கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

புனை பெயர்: பி. கேசவ தேவ்

இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். மார்க்சீய சிந்தனையாளர். சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவை: ‘பிரதிக்ஞை’, ‘நிக்ஷேபம்’, ‘கொடுங்காற்று’ முதலியவையாகும். நாவல்களில் ‘ஓடையில் நின்னு’, ‘ப்ரந்தாலயம்’, ‘அயல்க்கார்’ முதலியவையாகும். ‘அயல்க்கார்’ மருமக்கள் தாயத்தினால் எழுந்த பிரச்சினைகளையெல்லாம் தெளிவாகச் சித்தரித்த நாவல். மத்திய, மாநில சாகித்ய அகாதமி அவார்டுகள் பெற்றவர். இவருடைய நாவல்களும் திரைப்படமாக வெளிவந்துள்ளன. ‘ஓடையில் நின்னு’ என்னும் குறுநாவல்தான் ‘பாபு’ என்னும் பெயரில் தமிழிலும் திரைப்படமாக வெளிவந்தது. இக்கட்டுரை வெளிவந்தபின் அமரராகியவர்களில் தேவும் ஒருவர்.

கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை :

நான் களைப்புற்று, முழங்கால் மூட்டு இடிபட்டு வீழ்ந்த இடங்களும் இங்கே உண்டு. என் கண்ணீர்த் துளிகள் சிந்தி உலர்ந்த மண்ணும் இங்கே உண்டு. என் நீண்ட பெருமூச்சுக்கள் இறந்தகால சுற்றுச் சூழல்களில் தேங்கி நின்றிருந்ததுவும் இங்கே உண்டு. அதனால்தான், என் புன்னகைகள் அந்த சுற்றுச்சூழல்களில் இன்னும் மலர்ந்து நிற்கின்றன. என் உரத்த சிரிப்புகள் இறந்த காலத்தின் சக்கரவாளங்களில் இன்றும் எதிரொலிக்கின்றன.”

இந்த சப்தம் யாருடையது என்று உங்களுக்குத் தெரிகிறதோ?

மலையாள இலக்கிய உலகிலும், சமகால சமுதாய வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும், ஒரு புரட்சிப் புயலாக உருவெடுத்த – மிகவும் திறமைசாலியான – கேசவதேவினுடையதுதான் இது.

கேரளத்தில், சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கிடையே உண்டான எல்லா புரட்சி மாற்றங்களின் பின்னணியிலும், ஒரு மாபெரும் சக்தியாக இருந்து, கேசவதேவ் மிதித்துத் தள்ளிய கடந்தகாலம் யாரையும் மெய் சிலிர்க்கவும் அதிர்ச்சியளிக்கவும் செய்யும். கடைகளின் வராண்டாக்களில் பட்டினியிலும் துன்பத்திலும் உழன்று வளர்ந்து, மாபெரும் சக்தியாகவும் அறிவாளியுமாக மாறிய தேவ், என்றென்றும் மனிதனுக்காகவே போராடியிருக்கிறார்.

தேவிடம் இல்லாதது வினயம்; இருந்தது கர்வம். அந்தக் கர்வத்திற்கு ஒரு தனி அழகு கூட உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பின் சக்கரவர்த்தியாகவே ஆண்டு கொண்டிருந்த தேவின் ரகசியம், ஒரு மறைவு பொருளானதில்லை. மலையாள இலக்கிய உலகில் ஒரு காலகட்டத்தின் மேதையாகத் திகழ்ந்த கேசவதேவை என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மழைக்கால காட்டாற்றைப் போல் ஓடும் தேவிடமுள்ள பச்சை மனிதனை உங்களில் யாரும் அதிகம் அறிந்திருக்க முடியாது. பத்துப் பதினைந்து ஆண்டுகள் என்னுடன் நெருங்கிப் பழகிய ஒரு புதிய மனிதனை நான் இங்கு அறிமுகப் படுத்தப் போகிறேன்…

கே.பி. கேசவ பிள்ளை என்பதுதான் அந்த மனிதரின் பெயர். தீரத்தையே முதலீடாகக் கொண்டுள்ள அந்தக் கதாபாத்திரத்தின் இமைகளிலிருந்து, அழாமலேயே திரண்டுவிழும் கண்ணீர்த்துளிகளைக் காணவும், இதுவரைக் கேட்காத பெருமூச்சுக்களை நீங்கள் உணரவும், ஜீவிதத்தின் அடிப்படை அம்சங்களே பசியும் காமமும்தான் என்று ‘காதல்’ என்னும் வார்த்தையின் முகத்தில் காரி உமிழவும் செய்யும் கேசவ பிள்ளையைத் தரிசிக்க வாருங்கள்… அந்த ஒற்றை யானையின் கோட்டைக்குள்ளே புகுந்து பார்ப்போம் வாருங்கள்…

வடக்கன் பறவூரில் உள்ள கெடாமங்கலத்தில், மிகப் பெரிய பாரம்பரியமும் அதீத பழக்கமும் உள்ள நல்லேடத்து வீட்டில்தான் கேசவன் பிறந்தார். தந்தையின் பெயர் கொச்சுவீட்டில் அப்பு பிள்ளை. தாயின் பெயர் கார்த்தியாயினியம்மாள். கே.பி.நாராயண பிள்ளை, கே.பி.ஸ்ரீதரன் பிள்ளை, ஜானகியம்மாள் இவருடன் பிறந்தவர்கள். 1903-ல் ஜூலை மாதத்தில், காற்றும் மழையும் அடித்து ஓய்ந்துபோன அந்த நடு சாமத்தில் உச்சஸ்தாயியில், ‘ள்ளே, ள்ளே’ என்னும் அழுகையைக் கேட்டவர்கள் இன்று யாரும் இல்லை. இவர் பிறந்து கீழே விழுந்த போதே எதிர்ப்புகள் ஆரம்பித்துவிட்டன. சில்வண்டுகளும், தவளைகளும் போட்ட மூச்சு முட்டும் சப்தத்தை சவாலுக்கு அழைத்துக் கொண்டு அந்தக் குழந்தை உச்சத்தில் கத்தியது. அந்த சப்தமே எதிர்ப்பாக உருமாறி அவரின் காலம் முழுவதும் நிலைத்திருந்தது. குழந்தைப் பருவத்தில் எப்போதும் ஒரேயொரு நினைப்புதான் சிறுவன் கேசவனிடம் இருந்தது. அதுதான் உணவுப் பிரச்சனை. ‘இப்படியும் ஒரு வயிறு இருக்குமா?’ என்று எல்லோரும் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப் படுவார்களாம். ‘ஓடையில் நின்னு’வில் வருகிற – எந்தக் குற்றத்தையும் மன்னித்துக் கொண்டிருக்கிற அந்தத் தாய் கதாபாத்திரம், கேசவதேவின் சொந்தத்தாய்தான். வீட்டிற்கு வெளியேயும் உள்ளேயும் ஏராளமாகப் பட்டினி கிடந்ததால், துக்கத்தின் கரிநீர்த் தடாகமாக மாறி இருந்தது கேசவதேவின் இதயம். அதனால் யாரையும் மதியாமலும், கர்வத்துடனும் இருந்த இளைய மகன், தன் தாயின் அன்பை மட்டும் அசைபோட்டவாறு தெருவில் இறங்கினார். அதன்பின், பூஜை அறையில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கியது வரையில் நடந்த எதிர்ப்பின் கதைகளை மலையாளத்திலுள்ள ஒவ்வொரு வாசகரும் கேட்டு இதயத்தில் பதிய வைத்திருப்பது தெரிந்த செய்தியே.

“பெரிய எழுத்தாளர் ஆனது வரையில், தங்களின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கிய நிகழ்ச்சிகள் ஏதேனும் உண்டுங்களாண்ணே?” என்று கேட்ட நான், அந்தப் புரட்சியாளரின் முகத்தை நோக்கினேன்.

சூனிய வெளியில் எங்கேயோ பார்த்துக் கொண்டு, “வாழ்க்கையை ஓர் ஆபத்தான சபதமாகத்தான் நான் என்றென்றும் என் மனதில் பதிய வைத்துள்ளேன். அதனால், ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியை மட்டும் முக்கியம் கொடுத்துச் சொல்ல என்னால் முடியவில்லை. படிப்பை நிறுத்தியதே ஒரு முக்கிய நிகழ்ச்சிதான். மாணவனாக இருந்தபோது படிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குத் தோன்றியதில்லை. அன்றாட ஆகாரத்திற்கே ஆளாய்ப் பறப்பவனால் எப்படிப் படிக்க முடியும்? படிக்கத்தான் தோன்றுமா? நான் படிக்கத் தொடங்கியதே பள்ளியை விட்டு நீங்கிய பின்புதான்” என்று தேவ் கூறினார்.

அதேபோல், கேசவதேவ் ஒரு பெண்ணைக் கூடத் தன் வாழ்நாளில் காதலித்ததில்லையாம். பசிக்கும் காதலுக்கும் பொருத்தமில்லை என்றும், காமம் மட்டுமே பசிக்கு உறவு என்றும், அவர் தன் ஆயுள் முழுவதும் நம்பிக்கொண்டு இருந்தார். ஆனால் பேட்டியின் போது ஒரு அழகான பெண் மட்டும் இடையிடையே நிழலாடுவது போல் அவருடைய பேச்சில் தெரிந்தது. சுருள் முடியும் முகப்பருவுமுள்ள பெண் அவள். ஆறு முழ முண்டும் ஜாக்கெட்டும் அணிந்து, ஜாக்கெட் அளவிற்கு இறக்கமுள்ள தங்க மாலையும், மின்னும் வெள்ளைக்கல் பதித்த கம்மலும் அணிந்து, பல எதிர்ப்புகளுக்கிடையே இந்த உலகமே மயங்குமளவு இருக்கும் அப்பெண்ணை, காலப்போக்கில் அண்ணன் ஒருவேளை மறந்து போயிருக்கலாம்.

தான் ஒரு தலைவராக வேண்டுமென்னும் ஆசை கேசவதேவிற்கு இல்லை. அதேபோல், வேறு யாருடைய தலைமையையும் அவர் அங்கீகரிப்பதுமில்லை. அதனால்தான், அதிசயப்படும்படியாக பலரையும் அவர்களின் முகத்தைப் பாராமலேயே அவரால் அபிப்பிராயம் சொல்ல முடிகிறது. பல ஆண்டுகளுக்கு முன் எழுத்தச்சன் தேவுவை ஆக்கிரமித்தபோது, மலிவான புகழுக்காகவே அவர் அப்படிச் செய்கிறார் என்று பலரும் குறை கூறினார்கள். ஆனால், எழுத்தச்சனைக் கூட விமர்சிக்க ஒருவன் உண்டு என்னும் லட்சியமே, அந்த ஆக்கிரமிப்பால் அவரிடம் மேலோங்கி நின்றது என்பது யாருக்குத் தெரியும்?

தலைச்சேரிக்கு அருகே உள்ள சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, இராமாயணத்தை எரித்த இந்த உண்மையான புரட்சியாளர், வால்மீகியை உன்னதமான ஒரு கலைஞன் என்ற நிலையில் பின்னாளில் அங்கீகரிக்கிறார். என்றாலும், கம்யூனிஸ்ட்காரர்களின் போதகராகவும், ட்ரேட் யூனியன் சங்கத்தை நிறுவியவராகவும் இருந்த இந்த புரட்சிக்காரர், இறுதியில் கம்யூனிஸ்ட் விரோதியாகவும் மாறினார். அதன்பின் சில காலம் தனியாக இருந்து, மீண்டும் கம்யூனிஸ்ட் மார்க்கத்திலேயே சேர்ந்தார். இருந்தும், நாம் அவரைக் குற்றப்படுத்த முடியவில்லை. அதற்கான காரணத்தை, கர்வமிக்கவரான கேசவதேவின் வார்த்தைகளாலேயே நான் உங்களுக்குப் பதிலாக அளிக்கிறேன்.

“என் பார்வை மண்டலம் வளருந்தோறும் எனது உத்தேசங்களுக்கும் லட்சியங்களுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.”

ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பது முதல் மலையாள இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள எல்லா புரட்சி மாற்றங்களும், தன்னால் சிருஷ்டிக்கப்பட்டதுதான் என்று தேவ் உரிமை கொண்டாடுகிறார்.

“எல்லாவற்றுக்கும் கடைசியாக உண்டான மாற்றம், நவீன இலக்கியங்களுக்கு எதிரான எதிர்ப்பாகும். சில ஆண்டுகளுக்கு முன் கோட்டயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், புதுமை இலக்கியம் என்பதெல்லாம் பழைய சரக்கிலிருந்து எடுத்து முலாம் பூசப்பட்டதுதான் என்று நான் சொன்னபோது, என் எல்லா நண்பர்களும் என்னை ஒதுக்கித் தள்ளினார்கள். ஆனால், இன்று, நான் அன்று சொன்ன வாக்கியத்தைத் தேவ வாக்காக மதித்து, அவர்களே நடக்கிறார்கள். இந்த அனுபவம் எனக்கு எல்லா காலங்களிலும் ஏற்பட்டதுண்டு. ரஷ்யாவில் நடந்ததைப் போன்று இந்தியாவிலும் ஒரு புரட்சி நடக்க வேண்டுமென்று கேரளத்தில் முதன்முதலில் பிரச்சாரம் நடத்தியதே நான்தான். அக்காலத்தில் நான் தனி மனிதனாகத்தான் இருந்தேன். ஆனால், இன்று எல்லா இடங்களிலும் புரட்சி இல்லை என்றாலும் புரட்சிக் கோஷங்கள் இருக்கின்றன.”

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, கட்சியை எதிர்த்த நேரங்களில்தான் தேவ் ரொம்பவும் கோபம் கொண்டிருந்தார். கம்யூனிஸத்தை தான் ஒருபோதும் எதிர்த்ததில்லை என்றும், ஸ்டாலின் ஆட்சியைத்தான் தான் எதிர்த்ததாகவும் தேவ் கூறினார்.

“கம்யூனிஸ்ட்காரர்கள் என்னைக் கொல்லக்கூட முயன்றார்கள். அதனால், கோபம் மேலிடவே, கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரத்தை நான் பயங்கரமாகவே நடத்தினேன். அந்த நேரத்தில்தான் பொது வாழ்க்கையில் எனக்கு மிகவும் கோபம் ஏற்பட்டிருந்தது. ஸ்டாலின் மரணத்திற்குப் பின் என் எதிர்ப்பும் முடிந்துவிட்டது” என்று கூறிய தேவ், இனிமையாகச் சிரித்துவிட்டு, “நான் இப்போது சிறிது ரஷ்ய சார்புள்ளவனாகியுள்ளேன்” என்று முடித்தார்.

தேவின் சொந்த வாழ்க்கையில் ரகசியம் அதிகம் ஒன்றும் இல்லை. காதல் என்றால் என்னவென்று அனுபவித்திராத தேவ், காதலிக்க நேரம் கிடைக்காமல் எதிர்ப்பிற்கும் போராட்டத்திற்குமாக வாழ்க்கையின் வசந்த காலம் முழுவதையும் கழித்தார். வாழ்க்கைக்கு ஒரு லட்சியத்தை உண்டாக்கவும் அந்த லட்சியத்தை அடைவதற்காகவே வாழ்க்கையை வெறுக்கவும் செய்த தேவ், ஒரு ரகசியத்தை மட்டும் தன் சொந்த வாழ்க்கையில் ஒரு சவலைக் குழந்தையைப் போல் பாதுகாத்துக் கொண்டு வருகிறார். அது தன்னுடைய முதல் திருமண உறவின் கதையாகும். திருமணமான பதினேழாம் நாள் பட்டினி கிடந்து முதலிரவைக் கொண்டாடியதும், பசியை மறப்பதற்காகச் சிரித்துக் கொண்டும் அந்நியோன்னியம் கிக்கிளி செய்து கொண்டும் கழித்த இரவுகளும், மண்ணெண்ணெய் விளக்கில் எண்ணெய் தீர்ந்ததால் குளிர் நிலவை அடைக்கலம் தேடிய இரவுகளும்தான் அவை. கோமதி தேவாக இருந்த அந்த முதல் மனைவியின் உறவை தேவ் சிறிது காலத்திற்குள்ளேயே முறித்துக் கொண்டார் என்பதை மட்டும் இங்கே கூறிக்கொண்டு, நான் அந்த அத்தியாயத்திற்கு அடிக்கோடு இடுகிறேன்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதில்தான் தேவ், சீதாலட்சுமியை மணம் புரிந்துகொண்டார். சலசலப்பையுண்டாக்கிய ஒரு காதல் உறவின் மூலமாகத்தான் இந்தக் காதல் உருவம் பெற்றது.

‘நான் ஒருபோதும் காதலித்ததில்லை’ என்ற தேவின் உண்மை முகம் இங்கே மங்குகிறதோ? ஓராண்டு காலம் திருவனந்தபுரம் வானொலியில் தேவ் வேலை செய்தார். அப்போதுதான் தைக்காட்டைச் சேர்ந்த சீதாலட்சுமியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. வானொலி நாடகங்களில் நடிப்பதற்காகவும், பாடுவதற்காகவும் அவர் அப்போது அடிக்கடி வந்துகொண்டிருப்பார். அந்த நேரங்களில் சீதாலட்சுமி தேவைப் பார்த்துப் பேசிக் கொண்டு இருப்பார். அந்த சந்திப்புகள்தான் இறுதியில் ரிஜிஸ்டர் ஆபீஸில் இரண்டு கையெழுத்துகளுடன் முடிந்தன. வானொலி நிலையத்தில் தான் தொடர்ந்து இருந்திருந்தால், தன்னால் அதன் பின் ஒன்றும் எழுதியிருக்க முடியாதென்று தேவ் உறுதியாக நம்பினார். தேவினைப் படிக்கும் மாணவர்களுக்கு அது புரிந்திருக்கலாம். அவ்வாண்டில் அவர் ஒன்றும் எழுதவில்லைதான். சீதாலட்சுமி – தேவ் தம்பதியின் குடும்ப வாழ்க்கை திருப்திகரமானதுதான். சீதாலட்சுமிக்கு கணவரின் விஷயங்களைக் கவனிப்பதை விட வேறொரு சிரத்தையும் இல்லை. அத்தம்பதியர்க்கு ஒரு மகன் உண்டு. பெயர் ஜோதி தேவ் (உண்ணி கிருஷ்ணன்). அவர்கள் இருவருக்கும் திருமணமானபோது வயது வித்தியாசம் நாற்பதாண்டுகள் என்றால் நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. அதுதான் உண்மை.

“தேவின் பழைய வாழ்க்கையைப் பற்றி முழுவதும் புரிந்துகொண்டுதானே அவரை மணம் செய்து கொள்ளத் தீர்மானித்தீர்கள்?” என்று நான் மிஸஸ் தேவை கேட்டேன்.

கணவரை நோக்கிப் புன்னகைத்தவாறே, “ஆமாம்” என்றார் மிஸஸ் தேவ்.

தேவ் அறிமுகம் ஆவதற்கு முன்பே, அவரின் எல்லா புத்தகங்களையும் படித்திருந்தாராம். அதனால், தேவை நன்றாகவே அறிந்து வைத்திருந்தாராம்.

தேவ் மது அருந்துவதற்கு மட்டும் மிஸஸ் தேவிடமிருந்து பலத்த எதிர்ப்புண்டு.

“ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தால் கூட நான் சகித்துக் கொள்வேன். ஆனால் ஒரு சிறு அளவு மதுவைக் கூட அருந்திவிட்டு வருவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.”

திடீரென இடையே புகுந்த தேவ், “நான் நன்றாகக் குடித்துக் கொண்டிருந்தவன்தான். இப்போது எவ்வளவோ கட்டுப்பாட்டுடன் உள்ளேன். உங்களுக்குத்தான் தெரியுமே!” என்று என்னையும் சாட்சிக்கு இழுத்தார்.

காப்பி குடித்துக் கொண்டிருக்கும்போதே, ஜோதி தேவின் தற்போதைய மிகப் பெரிய பிரச்சினையைப் பற்றி சீதாலட்சுமி கூறினார். அது தந்தைக்கும் தாய்க்கும் உள்ள வயது வித்தியாசத்தைப் பற்றிய விசித்திர பிரச்சினைதான்.

தேவின் வழுக்கைத் தலையைத் தான் ஜோதி அந்த வித்தியாசத்துக்குத் துணையாகக் கொண்டுள்ளான்.

திடீரென, நான் குட்டன் என்னும் குட்டாயியை (வைக்கம் முகமது பஷீரின் மகனை) நினைத்துக் கொண்டேன். எழுபத்தெட்டு வயதான சுல்தானையும் நாற்பத்தாறு வயதான பாபியையும் பற்றி குட்டாயிக்கும் இந்தப் பிரச்சனை உதித்திருக்குமோ?

தனது எல்லாக் குற்றங்களுக்கும் குறும்புகளுக்கும் மன்னிப்பளித்த தன்னுடைய தாயைத் தவிர, வேறொரு பெண்ணால் தன்னை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேவ் கூறியது சரியாக இருக்கலாம். ஆனால், மறக்க முடியாத எத்தனையோ பெண்கள் மறக்க முடியாத சம்பவங்களாகத் தேவின் வாழ்க்கையினூடே ‘மார்ச்’ செய்துள்ளார்கள். கெடாமங்கலத்தில் குறுந்தோட்டி பறம்பிக்கு அருகே தங்கியிருந்தவளும், மற்ற யாரையும் தனது துன்பத்தில் பங்கு கொள்ளச் சம்மதிக்காதவளும், எப்பிரச்சனையையும் தன்னுள்ளேயே அடக்கி ஒதுக்கிக் கொண்டவளுமான அந்தத் தடித்த வேசியையும், பறவூரிலுள்ள பொட்டன் தெருவில் இருக்கும் ஸாரஸ்வத பிராமணரின் கோயிலுக்கு வடக்கே ஒற்றையடிப் பாதையின் அருகே தங்கியிருந்தவளும், இனிய குரலில் பாடுபவளும் என்றென்றும் முல்லைப் பூச்சூடி கண்களில் மையும் நெற்றியில் அகலப் பொட்டும் இட்டு கவர்ந்திழுக்கும் கண்களையும் உடைய அந்த வேசியையும் ‘எதிர்ப்பு’களில் வரைந்து காட்டிய தேவினால் மறக்க முடியுமா? முற்றிலும் முடியாத விஷயம்தான் அது.

“தாங்கள் எப்போதாவது அழுததுண்டுங்களா, அண்ணே?”

“அழுதேன் என்றா கேட்டீர்கள்? இருக்கலாம்” என்று கூறியவர், “இந்த உக்கிரப் போராட்டக்காரன் ஒரு முறையல்ல, அநேக முறைகள் அழுதுள்ளேன். ஏராளமான சக்தியும் உஷ்ணமுமுள்ள கண்ணீரைச் சிந்திய அந்த ஒரு நிமிஷத்தை நான் நினைத்துக் கொள்கிறேன். ஆல்வாயில் என் சகோதரியின் வீட்டில் தகழியின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன். ஆம்! என் சகோதரியின் வீட்டில் என்னை யாரும் அறிந்துகொள்ள வில்லை. முற்றிலும் அந்நியனாக நான் ஆன போது, அழுகை மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருந்தது” என்று அவர் மேலும் உருக்கமாகக் கூறினார்.

நான் அந்த நிகழ்ச்சியைப் பற்றி தகழியிடம் பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன். அவர் இந்நிகழ்ச்சியின் சுருள்களை நிவர்த்திக் காட்டினார். அதைக்கேட்டு என் கண்களும் நிறைந்துவிட்டன. அதிக ஆனந்தம் கொண்ட நிமிடங்கள் இந்த நித்தியப் போராட்டக்காரரின் வாழ்க்கையில் ஏற்பட்டதே இல்லை. அப்படிப்பட்ட நிமிடங்கள் உண்டானால் தனது தத்துவத்தினாலேயே தன் மனதைப் பிடித்து நிறுத்தி ஒதுக்கி விடுவாராம்.

புதிய தலைமுறையினரில் தனக்குப் பிடித்தமானவர்கள் சிலர் உண்டென்றாலும், அவர்கள் எழுதுவதற்கு விஷயம் இல்லை என்பதுதான் தேவின் கொள்கை.

“காரணம், அவர்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் இல்லை. சிலர், மேற்கத்திய இலக்கணத்தை அனுசரிப்பதினால் வழி தவறிப் போய்விடுகிறார்கள். கொஞ்சம் வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றவர்கள் கூட, தாங்களும் உடனே இலக்கியவாதியாகிவிட வேண்டும் என்னும் ஆசையால் எழுதும் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே நான் ஒரு இலக்கியவாதியாகிவிட வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஆனால், வாழ்க்கையின் அனுபவங்களை எழுத ஆரம்பித்தபோதுதான் இலக்கியவாதியாகி விட்டேன்.”

“தங்களின் இறுதி லட்சியம் என்ன?” என்று நான் கேட்டேன். தேவிற்கு அதுபற்றித் தெரியவில்லை. இறுதி லட்சியங்களைக் கண்டுபிடித்தவர்களைக் கண்டுபிடிக்கவும் அவரால் முடியவில்லை.

“மரண பயம் உண்டா?” என்னும் என் கேள்விக்கு அவரிடமிருந்து திமிரான பதில்தான் கிடைத்தது.

“மரணம், என்னுடன் தொடர்ந்து வரும் தோழன் என்று நான் அறிகிறேன். ஆனால், ஒவ்வொரு நிமிஷமும் நான் மரணத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறேன். உண்மையில், மரணத்தை என்னுடன் போட்டியிடும் ஒரு போட்டியாளனாகவே நான் கருதுகிறேன்.”

பி.கிருஷ்ண பிள்ளையையும், இ.எம்.எஸ்ஸையும், ஏ.கே.கோபாலனையும் கம்யூனிஸ்ட்டாக்க முயன்ற கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட்டான பழைய கேசவதேவையும், போலீஸ்காரர்களின் அடியையும், உதையையும் ஏற்கும்போது, இதயம் உருகிக் கம்பியாக இழுக்கப்படும் தங்கம் போலாகும் என்று கூறிய மனித நேசியான கேசவதேவையும், ‘காதல் – காதல் என்னை அழைக்கிறது இறப்பதற்கு; வாழ்க்கை – வாழ்க்கை என்னை அழைக்கிறது சுகம் அனுபவிப்பதற்கு’ சங்ஙம்புழையின் எழுத்தினால் கூறிய நாடகாசிரியரான கேசவதேவையும் போன்று எத்தனையோ கேசவதேவ்களை நான் உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்தவில்லை. ஏனென்றால், ‘ஓர்மயுடெ லோகம்’ மூலமாகவும் ‘எதிர்ப்புகள்’ மூலமாகவும் அவர் என்னை விட உங்களுக்கு அதிகமாகவே அறிமுகமாகிவிட்டார்.

என்றென்றும் போராட்ட பூமியில் மட்டுமே பயணம் செய்ய ஆசைப்படும் கேசவதேவ், அடுத்த தலைமுறையினருக்கு முழுமையான ஓர் அற்புத மனிதராக இருப்பார் என்றுதான் நான் கருதுகிறேன். கேசவதேவ், தன் சொந்த விஷயமாகச் சொல்ல ஒன்றுமில்லை என்றார். கேசவதேவின் சொந்த வாழ்க்கை எழுத்துக்கள் இல்லாத ஒரு திறந்த புத்தகமாகும்.

‘ஸ்வப்னம்’ என்ற நாவலின் முன்னுரையில், தேவ் இறுதியாகக் குறிப்பிட்ட வார்த்தைகளின் வரிகளாலேயே முழுமையடையாத இந்த அறிமுகத்தை முடிக்கிறேன். முழுமையாக யாராலும் யாரைப் பற்றியும் எழுதவும் முடியாதல்லவா!

“அதீத ஆழமும் அகலமும் உள்ள ஒரு மகா சமுத்திரத்தின் ஒருதுளிதான் நான். அனந்தமும் அறியாத உலகத்தின் ஒரு பரமாணுதான் நான். அதனால், நான் இன்னமும் முழுமையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.”

—————————————————————————————————————————————–மலையாள மொழியில் வந்த இக்கட்டுரைகள் முதலில் (1970-80களில்) தீபம் மாத இதழில் தொடராக வெளிவந்தபின் மணியம் வெளியீடு மூலம் இருபதிப்புகளை (1990களில்) நூலாகவும் கண்டன.

 

1 COMMENT

  1. ஒரு அபூர்வ மனிதரை அவரது எழுத்துகளின் மூலம் தரிசித்த நிறைவைத் தந்தது கட்டுரை! நன்றி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.