1
Though the objects themselves may be painful, we delight to view the most realistic representations of them in art, the forms, for example, of the lowest animlas and dead bodies
Aristotle, Poetics
நாம் எல்லோரும் ஒரு தேர்ந்த துப்பறிவாளரை நம்மிடம் குறைவாகவே உள்ள அல்லது முற்றிலும் இல்லாத, ஆனால் நம்மால் சிறந்தவை என்று கருதப்படக்கூடிய பண்புகளான புத்திக்கூர்மை, நினைவாற்றல், அறிவுக்கூறு, தர்க்கத்திறன், அறிந்துகொள்ளும் ஆர்வம், விந்தையான பழக்க வழக்கங்கள், தனிச்சிறப்பான முறைமைகள் ஆகிய இவற்றை ஒருசேரக் கொண்டிருக்கும் துப்பறிவாளரின் மீது, அன்றாட வாழ்வின் சராசரித்தனத்தினால் இயல்பாகவே ஒளி மங்கிப் போயிருக்கும் நாம், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களைப் போல அல்லாமல், மோசமாக எழுதப்பட்ட அல்லது மோசமாகப் படமாக்கப்பட்ட துப்பறியும் கதைகளிலும் கூடத் தோல்வியைச் சந்தித்திராத ஒரு தேர்ந்த துப்பறிவாளரின் மீது நம்மையும் அறியாமல் மையலுற்று, அவ்வாறு மையலுறுவதற்கான எல்லாத் தகுதிகளும் அவருக்கு உண்டென்று ஒருமனதாகக் கருதியே இன்றளவிலும் ஒரு துப்பறிவாளரைக் கண்டால் நம்மில் நம்பிக்கையும், ஆவலும் ஒருசேர எழுவதை உணர்கிறோம்.
பெரும்பாலும் குடும்பமற்ற தனியர்களான துப்பறிவாளர்கள் சிறிய தோல்விகளால் துவண்டு விடக்கூடிய நம்மைப் போல் அல்லாமல் பெரும் சவால்களின் முன்னும் நம்பிக்கையுடனும், நடுங்காத நிதானத்துடனும், தனது அலுவலக அறையின் அல்லது வீட்டின் அழைப்பு மணி ஒலிப்பதற்கோ அல்லது தொலைப்பேசி (என்னிடம் செல்பேசியைப் பயன்படுத்தும் துப்பறிவாளர்களைப் பற்றித் தகவல்கள் ஏதுமில்லை) ஒலிப்பதற்கோ காத்திருக்கிறார்கள். ஒரு நாளில் மருத்துவர்களை விடவும் பிரித்தானிய துப்பறிவாளர்களைச் சந்திக்க வரும் பிரச்சனையுள்ளவர்கள் அதிகமாக இருந்த காலத்தில் துப்பறிவாளர்கள் அவர்களது பொற்காலத்தில் வாழ்ந்தார்கள். இன்றும் உலகின் நான்கு திசைக் குற்றங்களையும் துப்பறிகிறவர்களாக அவர்கள் இருப்பினும் ஒரு பழைய தொடர்பின் காரணமாகவே பார்த்த திரைப்படங்களை மீண்டும் பார்க்கிறவர்களைப் போலச் சமகாலத் துப்பறியும் கதைகளை வாசிக்கிறோம். அரக்கர்களில், குள்ளர்களில், கல்லாகவும், தவளைகளாகவும் போகக் கடவதென்று சபிக்கப்பட்ட மனிதர்களின் மீது நாம் வசீகரம் இழந்திருந்தாலும் துப்பறிவாளர்களுக்குச் சிறிதளவேனும் நமது கருணையின் பங்கை வழங்கியிருக்கிறோம்.
ஓய்வு நேரத்தை வாழ்வின் பயங்கரங்களைச் சிந்தித்து உள்ளம் தளர்வடையாமல் நமது கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பவே புதிர்கள், விடுகதைகள், எண் விளையாட்டுகள், குறுக்கெழுத்துப் போட்டிகளில் நேரத்தைக் கரைக்கிறோம் என்கிறார் துப்பறியும் புனைவின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான டோரதி எல் செயெர்ஸ்1. ஆயினும் தமது ஓய்வுநேரத்தைத் துப்பறியும் கதைகளை வாசிப்பதில் செலவழிக்கும் ஒரு வாசகரை நாம் வளர்ச்சி குன்றிய ஒருவர் என்றே மதிப்பிடுகிறோம். மலினமான இரசனை உள்ள இரண்டாம் நிலை வாசகர் என்றும் வாழ்வின் உண்மைகளின் மீது கவனமற்ற, குற்றங்களின் மீது அசட்டுக் கிளுகிளுப்பூட்டும், புறப்பறப்பில் மிதக்கிற (supernatant) படைப்புகளே துப்பறியும் கதைகள் என்றும் நாம் கருதப் பழகியிருக்கிறோம். துப்பறியும் கதைகளைத் தற்காக்கும் பொருட்டு ஜி.கெ.செஸ்டர்டன் எழுதிய கட்டுரை ஒன்றில், நவீன வாழ்வின் கவித்துவ உணர்வுகள் சிலவற்றை வெளிப்படுத்தக்கூடிய ஒரே வெகுமக்கள் இலக்கியம் துப்பறியும் கதைகள் என்கிறார்2. உலகின் மாபெரும் இதிகாசங்கள், காவியங்கள், இலக்கியங்கள் ‘குற்றத்திலிருந்து’ நீங்கியவையா?. நாவல்களின் வரலாறே அவை எழுதப்பட்ட காலகட்டங்களின் ‘பரபரப்பில்’ நிலைத்திருக்கிறது.
புதிர்க்கதைகள் (puzzles), புதிர்நிலைக் கதைகள் (mystery), குற்றக் கதைகள், பகுப்பாய்வுக் கதைகள் (analysis) ஆகியவற்றிற்கு நெருக்கமாகச் செல்பவை துப்பறியும் கதைகள் என்கிறார் ஹோவர்ட் ஹேகிராஃப்ட்3.
உங்கள் முன்னே இரு தேர்வுகள் உள்ளன. ஒன்று செஸ்டர்டன் சொன்னதை ஏற்பது அல்லது முந்தைய கருத்திலே உறுதியாக நிற்பது. எவ்வாறாயினும் துப்பறியும் புனைவுகள் தோன்றி இன்றும் லிபி உடைய ஒவ்வொரு மொழியிலும் எழுதப்படுவதற்கும், வாசிப்பிற்கும் உள்ளாகின்றன. சமகால வாழ்வின் கவித்துவ உணர்வுகளை நம்மால் எளிதாக அடையாளம் காணவும், வாழ்வனுபவம், சிந்தித்துப் பெறுவதைப் போல முற்றுப் பெற்றதாக இல்லாத போது நம்மால் அந்த அனுபவத்தை முழுமையாக விவரிக்கவும் முடியுமா? ஒரு மீனால் தண்ணீரை விவரிக்க முடியுமா? அவ்வாறு முயன்றாலும் அதன் முழுமையை நம்மால் அறிய முடியாதென்று நினைக்கிறேன்.
2
உலகின் முதல் துப்பறிவாளர் யாரென்று பல பெயர்கள் முன்வைக்கப்படுகின்றன எனினும் எட்கர் ஆலன் போவின் கற்பனையில் உதித்த பிரெஞ்சுக்காரனான ஒகுஸ்த் டியுபே என்பவனையே இலக்கிய வரலாற்றாளர்கள் முழுமையான ஒரு துப்பறிவாளன் என ஏற்கின்றனர். வாழ்வின் புதிர்களைத் தேடுவதும் விடை காண்பதும் எல்லா செவ்வியல் இலக்கியங்களிலும் உண்டு என்றாலும் துப்பறியும் கதைகளின் கூறுகளை நாம் நாட்டார் கதைகளில், ஆயிரத்தோரு இரவுகளிலும் காணலாம். 1841ஆம் ஆண்டு தான் ஆசிரியராக இருந்த இதழின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு ’பிணவறை வீதியில் நடந்த கொலைகள்’ எனும் விநோதமான கதையை எழுதினார். அக்கதையின் விநோதத்திற்கும் புதுமைக்கும் காரணம் கொலைகள் அல்ல, அக்கதையில் தோன்றிய துப்பறிவாளன் மட்டுமே.
போ, தான் பைத்தியம் ஆவதைத் தவிர்க்கவே துப்பறியும் கதைகள் எழுதினார் என்கிறார் ஜோசப் வுட் கிரட்ச் (இது எல்லாக் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பொருந்தக் கூடிய கூற்று). ஆப்ரகாம் லிங்கன், எட்கர் ஆலன் போவின் வாசகர் என்பதோடு மட்டுமல்ல தர்க்கரீதியாகவும், முழுமையானதாகவும் உள்ள அவரது கதைகளின் மீதான தனது வியப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்4.
கொலை, கொள்ளை, வன்புணர்வு, திருட்டு, பிள்ளைக்கடத்தல், விபச்சாரம், நிதி மோசடிகள், பெற்றோரை, சகோதரர்களைக் கொல்லுதல் (கெய்ன் & ஏபெல்) போன்ற குற்றங்களின் வேர் பரவியிருக்காத ஒரு பேரிலக்கியத்தையும் நம்மால் சொல்லிவிட முடிவதில்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் நாவல்கள், அதற்கு முந்தைய நூற்றாண்டுகளின் நாடகங்கள், நாட்டுப்பாடல்கள் (ballad), பாலியல் குற்றங்களோடு, இயற்கைக்கு மீறிய ஆற்றல்கள் ஒன்றிணையும் கோதிக் படைப்புகளால் நெடுங்காலமாக வாசகர்கள் ‘குற்றத்திற்குப்’ பழகியிருந்தனர். நம் ஊரின் பதிப்பு வரலாற்றில் ‘பெரிய எழுத்துப் புத்தகங்களின்’ வருகையையும் அதனோடு சேர்க்கலாம். உண்மைக் குற்றங்கள், குற்றவாளிகள் குறித்துப் படைப்புகள் வெளிவந்தன. குற்றங்கள் சமகாலத்தவர்களை நடுங்கச் செய்தால், குற்றப் படைப்புகள் எதிர்காலச் சந்ததியினரை நடுங்கச் செய்வதற்காகப் படைக்கப்பட்டன. முழுமையான குற்றம் எதுவென்றும், யார் கச்சிதமான குற்றவாளி என விவாதிக்கும் பென் ரே ரெட்மேனின் ‘முழுமையான குற்றம்’ கதையை வாசிக்கவும்.
ஒகுஸ்த் டியுபேவிற்கு நெருக்கமாகக் காட்டப்படும் மற்றொரு துப்பறிவாளர் – அவர் அப்பெயரைத் தாங்கியிருக்காவிட்டாலும் – வால்டேரின் ஜெடிக் (Zedig). இக்கட்டுரையின் பொருட்டு வாசிக்கப்பட்ட படைப்புகளில் அதுவும் ஒன்று. அரசி, அரசனுடைய காணாமல் போகும் பெட்டை நாய் மற்றும் குதிரையின் காலடித்தடத்தைக் கொண்டே அவற்றின் பண்புக்கூறுகளைச் சொல்லிவிடக் கூடிய ஜெடிக், ஒரு துப்பறிவாளனுக்கு அருகில் வந்தாலும், கதையின் பிந்தைய பகுதிகளில் சாலமன் அரசனுக்கும், தெனாலிராமனுக்கும் நெருக்கமாகச் சென்று விடுகிறான். உம்பர்த்தோ ஈகோவின் ‘ரோஜாவின் பெயர்’ நாவலில் குதிரையின் குளம்படித்தடத்தை விவரிக்கும் பாஸ்கர்வில்லைச் சேர்ந்த வில்லியமாக இருபதாம் நூற்றாண்டின் ஒரு குறியியல் நாவலில் மறுபிறப்பெடுத்தான் ஜெடிக்.
எனினும் துப்பறியும் கதைகளின் பொற்காலத்தில் பிரிட்டனில் சர் ஆர்தர் கனான் டாய்லால் அவை பரந்த கவனம், வாசிப்பு, விற்பனையைப் பெற்றன. அங்கேயிருந்து காலனிய நாடுகளுக்கும் துப்பறிவாளர்கள் பரவினர். அவருக்கு முன்பே வில்கி காலின்சின் ‘மூன்ஸ்டோன்’, சார்லஸ் டிக்கன்ஸின் ‘பிளீக் ஹவுஸ்’ நாவல்கள் வெளிவந்து கவனத்தைப் பெற்றிருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸின் வருகை துப்பறியும் கதைகளை விண்ணுக்கு உயர்த்தியது (விற்பனையிலும் கூட).
பதினெட்டாம் நூற்றாண்டின் குற்ற நாவல்களில் குற்றவாளிகள் ஒன்று தாமாகவே குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் அல்லது உளவாளிகளால் காட்டிக் கொடுக்கப்படுவர். இலண்டனின் ‘நியுகேட்’ சிறைச்சாலைக்கு குற்றநாவல்களின் பெருக்கத்தில் ஒரு சிறிய பங்குண்டு. எழுநூறு ஆண்டுகள் இயங்கிய அச்சிறைச்சாலையில் டேனியல் டெஃபோ, ஆஸ்கர் ஒயில்ட் ஆகியோரும் அடைபட்டிருக்கின்றனர். டெஃபோவின் நாவல்களான ‘மால்பிளாண்டர்ஸ்’, ‘ரொக்ஸானா’ ஆகியவை குற்றத்தில் ஈடுபடும் பெண்களை மையமாகக் கொண்டவை. ஒருவகையில் அக்காலகட்டத்தின் சமூக நிலைமைகளை எழுதுவதற்குக் குற்றக் கதைகள் உதவியிருக்கின்றன. அதே சமயம் அவை குற்றமிழைப்பவர்களின் உளவியல் கூறுகளை விவாதிப்பவையும் கூட. தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ இத்தன்மை உடையதே. சட்டத்திற்கு வெளியே ஒரு குற்றவாளியின் உளவியல் மாற்றத்தையும், குற்றம் அவனது ஆளுமையில் உருவாக்கும் இருளையும் விவாதிக்கிற படைப்பு. ஆனால் துப்பறியும் கதைகள் குற்றமிழைப்பவரின் ஆளுமைப் பண்புகளில் கவனம் செலுத்தினாலும் உளமாற்றத்தில் அக்கறையில்லாதவை. ஒரு துப்பறிவாளர் குற்றவாளியைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவாரே ஒழிய, தேவாலயத்தில் சிலுவையின் முன் அல்ல. இவ்வகையில் துப்பறியும் கதைகள் நடைமுறை வாழ்க்கைக்கு நெருக்கமானவை.
சாகசங்கள், சட்டத்தின் ஆட்சியின் மீதான பிரித்தானியர்களின் விநோதமான நுகர்ச்சி வேட்கையே அங்கே துப்பறியும் கதைகள் பெருகக் காரணம் என்கிறார் போர்ஹேஸ்5. அப்போதைய இலண்டன் காலனிய மக்களால், ஐரோப்பியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களால், புரட்சியாளர்களால், அராஜகவாதிகளால், பொருள்தேடி இடம் பெயர்ந்தவர்கள் என ‘அந்நியர்களால்’ நிரம்பியது. நகரமயமாக்கல், வறுமையும், நோயும் மிகுந்த தொழிலாளர்கள், புதிதாக உருவான வருவாய்ப் பாகுபாடு, வர்க்கப் பார்வை, கையெறிக் குண்டு வீச்சுகள் என இலண்டன் ஒரு புதிய சமூக அமைப்பிற்குள் நுழைய உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாகப் பிரித்தானியர்களுக்கு அந்நியர்களிடமிருந்து. உருவாகியிருந்த சிக்கலான இச்சமூக நிலையைத் துப்பறியும் கதைகள் மிகப் பொருத்தமாக வெளிப்படுத்தின. ஒரு பாதிரியாரும், துப்பறியும் கதைகள் எழுதியவருமான ரொனால்ட் (க்)னாக்ஸின் புகழ்பெற்ற பத்துக்கட்டளைகளில் ஐந்தாவது, ‘ஒரு சீனரும் கதையில் தோன்றக்கூடாது’5.
அதே சமயம், சட்டம், நீதித்துறை நவீனமடைய, சித்ரவதை, ஒப்புதல் வாக்குமூலம் இவற்றின் மூலம் ஒரு குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்தல் போன்றவை பழமைவாத முறைமைகளாகின. ‘சாட்சியம்’, ‘தர்க்கப்பூர்வ விளக்கம்’ ஆகியவை முன்னெழுந்தன. நீதிப்பரிபாலனத்தில் அறிவியலும், குறிப்பாக உளவியல் மருத்துவமும் கூட்டிணைவாக்கப்பட்டன (Incorporate). துப்பறியும் கதைகள் நவீனக் காவல் மற்றும் நீதித்துறையின் தோற்றம் மற்றும் அறிவியல் உளப்பாங்கின் (temperament) வழித்தோன்றல்.
துப்பறியும் கதைகள் ஒருவகையில் அறிவியல் மீதான ரொமாண்டிசிசத்திற்கு மறைமுகப் பங்காற்றியிருக்கின்றன. அறிவியல் இதழ்களும், துப்பறியும் கதைகளைத் தாங்கிய இதழ்களும் ஒரே சமயத்தில் பல்கிப் பெருகி வெகுமக்களிடம் அறிவியல் உளப்பான்மையை வளர்த்ததும் ஒரே காலகட்டத்தில்தான்.
சர் இராபர்ட் பீல் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘இலண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ் ஃபோர்ஸ்’ அமைப்பில் துப்பறிவாளர் எனும் பதவிப்பெயர் உருவாக்கப்பட்டது. எனினும் புனைவில் ஒரு பெண் துப்பறிவாளர் தோன்றி (திருமதி பாஸ்சல் – 1861) ஐம்பத்தைந்து ஆண்டுகள் கழித்தே அவ்வமைப்பில் பெண் துப்பறிவாளர் பதவி உருவாக்கப்பட்டது.
பாதிரியார் பிரெளவ்ன் (ஜி.கெ. செஸ்டர்டன்), பெயரில்லாத கிழவர் (பரோனெஸ் ஒர்க்ஸி), பேராசிரியர் ‘சிந்திக்கும் இயந்திரம்’ (ழாக் ஃபுட்ரெல்), திருடனும் துப்பறிவாளனுமான அர்சென் லுபின் (மெளரிஸ் லெப்லாங்க்) என விதவிதமான பின்புலமுள்ள துப்பறிவாளர்கள் தோன்றினர். ஆயினும் 221 B பேக்கர் வீதியில் வசித்த ஷெர்லாக் ஹோம்ஸின் உலகமயமாகிய புகழுக்கு நிகராக வேறு ஒரு துப்பறிவாளரைக் காட்ட முடியாது. அகதா கிறிஸ்டி சித்தரித்த ஐந்து துப்பறிவாளர்களில் ஹெர்கியுல் பொய்ரோட்டை அடுத்ததாகச் சொல்லாம் என்றாலும் துப்பறிவாளர் கடவுட்தொகுப்பில் (pantheon) ஹோம்ஸ், கிரேக்க ஜியஸிற்கு நிகரானவராகத் திகழ்கிறார்.
காவல்துறையின் போதாமையிலிருந்தும் ஒரு துப்பறிவாளர் உருவாகிறார். பெரும்பாலும் காவல்துறை மையக்குவிமுக ஆட்சிமுறையாலும் (bureacracy), ஊழலாலும், வன்முறையாலும், விதிமுறைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் இவை எதுவுமே இல்லாத ஒரு துப்பறிவாளர் காவல்துறை விசாரணை அதிகாரியைக் காட்டிலும் நம்பகத்தன்மை மிக்கவராகிறார். தன்னுடைய வாடிக்கையாளரிடம் அல்லாமல் வேறு ஒருவரிடமும் தனது வேலைக்கான கூலியைத் துப்பறிவாளர் பெறுவதில்லை. இருப்பினும் ரேமண்ட் சாண்ட்லரின் ‘பெருந்தூக்கம்’ நாவலின் இறுதியில் உறுதியாகச் சொல்ல முடியாத வகையில் பிலிப் மார்லோ பணம் பெறுவதாக எழுதப்பட்டிருக்கும். சுஜாதாவை, ரேமண்ட் சாண்ட்லரின் தமிழ் வாரிசு என்றே சொல்லலாம். சாண்ட்லரின் உரைநடையை அடியொற்றி நடந்த சுஜாதாவை நம்மால் இந்நாவலில் அடையாளம் காண முடியும்.
3
ஒரு சிறந்த துப்பறியும் கதை இருவருக்கு இடையேயான போட்டியால் உருவாகிறது. குற்றமிழைத்தவரும், துப்பறிவாளரும் என்பதைக் கடந்து, துப்பறிவாளருக்கும் வாசகருக்குமான போட்டியினால் ஒரு கதை சிறந்ததாகவும், மோசமானதாகவும் மாறுகிறது. ஒரு துப்பறிவாளரைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர் ஏறக்குறைய அவருடைய சிந்திக்கும் முறைமையை அறிகிறார். அவரைப் போலவே குற்றம், அது நடந்த இடம், அங்கே விளக்கப்படும் பொருட்கள், அவற்றின் தன்மை, தடயங்கள், அறிமுகப்படுத்தப்படும் பாத்திரங்களுக்கும் குற்றமிழைக்கப்பட்டவருக்குமான தொடர்பு இவற்றை ஆராய்கிறார். எனினும் கவனச்சிதறலாலும், அறிவுக்கூறிலும் (cognition), சற்றே பின் தங்கிவிடுகிற வாசகர் குற்றவாளியைத் தவறவிட்டு, கதையின் இறுதிக்கட்டத்தில் (Denouement) துப்பறிவாளரை முந்திவிட அனுமதித்து விடுகிறார். மாறிக் கொண்டேயிருக்கும் பார்வைக் கோணத்தின் நொண்டி விளையாட்டில் கதையை எழுதியவரும் வாசகரோடு ஒரு போட்டி நடத்தி, பெரும்பாலும் துப்பறிவாளருக்குச் சாதகமான முடிவையே அளிக்கிறார். ரொனால்ட் (க்)னாக்ஸின் பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளையைக் கடைப்பிடிப்பது ஒரு வாசகருக்குத் துப்பறிவாளரை முந்திச் செல்ல உதவலாம்.
கட்டளை 1 : கதையின் ஆரம்பப் பகுதியிலேயே குற்றவாளி குறிப்பிடப்படுவதோடு, வாசகர், யாருடைய சிந்தனையைப் பின்தொடர அனுமதிக்கப்படாதவராக இருக்கிறாரோ அவரே குற்றவாளியாகவும் இருக்க வேண்டும்.
4
துப்பறியும் கதைகளின் பொற்காலத்தை இரண்டாகப் பிரிக்கிறார்கள் இலக்கிய வரலாற்றாசிரியர்கள். ஒன்று 1841-1914 காலகட்டத்தில் பெரும்பாலும் ஆண்களால் எழுதப்பட்டவை. சிறுகதைகளே இக்காலகட்டத்தின் பெரும் படைப்புகளாகக் கருதப்பட்டன. அதைத்தொடர்ந்து பொற்காலத்தின் இரண்டாவது காலகட்டம் 1920-1939களில் எழுதப்பட்ட நாவல்களால் நிறைந்தது. இந்த இரண்டாம் காலகட்டத்தில் துப்பறியும் புனைவெழுத்தில் மூன்று முக்கியமான பெண் எழுத்தாளர்கள் தோன்றி, ‘குற்ற (புனைவுகளின்) அரசிகள்’ என்றும் அழைக்கப்பட்டனர். அகதா கிறிஸ்டி, டோரதி எல் சேயர்ஸ், மார்கெரி அல்லிங்ஹாம். மேலும் அமெரிக்கா தலைசிறந்த படைப்புகளை அளிக்கத் துவங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். குறிப்பாக ரேமண்ட் சாண்ட்லர், ஜான் எம் கெய்ன் (குறிப்பாக தி போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் டுவைஸ்) ஆகியோர். சமகாலத்தில் ஜப்பானியக் குற்றப் புனைவுகள் ஈர்ப்பு மிக்கவையாக இருக்கின்றன. இக்கட்டுரைக்காக ஒரு கிளாசிக் ஜப்பானியக் குற்ற நாவல் ஒன்றையும், சமகால நாவல் ஒன்றையும் வாசித்தேன். செய்சோ மட்சுமோடோ எழுதிய ‘டோக்கியோ எக்ஸ்பிரஸ்’ மற்றும் கொரு டகமுரா எழுதிய ’லேடி ஜோக்கர்’. முன்னது துப்பறியும் நாவல்களின் செவ்வியல் விதிமுறைகளின்படி எழுதப்பட்டது. இரயில்வே அட்டவணையைப் பின்னணியாகக் கொண்டது. ஓர் ஊனமுற்ற பெண்ணின் வீட்டில் இரயில்வே அட்டவணையைப் பார்த்ததுமே நம்மால் எளிதாகக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும். அதற்கு மேலும் நாவல் நீள்வது நமக்கு நோக்கத்தைத் தெரிந்துகொள்ள மட்டுமே.
ஜப்பானிய இலக்கியம், துப்பறியும் கதைகள் இன்றளவும் ஈர்ப்புமிக்கவையாகவும், சொல்முறையில் புதியதாகவும் இருக்கின்றன. ஹிஸ்பானியாக் நாவல்களான ‘தி கிளப் டுமாஸ்’ (ஆர்துரோ பெரெஸ்-ரெவெர்தே), குவெல்லெர்மோ மார்டினெஸின் கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஆக்ஸ்போர்ட் மர்டர்ஸ்’ வாசிக்கப்படக் காத்திருக்கின்றன. குற்றம் உலகளாவியது.
கெடுவாய்ப்பாகத் தமிழில் கடந்த முப்பதாண்டுகளில் ஒரு துப்பறிவாளரும் தோன்றியிருக்கவில்லை. தேவனுடையதைத் தவிர சிறுகதைகளையும் பார்க்க முடியவில்லை. பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’யின் நாவலில் துப்பறியும் புனைவின் சாயலையும் காண முடியும். எனினும் அந்நாவல் ‘மூன்ஸ்டோன்’ போன்றதல்ல.
என்னைப் பொறுத்தவரையில் அன்னா கரினினா, அம்மா வந்தாள் போன்ற நாவல்களை எழுதுவதற்குத்தான் ஓர் எழுத்தாளருக்குத் துணிச்சல் தேவைப்படுமே அல்லாமல், அசிங்கமாக விவரிக்கப்படும் கொலைக்காட்சிகள் கொண்ட கதைகளை எழுதுவதற்கல்ல.
5
இல்லாத ஊருக்கு இரயில் விடுவதைப் போல, ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட விதிகளோடு நம்மால் மேலும் சிலவற்றைச் சேர்த்துவிட முடியும் என்று தோன்றுகிறது.
- திட்டமிடப்படாத ஒரு குற்றத்தில் துப்பறிவாளர் ஈடுபடுவதில்லை
- ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களை அவர் துப்பறிந்தாலும் குற்றவாளி அல்லது குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்களாக இருக்க மாட்டார்கள்
- மையக்கதை விவரிக்கப்பட்டு முடிந்ததும் தோன்றும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் குற்றமிழைத்தவராக இருப்பதில்லை
- ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றமிழைப்பவர்கள் ஒரு கதையின் குழப்பத்திற்கும், சிக்கலுக்கும் அடிப்படையாக அமையலாமே ஒழிய, கதையில் ஒரு துப்பறிவாளரால் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றமிழைப்பவர்களைப் பின் தொடர முடியாது
- சந்தேகத்திற்குரியவர்கள் குறைந்தது ஐந்து அல்லது ஏழு பேராக இருக்கலாம்
- ஹாலிவுட் சாயல் உள்ள திரைப்படங்களின் அந்நிய நாட்டுச் சதி, நாட்டின் நலன் போன்ற கருப்பொருட்களில் துப்பறிவாளர் ஈடுபாடு காட்டமாட்டார்
- குற்றமிழைப்பவர் சிறுவராக இருக்க மாட்டார். அவ்வாறு எழுதப்பட்டிருப்பின் ஓர் இளம் மேதையைத் தவறான திசையில் நடத்திச் செல்வதாகவே பொருள். ஆகவே கதையில் தோன்றும் சிறுவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
- காலயந்திரத்தில் முன்பின் வந்து போகின்றவர்களைத் தேடும் கதைகளும் வந்துள்ளன என்றாலும் வேற்றுக்கிரகவாசிகளைத் துப்பறிவாளர் தேடமாட்டார்
- ஒருபோதும் அவருக்கு நம்பிக்கை இருப்பினும், கடவுளிடம் தனக்கு உதவி செய்யும்படி ஒரு துப்பறிவாளர் வேண்ட மாட்டார்.
6
இக்கட்டுரைக்கு இவ்வாறு ஒரு தலைப்பை வைத்ததற்கு, தாமஸ் டிகுவென்ஸியின் பகடியான ‘நுண்கலைகளில் ஒன்றாகக் கருதப்படும் கொலையைக் குறித்து’ எனும் கட்டுரையும், மு. கருணாநிதியின் ‘மந்திரி குமாரி’யில் வில்லன் குற்றங்களைக் கலையென்று விவரிப்பதும், அத்திரைப்படத்தைக் குறித்து அசோகமித்திரன் எழுதியிருப்பதுமே காரணம்.
உசாத்துணை :
- The Omnibus of Crime – Dorothy L Sayers
- A defence of Detective Stories – G K Chesterton
- Murder for Pleasure – The life and Times of the Detective Story – Howard Haycraft
- Ibid
- Labyrinths of Detective Story and Chesterton – Jorge Luis Borges
- A detective story decalogue – Ronald A. Knox