்து நின்ற பெண் ஆளுமைகளை 50 வருட இலக்கியப்பணியில் தொடர்ந்து அடையாளப்படுத்தினார். சூடாமணி தன் உடல்நிலை கருதி திருமண பந்தத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்தவர். குடும்பத்தை அவர் வெறுக்கவில்லை. குடும்பங்கள் நல்லவிதமாக வாழவேண்டும் என்று விரும்பினார். என்றாலும் எங்கும் புனிதப்படுத்தவில்லை. சண்டை சச்சரவுகளினூடே தான் நேசத்தின் பக்கம் திருப்பினார்.   அவரது கதையுலகம் அதைத்தான் சொல்கிறது. தமிழ்ச்சிறுகதைக்கு அமைதியான பங்களிப்பைச் செய்திருப்பவர். இத்துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத தேவதை அவர்.

‘அந்நியர்கள்’ கதையில் ‘நம்மைச்சுத்தி எங்கே பார்த்தாலும் ஆபாசமும் பயங்கரமும் இருக்கிறதனால எழுத்திலேயாவது நல்லதையும் தூய்மையையும் காட்டணுங்கிறது என் லட்சியம்’ சகோதரிகளில் ஒருவர் இப்படிக்கூறுவார். இந்த வாக்குமூலம் சூடாமணி தன் எழுத்துக்குறித்து சொன்னதும்தான்.

தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் புதுமைப்பித்தன் ஒரு ரகம், கு.அழகிரிசாமி ஒரு ரகம். தி.ஜானகிராமன் ஒரு ரகம், ஜெயகாந்தன் ஒரு ரகம், அசோகமித்திரன் ஒரு ரகம். கி.ராஜநாராயணன் ஒரு ரகம். இந்த வகையில் ஆர்.சூடாமணி ஒரு ரகம். மீற முடியாது வாழ்க்கைச்சூழலில் அமிழ்ந்து புழுங்கும் பெண்களையும் மீறல்களில் தமக்கே உரிய சிறிய சுதந்திர உணர்வை வெளிப்படுத்திக்கொண்டவர்களும் ஆர்ப்பாட்டமில்லாமல் அறிவுறுத்தல் என்ற நோக்கமில்லாமல் அவர்களது இயல்புணர்வுகளோடு அமைதியாக வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஆண் பெண் என்று பேதம் பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பது தெரியாதவிதத்தில் அவர்களது உள்ளக்கொதிப்பை நியாயத்தை அவை ‘புரட்சிகரமான கதைகள்’ என்ற முத்திரையைக் குத்தாதவிதத்தில் மெல்ல நிதானித்து ஓடும் நதிபோல காட்டுவதைத் தனது எழுத்துமுறையாகக் கொண்டிருக்கிறார். ஆதிக்க மனோபாவம் பெண்களை எவ்விதமெல்லாம் நசுக்குகிறது; வறுமை மானிட உணர்வுகளை எவ்விதமெல்லாம் மேலாக, நம்மால் யூகித்திராத கோணத்தில் குழந்தைகளிடமும் மனிதர்களிடமும் வெளிப்படும் எண்ணங்களை புதுசான மலர்ச்சியோடு காட்டுகிறார். இந்த எனது மதிப்பீட்டை சூடாமணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 கதைகளில் இருந்துதான் சொல்கிறேன். 574 கதைகளைப் படித்து தொகுக்கிறபோது இந்த எண்ணம் மாறலாம். அலுப்பு தொற்றிக்கொள்ளவும் நேரலாம். என்றாலும் இந்தக் கதைகளின் வழி ஆர்.சூடாமணி மதிப்பிற்குரிய கதைக்காரர் என்றே சொல்கிறேன்.


சு.வேணுகோபால்

3 COMMENTS

  1. Beautifully written Sir. The article has come up very well. Almost the entire dimensions of Sudamani has come in the article. I agree with you most of the part. With regard to comparisons, I don’t believe in comparison. Krishnan Nambi has written only 23 stories in his life time and how he can be compared with Sudamani? Neelakadal book is still a masterpiece in Tamil. Yes so many big writers and critics have omitted Sudamani for obvious reasons. Jeyamohan has mentioned her as Kalaimagal writer. As usual when you write reviews about books or writers you transformed into an avid reader. That’s your strength and because of that only you are able to write beautiful articles. Kudos to you. I really enjoyed reading this article. Please continue to write reviews. {sorry I don’t have Tamil fond in my iPad}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.