அதிருப்தியைப் பெருக்கிய அமானுஷ்யம்-கார்மென் மரிய மஷாதோ,தமிழில்-சுபத்ரா

மிகச்சிறிதாகத்தான் அது ஆரம்பித்தது: மர்மமாக அடைத்துக்கொண்ட கழிவுநீர்க்குழாய்; படுக்கையறை ஜன்னலில் ஏற்பட்ட ஒரு கீறல். நாங்கள் சமீபமாகத்தான் அங்கே குடியேறியிருந்தோம், அப்போது கழிவுநீர்க்குழாய் சரியாகத்தான் இருந்தது, ஜன்னலும் கச்சிதமாய் இருந்தது, பிறகு திடீரென ஓர்நாள் காலை அவை மாறிவிட்டன. என் மனைவி தன் நகத்தை லேசாக அந்தக்கீறலின்மீது சுண்டிப்பார்த்தபோது உள்ளே வர அனுமதிக்கும்படி யாரோ தட்டுவது போல அது ஒலித்தது.

பிறகு மசாலாப் பொருட்கள் காணாமலாகின. கடல் உப்பு, மருவு, ரோஸ்மேரி, எங்களது தனித்துவமான கோழித்தீவனமும்கூட. இறுதியாகக் குங்குமப்பூ – 40 டாலர் மதிப்புடையது – ”ஒருவேளை சமையலறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறாயா?” என என் மனைவியை வினவினேன். ”இல்லை” என்றாள் அவள். சிலநாட்கள் கழித்து மெல்லிய சிவப்பு நூல்கள் என் மார்புக்கச்சையின் இரு கூம்புகளிலும் சிதறியிருப்பதைக் கண்டேன். அதை அத்தாட்சியாக – எதற்கான அத்தாட்சி என்பதை நான் உறுதியாக அறியாவிட்டாலும் – அவளிடம் எடுத்துச்சென்றேன். ஆனால் உறங்கும் முன்பு அந்த மார்புக்கச்சையை நான் தரையில் உதிர்த்த அந்த இரவிலும் சரி, அடுத்தநாள் அதைக் கையில் எடுத்தபோதும் சரி, அவள் ஊரில் இல்லை.  நான் அந்தக் குங்குமப்பூவைச் சேகரிக்க முயன்றேன், ஆனால் அது என் விரல் நுனிகளை எரிகின்ற-செம்மஞ்சள் நிறமாக்கி தூசிபோல் கரைந்துவிட்டது. அந்நிறம் விரலிலிருந்து நீங்குவதற்குப் பலநாட்களாகியது.

அண்டைவீட்டினரைக் குற்றம்சாட்டினோம். பூனையைக் குறைகூறினோம். ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டோம். குறிப்பாக நான் குளியலறையிலும் அவள் படுக்கையறையிலும் இருந்தபோது, “அன்பே, தரைத்தளத்திலிருந்து ஒலிக்கிற அந்த சப்தம் உனக்குக் கேட்கிறதா? அது என்ன என்று பார்க்க முடியுமா?” என அவள் சொல்வதைக் கேட்டேன். பதிலாக, “இனியவளே, பரணில் ஒலிக்கிற அந்த சப்தம் உனக்குக் கேட்கிறதா? அங்கே சென்று அது என்னவெனப் பார்க்கமுடியுமா?” என்கிற என் பதிலையே அவள் பெற்றாள். அதற்காகச் சென்றபோது, அதிர்ஷ்டவசமாக, வழியிலுள்ள நடைபாதையில் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டோம், இல்லையென்றால் வீட்டின் அந்த இடைஞ்சலான இடுக்குகளில் எங்களுக்காக என்ன காத்துக்கொண்டிருந்திருக்கும் என்பதை யார் அறிவார்.

ஆனால் அது எனக்குப் பிறகுதான் புரிந்தது. அச்சமயத்தில் நாங்கள் மேலும் மேலும் குற்றப்படுத்திப் பின் இதுகுறித்து வேறு எதுவும் பேசவேண்டாம் என முடிவுசெய்து கொண்டோம்.

விசித்திரங்கள் எங்கள் அதிருப்திக்குத் தீனிபோட்டன. ஏற்கனவே தனிமையிலும் பலவீனமாகவும் இருந்த நாங்கள், இப்போது குழந்தைகளைப் போன்ற கூருணர்வுடன் அறைக்குள் பரபரத்துக்கொண்டிருந்தோம். கழிவுநீர்க்குழாய் அடைத்துக்கொண்டதற்கும் ஜன்னலில் கீறல் விழுந்ததற்கும் முன்பாகவே நாங்கள் மனநல ஆலோசனை குறித்து யோசித்தோம், ஆனால் எதற்கு அழுகிறாள் என்றே உங்கள் மனைவி உங்களிடம் சொல்லாத போது, அமானுஷ்யமான ஒன்று உங்களது இடது உள்ளங்கையில் மோர்ஸ் எழுத்துருக்களை அழுத்தமாகக் கீறிக்கொண்டிருக்கும்போது உங்களால் எப்படி மனநல ஆலோசனைக்காக நேரம் ஒதுக்குவது குறித்து யோசிக்க முடியும். மின்சாரம் தடைப்பட்ட ஓர் மாலையில் எனது கையிலும் அது அவ்வாறுதான் செய்திருந்தது.

அதன்பிறகு இரவில் எதோ நடமாட்டம் தெரிந்தது. பூனை காணாமலாகும்வரை அது பூனை போல் தோன்றியது; ஆனால் பின்பும் அந்தப் பாத ஒலி தொடர்ந்தது, எங்களது படுக்கையை ஒரு செயற்கைக் கோளைப்போலச் சுற்றிய அது மென் பாதங்களாய் இருந்தபோதிலும் தொந்தரவாகவே இருந்தது. இருளில் படுத்திருந்த நாங்கள் மாறி மாறி வினவிக்கொண்டோம்: “நாம் எப்போது சந்தித்தோம் என உனக்கு நினைவிருக்கிறதா?” ”ரெனோவில் ஹோட்டலின் படுக்கை முழுக்க நீ ஷாம்பெய்னைச் சிந்தியது எப்போதென நினைவிருக்கிறதா?” ”மளிகைக்கடையில் நாம் பார்த்த அந்த மூதாட்டியை உனக்கு நினைவிருக்கிறதா, குழந்தைகளுக்கான பொம்மையைக் கையில் வைத்திருந்தாளே?” “நமது பதினைந்தாவது திருமண நாளில் உனது சொந்தக்காரக் குழந்தை படியிலிருந்து விழுந்தது நினைவிருக்கிறதா?” “உன் நகங்களை மென்மையாகக் கடிக்க முற்பட்டுப் பின் எதிர்பாராவிதமாக அதை நான் மிக அழுத்தமாகக் கடித்துவிட்டது நினைவிருக்கிறதா?” நாங்கள் அமைதியான போதெல்லாம், எங்களைச்சுற்றி நடந்த அது மெதுவாகச் சூடாக்கப்படுகிற ஒரு பாத்திரம்போலக் கொதித்ததால், சோர்வாகும்வரை நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம்.  பைஜாமா அணிந்தபடி உறங்கச்சென்ற நாங்கள் விழித்தபோது அவை படுக்கையின் காலடியில் மடித்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். ஓர் அதிகாலையில் என் மனைவியின் காலில் ஒரு நீலநிற நாடா சுற்றப்பட்டிருக்க அதனோடு ஒரு சிறிய வெள்ளிமணி கோர்க்கப்பட்டிருந்தது.

என் சீப்பு காணாமலாகிப் பின் கழிவறைக் கோப்பைக்குள் கிடந்தது. என் மனைவியின் தினசரி வைட்டமின் மாத்திரைகளுக்குப் பதிலாக இரண்டரை அங்குல ஆணிகள் கிடந்தன. செவ்வாய்க்கிழமைகளில் எங்களது முழுநீளக்கண்ணாடி நாங்கள் சிறுமிகளாக இருந்த பிம்பங்களையே காட்டியது: அவள் அசிங்கமாகவும் நான் குண்டாகவும் இருவருமே அழகற்றும், நாங்கள் இருவரும் ஒருவரை மற்றவரும் இந்த வீட்டையும் கண்டடைவதற்குப் பல வருடங்களுக்கு முந்தைய பிம்பம். ஆத்திரத்தில் அந்தக் கண்ணாடியை உடைத்துவிட்டேன்.

நூலகத்திலும் தலைமைச் செயலகத்திலும் உள்ளூரிலுள்ள வரலாற்று மையத்திலும்  ஆய்வுகள் நடத்தினோம். எங்கள் வீட்டை உள்ளடக்கிய இந்நிலத்தில் முன்பு குற்றவாளிகளுக்கான கல்லறை இருந்ததாக அறிந்துகொண்டோம். அதுமட்டுமின்றி வீடு கட்டி முடிக்கப்பட்ட அச்சமயத்தில் எங்கள் படுக்கையறையில் ஒரு பெண்ணை அவளது காதலன் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறான். பெருமந்தக் காலத்தில் ஓர் ஆள் கூரையில் தூக்கிட்டுக் கொண்டிருந்திருக்கிறான். பணயத்தொகை குறித்தெல்லாம் எந்தக்கவலையும் இல்லாத ஒருவன், பதின்மவயதுப் பெண்ணொருத்தியைக் கடத்தி எழுபதுகளில் ஓராண்டு முழுவதும் தரைத்தளத்தில் அடைத்துவைத்திருந்திருக்கிறான் – பின் அந்த உடலின் பாகங்களை ரஷ்ய வலைபொம்மைகளுக்குள் வைத்து அவளது குடும்பத்திற்கு அனுப்பி மீதப் பாகங்களை முற்றத்தில் எரித்திருக்கிறான். எங்களுக்கு முன் இங்கு குடியிருந்தவர்களைப் பற்றி விசாரித்தோம். அவர்களது எட்டுவயது மகன் முற்றத்தில் நீள்கின்ற – பூலோகத்திற்கும் எமலோகத்திற்கும் நடுவிலுள்ள – படுகையில் கிளம்பியிருக்கிறான்.

ஒரு பூசாரியை அழைத்தோம். எல்லா அறைகளிலும் பிரார்த்தனை நடத்தி புனிதத் தீர்த்தத்தைச் சுவர்சித்திரங்களில் தெளித்த அவர், நாங்கள் இருவரும் சகோதரிகளா எனக் கேட்கும் முன்வரை ஒவ்வொரு வாயிலில் இருந்தும் எங்களைச் சந்தேகத்துடன் பார்த்தார். பிறகு நாங்கள் குறிசொல்கிற ஒருத்தியை அழைத்தோம், துவக்கத்தில் அசுவாரஸ்யமாகக் காணப்பட்ட  அவள்,  எங்களது உலர்த்தும் இயந்திரத்தைத் திறந்தபோது அது அவளைக் காற்றில் தூக்கி எறிந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒருசிலுவையில் தொங்கியபடி எங்களால் அடையாளம் கூறமுடியாத மொழியில் எதையோ ஒப்பித்தாள் அவள். ஒருவரும் அறியாத மிகப்பழங்காலத்தினுடையது போல ஒலித்தது அம்மொழி. ஆவிகளுடன் பேசும் பலகையைச் சமையலறையில் வைத்தபோது அது தானே எகிறி வந்து எங்களது தலைக்கருகில் இருந்த ஜிப்ஸம் சுவற்றில் ஆழப்புதைந்தது. 

இறுதியில், வெறுமனே ‘செல்வி’ என்றழைக்கப்பட்ட ஒரு பெண்ணைக் குறித்து வாய்வழியாகக் கேள்விப்பட்ட நாங்கள் அவளை அழைத்தோம். மற்றவர்கள் கோட்டைவிட்ட இடங்களில் இவள் வலுவானவள் என எல்லோரும் உறுதியாகச் சத்தியம் செய்தபோதும் இவளுமே தோற்றுத்தான் போனாள். எங்களது எல்லாப் பொருட்களையுமே எரித்துவிட்டு நாங்கள் இங்கிருந்து நீங்கிவிடுவதுதான் நல்லதெனக் கிளம்பும்போது அவள் சொன்னாள்.  இதுபோன்ற கதைகளுக்கு இனிய முடிவென்பதே ஒருபோதும் கிடையாதெனக்கூறிய அவள், தனது தலையிலிருந்து உடைந்த கண்ணாடித் துகள்களை உதறியபடியும் சாம்பிராணிப் புகையைத் தன் உடல்மேல் படரவிட்டபடியும் வெளியேறினாள்.

நானும் என் மனைவியும் அதுகுறித்தும் சண்டையிட்டுக் கொண்டோம். அவள் இங்கிருந்து கிளம்பிவிட விரும்பினாள், நான் அதற்கு அனுமதிக்கவில்லை. “என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்ற அவள், “எனக்கு நிம்மதியாக என் வாழ்க்கையை வாழ்ந்தால் போதும்” என்றபடி தன் மூக்கை ஒரு காஃபி ஃபில்டருக்குள் நுழைத்துக் கொண்டாள். ஏனென்றால் வீட்டிலிருந்த மற்ற எல்லாமே எரிந்து சாம்பலாகியிருந்தன.

“ஆனால் இப்போது நமது வாழ்க்கை இங்கேதான் இருக்கிறது” என்றேன் நான். ”அதுமட்டுமின்றி நம்மால் இந்த ஒப்பந்தத்தையும் மீற முடியாது.”

அது ஒரு மிகப்பெரிய அவமானம்: பேய்வீடொன்றினை சந்தை நிலவரத்தைவிட அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் செய்திருந்ததால், எங்களிடம் வேறு வீட்டிற்கு மாறப் பணமும் இல்லை. நாங்கள் அவருக்குச் சில செய்திகளைப் பதிவுசெய்து அனுப்பியதற்கு, சாக்கடையின் ஆழத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மஞ்சள் முடிக்கற்றைகளும் புரிந்துகொள்ள இயலாத சின்னம் வரையப்பட்டிருந்த ஒரு சிட்டுக்குருவியின் எலும்பும் கையில் கொண்டிருந்த ஒரு கைவினைஞனை அனுப்பியதைத் தவிர வேறெந்த வகையிலும் அவர் எங்களது பிரச்சனை சார்ந்து தீவிரமாக எதையும் செய்யவில்லை.

அந்த இறுதிப்பிற்பகலில், நான் எங்களது படுக்கையறைக் கதவைத் திறந்தபோது திரைச்சீலைகளை இறக்கிவிட்டபடி என் மனைவி துயிலுறங்கும் காட்சிக்குப் பதிலாக, பழங்காலத்தைய நூற்றாண்டொன்றினைச் சேர்ந்த பெண்ணுடைய தனியறையைக் கண்டேன். கண்ணாடிமுன் நிர்வாணமாக அமர்ந்து தன் கூந்தலை முடிந்துகொண்டிருந்த அவள் என்னைக் கவனித்தது போலவே தெரியவில்லை. படுக்கையை நோக்கியபோது, மெல்லிய விதானத்திற்குள் ஓர் உருவம் நீண்ட சோர்வு தரும் கனவொன்றிலிருந்து அப்போதுதான் மீள்வதுபோல அசைந்தது. போர்வைக்கடியிலிருந்து வெளியே ஒரு காலை நீட்டியபோது அதன் பாதம் பழுப்புநிறத்தில் அழுக்காய்க் காணப்பட்டது. எத்தனையோ மாதங்களில் முதன்முறையாக நான் வீட்டிற்குள் அச்சம் இன்றி உணர்ந்தேன். உலகின் அபாயங்களெல்லாம் ஜன்னலுக்கு வெளியேதான், இங்கே வீட்டிற்குள் அஞ்சுவதற்கு எதுவுமில்லை என்னும் உணர்வினை அனுபவித்து எத்தனை காலம் ஆகிவிட்டது!  இந்த அறை பாதுகாப்பானதாகவும் கதகதப்பானதாகவும் நறுமணம் நிறைந்ததாகவும் அதிகாலையின் அமைதியுடனும் முதுவேனில் காலத்தினதாகவும் இருந்தது.

அந்த இளம்பெண் தனது கைகளால் தலையை வருடி,  பின் நாடியை உயர்த்தி உதட்டினை இழுத்து அது மீண்டும் பற்களின் மேல் ஈரமாக மோதும்படி விடுவித்தாள். பிறகு படுக்கைக்குள் தவழ்ந்துசென்ற அவள், சிவந்த தோலும் கன்னங்களில் குழிவிழும்படியான புன்னகையும் கொண்டிருந்த அவளது காதலியுடன் அமர்ந்து  முகத்தை வருடினாள். ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டபோது அவர்கள் சிரித்துக்கொண்டதை என்னால் கேட்க முடிந்தது. மிக ஈரமாகவும் உயிரோட்டமாகவும் இருந்த அவர்களது முத்தம் தங்களுக்குள் அவர்கள் ஒரு சிப்பியைப் பரிமாறிக்கொண்டதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.  என் கண்கள் கலங்குவதை நான் உணர்ந்தேன். கதவை இறுகச்சாத்தினேன்.

மீண்டும் நான் அதைத்திறந்தபோது, அப்போதுதான் எழுந்ததுபோலவும் சோகமயமாகவும் என் மனைவி அங்கே நின்றுகொண்டிருந்தாள்.

அதன்பின் நாங்கள் மட்டும் சேர்ந்து வாழ்ந்தோம்.

-கார்மென் மரிய மஷாதோ,தமிழில்-சுபத்ரா

2 COMMENTS

  1. அடடே… வாசிக்க வாசிக்க… திகில் உணர்வை அப்படியே நம்முள் கடத்தி விடுகிறது திகிலாக.

  2. நல்ல திகில் கனவு கதையினை எளிதாக படிக்கும்படி மொழி பெயர்ப்பு.நன்றி.அந்த பெரு மந்த காலம் கொங்கு வார்த்தை புதிதாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.