அந்த நான்கு நாட்கள்-செவோலோட் கார்ஷன்,தமிழில்–கீதா மதிவாணன்

நாங்கள் எவ்வளவு அதிவேகமாகக் காட்டுக்குள் ஓடினோம், தோட்டாக்கள் எப்படிச் சீறிவந்தன, அவற்றால் துளைக்கப்பட்ட மரக்கிளைகள் எப்படி எங்களைச் சுற்றி சடசடவென விழுந்துகொண்டிருந்தன என்பதையெல்லாம் நான் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அப்போது துப்பாக்கிச்சூடு கடுமையாக நடந்துகொண்டிருந்தது. நாங்கள் காட்டின் எல்லைப்பகுதிக்கு வந்தபோது சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அங்கும் இங்கும் மின்னியது. துருக்கியின் முதலாம் படைக்குழுவின் இளம்வீரன் சிதரோவ் – ‘அவன் எப்படி எங்களுக்கு இடையில் மாட்டினான்?” எனக்குள் கேள்வி எழுந்தது. அவன் சட்டென்று கீழே அமர்ந்து துணுக்குற்ற விழிகளால் என்னை வெறித்துப் பார்த்தான். அவன் வாயிலிருந்து குபுக்கென்று இரத்தம் கொப்பளித்தது. எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறது. காட்டின் எல்லையைக் கிட்டத்தட்ட அடைந்த நிலையில் அடர்ந்த புதர்களுக்குள் எப்படி அவனைப் பார்த்தேன் என்பதும் நன்றாக நினைவில் இருக்கிறது.  

அந்தத் துருக்கியன் ஆஜானுபாகுவாக மிகப் பருமனாக இருந்தான். நான் பலவீனமாகவும், ஒடிசலாகவும் இருந்தபோதிலும் அவனை நோக்கி ஓடினேன். பட்டென்று ஏதோ வெடித்ததுபோல் இருந்தது. மிகப்பெரிய ஏதோவொன்று என்னை உரசியபடிப் போனது. என் காதுகளுக்குள் கொய்ங்ங் என்றது. அவன் என்னை நோக்கிச் சுட்டிருக்கிறான் என்று புரிந்தது. அவனோ பீதியில் உறைந்தவனாய் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே முள்புதருக்குள் விழுந்து ஓடினான். அவன் கொஞ்சம் சுதாரித்திருந்தால் முள்புதரைச் சுற்றிக்கொண்டு ஓடியிருக்கலாம். ஆனால் பயம் அவன் மூளையை மழுங்கடித்துவிட்டது. அவன் முள்புதருக்குள் விழுந்து முள்கிளைகளுக்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கிடந்தான்.

ஒரே அடியில் அவனுடைய துப்பாக்கி என் கைக்கு வந்துவிட்டது. துப்பாக்கியின் ஈட்டி முனையால் அவனை ஓரே ஒரு குத்து விட்டேன். அவனிடமிருந்து அலறலும் இல்லாத முனகலும் இல்லாத ஒரு விநோத ஒலி எழுந்தது. பிறகு நான் அங்கிருந்து முன்னேறி ஓடினேன். எங்களுடைய வீரர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் சுட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் சுடப்பட்டுக் கீழே விழுந்துகொண்டிருந்தார்கள்.

காட்டை விட்டு சமவெளிக்கு வந்தபிறகு மற்றவர்களைப் போலவே நானும் பல சுற்றுகள் சுட்டது நினைவுக்கு வருகிறது. திடீரென்று “வெற்றி! வெற்றி!” என்ற பலத்த குரல் கேட்டது. நாங்கள் அணிவகுத்து மேலும் முன்னேறினோம். சரியாகச் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் என்பது எங்கள் அணியை. அதில் நான் இல்லை. நான் பின்தங்கிவிட்டேன். அது எனக்கு விநோதமாக இருந்தது. அதை விடவும் விநோதம் சட்டென்று எல்லாமே மாயமாய் மறைந்துபோயின. போர்க்களத்தின் எல்லா ஆரவாரங்களும் ஓசைகளும் நின்றுபோயின. எனக்கு அப்போது எதுவுமே கேட்கவில்லை. ஆனால் நீல நிறத்தில் எதுவோ என் கண்களுக்குத் தென்பட்டது. அது ஆகாயமாக இருக்கக்கூடும். பிறகு அதுவும் மறைந்துபோயிற்று.

——

அப்படியொரு எக்குத்தப்பான நிலையில் நான் ஒருபோதும் இருந்தது கிடையாது. நான் குப்புறக் கிடந்தேன். எனக்கு முன்னால் கொஞ்சம் தரை மட்டுமே தெரிந்தது. சிதறிக்கிடந்த சில பசும் புற்களையும் அவற்றில் ஊர்ந்து செல்லும் எறும்புகளையும் மக்கிய புற்குவியலையும் மட்டுமே பார்க்க முடிந்தது. இவை யாவற்றையும் என்னுடைய ஒரு கண்ணால் மாத்திரமே பார்த்தேன். மற்றொரு கண்ணைத் திறக்க முடியாதபடி கடினமாக ஏதோவொன்று இமையின்மேல் அழுத்திக்கொண்டிருந்தது. அநேகமாக அது என் தலையைத் தாங்கிப் பிடித்திருக்கும் மரக்கிளையாக இருக்கக்கூடும்.

அந்தநிலை எனக்கு மிக அசௌகரியமாகவும் அவமானகரமாகவும் இருந்தது. நான் எவ்வளவு முயன்றாலும் ஏன் என்னால் கொஞ்சம் கூட அசையமுடியவில்லை என்பதும் ஆச்சரியமாக இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் போனது. வெட்டுக்கிளிகளின் கிறீச்சொலிகளையும் தேனீக்களின் ரீங்காரத்தையும் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. ஒருவழியாகக் கஷ்டப்பட்டு என்னுடைய வலக்கையை வயிற்றுக்கு அடியிலிருந்து வெளியே எடுத்தேன். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி மண்டியிட்டு எழ முயன்றேன்.

மின்னல்வெட்டு போல சுரீரென்று ஒரு வலி என் முழங்காலில் தொடங்கி முதுகு, நெஞ்சு, தலை என உடல் முழுவதும் பரவியது. மீண்டும் நான் கீழே விழுந்தேன். மறுபடியும் இருட்டு, மறுபடியும் சூன்யம்.

—-

நான் சுய நினைவுக்கு வந்தேன். கருநீல நிற பல்கேரிய வானில் ஒளிரும் விண்மீன்களை எப்படி என்னால் பார்க்க முடிகிறது? நான் ஏன் இப்போது என்னுடைய கூடாரத்தில் இல்லை? நான் ஏன் அதை விட்டு வெளியே வந்தேன்?

நான் அசைய முயன்றபோது தாங்கமுடியாத கடுமையான வலியை என் கால்களில் உணர்ந்தேன். அப்படியென்றால்… ஆம், நான் போரில் காயமுற்றிருக்கிறேன். மிக மோசமாகவா? இல்லையா? வலித்த இடத்தைத் தொட முயன்றேன். இடது வலது இரு கால்களுமே உறைந்த இரத்தத்தால் மூடப்பட்டிருந்தன. என் கைகளால் அவற்றைத் தொட்டபோது வலி பின்னியது. பல்வலியைப் போன்று தொடர்ச்சியான, உயிர் போகும் வலி. காதுக்குள் மணிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தலை பாரமாகிக்கொண்டே போனது. இரண்டு கால்களிலும் அடிபட்டிருக்கிறது என்பது மிக மெதுவாகத்தான் புரிந்தது.

அப்படியென்றால் என்ன அர்த்தம்? ஏன் அவர்கள் என்னைத் தேடி வரவில்லை? துருக்கிப்படை எங்களைத் தோற்கடித்துவிட்டதா? என்ன நடந்தது என்று மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தேன். யோசிக்க யோசிக்க, முதலில் மங்கலாகவும் பிறகு தெளிவாகவும் புலனானது. நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஏனெனில் நான் கீழே விழுந்து கிடக்கிறேன். அது எப்படி என்று நினைவில்லை. ஆனால் எங்கள் அணி எப்படி வேகமாக முன்னேறிச் சென்றது என்பது நினைவில் உள்ளது. என்னால் அவர்களோடு ஓட முடியவில்லை. என் கண்முன்னால் எதுவோ நீல நிறத்தில் தென்பட்டது. அதைத் தவிர வேறெதுவும் புலப்படவில்லை. இப்போது மலைமுகட்டில் வெட்டவெளியில் விழுந்துகிடக்கிறேன்.

எங்கள் படைத்தலைவர் இந்த வெளியைக் காட்டி கனத்தக் குரலில் கட்டளையிட்டார், “வீரர்களே, நாம் அங்கு போகவேண்டும்” இப்போது நாங்கள் இங்கே இருக்கிறோம் என்றால் நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்பது உறுதி.

பிறகேன் அவர்கள் என்னை இன்னும் தூக்கிச் செல்லாமல் இருக்கிறார்கள்? இப்படி வெட்ட வெளியில் எதிரியின் பார்வைக்கு எளிதில் புலப்படும்படியாக விட்டு வைத்திருக்கிறார்கள்? இந்த இடத்தில் நான் மட்டும் இல்லை என்பது தெளிவானது. துப்பாக்கிச்சூடு தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தது. தலையைத் தூக்கிப் பார்த்தால் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும். இப்போது என்னால் அதைச் செய்ய இயலும். முதலில் குப்புறக் கிடந்தபோது என் கண்களுக்குப் புற்களும் எறும்புகளும் மட்டுமே தெரிந்தன. நான் எழ முயன்று மறுபடியும் விழுந்தபோது மீண்டும் குப்புற விழாமல் மல்லாந்து விழுந்திருக்கிறேன். அதனால்தான் இப்போது என்னால் நட்சத்திரங்களைப் பார்க்க முடிகிறது.  

நான் எழுந்து உட்கார முயன்றேன். இரண்டு கால்களிலும் அடிபட்டிருக்கும் நிலையில் அது சாத்தியமாகவில்லை. பலமுறை முயன்று தோற்றேன். இறுதியாகத் தாளமுடியாத வலியோடும் கண்ணீரோடும் எழுந்து உட்கார்ந்தேன். என் தலைக்கு மேலே மரங்களின் நடுவில் சிறிய அளவில் கருநீல வானமும் அதில் ஒரு பெரிய நட்சத்திரமும் சில குட்டி நட்சத்திரங்களும் ஒளிர்ந்துகொண்டிருந்தன. நான் இப்போது காட்டுக்குள் இருக்கிறேன். என் தோழர்களால் நான் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது. அச்சத்தில் என் தலைமயிர்கள் நட்டுக்கொண்டு நிற்பதை என்னால் உணரமுடிந்தது. 

வெட்டவெளியில் சுடப்பட்ட நான் எப்படி இப்போது காட்டுக்குள் கிடக்கிறேன்? அடிபட்டதால் வலி தாங்க முடியாமல் பிரக்ஞை இல்லாமலேயே நான் இங்கு ஊர்ந்து வந்திருக்கிறேன் போலும். ஆனால் என்ன விசித்திரம் என்றால், அங்கிருந்து ஊர்ந்து வந்திருக்கக்கூடிய என்னால் இப்போது கொஞ்சம் கூட அசைய முடியாமல் இருப்பதுதான். ஒருவேளை அப்போது ஒரு தோட்டா மட்டும் பாய்ந்திருந்து, நான் இங்கு வந்த பிறகு இன்னொரு தோட்டா துளைத்திருக்கலாம். வெளிறிய இளஞ்சிவப்புநிற ஒளிக்கீற்றுகள் என்னைச் சூழ்வது போலிருந்தது. பெரிய நட்சத்திரம் மங்கலானது. சிறியவை மறைந்துபோயின. நிலவு எழுந்தது. இப்போது வீட்டிலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அருகில் ஏதோ விநோதமான சத்தம் கேட்டது. யாரோ முனகுவது போல் இருந்தது. ஆமாம். முனகலே தான். என்னைப் போலவே யாரோ கண்டுகொள்ளாமல் விடப்பட்டு எனக்குப் பக்கத்திலேயே கிடக்கிறார்களோ? காலில் அடிபட்டிருக்கிறதோ அல்லது உடலில் குண்டு பாய்ந்திருக்கிறதோ?

இல்லை! அந்த முனகல் ஒலி எனக்கு மிகச் சமீபமாகக் கேட்டது. ஆனால் அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை. 

அடக்கடவுளே! அது நான்தான். ஈனஸ்வரத்தில் அவலமான முனகல். எனக்கு அந்த அளவுக்கா மோசமாக அடிபட்டிருக்கிறது? இருக்கலாம். ஆனால் வலியின் வேதனையை உணரமுடியாதபடி என் தலை பாறாங்கல்லாய்க் கனத்துக் கிடந்தது. அசையாமல் அப்படியே படுத்துத் தூங்கிவிடவேண்டும். தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் எப்போது எழுவேன்? எழுவேனா? அது ஒன்றும் பிரச்சினையில்லை.

இப்போதைக்கு நான் செய்யக்கூடியது பேசாமல் படுத்துக் கிடப்பது ஒன்றுதான் என்று முடிவு செய்த கணம், மங்கலான நிலா வெளிச்சத்தில் நான் படுத்துக்கிடந்த இடம் பார்வைக்குப் புலனானது. நான் இருந்த இடத்திலிருந்து சுமார் ஐந்தடி தூரத்தில் கருப்பு நிறத்தில் பெரிதாக எதுவோ கிடந்தது. நிலவொளியில் ஆங்காங்கே உலோகம் போல் ஏதோ மின்னியது. பொத்தான்கள் அல்லது ஆயுதமாக இருக்கவேண்டும். அங்கே யாரோ அடிபட்டுக் கிடக்கவேண்டும் அல்லது இறந்துகிடக்கவேண்டும். எதுவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. நான் தூங்கப் போகிறேன்.

இல்லை. அது முடியாது. எங்களுடைய வீரர்கள் இன்னும் போயிருக்க மாட்டார்கள். அவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். துருக்கியர்களைத் தோற்கடித்து விரட்டிவிட்டு இங்கேதான் முகாமிட்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் எந்தப் பேச்சுச் சத்தமும் கேட்கவில்லை? கணப்புத் தீயின் சடசடப்பும் கேட்கவில்லை? ஏனென்றால் அவற்றையெல்லாம் கேட்க இயலாத அளவுக்கு நான் பலவீனமாக இருக்கிறேன். நிச்சயமாக அவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

“உதவி! உதவி!”

என் குரல்வளையிலிருந்து காட்டுத்தனமான, கரகரப்பான அலறல்கள் வெடித்தெழுந்தன. அவற்றுக்கு எந்த பதிலும் இல்லை. இரவுப் பொழுது என்பதால் அவை உரக்கவே ஒலித்திருக்கும். ஆனால் எங்கும் அமைதியே நிலவியது. சில்வண்டுகளின் சத்தம் மட்டுமே ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது. நிலவு தன் வட்ட முகத்தால் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.

அவன் அடிபட்டுக் கிடந்திருந்திருந்தால் என்னுடைய இந்த ஓலம் நிச்சயம் அவனை எழுப்பியிருக்கும். அது ஒரு பிரேதம். எங்கள் ஆளா அல்லது துருக்கிக்காரனா? அடக்கடவுளே! அது எதுவாக இருந்தால்தான் என்ன? நெருப்பெனத் தகிக்கும் என் கண்களைத் தூக்கம் தழுவ ஆரம்பித்தது.

—————–

விழிப்பு வந்து வெகுநேரமாகியும் நான் கண்களைத் திறக்காமலேயே படுத்துக்கிடந்தேன். நான் கண்ணைத் திறக்க விரும்பவில்லை. ஏனெனில் பிரகாசமான சூரிய ஒளியை மூடிய இமைகளினூடாகவே என்னால் உணரமுடிந்தது. கண்ணைத் திறந்தால் என் பார்வை பறிபோவது உறுதி. மேலும் உடம்பை அப்படி இப்படி அசைக்காமல் இருப்பதே நல்லது. நேற்று… (அது நேற்றுதானே?) எனக்குக் காயம்பட்டது. ஒரு நாள் கழிந்துவிட்டது. இன்னும் ஒரு நாள் கழிந்தால் நான் இறந்துவிடுவேன். நல்லது. நகராமல் இருப்பது உத்தமம். என் உடல் இப்படியே அசைவின்றிக் கிடக்கட்டும். உடலின் இயக்கத்தை நிறுத்த முடிவது போல் மனதின் இயக்கத்தையும் நிறுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் வழியில்லையே. ஏதேதோ சிந்தனைகளும் நினைவுகளும் மண்டையைக் குடைந்துகொண்டே இருந்தன. அதிக நேரம் எடுக்காது. எல்லாம் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

செய்தித்தாள்களில் ஒரு சில வரிகளில் மட்டும் இடம்பெறுவேன். ‘எங்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய இயலாதது. பலர் காயமுற்றனர். இவானோவ் என்ற தன்னார்வப் படைவீரன் கொல்லப்பட்டான்.’ இல்லை, பெயர் கூட வெளிவராது. ஒரு தன்னார்வப் படைவீரன் என்று மட்டும்தான் குறிப்பிடப்படுவேன், ஒரு நாயைப் போல… சட்டென்று ஒரு காட்சி என் மனக்கண்ணில் மின்னி மறைந்தது. 

வெகு நாட்களுக்கு முன்பு, நான் இங்கு இப்படிக் காலுடைந்து கிடப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பு, என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே மிகச்சரியாக அமைந்திருந்த காலத்தில்…

ஒருநாள் நான் தெருவில் ஏதோ வேலையாகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது வழியை மறித்தபடி கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தின் நடுவில் வெள்ளை நிறத்தில் உடல் முழுவதும் இரத்தம் தோய்ந்து, வேதனையோடு விம்மிக்கொண்டிருந்த எதையோ அக்கூட்டம் அமைதியாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அது ஒரு அழகிய சின்னஞ்சிறு நாய். ஒரு கோச்சுவண்டி அதன் மீது ஏறிப் போயிருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருந்தது, இப்போது நானிருப்பதைப் போலவே. சட்டென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு காவலாளி வந்தார். நாயின் பின்னங்கழுத்தைப் பிடித்துத் தூக்கிச்சென்றார். கூட்டம் கலைந்துபோனது.  

என்னைத் தூக்கிப்போக யாராவது வருவார்களா? வர மாட்டார்கள். இங்கேயே கிடந்து சாகவேண்டியதுதான். வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது! அன்று (நாய் அடிபட்டுக் கிடந்த அன்று) நான் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் குடித்திருந்தேன். அதுதான் காரணம். ஏ நினைவுகளே! என்னை விட்டு விலகிச் செல்லுங்கள். என்னைத் துன்புறுத்தாதீர்கள்! என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். கடந்தகால மகிழ்ச்சிகள், நிகழ்காலத் துயரங்கள்… என வரிசை கட்டி வாராதீர்கள்!

தற்போதைய உடல் வேதனை மட்டுமே என் கவனத்தில் இருக்கட்டும். பழைய நினைவுகள் என்னை இம்சிக்காதிருக்கட்டும். ஏனெனில் கடந்த காலமும் நிகழ்காலமும் தன்னிச்சையாக ஒன்றை ஒன்று ஒப்புநோக்கி என்னை ஏக்கமுறச் செய்கின்றன. பச்சாதாபங்களே… நீங்கள் காயங்களை விடவும் மோசமானவர்கள்.

இப்போது சூடு ஏறிவிட்டது. வெயில் தகிக்கிறது. நான் என் கண்களைத் திறந்தேன். அதே மரங்கள், அதே வானம். ஒரே வித்தியாசம், இப்போது நல்ல பகல் வெளிச்சத்தில் அவற்றைப் பார்க்கிறேன். பக்கத்தில் அதே ஆள். ஆம், அது ஒரு துருக்கி வீரனின் பிணம். எவ்வளவு பெரிய உருவம்! எனக்கு அவனை நன்றாக நினைவிருக்கிறது. அவன்தான் என்னை…

என் கண் முன்னால் கிடப்பவன் என்னால் கொல்லப்பட்டவன். நான் ஏன் அவனைக் கொன்றேன்?

அவன் இரத்தக்கறையோடு இங்கே இறந்துகிடக்கிறான். விதி ஏன் அவனை இங்கு கொண்டுவந்து சேர்த்தது? அவனுக்கும் என்னைப் போலவே ஒரு முதிய தாயார் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் பின்மதிய வேளையில் தன் ஏழ்மைக் குடிலின் வாசலில் அமர்ந்து, மகனின் வருகைக்காக, கண்ணுக்கு எட்டிய தொலைவு வட திசையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவளுடைய அன்பு மகன், அவளுடைய ஒரே ஆதரவு, அவளுடைய பசியைத் தணிப்பவன் இனி வரவே மாட்டான்.

நான்? என்னுடைய நிலை மட்டும் என்ன? நானும் அவனும் ஒன்றுதான். ஆனால் அவன் இப்போது அதிர்ஷ்டக்காரன். அவனுக்கு எதுவும் கேட்காது. ரணத்தின் வேதனையோ, நினைவுகளின் கொந்தளிப்போ, வெயிலின் தகிப்போ எதுவுமே தெரியாது. துப்பாக்கியின் ஈட்டி முனை சரியாக அவனது இதயத்தைத் துளைத்திருந்தது. அவனுடைய சீருடையில் கிழிந்திருந்த அந்தப் பகுதி குருதி தோய்ந்திருந்தது.

அதைச் செய்தவன் நான்தான்.

அவனைக் கொல்லவேண்டும் என்று எனக்கு எந்த ஆசையும் இல்லை. போருக்கு அனுப்பப்பட்டபோது எனக்கு யார் மீதும் வன்மம் இல்லை. யாரையும் கொல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. என்னை நோக்கிப் பாயும் தோட்டாக்களுக்கு என் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கவேண்டும் என்று மட்டுமே கற்பனை செய்திருந்தேன். அதைப் போலவே சென்றேன், அதையே செய்தேன்.  

சரிதான். ஆனால் இதை என்னவென்று சொல்வது? முட்டாள்! முட்டாள்! இந்த துரதிர்ஷ்டசாலி (அவன் எகிப்திய சீருடை அணிந்திருக்கிறான்) என்னை விடவும் குறைவான பழிக்கு ஆளானவன். மீன்களைப் பீப்பாயில் அடைத்து அனுப்புவது போல நீராவிக்கப்பலில் திணிக்கப்பட்டு கான்ஸ்டான்டிநோபிளுக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு அவன் ரஷ்யாவைப் பற்றியோ பல்கேரியாவைப் பற்றியோ கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டான். இங்கே வருமாறு அவனுக்கு உத்தரவு இடப்பட்டிருக்கும். வந்திருப்பான். ஒருவேளை அவன் வர மறுத்திருந்தால், அவர்கள் அவனைப் பிரம்பால் அடித்து வழிக்கு வரவைத்திருப்பார்கள் அல்லது யாராவது உயர் அதிகாரி அவனைத் தன் துப்பாக்கிக்குப் பலியாக்கியிருப்பார். அவன் இஸ்தான்புல்லிலிருந்து ரஷ்சுக் வரை நெடிய கடுமையான பயணத்தை மேற்கொண்டிருப்பான். நாங்கள் அவனைத் தாக்கினோம். அவன் தன்னைத் தற்காத்தான். அவனிடமிருந்த ஆங்கிலேய  நீள்குழல் துப்பாக்கியைப் பார்த்துப் பயப்படாமல் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்த அந்நியர்களான எங்களைப் பார்த்தபோது, அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். அவன் புறமுதுகிட்டு ஓட முனையும்போது, எதிரிப்படையைச் சேர்ந்த ஒரு சிறியவன், முஷ்டியை மடக்கிக் குத்தினாலே சுருண்டுவிழக்கூடிய ஒருவன், அவனை நோக்கி ஓடித் தன்னுடைய துப்பாக்கியின் ஈட்டி முனையை அவன் மார்பில் சொருகிவிட்டான். அவனைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?

நான் அவனைக் கொன்றேன் என்ற போதும், என்னைக் குற்றம் சொல்லவும் என்ன இருக்கிறது?

என்னைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? நான் ஏன் தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறேன்? தாகம்! அதற்கு என்ன அர்த்தம் என்று யாருக்குத் தெரியும்?

உக்கிரமான உச்சிவெயிலில் ருமேனியாவை நோக்கி ஐம்பது கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கால்நடையாகக் கடந்துசெல்ல நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டபோதுகூட அதன் உண்மையான அர்த்தம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆ… யாராவது வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கடவுளே! அதோ, அவனிடம் பெரிய தண்ணீர்க்குடுவை இருக்கிறது. அதில் தண்ணீர் இருக்கலாம்! ஆனால் அதைப் பெற நான் அங்கு போகவேண்டும். எவ்வளவு சிரமமாக இருந்தாலும் நான் அதை அடைந்தே தீருவேன்.

நான் தவழ்ந்துசெல்ல முயன்றேன். கால்களால் ஒரு பயனும் இல்லை. பலவீனமான கைகளோ, ஜடமான உடலை மெதுவாக அசைக்கத்தான் உதவியது. அந்தப் பிணத்துக்கும் எனக்கும் நடுவில் 12 அல்லது 14 அடி தூரமே இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது அதிகம். அதிகம் என்றால் மிக அதிகம். பத்து மைல் தூரத்தை விடவும் அதிகம். எப்படி இருப்பினும் நான் இப்போது ஊர்ந்தாக வேண்டும். என் தொண்டையில் தீ கனல்வது போன்றிருந்தது. தண்ணீர் இல்லாவிட்டால் மரணம் இன்னும் விரைவாக வந்துவிடும். ஆயின் ஒருவேளை…

நான் என் உடலை முன்னோக்கி இழுத்தேன். என் கால்கள் தரையோடு தரையாய்க் கிடந்தன. லேசான அசைவும் தாங்கமுடியாத கடுமையான வலியை உண்டாக்கியது. நான் கத்தினேன், அலறினேன், அழுதேன், ஓலமிட்டேன். ஆனாலும் விடாமல் ஊர்ந்தேன். முடிவில் அதை அடைந்துவிட்டேன். இதோ தண்ணீர்க்குடுவை!

தண்ணீர்க் குடுவைக்குள் தண்ணீர் இருந்தது. அதுவும் எவ்வளவு? பாதிக்கு மேல்! இது அதிக நாட்களுக்கு வரும். மரணம் என்னை நெருங்கும் நாள் வரையிலும் வரும். என் தாகமே! நீ என்னைக் காப்பாற்றிவிட்டாய்! ஒரு முழங்கையைத் தரையில் ஊன்றிய நிலையில் தண்ணீர்க்குடுவையின் மூடியைத் திருகித் திறக்க முற்பட்டேன். சட்டென்று கை நொடித்து, நிலை தடுமாறி, இறந்துகிடந்தவனின் மார்பின் மீது குப்புற விழுந்தேன். ஏற்கனவே அங்கு பிண நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது.

——

நான் தண்ணீரைக் குடித்தேன். தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால் கெட்டுப்போகவில்லை. அதுமட்டுமில்லாமல், நிறையவே இருந்தது. நான் இன்னும் பல நாட்கள் உயிரோடு இருக்கமுடியும். உணவில்லாமல் நீர் மட்டும் அருந்தியே ஒருவனால் ஒரு வாரத்துக்கு மேல் உயிரோடு இருக்க முடியும் என்று ‘அன்றாட வாழ்வில் உடலியங்கியல்’ என்ற புத்தகத்தில் வாசித்திருந்தேன். உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பிய ஒருவன், தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டிருந்ததால் பல காலம் உயிர்வாழ்ந்தான் என்ற தகவலையும் அதே புத்தகத்திலிருந்து அறிந்திருந்தேன்.

சரி, அதனால் என்ன இப்போது? ஒருவேளை நான் ஐந்தாறு நாட்கள் கூடுதலாய் வாழ்ந்தாலும் அதனால் என்ன ஆகிவிடப்போகிறது? எங்கள் படைக்குழாம் போய்விட்டது. பல்கேரியர்களையும் துரத்தியடித்தாயிற்று. பக்கத்தில் சாலை எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. எப்படியும் நான் சாகத்தான் போகிறேன். மூன்று நாளில் சாவதற்குப் பதிலாக ஆறு நாளில் சாவேன். அதற்கு இப்போதே ஒரு முடிவு கட்டிவிட்டால் நல்லதுதானே?

இறந்தவனின் துப்பாக்கி அவன் பக்கத்திலேயே கிடந்தது. ஆங்கிலேயரின் அருமையான ஆயுதம். நான் கையை சற்றே நீட்டினால் போதும். ஒரே ஒரு சொடுக்கில் எல்லாம் முடிந்துவிடும். அவன் பக்கத்தில் ஏராளமான தோட்டாக்கள் உருண்டுவிழுந்திருந்தன. அவற்றையெல்லாம் பயன்படுத்தும் அளவுக்கு அவனுக்கு நேரம் போதுமானதாக இருந்திருக்கவில்லை.

நான் என் வேதனைகளுக்கு ஒரு முடிவு கட்டவா அல்லது காத்திருக்கவா? ஆனால் எதற்கானக் காத்திருப்பு? மீட்புக்கா? இறப்புக்கா? அல்லது துருக்கியர்கள் வந்து காயமுற்றுக் கிடக்கும் என் உடலை நார்நாராய்க் கிழித்துக் குதறுவதற்கா? அதுதான் சரி, என்னை நானே….  

இல்லை. தைரியத்தை இழந்து பயனில்லை. நான் என்னுடைய இறுதி கணம் வரை போராடுவேன். நெஞ்சில் துணிவு இருக்கும்வரை போராடுவேன். ஒருவேளை, அவர்கள் என்னைக் கண்டுபிடிக்க நேர்ந்தால், நான் காப்பாற்றப்படுவேன். எலும்புகளில் முறிவு எதுவும் ஏற்பட்டிருக்காது என்று நம்புகிறேன். அவர்கள் என்னைக் குணப்படுத்துவார்கள். நான் என்னுடைய தேசத்தைக் காண்பேன். என் தாயைக் காண்பேன். மாஷாவைக் காண்பேன்.

கடவுளே! அவர்கள் யாருக்கும் என்னுடைய இந்தக் கொடுமையான நிலைமை தெரியாதிருக்கட்டும். போரில் உடனடியாக நான் கொல்லப்பட்டுவிட்டதாகவே அவர்கள் கருதட்டும். இப்படி இரண்டு? மூன்று? நான்கு? நாட்கணக்கில் நான் கடும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தால் அவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்? எனக்குத் தலை சுற்றியது. தண்ணீருக்கான என் இந்தப் பயணத்தில் என்னிடம் மிச்சமிருந்த சக்தியையும் இழந்து களைத்துவிட்டேன். ஆனால் இங்கு மூச்சுவிட முடியாதபடி துர்நாற்றம் மிக மோசமாக உள்ளது. அவன் உடல் எப்படிக் கறுத்துக் கிடக்கிறது! இந்தப் பிரேதம் நாளையோ நாளைக்கும் அடுத்த நாளோ என்னாகும்? என்னால் வேறெங்கும் உடலை நகர்த்த முடியாத நிலையில் நான் இங்கேயே இப்படியே கிடக்க வேண்டியதுதானா? இல்லை, கொஞ்சநேரம் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பழைய இடத்துக்கு ஊர்ந்து சென்றுவிடுவேன். நல்லவேளையாக, காற்று வீசியதால் அங்கு நிலவிய துர்நாற்றம் சற்றுநேரத்துக்கு என்னை விட்டு விலகிப்போனது.

பிழிந்தெடுக்கப்பட்ட சக்கை போல ஒரே நிலையில் மிகவும் சோர்ந்துபோய் கிடந்தேன். சுட்டெரிக்கும் வெயிலில் என் முகமும் கைகளும் திகுதிகுவென எரிந்தன. வெயில் படாமல் அவற்றை மறைக்க முடியவில்லை. இரவு சீக்கிரமாகவே வந்தால் எவ்வளவு நல்லது! அப்படியென்றால் அது என் இரண்டாவது இரவாக இருக்கும்! என்னென்னவோ சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று முடிச்சிட, நான் நினைவிழந்தேன்.

நீண்டநேரம் தூங்கியிருக்க வேண்டும். மீண்டும் நினைவு திரும்பியபோது மறுநாள் இரவாகிவிட்டிருந்தது. வேறெந்த மாற்றமும் இல்லை. என் ரணமும் வலியும் அப்படியே இருந்தன. அந்தப் பெரிய உருவம் முன்பிருந்த அதே நிலையில் அப்படியே கிடந்தது. என்னால் அவனைப் பற்றி நினைக்காமல் இருக்கமுடியவில்லை. இவன் ஒருவனுடைய இறப்பால் என்னுடைய எல்லாவற்றையும் நான் இழந்துநிற்கிறேன்.

என்னுடைய அன்புக்குரியவர்களை விட்டுப் பிரிந்து, என் ஊரை விட்டு ஆயிரம் மைல்களைக் கடந்துவந்து, பசியிலும் குளிரிலும் வாடிவதங்கி, வெயிலின் கொடுமையில் உடல் வெந்து, இறுதியில் இப்படியொரு அவலச் சூழலில் கிடக்கிறேன். இந்தக் கொலையைத் தவிர நான் என் தேசத்துக்காக வேறென்ன நன்மை செய்திருக்கிறேன்?

கொலையா? ஆம் கொலைதான்! யார்? நானா?

போர்க்காலத்தில் தன்னார்வ வீரனாய் படையில் சேரும் என் விருப்பத்தை நான் முன்மொழிந்தபோது அம்மாவும் மாஷாவும் அதைத் தடுக்கவில்லை. ஆனால் கண்ணீர் வடித்தார்கள். என்னுடைய குறிக்கோள் என் கண்ணை மறைத்திருந்ததால் என்னால் அவர்களுடைய கண்ணீரைப் பார்க்கமுடியவில்லை. என் அன்புக்குரியவர்களுக்கு எவ்வளவு வேதனையைத் தந்திருக்கிறேன் என்று எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. ஆனால் ஏன் இப்போது அவையெல்லாம் மீண்டும் ஞாபகத்துக்கு வருகின்றன? கடந்துபோன காலத்தை இனிமேல் மாற்றமுடியாதே.

என்னைத் தெரிந்தவர்கள் பலருக்கும் என்னுடைய இந்த வீரச்செயல் விநோதமாகத் தோன்றியது போலும். “முட்டாள்! அவனை அறியாமலேயே பிரச்சினைக்குள் தலையை விடுகிறான்”

அவர்கள் எப்படி அப்படிச் சொல்லலாம்? வீரம், நாட்டுப்பற்று போன்றவற்றை எல்லாம் எப்படி அவர்கள் அப்படியான வார்த்தைகளால் அளவிடலாம்? எல்லாத் தகுதிகளும் இருந்தும் கூட நான் ஏன் அவர்களுடைய பார்வையில் முட்டாளானேன்?

நான் கிஷினெஃப்க்கு வந்தேன். கனமான முதுகுப் பையை என் முதுகில் ஏற்றினார்கள். என்னோடு அங்கு இருந்த ஆயிரக்கணக்கான வீரர்களின் கையில் எல்லா விதமான ராணுவத் தளவாடங்களையும் கொடுத்து அணிவகுக்கவைத்து அழைத்துச் சென்றார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் என்னைப் போலவே தன்னார்வலர்களாய் படையில் புதிதாக இணைந்தவர்கள். பட்டியலில் இடம்பெறாதவர்கள் வீட்டிலேயே இருந்திருக்கலாம். ஆனால் ‘உணர்வுவயமான’ அவர்களும் எங்களோடு ஆயிரக்கணக்கான மைல் தூரம் நடந்தார்கள். எங்களைப் போலவே போரில் ஈடுபட்டார்கள். சொல்லப்போனால் எங்களை விடவும் நன்றாகவே போரிட்டார்கள். அனுமதி கிடைத்தால் மட்டுமே அவர்கள் ஆயுதங்களைத் துறந்துவிட்டு, வீடு திரும்ப முடியும் என்ற உண்மையை அறிந்திருந்தும், அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றினார்கள்.

—-

அதிகாலையின் குளிர்த்தென்றல் வீசியது. புதர்கள் மெல்ல அசைந்தன. தூக்கம் கலையாத பறவையொன்று சிறகுகளைப் படபடத்தது. நட்சத்திரங்கள் மறையத் தொடங்கியிருந்தன. கருநீல வானம் மெல்ல மெல்ல வெளுக்கத் தொடங்கியது. வெண்பஞ்சு மேகங்கள் மிதந்துவந்தன. தரையிலிருந்து சாம்பல்நிறத்தில் மூடுபனி கிளம்பியது.

இவ்வாறாக விடிந்தது மூன்றாம் நாள் என்… அதை என்னவென்று சொல்வது? வாழ்க்கை என்பதா அல்லது மரண அவஸ்தை என்பதா?

இது மூன்றாவது… இன்னும் எத்தனை மீதமிருக்கிறது? நிச்சயமாக அதிகம் இருக்காது. அந்தப் பிரேதத்திடமிருந்து இன்னும் சற்று தூரம் விலகிப் போக இயலாதவனாய் நான் மேலும் மேலும் பலவீனமாகிக் கொண்டிருந்தேன். விரைவிலேயே நானும் அதுவும் ஒரே நிலையில் இருப்போம். அப்போது எங்கள் இருவருக்கிடையிலும் எந்தக் கருத்துவேறுபாடும் இருக்காது.

இப்போது கொஞ்சம் தண்ணீர் அருந்தவேண்டும். ஒரு நாளைக்கு மூன்று தடவை மட்டுமே தண்ணீர் அருந்தினேன், காலை, மதியம் பிறகு இரவு.

சூரியன் உதித்துவிட்டது. அந்த மாபெரும் ஒளிவட்டத்திலிருந்து குருதி போன்ற செக்கச்செவேலென்ற கதிர்கள் கன்னங்கரிய மரக்கிளைகளின் வழியாக ஊடுருவிக்கொண்டிருந்தன. இன்றைய தினம் வெயில் கடுமையாக இருக்கும் என்று அது கட்டியம் கூறியது.

அயலானே! நீ என்ன ஆவாய்? நீ மேலும் மிக மோசமான நிலையை அடைவாய்.

ஆம், அவனுடைய பிரேதம் அப்போதே மிக மோசமான நிலையிலிருந்தது. தலைமயிர் உதிரத் தொடங்கியிருந்தது. கருப்பு நிறத்தவனான அவனுடைய தோல் வெளுத்து வெளிறிக் கிடந்தது. அவனுடைய முகம் வீங்கி காதுவரை வெடித்துக் கிடந்தது. ஏற்கனவே கொசகொசவென்று புழுக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. அவனுடைய முழு உடம்பும் வீங்கி அழுகிக் கிடந்தது. இந்த நிலையில் இன்றைய கடும் வெயில் அதை இன்னும் எந்தக் கோர நிலைக்குக் கொண்டுபோகுமோ?

இதற்கு மேலும் அந்தப் பிணத்துக்குப் பக்கத்தில் படுத்திருப்பது தாங்க முடியாததாக இருந்தது. அதனிடமிருந்து கொஞ்ச தூரம் நகர முடிந்தால் கூட எனக்குப் போதுமானது. ஆனால் என்னால் முடியுமா? தண்ணீர்க்குடுவையின் மூடியைத் திறக்கவும் தண்ணீரைக் குடிக்கவும் என்னால் கையைத் தூக்க முடிகிறது. ஆனால் ஜடமாகிக் கிடக்கும் இந்த உடம்பின் பாரத்தைத் தூக்கிக்கொண்டு நகரும் அளவுக்கு எனக்குத் தெம்பு இருக்கிறதா? ஆனாலும் நான் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்துபோக முயற்சி செய்வேன், ஒரு மணி நேரத்துக்கு ஒரு அடி தூரம் என்றாலும் கூட பரவாயில்லை.

காலைநேரம் முழுவதும் நான் முயற்சி செய்தபடியே இருந்தேன். வலி மிகக் கொடுமையாக இருந்தது. ஆனால் அதனால் என்ன இப்போது? ஒரு ஆரோக்கியமான மனிதன் எப்படி இருப்பான் என்று என்னால் அப்போது நினைத்துப் பார்க்க முடியவில்லை. கற்பனை கூடச் செய்யமுடியவில்லை. நான் முற்றிலும் வலியால் பீடிக்கப்பட்டிருந்தேன்.

பெருமளவு முயன்ற பிறகு சுமார் பதினான்கு அடி தூரத்துக்கு என் உடம்பை இழுத்துவந்தேன். ஒருவழியாக என்னுடைய பழைய இடத்துக்கு வந்துவிட்டேன். சுத்தமான காற்றைச் சுவாசித்தேன். அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் பிணத்தைச் சுற்றிலும் சுமார் ஆறு அடி தூரத்துக்குள் இருக்கும் காற்றைச் சுத்தமான காற்று என்று எப்படிச் சொல்ல முடியும்? 

ஆனால் அந்த ஆசுவாசமும் கொஞ்ச நேரம்தான். காற்று திசைமாறி வீசியதில் மறுபடியும் சகிக்க முடியாத நாற்றம் வீசியது. எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. வெறும் வயிறு என்பதால் அடிவயிற்றைச் சுண்டி இழுத்து வாந்தி வந்தது. உள்ளே இருக்கும் அத்தனை உறுப்புகளையும் புரட்டிப்போட்டதுபோல் இருந்தது. அழுகிய பிணவாடை இன்னமும் காற்றில் கலந்திருந்தது.

நான் விரக்தியின் உச்சத்தில் வெடித்து அழுதேன்.

——

மிகவும் சோர்ந்து, விரக்தியால் பித்தேறி, கிட்டத்தட்ட நினைவிழந்த நிலையில் கிடந்தேன். திடீரென்று… அது என்ன? குழம்பிய கற்பனைகளின் மாயையா? அப்படி நான் நினைக்கவில்லை.

ஆம், எங்கிருந்தோ சத்தம் கேட்டது. ‘டக் டக்’ எனக் குதிரைகளின் குளம்பொலிகளும் ஆட்களின் பேச்சரவமும். கூக்குரல் எழுப்ப முயன்றேன். ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டேன். ஒருவேளை, அது துருக்கிப்படையாக இருந்துவிட்டால்? பிறகு என்ன நடக்கும்? ஏற்கனவே இருக்கும் கடுமையான வேதனையோடு அவர்களுடைய சித்திரவதையும் சேர்ந்துகொள்ளும். செய்தித்தாளில் அவர்களைப் பற்றிப் படித்தாலே பயத்தில் மயிர் கூச்செறியும். அவர்கள் சிறைபிடித்தால் உயிரோடு தோலுரிப்பார்கள். காயம்பட்ட இடத்தைத் தீயில் பொசுக்குவார்கள். அவ்வளவுதான் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் அவர்கள் அதற்கும் மேல் கொடூரக் கற்பனாவாதிகள். இப்படி இங்கேயே கிடந்து அழுகிச் சாவதை விடவும் அவர்கள் கையால் சாவது மேல் இல்லையா?

ஒருவேளை அவர்கள் எங்கள் ஆட்களாக இருந்தால்? அட, பாழாய்ப்போன புதர்களே! ஏன் இவ்வளவு அடர்த்தியாகக் கிளைகளைப் படர விட்டிருக்கிறீர்கள்? அவர்களால் என்னைப் பார்க்க முடியாதே. ஒரே ஒரு இடத்தில் மட்டும் புதர்களுக்கு இடையிலிருந்த ஜன்னல் போன்ற சிறு இடைவெளி வழியே வெட்டவெளியின் சிறுபகுதியைப் பார்க்க முடிந்தது.

சற்று தூரத்தில் ஒரு ஓடை இருந்தது அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது. போருக்குப் போவதற்கு முன்பு நாங்கள் அந்த ஓடையில்தான் தண்ணீர் குடித்தோம். ஆமாம், அந்த ஓடைக்குக் குறுக்கே ஒரு பெரிய தட்டைப்பாறை பாலம் போலப் போடப்பட்டிருந்தது. அவர்கள் இப்போது அதைக் கடந்துவந்துகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. சத்தம் குறைந்துவிட்டது. அவர்கள் என்ன மொழியில் பேசினார்கள் என்று என்னால் கண்டறிய இயலவில்லை. என் செவித்திறனும் குறைந்துகொண்டிருந்தது.

கடவுளே! அவர்கள் எங்களுடைய வீரர்களாக இருக்கவேண்டும். நான் அவர்களைக் கத்தி அழைப்பேன். ஓடையில் இருந்தாலும் கூட என் குரல் அவர்களுக்குக் கேட்கும். பாஷி-பசூக்[1]குகளின் கையில் சிக்குவதை விடவும் இது நல்லது. ஏன் அவர்கள் வருவதற்கு இவ்வளவு நேரமாகிறது?

நான் பொறுமையிழந்து தவித்தேன். அருகிலிருந்த பிணத்திலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தபோதும் அது அப்போது என் கவனத்துக்கு வரவே இல்லை.       

திடீரென்று புதர்களை விலக்கிக்கொண்டு வந்தார்கள் கொசாக்குகள்[2], நீலச்சீருடையும், சிவப்புப் பட்டையும் கையில் குத்தீட்டியுமாக! அவர்கள் ஒரு குழுவாக இருந்தனர். அவர்களுக்குத் தலைமையாக கம்பீரமான குதிரை மேல் ஒரு கருந்தாடி அதிகாரி இருந்தார். அந்தக் குழு புதர்களை விலக்கி ஊடுருவுகையில் அதிகாரி சேணத்தை முடுக்கிக்கொண்டே கத்தினார், “ம்! முன்னேறிச் செல்லுங்கள்”

“பொறுங்கள்… பொறுங்கள்.. உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்… உதவி! உதவி! வீரர்களே!” நான் கத்தினேன். வலிமை வாய்ந்த குதிரைகளின் குளம்படி ஓசைகளும், உடைவாள்களின் சரசரப்பும், கொசாக்குகளின் உரத்தக் குரல்களும் பலவீனமான என் குரலை அப்படியே அமுக்கிவிட்டன. அவர்கள் செவியை என் குரல் எட்டவே இல்லை.

நான் சபிக்கப்பட்டவனானேன். அசையாமல் அப்படியே குப்புற விழுந்து மறுபடியும் அழ ஆரம்பித்தேன். தண்ணீர்க்குடுவை உருண்டு தண்ணீர் கீழே வழிந்தோடியது. என் வாழ்க்கை, என் இரட்சிப்பு, என் மரணத்தின் ஒத்திவைப்பு எல்லாமாக இருந்த தண்ணீர் போயிற்று. அரைக்குவளை அளவு தண்ணீர்தான் மீதம் இருந்தது. நான் கவனித்துத் தடுப்பதற்குள்ளாகவே எல்லாத் தண்ணீரையும் காய்ந்த தரை உறிஞ்சிவிட்டது.

அந்த மோசமான சம்பவத்துக்குப் பிறகு என்னைப் பீடித்த வெறுமை பற்றி உங்களுக்கு நான் சொல்லவேண்டுமா? பாதி விழிகளை மூடியபடி அசைவற்றுக் கிடந்தேன். அன்றைய தினம் காற்று திசை மாறி மாறி வீசிக்கொண்டிருந்தது. ஒரு சமயம், நல்ல சுத்தமான காற்று வீசியது.  மறு சமயம் குப்பென்று அழுகிய பிண வாடை அடித்தது.

அன்றைய நாளின் இறுதியில் அந்தப் பிரேதம் வார்த்தைகளால் விவரிப்பதற்கு அப்பாற்பட்ட மிகக் கொடூரமான நிலையை எட்டியிருந்தது. ஒரு தடவை நான் கண்ணைத் திறந்து அதைப் பார்த்தபோது திடுக்கிட்டுப்போனேன். காரணம், அங்கு அதன் முகத்தையே காணோம். முகத்தின் தசை முழுவதுமாக அழுகி மண்டையோட்டை விட்டு நழுவிப்போயிருந்தது. பயங்கரமான அந்த மண்டையோட்டின் சிரிப்பு, சாசுவதமாய் அதில் அமர்ந்துகொண்ட அந்தச் சிரிப்பு இதுவரையில் எனக்கு அப்படியொரு பயத்தை, நடுக்கத்தைக் கொடுத்ததே இல்லை. இவ்வளவுக்கும் மருத்துவ மாணவனான நான் ஒன்றிரண்டு தடவை மண்டையோட்டைக் கையில் ஏந்தியிருக்கிறேன், பல மனிதத் தலைகளை அறுத்துக் கூறாய்வு செய்திருக்கிறேன். ஆனால் பளீர் பொத்தான்களோடு கூடிய சீருடைக்குள் இருக்கும் இந்த எலும்புக்கூடு என்னை நடுங்கவைத்தது. “இதுதான் போர்! இந்தப் பிணம்தான் அதன் அடையாளம்” நான் நினைத்துக்கொண்டேன்.

வெயில் எப்போதும்போலச் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. என் முகமும் கைகளும் கொப்பளித்துப் போயிருந்தன. என் கடைசிச் சொட்டுத் தண்ணீரையும் குடித்துவிட்டிருந்தேன். ஒரு மிடறுதான் குடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தபோதும், அதீத தாகத்தால் ஒட்டக் குடித்துவிட்டேன். கொசாக்குகள் எனக்கு அருகில் வந்தபோது என்னால் ஏன் அவர்களை அழைக்க இயலவில்லை? அவர்கள் துருக்கியர்களாக இருந்தாலும் கூட நன்றாக இருந்திருக்கும். அவர்கள் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ சித்திரவதை செய்து கொன்றிருப்பார்கள். ஆனால் இப்போது நான் இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இந்த மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பது?

அம்மா! என் அன்பு அம்மா! என்னுடைய இந்த இறுதித்தருணத்தைப் பற்றி அறிய நேர்ந்தால் அதை நீ எப்படி எதிர்கொள்வாயோ? உன் நரைவிழுந்த தலைமயிரைப் பிய்த்துக்கொண்டு எப்படியெல்லாம் அழுவாயோ? உன் தலையைச் சுவரில் முட்டிக்கொண்டு எப்படியெல்லாம் கதறுவாயோ? என்னைப் பெற்றெடுத்த நாளை எப்படியெல்லாம் சபித்துக்கொட்டுவாயோ? போரினால் துன்புற்று வதையுறும் ஆடவரை எண்ணி இந்த உலகினை எப்படியெல்லாம் வசைபாடுவாயோ?

ஆனால் நீயும் மாஷாவும் என்னுடைய இந்த அவலகதியை அறியப்போவதில்லை. போய்வருகிறேன், அம்மா! போய்வருகிறேன் மாஷா, என் அன்பே! என் மணப்பெண்ணே! என்னவொரு துயரம்! என்னவொரு வேதனை! என் நெஞ்சுக்குள் என்னவோ செய்கிறதே!

மறுபடியும் எனக்கு அந்த பரிதாபத்துக்குரிய நாயின் நினைவு வருகிறது. அந்தக் காவலாளி அதன்மேல் கிஞ்சித்தும் கருணை காட்டாமல் அதன் தலையைச் சுவரில் மோதி, பக்கத்திலிருந்த குப்பையும் கழிவும் நிரம்பிய சாக்கடையில் விட்டெறிந்தார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அது ஒரு நாள் முழுவதும் மரண வேதனையால் துடித்துக்கொண்டிருந்தது. நானோ அந்த நாயை விடவும் துரதிர்ஷ்டம் பிடித்தவன். மூன்று நாட்களாக மரண வேதனையில் உழன்றுகொண்டிருக்கிறேன். நாளை நான்காவது நாள். அதனை அடுத்து ஐந்தாவது நாள், ஆறாவது நாள்… மரணமே! நீ எங்கே இருக்கிறாய்? வா! வந்து என்னைக் கொண்டு போ!

ஆனால் மரணம் வரவும் இல்லை, என்னைக் கொண்டுபோகவும் இல்லை. நான் சுட்டெரிக்கும் அதே வெயிலில் கிடந்தேன். தணலாய்த் தகிக்கும் தாகத்தைத் தணிக்க ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லாமல் கிடந்தேன். பக்கத்தில் கிடந்த பிணமோ எனக்குள் நஞ்சேற்றிக் கொண்டிருந்தது. அது அடையாளம் காணவியலாதபடி முற்றிலும் சிதைந்துவிட்டது. அதிலிருந்து லட்சக்கணக்கான புழுக்கள் கொட்டிக்கொண்டிருந்தன. எங்கிருந்து வந்தன இவ்வளவு ஈக்கள்! அது முழுவதுமாக அழிந்து, எலும்புக்கூடும் உடைகளும் மட்டுமே எஞ்சிப்போகும் நிலையில், என்னுடைய அழிவு ஆரம்பிக்கும். நானும் கொஞ்சம் கொஞ்சமாக அதைப் போலவே உருமாறுவேன்.

பகலும் கழிந்து, இரவும் கழிந்துபோனது. எந்த மாற்றமும் இல்லை. மறுநாள் விடிந்து நேரம் போய்க்கொண்டிருந்தது. “நீ சாகப்போகிறாய்… சாகப்போகிறாய்… சாகப்போகிறாய்!” புதர்கள் தங்கள் மென்குரலில் என்னிடம் கிசுகிசுத்துக்கொண்டே இருந்தன. “அங்கே ஏதாவது தென்படுகிறதா? அந்தப் பக்கம் ஏதாவது தென்படுகிறதா?” மறுபக்கத்திலிருந்த புதர்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

“ஏதாவது பயன் இருக்கிறதா? அங்கே ஏதாவது கண்ணுக்குத் தென்படுகிறதா?” உரத்த குரல் ஒன்று என்னருகில் கேட்டது.

சட்டென்று நான் சுய நினைவுக்கு வந்தேன். புதர்களுக்கு இடையிலிருந்து எங்கள் படைக்குழாமின் தலைவர் யாகோலெவ்வின் கருணை மிகுந்த நீலக்கண்கள் என்னைப் பார்த்தன.

“மண்வெட்டிகளை இங்கே கொண்டுவாருங்கள். இங்கே இரண்டு சடலங்கள்! ஒன்று நம்முடையது. மற்றொன்று அவர்களுடையது.”

“மண்வெட்டி வேண்டாம், என்னைப் புதைக்காதீர்கள். நான் உயிரோடுதான் இருக்கிறேன்” நான் கத்த முயற்சி செய்தேன். ஆனால் வறண்டுகிடந்த என் உதடுகளிலிருந்து பலவீனமான முனகல் மட்டுமே வெளிப்பட்டது.

“கடவுளே! இவன் உயிரோடு இருக்கச் சாத்தியமில்லை. சாத்தியம் தானா? பாரின் இவானோவ்! வீரர்களே, இங்கே வாருங்கள், நம்முடைய பாரின் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான். உடனடியாக டாக்டரை அழைத்துவாருங்கள்”

அரை நிமிடத்துக்குள் அவர்கள் என் வாயில் தண்ணீர், பிராந்தி இன்னும் என்னென்னவோ புகட்டினார்கள். அதன் பிறகு எல்லாம் இருண்டுபோனது. நான்கு பேர் தூக்குக் கட்டிலில் என்னைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது அது ஊஞ்சலைப்போல இப்படியும் அப்படியும் சீராக அசைந்து என்னைத் தாலாட்டியது. நான் தூங்கித் தூங்கி விழித்தேன். கட்டுப்போடப்பட்ட காயங்களில் இப்போது வலி இல்லை. விவரிக்க இயலாத இதமும் சுகமும் என் உடல் முழுவதும் வியாபித்திருந்தன.

“நில்லுங்கள்! ஸ்ட்ரெச்சரைக் கீழே இறக்குங்கள்!”

உயரமாகவும் ஒடிசலாகவும் இருந்த, மனதளவில் மிகவும் நல்ல மனிதரான எங்கள் படைக்குழுவின் மருத்துவ அதிகாரி பீட்டர் இவானோவிச்சிடமிருந்து கட்டளை புறப்பட்டது. அவர் எவ்வளவு உயரம் என்றால், நான்குபேர் தங்கள் தோளுக்கு மேல் சுமந்திருந்த படுக்கையிலிருந்து நான் அவரைப் பார்த்தபோது அவருடைய நீண்ட தாடியோடு கூடிய முகத்தையும் தோள்களையும் என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது.  

“பீட்டர் இவானோவிச்!” நான் மெதுவாக முணுமுணுத்தேன்.

“என்ன நண்பனே?” பீட்டர் இவானோவிச் என்னை நோக்கிக் குனிந்தார்.

“பீட்டர் இவானோவிச்! டாக்டர் என்ன சொன்னார்? நான் சீக்கிரம் இறந்துவிடுவேன் என்றாரா?”

“என்ன பேசுகிறாய் இவானோவ்? நீ பிழைத்துக்கொண்டாய்! சாகமாட்டாய்! ஏன் தெரியுமா? நீ ஒரு அதிர்ஷ்டக்காரன்! உன்னுடைய எலும்புகள் எதுவும் முறியவில்லை. உன்னுடைய இரத்த நாளங்கள் எதுவும் துண்டிக்கப்படவில்லை. ஆனால் இந்த மூன்றரை நாளும் நீ எப்படி அங்கே தாக்குப்பிடித்தாய்? என்ன சாப்பிட்டாய்?”

“எதுவுமில்லை!”

“குடிக்கக்கூட எதுவும் இல்லையா?”

“நான் அந்த துருக்கி வீரனுடைய தண்ணீர்க்குடுவையிலிருந்து தண்ணீர் குடித்தேன். பீட்டர் இவானோவிச்! என்னால் அதிகம் பேச முடியவில்லை. பிறகு சொல்கிறேன்.”

“நல்லது நண்பனே. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடு”

மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனேன்.

கண்விழித்தபோது கோட்ட மருத்துவமனைக் கூடத்திலிருந்தேன். என் படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும் செவிலியர்களும் குழுமி இருந்தனர். பிரபலமான, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கல்லூரிப் பேராசிரியரும் அவர்களுள் இருந்தார். அவர் என் கால் பக்கம் குனிந்து என்னவோ சிகிச்சை செய்துகொண்டிருந்தார். அவர் கைகளில் இரத்தம் படிந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் சிகிச்சையை முடித்துவிட்டு தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தார்.

“மயிரிழையில் தப்பித்திருக்கிறாய், இளைஞனே! நீ உயிர் பிழைத்துக்கொண்டாய்! உன்னுடைய ஒரு காலை மட்டும் எடுக்கவேண்டியதாகிவிட்டது. அதனால் ஒன்றும் பாதகமில்லை. உன்னால் பேச முடியுமா?”

என்னால் பேச முடிந்தது. இங்கே எழுதியுள்ள அனைத்தையும் அவரிடம் நான் சொன்னேன்.

ரஷ்ய மூலம் – செவோலோட் கார்ஷன்

ஆங்கில மொழிபெயர்ப்பு – நேதன் ஹஸ்கில் டோல்

தமிழில் – கீதா மதிவாணன்   


[1] பாஷி-பசூக்குகள் – துருக்கிப் பேரரசைச் சேர்ந்த போர்வீரர்கள். போர்க்களத்தின் எந்த நியமங்களுக்கும் நியதிகளுக்கும் கட்டுப்படாத, ஒழுங்கில்லாப் போர்முறை வீரர்கள். மிகக் கொடூரமானவர்கள்.

[2] கோசாக்குகள் – உக்ரைன் மற்றும் தெற்கு ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். இவர்களும் ஒழுங்கில்லாப் போர்முறை வீரர்களே. போர்ப்பயிற்சி, குதிரை ஏற்றம் போன்றவற்றில் பெரும் தேர்ச்சி பெற்றவர்கள்.

2 COMMENTS

  1. போரின் திகில் நிறைந்த நாட்களையும் போர்வீரர்களின் தீரங்களையும் இறப்புவரை போய்மீண்ட அனுபவங்களையும் உண்மையான அவர்களின் மனவுணர்வுகளையும் அத்தனை தத்ரூபத்தோடும் துல்லியத்தோடும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது கதை. மூன்றாவதாக மொழி மாறி வந்தபோதும் அதன் உணர்வுகளும் உயிரும் சற்றும் சிதையாது உயிர்பெற்று எம்மோடு பயணிக்கிறது.

    இதன் வழி மொழிபெயர்ப்பாளருக்கு நன்றிகளைச் சொல்வதா கனலிக்கு நன்றி நல்குவதா அல்லது ஏன் தமிழில் இவ்வாறான தரமான கதைகள் வெளிவருவதில்லை என்று ஏங்குவதா என்று தெரியவில்லை. உண்மையில் இத்தகைய கதைகளும் இவற்றை தெரிவு செய்து மொழிபெயர்த்து வாசகருக்குத் தரும் கீதா.மதிவாணன் மற்றும் கனலிக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உளமார தெரிவிக்க நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    உங்கள் எல்லோரினதும் தன்னலமற்ற சேவையும் நேர தானமும் மொழி அன்பளிப்புகளும் தமிழ் உலகத்தினால் விதந்து போற்றத் தகுந்தது.போற்ற வேண்டுவது.

    நன்றி என்பது மிகச் சிறு வார்த்தை.

  2. உங்கள் விரிவான விமர்சனத்துக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.